நீர்க்கோலம் - 64

63. களம்நிறைத்தல்

flowerகாலகேயனாகிய ஜீமுதன் சந்தனமரம் பிணைந்த வேங்கைமரத்தடிபோல நரம்புகளும் தசைநார்களும் முறுகிப்பின்னி புடைத்த  இரு கைகளையும் தூக்கி காற்றில் அசைத்து, தொண்டை நரம்புகள் புடைத்து முடிச்செழ பேரொலி எழுப்பியபடி சுழன்று கூடி நின்றிருந்த மக்களை பார்த்தான். அவனைச் சுற்றி நிலத்தில் தலையுடைந்தும் இடுப்பு ஒடிந்தும் இறந்துகொண்டிருந்த மல்லர்களின் உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. கூட்டம் திறந்த வாய்களும் விழித்த கண்களும் அசைவிழந்த கைகளுமாக திரைச்சீலையில் வரையப்பட்ட அலைஓவியம்போல் நின்றிருந்தது. தன் வலக்காலால் நிலத்தை ஓங்கி மிதித்து அவன் மீண்டும் பெருங்குரல் எழுப்பினான்.

காட்டில் மதம் கொண்டெழுந்து மண் கிளைத்து மரம் புழக்கி பாறையில் முட்டிக்கொள்ளும் ஒற்றைக்களிறென செய்வதென்ன என்றில்லாமல் ததும்பினான். எரியில் எழும் கரிப்புகை என அவன் கரிய உடலின் தசைகள் முகிழ்த்து பொங்கி அலையலையென எழுந்தன. மீண்டும் ஒருமுறை அவன் அறைவொலி எழுப்பியபோது கூடி நின்ற நிஷாதர்கள் அனைவரும் வெடித்தெழுந்து வாழ்த்தொலி எழுப்பினர். மொழியென்றும் சொல்லென்றும் திருந்தாத விலங்குக் குரல்களின் தொகையாக இருந்தது அது. ஒவ்வொருவரும் யானைகள்போல கரடிகள்போல மாறிவிட்டனரென்று தோன்றியது. நெஞ்சில் அறைந்தபடியும் கைகளை அசைத்தபடியும் மண்ணில் இருந்து எம்பி குதித்தபடியும் அவர்கள் வீரிட்டனர்.

புடைத்த தொண்டை நரம்புகளும் பிதுங்கி வெளிவருவதுபோல் வெறித்த விழிகளும் திறந்த வாய்களுக்குள் வெண்பற்களுமாக அலையடித்த அந்தத் திரளை அரசமேடை அருகே நின்ற விராடர் திகைப்புடன் பார்த்தார். அறியாது படிகளில் காலெடுத்து வைத்து மேலேறி அரியணைப் பக்கம் வந்தார். கால் தளர்ந்தவர்போல அரியணையின் பிடியை பற்றிக்கொண்டார். அவர் கால்கள் நடுங்கின. வாய் தளர்ந்து விழ முகத்தில் தசைகள் அனைத்தும் உருகி வழியும் மெழுகென தொய்வடைந்தன.

நெஞ்சில் மாறி மாறி அறைந்தபடி தன்னைச் சூழ்ந்து திரையெழுந்த நிஷாதர்களை நோக்கி  பிளிறியபடியே இருந்தான் ஜீமுதன். அழுகையென நெளிந்த முகம் கணத்தில் சினம்பற்றிச் சீறியெழ  கையை ஓங்கி அரியணையில் அறைந்தபடி விராடர் அரசமேடையின் விளிம்புக்குச் சென்று அப்பால் தனி மேடையில் இருந்த கீசகனைப் பார்த்து “கீசகா! என்ன செய்கிறாய் அங்கே? இனியும் இந்த அரக்கனை இங்கு விட்டு வைக்கலாமா? கொல்! அவனை இக்கணமே கொல்!” என்றார்.

ஜீமுதன் திரும்பி ஏளனம் தெரியும் இளிப்புடன் “குலநெறிகளின்படி உங்கள் குடிமுத்திரையை தோளில் பொறித்துக்கொண்ட அடிமையோ நிஷதகுடியின் குருதிகொண்டவனோ மட்டுமே என்னை எதிர்கொள்ள முடியும். வேறெங்கிலுமிருந்து  கூட்டிவந்து நிறுத்தும் ஒருவனைக் கொண்டு உங்கள் முடி காக்கப்பட வேண்டுமென்றால் அந்த முடியை இதோ என் காலால் எத்தி வீழ்த்துகிறேன்” என்றான்.

“அவன் என் உறவினன். என் மனைவியின் உடன்பிறந்தான்”  என்று விராடர் கூவினார். “விராடரே, குருதி என்றால் உங்கள் நிஷதகுடியின் குருதி என்று பொருள். மணம்கொண்ட பெண்ணின் உறவுகள் உங்கள் குருதி உறவுகள் அல்ல” என்றான் ஜீமுதன். “இந்தப் பேச்சை இனி நான் கேட்க விரும்பவில்லை. கீசகா, கொல்! இக்கணமே இவன் குருதியை எனக்குக் காட்டு” என்று விராடர் கைகள் நடுங்கித்தெறிக்க வாய்நுரை எழ கூச்சலிட்டார். தன் தொடைகளை அறைந்தபடி பற்களை நெரித்து கீசகனிடம் “கொல் இவனை! இவன் தலையை உடைத்து குருதியை வீழ்த்து” என்றார். அரியணையும் முடியும் கோலும் அகன்று வெறும் நிஷாதனாக அந்த மேடையில் நின்றார்.

கீசகன் எழுந்து பணிவுடன் “இவனைக் கொல்வதொன்றும் அரிதல்ல, அரசே. ஆனால் இவனைக் கொல்வதனால் இவன் விடுத்த அறைகூவல் மறைவதில்லை. இவனை உங்கள் குருதியினரோ படைவீரரோ குடியினரோ எதிர்கொள்ளாதவரைக்கும் இவன் வென்றதாகவே கருதப்படுவான். விராடபுரியை வென்ற மன்னனை நான் கொன்றதாகவே காலகேயர்கள் எடுத்துக்கொள்வார்கள். தாங்கள் அறிவீர்கள், இன்று வடபுலத்தில் பாணாசுரர் காலகேயர்களை திரட்டி அமைத்திருக்கும் பெரும்படையை. தெற்கே நிஷாதர்களின் குடிகள் பல அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளன. மச்சர்களின் நாடுகள் அவர்களுக்கு உடன் சாத்திட்டிருக்கின்றன. இந்த ஏது ஒன்று போதும் அவர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு” என்றான்.

“பேசாதே. அரசியல்சூழ்ச்சிக்கான இடமல்ல இது. இக்கணமே இவனைக் கொன்று இவன் குருதியை எனக்குக் காட்டு. இல்லையேல் நான் இறங்கி இங்கு உயிர் துறப்பேன்” என்றார் விராடர். கீசகன் தயங்கி “அரசே, இவ்வண்ணம் ஒன்று நிகழுமென்று நான் எண்ணவில்லை. இன்று காலகேயர்கள் நம்மீது படைகொண்டு வருவதற்கு ஒரு தொடக்கத்தை நாடியிருக்கிறார்கள். அதன்பொருட்டே இவனை அனுப்பியிருக்கிறார்கள் என உய்த்து அறிகிறேன்… நிஷதகுடிகள் அவர்களுடன் சேரத் தயங்கிக்கொண்டிருப்பது நாம் குலநெறி நின்று அரசுசூழ்கிறோம் என்பதனால்தான். நாம் நெறி தவறினோம் என்றால் அவர்கள் அனைவரும் அங்கு செல்வார்கள். அதன் பிறகு இந்த நாடு எஞ்சாது” என்றான்.

 “பிறகென்ன செய்ய வேண்டுமென்கிறாய்? சொல்!” என்றார் விராடர். “இவனை நம்மால் எதிர்கொள்ள முடியாது. இத்தருணத்தில் ஓர் அரசியல்சூழ்ச்சியென நாம் முடி துறப்போம். இவன் அரியணை அமரட்டும். அதன்பின் நம் படைகளால் இவனை வென்று இந்நகரை கைப்பற்றுவோம். அது முற்றிலும் நெறிநின்று ஆற்றும் செயலே” என்றான் கீசகன். “இது என் சொல், தங்களுக்காகப் படை நடத்தி இவனை வெல்வது என் பொறுப்பு.”

விராடர் காறி தரையில் துப்பினார். சினவெறியுடன் தன் மேலாடையை எடுத்து அரியணைமேல் வீசி தலைப்பாகையைக் கழற்றி அதன் மேலிட்டார். “முடி துறப்பதா? அதைவிட இவன் முன் களம்நின்று உயிர் துறப்பேன். இது எந்தை எனக்களித்த முடி. களம்பட்டு இதைத் துறந்தால் விண்சென்று அவர் முன் நிற்க எனக்குத் தயக்கமிருக்காது… முடி துறந்து செல்வேன் என்றால் என் மூதன்னை என் முகத்தில் உமிழ்வாள்” என்றபின் திரும்பி உத்தரனைப் பார்த்து “உத்தரா, மூடா, எழு! அணிகளைக் கழற்று. இது நம் நிலம், இதன்பொருட்டு இக்கணத்தில் மோதி இறப்போம். அது நம் குடிக்கு பெருமை” என்றார்.

உத்தரன் அக்குரல்களை தனக்குப் பின்னாலிருந்து எவரோ சொல்வதுபோல் கேட்டான். ஒரு கணத்தில் தந்தையின் முகம் மிக அருகே வந்து அவரது கண்களுக்குக் கீழ் சுருக்கங்களும் பற்களின் கறையும் தெரியும்படியாக விரிந்தது. மதுப் பழக்கத்தால் பழுத்த நீரோடிய விழிகள் சினத்துடன் எரிந்தன. “எழு! இவன் முன் தலையுடைந்து இறப்பதே நம் கடமை இப்போது.” உத்தரனின் இரு கால்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தன. கைகளால் தன் பீடத்தின் பிடியைப் பற்றியபடி பற்கள் உரசிக்கொள்ளும் ஓசையைக் கேட்டு எங்கிருக்கிறோம் என்றே உணராதவனாக  அமர்ந்திருந்தான்.

குங்கன் எழுவதையும் அரசரின் தோளைத் தொட்டு மெல்லிய குரலில் ஏதோ சொல்வதையும் அவன் கண்டான். குங்கனின் இதழ்கள் மிக அருகிலெனத் தெரிந்தன. குங்கன் சொன்னது புரியாததுபோல் விராடரின் முகம் நெரிந்தது. புருவங்கள் சுருங்கி கண்கள் துடித்தன. இருமுறை திரும்பிப் பார்த்து மேலும் குழம்பி உதிரிச் சொற்கள் ஏதோ சொன்னார். ஒரு கணத்தில் அவருக்கு குங்கன் சொன்னது புரிய அவன் கைகளை பற்றிக்கொண்டார். பின்னர் திரும்பியபோது அவர் முகம் வெறியும் சினமும் கொண்டு இளித்திருந்தது. “அடுமனையாளன் வலவன் எங்கே? வலவன் எழுக! இப்போதே களம் புகுக!” என்றார்.

விராட குடிகள் அனைவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்க்க நிமித்திகர் அச்சொற்களை ஏற்றுக்கூவினர்.  சூதர்களும் புரவிக்காரர்களும் கூடி நின்ற திரளிலிருந்து உடல்களை ஒதுக்கியபடி, காட்டுத்தழைப்பிலிருந்து மத்தகமெழும் யானை என வந்த வலவன் வேலியை கையூன்றித் தாவி  களத்தில்  நின்று தலைவணங்கினான். “நீ விராடபுரியின் அடிமையல்லவா?” என்றார் விராடர். “ஆம், அரசே” என்றான் வலவன். “உங்கள் குடிமுத்திரையை தோளில் பச்சை குத்திக்கொண்டவன். உங்கள் மிச்சிலுண்டு வாழ்பவன்.” விராடரின் கண்கள் அவன் தோள்களை நோக்கி அலைபாய்ந்தன. “என்பொருட்டு இவ்வரக்கனை எதிர்கொள்ள உன்னால் இயலுமா?” வலவன் தலைவணங்கி “நான் போர்க்கலை பயின்றவனல்ல. விளையாட்டுக்கு மற்போரிடுவதுண்டு. தாங்கள் ஆணையிட்டால் இவனை நான் கொல்கிறேன்” என்றான்.

அச்சொல் ஜீமுதனின் உடலில் சருகு விழுந்த நீர்ப்பரப்பென ஓர் அதிர்வை உருவாக்கியது. வலவன் எழுந்து வந்தபோதே ஜீமுதனின் முகமும் உடலும் மாறுபடுவதை சூழ்ந்திருந்த நிஷாதர்கள் அனைவரும் கண்டனர். உடலில் பெருகி கைகளில் ததும்பி விரல்களை அதிரவைத்த உள்விசையுடன் ஒவ்வொருவரும் முன்னகர்ந்தனர்.  “கொல் இவனை! இவனை நீ கொன்றால் நீ விழைவதை நான் அளிப்பேன். இது என் மூதாதையர் மேல் ஆணை!” என்றார் விராடர். அவனை திரும்பிப் பார்த்து “தங்கள் ஆணை. எவ்வண்ணம் கொல்லவேண்டும் என்று சொல்லுங்கள், அரசே” என்றான் வலவன். விராடரே சற்று திகைத்தார். பின் “நெஞ்சைப் பிள… அவன் சங்கை எடுத்து எனக்குக் காட்டு” என்றார். “ஆணை” என அவன் தலைவணங்கினான்.

வலவன் தன் இடையில் கட்டிய துணியை அவிழ்த்து அப்பால் வீசினான். அதற்கு அடியில் தோலாடை அணிந்திருந்தான். அதை முறுக்கிக் கட்டினான். சம்பவன் கூட்டத்திற்குள்ளிருந்து பாய்ந்து வந்து அளித்த தோற்கச்சையை அதற்குமேல் இறுக்கிக்கட்டி உடற்தசைகளை நெகிழ்த்தி இறுக்கி தோள்களை குவித்தான்.  இரு கைகளையும் விரித்து பின் விரல்சேர்த்து எலும்புகள் ஒலிக்க நீட்டி நிமிர்த்தியபின் “உன் பெயரென்ன?” என்று ஜீமுதனிடம் கேட்டான். ஜீமுதன் முகத்தில் அறியாமை நிறைந்த மந்தத் தன்மையொன்று வந்திருந்தது. “காலகேய ஜீமுதன்” என்றான். “நான் சூதனாகிய வலவன். உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் பேருடலை நானும் மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அடிபணிந்து விலகிச் செல்!” என்றான் வலவன்.

ஜீமுதன் இரு கைகளையும் விரித்து தேள்போல காலெடுத்து வைத்து மெல்ல அணுகி  “இல்லை. எந்தக் களத்திலும் நான் பின்னடைந்ததில்லை” என்றான். “இக்களத்தில் நீ வெறும் கரு. உயிர் துறப்பதற்குரிய அடிப்படையேதும் இங்கு இல்லை. செல்க!” என்றான் வலவன். மேலும் அணுகி வலவனுக்கு நிகராக நின்றான் ஜீமுதன். வலவனின் தலை அவன் மார்பளவுக்கு இருந்தது. ஆனால் இரு கைகளையும் அவன் விரித்தபோது ஜீமுதனின் தோள்களைவிடப் பெரியவை வலவனின் தோள்கள் என்று தெரிந்தது. அப்போதே போர் எவ்வகையில் முடியுமென்று நிஷாதர்களில் பெரும்பாலோர் அறிந்துவிட்டிருந்தனர். மெல்லிய முணுமுணுப்புகள் கலந்த முழக்கம் களத்தைச் சுற்றி ஒலித்தது.

ஜீமுதன் மேலும் அருகே வந்தான். வலவனும் அவனும் மிக நெருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டனர். ஜீமுதனின் முகத்திலும் உடலிலும் வரும் மாறுதலை திகைப்புடன் உத்தரன் பார்த்தான். ஜீமுதன் இரு கைகளையும் விரித்து ஹஸ்தலம்பனத்திற்கு காட்டினான். வலவன் தன் இரு கைகளையும் அவன் கைகளுடன் கோத்துக்கொண்டான். ஒருவரையொருவர் உந்தி உச்ச விசையில் அசைவிழந்தனர்.

வலவன் உதடுகள் எதையோ சொல்வதை, அதைக் கேட்டு ஜீமுதனின் முகம் மாறுபடுவதை உத்தரன் கண்டான். “என்ன சொல்கிறார்?” என்று ஏவலனிடம் கேட்டான். “மற்போரில் மாற்றுரு கொண்டு எவரும் போரிடலாகாது. மறுதோள் மல்லன் அறியாத மந்தணம் எதையும் உளம் கொண்டிருக்கலாகாது. வலவன் நாம் எவரும் அறியாத எதையோ ஜீமுதனிடம் சொல்கிறான்” என்றான் ஏவலன். ஜீமுதனின் முகம் மாறுபட்டது. துயர்போல பின் பணிவுபோல. பின்னர் அவன் தெய்வத்தின் முன் நிற்கும் பூசகன்போல் ஆனான்.

“நான் சொல்கிறேன், அவன் என்ன சொல்கிறானென்று” என்றபடி உத்தரன் பாய்ந்து எழுந்தான். “நான் அடுமனையாளன் அல்ல, காட்டிலிருந்து கிளம்பி வந்த தெய்வம்.  கந்தர்வன்! அதைத்தான் சொல்கிறான்” என்றான். ஏவலன் “ஆம், அத்தகைய எதையோ ஒன்றைத்தான் சொல்லியிருக்கிறான். காலகேயனின் உடலும் முகமும் முற்றிலும் மாறிவிட்டன” என்றான்.

flowerகீசகன் ஜீமுதனின் மாற்றத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலில் எழுந்த பணிவை அதன்பின் மெல்ல எழுந்த பெருமிதத்தை. அவர்கள் தோள்விலகி களத்தில் முகத்தொடு முகம் நோக்கி நின்றனர். இரு கைகளையும் நீட்டியபடி மெல்ல சுற்றிவந்தனர். கால்கள்  தழுவும் நாகங்களின் படமெடுத்த உடல்போல ஒன்றை ஒன்று உரசியபடி நடக்க எச்சரிக்கை கொண்ட முயல்கள் என பாதங்கள் மண்ணில் பதிந்து செல்ல வலவன் ஜீமுதனின் தோள்களில் விழி ஊன்றி சுற்றிவந்தான். அவனுடைய பேருருவ நிழல் என ஜீமுதன் மறு எல்லையில் சுற்றி நடந்தான்.

வலவன் வெல்வான் என்று கீசகன் நன்குணர்ந்துவிட்டிருந்தான். இரு தோள்களும் தொட்டு கோத்துக்கொண்டபோதே உயரமும் எடையும் குறைவென்றாலும் வலவனின் தோள்கள் பெரிது எனத் தெரிந்தது. ஜீமுதனின் எடை மட்டுமே வலவனை வெல்லும் கூறு, அவ்வெடையை எப்படி வலவன் எதிர்கொள்வான் என்பது மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டியது. அடிஒழியவும்  நிலைபெயராதிருக்கவும் தெரிந்தவன் வலவன் என்றால் அனைத்தும் முடிவாகிவிட்டன. இவன் தோள்களை நான் இதுவரை எண்ணியதே இல்லையா? இவனைத் தவிர்த்து இத்திட்டத்தை எப்படி வரைந்தேன்?

இவனை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இவன் தோள்களை நோக்குவதை தவிர்த்தேன். இவனைத் தொட்ட என் விழிகள் அக்கணமே விலகிக்கொண்டன. நான் இவனை அஞ்சுகிறேனா? அஞ்சுவதா? நானா? ஆனால் அஞ்சுகிறேன். இவனை அல்ல. இவன் வடிவாக வந்துள்ள பிறிதொன்றை. அது என் இறப்பு அல்ல. இறப்பை நான் அஞ்சவில்லை. என் ஏழு வயதில் காலைக் கவ்விய முதலை ஒன்றை வாய் கீண்டு வென்றேன். அன்று நான் வென்றது என்னுள் உறையும் சாவச்சத்தை. நான் அஞ்சுவது பிறிதொன்றை. அல்லது, அது அச்சமே அல்ல. அது பிறிதொன்று. அவன் மெல்லிய மயிர்ப்பு ஒன்றை அடைந்தான். இவனை நான் நன்கறிவேன். இவன் தோள்களை தழுவியிருக்கிறேன். இவனுடன் காற்றிலாடி சேற்றில்புரண்டு எழுந்திருக்கிறேன்…

கூட்டத்திலிருந்து “ஹோ” என்னும் பேரொலி எழுந்தது. இரு மல்லர்களும் யானைமருப்புகள் என தலை முட்டிக்கொள்ள கைகளால் ஒருவரை ஒருவர் அள்ளி கவ்விக்கொண்டனர். கால்கள் பின்னிக்கொண்டு மண்ணைக் கிளறியபடி மண்ணை மிதித்துச் சுற்றின. தசைகளையே கீசகன் நோக்கிக்கொண்டிருந்தான். வலவன் ஜீமுதனின் பிடியிலிருந்து உருவிக்கொண்டு தரையில் அமர்ந்து அவ்விசையிலேயே விலகிக்கொண்டு துள்ளி எழுந்து தன் கையை வீசி வெடிப்போசையுடன் ஜீமுதனின் வலது காதின் மீது அறைந்தான். ஜீமுதன் தள்ளாடி நிலைமீண்டதைக் கண்டதுமே கீசகன் அவன் செவிப்பறை கிழிந்துவிட்டதை புரிந்துகொண்டான். ஜீமுதன் இரு கைகளையும் விரித்து தன்னை காத்துக்கொண்டபடி விழிகளை மூடித்திறந்தான். அவனால் இனி கூர்ந்து கேட்கவியலாது. உடலின் நிகர்நிலையைப் பேணமுடியாது. இனி நிகழப்போவது ஒரு கொலைதான்.

கீசகன் திரும்பி குங்கனை நோக்கினான். அடுமனையில் இப்படி ஒருவனிருப்பதை இவன் எப்படி அறிந்தான்? எளிய சூதாடி. ஆனால் சூதாடுபவர்கள் அச்சூதுக்களத்தின் பெருவிரிவாக வெளியுலகை நோக்கிக்கொண்டிருக்கிறார்களா என்ன? அவன் விழிதிருப்பியபோது வேறெங்கோ நோக்கியவன்போல் அமர்ந்திருந்த கிரந்திகனைக் கண்டான். அவன் எங்கு நோக்குகிறான் என்று பார்த்தபின் மீண்டும் அவனை நோக்கினான். அப்போது அவன் நோக்கு வந்து தன்னை தொட்டுச்செல்வதை கண்டான்.  அவன் நோக்கியது யாரை என உணர்ந்து அங்கே நோக்கினான். பிருகந்நளை அந்தப் போரில் எந்த வித அக்கறையும் இல்லாமல் அமர்ந்திருந்தாள்.

இவர்கள் மட்டும்தான் இப்போருக்கு சற்றும் உளம் அளிக்காமல் அமர்ந்திருக்கிறார்கள். யார் இவர்கள்? அவன் திரும்பி சைரந்திரியை பார்த்தான். பக்கவாட்டில் அவள் முகத்தின் கோட்டுத்தோற்றம் தெரிந்தது. ஒருகணத்தில், ஒருகணத்தின் நூற்றிலொன்றில், வரையப்பட்ட கோட்டுக்கு மட்டுமே அந்த வளைவு இயலும். நெற்றி, மூக்கு, இதழ்கள், முகவாய், கழுத்து, முலையெழுச்சி… எப்போது அவளைப் பார்த்தாலும் அவன் அடையும் படபடப்பு அது. அவள் முழுமையாகவே அந்தத் தசைப்பூசலில் ஈடுபட்டிருந்தாள். அவளே ஈருரு கொண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருப்பதுபோல.

கிருதங்களும் பிரதிகிருதங்களும். ஹஸ்தக்கிருதத்திற்கு ஹஸ்தக்கிருதம். பாதக்கிருதம் பாதக்கிருதத்திற்கு. அர்த்தகிருதமென்றால் அதுவே. மற்போர் ஒருவனின் ஓர் அசைவை பிறிதொருவன் நிகர் செய்வது. ஓர் உரையாடல். மிகமிகத் தொன்மையானது. ஒருவனின் நிழலென பிறிதொருவன் ஆவது. இருவரும் கவ்விக்கொள்கிறார்கள். ஒருவனை ஒருவன் தூக்கிச்சுழற்ற முயன்று நின்று அதிர்கிறார்கள். சந்நிபாதத்தில் ஒரு மாத்திரைதான் வெற்றிதோல்வியை முடிவாக்குகிறது. இதோ வலவன் ஜீமுதனைச் சுழற்றி மண்ணில் வீழ்த்துகிறான்.  அவன்மேல் பாய்ந்து கால்களால் அவன் கால்களைக் கவ்வி மண்ணுடன் பற்றிக்கொள்கிறான். அவதூதம் என்பது மண்ணிலிருத்தல். மண் எனும் பெருமல்ல அன்னையின் மடியில் தவழ்தல். பிரமாதம் என்பது அதில் திளைத்தல். எழுந்து மாறிமாறி அறைந்துகொண்டார்கள். உன்மதனம்.

கீசகன் முதலில் வலவனாக நின்று ஜீமுதனிடம் போரிட்டுக்கொண்டிருந்தான். எப்போதென்று அறியாமல் ஜீமுதனாக மாறியிருந்தான். இருவரும் உருண்டு புரள்கையில் ஒருகணம் அவனாகவும் மறுகணம் இவனாகவும் உருமாறி ஒன்றில் சென்று நிலைத்தான். ஒவ்வொரு கணம் என வலவன் ஆற்றல்கொண்டபடியே சென்றான். ஜீமுதனின் உடலில் இருந்தே அந்த ஆற்றலை பெற்றுக்கொண்டவன்போல. ஒரு துளி, பிறிதொரு துளி. ஆனால் அந்த ஒவ்வொரு துளியையும் நோக்க முடிந்தது. இந்தக் கணம், இதோ இக்கணம், இனி மறுகணம், இதோ மீண்டுமொரு கணம் என அத்தருணம் விலகிச்சென்றது.

ஆனால் அது நிகழ்ந்தபோது அவன் அதை காணவில்லை. ஜீமுதனை வலவன் தன் தோளின்மேல் தூக்கி மண்ணில் ஓங்கி அறைந்தான். தன் எடையாலேயே ஜீமுதன் அந்த அடியை பலமடங்கு விசையுடன் பெற்றான். சில கணங்கள் ஜீமுதன் நினைவழிந்து படுத்திருக்க அவன்மேல் எழுந்து தன் முழங்கைக் கிண்ணத்தால் அவன் மூச்சுக்குழியில் ஓங்கி குழித்தடித்தான். ஜீமுதன் உடலின் தலையும் கால்களும் திடுக்குற்று உள்வளைந்து பின் நெளிந்துகொள்ள அவன் கைகளும் கால்களும் இழுபட்டுத் துடித்தன. மீண்டும் இருமுறை அவன் மூச்சுக்குழியை அடித்துக் குழித்து அவ்வாறே அழுத்தியபின் அவன் கழுத்தை தன் கைகளால் வளைத்துப் பற்றிக்கொண்டான்.

அங்கிருந்து நோக்கியபோது வலவனின் முகம் தெரிந்தது. இனிய காதலணைப்பில் கண்மயங்கி செயலழிந்ததுபோல. உவகையா அருளா என்றறியாத தோய்வில். இறுக்கி உடல்செறிக்கும் மலைப்பாம்பின் முகமும் இப்படித்தான் இருக்கின்றது. அவன் கைகளை கோத்தபடி நோக்கி அமர்ந்திருந்தான். விரல்நுனிகளில் மட்டும் குருதி வந்து முட்டுவதன் மெல்லுறுத்தல்.  இறுதி உந்தலாக ஜீமுதன் வலக்காலை ஓங்கி மண்ணில் அறைந்து எம்பிப்புரண்டான். வலவன் அவனுக்கு அடியிலானான். ஆயினும் பிடியை விடவில்லை. ஜீமுதனின் முகம் தெரிந்தபோது அதிலும் அதே இனிய துயில்மயக்கே தெரிந்தது. நற்கனவுக்குள் மூழ்கிக்கொண்டிருப்பவன்போல.

சூழ்ந்திருந்த கூட்டம் ஆழ்ந்த அமைதியில் உறைந்திருந்தது. இலைநுனிகளும் ஆடைகளும்கூட அசைவழிந்தன என்று தோன்றியது. இருவரும் இங்கிருந்து மூழ்கி பிறிதொரு உலகில் அமைந்துவிட்டதுபோல. நீரடியில் பளிங்குச் சிலைகள் என பதிந்துவிட்டதுபோல. இருவரும் இறந்துவிட்டனர் என்னும் எண்ணம் அவனுக்கு வந்ததும் உள்ளம் அதிர்ந்தது. எவர்பொருட்டு அந்த அச்சம்? எத்துணை பொழுது! இப்படியே அந்தியாகலாம். இரவு எழலாம். புலரி வெளுத்து பிறிதொரு நாளாகலாம். மாதங்கள், ஆண்டுகள், யுகங்கள், மகாயுங்கள், மன்வந்தரங்கள். வேறெங்கோ இது முடிவிலாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வலவன் ஜீமுதனை புரட்டிப்போட்டு எழுந்தான். ஜீமுதன் இரு கைகளும் விரிந்து மல்லாந்திருக்க தலை அண்ணாந்து வானைப் பார்க்க சற்றே திறந்த வாய்க்குள் குதிரையுடையவைபோன்ற கப்பைப் பற்கள் தெரிய கிடந்தான். வலவன் விராடரை நோக்கி தலைவணங்கி “ஆணைப்படி இவன் சங்கைப் பிடுங்கி அளிக்கிறேன், அரசே” என்றான். விராடர் அரியணையில் கால் தளர்ந்து படிந்து அமர்ந்திருந்தார். “என்ன? என்ன?” என்றார். வலவன் “இவன் சங்குக்குலையை பிழுதெடுக்க வேண்டும் என்றீர்கள்” என்றான். அவர் பதறி எழுந்து கைநீட்டி “வேண்டாம்… வேண்டாம்…” என்றார். “அவன் தெய்வப் பேருரு. அவன் பிழை ஏதும் செய்யவில்லை. பிழைசெய்தவன் நான். தோள்வலிமையில்லாதிருப்பதுபோல அரசனுக்கு குலப்பழி பிறிதில்லை” என்றார்.

அவர் குரல் உடைந்தது. விழிநீரை கைகளால் ஒற்றிக்கொண்டு ஒருகணம் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார். பின் கைகளை விரித்து “நம் மண்ணுக்கு வந்த இம்மாவீரன் இங்கு என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும். களம்பட்ட முதல் வீரனுக்குரிய அனைத்துச் சடங்குகளுடனும் இவன் உடல் எரியூட்டப்படுக! குடிமூத்தாருக்கு அளிக்கப்படும் முழுஇரவும் உண்ணாவிழிப்பு நோன்பும் பதினாறுநாள் துயர்காப்பும் இவனுக்கு உரித்தாகுக! இவன் நடுகல் நம் மூதாதையர் வாழும் தென்னிலத்திலேயே அமைக! இந்நாளில் இவனுக்குரிய படுக்கையும் கொடையும் இங்கு நிகழ்க! நம் மைந்தர் மற்போரிடும் களங்களில் எல்லாம் ஒரு கல் என இவனும் நின்றிருப்பதாக. நம் போர்ப்பூசனைகளில் எல்லாம் அன்னக்கொடைகளில் ஒரு கைப்பிடி இவனுக்கும் அளிக்கப்படுவதாகுக!” என்றார்.

சூழ்ந்திருந்த பெருந்திரள் கைகளையும் கோல்களையும் தூக்கி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று கூவியது. நிமித்திகன் கைகாட்ட களமுதல்வன் மண்பட்டதை அறிவித்தபடி பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. “மண்வந்த மாவீரன் வெல்க! விண்சென்ற முதல்வோன் வாழ்க! பெருந்தோளன் வாழ்க!” என வாழ்த்தொலிகள் எழுந்து கரும்பாறை அடுக்கை நதிப்பெருக்கு என முரசொலியை மூடின. கொம்புகள் பிளிறி “விண்நிறைந்தவனே, எங்களுக்கு அருள்க! எங்கள் குருதியில் நீ மீண்டும் நிகழ்க!” என இறைஞ்சின.

வலவன் குனிந்து ஜீமுதன் கால்களைத் தொட்டு சென்னிசூடி வணங்கினான். அவன் அரசமேடை அருகே சென்று நின்று தலைவணங்கியபோது “நீ விழைந்ததை கேள்” என்றார் விராடர். கையசைவிலேயே அவர் சொற்களை உணரமுடிந்தது. அவர் விழிகள் சுருங்கி வலவனை பகை என நோக்கின. ஒரே கணத்தில் அங்கிருந்த அனைவராலும் உள்ளாழத்தில் வெறுக்கப்படுபவனாக அவன் ஆன விந்தையை கீசகன் எண்ணிக்கொண்டான். வென்ற மல்லன் சிறந்தவன், இறந்த மல்லன் மிகச் சிறந்தவன் என அவன் இளிவரலுடன் எண்ணி இதழ்வளைய புன்னகை செய்தான். வலவன் ஏதோ சொல்லி தலைவணங்கி வெளியேறினான். திகைத்தவர்போல விராடர் அவனை நோக்கி நின்றார்.

நிஷாத வீரர்களும் ஏழு நிமித்திகர்களும் வந்து மண்ணில் கிடந்த ஜீமுதனின் உடலின்மேல் செம்பட்டு ஒன்றை போர்த்தினர். களத்தில் பரவிய வீரர்கள் உடல்களை அகற்றத் தொடங்கினர். இறந்த எறும்புகளை எடுத்துச்செல்லும் எறும்புக்கூட்டங்கள். அரசர் எழுந்து அவையை தலைவணங்கிவிட்டு திரும்பிச்செல்ல அவர் அவை நீங்குவதை அறிவிக்கும் கொம்புகளும் முழவுகளும் ஒலித்தன. சூழ்ந்திருந்த மக்கள் அறுபடாது வாழ்த்தொலி முழக்கிக்கொண்டே இருந்தனர். அரசியும் இளவரசியும் அவை நீங்கினர். கீசகன் தன்னருகே வந்து வணங்கிய முதுநிமித்திகனிடம் “அவன் என்ன சொன்னான்?” என்றான்.

உதடசைவை சொல்லென்றாக்கும் நெறிகற்ற நிமித்திகன் அரசர் சொன்னதை சொன்னான். “வலவன் சொன்ன மறுமொழியை சொல்க!” என்றான் கீசகன் பொறுமையிழந்தவனாக. “வெற்றிக்கு அப்பால் விழைவதும் பெறுவதும் இல்லை அரசே என்றான்.” கீசகன் தலையசைத்தான். அவன் திரும்பியதும்  நிமித்திகன் “ஆனால் விலகிச்செல்கையில் அவன் தனக்கென்று சொல்லிக்கொண்டதையும் இதழசைவைக்கொண்டு படித்தறிந்தேன்” என்றான். சொல்க என்பதுபோல கீசகன் திரும்பிப்பார்த்தான். “வெற்றி என்பதுதான் என்ன என்று அவன் சொல்லிக்கொண்டான், படைத்தலைவரே” என்றான் நிமித்திகன்.