பன்னிரு படைக்களம் - 20
பகுதி நான்கு : ஆடி
[ 1 ]
பிரம்மனின் மைந்தராகிய மரீசிக்கு மைந்தராகப் பிறந்தவர் காஸ்யப பிரஜாபதி. அவர் தட்சனின் மகள்களாகிய அதிதி, திதி, தனு, அரிஷ்டை, சுரஸை, கசை, சுரஃபி, வினதை, தாம்ரை, குரோதவசை, இரை, கத்ரு, முனி என்பவர்களை மணந்தார். ஒவ்வொருவரும் பெருவல்லமை கொண்ட மைந்தர்களைப்பெற்று புவியை நிறைத்தனர். தாம்ரை கனவுகாண்பவளாக இருந்தாள். கனவுகளுக்கு எடையில்லை என்பதனால் அவள் கருவுற்றபோதிலும் வயிறுபெருக்கவில்லை.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவள் தன் கனவுக்குள் இனிதே சுருண்டிருந்தாள். விழித்துக்கொண்டபோது அவள் உடலில் இருந்து சிறகுகளுடன் ஆயிரம் பெண்குழவிகள் பிறந்தெழுந்தன. தன் உடலின் உள்ளே நிழலும் ஒளியுமென ஆடிய கனவுகளே அவை என அவள் கண்டாள். மகள்களுக்கு காகி, ஸ்யேனி, ஃபாஸி, கிருத்ரிகை, சூசி, க்ரீவை என நீளும் பெயர்களை இட்டாள். “கனவுகளெனப் பெருகுக! விண்நிறைத்து வாழ்க!” என்று வாழ்த்தினாள்.
அவர்கள் ஒவ்வொருவரிலிருந்தும் பறவைகள் பிறந்தன. கரியவளும் மூத்தவளுமாகிய காகி பிறரால் வெறுக்கப்பட்டாள். அவள் தனித்திருந்து தன் கனவுகளுக்குள் மட்டுமே வாழ்ந்தாள். அவள் கனவுகளும் கரிப்பிசிறுகள் போன்று நிழல்களாக இருந்தன. ஆயிரமாண்டுகாலம் அவள் அக்கனவுகளில் அலைந்தபின் விழித்துக்கொண்டு நீள்மூச்சுவிட்டபோது அவள் உடலில் இருந்து பிறந்தது கரிய சிறகுகளும் கரிய கூரலகும் கொடுங்குரலும் கொண்ட காகம்.
கரிய பறவையை விண்நிறைத்துப் பறந்த பிற பறவைகள் கசந்தன. “நீ பறவையே அல்ல, பிறவிகொள்ளாத பறவை ஒன்றின் நிழலுரு மட்டுமே” என்றாள் ஸ்யேனியின் மகளாகிய சிட்டுக்குருவி. “நீ இருளின் துளியென்று பகலில் வாழ்பவள். உன்னை வெய்யோன் வெறுப்பான்” என்றாள் ஃபாஸியின் மகளாகிய செஞ்சிறைக்கோழி. “உன் குரல் இனிதல்ல. எங்களுடன் நீ இணைந்தால் வண்ணங்கள் அணையும்” என்றாள் கிருத்ரிகையின் மகளான கொக்கு.
துயரம் கொண்ட காகம் தன்னந்தனிமையில் அலைந்தது. அன்னங்கள் நீரடியில் மின்னிய முத்துக்களை உண்டன. சிட்டுக்கள் தேனை உண்டன. கோழிகள் உதிர்ந்த கதிர்மணிகளை உண்டன. கொக்குகள் வெள்ளிச்சிறகுகொண்ட மீன்களை உண்டன. காகம் அவற்றால் தவிர்க்கப்பட்ட அனைத்தையும் உண்டது. அழுகியவையும் இழிந்தவையும் பொழிந்தவையும் அதன் இரையென்றாயின. அதன் குரல்கேட்டதுமே மானுடர் சீறியபடி கல் எடுத்து வீசினர். அதை எதிர்கண்டால் அன்றையநாளே இருள்கொண்டது என்று துயருற்றனர்.
காகம் பகலில் வெளிவருவதை தவிர்த்தது. இருட்டுக்குள் இருட்டாக அது சிறகடித்தது. அதை இன்னதென்றறியாத சிறகடிப்பாகவே இரவுலாவிகள் அறிந்தன. பின்னர் அது நூல்களிலிருந்து மறைந்தது. மொழியிலிருந்தும் அழிந்தது. அதை உருவாக்கிய அன்னைத்தெய்வம் மட்டுமே அவ்வண்ணமொரு பறவை வாழ்வதை இருளில் ஒரு தென்மூலை தனிவிண்மீன் என எழுந்து நோக்கிக்கொண்டிருந்தாள்.
அரக்கர்கோன் ராவணன் தேவர்களை வென்று இலங்கையை மையமாக்கி ஏழுலகையும் ஆண்ட காலத்தில் மருத்தன் என்னும் அரசன் ராவணனுக்கு நிகராக பெருவல்லமை கொண்டு எழ விழைந்தான். நிமித்திகர்களைக் கூட்டி நெறிகோரினான். அவர்கள் மகேஸ்வரசத்ரவேள்வி ஒன்றைச்செய்து குளிர்முடி அமர்ந்த சிவனை வரச்செய்து நற்சொல் பெற்று எழும்படி சொன்னார்கள். அவ்வாறே தன் நகரான மருத்தகிரியில் அவன் ஒரு பெரும் வேள்வியை தொடங்கினான்.
அரக்கர்கோனுக்கு அஞ்சி மறைந்துதிரிந்த வைதிகர் அனைவரும் அங்கே வந்து குழுமினர். அவர்களின் வேதச்சொல்லும் அவிப்புகையும் எழுந்து விண்முட்டின. அவிகொள்ள திசையாளும் எட்டுதேவர்களும் வந்தனர். விண்ணகரிலிருந்து இந்திரன் வந்து நடுவே அமர்ந்தான். பாதாளமூர்த்திகள் நிழல்களென வந்து சூழ்ந்து நடமிட்டனர். அவியுண்டு மகிழ்ந்த தேவர்கள் ஒவ்வொருவரும் மருத்தனுக்கு தென்பெருக்காக எழும் காற்றுக்கு நிகரான தோள்வல்லமையை அளித்தனர்.
இலங்கைநகரில் தன் அரியணையில் அமர்ந்திருந்த ராவணன் அவைநடுவே பிரஹஸ்பதி முனிவர் அளித்த ஒரு பொற்கலத்தை வைத்திருந்தான். அதில் மேலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்க அதனூடாக ஓடிக்கொண்டிருந்தது அவன் காலம். அவனுக்கு நிகராக எவரேனும் மண்ணில் எழுந்தால் அக்கலம் நிறையும் என்று அவனுக்கு சொல்லளித்திருந்தார் பிரஹஸ்பதி. நெடுங்காலம் அதன் அடிவளைவுக்கு அப்பால் நீர் எழுந்ததில்லை. அன்று அக்கலத்தின் விளிம்பைத் தொட்டு நீர் கொப்பளிப்பதைக் கண்டு திகைத்தெழுந்து “என்ன நிகழ்கிறது?” என்று நிமித்திகர்களிடம் கேட்டான்.
“அரசே, வடக்கே மருத்தகிரி என்னும் ஊரில் மருத்தன் என்னும் அரசன் செய்யும் மகேஸ்வரசத்ரவேள்வியில் சிவன் எழவிருக்கிறார்” என்றார்கள் நிமித்திகர்கள். தன் தம்பியர் சூழ கதாயுதம் ஏந்தி தோள்தட்டி ஆர்ப்பரித்து ராவணன் விண்ணெழுந்தான். மருத்தகிரியின் வேள்விக்களத்தில் ஒரு கருமுகிலென வந்திறங்கினான். இடியோசையும் புயல்முழக்கமும் கேட்டு மருத்தன் எழுந்து ராவணனை எதிர்கொண்டான். அவர்கள் தோள் கோத்ததும் தேவர்கள் அஞ்சி அங்கிருந்து பறவைகளாக மாறி பறந்தகன்றனர். இந்திரன் ஒரு வெண்ணிற நாரையானான். சிறு செங்குருவியாக அனலோன் மறைந்தான். நீலப்பறவை என ஆனான் வருணன். சோமன் மஞ்சள்நிறப்பறவை ஆனான்.
தன் கருநிறத்துக்குரிய பறவை எது என திகைத்து அறிவிழி சுழற்றிய யமன் காகத்தை கண்டுகொண்டான். காகமென மாறி எழுந்து வானிருளில் மறைந்தான். யமபுரியை அடைந்ததும் காகத்தை அங்கே வரவழைத்தான். “நீ விழைவதென்ன?” என்றான். “என்னை மானுடர் வணங்கவேண்டும்” என்றது காகம். “மானுடருக்கு நீத்தோர் தேவர்களுக்கு நிகர். இனி மானுடவுலகுக்கு நீத்தோர் வருவது உன் வடிவிலேயே ஆகுக! அவர்கள் வருகையறிவிப்பது உன் குரலில். பலியுணவுகொள்வது உன் அலகால். ஆம், அவ்வண்ணமே ஆகுக!” என்றான் யமன்.
நற்சொல் பெற்ற காகம் கரிய சிறகுகளை விரித்து வந்து ராவணனின் இலங்கைப்பெருநகரின் பொன்னொளிர் அரண்மனை முகப்பில் அமர்ந்தது. தன் மூதாதையரின் அழைப்பு அது என்று உணர்ந்த ராவணன் இரு கைகளையும் கூப்பியபடி வந்து வணங்கி நின்றான். எள்ளன்னத்தை நீருடன் படைத்தான். காகம் அலகால் அவ்வுணவைக் கொத்தியபின் எழுந்து சிறகடித்து அவனை வாழ்த்தியது.
[ 2 ]
அஸ்தினபுரியில் காகங்கள் வந்து நிறையத்தொடங்கின. முதலில் அவை பெருகுவதை நகரத்திலுள்ளவர்கள் உணரவில்லை. குழந்தைகள்தான் காகங்கள் பெருகுவதை முதலில் உணர்ந்தன. அவை அவற்றை மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவுப்பொருட்களை வீசி எறிந்து கைதட்டிக் கூவின. துள்ளிக்குதித்து துரத்தின. சிலநாட்களுக்குப்பின்னர் காகங்களின் பெருக்கெடுப்பை நிமித்திகர் கண்டடைந்தனர். “மூதாதையர் நகரை நிறைக்கிறார்கள். அவர்கள் அச்சம்கொண்டிருக்கிறார்கள்” என்றனர் முதுநிமித்திகர். “இந்நகரில் வாழ்ந்து மறைந்தவர்கள் மீண்டும் எழுகிறார்கள். நாம் அவர்களுக்கு அன்னமும் நீரும் குறைவைத்திருக்கக் கூடும்” என்றனர்.
அச்சம் வளரத்தொடங்கியது. இல்லறத்தார் நிமித்திகர்களின் சொல்லேற்று மீண்டும் கங்கைக்குச் சென்று நீத்தாருக்கு உணவும் நீரும் அளித்து நிறைகொடுத்தனர். ஆலயங்களில் அவர்களின் பெயரும் மீனும் சொல்லி நெய்விளக்கேற்றினர். அந்தியில் சுவடிகளைப்பிரித்து அவர்களின் பெயர்களை வாசித்து அவர்களின் வாழ்வையும் இறப்பையும் வழுத்தி வணங்கினர். ஆனால் மேலும் மேலும் காகங்கள் வந்துகொண்டே இருந்தன. “அவை நாம் அன்றாடம் காணும் காகங்கள் அல்ல. அவற்றின் கழுத்தில் சாம்பல்பூப்பு இல்லை. அலகுகள் தடித்துள்ளன. கண்களில் மணியொளி உள்ளது. அவை ஆழ்குரலில் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன” என்றார்கள்.
ஒவ்வொருநாள் காலையிலும் காகங்கள் பெருகியிருந்தன. இல்லங்களின் கூரைவிளிம்புகளில் அவை விடிந்தபின்னரும் அகலாத இருள் என அமர்ந்திருந்தன. மரக்கிளைகள் எடைகொண்டு தழைய, இலைகள் கருமைகொண்டனவா என்று விழிமயக்கூட்டி நிறைந்தன. கோட்டைச்சுவர்களில், மாடங்களில் கருமையை பூசின. நகரம் அவற்றின் கருமையால் இருள்கொண்டது. இருளை குளிரென விழியறியாது உணரவும் முடிந்தது. கனவுகளில் அவை இருண்ட சிறகசைவுகளும் மணிவிழியொளித்துளிகளுமாக பறந்தன. அவை எதையோ சொல்வதுபோலிருந்தது. சிலசமயம் வினவுவதுபோல. சிலசமயம் வியப்பதுபோல. ஆனால் அவற்றில் எப்போதும் மாறாத்துயரம் நிறைந்திருந்தது.
அவை மறைந்த மூதாதையர் என்பதில் எவருக்கும் ஐயமிருக்கவில்லை. குடிநிரை எழுதிய ஏடுகளை வாசிக்கும்தோறும் அவர்களின் நெஞ்சு அறியாத்துயர் கொண்டு ஈரமாகி எடைபெற்றது. சொல்லென எடுக்க முடியாத எண்ணம் ஒவ்வொரு விழிக்குப் பின்னாலுமிருந்தது. மூத்தோர் மன்றுசூழ்கையில் ஊடே புகுந்த முதிரா இளைஞன் ஒருவன் “நீத்தார் நிரையை நான் பன்னாட்களாக பார்க்கிறேன். அத்தனைபேரும் படுகளம் கண்டு மாய்ந்தவர். பாரதவர்ஷத்தின் அறியாநிலங்களில் அவர்கள் கல்நிற்கிறார்கள்” என்றான். புருவம் சுருக்கி “ஆம்” என்றார் அவைமூத்தவர். “அவைமூத்தாரே, அவர்கள் மாய்ந்தது எவருக்காக? அஸ்தினபுரியில் ஓங்கிப்பறக்கும் கொடி அவர்களின் குருதியால் ஆனதுதானா? நாம் பாடி வழுத்தும் அரசகுடியின் சிறப்பெல்லாம் அவர்களின் கைம்பெண்களின் விழிநீர்தானா?”
சிலகணங்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கி அமர்ந்திருந்தனர். ஒருவர் “சீ, எழுக சிறியோனே! மூத்தோர் அவையில் உனக்கென்ன பேச்சு? நீ சொன்ன சொற்களால் எவரை இழிவுபடுத்துகிறாய் அறிவாயா? இக்கொடியை இவ்வரசுப்புகழை காக்க களம்பட்ட பெருந்தகையோர் அனைவரையும் வீணிறப்பு கொண்டவர்கள் என்கிறாய்… வீணன் நீதான். சொல்லறியாத சிறுக்கன் நீதான்” என்று கூச்சலிட்டார். அவையினர் அனைவரும் “ஆம், வீண் சொல்! பழிச்சொல்!” என்றனர். “இழிசொல் சொன்னவனை அவை தண்டிக்கவேண்டும்” என்று ஒருவர் கூவினார். “இனி ஐந்தாண்டுகளுக்கு எந்த அவையிலும் நீ அமரலாகாது. இது குடிமன்றின் ஆணை!” என்றார் மூத்தார். “ஆம்! ஆம்! ஆம்!” என்றது கூடியிருந்த திரள். இளைஞன் சொல்லெடுக்க வாய் அசைத்து பின் தலைவணங்கி வெளியேறினான்.
அன்றிரவு இருளின் தனிமையில் தங்கள் இல்லம் நோக்கி நடக்கையில் குடிமூத்தவரிடம் பிறிதொரு இளையவர் “இளையோர் சொல்வதிலும் பொருளுண்டு மூத்தவரே. அவையில் சொல்லாவிட்டாலும் அனைவரும் உணர்வது இதுவே” என்றார். “என்ன?” என்றார் குடிமூத்தார். “நகரை போர்சூழ்கிறது. நம் மூதாதையர் அதை விழையவில்லை” என்றார் இளையவர். “அவர்களின் விழிகள் துயர்கொண்டிருக்கின்றன. நம் பலிகளை அவர்கள் கொள்ளவில்லை.” மூத்தார் நீள்மூச்செறிந்தார். “அங்கே விண்ணென விரிந்த வெறுமையில் நின்றபடி இவற்றின் பொருளின்மையை அவர்கள் உணர்கிறார்கள் போலும்” என்றார் இளையவர். “நாம் இதை எண்ண உரிமைப்பட்டவர் அல்ல. அரசரும் அவையும் அதை செய்யவேண்டும்” என்றார் மூத்தார்.
“அரசர் எங்கிருக்கிறார்? இந்திரப்பிரஸ்த நகர்கோள் விழவுக்குப்பின் அவர் ஒருமுறைகூட அரசவை அமர்ந்து கோல்கொள்ளவில்லை. தம்பியருக்கும் அவர் விழியளிப்பதில்லை என்கிறார்கள். முழுத்தனிமையில் குடியாட்டில் மூழ்கியிருக்கிறார். அவர் சொல்லெடுத்தே பலநாட்களாகின்றன என்கிறார்கள்” என்றார் இளையவர். “இரவும் பகலும் அவர் துயில்வதே இல்லை என்று அவைக்காவலன் ஒருவன் ஒருமுறை சொன்னான். நிலையழிந்தவராக அரண்மனை எங்கும் சுற்றிவருகிறார். எவர் விழிகளையும் நோக்குவதில்லை. விழியெதிர் நோக்குகையில் நெஞ்சு நடுங்குகிறதாம். அவை மானுடவிழிகள் அல்ல. அவருக்குள் அறியாத்தெய்வம் ஒன்று குடியேறிவிட்டிருக்கிறது என்கிறார்கள் அனைவருமே.”
மூத்தவர் சொல்லெடுக்காமல் நடக்க இளையவர் தொடர்ந்தார். “அவர் காட்சிக்கு பேரழகு கொண்டிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அது மானுட அழகே அல்ல. தெய்வங்கள் ஏறியமர்ந்த தேர் அவர் உடல். அந்தத் தேவன் எவன்?” சற்றுநேரம் கழித்து மூத்தவர் “கார்த்தவீரிய விஜயம் நூலில் இது சொல்லப்பட்டுள்ளது” என்றார். இளையவர் உம் கொட்டினார். “ஒவ்வொருநாளும் கார்த்தவீரியன் ஒளிகொண்டபடியே சென்றான் என்கிறது அந்நூல். அவன் உடலொளியால் இருளிலும் நெடுந்தொலைவுக்கு அவனை காணமுடிந்தது. அவன் உடல்முன் நின்ற பொருட்களின் நிழல் நீண்டது என்கிறது.” அவர் மீண்டும் நீள்மூச்சுவிட்டு “குருதியாடும்தோறும் வாள் ஒளிகொள்கிறது என்பார்கள்” என்றார். “என்ன நிகழவிருக்கிறது மூத்தவரே?” என்றார் இளையவர். “அஸ்தினபுரியை ஆளும் தெய்வங்கள் அறியும்” என்று மூத்தவர் சொன்னார்.
“அங்கே இந்திரப்பிரஸ்தம் பெருவல்லமைகொண்டு எழுகிறது என்கிறார்கள். நாளும் அதன் கரையில் பெருங்கலங்கள் அணைகின்றன. அதன் கருவூலம் பெருத்தபடியே செல்கிறது. அங்குசெல்லும் வணிகர்களை அரசியே அவையழைத்து அமரச்செய்து பட்டும் வளையும் அளித்து அவைமதிப்பு செய்கிறாள். அங்கே சுங்கமில்லாமையால் கொள்மிகை வேறெங்கும் விட கூடுதல்” என்றான் அஸ்தினபுரிக்கு வந்த அயல்வணிகன். அவனைச்சூழ்ந்து அமர்ந்திருந்த அஸ்தினபுரியின் குடிகள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கிக்கொண்டனர்.
“மகதத்தின் ராஜகிருஹத்திற்கு வணிகர்கள் செல்வது நாளும் குறைகிறது. ஆகவே ஜராசந்தர் கங்கையிலேயே காவல்நிலைகளை உருவாக்கி தன் எல்லையை கடந்துசெல்லும் அனைத்துப் படகுகளுக்கும் சுங்கம் கொள்கிறார். அதை இந்திரப்பிரஸ்தம் மிகக்கடுமையாக எதிர்க்கிறது. நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் தூதர்கள் சென்று ஜராசந்தரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் மேலும் முறுக்கப்படும் வடம் முறியும் ஓசைகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது.”
“மகதர் என்ன சொல்கிறார்?” என்றார் ஒருவர். “இந்திரப்பிரஸ்தமும் மகதமளவுக்கே சுங்கம் கொள்ளவேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு சொற்சாத்து நிகழவேண்டும் என்றும் சொல்கிறார். இந்திரப்பிரஸ்தத்தின் அரசி அதை ஏற்கவில்லை. சென்றவாரம் அமைச்சர் சௌனகரே அரசியின் செய்தியுடன் சென்று ஜராசந்தரை பார்த்தார். அவரை ஜராசந்தர் ஒரு ஆற்றங்கரையில் சந்தித்தார். குலக்குறையும் உடற்குறையும் அளிக்கப்பட்ட நூற்றெட்டு அந்தணர்கள் அங்குதான் நீராடி எரிபுகுந்தனர். அந்த எரிகுழியை நிரப்பி மேலே ஓர் அழகிய பளிங்குமாளிகையை ஜராசந்தர் எழுப்பியிருக்கிறார். அந்த மாளிகையில் அந்தணர்களின் எரிபுகுதல் ஓவியங்களாக சுவரெங்கும் வரையப்பட்டுள்ளது. பேசிக்கொண்டிருக்கையிலேயே சௌனகர் மயங்கி விழுந்தாராம். நீர் அளித்து எழுப்பிய மகதர் அவரை நோக்கி சிரித்து அங்கே ஓடும் ஆற்றின் நீர் அந்தணர்களின் பசுங்குருதி என்று ஒரு சொல்பழி உள்ளது என்றும், அந்நீரை அருந்தியமையால் அவரும் பழிகொண்டவரே என்றும் சொன்னாராம். இவ்வாறு பல்வேறு கதைகள்…”
மூத்தவீரன் ஒருவன் “இந்திரப்பிரஸ்தமும் மகதமும் போர்கொள்ளுமென்றால் அஸ்தினபுரிக்கு நன்று அல்லவா?” என்றான். “அஸ்தினபுரி மகதருடன் இணையும் என்று சொல்கிறார்கள். மகதமன்னரும் நம் அரசரும் தோள்கோத்து இந்திரப்பிரஸ்தவிழவுக்குச் சென்றதை அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் வணிகன். அதை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். ஆயினும் அச்சொல் கேட்டு அவர்கள் நடுங்கினர். “இப்போது தெரிகிறது, மூதாதையரின் துயரம். உடன்வயிற்றரின் போர் எழவிருக்கிறது” என்றார் நூறகவை முதிர்ந்த வீரர் ஒருவர். “வந்தமர்ந்திருக்கும் கருநிழல் பறவைகளில் இருப்பார்கள் பாண்டுவும், விசித்திரவீரியரும், சித்ராங்கதரும், சந்தனுவும், பிரதீபரும், ஹஸ்தியும்…”
காகங்கள் பெருகப்பெருக நகரில் பிற பறவைகள் இல்லாமலாயின. ஆனிமாதத்தின் இளஞ்சாரலில் காகங்கள் நனைந்து நீர்வழியும் சிறகுகளைக் குவித்து தலையை உடலுக்குள் செருகி அமர்ந்திருந்தன. “பெருகிக்கொண்டே இருக்கின்றன. இவை எவற்றை உண்ணும்?” என்றனர் வேளிர். “அவற்றின் விழிகளில் இப்போது தெரிவது வஞ்சம். அவை நம் விழிகளை சந்திக்கின்றன” என்றனர். “என்னிடம் ஒரு காகம் பேசியது” என்றான் இரவுக்காவல் புரிந்த படைவீரன். “என்னிடம் அது உரைத்தது, வா என்று.”
அவனைச்சூழ்ந்து நின்றிருந்த வீரர்கள் அச்சொற்களைக் கேட்டு நகைக்கவில்லை. இளையவீரன் ஒருவன் “ஏன் என்றுதானே அது கேட்கும் என்பார்கள்?” என்றான். இன்னொரு வீரன் “என்னிடம் அது அகல்க என்றது” என்றான். அவர்கள் அமைதியடைந்தனர். இளையவீரன் “இன்றிரவு எனக்கு புறக்கோட்டைக்காவல். என்னிடம் அது எதைப்பேசும்?” என்றான். மறுநாள் காலை அவன் உடல் கோட்டைக்கு அப்பால் புதரில் இளமழையில் நனைந்துகிடந்தது. அவன் உதடுகளையும் விழிகளையும் ஆண்குறியையும் காகங்கள் அமர்ந்து கொத்திக்கொண்டிருந்தன.
காகங்களின் எச்சம் வழிந்த சுவர்களில் இருந்து ஒரு கரியபாசி உருவாகி எங்கும் படர்ந்தது. சிலநாட்களுக்குள்ளாகவே அனைத்துச் சுவர்களும் கருமைகொண்டன. கோட்டைசூழ்ந்த நகரம் கரிபடிந்த அடுப்பு போல ஆகியது. அதை அகற்ற முயன்றவர்கள் அது நஞ்சு என்று கண்டனர். அதை கையால் சுரண்டிவிட்டு வாயில் வைத்தவர்களுக்கு நோய் கண்டது. முதியோரும் இளையோரும் நஞ்சுகொண்டு இறக்கலாயினர். அதிலூறிவழிந்த நீரை அருந்திய குதிரைகளும் யானைகளும் இறந்தன. காடுகளுக்குள் விலங்குகள் செத்துக்கிடக்கின்றன என்றனர் வேடர். காகங்கள் இரவில் அவற்றைத்தான் உண்கின்றன என்றனர்.
காகங்களின் விழிகளை அஞ்சி மக்கள் பகலிலும் வெளியே செல்லாமலானார்கள். நோய் நிறைந்த ஆனிமழை அவர்களின் கூரைக்குமேல் இடைவிடாது பொழிந்துகொண்டிருந்தது. அது மீளமீள ஒற்றைச் சொல்லை சொல்லிக்கொண்டிருந்தது. கூரைததும்பிச் சொட்டிய துளிகளில் இலைகளின் சலசலப்பில் அந்த ஓசை இருந்துகொண்டே இருந்தது.
[ 3 ]
ஆடி எழுந்த முதல்நாள் வானத்தில் இணையரைக் கண்டதாக அஸ்தினபுரியின் இளைய நிமித்திகன் சோமன் சொன்னான். முதற்கதிர்வேளை. முதற்புள் குரல் கேட்டு எழுந்து அவன் கண்மூடியபடி கைகூப்பி நடந்து தன் தவக்குடிலில் இருந்து இறங்கி கங்கைநோக்கி சென்று நீரில் கண்விழித்து, நீர் அள்ள குனிந்துநோக்கியபோது அங்கே விரிந்த வானத்தின் அலைப்பரப்பில் ததும்பிய இருவரையும் கண்டான். கலைமான்மீது அவர்கள் உடலிணைந்து அமர்ந்திருந்தனர். ஆண் கரியவன். பெண் சிவந்தவள். இருவர் விழிகளும் இருதிசைகளை நோக்கிக்கொண்டிருந்தன. பெண்ணின் கையில் வில்லும் ஆணின் கையில் சங்கும் இருந்தன.
திகைத்து மேலே நோக்க அக்காட்சி முதல்கணம் மிக அருகே என தெளிவாகத் தெரிந்தது. பின்னர் முகில்களாக மாறி கலையத்தொடங்கியது. சிலகணங்களில் அது முகில்குவை ஒன்றை தன் உளமயக்கால் கண்டு அடைந்த விழித்தோற்றம் மட்டும்தான் என்ற எண்ணத்தை அடைந்தான். குளித்துக் கரையேறி மீண்டும் தன் குடில்நோக்கிச் செல்லும்போது கல் தடுக்கியதுபோல அந்தக் காட்சியை மீண்டும் சித்தத்தில் கண்டான். அதன் உட்பொருட்கள் துலங்கும்தோறும் பதற்றம் கொண்டு அரண்மனை நோக்கி ஓடலானான்.
அஸ்தினபுரியின் அரண்மனைக்கு தென்னிலத்திலிருந்து நிமித்திகர் சாரங்கர் வந்திருந்தார். தன் மாணவர்களுடன் அவர் அவைகூடியிருக்கையில் அங்கே வந்த சோமன் பதற்றத்துடன் வணங்கி தான் கண்டதைப்பற்றி சொன்னான். சாரங்கரின் மாணவர்கள் ஐயத்துடனும் இளிவரலுடனும் சோமனை நோக்க சாரங்கர் புருவம் சுளித்து அதைக்கேட்டபின் பிறிதொருமுறை அவன் கண்டதை சொல்லும்படி கோரினார். மும்முறை தெளிவுறக்கேட்டபின் திரும்பி தன் மாணவர்களிடம் “ஆனிமுடிந்து ஆடி எழும் நாள் இன்று. நண்டு வளைவிட்டு எழுவதற்கு முந்தைய கணம் இவர் விண்ணிணையரைக் கண்டது” என்றார். அவர்கள் அப்போதுதான் அதை உணர்ந்தனர். முகங்கள் மாறுபட்டன. “நான் உடனே அரசரைப் பார்க்கவேண்டும்” என்றார் சாரங்கர்.
இளவெயில் எழுந்தபின்னர் சாரங்கர் அரண்மனைக்குச் சென்றார். அவரை எதிர்கொண்ட விதுரர் அமைச்சவையில் அமரச்செய்து அவர் சொன்னதை கேட்டார். புன்னகையுடன் “இதில் என்ன உள்ளது நிமித்திகரே?” என்றார். “இணையர் தோன்றும் காலம் அது. உளம் கண்டதை விழிகாண்பது நிமித்திகருக்கு அவ்வப்போது நிகழ்வது அல்லவா?” சாரங்கர் சற்றுதயங்கி “அவர்கள் போர்க்கோலத்தில் இருக்கிறார்கள் அமைச்சரே” என்றார். “அது இயல்பான நிகழ்வு அல்ல. ஒருவர் போரொலி எழுப்பும் சங்குடன் பிறிதொருவர் குலைத்தவில்லுடன் இருக்கிறார்.” விதுரர் அப்போதுதான் அதை முற்றிலும் புரிந்துகொண்டு “ஆம்” என்றார்.
சிலகணங்கள் இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தனர். விதுரர் “போர் தொடங்கவிருக்கிறதா?” என்றார். சாரங்கர் “ஆம், எங்கென்றும் ஏதென்றும் என்னால் சொல்லமுடியாது. ஆனால் போர் எழுகிறது” என்றார். விதுரர் “நன்று சாரங்கரே, நான் இதை அரசரிடம் பேசிக்கொள்கிறேன்” என்றார். “நிமித்திகநூலின்படி இரு மூன்றாமிடங்கள். சிம்மம் முன்னகர்கையில். எருது பின்னகர்கையில். இரு வாய்ப்புகள்” என்றார் சாரங்கர். “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் விதுரர். “உண்மையில் இரு வாய்ப்புகளுக்குமே இடமிருக்கிறது.” சாரங்கர் “ஒற்றர்செய்திகள் ஒத்துப்போகின்றனபோலும்” என்றார். “ஆம்” என்று சுருக்கமாகச் சொன்ன விதுரர் “நன்று நிமித்திகரே” என்று கைகூப்பினார்.
நிமித்திகர் சென்றபின் விதுரர் கைகளை ஊன்றி அதில் முகவாயை வைத்து விழிசரித்து அமர்ந்திருந்தார். கனகர் வந்து அருகே நின்றதை அவர் உணரவில்லை. கனகர் செருமியபோது அரைநோக்கை அவருக்களித்தார். பின்பு பெருமூச்சுடன் கலைந்து “அரண்மனையில் என்ன நிகழ்கிறது?” என்றார். “அரசர் இன்னமும் துயில்விழிக்கவில்லை” என்றார் கனகர். “அங்கர் இருந்தவரை மஞ்சத்தறைக்கே சென்று அவரை அழைக்க ஒருவர் இருந்தார் என்றாவது இருந்தது. இப்போது அவரிடம் எவருமே உரைகொள்ள முடியவில்லை…” விதுரர் தலையசைத்தார். “அவர் அங்கிருப்பதாகவே உணரமுடியவில்லை அரசே” என்றார் கனகர்.
விதுரர் நீள்மூச்சுடன் எழுந்து “கணிகர் எங்குள்ளார்?” என்றார். கனகர் “அவர் வழக்கம்போல…” என்றபின் கூர்ந்து நோக்கினார். “இன்றோ நாளையோ மகதத்திலிருந்து நமக்கு செய்திவரும் கனகரே” என்றார். “இந்திரப்பிரஸ்தம் படைகொண்டு எழுந்துவிட்டதென்பதே அக்காட்சியின் பொருள். தவநிலை கலையாது நீரிலிறங்கியமையால் அந்நிமித்திகன் அதை கண்டிருக்கிறான்.” விதுரர் இடைநாழியில் நடக்க கனகர் எடையுடல் ததும்ப மூச்சிளைத்தபடி உடன் சென்றார். “இந்திரப்பிரஸ்தம் வணிகம் செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது. போர் என்பது வணிகத்தின் அழிவு. அதை இத்தருணத்தில் அரசுமுறை அறிந்தோர் விழையமாட்டார்கள்” என்றார் கனகர்.
“இது இந்திரப்பிரஸ்தத்தின் போர் அல்ல, இளைய யாதவரின் போர். மகதம் நெடுங்காலமாகவே படையாழியின் நிழலில்தான் நின்றுகொண்டிருக்கிறது” என்றார் விதுரர். கனகர் புரிந்துகொண்டு “ஆம்” என்றார். பின்பு “அதை ஜராசந்தர் உணர்ந்திருப்பதாகவே தெரியவில்லை. மகதத்தின் தென்மேற்குபுலக்காவலை நிஷாதகுலத்து ஹிரண்யதனுசின் மைந்தன் ஏகலவ்யனிடமே அளித்திருக்கிறார்” என்றார். விதுரர் “அறியாமல் அல்ல. அது அவரது அறைகூவல்” என்றார். “ஏகலவ்யன் இருக்கும்வரை யாதவர் இறுதிவெற்றியை அடையவில்லை என்றே பொருள்.”
கனகர் “ஆம், ஒவ்வொரு யாதவரும் அதை உணர்ந்திருக்கிறார்” என்றார். “இந்திரப்பிரஸ்தத்தின் இணையர் படைகொண்டு எழுந்துவிட்டனர் என்றால் ஜராசந்தர் அழிந்தார் என்றே கொள்ளலாம்” என்றார். “ஆனால்…” என்று கனகர் சொல்லத்தொடங்க “மூடா, இப்புவியில் அவர்கள் இணைந்தால் எதிர்கொள்ளும் ஆற்றல்கொண்ட எவரேனும் உள்ளனரா?” என்றார். கனகர் நீள்மூச்சுடன் “ஆம்” என்றார். “ஜராசந்தர் நம்மை இயல்பான படைக்கூட்டாக எண்ணுகிறார். நம் அரசர் அளித்த சொல்லென்ன என்று நாம் அறியோம். அங்கரும் சொல்லளித்திருக்கக் கூடும். நல்லவேளையாக அவர் இங்கில்லை. நாம் ஒருநிலையிலும் மகதத்தை துணைக்கலாகாது.”
“அம்முடிவை அரசர் அல்லவா எடுக்கவேண்டும்?” என்றார் கனகர். “ஆம், அதற்கு முன் அவை எடுக்கட்டும்” என்றார் விதுரர். “அரசரின் இளையோர் என்ன எண்ணுகிறார்கள் என்று அறியோம்” என்று கனகர் சொன்னார். “அதை நான் அறிவேன். அவர்கள் மகதத்தின் தூதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாம் மகதத்துடன் சென்றாலும் ஜராசந்தர் வெல்லமுடியாது. வென்றாலும் தோற்றாலும் உடன்வயிற்றர் களமெதிர் நிற்பர். அதை நான் ஒப்பமுடியாது.”
கனகர் “நாம் பேரரசரிடம் அதை பேசுவோம்” என்றார். “ஆம், அதை காந்தாரர் சொல்லவேண்டும்” என்றார் விதுரர். சால்வையை சீரமைத்தபடி நடக்கையில் “நெறியற்ற அசுரன். அவன் பழிகளில் அஸ்தினபுரிக்கு பங்கிருக்கலாகாது. அவன் வீழ்வதே இம்மண்ணுக்கும் உகந்தது” என்றார்.