நீர்க்கோலம் - 80
79. நச்சின் எல்லை
பாகுகன் பெரும்பாலான பொழுதுகளில் ரிதுபர்ணனுடனேயே இருந்தான். அவன் தனியறைக்குள் பீடத்திற்குக் கீழே வளைந்த கால்களை நீட்டியபடி அமர்ந்து பெரிய பற்கள் ஒளிவிட உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பான். அறைக்குள்ளேயே உடல் ததும்ப முட்டிமோதுவான். எண்ணமெழுந்ததும் பாய்ந்தெழுந்து சாளரம் வழியாக வெளியேறி மரங்களினூடாகவே குதிரைக்கொட்டில் நோக்கிச் செல்வான். அவனுடன் நகையாடிக்கொண்டிருக்கும் ரிதுபர்ணன் “ஏய், நில்… எங்கே செல்கிறாய்?” என்று கூவியபடி எடைமிக்க காலடிகள் ஓசையிட இடைநாழிகள் வழியாக ஓடுவான். விந்தையும் ஒவ்வாமையுமாக அதை நோக்கி விழிகூர்ந்து நிற்பார்கள் காவலர்கள்.
குதிரைக்கொட்டிலிலும் அடுமனையிலும் அரசன் வந்து அமர்ந்திருப்பது ஏவலர்களுக்கு முதலில் குழப்பமும் எரிச்சலும் அளிப்பதாக இருந்தது. அதை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அரசன் முன் காட்டவேண்டிய பணிவென்பது செயலின்மைதான். அடுமனை வேலைகள் அவன் வந்ததுமே நிலைத்தன. ஆனால் அவர்களை அவன் ஒரு பொருட்டாகவும் எண்ணவில்லை. பாகுகனுடன் மட்டுமே அவன் பேசிக்கொண்டிருந்தான். அவன் செல்லுமிடமெல்லாம் சென்று அவன் செய்வதனைத்தையும் கண்டு நகைத்துக்கொண்டிருந்தான்.
பாகுகன் அவனை அரசே என்று அழைத்தாலும் தோழனென்றே நடத்தினான். அடுமனையில் முதன்முதலாக சிக்கிமுக்கிக் கல்லை உரசி எரியெழுப்பியபோது ரிதுபர்ணன் உடலெங்கும் பரவிய ஆழ்ந்த உவகை ஒன்றை அடைந்தான். விறகடுக்கவும் உப்புபுளி கரைக்கவும் பேரார்வத்துடன் கற்றான். அவனே சமைத்த முதல் புளிக்கரைசலை உண்டு அடுமனையாளர் முகம் மலர்ந்தபோது உரக்க நகைத்தான். அவன் சொல்லை புரிந்துகொண்டு முதுபுரவியாகிய சாரதை முதன்முறையாக செவிதிருப்பி தலையசைத்தபோது இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டு துள்ளிக்குதித்தான்.
அடுமனைத் தொழிலும் புரவிபயிற்றலும் அவனை உளம் மாற்றின. எதை நோக்குகிறோமோ அதுவென்றாகும் உள்ளம் அவனை அடுமனையில் அனைத்தையும் தொகுத்து அனைத்திலும் இருந்து எழுவதொன்றை நோக்கி கொண்டுசென்றது. புரவியுடன் எழுந்து திசை திசை என விரிந்தது. அடுமனையாளர் அவனிடம் இயல்பாகப் பேசி களியாடலாயினர். அவன் வருகையை முன்னரே அறிந்து புரவிகள் செவிதிருப்பி கால்மாற்றி மெல்ல கனைத்தன. ஒவ்வொரு நாளும் அவன் அன்று செய்யவேண்டிய ஒன்றை எண்ணியபடி விழித்தெழுந்தான். விழி அயர்வது வரை அன்று செய்தவற்றைப்பற்றியே சொல்லிக்கொண்டிருந்தான்.
அமைச்சரிடம் “ஒவ்வொரு நாளும் எய்துவதற்கு ஒரு வெற்றி தேவை மானுடனுக்கு. அதை இத்தனை காலம்கடந்த பின்னரே உணர்ந்தேன், அமைச்சரே” என்றான். “என்றோ வரும் வெற்றிக்காக ஒவ்வொரு நாளையும் செலவிடுபவன் துயரிலிருக்கிறான். இறந்தபின் பேசப்படுவதற்காக வாழ்பவன் வீணாக அழிகிறான்.” முகுந்தர் “விடை இதைவிடவும் மிக எளியது, அரசே. தன் கைகள் வழியாக எதையேனும் உருவாக்காதவன் வாழ்வதில்லை” என்றார். அவன் வெடித்துச் சிரித்து “உண்மை” என்றான்.
முகுந்தர் புன்னகைத்து “உங்கள் விழிகள் மாறிவிட்டன, அரசே” என்றார். “கண்களுக்குக் கீழே இருந்த வளையங்கள் அகன்றுவிட்டன. மூச்சிரைக்காது நடக்கிறீர்கள்.” அவன் “அது தன் மகாசூர்ணத்தின் வெற்றி என உளமகிழ்கிறார் மருத்துவர் குந்தலர். நான் அதை கலைப்பதுமில்லை. உண்மையில் நான் இப்போது அரிதாகவே மதுவருந்துகிறேன். பகடி செய்யாமலும் உளம் மயங்காமலும் சலிப்பை வெல்பவனே வாழ்வின் உவகையை அறிந்தவன் என்று நேற்று எண்ணிக்கொண்டேன்” என்றான்.
அவையினருக்கு அவனிடம் வந்த மாறுதல் முதலில் ஒவ்வாமையை அளித்தாலும் அவனிடம் எப்போதுமிருந்த கசப்பும் எரிச்சலும் அகன்றதைக் கண்டு அவர்களும் உவகை அடைந்தனர். “இப்போது நாம் சொல்வதை செவிகொள்கிறார். மறுமொழிகளில் பொருளிருக்கிறது. எவரால் வந்தது என்றால் என்ன, இந்த மாற்றம் நன்றே” என்றான் படைத்தலைவன் ருத்ரன். துருமன் “நான் எப்போதும் சொல்வதுதான். புரவி பயிலும் பொழுது கூடக்கூட ஆண்மகன் நிமிர்வடைகிறான். இன்றுதான் அதை கற்றுக்கொண்டிருக்கிறார்” என்றான்.
சிற்றமைச்சர் பிரதீபர் மட்டும் முகம் சுளித்து “அரசனின் ஆர்வம் நெறி நிறுத்துவதிலும் வளம் பெருக்குவதிலும் பகை கடிவதிலும் மட்டுமே நிற்கவேண்டும் என்கின்றன நூல்கள். அடுமனைத் தொழில் அடிமைக்குரியது. புரவிபேணுதல் அண்டிவாழ்வோர்க்குரியது. ஆயிரமாண்டுகளாக அவர்கள் செய்துசெய்து அத்தொழிலின் ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் அப்பண்புகள் குடியேறியிருக்கும். அதைச் செய்யும் அரசன் அவனை அறியாமலேயே அப்பண்புகளை தான் பெற்றுக்கொள்கிறான்” என்றார்.
பேரமைச்சர் புன்னகைத்து “பாரதவர்ஷத்தில் பாதியை வென்ற நளன் அடுமனையாளன், புரவிபேணுநன்” என்றார். “ஆம், ஆனால் அவன் நிஷாதன்” என்றார் பிரதீபர். “நிஷாதன் அல்லவா அச்செயல்களின் தீய பண்புகளைப் பற்றி மேலும் அஞ்சவேண்டியவன்? ஷத்ரியர்களுக்கு குலக்குருதியின் காப்பு உள்ளது” என்றார் முகுந்தர். பிரதீபர் “நளன் நாட்டை பேணிக்கொள்ளவுமில்லை. அவன் தமயந்தியை இழந்ததும் நாடுதுறக்க நேரிட்டதும்கூட புரவியும் அடுப்பும் அளித்த தீயபண்புகளால்தானோ, எவர் சொல்லமுடியும்?” என்றார். “தொழிலே வர்ணங்களை ஆக்குகிறதென்பதனால் தொழில்மாற்றம் வர்ணங்களை அழிக்கும்.”
“நான் சொல்லாட விழையவில்லை. அது என் வழி அல்ல” என்றார் முகுந்தர். “ஆனால் அரசியலை நேரடியாக அரசியல் வழியாக எவரும் கற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது மிகமிக விரிந்தது. அதன் அலகுகளும் கிளைகளும் எண்ணற்றவை. அதில் ஒரு நெறியைக் கண்டடைய பல காலம் ஆகும். அரசியலை ஒரு கையால் ஆற்றியபடி பிறிதொரு கையால் ஏதேனும் தொழிலையோ கலையையோ ஆற்றுபவர்கள்தான் அரசியல்நெறிகளை எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்.” பிரதீபர் வியப்புடன் தலையை ஆட்டினார். அவரால் சொல்லெடுக்க முடியவில்லை.
“மருத்துவமும் விற்தொழிலும் வானியலும் துணைவேதங்கள் என்பதை எண்ணுக! அவை சிற்றுருக் கொண்டு வந்த வேதங்கள் என்றே நூலோர் உரைப்பார்கள். வேதம் அளிப்பதை துணைவேதம் அளிக்கமுடியும்” என்றார் முகுந்தர். “ராகவராமன் வில்லால் அரசியலை அறிந்தான். அவன் எதிர்நின்ற ராவணப்பிரபுவோ வீணையால் அதை அறிந்தான்.” பிரதீபர் மீண்டும் தலையசைத்துவிட்டு “அடுமனையில்…” எனத் தொடங்க “நளன் களத்தை புரவியாலும் அவையை அடுமனையாலும் அறிந்தான் என்கிறார்கள்” என்றார் முகுந்தர்.
பிரதீபர் சினத்துடன் “அடுதொழில் துணைவேதமா?” என்றார். “எந்தக் கலையும் வேதம்துளித்து உருவானதே. எச்செயலும் முழுமையை நோக்கி தவமெனச் செல்லுமென்றால் கலையே” என்றார் முகுந்தர். “இது முதுமையின் மெத்தனம். அதை நிகர்நோக்கும் கனிவு என விளக்கிக் கொள்கிறீர்கள்” என்றபடி எழுந்து சென்றார் பிரதீபர். “நானும் இவ்வாறு எழுந்து சென்றவனே” என்று முகுந்தர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
அடுமனையாளனாகவும் கொட்டில்சூதனைப்போலவும் மாறிக்கொண்டே சென்ற ரிதுபர்ணன் ஓர் இடத்தில் அதன் எல்லையொன்றைக் கண்டதும் திரும்பி சினந்து பாகுகன்மேல் பாய்ந்தான். அவனை அறைந்தான், வசைபாடினான். அவன்மேல் உமிழ்ந்து எட்டி உதைத்தான். அடுமனையாளரும் சூதரும் அதை எப்போதும் அஞ்சியிருந்தனர். அவ்வச்சத்தாலேயே அவனை அவர்கள் அணுகவில்லை. பாகுகன் அதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. நாலைந்துநாள் ரிதுபர்ணன் அவனை வெறுத்து ஒதுக்குவான். காணும்போதெல்லாம் இழிவு செய்வான். கட்டு அறுந்து அவன் பாகுகனை தேடிச்சென்று மீண்டும் இணைகையில் அதுவரை நிகழ்ந்த தடமே பாகுகனில் எஞ்சியிருக்காது.
“இவனுடைய இந்த முழுப்பணிவுதான் எனக்குத் தேவையாக இருக்கிறதா? அவ்வாறென்றால் நான் ஆணவம்கொழுத்த கீழ்மகனா?” என்றான் ரிதுபர்ணன். முகுந்தர் “அல்ல, அரசே. நீங்கள் அனைவரையும் அவ்வாறு நடத்துவதில்லை. அவன் உங்கள் மறு எல்லை” என்றார். ரிதுபர்ணன் அவரை களைத்த விழிகளுடன் நோக்கினான். “அரசே, நீங்கள் மரபும் குலமும் நாடும் கொண்டு பிறந்தவர். கோல்கொண்டு அரியணை அமர்ந்து நாடாள்பவர். முழுமையான அரசர். நோக்குக, ஆணெனப் பிறந்த அனைவருமே சற்றேனும் அரசர்கள்தான். பணியாளரிடம், மனைவியிடம், மைந்தரிடம். குறைந்தது எளிய இரவலனிடமோ வளர்ப்புவிலங்குகளிடமோ அவன் சற்று அரசனாகி மீளமுடியும். பாகுகன் முற்றிலும் அரசனல்லன். உங்கள் ஈர்ப்பும் கசப்பும் அதனாலேயே” என்றார் முகுந்தர்.
“இவ்விளக்கங்கள் சலிப்பை அளிக்கின்றன. இது விளக்கப்படாமலேயே இருக்கட்டுமெனத் தோன்றுகிறது” என்றான் ரிதுபர்ணன். “அப்படியென்றால் நீங்கள் வினவவும்கூடாது” என்றபடி முகுந்தர் எழுந்துகொண்டார். ரிதுபர்ணன் எழுந்து அவருக்கு விடைகொடுக்கையில் “அது அவன் கையின் சமையல். அந்த மணம் பிறிதெவராலும் உருவாக்கப்பட இயலாதது” என்றான். அவரை முற்றிலுமாக மறந்து பீடத்தில் கிடந்த சால்வையை எடுத்தணிந்துகொண்டு நடந்தான். அவர் அவன் செல்வதை புன்னகையுடன் நோக்கி நின்றார்.
ரிதுபர்ணன் புரவிக்களத்திற்குச் சென்றபோது வார்ஷ்ணேயன் புரவியுடன் அவனுக்காக காத்திருந்தான். அவன் சவுக்கை கையில் எடுத்துக்கொண்டு சுற்றிலும் நோக்கி “பாகுகன் எங்கே?” என்றான். “அவனுக்கு இன்று காலைமுதல் காய்ச்சல் கண்டிருக்கிறது. எழ முடியவில்லை. ஜீவலன் உடனிருக்கிறான்” என்றான் வார்ஷ்ணேயன். “மருத்துவர்கள் நோக்கிவிட்டனரா?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “மருத்துவரிடம் சொல்லவே துருமர் சென்றிருக்கிறார்” என்றான் வார்ஷ்ணேயன்.
இரண்டு சுற்று புரவியோட்டி மீண்டபோது துருமன் வந்திருந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கும்போதே “ஒன்றுமில்லை, காய்ச்சல்தான். மருத்துவர் வந்துபார்த்து மூலிகைப்பொடி அளித்திருக்கிறார். வாற்றுச்சாறு அடுமனையில் கொதிக்கிறது” என்றான் துருமன். “காய்ச்சலுக்கு என்ன ஏது இருக்கமுடியும்?” என்று ரிதுபர்ணன் கேட்டான். துருமன் சிரித்து “அவனும் மானுடனே என்று காட்டுவதற்காக இருக்கலாம்” என்றான்.
மேலும் புரவி பயில அவனால் இயலவில்லை. அடுமனைக் கொட்டகையில் நார்க்கட்டிலில் கிடந்த பாகுகனை சென்றுநோக்கினான். விழிகள் சற்று வீங்கியிருந்தன. வாய் உலர்ந்து ஒட்டியிருந்தது. மூச்சில் நெஞ்சுக்குழி பதைத்தது. “நோக்குங்கள்…” என துருமனிடம் ஆணையிட்டுவிட்டு அவன் அரண்மனைக்கு சென்றான்.
அன்று அவையில் அவன் உளம் சொல்கொள்ளவில்லை. தன் அறையில் சென்றமர்ந்து தன்னுடன் பகடையாடினான். ஆட்டம் அகம் புகவில்லை. நிலையழிந்து அறையிலும் இடைநாழியிலும் சோலையிலும் சுற்றிவந்தான். ஏவலனை அனுப்பி காய்ச்சல் எப்படி இருக்கிறது என்று கேட்டுவரச் சொன்னான். “ஒருநாள் ஆகும் என்று மருத்துவர் சொன்னார். மருந்து அளிக்கப்படுகிறது” என்றான் ஏவலன். அன்றிரவு உறங்கப்படுத்தவன் மெல்லிய மயக்கத்திற்குப்பின் எழுந்துகொண்டு மீண்டும் மதுவருந்தினான்.
காலையில் ஒளியுணர்ந்து எழுந்தான். உடனே வாயிற்காவலனை அனுப்பி பாகுகன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துவரச் சொன்னான். எக்கணமும் பாகுகனே வந்துவிடக்கூடும் என அவன் எதிர்பார்த்தான். ஏவலன் திரும்பி வந்து “காய்ச்சல் அவ்வண்ணமே இருக்கிறது, அரசே. மருத்துவர்கள் வந்திருக்கிறார்கள்” என்றான். காலைப் பூசனைகளும் உணவும் முடிந்ததும் அவன் பாகுகனை பார்க்கச் சென்றான். முந்தையநாள் படுத்திருந்த அதே கோலத்தில் அவன் கிடந்தான். “ஏனென்று தெரியவில்லை, அரசே. மருந்தை உடல் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமருந்து அளிக்கவிருக்கிறோம்” என்றார் மருத்துவர்.
அவை நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவன் வந்து பாகுகனின் அருகில் நெடுநேரம் இருந்தான். அன்றிரவும் காய்ச்சல் நீடித்தது. மறுநாள் அவன் அனைத்தும் நலமடைந்துவிட்டிருக்குமென நம்ப விரும்பினான். உள்ளாழத்தில் அவ்வாறல்ல என்றது ஒரு மெல்லிய குரல். “மருந்துகள் என ஏதும் இனி அளிப்பதற்கில்லை, அரசே. உடல் முடிவெடுக்கக் காத்திருப்பதன்றி வேறுவழியில்லை” என்றார் மருத்துவர்.
“என்ன நோய்?” என்று அவன் கேட்டான். “நம்பமுடியாத அளவுக்கு வாதம் ஏறிநின்றிருக்கும் உடல் அவனுடையது. கபமும் பித்தமும் உடலில் உள்ளனவா என்றே ஐயமெழுவதுண்டு. முதல்முறை இவன் நாடியைப் பற்றியபோது நான் திடுக்கிட்டு எழுந்துவிட்டேன். மானுடவடிவில் எழுந்த ஏதோ காட்டுத்தெய்வமென்றே எண்ணினேன். வாதம் ஏழுமுறை முறுக்கப்பட்ட யாழ்நரம்புபோல் அதிர்ந்தது. இப்போது பித்தம் விழித்துக்கொண்டு பெருகி வாதத்தை எதிர்கொள்கிறது. கபம் தவித்துச் சுழிக்கிறது” என்றார் மருத்துவர்.
“இவ்வுடலில் என்ன நிகழ்கிறதென்று எங்களுக்கு புரியவில்லை. இது உயிர்துறக்க முடிவெடுக்கவில்லை என்று தெரிகிறது. அதுவே ஒரே ஆறுதல்” என்றார் பிறிதொரு மருத்துவர். அவன் “எதையாவது செய்யுங்கள். அயலக மருத்துவர்களுக்கு ஏதேனும் தெரியுமா என அறிந்துவர தூதர்களை அனுப்புங்கள். எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் நன்றே” என்றான்.
பன்னிரு நாட்கள் பாகுகன் கடும்காய்ச்சலிலேயே இருந்தான். அவனை நோக்கி நிற்கையில் அவன் உடல்வளைவுகள் சற்றே சீரமைவதுபோலத் தோன்றியது. மருத்துவர்கள் நம்பிக்கையிழந்தனர். “அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்டுவிட்டிருக்கிறது உடல். நாங்கள் தட்டித்தட்டி தளர்ந்துவிட்டோம்” என்றனர். அயலகத்து மருத்துவர்கள் வந்துகொண்டே இருந்தனர். அவன் உடலைக் கீறி நஞ்சுகளை செலுத்தினர். நாவில் பச்சிலைச்சாற்றைப் பூசினர். மூக்கிலும் பின் வாயிலும் மருந்துகளை செலுத்தினர்.
திரிகர்த்த நாட்டிலிருந்த ஒற்றனாகிய காகளன் அங்கே காளாமுகநெறியினரான மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும் அவரால் இயலக்கூடும் என்றும் பறவைச்செய்தியனுப்பினான். “அவர் இதற்கு நிகராக நோயுற்றிருந்த சிலரை எழுப்பியிருக்கிறார். அவரிடம் பேசினேன். காளாமுகர்களுக்கு கங்கையின் கரையில் ஒரு காட்டை அளித்து அங்கு பிற நெறியினர் நுழைவதை தடைசெய்தால் வருவதாக சொல்கிறார். அங்கு அவர்கள் கட்டும் ஆலயத்திற்கும் அவர்கள் அங்காற்றும் வழிபடுநெறிகளுக்கும் அயோத்தி காவலாகவேண்டும் என்கிறார்” என்றான். “அவ்வாறே ஆணை. அவர் வரட்டும்” என்றான் ரிதுபர்ணன்.
மேலும் பதினெட்டு நாட்களுக்குப்பின் வந்துசேர்ந்த காளாமுகர் இடைவரை விழுந்தலைந்த நீண்ட சடைத்திரிகளும் எரிவிழிகளும் கொண்டிருந்தார். புலித்தோலாடை அணிந்து உடலெங்கும் வெண்ணீறு பூசி நெற்றியில் மூவிழி வரைந்திருந்தார். இரு கைகளிலும் மணிகள் கட்டிய நீண்ட முப்புரிவேலும் மண்டையோட்டு இரவுக்கலமுமாக வந்து அரண்மனை முற்றத்தில் நின்றார். அவரை அழைத்துவந்த ஒற்றன் “அவர் கூரைகளுக்குக் கீழே நுழைவதில்லை. மண்ணிலன்றி படுப்பதில்லை” என்றான். பிரதீபர் பதற்றத்துடன் ஓடிச்சென்று முகுந்தரிடம் சொல்ல அவர் கைகூப்பியபடி வந்தார். சுடலையரின் காலடிகளைத் தொட்டு சென்னிசூடி “தங்கள் கால்களால் ராமனின் நகர் தூய்மையுறட்டும், சிவனே” என்றார்.
அவர் பாகுகனை நாடி நோக்கிக்கொண்டிருந்தபோது ரிதுபர்ணன் வந்தான். அவர் நோக்கி முடித்து எழுந்துகொண்டு “மூன்று நாட்களில் எழுவான்” என்றார். “என்ன நோய் என்று தெரியவில்லை என்றார்கள்” என்றான் ரிதுபர்ணன். காளாமுகர் “நாகநஞ்சு உடலில் ஏறியிருக்கிறது. அதை உடல் எதிர்கொள்கிறது” என்றார். “நஞ்சுண்டனின் மருத்துவம் எங்களுடையது. விரைவில் இவன் அதை கடக்கச்செய்வேன். என் கோரிக்கைகளை நிறைவேற்றுக!” ரிதுபர்ணன் தலைவணங்கி “அது என் சொல்” என்றான்.
காளாமுகரின் மருத்துவம் என்னவென்று பிற மருத்துவர்களால் கண்டடைய முடியவில்லை. அவை பெரும்பாலும் உலர்மூலிகைகள், வேர்கள், பூஞ்சைப்பொடிகள். அரிதாக சில வேதிப்பொருட்கள். முன்னிரவில் காட்டுக்குள் சென்று சில மருந்துகளை கொண்டுவந்தார். அவற்றை தீயிலிட்டு புகைஎழுப்பி பாகுகன் முகரச்செய்தார். அவன் அதில் மயங்கி ஆழ்மூச்சிழுக்கத் தொடங்கியபின் அவன் இடக்கையைப் பற்றியபடி அருகே அமர்ந்து அவனிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தார். அவர் சொல்வன எதையும் அவன் கேட்டதாகத் தெரியவில்லை. அப்பாலுள்ள அறைகளில் இரவுறங்கியவர்கள் விழிக்கும்போதெல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருந்த ஒலியை கேட்டனர். தவளைக்குழறல்போல அவர் ஒரே சொல்லையே சொல்லிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. புலரியில் அவர் கிளம்பிச்சென்று மீண்டும் இரவில் திரும்பிவந்தார்.
ஏழு நாட்களுக்குப் பின் பாகுகன் கண்விழித்தான். சிவந்த கண்கள் கலங்கி நீர்வழிய உதடுகள் பொருளில்லாமல் ஏதோ சொல்லை கூறிக்கொண்டிருக்க அவன் இரு கைகளையும் விரித்து வானிலிருந்து விழுந்தவன்போல படுத்திருந்தான். அவன் விழித்துக்கொண்ட செய்தியைக் கேட்டு ஓடிவந்த ரிதுபர்ணன் அவன் தன்னை அடையாளம் காணவில்லை என்பதைக் கண்டு திகைத்தான். அவனுடைய முகமும் உடலும் அவற்றுள்ளிருந்த சிறுவனை களைந்துவிட்டிருந்தன. அவன் சொல்லிக்கொண்டிருப்பதென்ன என உதடுகளைக்கொண்டு உய்த்தறிய ரிதுபர்ணன் முயன்றான். அது ஒரு பெயரோ எனத் தோன்றியது.
மேலும் இரண்டு நாட்களில் அவன் எழுந்தமர்ந்தான். இன்னொருநாள் கடந்தபோது பழைய பாகுகன் திரும்பிவந்தான். ஆனால் அவன் துள்ளலிலும் சிரிப்பிலும் ஏதோ ஒன்று குறைவதாக ரிதுபர்ணன் எண்ணினான். அவ்வெண்ணம் ஓரிரு நாட்களிலேயே மறைய அனைத்தும் முன்பிருந்ததுபோல் ஆயின. அவன் பாகுகனுடன் புரவியாடவும் அடுமனைகூடவும் தொடங்கினான். அவன் நோயுற்றிருந்த நாட்களில் தான் எண்ணி அஞ்சியது எதை என அவன் ஒருமுறை நினைவுதுழாவினான். அரிதெனக் கிடைத்த ஒன்றை இழப்பதைப்பற்றி மட்டுமே அவன் எண்ணியதாகத் தோன்றியது.
அரசனின் ஆணைப்படி கங்கைக்கரையிலிருந்த மோதவனம் என்னும் காடு காளாமுகர்களுக்கு அளிக்கப்பட்டது. கங்கை வழியாக ஒவ்வொருநாளும் அங்கே காளாமுகர்கள் வரலானார்கள். அங்கே ஆவுடை அற்ற சிவக்குறி ஆளுயரத் தூண்வடிவில் நிறுவப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொருநாளும் அங்கே பலிபூசனை நிகழ்வதாகவும் ஒற்றர்கள் சொன்னார்கள். தலைக்கொடைப் பூசனையும் நிகழ்வதாகச் சொன்ன ஒற்றன் “தலைகொடுப்பதற்கென்றே நோன்புநோற்று காந்தள் மாலைசூடி வந்துசேர்கிறார்கள் கருமையெதிர்வோர்” என்றான்.
மூன்று மாதங்களுக்குப்பின் அவன் கங்கைக்கரையில் வேட்டைக்குச் சென்றிருக்கையில் அங்கே தன் மாணவர்களுடன் அமர்ந்திருந்த காளாமுகரை கண்டான். சென்று அவர் கால்தொட்டு வணங்கினான். அவனை சிதைச்சாம்பலிட்டு வாழ்த்திய அவர் “நஞ்சுகொண்டோன் எவ்வண்ணம் இருக்கிறான்?” என்றார். “முன்பிருந்ததுபோலவே” என்றான் ரிதுபர்ணன். அவர் புன்னகைத்து “மாற்றுரு கொண்டவர் அதைத் துறப்பதற்குத் தயங்குவர்” என்றார். “ஏனென்றால் துறக்கையில் அவர்கள் ஒரு வாழ்க்கையை இழக்கிறார்கள்.”
“மாற்றுருவா?” என்றான் ரிதுபர்ணன். “ஆம், அவன் உடல் நாகநஞ்சால் அவ்வண்ணம் ஆகியிருக்கிறது. அந்த நஞ்சை முற்றிலும் நீக்கும் மருந்தை அவனிடம் அளித்தேன். சிறுபளிங்குச் சிமிழிலிருக்கும் அது தசபாஷாணம். அவனை நாற்பத்தொரு நாட்களில் முன்பிருந்த வடிவில் ஆக்கும்” என்றார் காளாமுகர். “அவன் அதை உண்ணவில்லையா?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அது தனக்கு வேண்டாம் என்றும் இன்றிருக்கும் உருவும் இயல்புமே தனக்கு இனியவை என்றும் சொன்னான்” என்றார் அவர்.
“அவன் முன்செல்ல அஞ்சி நின்றுசுழலும் ஓடைபோல. அவன் உடலில் இருக்கும் குறுகலும் வளைவும் அதனாலேயே. முடிவின்றிச் சுழிக்க இயலும், மண்துளைத்து பாதாளங்களுக்குச் செல்லமுடியும். என்றால், இவன் யோகி அல்ல” என்றார் காளாமுகர். ரிதுபர்ணன் “இன்று அவன் எளிய விலங்கென்றும் அறியாச் சிறுவனென்றும் இருக்கிறான்” என்றான். “ஆம், நான் அவனிடம் சொன்னேன். எப்போது அதன் எல்லையை காண்கிறானோ அப்போது அந்த மருந்தை உண்ணுக என்று அளித்தேன்.”
ரிதுபர்ணன் சற்றுநேரம் அத்தருணத்தை தன் எண்ணத்தில் ஓட்டிவிட்டு “அவன் உங்களிடம் என்ன சொன்னான்?” என்றான். காளாமுகர் நகைத்து “அன்றன்று இருத்தல் என்பதற்கப்பால் வாழ்வதற்கென ஏதேனும் பொருள் இருக்க இயலுமா என்றான். இறப்பை அணுகுதல் என்றல்லாமல் இளமை முதிர்வதற்கு என்ன இலக்கு என்றான். நான் அவனிடம் உனக்கான விடையை நீ கண்டடைக. அத்தருணம் அமைக என வாழ்த்தி விடைகொண்டேன்” என்றார்.
ரிதுபர்ணன் பெருமூச்சுடன் எழுந்துகொண்டான். “விந்தை! அவன் எதை கண்டடையக்கூடும்?” என்றான். காளாமுகர் மீண்டும் உரக்க நகைத்தார்.
ஆபர் எழுந்துகொண்டு வணங்கி “நளமகாசயப் பிரபாவம் என்னும் நூலில் உள்ள செய்தி இது. இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் திறந்துகொள்பவை” என்றார். “ஆம், ஆகவேதான் இக்கதைகளை நான் மீளமீளக் கேட்கிறேன்” என்று குங்கன் சொன்னான். “ஒருமுறை சொல்லப்பட்ட கதை மீண்டும் வருவதில்லை.” ஆபர் “சொல்பவர் எவர், அவருடைய மரபு எது என்பதே கதையை அமைக்கிறது” என்றார்.
விராடர் “கார்க்கோடகனால் நஞ்சூட்டப்பட்ட நளன் உருக்குறைகொண்டு பாகுகன் என்ற பேரில் ஆண்டுக்கு நூறு பொன் பெற்றுக்கொண்டு ரிதுபர்ணனின் அரண்மனைக் கொட்டிலில் புரவிப்பேணுநனாகவும் அடுமனையாளனாகவும் சேர்ந்தார் என்றுதான் நான் கேட்டிருக்கிறேன்” என்றார். “அங்கு அவர் எவரிடமும் விழிகொடுத்து உரையாடவில்லை. விழிதாழ்த்தி நிலம்நோக்கியபடி எப்போதும் தனியாக அமர்ந்திருந்தார். தனித்து இருள்மூலைகளில் துயின்றார். கொட்டிலில் புரவிகளுடன் மட்டும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். அடுமனையில் விழிசரித்து அடுப்பில் கொழுந்தாடும் அனலையே நோக்கிக்கொண்டிருந்தார்.”
ஆபர் “ஆம், அதுவே பொதுவாகப் பேசப்படும் கதை” என்றார். விராடர் “அவர் உடல் பலமடங்கு எடைகொண்டுவிட்டதைப் போலிருந்தது என்பார்கள். அது அவர் உடலில் நிழலெனக் கூடியிருந்த கலியின் எடை. அவர் நடந்த இடத்தில் காலடித் தடங்கள் ஆழ்ந்திறங்கியிருந்தன. அவர் ஒருமுறை இரும்புக் கலமொன்றை உதைத்தபோது அது நசுங்கியது. புரவிப்பயிற்றுநன் ஆயினும் அவர் புரவியூர்வதே இல்லை. அவர் உடலெடையை அவற்றால் தாளமுடியாது” என்றார். ஆபர் நகைத்து “ஆம், அவர் உடலில் இருந்து எழுந்த நிழல் தனியசைவுகள் கொண்டிருந்தது. அவர் துயில்கையில் அவர் உடலில் இருந்து எழுந்து வளர்ந்து கூரைமேல் படர்ந்து கரிய ஆலமரமென விழுதுபரப்பி விண்சூடி நின்றிருந்தது என்கின்றன அக்கதைகள்” என்றார்.
“அவர் எச்சொற்களையும் செவிகொள்வதில்லை என்றாலும் விதர்ப்பநாட்டு இளவரசி தமயந்தியைப்பற்றிய செய்திகள் பேசப்படும்போது மட்டும் அவர் உடலசைவுகள் மாறுபடுவதை அவர்கள் கண்டடைந்தனர். அவர் கையில் சட்டுவம் விரைவழியும். கலம் ஒலியெழுப்பும். பெருமூச்சுடன் அவர் அங்கிருந்து விலகிச்செல்வார். தேடிச்சென்றால் தன் வழக்கமான அறைமூலையில் இருளில் முழங்கால்களில் முகம் பதித்து அவர் அமர்ந்திருப்பதைக் காணமுடியும்” என விராடர் குங்கனிடம் சொன்னார்.
கதை அவர் முகத்தை மலரச் செய்தது. ஆர்வத்துடன் எழுந்து “அவர் எப்போதும் உதடுகள் மட்டும் அசைய ஒரு சொற்றொடைரை சொல்லிக்கொண்டிருப்பதை அவர் தோழர்களான வார்ஷ்ணேயனும் ஜீவலனும் கண்டனர். அது என்ன என்று அறிய அவர்கள் முயன்றனர். அவரை அணுகுவதே கடினமாக இருந்தது” என்றார். “ஒருநாள் அயலகச்சூதன் ஒருவன் உணவுக்கூடத்தில் பேசுகையில் விதர்ப்பநாட்டு தமயந்தியை காட்டில் இருந்து பாஸ்கரரின் மாணவர் பரர் அழைத்து வந்ததைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தான். அன்றுதான் பாகுகன் உளமுடைந்து அழுததை அவர்கள் கண்டார்கள். ”
“தமயந்தி காட்டில் வழிதவறி சித்தம்சிதைந்து அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார். தன்னை நாகங்கள் வழிதவறச் செய்வதாகச் சொன்னார். பாஸ்கரர் அவரை தன் தவச்சாலையில் தங்கவைத்தார். சில நாட்களில் அவர் சித்தம் தெளிந்து புன்னகைக்கத் தொடங்கினார். பாஸ்கரரிடம் மட்டும் தான் யார் என்று அவர் சொன்னார். அவரை அவர் கலிங்க வணிகர் பூமிகரிடம் ஒப்படைத்து விதர்ப்பத்திற்கு அனுப்பிவைத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே யானைக்கூட்டம் ஒன்றால் அந்த வணிகக்குழு சூறையாடப்பட்டது. அதிலிருந்த எவரும் எஞ்சவில்லை. நாய்கள் உண்ட வெள்ளெலும்பு மிச்சத்தையே காவலர் கண்டடைந்தனர்.”
“தமயந்தியும் அவ்வெலும்புகளில் ஒன்றெனக் கிடந்தார். பாஸ்கரர் தன் மாணவர் பரரை அனுப்பி அவருக்கு மட்டும் அருகிருந்த ஓடையில் நீர்க்கடன் செய்து விண்ணேற்றும்படி ஆணையிட்டார்” என்றார் விராடர். “அன்றிரவு அடுமனையாளர் மெல்லிய குரலில் எழுந்த ஒரு பாடலைக் கேட்டனர். அவர்கள் வெளியே சென்று நோக்கியபோது நிழல்களாடிய முற்றத்தில் இருளில் மறைந்தவனாக அமர்ந்து பாகுகன் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாடலை இளமையில் நான் பாடுவதுண்டு.”
விராடர் தலையைத் தட்டி நினைவுகூர முயன்றபின் சிரித்து “மறந்துவிட்டேன். கலியின் ஆற்றலைப்பற்றிய பாடல் அது” என்றார். ஆபர் “இக்கதை கலிதேவமகாத்மியம் என்னும் குறுங்காவியத்தில் இருந்து செவித்தொடராக மாறி நம் குடிகளிடம் வாழ்கிறது. அனைத்தும் கலியாலேயே என்பது அதன் விளக்கம்” என்றார். “அந்தக் கதை சொல்வது இதுதான். பெண்டிர் நீராடும்போதும் தனியறையில் ஆடைமாற்றும்போதும் கணவரே ஆனாலும் ஆண்கள் அவர்களை நோக்கக் கூடாது. நளன் காமமிகுதியால் ஒருநாள் தமயந்தி ஆடைமாற்றும்போது சாளரவிரிசலினூடாக பார்த்தார். பகலில் காகங்களாகவும் இரவில் வௌவால்களாகவும் வானில் பறந்துகொண்டிருக்கும் கலி அப்போது அவரை பார்த்தான். அவருடன் நிழலென சேர்ந்துகொண்டான்.”
“தமயந்தியின் அறைக்குள் நளன் பார்த்த காட்சி அவளுடையதல்ல, கலியால் காட்டப்பட்டது. அந்தக் கணத்தில் இருந்து ஏழரை ஆண்டுகள் கலி அவருடன் வாழ்ந்தது” என்றார் ஆபர். விராடர் “ஏழரை ஆண்டுகளில் கலி நீங்க முகிலில் இருந்து கதிரவன் என அவர் மீண்டார்” என்றார். ஆபர் எழுந்துகொண்டு “ஆனால் கதைகள் ஒன்றுக்கொன்று பின்னிக்கொள்கின்றன. நளமகாசயப் பிரபாவத்தில் நளன் தன் கனவுகளில் எடைமிக்க தனித்த துயருற்ற மனிதனாக இருக்கிறார்” என்றார்.
குங்கன் நகைத்து “கலிமகாத்மியத்தில் அவர் தன் கனவில் எடையற்ற தும்பியென பறந்தலைந்திருக்கலாம்” என்றான். ஆபர் உடன் நகைக்க இருவரையும் மாறிமாறி நோக்கினார். “வருகிறேன், அரசே” என்று ஆபர் விடைகொண்டார்.