நீர்க்கோலம் - 53

52. நிறையாக் கானகம்

flowerகீசகன் ஒரு பெரிய கருமுகில்தொகைபோல ஒழுகிச்செல்வதை முக்தன் கண்டான். மரங்களினூடாக அவன் பிரிந்து பரவி கடந்து மீண்டும் தொகை கொண்டான். சரிவுகளில் கீற்றென அகன்று பொழிந்து நீண்டு பின் எழுந்தான். அவன் சென்ற பின்னரும் இலைநுனிகளில் அவன் சற்று எஞ்சியிருந்தான். எஞ்சியவை முக்தன் கடந்துசென்றபோது நாநீட்டி அவனைத் தொட எம்பின. தொலைவில் மரங்கள் ஒன்றோடொன்று அறைந்துகொள்ளும் ஓசை எழுந்தது. இரு பாறைகளின் மோதல் ஒலியா அது? ஒவ்வொரு அறைவோசைக்கும் காடு விதிர்ப்பு கொண்டது. அவ்வோசை கேட்டு கீசகன் நின்றான். தன்னை நான்கு பக்கமிருந்தும் இழுத்து திரட்டி பேருருக்கொண்டு ஒன்றன்மேல் ஒன்று ஏறிய ஏழு கரிய யானைகள் என நின்றான்.

அப்பால் மரங்களின் தழைப்பில் மறைந்தும் இடைவெளிகளில் தெரிந்தும் இரு அலைகள் கொப்பளிப்பதை முக்தன் கண்டான். விழிகூர்ந்தபோது அவை இரு மாநாகங்கள் எனத் தெளிந்தான். இரு நதிகளின் அலைகள் என அவை சுருண்டெழுந்து வந்து உடலால் அறைந்துகொண்டன. ஒன்றையொன்று கவ்வி தழுவி இறுக்கி முறுகி அதிர்ந்து பின் ஒன்றையொன்று தூக்கி வீசி மண்ணில் சென்று வெட்டுண்ட பெருமரத்தடிகள் என விழுந்தன. மீண்டும் நிலமறைந்து எழுந்து படம் விரித்து ஊதுலைக்காற்றெனச் சீறி நா பறக்க செஞ்சின விழிகள் எரிய நோக்கி தவித்து ஒரே கணத்தில் ஒன்றன்மேல் ஒன்று பாய்ந்தன. நச்சுப்பற்களால் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டன. ஒருவர் நஞ்சில் மற்றவர் உடல் கருகி சுருண்டு அதிர தளர்ந்து இரு பக்கமாக விழுந்தன. நெளிந்து தன்னுணர்ந்து சினம்பெருக மீண்டும் நிலத்தை உந்தி எழுந்து படம்கொண்டன. அப்போதும் அவற்றின் வால்நுனிகள் ஒன்றையொன்று கவ்வித்தழுவி பிணைந்திருந்தன.

கீசகன் தன் இரு தோள்களையும் ஓங்கி அறைந்து பிளிறலோசை எழுப்பியபடி அவர்களை நோக்கி சென்றான். அந்த ஓசை கேட்டதுமே இரு நாகங்களும் மேலிருந்து சரடறுந்து விழுபவைபோல மண்ணில் விழ முக்தனின் காலடிநிலம் அவ்வெடையில் அதிர்ந்தது. கரிய நாகம் திரும்பி அப்பேருருவிடம் பொருத்தமுடியாத விரைவில் காட்டுக்குள் புகுந்துகொண்டது. அது செல்லும் வழியில் புற்பரப்பென காட்டுமரச்செறிவு வளைந்து வழிவிட்டது. எங்கோ ஒரு பாறை அதன் உடல்பட்டு நிலைபெயர்ந்து உருண்ட ஓசை கேட்டது. மண்ணில் விழுந்த பொன்னிற நாகம் தளர்ந்ததுபோல நெளிந்தபடி கிடந்தது. கீசகன் அதை நோக்கி ஓடினான். அது வழிந்து புதர்களுக்குள் சென்றது. அதன் வால்நெளிவை முக்தன் கண்டான். அது சென்ற வழியை இலைத்தழைப்பின்மேல் ஒரு அலையென நோக்கமுடிந்தது. அதைத் தொடர்ந்து கீசகன் சின்னம் விளித்தபடி ஓடினான்.

ஒருகணம் அனைத்தும் தெளிவாகி கால்தளர்ந்து முக்தன் பின்னால் சரிந்து விழுந்தான். கரவுக்காட்டுக்குள் இருக்கிறேன், உள்ளே வந்தவரை பித்தர்களாக்கும் அறியாச்செறிவு. கந்தர்வர்களும் கின்னரர்களும் உலவும் வெளி. நான் கனவுகண்டுகொண்டிருக்கிறேன். கையை நிலத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தான். விழித்துக்கொள் விழித்துக்கொள் என தனக்குத்தானே ஆணையிட்டான். புரண்டுபடுத்தால் போதும், மெய்யுலகில் எழுந்துகொள்ளலாம். புரண்டு படுத்து விழிதிறந்தபோது தன்னைச் சூழ்ந்திருந்த காடு இளமஞ்சளாக அதிர்ந்துகொண்டிருப்பதை கண்டான். முத்தி முத்தி விரியும் செவ்வுதடுகளாக, மூடித்திறக்கும் இமையிணைகளாக, கருமின்நோக்குகொண்ட விழிகளாக, மென்மயிர்சூழ்ந்த மான்குளம்பல்குல்களாக, ஐவிரல் நடிக்கும் உள்ளங்கைகளாக, விதிர்க்கும் மான்செவிகளாக, வீசும் யானைமுறச்செவிகளாக, துடிக்கும் பூனைக்காதுகளாக, நீண்டு மறையும் தவளைநாவாக, சொட்டி நெளியும் நாய்நாவென. வண்ணத்துப்பூச்சிகள், அவை ஒன்றை ஒன்று துரத்திச் சுழன்றன. ஒன்றை ஒன்று கவ்வி காற்றுச் சேக்கைமேல் காமம் கொண்டன. இரண்டென மிதந்தன. பிரிந்து மீண்டு உடல்கவ்விக்கொண்டன. ஒளிநிறைந்த முகில்கள் கனவில் திறக்கும் இமைகளென மெல்ல பிரிந்தன. உருகும் நெய்யின் நுரை என கரைந்து மறைந்துகொண்டிருந்தன. காற்று இசையென்றாகி சூழ்ந்து பறந்தது. ஒவ்வொரு இலைநுனியும் ஒரு சொல்லில் துடித்துக்கொண்டிருந்தது.

அவன் எழுந்து நின்று சூழ நோக்கினான். புல்வெளியில் கால்தடம் தெரிய அதைத் தொடர்ந்து ஓடினான். மரங்கள் மிகக் குழைந்திருந்தமையால் மென்பஞ்சுத் தலையணைகளில் என அவற்றில் முட்டிக்கொண்டு சுழன்று சுழன்று சென்றான். யாழொலி குழைந்து குழைந்து ஒலிக்கக் கேட்டான். அத்திசையில் மெல்லிய பொன்னிற ஒளியில் இலைப்பரப்புகள் மின்னுவதைக் கண்டான். மரங்கள் நடுவே நின்றிருந்த சைரந்திரியை கண்டதும் அவளருகே கீசகனையும் கண்டான். கீசகன் வெண்முகில் என ஒளிகொண்டிருந்தான். அவன் இரு கைகளையும் விரித்தபோது விரல்களிலிருந்து அந்த யாழ் முரலும் இசை எழுந்தது. கைகளை நீட்டி அவளை தழுவச்சென்றான். அவள் அவன் கைகளைத் தட்டி அப்பால் ஓடினாள்.

தூங்கலோசை நடைமாறியது. ஏந்திசை, அகவலிசை, பிரிந்திசை என அது கரைந்தது. கீசகன் பொன்னிறம்கொண்டு மேலும் ஒளிர்ந்தான். இசை துளிசொட்டும் விரைவுகொண்டது. பொன்மணிகள் பொற்தாலத்தில் உதிர்வதுபோல துள்ளலோசை. அவள் கைவீசி அவனை அடிக்க முயன்றாள். கை காற்றில் சுழல சீறி ஏதோ சொல்லி அப்பால் சென்றாள். அங்கு நின்றிருந்த வேங்கைமரத்தடியில் அதன் கரிய வேர்க்குவைமேல் ஒட்டிக்கொண்டாள். கீசகன் சிவந்து அனலென்றானான். அவன் கைகள் எரிகொழுந்தென நெளிந்தன. மயிலகவல் என, மான்சினைப்பு என, மடப்பிடிக்குரல் என அகவியது அவன் குரல். அவள் விலகி அப்பால் செல்ல அவன் தளிர்ப்பசுமை கொண்டான். சிம்மக்குரலென அவன் ஓசை எழுந்தது. நெஞ்சில் ஓங்கி அறைந்து கூவியபடி நீலநிறத் தழலென எழுந்தான். அந்திமுகில் என அணைந்துகொண்டே சென்று கரிய உருவம் கொண்டான். செவிதுளைக்க முழங்கியபடி அவளை அள்ளிப்பற்றிக்கொண்டான். அவன் பிடியில் அவள் திமிறி துள்ளி குரலெழுப்பினாள். அத்தருணம் மரத்தின் மீதிருந்து பெரிய கருங்குரங்கு ஒன்று கீசகனின் தலைமயிரை பிடித்துக்கொண்டது. அவன் அவளை விட்டுவிட்டு அதன் கையை பிடிக்க அவனை அப்படியே மரங்களின் மீது தூக்கிக்கொண்டு சென்றது அது.

flowerகஜன் தன் முன் விழுந்த நிழலை முதலில் கண்டான். தலைநிமிர்ந்து நோக்கியபோது நெடுந்தொலைவுவரை அலையடித்துப் பறக்கும் நீண்டகுழலை சிறகு எனக்கொண்டு பறந்து வந்து மெல்ல தன்முன் அமர்ந்த அப்பெண்ணை கண்டான். அவள் விழிகள் நீலமணிகளென ஒளிவிட்டன. நீண்ட முகத்தில் மெல்லிய உதடுகளுக்குள் வெண்பற்கள் மின்ன அவனை நோக்கி சிரித்தாள். “யார் நீ?” என்றான். “என்னை மென்மொழி என்பார்கள்” என்றாள். அவன் அவள் கைகளை பார்த்தான். அவை பட்டுத்துணிச்சுருள்போல மென்மையாக குழைந்தன. “நீ கந்தர்வப் பெண்ணா?” என்றான். அவள் புன்னகைத்தாள். அவனுக்கு அப்புன்னகையின் பொருள் தெரியவில்லை.

“உன்னை நான் முன்னர் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என அவள் சொன்னாள். அவள் விழிகள் அவனை அருகே இழுத்துக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று ஒன்று அவனை பின்னின்று தள்ளி முன்செலுத்தியது. “ஆம், நீ அவள்… அரசியின் சேடியருடன் இருந்தாய்.” அவள் “ஆம்” என்றாள். உரக்க நகைத்து கைகளை விரித்து “அவளிலும் நான் இருந்தேன்” என்றாள். அவன் “நம் விழிகள் தொட்டுக்கொண்டன. ஒரு கணம்” என்றான். “ஆம், அதன்பொருட்டே இங்கு நாம் சந்திக்கிறோம்” என்றாள். அவன் கைகளை அவள் கைகள் பற்றின. அவை மீன்களைப்போல் குளிர்ந்திருந்தன. “நீ மானுடப்பெண் அல்ல.” அவள் “நான் அவ்வாறு சொல்லவில்லை” என்றாள். “உன் குருதி பனிபோன்றிருக்கிறது.” அவள் “அனல் விழிகளில் மட்டுமே” என்றாள்.

அவர்கள் தழுவிக்கொண்டார்கள். தழுவிக்கொள்வதற்கென்றே படைக்கப்பட்டது போன்றிருந்தது அவள் உடல். அவள் கைகளும் கால்களும் அவனை முதுமரத்தின் மேல் படர்ந்து படிந்த இளமரம்போல சுற்றிக்கொண்டன. அவன் அவள் கண்களை குனிந்து நோக்கினான். அவற்றில் நோக்கற்ற மணிவிழிப்பு ஒன்றிருந்தது. அவன் விலக விழைந்தான். அவ்வெண்ணத்தை உடலுக்கு அறிவிக்க இயலவில்லை. அவள் வாய் திறந்தபோது வளைந்த நச்சுப்பற்களை கண்டான். “நீ நாகினி” என்றான். சிரித்தபடி அவள் எம்பி அவன் உதடுகளை கவ்விக்கொண்டாள். நாகநஞ்சு இளவெம்மையுடன் இருந்தது. மயக்குறு மதுவென குருதியில் கலந்தது. உடற்தசைகள் அனைத்தும் நெய்த்திரிகளென பற்றிக்கொண்டன. உள்ளுறுப்புகள் அரக்கென உருகிச்சொட்டின.

அவள் அவனுடன் மேலே எழுந்தாள். கிளைகள் விரித்திருந்த இலைத்தழைப்புகளை கால்களால் உந்தி உதைத்து மேலேறினாள். நிலவொளி அலையடித்த வெளியில் அவனுடன் மிதக்கும்போது அவர்கள் இணைந்துகொண்டனர். “மேலும்! மேலும்! மேலும்!” என அவள் மூச்சு சீறினாள். “குருதியனைத்தும்!” என அவன் சொன்னான். “ஆம், குருதியனைத்தும். அனலனைத்தும். சொல்லனைத்தும்” என்று அவள் சொன்னாள். சுவைத்துண்ணும் நாவின் திளைப்பு. துளைத்து உட்புகும் புழுவின் தவிப்பு. வாலொன்றே உறுப்பென்றான தலைப்பிரட்டை. எரிந்து எரிந்து எரிந்து இருள்வெளியில் ஓடியது தழல்விண்மீன். இடியோசை எழுந்த வானில் எழுதிச்சென்றது ஒளி. தோன்றுவதும் மறைவதும் ஒருகணமென்றான ஓவியம். விழிகளில் அனல். சுடர் நின்றெரிந்த அகல். நோக்கும் தொலைவுகள் மடிந்து மடிந்து சூழ்ந்தன. இறுகி அணுவென்றாக்கி உண்டன. அப்பால் வெடித்து இருட்பெருங்குழிச்சுழியலைப்பெருக்கென கரையறைந்து ஓலமிட்டன.

விலகி மூச்செறிந்து ஓய்ந்து மெல்ல அடங்கி காலமிழந்து மீண்டு கண்விழித்து மறுபடியும் அனல்பற்றிக்கொள்வதற்கு முன்பு அவன் கீழே பார்த்தான். அங்கே மலர்மரத்தடியில் புன்னகையுடன் நின்றிருந்த பெண்ணை முன்னரும் கண்டிருந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்தவளாக “அவரை சற்றுமுன் உதறி கீழே உதிர்த்தேன்” என்றாள். அவன் “யார்?” என்றான். “அவர் பெயர் முக்தன்… அத்தனை ஆடைகளுக்கும் அடுக்குகளுக்கும் அடியில் அவர் ஒரு பெண் என்று அறிந்தேன். அனைத்தையும் கழற்றி அவரை முற்றிலும் விடுவித்தேன்.” அந்தப் பெண் இளங்கன்னி என மலர்களுக்கு நடுவே இடைவளைத்து ஓடினாள். தாவி கிளைமேல் ஏறி உலுக்கி மலர்பெய்கைக்குக் கீழே கைவிரித்து நின்று கூவிச்சிரித்து துள்ளினாள். “கன்னியென்று கண்விழித்திருக்கிறாள்” என்றாள் வெறியுடன் இழைந்து உயிர்த்த நாகினி.

முக்தன் மலர்ச்சோலையினூடாகச் சென்று அவர்களை நோக்கி திகைத்து நின்றான். இரு பேருருவர்கள் தோளுக்குத் தோள்நிகர் கொண்டு மற்போரிட்டனர். மத்தகங்கள் மோதிக்கொண்டன. அனலுடன் அறைபட்டன தசைகள். மலைப்பாறைகள் மண் வந்தவைபோல விழுந்து நிலம் அதிர உருண்டனர். கைகளும் கால்களும் தங்கள் வஞ்சப்பெருக்கை தாங்களே கண்டடைந்து சீறி எழுந்தன. பின்னி முறுகி அதிர்ந்து விலகி அறைந்து மீண்டும் முயங்கின. அவன் அவர்களை அடையாளம் கண்டு அலறி கைநீட்டியபடி முன்னால் ஓடினான்.

வலவன் கீசகனைத் தூக்கி மண்ணில் அடித்தான். அவனுடைய உதையை உருண்டு ஒழிந்து எழுந்த கீசகன் ஓங்கி அறைய நிலைதடுமாறி பின்னால் சரிந்தான். அறைந்து எழுந்து மீண்டும் அறைந்து விழுந்து எழுந்தபோது கீசகன் ஓடை நீரில் விழுந்தான். சேறுடன் கலங்கி புரண்டு அவன் எழ அவன்மேல் வலவன் பாய்ந்தான். இருவரும் புழுக்களென நெளிந்து எழுந்து நாணல்புதர் உலைய மேலேறியபோது வலவன் பெருந்தோள்கொண்ட பெண் என்று மாறிவிட்டிருந்தான். உருள்மலைப்பாறை என பெருமுலைகள் இறுகியசைந்தன. களஞ்சியக் கலம் என இடை விரிந்திருக்க ஒசிந்தசைந்து வந்து புன்னகைத்தாள்.

கீசகன் திகைப்புடன் அவளை நோக்கி சில கணங்கள் நின்றான். பின்னர் கைவிரித்து அருகழைத்தபடி அணுகினான். இருவரும் தழுவிக்கொண்டார்கள். அக்கணம் வரை அங்கு நிகழ்ந்ததும் காதலே என்பதுபோல. அவ்வுடல்முயக்கை நோக்கி தன் உடலை உணர்ந்தபோதுதான் பெண்ணென்று அறிந்தான். மூச்சில் முலைகள் எழுந்தமைய கைகளால் கழுத்தை வருடியபடி நீர்க்கரையை நோக்கினான். மறுகரையில் பாறைமேல் அமர்ந்திருந்த தனியன் நிலவொளியில் முடியிழைகள் ஒளிர விழிசரித்திருந்தான். நீரில் பாய்ந்து மூழ்கி நீந்தி சொட்டும் உடலுடன் அவன் முன் அவள் எழுந்தாள்.

flowerசம்பவன் மலர்ச்செண்பகத்தின் அடியில் அவளை கண்டான். தொலைவிலேயே அவள் விழிகள் நீலம் சுடர்வதைக் கண்டுதான் அருகணைந்தான். அவளை முகமறிந்திருந்தான். “யார் நீ?” என்றான். “என் பெயர் நறுமொழி” என்றாள். அவள் இடையில் ஒரு சிறுகுழவி இருந்தது. அரைத்துயிலில் அவள் தோளில் கன்னம்பதிய முகம்புதைத்து அவனை தன் கருவிழிநிறைந்த கண்களால் நோக்கிக்கொண்டிருந்தது. “உன்னை நான் கண்டிருக்கிறேன்” என்றான். “ஆம்” என அவள் புன்னகை செய்தாள். “நீ…” என அவன் அவளை அடையாளம் கண்டுகொண்டான். “அவளில் நான் எழுந்தேன்” என்றாள் அவள்.

“இச்செண்பகத்திலும் நான் வாழ்கிறேன். இதன் விதை மண்ணில் பதிந்தபோது நானும் புதைந்தேன். இதனுடன் முளைவிட்டெழுந்தேன். நூறுமுறை பூத்து முற்றிலும் உதிர்ந்தொழிந்து மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொண்டு காத்திருக்கிறேன்” என்றாள். “என்னை இவர்கள் செண்பகக்குழல்மொழி என்கிறார்கள். ஆயிரம் முறை தொடுக்கப்பட்டும் எய்யப்படா இலக்கு என்பதனால் நான் அழியாக்கன்னி, அருளும் தெய்வம்.”

அவன் அக்குழவியைச் சுட்டி “அது உன் குழந்தையா?” என்றான். “இல்லை, என்னை வந்தடைந்தவர்களில் ஒருவன். என் மைந்தன் என்று இவனை ஒக்கலில் எடுத்தேன்” என்றாள். அவன் “அவ்விழிகள் என்னை நோக்குகின்றன” என்றான். “அவனை நான் துயிலச்செய்கிறேன்” என்றாள். அவள் கை அக்குழவியின் முதுகில் பட்டதும் அது விழிகளை மூடியது. அதை மெல்லத்தட்டி மூச்செழ துயில்கொள்ளச்செய்து அம்மரத்தடியில் கிடத்தினாள். அவனை நோக்கி திரும்பி “வருக!” என்றாள். அவன் “நான்…” என்றான். “நீங்கள் மாருதர்… மலர்மரங்கள் எவையும் விலக்கல்ல உங்களுக்கு.” அவன் தன் உடல் பெருகுவதை உணர்ந்தான். கைகள் மயிரடர்ந்து விரல்நீண்டு கருங்குரங்குகளுடையவை போலாயின. கால்கள் அகன்று பாதங்கள் கைகள்போல் மாறின. மரங்களுக்கிணையாக பேருருக்கொண்டு எழுந்தான். நெஞ்சில் இரு கைகளாலும் அறைந்துகொண்டு பிளிறலோசை எழுப்பினான். பாய்ந்து அவளைப்பற்றித் தூக்கிக்கொண்டு மரங்களுக்குமேல் எழுந்தான்.

flowerகுங்கன் தன் காயை நீக்கி வைத்து “மீண்டும் ஒருமுறை” என்றான். விராடர் காய்களை நோக்கியபடி விழித்து அமர்ந்திருந்தார். என்ன நிகழ்ந்தது என்றே அவர் அறியவில்லை. குங்கன் புன்னகையுடன் “நோக்குக, அரசே!” என்றான். ஆட்டத்தை அப்போதுதான் விராடர் புரிந்துகொண்டார். “ஓ” என்றபின் மெல்ல தளர்ந்து “அனைத்து ஆட்டங்களும் உங்களுடையவை மட்டுமே, குங்கரே. ஆட்டத்தில் திளைக்கும்பொருட்டு என்னை உடனழைத்துச் செல்கிறீர்கள். வெல்லவிடுகிறீர்கள்” என்றார். “அல்ல, மெய்யாகவே அல்ல. அரசே, எந்த ஆட்டத்திறனாளனையும் முன்அமர்ந்து எதிர்கொள்வது முடிவிலி. மூன்று தெய்வங்களையும் விட பெரியது அது. அதன் கைகள் உங்களுடையவை.”

புன்னகையுடன் தாடியை தடவியபடி “இங்கு இப்போது நான் வென்றேன். இதுவும் அதன் முடிவிலா தகவுகளில் ஒரு தருணம் மட்டுமே என்றுணர்ந்தால் வெற்றியும் தோல்வியும் நிகரென்று ஆகும்” என்றான். விராடர் “இதுபோல நான் ஆடியதில்லை. நிலவொளியில்…” என்றார். அந்த ஆட்டத்தை குங்கன்தான் வகுத்தான். மாறும் நிலவொளியில் ஒவ்வொரு கணமும் என ஆட்டக்களம் மாறிக்கொண்டிருந்தது. காய்களின் நிழல்கள் நீண்டு ஒன்றையொன்று தொட்டன. “இவ்வாட்டத்தில் நாம் முழுநிலவையும் சேர்த்துக்கொள்வோம்” என்றான் குங்கன். “காய்களின் நிழலை நீக்கிவைத்தும் களங்களின் வண்ணத்தை மாற்றியும் அது ஆடட்டும். காய்களின் நிழல் சென்று தொடுவதும் ஆட்டமே” என்றான்.

விழிமயக்கும் உளமயக்கும் ஒன்றெனக் கலந்தன. அருகிருந்து சேடியர் தேறலை ஊற்றி அளித்துக்கொண்டே இருந்தனர். ஆடுந்தோறும் மாறின ஆட்டநெறிகள். என்ன நிகழ்கிறதென்றே அறியமுடியவில்லை. கைகள் தங்கள் விருப்பப்படி ஆடின. உள்ளம் வேறெங்கோ வேறேதோ ஆடிக்கொண்டிருந்தது. “நான் வேறெங்கோ இருக்கிறேன், குங்கரே. பேருருக்கொண்ட குரங்கு ஒன்றை காண்கிறேன். அதனுடன் மற்போரிடுகிறேன். பெருகும் நதிக்கரையில் அமர்ந்திருக்கிறேன். பெண்ணென்றும் ஆணென்றும் உடலுரு மாறுகிறேன்.” குங்கன் “அவையனைத்தும் இங்கு இக்களத்தில் நிகழ்கின்றவையே. இதோ இது குரங்கு, அது மதகளிறு” என்றான். “ஆம்” என்றார் விராடர்.

“மீண்டுமொரு ஆடல்” என்று கரு நிரத்தலானான் குங்கன். “விடிவெள்ளி எழ இன்னும் சற்றுநேரமே உள்ளது, அரசே” என்றாள் சேடி. “அதுவரை ஆடுவோம்” என்றான் குங்கன். அந்த ஆடுகளம் நிலவொளியில் மின்னும்படி நவச்சாரமும் மயில்துத்தமும் காக்கைப்பொன்னும் கலந்த வேதிப்பசையால் வரையப்பட்டிருந்தது. இளநீலம் என்றும் மென்பச்சை என்றும் வெள்ளி என்றும் பொன் என்றும் ஒளிக்கோணம் மாறுகையில் வண்ணத்தோற்றம் கொண்டன அக்கோடுகள். மான்களும் வெள்ளாடுகளும் புரவிகளும் எருதுகளும் களத்தில் நிரந்தன. அப்பால் நான்கு கரடிகள். இரு புலிகள். ஒரு சிம்மம் மையத்தில் நின்றது. ஒவ்வொன்றுக்கும் பெண். பெண்சிம்மம் எதிரில் முகமொடு முகமென நின்றது. “உங்கள் கைகளுக்கு” என்றான் குங்கன்.

ஆட்டம் தொடங்கியது. எப்போது ஆடத் தொடங்கினோம்? குடியும் உணவும் முடிந்ததுமே பட்டுவிரிப்பில் களம்பரப்பி அமர்ந்தோம். கரு நிரத்தினோம், நெறி உரைத்துக்கொண்டோம். மீண்டும் மீண்டும் ஆட்டம். அல்லது முடிவிலாத ஒரே ஆடல். ஒவ்வொரு விலங்கும் தன் நெறிக்கேற்ப செயல்கொண்டது. துரத்தியது, தப்பியோடியது. பணிந்தது, பற்றிக்கொண்டது. கொன்றது, வென்றபின்னர் விட்டுச்சென்றது. சேடி “விடிவெள்ளி” என்றாள். “ஆம்” என்றார் விராடர். ஒவ்வொன்றுக்கும் தங்கள் நெறி என்று ஒன்று உண்டு. அவை வெட்டிக்கொள்வதே இல்லை. ஒருமுறைகூட ஒரு ஈயின் விழிகள் கொசுவின் விழிகளை சந்தித்திருக்காது இப்புவியில்.

சுற்றிலும் ஒளி மாறிக்கொண்டே வந்தது. நிலவு மேற்குவளைவில் நின்றிருந்தது. புலரிப்பறவைகள் கூவவும் கரையவும் குழறவும் குமுறவும் தொடங்கின. கருக்கள் ஒவ்வொன்றும் இரட்டை நிழல்கள் கொள்ள ஆட்டநெறிகள் அனைத்தும் முழுமையாக கலைந்தன. காற்றுவெளியில் செம்மை கலந்தது. விண்விரிவில் முகில்கள் எரியத் தொடங்கின. நிலவு நீட்டிய நிழல் கரைந்து களத்தில் மறைந்தது. பறவைக்குரல்கள் பெருக காடு துயிலெழுந்தது. குங்கன் முழுமையாகவே ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தான். சூழ என்ன நிகழ்கிறதென்றே அறியாதவனாக. ஆட்டத்தில் இப்படி முழுதும் மூழ்கவேண்டுமென்றால் இது இங்கல்ல, அவனுள் நிகழவேண்டும். இங்கு நிகழ்பவை அங்கு விரிந்தால் அது முற்றிலும் பிறிதொன்று.

ஆட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே களம் மறையத் தொடங்கியது. அவர் குங்கனை நோக்கினார். அவர் பெண்சிம்மத்தை நீக்கிவைக்க அதன் காலடியில் களம் முற்றிலும் அழிந்துவிட்டிருப்பதை உணர்ந்து நிமிர்ந்து நோக்கினார். இலைகளினூடாக வந்த காலைக்கதிர்கள் ஒளிர்வாள்கள் என மண்ணில் ஊன்றி சுடர்விட்டன. இலைகள் காற்றிலசைய நூற்றுக்கணக்கான வெள்ளிமுனை அம்புகள் தெறித்தன. சேடியிடம் காய்களை அள்ளி பெட்டிக்குள் வைக்க கையசைவால் ஆணையிட்டான் குங்கன்.

flowerதீர்க்கன் காவல்மாடத்தின் மீது ஏறிவந்தபோது எதிர்வெயில் நன்றாக எழுந்து கண்கள் கூசின. நீர்வழியும் விழிகளை விரல்களால் அழுத்தியபடி முழைகயிற்றிலிருந்து மாடத்தின்மீது கால்வைத்து நின்று கைகளைத் தூக்கி சோம்பல்முறித்து “துயின்றுவிட்டீரா, மாலரே?” என்றான். மாலர் அவன் ஏறிவரும் ஓசையில் விழித்துக்கொண்டிருந்தாலும் எழவில்லை. மடியிலிருந்த வேலை அப்பால் வைத்துவிட்டு “இந்தக் காவல்மாடத்தில் கருக்கிருள்காலையில் கண்ணயராதோர் எவருமில்லை” என்றார். “நீங்கள் கண்ணயர்ந்தீர்களா என்றுதான் கேட்டேன்” என்றான் தீர்க்கன். அவர் எழுந்து சோம்பல்முறித்து “நான் துயின்றமையால்தான் நீ வெயிலெழுந்தபின் வர முடிகிறது” என்றார். “நான் படுக்கைக்குச் சென்றதே கருக்கிருள் செறியத் தொடங்கிய பின்னர்தான்” என்றான் தீர்க்கன்.

அவர் தன் பாளைப்பையை எடுத்து உள்ளிருந்து ஒரு பாக்குத்துண்டை வாயிலிட்டுக்கொண்டார். “என்ன நிகழ்ந்தது நேற்று?” என்றான் தீர்க்கன். “என்ன நிகழும்? நிலவு வந்தது, சென்றது. இதோ, சூரியன். இனி உச்சி, பின் அந்தி. வேறென்ன?” தீர்க்கன் “கந்தர்வர்கள்?” என்றான். அவர் சிரித்து “வந்திருப்பார்கள்… உள்ளே கூடைகூடையாக அகிபீனாவும் மதுக்குடங்களும் சென்றன. மூன்றுமுதல்தெய்வங்களும் வந்திறங்கியிருக்க வாய்ப்புண்டு” என்றார். அவன் திரும்பி காட்டை பார்த்தான். பச்சைச்செறிவின்மேல் பரந்த இளவெயிலில் இலைமுனைகள் பசுஞ்சுடர்களாக எரிந்தன. செம்மலர்கள், பொன்மலர்கள், வெண்மலர்கள். நோக்கமுடியாதபடி கண்கள் கூசி கண்ணீர் மூடியது.

அப்பால் கொம்பு ஒன்று முழங்க காவல்மாடக் கொம்புகள் இணைந்துகொண்டன. தொடர்ந்து காவல்முற்றத்து முரசுகள் உறுமின. “அரசர் கிளம்புகிறார்” என்றார் மாலர். முரசோசையும் வாழ்த்தொலியும்கூட துயில்சோர்வுகொண்டிருந்தன. பல்லக்குகள் கிளம்பிச்செல்லும் ஓசைகள் கேட்டன. படைக்கலமுட்டல்கள், போகிகளின் எடைக்கூவல்கள், ஆணையோசைகள், ஒரு புரவியின் செருமல். மீண்டும் கொம்பு ஒலித்தது. “படைத்தலைவர்” என்றான் தீர்க்கன். மூங்கில்விளிம்பைப் பற்றி நின்றிருந்த மாலர் “இப்போது எவருக்கும் வேறுபாடில்லை. எல்லாம் வெறும் அரையுயிர்ச் சடலங்கள்” என்றார்.

அரசியின் நிரை அடுத்ததாக கிளம்பிச்சென்றது. அதன்பின் இளவரசியின் பல்லக்கும் அகம்படியினரும். எவரையுமே பார்க்கமுடியவில்லை. பல்லக்குத்திரைகள் மூடியிருந்தன. “பல்லக்குகளை காட்டு எல்லைக்குள் கொண்டுசென்று அவர்களை ஏற்றிக்கொள்கிறார்கள். அதுவரை தூக்கிக்கொண்டு வருகிறார்கள் போலும்” என்றார் மாலர். தீர்க்கன் “இன்னும் நான்குநாட்களாகும் அவர்கள் முழுமையாக விழித்தெழ” என்றான். கிரந்திகன் கரிய புரவி ஒன்றின் கடிவாளத்தைப்பற்றியபடி பிறிதொரு புரவியில் அமர்ந்து மெதுவாக சென்று மறைந்தான்.

“அடுமனையாளர்கள் கிளம்புகிறார்கள்” என்றார் மாலர். “அவர்களுக்கு கொண்டுபோக கலம் அன்றி பிறிதேதும் இருக்காது…” கலங்களை ஏற்றிய வண்டிகள் அசைந்து அசைந்து சென்றன. தொடர்ந்து சிறிய மூட்டைகளை தோளிலிட்டபடி அடிபின்னும் கால்களுடன் அடுமனை ஏவலர் சென்றனர். காவலர்களின் இறுதிநிரையும் சென்றது. மாலர் “அந்த அடுமனைப் பேருடலன்… அடிபதறாமல் செல்பவன் அவன் மட்டுமே. யானை அடியென எண்ணி எடுத்தமைத்த கால்கள்… அவன் மானுடனே அல்ல. மண்ணிறங்கிய ஏதோ தேவன், நான் சொல்கிறேன்” என்றார். தீர்க்கன் எழுந்து வலவன் நிமிர்ந்த தலையும் வீசி அசையும் பெருங்கைகளுமாக சிறிய கால்களை எடுத்துவைத்துச் செல்வதை நோக்கி நின்றான்.

பின்னர் காவல்முற்றம் முற்றிலும் ஒழிந்தது. செல்வதற்கு முன் அதை அவர்கள் முற்றிலும் தூய்மை செய்திருந்தமையால் அங்கே ஏதேனும் நடந்ததா என்றே அறியமுடியாதபடி அது வெறித்துக்கிடந்தது. எழுகதிர் ஒளியில் ஆற்றின் அலைகள் ஒளிசிதறி நெளிந்தன. கரையோர மரங்கள் ஒளியலை சூடி நின்று நெளிந்தன. தீர்க்கன் திரும்பி கரவுக்காட்டை பார்த்தான். அவன் என்றும் பார்க்கும் தனிமை மூடிய காடு. அத்தனிமை கலைக்கப்படவேயில்லை என அவனுக்குத் தோன்றியது.