பன்னிரு படைக்களம் - 5
[ 4 ]
ஏழடுக்குகளாக ஆழ்ந்துசென்ற ஆழுலகங்களின் இருளுக்குள் ரம்பன் அமிழ்ந்து சென்றான். தன் அரண்மனையின் படுக்கையில் படுத்திருந்து வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் ஆழுள்ளம் மயங்கியது. அவனைச்சூழ்ந்து மாநாகங்கள் நாபறக்க நெளிந்தன. எரியும் விழிகளுடன் பாதாளதெய்வங்கள் மிதந்தலைந்தன. பின்பு அவன் சென்று விழுந்த இடத்திலிருந்து மலைபோல பேருடல் கொண்டவனாக எழுந்தான். இருகைகளையும் மார்பில் ஓங்கி அறைந்து இருண்டு சூழ்ந்திருந்த திசைகள் அதிரும்படி பேரொலி எழுப்பினான். அவன் கால்களை எடுத்துவைத்தபோது சூழ்ந்திருந்த உலகின் மலைகள் மேல் இருந்த பெரும்பாறைகள் அதிர்ந்து உருண்டன. நீர்நிலைகளில் அலைகளெழுந்து கரைகளை நக்கிச்சுருண்டன.
காலடியில் அவன் கொண்டுவந்த கரும்பனையும் காரானும் கிடந்தன. இரண்டுவயதான கன்னிஎருமை இருளில் வழித்து எடுத்து சமைக்கப்பட்ட மின்னும் உடலுடன் ஒளிரும் கண்களுடன் காலடியில் நின்றது. அவன் குனிந்து “நீ பெண்ணாகி எழுக!” என்றான். எருமைவிழிகளுடன் அது கைகள்கொண்டு முலைகள் கொண்டு இடைவிரிந்து தொடைமுழுத்து பெண்ணென்றாகி எழுந்தது. அவள் குழல்கற்றைகள் எருமைக் கொம்புகள் போல பின்னால் நீண்டிருந்தன. கரிய மென்னுதடுகள் எருமைமூக்கென ஈரவெம்மை கொண்டிருந்தன. அவள் கண்கள் எருமைவிழிகளுக்குரிய மிரட்சியால் பேரழகுடன் திகழ்ந்தன. வலக்கையால் கரும்பனையை எடுத்துக்கொண்டு மீண்டும் பாதாளஉலகம் நடுங்க பிளிறியபடி ரம்பன் நடந்தான்.
அவன் உடலின் ஒவ்வொரு தசையும் ஆற்றல்முழுத்து பருத்திருந்தது. உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றிலும் வல்லமை இழுபட்டு நின்றது. நெஞ்சில் ஓங்கியறைந்து “தெய்வங்களே அறைக! எனக்கு நிகராற்றல் கொண்டவன் எவன்?” என்றான். வானம் அச்சொற்களைக் கேட்டு எதிரொலி முழக்கியது. “சொல்க! எவன்?” என்று அவன் மீண்டும் கேட்டான். காலால் நிலத்தை ஓங்கி உதைத்து “சொல்க! எனக்கு நிகராற்றல் கொண்டவன் எவன்?” என்றான். விண்ணிருளில் நீர்த்துளியெனக் கனிந்து முழுத்துவந்த பிரம்மன் கரிய முகத்தில் புன்னகையுடன் “நீயே அதை அறிவாய் மைந்தா” என்றார். “இவ்வுலகம் எது?” என்றான் ரம்பன். “இது உனக்கென அமைந்த கீழுலகம். இங்கு நீயே முழுமுதல்வன்” என்றார் பிரம்மன். “இங்கு நான் தோல்வியற்றவன் அல்லவா?” என்றான் ரம்பன். பிரம்மன் புன்னகைத்து “அதை நீ அறியுமாறு ஆகுக!” என்று சொல்லி மறைந்தார்.
இருளால் ஆன மலைகள், இருளேயான மரங்கள், இருட்சிறகுள்ள புட்கள், இருள்குவிந்த விலங்குகள், இருள் ஒழுகும் ஆறுகள், இருள் அலைக்கும் சுனைகள் கொண்ட அவ்வுலகில் பிறிதொருவனின்றி அவன் வாழ்ந்தான். தன் துணைவியாகிய மகிஷியுடன் காதலாடினான். ஒருதுளி எஞ்சாமல் அவள் அவனுக்கு தன்னை அளித்தாள். அந்த முழுப்படையலால் அவன் ஆணவம் நிறைவுற்றுத் தருக்கியது. மேலும் மேலுமென அவள்மேல் கவிந்து கடந்து மீண்டும் அணைந்தான். பின்பு அவளிடம் சலிப்பு கொண்டான். “காற்றாலான கோட்டையைக் கடப்பதென உன்னை அடைகிறேன்” என்று அவளிடம் சொன்னான். “நான் என்னை முழுதளிக்கிறேன். என் உள்ளத்தில் எச்சமின்றி நிறைந்திருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம், அதை அறிவேன். ஆனால் ஒரு சிறு தடை எனக்குத் தேவை. நான் உடைத்துச் செல்ல ஒரு வாயில். தாவிக்கடக்க ஓர் அகழி” என்றான். அவள் “என்னுள் அவை எவையும் இல்லையே அரசே!” என்றாள்.
ஒவ்வொருமுறை அவளுடனிருக்கையிலும் அவன் கேட்டான் “உன்னுள் இல்லையா ஒரு துளி நச்சு? ஒரு தீப்பொறி?” அவள் “என்னுள் நானன்றி ஏதுமில்லை. நானோ உங்கள் அடிபணிபவள் அன்றி வேறல்ல” என்றாள். அவன் ஒரு சிறுபூச்சியாக மாறி அவளுக்குள் சென்றுவிட விழைந்தான். அவள் கண்களுக்குள் கருத்துக்குள் கருப்பைக்குள் சென்று தேட எண்ணினான். “நீ எனக்கு உன்னை முழுதளிக்கவேண்டும் என்றால் உன்னுள் முழுமை கொண்டிருக்கவேண்டும். இருமையென ஏதும் இருக்கலாகாது” என்று அவளிடம் சொன்னான். “இருமையகற்றி முற்றொருமை கொண்டவள் என்றால் நீ எனக்கிணையானவள். அல்லது என்னைவிட மேலான இறைவடிவம். சொல், உன்னில் எங்குள்ளது அந்த எச்சம்?” அவள் விழிகள் கண்ணீரணிந்தன. “அறியேன், நான் ஏதுமறியேன்” என்றாள். “இல்லை, எங்கோ உள்ளது அத்துளி. அது எழவேண்டும். அதை நான் வென்றாகவேண்டும். என் ஆற்றல் அங்கே முழுதெழவேண்டும்.” அவள் தழைந்த மென்குரலில் “நான் எளியோள். உங்கள் காலடி தொடரும் நிழல்” என்றாள்.
கரியநீரோடையில் அவளுடன் ஆடுகையில் அவனுள் ஓர் எண்ணம் எழுந்தது. “இன்று ஒரு புதிய ஆடல். நீ நானாகுக! நான் நீயாகிறேன்” என்றான். “இல்லை, நடிப்பிலும் அவ்வண்ணமென்றாக என்னால் இயலாது” என்றாள் மகிஷி. “இது என் ஆணை” என்றான் ரம்பன். அவள் பணிந்தாள். “நீ என்னைப்போல் பேருருவும் முழுவலிவும் கொண்டவள் என எண்ணுக! உன் தோள்கள் எழட்டும். உன் நெஞ்சு விரியட்டும். உன் குரல் முழங்கட்டும்“ என்றான் ரம்பன். அவள் நடுங்கியபடி “என்னால் இயல்வதல்ல அது” என்றாள். “நான் சொல்வதைப்போல் நடி. நீ எனக்கு அடிபணிந்தவள் என்றால் என்னை மகிழ்வி” என்றான் ரம்பன். “ஆண். உன் கால்களில் கழல் அணிந்துள்ளாய். உன் நெஞ்சில் ஆரமும் இடையில் சல்லடமும் உள்ளன.” அவள் “ஆம்” என்றாள். அவள் விழிகள் மெல்ல மாறுதலடைந்தன. “நீ ஆள்பவள். வென்று செல்பவள். எங்கும் பணியாதவள். கொள்பவள். கொன்று உண்டு வளர்பவள். நீ அன்றி பிறிதை ஏற்காதவள். நீ மட்டுமே எஞ்ச நின்றிருப்பவள்.”
அவள் “உம்” என்றபோது அது எருமையின் உறுமலோசை போலிருப்பதாக ரம்பன் எண்ணினான். உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒன்று அசைந்தது. அச்சமா என அதை நோக்கி வியந்தான். ஆம் என்று தோன்றியபோது அங்கு வந்ததுமுதல் அறியாத இனிய பதற்றம் ஒன்றை அடைந்தான். அதை மேலும் அறியவேண்டுமென விழைவெழுந்தது. “நீ நிகரற்றவள். நீ சூழ்பவள். மையமும் ஆனவள்.” அவள் மேலும் உரக்க உறுமினாள். அவள் கூந்தலிழைகள் எருமைக்கொம்புகளென்றாயின. கைகளிலும் கால்களிலும் பருத்த கரிய குளம்புகள் எழுந்தன. அச்சத்துடன் ரம்பனின் உள்ளம் பின்வாங்கிக்கொண்டே இருந்தது. வட்டத்தின் மறுபகுதியென அவ்விசையை தான் ஏற்று பிறிதொரு உள்ளம் அவளை அணுகியது. அவள் எழுந்து இருளென்றான விண்பரப்பு அதிர பெருங்குரலெடுத்து பிளிறினாள். அவன் தலைக்குமேல் அவளுடல் பெருகிக்கொண்டே சென்றது. கரிய மலைபோல அவள் எழ அவன் அவள் காலடியில் சிறுத்து கீழிறங்கினான்.
ஆனால் உடல்குளிர்ந்து செயலிழந்த அவ்வச்சத்திலும் அவளைவிட்டு விலக அவனால் இயலவில்லை. அவனை சூழ்ந்திருந்த இருளே கைகளாக மாறி அவளை நோக்கி அழுத்தியது. சூழ்ந்த மலைகள் அதிர்ந்து நடுங்க அவள் ஒலியறைந்தாள். குளம்புகளால் தரையை மிதித்து அமறினாள். தனக்குப்பின்னால் எவரோ நின்றிருக்கும் உணர்வை ரம்பன் அடைந்து திரும்பி நோக்கியபோது தன் நிழல் அவளுக்கு நிகரான ஓர் எருமைக்கடாவாக எழுந்து நிற்பதை கண்டான். இரு எருமைகளும் மூச்சு சீற, தலைதாழ்த்தின. கண்ணிமைகள் மூடித்திறக்க உடல் சிலிர்த்தன. எருமைக்கடா முக்காரமிட்டபடி முன்னங்காலால் மண்ணை உதைத்து பின்தள்ளியது. தலையைத் தாழ்த்தி கொம்புகளை மண்முட்டி கழுத்துமயிர்கள் விடைக்க நின்றது. எருமை அதன் கொம்புகளில் தன் கொம்புகளால் மிகமெல்ல முட்டியது. ஆனால் அவ்விசையில் இரு எருமைகளின் உடல்களிலும் தசைகள் அதிர்ந்தன. கடா கொம்பைச் சரித்து மேலும் வலுவாக முட்டியது. இரு விலங்குகளும் சேர்ந்து மூச்சுவிட்டன. மீண்டும் கொம்புகளால் முட்டியபின் பின்கால் எடுத்துவைத்து பிரிந்தன.
ஒன்றையொன்று நோக்கியபடி அவை அசைவற்று நின்றன. இரு உடல்களிலும் சிலிர்ப்புகள் அசைந்தபடி இருந்தன. விழிகள் கரியஒளியுடன் உருண்டன. கடா மூச்செறிந்தகணம் எருமை உறுமியபடி மண்பறிந்து பறக்க பாய்ந்துவந்தது. அவ்விசையில் முன்னால் பாய்ந்த கடாவின் பெருந்தலையில் எருமையின் நெற்றி இடியோசையுடன் முட்டியது. அவ்வதிர்வில் இருவிலங்குகளும் அசைவற்று நின்று உடல்துடித்தன. பின்னர் பாய்ந்து பின்வாங்கி மீண்டும் பேரொலியுடன் முட்டின. கொம்புகளைக் கோத்தபடி கால்கள் மண்ணில் ஆழப்பதிந்து கிளற, வால்கள் சுழல, சுற்றிச்சுற்றி வந்தன. பிரிந்து மீண்டும் மோதிக்கொண்டன. மீண்டும் மீண்டும் மோதித் தளர்ந்தபோது நீள்மூச்சுகளுடன் நின்றன. எருமை கடாவின் முகத்தை நீலநாக்கைநீட்டி நக்கியது. கடா மூக்கைச்சுளித்து வெண்பற்களைக் காட்டி முனகியது. எருமை தன் விலாவை கடாவின் முகத்தில் உரசியபடி ஒழுகி வளைந்து பின்பக்கம் காட்டியது. முகர்ந்து மூச்செறிந்த கடா காமம் கொள்ளலாயிற்று.
அக்கணம் எழுந்த பெருஞ்சினத்துடன் ரம்பன் அதை நோக்கிப்பாய்ந்தான். தன் பனைமரத்தடியால் கடாவை ஓங்கி அறைந்து கூச்சலிட்டான். சினந்து திரும்பிய கடா அவனை தலைசரித்து கொம்பால் குத்தி தூக்கி வீசியது. அவன் அலறியபடி மல்லாந்து மண்ணில் விழுந்தபோது உறுமலோசையுடன் பாய்ந்து வந்து குனிந்து மேலும் குத்தி கொம்பில் தூக்கி மும்முறை சுழற்றி வீசியது. விலாவெலும்புகள் உடைந்து நெஞ்சக்குலையும் குடல்தொகுதியும் பிதுங்கிச்சரிய தன் வெங்குருதிமேலேயே ரம்பன் விழுந்தான். தன் குருதியின் மணத்தை அறிந்தவனாக இருளில் விழித்துக்கிடக்கையில் எங்கோ ஓர் அரண்மனை சேக்கையில் நோய்கொண்டு கிடப்பதாக கனவுகண்டான். அவன் கண்முன் இருளுடன் இருள் சேர்வதுபோல எருமைகள் இணைசேர்ந்துகொண்டிருந்தன.
தன்னினைவு அணைந்தபோது மகிஷி தன்னருகே குருதியிலாடி உடல்சிதைந்து கிடந்த ரம்பனைக் கண்டு அதிர்ந்தாள். நெஞ்சிலும் தலையிலும் அறைந்தபடி கதறி அழுது இருள்பரவிய பாதாளவெளியில் சுற்றி வந்தாள். “தெய்வங்களே! எங்குளான் என் கொழுநனின் கொலைஞன்? எவர் கொண்ட பழி இது?” என்று கைநீட்டி கூவினாள். தலைமயிர் பற்றி இழுத்து பற்கள் இறுகக் கடித்து “கணவனில்லாத உலகில் நான் வாழ்வதில் பொருளில்லை. தெய்வங்களே! என் உயிர்கொள்க!” என்று அலறினாள். எருமைத்தலையுடன் கருநீர் மணிவிழிகளுடன் இருளில் எழுந்த அவள் மூதாதை தெய்வம் “நீ நம் குலத்து மைந்தனை கருக்கொண்டிருக்கிறாய்” என்றது. “இல்லை, நான் கருக்கொள்ள மாட்டேன். என் கொழுநனைக் கொன்றவனை பழிகொள்ளாமல் நான் உயிர்வாழமாட்டேன்” என்றாள் மகிஷி. மூதாதைதெய்வம் முக்காரமிடும் ஒலியில் நகைத்து “உன் கொழுநனைக் கொன்றவன் உன் கருவில் எழும் மைந்தன். அவன் பெயர் மகிஷன்” என்றது. அக்கணமே அவள் அவனைக் கண்டதை நினைவுகூர்ந்தாள். திகைத்து “எந்தையரே” என்று வீரிட்டாள். “என்ன இது? என்ன இது?” என்றாள்.
புன்னகைத்த எருமைமூதாதை “அவன் வெற்றிகொள்பவன். நம் குடிச்சிறப்பை நிலைநிறுத்துபவன்” என்றார். “அவனை வெறுக்கிறேன். அவனுக்கு ஒருதுளியும் முலையூட்டமாட்டேன்” என்றாள் மகிஷி. “ஆம், அவனுக்கு அன்னைமுலை உண்ணும் ஊழ் இல்லை” என்று புன்னகைத்தார் மூதாதை. “உண்ணாத முலைப்பாலுக்கென அவன் அலைவான். அன்னையால் கைவிடப்பட்டவன் அன்னையை தேடியலைவான். அடைந்து அவள் அடிசேர்ந்து முழுமைகொள்வான்.” மகிஷி சீறும் மூச்சுடன் “ஈன்று மண்ணில் விழுந்தால் அவனை அரைக்கண் திரும்பிநோக்கவும் நான் மறுப்பேன். தொப்புள்கொடியை பிடுங்கி வீசிவிட்டு விலகிச்செல்வேன்” என்றாள். “ஆம், அவன் தன் குருதிக்கொடியைத்தான் முலையெனச் சப்பி உண்பான்” என்றபின் எருமைமூதாதை மறைந்தார்.
அவள் இருளில் அமர்ந்து அழுதாள். ஒவ்வொரு கணமும் என தன் வயிறு எடைகொண்டு வருவதை உணர்ந்தாள். அச்சமும் தயக்கமும் கொண்டு தன் வயிற்றின்மேல் கைவைத்துப் பார்த்தாள். உடல் மெய்ப்புகொள்ள நீள்மூச்சுவிட்டாள். “மைந்தா” என்று தன்னுள் என அழைத்தாள். உடனே தன்மேல் ஒரு நோக்கை உணர்ந்து திரும்பிப்பார்த்தாள். அங்கே எரிவிழிகளால் அவளை நோக்கியபடி இருவர் நின்றிருந்தனர். கரிய உருவம் கொண்டவனை அவள் அடையாளம் கண்டுகொண்டாள். திகைப்புடன் எழுந்தபடி “தாங்களா?” என்றாள். வெறுப்புடன் நோக்கியபடி “ஆம், என் குருதியை நீ உண்டாய்” என்றான் ரம்பன். “இல்லை, நானறியேன். நானறிந்து எப்பிழையும் இயற்றவில்லை” என்று மகிஷி அழுதாள். “உன்னில் எழுந்த தெய்வம்… ஆனால் விறகிலெழும் தழல் அதனுள் தளிரிலேயே குடிகொண்டது” என்றான் ரம்பன். தன்னருகே நின்றிருந்த உயரமற்ற மெலிந்தவனைச் சுட்டி “என் உடன்வயிற்றன் இவன். இவனை உண்டவளும் நீயே” என்றான். கரம்பன் “ஆம், என் உடன்வயிற்றனின் உடலில் ஓர் எண்ணமென நுண்வடிவில் நானுமிருந்தேன். அவர் குருதிக்கூழெனெச் சிதைந்தபோது நானும் அழிந்தேன்” என்றான்.
அவள் கைநீட்டி மறுத்து “இல்லை… இல்லை… என்னை பழிசொல்லாதீர். நான் பத்தினி என்பதை நெருப்பறிய ஆணையிடுகிறேன்” என்றாள். “நெருப்பறியாதவற்றை நீர் அறியும். பெண்ணின் கருவறை நீரால் ஆளப்படுகிறது” என்றான் ரம்பன். கரம்பன் “இதோ, உன் வயிற்றுக்குருதியில் ஊறியிருக்கிறோம். உன்னைப்பிளந்து முளைத்தெழுவோம்” என்றான். அவள் கண்ணீருடன் “என்னை நம்புங்கள்… நான் பிழை செய்யவில்லை…” என்றாள். “உன்னை வெறுக்கிறோம். உன் முகம் காணவும் விழையமாட்டோம்” என்றான் ரம்பன். “மண்பிறந்து எழுந்தால் உன்மேல் கொண்ட வெறுப்பால் பெருவலிமை பெறுவோம்.” கரம்பன் “அறிக! துளியொன்றும் விதையென்றாகும் வல்லமைகொண்டது வெறுப்பே” என்றான். அவள் கைகூப்பி கண்ணீர்விட அவர்கள் மறைந்தனர். அவள் தன் வயிற்றை சுமந்தபடி தனிமையின் இருளில் கண்ணீர்வழிய அமர்ந்தாள்.
தன்னுள் கருவளர்ந்து முழுமைபெறும் வரை மகிஷி இருளில் முற்றொடுங்கி ஒற்றைச் சொல் மட்டும் துணைநிற்க அமர்ந்து தவம்செய்தாள். எண்ணரிய கனவுகளால் அவள் சுழற்றியடிக்கப்பட்டாள். இருளலைகளின் பெருக்குக்கு மேல் எழுந்த குருதியொளியை இடியோசையுடன் கண்டாள். ஆயிரம் சுருள்கொண்ட கன்னங்கரிய நாகமென அவள் சுருண்டு கிடப்பதாகவும் அச்சுருள்களுக்குள் இருந்து மூன்று மரங்கள் முளைத்தெழுவதாகவும் உணர்ந்தாள். குருதி பெருகியோடும் பெருநதி ஒன்றில் அவள் மெல்லிய படகில் சென்றுகொண்டிருந்தாள். அப்படகின் நெஞ்சத்துடிப்பை உணர்ந்து குனிந்து நோக்கினாள். அது ரம்பன் என்று உணர்ந்து விதிர்த்தாள். பின்னர் அது ரம்பகரம்பன் எனும் இரட்டையுடல் என தெளிந்தாள். நீருக்குள் பெருகிநிறைந்த மீன்களெல்லாம் தன் விழிகள். நீர்ப்பரப்புக்கு அப்பால் எழுந்த காட்டின் மரங்களாக நின்று ஆடிக்கொண்டிருந்தவை கரிய நாகங்கள். எங்கோ குருதி ஓர் பேரருவியென விழுந்துகொண்டிருந்தது.
அதன் சாரலை நோக்கிச் சென்றது படகு. பின் அவளை தன் கைகளால் பற்றிக்கொண்டு அருவிப்பெருக்கில் நனைந்து வழுக்கும் பாறைகளில் தொற்றி ஏறி மேலே சென்றது. அப்பாறைப்பரப்புகள் தசையென அதிர்ந்துகொண்டிருந்தன. மேலேறிச்சென்றபோது அப்பெருக்கால் சூழப்பட்ட கரும்பாறைக்குமேல் அமைந்த ஆலயம் ஒன்றை கண்டாள். அதை நோக்கி நான்கு கால்களால் நடந்தது அவள் ஊர்ந்த அவ்விலங்கு. இரட்டைத்தலைகளால் பெருமூச்சுவிட்டது. அது காலூன்றி கைதொட்டு பாய்ந்துசென்ற பாறைகளனைத்தும் எருமையுடல்கள். தலையறுந்தவை. அள்ளிக்குவிக்கப்பட்டவை. அறுந்த தலைவாய்களிலிருந்து கொழுங்குருதி ஊறிப்பெருகிக்கொண்டிருந்தது. வளைகொம்புகளுடன் எருமைத்தலைகள் குவிக்கப்பட்ட மேட்டில் அமைந்திருந்தது அவ்வாலயம். மின்னும் விழிகளும் குழைந்து ஓரம்சரிந்த தடித்த நாக்குகளும் சோழிநிரையென வெண்பற்களும் சாணியுருட்டிவைத்ததுபோன்ற கருமூக்குமாக குவிந்திருந்த எருமைத்தலைகள் மேல் ஏறிச்சென்றது அவள் ஊர்தி. எருமைமூச்சுக்களின் ஆவிவெம்மை. அவற்றின் தொண்டைக்குரல் கமறல்.
மேலே சிற்றாலயத்தின் கருவறைக்குள் தேவி அமர்ந்திருந்தாள். கால்களில் அவுணர்நிரைகளின் அறுபட்ட தலைகள் குருதியுமிழும் செந்நாவுகளுடன் குவிந்திருந்தன. கணுக்கால் கழலில் கண்மணிப்பரல்கள் மின்னின. அடுக்காடை. இடைமேகலை. உருண்ட கொழுமுலைகள். மண்டையோட்டு மாலை. எட்டு பெருங்கைகளில் பாசமும் அங்குசமும் மழுவும் வாளும் வில்லும் அம்பும் அடைக்கலமும் அருளும். எருமைமுகம். நீண்ட கருங்கொம்புவளைவுகள். தாழ்ந்த நீள்செவிகள். கருநீர்மை மின்னும் விழிகள். அவள் கைகூப்பினாள். தன் உடலெங்கும் வெம்மை பரவுவதையும் இடதுகால் துடித்து மெல்ல நீள்வதையும் உணர்ந்தாள். சூடான குருதி அவள் உடலில் இருந்து வழிந்தது. அது தன்னுடலில் இருந்து எழுவதென உணர்ந்ததும் வாள் போழ்ந்த வலியை அறிந்தாள். தன் உடல் கிழித்து வெளிவந்த மகவை கால்களால் உணர்ந்தும் அவள் விழிதிருப்பி நோக்கவில்லை. இரண்டாவது மைந்தன் எழுந்தபோது கைகளைப் பற்றி இறுக்கி கண்மூடிக்கொண்டாள். மூன்றாவது மைந்தன் வெளிச்சென்றபோது தன்னுள் நிறைந்த வெறுமையை உணர்ந்து நீள்மூச்சுடன் கண்மூடிக்கொண்டாள்.
குளிர்ந்த காற்றெனத் தெரிந்தது அவ்வெறுமை. அக்குளிர் உடலில் படர்ந்து கால்விரல்களை விரைக்கச்செய்தது. கெண்டைக்கால் தசை இழுபட்டு இறுகியது. கைகளும் கழுத்தும் மெய்ப்புகொண்டன. வலக்கையை மண்ணில் ஊன்றி கால்மடித்து எழுந்து இருள்சூழ்ந்த தென்திசை நோக்கி சென்றாள். அவளைச் சூழ்ந்து காற்று குளிர்ந்து பறந்தது. பின் அதில் மூச்சுக்களை உணர்ந்தாள். மெல்லிய குரல்கள் கேட்கத்தொடங்கின. “அன்னையரே!” என்றாள். “சொல் குழந்தை” என்றது தளர்ந்த முதுகுரல் ஒன்று. “குளிர்கிறது. என் தசைகள் விதிர்க்கின்றன.” அன்னை நீள்மூச்செறிந்து “ஆம், குருதியே வெம்மை. அது முழுக்க வெளியேறியிருக்கிறது” என்றாள். மகிஷி “நான் அனலை விழைகிறேன். எரிய விரும்புகிறேன்” என்றாள். அன்னை பெருமூச்சுவிட்டாள். “எனக்கு சிதை ஒருக்குக!” என்றாள் மகிஷி. “ஆம்” என்றாள் அன்னை.
அவள் தன்னெதிரே எரிந்து எழுந்த தழலைக் கண்டாள். அதை அணுகியபோது அவள் உடலில் வெம்மை குடியேறியது. நரம்புகள் மீண்டும் இறுகி தசைகள் உயிர்ப்படைந்தன. கைகூப்பியபடி அதை அணுகினாள். “நான் சிந்தையாலும் பிழை செய்யவில்லை எனில் இந்நெருப்பு என்னை விண்சேர்க்கட்டும்” என்றாள். மெல்ல காலடி எடுத்துவைத்து நெருப்புள் புகுந்தாள். அவளை அணைத்து உள்ளிழுத்துக்கொண்ட நெருப்புக்கு அடியில் ஒரு சிறிய பாதை இருப்பதை கண்டாள். அவள் உடல் உருகி அதில் வழிந்தது. ஆவியென்றாகி அவள் நெருப்பின் செந்நிறப்படிக்கட்டுகளில் ஏறி அதன் கருநிற நூலேணியை பற்றிக்கொண்டு மேலெழுந்தாள். நிறமற்ற சிறகுகள் சூடி வானிலெழுந்து பறந்தாள். அங்கே நூறு கைகள் அவளுக்காக நீண்டிருந்தன. நூறு கனிந்த புன்னகைகள் அவளை எதிர்கொண்டன. அவற்றால் அள்ளித்தூக்கப்பட்டு அவள் விண்ணில் அமர்ந்தாள்.
“அன்னையரே, நான் பிழை செய்யவில்லை” என்றாள் மகிஷி. “ஆம், நீ பிழை ஏதும் செய்யவில்லை. அது எவ்வண்ணமோ அவ்வண்ணமே உன்னிலும் நிகழ்ந்தது” என்றாள் மூதன்னை. “அதை அவர்கள் இப்போதேனும் உணர்ந்தார்களா?” என்றாள் மகிஷி. “அவர்கள் என்றால் யார்?” என்றாள் இன்னொரு மூதன்னை. “என் கொழுநர்” என்றாள். “பெண்ணே, இங்கு கொழுநரென்றும் மைந்தரென்றும் எவருமில்லை. ஏனென்றால் இங்கு ஆண்கள் என எவருமில்லை” என்றாள் ஒரு முதியவள் இனிய புன்னகையுடன். “அவர்கள் எளிய கூழாங்கற்கள். அங்கே பெருகியோடும் விரைவாறு ஒன்றின் கரையில் அவர்கள் பரந்திருக்கிறார்கள். அப்பெருக்கு அவர்களை கொண்டுசெல்லும்.” மகிஷி அவர்களை மறக்கத் தொடங்கினாள். அவள் கூந்தல் நரைகொண்டது. பெருமுலைகள் சுருங்கிச்சரிந்தன. இனிய சுருக்கங்கள் முகத்தில் பரவின. நரம்பு புடைத்து கைகள் மெலிந்தன. கண்கள் சுருங்க அவள் அவர்களை நோக்கி புன்னகைசெய்தாள்.
[ 5 ]
மகிஷியின் குருதியில் பிறந்த மூன்று மைந்தர்களை வண்ணச்சிறைப் பூச்சிகளெனப் பறந்த மாலயட்சனின் தூதர்கள் வந்து சூழ்ந்துகொண்டனர். முதல் மைந்தன் கரிய நிறத்தவன். எருமைத்தலை கொண்டிருந்தான். இளங்கொம்புகள் மொட்டுபோல தலையில் முளைவிட்டிருந்தன. நீண்ட முகத்தில் தொங்கிய காதும் கரிய குளிர்மூக்கும் சப்பைப்பற்கள் நிரைத்த பெரியவாயும் கொண்டிருந்தான். இரண்டாவது மைந்தன் செங்குருதி நிறத்தவன். சிம்மமுகம் கொண்டிருந்தான். விரிந்த வாய்க்குள் குருதிக்கீற்றுபோல நாக்கு நெளிந்தது. முழவுபோல் ஒலித்தான் மூன்றாவது மைந்தன். இருகைகளாலும் தரையையும் மார்பையும் அறைந்துகொண்டிருந்தான். அவன் முகத்தில் விழிகள் இரு குருதிக்குழிகளாக இருந்தன.
மைந்தர்களை யட்சர்கள் அள்ளி எடுத்து மாலயட்சனின் மாளிகைக்கு கொண்டுசென்றனர். “நம் குடிப்பிறந்த பெண்ணின் மைந்தர் இவர்” என்றான் மலர்முடி சூடி மகரயாழுடன் ஒரு பாதிரிமலரை பீடமாகக் கொண்டு அமர்ந்திருந்த மாலயட்சன். “இவர்கள் இங்கு வளரட்டும். இசையும் மலரும் இவர்களின் இளமையை சமைப்பதாக!” முதல் மைந்தனை அவர்கள் மகிஷாசுரன் என்றழைத்தனர். இரண்டாம் மைந்தன் ரக்தபீஜன் என்று பெயர்பெற்றான். மூன்றாம் மைந்தன் ரம்பாசுரன் என்று அழைக்கப்பட்டான். மாலயட்சனின் உலகில் அவர்கள் மலர்களில் ஆடியும் காற்றை இசையென்றே உணர்ந்தும் வளர்ந்தனர். ஒவ்வொரு மலர்மொக்கையும் முலைக்கண் என மயங்கி இதழ்குவித்து முகம்நீட்டினான் மகிஷன். ஒவ்வொரு இலைத் தொடுகையையும் அன்னையின் கை என எண்ணி சினந்து சீறி பல்காட்டி எழுந்தான் ரக்தபீஜன். ஒவ்வொரு ஒலியையும் அன்னைமூச்சென்று எண்ணி நெஞ்சில் அறைந்து கூச்சலிட்டான் ரம்பாசுரன்.