பன்னிரு படைக்களம் - 24
பகுதி ஐந்து : ஆவணி
[ 1 ]
ஆடிமழை முடிந்து ஆவணியின் முதல்நாள் காலையில் இந்திரப்பிரஸ்த நகரின் செண்டு வெளியில் இளைய யாதவரும் அர்ஜுனனும் படைக்கலப்பயிற்சி செய்துகொண்டிருந்தனர். அப்பால் தோல்கூரைப்பந்தலில் பலராமரும் யுதிஷ்டிரரும் அமர்ந்து அதை நோக்கினர். சாத்யகி இளைய யாதவர் அருகே நின்று படைக்கலத்துணை புரிந்தான். அர்ஜுனன் அருகே நகுலன் ஆவத்துணைக்கென நின்றிருந்தான்.
எட்டும் தொலைவில் மென்மரத்தால் செய்து தொங்கவிடப்பட்டு காற்றிலாடிய ஏழு நுண்ணிலக்குகளை அர்ஜுனன் தன் அம்புகளால் சிதறடித்து வில்தாழ்த்தினான். ஏவலன் அவன் வியர்வையை ஒற்றினான். அதே இலக்குகள் ஏழு அருகே காத்திருந்தன. இளைய யாதவரின் கையிலிருந்து எழுந்த படையாழி மிதந்து சுழன்று சென்று அவ்விலக்குகளை ஒருசேரப் பிளந்தபின் காலைவெயிலை சிதறடித்தபடி அவர் கையில் வந்து அமர்ந்தது.
“மேலும்…” என்றான் அர்ஜுனன். ஏவலர் ஓடி இலக்குகளை அமைத்தனர். பலராமர் உடலை நிமிர்த்தி அமர்ந்து உரக்க “இளையவனே, நேற்றைய இலக்கு எது?” என்றார். அர்ஜுனன் திரும்பி “இப்போது சிதறடித்தது… இது இன்று நான் எய்துவது” என்றான். பலராமர் கைகளைத் தட்டி சிரித்து “நன்று இளையோனே, இப்படியே சென்றால் நீ ஒருநாள் விண்மீன்களை எய்து வீழ்த்துவாய்” என்றார்.
யுதிஷ்டிரர் “ஒவ்வொரு நாளும் இலக்குகளை நீட்டி நீட்டிச் செல்வது குறித்து எனக்கு மாறுபாடு உண்டு மூத்த யாதவரே. அதை இளையோனிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்றார். “எப்படியென்றாலும் இதற்கோர் எல்லை உள்ளது. தோளின் எல்லை. வில்லின் எல்லை. அம்பிற்கும் காற்றுக்குமான உறவின் எல்லை. உன்னுவது எதுவானாலும் அது பருப்பொருளில் வெளிப்பட்டாகவேண்டும் என்னும் இரக்கமற்ற நெறியால் கட்டுண்டிருக்கிறது இப்புடவி.”
பலராமர் புரியாமல் தலையசைக்க யுதிஷ்டிரர் தொடர்ந்தார் “இவன் இலக்குகளை அகற்றியபடியே செல்கிறான். அகன்றுசெல்லும் அப்பயணத்தில் தன் இயலாமையை அல்லவா நேருக்குநேர் சந்திப்பான். அந்தத் தோல்வியை நோக்கி ஏன் அத்தனை விரைந்துசெல்லவேண்டும்? இங்கு அவனால் இயல்வதையே முழுமையாகச் செய்து நிறைவடையலாமே?”
பலராமர் சகதேவனை நோக்கி “இளையோனே, நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். சகதேவன் “நான் இதில் சொல்வதற்கேதுமில்லை. நூல்கள் சொல்வதை சொல்கிறேன்” என்றான். “சொல்” என்றார் பலராமர். “மூத்தவரே, எய்தி எய்திச் சென்றடையும் அவ்வெல்லையில் மேலும் விரியும் முடிவிலியாக வந்து நிற்பதே பிரம்மம் என்பதே வேதாந்தம். இதம் இதம் என்று சொல்லிச்செல்லும் சொல் ஒழிகையில் எஞ்சும் அது. ஒழிந்த ஆவநாழியில் எஞ்சும் வானம்…”
பலராமர் ’பார்த்தாயா?’ என்பதுபோல யுதிஷ்டிரரை பார்த்தார். யுதிஷ்டிரர் தலையை அசைத்து “வெறும் ஏமாற்றம். தன்னிரக்கம். அதன் விளைவான அடங்காச்சினம்… அது ஒன்றே எஞ்சுவது. ஐயமே இல்லை” என்றார். “தொட்டெண்ணிக் கடந்துசெல்வதன் பேருவகையை எல்லைக்குள் சுற்றிவருவதனூடாக அடையமுடியாது தருமா. அதை வில்லெடுத்தவனே உணரமுடியும்” என்றார் பலராமர்.
அந்த நேரடிப்பேச்சு யுதிஷ்டிரரை சோர்வுறச்செய்தது. “படைக்கலம் கொண்டு களமாடுபவர்களுக்கு ஓர் எண்ணமுள்ளது, படைக்கலம் கொண்டால் மட்டுமே களத்தை புரிந்து கொள்ளமுடியும் என்று. களம் என்பது நூறாயிரம் கணக்குகளின் வெளி. அதை விலகிநின்று நோக்குபவனால் மேலும் நுணுக்கமாக சொல்லமுடியும்.”
பலராமர் சிரித்து “ஆம், சொல்லமுடியும். ஆனால் சொல்வது சரியா என்று நோக்கியறியவே இயலாது” என்றார். “ஆகவே அவை எப்போதும் வெற்றுச் சொற்கள். சொல்லப்படுபவர் தன் அறிவுக்கூரை வெளிப்படுத்தியிருப்பதனால் அவரது ஆணவத்தின் துளி அது. அதைக்காக்க அவர் உண்மையை அதன் முன் நூறுமுறை வெட்டிப் படையலிடவும் தயங்கமாட்டார்” என்றபின் சகதேவனை நோக்கி “என்ன சொல்கிறாய்?” என்றார். அவன் புன்னகைசெய்தான்.
யுதிஷ்டிரர் “நான் இதற்குமேல் சொல்ல விரும்பவில்லை…” என்றார். பலராமர் அவர் தோளை ஓங்கி அறைந்து “நீ முதிர்ந்து களைத்தவனைப்போல பேசுகிறாய். நீ அரசன். நீ பேசவேண்டியது ஷாத்ரகுணத்தைப்பற்றி. வென்று மேற்செல்லுதல். நில்லாதிருத்தல். அடைதலும் அளித்தலுமே அரசர்களுக்குரிய நெறி. அளிப்பது மேலும் அடைவதன்பொருட்டே” என்றார்.
“ஆம்” என்றார் யுதிஷ்டிரர் பெருமூச்சுடன். “ஆனால் நான் இந்த நில்லாப்புரவிமேல் திகைத்து அமர்ந்திருக்கிறேன். இந்திரப்பிரஸ்தம் என்னை அச்சுறுத்துகிறது.” பலராமர் “நீ பாரதவர்ஷத்தையே ஆள்வாய் என்கின்றன நிமித்திகநூல்கள். இந்நகரத்துக்கே அஞ்சுகிறாயா?” என்றார். யுதிஷ்டிரர் மேலும் பெருமூச்சுவிட்டு “ஆம், ஆளக்கூடும். ஆனால் எதற்கு? எனக்கு ஒன்றும்புரியவில்லை” என்றார்.
அர்ஜுனனின் ஏழு அம்புகளும் குறிபிழைத்தன. அவன் தன் வில்லை தொடையில் அடித்து சலிப்புடன் தலையசைத்தான். இளைய யாதவர் “வெல்லமுடியாதென்றே எண்ணிவிட்டாயா?” என்றார். “என் விழிகளுக்கும் தோளுக்கும் அப்பால் உள்ளன அவை” என்றான். “உன் நெஞ்சு சென்று அவற்றை தொடுகிறதல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம், அவற்றை நான் உள்ளத்தால் வென்றுவிட்டேன்.”
இளைய யாதவர் “அப்படியென்றால் அம்புகளும் அங்கே செல்லும். உன் தோளின் விழைவை அவை அறிந்தால் மட்டும் போதும்” என்றார். அர்ஜுனன் அம்பை எடுத்து வில்லில் தொடுத்து விழிகூர்ந்தான். “தசைகளை இழுப்பதும் விரிப்பதும் நம் விழைவே. அவை தங்களியல்பால் தளர்ந்தும் அமைந்தும் இருக்கவே முயல்கின்றன” என்றார் இளைய யாதவர். “முழுவிழைவையும் தசைகள் அறிக! தசைகள் நாணேறுக!”
அம்பு சென்று இலக்கை தைத்தது. நகுலனும் சகதேவனும் மகிழ்வுடன் கூச்சலிட்டனர். அவர்களை அறியாதவனாக அர்ஜுனன் இரண்டாவது அம்பை செலுத்தினான். அதுவும் சென்று தைத்தது. மூன்றாவது அம்பும் தைத்ததும் அவன் திரும்பி இளைய யாதவரை நோக்கி புன்னகைத்தான். அதற்கடுத்த அம்பு பிழைத்தது. இளைய யாதவர் புன்னகைசெய்தார்.
முகம் சிவந்த அர்ஜுனன் நாணை இழுத்து அம்பை செலுத்தினான். அது மிக விலகிச்சென்றது. அவன் சலிப்புடன் வில்தாழ்த்தினான். “இன்றைய அறைகூவல். இதை நீ கடந்துசெல்லவேண்டும்” என்றபடி இளைய யாதவர் பந்தல் நோக்கி திரும்பினார். “ஒவ்வொருநாளும் ஓர் அறைகூவலுடன் எழுபவனே தன் கலையை கடந்துசெல்கிறான்.” அர்ஜுனன் அந்த இலக்குகளை மீசையை நீவியபடி நோக்கி நின்றான்.
நகுலன் “கலையை கடந்துசெல்வதா?” என்றான். இளைய யாதவர் திரும்பி “எந்தக்கலையும் ஒரு கருவியே. இவ்வில்லை நீங்கள் ஏந்திய தொடக்கநாட்களில் இதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? இன்று பயின்று பயின்று வில்லை கடந்து விட்டீர்கள். அவ்வாறே வில்வித்தையையும் கடக்க முடியும்” என்றார். நகுலன் “எப்படி?”என்றபடி அவர் அருகே வந்தான்.
திரும்பிப்பாராமலேயே இளைய யாதவர் தன் படையாழியை ஏவ அது சென்று ஏழு இலக்குகளையும் சீவிவிட்டு திரும்பி வந்தது. அர்ஜுனன் அதை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். “இளைய யாதவரே, இலக்குகளும் அவ்வாறு இல்லாமலாகுமா?” என்றான் நகுலன். “கலையின் மறுஎல்லை என்பது அதுதான்” என்றார் இளைய யாதவர்.
அவர்கள் வியர்வையைத் துடைத்தபடி பந்தல் நோக்கி சென்றனர். அர்ஜுனன் “நான் எய்யும் அம்புகளுக்கு என் தோள்விசையை அளிக்கிறேன். உங்கள் படையாழி எவ்விசையால் திரும்பி வருகிறது?” என்றான். இளைய யாதவர் “அதன் அமைப்பு அத்தகையது. தான் அடையும் விசையில் நேர்பாதியை திரும்பி வருவதற்கு அது பயன்படுத்திக்கொள்கிறது” என்றார்.
அர்ஜுனன் “யாதவரே, அத்தனை விசையை தாங்கள் அதற்கு அளிக்கிறீர்களா என்ன?” என்றான். “இல்லை, அது கிளம்புவதற்குரிய விசையை மட்டுமே நான் அளிக்கிறேன். காற்றிலிருந்தும் புவியிலிருந்தும் தன் விசைகளை அதுவே திரட்டிக்கொள்கிறது. தன் அமைப்பைக்கொண்டு அவ்விசைகளை ஆள்கிறது” என்றார் இளைய யாதவர்.
“படையாழி கற்பதற்கு கடினமானது என்கிறார்கள்” என்று நகுலன் சொன்னான். “இதை போரில் தாங்களன்றி எவரும் கையாள்வதில்லை.” “ஆம், இது படைக்கலமே அல்ல. களிப்பொருள். யாதவர் கன்றுமேய்க்கையில் கைகொள்வது. விளையாடுபவர்களுக்குரியது. எழுந்து நிற்கும் வயதில் இதை பயிலவேண்டும் என்பார்கள். நாவில் சொல்முதிர்வதற்குள்ளாகவே இக்கருவி கையகப்பட்டாகவேண்டும். விழியும் செவியும் நாவும் மூக்கும் தோலும் என இதுவும் நம்முடன் வளர்ந்து ஒன்றாகிவிடவேண்டும்.”
“அவ்வாறு ஆனபின் அது படைக்கருவியே அல்ல. பேசும்போது நாவு வளைவதையெல்லாம் நாம் அறிவதேயில்லை” என்றபடி இளைய யாதவர் அமர்ந்தார். சகதேவன் அதை கையில் வாங்கி “எப்போதும் என்னை அச்சுறுத்துகிறது இதன் நிலையின்மை. இதை கையில் வைத்திருக்கவே முடியவில்லை” என்றான். “அதன் விழைவு உருவாக்கும் நிலையின்மை அது. அது எழுந்து பறக்கவிழைகிறது.” சகதேவன் “ஆம், இப்போது நானும் இதையே எண்ணினேன். கையில் ஒரு செம்பருந்தை ஏந்தியதுபோலிருக்கிறது” என்றான்.
அவர்கள் அமர்ந்துகொண்டதும் ஏவலர்கள் வியர்வை ஒற்றி குடிக்க குளிர்நீர் அளித்தனர். வியர்வையை ஊதியபடி “ஆடிமாதத்தில் பெய்த மழையெல்லாம் ஆவியென்றாகி நகரை மூடியிருக்கிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “அரண்மனைக்குள் குளிர்ந்த பளிங்குஅறைக்குள் கூட அமரமுடியவில்லை. சோலைகளில் மரநிழல்களில் அமர்ந்தால் மட்டுமே உடல் ஆறுதல்கொள்கிறது.”
பலராமர் “வெயிலும் குளிரும் இனியவை” என்றார். யுதிஷ்டிரர் அவரை நோக்கிவிட்டு “இளைய யாதவரே, தங்களிடம் சொல்சூழவேண்டுமென்று காத்திருந்தேன். மகதத்திலிருந்து வந்த ஒற்றுச்செய்திகளனைத்தையும் தொகுத்துவிட்டேன். நேற்றிரவெல்லாம் அதைத்தான் செய்துகொண்டிருந்தேன்” என்றார். “உண்மையில் நான் நேற்று துயில்கொள்கையில் முதற்புள் ஒலி எழுந்துவிட்டது.”
அர்ஜுனன் கைகளை விரித்து உடலை நிமிர்த்திவிட்டு எழுந்து வில்லைநோக்கி சென்றான். இளைய யாதவர் அவனை திரும்பி நோக்கினார். “நான் அரசு சூழ்ந்தலைப்பற்றி பேசினாலே எழுந்து சென்றுவிடுகிறான். இவன் மட்டுமல்ல, இவன் மூத்தவனும்தான்.” இளைய யாதவர் பலராமரை நோக்கி நகைத்து “பேசத்தொடங்குங்கள், அவரும் செல்வார்” என்றார்.
“ஆம், அரசு சூழ்தலில் எனக்கென்ன வேலை?” என்று பலராமரும் எழுந்து நின்றார். கைகளை ஒன்றுடன் ஒன்று ஓங்கி அறைந்து “சற்று இரும்பை வளைத்துவிட்டு வருகிறேன். இன்று ஒரு சிறந்த உண்டாட்டு உண்டு என்றனர் அடுமனையாளர்” என்றார். யுதிஷ்டிரர் இளைய யாதவரை நோக்கி வெளிறிய புன்னகையை அளித்தார். “சொல்லுங்கள் மூத்தவரே, தங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்” என்றார் இளைய யாதவர்.
யுதிஷ்டிரர் உளக்குவிப்புடன் முன்னகர்ந்து “ஜராசந்தன் நம்முடன் போருக்கு சித்தமாகிவருகிறான் என்பதில் ஐயமில்லை” என்றார். “என்றாகிலும் நம்முடன் போரிலிறங்கவேண்டுமென அவன் அறிவான். இக்காட்டின் சிம்மம் ஏதென்று முடிவுசெய்தாகவேண்டும்.” இளைய யாதவர் “ஆம்” என்றார்.
“அவனுடைய முதல்துணை என இங்கே அமைச்சர்கள் சுட்டியது துரியோதனனை. நானும் அதை ஐயுற்றேன். ஆனால் அங்கே விதுரர் உள்ளார் என்னும் நம்பிக்கையையும் கொண்டிருந்தேன். அதுவே நிகழ்ந்தது. படைத்துணைக்கான அழைப்பை விதுரர் தவிர்த்துவிட்டார். ஆகவே அஸ்தினபுரி இப்போது இக்களத்தில் இல்லை.” என்றார் யுதிஷ்டிரர்
இளைய யாதவர் “அவர்கள் தவிர்த்தமையால் களத்தில் இல்லை என்று பொருளா என்ன?” என்றார். “அங்கே சகுனியும் கணிகரும் இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை.” யுதிஷ்டிரர் “ஆம், நான் அதையும் எண்ணினேன். அங்கே பரவிய மாயநோய் மறைந்துவிட்டது. அஸ்தினபுரியின் கோட்டைகளும் மாளிகைகளும் மீண்டு எழுந்துவிட்டன. தாம்ரலிப்தியிலிருந்து உயர்தரச் சுண்ணம் நூறுகலங்களில் அஸ்தினபுரிக்கு சென்றுள்ளது. நகரம் ஒவ்வொரு நாளும் ஒளிகொண்டுவருகிறது” என்றார்.
“ஆனால் அஸ்தினபுரி இப்போது படையெழும் நிலையில் இல்லை” என்று யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “ஆகவே இப்போரில் ஜராசந்தனின் முதன்மை நட்பு சிசுபாலன்தான்.” இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம்” என்றார். யுதிஷ்டிரர் “மகதத்திடம் படையிணைவுக்கான ஒப்புகைச்சாத்தை சேதிநாடு செய்துவிட்டது. இன்னும் சிலநாட்களில் சேதியின் பன்னிரு படைப்பிரிவுகள் மகதம்நோக்கி செல்லும்.” என்றபின் தலையை அசைத்தார்.
பின்பு தாடியை மெல்ல வருடியபடி கவலையுடன் “இளைய யாதவரே, துவாரகையின் வளர்ச்சி கண்டு அஞ்சிய அனைவரும் இப்போது ஜராசந்தனுடன் இணைந்துள்ளனர். கரூசநாட்டின் வக்ரதந்தன், இமயமலைநாடாகிய ஹிமகூடத்தின் மேகவாகனன், யவனனாகிய காலயவனன் ஆகியோர் முன்னரே தங்கள் படைகளில் ஒரு பகுதியை மகதத்திற்கு அனுப்பிவிட்டனர். பிரக்ஜ்யோதிஷத்தின் பகதத்தனின் கீழெல்லைப் படைகளும் மகதத்துடன் இணைந்தே செயல்பட்டுவருகின்றன. புண்டரத்தின் வாசுதேவன் ஜராசந்தன் பக்கமே செல்வான். அவனுக்கு உங்களிடமிருக்கும் காழ்ப்பு நாம் அறிந்தது” என்றார்.
“தொல்குடி யாதவர்களிலேயே பன்னிரு போஜகுலங்களின் தலைவனாகிய பீஷ்மகன் ஜராசந்தனுக்குத்தான் ஆதரவளிக்கப்போவதாக செய்திவந்திருக்கிறது. விதர்ப்பநாட்டு ருக்மியும் ஜராசந்தனுடன் இணைவான். உண்மையில் அவர்கள் வெல்லக்கூடும் என்றால் சைந்தவனையும் கூர்ஜரனையும் கூட தங்களுடன் சேர்த்துக்கொள்ளமுடியும். கங்கை முழுமையாக அவன் கட்டுப்பாட்டுக்குள் செல்லுமென்பதனால் பல சிற்றரசர்களுக்கு வேறுவழியும் இல்லை”
“எதிரிகளை பட்டியலிட்டுவிட்டீர்கள்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் அதை பாராட்டாக எடுத்துக்கொண்டு “ஆம், வங்கம் என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறதென்பது தெளிவாக இல்லை. கலிங்கம் இப்போது இருபக்கமும் சாராமல் நிற்கவே விழையும். ஆனால் அதைக்கூட நான் ஐயத்துடனேயே பார்க்கிறேன்.” என்றார்.
“கங்கை வணிகம் இப்போதே மகதத்தின் கையிலிருக்கிறது. பெரும்படகுகளால் எங்கும் படைநகர்த்தும் ஆற்றல்கொண்டிருக்கிறான். வல்லமைவாய்ந்த பீதர்நாட்டுப் படைக்கலங்களையும் எரிபொருள்களையும் ஜராசந்தன் சேர்த்திருக்கிறான். போரில் பாரதவர்ஷத்தை வெல்லவேண்டுமென்ற விழைவுடன் முப்பதாண்டு காலமாக காத்திருக்கிறான்” என்று யுதிஷ்டிரர் . “தங்கள் மேல் அவன் கொண்டுள்ள வஞ்சம் பாரதவர்ஷம் அறிந்தது. ஆகவே நம் இருநாடுகளின் எதிரிகளும் அவன் எழுந்து வருவதையே விரும்புவார்கள்.”
“ஜராசந்தனிடம் இருக்கும் முதன்மையான ஆற்றல் அவன் அசுரர்களுக்கு உகந்தவன் என்பதிலிருந்து தொடங்குகிறது. காசிநாட்டரசனின் மகள்களின் குருதியில் வந்தவன். ஆனால் ஜராசந்தன் என்னும் பெயரே அவனை அசுரர்களுக்கும் நிஷாதர்களுக்கும் உகந்தவனாக ஆக்குகிறது. மலைநாட்டினராகிய உசிநாரர்களும் திரிகர்த்தர்களும் அவனுடன் சேர்ந்தே நிலைகொள்வார்கள். தென்னகத்து ஆசுரநாட்டு சிறுகுடிமன்னர்கள் நூற்றெண்மர் ஏகலவ்யனின் தலைமையில் அவன் படைகளில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் ஆற்றல்மிக்க வில்லவர்கள். நீரில் ஆடும் இலக்குகளை தொடுத்தவீழ்த்துவதில் பயிற்சிகொண்டவர்கள்.”
சகதேவனை கவலையால் தளர்ந்த விழிகளுடன் நோக்கியபின் யுதிஷ்டிரர் தொடர்ந்தார். “நம்மை ஆதரிக்கவேண்டியவர்கள் ஷத்ரியர்கள். ஆனால் அவர்களின் பார்வையில் நாம் யாதவக்குருதி கொண்டவர்கள். கௌந்தேயர்கள் என்னும் அடையாளத்திலிருந்து இன்னும் ஒருதலைமுறைக்காலம் நாங்கள் விடுபடமுடியாது. உண்மையில் நாமும் ஜராசந்தனும் போரிட்டு அழிவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.”
“நம் தரப்பில் எவருள்ளனர்?” என்றான் சகதேவன். யுதிஷ்டிரர் நிமிர்ந்து நோக்கி “நமக்கு முதன்மை ஆதரவென்பது பாஞ்சாலம். ஆனால் இருமுறை ஜராசந்தனின் படைகளுடன் மோதி தோற்றோடியிருக்கின்றன துருபதரின் படைகள். அவர்கள் அவனை அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். மணம்கொண்டவகையில் நமக்கு மத்ரம் உதவும். அவ்வளவுதான். நமக்கு ஆதரவென எவரும் இல்லை. இதுவே உண்மை.”
“யாதவப்படைகளை திரட்டமுடியும். ஆனால் துவாரகையை கைவிடாமல் நம்மால் அத்தனைபெரிய படையை இங்கு கொண்டுவர முடியாது. கூர்ஜரனும் சைந்தவனும் துவாரகை வலுவிழப்பதற்காக அங்கே காத்திருக்கிறார்கள். இங்கே மதுராவைப்பிடிக்க போஜனாகிய பீஷ்மகன் நோற்றிருக்கிறான். நாம் கைகளில் பளிங்குக்கலங்களுடன் நிற்பவர்களைப்போல. இந்திரப்பிரஸ்தமும் துவாரகையும் நமக்கு படைக்கலங்கள் அல்ல. அணிகலன்கள். அவற்றைக் காக்க நாம் கோல்கொண்டு துயிலாது நின்றிருக்கவேண்டியிருக்கிறது.”
யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். “ஒரு போர் நிகழக்கூடும். ஆனால் அது எளிய போர் அல்ல.” கைகளை விரித்துக்காட்டி “நான் எண்ணியதே வேறு. துரியோதனனுடன் ஓர் நட்புத்தழுவல். அது பாரதவர்ஷத்தையே நம் காலடியில் கொண்டுவந்து வீழ்த்தும் என நினைத்தேன். ஊழ் பிறிதொன்று சூழ்ந்தது. இன்று அவன் நம்மை எண்ணி கொந்தளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்” என்றார்.
“ஆகவே தங்கள் எண்ணம் என்ன?” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் “ஒரு போரை இம்முறை தவிர்ப்பதுதான். நம் மீது கொண்ட அச்சமே அவர்களை ஒருங்குதிரளச்செய்துள்ளது. அவர்கள் நம் நிழல். நிழலுடன் பொருதி எவராலும் வெல்ல முடியாது” என்றார். “காத்திருப்போம். அவர்களின் ஒற்றுமை இயல்பானதல்ல. நாம் அஞ்சற்குரியவர்களல்ல என்று காட்டுவோம். அது அவர்களின் கூட்டை வலுவிழக்கச்செய்யும். ஆசுரநாடுகளும் மலைநாடுகளும் ஷத்ரியக்குடிகளும் இணைந்த ஒரு படைக்கூட்டு நெடுங்காலம் நீடிக்கமுடியாது.”
சகதேவன் “ஆனால்…” என்று சொல்லத்தொடங்க இளைய யாதவர் “நானும் தங்களைப்போலவே எண்ணிக்கொண்டிருக்கிறேன் மூத்தவரே” என்றார். “இந்திரப்பிரஸ்தம் இத்தருணத்தில் போருக்கு விரும்பி கூடி நின்றிருக்கும் இத்தனைபெரிய தொல்குடிக்கூட்டங்களை எதிர்கொள்வது எவ்வகையிலும் உகந்தது அல்ல.” சகதேவன் இருவரையும் நோக்கிவிட்டு நகுலனை நோக்க அவன் புன்னகைத்தபின் அம்புகளுடன் அர்ஜுனனை நோக்கி நடந்தான்.
யுதிஷ்டிரர் மகிழ்வுடன் “நான் தங்களை நன்கறிவேன் இளைய யாதவரே. நேற்று இதைப்பற்றி பேசுகையில் சௌனகர் சொன்னார், தங்கள் எதிரிகளனைவரும் ஒரே அணியில் திரண்டுள்ளார்கள் என்று. ஆகவே தாங்கள் படைகொண்டு எழ விரும்பலாம் என்றார். நான் இளைய யாதவர் எண்ணாமல் செயலெடுக்கமாட்டார் என்றேன்” என்றார். “பகைமுடிக்க தாங்கள் உள்ளூர விழைகிறீர்கள். ஆனால் தருணம்நோக்காது எழமாட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது.”
“ஆம், பௌண்டரிக வாசுதேவனை நேருக்குநேர் எதிர்கொள்வதைக்குறித்து எண்ணும்போதே என் உள்ளம் எழுச்சிகொள்கிறது. ஆனால் அதற்குரிய தருணமல்ல இது” என்றார் இளைய யாதவர். “ஜராசந்தன் செய்துள்ள பெரும்பிழை என்பது படையை முன்னரே திரட்டிவிட்டதுதான். படைதிரட்டியபின் வெறுமனே அமர்ந்திருக்கமுடியாது. படைகளின் ஊக்கம் கெடாது இருக்க போர்களில் ஈடுபட்டேயாகவேண்டும். நாணேற்றி அம்புதொடுத்தவன் தன்னையறியாமலேயே இலக்குகளுக்காக தேடிக்கொண்டேதான் இருப்பான். அவன் முதற்பிழையை செய்யட்டும். அதுவரை காத்திருப்போம்.”
யுதிஷ்டிரர் சிரித்து “இதையே இன்று அவையிலும் சொல்லுங்கள் யாதவரே. இங்கே கருவறை அமர்ந்த கொற்றவைதான் போர் போர் என்று கழலொலி எழுப்பிக்கொண்டிருக்கிறாள்” என்றார். “உண்மையில் நான் நேற்றுமுதல் எண்ணிக்கொண்டிருக்கும் ஒன்றுண்டு. இளைய யாதவரே, நாம் யார்? நாம் சூத்திரர்கள். நாம் ஏன் ஷத்ரியர்களின் ஆதரவுக்கென கைநீட்டவேண்டும்? இந்த அசுரர்கள் அல்லவா நமக்கு மேலும் அணுக்கமானவர்கள்? ஜராசந்தனிடம் சென்று கைகோத்துக்கொண்டால் என்ன? கலிங்கனும் வங்கனும் கோசலனும் மாளவனும் அதன்பின் நம் முன் நிற்பார்களா என்ன?”
சகதேவன் “என்ன சொல்கிறீர்கள் மூத்தவரே?” என்று சொல்ல இளைய யாதவர் “நானும் அவ்வண்ணமே எண்ணத்தலைப்பட்டேன் மூத்தவரே” என்றார். “நாம் ஏன் ஜராசந்தரையும் அவருடனுள்ள மலைக்குடியினரையும் நம் குடிகளெனக் கொள்ளக்கூடாது? நம் எதிரிகளை பேணவேண்டுமென ஜராசந்தர் எண்ணியிருக்க மாட்டார். அவர்களை அவரிடமிருந்து பிரிக்க நம் நட்பால் முடியும்.” சகதேவன் இளைய யாதவரை விழியிமைக்காமல் நோக்கி நின்றான்.
“என்ன செய்யலாம்? நானே ஒரு நேர்த்தூது அனுப்புகிறேன். வேண்டுமென்றால் நேரில் சென்று அவனை நெஞ்சுதழுவிக்கொள்கிறேன். அவன் கோரும் அனைத்தையும் கொடுப்போம். நாம் இழப்பது ஒன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், ஆனால் அதற்கு ஒரு தருணம் தேவை. அதை நாம் உருவாக்குவோம்.” யுதிஷ்டிரரின் விழிகள் சுருங்கின. “என்ன தருணம்?” என்றார்.
“அரசே, நற்தருணம் என்பது எப்போதும் வேள்வியே. நாம் இங்கு ஒரு ராஜசூயம் செய்வோம்.” யுதிஷ்டிரர் திகைப்புடன் “ராஜசூயமா? என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “ஆம், அரசர்கள் ஆற்றும் இருபெரும் வேள்விகளில் ஒன்று அது. கருவூலச்செல்வம் அனைத்தையும் வைதிகர்களுக்கும் இரவலர்களுக்கும் கொடுத்துவிடவேண்டும். சுற்றத்தரசர் அனைவரும் வந்து தங்கள் அவை நிற்கவேண்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “ஜராசந்தருக்கும் அவருடன் உள்ள மலையரசர்களுக்கும் அழைப்பு அளிப்போம். அவர்கள் வருவார்களென்றால் நம்முடன் நட்புகொள்கிறார்கள். அவர்களை நாம் ஷத்ரியர்களென ஏற்று வேள்விமேடையில் அமரவைப்போம்.”
“அதை ஏற்பார்களா ஷத்ரியர்கள்?” என்றார் யுதிஷ்டிரர். “ராஜசூயத்தில் ஷத்ரியர்களாக கோல்கொண்டு அவையமர்வதும் வைதிகர்களுக்கு கொடையளித்து நற்சொல் பெறுவதும் மலைக்குடியினரை பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தொல்குடியினருக்கு நிகராக நிறுத்துவதல்லவா?” இளைய யாதவர் “ஏற்காவிட்டால் அவர்கள் வந்து நம் வேள்விக்கூடத்தில் அவையமரட்டும். அவர்கள் நம்மை ஷத்ரியர்களாக ஏற்பது அது.”
யுதிஷ்டிரர் புரியாதவர் போல சகதேவனை நோக்கினார். பின்னர் இளைய யாதவரை நோக்கி “இதன் விளைவுகளென்ன? என்னால் எண்ணக்கூடவில்லை” என்றார். “ராஜசூயம் செய்த அரசனே சக்ரவர்த்தி எனப்படுவான். அள்ளக்குறையாத கருவூலமும் அதை நிரப்பும் படைவல்லமையும் அவனிடமிருக்கின்றன என்பது நிறுவப்படுகிறது” என்றார் இளைய யாதவர். “என்ன சொல்கிறாய் இளையவனே?” என்று சகதேவனிடம் கேட்டார் யுதிஷ்டிரர்.
“மூத்தவரே, அந்த வேள்வியை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் உதவினால் அவர்கள் தங்களை சக்ரவர்த்தி என ஏற்கிறார்கள். உதவாவிட்டால் நாம் அசுரர்களையும் மலைமக்களையும் அரசர்களாக ஆக்கி, அவர்களால் ஏற்கப்பட்ட சக்ரவர்த்தியாக ஆகி ஷத்ரியர்களை ஒழிப்போம்” என்றான் சகதேவன். “இளைய யாதவர் சொல்வது இதையே. இதிலுள்ள செய்தியை அரசர்கள் மட்டுமல்ல ஜராசந்தரும் எளிதில் புரிந்துகொள்வார்.”
யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “எப்படியென்றாலும் போரைநோக்கியே செல்கிறது” என்றார். “போர் நிகழாதொழியலாம் மூத்தவரே. முற்றிலும் நிகர்நிலை ஆற்றல் போல போரைத்தவிர்ப்பது பிறிதில்லை” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரர் தலையசைத்து “நன்றுசூழ்க!” என்றபின் தன்னிகழ்ச்சியுடன் இதழ்வளைய புன்னகைசெய்து “ஆனால் இதை இந்திரப்பிரஸ்தத்தின் இறைவி ஏற்றுக்கொள்வாள் என்றே நினைக்கிறேன்” என்றார்.