பன்னிரு படைக்களம் - 26

[ 4 ]

இந்திரப்பிரஸ்தத்தின் தெற்குப்பெருவாயிலுக்கு அப்பால் காவல்காடால் மறைக்கப்பட்ட, ஒற்றை யானை மட்டுமே செல்லத்தக்க அகலம் கொண்ட சிறுவாயிலினூடாக மறுபக்கம் இறங்கிச் சென்ற புரவிப்பாதை, இருபுறமும் செறிந்த பசுந்தழைப் புதர்களின் நடுவே தெளிந்தும் மறைந்தும் காட்டை சென்றடைந்து, புதைந்து, மரச்செறிவுகளினூடாக ஒழுகி எட்டிய கொற்றவை ஆலயம் ஒன்று இருந்தது. இந்திரப்பிரஸ்த நகரின் முதல்விதை  அக்கொற்றவை ஆலயம் என்று சூதர்கள் பாடினர்.

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்கான வாஸ்துமண்டல வரைவின்போது, எரிமூடி பின் முளைத்தெழுந்த காண்டவக்குறுங்காட்டுக்குள் அமைந்த தோற்கூடாரத்திற்குள் நள்ளிரவில் கனவு கண்டு விழித்தெழுந்த முதியசிற்பியாகிய சயனர் அருகே படுத்திருந்த தன் மைந்தன் பிரபவனை காலில் தட்டி மெல்லிய குரலில் “மைந்தா, வருக என்னுடன்!” என்றார். அவர் விழிகள் மாறுபட்டிருப்பதை அறிந்த மைந்தன் கைநீட்டி தொடும் தொலைவில் வைத்திருந்த உளிகளையும், கூடங்களையும் எடுத்து தோல்பைக்குள் போட்டு தோளில் ஏற்றிக் கொண்டு தொடர்ந்தான். அறியா பிறிதொன்றால் வழிநடத்தப்படுபவர் போல காட்டுக்குள் நுழைந்த சயனர் புதர்களினூடாக வகுந்து சென்று மரக்கூட்டங்களைக் கடந்து சேறும் உருளைக்கற்களும் பரவிய நிலத்தில் நிலைகொள்ளா அடிகளுடன் நடந்து மரங்களால் கிளைதழுவப்பட்டு வேர்கவ்வப்பட்டு சொட்டி ஒழியா நீரால் பட்டுப்பாசி படர்ந்து பசுமையிருளுக்குள் புதைந்து கிடந்த கரும்பாறை ஒன்றின் அருகே சென்று நின்றார். அவரைத் தொடர்ந்து வந்த மைந்தன் அக்கரும்பாறையில் தன் தந்தை காணும் கொற்றவையை தானும் கண்டு கொண்டான்.

அப்பால் அக்கரியபாறையின் பிளவுக்குள் குருளைகளை ஈன்று கிடந்த அன்னைச் சிம்மம் ஓசைகேட்டு வெருண்டு எழுந்து தன் முட்பொதி காலைத்தூக்கி சருகுமேல் வைத்து, விழிகள் ஒளிவிட, உலோகம் கிழிபடுவதுபோல உறுமியபடி அருகணைந்தது. மைந்தன் அறியாது ஓரடி பின்னகர்ந்து நின்றான். தந்தை கைகூப்பியபடி அசையாது நின்றார். அவர் முன் வந்து வளைந்து சுழன்ற  நாவால் மூக்கை வருடியபடி விழியோடு விழி நோக்கி சிலகணங்கள் நின்றபின் சிம்மம் தலைதாழ்த்தி திரும்பி தன் அளைக்குள் சென்று மறைந்தது. அங்கே அதன் குருளைகள் எழுப்பிய சிற்றொலிகள் கேட்டன. அவை பால்குடிக்கும் ஒலி நீர்த்துளிகள் உதிர்வதுபோல எழுந்தது.

சயனர் திரும்பி மைந்தனிடம் “சிற்றுளி” என்றார். பிரபவன் “அப்பால் சிம்மம் மூன்று குருளைகளை ஈன்றிருக்கிறது தந்தையே. அதன் தாழ்முலைகளை பார்த்தேன்” என்றான். தந்தை பிறிதொன்று உணரா விழி கொண்டிருந்தார். முழந்தாளிட்டு அமர்ந்து சிற்றுளியை அக்கற்பாறையின் வலதுமுனையில் தெரிந்த சிறுகுமிழ்ப்பில் வைத்து சிறுகூடத்தால் மெல்ல தட்டி, பொளித்து அன்னையின் இடது காலின் கட்டை விரலை செதுக்கி எடுத்தார்.  பாறைத்திரை விலக்கி அன்னை முழுமையாக வெளிவர நாற்பத்திரண்டு நாட்களாயின.

தந்தையை அப்பணிக்கு விட்டுவிட்டு மைந்தன் திரும்பிச் சென்று அவருக்குரிய உணவையும் நீரையும் கொண்டு வந்தான். சிற்பிகள் வந்து சூழ்ந்து நின்று தெய்வமெழுவதை நோக்கினர். அங்கேயே அமர்ந்தும் நின்றும் செதுக்கி, அவ்வண்ணமே சரிந்து விழுந்து துயின்று, திகைத்து விழித்து அங்கேயே கையூன்றி எழுந்து, மீண்டும் உளிநாடி செதுக்கியபடி முதுசிற்பி அங்கிருந்தார். விழிக்கூர் கொண்டு அன்னை எழுந்தபோது எட்டடி பின்னகர்ந்து நின்று அவள் விழிகளையே நோக்கினார். அவர் உடலின் ஒவ்வொரு தசையும் மெல்ல தளரத்தொடங்கியது. மெல்ல ஊறிநிறைந்த சித்தத்தின் எடையால் அவர் கால்கள் தெறித்தன.

அன்று விழிதிறப்பென்று அறிந்து வந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் தலைமைச் சிற்பியும், மூத்த நிமித்திகரும், முதற்பூசகரும், காவலரும், பணியாட்களும், இசைச்சூதரும் சற்று அகன்று நின்றிருந்தனர். முதிய சிற்பி பித்தெழுந்த கண்களால் காலிலிருந்து தலை வரைக்கும் அன்னையை மாறி மாறி நோக்கினார். நடுங்கும் விரல் நீண்ட கைசுட்டி எதையோ சொல்லி தலையை அசைத்தார். தலைமைச்சிற்பி ஏதோ சொல்ல வாயெடுத்தபோது புதருக்குள் ஓசைகேட்டது. அனைவரும் அக்கணமே அது என்னவென்றறிந்து மெய்ப்புகொண்டனர்.

உளியோசை எழுந்த அன்றே  அங்கிருந்து தன் குருளைகளுடன் அகன்று சென்றிருந்த அன்னைச் சிம்மம் சிறுசெவிகளை விதிர்த்தபடி, தலையைக் குடைந்து துடியோசை எழுப்பியபடி புதருக்குள்ளிருந்து எழுந்து சுண்ணக்கல்விழிகளால் நோக்கியது. அதன் வால் எழுந்து மூங்கில்பூ என ஆடியது. அவர்கள் ஓசையிழந்து நின்றிருக்க, அது மெல்ல உறுமியபடி உடல்தெரிய மேலெழுந்து அணுகி வந்தது. கூடி நின்றவர்கள் அச்ச ஒலி எழுப்பி பின் நகர காவலர் வில்பூட்டினர்.  காவலர்தலைவன் கையசைத்து அவர்களை தடுத்தான்.

சிம்மம் தொய்ந்தாடிய செம்பட்டை வயிறுடன் மிக மெல்ல காலெடுத்துவைத்து அருகணைந்து கொற்றவைச்சிற்பத்தை தலைதூக்கி நோக்கியது. பின்பு அதன் காலடியில் தன் முகத்தை உரசியபடி உடலை நீட்டி வாலைச் சுழற்றியபடி உடலுக்குள்ளேயே எதிரொலி எழுந்த குரலில் உறுமியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்கள் அடிவயிற்றால் அவ்வொலியைக் கேட்டு கைகூப்பி மூச்சுக்குள் “அன்னையே!” என்றனர். திரும்பி தன் வெண்துளி விழிகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் நோக்கியபடி நடந்து அப்பால் சென்று  புதர்களுக்குள் இலையசையாது புகுந்து மூழ்கி மறைந்தது.

ஒவ்வொருவரும் உடல்நாண்கள் தளர்வுற மூச்சு அவிழ இயல்பாயினர். முதுபூசகர் கையாட்ட சூதன் தன் துடியை கையிலெடுத்து தாளம் மீட்டத் தொடங்கினான். பாணன் கிணையைத் தொட்டு எழச்செய்து உடன் இணைந்தவுடன்  துடிப்பொலியில் காட்டிருளின் மென்பரப்பு அதிரத்தொடங்கியது. ஆயிரம் கால்களாக காட்டுக்குள் இறங்கி நின்றிருந்த சூரியக்கதிர்களில் தூசிகள் நடுங்கிச்சுழன்றன. பறவைகள் எழுந்து வானில் வட்டமிட்டு குரலெழுப்பின.

முதிய சிற்பியின் இடது கால் பாதம் துடித்து மண்ணை விலக்குவதை, அத்துடிப்பு அவர் முழங்காலை ஏறி அடைவதை அவர்களால் காணமுடிந்தது. அவர் இடது தோளும் கையும் நடுங்கின. பின்பு அவர் உடல் நின்று துள்ளியது. நிமித்திகர் அவரைச் சென்று பிடிக்கும்படி இதழசைவால் உடன் நின்ற பூசகரிடம் சொல்ல அவர் தலையசைத்தபடி, உடலெங்கும் தயக்கம் நிறைய, ஓர் அடி எடுத்து முன்வைத்தார். அஞ்சி, குழம்பி நிமித்திகரை திரும்பிப்பார்த்து விழிகளால் வினவ அவர் குழம்பிய விழிகளுடன் சிற்பியை நோக்கிக்கொண்டிருந்தார்.

நெஞ்சில் தங்கிய ஒலி எரிந்தெழுந்து தொண்டை கிழிபட்டு வெளிப்படுவது போல அலறியபடி சயனர் அச்சிற்பத்தை நோக்கி ஓடி அதன் மேல் விசையுடன் மோதி சுழன்றுவிழுந்தார். கல்லில் எலும்பு மோதும் ஒலி அவர்களின் தாடைகளை கிட்டிக்கச்செய்தது. அதில் உறைந்து உடனே மீண்டு நிமித்திகரும் பூசகரும் அவரை நோக்கி ஓடி அணுகுவதற்குள் சயனர் தன் இடைகரந்த சிற்றுளியை எடுத்து  நடுக்கழுத்தை ஓங்கிக் குத்தி அழுத்தி இறக்கி கைகளைவிரித்து பின்னால்  சரிந்து முழங்கால் மடிந்து கைகள் நிலத்தில் ஊன்ற மல்லாந்து சிற்பத்தின் கால்களில் விழுந்தார்.

மூச்சுடன் சீறித்தெறித்த கொழுங்குருதித் துளிகள் சிற்பத்தின் கால்சுற்றிய கழல்களில், நகவிழிகள் எழுந்த விரல்களில், விரலடுக்குகள் அணிந்த கணையாழிகளில், இடப்பாதம் பதிந்த தாமரையில், வலப்பாதம் பதிந்த ஆமையில் சிதறி சொட்டி தயங்கி இழுபட்டு வழிந்திறங்கின. குருதி வழுக்கிய தன் கைகளால் மண்ணை அறைந்தபடி, கால்கள் இழுபட்டு உதைக்க, தசைகள் தெறித்து தெறித்து அமைய, சிற்பி உயிர்துறந்தார். அவர் விழிகள் அன்னைச்சிலைமேல் பதிந்திருந்தன. கை ஓய, முழங்கிய துடியும் கிணையும் அவிந்தன. காட்டில் எங்கோ அவை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

நிமித்திகர் அருகே வந்து சிற்பியின் விழிகளை நோக்கியபின் “முழுதெனக் கண்டுவிட்டான். பிறிதொன்றிலாதவள் முதற்பலி கொண்டிருக்கிறாள்” என்றார். சிலையின் கால்களை நோக்கி குனிந்து வணங்கி “அன்னை விழிகளை எவரும் நோக்காதொழிக!” என்றார். பூசகர் தன் கையிலிருந்த பூசைத்தாலத்தில் மஞ்சளையும் சந்தனத்தையும் குழைத்து பிசின்செய்து அன்னையின் இரு விழிகளையும் மூடினார். அவர்கள் அன்னைக் காலடியை வணங்கி ஒவ்வொருவராக  திரும்பிச்சென்றனர். ஒவ்வொருவரும் தங்கள் முதுகில் சிம்மநோக்கை உணர்ந்தனர்.

குறுங்காடமைந்த கொற்றவைக்கு குருதிக் கொடையும், மலராட்டும், தீயாட்டும் நிகழ்த்தப்பட்டபின்னர் இந்திரப்பிரஸ்தத்தின் வாஸ்துபுனிதமண்டலம் வரையப்பட்டது. நகரின் கால்கோள் விழவன்று பாஞ்சாலத்தின் அரசி அவள் துணைவர் ஐவரும் உடன்வர அமைச்சர் சௌனகரும் பாஞ்சாலத்து இளவரசர் திருஷ்டத்யும்னனும் துணைக்க அங்கு வந்து அன்னைக்கு பலியளித்து தாள் சென்னிசூடி திரும்பினாள்.  அன்று சற்று வளர்ந்துவிட்டிருந்த சிம்மக்குருளைகள் மூன்றும் புதர்களினூடாக வந்து வால்களைத் தூக்கியபடி நின்று அவர்களை நோக்கின. அன்னையின் அழைப்பு புதர்களுக்கு அப்பால் எழ அவை சிற்றொலி எழுப்பியபடி துள்ளி திரும்பிச்சென்றன.

கொற்றவை குடியிருக்கும் காடென்பதனாலேயே பிறர் அங்கு வருவதும் அரிதாயிற்று. கருநிலவு நாளில் மட்டும் பூசகர் ஏழு படைவீரர்கள் வாளுடனும் வில்லுடனும் துணைவர நெய்ப்பந்தமேந்தி அப்பாதையினூடாக நடந்து காட்டுக்குள் வருவார். அவருடன் வருபவர்களில் மூவர் பின்நோக்கி விழிவைத்து பின்னடி எடுத்துவைத்து நடப்பார்கள். தங்கள் தலைக்குப் பின்புறம் பெரிய விழிகள் கொண்ட முகமூடியை அணிந்திருப்பது அவர்களின் வழக்கம். அச்சம் நிறைந்த முகமூடியின் கண்கள் அவர்களின் ஒளிவிழிகளறியா காடொன்றைக் கண்டு உறைந்திருக்கும். காட்டின் எல்லையை அடைந்ததும் பெருமுழவுகளை ஒலிக்க வைத்து “அம்பே! அரசியே! அலகிலாதவளே! விழியளே! வெற்றிகொள்பவளே! புடவியெனும் வெறியாட்டு கொண்டாடுபவளே! எங்கும் பூத்தவளே! எக்கணமும் புதியவளே!” என்று கூவியபடி உள்ளே செல்வார்.

கொற்றவை ஆலயத்தின் பின்னாலிருந்த அக்குகையில் எப்போதும் சிம்மங்கள் இருந்தன. அன்னைச் சிம்மம் ஈன்ற குட்டிகள் முழுப்பாதம் அடைந்து தங்கள் முத்திரைகளால் அந்நிலத்தை அடையாளப்படுத்தின. ஆலயத்தருகே அவர்கள் வரும்போது அவை உறுமியபடி சென்று அப்பாலிருந்த சிறிய பாறைகளில் ஏறி சொல்மறுக்கும் கண்களால் அவர்களை நோக்கிக் கொண்டிருக்கும். அன்னையின் சிறு கல்விளக்கில் நெய்யிட்டு சுடர்ஏற்றி, சிறுகுருதிக் கொடையளித்து, நெய்ப்பந்தம் கொளுத்தி சுடராட்டு நிகழ்த்தி வணங்கி மீண்டு செல்லும்போது  அச்சத்தில் அவர்கள் உடல் மெய்ப்பு கொண்டிருக்கும்.

இந்திரப்பிரஸ்தத்தின் காவல் கொற்றவை நுதலணிந்த விழியும், பிறை சூடிய சடைமகுடமும், பைந்நாகக்கச்சையும் கொண்டவள். பதினாறுகைகளிலும்  முப்புரிவேலும், உடுக்கும், மின்கதிரும், உழலைத்தடியும், வாளும், கேடயமும், வில்லும், அம்பும், கபாலமும், கனலும், வடமும், அங்குசமும், தாமரையும், அமுதகலமும் ஏந்தி  அளித்து அருளி இடைஒசிந்து நின்றிருந்தாள். சிற்றிடைக்கு மேல் எழுந்த அமுதகுடங்களில் கருணையும், விரித்த கால்களின் நடுவே திறந்த அல்குலில் அனலும் வாழ்ந்தன.  அவள் கால்களின் கழல்களில் மும்மூர்த்திகளின் முகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவள் கணையாழிகளில் சூரிய சந்திரர்களும் ஆதித்யர்களும் விழி திறந்திருந்தனர். அவளைச் சூழ்ந்திருந்த பிரபாவலயத்தில் எட்டு வசுக்களும் திசைத்தேவர்களும் நிரைகொண்டிருந்தனர்.

[ 5 ]

ஆவணிமாதக் கருநிலவு நாளில் இந்திரப்பிரஸ்தத்தின் கொற்றவை அன்னைக்கு நிணக்கொடையும் தீயாட்டும் வெறியாட்டும் நிகழ்த்தும்பொருட்டு அரசி திரௌபதியும் அரசர் யுதிஷ்டிரரும்  வந்திருந்தனர். அவர்களுடன் தம்பியர் நால்வரும், மதுராவின் மூத்த யாதவரும் துவாரகையின் இளைய யாதவரும் அமைச்சர் சௌனகரும் சென்றனர். தெற்குக் காட்டுக்குள் நுழைவதற்கான பாதை இருபுறமும் வளர்ந்த புதர்கள் வெட்டப்பட்டு, மென்மணல் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டிருந்தது. பல்லக்கில் ஏறி அடர்காட்டின் எல்லை வரைக்கும் வந்த அரசி அதன் பின் சந்தனக் குறடுகளை அணிந்துகொண்டு  தன் கையிலேயே பூசனைப் பொருட்களை சுமந்தபடி நடந்தாள். அவள் அணுக்கத்தோழி மாயையும் உடன் நடந்தாள்.

முன்பே சென்ற இசைச்சூதர் தங்கள் கையில் இருந்த முழவை ஒலிக்க வைத்து அவர்களின் வருகையை அறிவித்தபோது அப்பால் காட்டுக்குள் இருந்து வாழ்த்தொலிகள் எழுந்தன. எவரும் எச்சொல்லும் உரைக்கவில்லை. அவர்களின் உள்ளங்களும் சொல்லின்மையில் பிசிராடி நுனிபறந்துகொண்டிருந்தன. அடர்காடு தன்னைப்பற்றியே பிறர் நினைக்கவைக்கும் வல்லமை கொண்டது. இருண்ட குளிர்த்திரையென தன்னை முதலில் காட்டுகிறது. பின்பு ஆயிரம் விழிகளென நோக்குகிறது. பின்பு மறைந்திருக்கும் பல்லாயிரம் அறியாப் பார்வைகளென மாறுகிறது. அத்தனை நோக்குகளையும் ஒன்றிணைக்கும் ஒற்றை ரீங்காரமாக சூழ்ந்து கொள்கிறது.

திரௌபதி அக்காட்டில் எழுந்த ஒவ்வொரு விழியையும் தொட்டு சொல்லாட விழைபவள் போல் நோக்கியபடி வந்தாள். அவளருகே தலைகுனிந்து யுதிஷ்டிரர் நடந்தார். பெரிய கைகளை அசைத்தபடி தோளில் பரவிய நீள்குழலுடன் பீமனும், வில்லேந்தி அம்பறாத்தூணியுடன் அர்ஜுனனும், தொடர்ந்து நகுலனும் சகதேவனும்  சென்றனர். முழவேந்திய இசைச்சூதர் மூவருக்கு பின்னால் இளைய யாதவரும் மூத்த யாதவரும் அருகருகே நடந்தனர். கொற்றவை ஆலயம் தொலைவில் தெரிந்ததும் யுதிஷ்டிரர் தலைதூக்கி நீள்மூச்செறிந்தார். சௌனகர் அருகே குனிந்து மெல்லிய குரலில் ஆணைபெற்று கையாட்ட முழவுகள் எழுந்தன.

ஆலயமுகப்பில் காத்து நின்றிருந்த சிற்றமைச்சர்கள் சுஷமரும் சுரேசரும்  அருகணைந்து  முகமன் உரைத்தனர். “அனைத்தும் சித்தமாக உள்ளன அமைச்சரே” என்றார் சுஷமர். அவர்கள் சென்று ஆலயத்தின் முன் நின்றதும் அங்கு நின்றிருந்த இசைச்சூதர்கள் முழவுகளையும் கொம்புகளையும் சல்லரிகளையும் முழக்கினர். பாறையை உள்ளமைத்து கட்டப்பட்ட ஆலயக்கருவறைக்குள் மூன்று பூசகர்கள் அன்னையின் ஓங்கியசிலைக்கு மஞ்சளும் சந்தனமும் அரைத்த குழம்பைத் தொட்டு உருட்டி எடுத்து வீசி விரல்களால் அழுத்திப்பரப்பி மெய்ச்சாத்து அணிவித்துக் கொண்டிருந்தனர். தலைமைப்பூசகர் மட்டும் திரும்பி அரசியையும் அரசரையும் வணங்கினார்.

கரும்பாறையிலிருந்து ஊறி எழுபவள்போல பொன்னுடலுடன் அன்னை உருத்திரட்டி வந்து கொண்டிருந்தாள். கருவறைக்கு முன்னிருந்த அகன்ற கருங்கல் முற்றத்தில் வாழையிலைகள் பரப்பி மலர்களும் பூசனைப்பொருட்களும் குவிக்கப்பட்டிருந்தன. உடைவாளேந்திய காவலர்கள் சற்று விலகி மரங்களின் அடியில் நிலைகொண்டனர். அவர்கள் அனைவரையும் நோக்கால் இயக்கும் இடத்தில் படைத்தலைவன் தன் இடையில் சிறு கொம்புடன் நின்றான். அரசியும் அரசரும் அன்னைக்கு முன் நிற்க, இளையவர்கள் இருபக்கமும் நின்றனர். அருகே இளைய யாதவரும் மூத்த யாதவரும் நின்றனர்.

அவர்களுக்கு முன்னால் ஆலயமுற்றத்தில் பன்னிருநிலைக்களம் வெண்சுண்ணத்தால் வரையப்பட்டிருந்தது. ஒவ்வொன்றிலும் அதற்கான எண்கள் பொறிக்கப்பட்டு அருகே சிறிய உருளைக்கற்களாக அக்களத்திற்குரிய தேவர்கள் அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மலர்சூடி, அருகே சிறுமண்ணகலில் சுடர் எரிய, அந்நிழல் அருகே நீண்டு நின்றாட காத்திருந்தனர்.

முதுபூசகர் உள்ளிருந்து அன்னையின் காலடியிலிருந்து எடுத்த மலரும், அவள் உடலில் இருந்து தொட்டு எடுத்த சந்தனமஞ்சள் விழுதும் கொண்டு வந்து அரசருக்கும் அரசிக்கும் அளித்தார். அவர்கள் அதை நெற்றியில் அணிந்து கொண்டதும் “மாலை நான்காம் நாழிகையில்தான் கருநிலவு தொடங்குகிறது என்பது நிமித்திகர் கூற்று அரசி. அதன் பிறகே அணி செய்யத் தொடங்க வேண்டும். சற்று முன்னர்தான் தொடங்கினோம்” என்றார். யுதிஷ்டிரர் ”அன்னை எழுக!” என்று சொல்ல பூசகர்  தலைவணங்கி உள்ளே சென்றார்.

சந்தனமஞ்சள் மெய்க்காப்பு கீழிருந்து சிதலெழுவதுபோல வளர்ந்து அன்னையின் தோளை சென்றடைந்தபோது மாலை கடந்துவிட்டிருந்தது. சுற்றிலும் இலைகளினூடாக சரிந்திருந்த ஒளிக்குழல்கள் விண்ணோக்கி இழுபட்டு மறைய இலைகளின் பளபளப்புகள் அணைந்தன. மெய்க்காப்பில் அன்னையின் முகம் முழுதமைந்தபோது சூழ்ந்திருந்த காடு இருளாகவும் ஒலியாகவும் மட்டுமே எஞ்சியது.

அணிப்பேழை கொண்டுவந்து வைத்து திறக்கப்பட்டது. பூசகர் அன்னையின் குழல் அலைகளுக்குமேல் நெய்க்கரிச்சாந்து குழைத்து காப்பிட்டு, அதில் அருமணிமலர்களையும் பொன்மணிகளையும் பதித்தார். அவள் மூக்கில் செம்மணிகள் ஒளிரும் வளையம் அணிவிக்கப்பட்டது. காதுகளில் நாகக்குழையும் தோள்களில் அணிவளைகளும் செறிவளைகளும் பதிக்கப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றென முத்தாரமும் மணியாரமும், சரப்பொளி மாலையும் அவள் முலைகள் மேல் அணிவிக்கப்பட்டன. இடையில் செம்மணிகள் சுடரும் மேகலையும், அதற்குக் கீழே தொடைச்செறிகளும் சூட்டப்பட்டன. தென்முத்துக்கள் ஒளிவிட்ட கழல்கள் புன்னகை சூடின. கணையாழிகளில் கண்கள் எழுந்தன. கல்லில் இருந்து பிறிதொரு அணிவடிவம் எழுந்து கண் முன் நின்றது.

பூசகர் வந்து பணிந்து “அன்னைக்கு விழிமலர்கள் பொருத்தலாம் அல்லவா?” என்று யுதிஷ்டிரரிடம் கேட்டார். அவர் தலையசைக்க திரும்பி இசைச்சூதரிடம் கைகளைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அன்னையின் கல்விழிகளை மூடியிருந்த செஞ்சாந்துமீது வைரங்கள் பதிக்கப்பட்ட விழிமலர்கள் பொருத்தப்பட்டன. விழியொளி கொண்டதும் அவள் முகத்தில் மெல்லிய துடிப்பு குடியேறுவது போல தோன்றியது. துடித்துத் திமிறி அலைத்த தாளத்துடன் இணைந்து அவள் உடலும் அசைந்தது. எக்கணமும் வீறிட்டலறியபடி அவள் எழுந்து நின்றாடத்தொடங்கிவிடுவாள் என்பது போல்.

இருகைகளையும் கூப்பி கால்களை அழுந்த ஊன்றி முற்றிலும் நிகர்நிலை கொண்ட உடல் அசைவற்றிருக்க நிலைத்த விழிகளால் அன்னையை நோக்கிக் கொண்டிருந்தாள் திரௌபதி. பூசகர் ஆணையிட துணைப் பூசகர்கள் அன்னை முன் ஐம்பருக்கள் குடிகொண்ட ஐந்து மங்கலங்களாகிய  சுடரகல், வெண்கவரி, பொற்குடத்துநீர், வெள்ளிக்கிண்ணத்தில் கூலமணிகள், ஆடி ஆகியவற்றை நிரத்தினர்.  பூசகர் எழுந்து அரளியும், தெச்சியும், காந்தளும், செண்பகமும், தாமரையும் என ஐந்துசெம்மலர்களை அள்ளி அன்னையின் காலடிகளில் இட்டு வணங்கினர்.

முதற்பூசகர் வெளி வந்து கைகாட்ட இசைச்சூதர்கள் தங்கள் கலம் தாழ்த்தி அமைந்தனர். செவிதுளைக்கும் அமைதியில் காட்டின் ஒலிகள் உயிர்த்தெழுந்து வந்தன. சீவிடுகளின் ரீங்காரத்தால் இணைக்கப்பட்ட கூகைக்குழறலும் கானாடுகளின் செருமல்களும் மான்கூட்டமொன்றின் தும்மலோசைகளும் சூழ்ந்தன. பந்த ஒளி கண்டு கலைந்து மீண்டும் அமைந்த பறவைகளின் சிறகோசை தலைக்குமேல் சிதறியது. ஆலயத்தைச் சுற்றி நடப்பட்ட நூற்றியெட்டு நெய்ப்பந்தங்களின் சுடரசைவில் அப்பகுதி காற்றில் படபடக்கும் கொடி என தெரிந்தது.

முதற்பூசகர் அன்னக்குவியலின் அருகே முழந்தாளிட்டு அமர்ந்து கையில் சிறு துடி ஒன்றை ஏந்தி இருவிரலால் அதை மீட்டியபடி பாடத்தொடங்கினார். பண்படாத தொல்மொழியின் மன்றாட்டு போல, அறைகூவல் போல, வெறியாட்டு போல அப்பாடல் எழுந்தது. மீண்டும் மீண்டும் அன்னையே, விழிகொண்டவளே, முடிசூடியவளே, முற்றிருளே, முடிவிலியே என்னும் அழைப்பாக அது ஒலித்தது. துடிமேல் அதிர்ந்த விரல்கள் ஈயின் சிறகுகள் போல விழியறியா அசைவுகொண்டன. அத்தாளத்துடன் இணைந்து கொண்டிருந்த அவர்களின் உள்ளங்கள் அவ்விரைவை அடைந்தன. மேலும் மேலும் விரைவெனத்தாவி, தாங்கள் சுமந்திருந்த அனைத்தையும் உதறி, வெறும் இருட்பாய்ச்சலென மட்டுமே ஆகின.

மேலும் மேலும் என உன்னி குவிந்து முனைகொண்டு மேலும் கூர்ந்து  சென்ற உச்சியில் வெடித்தெழுந்தது போல அலறல் எழுந்தது. ஆலயத்தின் பின்னாலிருந்து மாமல்லர்களுக்குரிய பெருந்தோள்கள் கொண்ட பூசகர் ஒருவர் மரத்தில் செதுக்கி விழியும் பிடரியும் அமைக்கப்பட்ட சிம்மமுகம் சூடி இருகைகளின் விரல்களிலும் ஒளிரும் இரும்புக்கூருகிர் அணிந்து பேரலறலுடன் பாய்ந்துவந்தார். அவர் கால்கள் நிலத்தைத் தொட்டு உந்தி துள்ளி எழ, கைகள் சிறகுகள் என சுழல அவரை காற்றிலேயே நிறுத்தியது அவ்வெறி. மரவுரியாலான செந்நிறப்பிடரிக்கற்றை காற்றில் எழுந்து குலைந்தாட, மார்பில் பரவியிருந்த செந்தாடி உலைந்து பறக்க, இழுபட்ட வாய்க்குள் வெண்ணிற கோரைப்பற்கள் செறிந்திருக்க சிம்மமுகம் வெறித்துச் சுழன்றாடியது.

பூசகரின் குரல் விலங்குகளின் தொண்டைகளுக்கே உரிய முறுக்கமும் துடிப்பும் கொண்டு ஓங்கியது. எழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம் எழுக! எழுந்தெழுக பன்னிரு படைக்களம்! பன்னிரு படைக்களம்! அம்மா, பன்னிரு படைக்களம். பன்னிரு படைக்களம் தாயே! மாகாளி, கருங்காளி, தீக்காளி, கொடுங்காளி, பெருங்காளியே! உருநீலி, கருநீலி, விரிநீலி, எரிநீலி, திரிசூலியே! காளி, கூளி, கங்காளி, செங்காலி முடிப்பீலியே! எழுக, பன்னிரு பெருங்களத்தில் எழுக! எழுக, பன்னிரு குருதிக்குடங்களில் எழுக! எழுக பன்னிரு கொலைவிழிகள்!  எழுக பன்னிரு தடமுலைகள்! எழுந்தெழுக பன்னிரு கழல்கால்கள்! எழுக அன்னையே! எழுக முதற்சுடரே! எழுக  முற்றிருளே! எழுக அன்னையே! எழுந்தெரிக இக்களத்தில்! நின்றாடுக இவ்வெரிகுளத்தில்! எழுக பன்னிரு படைக்களம்! படைக்களமாகி எழுக அன்னையே!”

“அன்னை முன் எழுக, அன்னை முன் எழுக ஆயிரம் பலிக்கொடைகள்! அன்னை முன் எழுக ஆயிரம் பெருநகர்கள்! அன்னை முன் எழுக பல்லாயிரம் குருதிக்கலங்கள்! அழிவின் அரசி இருளின் இறைவி இங்கெழுக! இங்கெழுக!” சிம்மமுகன் வேலை ஓங்கி மண்ணில் குத்தி நிறுத்தி தன் நெஞ்சை நோக்கி அறைந்து இரு கைகளையும் விரித்து பெருங்குரலெழுப்பி முழந்தாள் மடக்கி நிலத்தில் விழுந்தார். இரு கைகளிலும் உகிர்கள் மின்ன தூக்கி தலைக்குமேல் அசைத்து நடுநடுங்கினார்.

பூசகர்கள் இருவர் அப்பால் காட்டுக்குள் கட்டப்பட்டிருந்த வெண்ணிற எருதை இழுத்து வந்தனர். ஒளியைக் கண்டு நான்கு கால்களையும் ஊன்றி புள்ளிருக்கை விதிர்க்க தலைதாழ்த்தி மூச்சொலி எழுப்பி பின்னகர்ந்தது. அதன் பெரிய விழிகளுக்குள் பந்தங்களின் செவ்வொளி மின்னியது. பூசகர் அதை உந்தி முன்னெடுத்து வந்து அன்னையின் முன் நிறுத்தினர். அது கழுத்துத்தசைச்சுருள்கள் விரிந்து வளைய தலையை அசைத்து கொம்புகளைக் குலுக்க காதுகள் அடிபட்டு ஒலித்தன. பூசகர் அதன் கழுத்தில் செம்மலர்மாலையை அணிவித்தனர். முதுபூசகர் அதன் தலைமேல் நீரைத்தெளிக்க அது உடல் சிலிர்த்து மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி சிம்மமுகனை நோக்கி சென்றது.

சிம்மப் பேரொலியுடன் அவர் இருகைகளையும் விரித்து அமறியபடி அதை எதிர்கொண்டார். சிறியவிழிகளில் அச்சமின்மையுடன் அது கொம்புகளைத் தாழ்த்தி முன்னங்காலால் மண்ணைக் கிண்டியது. கொம்புகளை உலைத்தபடி மூச்சொலிக்க விழிகளை உருட்டியபடி அசைவற்று நின்றது. அதன் உடலில் தசைகள் அசைந்துகொண்டே இருந்தன. ஒரு கணத்தில் அது மண்பறக்க பாய்ந்து சிம்மமுகனை நோக்கி சென்றது.

சிம்மம் எழுந்து பாய்ந்து எருதின்மேல் விழுந்து இரு கைகளின் உகிர்களாலும் அதை கவ்விக்கொண்டது. அதன் கழுத்தைப்பற்றி குருதிக் குழாய்களை குத்திக்கிழித்து ஊற்றெடுத்த குருதியில் தன் வாயைப் பொருத்தி உறிஞ்சி சுவைத்து ஊதி கொப்பளித்தது. குருதித் துளிகள் மழையென அதன்மீதும் அருகே வணங்கி நின்றிருந்தவர்கள் மேலும் பொழிந்தன. வால் விடைக்க குளம்புகள் மண்ணில் உதைபட சுழன்று சுழன்று வந்த காளை இடதுவிலா அடிபட மண்ணில் விழுந்தது. அதன் வால் மண்ணில் இழுபட்டது. கால்கள் பரபரக்க விழிகள் உருண்டு உருண்டு தவிக்க உடல் அதிர்ந்து அடங்கிக்கொண்டிருக்க அதன் மேல் எழுந்தமர்ந்து நெஞ்சில் அறைந்து முழக்கமிட்டது சிம்மம்.