பன்னிரு படைக்களம் - 34
[ 5 ]
பிரம்மனுக்கு நிகரென திரிசங்குவுக்கென ஓர் உலகை அமைத்துக்கொடுத்தவர் என்று விஸ்வாமித்ரரை போற்றின காவியங்கள். அவரை மண்ணில் நிகரற்ற அரசமுனிவர் என்றனர். தன் உள்ளத்தை அவியாக்கி உள்ளனலை எரித்து மேலும் மேலும் மூண்டெழுந்தார். சுட்டுவிரல் நீட்டித் தொட்டு பச்சை மரத்தை எரிக்கும் ஆற்றல்கொண்டார். சொல்லால் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் திறல்கூடியவரானார். தெய்வங்கள் அஞ்சும் சினத்திற்குரியவர் என்று அவரை படிவர் பாடினர்.
அமர்தலின்மை என்பதே அரசனுக்குரிய இயல்பென்பதனால் அவர் மேலும் மேலும் என நாடிச்செல்பவராக இருந்தார். விண்ணாளும் இந்திரன் அவையில் முதல்முனிவரென அமரும் தகுதிக்காக விழைந்தார். அதற்கு ஆற்றவேண்டிய தவம் ஏது என வசிஷ்டரிடம் வினவினார். “அரசமுனிவரே, நீங்கள் அமையாது செல்வீரென்றால் அது முடிவற்ற பயணமே ஆகும்” என்றார் வசிஷ்டர். “வெல்வதன் மூலமே இருப்பவன் நான். எனக்குரிய வழியை சொல்லுங்கள்” என்றார் விஸ்வாமித்ரர்.
“பொய்யாமை, கொல்லாமை, விழையாமை மூன்றுமே எளிய மானுடருக்குரிய தவவழிகள். நீங்கள் அரசமுனிவரென்பதனால் ஆணவமின்மை, அறிவிலமையாமை, மையம்கொள்ளாமை என்னும் மூன்று நிறைகளையும் கொண்டு ஆற்றும் அணுவிடைபிறழா அருந்தவமே வழி” என்றார் வசிஷ்டர். “நீங்கள் விழைவதோ விழைவுக்கிறைவனுக்கு மேல் வெற்றியை. விழைவை முற்றறுத்து சுட்டுவிரல் புல்வளையம் என அணிந்தவனே அவன்முன் நிமிர்ந்து நின்றிருக்க முடியும்.”
“ஆம், அதை இயற்றி அவன் முன் காமனை எரித்த கைலாயன் போல் எழுவேன்” என்றார் விஸ்வாமித்ரர். “முனிவர்க்கரசே, அதன் களமென்பது பெருந்தவத்தோரும் அஞ்சும் கன்யாவனமே என்று உணர்க!” என்றார் வசிஷ்டர். “விழையாமையின் முழுமையை அங்குள்ள கன்னியரின் காடே சான்றளிக்கவேண்டும்.” விஸ்வாமித்ரர் “அவ்வண்ணமே ஆகுக! அதைவென்று மீள்வேன்” என எழுந்தார்.
“அது எளிதல்ல என்றுணர்க!” என்று வசிஷ்டர் சொன்னார். “அங்கே வாழ்பவர் உங்கள் மூதன்னையர். அவர்களின் கருவில் முளைத்தவர் நீங்கள். உங்களிடம் அவர்கள் அறியாத ஏதுமில்லை. அவர்களை வெல்ல உங்கள் சொல் ஏதும் துணையாகாது.” விஸ்வாமித்ரர் “ஆம், ஆனால் எனக்கு சொல்லல்ல, அணையா விசையே என்றும் முதற்படைக்கலம்” என்றார்.
அன்றே கிளம்பி அவர் கன்யாவனத்திற்குள் சென்றார். கன்யாவனத்திற்குள் முன்பு வாழ்ந்த நூறு கன்னியர் நிமிர்ந்து உடல்முழுமைகொண்டனர். உடலினூடாக உளமுழுமை பெற்றனர். அணங்குகளாகி அக்காட்டில் நிறைந்திருந்தனர். அவர்கள் இலைமுனை நீர்த்துளிகளாக விழிகொண்டு அவரை நோக்கி இருந்தனர். அவர் உள்ளே நுழைந்ததும் அவரது காலடிகளை காடெங்கும் எதிரொலித்துக்காட்டினர். அவர் முதுகில் பட்டுச்சால்வையை இழுத்ததுபோல் மென்காற்றாக தழுவிச்சென்றனர். அவர் காதுக்குப்பின் மெல்லிய சிரிப்பொலி எழுப்பி அவர் சித்தம் திரும்பியதும் நெற்றின் ஒலியென மாறினர்.
கன்யாவனத்தின் அணங்குகள் பார்ப்பவனின் விழைவுகளினூடாக மட்டுமே உருவம் கொள்பவை. வாழைத்தண்டின் வழுக்கில், தளிரிலையின் நெய்மெருகில், பிஞ்சுக்காய்களின் பூமுள் மயிர்ப்பரப்பில், கனிக்குவைகளில், மலர்ச்சுருள் குழிகளில், சேற்றுப்பரப்பின் கதுப்பில், பாறைக்கரவின் ஊற்றில் அவர்கள் தங்களை காட்டிக்கொண்டே இருந்தனர். ஒரு கணம் அவர்களை உளமறிந்தான் என்றால் அவன் ஊன்விழிகளுக்கு முன் அவர்கள் உருக்கொண்டு எழுந்துவந்தனர். கட்டின்மையை அணிந்தவர்கள். தடையின்மையில் திளைப்பவர்கள். இன்மைவரை செல்லும் விசைகொண்டவர்கள்.
அக்காட்டை அள்ளி உள்நிறைக்கவும் அக்காடென விரிந்து முழுதாகவும் கொண்ட விழைவே அவர்களின் விசை. மானுடராக வாழ்ந்து அவ்விசையின் உச்சம் கண்டு மேலும் செல்லும்பொருட்டு உடல் உதிர்த்து தெய்வமானவர்கள். அவர்கள் விஸ்வாமித்ரரை தொடர்ந்து வந்தனர். சூழ்ந்து விரிந்தனர். அவர் அவர்களின் குவைமுலைகள்மேல் மென்தொடைகள்மேல் நடந்தார். உந்தியில் கால்புதைந்தார். பின்பு அவர்களின் உள்ளங்கை கோடுகள் நடுவே நின்று அண்ணாந்து நோக்கினார். கால்தோயா காட்டில் எப்படி ஒற்றையடிப்பாதைகள் எழுந்து பின்னின என வியந்தார். மூச்சுவிட்டு தன்மேல்கவிந்த முகிலில் எழுந்த முகம் ஏதென வியந்தார்.
கன்யாவனத்தில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கிய விஸ்வாமித்ரரைச் சூழ்ந்தனர் சூர்கொண்ட அணங்குகள். நூறுமுறை அவர் அவர்களின் குரல்கேட்டு ஊழ்கத்திலிருந்து விழித்தெழுந்தார். முதல்முறை அவர் தன் அன்னையின் முலைப்பால் மணத்தை அறிந்தார். பாலுணவிட்ட செவிலியின் விரல்நுனியை. பிறிதொரு செவிலியின் முத்தத்தின் ஈரத்தை. இன்னொரு சேடியின் கழுத்திலணிந்த பொற்சங்கிலியின் உறுத்தலை. எவளோ ஒருத்தியின் முலையிடுக்கு வெம்மையை. யாரோ ஒருத்தியின் செம்பஞ்சுக்குழம்பிட்ட கால்களை. அன்னமளிக்கக் குனிகையில் எழும் பெருந்தோள்மஞ்சள். சாளரத்துக்கு அப்பால் மின்னி மறைந்த ஆடையின்மையின் மஞ்சள்பொன். கச்சு விலகிய முலைநிலவுக்கீற்று. சுடரகலுடன் செல்பவளின் காதுச்சரிவின் பொன்மயிர்ப்பரவல்.
களித்தோழியராகி வந்தவர்கள். ஈறுசிவந்த சிரிப்பு கொண்டவள் எவள்? தொட்டுவிட்டு ஓடும் அவள் சலங்கை. குழைந்தாடும் கூந்தல் இவள். கனிந்து கேட்கும் வினவுடன் சரிந்த இமைகள் அவள். தனித்திருப்பவள்மேல் கவியும் அறியாத்துயரம். செப்புவைத்து விளையாடுகையில் குவிந்த சிற்றுதட்டு மொட்டு. கன்னத்திலாடும் கருங்குழல்சுருள்நிழல். சாளரத்தருகே வந்தழைக்கும் குழலோசைக்குரல். வசந்தமென்னும் பாவாடைக் குடை. முகிழ்வுகள், கைமயிர் மென்மைகள், கரந்துகொண்டுவரும் சிறுபரிசுகள், உனக்கே என்னும் நோக்கு, இன்னதற்கென்றிலா சிரிப்பு, குமிழ்ஏந்தல், கையிணை இழைதல், முகம் திருப்பும் அறியா விலக்கம், விழியில் முளைக்கும் கூரிய பூமுள், எண்ணிச் சரியும் இமைகள், ஓரவிழிதொட்டுச்செல்லும் கூர்மை.
அகன்று நின்று நோக்கும் அரைச்சிரிப்பு என ஒருத்தி. இடையமர்ந்த குழவிக்கு ஈயும் முத்தத்திலிருந்து எழுந்து வந்து தொட்ட விழி. முகம்திருப்பி எவரோ என்று நின்று அயலவரிடம் சொல்லும் அரைச்சொல். அருகிருப்ப ஒருவனிடம் தயங்காது அணுகி நகையாடும் தலையாட்டல்களாகவா அவள் இன்னுமிருக்கிறாள்? கழுத்துச் சொடுக்கல். மூச்சுக்குழிப்பதைப்பு. வியர்வை பனித்த கழுத்தில் ஒட்டிய மயிர்கள். முலையிடையின் வாழையிலைத் தண்டுக்குழிவளைவு. நின்றுசலித்த இடைக்குழைவு. ஒற்றைக்காலின் தளர்வில் தாழும் தோள். கைவளைகள் விழுகின்றன. எழுந்த கைகளில் மீண்டும் ஒலிக்கின்றன. நாவந்து தொட்டுச்செல்லும் இதழ்கள். பற்களின் ஒளிநிரை. எண்ணத்தயக்கம் தெரியும் பேச்சு. சொல்லாச் சொல் இடைவெளி விழுந்த உரை. அதை சொல்லி மறையும் விழி. சொல்லித்தவித்து இதழை கடிக்கிறாள். அவ்விதழில் எஞ்சிய பற்தடமென ஒரு சொல். சொல்லொழுக்கு நடுவே மூச்சுவிழுங்குகிறாள். கழுத்துக்குழாய் அசைவாக காலத்தில் உறைந்தாள்.
அழியாநினைவின் பெருவெளி சூழ்ந்துள்ளது பெண்ணே! அறிவாயா நீ, இறப்பின் எருமைத்தலைமேல் கால்வைத்து அமுதகலம் ஏந்தி எழுந்துவிட்டாய் என்பதை? விழியென உளமென நிகழ்ந்து நிகழ்ந்து மறையும் ஆண்களின் திரையில் அழியாத சித்திரம் நீ. கன்னியென்றானவள் எவள்? இங்கு அவள் ஆட விழைவதுதான் என்ன? அடையப்படாத பெண்களால் நிறைந்த சித்தம் எனும் சித்திரச்சுமையை முதுகொடிய சுமக்காத எவருளர்?
கன்னியராகி வந்தனர். ஆடும் குழைகளின் தொட்டுத்தொட்டு உடனாடும் நிழல்கள், கையெழுந்து கோதிய முடியிழை மீண்டும் சரியும் நெற்றி, சிவந்த மென்முத்துக்கள், அவற்றை அறியாது தொட்டுச்சுழலும் சிப்பிநகங்கள். புருவங்களின் அடர்த்தியாக ஒரு முகம். புருவங்களின் மென்மையாக ஒரு முகம். மூக்குச்சுளிப்பு, மேலுதட்டு மென்புகைப்பரவல், கீழுதட்டின் நடுக்கோடு, கழுத்திலெழும் வரி, கழுத்துக்குழியின் நீலநரம்பு, விலாவெலும்பு நிரைகள். படிகளில் இறங்குகையில் அறியாது துள்ளுகின்றன கால்கள். சுழல்கின்ற ஆடைக்குக் கீழே சிலம்பின் சிரிப்பொலி. தொலைவில் எழும் உன் வீட்டுவாயிலில் அந்திவெயில் நீட்டு நிழல் நீ. அந்திக்கருக்கலில் ஆடைவண்ணம் நீ. இருளுக்குள் காணா இருப்பு நீ. உன் நினைவென எழும் ஒரு விழிவீச்சு நீ. அறிதுயிலின் முழுவடிவம் என நீ.
கன்னித்தெய்வங்கள் ஆலயகோபுரங்களில் கனிவுடன் நோக்கி சிரிக்கின்றன. நெற்றியிலிட்ட குங்குமத்தின் எச்சம் தீற்றப்பட்ட கால்களுடன் கருவறைமுன் நின்றிருக்கிறான் உடலிலி. அவன் தொட்டு மீட்டும் முல்லைமொட்டு. அவனுக்கு முன் கல்லென எழுந்த அவன் கருங்கன்னி. அவள் ஊர்ந்த அன்னத்தின் நடனக்காலடிகள். அது இழையும் அலைப்பரப்பின் ஒளி. கன்னி கன்னி என்று ஓடும் அணையாச்சொல். முன்னிரவின் வெம்மை குளிர்ந்து வரும் முதற்தென்றல். முதல் காலைமலரின் மந்தணக் காமம், முதல் பறவையின் ஏக்கம், முதற்கதிரின் முதல்நினைவென ஒரு முகம். சேற்றில் படிந்த அவள் காலடி. தன் இல்லமுகப்பில் அவள் இட்ட சித்திரக்கோலம். அதன் மேல் அவள் வைத்த பூசணிப்பூவின் பொன். அதன்மேல் உதிர்ந்த மாவிலையின் பொன். அதன்மேல் பதிந்த இளங்கன்றின் குளம்புச்சுவடு. அவள் இல்லத்தில்எழும் முதற்காலைப் புகையின் இன்மணம். அவள் அன்னைக்கு மறுமொழிகூவும் குழலோசை. அவள் எங்கிருந்தோ நோக்கும் ஒரு உடல் தொடுகை. அவள் தன் நெஞ்சு தொட்டு ஏங்கி நினைப்பழிக்கும் மூச்சு. கன்னி. கன்னியென்றான அன்னை.
ஒற்றைச்சுனையில் எழுந்த அலைகளென வந்தபடியே இருந்தனர் பெண்கள். உண்டு முடியாத ஊற்று. அறிந்து கடந்து ஆற்றா பெருவெளி. அடங்கி அமைகையிலோ வென்று செல்லும் வெள்ளம். ஒருத்தியின் குழல்சுருளை எண்ணி இங்கு இருந்தேன். இன்னொருத்தியின் கன்னத்து முத்தை. பிறிதொருத்தியின் காதுமடலின் ஒளிச்சிவப்பை. கைவளை அழுந்திய அரைவளையத் தடம். மார்புக்குழைவில் ஆரத்தடம். முத்து பதிந்த சிவந்த புள்ளி. தோள்குழைவில் எழுந்த பசலை மென்கோடுகள். தோள்பொருத்தில் புதுமணல்போல் தசைவிரிவு வரிகள். கைமடிப்பின் மென்சுருக்கத்தில் வியர்வையின் பனி. உள்ளங்கையில் கசங்கிய ஒரு மலர். உந்திசூழ்ந்த கதுப்பு. குழைவுகள் என சரிவுகள் என அழுந்தல்கள் என திரள்தல்கள் என அசைவுகள் என ததும்பல்கள் என விழிகொண்டு விரல்கொண்டு கூர்கொண்டு அணைத்து தொட்டு கொதித்து நனைந்து குளிர்ந்து அமைந்து மூச்செழுந்து மூச்சமைந்து உடனிருக்கும் இணைகள்.
உடல் உடலென்று காட்டி உடலில்லை உடலில்லை என்று அலைத்து உடல்மட்டும் அளித்து ஒளிந்தும் காட்டியும் ஆடுதலே அது. இணைந்தமென்மைக்குள் கரந்த ஊற்று. யானைவிழி. மான்குளம்புத்தடம். கருஞ்சிவப்பு மலரடுக்குக்குள் அமர்ந்த சிறுவண்டு. சுனைகள். மென்மைகள். தனிமைகள். தவங்கள். முக்கடல்முனையின் ஒற்றைக்கால். மூவிழியன் தலைக்குள் குளிர்ப்பெருக்கு. அவன் இடப்பாதி. பிறிதொருவன் நெஞ்சின் மரு. மூன்றாமன் சொல்லின் பொருள். உடலாகிவந்து சூழ்ந்தது.
பருத்திறங்கிய பால்முலைகள்.கருத்து குவிந்த காம்புகள். கழுத்தின் கன்னல். கன்னத்தின் வெளிறல். இதழ்க்கதுப்பின் ஊன்மணம். கண்சாரலின் கருமை. வியர்வையின் உப்புமணம். முலையூற்றுநொதித்து மணக்கும் ஆடைகள். மைந்தன் சிறுநீர் நனைந்த மடி. துயிலில் பிறிதொருவனை நினைத்துக் குழியும் கன்னச்சிரிப்பு அளிக்கும் உவகையின் மாயம்.நெற்றிமயிர் ஏறுவது என்ன? காதோர நரையை காண்கிறேன். ஆழ்ந்தமைந்த குரல். தளர்ந்த நடையில் இடையில் கையூன்றி நின்று விடும் நீள்மூச்சு.
இவள் என் மகள். கைநிறைத்தவள். தொடைமடிப்புகள். இடுக்கிய சிறுகை மொட்டுகள். சிணுங்கி அதிரும் செவ்விதழ்க்குமிழ்.பால்விழி. வண்ணம் அறிந்த வியப்பு. பின் முகம் பார்த்துச்சிரிக்கும் விழியொளி. என் கைநோக்கி எம்பி எழும் சிற்றுடல். என் மடியிலமர்ந்து தலையில் தாடியை அறிந்து சிரிக்கும் குலுங்கல். கன்னத்தைக் கடிக்கும் ஈரப்பற்கள். சிற்றாடை சுழற்றி என் முற்றத்த்திலோடும் சிறுகால்கள். கடந்து கடந்து கடக்காத நூறு முகங்கள்.
நூறுமுகங்களையும் நூறுமுறை தவமழித்து மீண்டு கடந்தார் விஸ்வாமித்ரர். நூறுமுறை வழுக்கிய ஏணியின் உச்சிப்படியில் நின்று நீள்மூச்சுவிட்டார். அவர் தன்னை அணுகுவதை அப்போதுதான் இந்திரன் உணர்ந்தான். அவர் தவம் கலைக்க விண்கன்னி மேனகையை அனுப்பினான். நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம்.
[ 6 ]
பீஷ்மர் கன்யாகுப்ஜத்திற்கு எவரென்றறியாமல் வணிகர்குழு ஒன்றுக்கு வேலேந்திய காவலராக வந்தார். அவரது உயரம் அவரை யவனர் என்று வணிகர் எண்ணும்படி செய்தது. அவர் எவரிடமும் தேவைக்குமேல் ஒரு சொல்லும் சொல்வதில்லை என்பது அவருக்கு ஆரியமொழிகள் நன்கு தெரிந்திருக்கவில்லை என அவர்கள் எண்ணும்படி செய்தது. நகருக்கு வெளியே வணிகர்களுக்குரிய விடுதி ஒன்றில் வண்டிகளை அவிழ்த்துப்போட்டுவிட்டு அவரை காவலுக்கு அமர்த்தி அவர்கள் உணவுண்டு இளைப்பாறச் சென்றனர். வேலை கால்நடுவே ஊன்றியபடி உடல்மடித்து நிமிர்ந்த தலையுடன் அவர் அமர்ந்திருந்தார்.
உரத்த கள்புளித்த ஏப்பத்துடன் கடந்து சென்ற சூதர் ஒருவர் அவரைக்கண்டு அருகே அணைந்து “வீரரே, தாங்கள் யவனரா?” என்றார். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான் யவனர்களை நிறையவே கண்டிருக்கிறேன். என் ஊர் மாளவம்” என்றார் சூதர். “அங்கே யவன நாட்டில் அனைத்துக்கனிகளும் மிக உயரத்தில் காய்க்கின்றன என நினைக்கிறேன். அவற்றை எம்பிப்பறிக்க முயன்று இவர்கள் உயரமாக ஆகிவிட்டார்கள்…” அவர் புன்னகைத்தார்.
“அல்லது அன்னையர் அவர்களை கருவறையிலிருந்து தலையைப்பற்றி இழுத்து நீட்டி வெளியே எடுக்கிறார்கள்.” பீஷ்மர் புன்னகையுடன் விழிகளை திருப்பிக்கொள்ள அவர் “அஸ்தினபுரியின் பீஷ்மபிதாமகர்தான் இங்கே உங்கள் அளவுக்கு உயரமானவர் என்கிறார்கள். ஆனால் அவரது குருதி முளைத்து காலத்தில் நீடிக்கவில்லை. ஏனென்றால் அவர் நைஷ்டிக பிரம்மசாரி. அறிந்திருப்பீர்” என்றார்.
“ஆம்” என்றார் பீஷ்மர். சூதர் அவர் அருகே அமர்ந்து “அவர் வாழ்நாள் முழுக்க பெண்கொள்ளாமை நோன்பை நோற்பவர் என்கிறார்கள். எனக்கு அது வாழ்நாள் முழுக்க உண்ணாமை நோன்பு நோற்பதற்கு நிகர் என்று தோன்றுகிறது. இதைச்சொன்னால் என்னை குடிகாரன் என்பார்கள். நான் குடிப்பவன்தான். ஆனால் குடிகாரன் அல்ல. ஏனென்றால் பணமில்லையேல் நான் குடிப்பதில்லை” என்றார். பீஷ்மர் புன்னகைசெய்தார். “உண்மையிலேயே ஓர் ஆண்மகன் பெண்கொள்ளாமை நோன்பை நோற்கமுடியுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார் சூதர். “அறியேன்” என்றார் பீஷ்மர்.
“நீங்கள் பெண்ணை அடைந்தவர் அல்லவா?” என்றார் சூதர். பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. “நான் பெண்ணை அடைந்தவனே அல்ல” என்று சூதர் சொன்னார். “என்னை பலபெண்கள் அடைந்தார்கள். ஆடையிலிருந்து நாயுருவி முள்ளை என உதறிவிட்டுச் சென்றார்கள். பெண்களுக்கு ஆண்களை உதறும் கலை நன்கு தெரியும். நம்மை உதறிவிட்டு அவர்கள் நம்மால் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்று நம்மை நம்பவைக்கவும் அவர்களால் முடியும்.”
சூதர் பெருமூச்சுவிட்டு “என்னை கைவிட்ட ஒருத்தியின் துயர் கண்டு உளம் உடைந்தே நான் குடிக்கத் தொடங்கினேன்” என்றார். “நான் எதை சொல்லவந்தேன் என்றால் பெண்கொள்ளா நோன்பு என ஒன்று இல்லை. அப்படி எவர் தருக்கினாலும் சொல்லுங்கள், இங்கே அருகே கன்யாவனம் என்னும் காடு உள்ளது. அங்கு செல்லும்படி சொல்வோம். முன்பு இந்நகரை ஆண்ட குசநாபன் என்னும் அரசனின் நூறுமகளிர் கூனிகளாக இருந்தனர் என்பதை அறிந்திருப்பீர்கள். அவர்களை பிரம்மதத்தன் என்னும் மெய்ஞானி மணந்து காட்டுக்குள் கொண்டுசென்றார். அவர்கள் அங்கே கூன்நிமிர்ந்து பேரழகிகளாக மாறினர்.”
“ஆம்” என்றார் பீஷ்மர். “நீங்கள் அறியாக் கதை எஞ்சியிருக்கிறது” என்றார் சூதர். “நூறாண்டுகாலம் அங்கே அவனுடன் வாழ்ந்து நிறைந்து காட்டணங்குகளாக மாறினர். கன்யாவனத்தில் அவர்கள் நுண்வடிவாக நிறைந்துள்ளனர் என்கிறார்கள். நூறு கன்னியர் வாழும் காட்டுக்குள் உண்மையான நைஷ்டிக பிரம்மசாரிகள் மட்டுமே செல்லமுடியும். ஆகவே அக்காட்டில் இன்று மானுடரே இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அதற்குள் அவ்வணங்குகள் ஆண்களையே காணாது தவம்செய்கிறார்கள். அரைக்கணம் விழிசலித்தாலும் அங்கேயே கொன்று சிதறடிக்கும் சினம் கொண்ட குருதிவிடாயினர் அவர்கள்…”
பீஷ்மர் அவரையே விழியசைக்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். “முன்பு ஒரே ஒரு ஆண் அக்காட்டுக்குள் நுழைந்தார். அவர் இந்நகரை ஆண்ட அரசர். தவம்செய்து முனிவரானார். கன்யாவனத்தில் புகுந்து அவர் தவமனைத்தும் இழந்தார். மேனகை என்னும் விண்மகளை புணர்ந்து சகுந்தலையை பெற்றார். அக்கதையை நீங்கள் நாடகங்களில் கண்டிருப்பீர்கள்” என்றார் சூதர். “நானே அவரைப்பற்றி ஒரு பாடலை அக்காலங்களில் பாடுவதுண்டு. அதை இப்போது முற்றாக மறந்துவிட்டேன். நல்ல மது என்றால் என்னையறியாமல் அதை நான் பாடிவிடுவதும் உண்டு.” பீஷ்மர் பெருமூச்சுவிட்டார்.
சூதர் “இச்செய்திகளை நான் உங்களுக்குச் சொன்னதன் பொருட்டு எனக்கு நீங்கள் சில வெள்ளிக்காசுகளை அளிக்கலாம், தாழ்வில்லை” என்றார். “எதற்கு?” என்றார் பீஷ்மர். “நான் தாங்கள் தங்கள் அகத்தை மெய்நோக்க ஒரு வாய்ப்பை சுட்டிக்காட்டினேன் அல்லவா?” என்றார் சூதர். பீஷ்மர் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றபின் ஒரு பொன் நாணயத்தை அளித்தார். சூதரின் கண்கள் மின்னின. புன்னகையுடன் “தன்னை கூர்நோக்குபவன் இருளை அன்றி எதையும் காணமாட்டான் என்பது சூதர்களில் குடிகாரர்களின் மெய்யறிதல்” என்றார். “பார்ப்போம்” என்றார் பீஷ்மர். தரைநோக்கி புன்னகைசெய்து “நன்று சூழ்க!” என்றார் சூதர்.
அன்றே வணிகர்களிடம் விடைபெற்று பீஷ்மர் கன்யாவனம் நோக்கி சென்றார். அதை அறியாத எவரும் கன்யாகுப்ஜத்தில் இருக்கவில்லை. அக்காட்டின் எல்லையில் கற்பாளங்களால் கூரையிடப்பட்ட விஸ்வாமித்ரரின் ஆலயம் இருந்தது. மையக்கருவறையில் வலக்கையில் மின்கதிர் படைக்கலமும் இடக்கையில் அமுதகலமும் ஏந்தி விஸ்வாமித்ரர் நின்றிருந்தார். அருகே வலப்பக்கம் காதியும் இடப்பக்கம் குசநாபரும் நின்றிருந்தனர். அங்கு முழுநிலவுநாளில் அன்றி வழிபாட்டாளர் வருவதில்லை என்றாலும் நாளும் நீர்மலர்காட்டி சுடராட்டு நிகழ்த்தும் பூசகர் இருந்தார். அவர் அங்கேயே தங்கியிருந்தார்.
அந்தியில் அங்கு சென்று சேர்ந்த பீஷ்மரிடம் பூசகர் அக்காட்டுக்குள் அவர் அறிய எவரும் சென்றதில்லை, அங்கு வாழும் அணங்குகளின் நகைப்பொலியை இரவின் இருளில் தொலைவிலென கேட்கமுடியும் என்றார். “அங்கு ஆண்மகன் என தன்னை உணரும் எவரும் செல்லமுடியாதென்கிறார்கள் யவனரே. மும்மூர்த்திகளே ஆயினும் ஆணால் வெல்லமுடியாத பெண்மையின் அழகும் வஞ்சமும் பேருருக்கொண்டிருப்பது அக்காடு. அங்கு சென்று மீண்டவர் விஸ்வாமித்ரர் ஒருவரே” என்றார் பூசகர். “நான் நாளை உள்ளே செல்லவிருக்கிறேன்” என்றார் பீஷ்மர்.
அன்று விஸ்வாமித்ரர் உள்ளே நுழைந்து நூறு அணங்குகளைக் கண்டு கடந்த கதையைப்பற்றி பவமானன் என்னும் கவிஞர் எழுதிய குப்ஜகன்யா வைபவம் என்னும் காவியத்தை பூசகர் பாட பீஷ்மர் கைகளை தலைக்குப்பின்னால் வைத்து கண்மூடிப்படுத்து கேட்டுக்கொண்டிருந்தார். “நூறு சுனைகளில் அவர் பெண்முகங்களை கண்டார். யவனரே, நூறுசுனைகளில் பல்லாயிரம் அலைகள். ஒன்று பிறிதெனப்பெருகுபவை. நூறாவது அலையில் அவர் கண்டவள் அவருக்கு இறுதிநீரூற்றும் மூதன்னை என்கிறது காவியம்” என்றார் பூசகர்.
பாடல் முடிந்தபின் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு பூசகர் புரண்டுபடுத்தார். பின்பு “நூறுகோடி முகங்களுக்கும் அப்பால் முகங்களின் முடிவிலி என விரிந்துகிடப்பவளை கடந்ததில்லை சிவம். நெஞ்சடைக்கச் செய்யும் வரி. நான் இதை நூறாயிரம் முறை சொல்லியிருப்பேன். இதை கடந்ததே இல்லை” என்றார். பீஷ்மர் ஒன்றும் சொல்லவில்லை. “முதலில் ஆணவத்தை சீண்டி எழுப்புகிறது. பின்பு அடிபணியச்செய்து நிறைவளிக்கிறது. நோய்முதிர்ந்தவருக்கு இறப்பு போல இனியவள் அன்னை என்று சொல்கிறது காவியம். திகைக்கச் செய்யும் வரி.” பீஷ்மரிடமிருந்து சொல் ஏதும் எழவில்லை.
“துயின்றுவிட்டீரா யவனரே?” என்றார் பூசகர். பீஷ்மரின் மூச்சொலி கேட்காமை கண்டு “சரி” என்றபடி மீண்டும் பெருமூச்செறிந்து கண்களை மூடிக்கொண்டார். ”எதன்பொருட்டு துறக்க விழைகிறார்கள்? துறந்து அவர்கள் அடையும் அப்பிறிது இதைவிடவும் பெரிதா என்ன?” பீஷ்மர் அங்கில்லாதவர் போலிருந்தார். பூசகர் அவர் உடலின் வெம்மையை அணுக்கமென உணர்ந்துகொண்டிருந்தார்.
காலையில் பீஷ்மர் படுத்திருந்த இடம் ஒழிந்துகிடக்கக் கண்டு எழுந்து சென்று காலடித்தடங்களை நோக்கினார் பூசகர். அவை கன்யாவனம் நோக்கிச் செல்வதை கண்டபின் தொடர்ந்து சென்று காட்டின் எல்லையென அமைந்த சிற்றோடையை அணுகி அவை தயங்கி நின்றிருந்த இடத்தை அடைந்து அவை கடந்து சென்றிருப்பதை உணர்ந்து அங்கேயே நெடுநேரம் நின்றிருந்தார். ஐம்பதாண்டுகாலமாக அவ்வெல்லையைக் கடக்க எண்ணி ஒவ்வொருநாளும் அதுவரை வந்து மீள்பவர் அவர்.