பன்னிரு படைக்களம் - 68
[ 10 ]
துரியோதனன் நகர் புகுந்த செய்தியை விதுரர் அறியவில்லை. அவர் சுருதையின் மஞ்சத்திலேயே அமர்ந்திருந்தார். மாலையில் அவரது ஏவலன் வந்து அமைச்சுநிலையின் அறைவாயிலில் நின்றிருப்பதை சற்று நேரம் கழித்தே அவர் கண்டார். “என்ன?” என்று கடுகடுப்புடன் கேட்டபோது அவன் தலைவணங்கி “அன்னை” என்றான். “மருத்துவர் பார்க்கிறார்களல்லவா?” என்றபடி அவர் கனகரிடம் இறுதியாக வந்த ஓலைக்காக கைநீட்டினார். கனகர் தொகுத்தளித்த நான்கு ஓலைகளை சுருள்நீவி படித்தபடி ஏவலன் மறுமொழி சொல்லவில்லை என்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார்.
“மருத்துவர் தங்களை வரச்சொன்னார்” என்றான் ஏவலன். “ஏன்?” என்றார் விதுரர் ஓலைகளை புரட்டியபடி. அவன் பேசாமல் நிற்க “மருத்துவர்களிடம் என்ன நிகழ்கிறது என்பதை விரிவாகக் கேட்டு வா” என்றார். ஏவலன் அகலாமல் அங்கேயே நிற்பதை உணர்ந்து விழிதூக்கி சினத்துடன் “என்ன?” என்றார்.
“அமைச்சரே, அன்னையார் இன்றிரவு உயிர் துறக்கக்கூடும் என்று மருத்துவர் எண்ணுகிறார்” என்றான். கையில் ஓலையுடன் விதுரர் சற்றே வாய்திறந்து அவனை நோக்கி நின்றார். கனகர் உரத்த குரலில் “என்ன சொல்கிறாய்?” என்றார். “அவரது காய்ச்சல் உள்ளுறுப்புகளுக்குள் நிறைந்திருக்கிறது. சித்தம் கலங்கியிருக்கிறது. தாங்கள் இறுதியாக ஒருமுறை பார்ப்பதற்கு வரவேண்டும் என்று மருத்துவர் ஆணையிட்டார்.”
விதுரர் கையில் இருந்து ஓலைகள் நழுவி விழ கனகர் அவற்றை பற்றிக் கொண்டார். சரடு ஒன்று அறுபட்டதுபோல சற்று நிலையழிந்து பீடத்தில் விதுரர் சாய்ந்தார். கனகர் இன்னொரு கையால் அவர் தோளை பற்றிக்கொண்டு “இரு ஏவலரை வரச்சொல். அமைச்சரை அழைத்துச் செல்” என்றார். ஏவலனுக்குப் பின்னால் இருந்த இரு காவலர் “நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” என்றனர்.
கனகர் விதுரரிடம் “செல்வோம், அமைச்சரே” என்றார். “ஆம்” என்றார் விதுரர். கைகளால் துழாவி தன் மேலாடையை எடுத்தார். “ஆனால்… அரசர் இங்கு வந்து கொண்டிருக்கிறாரல்லவா?” என்றார். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். தாங்கள் செல்லுங்கள்” என்ற கனகர் திரும்பி இன்னொரு துணை அமைச்சரைப் பார்க்க அவர் அருகே வந்து விதுரரின் கைகளை பற்றிக்கொண்டு “செல்வோம், அமைச்சரே” என்றார். விதுரர் தளர்ந்த காலடிகளுடன் அவருடன் சென்றார்.
அது தான் கண்டுகொண்டிருக்கும் கனவு என்றும் எப்போது வேண்டுமானாலும் சற்று புரண்டு விழித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் எண்ணினார். கனவில் மட்டும்தான் இடைநாழிகள் அத்தனை நீண்டதாக இருக்கும். கனவில் மட்டும்தான் ஓசைகள் அசைவுகளுடன் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். நீருக்குள் மூழ்கி இருந்து ஒலிகளைக் கேட்பது போல் அரண்மனைக்குள் எங்கும் எழுந்து கொண்டிருந்த கலவையான உரையாடலை கேட்டார். வலப்பக்கம் முற்றத்தில் நின்றிருந்த புரவி ஒன்று முன்னங்காலால் கற்தரையை தட்டிக்கொண்டிருந்தது. இரு தேர்களின் கடையாணிகள் அசைந்தன. எங்கோ ஒரு திரைச்சீலை சிறகோசை போல் படபடத்துக் கொண்டிருந்தது. நீரில் மூச்சடைக்க எடையில்லாது ஒழுகிச் செல்வதுபோல் அவர் சென்றார்.
பின்பு அவர் இளைஞனாக சத்யவதியை பார்ப்பதற்கு படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்தார். சத்யவதி தன் மஞ்சத்தறையில் பட்டுவிரிப்பின்மேல் கால் மடித்தமர்ந்து ஓலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள். அவ்வறைக்குள் அம்பிகையும் அம்பாலிகையும் நின்றிருந்தனர். சத்யவதி அவரைப் பார்த்து “நெடுநேரமாயிற்று” என்றாள். “ஆம். நான் வந்து கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “இந்த ஓலைகள்…” என்று அவள் விரித்துக் காட்டினாள். “அரசர் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இடர் ஒன்றும் நிகழவில்லை” என்றார் விதுரர். “ஆம், எனக்கும் ஓலைகள் வந்தன” என்றாள் அம்பாலிகை.
அம்பிகை “அவன் நகர் நெருங்கிய பிறகு எனக்குத் தெரிவி” என்றாள். விதுரர் அவர்கள் மூவரின் விழிகளை நோக்கினார். நெஞ்சு திடுக்கிட்டு ஒன்றை உணர்ந்தார். அவர்கள் மூவரும் முன்னரே இறந்துவிட்டிருந்தனர் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. மெல்லிய காலடி ஓசை கேட்டது. மறுபக்க அறைக்கதவு திறந்து சுருதை உள்ளே வந்தாள். “நீ…? நீ எப்படி?” என்று விதுரர் கேட்டார். “நான் இன்றுதான் வந்தேன்” என்றாள் சுருதை. அவள் மிக இளையோளாக, மெலிந்த மாநிற உடலும், நீண்ட முகமும், இரு கருங்குருவி இறகுகள் போன்று பீலி செறிந்த இமைகளும் கொண்டிருந்தாள்.
“உன்னை அங்கு தேடுவார்கள்” என்றார் விதுரர். “சொல்லிவிட்டுத்தான் வந்தேன்” என்றபின் அவள் புன்னகையுடன் அந்த ஓலைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினாள். அவள் விழிகளிலும் அதுவே தெரிவதை விதுரர் உணர்ந்தார். அவளும் முன்னரே இறந்துவிட்டிருந்தாள். “சுருதை, நீ எப்படி இறந்தாய்?” அச்சொல்லுடன் அவர் தன்னை உணர்ந்தபோது தன் மாளிகை முற்றத்தில் நடந்து கொண்டிருந்தார். கனவா? விழிப்பில் நடந்து கொண்டிருக்கையில் கனவு நிகழுமா என்ன? ஆனால் அவர்கள் உண்மை. அவர்கள் நிகழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.
மாளிகை முற்றத்தில் இருந்து செவிலியர் அவரை நோக்கி வந்தனர். முதுசெவிலி வணங்கி “இளவரசர்களுக்கு செய்தி அனுப்பிவிட்டோம்” என்றாள். அவர் “ஆம், அங்கரும் அரசரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். அவர் சொல்வதன் பொருளென்ன என்று தெரியாமல் அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். பின்பு அவர் நின்று “மைந்தருக்கு சொல்லிவிட்டீர்களா?” என்றார். அவர்கள் “ஆம், பறவைச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது” என்றார்கள். “வருக!” என்று மாளிகை ஸ்தானிகர் அவர் கையை பற்றினார். “ஆம்” என்று சொல்லி அவருடன் சென்றார்.
தன் கால்கள் மட்டும் தனியாக அசைந்துகொண்டிருப்பது போல, அந்த மாளிகையின் ஒவ்வொரு பகுதியும் முற்றிலும் அறியாததாக மாறிவிட்டது போல தோன்றியது. சுவர் மடிப்புகளில் எல்லாம் இருள் தேங்கியிருப்பதை இதற்கு முன் பார்த்ததேயில்லையே என்று எண்ணினார். படிகளில் ஏறி சுருதையின் மஞ்சத்தறை வாயிலை அடைந்ததும் வெளியே நின்றிருந்த மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்று கொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார்.
தலையசைத்து விதுரர் உள்ளே நுழைந்தார். சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால் அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு எலும்பு புடைப்புடன் எழுந்து தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்து கொண்டிருந்தன. இரு தவளைகள் போல என்று அவர் நினைத்தார். இப்படியா இருக்கிறாள் இவள்? இத்தனை மெலிந்தா? இத்தனை முதுமை கொண்டா? அனலணைந்த வெண்சாம்பல் நிறமான தலைமுடி அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். நரை முடியில் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.
இத்தோற்றத்தில் அவளை ஒருபோதும் பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டார். அவளை பார்க்கும்போதெல்லாம் மணநாள் முதல் ஒவ்வொரு முறையும் பார்த்துவந்த ஒரு உடலின் ஒட்டுமொத்தமே தெரிந்து கொண்டிருந்தது. தன் விழைவுகளால் அன்பால் அவர் அவ்வுடலை பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது வெறும் விழிகளால் பார்க்கையில் அவ்வுடல் முன்னரே உதிரத்தொடங்கிவிட்டதென்று தெரிந்தது. இப்படித்தான் இருந்திருக்கிறாள் சென்ற சில ஆண்டுகளாக. அவர்தான் அறியவில்லை.
அவர் வந்திருப்பதை எவ்வண்ணமோ உணர்ந்து கொண்டதைப்போல அவள் விழிகள் அதிர்ந்தன. உலர்ந்து ஒட்டிய உதடுகள் மெல்ல விரிந்து முனகின. அதுவும் அவள் குரல் அல்ல. நோயுற்ற விலங்குகள் இப்படித்தான் ஒலிக்கின்றன. இது நோயின் ஒலி. வலியின் ஒலி. அவர் அவள் கையை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு குனிந்து “சுருதை” என்றார். அவர் குரல் அவள் காதில் விழவில்லை என்று தோன்றியது. அவள் கைகளின் நகங்கள் சற்றே கருமை கொண்டு நீண்டிருந்தன. மேல் கையில் கிளைகளுடன் நரம்புகள் புடைத்து மணிக்கட்டில் ஏறி மேலே சென்றன. அவர் அவள் அழகிய மார்புகளை நினைத்தார். நெடுநாட்கள் அவளை எண்ணும்போதெல்லாம் அவையே நினைவில் வந்துகொண்டிருந்தன. அவளுடைய சொற்களைவிட விழிகளைவிட அணுக்கமானவை அவை. அவள் நெஞ்சு அதிர்ந்துகொண்டிருந்தது.
அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என்று மீண்டும் அழைத்தார். அவள் மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா?” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை. அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள் போல தோன்றினாள்.
இப்போது என்ன சொல்லவேண்டும்? நோயுற்று படுத்திருக்கையிலும் இங்கு வருவதை தவிர்த்ததற்காக மன்னிப்பு கோரவேண்டுமா? அப்படியென்றால் ஒவ்வொரு நாளுமென மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோரியபடியே சென்று முதல் நாள் அவள் மஞ்சத்தறைக்கு வந்த தருணத்தை சென்றடைய வேண்டும். அவருக்குத் தோன்றியது மன்னிப்பு கோரலாகாது என்று. அது அவளுடைய நாற்பதாண்டு கால அன்பை சிறுமை செய்வதாகும். பிறகென்ன சொல்வது? சென்று வா என்றா? அங்கு காத்திரு என்றா? ஒரு கணத்தில் பேரலைபோல அவர் நெஞ்சை துயர் வந்து தாக்கியது. கண்களில் இருந்து கண்ணீர் அவள் கைகளிலும் மரவுரிச் சேக்கையிலும் கொட்டியது.
அவள் கை அவர் விழிநீர்த்துளி பட்டு சற்று அதிர்ந்தது. விழி தூக்கி அவரைப் பார்த்து “என்ன இது?” என்றாள். கண்ணீரை துடைப்பதற்கென அவள் கை மெல்ல எழுந்து அதற்குரிய விசை இல்லாமல் மீண்டும் தணிந்தது. “வேண்டாம்” என்றார். “நான் இங்கு தனித்திருப்பேன்” என்று அவர் சொன்னார். “ஆம்” என்று அவள் மெல்ல சொன்னாள். “தனித்து விடுவீர்கள்” என்று தனக்குத்தானே என முனகினாள். பின்பு அவள் அவர் விரலைப்பற்றி அழுத்தி “எதுவும் நம்மிடமில்லை” என்றாள்.
வாழ்நாள் முழுக்க அவள் சொன்ன அனைத்திற்கும் அவ்வொரு சொல்லே சாரம் என்று அத்தருணத்தில் அவர் உணர்ந்தார். “ஆம் சுருதை, உண்மை.” “எதிலும் முட்டிக் கொள்ளாதீர்கள்” என்று மீண்டும் அவள் சொன்னாள். “முயல்கிறேன்” என்றபின் “என்னுடன் இரு. எங்கிருந்தாலும் என்னுடன் இரு” என்றார். நெஞ்சு விம்ம தணிந்த குரலில் “இன்னும் சில நாட்கள்தானே” என்று அவர் சொன்னார். “இல்லை…” என்று அவள் சொன்னாள். “இன்னும் நெடுநாட்கள் இருக்கிறது.” அவள் முகம் புன்னகையில் விரிந்தது. ஒட்டி நெற்று போலான முகத்தில் புன்னகை அத்தனை ஒளியேற்ற முடியும் என்பதை அவர் திகைப்புடன் பார்த்தார். அவள் அப்புன்னகையினூடாக ஆண்டுகளை ஒரே கணத்தில் கடந்து சென்று நாணமும் உவகையும் மிகுந்த சிறுமியென்று ஆனாள்.
“நான் இருப்பேன்” என்றாள். அவரது சுட்டுவிரலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டாள். அப்புன்னகையுடன் விழிகளை மூடி அது அவ்வாறே நீடிக்க அசைவற்று படுத்திருந்தாள். மூச்சு சீராக ஓடிக் கொண்டிருந்தது. அவள் முகத்தை நோக்கிக்கொண்டிருந்த விதுரர் பெருமூச்சுடன் இயல்பு நிலைக்கு மீண்டு வாயிலில் இருந்து உள்ளே செறிந்த நிழலைப்பார்த்து விழிதூக்கினார். அங்கு நின்றிருந்த ஸ்தானிகர் “அரண்மனையிலிருந்து செய்தி” என்றார். “என்ன?” என்றார் விதுரர். “அரசரும் அங்கரும் அரண்மனை புகுந்துவிட்டனர்.” “சரி” என்றபின் அவர் மீண்டும் அவளை பார்த்தார்.
தன் இடக்கையை நீட்டி அவள் நெற்றியில் கைவைத்து பிசிறி நின்றிருந்த நரைமுடிகளை நீவி பின்செலுத்தி காதுக்குப்பின் செருகினார். அவள் காது மடல்களை பற்றினார். குழை அணிந்த காதில் துளை இழுபட்டிருந்தது. மெல்ல கைசரிந்து அவள் தோளை தொட்டார். தோளின் முழைஎலும்பை சுட்டுவிரலால் அழுத்திப்பார்த்தார். ஏவலன் அருகே வந்து வாயில் முன் நின்றான். திரும்பி “என்ன?” என்றார். “வந்ததுமே அரசர் படைத்தலைவர்களையும் அமைச்சர்களையும் அவைக்கு வரச்சொல்லியிருக்கிறார்.”
“நன்று. நான் இங்கு இருந்தாகவேண்டுமென்று சென்று சொல்” என்றார் விதுரர். ஸ்தானிகரும் ஏவலனும் சென்றபின் பீடத்தில் சாய்ந்து கைகளை மார்பில் கட்டியபடி சுருதையின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தார். அப்புன்னகை அங்கேயே தங்கிவிட்டிருந்தது. அதில் ஒரு மெல்லிய மாறுதல் நிகழ்ந்திருக்கிறதா என்று அவர் எண்ணினார். இல்லையென்று தோன்றியது. ஒரு மெல்லிய அசைவு வந்து சென்றதா? அல்லது அது அசைவின்மையா?
ஓசையற்ற காலடிகளுடன் அருகே அணைந்த மருத்துவர் அவள் அருகே குனிந்து கைகளை எடுத்து நான்கு விரல்களால் நாடியை அழுத்தி விழிசரித்து உளம் கூர்ந்தபின் “விண்மீண்டுவிட்டார், அமைச்சரே” என்றார். “எங்கு?” என்றார் விதுரர். “கற்பரசிகளின் உலகுக்கு” என்றார் மருத்துவர்.
[ 11 ]
நகர் நுழைந்து தன்னை எதிர்கொண்ட முதல் வீரனிடமே துரியோதனன் உறுதியான ஆணையிட்டான். அரச முறைமைப்படி முரசுகள் முழங்கட்டும், ஆனால் வாழ்த்தொலிகளோ வரவேற்புகளோ பிறசடங்குகளோ எதுவும் தேவையில்லை என. அவன் புழுதி படிந்த உடலுடன் களைத்து மெல்லடி எடுத்து வைத்த புரவியின் மேல் அஸ்தினபுரியின் தெருக்களில் சென்றபோது அதற்கு முன்னதாகவே குரல் வழியாக அவன் ஆணையை அறிந்திருந்த அஸ்தினபுரியின் வீரர்கள் வாள் தாழ்த்தியும் வேல் தூக்கியும் ஓசையின்றி தலைவணங்கினர். முற்றங்களிலோ உப்பரிகைகளிலோ எவரும் ஓடி வந்து பார்க்கவில்லை. சாலையின் இருபுறமும் நின்றிருந்த அஸ்தினபுரியின் குடிகள் தலைதாழ்த்தி வணங்கி பின்நகர்ந்தனர்.
கர்ணன் களைத்திருந்தான். துரியோதனனை நோக்கிய அஸ்தினபுரியின் குடிகள் ஒவ்வொருவரையும் தனித்து நோக்கியபடி அவன் சென்றான். அவற்றில் அச்சமும் விலக்கமும் இருந்தாலும் அவர்கள் அவனை வழிபடுவதும் தெரிந்தது. தன் சினத்தாலேயே துரியோதனன் பல மடங்கு ஆற்றல் அடைந்துவிட்டான் என்று பட்டது. கைநீட்டி மலைகளை விலகச்சொல்லும் விசை அவனுக்குள் இருப்பது போல. ஒரு சொல்லால் நகரங்களை எரிக்கும் அனல் அவனுள் கொதிப்பது போல. மனிதர்கள் தங்கள் அச்சத்தால் விழைவால் சினத்தால் மாமனிதர்களாகக் கூடும். தவத்தால் கொடையால் அன்பால் எழுந்தவர்களுக்கு நிகராக தலைதூக்கி நிற்கக்கூடும். இதுவும் ஒரு தவமே. இதிலும் தன் உடலையும் உள்ளத்தையும் உருக்கி அவியென்று அளித்து அவற்றை மானுடர் அடைகிறார்கள்.
அரண்மனை முற்றத்தை அடைந்து பாய்ந்திறங்கி கடிவாளத்தை சூதன் கையில் வீசிவிட்டு படிகளில் ஏறும்போதே துரியோதனன் “நான் நீராடி வருவதற்குள் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவை அமர்ந்திருக்க வேண்டும்” என்று ஆணையிட்டான். அவனைத் தொடர்ந்து புரவியில் வந்திறங்கிய கர்ணன் எதிரே வந்த கனகரிடம் “விதுரர் எங்கே?” என்றான். “அவரது துணைவி உடல் நலமில்லை என்று சென்றார். துணைவியார் இன்றிரவை கடக்கமாட்டார் என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். கர்ணன் “யார்? சுருதையன்னையா?” என்றான். “ஆம்” என்றார் கனகர்.
அக்கணத்தில் தன் முன் எழுந்த சுருதையின் உருவமே அவர் இறப்பை நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்த்துவதை கர்ணன் அறிந்தான். அதற்கு முன்பு ஒருபோதும் அது தோன்றவில்லை. இறப்பை தான் தெளிவாக பார்க்கமுடிகிறது. இறப்பை பார்ப்பதைத்தான் விழிகள் தவிர்க்கின்றன. “நான் நீராடி வருகிறேன்” என்று கர்ணன் சொன்னான். “அவை கூடட்டும். நான் சற்று பிந்தி வருவேன். அமைச்சரை பார்த்துவிட்டு… அரசர் கேட்டால் சொல்லிவிடுங்கள்” என்றான்.
தன் அறைக்குச் சென்று நீராடி உடை மாற்றி அவன் படியிறங்கி வரும்போது சுருதை உயிர் நீங்கிவிட்டாள் என்று ஏவலன் சொன்னான். அவன் கீழே வரும்போது துச்சாதனன் அவனுக்காக காத்திருந்தான். “சுருதை அன்னை உயிர் நீங்கிவிட்டார். அரசர் அவை கூட்டியிருக்கிறார். அவரிடம் சென்று இப்போது அவை கூட்ட வேண்டாமென்று நாம் உரைக்கவேண்டும்” என்றான். மறுமொழி சொல்லாமல் கர்ணன் “நான் விதுரரை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றபின் தேரை நோக்கி நடந்தான்.
விதுரரின் இல்லத்தின் முன் இறங்கி படிகளில் ஏறி உள்ளே செல்லும்போது ஸ்தானிகர் அவன் அருகே வந்து “அரசருக்கும் பீஷ்மபிதாமகருக்கும் செய்தி சென்றுவிட்டது. இறப்புக்கான மணியோசை ஒரு நாழிகைக்குப்பின் போதும் என்று அமைச்சர் சொன்னார்” என்றார். “ஏன்?” என்று கர்ணன் நின்று திரும்பி கேட்டான். “அரசர் நகரணைந்தபின்னர் அம்முரசுகள் ஓய்ந்து ஒரு நாழிகைக்குப்பின் இறப்புச் செய்தி அறிவித்தால் போதும், வருகைமுரசுடன் தொடர்ந்து இறப்பொலிப்பது அமங்கலம் என்றார்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் மரப்படிகளில் தன் எடை ஒலிக்க மேலேறி சென்றான்.
சுருதையின் உடலை பெண்கள் கீழே பெருங்கூடத்திற்கு எடுத்துச் சென்று தரையில் விரிக்கப்பட்ட மரவுரிசேக்கை மேல் படுக்க வைத்திருந்தனர். மாமங்கலையாக உயிர் நீத்த பெண்களுக்குரிய சடங்குகள் தொடங்கிவிட்டிருந்தன. “விதுரர் இங்கிருக்கிறார்” என்றார் உடன் வந்த ஸ்தானிகர். “தன் தனியறைக்குள் இருக்கிறார். உடலை நீராட்டி அணிசெய்த பின்னரே ஆண்கள் அருகே செல்ல ஒப்புவார்கள்” என்றார்.
கர்ணன் விதுரரின் சிற்றறை வாயில் முன் நின்றான். “அமைச்சரே” என்று அழைத்தான். உள்ளே ஓலைகளைப் பரப்பி எதையோ தேடிக் கொண்டிருந்த விதுரர் அவற்றை கலைத்துவிட்டு அவனை நோக்கினார். “வந்துவிட்டீர்களா?” என்றபடி எழுந்து வந்தார். “அரசர் வந்துவிட்டாரா?” என்றார் “ஆம்” என்றபடி கர்ணன் அவர் கைகளை பற்றிக்கொண்டான். விதுரர் “அமருங்கள்! அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றார். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருப்பதையும் உதடுகள் ஓசையற்ற சொற்களுடன் அசைந்து கொண்டிருப்பதையும் கர்ணன் கண்டான். ஒருபோதும் அவரை அப்படி நிலையழிந்தவராக பார்த்ததில்லை என்று எண்ணிக்கொண்டான். அவர் அமர்ந்தார்.
“உரிய முறையில் இறந்தாள், புன்னகையுடன். புன்னகையுடன் இறப்பது ஒரு அரிய பேறு என்றார்கள். மாமங்கலைகளுக்கே உரியது என்றார்கள். நன்று! என் வாழ்க்கைக்கு ஒரு பொருள் கிடைத்தது” என்று அவர் சிரித்தார். “அவளை மாமங்கலையாக விண் அனுப்புவது நான் உயிர் வாழ்வதனால்தான்” என்று மீண்டும் சிரித்து “விண்ணிலிருப்பாள். அங்கே சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் இருப்பார்கள்” என்றார். பின்பு எழுந்து அவனருகே வந்து “இந்நகருக்குள் நுழையும்போது ஏனோ அம்பா தேவி ஆலயத்துக்கு முன் சென்று நின்றேன். அன்னையைப் பார்த்தபோது எதையும் வேண்டிக்கொள்ளவில்லை. சுருதையை எண்ணிக் கொண்டேன். ஏன் எண்ணிக் கொண்டேன் என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் அவள் சென்று அமரப்போவது அம்பையின் அணியில்தான்” என்றார்.
“அமருங்கள்! நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்றான் கர்ணன். “ஆம், ஓய்வெடுக்க வேண்டியதுதான். நான் நன்கு ஓய்வெடுத்து இரண்டு நாட்களுக்கு மேலாகிறது. என்ன ஆயிற்று?” என்றார் விதுரர். “அரசர் என்ன செய்கிறார்? நிலையழிந்திருக்கிறாரா? கடும் சினத்துடன் அங்கிருந்து கிளம்பினார் என்றார்கள்.” கர்ணன் அதற்கு மறுமொழி சொல்ல வாயெடுப்பதற்குள் “மாமங்கலைகள் இறுதி வரை அவர்கள் சொல்லவேண்டியவற்றை சொல்லாமலே இங்கிருந்து சென்றுவிடுகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடைய உலகம் அவர்கள் சொல்ல விழைந்த சொற்களால் ஆனவையாக இருக்கும்” என்றார்.
மீண்டும் நகைத்து “மாமங்கலைகள் உலகில் ஆண்களுக்கு நுழைவு ஒப்புதலே இருக்காதென்று எண்ணுகிறேன். முற்றிலும் பெண்களால் ஆன உலகாக இருக்கும். என்ன சொல்கிறீர், அங்கரே?” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். “இதில் எந்தக் காவியத்திலாவது மாமங்கலைகள் விண்புகுதலைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். அவர்களை தேவர்கள் அழைத்துச் செல்ல முடியாது. மூன்று பெரும் தெய்வங்களும் அவர்களுக்கு அருளமுடியாது. அனல்முடியுடன் கொற்றவை அமர்ந்திருக்கும் ஒரு விண்ணுலகாக இருக்கும் அவர்களின் விண்ணகம். அங்கு இதுவரை இப்புவியில் நிகழ்ந்து மறைந்த அனைத்து மாமங்கலைகளும் கதிர்முடி சூடி அமர்ந்திருப்பார்கள். அங்கு ஆண்கள் எவர் நுழைந்தாலும் எரிந்து சாம்பலாகி விடுவார்கள், மும்மூர்த்திகளாக இருந்தாலும் சரி. என்ன சொல்கிறீர்?” “ஆம்” என்றான் கர்ணன்.
“சொல்லுங்கள்! அரசர் எவ்வாறு இருக்கிறார்? என்ன சொல்கிறார்?” என்றார் விதுரர். “நன்றாக இருக்கிறார்” என்று கர்ணன் சொன்னான். “அவைகூட்டியிருக்கிறார் என்றார்கள். அவைக்கு இப்போது என்னால் உடனடியாக வரமுடியாது. ஏனென்றால் இவளை உரிய முறையில் காடேற்றுவதற்குள் நாளை உச்சிப்பொழுதாகிவிடும். அதன் பின்னரே நான் அவை நுழைய முடியும்” என்று விதுரர் சொன்னார்.
கர்ணன் மறுமொழி சொல்வதற்குள் “கன்னியர் இறந்தால் அவர்கள் மங்கல உலகுக்குள் செல்வதில்லை என்று சொல்வார்கள். அவர்களுக்குரியது வேறு உலகம். ஏனென்றால் அவர்கள் ஆண்களை அறிந்ததில்லை. ஆண்களை அறியும்போதுதான் பெண்கள் தங்களை அறிகிறார்கள். தங்கள் எல்லையை அல்லது தங்கள் ஆற்றலை. ஆண்களை அறியாத பெண் மாமங்கலையாக முடியாதென்றால் இந்த மாமங்கலையர் அனைவரையும் ஆண்கள்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்றார்.
கண்களில் சிரிப்பில்லாமல் உரக்க நகைத்து “முன்பொரு சூதன் பாடினான், படுகளத்தில் வீழ்ந்த வீரர்களுக்கென்றொரு விண்ணுலகம் உள்ளது என்று. அவ்விண்ணுலகில் அரசர்களுக்கு இடம் இல்லை, அமைச்சர்களுக்கும் நுழைவு இல்லை என்று. ஏனெனில் அவ்வுலகுக்கு மண்ணிலிருந்து மனிதர்களை அனுப்பிக் கொண்டிருப்பதே அவர்கள்தான்” என்றார். அவன் தோளைத் தட்டி “மாமங்கலையாக சென்றுவிட்டாள். அவள் மைந்தன் துவாரகையில் இருக்கிறான். அவன் வருவதற்குள் இவள் எரியேறிவிடுவாள்…” என்றார்.
ஸ்தானிகர் வந்து அறைவாயிலில் நின்று தலைவணங்கி “பேரரசியும் அரசியும் வந்திருக்கிறார்கள். பிற அரசியரும் வந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார். “நான் அவர்களை வரவேற்க வேண்டுமா? அதற்கான முறைமை என்ன?” என்றார் விதுரர் எழுந்தபடி. “அல்ல, தாங்கள் அவர்களை பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் நேரடியாகவே மேலே சென்றுவிடுவார்கள்” என்றார். அமர்ந்து “பீஷ்மபிதாமகர் வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். அவரை நான் எப்படி வரவேற்க வேண்டும்? இதே ஆடை போதுமா?” என்றபின் விதுரர் மீண்டும் எழுந்தார்.
அவர் சித்தம் அழிந்துவிட்டதா என்று கர்ணன் எண்ணினான். “முறைமை என ஏதுமில்லை, அமைச்சரே. அவர்கள் வரும்போது தாங்கள் வெளியே கூடத்தில் இருந்தால் நன்று” என்றார் ஸ்தானிகர். கர்ணன் இருப்பதையே மறந்ததுபோல “ஆம். கூடத்தில் இருக்கிறேன். அவர்களும் கூடத்தில்தான் என்னை சந்திக்க விரும்புவார்கள்… மூத்தவர் வருகிறாரா?” என்றார். “அவரிடம் சொல்லப்பட்டுவிட்டது. சஞ்சயன் வருவதற்காக காத்திருக்கிறார்கள். வந்ததும் இங்கு வருவார்” என்றார் ஸ்தானிகர்.
விதுரர் மீண்டும் உள்ளே வந்து கர்ணனைப் பார்த்து “நீங்களா? எப்போது வந்தீர்கள், அங்கரே?” என்றார். கர்ணன் “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாமே!” என்றான். விதுரர் நகைத்து “ஆம். ஓய்வெடுக்கவேண்டும். இப்போது பீஷ்மபிதாமகர் வந்துகொண்டிருக்கிறார். அவர் சென்றபின் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணுகிறேன்” என்றார். ஸ்தானிகர் “வருக, அமைச்சரே!” என்று அவர் தோளைத் தொட “ஆம், நான் எனது சால்வையை இங்கே விட்டுவிட்டேன்” என்றபின் திரும்பி சால்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு திரும்பி நடந்தார். கர்ணன் எழுந்து அவனைத் தொடர்ந்து வந்த ஏவலனிடம் “நான் சென்று அரசருடன் வருகிறேன். பேரரசர் வரும்போது இங்கு இளையவர்கள் இருக்க வேண்டுமல்லவா?” என்றான்.