நீர்க்கோலம் - 55
54. பரிஎழுகை
சதகர்ணிகளின் அமைச்சர் சுமத்ரர் எண்ணியதுபோலவே அனைத்தும் முன்சென்றன. ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேரரசி தமயந்தி அஸ்வமேதம் நிகழ்த்தவிருப்பதாக உளவுச் செய்தி வந்தது. நிஷதபுரியின் அவையில் அதைப்பற்றி அவள் பேசியபோது கருணாகரர் மட்டும் தயக்கத்துடன் “இன்றைய சூழலில் பிற அரசர்கள் அதற்கு ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அவர்கள் மோதவேண்டுமென எண்ணினால் நாம் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் இல்லை. நம் குலங்கள் பிரிந்துள்ளன. இளையவர் உள்ளமாறுபாடு கொண்டிருக்கிறார்” என்றார்.
தமயந்தி உறுதியுடன் “ஆம், அதை நான் எண்ணினேன். ஆனால் இப்போது நம்முன் உள்ளது இவ்வழி ஒன்றே” என்றாள். “நம் குலங்கள் உள்ளமாறுபாடு கொண்டுள்ளன. அவ்வண்ணம் திரிபு தொடங்கும்போதே மும்மடங்கு ஒற்றுமையை வெளிக்காட்டியாக வேண்டியதுதான் அரசியல் சூழ்ச்சி. நம் பிளவுகள் பிறருக்கு தெரியலாகாது, அதை நம் எதிரிகள் வளர்க்கலாகாது” என்றாள். “அஸ்வமேதம் தொடங்கும் செய்தியே நம் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாம் நிஷாதர் என்னும் உணர்வை உருவாக்கும்.”
நாகசேனர் “உண்மை அரசி, துயர்கவ்வும்போது உவகைகொண்டவர்களாக நடிப்பது மெய்யாகவே உவகையை கொண்டுவரும். நாம் நாம் என இம்மக்கள் பேசத்தொடங்கிவிட்டாலே நாம் வென்றோம்” என்றார். முகம் மலர்ந்த தமயந்தி “அத்துடன் ஒரு சில போர்கள் நிகழ்வதும் நல்லது. முதலில் சில சிறுதோல்விகள். நம் படைகள் தோற்கிறார்கள் என்ற செய்தி வரும்போது இங்குள்ளவர்கள் பதற்றம் கொள்வார்கள். மேலும் சில தோல்விச் செய்திகள் வருமென்றால் அது வெறியென்றாகும். பொதுவெளியில் சில அயல்நாட்டு ஒற்றர்களை கழுவேற்றுவோம். போர்முரசும் கொலைக்காட்சிகளும் மக்களின் உள்ளங்களை மடைமாற்றும்” என்றாள்.
கருணாகரரிடம் “அமைச்சரே, மக்கள் மாறா சலிப்பில் வாழ்பவர்கள். சலிப்பை வெல்லும்பொருட்டே அவர்கள் தங்களை குலமென்றும் குடியென்றும் பிரித்துக்கொள்கிறார்கள். வஞ்சமும் காழ்ப்பும் வளர்த்துக்கொண்டு பூசலிடுகிறார்கள். விழவும் களியாட்டும் அவர்களின் சலிப்பை சில நாட்களுக்கே அகற்றுகின்றன. வெறுப்பும் வெறியும் கலையாமல் நீடிப்பவை, கணம்தோறும் வளர்பவை. நம் எதிரிகள் திரண்டு இருண்டு நம்மை சூழட்டும். நிஷதகுடிகள் அச்சத்தாலும் வெறுப்பாலும் ஒருங்கிணைவார்கள். ஒரு கட்டத்தில் அரசவஞ்சம் செய்தவர்கள் என சிலரை கழுவேற்றுவோம். மக்கள் திரண்டு அவர்களைச் சூழ்ந்து கூடி கற்களை விட்டெறிந்து ஆர்ப்பரிப்பதை காண்பீர்கள்” என்றாள் தமயந்தி.
“அதன்பின் முதல் வெற்றி. அது அவர்களை களிவெறி கொள்ளச்செய்யும். ஆனால் அடுத்த வெற்றிக்காக ஐயத்துடன் காத்திருப்பார்கள். மேலும் சில வெற்றிகள். மக்கள் நிலைமறந்து பித்தெடுத்து துள்ளுவதை காண்பீர்கள். அவ்விசையில் அஸ்வமேத வேள்வி முடிந்து ராஜசூயத்தை அறிவிப்போம். சத்ராஜித் என நான் அமர்ந்திருப்பதை அவர்கள் தங்கள் குலங்களின் வெற்றி என்றே எண்ணுவார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் நிலையுயர்ந்துவிட்டதாக பொங்குவார்கள்.”
கருணாகரர் அவள் முகத்தின் தன்னம்பிக்கையை சற்று திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “இன்றிருக்கும் உளப்பிளவை எளிதில் சீரமைக்கமுடியும். கலிதேவனுக்கு மாபெரும் குருதியாட்டு ஒன்றை நிகழ்த்திவிட்டு நம் படைகள் கிளம்பட்டும். கலிதேவனுக்கு இங்கே கோதையின் மறுகரையில் ஒரு பேராலயம் எழுப்புவோம். நான் சத்ராஜித் என அமர்கையில் அவ்வாலயமும் நடைதிறக்கட்டும்” என்றாள்.
கருணாகரர் தாழ்ந்த குரலில் “நாம் அரசரை சத்ராஜித் என்று அமரச்செய்வது நம் குலங்களை ஒருவேளை மேலும் மகிழ்விக்கக்கூடும்” என்றார். தமயந்தியின் விழிகள் ஒருகணம் சுருங்கி மீண்டன. “ஆம், அதுவே வைதிக முறைமை. ஆனால் அப்படி நளமாமன்னர் சக்ரவர்த்தியானால் அதைச் சொல்லியே ஷத்ரியர்கள் வடக்கிலுள்ள அத்தனை தொல்குடி ஷத்ரியர்களையும் ஒருங்குதிரட்டிவிடமுடியும்… அந்தப் படைப்பெருக்கை எதிர்கொள்ளும் ஆற்றல் நமக்கில்லை” என்றாள். நாகசேனர் “ஆம், அத்துடன் நம் படைகளில் இன்றுள்ள முதன்மைத் தலைவர்கள் அனைவருமே விதர்ப்பர்கள். அவர்களுக்கும் அது ஏற்புடையதாகாது” என்றார்.
தலையசைத்து அவரை ஆதரித்தபின் “அமைச்சரே, நான் சத்ராஜித்தாக முடிசூடியதுமே அத்தனை ஷத்ரிய அரசர்களுக்கும் இது ஒரு எளிய வைதிகச் சடங்குதான் என்று சொல்லி தூதனுப்புவேன். என் மைந்தன் இந்திரசேனன் எனக்குப்பின் இங்கே சக்ரவர்த்தியாக அமர்வான் என்ற செய்தியை அதில் கூறுவேன். அதன்பொருள் அவனுக்கு அவர்கள் தங்கள் மகளிரை பட்டத்தரசியாக அளிக்கமுடியும் என்பதே. அவ்வழியாக நாளை நிஷாதர்களின் நாட்டுக்கும் அவர்களின் குருதியே அரசகுடியென்றாக முடியும் என அவர்கள் எண்ணுவார்கள். அந்த எதிர்பார்ப்பே அவர்களை அமைதிகொள்ளச்செய்துவிடும்” என்றாள் தமயந்தி.
கருணாகரர் “அரசி, அது சிறந்த சூழ்ச்சி என்பதில் ஐயமில்லை. ஆனால் பரசுராமரால் ஷத்ரியர்கள் என்றும் அந்தணர் என்றும் அனல் அளிக்கப்பட்ட எவரும் இன்றுவரை சத்ரபதி என்றானதில்லை. அவர்களில் ஒருவர் அவ்வண்ணம் வெண்குடையும் கோலும் கொள்வாரென்றால் அவர்கள் அனைவரின் படைத்துணையையும் கோரலாமே?” என்றார்.
“ஆம், அதையும் எண்ணினேன். ஆனால் அனல்குடி ஷத்ரியர்களின் மாபெரும் கூட்டமைப்பு ஒன்று உருவாகிறது என்ற எண்ணத்தை ஷத்ரியர் அடைவதற்கே அது வழிவகுக்கும். ஷத்ரியர்களைப்பற்றி நான் நன்கு அறிவேன், அமைச்சரே. அவர்கள் முதலைகளைப்போல, தங்கள் ஆணவம் என்னும் குட்டையிலிருந்து வெளியே வர இயலாதவர்கள். எவர் தலைமைகொள்வது என்ற பூசலினாலேயே அவர்கள் படையென இணைய முடிவதில்லை. ஆனால் அவர்களை இணைக்கும் அச்சம் ஒன்று உருவாகுமென்றால் எவரேனும் அவ்விணைப்பை நிகழ்த்திவிடக்கூடும். அது நிகழ நாம் இடமளித்துவிடக்கூடாது.”
கருணாகரர் தலையை அசைத்தார். அவர் முகத்தை நோக்கி புன்னகைத்து “சத்ரபதியென்று அமர்ந்து அரியணை நிலைகொண்டபின் நாம் ஷத்ரியர்களையும் முழுதாக வெல்வோம். அதன்பின் பிறிதொரு அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி அரசரை அதில் அமரச் செய்வோம்” என்றாள். கருணாகரர் அந்த எளிய ஆறுதலை தனக்காக அவள் சொன்னதன்பொருட்டு உளச்சிறுமைகொண்டார். முகம் சிவக்க விழிதிருப்பி “நன்று, அவ்வாறே நிகழட்டும்” என்றார்.
அஸ்வமேதத்தின் நெறிகளின்படி பாரதவர்ஷத்தின் நீர்வழிப் பிரிவுகளால் ஆன சாரஸ்வதம், காங்கேயம், சைந்தவம், பஞ்சதட்சிணம், மேருதீர்த்தம் என்னும் என்னும் ஐந்து நாடுகளில் மூன்றை வென்று புரவி கடந்தாகவேண்டும். அல்லது நிலம்சார் நாடுகளான ஹிமவம், கோவர்தனம், கௌடம், காமரூபம், வேசரம், நாகரம், திராவிடம் என்னும் ஏழில் நான்கை அது கடக்கவேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணை, துங்கபத்ரை, காவேரி என்னும் ஐந்து பேராறுகள் ஓடும் பஞ்சதட்சிணம் முன்னரே தமயந்தியின் ஆட்சியின்கீழ் இருந்தது. வேசரமும் நாகரமும் திராவிடமும் அதில் அடங்கின. வங்கனை வென்று கௌடத்தையும் மாளவனை வென்று கோவர்த்தனத்தையும் கடக்கமுடிந்தால் சத்ராஜித் என முடிசூட்டிக்கொள்ள முடியும்.
கருணாகரரும் நாகசேனரும் இரு தூதுக்குழுக்களாக கிளம்பிச்சென்றனர். கருணாகரர் வங்கனையும் பௌண்டரனையும் அங்கனையும் சந்தித்து புரவி கடந்துசெல்ல அவர்களின் ஒப்புதலை பெற்றார். மாளவத்திற்கும் அவந்திக்கும் சேதிக்கும் சென்ற நாகசேனர் அவர்களிடமிருந்தும் ஒப்புதல் பெற்றார். சிம்மவக்த்ரன் நிஷதத்தின் அடிதொழு நாடுகள் என்றிருந்த கலிங்கத்திற்கும் மகதத்திற்கும் சென்று அவர்கள் நாடுகளின் வழியாக புரவி செல்லும் பாதையை வகுத்தளித்தான். நிஷதத்தின் படைப்பெருக்கை அஞ்சிக்கொண்டிருந்த ஒவ்வொருவரும் மாற்றுச்சொல் உரைக்காமல் தலைவணங்கினர்.
அஸ்வமேதப் புரவியை வரவேற்கும் முறைகள் இரண்டு உண்டு என்றன நூல்கள். வாள்தாழ்த்தி முடிவளைத்து அதை வணங்கி அரண்மனைக்கு கொண்டுசெல்வது அடிபணிபவரின் வழி. மங்கல இசையுடன் வந்து எதிர்கொண்டு சென்று வேள்விச்சாலையில் நிறுத்தி அவிமிச்சம் ஊட்டி அந்தணர்களுடன் எல்லைவரை சென்று கடந்துபோகச் செய்வது நட்புளோரின் வழி. தங்களுக்கு நட்புநாடுகளின் இடம் அளிக்கப்பட்டதையே வெற்றி என வங்கனும் பௌண்டரனும் அங்கனும் மகதனும் எண்ணிக்கொண்டார்கள்.
நிஷதபுரியின் கொட்டிலில் பிறந்த இரண்டு வயதான வெண்ணிறப் பெண்புரவி கிரிஷையை பரிவேள்விக்காக நளமன்னரும் நிமித்திகர்களும் இணைந்து தேர்ந்தெடுத்தனர். ஐந்து நற்சுழிகளும் பதினாறு இலக்கணங்களும் முற்றமைந்த அப்புரவி செந்நிற மயிரடர்ந்த இமைகளும் நீலவிழிகளும் செந்நிற மூக்கும் பூமயிர் செறிந்த சிறிய இதழ்ச்செவிகளும் வாழைப்பூநிற நாக்கும் கொண்டிருந்தது. நீண்ட முகத்தில் மூக்குத்துளைகள் அகன்று திறந்திருக்க முள்மயிர்க்கீழ்த்தாடை சற்றே திறந்து வெண்கூழாங்கற்களின் நிரை என பற்களைக் காட்டி அது கனைத்தபோது அவ்வொலி கூரிய அகவலோசை கொண்டிருந்தது.
“புரவியுருக்கொண்ட வெண்நாகம்” என்று அதை சூதர்கள் பாடினர். வெண்ணிறக் குஞ்சிமயிர்க்கற்றைகள் சரிந்துகிடந்தன. நீள்கழுத்தைவிட உடல் இருமடங்கு மட்டுமே பெருத்திருந்தது. நரம்புகள் தெரியாத மென்மயிர் விலாவிலும் வயிற்றிலும் நூறுமுறை சுற்றிவந்த பின்னரே வியர்வை துளித்தது. இளஞ்செந்நிற அடிவயிறு ஓசைகளுக்கெல்லாம் சிலிர்க்க ஈச்சங்குலையென வாலைக் குலைத்தபடி அது எப்போதும் எச்சரிக்கையுடனிருந்தது. மெல்லிய வெள்ளிக்கழிபோன்ற கால்களில் வெண்கல் போன்ற குளம்புகளின் இரு பிளவுகளும் ஒற்றைக்கூம்பென குவிந்திருந்தன. “பிழையற்றது, பிறிதொன்றில்லாதது” என்று நளன் அதை சுற்றிவந்து சொன்னான். அவனை திரும்பி நோக்கி நாக்கை நீட்டிய புரவியின் முதுகைத் தட்டியபடி “அச்சமே புரவிக்கு அழகு” என்றான்.
இலக்கணம் திகைந்த பெண்புரவிகளை சேணமிட்டுப் பழக்காமல், மானுடர் எவரும் மேலேறாமல் வளர்த்து மகவீனச் செய்வது வழக்கம் என்பதனால் கிரிஷை கடிவாளத்தையோ சவுக்கையோ அறியாமல் வளர்ந்திருந்தது. நற்பொழுதில் கொட்டில்பூசனையிட்டு அதை அழைத்துச்சென்றனர். ஐந்துமங்கலங்கள் கொண்ட தாலமேந்திய சேடியர் ஐவர் முன்னால் வர மங்கல இசையெழுப்பி சூதர் தொடர அன்று மலர்ந்த அல்லி என ஒளிகொண்ட கிரிஷையை பார்க்க அரண்மனை மகளிரும் வீரரும் இருமருங்கும் கூடியிருந்தனர். அதன் கழுத்திலணிவிக்கப்பட்டிருந்த செந்தாமரை மாலை உலைந்தது. குளம்புகள் மண்ணைத் தொட்டு எழுவது நான்கு புறாக்கள் விளையாடுவதுபோலத் தோன்றியது.
கூடியிருந்தவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். பெண்டிர் குரவையிட்டனர். புதிய மணங்களுக்கு மிரண்ட கிரிஷை விழிகளை உருட்டி “ர்ர்ர்” என்றது. நளன் “ஒன்றுமில்லையடி, கண்ணே” என்றான். அரண்மனையின் முற்றத்தில் எழுந்த ஏழு மாட வேள்விப்பந்தலின் முன்னால் வைதிகர் நின்றிருந்தனர். அவர்கள் கங்கைநீர் தெளித்து வேதமோதி வாழ்த்த கிரிஷை நீருக்கு பிடரி சிலிர்த்து தலையை உதறியபடி வேள்விச்சாலையை பார்த்தது. மெல்ல தும்மியபின் இருமுறை பொய்யடி வைத்து மெல்ல உடலூசலாட்டியது. பின் உள்ளே நுழைந்து அனல் குளங்களை சுற்றிக்கடந்து அரியணை அருகே சென்று நின்றது. அனைவரும் உவகைக்குரலெழுப்பினர். வாழ்த்தொலிகள் பெருகிச்சூழ்ந்தன.
விதர்ப்பத்திலிருந்து தமயந்தியின் தந்தை பீமகர் பட்டத்து இளவரசன் தமனுடனும் இளையவர்களான தண்டனுடனும் தமனனுடனும் வந்திருந்தார். விதர்ப்ப மணிமுடி சூடி அவர் வேள்விப்பந்தலில் அமர்ந்திருக்க இரு பக்கமும் மைந்தர் நின்றனர். நளன் அரசனுக்குரிய பீடத்தில் அமர்ந்திருக்க பட்டத்து இளவரசன் இந்திரசேனன் அருகே வாளேந்தி நின்றான். மறுபக்கம் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் கவச உடையுடன் வாள்சூடி நின்றான். அமைச்சர் கருணாகரர் வெண்ணிற ஆடையில் தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். வேள்வியை அமைப்பவரான நாகசேனர் மூச்சிரைக்க ஓடி ஆணைகளை இட்டும் திரும்பிவந்து கருணாகரரிடம் குனிந்து ஆணைபெற்றும் எங்கும் தெரிந்தார்.
நிமித்திகன் வெள்ளிக்கோல் சுழற்றி வந்து பேரரசி தமயந்தி வேள்விச்சாலைக்கு வருவதை அறிவித்தான். விதர்ப்பத்தின் கொடியுடன் முகப்புவீரன் வர தாலப்பெண்டிரும் இசைச்சூதரும் தொடர முழுதணிக்கோலத்தில் தமயந்தி நடந்துவந்தாள். செந்நிறப்பட்டு அணிந்து, செவ்வைரங்கள் பதித்த அணிகள் பூண்டு அனலென அவள் வந்தபோது எழுந்த வாழ்த்தொலிகளும் குரவையோசையும் காற்றென அவளைச் சூழ்ந்து கனல வைத்தன என்று தோன்றியது. அவளுக்குப் பின்னால் அரசணித்தோற்றத்தில் இளவரசி இந்திரசேனை வந்தாள். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அவளை எதிர்கொண்டு அழைத்துச்சென்றனர்.
அந்தணர் வேதமோதி கங்கைநீர் தெளித்து தூய்மை செய்த அரியணையில் குடிமூத்தார் எழுவர் அவளை வழிகாட்டி கொண்டுசென்று அமர்த்தினர். ஏவலர் கொண்டுவந்து அளித்த மணிமுடியை மூதன்னை ஒருத்தி அவளுக்கு சூட்டினாள். மூத்தவர் ஒருவர் செங்கோல் எடுத்துக்கொடுத்தார். நிமித்திகன் கோல்சுழற்றியதும் வாழ்த்தொலிகள் அடங்க அவன் பரிவேள்வி தொடங்குவதை அறிவித்தான். நிஷதகுடிகளின் முழுவெற்றியை வான்வாழும் மூத்தோருக்கு அறிவிக்கும்பொருட்டே அந்த வேள்வி என்று அவன் கூறினான். விண்முகில்களை ஆளும் இந்திரனின் அருளாலும் இருண்டகாடுகளை ஆளும் கலியின் கொடையாலும் அவ்வேள்வி முழுமைபெறவேண்டும் என அவன் சொன்னபோது நிஷதகுடிகள் வாழ்த்தொலி எழுப்பினர்.
வேள்வி தொடங்கியது. அதர்வணவேதம் தாமிரமணியோசைபோல, குறுமுழவோசைபோல, குட்டியானைப்பிளிறல்போல, குதிரைக்கனைப்போசைபோல, புலிமுரலல்போல எழுந்து அப்பந்தலை நிறைத்தது. வைதிகர் கிரிஷையை வேள்விப்புகை காட்டி தூய்மைப்படுத்தினர். அவிமிச்சத்தை முதலில் அரசிக்கு அளிக்க அவள் அதை இரண்டாகப் பகுத்து ஒரு பகுதியை கிரிஷைக்கு அளித்து எஞ்சியதை தான் உண்டாள். வாழ்த்தொலிகளுடன் குடிகள் வந்து கிரிஷையை தொட்டு வணங்கிச்சென்றனர். வெறியாட்டெழுந்த பூசகனின் நோக்கு அதன் விழிகளில் வந்துவிட்டிருந்தது. வேறெங்கிருந்தோ அறியாக் குரலாணை ஒன்றை பெறுவதுபோல செவிகூர்த்து ஒற்றைக்குளம்பு சற்றே தூக்கி உடல்சிலிர்த்து வால்சுழற்றியபடி அது நின்றது.
நாளில் நான்குமுறை அதை பயிற்சிக்கு கொண்டுசென்றனர். தசைகளை ஏழுமுறை உருவிவிட்டனர். அளவிட்ட உணவு அளிக்கப்பட்டது. நகர்க்குடிகள் அனைவரும் வந்து அதை வணங்கி அருள்பெற்றனர். ஒவ்வொருநாளும் காலையில் மலைமேலிருந்த இந்திரனின் ஆலயத்திலும் மாலையில் கலியின் ஆலயத்திலும் அரசனும் அரசியும் தலைமைகொள்ள பரியின் நாளும் பெயரும் சொல்லி பூசனை நிகழ்த்தப்பட்டது. அந்த மலரும் நீரும் கொண்டுவந்து அதற்கு படைக்கப்பட்டன. வணங்கும்தோறும் அது தெய்வமாகியது. எக்கணமும் எழுந்து விண்ணில் பாய்ந்தேறி வான்புகுந்துவிடும் என உளம்மயங்கச் செய்தது.
விஜயபுரியிலிருந்து புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் முதல்நாள் பரிதேர்வின்போதே வந்து வேள்வியில் அமர்வார்கள் என்று நகரில் பேச்சிருந்தது. பின்னர் ஒவ்வொருநாளும் அவர்கள் வந்துவிட்டார்களா என்பதே அனைவரும் கேட்டுக்கொள்வதாக அமைந்தது. “அவர் சிறுமைசெய்யப்பட்டார். உளம்திரிந்திருக்கிறார்” என்றார்கள். “ஆயினும் தமையனின் செயல். இத்தருணத்தில் அனைத்தையும் மறப்பதே பெரும்போக்கு” என்றனர் சிலர். “ஆம், ஆனால் குருதியை எவரும் கழுவிவிட இயலாது. சீர்ஷரின் சொல் புஷ்கரனை ஆள்கிறது” என்றார் காளகக்குடியினர் ஒருவர்.
பரிஎழுகை நாளன்று புஷ்கரனும் காளகக்குடித் தலைவர்களும் வருவார்கள் என்றனர் மூத்தோர். வரமாட்டார்கள் என்று அரசி அறிந்திருந்தாள். “பரிவேள்விக்கான அறிவிப்பையே தங்களுக்கு எதிரான அறைகூவல் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அரசி” என்றார் கருணாகரர். “நிஷாதர்களுக்குமேல் ஷத்ரியர்களின் சவுக்கோசை அது என்று சூதனொருவன் பாடுவதை ஒற்றன் கேட்டான். அவ்வாறு பலநூறு சூதர்கள் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறார்கள்.”
தமயந்தி “அதுவும் நன்றே… நாம் மேலெழுந்தோறும் மக்கள் இப்பெருநிகழ்வில் சிறுமையைச் சேர்க்கும் புஷ்கரன்மேல் கசப்பு கொள்வார்கள். மக்களின் களிப்பும் காழ்ப்பும் நம்முடன் இணைந்துள்ளதா என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடனிருந்தால் புஷ்கரனுக்கு வேறுவழியில்லை” என்றாள்.
பரிஎழுகையின்போதும் புஷ்கரன் வரப்போவதில்லை என்று செய்தி வந்தது. அவன் விஜயபுரியை புரவி சென்றடையும்போது படையுடன் வந்து உடன்சேர்ந்துகொள்வான் என்று கருணாகரர் நகரில் செய்தி பரப்பினார். ஆனால் மக்களின் ஐயம் வளர்ந்துகொண்டே இருந்தது. நாகங்களுக்கு உகந்த ஆவணி மாதம் ஆயில்யம் நாளில் பரிஎழுகை நிகழ்ந்தது. இந்திரபுரியின் குடிகளனைவரும் வேள்விச்சாலைமுதல் கோட்டைமுகப்புவரை இரு மருங்கும் மானுடமணல்கரை என பெருகிச்செறிந்திருந்தனர். புலரியிலேயே வேள்விப்புகை பந்தலுக்குமேல் எழுந்து நின்றது. வேதச்சொல் ஒலித்துக்கொண்டிருந்தது.
வேள்வி முடிந்ததும் அவிமிச்சத்தை தமயந்தி புரவிக்கு ஊட்டினாள். புரவி அரண்மனை முற்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன் குளம்புகளில் இரும்பு லாடங்களுக்குமேல் பொற்கவசம் அணிவிக்கப்பட்டது. முழங்கால்களில் பொற்பூண்கள். விலாவில் பொன்னூல்பின்னல் செய்த பட்டுப்படாம். கழுத்தில் அருஞ்செம்மணி பதிக்கப்பட்ட பதக்கம் தொங்கிய ஆரம். அலைநெளிவு மாலைக்குள் இலையடுக்கு மாலை. அதன் நடுவே சுழலடுக்கு மாலை. காதுகளில் நீர்மணிவைரங்கள் சுடர்ந்த மலரணிகள். நெற்றிச்சுட்டியில் அனலென சுடர்ந்தது விதர்ப்பநாட்டின் தொன்மையான அரசவைரமான அருணம்.
அந்த அணிகளனைத்தையும் அது அறிந்திருந்ததென்று தோன்றியது. கனவிலென அது நடந்தது. வழியில் தடை கண்டால் மூச்சால் ஊதிப்பறக்கவிடுவதுபோல உயிர்த்தது. கொம்புகளும் முழவுகளும் ஒலித்து அவிந்த அமைதியில் நிமித்திகன் வெள்ளிக்கோலுடன் அறிவிப்புமேடையில் எழுந்து நாளும் பொழுதும் சுட்டி புரவிஎழுகையை அறிவித்தான். அப்பரிவேள்வியின் நெறிகளை இன்னொரு நிமித்திகன் விளக்கினான்.
நளன் துணைவர அமைச்சர்களால் அழைத்துவரப்பட்ட தமயந்தி புரவியை அணுகி அதன் காதில் வைதிகர் உரைத்த சொற்களை ஏற்று சொன்னாள். “எழுக, என் புரவியே! என் வாள் நீ. என் குலத்தின் விழைவு நீ. என் மூதாதையரின் சொல் நீ. என் தெய்வங்களின் அருள் நீ. செல்க! விரிநிலத்தை வென்று மீள்க! உன்னைத் தடுப்பவர் எவராயினும் என் வாளுக்கு எதிரிகள். என் குலத்திற்கு எதிரிகள். என் கொடிவழியினரின் பழிகொள்பவர்கள். நீ கால்தொடும் நாடெல்லாம் என்னுடையதாகுக! என்னுடையவை எல்லாம் என் குலம்கொள் செல்வமாகுக! என் மூதாதையருக்கு படையலாகுக! என் தெய்வங்களுக்கு பலியென்றே ஆகுக! ஆம், அவ்வாறே ஆகுக!”
அந்தணப்பூசகர் இந்திரன் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் களபத்தை புரவியின் நெற்றியில் மாவிலையால் தொட்டு வெற்றிக்குறியிட்டார். கலியின் ஆலயத்தில் மோட்டெருமையை வெட்டி பலியளித்த குருதிச்சாந்தை குடிப்பூசகர் தன் கட்டைவிரலால் தொட்டு அதன் நெற்றியில் அணிவித்தார். சிம்மவக்த்ரன் முன்னால் வந்து பணிந்து அரசியிடமிருந்து அவள் உடைவாளை பெற்றுக்கொண்டான்.
“செல்க!” என அரசி அறிவித்ததும் புரவி நின்ற இடத்திலேயே ததும்பியது. நளன் அதன் பிடரியைத் தொட்டு மெல்ல பேசியதும் நடனமேடையேறும் விறலி என காலெடுத்துவைத்து முன்னால் சென்றது. இந்திரபுரியின் மக்கள் களிவெறிகொண்டு ஆடைகளையும் தலைப்பாகைகளையும் வானில் வீசி கைவிரித்து துள்ளிக்குதித்து வாழ்த்தொலி எழுப்பினர்.
கிரிஷை கோட்டைமுகப்புக்குச் சென்றபோது அங்கே முன்னரே கொண்டுவந்து தளையில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிறைப்பட்ட குற்றவாளர் எழுவரை கொலைதொழிலர் வெட்டி தலையுருட்டினர். பீரிட்ட குருதி செம்மண்புழுதியில் ஊறி சேறாகியது. கைகள் கட்டப்பட்ட உடல்கள் கால்களை உதைத்தபடி எழுந்தெழுந்து துள்ளிவிழுந்தன. தலைகள் விழித்த நோக்குடன் பற்கள் தெரிய புரண்டு கிடந்தன. புரவி அக்குருதியில் கால்வைத்து அப்பால் சென்றபோது கோட்டைமேல் எரியம்புகள் எழுந்து வெடித்தன. அக்குளம்புத் தடங்களைத் தொட்டு குருதியை தங்கள் வாள்களிலும் வேல்களிலும் தேய்த்துக்கொண்டு கூச்சலிட்டு வெறிநடனமிட்டனர் வீரர்கள்.
ஒரு வீரன் கைவிரித்து ஆர்ப்பரித்தபடி முன்னால் ஓடிவந்து ஒரு கையால் தன் நீள்முடியை தான்பற்றி இழுத்து மறுகையின் உடைவாளால் தன் கழுத்தை அரிந்து சுழன்று விழுந்து துடித்தான். அவனை ஒருபொருட்டென்றே கருதாமல் அப்பால் காலெடுத்துவைத்துச் சென்றது புரவி. வீரர்கள் ஓடிவந்து தற்பலியானவனின் செங்குருதியைத் தொட்டு தங்கள் நெற்றியில் குறியணிந்தனர். குருதிதோய்ந்த வாள்களை உருவி வானில் ஆட்டி “வெற்றிவேல்! வீரவேல்! வெல்க இந்திரபுரி! வெல்க நிஷதகுடி! வெல்க பேரரசி” என்று முழக்கமிட்டனர்.
நிஷதர்களின் பதினெட்டு புரவிப்படைகள் கோட்டைக்கு வெளியே குறுங்காடுகளில் காத்து நின்றிருந்தன. முன்னால் நிஷதர்களின் மின்படைக்கொடியுடன் ஒரு வீரன் புரவியில் சென்றான். தொடர்ந்து காகக்கொடி ஏந்திய வீரன் சென்றான். முழங்கும் போர்முரசுகளுடன் தட்டுத்தேர் ஒன்று அதைத் தொடர்ந்து சென்றது. கொம்புகள் முழக்கியபடி நிமித்திகர்களின் தேர் அதன்பின் சென்றது. உருவிய வாள்களும் ஏந்திய வேல்களுமாக நூறு படைவீரர்கள் சீர்நடையிட்டுச் செல்ல தொடர்ந்து அரசியின் வாளேந்தி சிம்மவக்த்ரன் சென்றான். அவனுக்குப் பின்னால் வேள்விப்பரி சென்றது. புரவிக்குப் பின்னால் நிஷதர்களின் புரவிப்படை சென்றது.
அன்றே சிற்றமைச்சர் ஸ்ரீதரர் வழிகாட்ட நாலாயிரத்தலைவன் வஜ்ரகீர்த்தியின் தலைமையில் ஒரு நிஷதப்படை ராஜமகேந்திரபுரி நோக்கி சென்றது. அப்போரில் அப்படை தோற்று பின்வாங்கவேண்டும் என்றும் அதில் வஜ்ரகீர்த்தி களப்பலியாகவேண்டும் என்றும் ஸ்ரீதரருக்கு அரசி ஆணையிட்டிருந்தாள். வஜ்ரகீர்த்தியின் முதல் படைத்தலைமை அது. ஸ்ரீதரருக்கு இடப்பட்ட ஆணையை அவன் அறிந்திருக்கவில்லை. அப்போரில் வென்று அவைநின்று பரிசுகொள்வதைப்பற்றியும் பன்னிரண்டாயிரத்தலைவனாக ஆகி நகரில் மாளிகையும் அவையில் முதல்பீடமும் பெற்று அமைவதைப்பற்றியும் அவன் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான்.
பிறிதொரு நாலாயிரத்தவர் படை சிற்றமைச்சர் சூக்தர் வழிகாட்ட படைத்தலைவன் பகுஹஸ்தன் தலைமையில் வடக்கே கிராதர்நிலம் நோக்கி சென்றது. அதுவும் தோல்விச்செய்தியுடன் மீளவேண்டுமென ஆணையிடப்பட்டிருந்தது. சூக்தர் அவ்வாணையால் சோர்வுற்றிருந்தார். உள்ளம் கொப்பளிக்க பகுஹஸ்தன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒற்றைச் சொல்லில் அவர் மறுமொழி இறுத்தார். “தாங்கள் ஐயுறுகிறீர்களா, அமைச்சரே? நாம் வெல்வோம்!” என்று பகுஹஸ்தன் சொன்னான். “ஆம், வெல்வோம்” என்றார் சூக்தர். “ஏன் சோர்வுற்றிருக்கிறீர்கள்?” என்றான் அவன். “பகடையாடுபவர்கள் தாங்களும் பகடைக்காய்கள் என அறிந்திருப்பதில்லை” என்றார் சூக்தர். “என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் கேட்டான். “எல்லா போர்களும் பகடையாட்டம் அல்லவா?” என்றார். அவர் சொல்வதை புரிந்துகொள்ளாமல் பகுஹஸ்தன் “ஆம், போர் என்றே பகடைக்களம் அமைக்கப்பட்டுள்ளது” என்றான்.
அன்று பகலுக்குள் பகுஹஸ்தன் நிகழவிருப்பதை புரிந்துகொண்டான். புரவியில் எண்ணங்கள் அலைபாய சென்றுகொண்டே இருக்கையில் அத்தனை கதவுகளையும் திறக்கும் சுழற்காற்றென அனைத்தையும் புரியவைத்ததபடி அவ்வுண்மை உள்நுழைந்தது. “ஆம்” என உடல்நடுங்க சொன்னபடி அவன் விழிப்புகொண்டான். அவன் உடலில் அந்த அறைதலின் விசை நடுக்கமாக எஞ்சியிருந்தது. “ஆம் ஆம் ஆம்” என்றது உள்ளம். புரவியிலிருந்து விழுந்துவிடுவோம் என அஞ்சி சேணத்தை காலால் கவ்விக்கொண்டான். நெடுநேரம் சொல்லற்ற ஒரு உளவிரிவாக அவ்வறிதல் அவனுடனிருந்தது.
கிராதர்களை முற்றழிக்க நாலாயிரம்பேர் போதாது. அவர்கள்மேல் போர்தொடுத்து வென்று கப்பச்சாத்து இடுவதில் பொருளில்லை. அத்தகைய நெறிகளெவையும் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. அவர்களிடம் தோல்வியுறுவதென்பது அவர்களை மிகைநம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கும். அவர்களின் குலவழக்கப்படி வெல்லப்பட்டவர்களை முழுமையாகக் கொன்று அழிப்பார்கள். வெட்டித் துண்டுகளாக்கி காடுகளில் விலங்குகளுக்கு வீசுவார்கள். குருதியை கலங்களில் பிடித்து சேர்த்துக்கொண்டுசென்று தலையில் ஊற்றி நீராடுவார்கள். கலங்களில் ஏந்தி குடிப்பார்கள். எதிரித்தலைவனின் ஊனை சமைத்து உண்டு களியாடுவார்கள்.
அச்செயல்கள் செய்தியாக நிஷதபுரியை சென்றடையும். நிஷாதர் வெறிகொள்வார்கள். கிராதர்களை முற்றழிக்க, அவர்களின் ஊர்களை எரியூட்ட, அவர்களின் மைந்தர்களை அடிமைகளாக தளைத்துக்கொண்டுசென்று மரக்கலக்காரர்களுக்கு விற்க, அவர்களின் நிலங்களில் உப்பும் சுண்ணமும் பரப்ப அதுவே போதிய தூண்டுதலாக ஆகும். பன்னிரு ஆண்டுகளாக எல்லைகளை மீளமீளத் தாக்கி ஊர்களைச் சூறையாடி குடிகளைக் கொன்று ஆநிரைகளைக் கவர்ந்துவந்த கிராதர்களை அழிக்க அரசி உளம்கொண்டுவிட்டாள்.
பெரும்போர்களுக்கு முன்னால் வேண்டுமென்றே சிறு தோல்விகளை நிகழ்த்துவதுண்டு என அவன் அறிந்திருந்தான். அது வீரர்களின் ஆணவத்தைச் சீண்டி பழிவெறி கொள்ளச்செய்யும். அத்தோல்வி கடுமையாக இருக்கும்தோறும் வெறிபெருகும். வேள்விப்பரி எழுந்தபோது கோட்டைமுகப்பில் எதிரே ஓடிவந்து தன் தலையை வெட்டிவிழுந்த தற்பலியனின் முகம் அவன் நினைவுக்கு வந்தது. அந்த விழிகளிலிருந்த வெறியை மிக அருகிலெனக் கண்டான். “ஆம்” என்ற சொல்லுடன் நிலைமீண்டான். புன்னகை செய்து “ஆம்” என்று தலையசைத்தான்.
வேள்விப்பரி நிஷதநாட்டின் தேர்ச்சாலை வழியாக தெற்கு நோக்கி சென்றது. காடுகளிலிருந்து படைப்பிரிவுகள் கிளம்பி வந்து சேர்ந்துகொண்டே இருக்க நிஷதபுரியின் எல்லையைக் கடக்கும்போது அது மறுமுனை தெரியாத பெருக்காக மாறிவிட்டிருந்தது. வழியெங்கும் சிற்றூர் மக்கள் மரங்களின்மேல் ஏறிச் செறிந்தமர்ந்து அவ்வொழுக்கை நோக்கினர்.
புலர்காலையில் தொலைவில் மின்கதிர்க்கொடி தெரிந்தபோது அவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். புரவி கடந்துசென்ற பின்னர் அன்று பகலிலும் இரவிலும் மறுநாள் புலரியிலும்கூட படை சென்றுகொண்டே இருந்தது. இறுதியாக குதிரைத் தீவனமும் அடுமனைப் பொருட்களும் ஏந்திய வண்டிகள் சென்று முடிந்தபோது அன்று மாலை ஆகியது. படைசென்ற பாதையில் உறுதியான மண் மென்புழுதியாக மாறியிருந்தது.