பன்னிரு படைக்களம் - 25
[ 2 ]
ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக!” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம் இளவேனில் என்பது கவிஞர்கூற்று. ஆனால் அடுமனை போலிருக்கிறது நகரம்” என்றார். திரௌபதி சிரித்துக்கொண்டு அமரும்படி இருவருக்கும் கைகாட்டிவிட்டு அவர்கள் அமர்ந்ததும் தான் அமர்ந்து தன் நீள்குழல் பின்னலைத் தூக்கி வலப்பக்க கைப்பிடிமேல் போட்டுக்கொண்டு கால்மேல் கால் அமைத்துக் கொண்டாள்.
“எதற்காக நகைத்தீர்கள் அரசி?” என்றார் இளைய யாதவர். “ஒன்றுமில்லை” என்று சிரிப்பை அடக்கிய திரௌபதி “தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்று தருமனிடம் சொன்னாள். “ஆம், மிகவும் களைத்திருக்கிறேன். படைக்கலப்பயிற்சி என்பதே உடலை களைப்படையச்செய்து அந்நாளில் எதையும் எண்ணவிடாது ஆக்கிவிடுகிறது. இன்று இளைய யாதவர் சென்றதனால் நானும் உடன் சென்றேன்” என்றபடி அவர் நிமிர்ந்து காலை நீட்டிக்கொண்டார். “என்ன சிரிப்பு?” என்று இளைய யாதவர் மீண்டும் கேட்டார். “ஒன்றுமில்லை, என் எளிய உளவிளையாட்டு” என்றாள். “எதிரே ஒருவர் இருந்தால்தான் என்னால் ஆடமுடியும். ஆகவே ஆடிமுன் அமர்ந்து ஆடுகிறேன். வெல்லும் தருவாயில் ஆடியில் எதிரியென நீங்கள் தோன்றினீர்கள்.”
இளைய யாதவர் “நன்று, ஆனால் இவ்வறைக்குள் நுழையும் எவரும் உங்கள் எதிரியென்றே தெரிவார்களே அரசி?” என்றார். “ஆம், ஒவ்வொருவருடனும் ஆடுகிறேன்” என்றபின் அவள் பணிப்பெண்ணை நோக்கித் திரும்பி விழியசைக்க அவள் பணிந்து விலகிச்சென்றாள். இரு ஏவலர் குளிர்நீரை அவர்களுக்கு கொண்டுவந்தனர். தருமன் “நான் முன்பெல்லாம் இவளுடன் நாற்களமாடுவதுண்டு. இப்போது இவள் என்னுடன் ஆடுவதில்லை” என்றார். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “இவள் ஆடுவது யவன நாற்களம். அதில் பகடை என ஏதுமில்லை.பன்னிரண்டுக்கு பன்னிரண்டு என களங்கள். கருக்களை எண்ணிஎண்ணிப் படைசூழ்ந்து முன்னகர்த்துவதே அதன் ஆடல்.”
இளைய யாதவர் “ஆம், அதுநன்று. நடுவே ஊழ் என ஏன் ஒரு பன்னிருஎண் வந்து புரளவேண்டும்?” என்றார். “பகடைகள் என்பவை பன்னிரு ராசிகள் யாதவரே. அவையே மானுடனை ஆட்டுவிக்கும் தெய்வங்களின் கணக்குகளைக் கொண்டவை. அவை உள்நுழையாத ஆடலென்பது வெற்றாணவம் மட்டுமே” என்றார் யுதிஷ்டிரன். “வென்றேன் என்று தருக்கலாம். அப்பாலிருந்து முடிவிலி சிரிக்கும்.” திரௌபதி சிரித்துக்கொண்டு “இக்களத்திற்குள்ளேயே முடிவிலி மடிந்து அமைந்துள்ளது அரசே” என்றாள். “எண்ணுவதும் உன்னுவதும்கூட பகடையின் புரளல்கள் அல்லவா?”
இளைய யாதவர் முகவாயில் கைவைத்து குனிந்து “என்ன ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் அரசி?” என்றார். “யவனநாற்களத்தின் நெறிகளின்படி இதை நானே அமைத்தேன்” என்று அவள் சிரித்தபடி சொன்னாள். இளைய யாதவர் குனிந்து அக்களத்தை நோக்கி ஒரு கருவை கைகளால் தொட்டு எடுத்தார். எத்திசையில் கொண்டுசெல்வது என்பதை உன்னி அங்குமிங்கும் அசைத்தபின் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு “வழிகளே இல்லை” என்றார்.“ஏன் இல்லை? இதோ இங்கே கொண்டுசெல்லுங்கள். அங்கே எதிரிகள் அகன்றிருக்கிறார்கள்” என்று கைசுட்டினார் தருமன். இளையயாதவர் சற்று சலிப்புடன் “அரசே, நீங்கள் அங்கு மட்டுமே செல்லவேண்டும் என்று முன்னரே வழியமைத்திருப்பதை காணவில்லையா? அதற்கடுத்து நிகழ்வனவும் அங்கே ஒருக்கப்பட்டுள்ளன. இது களமல்ல, சிலந்தியின் வலை” என்றார்.
திரௌபதி இளைய யாதவரை நோக்கி நகைத்து “உங்களுக்கு எக்களமும் விளையாடுமுற்றம் என்கிறார்களே?” என்றாள். “ஆம், ஆனால் நான் ஆடும் விளையாட்டின் அனைத்து நகர்வுகளும் முன்னரே வகுத்து இங்கே பொறிக்கப்பட்டிருக்கையில் நானும் வெறும் ஒரு கருதானோ என்ற திகைப்பை அடைகிறேன்.” குனிந்து ஒரு கருவை நோக்கி “எரி. அவனும் அதே திகைப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்பால் வருணன். அவனுக்கும் திகைப்புதான்” என்றார் இளைய யாதவர். “இது நானே எனக்குள் ஆடி முழுமைசெய்துகொண்ட களம். இன்று காலை முழுமையாக தன்னை அமைத்ததும் செயலற்றுவிட்டது. இதை எவரேனும் கலைக்காமல் இனி என்னாலும் ஆடமுடியாது” என்றாள் திரௌபதி.
தன் கன்னத்தை விரல்களால் தட்டியபடி இளைய யாதவர் களத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “ஒவ்வொன்றும் முற்றிலும் நிகர்கொண்டுள்ளன. அப்படியென்றால் ஒவ்வொன்றுக்கும் நிகர்மதிப்புதானா இக்களத்தில்?” என்றார். “நிறையற்றவை விசைகொள்கின்றன” என்றாள் அவள். “ஏனென்றால் இங்கு பரப்பி வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் என் விழைவுகொள்ளும் வடிவங்கள் அல்லவா?” இளைய யாதவர் நிமிர்ந்து ஒருகணம் நோக்கியபின் குனிந்து ஒவ்வொன்றையாக தொட்டார். “காலமின்றி ஒவ்வொன்றும் அவ்வண்ணமே இங்கு அமைந்துள்ளவை போலுள்ளன. இனி ஒருகணமும் அவை அசையப்போவதில்லை என்பதுபோல.”
தருமன் “இவள் ஆடும் இந்த ஆடலை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. உண்மையில் இது என்ன? ஒவ்வொன்றையும் நிறைநிலை வரை எதிரெதிர்வைப்பது. முற்றிலும் அசைவிழக்கச்செய்வது. அசைவின் அடுத்த கணத்தைச் சூடி அமர்ந்திருக்கிறது இந்த மையம்” என்று விரலால் சுட்டினார். “இதை அரசி என்கிறார்கள். தேனீக்கூட்டின் அரசிபோல அவள் ஒரு பெருந்தாய். அவளை சற்றே நகர்த்தினால் ஒவ்வொன்றும் நிறைநிலை அழிகின்றன.” அவர் அந்த மையத்திலமைந்த அரசியைத் தொட்டு “ஆனால்…” என்றார். கையை எடுத்து “எங்கும் கொண்டுசெல்லமுடியாது. எல்லா இடங்களிலும் கருக்கள்” என்றார்.
இளைய யாதவர் “முடியும் அரசே. ஒருவழி உள்ளது” என்றபடி களத்தின் தெற்கு ஓரத்தில் நின்றிருந்த சிம்மத்தின்மேல் சுட்டுவிரலை வைத்தார். “சிம்மம் தன் வலப்பக்கத்தில் எருதை கொண்டுள்ளது. அதை அது கொல்லட்டும்” என்று கருவை நகர்த்தினார். காளை சரிந்துவிழுந்தது. அக்களத்தில் சிம்மத்தை வைத்தார். தருமன் முகம் மலர்ந்து “ஆம், வரிசையாக அனைத்தையும் நகர்த்திவிடலாம். அரசிக்கு அடுத்த களம் ஒழிகிறது… அவளையும் நகர்த்தமுடியும்” என்றார். இளைய யாதவர் “நகர்த்துங்கள்” என்று புன்னகைத்தார். தருமன் ஒவ்வொரு காயாக நகர்த்த அரசி இடம்பெயர்ந்து அமைந்தாள். “அவ்வளவுதான். இனி எல்லாவற்றையும் திருப்பியடுக்கவேண்டும். ஒவ்வொன்றும் தங்கள் முழுநிறைநிலையை கண்டடையவேண்டும். நிறையால், விசையால், இணைவால், பிரிவால்” என்றார் தருமன். இளைய யாதவர் திரௌபதியின் விழிகளை நோக்கியபின் புன்னகையுடன் கைகளை கோத்தபடி சாய்ந்துகொண்டார்.
“நானும் யாதவரும் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளோம் அரசி” என்று தருமன் சொன்னார். “அதை உன்னிடம் சொல்லவே வந்தோம்.” திரௌபதியின் விழிகள் மிகச்சிறிதாக அசைந்தன. தருமன் “நாம் ஓர் ராஜசூய வேள்வியை செய்யலாமென்று இளைய யாதவர் சொல்கிறார். முதலில் எனக்கு சற்று தயக்கமிருந்தது. வரும்வழியில் அவர் அதைப்பற்றி விரிவாகவே பேசினார். அது அழியா சுருதிகளின் அடிப்படையில் அமைந்தது. அதை நிகழ்த்த தைத்ரிய மரபைச்சேர்ந்த பெருவைதிகர் பன்னிருவர் இங்கிருக்கிறார்கள். அவர்களை தலைமையேற்று நடத்த தலைமைவைதிகர் தௌம்யர் இருக்கிறார். முறையாகவே செய்து முடித்துவிடலாம்” என்றார்.
திரௌபதி இளைய யாதவரிடம் “ராஜசூயம் ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது ஆபஸ்தம்பசூத்திரம்” என்றாள். “ஆம்” என்று தருமன் இடைபுகுந்தார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டு வந்தேன். அதை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் ஒத்துழைத்தார்கள் என்றால் நாம் ஷத்ரியர்கள் நடுவே சக்ரவர்த்திகளாவோம். இல்லையென்றால் ஆசுரகுடிகளைத் திரட்டி அதை செய்வோம். அவர்கள் அனைவருக்கும் வேள்வியில் பீடம் அளிப்போம். ஷத்ரியர் முடிந்தால் நம்மை எதிர்த்து வெல்லட்டும்.” அனைத்தையும் புரிந்துகொண்டு திரௌபதி புன்னகையுடன் கைகளைக் கோத்து சாய்ந்துகொண்டாள்.
இளைய யாதவர் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி” என்றார். “நம்மிடம் செல்வம் இருக்கிறது. அது இருப்பதை நாம் காட்டியாகவேண்டும். செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது. நாம் குடிப்பெருமையை வாங்குவோம்.” அவள் புன்னகையுடன் “ஆம்” என்றாள். பின்பு அவள் விழிகள் இளைய யாதவரின் விழிகளை சந்தித்தன. “இளையவர்கள் நால்வரிடம் அதைப்பற்றி பேசவேண்டும் அல்லவா?” என்றாள். ‘ராஜசூயத்தின் சடங்குகளில் முதன்மையானது ஆநிரை கவர்தல்.” தருமன் “அவைகூட்டி அறிவிப்போம். சடங்குகள் என்னென்ன என்று வைதிகர் சொல்லட்டும்” என்றார்.
[ 3 ]
இந்திரப்பிரஸ்தத்தின் பேரவையில் அரசர் தருமரும் அரசி திரௌபதியும் வந்தமர்ந்தபோது அவை நிறைத்திருந்த வணிகர்களும், குடித்தலைவர்களும், படைத்தலைவர்களும், அமைச்சர்களும் எழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். அவையின் வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த தேவலரை வணங்கி வாழ்த்துச்சொல் பெற்று தருமன் அரியணையில் அமர்ந்தார். அருகே திரௌபதி அமர்ந்தாள். இந்திரப்பிரஸ்தத்தின் வைதிகர்தலைவர் தௌம்யர் இருவரையும் மஞ்சளரிசியும் மலரும் இட்டு வாழ்த்தி மணிமுடி எடுத்தளிக்க அவர்கள் அதை சூடிக்கொண்டதும் அவை மலர்வீசி வாழ்த்தியது. தருமர் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படைவடிவச் செங்கோலை ஏந்தி வெண்குடைக்கீழ் அமர்ந்து அவ்வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.
அவையிலிருந்த தைத்ரிய குருமரபினரான அஸிதர், சத்யர், சர்ப்பிர்மாலி, மகாசிரஸ், அர்வாவஸ், சுமித்ரர், மைத்ரேயர், சுனகர், பலி, தர்ப்பர், பர், ஸ்தூலசிரஸ் ஆகியோருக்கு முதலில் பொன்னும் அரிமணியும் மலரும் காணிக்கையாக அளிக்கப்பட்டது. வியாசரின் மாணவர்களான சுமந்து, ஜைமினி, பைலர், வைசம்பாயனர், தித்திரி, யாக்ஞவல்கியர், ரோமஹர்ஷனர் ஆகியோர் பட்டும் ஏடும் பொன்னெழுத்தாணியும் அளித்து வணங்கப்பட்டனர். கௌசிகர் தாமோஷ்ணீயர், திரைபலி, பர்ணாதர், கடஜானுகர், மௌஞ்சாயனர், வாயுபக்ஷர், சாரிகர், பலிவாகர், சினிவாகர், சப்தபாலர், கிருதசிரமர், சிகாவான், ஆலம்பர் என நீளும் நூற்றெட்டு தவசீலர்கள் அவையில் அமர்ந்து அரசரையும் அரசியையும் வாழ்த்தினர்.
அதன்பின் குடித்தலைவர்களும் வணிகர்களும் நிரைவகுத்து வந்து அரசனுக்குரிய காணிக்கைகளை வைத்து வாழ்த்தினர். அவைச்செயல்பாடுகளில் மகிழ்பவராகிய யுதிஷ்டிரர் சலிக்காமல் இன்சொல் சொல்லியும் உடல்வளைத்து வணங்கியும் அவற்றில் ஈடுபட்டார். அருகே அணிசெய்து ஊர்கோலமாக கொண்டுசெல்லப்படும் தேவிசிலைபோல ஒற்றை முகத்துடன் திரௌபதி அமர்ந்திருந்தாள். அவைமேடையின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் சலிப்பு தெரியும் உடலசைவுடன் அமர்ந்திருக்க நகுலனும் சகதேவனும் படைக்கலம் சூடி நின்றிருந்தனர். அவையின் தென்மேற்கு மூலையில் மென்பட்டுத்திரைக்கு அப்பால் பேரரசி குந்தியும் பிற அரசியரும் அமர்ந்திருந்தனர்.
முகமன்முறைமைகளும் கொடைமுறைமைகளும் முடிந்தபின் தருமன் விழிகளால் இளைய யாதவரைத் தொட்டு ஒப்புதல் பெற்றபின் எழுந்து வணங்கி “அவையோரே, நம் நகர் இந்திரப்பிரஸ்தம் இன்று பாரதவர்ஷத்தில் நிகரற்ற பெருவல்லமையை கொண்டுள்ளது. நம் கருவூலம் நிறைந்து கவிகிறது. இனி நாம் அடையவேண்டியதென்ன என்று நான் அறிந்தவிந்த ஆன்றோரிடம் உசாவினேன். நிறையும் கருவூலம் அறத்தின்பொருட்டு ஒழிந்தாகவேண்டும். ஒழிந்த கருவூலம் வீரத்தினால் மீண்டும் நிரப்பப்பட்டாகவேண்டும். தேங்கும் கருவூலம் வெற்றாணவமென்றாகும். பழுத்த கனியை காம்பு தாங்காததுபோல் அவ்வரசன் அக்கருவூலத்தை கைவிட்டுவிட நேரும் என்றனர். ஆகவே இங்கொரு ராஜசூய வேள்வியை நிகழ்த்தலாமென்றிருக்கிறேன். அவை ஒப்புதல் அளிக்கவேண்டும்” என்றார்.
அவையினர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனால் சற்றுநேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. குடித்தலைவர் முஷ்ணர் எழுந்து கைவிரித்து “ராஜசூயம் வேட்கும் பேரரசர் வாழ்க! பொன்னொளி கொள்ளவிருக்கும் அவர் வெண்குடை வாழ்க!” என்று கூவினார். அவையெங்கும் பெருமுழக்கமாக வாழ்த்தொலிகள் எழுந்து சற்றுநேரம் பிறிதொன்றும் எண்ணமுடியாதபடி சித்தத்தைக் கலைத்து பரப்பின. பின்னர் அக்கார்வை குவைமுகட்டில் முழங்க அவை அமைதிகொண்டது. தருமன் சௌனகரிடம் “அமைச்சரே, ராஜசூயத்திற்கான முறைமைகள் என்ன? தேவைகள் என்ன? இந்த அவைக்கு உரையுங்கள்” என்றார்.
சௌனகர் எழுந்து அவையை வணங்கி “முடிகொண்டு குடைசூடிய பெருவேந்தன் தன்னை தன் குடிக்கும் தன்நிலத்திற்கும் முதல்வன் என்று அறிவிப்பதற்குப் பெயரே ராஜசூயம் என்பது. அவ்வேள்வியை ஆற்றியவனின் குடையில் பொன்பூசப்படும். அவன் சத்ராஜித் என அழைக்கப்படுவான். சக்ரவர்த்தி என அவனை அவன் குடியினர் வழிபடுவார்கள். விண்ணிலிருக்கும் இந்திரனுக்கு நிகராக மண்ணில் அவன் இருப்பான்” என்றார். “அதற்கு முதலில் ராஜசூயவேள்விக்கான கொடிக்கால் கோட்டைமுகப்பில் நாட்டப்படவேண்டும். அதை பெரும்படைகள் ஒவ்வொருகணமும் காக்கவேண்டும். அக்கொடி முறிக்கப்படுமென்றால் அரசன் தோற்றவன் என்றே அறியப்படுவான்.”
“குலங்களனைத்துக்கும் ராஜசூயச் செய்தி முறைப்படி அனுப்பப்படவேண்டும். அவர்கள் அதை ஏற்று தங்கள் அணிவிற்களை அரசனின் காலடியில் கொண்டுவந்து வைக்கவேண்டும். முரண்கொள்பவர்களை அரசன் வென்று அழிக்கவேண்டும். அவன் ஆளவிருக்கும் நிலத்திலுள்ள அத்தனை அரசர்களுக்கும் ராஜசூயத்துக்கான செய்தி செல்லவேண்டும். அதன்பின் அத்தனைநாடுகளுக்கும் சென்று ஆநிரை கவர்ந்துவரவேண்டும். ஆநிரைகள் எங்கே மறிக்கப்பட்டாலும் போரில் மறிப்பவர்கள் வெல்லப்படவேண்டும். கவர்ந்துகொண்டுவரப்படும் ஆநிரைகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வேள்விக்கு அவியாகவும், வைதிகர்களுக்கு கொடையாகவும், வறியவர்க்கு அளியாகவும் அளிக்கப்படவேண்டும்.”
பீமன் உடலை நீட்டிய அசைவை அனைவரும் திரும்பி நோக்கினர். “செண்டுவெளியில் அரசர் தன் வில்லுடனும் கதையுடனும் நின்று தன் குடியிலோ தன் கோல்கீழ் அமையும் அரசிலோ தனக்கு நிகரான போர்வீரர் எவரேனும் உளரோ என்று அறைகூவ வேண்டும். எவர் அரசரை களத்தில் வென்றாலும் அவர் அரசமுடிக்கு உரியவராக ஆவார். அரசரின்பொருட்டு பிறரும் படைக்கலமேந்தி நிற்கலாமென்பது மரபு. பன்னிருநாள் நீளும் பெருவேள்வியில் அனைத்து மங்கலப்பொருட்களும் அவியிடப்படவேண்டும். ஒவ்வொருநாளும் நகருளோர் அனைவருக்கும் அவியுணவு அளிக்கப்படவேண்டும். வேள்விமுடிவன்று அரசன் தன் கருவூலத்தின் இறுதித்துளிச் செல்வத்தையும் வைதிகர்க்கும் இரவலருக்கும் கொடையாக அளித்துவிடவேண்டும். வைதிகர் ஒருவரிடமிருந்து ஒற்றைநாணயத்தையும் ஒருபிடி கூலமணியையும் கொடையாகக் கொண்டு மீண்டும் தன் அரியணை திரும்பவேண்டும்.”
“ராஜசூயம் வேட்ட மன்னன் தன் மாளிகைக்குப் பொன்வேயலாம். தன் காலில் பொன்னாலான மிதியடி அணியலாம். செங்கோல்மீது அவன் சத்ராஜித் என்பதைச் சுட்டும் தாமரைமுத்திரையை பொறித்துக்கொள்லலாம். அதன்பின் அவன்முன் எவரும் மணிமுடியில் இறகுசூடி அமரலாகாது. எவருடைய புகழ்மொழியும் அவன் செவிகேள ஒலிக்கலாகாது. அவன் குடைக்குமேல் உயரத்தில் எக்குடையும் எழக்கூடாது. அவன் சொற்களுக்கு எவ்வரசரும் எதிர்ச்சொல்லெடுக்கலாகாது. அவன் ஒப்புதலின்றி எவரும் சத்ரவேள்விகள் செய்யலாகாது. சத்ரவேள்விகள் அனைத்திலும் அவன் அளிக்கும் அவியே முதலில் அனலில் விழவேண்டும். அவன் கோல்கீழ் வாழும் நாடுகளில் எந்த அவையிலும் அரசனுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளில் முதலில் அளிக்கப்படுவதும் மிகப்பெரியதும் அவனுக்குரியதே ஆகும். அவன் சொல் யானைபுரவிகாலாள்தேர் என்னும் நால்வகைப்படைகளால் காக்கப்படவேண்டும். அவன் முத்திரையை எங்கு எக்குடியினர் நோக்கினாலும் பணிந்தாகவேண்டும். அவன் கொடி நின்றிருக்கும் இடமெல்லாம் அவனுடையதென்றே ஆகும்.”
அவை முழுக்க நீள்மூச்சுக்கள் ஒலித்தன. அர்ஜுனன் ஏதோ சொல்ல எழுவதற்குள் பீமன் கைகளை விரித்தபடி எழுந்து “அரசே, நாம் ராஜசூயவேள்வியை செய்யப்போகிறோம் என்பதை முற்றறிவிப்பாக விடுத்துவிட்டோமா?” என்றான். “இல்லை, நான் அவைசூழ்கிறேன்” என்றார் தருமன். “அவ்வண்ணமென்றால் இது இப்போதே நின்றுவிடட்டும். அரசே, குலங்களையும், சூழ்ந்த அரசுகளையும் முற்றிலும் வென்றபின்னர் முதிரகவையில் மன்னர்கள் கொண்டாடும் கேளிக்கை இது. அவ்வரசர் மேலும் சில ஆண்டுகளே ஆள்வார் என்றறிந்த நிலையிலேயே பிற அரசுகள் அதற்கு ஒப்புகின்றன. நாம் இப்போதுதான் கோல்கொண்டு நகர் அமைத்து ஆளத்தொடங்கியிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருப்பவர்களோ ஆற்றல்மிக்க எதிரிகள்” என்றான்.
அர்ஜுனன் “ஆம், நான் எண்ணுவதும் அதையே” என்றான். “நாம் நூறுபோர்களை தொடுக்கவேண்டியிருக்கும். அவற்றை முடித்து இந்த வேள்வியைத் தொடங்க பல்லாண்டுகாலமாகலாம். எண்ணற்கரிய பொன் தேவைப்படலாம். நம் படைகள் முழுமையாக அழியவும்கூடும்” என்றான். அவையில் மெல்லிய பேச்சுமுழக்கம் எழ இளவரசர்களுக்குரிய பகுதியில் அபிமன்யு எழுந்து நின்றான். “எந்தையே, தங்களிடமிருந்து அச்சத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் விரும்பினால் இந்த வேள்வி கோரும் அனைத்துப்போர்களையும் நான் ஒருவனே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். அர்ஜுனன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் “அதற்கான ஆற்றல் எனக்குண்டு என்பதை தாங்களே நன்கறிவீர்கள். இந்த அவையும் அறியும்” என்றான்.
“தனிவீரத்திற்குரிய களமல்ல இது மைந்தா” என்று அர்ஜுனன் பொறுமையிழந்து சொன்னான். “நான் உரைப்பதே வேறு. நாம் பாரதவர்ஷமெனும் பெரும் களத்தில் ஆடப்போகிறோம்.” அபிமன்யு “ஆம், ஆனால் ஆடுவது நானோ நீங்களோ அல்ல. அன்னை. நான் அவர் அறைக்குள் செல்லும்போது நாற்களத்தை விரித்து அவர் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன். இது என்ன என்றேன். இது மகதம் இது புண்டரம் இது வங்கம் இது அங்கம் என்று எனக்கு சொன்னார்கள். எந்தையே, நாற்களத்தில் அவர் முன்னரே வென்றுவிட்டார். அவர் சொல்லட்டும்” என்றான்.
அர்ஜுனன் சினத்துடன் “நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றி” என்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அபிமன்யு. அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். தேவலர் “ஆம், அவை அரசியின் எண்ணத்தை எதிர்நோக்குகிறது. இவ்வேள்வி அவருக்கும் உவப்புடையதா?” என்றார். திரௌபதியின் முகத்தில் புன்னகை சிற்பங்களில் இருப்பதுபோல நிலைத்திருந்தது. “என் எண்ணத்தையே இங்கே அரசர் சொன்னார்” என்றாள். சௌனகர் “பிறகென்ன? இங்கு நாம் எண்ணுவது அரசி ஆணையிடுவதை மட்டுமே” என்றார்.
பீமன் “நான் என் எண்ணத்தை சொல்லிவிட்டேன். மைந்தன் சொன்னதே உண்மை. நாம் எளிய படைக்கலங்கள். நாம் கொல்பவர்களை தெரிவுசெய்யும் உரிமைகூட அற்றவர்கள்” என்றபின் கைகளை அசைத்தான். அவை அமைதியடைந்து காத்திருந்தது. அர்ஜுனன் “மூத்தவரே, இதில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் நான் சொல்வதெற்கேதுமில்லை. என் கடமை தங்களின்பொருட்டு வில்லேந்துவது” என்றான். தருமன் “இளையோனே, இது நானும் அரசியும் இளைய யாதவரும் இணைந்து எடுத்த முடிவு” என்றார். அர்ஜுனன் தலைவணங்கினான்.
சௌனகர் “இந்த அவையில் எதிர்க்குரல் ஏதேனும் எழவிருக்கிறதா?” என்றார். “ஐங்குடிகளும் முனிவரும் எதிர்நிலை சொல்ல உரிமைகொண்டவர்கள். அமைச்சரும் படைத்தலைவரும் மாற்றுசொல்லும் கடமைகொண்டவர்கள். வரலாற்றைச் சொல்ல சூதருக்கும் கவிஞருக்கும் இடமுண்டு” என்றார். அவை கலைந்த ஒலியுடன் அமைந்திருந்தது. “அவ்வாறெனில் இது அவையின் ஒப்புதலென்றே கொள்ளப்படும்” என்று சௌனகர் சொல்லிமுடிப்பதற்குள் தௌம்யர் கைகளைக் கூப்பியபடி எழுந்தார். அப்போதெழுந்த ஓசை அப்படி ஒன்றுக்காக அவை காத்திருந்தது என்பதை உணர்த்தியது.
தௌம்யர் “அரசே, முனிவர்களே, அவையில் எதை சொல்லவேண்டுமென்பதை என் நாவிலெழும் மூத்தோரும் முனிவருமே முடிவுசெய்கிறார்கள். பிழைகளிருப்பின் என் சொல்லில் என்க!” என்றார். “ராஜசூயம் என்பது முன்னாளில் குடிமூப்பு நிறுவும்பொருட்டு உருவான ஒரு ஸ்ரௌதவேள்வி. சாமவேதத்தின் பாற்பட்டது என்பதனால் அரசும் குடியும் முடியும் கோலும் உருவானபின் வந்தது என்று சொல்லப்படுகிறது. அதன் முதல் வினாவே குடியும் குலமும் ஒருவரை வேள்விமுதல்வர் என ஒப்புக்கொண்டு முதல் அவிமிச்சத்தை அளிப்பதுதான்.”
அவர் சொல்லவருவதென்ன என்று அவைக்கு முழுமையாக புரிந்தது. “குருவின் கொடிவழிவந்த இரு அரசுகள் இங்குள்ளன. அஸ்தினபுரியே அதில் முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்திரப்பிரஸ்தம் அதில் கிளைத்ததே. அங்கே ஆளும் அரசர் துரியோதனரின் வில் வந்து நம் அரசரின் கால்களில் அமையாமல் இவ்வேள்வி நிகழமுடியாது.” அவை இறுக்கமிழந்து மெல்ல தளர்ந்தது. “அஸ்தினபுரி வந்து அடிபணியவேண்டியதில்லை. ஆனால் அக்கோல்கொண்டவரின் அவை ஒப்புதலேனும் தேவை. அன்றி வேள்விகூடுவதென்பது அவர்களை போருக்கு அறைகூவுவதேயாகும்.”
பீமன் சினத்துடன் எழுந்து கைகளை அறைந்து “அப்படியென்றால் போர் நிகழட்டும். அவனை இழுத்துவந்து வேள்விக்கூடத்தில் கட்டிப்போடுகிறேன். அதன்பின் நிகழட்டும் வேள்வி” என்றான். தௌம்யர் “அதை செய்யவும்கூடும். ஆனால் அதற்கு உங்கள் தந்தையின் ஒப்புதல் தேவை” என்றார். “நிமித்திகர் சொல்லட்டும், மூச்சுலகில் வாழும் பாண்டு அப்போர் எழுவதற்கு ஒப்புகிறாரா என்று. ஆமெனில் படை கிளம்பட்டும்.” பீமன் உரக்க “குருகுலத்துப் பாண்டு என் தந்தை அல்ல. நான் காட்டாளன். ஆம், காட்டின் பொன்றாப்பெருவிழைவு மட்டுமே கொண்ட தசைவடிவன். பிறகென்ன?” என்றான்.
“மந்தா, என்ன பேசுகிறாய்?” என்று தருமன் கூவியபடி எழுந்தார். “மூடா! அவையில் என்ன பேசுகிறாய்?” பீமன் “அறிந்தே பேசுகிறேன். நாம் ஏன் பாண்டுவின் குருதியை அடையாளம் கொள்ளவேண்டும்? நாடுவென்று முடிசூடியபின்னரும் நம்மை ஷத்ரியர் என்று ஏற்காத இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்களின் முன்னால் இரந்து நிற்கவா? நான் அசுரன், நான் அரக்கன். எனக்கு ஷத்ரிய நெறிகள் இல்லை. அவர்கள் ஜராசந்தனை ஏற்கிறார்கள் அல்லவா? அஞ்சிப்பணிந்து அவனுக்கு வில்லனுப்புகிறார்கள் அல்லவா? நானும் அவனைப் போன்றவனே” என்றான். தருமன் “இளையோனே…” என்று அழைத்தபின் அர்ஜுனனை நோக்க அவன் அசையாமல் நிலம்பார்த்து அமர்ந்திருப்பதை கண்டார்.
“தௌம்யரே, சொல்லுங்கள். நிஷாதனோ அரக்கனோ அசுரனோ ராஜசூயம் செய்ய வேதம் ஒப்புகிறதா?” தௌம்யர் “வேதம் பொதுவானது. வெற்றிகொள்பவனை அது அரசனென்று ஏற்கிறது. கற்றுச் சிறந்தவனை முனிவனென்று ஆக்குகிறது. ஆனால் நான் நிஷாதனையோ அசுரனையோ அரக்கனையோ அரசன் என்று ஏற்கமுடியாது” என்றார். “இளையபாண்டவர் சொல்லட்டும். சித்ரரதன் என்னும் கந்தர்வனால் அனுப்பப்பட்டு அவர் என்னை வந்து கண்டார். நான் என் தமையனுடன் தவச்சாலையில் இருக்கையில் தொலைவிலிருந்து கூவி அழைத்தார். ‘யார்?’ என்று கேட்டேன். ‘நான் பாண்டுவின் மைந்தன், விஜயன்’ என்று சொன்னார். அச்சொல்லில் இருந்தே இவ்வுறவு தொடங்குகிறது. உங்கள் மணநிகழ்வுகளை அனல்சான்றாக்கி நிகழ்த்தினேன். உங்கள் மைந்தருக்கு பிறவிமங்கலங்களை ஆற்றினேன். இந்நகரை கால்கோள் செய்வித்தேன். அணையாச்சுடர் ஆக்கி அளித்தேன். அனைத்தும் இது பாண்டவர்களின் நாடு என்பதற்காகவே. நெறியற்ற நிஷாதர்களின்நாடு என்பதனால் அல்ல.”
தருமன் “தௌம்யரே, அவன் இளையவன். அறியாச்சொல் எடுத்துவிட்டான். பொறுத்தருள்க!” என்றார். இளைய யாதவரை நோக்கி “சொல்லுங்கள் யாதவரே. என்ன பேசுகிறான் அவன்? நீங்கள் அவையமர்கையில் இச்சொல் எழலாமா?” என்றார். இளைய யாதவர் “அச்சொல்லுக்கு விடை வரவேண்டியது பட்டுத்திரைக்கு அப்பாலிருந்து அல்லவா?” என்றார். அவை திகைப்புடன் அமைதிகொண்டது. அனைவரும் திரும்ப மெல்லிய குரலில் குந்தி “தந்தை என்பது ஒரு ஏற்பு மட்டுமே” என்றாள். அச்சொல் அனைவரையும் சோர்வுற்று பீடங்களில் அமையச்செய்தது. சற்றுநேரம் அவைக்கூடத்தில் திரைச்சீலைகள் அலையடிக்கும் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.
தருமன் பெருமூச்சுவிட்டதை அனைவரும் கேட்டனர். தௌம்யர் “நான் உணர்வதை சொல்லிவிடுகிறேன் அரசே. இவ்வேள்வி நன்றுக்கு அல்ல. அதை என் நெஞ்சு ஆழ்ந்துரைக்கிறது. மகதத்தின் ஜராசந்தன் அல்ல இங்கு மறுதரப்பு. அது அஸ்தினபுரியின் கலிவடிவனும் அவனுடன் இணைந்து நிற்கும் கதிர்மைந்தனும் மட்டுமே. பேரழிவை நோக்கி செல்லவிருக்கிறது அனைத்தும். பேரழிவு. பிறிதொன்றுமில்லை” என்றார். திரும்பி அவையை நோக்கி “என் நெற்றிப்பொட்டு துடிக்கிறது. நான் உள்ளே கண்டதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை” என்றபின் கைகளைத் தூக்கி ஆட்டினார்.
கண்ணீர் மல்க தொண்டை அடைக்க திணறி பின்பு வெடிப்போசையுடன் “அக்கலியும் இவ்வரசரும் இதோ அவையமர்ந்திருக்கும் நாம் அனைவரும் இணைந்து அரசியென அமர்ந்திருக்கும் அவ்வன்னையிடம் போர்புரிகிறோம். அனைத்துப்போரிலும் புண்படுவது நிலமே என்று காவியச்சொல் உரைக்கிறது. நாம் அன்னையின் கண்ணீரை நாடுகிறோம்…” என்றார். கைகளைக் கூப்பி “அவள் நம் குருதியை நாடினால் நாம் என்ன செய்வோம்?”
திரௌபதி புன்னகையுடன் “தௌம்யரே, நான் அவ்வேள்வியில் அரியணையமர்ந்து கோல்கொள்ள விழைகிறேன்” என்றாள். “ஆனால் அரசி…” என்றார் தௌம்யர். “என் நாற்களத்தில் அத்தனை காய்களையும் பரப்பி நோக்கிவிட்டேன் தௌம்யரே” என்றாள் திரௌபதி. சிலகணங்கள் தொழுத கையுடன் நின்றபின் தௌம்யர் “அவ்வண்ணமென்றால் நான் சொல்வதற்கேதுள்ளது? அதுவே நிகழ்க!” என்றார். பின்பு “என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை தேவி. என் சிற்றறிவு திகைக்கிறது” என்றார். திரௌபதி புன்னகைத்தபின் திரும்பி தருமரிடம் “இந்த அவை ஒப்புதலளித்தது என்றே கொள்வோம்” என்றாள்.