பன்னிரு படைக்களம் - 46
[ 4 ]
இரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார்.
காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் எழுந்து வந்து நிற்பதுபோல. தொடும்போது ஏதோ ஒன்று உள்ளே திடுக்கிட்டது. அரிதான தருணங்களில் சினந்தோ கனிந்தோ விழிகோக்கையில் பிறிதொன்றிலாது இணையவும் முடிந்தது. அத்தருணங்களில் முன்பு திரையென்றான காமம் அப்போது இல்லாமலிருந்தது. உடல்தொடுகை உடலுக்கு அப்பாலிருப்பதனால் அறியப்பட்டது.
அவர் சுருதையிடம் முந்தைய நாளே அனைத்தையும் சொல்லியிருந்தார். அவரது அலைக்கழிப்புடன் உடனமர்ந்து இரவுகளை கழித்தவள். முதியவளானபோது இயல்பாக அவரை அவர் நெஞ்சுடன் தனித்திருக்கவிட்டு எழுந்து சென்று தன் மஞ்சத்தறையில் துயின்றாள். இளமையில் ஆண்களின் உலகுக்குள் நுழைந்துவிடலாம் என்னும் விழைவு அவளை செலுத்தியது. முதுமையில் அது இயலாதென்ற அறிதல் அவளை இயல்பமையச் செய்தது. அனைத்துக்கும் அப்பால் பகலெல்லாம் அம்மாளிகையின் அத்தனை அலுவல்களையும் இயற்றிய முதிய உடல் துயிலை நாடியது.
அவள் முகத்தை அவர் அகத்தால் நோக்கிக்கொண்டிருந்தார். அவள் எதையோ சொல்லப்போகிறாள் என்று அவரது செவிகள் கூர்ந்தன. அவர் மேலாடையை அணிந்துவிட்டுத் திரும்பியபோது அவள் “இது மைந்தனுக்கும் தந்தைக்குமான போர். என்றோ ஒருநாள் அது நிகழ்ந்துதானே ஆகவேண்டும்?” என்றாள். ஒவ்வொருமுறையும் தன் உச்சகட்ட இக்கட்டுகளை அவள் எளிதாக எடுத்துக்கொள்கிறாள் என்றெண்ணி கடும்சினம் கொள்வது அவரது வழக்கம். எரிச்சலுடன் “இது ஒரு குலப்பேரழிவுக்குச் செல்லும் பாதை” என்றார்.
“ஆம், அவ்வாறெனில்கூட அது அவர்களின் வாழ்க்கை” என்றாள் சுருதை. “எனது வாழ்க்கை தமையனின் வாழ்க்கையிலிருந்து பிறிதொன்றல்ல. இங்கு அவர் உயிர்வாழும் நாள் வரை மைந்தர் பூசலிடுவதை விரும்பமாட்டார். நானும் அதை ஒப்பப்போவதில்லை” என்றார். அவளை முன்னிறுத்தி எவரிடமோ அறைகூவுவதுபோல “அதன் பொருட்டு நிலை கொள்வதே என் கடமை” என்றபின் மூச்சிரைத்தார். “வருவது வந்தே தீரும்” என்றாள். அவர் “அப்படியென்றால் எதற்கு அமைச்சு? எதன்பொருட்டு அரசு சூழ்தல்? இந்தக் கிழட்டுச்சொற்கள் செயலின்றி ஓய்ந்தவர்களுக்குரியவை” என்றார்.
சுருதை “மைந்தனுக்கும் தந்தைக்குமான இப்பூசலில் எவரும் ஏன் காந்தாரப் பேரரசியை கருத்தில் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள்?” என்றாள். விதுரர் தயங்கி “பேரரசி என்ன செய்ய முடியும்?” என்றார். “மைந்தனுக்கும் தந்தைக்குமான போரில் எப்போதும் இடைநிற்கும் ஆற்றல் கொண்டவர் அன்னை மட்டுமே” என்றாள் சுருதை. “இது அரசியல், நீ அறிந்த அடுமனைப்பூசல் அல்ல” என்றார் விதுரர். “அடுமனைப்பூசலும்கூட” என்று அவள் சொன்னாள். “அப்படி எண்ணி அதை அணுகும்போது எளிதாகிறது. எதையும் அதன் மிக எளிய பக்கத்திலிருந்து தொடங்குவதே நல்லது.”
தலையை அசைத்த விதுரர் “பேரரசி அரசியலுக்கு முற்றிலும் அப்பால் நின்றுகொண்டிருக்கிறார். இவற்றை அவரிடம் முதலில் விரிவாக விளக்கவேண்டும். தந்தைக்கெதிராக மகன் சினந்தெழுந்தான் என்று கேட்டால் அதுவே அவருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம்” என்றார். சுருதை புன்னகைத்து “நீங்கள் எவரும் சொல்லாமலேயே அவர் இத்தருணத்தை உணர்ந்திருப்பார், உண்மையில் நெடுங்காலமாக எதிர்நோக்கியும் இருந்திருப்பார்” என்றாள்.
விதுரர் இடைக்கச்சையை கட்டிய கை செயலற்று நிற்க சற்றுநேரம் தலைகுனிந்து எண்ணம்சூழ்ந்து மீண்டு “ஆம், அதை நானும் உணர்கிறேன். ஒரு முறை முயன்று பார்ப்பதில் பிழையில்லை” என்றார். சுருதை “அவரும் உள்ளே வரட்டும். எது நிகழ்ந்தாலும் அவருக்கும் ஒரு சொல் இருக்கட்டும் அதில்” என்றாள். பெருமூச்சுடன் “நன்று சொன்னாய்” என்றார். “இப்பூசல்கள் அனைத்திற்கும் முதல்வேர் என்பது காந்தாரத்து அரசியின் மண்விழைவு அல்லவா?” என்றாள் சுருதை.
“அவரா? அவரில் எப்பற்றையும் நான் காணவில்லை” என்றார் விதுரர். “விழைவையும் வஞ்சத்தையும் அச்சத்தையும் நம்பொருட்டு நமக்கு அணுக்கமான ஒருவர் அடைவாரென்றால் நம் நனவுள்ளம் விடுதலை கொள்கிறது” என்று சுருதை சொன்னாள். “நம் கனவுள்ளம் நம்மிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்படுவதைப்போல இனியது பிறிதென்ன?”
அவர் அவளை விழிதூக்கி நோக்கினார். அவள் விழிகளும் அவரை சந்தித்தன. அவள் உதடுகளில் மெல்லிய புன்னகை எழுந்தது. அவர் அருகே வந்து அவள் தோளை மெல்ல தொட்டு “முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய். என்றேனும் சூதர் உன்னை அறிவாரா? ஒரு சொல்லிலேனும் உன் பெயர் உரைக்கப்படுமா?” என்றார்.
அவள் சிரித்து “சூதர்கள் உரைக்காதவற்றால்தானே நாடும் நகரங்களும் ஆட்டிவைக்கப்படுகின்றன?” என்றாள். விழிகள் தொட்டபோது அவர்கள் மிக அணுகியமையால் அவர்களுக்குள் மட்டுமே பரிமாறப்படும் மிகக்கூரிய முள் ஒன்று அதில் இருப்பதை உணர்ந்த விதுரர் விழிகளை திருப்பிக் கொண்டார். சுருதை “நன்று, தாங்கள் அரசி ஆலயவழிபாட்டை முடித்துவருவதற்குள் அவரை சந்திக்கலாம்” என்றாள்.
“ஆம்” என்றபோது அவர் அச்சிறு அகவிலக்கத்திற்காக வருந்தினார். மீண்டும் அவள் தோளைத் தொட்டு கைவழியாக விரலோட்டி நீல நரம்புகள் புடைத்து மெலிந்த கையை தன் விரல்களுக்குள் எடுத்து “என்றும் என் எண்ணத்திற்கும் உணர்வுக்கும் துணையாக இருக்கிறாய்” என்றபின் உடனே அச்சொல்லின் நெகிழ்வை உணர்ந்து நாணி விழிவிலக்கி அவளைக் கடந்து வெளியே சென்றார்.
[ 5 ]
அரண்மனை வளாகத்தை அவரது தேர் அடைந்தபோது கனகர் அவருக்காக காத்து நின்றார். அவர் இறங்கியதுமே அருகே வந்து “பீஷ்மரின் முறைசார் ஆணை வந்துள்ளது” என்றார். திகைப்புடன் விதுரர் “எப்போது?” என்றார். கனகர் “சற்றுமுன். சுவடியுடன் தங்களை தேடி வரவேண்டும் என்று எண்ணினேன். தாங்கள் கிளம்பிவிட்டதாகத் தோன்றியது. ஆகவே காத்திருந்தேன்” என்றார். விதுரர் கைநீட்ட மெல்லிய தோல்சுருளை கனகர் அளித்தார். அதை நீவி மந்தணச் சொற்களில் எழுதப்பட்டிருந்தவற்றை வாசித்த விதுரர் “இது போதும். இதற்கப்பால் என்ன?” என்றார்.
சொல்லுங்கள் என்பதுபோல கனகர் நோக்கினார். விதுரர் அவரைத் தவிர்த்து “அரசர் எங்கிருக்கிறார்?” என்றார். கனகர் “அவர்கள் நேற்றிரவு துயில் நீத்திருக்கிறார்கள். பின்னிரவில் அரசர் கிளம்பி படைநிலைகள் அனைத்தையும் பார்த்துவிட்டு சற்றுமுன்தான் மீண்டார். இந்நேரம் நீராடி மீண்டும் தன் சொல்சூழ் அறைக்கு வந்திருப்பார்” என்றார். அதைக் கேட்டபடியே விதுரர் படிகளில் ஏறி மேலே சென்றார்.
அவர் எண்ணியது போலவே துரியோதனன் அறையில் கர்ணனும் இருந்தான். ஏவலன் அறிவிப்பு அளித்து கதவைத் திறந்ததும் மூச்சிழுத்து நிமிர்வை உருவாக்கிக்கொண்டு உள்ளே சென்று தலைவணங்கினார். இருவர் விழிகளும் அவர்மேல் படிந்தன. அவர் துரியோதனன்மேல் விழிநிறுத்தி “பிதாமகரின் ஓலை வந்துள்ளது” என்றார். கர்ணன் “ம்?” என்றான். அவர் அவனை நோக்காமல் “பிதாமகர் இந்திரப்பிரஸ்தத்தின் ராஜசூய விழவை முறைப்படி ஒப்புக்கொண்டு தன் அரசாணையை அதன்படி அனுப்பியிருக்கிறார்” என்றார்.
“என்ன?” என்றான் துரியோதனன் உரக்க. “அஸ்தினபுரியின் பிதாமகராக இந்நகரின் அனைத்துக் குடிகளும் ராஜசூய விழவில் பங்கெடுக்க வேண்டுமென்று அவர் விழைகிறார். பேரரசரும் அரசரும் துணையரசர்களும் உறவரசர்களும் தங்கள் அரசியருடன் அதில் அவை அமரவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்.” சில கணங்கள் கர்ணனும் துரியோதனனும் அமைதியாக இருந்தனர். கர்ணனின் பீடம் முனகியது. விதுரரின் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. எண்ணியிரா கணத்தில் கர்ணன் பேரோசையுடன் பீடம் பின்னகர எழுந்து “இச்சொற்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. இதை நீங்கள் அவருக்கு அனுப்பினீர்கள்… இது உங்கள் சொற்கள்” என்றான்.
அவன் சினம் விதுரரை எளிதாக்கியது. “அவ்வண்ணமெனில் ஆமென்றுரைக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் சற்றுமுன்னர்தான் இவ்வாணை என் கைக்கு வந்தது. இது அவரது கை ஒற்று எழுத்தா இல்லையா என்பதை நீங்களே உறுதி செய்துகொள்ளலாம்” என்றார். துரியோதனன் “இவ்வாணைக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்? எங்கோ காட்டிலிருந்து ஒருவர் இந்நகரை ஆள நான் ஒப்ப வேண்டுமா என்ன?” என்றான். “ஒப்ப வேண்டியதில்லை. ஆனால் இந்நகரின் தொல்குடிகள் அனைத்தும் பீஷ்மரின் சொல்லுக்கே நின்றிருக்கும். இந்நகரில் வாழும் மூதாதை இன்று அவர்தான். நீத்தோருக்கான நீர்க்கடன்களில் முதல் கைப்பிடி அவருடையதுதான். அவர் வாழும் வரை இங்கெவரும் அச்சொல்லை மீறமுடியாது” என்றார் விதுரர்.
“எவர் சொல்லுக்கும் நான் கட்டுப்பட்டவன் அல்ல. இன்று மாலை என் படை எழும். அதில் எந்த ஐயமும் இல்லை” என்றான் துரியோதனன். விதுரர் அச்சினவெளிப்பாடுகளால் மேலும் மேலுமென உளச்சீர்மை அடைந்தார். அது அவருள்ளத்தில் கூரிய படைக்கலன்கள் எழச்செய்தது. “அவ்வண்ணமெனில் நீங்கள் பீஷ்மரைக் கடந்து செல்கிறீர்கள்” என்றார். “சினம்கொண்டு அவர் இந்திரப்பிரஸ்தத்தின் படைகளுடன் தானும் வில்லேந்தி நின்றால் அங்கர் ஒருவரை நம்பியா நீங்கள் களம் நிற்கப்போகிறீர்கள்?” என்றார்.
துரியோதனன் உணர்வெழுச்சியால் இழுபட்ட முகத்துடன் “வரட்டும், களத்தில் அவருக்கு எதிர்நிற்கிறேன். பீஷ்மர் கையால் இறக்கிறேன். இன்று எந்தை ஒப்பவில்லை என்றால் அவர் கையாலேயே இறப்பேன். இனி இம்முதியவர்களுக்கு கட்டுப்பட்டு சிறுமை சேர்ந்த ஊன்தடியாக வாழும் எண்ணமில்லை எனக்கு. வெல்வேன், அன்றி என் தலையை இவர்களின் இரும்புக்கோட்டைகளில் முட்டி சிதறடிப்பேன். அதுவொன்றே என் வழி” என்றான்.
கர்ணன் “எவராயினும் அவர்கள் முற்றாணைகளை இடும் காலம் கடந்துவிட்டது, அமைச்சரே. ஜராசந்தரின் மறைவுக்குப்பின் அஸ்தினபுரியின் அரசர் வாளாவிருப்பார் என்றால் அதன் பின் பாரதவர்ஷத்தின் அரசரவைகளில் அவருக்கென தன்மதிப்பேதும் இருக்காது. இத்தருணம் ஷத்ரியர் அனைவரும் ஒருங்கு திரள்வதற்கு உகந்தது. இது மீண்டும் அமையாது” என்றான்.
“உடன்பிறந்தார் மோதி குருதி சிந்துவதை ஒருபோதும் நான் அனுமதியேன்” என்றார் விதுரர். “ஏனெனில் இருவருக்கு மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவன் நான். இங்கு ஒருவர் இருக்கிறார். விழியிழந்தவர். அவர்முன் சென்று நின்று நீங்கள் சொல்லெடுக்கலாம். விழிநீர் சிந்தலாம். ஒருவேளை உளமிரங்கி அவர் ஒப்பவும் கூடும். பிறிதொருவர் இங்கில்லை. நம் சொற்கள் சென்று எட்டாத பொன்னுலகொன்றில் வாழ்கிறார். அங்கிருந்து உளம் கனிந்து நம்மை நோக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வெண்ணத்தை விலக்குக! எத்தருணத்திலும் இந்திரப்பிரஸ்தத்திற்கு எதிராக அஸ்தினபுரியின் படை எழாது” என்றார்.
“நான் உயிர் துறக்கிறேன். நான் உயிர் துறந்தபின் அம்முடிவை எடுங்கள். இன்று இதோ, கிளம்பிச்செல்கிறேன். எந்தையின் முன் சென்று நிற்கிறேன். அவர் என் நெஞ்சு பிளந்து தன் காலடியில் இடட்டும். அதன்பிறகு இப்பாழ்முடியைச்சூடி இங்கு அமர்ந்து இந்நகரத்தை ஆளட்டும்” என்றான் துரியோதனன். விதுரர் “அரசே, ஒரு தந்தையென அவ்வுள்ளத்தை புரிந்துகொள்ளுங்கள். பல்லாயிரம் வௌவால்கள் குழந்தை முகத்துடன் தொங்கும் கனிமரம் போல் இதுகாறும் வாழ்ந்தவர் அவர். நாளை அம்மைந்தரின் குருதியை உடலெங்கும் அணிந்து இங்கே அவர் நின்றிருக்க வேண்டுமா? உளம் உடைந்து அவர் இறப்பாரென்றால் அவர் விட்டுச் செல்லும் இறுதிச் சொல்லின் பழிச்சுமையைத் தாங்குமா உமது கொடி வழிகள்?” என்றார்.
“வேண்டியதில்லை. என் குலம் அழியட்டும். காலமுனைவரை என் கொடி வழி பழிசுமக்கட்டும். இத்தருணத்தில் பிறிதொரு முடிவை நான் எடுக்கப்போவதில்லை” என்றான் துரியோதனன். “அங்கரே!” என்று துயர்மிகுந்த குரலில் கர்ணனை நோக்கினார் விதுரர். “இனி பிறிதொரு எண்ணமில்லை. எது அஸ்தினபுரி அரசரின் எண்ணமோ அதுவே என் எண்ணமும். எது அவரது விழைவோ அதன் பொருட்டு உயிர் துறப்பது என் கடன்” என்றான் கர்ணன்.
விதுரர் உளம்விம்ம “எந்தையரே!” என்றார். கர்ணன் “இதுவே ஒரே வழி. படைஎழுதல், அல்லது எங்களிருவரின் குருதியையும் அவர் சூடட்டும்… இதையே என் சொல்லென அஸ்தினபுரியின் பேரரசரிடம் சொல்லுங்கள். குருகுலத்து பிதாமகரிடம் தெரிவியுங்கள்” என்றான்.
[ 6 ]
விதுரர் வெளியே வந்ததும் கனகர் பின்னால் வந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “இது மானுடரின் ஆடல் அல்ல. நாமறியா தெய்வமொன்று அரசரில் குடியேறிவிட்டது. இனி செய்வதொன்றே உள்ளது, நம் தெய்வங்களை வணங்குவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம். பெருங்களத்தில் குருதி கண்டு உளமுடைந்து அழிவதுதான் நமது ஊழென்றால் அவ்வாறே ஆகுக!” என்றார் விதுரர். “நான் பேரரசரின் அவைக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் அளிக்கும் ஓலையுடன் பேரரசியைச் சென்று பாரும்.”
“ஓலையால் சொல்லப்படுவது அல்ல இங்கு நிகழ்வது” என்றார் கனகர். “அரசி தன் விழியின்மையின் உலகில் வாழ்கிறார். இங்குள்ள எவையும் அவர் அறிந்தவையல்ல.” விதுரர் “ஒற்றை வரிக்கு அப்பால் அவருக்கு சொல்லவேண்டியதில்லை என்று இன்று காலை சுருதை சொன்னாள்” என்றார். கனகர் ஏதோ சொல்ல வாயெடுத்து அடக்கிக் கொண்டார்.
விதுரர் தன் அறைக்குச் சென்று ஓலை ஒன்றை எடுத்து ஒற்றை வரி ஒன்றை எழுதிச் சுருட்டி மூங்கில் குழாயில் இட்டு “அரசிக்கு” என்றார். தலைவணங்கி அதை கனகர் பெற்றுக்கொண்டார். பீடத்தில் சாய்ந்தமர்ந்த விதுரர் சிரித்த ஓசையைக் கேட்டு திரும்பிப்பார்த்தார். விதுரர் உடல்குலுங்க தலையை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தார். கனகர் நின்று “அமைச்சரே…” என்றார். விதுரர் விழிகள் நனைந்திருக்க “ஒன்றுமில்லை” என்றபின் மீண்டும் சிரித்தார். வாயில் நோக்கி அடிவைத்த கனகர் திரும்பிவந்தார்.
“எனக்கு சித்தம் கலங்கவில்லை” என்றார் விதுரர். அடக்கமுயன்று மேலும் சிரித்தபடி “நினைத்துப்பார்த்தேன். மேலிருந்து நம்மை குனிந்து நோக்கும் மூதாதையர் எப்படி திகைப்பார்கள், எப்படி நகைப்பார்கள் என்று! ஒருவேளை விண்ணுலகில் அவர்களுக்கிருக்கும் பேரின்பமே இதுதானோ என்னவோ?” என்றார். கனகர் திகைப்பு மாறாத விழிகளுடன் நோக்கி நின்றார். “நீர் செல்லும்… ஓலை உடனே பேரரசியின் கைக்கு செல்லவேண்டும்” என்றார் விதுரர்.
கனகர் அமைச்சுநிலையில் வேறு எவரேனும் இருக்கிறார்களா என்று திரும்பி நோக்கினார். “எனக்கு சித்தம் நிலையாகவே உள்ளது. அஞ்சவேண்டாம்” என்றார் விதுரர். “இங்கே நாம் ஆடும் இந்த இளிவரல் நாடகமே அவர்களுக்காகத்தான் போலும். அவ்வண்ணமென்றால் மேலே நோக்கியிருக்கும் அன்னை சத்யவதி இப்போது அடிவயிற்றில் கைதாங்கி நகைத்துக்கொண்டிருப்பார்.” கனகர் ஆறுதல் கொண்டு “ஏன்?” என்றார். விதுரர் “இதே அரண்மனையில் என் இளமையில் அன்னையிடம் நான் சொன்னேன், பாரதவர்ஷத்தில் ஒரு பெரும்போர் நிகழவேண்டும் என்று. பல்லாயிரம் பேர் மடியவேண்டும் என்று” என்றார்.
விதுரரின் முகம் நகைமறைந்து இறுகியது. “ஒரு குருதிப்பெருக்கில்லாமல் பாரதவர்ஷம் இனி அடுத்த கட்டத்தை நோக்கி செல்லமுடியாது என்று அன்னையிடம் சொன்னேன். காட்டுத்தீ எழுந்து பெருமரங்கள் மண்படாமல் புதுமுளைகள் எழாது என்று சொல்லாடினேன். இளமையின் துடுக்கில் அனைத்தும் என் பத்துவிரல்களால் தொட்டெண்ணிவிடக்கூடியவை என்று தோன்றின. அப்போது என்னைச் சூழ்ந்தமர்ந்து தெய்வங்கள் புன்னகை புரிந்ததை இப்போது காண்கிறேன்.” மீண்டும் கசப்புடன் நகைத்து “இதோ, இருபதாண்டுகாலமாக என் முன் ஒவ்வொருகணமும் போர் முற்றிப்பழுத்துக்கொண்டிருக்கிறது. அதைத் தவிர்க்கும்பொருட்டு இறுதியாற்றலையும் கொண்டு முயல்கிறேன்” என்றார்.
கனகர் “அதைத்தான் முந்தையோர் ஊழ் என்னும் சொல்லால் விளக்கினர். கடமையை ஆற்றுவோம். ஊழுக்கு முன் பணிவோம்” என்றார். “இதைச் சொல்லாத எவரும் இல்லை. மானுடர் எவரேனும் ஊழ்முன் விழிநீரின்றி உளக்குமுறலின்றி அடிபணிந்ததை கண்டிருக்கிறீரா?” என்றார். “நான் கண்டதெல்லாமே இவ்வரண்மனைக்குள்தான். இங்கே ஊழுக்கு எதிராக வாளேந்தி நின்றிருப்பவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்” என்றபின் கனகர் கிளம்பிச்சென்றார்.
விதுரர் சற்றுநேரம் சாளரம் வழியாக ஆடும் மரக்கிளைகளை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். மரங்கள் எக்கவலையும் அற்றவை என்ற எண்ணம் வந்தது. அக்கிளைகளில் இருக்கும் சொல் கவலையின்மை என்பதுதான். அப்பால் காற்றில் பறக்கும் பறவைகளும் கவலையில்லை கவலையில்லை என்றே சிறகசைக்கின்றன. அல்லது காலமில்லை என்றா? கவலையும் காலமும் ஒன்றா? இவ்வீண் எண்ணங்களை ஏன் அடைகிறேன் என்று அவர் தன்னுணர்வுகொண்டார். ஆனால் அவ்வெண்ணங்கள் வழியாக அவர் நெடுந்தொலைவு கடந்து வந்துவிட்டிருந்தார்.
பெருமூச்சுடன் எழுந்து புஷ்பகோஷ்டத்தை நோக்கி சென்றார். தன் காலடிகளையே கேட்டுக்கொண்டிருந்தார். இந்த இடைநாழியில் எத்தனை விதமான அச்சங்களுடனும், பதற்றங்களுடனும், உவகைகளுடனும் உள எழுச்சியுடனும் கடந்து சென்றிருக்கிறோம் என்று ஓர் எண்ணம் உள்கடந்து சென்றது. அனைத்தும் ஒற்றைக் கணத்தில் கண்டு கலைந்த கனவுபோல் இருந்தது. காற்றில் ஆடும் அக்கிளை போல வானிலெழுந்து மண்ணுக்கு மீண்டும் ஆடி ஆடிச் சலித்து ஓய்வதுதானா தன் வாழ்வு?
படிகளில் ஏறும்போது எங்கோ ஒரு புள்ளியில் அவர் உள்ளம் அனைத்திலிருந்தும் முற்றும் விலகியது. அவர் உடலெங்கும் இனிய உவகையொன்று பரவியது. இவை அனைத்தும் கனவே. நான் எங்கோ அமர்ந்து இவற்றை கண்டு கொண்டிருக்கிறேன். கனவில் எழும் துயர் துயரல்ல. வலி வலியல்ல. கனவில் இழப்புகள் பிரிவுகள் ஏதுமில்லை. புஷ்பகோஷ்டத்தின் வாயிலை சென்றடைந்தபோது அவர் சீரான காலடிகளுடன் இயல்பான முகத்துடன் இருந்தார். வாயிற்காவலனிடம் “பேரரசரைப் பார்க்க விழைகிறேன்” என்றார்.
“அவர் இசை கேட்டுக்கொண்டிருக்கிறார். அருகே சஞ்சயனும் அமர்ந்திருக்கிறார்” என்றான் காவலன். “நன்று, விப்ரரிடம் ஒப்புதல் பெற்று வருக!” என்றார் விதுரர். உள்ளே சென்று மீண்ட ஏவலன் “வருக!” என்றான். கதவைக் கடந்து உள்ளே சென்று அங்கே குறுபீடத்தில் உடல் குறுக்கி பஞ்சடைந்த விழிகளுடன் அமர்ந்திருந்த விப்ரரிடம் “வணங்குகிறேன், விப்ரரே” என்று தலைவணங்கினார். விப்ரர் “ம்” என்று முனகினார். அனைத்திலிருந்தும் விலகி பிறிதொரு உலகில் அவர் வாழ்ந்துகொண்டிருப்பதுபோல் தோன்றியது.
விதுரர் உள்ளே சென்று இசைக்கூடத்தில் ஏழு இசைச்சூதர் மிழற்றிக் கொண்டிருந்த யாழ் இசையைக் கேட்டபடி கையைக் கட்டி நின்றார். திருதராஷ்டிரர் தன் பெரிய உடலை பீடத்தில் விரித்து கால்களைப் பரப்பி கைகளை மார்புடன் கட்டி குழல்சுருள்கள் முகத்தில் சரிய தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் முன் இருந்த நீர் நிறைந்த தடாகம் அவரைப்போலவே அவ்விசைக்கேற்ப அதிர்வு கொண்டிருந்தது. ஒருகணத்தில் விதுரர் அனைத்தையும் கண்டார். அவர் உடலே விம்மி வெடிக்கும்படி பெருந்துயர் எழுந்து முழுக்க நிறைந்தது.