பன்னிரு படைக்களம் - 53
[ 17 ]
சூக்திமதியின் அரண்மனை மகளிரறையில் நடந்த தொடர் குடியமைவுச் சடங்குகளிலும், மங்கலநிகழ்வுகளிலும் சேதிநாட்டுக் குடித்தலைவர்களின் துணைவியரும், வணிகர்களின் மனைவியரும், மூதன்னையரும் புதிய அரசியை வந்து பார்த்து வணங்கி பரிசில் கொடுத்து மீண்டனர். அந்நிகழ்வுகளில் தான் இருந்த கூடத்திலும் உள்ளறையிலும் எங்கும் உடனிருந்த விசிரையை கண்டதாகவே பத்ரை காட்டிக்கொள்ளவில்லை. அந்த முழுமையான புறக்கணிப்பே அவள் விசிரையை உள்ளூர எத்துணை பொருட்படுத்துகிறாள் என்பதை அனைவருக்கும் காட்ட சேடியரும் செவிலியரும் விழிகளுக்குள் நோக்கிக் கொண்டனர்.
அவள் தன்னை புறக்கணிப்பதை உணர்ந்தும் முறைமைச் செயல்கள் அனைத்திலும் இயல்பாக உடனிருந்த யாதவ அரசி பின்னர் அவள் கொண்ட தத்தளிப்பை உணர்ந்ததும் தன் சிறிய உதடுகளில் புன்னகை குடியேற வேண்டுமென்றே அவள் அருகே வந்து நின்றாள். இயல்பாக தொட்டு குழலையும் ஆடையையும் சீரமைத்தாள். அவள் அருந்த நீர் கேட்டபோது தானே கொண்டு வந்து கொடுத்தாள். எவ்வகையிலும் தவிர்க்க முடியாதபடி மீண்டும் மீண்டும் விழிகளுக்கு முன் தோன்றினாள். அவளை முகம் நினைவுகூரத் தேவையில்லாத சேடிப்பெண்ணென்ற நிலையிலேயே பத்ரை நடத்தினாள். இருவரும் ஆடிய அந்த நாற்களச் சூழலை கண்டிருந்த சேடியர் அவர்கள் முன்னிருந்து விலகியதுமே ஒருவருக்கொருவர் கைகொட்டி சிரித்தனர். அச்சிரிப்பு எஞ்சியிருக்கும் விழிகளுடன் மீண்டும் அவர்கள் இருந்த அறைக்குள் வந்து உதடுகளை இறுக்கியபடி பணியேற்றனர்.
நள்ளிரவில் சடங்குகள் அனைத்தும் முடிந்து அரசணியைக் கழற்றி நீராடி வெண்பட்டாடை அணிந்து சிசுபாலனின் மந்தண அறைக்குள் வந்து அவனருகே அமர்ந்ததுமே பத்ரை அதுவரை அவளைப்பற்றி மட்டுமே தான் எண்ணிக் கொண்டிருந்ததை உணர்ந்து கடும் சினம் கொண்டாள். அவள் முகம் அச்சினத்தால் நோயுற்றது போலிருந்தது. அவளை அழைத்து வந்த சேடியர் மந்தண அறைவாயிலை மூடிவிட்டு விலகிச் செல்ல சிசுபாலன் மஞ்சத்தில் அவளருகே அமர்ந்து அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அவனுடலில் இருந்து எழுந்த புனுகும் சவ்வாதும் கலந்த மணம் அவளை எரிச்சல்படுத்தியது. காற்றிலாடிய தன் மேலாடையை சலிப்புடன் இழுத்தபடி அவள் கதவு மூடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பவள்போல பார்வையை திருப்பிக்கொண்டாள்.
சிசுபாலன் மென்குரலில் “பெண்கவர்தல் அரசர்களுக்குரிய மணமுறை என்று இருப்பதால் இவ்வாறு நிகழ்ந்தது. கடுஞ்செயல்தான். ஆயினும் ஓர் ஆடலென எண்ணி பொறுத்தருள்க, தேவி!” என்றான். அவள் தலைநிமிர்ந்து “அந்த யாதவப்பெண் இங்குதான் இருப்பாளா?” என்றாள். “யார்?” என்றான். “உங்கள் துணைவி. யாதவ பஃப்ருவின் மனைவி” என்றாள். “பஃப்ரு இன்றில்லை” என்றான். “அவள் உடலில் அவன் மணம் இருக்கும்” என்றாள். அவன் கூசி விழிகளை திருப்பிக்கொண்டான். சினமெழுகையில் பெண்களுக்கு ஆண்களின் அனைத்து நரம்புமுடிச்சுகளும் தெரியும் விந்தை. “அவளுக்கு இங்கு என்ன வேலை?” என்றாள். சிசுபாலன் சினத்துடன் “அவளையும் நான் துணைவி என்றே கவர்ந்து வந்தேன்” என்றான். அவள் அவன் உளவலியை உணர்ந்து மேலும் கூர்மைகொண்டாள். “பிறிதொருவனுடன் இருந்தவள் ஒருபோதும் ஒருவனுக்கு முழுமனைவியாவதில்லை” என்றாள்.
சிசுபாலன் “இத்தருணத்தில் நாம் ஏன் அவளைப்பற்றி பேசுகிறோம்?” என்றான். “அவளைப்பற்றி மட்டுமே நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றாள். அவன் தன் உடல் மெல்ல களைப்புறுவதை உணர்ந்தான். “நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான். கேட்டதுமே அதிலிருந்த களைப்பு ஆணைக்குப் பணிவதுபோல் ஒலித்துவிட்டதை உணர்ந்தான். ஆனால் மேற்கொண்டு ஒன்றும் செய்யவியலாதென்றும் அறிந்தான். “அவள் இவ்வரண்மனைக்குள் இருக்கலாகாது. நகரில் சூத்திரர்களுக்குரிய பகுதியில் அவளுக்கொரு அரண்மனை அமையுங்கள். அவள் அங்கு இருக்கட்டும்” என்றாள் பத்ரை. அவன் “அவள் அரசி!” என்றான்.
“அரசியென அவளை எவரும் சொல்லலாகாது. அதற்கெனவே சூத்திரர் பகுதியில் மாளிகை அமைக்கச் சொன்னேன். அது எத்தனை பெரிய மாளிகையாகவேனும் இருக்கட்டும், அங்கு சேதி நாட்டின் கொடி பறக்கட்டும். அம்மாளிகை அங்கு இருக்கும் வரை அவளை அரசி என்று எவரும் சொல்லமாட்டார்கள்” என்றாள். சிசுபாலன் “இதை நாம் பிறகு பேசலாமே” என்றான். “இப்போது பேசவேண்டியது இது ஒன்றுதான். பிறிதொன்றுமல்ல” என்று அவள் சொன்னாள். “உங்கள் உள்ளத்தை அவளே நிறைத்திருக்கிறாள். நீங்கள் அங்கேதான் விழுந்துகிடப்பீர்கள்.” அவன் “என்ன சொல்கிறாய்?” என்றான். “அவள் உடலில் தெரிந்த மிதப்பே அதை சொன்னது. ஆணை வென்ற பெண்ணின் அசைவுகள் அவை.”
அவன் அவளருகே சற்று நெருங்கி அமர்ந்து கைகளை மீண்டும் பற்றிக்கொண்டு “உன் உள்ளம் நிலையழிந்திருப்பது எனக்குத் தெரிகிறது. இதை நாம் சற்று இயல்பானபின்பு பிறிதொருமுறை பேசுவோம்” என்றான். அவன் கைகளை உதறி எழுந்து “இன்று இத்தருணத்தில் இவ்வாக்குறுதியை எனக்களித்தபின் அன்றி உங்களை என் கொழுநனாக ஏற்கமாட்டேன்” என்றாள். “வேண்டுமென்றால் என்னை நீங்கள் உடலாளலாம். கவர்ந்துவந்தவருக்கு உரிய காதல் அதுவே.” விழிகள் சுருங்க சினந்து “என்ன சொல்கிறாய்?” என்றான் சிசுபாலன். “ஆனால் அது உயிரற்ற உடலாகவே இருக்கும். நான் என் கழுத்தை உடைவாளால் வெட்டிக்கொள்ள முடியும் அல்லவா?” என்றாள் அவள். தளர்ந்து “சொல்லெண்ணி பேசு! நீ அரசி” என்றான். “இதற்கப்பால் ஒரு சொல்லும் நான் சொல்வதற்கில்லை” என்றாள் அவள்.
சிசுபாலன் அமைதியாக தலைகுனிந்து சொல்லிழந்து அமர்ந்திருந்தான். களைப்பு எழுந்து கண்பார்வை மங்கலாகியது. உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் கழன்று அகல்வதாக எப்போதும் எழும் உளமயக்கு அவனுக்கு ஏற்பட்டது. வலிப்பு வந்துவிடுமோ என அஞ்சியதுமே அவன் உடல் மேலும் நடுங்கத்தொடங்கியது.
அவள் கதவைத் தொட்டு “முடிவெடுத்தபின் அழையுங்கள். காத்திருக்கிறேன்” என்றாள். சிசுபாலன் தலை தூக்கி “நில்!” என்றான். அவள் புருவம் தூக்கி திரும்பிப் பார்த்தாள். “இன்று இக்கதவைத் திறந்து நீ வெளியே சென்றால் அரண்மனை முழுக்க அலராகும். எண்ணிப்பார்” என்றான். “அதைப்பற்றி நான் ஏன் கவலைகொள்ள வேண்டும்?” என்றாள். “நீ என் துணைவி. இந்நகரின் பட்டத்தரசி. என் மதிப்பு உனக்கு ஒரு பொருட்டல்லவா?” என்றான். “இல்லை” என்று அவள் சொன்னாள். “என் மதிப்பைக் குறித்து மட்டுமே நான் எண்ணமுடியும். என் மதிப்பின் மீதுதான் உங்கள் மதிப்பு அமர்ந்திருக்கிறது. நீங்களும் அதைக் குறித்து எண்ணவேண்டும்” என்றாள்.
மூச்சிரைக்க “இங்கு நான் பட்டத்தரசி என்றால் இவ்வரண்மனை வளாகத்தில் அவள் இருக்கமாட்டாள்” என்றபின் மேலாடையை இழுத்து வளைத்தணிந்து “நன்று” என கதவை தட்டினாள். சிசுபாலன் “பிறிதொருமுறை நாம் இதைக் குறித்து…” என்று இழைந்தகுரலில் சொல்ல “இதைக் குறித்து நான் சொல்லும் இறுதி வார்த்தை இது” என்றபின் அவள் கதவை இழுத்தாள். மறுபக்கம் சேடியர் வந்து “அரசி!” என்றனர். “நில்” என்றபடி சிசுபாலன் எழுந்து அவள் அருகே வந்தான். “இதோ என் சொல். அவளை சூதர்கள் பகுதிக்கு அனுப்புகிறேன். ஒருபோதும் அரசியென அரண்மனை விழவுகளில் அவள் கலந்து கொள்ள மாட்டாள். எத்தருணத்திலும் உன் விழிமுன் அவள் வரமாட்டாள். போதுமா?” என்றான்.
ஆனால் அவள் கண்கள் மேலும் ஐயமும் துயரமும்தான் கொண்டன. “ஒருசொல்லிலும் சேதி நாட்டரசி என்று அவள் குறிப்பிடப்படலாகாது” என்றாள். “ஆம், உறுதி அளிக்கிறேன்” என்றான் சிசுபாலன். அவள் வெறுப்புடன் புன்னகைத்து “நன்று” என்றாள். அவள் மேல் அவனுக்கு எப்போதும் காமம் எழுந்ததில்லை. அழகற்ற பெண் என்றே அவளை ஓவியத்தில் கண்டதுமுதல் எண்ணியிருந்தான். ஆனால் அவள் விழிகள் அப்போது கொண்டிருந்த கூர்மை அவனை கிளரச்செய்தது. வென்றடக்கவேண்டும் என்றும் அவளை முழுமையாக வெற்றுடலெனச் சுருக்கிவிடவேண்டும் என்றும் அவன் உடல் வெறிகொண்டது.
[ 18 ]
சிசுபாலன் மஞ்சத்தறையில் பத்ரையுடன் இருக்கையில்தான் இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் சேதி நாட்டெல்லைக்குள் புகுந்த செய்தி வந்தது. வாயிற்கதவை மெல்ல தட்டிய சேடிப்பெண் “அரசே!” என்று மும்முறை அழைத்தாள். துயில்கலைந்து எழுந்த சிசுபாலன் உடைவாளை கையிலெடுத்து இடையில் அணிந்தபடி வந்து கதவைத் திறந்தான். சேடி தலைவணங்கி “அமைச்சர் இச்செய்தியை தங்களிடம் அளிக்கச்சொன்னார்” என்றாள். ஓலையை வாங்கி விரித்ததுமே மந்தணச்சொற்களில் அதில் எழுதியிருந்த செய்தியை ஒரே கணத்தில் அவன் வாசித்துவிட்டான். ஓலைச்சுருளை கையில் அழுத்தி நொறுக்கியபடி உள்ளே சென்று கதவை மூடினான்.
மஞ்சத்தில் கையூன்றி எழுந்தமர்ந்து மேலாடையை எடுத்து தோளிலிட்டபடி துயிலில் சற்றே வீங்கிய முகத்துடன் “என்ன செய்தி?” என்றாள் பத்ரை. மணமாகிவந்த நாட்களிலிருந்த எரியும் முகம் அணைந்து மிதப்பும் கசப்பும் நிறைந்தவளாக அவள் உருமாறியிருந்தாள். “இளைய பாண்டவரின் படைகள் சேதி நாட்டு எல்லைக்குள் நுழைந்துவிட்டன. இன்று புலரிக்குள் அவை நகர்நுழையும்” என்றான். அவள் புன்னகையுடன் குழலை அள்ளிக்கோதி முடிந்தபடி “ஆகவே இன்று அவருடன் களம் கோக்கவிருக்கிறீர்கள்?” என்றாள்.
காலிலிருந்து அமிலம் என கொப்பளித்து தலையை அடைந்த சினத்துடன் “ஆம், பெரும்பாலும் இன்று உச்சிப்பொழுதில் நீ கைம்பெண்ணாவாய்” என்றான். “ஷத்ரியப் பெண்களுக்கு அதுவும் வாழ்வின் ஒருபகுதியே” என்றாள் அவள். இதழ்களைக் கோணியபோது கன்னத்தில் ஒரு மடிப்பு விழுந்து அவள் முகம் ஏளனத்திற்கென்றே அமைக்கப்பட்டதுபோல் இருந்தது. இத்தனை ஆண்டுகளாக சினமூட்டியே அவனை தன்னைநோக்கி ஈர்த்துக்கொண்டிருந்தாள். ஏளனம் வழியாக வெல்லமுடியாதவளாக தன்னை ஆக்கிக்கொண்டு அவனை தக்கவைத்துக்கொண்டிருந்தாள்.
“ஷத்ரியப்பெண்ணாக அன்றி நீ ஒருபோதும் வாழ்வதில்லையா?” என்றான் சிசுபாலன். “வைசாலியில் இருக்கையில் ஷத்ரியப்பெண் என்று ஒரு கணமும் எண்ணியதில்லை. கவர்ந்து வரப்பட்ட பின்பு அதையன்றி வேறேதும் எண்ணியதில்லை” என்றாள். சிசுபாலன் “உன்னை தீயதெய்வமொன்று ஆட்கொண்டிருக்கிறது” என்றான். “ஆட்கொண்டிருப்பவர்கள் எனது மூதன்னையர். ஆயிரம் ஆண்டுகாலம் அவர்கள் காத்த என் குருதித் தூய்மை” என்றாள் அவள். “உன்னை அறிந்த நாளிலிருந்து பிறிதொரு உரையாடல் நமக்குள் நிகழ்ந்ததில்லை” என்றான். “நமக்குள் குருதித் தூய்மை அன்றி பிற ஏதாவது உள்ளனவா?” என்று அவள் கேட்டாள். “எதன் பொருட்டு என்னை மணந்தீர்கள் என்பது பாரதவர்ஷம் முழுக்க தெரியும். வேறு எதைப்பற்றி நாம் பேச முடியும்?”
“நாம் பேசாமல் இருப்பதே நன்று” என்றபடி சிசுபாலன் சென்று பீடத்தில் அமர்ந்து கைகளைக்கட்டி கால்களை நீட்டிக்கொண்டான். அவள் எழுந்து தன் இடையாடையை நன்றாகச் சுற்றி சீரமைத்து அதன் நுனியை தோளில் போட்டபடி “மூத்தவள் என்ற நிலையில் உடன்கட்டை ஏற விழைவதாக அவள் சொல்லியிருப்பாளே?” என்றாள். “ஏன்? நீ உடன்கட்டை ஏற விழைகிறாயா?” என்றான். “ஒருபோதும் இல்லை” என்று அவள் சொன்னாள். “எனது மைந்தன் அரசாளவேண்டுமென்றால் நான் இருந்தாக வேண்டும்.”
சிசுபாலன் “நீ இதையன்றி பிறிதெதையும் எண்ணாதவள் என்று அறிவேன். ஆனால் உன் சொற்களில் அதை கேட்கையில் இழிவுகொள்கிறேன். உன் பொருட்டல்ல, என் பொருட்டு” என்றான். “இதில் இழிவு கொள்ள என்ன இருக்கிறது? இது உண்மையென்று நாமிருவரும் அறிவோம். உங்கள் தந்தையும் தாயும் அறிவர். உங்கள் நாட்டுக் குடிகள் அறிவர்” என்றாள் பத்ரை. “என் மைந்தனைவிட அவள் மைந்தன் இரண்டாண்டு மூத்தவன். உங்கள் அரசத்தோழர்களும் குடித்தூய்மை இல்லாதவர்கள். மகதத்தின் அரையரக்கன் போல. உதிரி யாதவர்கள். நாளை முடி அவனுக்குரியதென்று ஒரு சொல் எழுமென்றால் பட்டத்தரசியென்று நின்று நான் எதிர்ச்சொல்லெடுக்கவேண்டும். என் குலத்தால் ஷத்ரியர்களைத் திரட்டி என் மைந்தனுக்காக அணிநிரத்தவேண்டும்.”
“பட்டத்து இளவரசன் என்று முன்னரே முடி சூட்டப்பட்டுவிட்டதே?” என்றான் சிசுபாலன். “ஆம். ஆனால் வாளெடுத்து களம் நிற்பதுவரை அவனை காத்து நிற்கவேண்டிய பொறுப்பு எனக்குண்டு. பூஞ்சீப்பு முதிரும்வரை வாழைமடல் காத்து நிற்க வேண்டும், வளைந்து மேலெழும் தருணத்தை அது அறிந்திருக்கவும் வேண்டும் என்று சொல்வார்கள்” என்றபடி பத்ரை கழற்றி ஆமாடச்செப்பில் இட்டு பீடத்தின் மேல் வைத்திருந்த தன் அணிகளை எடுத்து பூணத்தொடங்கினாள்.
“ஒருவகையில் இத்தனை வெளிப்படையாக நீ இருப்பதும் நன்றே. எதையும் எண்ணி ஏமாற நீ இதுநாள்வரை இடமளித்ததில்லை” என்றான். “ஆம், எண்ணி ஏமாற்றிக் கொண்டிருப்பவள் அவள். அழியா பத்தினியாக உடன்கட்டை ஏறி சூதர் சொல்லில் வாழலாம் என்று எண்ணுகிறாள்.” சிசுபாலன் சீற்றத்துடன் “ஏன், அவள் பத்தினி அல்லவா?” என்று கேட்டான். தலையை பின்னுக்குத்தள்ளி சிரித்தபடி பத்ரை வாயிலை நோக்கி சென்றாள். “நில்! ஏன் அவள் பத்தினி அல்லவா?” என்றான். அவள் சிரித்தபடியே தாழை விலக்கினாள்.
“சொல்! சொல்லிவிட்டுச் செல்!” என்று சிசுபாலன் சினத்துடன் அவள் பின்னால் வந்தான். “அவளென்ன உங்கள் உடலை மட்டுமே அறிந்தவளா?” என்றாள் பத்ரை. “இன்று என்னுடன் இருக்கிறாள், முழுமையாக” என்றான் சிசுபாலன். “உடல் தன் நினைவுகளை விடுவதில்லை” என்றபின் “பத்தினி என்று உங்களுக்கு அமைவது அவளே என்றால் அது உங்கள் ஊழ்” என்றபடி வெளியே சென்றாள்.
உடல் தளர்ந்தவனாக சிசுபாலன் மீண்டும் வந்து மஞ்சத்தில் அமர்ந்தான். பின்பு எப்போதோ விழித்துக் கொண்டபோது வானிலிருந்து கீழே விழுந்து அம்மஞ்சத்தில் கைகால் விரித்து துயின்று கொண்டிருப்பதை உணர்ந்தான். எழுந்து வாயிலுக்கு வந்தபோது நீராட்டறை ஏவலன் காத்து நின்றிருந்தான். விரைந்து அவனுடன் சென்றபடி “இளைய பாண்டவர் வந்துவிட்டாரா?” என்றான். “நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று செய்தி வந்தது” என்றான் ஏவலன்.
[ 19 ]
நீராடி உடைமாற்றி இடைநாழிக்கு சிசுபாலன் வந்தபோது நிஸ்ஸீமர் அவனுக்காக காத்திருந்தார். “வணங்குகிறேன், அரசே!” என்றார். அவன் அவர் விழிகளை நோக்கினான். “இளைய பாண்டவர் நகர்புகவிருக்கிறார். முறைப்படி தாங்கள் நகர்முகப்பில் அவரை வரவேற்று வாள் தாழ்த்த வேண்டும்.” அவன் பேச வாயெடுப்பதற்குள் “அதற்கு விருப்பமில்லையென்றால் அங்கேயே அவரைத் தடுத்து ஒற்றைப்போருக்கு அறைகூவலாம். படைக்கலத்தை அவர் தேர்வு செய்ய அங்கேயே போர் நிகழவேண்டும். உங்களை அவர் வென்று நகர்புகலாம். தோற்றால் படையுடன் திரும்பிச் செல்லவேண்டும். அதுவே முறை” என்றார்.
சிசுபாலன் அவர் விழிகளைப் பார்க்காமல் “அது நிகழட்டும்” என்றான். நிஸ்ஸீமருக்குப் பின்னால் நின்றிருந்த ஏவலர் அனைவர் முகமும் இறுகியிருப்பதை அவன் உணர்ந்தான். இடைநாழியில் அவன் இறங்குகையில் அவர்கள் அவனைத் தொடர்ந்து வந்த காலடி ஓசையிலேயே அவர்களின் உள்ளத்தின் முறுக்கம் தெரிந்தது. முற்றத்தில் அவனுக்காக அணுக்கர்களும் படைத்துணைவர்களும் காத்து நின்றிருந்தனர். தேரில் அவன் ஏறிக்கொண்டதும் அரண்மனைக்கோட்டையின் முகப்பிலும் இரு காவல் கோட்டங்களிலும் பெருமுரசுகள் எழுந்தன. முற்றத்தில் கூடி நின்ற வீரர்கள் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர்.
அவ்வோசைகள் நடுவே சென்று முற்றத்தைக் கடந்தபோதுதான் அவ்வாழ்த்தொலிகளில் எப்போதுமிராத உணர்வெழுச்சி இருப்பதை அவன் அறிந்தான். அறியாது திரும்பி வீரர்களின் முகங்களை ஒருநோக்கு கண்டு உடனே தலை திருப்பிக்கொண்டான். அவ்வொரு கணத்திலேயே பலநூறு விழிகளை சந்தித்துவிட்டதை அவன் உணர்ந்தான். அனைத்திலும் எப்போதும் அவன் அறிந்திராத நெகிழ்விருந்தது. பல விழிகள் மெல்லிய ஈரம் கொண்டிருப்பதைப் போன்று தோன்றின. புன்னகையுடன் தேரில் கைகளை கட்டிக்கொண்டு நின்றான். நகரின் இருபுறமும் தெய்வ ஊர்கோலம் காண்பதற்கு நிற்பது போல் சூக்திமதியின் குடிகள் செறிந்திருந்தனர். அவன் தேர் கடந்து சென்றபோது அழுபவர்கள் போல், களிவெறி கொண்டவர்கள் போல், சினம் எழுந்தவர்கள் போல் கைகளை வீசி தொண்டை நரம்புகள் புடைக்க வாழ்த்தொலி எழுப்பினர்.
புலரி ஒளி தரையை துலங்க வைக்கத் தொடங்கியது. இலைகள் மிளிர்ந்தன. ஓசைகள் கார்வையிழந்து தனித்துப் பிரிந்து கேட்டன. மணியோசைகளும் ஆலயங்களின் குந்துருக்க, அகில்புகை மணமும் காற்றில் நிறைந்திருந்தன. தலைமுடியை அளைந்த இளங்காற்றில் கோட்டைக் கரும்பரப்பில் முளைத்திருந்த புற்களின் பசும்பரப்பு பெருநடையிடும் புரவியின் மென்மயிர்த்தோல் வளைவுகளென அலையடித்தது.
கோட்டைக் கதவு மூடப்பட்டிருந்தது. உள்முற்றத்தில் சேதி நாட்டின் மூன்று வில்லவர்படை வீர்ர்கள் முழுக்கவச உடைகளும் நாய்வால்களென தோளில் வளைந்தெழுந்த விற்களுமாக காத்து நின்றனர். அவன் அணுகியதும் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் நடுவே துலங்கி வந்த பாதை வழியாகச் சென்று கோட்டைக் கதவை அடைந்து தேரிலிருந்து இறங்கினான். காவலர்தலைவன் வணங்கி திறந்தளித்த திட்டிவாயிலினூடாக மறுபக்கம் சென்றான். வெளிமுற்றத்தில் ஐந்து படைப்பிரிவுகள் போரணிக்கோலத்தில் நிரை வகுத்திருந்தன. வில்லவரும் வேல்படையினரும் இரு பக்கமும் நின்றிருக்க நடுவே தேர்களும் யானைகளும் நின்றன.
படைமுகப்பை அவன் அடைந்தபோது அங்கு நின்றிருந்த படைத்தலைவன் மத்தசேனன் இரும்புக்கவசம் அணிந்த உடல் மின்ன அருகே வந்து தலைவணங்கி “அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், அரசே” என்றான். “நன்று” என்றபடி முன் நிரையில் சென்று சிசுபாலன் நின்றான். அருகே நின்ற வீரன் அவனது கவசங்களைக் காட்ட தேவையில்லை என்று மறுத்தான். காலைக்காற்றில் அவன் அணிந்திருந்த பட்டுச் சால்வை உடல் சுற்றி நெளிந்து கொண்டிருந்தது. குழல் சுருள்கள் காற்றில் பறந்து தோளில் விழுந்து எழுந்தன. நீண்ட தாடி எழுந்து தோளுக்குப்பின்னால் பறந்தது.
தன் உள்ளம் அதுநாள் வரை அடைந்த அனைத்து அலைக்கொந்தளிப்புகளையும் முற்றிலும் இழந்து காற்றுபடாத குளம் என குளிர்ந்து கிடப்பதை அவன் உணர்ந்தான். அந்த அமைதி இனிதாக இருந்தது. அனைத்திலிருந்தும் விடுதலை. ஒருபோதும் கடிவாளம் இழுத்து நிறுத்த முடியாத உணர்வெழுச்சிகள். வடிவற்றுச் சிதறும் எண்ணங்கள். கலைந்து தோன்றி மீண்டும் கலையும் நினைவுகள். ஒருங்கு குவிந்த மனம் ஒரு பருப்பொருள் போல இருந்தது. தன் வடிவை தானே மாற்றிக்கொள்ள இயலாது வடிவெனும் சிறைக்குள் இருப்பை சுருக்கிக் கொண்டது. உடலுக்குள் கைவிடமுடிந்தால் உள்ளத்தை கையால் தொட்டு அழுத்திப் பார்க்க முடியும் போலிருந்தது. வெளியே எடுத்தால் பந்துபோல் கையில் வைத்து ஆட முடியும். பிறர்மேல் வீசியெறிய முடியும். அதோ ஓடும் அந்த ஓடையில் ஒழுக்கிவிட்டு ஒழிந்த அகத்துடன் அரண்மனை மீளமுடியும்.
அந்த வீண் எண்ணங்களை எண்ணி அவனே புன்னகைத்தான். சற்று நேரத்தில் அவ்வமைதி சலிப்பூட்டத் தொடங்கியது. விரையாத உள்ளம் காலத்தின் விரைவை காட்டி நின்றது. பொருண்மை கொண்டுள்ள அனைத்தையும் தழுவி பெருக்கெடுத்துக் கொண்டிருக்கும் காலம். கணங்கள் கணங்களென அவன் காலத்தை உணரத்தொடங்கினான். ஒவ்வொரு இலையசைவையும் கண்டான், ஒவ்வொரு மணல் பருவின் புரளலையும் காண்கிறோம் என்று மயங்கினான். அங்கு பிறவிகள்தோறும் நின்று கொண்டிருக்கிறேனா? சினமோ, வஞ்சமோ, அச்சமோ, செயலூக்கமோ கொள்ளாதபோது உள்ளம் எத்தனை வீண் செயல்பாடென்று தெரிகிறது. செயல்விழைவுடன் முனைகொள்ளாதபோது உள்ளம் தன்னையே பகடி செய்துகொள்ளும் பொருட்டு இயங்குகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
தொலைவில் கொம்பொலி எழுந்தபோது அவன் நீள்மூச்சு விட்டான். கோட்டை மேலிருந்த கொம்புகளும் முரசுகளும் முழங்கத்தொடங்கின. சாலைக்கு மறுபக்கம் அணுகிவரும் கொம்பும் முரசும் முழங்கின. இந்திரப்பிரஸ்தத்தின் மின்கதிர் பொறிக்கப்பட்ட பட்டுப்பெருங்கொடியுடன் கரிய புரவியில் முதற்படைவீரன் நிலமுதைத்துச் சுழலும் குளம்புகள் புழுதியைக் கிளப்பி பின்னால் பறக்கவிட நீர்ப்பெருக்கிலேறி வருபவன் போல அணுகினான். அவன் படைகளெங்கும் மெல்லிய உடலசைவு கவசங்களின் படைக்கலங்களின் ஒலியாக மூச்சாக பரவியது.
சிசுபாலன் கைகாட்ட சேதிநாட்டின் பன்னிரு வீரர்கள் வேல்களுடன் முன்னால் சென்று கொடி ஏந்தி வந்த வீரனை மறித்து வேல்களை சரித்து நாட்டினர். அவன் புரவியிலிருந்து இறங்கி அக்கொடியை தரையில் ஊன்றி கால் சேர்த்து அசையாது நின்றான். துவண்டு கம்பத்தில் சுற்றி இளங்காற்றில் படபடத்தது கொடி. அவனுக்குப் பின்னால் தாவிவந்த பாண்டவப்படையின் பன்னிரண்டு வெண்புரவிகள் கவச உடையணிந்த வீரர்களுடன் தயங்கி மெல்ல பெருநடையாகி அணுகின.
அவன் மறிக்கப்பட்டதைக் கண்டதும் அவர்களில் முன்னால் வந்த தலைவன் கைதூக்க ஒவ்வொரு புரவியாக ஒன்றுடன் ஒன்று முட்டி குளம்புகளின் ஒலியுடன் நிரை கொண்டன. கடிவாளம் இழுக்கப்பட்ட புரவிகள் கழுத்தைத் தூக்கி மெல்ல கனைத்தன. தூக்கிய குளம்புகளால் தரையை தட்டின. பொறுமை இழந்து முன்னும் பின்னும் அசைந்தன. ஆணை பின்னுக்கு பரவிச் செல்ல வேலேந்தி வந்த காலாள் படையும் அவர்களுக்குப் பின்னால் வந்த தேர்வரிசையும் அசைவிழந்து நின்றன.
தொலைவில் பாதைவளைவு வரை வேல்களின் ஒளிவிடும் கூர்முனைகள் அலையலையென அசைந்தன. அங்கு ஒரு கொம்பொலி எழ படைகள் பிளந்து வழிவிட்ட இடைவெளி வழியாக தன் வெண்புரவியில் பீமன் அவர்களை நோக்கி வந்தான். சீரான குளம்படிகளுடன் அவன் புரவி தலையசைத்து பெருநடையிட்டு வந்தது. ஆடும் கிளையில் தொற்றி அமர்ந்திருக்கும் பறவை போல அதன் முதுகின்மேல் இருவிரல்களால் கடிவாளத்தைப் பற்றியபடி பீமன் அமர்ந்திருந்தான். அவர்கள் அனைவரும் தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த சிசுபாலன் தன் உடலிலிருந்த இறுக்கத்தை மெல்லத் தளர்த்தி இடக்காலை ஊன்றி வலக்காலை நெகிழ்வாக்கி சற்றே தோள்வளைத்து நின்றான். அது உடல்தளர்வைக் காட்டுகிறதா என்ற எண்ணம் வர மீண்டும் கால்களைச் சேர்த்து தோள்களைத் தூக்கி நின்றான்.
பீமன் புரவியை இழுத்து நிறுத்தி கால்சுழற்றி இறங்கி கடிவாளத்தை அருகே நின்ற காவலனிடம் கொடுத்துவிட்டு அவனை நோக்கி வந்தான். காலை இளவெயிலில் இடையில் புலித்தோல் ஆடை மட்டும் அணிந்து தோளில் புரண்ட நீள்குழலுடன் வெண்கலத்தில் வார்த்த பெருஞ்சிலைபோல் நடந்து வந்த அவனை சிசுபாலன் நோக்கி நின்றான். நீலநரம்பு புடைத்துப்பின்னிக் கட்டிய தோள்கள். நரம்புவிழுந்திறங்கிய புயங்கள். இருபிளவென நெஞ்சு. ஒவ்வொரு தசையும் முழுவளர்ச்சி கொண்டு முழுத்து இறுகி நெகிழ்ந்து அசைந்தது. உடல் அதன் வடிவிற்குள்ளேயே சிற்றலைகளாக ததும்பியது.
புன்னகையுடன் இரு கைகளை விரித்து சிசுபாலனை அணுகி “வணங்குகிறேன், சேதி நாட்டரசே. மீண்டும் தங்களை சந்தித்தமை எனது இந்நாளை ஒளி பெறச்செய்கிறது” என்று முகமன் உரைத்தான். சிசுபாலன் இருகைகளையும் தடுப்பதுபோல் விரித்தபடி உரத்த குரலில் “இளைய பாண்டவரே, இந்நகரை வென்று ஆநிரை கொள்ள தாங்கள் வந்தீர்கள் என்றால் நகர் வாயிலில் தங்களைத் தடுக்கும்பொருட்டு இங்கு நிற்கிறேன். சேதி நாடு எந்தக் கொடிக்கும் தலைவணங்காது என்று அறிவிக்க விழைகிறேன்” என்றான்.
பீமன் நின்று அவனையும் அருகில் நின்ற படைத்தலைவனையும் நோக்கியபின் உரக்க நகைத்து “இது என்ன குழப்பம்? அரசே, இது ஓர் எளிய சடங்கு. இதன் பொருட்டு என் சிறிய தாயாரின் நாட்டுடன் எங்ஙனம் போர் தொடுப்பேன்? இந்திரப்பிரஸ்தம் சென்று என் அன்னைக்கு என்ன மறுமொழி உரைப்பேன்? அவர் இங்கே நான் செல்வது என் பிறந்த மண்ணுக்குச் செல்வதுபோல என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்” என்றான்.
அவன் தோளில் கைவைத்து “அரசே, நான் ஆநிரை கவரவோ சூக்திமதியின் கொடியை வெல்லவோ இங்கு வரவில்லை. விரிந்த கரங்களுடன் நட்புகொள்ளவே இங்கு வந்தேன். எங்கள் வேள்வியை சேதி நாடு ஏற்கிறதென்றால் ஒற்றைப் பசுக்கன்றை மட்டும் அன்பளிப்பாக கொடுங்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறேன். மறுத்தீர்கள் என்றால் இந்நகர்வாயிலில் தலைவணங்கி உங்களுக்கு வாழ்த்து சொல்லி என் சிறிய அன்னைக்கும் பேரரசருக்கும் வணக்கமுரைத்து திரும்பிச் செல்கிறேன்” என்றான் பீமன்.
சிசுபாலன் அக்கையின் எடையை உணர்ந்தபடி தன்னருகே நின்ற இரு வீரர்களையும் நோக்கி விழிசலித்து “எவ்வகையில் எனினும் ஆகொள்ளுதல் ஒருநாட்டை வெல்லுதலே ஆகும். தாங்கள் கோரியபடி கன்று தர இயலாது” என்றான். “நன்று. எனில் தங்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். நகர் நுழைந்து சிற்றன்னையைக் கண்டு நான் கொண்டு வந்த பரிசிலை அளித்து வாழ்த்து பெற்று மீள தங்கள் ஒப்புதல் உண்டா?” என்றான் பீமன். சிசுபாலன் “ஆம், அது தங்கள் உரிமை” என்றான்.
பீமன் அருகே வந்து இருகைகளையும் விரித்து “குருதி முறையில் நாம் உடன்பிறந்தோர். தங்களை நெஞ்சு தழுவும் உரிமையும் எனக்குண்டு என்று எண்ணுகிறேன்” என்றான். சிசுபாலன் சற்று பின்னடைந்து “ஜராசந்தனைக் கொன்ற கைகள் அவை” என்றான். “ஆம், அவரால் கொல்லப்பட வாய்ப்பிருந்த நெஞ்சு இது. சிசுபாலரே, முற்றிலும் முறைமைப்படி அப்போர் நிகழ்ந்தது. விலங்குமுறைமை. போரின் எங்கோ ஓரிடத்தில் ஷத்ரிய முறைமை அழிந்து அரக்கர் முறை எழுந்தது. அது விலங்குமுறைமையென்றாகியது. அதன் தொடக்கம் என்னிடமிருந்தல்ல. அம்முறைப்படி போரை முடித்துவைப்பதல்லாமல் பிறிதொன்றும் நான் செய்வதற்கில்லை” என்றான் பீமன். “விண்ணேறி வீரர் உலகில் ஜராசந்தரை பார்ப்பேன் என்றால் என் தோள்கள் விரிவதற்குள்ளேயே உவகையுடன் அவர் தோள்கள் விரியும் என்பதில் எந்த ஐயமும் எனக்கில்லை.”
சிசுபாலன் “நான் அவ்வாறு எண்ணவில்லை” என்றான். “தாங்கள் விழையவில்லை என்றால் தோள் தழுவுதலை தவிர்க்கிறேன்” என்று பீமன் அருகே நின்ற மத்தசேனனை நோக்கி கைகளை விரித்தான். அவன் அலையொன்றால் தள்ளப்பட்டவனைப்போல ஓரடி எடுத்து முன்சென்று இருகைகளையும் விரித்து பீமனின் தோள்களைத் தழுவி தன் தலையை அவன் தலை அருகே சாய்த்தான். அவன் விலகியதும் சிசுபாலனின் மறுபக்கம் நின்றிருந்த துணைப்படைத்தலைவனை பீமன் தழுவிக்கொண்டான். தன் படைகளனைத்தும் அறியாக் கைகளால் அப்போது அந்த மாமல்லனைத் தழுவுவதை சிசுபாலன் விழியோட்டி கண்டான். அவர்களின் உடல்களனைத்தும் ததும்பிக்கொண்டிருந்தன. விழிகள் ஒளிகொண்டிருந்தன. முகங்கள் கந்தர்வர்களுக்குரிய மலர்வுகொண்டிருந்தன.
பீமன் சிசுபாலன் கைகளை பற்றிக்கொண்டு “சேதி நாட்டு அரசரை வணங்குகிறேன். நாம் நகர்புகலாம். என் படைகள் கோட்டைக்குள் வரா. என் சிற்றன்னையைக் கண்டு பாதங்களை சென்னிசூடி மீள்கிறேன்” என்றான். அப்பெருங்கைக்குள் தன் கை அடங்கியபோது அவை கற்பாறையின் உறுதியுடன் இருப்பதையும் தனது கை அதிர்ந்து கொண்டிருப்பதையும் சிசுபாலன் உணர்ந்தான். பீமன் அவன் கையைப்பற்றியபடி ஓரடி எடுத்து வைக்க சிசுபாலன் இருகைகளையும் விரித்தான். உரக்க நகைத்தபடி பீமன் அவனை நெஞ்சுடன் தழுவிக்கொண்டான்.
பீமனின் விரிந்த மார்பில் தன் தலையை சாய்த்து மெல்ல அதிர்ந்த உடலுடன் சிசுபாலன் “எடுத்துக் கொள்ளுங்கள், இளைய பாண்டவரே! இந்நகரின் அனைத்து ஆநிரைகளும் தங்களுக்குரியவை” என்றான்.