நீர்க்கோலம் - 66
65. துயிலரசி
அரச நெடும்பாதையின் ஓரத்தில் காட்டுக்குள் நுழையும் முதல் ஊடுவழி கண்ணுக்குப் பட்டதுமே தமயந்தி நளனை கைதொட்டு அழைத்தபடி அதற்குள் நுழைந்துவிட்டாள். மரங்களுக்கு ஊடாக நிஷதபுரியின் கோட்டைக் காவல் மாடங்களின் முகடுகள் தெரிந்தன. கோட்டையைச் சூழ்ந்துள்ள ஆயர்பாடிகளில் இருந்து காளைகளை காட்டிற்குள் கொண்டு செல்லும் பாதை அது என குளம்படிச் சுவடுகளும், உலர்ந்தும் பசியதாயும் சேற்றுடன் சேர்ந்து மிதிபட்டுக் குழம்பியதுமான சாணியும் காட்டின. தொலைவில் கோட்டையிலிருந்து கொம்பொலி எழுந்தது. ஒரு பறவை சிறகடித்தெழுந்து இலைகளுக்குள்ளேயே பறந்தகன்றது.
காட்டிற்குள் நுழைந்து பச்சைத் திரையால் மூடப்பட்டதுமே நளன் சற்று நிலை மீண்டான். இரு கைகளையும் இடையில் வைத்து நிலைமீண்டு சுற்றிலும் அலையடித்த இலைகளைப் பார்த்தபின் நீள்மூச்சுவிட்டு காற்றை உள்ளிழுத்தான். உயரமற்ற மரங்களின் குறுங்காட்டுக்குள் ஆங்காங்கே பின்னுச்சிப்பொழுதின் வெயில் இறங்கி மண்ணில் பரவியிருந்தது. அதை நோக்கிய விழிகளுக்கு உள்காடு இருண்டு தெரிந்தது. “செல்வோம்” என தமயந்தி அவன் தோளை தொட்டாள். “குறுங்காடு” என அவன் பொருளில்லாமல் சொன்னான். “ஆம்” என்று அவள் சொல்லி “செல்க!” என்றாள்.
அவன் சுற்றிலும் இருந்த காட்டை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி வந்தான். அவள் அவனை கைபற்றி அன்னையென கொண்டுசென்றதனாலேயே வழிதவறி நிலம் குழம்பிப்போன சிறுவனைப்போல தன்னை ஆக்கிக்கொண்டான். அறியாமையின் திகைப்பும் ஆர்வமும் கலந்த விழிகளுடன் ஒவ்வொன்றையும் நோக்கினான்.
வெயில் இலைத்தழைப்புக்குமேல் விரிந்திருந்தது. தழைமணமும் நீராவியும் உள்ளே நிறைந்து மூச்சுத் திணறச்செய்தன. எங்கோ மரங்கொத்தியின் தாளம். கிளைச்செறிவுக்குள் சேக்கேறி ஓய்வெடுத்த பறவைகளின் கலைவோசை. நீரோடை ஒன்று துள்ளிச்செல்லும் ஒலி. தமயந்தி அவனிடம் “இனிய காற்று” என்றாள். அவன் தலையசைத்தபின் “எப்போதும் இதை உற்றறிந்திருக்கிறேன். வெளிக்காற்றை உள்ளிழுத்து நிறைத்துக்கொள்வது உளச்சுமையை குறைக்கிறது” என்றாள். “வெளிநோக்கி விழிவிரிப்பதே நம் துயரை குறைத்துவிடும். இங்கு சூழ்ந்திருக்கும் உயிர்வெளியில் நாம் சிறு துளி என்ற உணர்வு எப்போதேனும் வருமென்றால் அதைவிட உளமாற்றுவது பிறிதொன்றுமில்லை” என்றாள்.
அவன் தலையை அசைத்தான். பின்னர் தனக்கே என புன்னகைத்தான். அவள் அவன் கையைப்பற்றி “என்ன?” என்றாள். “தத்துவம்” என்று சிரித்தான். “நான் எந்த நூலிலும் படித்ததை சொல்லவில்லை” என்று அவள் மென்சினத்துடன் சொன்னாள். அவன் அவள் கையைப்பற்றி “சினம் கொள்ளாதே. நீ சொல்வதைக் கேட்கவே என் உளம் விழைகிறது. ஆறுதல் கொண்டாக வேண்டுமென்று என் அகம் முடிவு செய்திருக்கிறது போலும். ஆகவே அதற்குரிய சொற்களை நாடுகிறேன். அதை பிறிதொருவர் உருவாக்கி அளிப்பாரென்றால் நன்றுதானே?” என்றான்.
பின்னர் முகம் மாறி “என்னுள் சொற்கள் குவிந்து கொப்பளிக்கின்றன. பொருளின்மையின் கொந்தளிப்பு” என்றான். “ஆனால் விஜயபுரியிலிருந்து வந்து நகர்முற்றத்தில் நின்று அணியாடை களைவதுவரை நெஞ்சில் ஒரு சொல் இல்லை. வெறும் திகைப்பு. அனைத்தும் அப்படியே உறைய வெறுமனே வெளிக்காட்சிகளை நோக்கியபடி வந்தேன்… ஒவ்வொரு சிறிய பொருளையும் கூர்ந்து அறிந்தது என் அகம். பலவற்றை வாழ்க்கையிலேயே முதல்முறையாக நோக்கி அறிந்தேன்.”
தமயந்தி அவன் கையை மெல்ல விலக்கி “இந்த மரத்தடியில் அமருங்கள். நான் சென்று நீர் எடுத்து வருகிறேன். சற்று அப்பால் ஓடையொன்று செல்லும் ஒலி கேட்கிறது” என்றாள். “ஆம்” என்றபடி அவன் வேர்க்குவையொன்றில் உடல் பொருத்தி கால்நீட்டி சாய்ந்துகொண்டான். அவள் நீரொலி கேட்டு காட்டிற்குள் சென்று பகன்றையின் பேரிலையைப் பறித்து தொன்னை முடைந்து அதில் நீரள்ளி எடுத்து வந்தாள். தொலைவிலேயே அவன் கைகளை மார்பில் கட்டியபடி முகவாயை நெஞ்சில் ஊன்றி துயின்றுகொண்டிருப்பதை கண்டாள். அவள் அணுகும் காலடி ஓசையை அவன் கேட்கவில்லை. சீரான மூச்சும் எழுந்தமையும் நெஞ்சும் ஆழ்துயிலென காட்டின.
கையில் துளி சொட்டும் தொன்னையுடன் அவள் அவனை நோக்கி நின்றாள். இத்தனை விரைவில் எப்படி துயில்கொள்ள முடிகிறது என்று வியந்தாள். விரைந்து நீர் கொண்டுவரவேண்டுமென்பதற்காக அவள் தன் முகத்தையும் கைகளையும் கூட கழுவிக்கொண்டிருக்கவில்லை. எழுப்பலாமா என்று தயங்கினாள். ஆனால் அத்துயிலுக்குள் அவன் விடாய் கொண்டு அலைந்து கொண்டிருப்பான் என்று தோன்றியது. அவள் தொன்னையை மெல்ல நீட்டியபோது சொட்டிய துளி அவன் காலில் பட “நீர்” என்றபடி விழித்துக்கொண்டான். “மழை” என்றான். பின்னர் அவளைப் பார்த்து “நீயா? நீ எங்கு இங்கே?” என்றான். “நீர் அருந்துங்கள்” என்றாள்.
துயிலால் அவன் சித்தம் தொகுக்கப்பட்டு விழிகள் பொருள் கொண்டிருந்தன.“ஆம், விடாய் கொண்டிருக்கிறேன்” என்றபடி கையை ஊன்றி எழுந்து அத்தொன்னையை இரு கைகளாலும் வாங்கிக்கொண்டான். விளிம்பில் உதடுகளைப் பொருத்தி உறிஞ்சி உடல் நிறைத்துக் குடித்தான். மீசையிலும் மெல்லிய தாடியிலும் நீர்த்துளிகள் பரவியிருக்க அவளை நோக்கி “எத்தனை விடாய் கொண்டிருக்கிறேன் என்று இப்போதுதான் புரிந்தது. சற்றுமுன் மழை பொய்த்த வறுநிலத்தில் தனிமையில் அலைந்துகொண்டிருந்தேன்” என்றான். “நான் எண்ணினேன்” என்று அவள் சொன்னாள். புன்னகைத்து “விடாய் உங்கள் உடலில் தெரிந்தது” என்றாள். அவன் புருவம் சுளித்து நோக்க “துயில்கையில் உங்கள் உதடுகள் அசைந்து கொண்டிருந்தன” என்றாள். “அனைத்தையும் நன்கறிந்திருக்கிறாய்” என்றான். அவள் வாய்விட்டுச் சிரித்து “அனைத்தையுமல்ல, உங்களை” என்றாள். “இருங்கள். நான் சென்று கைகால் கழுவி வருகிறேன்” என்று திரும்பினாள்.
ஓடையில் முழங்கால் வரை இறங்கி முகமும் கைகால்களும் கழுவி ஈரக்கைகளை உதறியபடி கரைக்கு வந்தபோது அவள் முகத்தில் இயல்பான புன்னகை வந்திருந்தது. விழிகளை ஓட்டி சுற்றிலும் இருந்த குறுங்காட்டின் தாழ்ந்த மரக்கிளைகளில் ஆடிய மலர்க்கொத்துகளையும் உதிர்ந்து தரையில் கம்பளமென விரிந்துகிடந்த மலர்களையும் சருகுப் பரப்பின்மீது விழுந்துகிடந்த வாடிய காய்களையும் பார்த்தாள். கழுத்தைத் துடைத்தபடி அண்ணாந்து மரக்கிளைகளினூடாக ஒளியாக இறங்கிக்கொண்டிருந்த வானை நோக்கினாள். ஒவ்வொன்றும் அப்போது புதிதாக எழுந்து வந்தனவென்று தோன்றியது. அத்தருணத்திற்கு முன் வாழ்வென ஏதுமில்லை என்பதுபோல.
திரும்பி நடக்கும்போது எத்தனை எளிதாக அனைத்தையும் உதறிவிட முடிகிறது என்று அவளே வியந்துகொண்டாள். அதுவரை எய்திய அனைத்தையும் உதறி முற்றிலும் புதியவற்றிற்காக செல்ல அங்கு வந்திருந்தாள் என்று உளமயக்கு கொண்டாள். சென்றவை ஒவ்வொன்றும் முற்றிலும் பொருளிழந்திருந்தன. குடியும், குலமும், நாடும், கொடியும். மேலும் செல்ல வழி ஒன்றுள்ளது என்று தோன்றுகையிலேயே உள்ளம் எண்ணி எண்ணி துயருறுகிறது. வெருண்ட நாகமென முட்டி மோதி இடைவெளி தேடுகிறது. கரும்பாறையை கண்டுவிட்டதென்றால் துயரை அங்கேயே உதிர்த்து முற்றிலும் எதிர்த் திசை நோக்கி திரும்பிவிடுகிறது. அதற்கான உணர்வுகள், அவற்றுக்கு வெளிப்பாடாக சொற்கள், சொற்களால் இயக்கப்படும் செயல்கள் என அனைத்தும் ஒருங்கி விடுகின்றன.
உள்ளே நிகழும் எண்ணங்கள் அனைத்தும் இங்கு வாழ்ந்தாக வேண்டும் வென்றாக வேண்டும் என்பதற்காக மட்டுமே எழுபவையா என்ன? பின்னர் அவள் தனக்குத் தானே சிரித்தபடி எதுவானால் என்ன என விலகிக்கொண்டாள். இதோ, என் மேல் அழுந்திய எடைகளனைத்தையும் இறக்கிவிட்டு இறகு கொண்டிருக்கிறேன். என்னைச் சூழ்ந்திருக்கும் காற்றுக்கு உடலை அளித்திருக்கிறேன். இத்தருணம் போதும். இது மண்ணில் முளைத்திருந்தாலென்ன, வானிலிருந்து உதிர்ந்ததென்றால்தான் என்ன? இது வளருமென்று என் அகம் சொல்கிறது. மீண்டும் பிறந்தெழுந்ததுபோல் உணர்கிறேன். இதை எண்ணி எண்ணிக் கலைத்துக்கொள்ள ஏன் முயல்கிறேன்? நடக்கும் பாலத்தை உலுக்கி உறுதி செய்கிறேனா?
தொலைவில் அவள் நளன் மீண்டும் துயின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். மூடிய இமைகளுக்குள் விழி உருளும் அசைவு தெரிந்தது. ஆனால் நெஞ்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அத்தனை உடற்களைப்பு. விஜயபுரியிலிருந்து தேரில் வந்தபோது உள்ளமும் களைத்திருக்க வேண்டும். ஓசையின்றி அருகே வந்து மரவுரியை இடக்கைகளால் பற்றியபடி மெல்ல அமர்ந்துகொண்டாள். அவனுடைய சீரான மூச்சொலியைக் கேட்டபடி தானும் உடல் சரித்து கண்மூடி படுத்துக்கொண்டாள். சீரான மூச்சு எத்தனை ஆறுதலூட்டுவது என்று எண்ணிக்கொண்டாள். எந்த மூச்சும். விலங்குகளின் மூச்சும்கூட.
முன்பு அவள் தந்தையின் அன்னை பேரரசி கிருஷ்ணை நோயுற்றிருந்தபோது மருத்துவர் மஞ்சத்தறைக்குள் நாய் ஒன்றை துயில வைக்கலாம் என்றார். அவ்வழக்கம் வேடர்களுக்குரியது என்பதால் அமைச்சர்கள் எதிர்த்தனர். “நாய் துயிலும் மூச்சோசை அவர்களை ஆற்றுப்படுத்தும், அரசே” என்றார் மருத்துவர். “துயிலோசையின்போது நாம் உடலெனும் ஒழுங்கை உணர்கிறோம். நித்ராதேவி கருணை மிக்கவள். வலிகளையும் நோய்களையும் ஆற்றுபவள். இப்புவியில் காலத்தை வெல்லும் ஆற்றல் கொண்டவள் அவள் ஒருத்தியே. அரசியின் அறைக்குள் துயில் தெய்வம் திகழட்டும்” என்றார்.
எரிச்சலுடன் “ஏன் சேடியர் துயின்றால் போதாதா?” என்றார் அமைச்சர். “அவர்கள் கனவுகளுடன் துயில்வார்கள். உள்நிறைந்த அச்சம் அவர்களை தட்டி விழிக்க வைத்துக்கொண்டே இருக்கும். குழந்தைகள் துயிலலாம். ஆனால் நோயறையில் துயில்வது அவர்களுக்கு நன்றல்ல. நாய் குழந்தைமையிலேயே தங்கிவிட்டது. விலங்குகளுக்கு உளமுதுமை என்பதில்லை.” அரசர் “ஆம், நம் வேட்டைநாய் குரன் இங்கே தங்கட்டும்” என்றார்.
பதினெட்டு நாட்கள் மூதரசியின் அறைக்குள் குரன் துயின்றது. விழித்திருக்கையில் அவள் மஞ்சத்திற்கு அருகே இரு கால் மடித்து முன்னங்கால் ஊன்றி செவி முன்கோட்டி ஈரமூக்கை நீட்டி தீரா ஆர்வமும் கனிவும் கொண்ட விழிகளால் நோக்கியது. நோய் மயக்கிலிருந்து அவள் விழித்தெழுந்ததும் எழுந்து வாலாட்டியபடி சென்று அவள் கைகளை முத்தமிட்டது. இரவில் அவள் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் அறைக்குள் ஒலித்த மூச்சொலி அவளை கருக்குழவியென்றாக்கி அன்னை வயிற்றுக்குள் குருதி வெம்மையில் அமைத்தது. அன்னை மூச்சொலி முதுமகளை தாலாட்டியது. அவள் இறக்கும்போது முகத்தில் இனிய புன்னகையொன்று நிறைந்திருந்தது.
நளன் ஏதோ சொல்லி அவ்வொலியிலேயே விழித்துக்கொண்டான். அவன் உடலசைவு அவளை எழுப்பியது. அவன் முகம் தெளிவடைந்திருப்பதை அவள் கண்டாள். “இருவருமே துயின்றுவிட்டோம் போலும்” என்றான். “ஆம்” என்று சொல்லி அவள் ஆடை திருத்தி எழுந்தாள். நளன் “என் நெஞ்சு தெளிந்திருக்கிறது. அனைத்தும் மிக எளிதென்று தோன்றுகிறது” என்றான். “துயில் தெய்வம்போல மானுடருக்குத் துணையாவது பிறிதில்லை என்பார்கள்” என்றாள் தமயந்தி. “துயிலி சாவன்னையின் தங்கை” என்றான் நளன். தமயந்தி “சிறிய சாவும் நீள்துயிலும்” என்றாள். “செல்வோம். அந்திக்குள் இரவு துயிலும் ஒரு இடத்தை நாம் கண்டடைய வேண்டும்” என்று நளன் சொன்னான். அவன் கை நீட்ட அவள் அந்தக் கை பற்றி எழுந்துகொண்டாள்.
தூண்டில் சரடு நீரில் மூழ்கி ஆழ்வதுபோல் பசும்காட்டுப் பரப்புக்குள் ஊடுருவியது ஒற்றையடிப் பாதை. காட்டின் இருளும் சீவிடின் ஓசையும் அவர்களைச் சூழ்ந்தன. எங்கோ மரங்கொத்திகள் தாளமிட்டன. காற்று கடந்து செல்கையில் தலைக்குமேல் எழுந்த இலைத்தழைப்பின் முழக்கமும் ஓரிரு மரங்களில் கொடிகள் அறைந்துகொள்ளும் ஓசையும் கிளைகள் உரசும் முனகல்களும் இனிய தனிமை உணர்ச்சியை அளித்தன. அதைக் கலைத்தபடி சருகுகளின் மீது சிற்றுயிர்கள் ஓடின. மெல்லிய சருகு நொறுங்கும் ஒலி எழ மூன்று மான்கள் இலைத்தழைப்புக்குள்ளிருந்து வந்து கழுத்து திருப்பி செவி முன்கோட்டி ஈரமூக்கை நீட்டி நீலம் தெளிந்த விழிகளால் அவர்களை நோக்கின.
அவள் திரும்பி “அழகிய விழிகள்!” என்றாள். “ஆம்” என்றான். அவள் முதல்முறையாக மான்களைப் பார்ப்பதுபோல உணர்ந்தாள். அரண்மனைத் தோட்டத்தில் வளரும் மான்களின் விழிகளில் இத்தனை அறியாமை இல்லையோ என்று தோன்றியது. காற்று வீச மேலாடை சரிய அவள் அதைப் பற்றிய அசைவில் மூன்று மான்களும் ஒரே கணம் திடுக்கிட்டு கழுத்து சொடுக்கி பின் கால்கள் காற்றில் தாவ எழுந்து குறும்புதர் ஒன்றைக் கடந்து அப்பால் மறைந்தன. அவ்வசைவின் அழகின் கூர்மை அவளை மெய்ப்புகொள்ள வைத்தது. கையால் நெஞ்சைப் பற்றியபடி கண்கள் நீர்மைகொள்ள பெருமூச்சுவிட்டாள்.
“செல்வோம்” என்று அவன் அவள் தோளில் தொட்டபோது உடல் விதிர்த்தாள். “என்ன?” என்று அவன் கேட்டான். “முதல்முறையாக காட்டை பார்க்கிறேன் என்று தோன்றுகிறது” என்றாள். “ஆம், இது வேறு காடு” என்று நளன் சொன்னான். அவள் புருவம் சுருக்கி “ஏன்?” என்றாள். “அவன் திரும்பிச்செல்ல இடமின்றி இதற்கு முன் நாம் காட்டிற்குள் வந்திருக்கமாட்டோம்” என்றான். அவள் வாய்விட்டு நகைத்து “ஆம்” என்றபின் திரும்பி அந்த மான்கள் சென்ற வழியை பார்த்தாள். “அவற்றைப்போல இனி நாமும் இக்காடுகளுக்குள் வாழப்போகிறோமா?” என்றாள். “அவை காட்டில் பிறந்தவை” என்றான். தமயந்தி “அவற்றிடம் கற்றுக்கொள்வோம்” என்றாள். பொருளற்ற சிறுபேச்சென அறிந்திருந்தார்கள். ஆனால் அதைப்போல பெருந்தருணங்களில் உகந்தது பிறிதில்லை என்று தோன்றியது.
நளன் “முழு விடுதலை. ஆனால் அதை உணர்ந்ததுமே அது எவ்வாறு இயலும் என்று எண்ணி என் உள்ளம் வியக்கிறது. நானே என் உள்ளத்தைச் செலுத்தி சென்ற நிகழ்வுகளின் துயரங்கள் அனைத்தையும் இழுத்து என்னில் நிறைத்துக்கொள்ள முயல்கிறேன். அவை பிறிதெவருடையவோ துயர்கள் என்று தோன்றுகின்றன” என்றான். தமயந்தி “துயில்தேவியின் மாயம்” என்றாள். “போர்க்களத்தில் புண்பட்டவர்கள்மேல் ஆழ்துயில் பரவி இனிய கனவுகளை நிறைப்பதை கண்டிருக்கிறேன்” என்றான் நளன். மீண்டும் மீண்டும் அவன் அந்தத் துயிலைப் பற்றி பேச விரும்பினான். அவள் கேட்டுக்கொண்டு உடன்நடந்தாள்.
தமயந்தி எங்கு செல்கிறோம் என்று ஆழ்வினா ஒன்றை அடைந்தாள். ஆனால் அதை சொல்லென்றாக்கி நாவிற்குக் கொண்டுவருவதை தவிர்த்தாள். அந்த வினாவைத் தவிர்க்கவே அத்தருணத்தின் அத்தனை உணர்வெழுச்சிகளும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவா என்று எண்ணிக்கொண்டாள்.
அன்று பகல் முழுக்க அவர்களிருவரும் முதிரா சிறுவர்கள்போல கானாடினர். மரக்கிளைகளை தாவிப்பற்றி உலுக்கி அவள்மேல் மலர்மழை பொழிய வைத்தான். சிற்றோடையில் இறங்கி காலால் நீரைத் தெறித்து அவனை நனைத்தாள். ஆடையை உதறி முகத்தை துடைத்தபின் அவன் அவளைப் பிடிக்க வர சிரித்தபடி கிளைகளுக்கிடையே ஓடினாள். தரையில் ஓடிய பாம்பொன்றை கழுத்தைப்பற்றிப் பிடித்து அதை தூக்கிக் காட்டியபடி அவளை துரத்தி வந்தான். மரக்கிளையைப்பற்றி மேலேறி நுனிக்குச் சென்று நின்று ஊசலாடினர். அத்தி மரத்திலும் நாவல் மரத்திலும் மேலேறி கிளையுதறி பழமுதிர்க்கச் செய்தனர். சுனைக்கரையொன்றில் அமர்ந்து கனிகளை உண்டனர். கூரிய கிளையொன்றால் அகழ்ந்து அவன் கொண்டு வந்த இனிக்கும் கிழங்குகளை அவள் கல்லுரசி சருகு பற்றவைத்து சுட்டு இலையில் வைத்து கையால் அறைந்து பிளந்து அவனுக்கு அளித்தாள். வெந்த கிழங்கின் இனிய மாவை முதல் வாய் அவளுக்கு ஊட்டி அடுத்த வாயை அவன் உண்டான்.
பின்னர் களைத்து விளையாட்டின் இனிமை புன்னகையாகத் திகழ்ந்த முகத்துடன் இருவரும் நடந்தனர். அவள் “ஆ” என்று காலைத் தூக்க அவன் “என்ன?” என்றான். “முள்!” என்றாள். அவன் “இரு” என குனிந்து அவள் காலைப்பற்றி “பெரிய முள்… ஆழமாகச் சென்றிருக்கிறது…” என்றபின் முள்ளைப் பிடித்து இழுத்தான். அதன் முனையை நோக்கி “உடைந்துவிட்டது” என்றபின் சுற்றிலும் பார்த்து பிறிதொரு முள்ளை எடுத்து அந்த செங்குருதிப் புள்ளியில் குத்தினான். “ஆ” என அவள் அலற “இரு” என்று அதட்டி முள்ளை அகழ்ந்தெடுத்தான். குருதி வழியத் தொடங்கியது. அவன் அருகே நின்றிருந்த தொட்டாற்சிணுங்கி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று அந்த சாற்றை காயத்தில் விட்டான்.
அவள் காலில் மேலும் முள்தடங்கள் இருந்தன. அவன் விரலால் தடவி முட்களை எடுத்தான். “இத்தனை முட்களா?” என்றான். “உங்கள் கால்களில் முட்கள் தைக்கவில்லையா?” அவன் “நான் படைக்கலம் பயில்பவன்… என் காலின் தோல் காய்ப்பேறியது” என்றான். அவள் சிரித்து “கைகளும்” என்றாள். “காட்டு” என அவன் அவள் மறுகாலைப் பிடித்து நோக்கினான். “நிறைய முட்கள்… அனைத்தையும் எடுக்கவேண்டும்…” அவள் “நாம் அந்திக்குள் படுக்க இடம் நோக்கவேண்டும். நிழல் கரைந்து வருகிறது” என்றாள். “ஆம்” என அவன் எழுந்துகொண்டான்.
அதன்பின் அவர்கள் பேசாமல் தங்கள் எண்ணங்களை சுழற்றிக்கொண்டு நடந்தனர். அவள் நடை மாறியிருப்பதைக் கண்டு “வலிக்கிறதா?” என்றான். “சற்று” என்றாள். “நீ நெடுங்காலம் அரண்மனையிலேயே வாழ்ந்துவிட்டாய்” என்றான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. மரக்கிளைகளுக்கு நடுவே விழுந்துகிடந்த ஒளிவட்டங்கள் சிவந்து அணைந்தன. பறவைக்குரல்கள் செறிவுகொண்டன. கடந்து சென்ற ஓடை நீரில் இருள் கரைந்திருந்தது.
அரசமரம் ஒன்றைக் கண்டு அவன் நின்றான். “பெரிய மரம். மழை பெய்யுமென்றால் எழுந்து அதன் பொந்திற்குள் சென்று ஒடுங்க முடியும்” என்றான். அவள் அண்ணாந்து பார்த்தாள். பெரிய செண்டுபோல நின்றது அந்த மரம். “இது கனிமரமல்ல. ஆகவே பறவைகள் கூடணையாது. குரங்குகளும் அரசமரத்தில் அமர்வதில்லை. இதனடியில் இரவு தங்குவது உகந்தது” என்றான் நளன். அவள் தலையசைத்தாள். நளன் அவர்கள் இருவரும் படுப்பதற்கான இடத்தை தெரிவு செய்தான். அங்கிருந்த கற்களை பொறுக்கி வீசி நிலத்தை சீரமைத்தான். இரு பக்கங்களிலும் வளர்ந்து நின்றிருந்த புதர்களிலிருந்த இலைகளை ஒடித்துக்கொண்டு வந்து மெத்தை அமைத்தான். பிறகு அவளிடம் “படுத்துக்கொள். இனிய சேக்கை. மிதப்பது போலிருக்கும்” என்றான்.
அவள் அருகே சென்று குனிந்து இலைகளை கையால் அழுத்தியபின் அமர்ந்தாள். “ஆம், மென்மையாக உள்ளது” என்றாள். “நெடுந்தொலைவு நடந்து வந்துள்ளோம். நன்கு துயில முடியும்” என்றான் நளன். அவள் காலை நீட்டி மரவுரியை மடித்து இரு தொடைகளுக்குள்ளும் சொருகி ஒருக்களித்து படுத்தாள். குழலை பின்னால் தூக்கி நீட்டி அமைத்தாள். அவளுடைய பணைத்தோளை, சரிந்து இடையென குறுகி மீண்டும் ஓங்கி வளைந்து கால்களில் ஒடுங்கிய அரையை, ஒன்றன்மேல் ஒன்றென அமைந்த குவைமுலைகளை நோக்கினான். அவள் அவன் நோக்கை சந்தித்து “நீங்களும் படுத்துக்கொள்ளலாமே” என்றாள்.
“இல்லை, நீ துயில்கொள். நான் காவலிருக்கிறேன்” என்றான். “காவல் எதற்கு?” என்று அவள் கேட்டாள். “இது காடு. நாம் அயலவர். இங்கு எங்கேனும் ஒரு குடில் கட்டிக்கொள்ளும்வரை நமக்கு இரவில் நற்துயில் அமையாது” என்றான். அவள் “கட்டிக்கொள்வோம்… நம் கானேகல் முதுமைக்கு முன்னரே தொடங்கிவிட்டதென்று கொள்வோம்” என்றாள். “ஆம்” என்றான் அவன்.
“உங்கள் முகம் மாறிவிட்டது” என்று அவள் சொன்னாள். “இல்லையே” என்றான். “இல்லை, நான் பார்த்தேன். உங்கள் முகத்தில் ஒரு கணத்தில் துயர் வந்து சேர்ந்துகொண்டது” என்றாள். “ஆம், குடில் என்ற சொல் ஓர் அதிர்வை உருவாக்கியது” என்றான். “ஏன்?” என்றாள். “குடில் என்றால் மீண்டுமொரு தொடக்கம். ஒவ்வொன்றையும் இங்கிருந்து கட்டி எழுப்பவேண்டும்” என்றபின் “அது எண்ணுவதுபோல் எளிதல்ல, தேவி” என்றான். “ஏன்? எத்தனையோ முனிவர்கள் காட்டுக்குள் வந்து குடிலமைத்திருக்கிறார்கள்” என்றாள். “அரசியாகிய துணையுடன் வந்த முனிவர் எவருமில்லை” என்று அவன் சொன்னான். “நான் அரசியல்ல, உங்கள் துணைவி மட்டுமே” என்றாள்.
அவன் கைகளைக் கட்டியபடி அவளையே நோக்கிக்கொண்டிருந்தான். “என்ன?” என்றாள். “நீ என்னை மணவிலக்கு செய்திருக்கலாமே?” என்றான். அவள் சீற்றத்துடன் “இதைச் சொல்லவா இத்தனை எண்ணம்?” என்றாள். “ஆம், அது மிக எளிய வழி. அனைவருக்கும் நலம் பயப்பது” என்றான். “இந்தக் காட்டில் உன்னால் வாழமுடியாது. இங்குள்ள இடர்களுக்கு நீ பழகப்போவதில்லை. நோய் வருமென்றால் நமக்கு எவரும் உதவியில்லை” என்றான்.
அவள் சிறுமியைப்போல “ஏன், இன்று பகல் முழுவதும் களியாடினோம் அல்லவா?” என்றாள். “ஆம், இந்தக் காட்டில் நமக்கு துயரும் இடரும் மட்டுமே உள்ளது. அதை நம் ஆழம் நன்கு அறிந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் களியாட்டு. இது நமக்கு நாமே நடித்துக்கொண்டது” என்றான். அவள் எரிச்சலுடன் “இந்தச் சொல்லாடலை எல்லாம் விட்டுவிட்டுதான் இக்காட்டுக்குள் வரவேண்டும் போலும். இது மூவேளை உணவுண்டு பட்டு மஞ்சத்தில் சாய்ந்திருக்கும் அமைச்சர்களின் நூலாய்வு” என்று சொன்னாள். “இல்லை. நாம் வெறும் கற்பனைகளைக் கொண்டு எதையும் உருவாக்கிக்கொள்ள வேண்டாம். அது நுரையை ஊதியெழுப்பி மகிழ்வது போலத்தான். நம் முன் இருக்கும் ஒரே வழி நீ என்னை உதறிவிடுவதுதான்.” அவள் “உதறிவிட்டு?” என்று சீற்றத்துடன் கேட்டாள். “உன் தந்தையிடம் செல். அங்கு அரசியென்று அமை. நம் மைந்தருக்கு அன்னையுமாக இரு.”
அவள் இல்லை என்பதுபோல் தலையசைத்தாள். “நான் சொல்வதை கேள். நீ என்னுடன் இருந்தால் ஒரு கணமும் மகிழ்வுடன் இருக்கமாட்டாய். அதைவிட ஒவ்வொரு கணமும் எனக்கும் துயர் தருவாய். உன்னை இவ்விடர்களுக்கெல்லாம் இட்டுவந்தது நானே என்று தோன்றும். அவ்வெண்ணத்திலிருந்து ஒருபோதும் என்னால் விடுதலை கொள்ளமுடியாது. இந்தப் பகலின் களியாட்டு உன் காலில் தைத்த முள்ளை நான் எடுத்தபோது முடிவுற்றது. முதல் முள் அது. இனி எஞ்சியிருப்பவை பல்லாயிரம் முட்கள்” என்றான்.
அவள் கையூன்றி எழுந்தமர்ந்து “இரண்டு வழிகள் உண்டு. ஒன்று உங்களுடன் நானும் வருவது. உங்கள் துயர்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது. அல்லது எரிபுகுந்து மறைவது. நீங்கள் விடுதலை கொள்ளலாம்” என்றாள். “என்ன பேச்சு இது?” என்று அவன் அவள் கையை தொட்டான். அவள் தன் கையை இழுத்துக்கொண்டு “என்னிடம் இதை சொல்லலாகாது என்றுகூட நீங்கள் அறிந்திருக்கவில்லை” என்றாள். அவள் மூச்சு எழுந்தமைந்தது. சீறும் குரலில் “நான் உங்களை விட்டு விலகியிருக்கலாம், ராகவராமனின் சீதை அவனை விட்டிருந்தால்…” என்றாள்.
“பதினான்கு ஆண்டு காட்டிலும் அரக்கர் சிறையிலும் அவள் வாழ்ந்தாள். அதனூடாக இப்பெருநிலத்தின் பெண்டிர் பிறிதொன்றை எண்ணலாகாதென்று அறிவுறுத்திச் சென்றாள்…” என்றபோது அவள் முகம் எரிகொண்டு உருகும் உலோகச்சிலை போலிருந்தது. நளன் பெருமூச்சுவிட்டான். “இப்பேச்சு இனி வேண்டியதில்லை. எண்ணத்தினாலும் உங்களை விட்டுப்பிரிய இனி நான் ஒப்ப மாட்டேன்” என்றாள். அவன் தலையசைத்தான். பெருமூச்சுடன் “துயில் கொள்க, தேவி” என்றான்.
உறுதிபட தன் உணர்வுகளை சொல்லிவிட்டதனாலேயே அவள் அவற்றிலிருந்து விடுதலை கொண்டாள். தெளிந்த முகத்துடன் “எண்ணிக் குழம்பி துயில் களைய வேண்டாம். என் செவிகள் கூரியவை. நீங்கள் துயிலுங்கள். சிற்றொலி எழுந்தாலும் நான் உங்களை எழுப்புகிறேன்” என்றாள். அவன் புன்னகைத்து “நான் நிஷாதன். என் முன்னோர் இக்காடுகளை விட்டு வந்து ஓரிரு தலைமுறைகளே ஆகின்றன” என்றான். அவள் சிரித்து “நன்று! பிறகென்ன? மீண்டு வந்திருக்கிறோம்” என்றாள். தன் கூந்தலை மீண்டும் அகற்றி நீட்டிவிட்டு உடலை இலைப்படுக்கையில் சேர்த்து கைகால்களை தளர்த்திக்கொண்டாள்.
அவன் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இறுதியாகச் சொன்ன சொல்லின் புன்னகை இதழ்களிலும் முகத் தசைகளிலும் எஞ்ச, மெல்ல தசைகள் தளர்ந்து இதழ்கள் மலரிதழ்கள் பிரிவதுபோல் பிரிந்து வெண்பற்களின் கீழ்நுனி தெரிய, கழுத்துக் குழி எழுந்தசைய அவள் சீர்மூச்சு கொண்டாள். நிலைநீச்சலிடும் இணையன்னங்கள் என முலைகள் சீராக அசைந்தன. அவன் அவள் நெற்றியை, மூடிய விழிகளின் பெரிய இமைக்குவைகளை, கூரிய மூக்கை, மென்மயிர் நிரைகொண்ட மேலுதடை, குவிந்த கீழுதடை, குமிழ்த்த முகவாயை, மூன்று வரிகள் கொண்ட கழுத்தை, மணற்கோடுகளின் மின் கொண்ட தோள்களை, பச்சை நரம்போடிய கைகளை, ஒற்றை மயிர்க்கோடு சென்றிறங்கிய உந்தியை, பேற்றுத் தழும்புகள் மழைநீர் தடங்களெனப் படிந்த அடிவயிற்றை நோக்கிக்கொண்டிருந்தான்.
பின் ஓசையின்றி எழுந்து அவள் கால்களை நோக்கினான். முள் பட்ட தடம் குருதி உலர்ந்திருந்தது. மேலும் பல இடங்களில் முள் குத்திய சிறுபுண்கள் இருந்தன. அவன் அக்கால்களையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் தன் இடையணிந்த மரவுரியை இறுக்கிக் கட்டிக்கொண்டான். திரும்பி நோக்காமல் நடந்து காட்டில் மெல்ல உலைந்துகொண்டிருந்த புதர்களுக்குள் நுழைந்து மறைந்தான்.