நீர்க்கோலம் - 50

49. மதுநிலவு

flowerமுதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி எம்பி குதித்து ஹுஹுஹு என ஓசையிட்டபடி உடன்சென்றன. மதுப்புட்டிகளும் உடன் உண்பதற்கான ஊன்துண்டுகளும் சென்று முடிந்ததுமே கீசகனின் ஏவற்பெண்டுகள் உணவுக்காக வந்துவிட்டனர். “உணவு எங்கே என்று கூவுகிறார். கையில் சவுக்குதான் உள்ளது என்பது ஆறுதல். வாள் என்றால் குருதி சிந்தியிருக்கும்” என்றாள் தலைமைச்சேடி.

அரசருக்கான உணவு செல்வதற்குள்ளாகவே கீசகனுக்கான உணவை அளிக்கலாமா என சம்பவன் குழம்பினான். “இங்கு அதுதான் வழக்கம், அனுப்பிவை. யானையை பகைக்கலாம், பாம்பை பகைக்க முடியாது” என்றான் மேகன். ஒவ்வொருவருக்கும் உரிய உணவுக்கலங்கள் தனித்தனியாக வெங்குடுவைகளில் வைக்கப்பட்டு காத்திருந்தன. அவற்றை ஏவற்பெண்டுகள் வாங்கி தோளிலும் தலையிலும் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். அவை அகன்றதும் அடுமனை முற்றம் ஒழிந்தது. சம்பவன் “காவலர்களுக்கான மதுவையும் உணவையும் விளம்புக” என்றான்.

மேகன் “அதற்கு மெய்க்காவல்நாயகமோ அரசக்காவல்நாயகமோ ஆணையிடவேண்டும் அல்லவா?” என்றான். “வலவர் ஆணையிட்டார் என்று சொல்க. ஒன்றும் சொல்லமாட்டார்கள்” என்றான் சம்பவன். மேகன் தயங்கியபின் “சரி” என்றான். மதுக்கலங்கள் நுரைசிதற மணம்எழ முற்றத்திற்குச் சென்றபோது காவலர்கள் ஒரே குரலில் எழுப்பிய முழக்கம் மேகனை சிரிக்கச் செய்தது. கலங்கள் இறக்கப்பட்டு மூங்கில் குவளைகளில் மது பரிமாறப்பட்டது. காவல்கோட்டத்திலிருந்தவர்கள் சுரைக்காய் குடுவைகளை கொடுத்தனுப்பினர்.

காவலர்தலைவன் புரவியில் வந்து “எவரது ஆணை மதுவழங்க?” என்று கூவினான். “வலவர் ஆணையிட்டார்” என்றான் மேகன். காவலர்தலைவன் சில கணங்கள் சொல்லின்றி நோக்கிவிட்டு புரவியைத் திருப்பி அகன்றான். அவ்விழிகளில் வந்த அச்சத்தைக் கண்ட மேகன் புன்னகைத்தான். காவலர்தலைவன் தொலைவில் சென்றதும் காவலர்கள் உரக்க “ஓஓ” என்று கூவினர். “மேகரே, மதுவை ஊற்றும்… நிரம்பி வழியும் கோப்பையில் மதுவருந்தி நெடுநாட்கள் ஆகின்றன” என்றான் ஒரு முதிய காவலன்.

“ஊன்துண்டுகள்” என ஒரு குரல் எழுந்தது. “எண்ணையில் பொரித்தவை” என்று இன்னொருவன் சொன்னான். ஊன்துண்டை எடுத்து வாயிலிட்டு மென்றபடி ஒரு முதிய புரவிக்காவலன் “மூடா, ஊன் தன் நெய்யிலேயே வெந்திருக்கவேண்டும். ஆகவே சுட்ட ஊனே சுவை” என்றான். இன்னொருவன் “ஆம், அந்த மெல்லிய கரியின் சுவையே மெய்யான ஊன்சுவை” என்றான். “யவன மதுவுடன் எண்ணையில் பொரித்தவற்றை உண்ணலாகாது. உள்ளூர் கள்ளுக்கே அது பொருந்தும்” என்றான். “ஊன்! ஊன் எங்கே?” என்று ஒருவன் கூவினான். அவர்கள் உண்டும் குடித்தும் இறுக்கங்கள் அவிழ மகிழ்வுகொள்ளலாயினர்.

“இங்கே கந்தர்வ கன்னியர் வருவார்களா?” என்று ஒருவன் கேட்டான். “விடியற்காலையில் வருவார்கள்… அரசர்களால் தொடவும் நீவவும் மட்டுமே முடியும் என்று உணர்ந்த பின்னர்.” சிரிப்பொலி. ஒருவன் “பார்த்து… நேராக குதிரைகளை நோக்கி சென்றுவிடப்போகிறார்கள்” என்றான். அவனை இன்னொருவன் ஓங்கி அறைய மீண்டும் வெடிச்சிரிப்பு. மேகனின் தோளைத்தொட்டு ஒருவன் “ஊனுணவு உண்டு அல்லவா?” என்றான். இன்னொருவன் “வலவர் கைச்சமையல்… மணமே சொல்கிறதே” என்றான். இன்னொருவன் “இன்று வலவர் வேறுவகையில் சமைத்துள்ளார்” என்றான்.

மேகன் “இன்று சமைத்தவர் எங்களவர், சம்பவர்” என்றான். முதியவன் “மெய்யாகவா? அடுமனைமேல் தெய்வம் கொலுகொண்டதுபோல் அல்லவா நறுமணம் நின்றது?” என்றான். “அவர் வலவரின் கால்தொட்டு சென்னிசூடும் மாணவர்” என்றான் மேகன். “ஆம், குருவருள் கூடியிருக்கிறது.” ஒருவன் “வலவர் என்ன செய்கிறார்?” என்றான். “அவர் மதுவருந்தி துயில்கிறார்” என்றான். “மெய்யாகவா?” என்றான் இன்னொருவன். “ஆம், அவர் இங்கு வந்தபின் பித்தர் போலிருக்கிறார்.”

அப்பால் ஒரு குரல் “உணவுக்கலங்கள்!” என ஓசையிட்டது. “ஆம், உணவு! ஊனுணவு!” என ஓசைகள் எழுந்தன. சிலர் தலைப்பாகைகளைக் கழற்றி வானோக்கி விட்டெறிந்தார்கள். சிலர் கைவிரித்து கூச்சலிட்டனர். இரு பக்கமும் கயிறிட்டு கட்டப்பட்ட பெருங்கலங்களை காவடிபோல தூக்கியபடி அடுமனையாளர்கள் வந்தார்கள். “ஊன்சோறு. வெண்சோறு, இன்கூழ், ஊன்கூழ், நெய்யப்பம், கீரையப்பம், நுரைமாவுஅப்பம், ஊன்நெய் அப்பம், கிழங்குக்கூழ், ஊன்துருவல்” என்று அஸ்வகன் கூவ “ஆகுதியாகுக! ஆகுதியாகுக!” என இருவர் எதிர்க்குரலெழுப்பினர். சூழ்ந்திருந்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு சிரித்தனர்.

“பருப்புக்கூட்டு, கிழங்குக்கூட்டு, அவரைக்கூட்டு, பயறுக்குழம்பு, பருப்புக்குழம்பு, புளிக்கறி, மோர்க்கறி” என்று அஸ்வகன் மீண்டும் கூவினான். “கீரைவடை இல்லையா?” என்று ஒருவன் கேட்டான். “பருப்புக்குழம்புடன் வெண்டைக்காய் விழுக்கு அல்லது வழுதுணங்காய் வாட்டு இருக்கவேண்டும்” என்றான் ஒருவன். கலங்கள் வந்தபடியே இருந்தன. “அது என்ன சுவை?” என்றான் ஒருவன். “பழச்சாற்றில் வேகவைத்த ஊன்” என்றான் அஸ்வகன். “என்ன சொல்கிறீர்?” என்றான் ஒரு வீரன். “அது பீதர்நாட்டு சமையல்முறை…”

பாளைகளிலும் பட்டைகளிலும் இலைகளிலும் கோட்டப்பட்ட தொன்னைகள் வந்து பரவின. உணவை கொதிக்கும் குமிழி தெறிக்க நீள்பிடிகொண்ட அகப்பைகளில் அள்ளி பரிமாறினர் அடுமனையாளர். அவர்கள் உண்ணத்தொடங்கினர். சற்றுநேரத்தில் உணவு உருகிய பாகு வழிந்து பரவுவதுபோல அப்பகுதியெங்கும் நிறைந்தது. அது அவர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றைத்தெய்வமென புகுந்துகொண்டது. ஓருடலென்றாக்கியது. நூறு கைகள் நூறுநூறு கால்கள் நூறாயிரம் விழிகள் கொண்ட பெருவிலங்கு. அதன் நாவுகள் தழலென்றாயின. உதடுகள் மென்றும் நக்கியும் உறிஞ்சியும் ஓர் அறியாமொழிச் சொற்களை பேசிக்கொண்டிருந்தன. உணவுக்குரிய தெய்வம் மட்டும் அறிந்த மொழி.

“உண்ணும் ஒலிக்கு இணையொன்றில்லை, அஸ்வகரே” என்றான் மேகன். அஸ்வகன் திரும்பி ஓடி அடுமனைக்குள் புகுந்து அங்கே கலங்கள் நடுவே உணவின் அளவை நோக்கிக்கொண்டிருந்த சம்பவனின் அருகே சென்று அவன் கையைப்பற்றி “வா” என்றான். “என்ன?” என்றான் சம்பவன். “இங்கே பணிகள் உள்ளன. உணவு போதுமா என…” அஸ்வகன் “வாடா!” என்று அவனை இழுத்துச்சென்றான். அவனைக் கண்டதுமே ஒரு வீரன் அடையாளம் அறிந்து “அதோ” என்று கைகூப்பினான். “வீரரே, இவன் எங்கள் குலத்தின் அடுதொழிலன். அஸ்தினபுரியின் பீமசேனருக்கும் விராடபுரியின் வலவருக்கும் மாணவன்” என்றான். அனைவரும் கைகளைத் தூக்கி வாழ்த்தோசையிட்டனர்.

ஒரு முதிய வீரன் கையில் உணவுத்தொன்னையுடன் எழுந்து “இத்தருணத்தில் எங்களுக்கு நீங்களே அரசர். நீங்களே மூதாதை. நீங்களே தெய்வம்” என்றான். “ஆம்! ஆம்! ஆம்!” என்று வீரர்கள் கூவினர். ஓர் இளைஞன் “அன்னை! நீங்கள் எங்களுக்கு அன்னை!” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டான். அனைவரும் “அன்னையே! தாயே” என்று கூவினர். நகையாட்டென எழுந்த அக்குரல் இரண்டாவது சொல்லில் கனிந்த அழைப்பென்றாகியது. பின் பல நூறு குழவிகளின் கண்ணீர் குரலென்று மாறியது.

சம்பவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். “போதும்… நம் குலதெய்வங்களுக்கு குளிரக்குளிர அன்னமுழுக்கு செய்துவிட்டாய்” என்று கம்மிய குரலில் அஸ்வகன் சொன்னான். விம்மியபடி தலைகுனிந்து கண்களை கைகளால் மூடிக்கொண்டான் சம்பவன். “செல்க… சென்று ஓய்வெடு… இங்கு அனைத்தையும் நானே பார்த்துக்கொள்கிறேன்.” சம்பவன் “இல்லை…” என்று சொல்ல அஸ்வகன் மேகனிடம் “சென்று படுக்க வை…” என்றான். மேகன் சம்பவன் கையைப் பற்றி “வருக, அடுமனைத் தலைவரே” என்றான். “என்னடா சொல்கிறாய்?” என்றான் சம்பவன். “இனி அவ்வண்ணமே அழைப்பேன்… இதற்குமேல் என்ன?” என்றான் மேகன்.

சம்பவன் கைநீட்டி “அங்கிருக்கிறார், உளம் கனிந்து தொட்டால் ஓடைநீரை இனிக்கச் செய்யும் யோகி… அவர் முன் நாமெல்லாம் நின்றிருக்கிறோம் என்று உணர்க!” என்றான். “ஆம், ஆனால் அவருக்கு நிகர் நீங்கள்… இல்லையென்றால் கேளுங்கள் இவர்களிடம்” என்றான் மேகன். “இல்லை, அதைத்தான் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். நறுமணம், நற்தோற்றம், நற்சுவை என நல்லுணவுக்குரிய மூன்றும் அமைந்துவிட்டன. ஆயினும் அவர் கை தொட்ட சமையல் அல்ல இது. குறைவது என்ன?” மேகன் “எனக்குப் புரியவில்லை” என்றான். “குறைகிறதா இல்லையா, அதை சொல்” என்றான் சம்பவன். மேகன் ஒன்றும் சொல்லவில்லை.

“ஆம், குறைகிறது. குறைவது ஒன்றே… அவருடைய பெருங்கருணை. அதை இப்போது இவர்கள் என்னை வாழ்த்தக் கேட்டபோது உணர்ந்தேன். என்னை அவர்கள் அன்னையென்றபோது உள்ளுருகியது. மெல்லும், சவைக்கும், மாந்தும், அருந்தும் ஒலிகளைக் கேட்டதும் என் முலைகள் பருத்துச் சுரப்பவைபோல விம்மின. பாலாழி ஒன்று அலைகொண்டெழுந்தது. அப்போது அறிந்தேன், அவர் உளம் விரிந்த பேரன்னை… நான் வென்றாகவேண்டும், நின்றாகவேண்டுமென்று விழைந்தேன். அஞ்சினேன். அடிபணிந்து ஆற்றல்கொண்டு என் கடனை ஆற்றி எழுந்தேன். அவருக்கு அடுமனைத் தொழில் என்பது அள்ளி எடுத்து முலைசேர்க்கும் அன்னையின் ஆதுரம் மட்டுமே…”

களைப்புகொண்டவன்போல நின்று “அது என்னில் கைகூடவேண்டும்” என்றான் சம்பவன். “அப்பெருங்கைகள்… அவை இவ்வுலகை தன் கருணையால் ஆளும் அக்கருங்குரங்குக்கு உரியவை அல்லவா? ராகவராமனும் அவனுக்கொரு சிறுமைந்தனே அல்லவா? அவன் தோளிலமர்ந்து செல்கையில் ஆழியும்சங்கும் கொண்டு எழுந்த விண்ணளந்தோனே ஆயினும் அவன் அவ்வாறு உணர்ந்திருக்க மாட்டானா?” சம்பவன் கண்ணீர் வழிய தனக்குள் என சொல்லிக்கொண்டே வந்தான். நடக்கமுடியாதவன்போல சில இடங்களில் கால்தெற்றினான். மேகன் அவனை பிடித்துக்கொண்டான்.

“நான் அவ்வாறு ஆகவேண்டும். அதற்குரிய வழி இக்கணமே இதை நான் சமைத்தேன் என்பதை முற்றுதறுவதுதான். என் தலையை அக்கால்களில் கொண்டுசென்று வைத்து எளியோன் சிறியோன் கடையோன் என சித்தம் அழிவதுவரை சொல்லிக்கொண்டிருப்பதுதான். எத்தனை கனிந்தால் அக்கைகள் அமுதூறத் தொடங்கியிருக்கும்! எத்தனை நெகிழ்ந்திருந்தால் நெஞ்சக்கருணையெல்லாம் அன்னமென்றாகியிருக்கும்! நான் அறிவிலி, இதோ இப்போது அதை உணர்ந்தேன்.”

“அத்தனை குரல்கள் என்னை வாழ்த்தி எழுந்தபோது நான் என என்னை உணர்ந்து தருக்கினேன்… நான் அதிலிருந்து விடுதலை கொள்ளவேண்டும்… சீழ்க்கட்டியை என அதை அறுத்து வீசவேண்டும்… அஞ்சனையின் பேருருவ மைந்தன்மேல் ஆணை. இனி உண்பவரின் வாழ்த்துக்களை ஏற்கச் செல்லமாட்டேன். இனி அடுமனைவிட்டு நீங்கமாட்டேன். அவியுண்ணும் தெய்வங்கள் என அவர்கள் கண் அறியாது அமைந்து என் சமையலை அறியட்டும்…”

மேகன் அவனை துயிலுக்கான சிறுகொட்டகைக்குள் கொண்டுசென்றான். அங்கே தரையிலிட்ட ஈச்சம்பாயில் பீமன் மல்லாந்து துயின்றுகொண்டிருந்தான். அவனைச் சுற்றி மதுக்குடங்கள் உருண்டு கிடந்தன. மூச்சு ஓடுவதே தெரியவில்லை. அகன்ற நெஞ்சின் குழியில் மட்டும் தவளைக்குழி என மெல்லிய அசைவு. “பழுதற்ற உடல்” என்று மேகன் சொன்னான். “மூச்சொலி எழாது துயில்பவரை இப்போதுதான் காண்கிறேன்.”

சம்பவன் கைகூப்பியபடி நின்றான். “அமர்க!” என்று மேகன் அவனை அமரச்செய்தபின் சென்று உருண்டுகிடந்த ஒரு யவன மதுக்குடத்தில் இருந்து எஞ்சிய மதுவை அங்கே கிடந்த குவளை ஒன்றில் ஊற்றி கொண்டுவந்தான். “அருந்துக!” சம்பவன் “அய்யோ” என்றான். மேகன் உரக்க “இது ஆசிரியரின் மிச்சில். அவருடைய அருட்கொடை எனக் கொள்க!” என்றான். சம்பவன் தயங்கியபடி அதை வாங்கிக்கொண்டான். “அருந்துக…” என்றான் மேகன். சம்பவன் முகர்ந்துநோக்கி “பல மதுவகைகளை கலந்திருக்கிறார்… முற்றிலும் புதிய மதுவென்று ஆக்கியிருக்கிறார்” என்றான்.

“ஆம், மதுவை கலப்பது ஒரு யவனக்கலை” என்றான் மேகன். “அவர்களின் குலங்களில் அதற்கென்றே திறனோர் உள்ளனர். வேள்விசெய்யும் அந்தணருக்கு நிகராக அவர்களை யவனர் வழிபடுகிறார்கள்.” சம்பவன் மீண்டும் முகர்ந்து “இதற்கு நிகரான ஒரு மதுவை நான் முகர்ந்ததில்லை… தெய்வமலர் ஒன்றில் ஊறியதுபோல” என்றான். “ஆம், அது தெய்வமலரில் உங்களுக்கென ஊறியது… அருந்துக!” என்றான் மேகன். சம்பவன் அதை துளித்துளியாக உறிஞ்சி அருந்தினான். வாய்க்குள் அந்த நறுமண ஆவியை நிறுத்தி மெல்ல மூச்சால் விட்டபடி “இனிது” என்றான்.

“இன்னும் சிறிது” என பிறிதொரு கலத்திலிருந்து ஊற்றி கொண்டுவந்தான் மேகன். “நான் நிலையழிந்துவிடுவேன்” என்றான் சம்பவன் அதை வாங்கியபடி. “அருந்துக! மதுவை ஆளும் தெய்வங்கள் எழுக!” என்றான் மேகன். மெல்ல அருந்தியபடி “அத்தெய்வங்கள் காமத்தில் பிணைந்துள்ளன இக்கலவையில்” என்றான் சம்பவன். “இன்னும் சிறிது…” என மேகன் ஊற்றி எடுத்துவந்தான். “போதும்” என்றான் சம்பவன். ஆனால் கை இயல்பாக நீண்டது. “அருந்துங்கள், இப்போது உங்களுக்கு தேவைப்படுகிறது” என்றான் மேகன்.

சம்பவன் “இந்த மணத்தை முகரவே தகுதியற்றவன் என முன்பு நினைத்திருந்தேன்” என்றான். மேகன் “இன்று நீங்கள் அடுமனைத் தலைவர்… யவன மதுவில் நீராடவேண்டுமென்றாலும் தடையில்லை” என்றான். சம்பவன் பெருமூச்சுடன் “இனிய மணம்” என்றான். “இன்னும் சிறிது” என்றான் மேகன். “போதும்” என சம்பவன் சொன்னாலும் அவன் கோப்பையை மேகன் நிரப்பினான். “உங்கள் ஆசிரியர் அருகே படுத்துக்கொள்க!” என்றான் மேகன். “நான் துயில விரும்பவில்லை” என்றான் சம்பவன். “துயில்க… உங்களுக்குத் தேவையாகிறது.” சம்பவன் “நான் உளறுகிறேனா?” என்றான். “ஆம்” என்றான் மேகன் புன்னகையுடன்.

அவன் சிரித்து தலையை அசைத்தான். “ஆம், உளறுகிறேன். ஆனால்…” சம்பவன் மெல்ல உடலை நீட்டி தரையில் இடப்பட்டிருந்த பாயில் படுத்தான். “குருதியில் படர்கிறது மது. உள்ளத்திலுள்ள சொற்கள் அனைத்தும் நனைந்து எடைகொண்டுவிட்டன…” மேகன் “துயில்க!” என்றான். “அது ஒரு பெருங்குரங்கு…” என்றான் சம்பவன். “அது இங்குள்ள அனைத்து மானுடருக்கும் தந்தை. ஆகவே நிகரற்ற கருணை கொண்டது…”

சம்பவன் கண்களை மூடிக்கொண்டு ஒருமுறை விக்கினான். “பெருங்கரங்கள். மயிரடர்ந்தவை” என்றான். மேகன் மெல்ல காலடி வைத்து வெளியே சென்றான். “இப்புவியை சுவையென்றே அறிந்தவர்… மாபெரும் தேன்குவை இப்பெருவெளி. புவி அதில் ஒரு சொட்டு” என சம்பவன் சொன்னான். பின்னர் “ஆம், எத்தனை மென்மையான சிறுகால்கள்” என்றான். “கூம்பிய மலர்போன்றவை… நீள்விரல்கள். அவை கைகளும்கூட.”

flowerசிட்டுக்குருவிகள் சிற்றடிவைத்து, சிறகுகுலைத்து அடுக்கி, குறுஞ்சில்பேசி மணிதேடிக் கொத்தி விழுங்கி எழுந்தமைந்துகொண்டிருப்பதுபோல அங்கே அரசியரும் சேடியரும் உணவுண்டுகொண்டிருந்தனர். விளம்பியவர்கள் கேட்கப்படுபவர்களுக்கு மட்டுமே செவிதொடும்படி மிக மெல்ல உசாவினர். அவர்கள் விழியசைவால், கைவீச்சால் மறுமொழி இறுத்தனர். யவன மது ஊற்றப்படும் ஒலி. அப்பங்கள் ஒன்றின்மேல் ஒன்று முட்டும் ஒலிகூட கேட்டது. எங்கு அமர்வது, எப்படி கால்மடிப்பது, எந்த விரல்களால் உண்பது, எதனுடன் எதைச் சேர்ப்பது என்பதெல்லாம் முன்னரே வகுக்கப்பட்டு முறையாக பயிலப்பட்டிருந்தன.

அப்பால் யவன மதுக்குடுவைகளுக்கு அருகே நின்று நோக்கிக்கொண்டிருந்த சுபாஷிணி அவர்கள் உணவுண்டது ஏதோ ஒரு காட்டுத்தெய்வத்திற்கு கரவுவழிபாடு நிகழ்வதுபோலிருப்பதாக எண்ணிக்கொண்டாள். யவன மதுவுடன் சுட்ட ஊனும், வறுத்த பருப்புகளும். அதன்பின் ஊன்சோறுடன் பழத்துண்டுகள். நெய்யன்னத்துடன் கருமிளகிட்டு சமைக்கப்பட்ட ஆட்டுஊன்கறி. அப்பங்களுடன் பன்றிக்கறி. குழம்புகளை மிகையாகவும் குறைவாகவும் விடாமல் விளம்புவது பெரிய கலை என அவள் எண்ணினாள். ஒவ்வொரு உணவுக்கும் ஒரு தாலம். உண்ணப்பட்ட தாலங்களை கொண்டுசென்று ஒரு நார்ப்பெட்டியில் குவித்தனர் சேடியர் நால்வர்.

அரசி விரல்மடிப்புகளுக்குமேல் உணவு படாமல் எடுத்து இதழ்களைத் தொடாமல் வாயிலிட்டு வாய்குவிய மூடியபடி மெல்ல மென்றாள். தலையை மெல்ல அசைத்து நன்று என்றாள். பட்டுத் துவாலையால் இதழ்களை ஒற்றியபின் அடுத்த உணவுப்பொருளை எடுத்தாள். ஆனால் அவளருகே அமர்ந்து உண்ட சைரந்திரியின் இரு விரல்கள் மட்டுமே அப்பங்களை தொட்டன. இரு விரலால் எப்படி அப்பத்தை விள்ளமுடியும் என அவள் வியந்தபோதே ஒரு நடனம் நிகழ அன்னத்தின் அலகில் என அப்பம் அவள் வாயை அடைந்தது. அப்பம் அருகே சென்ற பின்னர்தான் அவள் வாய் திறந்தது.

சுபாஷிணி திரும்பி அரசியை பார்த்தாள். கையில் அப்பத்தை பற்றியபோதே அறியாது அவள் வாய் திறந்தது. அத்தனை சேடியரும் அவ்வாறே உண்டார்கள். சைரந்திரி மெல்லும்போது அவள் இதழ் குவிந்து இறுகவில்லை. இயல்பாக இளம்புன்னகையில் என விரிந்திருக்க தாடையின் அசைவு மட்டுமே அவள் மெல்வதை காட்டியது. மதுக் கோப்பையை மூக்கருகே சில கணங்கள் நிறுத்தி மும்முறை தாழ்த்தியபின் ஒருதுளிமட்டும் அருந்தினாள். சுட்டுவிரலை அசைத்து உணவுக்கு ஆணையிட்டாள்.

அரசி மிகையாகவே உண்டாள், ஆனால் அவள் உண்டதைவிட பல மடங்கு உணவை சைரந்திரி உண்டாள். நோக்கிக்கொண்டிருக்கையில் சைரந்திரி ஓர் அழகிய கைநடனத்தை மட்டும் நிகழ்த்துவதாகவும் உணவு ஏதும் வாய்க்குள் செல்லவில்லை என்றும் விழி மயங்கியது. அங்கிருந்த சேடியரிடம் சைரந்திரி எவ்வளவு உண்டாள் என்றால் அவள் ஒப்புக்கு கைநனைத்தாள் என்றே சொல்லக்கூடும். ஆனால் விழிகளை நோக்கியபோது அவ்வாறு தோன்றவில்லை. அவர்கள் அனைவருமே அவளை மட்டும்தான் நோக்குதெரியாமல் நோக்கிக்கொண்டிருந்தனர், அவளன்றி வேறு எவரும் அங்கிருக்கவில்லை என்பதுபோல. கேகயத்தின் அரசி அவள்முன் எளிய முதியவள் என்று தோன்றினாள்.

சுபாஷிணி சைரந்திரி உண்ணுவதை அனைத்தையும் மறந்து நோக்கி நின்றுவிட்டாள். அருகே நின்ற சேடி “உம்” என்றபோது திடுக்கிட்டு விழித்துக்கொண்டு “இதோ” என யவன மதுப்புட்டியை எடுத்து அளித்தாள். அது உருளையாக மேலே ஈரமென்மயிர் காப்புடன் முயல்போலத் தோன்றியது. அதை மூடியிருந்த மென்மர மூடியைத் திறந்தபோது குமிழி உடையும் ஒலியுடன் இனிய மணம் எழுந்தது. அவள் நாவூறியது. உடனே விழுங்கினால் தெரியும் என அப்படியே வாயை வைத்துக்கொண்டாள். சேடி திரும்பியதும் விழுங்கினாள். மதுவை உண்டதுபோல அவளுக்கு இனிய படபடப்பு ஒன்று ஏற்பட்டது.

அரசி பலமுறை மதுவை வாங்கி உண்டாள். அவளைவிட பலமடங்கு மதுவை சைரந்திரி உண்டாள். அவளைப் பார்க்கவே சுபாஷிணிக்கு அச்சமாக இருந்தது. கந்தர்வர்களின் தோழி. அவர்கள் இங்கே விழிக்குத் தெரியாமல் சூழ்ந்திருக்கிறார்களா என்ன? அவள் அந்த பொன்னிற நாகத்தை நினைவுகூர்ந்தாள். அது கந்தர்வனா? ஆனால் கந்தர்வர்கள் பறப்பவர்கள். அது மண்ணின் ஆழங்களில் வாழும் நாகங்களில் ஒன்றாக இருக்கலாம். வாசுகியின் குடியினன். கார்க்கோடகனா? தட்சனா? அவள் உடல் மெய்ப்பு கொண்டது. கைகள் பதறி புட்டியை விட்டுவிடுவோம் என்று தோன்றியது.

எவ்வளவு உண்கிறாள், எவ்வளவு குடிக்கிறாள்! பெருந்தீனிப் பெண்கள் நான்குபேர் உண்பதை அவளே கொள்கிறாள். ஆகவேதான் அந்த விரிதோள்கள். களம்நின்று மல்லிடவும் கதைசுழற்றி தலையோட்டை உடைக்கவும் அவளால் இயலும். புரவிகளைப் பிடித்து நிறுத்தக்கூடும். யானை மத்தகங்களை அறையும் கைகள். அவளுக்கு கீசகனின் நினைவு வந்தது. இக்காட்டில்தான் அவனிருக்கிறான். இங்கே அவன் அவளைத் தேடி வராமலிருக்கமாட்டான். இந்தக் காட்டில் எதற்கும் தடையில்லை. அவள் பெருமூச்சுவிட்டாள்.

அரசியும் சைரந்திரியும் உணவை முடித்துக்கொண்டு எழுந்துசென்று அப்பால் விரிக்கப்பட்ட பட்டுக் கம்பளங்களில் எழுநிலவை நோக்கியபடி அமர்ந்தனர். தடித்த மரவுரிக்குமேல் விரிக்கப்பட்ட கம்பளங்களில் அவர்கள் மெல்ல உடல்சரித்து அமைய பட்டுத்தலையணை அணைவைத்தனர் சேடியர். அவர்களின் உடல்கள் அந்த மென்மையில் பதிவதைக் கண்டபோது தன் உள்ளமும் மென்மையை உணர்வதை சுபாஷிணி அறிந்தாள். ஏன் உடல் இப்படிச் சிலிர்த்துக்கொண்டே இருக்கிறது என்று எண்ணிக்கொண்டாள். நெஞ்சம் இனிமை என இருந்தது.

யாழுடனும் முழவுடனும் நான்கு விறலியர் சென்று அரசிக்கு முன்னால் அமர்ந்தனர். அவர்களின் தலைக்குமேல் முழுநிலவு பொன்னிறவட்டமாக நின்றிருந்தது. குழல்பிசிறுகள் மெல்லிய நீர்ச்சரடுகள்போல ஒளிகொண்டிருந்தன. கன்னங்கள் திரும்பும்போது பூனைமயிர்கள் பொடிப்பூச்சு என மிளிர்ந்தமைந்தன. யாழ் மெல்ல முனகியது. இனிமை என்றது. தண்ணுமை ஆம் இனிமை என்றது. ஒருத்தி குனிந்து இன்னொருத்தியிடம் ஏதோ சொன்னாள். அவள் தலையசைத்தபோது காதுமடல்களில் தொங்கிய குழைகள் நிழல் கழுத்தில் ஆடியது. கழுத்துத்தோல் வாழைப்பட்டையின் மென்மையுடன் ஒளிவிட்டது.

“உண்கிறாயா?” என்றாள் சேடி. அவள் “ஆம், இனிமை” என்றாள். “என்னடி? கனவா?” என்ற சேடி தாழ்ந்த குரலில் “யவன மது நிறைய எஞ்சியிருக்கிறது” என்றாள். “அய்யோ” என்றாள் சுபாஷிணி. “என்ன அய்யோ… மதுவருந்தாமல் இந்த இரவை வீணாக்கப்போகிறாயா?” அவள் “ஆனால்…” என்றாள். “இன்று எதுவுமே பிழை அல்ல… இந்தா.” அவள் அளித்த வெண்கலக் கிண்ணத்தில் இருந்த மது நிலவொளியில் நிறமற்றதுபோல் தோன்றியது. செண்பகமலர்போல எரி கலந்த மணம். “குமட்டுமா?” என்றாள். “குமட்டுவதும் ஒரு சுவை…”

அவள் அதை வாங்கி மூக்கருகே கொண்டுசென்றாள். அதற்குள் உடல் உலுக்கிக்கொண்டது. ஒருகணம் வேண்டாம் என தோன்றியது. அவ்வெண்ணத்தை வெல்லும்பொருட்டு அப்படியே தூக்கி அருந்தினாள். பெரிய எரிகுமிழி என அது தொண்டையைக் கடந்து உள்ளிறங்கியது. தொண்டை எரியத்தொடங்கியது. “அடிப்பாவி, அப்படியே அருந்தினாயா? இரு, இந்த அப்பத்தை மென்றுகொள்” என்றாள் சேடி. அவள் அதை வாயிலிட்டு மென்றாள். “யவன மதுவை உணவுண்டபடியே அருந்தலாம். உணவுக்குப் பின்னரும் அருந்தலாம்” என்றாள் அப்பால் ஒரு சேடி.

அவர்கள் அனைவரும் மதுவருந்திக்கொண்டிருந்தனர். மதுவின் மணம் எழுந்து சுழன்று உடனே காற்றால் அள்ளிக்கொண்டுசெல்லப்பட்டது. தண்ணுமை இனிதினிதினிது என்றது. இனிமையல்லவா என்றது யாழ். விறலியின் குரல் எழத்தொடங்கியது…

 “ஒன்பது பொன்னிற நாகங்கள்

அவை ஒன்பது பொன்னிற நாகங்கள்

நான்கு நாகங்கள் அவள் அரியணைக்கால்கள்

ஒன்று அவள் உடைவாள்

பிறிதொன்று அவள் இடைமேகலை

அறிக மேலுமொன்று அவள் முலைமேல் ஆரம்

ஒன்று அமைந்திருந்தது அவள் மணிமுடியென

கேளுங்கள் பேரரசி தமயந்தி மட்டுமே

அறிந்த ஒன்றே ஒன்பதாவது நாகம்!

“மேலும் சிறிது குடி” என ஊற்றினாள் சேடி. இனிய களைப்பொன்றை உணரத்தொடங்கினாள் சுபாஷிணி. அல்லது அது வெறும் உளமயக்கா என்றும் தோன்றியது. அவள் நெளியும் நாகங்களை அக்குரல்களினூடாக கண்டுகொண்டிருந்தாள்.

 “ஒன்பது பொன்னிற நாகங்கள்

ஒன்பது நெளிவுகள்

ஒன்பது சொடுக்குகள்

ஒன்பது சுழிகள்

ஒன்பது இமையாவிழியிணைகள்

அங்கிருந்தன ஒன்பது நச்சுப்பற்கள்

அவள் விழிகள் மெல்ல தழைந்தன. விறலியின் குரல் நெடுநேரமாக கேட்டுக்கொண்டிருந்தது. விழித்தெழுந்து சூழலை பார்த்தாள். சேடியர் அனைவரும் கைகளில் கோப்பைகளுடன் பாடலை கேட்டுக்கொண்டிருந்தனர். அவள் விறலியின் தலைக்குப் பின்னால் பேருருக்கொண்டு எழுந்து நின்ற நிலவைக் கண்டு முதற்கணம் அது என்ன என்று திகைத்தாள். நிலவை அத்தனை பெரிதாக அவள் கண்டதே இல்லை. நான் மது உண்டிருக்கிறேன், அந்தக் களிமயக்கு. ஆனால் மதுவுண்டால் நிலவு பெருகுமா என்ன?

அவள் தன் அடிவயிற்றின் எடையை உணர்ந்தபின் மெல்ல திரும்பி பாறைச்சரிவில் இறங்கினாள். நினைத்த இடத்தில் காலடிகள் விழவில்லை. பாறையே சற்று சரிந்திருப்பதாகத் தோன்றியது. சில இடங்களில் பாறை மெத்தைபோல அழுந்தியது. “நஞ்சை அறியாத கன்னி உண்டா? சொல்க, நஞ்சை நாடாத காதலருண்டா?” அவள் அவ்வொலியை தனக்கு முன்னால் காட்டுக்குள் என கேட்டாள்.

பாறையிலிருந்து காட்டுக்குள் இறங்கி புதர்களினூடாக நடந்தாள். இடைவரை செறிந்த புதர்களுக்குள் சூழநோக்கிவிட்டு ஆடைவிலக்கி அமர்ந்தாள். எழப்போகும்போது பொன்னிற நாகம் என்னும் சொல் முதலில் எழ அதன்பின் அக்காட்சி விரிந்தது. திடுக்கிட்டு துள்ளி விலகி நின்று நடுங்கினாள். அவளைச் சூழ்ந்து அசைவுகள் தெரிந்தன. நாகநெளிவுகள். நிலவொளி எழுப்பும் விழிமாயமா அது?

அவள் மெல்ல முன்னகர்ந்து நோக்கினாள். அச்சத்தால் உடல் நடுங்கிக்கொண்டிருந்தாலும் அவளால் ஆர்வத்தை வெல்லமுடியவில்லை. மெல்லிய மணம் ஒன்று எழுந்தது. சற்று புளித்த அப்பம்போல. தேமல் படர்ந்த உடலின் வியர்வைபோல. முலைப்பால் புளித்த மேலாடைபோல. அவள் நாகங்களை கண்டாள். இலைகளுக்குள் நூற்றுக்கணக்கான நாகக்குழவிகள் நிலம்வந்த மீன்கள்போல துள்ளி நெளிந்துகொண்டிருந்தன.