பன்னிரு படைக்களம் - 19

 [ 4 ]

சகஸ்ரகவசன் இரவும் பகலும் கவசங்களுடன் இருந்தான். அசுரர்களுக்கு உடலில் வியர்வையும் கெடுமணமும் எழுவதில்லை என்பதனால் அவர்கள் நீராடுவதில்லை. எனவே ஆயிரம் கவசங்களை அவன் அகற்ற நேரிட்டதே இல்லை. அவையமர்கையில் கவசங்களுக்குமேல் அரசனுக்குரிய பட்டாடைகளை அணிந்துகொண்டான். மாலை துணைவியர்மாளிகைக்குச் செல்கையில் மென்பட்டாடைகளை சுற்றிக்கொண்டான். அசுரர்களின் வசந்தகாலக் கொண்டாட்டங்களில் மலராடை அணிவதும் அவற்றின் மேல்தான். புதுப்புனல் பெருகும் நதியிலிறங்கி நீர்விளையாடுவதும் கவசங்களுடனேயே. மகளிருடன் மந்தணம் கொள்வதும் கவசங்களுடன்தான்.

அசுரகுடிகள் அவன் உடலே அக்கவசம்தான் என்று எண்ணத்தலைப்பட்டனர். பிறந்துவந்த புதுத்தலைமுறைகள் அவன் உடல் பொன்னாலானது என்று அன்னையரால் கதைசொல்லப்பட்டனர். ஆகவே அவன் சூதர்களால் ஹிரண்யாஃபன் என்று அழைக்கப்பட்டான். அந்திச்சூரியன் உருகிவிழுந்த ஒருதுளி என்று அவனை கவிஞர் பாடினர். அத்தனை உயிர்களாலும் ஏத்தப்படுபவன், அத்தனை உயிர்களுக்கும் வானமுதானவன், எந்த உயிராலும் எட்டப்படமுடியாதவன். “அருஞ்சினத்தை அழகென்றாக்கிச் சூடியவர் இருவர். பொன்மயமான சூரியன் முதல்வன். அவனை ஹிரண்யன் என்றனர் வேதஞானியர். பொன்னுடல் கொண்ட நம் அரசர் அவன் மைந்தன். அவர் வாழ்க!” என்றனர் அவைக்கவிஞர்.

அவனுடன் அமையும் பெண்கள் அந்தக் கவசங்களையே சுற்றி கைவளைத்து அணைத்து அவன் என அறிந்தனர். அது ஆழ்நீர்வாழும் மீனின் செதில் போல எப்போதும் குளிர்ந்திருந்தது. இருளில் அதன் சித்திரச்செதுக்கல்களை தொடும்போது அவனை ஓர் ஆமை என்று அவர்கள் உணர்ந்தனர். அவர்களிடம் அவன் எண்ணி எடுத்த சொற்களால் பேசினான். எண்ணங்களை மொழியிலும் உணர்வுகளை உடலிலும் காட்டாமலிருந்தான். அவனுடன் அவர்கள் இருக்கும் அறைச்சுவர்கள் நீரலைகொண்டவைபோல குளிர்கொண்டன. பின்னர் மஞ்சமும் குளிர்ந்தது. அவன் அவர்களுக்கு அளிக்கும் முத்தங்களும் கோடைமழையின் பனிக்கட்டிகள் போல குளிர்ந்து வந்து விழுந்தன.

அவனுடைய இருதுணைவியர்களான சுஜனையும் சுகதையும் அவனை மணந்து கொண்டபோது மணப்பந்தலில் அந்த ஒளிவிடும் கவசத்தைக் கண்டு மெய்ப்பு கொண்டனர். “அணுகினால் எரித்தழிக்கும் அனல் என்றார்களே தோழி, அவை குளிர்ந்தல்லவா உள்ளன?” என்றாள் சுஜனை சுகதையிடம். “அணுக்கமானவர்களுக்கு அவர் குளிர்ந்தவர் போலும்” என்றாள் சுகதை. அவனை அவர்கள் மஞ்சம் அணைந்த முதல்நாள் அவன் அவர்களை அணைத்தபோதும் அந்தக் கவசத்தை கழற்றவில்லை என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.

சுகதை அக்கவசத்தை கழற்ற முற்பட அவன் அவள் கையைப்பிடித்து மெல்லிய நகைப்பில் இதழ் வளைய “இக்கவசத்தை நீக்குபவர் தலைசிதறி இறப்பார்கள் என்று இறைச்சொல் உள்ளது அரசி” என்றான். அவள் திகைத்து கைவிலக்கிக்கொண்டாள். சுஜனை “இக்கவசத்தை நீங்களே விலக்கினால்?” என்றாள். “இக்கவசங்கள் கட்டப்பட்டவை அல்ல. உருகி உடலுடன் ஒன்றானவை. உடைத்துவிலக்குபவன் இறப்பது ஊழ். நான் விலக்கினாலும் அவ்வாறே” என்றான்.

அவள் நடுங்கும் கைகளால் அதை வருடி “இவை குளிர்ந்துள்ளன” என்றாள். “ஆம்” என்றாள் சுகதை. “நீங்கள் அனல்கொண்டவர் என்றார்கள். இக்கவசங்களுக்கு அடியில் நீங்கள் கொதித்துக்கொண்டிருக்கிறீர்களா?” சகஸ்ரகவசன் சிரித்து “இப்புவியே குளிர்ந்த கவசங்கள் அணிந்த அனல் அல்லவா?” என்றான். அவள் அக்கவசத்தை கைகளால் நெருடிக்கொண்டே இருந்தாள். “சொல்” என்றான். “அனல் மேல் கவிழ்த்த உலைமூடி…” என்றாள். “அதற்கு மேல் இத்தனை அணிமலர்கள் ஏன் செதுக்கப்பட்டுள்ளன?”

சகஸ்ரகவசன் அதற்கு விடையளிக்காமல் நகைத்தான். “சொல்லுங்கள்” என்றாள். “அழகுக்காக” என்றான் சகஸ்ரகவசன். அவள் “என்ன அழகு?” என்றாள். “இம்மலர்ச்செதுக்குகளால் அல்லவா இது ஓர் அணிகலன் ஆகிறது? நீ அணிந்துள்ள பொன்னணிகளும் அவ்வாறே அல்லவா? இல்லையேல் அவை வெறும் சங்கிலிகள்தானே?” அவள் அதை கையால் தடவி “ஆம்” என்றாள். சுஜனை அவனிடம் உடல் பிணைத்தபடி “நான் ஒன்று கேட்கவா?” என்றாள். “சொல்” என்றான். “எவரை அஞ்சி இதை அணிந்திருக்கிறீர்கள்?” சகஸ்ரகவசன் ஒருகணம் சினம்கொண்டாலும் “நான் எவரையும் அஞ்சவில்லை” என்றான்.

“அஞ்சாவிட்டால் எதற்கு இந்தக் கவசம்?” என்றாள். “இக்கவசம் இருப்பதுவரை நான் அஞ்சவேண்டியதில்லை” என்றான். “அப்படியென்றால் இக்கவசத்தின் பின்னால் அஞ்சி ஒளிந்துள்ளீர்கள் என்றல்லவா பொருள்?” அவன் பெருமூச்சுவிட்டான். பின்பு “ஆம், அஞ்சுகிறேன். அசுரப்பிறப்பை” என்றான். “பிறவிகொண்டு எழுந்ததுமே உள்ளே குடிகொண்டு ஒவ்வொரு கணமும் உடன் வளரும் ஊழை. ஊழ்முடிவான இறப்பை. அதை வெல்லவே இக்கவசம்” என்றான். அவள் “அவ்வண்ணமென்றால் நீங்கள் அஞ்சுவது உங்களையேதானா?” என்றாள். “ஆம், என்னைத்தான். என்னை மட்டும்தான்” என்றான் அவன்.

“நீங்கள் இங்கே இவ்வுடலில் மட்டுமே இருப்பீர்கள் என்று எவ்வண்ணம் சொல்லமுடியும்? பிறிதொன்றில் ஏறி நீங்களே வந்து இவ்வுடலை வென்றால் என்ன செய்வீர்கள்?” என்றாள் சுஜனை. “என்ன சொல்கிறாய்?” என்று சீறினான். “மைந்தரில் நீங்கள் வரக்கூடுமே? ஆடிப்பாவையில் எழுவதும் நீங்களல்லவா?” அவன் தன் தலையைத் தடவியபடி அமைதியடைந்தான். சுகதை அவன் உள்ளத்தைக் கலைக்க அவன் குழல்மேல் கைகோத்து “இவள் எப்போதும் இப்படித்தான், வீண்சொல்லெடுப்பதே விளையாட்டெனக் கொண்டவள்” என்றாள்.

சகஸ்ரகவசன் அதன்பின் சொல்லெடுக்கவில்லை. அக்கவசங்களுக்குள் அவன் மறைந்துவிட்டது போலிருந்தது. அவனை வெளியே கொண்டுவர அவர்கள் முயன்றனர். ஆயிரம் கோட்டைச்சுவர்களுக்கு அப்பால் மெல்லிய நிறத்தீற்றலென அவன் தெரிந்து மறைந்தான். அன்றிரவு அவர்கள் அக்கவசங்களுடன் காமம் கொண்டனர். அதன்பின் ஒவ்வொருநாளும் அக்கவசங்களுக்கு அப்பாலிருக்கும் அவனை எட்டிவிட அவர்கள் முயன்றனர். ஒவ்வொரு கவசமும் ஒன்றால் ஆனது என்று கண்டனர்.

முதற்கவசம் ஆண்மையெனும் நிமிர்வால். இரண்டாம் கவசம் தனிமையால். மூன்றாம் கவசம் சொல்லெண்ணும் கூர்மையால். நான்காம் கவசம் விளைவு உன்னும் தயக்கத்தால். ஐந்தாம் கவசம் சினத்தால். ஆறாம் கவசம் தன்னை நோக்கித் திரும்பிய நோக்கால். சென்று சென்று முடிவிலாதிருந்தன அவை. அக்கவசங்களுக்கு வெளியே நின்று அவர்கள் தட்டிக்கொண்டிருந்தனர். அவன் அவற்றைத் திறந்து வெளிவந்தாகவேண்டுமென பின்னர் உணர்ந்தனர். அவனாலும் அது இயலாதென்று பின்பு அறிந்தனர்.

மெல்லமெல்ல அந்தக் கவசப்பரப்புக்கு அவர்கள் பழக்கப்பட்டனர். அதன் ஒவ்வொரு பூச்செதுக்கும் வளைவும் அவர்களுக்குத் தெரிந்தவையாக ஆயின. அவை அவர்களின் கனவில் எழத்தொடங்கின. அவையே அவன் என ஆனபோது அவற்றையே அவர்கள் விரும்பத்தொடங்கினர். அக்கவசத்தின் மலர்களை மெல்ல விரலால் தொடும்போதே அவர்கள் உணர்வெழுச்சி கொண்டனர். அக்கவசங்களுக்குள் எங்கோ அவன் இருக்கிறான் என்பதை அவர்கள் முற்றிலும் மறந்தனர். ஆயிரம்கவசங்களின் மனைவியரென்றே அவர்களின் ஆன்மா நம்பத்தலைப்பட்டது.

பின்பொருநாள் சுஜனை ஒரு கனவுகண்டாள். அதில் அவள் ஒரு குழந்தைக்கு அன்னையாக இருந்தாள். அவனைப்போலவே கரிய நிறம் கொண்ட குழந்தை. பொன்னாலான கவசங்கள் அணிந்திருந்தது. கவசத்திற்கு வெளியே அதன் மெல்லிய குழவிக் கைகளும் கால்களும் நெளிந்தன. எச்சில் வழியும் சிவந்த உதடுகளுக்குள் இருவெண்பற்களுடன் அது அவளது நீட்டிய முழங்கால் மேல் படுத்து எம்ப முயன்றது. அதன் கொழுதொடை மடிப்பில் மெல்ல அடித்து அவள் அதை நீராட்டிக்கொண்டிருந்தாள்.

அருகிருந்த கலத்திலிருந்த நறுமணவெந்நீரை அள்ளி அதன்மேல் ஊற்றினாள். தேய்த்துக் குளிப்பாட்டியபோது மெல்லிய தோல் என அக்கவசம் உரிந்துவருவதை கண்டாள். கைகளால் வலிக்காமல் உரித்தெடுத்தாள். பொன்வண்டின் ஓடு போல ஒளியுடன் இருந்தது. அதற்கடியில் இன்னொரு கவசம். மேலும் ஒன்று. பரபரப்புடன் அவள் அவற்றை உரித்தபடியே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளை ஓர் அச்சம் கவ்வியது. குழந்தையின் உடல் சிறுத்தபடியே வந்தது. வேண்டாம் வேண்டாம் என உள்ளம் தடுத்தாலும் கைகள் கவசங்களை கழற்றிக்கொண்டே இருந்தன.

கவசங்களுக்கு அடியில் மேலும் கவசங்கள். ஒவ்வொரு கவசம் கழற்றப்படும்போதும் குழவி மேலும் மேலும் உவகை கொண்டது. இறுதிக்கவசம் அணிந்த அதன் உடல் மிகச்சிறிதாக தெரிந்தது. அதன் தொடைகளும் கைகளும் தலையும் அதற்கேற்ப சிறுத்திருந்தன. நிறுத்திவிடலாமென நினைத்தாள். ஆனால் அத்தனைக்கும்பின் அதை கழற்றாமலிருக்க தன்னால் முடியாதென்றே அவள் உணர்ந்தாள். நடுங்கும் கைகளால் அவள் அக்கவசத்தை கழற்றினாள். அவள் அதுவரை அஞ்சிவந்ததே நிகழ்ந்தது. அக்கவசத்துக்கு அப்பால் இருண்ட குளிர்ந்த வெற்றிடமே இருந்தது.

அவள் பதைப்புடன் அதை கைகளால் துழாவினாள். கைகள் தவித்தன. ஓசையின்றி அழுதபடி திரும்பிப்பார்த்தாள். அதன் கவசங்கள் குவிந்துகிடந்தன அருகே. அக்கவசங்களை அவள் கலைத்தாள். அவை தனித்தனியாக சிதறி காற்றில் அலைபாய்ந்தன. குழவியிருந்த இடத்தில் குழவியின் இருப்பை எஞ்சவைத்த வெற்றிடம். “என் கண்ணே! என் கண்ணே” என்று கூவியபடி அவள் அதை தடவினாள். மெல்ல அந்த இருப்புணர்வும் அழிவதை கண்டாள். “என் செல்லமே! என் அமுதே!” என்று அவள் வீரிட்டலறினாள்.

விழித்துக்கொண்டபோது உடல்நடுங்க கண்ணீர் மார்பில் சொட்ட அவள் அழுதுகொண்டிருந்தாள். விசும்பியபடி எழுந்தோடி அருகே பிறிதொரு அறையில் துயின்றுகொண்டிருந்த சுகதையைப் பிடித்து உலுக்கி “எழுந்திரடீ!” என்று கூவினாள். “கண்கள்!” என்று கூச்சலிட்டபடி அவள் விழித்துக்கொண்டு “கண்கள்! பார்… நான்…” என்றபின் “நீயா? நீ எப்போது?” என்றாள். அவளும் நடுங்கிக்கொண்டிருந்தாள். சுஜனை அவளைத் தழுவியபடி அமர்ந்து அழுதாள். “என்ன? என்ன? சொல்லடி!” என்றாள் சுகதை. “நான் ஒரு கனவு கண்டேன்… கொடுங்கனவு” என்றாள்.

அக்கனவை அவள் சொல்லவும் “நானும் அதே கனவைக் கண்டேனடி” என்று கூவியபடி அவளை கட்டிக்கொண்டாள் சுகதை. “நான் கவசங்களைக் கழற்றியபோது கண்டது இரு கண்கள். உயிருள்ள கண்கள். இமைக்காது என்னை அவை நோக்கிக்கொண்டிருந்தன.” தீக்குறிகளை அவர்கள் எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் அவர்களுக்கு கடும் காய்ச்சல் எழுந்தது. உடல்வாடிக் கிடந்த அவர்களை நோக்கிய மருத்துவர் அவர்கள் உளம்தாங்கா கனவுகண்டதை கண்டடைந்தார்.

நிமித்திகர் குறிநோக்கி அவர்கள் அன்னையராகப்போவதை அறிவித்தனர். அக்கனவு அவர்களிருவரும் கொள்ளப்போகும் மைந்தரைப் பற்றியது. இளையவளின் மைந்தன் போரில் இறக்கலாம். மூத்தவளின் மைந்தன் நாடாளலாம். “விழிகள் அவன் வாழ்வான் என்பதற்குச் சான்று அரசி” என்றார் நிமித்திகர். “விழிகளே ஆன்மா எனும் பறவை. அது வந்தமரும் கிளையே உடல் என்கின்றன நூல்கள்.”

அவர்கள் உரைத்ததற்கிணங்க அவர்கள் இருவரும் கருவுற்றனர். இருவருமே ஒரேநாளில் மைந்தர்களை ஈன்றனர். முதல் மைந்தனுக்கு சலன் என்றும் இரண்டாவது மைந்தனுக்கு அசலன் என்றும் பெயரிடப்பட்டது. மைந்தர்களுக்குரிய வேள்விச்சடங்குகள் முறைப்படி நிகழ்ந்தன. சகஸ்ரகவசனின் ஆட்சியின்கீழிருந்த அனைத்துலகின் தலைவர்களும் வந்து குழந்தைகளுக்கு சீர் செய்து வணங்கிச்சென்றனர்.

சலன் வெண்ணிறமும் அசலன் கரிய நிறமும் கொண்டிருந்தனர். இருவரும் தந்தையின் இரண்டு தோள்களில் வளர்ந்தனர். இருசெவிகளிலும் “தந்தையே” என்று ஒரே குரலில் அழைத்தனர். அவர்கள் இருபக்கமும் இருந்து பேசுவது தன் தலைக்குள் நிகழ்வதாகவே அவனுக்குத் தோன்றியது.

ஒருநாள் இரவு இருமைந்தரையும் மார்பின் மேல் போட்டுக்கொண்டு சகஸ்ரகவசன் துயின்றான். அவர்கள் அவன் கவசங்களின்மேல் தலைவைத்து விளையாடி அவ்வாறே துயில்கொண்டனர். அவன் தன் துயிலில் அவர்கள் இருவரையும் கண்டான். தொலைவில் ஒரு வெண்புரவியில் அவர்கள் வந்தனர். அணுகும்தோறும் தெளிவடைந்து அவர்கள் ஒற்றை உடலில் இரு தலையுடன் இருப்பதை கண்டான். அகலே குழவிகளெனத் தெரிந்தவர்கள் அருகணைந்தபோது இளைஞர்களாகிவிட்டிருந்தனர்.

“மைந்தா, என்ன செய்கிறாய்?” என்று அவன் கேட்டான். சலன் தன் கையில் பெருவில் ஒன்றை எடுக்க அசலன் அதை நாணிழுத்து அம்பு தொடுத்தான். “மைந்தா” என்று சகஸ்ரகவசன் கூவினான். அவர்களின் அம்பு வந்து அவன் நெஞ்சை துளைத்தது. அவன் “வேண்டாம் வேண்டாம்” என்று கூவும்தோறும் அவன் கவசங்கள் உடைந்து விழுந்தபடியே இருந்தன. “மைந்தா, வேண்டாம்!” என்று அவன் கூவினான். அவர்கள் அவனை கேட்கவில்லை. “மைந்தா, திரும்பிச்செல்! இது முறையல்ல. வேண்டாம்…” என்று அவன் கூவிக்கொண்டே இருந்தான்.

இறுதிக்கவசம் உடைந்தபோது அவன் மண்ணில் விழுந்திருந்தான். அவன் நெஞ்சுக்குள் ஒரு சிறிய குருவிக்குஞ்சு பதுங்கி இருந்தது. சலன் கையால் துழாவி அதை பிடித்தான். அசலன் அதை வாங்கி அதன் கண்களை கூர்ந்துநோக்கி புன்னகைசெய்தான். அவர்கள் அதை காற்றில் விட்டனர். அது பறந்து செல்வதை அவர்கள் நோக்கி நின்றனர். அங்கே பறந்து எழுந்தபின்னர் அவன் திரும்பி நோக்கினான். தரையில் அவன் கவசங்கள் மட்டும் குவிந்துகிடந்தன. அவன் விம்மியபோது அப்பால் தன் தந்தை தம்பனின் முகம் புன்னகைப்பதை கண்டான்.

அக்கனவை அவன் அவைநிமித்திகர்களால் விளக்கமுடியவில்லை. ஆளுக்கொரு விளக்கம் சொல்லி அவனை சினம்கொள்ளச்செய்தனர். அவன் மைந்தரை தொடாமலானான். தன் அறையில் தனித்து உலவினான். கவசங்கள் மேல் கையால் அறைந்தபடி பற்களைக் கடித்து உறுமினான். இரவும்பகலும் துயிலாமலானான். மனைவியரும் அமைச்சரும் அவனை அணுகமுடியவில்லை.

நாள் செல்லச்செல்ல அவன் வெம்மை கூடிக்கூடி வந்தது. அவன் அறையின் இரும்புத்தூண்கள் உருகி சற்றே வளைய மேற்கூரை கீழிறங்கியது. புலரிவரை இருளில் செவ்வொளி எழ அவன் நின்றிருந்தான். நகர்மக்கள் அவன் அறை அனல்எழு உலை என ஒளிவிடுவதை தொலைவில் நின்றே நோக்கினர். காலையில் சூரியன் எழுந்தபோது அவ்வொளியில் அவன் ஒளி மங்கியது. நின்றபடி அவன் கண்மூடினான். அவன் மேல் அனலின் அலைகள் பறந்தன.

அவன் உருகிக்கொண்டிருந்தபோது நாரதர் அவனைத்தேடி வந்தார். அவையமர்ந்த அவரிடம் அவன் நின்றெரியும் வண்ணத்தை அவையத்தார் உரைத்தனர். அவர் அவன் அறைக்குச் சென்று வாயிலில் நின்றார். அனலில் உருகியதுபோலிருந்த அறைக்குள் அவன் வெளியே எரிந்த சூரியனை நோக்கி நின்றிருந்தான். “அக்கனவின் பொருளை நான் அறிவேன்” என்றார் நாரதர். “அதைச் சொல்லவே உங்களைத் தேடிவந்தேன்.” அவன் திரும்பி சிவந்த விழிகளால் நோக்கினான். “அணியப்பட்டவை அனைத்தும் கழற்றப்பட்டாகவேண்டும். அதுவே வீடுபேறு என்பது. அதற்கான தருணம் அமைந்துவிட்டது” என்றார்.

கடுஞ்சினத்துடன் தூணை அறைந்து “என்ன சொல்கிறீர்?” என்றான். “உங்கள் ஆயிரம் கவசங்களும் உடைபடும். சிறையுடைந்து உங்கள் உள்ளமைந்த ஒன்று வானறியும்.” அவன் இரு கைகளாலும் மார்புக்கவசத்தை ஓங்கி அறைந்து “என் கவசங்களை வெல்ல எவராலும் இயலாது” என்றான். “இயலும். இரு இளம்படிவர்கள் அதற்கென்றே பிறந்துள்ளனர். அவர்களை நரநாரணர் என்கிறார்கள். இங்கு உங்கள் அடிமையாக இருக்கும் தர்மதேவனின் மனைவி மூர்த்திகையின் மைந்தர் அவர்கள்.”

அவரை நோக்கி சிலகணங்கள் நின்றபின் சகஸ்ரகவசன் புன்னகைத்தான். “ஆம், அதுதான் அக்கனவுக்கான பொருள். அவர்களை தேடிச்செல்கிறேன். அந்த வாய்ப்பையும் அவிக்கிறேன். அதன்பின் இங்கு என்னை வெல்ல எவருமில்லை என்றாகும்” என்றான். இரு தோள்களிலும் ஓங்கி அறைந்து “என் கவசங்களை நானே அறியும் ஒரு தருணம். அதையே நாடுகிறது என் உள்ளம்” என்றான்.

[ 5 ]

பெருவல்லமையுடன் விண்ணுக்கு பெருகி எழுந்தான் சகஸ்ரகவசன். மண்வாழும் முனிவர் அன்று விண்ணில் இரண்டு சூரியன்களைக் கண்டு அஞ்சி கைகூப்பினர். இடியோசையில் மலைகள் விதிர்த்து மேலே அமைந்த பெரும்பாறைகள் தவம்கலைந்து சரிவில் உருண்டன. நதிகளில் அலைகள் எழுந்து கரையை அறைந்தன. பறவைகள் அஞ்சி நடுப்பகலிலேயே கூடணைந்தன. குழவிகளை அழைக்கும் அன்னைவிலங்குகளின் ஒலிகள் எங்கும் எழுந்தன.

நரநாரணரைத் தேடிச்சென்ற சகஸ்ரகவசன் தன் தவக்குடிலில் வாழ்ந்த மூர்த்திகையை கண்டான். “உன் மைந்தர் வந்து உன்னை மீட்கட்டும்…” என்று சொல்லி அவளை சிறைப்பிடித்து தன் தேரிலேற்றிக்கொண்டு திரும்பினான். தென்னிலத்தில் வில்பயின்ற நரனின் அம்புக்கு மேல் எரிவிண்மீன் ஒன்று சீறி அவிந்தது. வடநிலத்தில் ஊழ்கம் பயின்ற நாரணனின் தலைக்குமேல் வந்தமர்ந்த பறவை ஒன்று ஒற்றைச் சொல் உரைத்தது. இருவரும் அதன் பொருளை ஓர் அச்சமென உணர்ந்தனர். அக்கணமே கிளம்பி அன்னையின் தவச்சாலையை அடைந்தனர். அங்கே அவளில்லை என்று உணர்ந்து தரையை நோக்கியபோது அசுரனின் ஆழ்ந்த காலடிகளை கண்டனர். வடுவென விழுந்த அவன் தேர்க்கால் தடத்தைக் கண்டனர். காட்டுமான் ஒன்றின் மேல் ஏறி அதை பின் தொடர்ந்தனர்.

மலைச்சரிவில் காத்திருந்த சகஸ்ரகவசன்  தான் கண்ட கனவில் என காட்டுக்கலைமான் மேல் ஏறிவந்த இளைஞர்களை கண்டான். பேரொலியுடன் உறுமியபடி தன் மின்கதிர்வில்லையும் எரியுமிழ் அம்புகளையும் எடுத்துக்கொண்டு போருக்கு புறப்பட்டான். அவர்கள் நாணொலித்தபடி எதிரே வந்தனர். வில்குலைத்து கலைமான் மேல் எழுந்த நரன் “அசுரனே, உன்னை எதிர்கண்டதுமே என் பிறப்பின் நோக்கமென்ன என்றறிந்தேன். ஆயிரம் ஆண்டுகாலம் நான் செய்த தவம் உன் உயிர்கொள்ளும் பொருட்டே…” என்றான்.

“என் கவசங்களுக்கு அப்பால் நின்று பேசிக்கொண்டிருக்கிறாய். ஆயிரம் ஊழிக்காலத்திற்கு அப்பால் நின்றிருக்கும் நீ இன்னமும் பிறக்கவே இல்லை” என்று சகஸ்ரகவசன் சொன்னான். ஒற்றைக்கணத்தில் இருவரும் அம்பு தொடுத்தனர். அம்புகள் இரண்டும் அடுத்த கணத்தில் முனைமுட்டிக்கொண்டன. விண்ணவர் விழிபதைக்க நோக்கி நின்ற பெரும்போர் தொடங்கியது. ஒவ்வொரு கணம் என முடிவிலா காலம் என மாறி மாறி உளமயக்கு கூட்டியது அப்போர்.

கலைமான்மேல் அமர்ந்திருந்த இருவரில் நரன் மட்டும் போர்புரிவதை சகஸ்ரகவசன் கண்டான். நாரணன் அப்போதும் கைவிரல் கூட்டி இன்மை முத்திரை கொண்டு விழியமைந்து ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தான். தன் முதல் கவசம் உடைபட்டதும் சகஸ்ரகவசன் திகைத்து பின்னடைந்தான். நரனின் தலை நீர்க்குமிழி என வெடிக்க அவன் மண்ணில் சரிந்தான். அக்கணமே நாரணன் நரன் என உருக்கொண்டு எழுந்து அவன் வில்லையும் அம்பறாத்தூணியையும் பற்றிக்கொண்டான். நரன் நாரணன் என உருவெடுத்து எழுந்து கலைமான் மேல் ஏறிக்கொண்டு கைவிரல் கோத்து விழிகூம்பி ஊழ்கத்திலமர்ந்தான்.

சகஸ்ரகவசன் திரும்பி ஓடி மலைமடக்குகளில் நின்று மூச்சிரைத்தான். இரு கைகளையும் ஓங்கி அறைந்து கூவினான். “எந்தையே! எந்தையே!” என்று கூச்சலிட்டான். “உங்கள் சொல் தவறக்கண்டேன். ஏழுலகாளும் உங்கள் நெறி பிழைக்குமென்றால் இனி இங்கு எஞ்சுவது என்ன?” மலைகளுக்குமேல் சூரியவட்டம் எழுந்தது. முகில்களில் பெருங்குரல் ஒலித்தது. “மைந்தா, அவர்கள் ஒருவரே. ஆயிரமாண்டுகாலம் படைக்கலம் ஏந்தாது தவம்செய்தவனும் ஆயிரம் ஆண்டுகாலம் படைக்கலமென்றே வாழ்ந்தவனும் ஒருவனே. ஒருபாதி உன்னை வெல்லும் வில்திறனை அடைந்தது. மறுபாதி இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சயத்தை அடைந்தது.”

அறைகூவியபடி மலைகளின் நடுவே கலைமான் தோன்றியது. “ஆம், நான் அறிவேன். இது இறுதி. இக்கவசங்களால் அல்ல, இனி என் குலம் கொண்ட வீரத்தால் பொருதுகிறேன்” என்று அவன் கூவினான். வில்குலைத்து கலைமான் ஊர்ந்த இரட்டைவீரரை எதிர்கொண்டான். விடிந்து இருண்டு விடிந்து என போர் நிகழ்ந்தது. அவன் கவசங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்தன. அவை உடல் விட்டு நீங்கும்தோறும் எடையின்மையின் விடுதலையை உணர்ந்தான். அவ்வாறு உணரும்தோறும் சினம் கொண்டான். பேரொலியுடன் வெறிகொண்டு எழுந்து அவர்களை தாக்கினான்.

கவசங்கள் மறைய மறைய அவன் உள்ளம் துள்ளத் தொடங்கியது. தன் உள்ளை தானே காணவிழைவதை உணர்ந்தபோது உட்சினத்தை ஊதி எரியவைத்தான். ஆனால் மெல்ல அவ்வனல் அணைந்தபடியே வந்தது. பின் முற்றிலும் குளிர்ந்தது. இறுதிக் கவசம் எஞ்சியபோது அவன் நீள்மூச்சுடன் கைகளை தூக்கினான். “போர் புரிக! போர்புரியாதபோது உன்னைக் கொல்ல என்னால் முடியாது” என்றான் நரன். அவன் “நன்று” என்றபடி வெறும் கையுடன் அவர்களை நோக்கி சென்றான்.

நரனின் அம்பு வந்து தன் கவசத்தை உடைத்தபோது பதற்றத்துடன் குனிந்து நெஞ்சை பார்த்தான். அங்கே பொன்னொளியே தெரிந்தது. கவசம் எஞ்சுவதாக எண்ணி பதைப்புடன் தொட்டான். தொடுவுணர்ச்சி எழ திகைத்து நரனை நோக்கினான். “அது உன் நெஞ்சு…” என்றான் நரன். “நீ சூரியனின் மைந்தன் என்பதன் பொன்னொளி அது.”

இறுதி அம்பு வந்து அவன் நெஞ்சில் ஆழ்ந்திறங்கியது. செம்பொன்பரப்பில் செங்குருதி ஊறிப்பெருகுவதை கண்டான். ஒருகையால் நெஞ்சை அழுத்தியபடி இடப்பக்கம் சரிந்து தன் தேர்க்காலில் விழுந்தான். கீழே ஆழத்தில் தன் இறுதிப்பொற்கவசம் விழுந்து மறைவதை இறுதியாக நோக்கி புன்னகைசெய்தான்.