பன்னிரு படைக்களம் - 72
[ 17 ]
அஸ்தினபுரியில் பன்னிரு படைக்களம் அமைப்பதைப் பற்றிய செய்தியை சகுனி துரியோதனனிடம் சொன்னபோது சற்று அப்பால் தரையில் போடப்பட்டிருந்த சேக்கைப் பீடத்தில் அங்கிலாதவர் என கணிகர் படுத்திருந்தார். கர்ணனும் ஜயத்ரதனும் துரியோதனனின் இருபக்கமும் பீடங்களில் அமர்ந்திருக்க பின்னால் துச்சாதனன் நின்றான். சாளரத்தின் ஓரமாக துர்மதனும் துச்சலனும் சுபாகுவும் நின்றிருந்தனர். படைநகர்வு குறித்த செய்திகளை சகுனிக்கு துரியோதனன் உளஎழுச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர்கள் படைநகர்வுப் பணிகளுக்குப்பின் களைப்புடன் அரண்மனைக்கு மீண்டிருந்தனர்.
“பதினெட்டு படைப்பிரிவுகளும் கங்கைக்கரை ஓரமாக நிரை கொண்டுவிட்டன, மாதுலரே. அவற்றை ஏற்றிச் செல்லும் படகுகளும் பிழைநோக்கப்பட்டு நீர்வெளியில் சித்தமாக உள்ளன. அவை முன்னோடிப் பறவைகளென இந்திரப்பிரஸ்தத்தை சென்றடையும்போதே மறுபக்கம் கரைவழியாக நமது பன்னிரண்டு படைப்பிரிவுகள் இந்திரப்பிரஸ்தத்தை நோக்கி செல்லும். செல்லும் வழியிலேயே பிற ஆதரவுநாட்டுப் படைகளும் நம்முடன் இணைந்துகொள்கின்றன. கடற்படையை கர்ணனும் தரைப்படையை நானும் நடத்துகிறோம். ருக்மியின் படைகளுடன் ஜயத்ரதன் தன் படைகளை இணைத்துக்கொண்டு இருவரும் இந்திரப்பிரஸ்தத்தை மறுபக்கம் வந்து சூழ்வர்” என்றான்.
சகுனி “மிகப்பெரிய படைசூழ்கையின் இடர் என்னவென்றால் அதை மறைக்க முடியாதென்பதே. இப்பொழுதே நம் படைசூழ்கையின் அனைத்து உட்கூறுகளும் இளைய யாதவனுக்கும் அர்ஜுனனுக்கும் தெரிந்திருக்கும்” என்றார். கர்ணன் “ஆம், தெரிந்திருக்கும். இந்திரப்பிரஸ்தத்தை எதிர்பாராத வகையில் தாக்க முடியாது என்பதை உணர்ந்த பின்னரே இதை இத்தனை விரிவாக தொடங்கினோம்” என்றான். “பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய அரசுகளும் கங்கைக்கரையில் உள்ளன. கங்கையில் இருந்து எதிர் நீரோட்டத்தில் ஏறிச்சென்றே யமுனைக்கரையில் அமைந்துள்ள இந்திரப்பிரஸ்தத்தை அணுக முடியும். ஆகவே எந்தப் படகுப்படையும் விரைந்து செல்ல முடியாது. எதிர்பாராத் தாக்குதல் நிகழமுடியாதென்றால் பெருஞ்சூழ்கைத் தாக்குதலே உகந்தது என்பதனால் இம்முடிவை எடுத்தேன்” என்றான்.
ஜயத்ரதன் “அத்தனை பெரிய நகரம் யமுனைக் கரையில் அமையும்போது அது எண்ணாது எடுக்கப்பட்ட முடிவோ என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. கங்கைக் கரையில் நகர் அமைப்பது விரைந்து கிளம்புவதற்கு உகந்தது போலவே எதிர்பாராது தாக்கப்படுவதற்கும் எளிது” என்றான். சகுனி “இந்திரப்பிரஸ்தம் பாஞ்சாலத்தின் ஐங்குடிப்படைகளை இடக்கையாகவும் யாதவ குலத்திரளை வலக்கையாகவும் கொண்டது. பாஞ்சாலம் தொன்மையான ஷத்ரிய நாடென்பதால் பல சிறுகுடி அரசர்களை அவர்கள் தங்களுடன் சேர்த்துக்கொள்ள முடியும். மணஉறவு நாடுகளும் ஒப்புறவு நாடுகளும் உடன் நிற்கும். இது எளிய போரென அமையாது” என்றார்.
“ஆம், அமையாது. நான் எளிதில் வெல்ல விரும்பவில்லை” என்றபடி துரியோதனன் எழுந்தான். “ஆயிரமாண்டுகள் இம்மண்ணில் பேசப்படும் ஒரு போரையே நான் நாடுகிறேன். மத்தகம் தூக்கி எழும் களிறு போல அவர்களின் நகர்க்கோட்டை முன் சென்று நிற்கப்போகிறேன். எக்கரவும் இல்லை. எச்சூழ்ச்சியும் இல்லை. வெற்றி ஐயத்திற்கிடமற்றது. பாரதப்பேரரசின் முதன்மை அரசன் நான் என்பதை அப்போருக்குப் பின் மறுசொல்லின்றி ஒவ்வொருவரும் ஏற்றாக வேண்டும்.”
அவர்கள் பேசத்தொடங்கியபோது ஒவ்வொருவரும் தங்கள் ஓர விழிகளால் கணிகரின் இருப்பையே உணர்ந்து கொண்டிருந்தனர். போர் குறித்த சொல்லாடலும் உணர்வுஅலைகளும் கணிகரை அவர்களின் சித்தங்களிலிருந்து முற்றாக உதிர்க்க வைத்தன. விழி உலாவும் உயரத்திற்குக் கீழாக எப்போதும் அமர்ந்திருப்பதனாலேயே உள்ளங்களிலிருந்து விலகிவிடும் வாய்ப்பை பெற்றிருந்த கணிகர் செவிகளை மட்டும் அவ்வுரையாடலுக்கு அளித்து விழிகளை சுவர் நோக்கி திருப்பியிருந்தார். விழிகள் ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை என்பதை அவர் அறிந்திருந்தார்.
கர்ணன் சகுனியிடம் “படைகள் திரளத் திரளத்தான் நமது வல்லமை நமக்கு தெரிகிறது. பாரதவர்ஷத்தின் ஆற்றல் கொண்ட ஷத்ரியப்படையின் பெரும்பகுதி நம்முடன் உள்ளது” என்றான். சகுனி படைத்திரள் குறித்த எழுச்சியை பகிர்ந்துகொள்ளவில்லை என்னும் உணர்வே அவனை அப்பேச்சை எடுக்கவைத்தது. கணிகர் விழிசுருக்கி கர்ணனை நோக்க அப்பார்வையுணர்வைப் பெற்று கர்ணன் திடுக்கிட்டது போல அவரை நோக்கினான். கணிகர் புன்னகை புரிய அதுவரை தொகுத்துக் கொண்ட அனைத்தும் சிதறப்பெற்று கர்ணன் விழிதிருப்பிக் கொண்டான்.
சகுனி “தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள், கணிகரே?” என்றார். அங்கிருந்த அனைவரும் கணிகரின் இருப்பை சிறு அதிர்வுடன் உணர்ந்து அவரை திரும்பி நோக்கினர். கணிகர் மெல்லிய குரலில் முனகி உடலைத் திருப்பி “ஷத்ரியப்படைகள் அங்கரின் தலைமையில் திரள ஒப்புவார்களா?” என்றார். துரியோதனன் திடுக்கிட்டு உடனே கடும் சினம்கொண்டு தன் இரு கைகளையும் ஓங்கி கைப்பிடியில் அடித்தபடி “ஏன் ஒப்பமாட்டார்கள்? அவர் இன்று அஸ்தினபுரியின் பெரும் படைத்தலைவர். அதை அறிந்த பின்னரே அவர்கள் இங்கு படைக்கூட்டுக்கு வந்திருக்கிறார்கள்” என்றான்.
“அவர்கள் அறிந்திருப்பார்கள், ஒப்பியும் இருப்பார்கள். ஆனால் அஸ்தினபுரியின் வெற்றி என்பது தூய ஷத்ரியர்களின் வெற்றியல்ல என்றொரு சொற்பரவலை இளைய யாதவரின் ஒற்றர்கள் உருவாக்கினார்கள் என்றால் பலர் பின்னடையக்கூடும்” என்றார் கணிகர். “அர்ஜுனனுக்கு படை எதிர் நிற்கும் வல்லமை கொண்டவர் அங்கர் மட்டுமே என்றறியாத ஷத்ரியர் எவர்?” என்றான் ஜயத்ரதன். கணிகர் பறவைக்குரல் போல மெல்ல நகைத்து “ஆம், அறிவார்கள். ஆனால் அவ்வறிவு உள்ளத்தில் நிலைப்பது. ஆழத்திலோ ஒவ்வொருவரும் தாங்களும் அர்ஜுனர்கள்தான்” என்றார்.
சகுனி “நேரடியாகவே சொல்கிறேன் மருகனே, நமது தரப்பில் ஷத்ரியப் பெருவீரர்களென நாம் மூவர் மட்டுமே உள்ளோம். உன்னால் படைநடத்த இயலாது. நானோ சூழ்கைகளை அமைப்பேனே ஒழிய களம் நின்று போரிட வல்லவன் அல்ல. ஜயத்ரதன் இன்னும் இளையோன். இந்திரப்பிரஸ்தத்திற்கு நிகரான வில்லவன் என்றால் அங்கர் மட்டுமே. எவ்வகையிலேனும் அவரை பிற ஷத்ரியர் ஏற்க முடியாதென்று ஆக்கினால் நமது படைகள் ஆற்றல் இழக்கும்” என்றார்.
கர்ணன் “அவ்வகையில் எத்தனையோ வஞ்சங்களை அவர்கள் செய்யலாம். அவற்றையெல்லாம் எண்ணி முன்னரே உளம் சோர்வதில் என்ன பொருள்? அவை எழுகையில் நிகர் வஞ்சத்தை நாம் செய்வோம். அதுவே வீரர்களின் வழி” என்றான். கணிகர் “அது அத்தனை எளிதல்ல, அங்கரே” என்றார். கர்ணன் சினம் எழ, உடனே அதை வென்று மீசையை முறுக்கியபடி கணிகரை கூர்ந்து நோக்கினான். “யாதவர்கள் ஒரே வினாவை கேட்கக்கூடும். இப்போர் எதன் பொருட்டு? செம்மை செய்தமைந்த நால்வேதத்தின் பொருட்டு நாம் நிற்கிறோம் என்றால் செதுக்கிக் கூராக்கிய புதுவேதத்தின் பொருட்டு அவர்கள் நிற்கிறார்கள். இதில் அங்கர் எங்கே நிற்கிறார்?” என்றார் கணிகர்.
கர்ணன் “என்ன சொல்கிறீர்?” என்றான். “நாகவேதத்தை காக்க உறுதி ஏற்றவர் நீங்கள் என்று இங்கொரு சொல் உலவுகிறது” என்றார் கணிகர். கர்ணன் “ஆம். நான் அவர்களுக்கொரு வாக்கு கொடுத்தேன். அவர்களின் குலம் அழியாது காப்பேன் என்று. அவர்களின் வஞ்சத்திற்கு நிகர் செய்வேன் என்று” என்றான்.
கணிகர் “அங்கரே, அது ஓர் எளிய வாக்கு அல்ல. இந்நிலம் நாகர்களுக்குரியது. இங்கு முளைத்தெழுந்த சொற்களும் அவர்களுக்குரியதே. அதில் விளைந்த முதல் கனியான வேதமும் அவர்களுக்குரியதே. அவர்களை வென்று நின்றது நமது குலம். மண்ணுக்கடியில் நாகங்கள் வாழ்கின்றன என்று சூதர் பாடும் தொல்கதை நேர்ப்பொருள் மட்டும் கொண்டதல்ல. நாடுகள் நகரங்கள் ஊர்கள் குடிகள் என்று பெருகியிருக்கும் நம் வாழ்வுக்கு அடியில் என்றும் இமையாத விழிகளுடன் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் வஞ்சமொன்றை ஏற்ற நீங்கள் இவ்வேதத்தின் காவலராக எப்படி களம் நிற்க முடியும்?” என்றார்.
துரியோதனன் தன் தொடையை அறைந்தபடி உரக்க “களம் நிற்பார். இது எனது ஆணை! எனக்கு ஷத்ரியர்களின் துணை தேவையில்லை. என் துணைவர் படை மட்டுமே போதும் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல” என்றான். அமைதியாக “போதாது” என்றார் சகுனி. துரியோதனன் “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே?” என்றான். “நமது படைகள் இந்திரப்பிரஸ்தத்தை வெல்ல போதுமானவை அல்ல. ஷத்ரியர்களின் முழுமுற்றான ஆதரவின்றி நம்மால் களம் வெல்ல இயலாது. ஒருகால் வெல்லக்கூடும். ஆனால் பேரழிவின்மீது மட்டுமே நமது குருதிக்கொடி எழும். நம்மில் வீரர்கள் எஞ்சுவதும் அரிது. அவ்வாறு வென்று ஒரு வேள்வியை நாம் இங்கு செய்வோமென்றால் மிகச்சில ஆண்டுகளிலேயே நம்மைச் சூழ்ந்துள்ள நிஷாதர்களும் அசுரர்களும் நம்மை வெல்வார்கள். நாம் நம்முள் போரிட்டு வலுகுன்றி இருக்கும் தருணத்தைக் காத்து இங்குள்ள அத்தனை மலைக்காடுகளிலும் சினம்கொண்ட விழிகள் நிறைந்திருக்கின்றன என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார் சகுனி.
கணிகர் “அவற்றில் முதன்மையானவை நாகர்களின் விழிகள். நாகர்களுக்காக குருதி தொட்டு உறுதி கொடுத்த ஒரு வீரனை நாம் நம் தரப்பிலேயே கொண்டிருக்கிறோம்” என்றார். கர்ணன் எழுந்து சினத்துடன் “உங்கள் நோக்கமென்ன? படைப்புறப்பாடு முழுமை பெற்ற பின்னர் இதை சொல்வதற்கு ஏன் துணிகிறீர்கள்? என் முதல் கடப்பாடு அஸ்தினபுரி அரசரிடம் மட்டுமே” என்றான். “அவ்வண்ணமெனில் இங்கு இவ்வவையில் நாகர்களை துறப்பேன் என்று உறுதி கொடுங்கள்” என்றார். கர்ணன் தளர்ந்து “அது ஒரு சிறுமைந்தனின் தலை தொட்டு நான் அளித்த சொல்” என்றான்.
மெல்ல நகைத்து “இரு தெய்வங்களை உபாசனை செய்ய இயலாது, அங்கரே” என்றார் கணிகர். “இவ்வவையில் அங்கர் சொல்லட்டும் நாகர்களை ஆதரிக்கப்போவதில்லை என்று. ஷத்ரியர் கோருவார்களென்றால் அச்சொல்லையே நாம் பதிலாக அளிக்க முடியும்” என்றார் சகுனி.
உதடுகள் துடிக்க விழிகள் நீர்மை கொள்ள “இப்புவியில் பிறிதெவரும் எனக்கு முதன்மையானவரல்ல. இதுவே உங்கள் கோரிக்கை என்றால்…” என்று கர்ணன் கைநீட்ட அக்கையை துரியோதனன் பற்றிக் கொண்டான். “இல்லை. மாதுலரே, எனது தோழர் அவர் கொடுத்த சொல்லில் இருந்து ஒரு அணுவும் பின்னடையப்போவதில்லை. வேண்டுமெனில் அச்சொல்லுக்காக அஸ்தினபுரியை இழக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன்” என்றான். “அரசே…” என்று கர்ணன் உணர்வெழுச்சியுடன் சொல்ல “போதும், அமருங்கள்” என்று அவன் தோள்தொட்டு பீடத்தில் அமரவைத்தான் துரியோதனன்.
முகம் உணர்வெழுச்சியால் ததும்ப சகுனியிடம் “என் பொருட்டு இப்புவியையும் மூன்றுதெய்வங்கள் ஆளும் அவ்விண்ணையும் அங்கர் துறப்பார் என்று எனக்கு தெரியும். அவர் பொருட்டு அவையனைத்தையும் நானும் துறப்பேன். அவர் சொல் நிற்கட்டும்” என்றான். “நன்று, ஆனால் அச்சொல் நின்றால் அஸ்தினபுரி எப்படி வேதங்களுக்கென வாளெடுத்து முன் நிற்க முடியும்?” என்றார் கணிகர். “வேதங்களுக்கென வாளெடுக்கவில்லை. என் விழைவுக்கென வாளெடுக்கிறேன், என் மண்ணுக்காக மட்டுமே குருதி சிந்தப்போகிறேன்” என்றான் துரியோதனன். “ஆம், வெல்ல முடியாது போகும். வீழ்கிறேன். அழிகிறேன். அதுவும் விண்ணுலகேகும் வழியே.”
ஜயத்ரதன் “இப்போது நாமே ஏன் மிகையான உணர்வுகளை அடைய வேண்டும்? ஷத்ரியர்கள் இவ்வினாக்களை இன்னும் எழுப்பவில்லை” என்றான். சகுனி “இப்போது அவர்கள் எழுப்புவார்கள் எனில் நன்று. படையெழுந்து இந்திரப்பிரஸ்தம் நெருங்கும்போது அவ்வினா எழுமென்றால் சிறுமையையே ஈட்டித்தரும்” என்றார். துரியோதனன் கைதூக்கி “போதும் சொல்லாடல். நான் முடிவெடுத்துவிட்டேன். படைப்புறப்பாடு நாளை மறுநாள் நிகழும்” என்றான்.
சகுனி “இத்தருணத்தில் படைப்புறப்பாடைவிட உகந்த வழியொன்றுண்டா என்று ஏன் நாம் எண்ணக்கூடாது?” என்றார். துரியோதனன் ஐயத்துடன் கணிகரை நோக்க சகுனி “மருகனே, இன்று பிதாமகரின் கோரிக்கையுடன் விதுரர் கணிகரை பார்க்க வந்தார்” என்றார். “கணிகரையா?” என்றான் துரியோதனன். “ஆம். உடன் பிறந்தார் பொருதிக்கொண்டு குருதி சிந்தலாகாது என்று கணிகரின் கால்களை சென்னி சூடி பிதாமகர் வேண்டியிருந்தார்.”
துரியோதனன் ஏளனத்துடன் நகைத்து “ஆம், நானறிவேன். அவர் அதைத்தான் செய்வார். அதன் பொருட்டே அவரை முற்றிலும் தவிர்த்தேன். அவரோ எந்தையோ இனி எனக்கு ஆணையிடலாகாது. நான் என் இறுதித் தளையையும் அறுத்துவிட்டேன்” என்றான். கணிகர் “பிதாமகரின் கோரிக்கை என் முன் வந்தபோது நான் எண்ணியது ஒன்றே. அவர் நம் பொருட்டு படைநிற்கமாட்டார்” என்றார். “ஆம். நிற்கமாட்டார். இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அவர் எப்படி வில்லெடுக்கமுடியும்? தன் சிறுமைந்தரை கொன்றொழிப்பாரா என்ன?” என்றான் கர்ணன்.
“அவர் வரவில்லையென்றால் கிருபரும் துரோணரும் நமது பக்கம் நிற்கமாட்டார்கள்” என்றார் கணிகர். “அவ்வெண்ணத்தை அடைந்ததுமே நான் முடிவெடுத்துவிட்டேன், குருதிசிந்தும் போர் நிகழ முடியாது. நிகழ்ந்தால் வெல்வதரிது.” கர்ணன் சினத்துடன் “போரென்றால் உங்களுக்கென்ன தெரியும்? பகடையாடுதல் என்று எண்ணினீரா? வந்து பாருங்கள், களத்தில் பாண்டவர் ஐவருக்கும் யாதவர் இருவருக்கும் நானொருவனே நிகரென்று காட்டுகிறேன்” என்றான்.
கணிகர் ஏதோ சொல்ல வாயெடுக்க சகுனி அவரைத் தடுத்து “மருகனே, மிகைச்சொற்களை இங்கு சொல்ல விழையவில்லை. அத்தருணத்தில் கணிகர் ஒரு முடிவெடுத்தார். அதுவே நன்றென்று நானும் உணருகிறேன். நமக்குத் தேவை வெற்றி. அது களத்தில் குருதியில்தான் நிகழவேண்டும் என்று என்ன இருக்கிறது? குருதி சிந்தி நாம் வென்றால் அப்பழியைச் சொல்லியே உனது முடியையும் கோலையும் ஏழு தலைமுறைக்காலம் இழிவுபடுத்துவார்கள்” என்றார்.
“பிறகென்ன செய்வது?” என்றான் ஜயத்ரதன். “பிதாமகர் சென்று இந்திரப்பிரஸ்தத்தை நமக்கு கப்பம் கட்டும்படி கோரப்போகிறாரா?” சகுனி “அது நிகழாது என்று நாமனைவரும் அறிவோம். ஏனெனில் இது இளைய யாதவனின் போர்” என்றார். “கணிகர் சொன்னது பிறிதொருவழி. நிகரிப்போர்.”
“களிறாடலா?” என்றான் கர்ணன் புருவத்தை சுருக்கியபடி. “அல்ல. போர் ஒரு பகடைக்களத்தில் நிகழட்டும்” என்றார் சகுனி. துரியோதனன் திகைப்புடன் “என்ன சொல்கிறீர்கள், மாதுலரே?” என்றான். “ஆம், பகடைக்களம்தான். இங்கு ஹஸ்தியின் காலம் முதலே பன்னிரு படைக்களம் அமைந்திருந்தது. மாமன்னர் பிரதீபரால் அழிக்கப்படும் வரை பாரதவர்ஷத்தின் மன்னர் அனைவரும் வந்து ஆடியிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் பகடைக்களத்தில் நிற்கட்டும். நம் தரப்பில் நான் ஆடுகிறேன். அவர்கள் தரப்பில் உகந்த ஒருவர் வரட்டும்.”
“களியாட்டு உரைக்கிறீர்களா, மாதுலரே? பகடையாட்டத்தில் வென்று ராஜசூயம் செய்வதா?” என்றான் துரியோதனன். “அதை நம் கோரிக்கையாக நாம் சொல்ல வேண்டியதில்லை. நம் தாள் பணிந்து பிதாமகர் கோரியதனால் நாம் எடுத்த முடிவென்று சொல்வோம். அதுவும் நமது பெருந்தன்மைக்கொரு சான்றாகவே ஆகும்” என்றார் சகுனி. தலையை அசைத்து “இல்லை. அது எனக்கு சிறுமையென்றே தோன்றுகிறது” என்றான் துரியோதனன்.
“மருகனே, நாம் உறுதியாக வெல்ல வாய்ப்புள்ள போர் இங்கு பன்னிரு படைக்களத்தில் நிகழ்வதே. ஐயமின்றி சொல்வேன். இப்பாரதவர்ஷத்தில் என்னிடம் பகடை கோக்கும் திறனுடைய இருவரே உள்ளனர். ஒருவர் இங்கு அமர்ந்திருக்கும் கணிகர்.” இடைமறித்து “பிறிதொருவன் இளைய யாதவன்” என்றான் கர்ணன். “பகடையுடன் அவன் வந்து அமர்ந்தால் நாம் என்ன செய்வோம்?”
“அவன் வரமுடியாது” என்று சகுனி நகைத்தார். “முடிசூடி அரசனென்று துவாரகையில் அமர்ந்திருக்கும் வரை இந்திரப்பிரஸ்தத்துக்காக அவன் வந்து ஆட முடியாது. வருபவன் யுதிஷ்டிரனின் ஆணைக்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கமுடியும்.” “இதெல்லாம் வீண்பேச்சு. பகடையில் வென்று ராஜசூயம் வேட்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. இழிவு!” என்றான் துரியோதனன். துச்சாதனன் “ஆம். மாதுலரே, அது உரிய வழி அல்ல” என்றான்.
சகுனி சினத்துடன் “இழிவென்று யார் சொன்னது? உமது பெருந்தந்தையர் ஆடிய ஆடல் எப்படி இழிவாகும்? இழிவெனில்கூட உடன் பிறந்தோரைக் கொன்று முடிசூடுவதன் பழி அதில் இல்லை. இன்று இது இழிவெனத் தெரிந்தாலும்கூட வென்று வேள்வி இயற்றிய பின்னர் அது ஒரு இனிய விளையாட்டே என்று பாரதவர்ஷத்தின் மக்கள் முன் நாம் கதையமைத்துவிட முடியும். ஒரு குடும்பத்தார் அவர்களுக்குள் மூத்தவர் எவர் என்று முடிவு செய்ய பெரியவர் கூடிய அவையில் விளையாட்டொன்றை நிகழ்த்துவதில் இழிவென்ன உள்ளது?” என்றார்.
ஜயத்ரதன் “இன்று படைதிரண்டு நம்மை அடுத்துள்ள பெருங்குடி ஷத்ரியர்கள் அதை ஏற்பார்களா?” என்றான். “ஏற்பார்கள். இவ்வண்ணம் ஒரு திட்டமுள்ளது என்று சொல்லுங்கள், பொய்யாக சினந்து பின் மெல்ல ஒப்புவார்கள்” என்றார் சகுனி. “ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் அஞ்சிக் கொண்டிருப்பது போரையே. உறுதியாக வெல்லும் போர் மட்டுமே உவகைக்குரியது. நிகர் ஆற்றல்கள் இடையே நிகழும் போர் முற்றழிவையே எஞ்சச் செய்யும். அதை அறியாத ஷத்ரியர் எவர்?”
கணிகர் மெல்ல கையை ஊன்றி “அத்துடன் ஷத்ரியர்களுக்கு ஒன்று தெரியும், சென்ற பலநூறாண்டுகளாக ஷத்ரியர் எவரும் சூத்திரர்களையும் நிஷாதர்களையும் அசுரர்களையும் ஒற்றைப் பெருங்களத்தில் சந்தித்ததில்லை. அவர்களின் உள்ளுறைந்த வல்லமை என்ன என்பது இதுவரைக்கும் முட்டிப்பார்க்கப்படவில்லை” என்றார்.
கர்ணன் “ஆம். அந்த மெல்லிய ஐயமும் குழப்பமும் ஷத்ரியர்களிடம் இருப்பதை நான் உணர்கிறேன்” என்றான். “யார் சொன்னது? என்ன சொல்கிறீர், அங்கரே?” என்று உரக்க கூவினான் துரியோதனன். கர்ணன் “ஷத்ரியர் ஒவ்வொருவரும் மிகையாக வஞ்சினம் உரைக்கிறார்கள். அதிலேயே அவர்களின் தன்னம்பிக்கையின்மையும் உட்கரந்த ஐயமும் வெளிப்படுகிறது” என்றான்.
“இப்போர் எளிதில் முடியப்போவதில்லை” என்றார் சகுனி. “நாம் அவர்களை வென்றால்கூட இந்திரப்பிரஸ்தத்தை கைவிட்டு விட்டு தருமன் தன் மணிமுடியுடனும் கோலுடனும் துவாரகைக்கு செல்லக்கூடும். துவாரகை வரை படை கொண்டு சென்று அவனை வெல்லாமல் அஸ்தினபுரியில் ராஜசூயம் நிகழ இயலாது.” உரத்தகுரலில் “ஏன் அங்கு செல்ல முடியாது? செல்வோம்” என்றான் துரியோதனன். “வஞ்சினம் எளிது. இன்று கங்கை நிலத்தின் எந்த அரசும் பெரும்பாலை நிலத்தைக் கடந்து துவாரகையை சென்றடைய முடியாது. துவாரகையின் கடல் வல்லமையை எதிர் கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை” என்றார் சகுனி.
துரியோதனன் சலிப்புடன் “போருக்கு முன்னரே தோல்வி குறித்த ஐயங்களை உருவாக்குகிறீர்கள், மாதுலரே” என்றான். “தோல்வி அணுகுகிறது என்று நான் இப்போதும் எண்ணவில்லை. வெற்றி எளிதல்ல என்றே சொல்ல விழைகிறேன். எளிய வெற்றிக்கு ஒரு வழியிருக்கையில் அதை ஏன் நாம் ஏற்கக்கூடாது?” என்றார் சகுனி.
துரியோதனன் மறுத்துரைக்க கையை தூக்குவதற்குள் கர்ணன் “ஆம், கணிகர் சொன்னதை என் உள்ளம் இப்போது ஏற்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்?” என்று துரியோதனன் கூவ “சற்று பொறுங்கள் அரசே, எனக்கும் பகடையாட்டத்தைப் பற்றி சொல்லப்பட்டதும் பெருஞ்சினமே எழுந்தது. ஆனால் ஒவ்வொன்றாக எண்ணி நோக்குகையில் ஒரு போர் உருவாக்கும் அழிவை எளிதில் கடந்து செல்லவும் உறுதியான வெற்றி ஒன்றை அடைந்து நாம் எண்ணியதை இயற்றவும் பன்னிரு படைக்களமே உகந்ததென்று தோன்றுகிறது” என்றான் கர்ணன்.
துரியோதனன் “இழிவு! அங்கரே, இத்தனை படைபயின்று தோள்பெருக்கி இறுதியில் இவ்வண்ணமொரு சூதுக்களத்திலா நான் நின்று வெல்ல வேண்டும்?” என்றான். கர்ணன் “நாம் வெல்லும் களங்கள் பிறகு வரும். இத்தருணத்தை கடந்து செல்ல இதுவே சிறந்த வழி” என்றபின் திரும்பி “காந்தாரரே, பன்னிரு படைக்களம் ஒருங்கட்டும்” என்றான். துரியோதனன் ஏதோ சொல்ல வாயெடுக்க “நான் சொல்லியாகிவிட்டது. பகடைக்களத்தில் நாம் அவர்களை சந்திப்போம்” என்றான்.
துரியோதனன் சலிப்புடன் தலையை அசைத்தபின் எழுந்து மறுபக்கச் சாளரத்தை அணுகி வெளியே நோக்கி நின்றான். “பகடைக்களம் அமைக!” என்றான் கர்ணன். புன்னகையுடன் “நன்று” என்றார் கணிகர். துரியோதனன் சினத்துடன் விரைந்து வந்து குனிந்து தன் சால்வையை எடுத்தபின் காலடிகள் ஓசையிட மந்தண அறையைவிட்டு வெளியே சென்றான். துச்சாதனனும் அவன் பின்னால் சென்றான்.
சுபாகு அருகே வந்து “நம் தந்தை ஏற்றுக் கொள்வாரா?” என்றான். சகுனி “எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார். ஆனால் ஏற்கச்செய்ய முடியும்” என்றார். கர்ணன் எழுந்து “இத்தருணத்தில் அரசரை தனித்துவிடலாகாது. நான் செல்கிறேன்” என்றான். கணிகர் புன்னகையுடன் “நன்றி அங்கரே, நான் எண்ணியிருந்தது பிழையாக இல்லை” என்றார்.
கர்ணன் சீறித்திரும்பி “எதை எண்ணியிருந்தீர்?” என்றான். “உம்மை நம்பியே உடன்பிறந்தோர் போரை தவிர்க்க முடிவெடுத்தேன்” என்றார். “ஏன்?” என்றான் கர்ணன் மேலும் சினத்துடன். கணிகர் உரக்க நகைத்து “நீரும் பீஷ்மரல்லவா?” என்றார். மேலும் ஒரு சொல் இதழ் வரை வந்து உடல் ஒரு கணம் தடுக்க கர்ணன் தலையை அசைத்து அதை தவிர்த்து வெளியே சென்றான்.