நீர்க்கோலம் - 79
78. காட்டுக்குதிரை
ரிதுபர்ணன் அரியணையில் அமர்ந்திருக்க அவை நடந்துகொண்டிருந்தது. தன் மீசையை நீவியபடி அவன் அவைநிகழ்வுகளை கேட்டுக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே அவன் உள்ளம் முழுமையாக அதிலிருந்து விலகிவிட்டது. அவை தொடங்கியபோது அவன் ஆர்வத்துடன் உளம்கொண்ட செய்திகள்தான் அவை. ஒரு கட்டத்தில் அதில் என்ன இயலும் என்ன இயலாதென்பது தெளிவானதுமே அவன் விலகிக்கொண்டான். ஆனால் அவையினர் அதன் பின்னரே பேசத்தொடங்கினார்கள்.
விதர்ப்பத்தில் குண்டினபுரியை கைப்பற்றிய ஃபீலர்களின் அரசனான பீமத்துவஜன் தந்தை பீமகரை சிறை வைத்திருந்தான். முறைப்படி முடிசூடிய பைகர் குலத்து பீமபலன் மாளவத்தின் எல்லையில் சுஃபலம் என்னும் கோட்டையில் தன் படைகளுடன் ஒளிந்திருந்தான். எட்டு நாட்களுக்கு முன்னர் பீமகர் குண்டினபுரியிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்தி வந்தது. பீமத்துவஜன் தந்தையை நாடெங்கிலும் ஒற்றர்களையும் படைவீரர்களையும் அனுப்பி தேடிக்கொண்டிருந்தான். செய்தியை அறிவித்த ஒற்றன் “பீமத்துவஜன் நிலைகுலைந்திருக்கிறான். ஃபீலர்கள் வெறிகொண்டு அலைகிறார்கள்” என்றான்.
அச்செய்தியைக் கேட்டதும் அது பீமத்துவஜனின் ஒரு சூழ்ச்சி என்றே அவையினர் ஐயப்பட்டனர். “அவன் தந்தையை கொன்றிருப்பான். ஐயமே இல்லை. அவர் அவனை ஏற்கவில்லை என்பது அவன் குடிகளனைவருக்கும் தெரியும். ஏற்க வைக்க முயன்றிருப்பான். முடியாதென்றானபோது கொன்றிருப்பான்” என்றார் சிற்றமைச்சர் பிரதீபர். ஆனால் முந்தையநாள் பீமகர் தன் முதல் மைந்தன் பீமபலனுடன் சென்று சேர்ந்துவிட்டதாக செய்தி வந்தது.
பிரதீபர் “இது நான் எதிர்பாராதது. இதை யார் நிகழ்த்தினார்கள் என்று தெரியவில்லை. எவராக இருந்தாலும் போர் முடிவுற்றது. இன்னும் சில மாதங்களுக்குள் குண்டினபுரியை பீமபலன் வெல்வான்” என்றார். ரிதுபர்ணன் “ஆனால் இப்போது அவனிடம் படை என பெரிதாக ஏதுமில்லை. விதர்ப்பம் ஆற்றல்கொண்டு மீள்வதை பிற நாடுகள் ஒப்பவும் போவதில்லை” என்றான். பிரதீபர் “ஆம், ஆனால் மக்களின் ஆற்றலே இறுதியாக வெல்லும். பீமத்துவஜன் சிறிதுகாலம் நின்று போராடுவான். ஆனால் அவனால் ஒருபோதும் அரியணையில் நிலைக்க முடியாது” என்றார்.
அதை படைத்தலைவன் ருத்ரன் மறுத்துரைத்தான். பிரதீபர் கிளர்ந்தெழுந்து மக்கள் வல்லமையை வலியுறுத்த ருத்ரன் வாளின் ஆற்றலென்ன என்று விளக்கினான். இரு சாராரும் அவையை பங்கிட்டுக்கொள்ள ரிதுபர்ணன் இயல்பாக பாகுகனைப்பற்றி எண்ணலானான். அவனுடைய சிரிப்பும் துள்ளலும் நினைவிலெழ அவன் முகம் புன்னகையில் விரிந்தது. சுருங்கிய முகத்தில் பெரிதாகத் தெரிந்த பற்கள் எப்போதுமே சிரிப்பவை போலிருந்தன. கைகளையும் கால்களையும் ஆட்டி அவன் நடப்பதைக் கண்டால் அனைவர் முகமும் சிரிப்பில் விரிந்தது. அச்சிரிப்பை அவனும் எடுத்துக்கொண்டான். நாளடைவில் சிரிக்க வைப்பதற்காகவே நடந்தான்.
குதிரைக்கொல்லையில் அன்று புலரியில் அவனை பார்த்தபோது சின்னஞ்சிறிய மலர்கள் மண்டிய புல்வெளியில் பறந்த சிறிய வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்க துரத்தி ஓடிக்கொண்டிருந்தான். அவனுடைய சிரிப்பொலி கேட்டுன் அவன் திரும்பிப்பார்த்தான். அருகே நின்றிருந்த வார்ஷ்ணேயன் “சிறுவனைப் போன்றவன். நேற்று ஒவ்வொரு கவளம் உணவையும் அள்ளி மேலே எறிந்து வாயால் அள்ளிப்பற்றி உண்டான். என்ன செய்கிறாய் என்று கேட்டேன். இப்படி உண்டு பார், சுவை மிகுந்து தெரியும் என்கிறான்” என்றான்.
ரிதுபர்ணன் புன்னகையுடன் “அவனை அழைத்து வா” என்றான். ஜீவலன் ஓடிச்சென்று பாகுகனை அழைத்துவந்தான். “என்ன செய்கிறாய்?” என்றான். “வண்ணத்துப்பூச்சிகளை பிடிக்கிறேன்” என்றான். “எதற்கு?” என்றான். “வெறுமனே…” என்றான் பாகுகன். “அதற்கென்ன இத்தனை ஓட்டம்?” என்றான் ரிதுபர்ணன். “நான் அவற்றை விரல்களால் பிடிக்க முயலவில்லை. அவற்றை அவ்வாறு பிடித்ததுமே அவை இறகுதிர்ந்து மீண்டும் புழுக்களாகிவிடுகின்றன. அவையே உளம்கொண்டு என் கைகளில் வந்து அமரவேண்டும். அதற்காக முயல்கிறேன்” என்றான்.
ரிதுபர்ணனின் புன்னகையைக் கண்ட அமைச்சரும் அவையினரும் அவர்கள் பேசியதை அவன் மிகவும் விரும்புவதாக எண்ணி ஊக்கம் கொண்டார்கள். “நாம் செய்யவேண்டியது ஒன்றே. இப்போதே படைகொண்டுசென்று பீமகரை ஆதரிப்போம். குண்டினபுரியை அவர் கைப்பற்ற உதவுவோம். மாற்றாக பெருஞ்செல்வத்தையும் வணிக உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்” என்றான் ருத்ரன். “அது எளிதல்ல. அதற்கு முன் நாம் பிற ஷத்ரிய அரசர்களின் ஒப்புதலை பெறவேண்டும்” என்றார் பிரதீபர். “ஆம், ஆனால் அது அவர்கள் கையில் நாம் பகடையாவதாக ஆகிவிடக்கூடாது.”
அவன் அதை வேறேதோ உள்ளத்தால் கேட்டுக்கொண்டிருந்தான். பின்னர் ஏன் இந்த எளிய சூதனை இத்தனை தொலைவுக்கு நினைவில்கொண்டிருக்கிறோம் என வியந்துகொண்டான். அந்த எண்ணம் எழுந்ததுமே உண்மையில் ஓராண்டாக பெரும்பாலான தருணங்களில் அவனைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தது. காலையில் எழுந்த சற்றுநேரத்திலேயே அவனைப்பற்றி ஏதேனும் ஓர் எண்ணம் வந்துவிடும். இரவில் ஒவ்வொன்றாக உளம்துழாவிச் சலித்து துயிலில் ஆழ்கையில் அவன் நினைவு ஒன்று எங்கேயோ எஞ்சியிருக்கும்.
பேச்சு ஓர் எல்லையை அடைந்தபோது அரைத்துயிலில் தாடை தளர்ந்து விழுந்து பல்லில்லாத வாய் திறந்திருக்க அமர்ந்திருந்த பேரமைச்சர் முகுந்தர் விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபின் “எண்ணவேண்டிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நாம் அரசரின் கருத்தையும் அறிய வேண்டியிருக்கிறது” என்றார். அனைவரும் அவனை நோக்க அந்த அமைதியைக் கேட்டு அவன் விழித்துக்கொண்டு “இப்போது நாம் எம்முடிவையும் எடுக்கமுடியாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் விதர்ப்பத்துடன் நாம் இணைந்தால் நிஷதபுரியை ஆளும் புஷ்கரன் அதை அவனுக்கெதிரான போர் என்று கொள்ள வாய்ப்புள்ளது. இன்றைய சூழலில் அவனுடைய சினத்தை எதிர்கொள்ளும் ஆற்றலுள்ள நாடல்ல கோசலம்” என்றான்.
ருத்ரன் “ரகுவும் திலீபனும் ஆண்ட மண். தசரதனும் ராமனும் கோல்கொண்டு அமர்ந்த அரியணை இது…” என தொடங்க “இவ்வகையான சொற்களை நான் பிறந்தபோதிருந்தே கேட்டுவருகிறேன். இவற்றுக்கு எந்தப் பொருளும் இல்லை. அன்று கங்கையே பெருவழி. இன்று கடல் திறந்துவிட்டிருக்கிறது. நாம் அன்னைமுலையில் தொங்கிக்கிடந்து உண்ணும் பன்றிக்குட்டிபோல கங்கையை ஒட்டி வாழும் சிறுநாடு. அன்னை குட்டிகளை பெருக்கிக்கொண்டே இருக்கிறாள்” என்றான். அவை அமைதியடைந்தது. ரிதுபர்ணனின் கசப்புநகை அனைவரும் அறிந்தது.
“அங்கே அனைத்தும் கலங்கித் தெளியட்டும். புஷ்கரனுக்கும் சதகர்ணிகளுக்கும் இடையே பூசல் தொடங்கவிருக்கிறதென்கிறார்கள் ஒற்றர்கள். புஷ்கரனை அவர்கள் அழித்தால் நாம் விதர்ப்பத்தை அணைத்துக்கொள்வோம்” என்றான். “மேலும் விதர்ப்பத்துக்கும் நமக்கும் நடுவே பல நாடுகள் உள்ளன. மகதமும், அங்கமும், சேதியும் நம்மைவிட வலுவான நாடுகள். நாம் அவற்றுடனும் நட்புடன் இருக்கவேண்டியிருக்கிறது.” ருத்ரன் “ஆம், மெய்” என்றான். “மச்சர்களும் நிஷாதர்களும் ஒருங்கிணைந்து வருகிறார்கள். பாணாசுரனின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது” என்றான் ரிதுபர்ணன். அவை “ஆம்” என்றது.
அவை கலைய ரிதுபர்ணன் கைகாட்டினான். சங்கொலியும் கொம்போசையும் எழுந்தன. ரிதுபர்ணன் எழுந்தபோது அவன் இடை வலித்தது. கைகால்கள் குருதிகட்டி எடைகொண்டிருந்தன. நீட்டி நீட்டி நடந்தான். அவன் இடைநாழியை அடைந்தபோது முகுந்தர் உடன் வந்துசேர்ந்துகொண்டார். “உச்சிக்குமேல் என்ன நிகழ்ச்சி?” என்றான். “அவந்தியின் தூதுக்குழு ஒன்று வந்துள்ளது. காமரூபத்து வணிகர்கள் எழுவர் சந்திக்க விழைகிறார்கள்.” ரிதுபர்ணன் “அவர்களை நாளை பார்க்கிறேன்” என்றான்.
“ஆணை” என்றார் முகுந்தர். ரிதுபர்ணன் சலிப்புடன் “இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பேசுவதெல்லாம் பொய் என உணர்ந்தும் எப்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். “அவர்கள் நடிக்கிறார்கள். கோசலம் ஒரு சிறுநாடு, செய்வதற்கேதும் இல்லாதது. அதை இவர்களனைவரும் அறிவார்கள். அவர்கள் ஏதேனும் செய்தாகவேண்டும். மெய் சொல்லவேண்டுமென்றால் இங்குள்ள அரசே ஒரு நடிப்புதான்” என்றார். ரிதுபர்ணன் நகைத்து “ஆம், அதை நானும் அறிவேன். எனக்கு அலுத்துவிட்டது” என்றான்.
முகுந்தர் புன்னகைத்து “ஆனால் பெரும்பாலான அரசுகளும் அரசவைகளும் அரசநிகழ்வுகளும் விழாக்களும் பொருளிலா நடிப்புகளே என நாம் ஆறுதல் கொள்ளலாம்” என்றார். “நான் அவைநிகழ்வுகளின்போது பாகுகனைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்” என்றான். “நான் ஏன் அவனை நினைத்துக்கொண்டிருக்கிறேன்? அதை எண்ணியபோதுதான் வியப்பாக இருந்தது.” முகுந்தர் “அது இயல்பு. நீங்கள் அவனாக மாறி நடிக்கிறீர்கள்” என்றார்.
ரிதுபர்ணன் நின்று “நானா?” என்றான். “அரசர்கள் அவ்வாறு செய்வதுண்டு. அவர்கள் கொண்டிருக்கும் சூடியிருக்கும் எதுவுமே இல்லாமல் வெறுமனே நின்றிருக்கும் கடையனில் கடையன் ஒருவனைக் கண்டு அவனாக மாறிக்கொள்வார்கள். அது அவர்களுக்கு அனைத்திலிருந்தும் கற்பனையில் ஒரு விடுதலையை அளிக்கிறது.” ரிதுபர்ணன் அவர் சொல்வதை எண்ணியபடி நடந்தான். “பாகுகனுக்கு உடலென்றும் ஒன்றில்லை. தன்னிடம் இல்லாதவற்றைப் பற்றிய எண்ணமும் இல்லை. எனவே முழு விடுதலையில் அவன் திளைக்கிறான்” என்றார் முகுந்தர்.
“ஆம், நான் அவனுடைய அந்த விடுதலையைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். புரவிகளுடன் வாழ்கிறான். அடுமனையில் சுவைகளை உருவாக்குகிறான். தான் இயற்றுகிறோம் என்னும் உணர்வோ வெல்லவேண்டும் என்னும் முனைப்போ இன்றி தன்னியல்பாலேயே செயலாற்றுகிறான்” என்றான் ரிதுபர்ணன். “அனைத்தையும் விளையாட்டாகவே செய்பவனை எதுவும் பற்றிக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது.”
அன்று மாலை அவன் புரவி பயிலச் சென்றபோது வார்ஷ்ணேயனும் ஜீவலனும் இளம்புரவி ஒன்றை பழக்கிக் கொண்டிருந்தார்கள். அவனைக் கண்டதும் வந்து பணிந்த ஜீவலனிடம் “பாகுகன் எங்கே?” என்று ரிதுபர்ணன் கேட்டான். “அடுமனையில் இருக்கிறான். இன்று கொற்றவை பூசனைக்கான சிறப்புச் சமையல்” என்றான் ஜீவலன். “அழைத்து வருக!” என்று அவன் ஆணையிட்டான். காலணிகள் அணிந்து சவுக்குடன் அவன் தேவிகை என்னும் புரவியை அணுகி அதில் ஏறப்போனபோது பாகுகன் ஓடிவந்தான். தொலைவிலேயே அவனுடைய சிரிப்புதான் தெரிந்தது. அகலில் சுடர்போல அவன் சிரிப்பு என்று ஜீவலன் ஒருமுறை சொன்னதை நினைவுகூர்ந்தான்.
பாகுகன் வந்து வணங்கி “அரசே, தாங்கள் மாலையில் வருவீர்கள் என்று சொல்லப்படவில்லை” என்றான். “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என்றான் ரிதுபர்ணன். பாகுகன் அதற்கு மகிழ்ந்து சிரித்து “இந்தப் புரவி இன்னும் பழகவில்லை. பழகிய பின்னர் இதுவே இங்கே மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று வார்ஷ்ணேயன் பிடித்திருந்த புரவியின் முதுகை தட்டினான். “ஏறிக்கொள்” என்றான் ரிதுபர்ணன். “இன்னும் அது பழகவில்லை” என்று ஜீவலன் சொல்வதற்குள் பாகுகன் அதில் ஏறிக்கொண்டான். ரிதுபர்ணன் புரவியைத் தட்டி அதை விரைந்தோடச் செய்தான். பாகுகன் உடன் தாவிவந்தான். புரவியின் கழுத்தளவே அவன் உயரமிருந்தான்.
“நீ எடையற்றவன்” என்றான் ரிதுபர்ணன். “புரவிகள் எடையை விழைபவை” என்று பாகுகன் சொன்னான். நிழல் ஒன்று உடன்வருவதுபோல பாகுகன் புரவியில் அவனைத் தொடர்ந்து வந்தான். எத்தனை சரியாக அவன் உடல் புரவியில் அமைந்திருக்கிறது! எந்த ஆணையுமில்லாமல் எண்ணத்தாலேயே புரவியை ஆள்கிறான். ரிதுபர்ணன் தன் குதிமுள்ளால் குத்தி புரவியின் விரைவை எண்ணியிராமல் கூட்டினான். அவன் புரவியுடன் மிகச் சரியாக உடன் பாய்ந்தது பாகுகனின் புரவி. அவன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தியபோது மிகச் சரியாக நின்றது.
அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே ரிதுபர்ணன் சென்றான். மிகச் சரியாக எப்படி அவனால் தொடர முடிகிறது, தன் புரவியையும் அவனே ஓட்டுவதுபோல. அருகே அமர்ந்திருப்பவன்போல தோளருகே தெரிந்தது அவன் முகம். “இன்று ஒரு புதிய அப்பம் செய்தேன். இலவங்கத்தின் இலையில் சுருட்டி ஆவியில் வேகவைக்கும் இனிப்பு. அந்தத் தைலமணத்துடன் வெல்லம் இணைகையில் அருஞ்சுவை. சிவசக்தி லயம் என்றார் சூதரான சாமர்” என்றான். அவன் மீண்டும் குதிமுள்ளால் புரவியைக் குத்தி பாயவிட்டான். அவனுடன் பாய்ந்து காற்றில் எழுந்துகொண்டே “ஆனால் தெற்கே இதில் தேங்காய் சேர்க்கிறார்கள். நான் பால்விழுதில் மாவை உருட்டினேன்” என்றான் பாகுகன்.
அவன் தன் எண்ணங்களை அறிந்ததுபோலவே தெரியவில்லை. இயல்பாக உடன் வருகிறான். அது எப்படி இயலும்? விளையாடுகிறானா? மிகத் திறமையாக நடிக்கிறானா? விழிகளில் சிறுவனுக்குரிய உவகை. அது ஒரு திரை. அவன் சிறுவனல்ல. நடு அகவையன். அச்சிரிப்புக்கும் குற்றுடலுக்கும் அப்பால் அவன் என்னை நோக்கிக் கொண்டிருக்கிறான். அவனை நோக்கி ஏளனம் செய்பவர்களை எல்லாம் அங்கு மறைந்திருந்து நோக்கி சிரிக்கிறான்.
ஏன் இத்தனை கசப்பு? இவனையே நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன் என இன்று உணர்ந்தபோதே இது தொடங்கிவிட்டது. இவனைப் பார்க்க இன்று வரலாகாதென்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் மதுவுண்டேன். ஆனால் அறியாமல் கிளம்பி வந்துவிட்டேன். மணிமுடியும் செங்கோலும் அரியணையும் பொன்னும் மணியும் குலமும் பெருமையும் இருந்தும் இவனிடம் தோற்றுக்கொண்டிருக்கிறேன்.
என்ன நிகழ்ந்ததென்று அவன் அறிவதற்குள்ளாகவே அவன் கால் நீண்டு பாகுகனின் புரவியின் வலதுமுன்னங்காலைத் தட்டி விலக்கியது. பயிலாப் புரவி துள்ளிக் கனைத்தபடி விழுந்து உருண்டு எழுந்து நின்று காலை உதறிக்கொண்டது. அது விழுவதற்கு ஒருகணம் முன்னரே அதன் மேலிருந்து குதித்து நிலத்தில் நான்கு காலடி வைத்து ஓடி அது எழுந்த அதே விரைவில் அதன் மேல் ஏறி அதை மீண்டும் செலுத்தி அவனருகே வந்தான் பாகுகன். “இன்னும் பழகாத புரவி… கால் தடுக்கிவிட்டது” என்றான்.
ரிதுபர்ணன் அவனை நோக்குவதை விலக்கினான். நெஞ்சு செவிகளிலும் வயிற்றிலும் அதிர்ந்து கொண்டிருந்தது. மூச்சை சீராக விட்டுக்கொண்டபோது மெல்ல மீண்டு வந்தான். ஒன்றும் நடவாததுபோல அவனுடன் இணைந்து வந்துகொண்டிருந்த பாகுகன் “ஆனால் இனிப்பு பொதுவாக ஆண்களுக்கு பிடிப்பதில்லை. நறும்பாக்கும் மதுவும் சுவையறியாதவர்களாக ஆக்கிவிட்டிருக்கின்றன. குழந்தைகள் இனிப்பை மட்டுமே விரும்புகின்றன. நல்ல சமையலை இளையோனும் கன்னியருமே அறிந்து சொல்லமுடியும், அரசே” என்றான்.
ரிதுபர்ணன் தன் புரவியை பீறிட்டுச் செல்லவைத்தான். அவன் காதுகளில் காற்று ஓசையிட்டது. குதிரையின் பிடரிமயிர் துடித்துலைந்தது. அதன் குளம்போசை அவன் நெஞ்சத் துடிப்புடன் இணைந்தது. இயல்பாக உடன் வந்துகொண்டே இருந்தான் பாகுகன். ஒரு கணத்தில் அவன் உடலெங்கும் சினமெழுந்து பெருகியது. கைவிரல்கள் நடுங்கி கடிவாளத்தை விட்டுவிடுவான் என்று தோன்றியது. புரவி அவனை விட்டுவிட்டு உருவிச்சென்றுவிட்டதென்றே எண்ணினான். உடன்வரும் அவனை விலக்கவேண்டும் என்று தோன்றியதுமே அவ்வெண்ணம் பெருகி ஒரு கணமும் அவனைத் தாளமுடியாதென்று தோன்றியது. நரம்புகள் இறுகி இறுகி உடைவதுபோல் விம்மின.
அவன் நிலத்தில் உடலறைய விழுந்தபோதுதான் அதை உணர்ந்தான். அகன்று செல்லும் அவன் குதிரையின் குளம்புகளின் அடிப்பூண்கள் தெரிந்தன. பாகுகன் தன் புரவியில் இருந்து இயல்பாக குதித்து அவனை நோக்கி வந்து “அரசே” என கைநீட்டினான். இரு புரவிகளும் அப்பால் விரைவழிந்து நின்று கழுத்தை வளைத்து திரும்பி நோக்கின.
“நாயே! நாயே!’ என்று கூவியபடி எழுந்த ரிதுபர்ணன் சவுக்கால் பாகுகனை மாறிமாறி அடிக்கத் தொடங்கினான். “அடிக்காதீர்கள்… அடிக்காதீர்கள்… அரசே! அரசே! நான் ஒன்றும் செய்யவில்லை… அரசே!” என கூவியபடி பாகுகன் அடிகளை கையால் தடுத்தான். ரிதுபர்ணன் வார்ஷ்ணேயனை நோக்கி “டேய், இவனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்றான். அவன் “அரசே, அவன் ஒன்றுமறியாதவன், பேதை” என்றான். “உன்னை கழுவிலேற்றுவேன். இது என் ஆணை!” என்றான் ரிதுபர்ணன்.
வார்ஷ்ணேயனும் ஜீவலனும் சேர்ந்து பாகுகனை பிடித்தனர். அவன் விசும்பி அழுதபடி “நான் ஒன்றும் செய்யவில்லை… நான் ஒன்றும் செய்யவில்லை” என்று கைகூப்பி நின்றான். அவர்கள் அவன் கையை பின்னால் பிடித்துக் கட்டினர். “அவனை அந்தத் தறியில் கட்டுங்கள்…” என்றான் ரிதுபர்ணன். அவர்கள் அவனை கட்டப்போக “திருப்பிக் கட்டுங்கள். அவன் முதுகு எனக்குத் தேவை” என்றான் ரிதுபர்ணன்.
அவர்கள் அவனைக் கட்டியதும் ரிதுபர்ணன் சவுக்கால் வெறியுடன் அடிக்கலானான். அடிக்க அடிக்க வெறி ஏறிவந்தது. அவனுள் இருந்து வெளிவந்து நின்று எக்களித்தது அவன் அறியாத பிறிதொன்று. சவுக்கு முதுகுத்தோலில் விழுந்து நக்கிச் சுருள்வதை, குருதி ஊறிக் கசிந்து வழிவதை கண்டான். குருதிமணம் எழுந்ததும் மூச்சிரைக்க சவுக்கை வீசினான். “டேய், அவனை அவிழ்த்துவிடுங்கள்” என்றான். அவர்கள் சென்று அவன் கட்டை அவிழ்த்தனர். கதறியழுது ஒலியடங்கி உடல் நடுங்கிக்கொண்டிருந்தான் பாகுகன்.
“நாயே, உன் ஆணவத்தை என்னிடம் காட்டுகிறாயா? நீ என்ன குதிரைத் தெய்வமா?” என்று ரிதுபர்ணன் உறுமினான். “வந்து என் காலை நக்கு. நீ நாய்… என் காலணியை நக்கி புழுதியை களை…” இரு கைகளையும் ஊன்றி அருகே வந்த பாகுகன் அவன் காலணியை நாக்கை நீட்டி நக்கினான். அவன் கண்ணீர் வழிய நக்குவதை குனிந்து நோக்கிக்கொண்டு ரிதுபர்ணன் அசையாமல் நின்றான். நாக்கு அவன் உடலில் படவில்லை. ஆனால் ஒருகணம் சிவப்பாக அது தெரிந்து மறைந்தபோது அவன் முதுகுத்தண்டு குளிர்ந்தது.
தலையைத் திருப்பிக்கொண்டு கைவீசி “போ” என்று ரிதுபர்ணன் சொன்னான். பாகுகன் கண்ணீர் கோடு விழுந்த கன்னங்களுடன் நிமிர்ந்து புன்னகை செய்து “போகலாமா?” என்றான். “போடா” என்று ரிதுபர்ணன் கூவினான். பாகுகன் துள்ளி எழுந்து ஓடி ஜீவலன் அருகே சென்று அவன் பின்னால் ஒளிந்துகொண்டான். அந்த அசைவு ரிதுபர்ணனை புன்னகைக்கச் செய்தது. ஜீவலனும் கண்ணீர் நிறைந்த கண்களுடன் புன்னகை செய்தான்.
“ஆம், அது நிஷாதர்களின் இயல்பு” என்றார் முகுந்தர். “அவன் சூதனல்ல. சூதர்கள் அவ்வாறு முற்றடிமையென்று ஆகமாட்டார்கள். கான்மக்கள் விலங்குகளைப் போன்றவர்கள். நேற்றும் நாளையுமில்லாமல் இன்றில் வாழ அவர்களால் இயலும். அரசே, விலங்குகளால் தங்கள் இயல்புகளில் இருந்து தாங்களே விடுவித்துக்கொள்ள இயலாது.” அவன் குடித்த மது எதுக்களித்து வாயில் வந்தது. அதை தென்னாட்டு கம்பளம் விரிக்கப்பட்ட தரையில் துப்பினான்.
“அரசன் தன் செயலுக்காக வருந்தலாகாது. எதுவாக இருந்தாலும்” என்றார் முகுந்தர். “ஏனென்றால் பின்னர் வருந்த நேருமோ என அஞ்சி கடுஞ்செயல் புரியாதொழிவான். அறம் காக்கும் அவன் வாள் கூர்மழுங்கும்.” “நான் வருந்துவது நான் ஏன் அதை செய்தேன் என்று எண்ணியே” என்றான் ரிதுபர்ணன். “நீங்கள் உங்கள்மேல் வீசிய சவுக்கு அது” என்றார் முகுந்தர். அவரையே கூர்ந்து நோக்கினான். பின் கள்மயக்கில் சிரித்து “அந்தணரின் வழிமுறை இது. ஒவ்வொன்றையும் தத்துவமாக ஆக்கிக்கொள்வார்கள். அதன்பின் ஏட்டில் எழுதிவிட்டு விலகிச் செல்வார்கள்” என்றான். முகுந்தர் புன்னகைத்து “எங்கள் பணியும் அதுவே” என்றார்.
“அவன் ஏன் அப்படி இருக்கிறான்? கீழிறங்கிக் கீழிறங்கி விலங்கென்றே ஆகிவிட்டிருக்கிறான்” என்றான் ரிதுபர்ணன். அவன் அதையே சொல்லிக்கொண்டிருப்பதை உணர்ந்த முகுந்தர் எழுந்துகொண்டு “நான் வருகிறேன். எனக்கு நாளை நிறைய பணியிருக்கிறது” என்றார். “அமைச்சரே, நான் கேட்பது ஒன்றே. ஒரு மனிதன் இத்தனை கீழிறங்க முடியுமா? தன்முனைப்பை ஒழியலாம். தன்மதிப்பைக்கூடவா முற்றொழிய இயலும்?” முகுந்தர் “அவ்வாறு இருப்பது அவனுக்கு எளிதாக இருக்கிறதுபோலும். சற்றேனும் தன்மதிப்பிருந்தால் அந்த உடலுக்காக அவன் நாணம் கொள்வான். நகைப்போர்மேல் வஞ்சம் திரட்டிக்கொள்வான். இன்றிருக்கும் உவகையை முழுமையாக இழந்து கசந்து கொந்தளித்துக்கொண்டே இருப்பான்” என்றார். “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி வெளியேறினார்.
ரிதுபர்ணன் அவர் செல்வதை நோக்கியபடி தலை ஆடிக்கொண்டிருக்க அமர்ந்திருந்தான். “அவர் சென்றுவிட்டார். அவருக்குப் புரியாது” என்றான். எதுக்களித்த மதுவை துப்பிவிட்டு “அவன் எவ்வளவு தொலைவுக்கு செல்வான்? புழுவென்றாகி மண்ணில் நெளிவானா?” என்றான். சேடியை கைதட்டி அழைத்து மீண்டும் மது கொண்டுவரச் சொன்னான். அவள் தயங்க “ஆணை இது, இழிமகளே!” என்று கூவினான். அவள் தலைவணங்கி மீண்டும் கொண்டுவந்த மதுவை வாங்கி ஒரே மிடறில் குடித்தான்.
சற்றுநேரம் சுவரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். எதை எண்ணிக்கொண்டிருந்தேன்? ஆம், அவன் எதுவரை செல்வான்? யார்? அவன் உடல் வலப்பக்கமாக இழுபட்டது. வலத்தோள் இரும்பாலானதாக ஆகிவிட்டதுபோல. இருமுறை ஆடியபின் சரிந்து கையை ஊன்றி அமர்ந்து “ஆம், அவன் நெடுந்தொலைவு செல்ல முடியாது” என்றான். மீண்டும் ஏதோ சொல்லியபடி படுத்து துயின்றான். ஆனால் விழிகள் முழுமையாக மூடாததனால் அவன் கண்களுக்குள் புகுந்த ஒளி உள்ளே வெயிலைப் பரப்பியது. அவன் எரிவேனிலில் விடாய் தவிக்க சென்றுகொண்டிருந்தான். சூழ்ந்து மலைச்சரிவுகள் கொதித்துக்கொண்டிருந்தன.
விழித்துக்கொண்டு எழுந்து வாயை துடைத்தான். விடாயை உணர்ந்ததும் கையூன்றி எழுந்து நீர்க்குடுவையை இழுத்து எடுத்து குடித்தான். நீர் உடலில் நிறைந்தாலும் விடாய் அவ்வாறே இருப்பதுபோலிருந்தது. ஆனால் தலையின் எடை குறைந்திருந்தது. சுவரைப் பற்றியபடி நின்று ஆடையை சீரமைத்துக்கொண்டான். அவன் வெளியே சென்றபோது காவலன் தலைவணங்கினான். சுவரைப் பிடிக்காமலேயே நடக்கமுடிந்தது. காற்று வீச உடல் எடையில்லாமல் ததும்புவது போலிருந்தது.
அவனுக்குப் பின்னால் காவலர் இருவர் ஓசையில்லாமல் வந்ததை அவன் அறிந்தான். இடைநாழியில் நடந்து படியிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தான். குளிர்ந்த இரவுக்காற்று அவன் சித்தத்திலும் பட்டது. உடலெங்கும் பரவியிருந்த வெம்மை குறைவது போலிருந்தது. அடுமனை நோக்கி சென்றான். அவ்வேளையில் அங்கே எவருமே விழித்திருக்கவில்லை. அடுமனையை ஒட்டிய திறந்த கொட்டகையில் அடுமனைச் சூதர் துயின்றுகொண்டிருந்தனர். அவன் படிகளில் ஏறிய ஒலி கேட்டு வார்ஷ்ணேயன் விழித்துக்கொண்டான். ஓசையின்றி தலைவணங்கி விலகி நின்றான்.
தரையில் குப்புறப்படுத்து பாகுகன் துயின்றுகொண்டிருந்தான். ரிதுபர்ணன் அவனை நோக்கியபடி நின்றான். குனிய முயன்றபோது அவன் பருத்த உடல் கீழே இழுத்தது. ஜீவலன் எழுந்து பாகுகனை உலுக்கினான். பாகுகன் புரண்டு ஜீவலனை நோக்கியபோது ரிதுபர்ணனை பார்த்துவிட்டான். முகம் மலர பாய்ந்து எழுந்து “அரசே!” என்றான். “நான் உங்களை கனவு கண்டேன். நாம் இருவரும் காட்டில் ஒரு சிறிய புரவிக்குட்டியை பார்க்கிறோம். வெண்குதிரை. குருத்துப்பாளை போன்றது.” அவன் கைகளை மேலே தூக்கி “அது சிவந்த கண்கள் கொண்டது…” என்றான்.
ரிதுபர்ணன் “நான் ஏன் உன்னை அடித்தேன் என்று தெரியவில்லை” என்றான். ஆனால் அவன் சொல்ல விழைந்தது அதுவல்ல. “ஆம், அடித்தீர்கள். ஆனால் இந்தக் குதிரைக்குட்டி மிக விரைவானது. அதை நாம் பொறி வைத்தே பிடிக்கமுடியும்” என்று பாகுகன் சொன்னான். ரிதுபர்ணன் தன் விழிகளை அழுத்தி கண்ணீரை நிறுத்தியபின் “ஆம், நாம் நாளை கானாடச் செல்வோம். புரவியை பிடிப்போம்” என்றான். “நாளை காலையே செல்வோம்… வெண்புரவி அங்கே நிற்கிறது. ஐயமே இல்லை” என்றான்.