நீர்க்கோலம் - 71
70. நாற்கள அவை
நிழலுரு கொண்டிருந்த தமயந்தி ஒருநாள் உணவின் மணத்தால் ஈர்க்கப்பட்டு காவலர் எவரும் அறியாமல் அரண்மனை வளைவுக்குள் நுழைந்தாள். அங்கே அடுமனைப் புழக்கடையில் குவிந்திருந்த எஞ்சிய அன்னத்தை அள்ளி அள்ளி உண்டாள். புழுபோல அன்னத்தில் உடல் மூழ்க திளைத்தாள். அங்கேயே இடம் மறந்து படுத்துத் துயின்றாள். கனவில் எழுந்து நடந்து அரண்மனையின் அகத்தளத்திற்குள் நுழைந்தாள்.
பந்த ஒளியில் நிமிர்ந்த தலையுடன் வீசும் கைகளுடன் பேரரசியின் விழிகளுடன் சென்ற அவளை எதிர்கண்ட காவலன் ஒருவன் அரண்மனையெங்கும் கோயில்கொண்டிருக்கும் அறுகொலைத் தெய்வங்களில் ஒன்றென்றே எண்ணினான். அஞ்சி வேல் தழைத்து தலைவணங்கினான். பின்னர் அவள் மறைந்திருப்பதை கண்டான். நெஞ்சு அறைய கைகள் கூப்பியபடி இருக்க அவன் அங்கேயே நின்றான்.
சேதிநாட்டரசன் சுபாகுவின் அன்னை காந்திமதி அப்போது நோயுற்றிருந்தாள். அவளை அரண்மனை தரைத்தளத்தில் தனியறையில் வைத்து நோய்நோக்கினர் சேடியர். பின்னிரவில் அவர்கள் அனைவரும் களைத்து துயில மூச்சுகள் ஒலிக்கும் அறையில் காந்திமதி துயிலெழுந்தாள். கனவில் அவள் யானைமேல் அமர்ந்த கொற்றவையை கண்டாள். நீல வைரங்கள் ஒளிவிடும் குழலெடையும் குருதிமலர் மாலையும் அணிந்த அன்னையின் காதுகளில் பொன்னிற நாகங்கள் குண்டலங்களாக நெளிந்தன. “அன்னையே!” என அவள் தலைவணங்கினாள். அப்போது வெளியே பட்டத்து யானையின் உறுமலோசை கேட்டது.
மூதரசி எழுந்து சென்று வெளியே பார்த்தாள். அங்கே சடைத்திரியாக முடி தோளில் விழுந்திருக்க மிடுக்குடன் நடந்துவந்த பேய்வடிவினளைக் கண்டு உடல்நடுங்க தூணை பற்றிக்கொண்டாள். கால்கள் நடுங்கி விழப்போனாள். கனவா என்று உள்ளம் பதைக்க “யார்?” என்றாள். அவள் நிமிர்ந்து மூதரசியை நோக்கினாள். விழிகள் அவளை பாராமல் வெறிமிக்க கனவொன்றில் விழித்திருந்தன. அங்கே நின்ற பட்டத்து யானை மெல்ல பிளிறியது. “நான் தமயந்தி. மாமன்னர் நளனின் துணைவி” என்று அவள் சொன்னாள்.
நாகவிறலியின் கைகள் ஓய்ந்தன. பாடல் நின்றது. பெருமூச்சுடன் அவள் கைகூப்பினாள். அவள் பின்னால் அமர்ந்திருந்த முழவுக்காரி “நிஷதப் பேரரசி தமயந்தியை ஆண்ட பெருநாகத்தின் கதையாகிய கார்க்கோடகத்தின் முதல் பாதம் நிறைவுற்றது” என்றாள். விறலி “எஞ்சிய கதையை சுருக்கிச் சொல்கிறேன். சுபாகுவின் அன்னை காந்திமதியின் ஆணைப்படி தமயந்தி சேதிநாட்டு அரண்மனையில் ஈராண்டு காலம் தங்கினாள். அவளை தூய்மை செய்து புண்களுக்கு மருந்திட்டு நோய்மீட்டனர். காந்திமதி தன் மகளும் வேந்தனின் தங்கையுமான சுனந்தைக்கு அவளை அணுக்கியாக நிறுத்தினாள். மூதரசியன்றி எவரும் அவளை எவரென்று அறிந்திருக்கவில்லை. அவளும் தன்னை அறிந்திருக்கவில்லை.”
“அன்று விதர்ப்பநாட்டில் உடன்பிறந்தாரிடையே பூசல் எழுந்திருந்தது. விதர்ப்பத்தின் வடகிழக்கு எல்லையான மேக்கலகிரியின் மலைக்குடிகளான ஃபீலர்களின் குலத்தலைவர் மகளில் பீமகர் பெற்ற ஏழு மைந்தர்களில் மூத்தவனாகிய தண்டன் பீமத்துவஜன் என்ற பெயரில் போஜகடகத்தை ஆண்டான். சேதிநிலத்தைச் சேர்ந்த பைகர் குலத்தலைவரின் மகளில் பீமகர் பெற்ற பன்னிரு மைந்தரில் மூத்தவனாகிய தமன் பீமபலன் என்ற பெயரில் குண்டினபுரியை ஆண்டான். தமயந்தி நளனின் படைவல்லமையுடன் நிஷதபுரியில் ஆளும்வரை பீமத்துவஜன் இரண்டாமிடத்தில் போஜகடகத்தில் இருந்தான். அவள் அரசுநீங்கிய செய்தி வந்ததும் அவன் படைகொண்டுவந்து குண்டினபுரியை சூழ்ந்தான். இரண்டு வாரங்களில் பீமபலன் இளையவனிடம் தோற்று மாளவம் நோக்கி படைகளுடன் பின்வாங்கிச் சென்றான்.
பீமத்துவஜன் குண்டினபுரியில் முடிசூட்டிக்கொள்ள பைகர்களும் ஃபீலர்களும் நாடெங்கிலும் போரிட்டனர். ஒவ்வொரு சிற்றூரிலும் பூசல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. பீமகர் குண்டினபுரியின் அரண்மனையில் சிறையிலென மதுவுண்டு மீளாத சித்தத்துடன் வாழ்ந்தார். பீமத்துவஜனை வெல்ல தமயந்தி படைகொண்டெழுவாள் என பைகர் குடியினர் நம்பினர். ஆகவே தமயந்தியை கொன்றொழிப்பதே விதர்ப்பத்தின்மேல் முற்றரசு கொள்ள ஒரே வழி என எண்ணிய பீமத்துவஜன் நாடுகள்தோறும் ஒற்றர்களை அனுப்பி தமயந்தியை தேடிக்கொண்டிருந்தான். தமயந்தி உடல்மாறியதும் நன்றே என்று பேரரசி எண்ணினார்.
தன் மைந்தன் சுபாகுவை வென்ற அன்றே கொன்று சேதியின் மணிமுடியை தன் காலடியில் வைத்திருக்க முடியும் என்ற நிலையிலும் அவனை மைந்தனென்றே நடத்தி முடியளித்து வாழ்த்திச்சென்ற தமயந்திக்கு கடன்பட்டிருப்பதாகவே காந்திமதி எண்ணினார். தன் நோய்க்குறியும் வருகுறியும் ஆய்வதுபோல மருத்துவர்களையும் நிமித்திகர்களையும் வரச்செய்து எவருமறியாது தமயந்தியை நோக்கச் செய்தார்.
“இது உருமாற்றம் மட்டுமே. உடலில் ஏறிய நஞ்சு ஒவ்வொரு நாளுமென உருவழிந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது, பேரரசி. உடல் ஏழு அனல்கள் எரியும் எரிகுளம். காமமும் பசியும் மூச்சும் எண்ணமும் சொல்லும் ஞானமும் என வெம்மைகொண்ட ஆறனல்களும் மெய் எனும் தண்ணனலும் கொண்டது அது. உடல்புகுந்த அனைத்தையும் அவை எரிக்கும். உடலையும் எரிக்கும். அன்னை உடலில் இன்று நஞ்சை நெய்யென உண்டு அவை எரிகின்றன. நஞ்சு வற்றும்போது பிசுக்கு அகன்று ஆடிப்பாவை தெளிவதைப்போல அவர் மீள்வார்” என்றார் மருத்துவர்.
“குறிகள் தெளிவுறச் சொல்வது ஒன்றே. இது நிலவை நாகம் கவ்விய காலம் மட்டுமே. அரசி வெளியே வருகையில் முன்னிலும் ஒளிகொண்டிருப்பார்” என்றார் நிமித்திகர். “கலிசினம் கவ்வியிருக்கிறது அரசியையும் அவர் அரசையும். கலி தெய்வமல்ல. ஊழை வகுக்கும் ஆற்றல் அவனுக்கு அளிக்கப்படவில்லை. ஏழரை ஆண்டு காலம் மட்டுமே அவனால் மானுடரை ஆளமுடியும். இன்னும் ஏழாண்டு காலம் எஞ்சியிருக்கிறது… தன் காலம் முடிந்ததும் அவன் தலைவணங்கி நிலைமீளவேண்டும். அப்போது தான் கவர்ந்த அனைத்தையும் எண்ணி கணக்கு சொல்லி திருப்பியளிக்கவும் வேண்டும்.”
பேரரசி “அவ்வாறே ஆகுக!” என்றார். “அதுவரை அவள் இங்கே இருக்கட்டும். அங்கே விதர்ப்பத்தில் ஒவ்வொன்றும் பிறிதுடன் மோதி தன் நிலைக்கு மீளட்டும்.”
சுதேஷ்ணை எழ முயன்றபோது கால் மரத்திருந்தது. திரௌபதி அவள் தோள்களை பற்றிக்கொள்ள எழுந்துநின்று நீள்மூச்செறிந்து திரும்பிப் பார்த்தாள். இரு சேடியர் கொண்டுவந்த தாலத்தில் ஆடைகளும் பொன் நாணயங்களும் இனிப்புகளும் கனிகளும் மலர்களும் இருந்தன. நாகவிறலி அருகே வந்து வணங்கி நின்றாள். தாலத்தை அரசி நீட்ட அவள் அதை பெற்றுக்கொண்டாள். “சொல்லினூடாகச் சென்று எங்கோ வாழ்ந்து மீண்டேன்” என்றாள் சுதேஷ்ணை.
நாகவிறலி “எல்லா வாழ்வும் சொல்லிலேயே நிகழ்கிறது” என்றாள். “ஆம்” என்றாள் சுதேஷ்ணை. “எண்ணிப்பார்க்க இயலவில்லை, அவள் அடைந்த துயர்களை. சீதை அடைந்த துயருக்கு எவ்வகையிலும் இதுவும் நிகரே” என்றாள். “துயர்மிக்கவர்கள்தான் கதையில் இடம்பெறுகிறார்கள்” என்று சொல்லி நாகவிறலி புன்னகை செய்தாள். “நாளை எஞ்சிய கதையை கேட்கிறேன்” என்றாள் சுதேஷ்ணை. “நாளை அரசரின் அவையில் நளமாமன்னரின் கதையை சொல்லலாம் என்று எனக்கு ஆணை வந்துள்ளது, அரசி” என்றாள் விறலி.
அவர்கள் சென்றபின் சுதேஷ்ணை திரும்பி திரௌபதியிடம் இயல்பான குரலில் “நீ சென்று கீசகனிடம் நான் சொல்லும் ஒரு செய்தியை உரைத்து வா” என்றாள். திரௌபதி அவ்விழிகளில் வந்துசென்றதை உடனே உணர்ந்து “அவரிடமா?” என்றாள். “இது அரசமந்தணம். சேடியரை அனுப்பவியலாது” என்றாள். திரௌபதி “நேரடியாகவே சொல்லுங்கள், அரசி. சற்றுமுன் வந்த செய்தி அவரிடமிருந்துதானே?” என்றாள். சுதேஷ்ணை தலைகுனிந்து “ஆம்” என்றாள். “அவரை நான் எதற்கு சந்திக்கவேண்டும்?” என்றாள்.
“அதை நீ அறிவாய்” என்றாள் சுதேஷ்ணை. “அதற்கு நீ உடன்பட்டாகவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எளிதில் உடன்படுபவள் அல்ல நீ என்றும் அறிவேன். ஆனால் நான் இனி உன்னை அனுப்பாமலிருக்கவியலாது.” திரௌபதி ஒன்றும் சொல்லாமல் அரசியுடன் நடந்தாள். “நான் உன்னை அனுப்ப மறுக்கிறேன் என அவன் எண்ணுகிறான். பலமுறை உன்னை அனுப்பும்படி கோரிவிட்டான். நான் ஒவ்வொன்றாகச் சொல்லி தட்டிக்கழித்தேன். இவ்விழாவில் எவரும் எவரையும் நோக்குவதில்லை. இது காமனுக்குரிய இரவு. இன்று நீ சென்றே ஆகவேண்டும் என்று அவன் சொல்கிறான்.”
“நான் மறுத்தால்?” என்றாள் திரௌபதி. “நீ மறுப்பாய் என நான் அறிவேன். எனக்கு வேறுவழி இல்லை. சற்றுமுன் அவள் கொண்டுவந்த செய்தி ஒன்றே. உத்தரனை எண்ணிக்கொள்க என்று கீசகன் சொல்லியனுப்பியிருக்கிறான். இன்று நான் இதற்கு ஒப்பவில்லை என்றால் அவன் என் மைந்தனை கொன்றுவிடுவான்.” திரௌபதி “வெறும் அச்சுறுத்தல்” என்றாள்.
“அல்ல, அவன் சீற்றம் கொண்டிருக்கிறான். இதுவரை அவனிடமிருந்த அத்தனை கணக்குகளும் நுட்பங்களும் விலகி வெறும் விலங்கென்று ஆகிவிட்டிருக்கிறான். ஜீமுதனின் இறப்பு அவனுள் அச்சத்தை நிறைத்துவிட்டிருக்கிறது. நேரடியாகவே அவன் அரசர்மேல் படைகொண்டெழக்கூடும் என நான் ஐயுறுகிறேன்… நீ செல்வதனால் கொதிகலம் குளிர்வதுபோல அவன் சற்று அமைவான் என்றால் என் வழி அது மட்டுமே.”
“அரசி, நீங்கள் அஞ்சுவதுபோல் ஒன்றும் நிகழப்போவதில்லை. ஜீமுதனைக் கொன்றவன் இங்குதான் உள்ளான்” என்றாள் திரௌபதி. “அவன் வெறும் அடுமனை அடிமை. இன்றிரவே அவனை கொன்றுவிடுவான் கீசகன். ஒளியம்போ நச்சுணவோ. பிடித்து கழுவேற்றவும்கூடும்… என் உள்ளம் சொல்கிறது, அனைத்தும் உச்சம்கொண்டுவிட்டன. இனி இந்த ஆடல் நீடிக்காது…” அவள் திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டாள். “எனக்கு வேறுவழியில்லை. அவனிடம் செல். அவனை சற்று தணிவித்துவிட்டு வா. நீ எவரென்று நான் அறியேன். ஆனால் உன்னால் அதை செய்யமுடியும்.”
திரௌபதி சொல்லெடுப்பதற்குள் “நீ மறுத்தால் படைகளை அழைப்பேன். ஆம், எனக்கு என் மைந்தனே முதன்மை. வேறுவழியில்லை” என்று அரசி கூவினாள். திரௌபதி “செல்கிறேன்” என்றாள். “நான் சொல்வதை கேள்… நான்…” என அரசி தொடர “நான் செல்கிறேன் என்றேனே” என்றாள். “என்னை முனியாதே. நான் வெறும் அன்னை” என்றாள் சுதேஷ்ணை. “ஆம், எல்லா அன்னையரும் வெறும் அன்னையரே” என்றாள் திரௌபதி.
கையில் கொற்றவைக்குப் படையலிட்ட அன்னம் கொண்ட தாலத்துடன் புத்தாடை அணிந்து நீள்குழல் அலையடிக்க திரௌபதி கீசகனின் அரண்மனைக்கு சென்றாள். இடைநாழிகள் அனைத்தும் ஒழிந்துகிடந்தன. எதிர்ப்பட்ட அத்தனை காவலர்களும் மதுமயக்கில் இருந்தனர். ஒருவன் அவளைப் பார்த்து “ஜீமுதனை நீயே கொன்றிருக்கலாமே, பெருந்தோளழகி?” என்றான். அருகே நின்ற ஒருவன் ஹிஹிஹி என இளித்தான். அவள் “விலகு” என கைகாட்ட “ஆணை” என அறியாது சொல்லி அவர்கள் விலகிக்கொண்டார்கள். அவள் கடந்து சென்றதும் பின்னால் “கீசகரை கொல்லப்போகிறாயா?” என்றான். மற்றவன் ஹிஹிஹிஹி என நகைத்தான்.
கீசகனின் அறைவாயிலில் காவலர் எவருமிருக்கவில்லை. உள்ளே அவன் குழறிய குரலில் எதையோ சொல்வது கேட்டது. எதிரே நின்றிருந்த ஏவலன் மழுங்கிய ஒலியில் அதற்கு மறுமொழி சொன்னான். வாயிலில் சென்று நின்றதுமே திரௌபதி அங்கு அவள் எண்ணி வந்தது நிறைவேறாது என்று புரிந்துகொண்டாள். ஏவலனின் விழி திரும்பியதைக் கண்டு கீசகன் திரும்பிப் பார்த்தான். “ஆ!” என வியப்பொலி எழுப்பியபடி எழுந்துநின்று கால் நிலைகொள்ளாமல் மீண்டும் பீடத்திலேயே சரிந்தான்.
ஏவலன் அப்படியே மறுபக்கம் விலகிச் சென்று கதவை மூடி வெளியேறினான். “நான் எதிர்பார்த்தேன்! ஆம், நான் எதிர்பார்த்தேன். எனக்குத் தெரியும் நீ என்னுடன் விளையாடுகிறாய் என்று!” என்றான் கீசகன். மீண்டும் எழ முயன்று தள்ளாடி ஏப்பம் விட்டான். “நான் உன்னை நினைத்து மதுவருந்தினேன். உன்னை நினைக்க நினைக்க அருந்தாமல் இருக்க முடியவில்லை.” அவள் பெருமூச்சுடன் “நான் அரசியின் ஆணைப்படி வந்தேன். இந்தத் தாலத்தை இங்கே அளித்துவிட்டுப் போக பணிக்கப்பட்டிருக்கிறேன்” என்றாள்.
“தாலமா? என்ன அது? கொற்றவை படையலுணவா? நான் கொற்றவையையே படையலாகக் கேட்கிறேன்.” அவன் அச்சொல்லாட்சியில் மகிழ்ந்து “ஆம், எனக்கு கொற்றவை… நான் என்ன சொன்னேன்?” என்றான். அவன் இமைகள் பாதி மூடியிருந்தன. அடிக்கடி விக்கல் வந்தது. அவனிடமிருந்து மதுவும் வியர்வையும் நாறின. திரௌபதி “நான் செல்லவேண்டும்” என்றபடி தாலத்தை பீடத்தில் வைக்கப்போனாள். அவன் எட்டி அவள் கைகளை பிடித்துக்கொண்டான். அவள் கைகளை உதற தாலம் நிலத்தில் விழுந்து உருண்டது. சிறிய கண்கள் இடுங்க நகைத்தபடி அவன் எழுந்து “நன்று… ஒரு நல்ல பூசலை நானும் எண்ணியிருந்தேன்” என்றான்.
“விடு என்னை… நான் சொல்வதை கேள்…” என்றாள் திரௌபதி. “நான் வந்தது உன்னிடம் இதை சொல்வதற்காகவே. ஜீமுதன் நெஞ்சுபிளந்த வலவன் யார் என அறிவாயா?” ஆனால் கீசகன் வேறெங்கோ இருந்தான். இதழ்கோண நகைத்தபடி “ஆம், ஏன் பிறரைப் பற்றி பேசவேண்டும்? நாம் பேசுவதற்கும் செய்வதற்கும் பல உள்ளன” என்றான். அவள் அவன் தொடையில் எட்டி உதைத்தாள். அவன் நிலைதடுமாறி மல்லாந்து பீடத்தின்மேல் விழ அது அவன் எடையால் முறிந்தது.
அவனிலிருந்த மல்லன் விழித்துக்கொள்ள கீசகன் கையூன்றி கணத்தில் எழுந்து அவள் கைகளை பற்றிக்கொண்டான். “விடு என்னை… இதன்பொருட்டு நீ நெஞ்சுபிளந்து சாவாய்… நான் யாரென நினைத்தாய்?” என்று அவள் மூச்சிரைக்க சொன்னாள். அவன் பாய்ந்து அவள் மறுகையையும் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். “நிகர்வல்லமைகொண்ட தோள். பெண்டிரில் இத்தனை ஆற்றலை நான் கண்டதில்லை. நான் விழைந்தது இதையே” என்றான் கீசகன். அவள் அவன் பிடியை விலக்கி அவனை தூக்கிச் சுழற்றி அப்பால் வீசினாள். அவன் சுவரில் கையூன்றி திரும்பி மீண்டும் அவளை பற்றிக்கொண்டான்.
“நீ நகர்நுழைந்தபோதே எனக்குரிய இணை வந்துவிட்டதென காவலர் வந்து சொன்னார்கள்…” என்றபடி அவன் அவளை இறுக்கினான். “நீ அரசியாவாய்… என் தெய்வங்கள்மேல் ஆணை. உன்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினி ஆக்குகிறேன். உன் காலடியில் என் மணிமுடியை வைக்கிறேன்.” அவள் அவன் மூக்கில் தன் தலையால் ஓங்கி முட்டினாள். அவன் அதை எதிர்பாராமல் தடுமாற அவன் காதில் பிறிதொருமுறை தலையால் முட்டி காலைத் தூக்கி அவன் இடையை உதைத்து விலக்கினாள். அவன் பாய்ந்து பிடிப்பதற்குள் வெளியே ஓடினாள்.
“சீ, இழிமகளே. நில்… பிடித்தால் உன் சங்கை நெரிப்பேன்… நில்!” என்று கூவியபடி கீசகன் அவளை துரத்தி வந்தான். அவள் இடைநாழி வழியாக ஓட கீசகன் “பிடியுங்கள் அவளை… பிடியுங்கள்” என்று கூவியபடி எடைமிக்க கால்கள் ஓசையிட தொடர்ந்தோடினான். காவலர்கள் அதை விளையாட்டு என எண்ணி இளித்தபடி நின்றனர். திரௌபதி இடைநாழியிலிருந்து பாய்ந்து அப்பாலிருந்த சிறிய முற்றத்தை அடைந்து அதற்கும் அப்பால் விளக்கொளியில் செந்நிறத் திரைச்சீலைபோலத் தெரிந்த வாயிலை நோக்கி ஓடினாள்.
“நில்… அவளை பிடியுங்கள்… பிடியுங்கள்!” என்று கூவியபடி இடைநாழியில் குதித்த கீசகன் கால்தடுக்கி விழுந்து கையூன்றி எழுந்தான். விழுந்த அதிர்வில் குமட்டல் எழ ஓங்கரித்து துப்பியபடி ஓடி வந்தான். அறைவாயிலில் நின்றிருந்த காவலன் உள்ளே நிகழ்வதை நோக்கிக்கொண்டிருந்தான். இன்னொருவன் கீழே அமர்ந்திருந்தான். திரௌபதி பாய்ந்து உள்ளே செல்ல அவன் “ஏய்! என்ன இது? யார்? இது அரசர் அவை” என கூவினான். தொடர்ந்து வந்த கீசகன் அவனைப் பிடித்து விலக்கிவிட்டு உள்ளே வந்தான்.
உள்ளே விராடரும் குங்கனும் பகடையாடிக்கொண்டிருந்தனர். களத்தில் பரப்பப்பட்டிருந்த காய்களை முகவாயை கையால் தாங்கியபடி நோக்கிக்கொண்டிருந்த விராடர் திரும்பி நோக்கி “யாரது? சேடிப்பெண்ணா? அவளுக்கு என்ன வேலை இங்கே?” என்றார். திரௌபதி “அரசே, என்னை காப்பாற்றுங்கள். உங்கள் படைத்தலைவரால் நான் பெண்ணிழிவு செய்யப்படுகிறேன்” என்று கூவினாள். “யார்? கீசகா, என்ன இது?” என்றார் விராடர்.
கீசகன் “அரசே, என்ன நடந்ததென்று கேளுங்கள். இவ்விழிமகள் என் அரண்மனைக்குள் புகுந்து என் கணையாழியை திருடினாள். தாலத்துடன் இவள் அறைக்குள் நுழைவதைக் கண்டேன். கள்மயக்கில் இவளுக்கு விழிகொடுக்கவில்லை. திருடுவதை தற்செயலாகக் கண்டு இவள் கையை பற்றினேன். உதறிவிட்டு ஓடினாள். துரத்தி வந்தேன்…” என்றான். “பொய்… வேண்டுமென்றே சொல்லப்படும் பொய். அரசி அனுப்பியே நான் அங்கே சென்றேன்…” என்று திரௌபதி கூவினாள். “நான் திருடினேன் என்றால் அந்தக் கணையாழி எங்கே? சொல்லச் சொல்லுங்கள்!”
கீசகன் “அதை வீசிவிட்டு ஓடினாள், அரசே” என்றான். “அப்படியென்றால் அவர் கையில் இருக்கும் கணையாழி எது?” என்றாள் திரௌபதி. “வாயை மூடு, கீழ்மகளே. எதிர்த்தா பேசுகிறாய்?” என கீசகன் பாய்ந்து அவளை அறைந்தான். அவள் கீழே விழுந்ததும் எட்டி அவளை உதைத்தான். “உன்னை இழுத்துச்சென்று தலையை வெட்டியிருக்க வேண்டும். அரசர் முன்னிலை என்பதனால் சொல்லாட விட்டேன்…” அவள் குழலைப் பிடித்துத் தூக்கி “வா… உன்னை என்ன செய்வதென்று நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.
அவன் கையைப் பற்றியபடி திரௌபதி கூவினாள் “நான் அரசரிடம் அறம் கேட்கிறேன்… இங்கே நெறியென்று ஏதுமில்லையா? ஒரு பெண்ணை உதைப்பதற்கும் இழுத்துச் செல்வதற்கும் எக்குலமுறை ஒப்புகிறது? அரசரென அமர்ந்திருப்பவர் முன்னிலையில் நிகழலாமா இந்தக் கீழ்ச்செயல்?” விராடர் “என்ன இது, கீசகா? நாளை இது நமக்கு இழிவென்று ஆகுமல்லவா? விடு அவளை” என்றார். “அவள் கள்ளி. அவளுக்குரியது கைகால்மாறு தண்டனை. நெறியுசாவல் அல்ல” என்று அவளை கீசகன் தரையில் இழுத்தான்.
“குற்றம் சாட்டியவரே தண்டனையையும் அளிப்பதா? எந்த நெறி இது? இங்கு அறமுசாவ அவையென ஏதுமில்லையா?” என்றாள் திரௌபதி. “அது அவைநிற்கும் தகுதிகொண்டோருக்கு. அகத்தளப் பெண்ணுக்கல்ல…” என அவளை தூக்கினான் கீசகன். விராடர் “என்ன இது? கீசகா…” என்றார். “எதன்பொருட்டென்றாலும் பெண்ணை உதைக்க இவருக்கு என்ன உரிமை? இதை தெய்வங்கள் பொறுக்குமா?” என்று திரௌபதி கேட்டாள். “குங்கரே” என்றார் விராடர்.
“இருவர் சொல்வதும் பொய்யாகவும் உண்மையாகவும் இருக்கலாம். நாம் இரண்டையும் அறியோம்” என்று குங்கன் சொன்னான். “அதைப்பற்றி இப்போது நாம் சொல்வதற்கொன்றுமில்லை. நாம் உறுதியாக அறிந்தது ஒன்றே. இவள் சேடி, அவர் அரசகுடியினர். பொய்யும் மெய்யும் மறமும் அறமும் குடியால் இயல்வதேயாகும்.” விராடர் “ஆம், அது மெய். சேடியர் அவைநிற்க எங்கும் ஒப்புதலில்லை” என்றார். “ஆனால் பெண்டிர் நாளை நம்மை குறை சொல்லலாகாது. ஆகவே இதை இளவரசியே நோக்கி முடிவு சொல்லட்டும்… அடேய், மறுஅறையில் இளவரசி உத்தரை இருக்கிறார். அவரை அவைபுகும்படி நான் ஆணையிட்டதாக சொல்” என்றான் குங்கன்.
“அவள் இங்கெதற்கு?” என்ற கீசகன் திரௌபதியின் கூந்தலை விட்டுவிட்டான். அவள் ஆடையைத் திருத்தியபடி கண்ணீர் வழிய நின்றிருக்க ஏவலர் இருவரும் ஓடி உத்தரையை அழைத்துவரச் சென்றனர். அதற்குள் தன் மேலாடையை எடுத்தணிந்த விராடர் “இந்தப் பூசல் இப்போதே முடியட்டும். எவர் செய்தது பிழை என்பதை நாளை அவைகூடி முடிவெடுப்போம். நீ செல்க!” என்று திரௌபதியிடம் சொன்னார். “இளவரசி வரட்டும். அவைநடுவே பெண்ணை இழுத்திட்டு உதைப்பதன் நெறியென்ன என அவர் சொல்லட்டும்” என்றாள் திரௌபதி.
“அவள் சிறுமி… அவள் இங்கே எதற்கு?” என்றார் விராடர். “அவளுக்கு நான் அஞ்சுவேன் என எண்ணுகிறீர்களா? அவள் வரட்டும். அவள் கண்முன் இழுத்துச் செல்கிறேன் இவளை. இதோ, நானே சொல்கிறேன். இவள் திருடவில்லை. என் மஞ்சத்திற்குத்தான் வந்தாள். என்னுடன் மஞ்சத்தில் இன்றிரவை கழிக்கப் போகிறாள். எவர் தடுக்கப் போகிறீர்கள்? சொல்லுங்கள் எவர்?” ஆனால் அவன் மீண்டும் திரௌபதியை பிடிக்கவில்லை.
ஏவலர் பின்னால் ஓடிவர உள்ளே வந்த உத்தரை “என்ன நடக்கிறது இங்கே? பெண்ணை அவையில் பற்றி இழுக்க இந்தக் கீழ்மகனுக்கு இடம்கொடுத்தவர் எவர்? தந்தையே, நீங்களா?” என்றாள். “எண்ணிப் பேசு சொற்களை” என்று கையோங்கியபடி கீசகன் அவளை அணுக அவள் தன் குறுவாளை எடுத்து தன் கழுத்தில் வைத்துக்கொண்டாள். “தந்தையே, நம் குடித்தெய்வம்மேல் ஆணை. இப்போதே இந்தச் சிறுமகன் அவை நீங்கவேண்டும். நம் குடியவையில் இவன் செய்தவற்றுக்கு ஈடு சொல்லவேண்டும். உங்கள் ஆணை இக்கணமே எழவேண்டும். இல்லையேல் இங்கேயே சங்கறுத்து விழுவேன்.”
விராடர் கைகால்கள் பதற எழுந்து நின்று “என்ன இது? வேண்டாம். கத்தியை தாழ்த்து… கீசகா, இது என் ஆணை! விலகிச்செல். நாளை மறுநாள், விழவு முடிந்தபின் கூடும் பெருங்குடியவையில் வந்து நிற்பதுவரை நீ இந்தப் பெண்ணை அணுகலாகாது…” கீசகன் ஏதோ சொல்ல வாயெடுக்க “என் ஆணை இது. என் முழுப் படைகளையும் ஆளும் சொல். இதற்கு மாற்றில்லை…” என்று அவர் கூவினார். தொண்டை நரம்புகள் புடைக்க உடல் பதற நின்று உடல் உலைந்தார். “வெளியே செல்… மறுசொல் கேட்டால் உன் தலைகொய்ய ஆணையிடுவேன்.” கீசகன் மெல்ல தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். பின்னர் “நன்று, நாளை பார்ப்போம்” என்றபின் வெளியே சென்றான். உத்தரை கத்தியை கீழே போட்டுவிட்டு வந்து திரௌபதியை தழுவிக்கொண்டாள்.
விராடர் “என்னம்மா இது? என்ன செய்யப் போனாய்? என் உடல் நடுக்கம் இன்னும் விலகவில்லை” என்றார். “அந்த நச்சுப்பாம்பை வளர்த்துவிட்டது உங்கள் சொல்விளங்காமையும் அன்னையின் மிகைவிழைவும். இனியாவது அதன் தலையை நசுக்காவிட்டால் இக்குடி அழியும்” என்றாள் உத்தரை. “மெல்லப் பேசு… நான் எப்படி அவனுக்கு ஆணையிட்டேன் என எனக்கே தெரியவில்லை. இப்போது அவனை நினைத்து அஞ்சுகிறேன். இந்நாடும் படைகளும் அவன் ஆணையிலேயே உள்ளன. அவன் ஒரு சொல் எடுத்தால் நம்மை கொன்றுகுவிக்க வாளுடன் வருவார்கள் விராடப் படையினர்” என்றார் விராடர்.
“நீங்கள் ஒரு சொல் உரையுங்கள், தந்தையே. விழிநோக்குவதை விட விரைவாக அவனை வீழ்த்திக் காட்டுகிறேன்” என்றாள் உத்தரை. “என்ன பேசுகிறாய்? உன்னிடம் என்ன கந்தர்வ வித்தையா இருக்கிறது?” என்றார் விராடர். “ஆம், கந்தர்வன் ஒருவன் என் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கிறான்” என்ற உத்தரை “வருக!” என திரௌபதியின் கைகளைப் பற்றி அழைத்துச்சென்றாள். “அரசர் இருக்கும் இடமே அரசவை. அதை நம்பி நான் வந்தேன்” என்றாள் திரௌபதி.
தருமன் எரிச்சலுடன் “நாளை அவையில் வந்து உன் சொற்களை விரி. இப்போது எங்கள் ஆட்டம் பாதியில் நிற்கிறது. செல்” என்றார். திரௌபதி அவரை சில கணங்கள் நோக்கியபின் நீள்மூச்சுடன் உத்தரையுடன் சென்றாள். விராடர் பெருமூச்சுடன் அமர்ந்து “மெய்யாகவே அச்சத்தால் என் உள்ளம் உறைந்திருக்கிறது, குங்கரே. பார்த்தீர்களா விரல்கள் நடுங்குவதை. கீசகன் நாளை என் தலையை வெட்டக்கூடும் என்றே எண்ணுகிறேன்… உத்தரையை நான் அறிவேன். சொன்னதைச் செய்பவள் என்பதனால் நிலைமீறிவிட்டேன்” என்றார்.
தருமன் காய்களை நோக்கியபின் கைகளை உரசியபடி “இனி உங்கள் நகர்வு” என்றார். “கீசகன் என்ன செய்வான் என்கிறீர்?” என்றார் விராடர். “இந்த ஆட்டத்தை முதலில் முடிப்போம். அந்த ஆட்டத்தில் நாம் அறியாத பல காய்கள் களத்தில் உள்ளன” என்றார் தருமன்.