நீர்க்கோலம் - 48

47. நிலவெழுகை

flowerகாட்டுமுகப்பில் நின்ற வண்டியில் இருந்து பொதிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது தொலைவில் கொம்பொலி எழுவதை முக்தன் கேட்டான். இரு பெரிய பித்தளை அண்டாக்களை ஒன்றுக்குள் ஒன்றெனப்போட்டு தோளிலேற்றி கொண்டு சென்று அடுமனைக்கென அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்குள் வைத்துவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த வலவன் நின்று இரு கைகளையும் இடையில் வைத்தபடி அத்திசையை நோக்கினான். கையில் எடுத்த கலத்துடன் என்ன செய்வது என்று அறியாமல் சம்பவன் முன்னும் பின்னுமெனத் ததும்பினான். கொம்போசை மீண்டும் எழ காவல் மாடங்கள் அனைத்திலும் கொம்புகள் ஏற்று ஒலித்தன. முரசுகள் இணைந்துகொண்டன. மாபெரு யானைத்திரள் ஒன்று மிரண்டு ஓடிவந்து அப்பகுதியைச் சூழ்ந்துகொண்டதுபோலிருந்தது.

நான்கு முழுத்த ஆண் புரவிகள் முழு விரைவில் குளம்படி தாளத்துடன் வந்து முற்றத்தை அடைந்து அரைவட்டமாகச் சுழன்று நிற்க அங்கே நின்றிருந்த பிற புரவிகள் அனைத்தும் குளம்புகள் மாற்றிவைத்து நின்று கழுத்தைத் திருப்பி விழியுருட்டி நோக்கின. ஓரிரு பெண்புரவிகள் கனைத்தன. முதற்புரவிமேல் இருந்த தோற்கவச வீரன் தன் கையிலிருந்த நீண்ட வேலால் அங்கு நின்றிருந்த அடுமனையாளன் ஒருவனை தோளில் குத்தி “வண்டிகளனைத்தும் விலகவேண்டும். இக்கணமே… எந்த வண்டியும் இங்கு நிற்கக்கூடாது. எந்தப் பொருளும் இந்த முற்றத்தில் இருக்கக்கூடாது. விலகுக… விரைவில்!” என்றான். அவன் கைகூப்பி வாய்திறந்து நின்று நடுங்கினான்.

வலவன் அங்கிருந்து ஓடிவந்து “வண்டிகள் அனைத்திலும் பொருட்கள் இருக்கின்றன, வீரரே. அவற்றை இறக்கி வைக்காமல் வண்டிகளை அப்பால் கொண்டு செல்ல இயலாது” என்றான். “இயலாதா? யாரிடம் சொல்கிறாய்? இழிமகனே, எடுடா வண்டியை” என்றான் அவ்வீரன். “வண்டிக்காளைகளை அவிழ்த்துவிட்டோம். மீண்டும் அவற்றை கொண்டுவந்து கட்டி வண்டிகளை அகற்ற பொழுதில்லை” என்றான் வலவன். “பேச்செடுக்கிறாயா? அடுமடையா, எடுடா வண்டியை… இக்கணம் வண்டிகள் இங்கிருந்து அகலவில்லை என்றால் உங்கள் தலைகள் உருளும்” என்றான் வீரன். இன்னொருவன் சவுக்கைச் சுழற்றி வீசி படீர் என ஓசையெழுப்பினான்.

“நான் வேண்டுமென்றால் வண்டியை சற்று நகர்த்தி ஓரமாக வைக்கிறேன், வேறுவழியில்லை” என்றான் வலவன். “பேசாதே… எடு வண்டியை” என்றான் ஒரு வீரன். இன்னொருவன் “அனைவரும் சேர்ந்து இழுங்கள் வண்டியை…” என்று கூவினான். “வேண்டியதில்லை” என்றபின் வலவன் குனிந்து வண்டியின் நுகத்தை இரு கைகளாலும் தூக்கி ஒரே உந்தலில் சகடத்தை அசையச்செய்து இழுத்துச் சென்று ஓரமாக நிறுத்தினான். அவன் தசைகள் புடைத்து இறுகியெழுந்தது பாய்மரம் காற்று கொள்வதைப்போலத் தோன்றியது. தரையில் இறக்கிப் போடப்பட்டிருந்த கலங்களையும் உருளிகளையும் சிறு விளையாட்டுப்பொருட்களை என ஒற்றைக்கையால் எடுத்து அடுக்கி வைத்தான். புரவிக்காவலர்களும் அடுமனையாளர்களும் ஏவலர்களும் திகைப்புடன் அவனைப் பார்த்து நின்றனர்.

காவலர்தலைவன் குரல்மீள சற்று பொழுதாகியது. ஒருவன் “இவன் யார்?” என மூச்சுக்குள் சொன்னான். காவலர்தலைவன் கைசுட்டி வலவனை அருகே அழைத்து “வா இங்கு… நீ யார்? சூதனா?” என்றான். “இல்லை, நான் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறேன்” என்றான் வலவன். “ஷத்ரியன் ஏன் அடுமனைத் தொழில் செய்யவேண்டும்?” வலவன் “நான் குலவிலக்கு செய்யப்பட்டேன்” என்றான். காவலன் அவன் கைகளைப் பார்த்து “நீ கதாயுதம் பயின்றிருக்கிறாய்” என்றான். “ஆம். ஆனால் போர்த்தொழிலில் இறங்குவதில்லையென்று என் குடித்தெய்வத்திடம் ஆணையிட்டிருக்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் அவன். “உணவு சமைத்து என் கைகளால் ஒவ்வொருவருக்கும் உயிரூட்டிக்கொண்டிருக்கிறேன். ஆகவே எவரையும் கொல்ல என்னால் இயலாது.”

வீரன் நகைத்து “இந்த ஈட்டியால் நான் இப்போது உன்னைக் கொன்றால் நீ என்ன செய்வாய்?” என்றான். பீமன் “ஒவ்வொரு நாளும் பல ஆடுகளையும் பன்றிகளையும் உணவுக்காக கொல்கிறேன்” என்றான். அவன் சொல்வதை காவலர்தலைவன் புரிந்துகொள்ளவில்லை. பின்னால் நின்ற துணைவன் சிரித்தபோதுதான் அதன் பொருள் புரிந்தது. வெறிகொண்டு இரும்பாலான வேலைச் சுழற்றி வலவனை அடித்தான். மிக எளிதாக இடக்கையால் அதைப்பற்றி சற்று திருப்பி காவலர்தலைவனை நிலையழியச் செய்து நாணல் ஒன்றை கொய்வதுபோல அவன் கையிலிருந்து அதைப் பிடுங்கி ஒற்றைக்கையால் நிலத்தில் ஊன்றி கொடியை என வளைத்து அப்பால் தூக்கிப்போட்டான். உலோக ஓசையுடன் சென்று விழுந்தது வேல்தண்டு.

விலங்கெனக் கூச்சலெழுப்பியபடி காவலர்தலைவன் வாளை உருவினான். அவனை திரும்பிக்கூட நோக்காமல் “செல்லுங்கள், வீரரே. ஓர் அடி தாங்குமளவுக்குக்கூட உங்கள் உடம்போ புரவியோ இல்லை” என்று வலவன் சொன்னான். குதிரையிலிருந்த அனைவருமே மெல்லிய விதிர்ப்பு கொள்வதை சம்பவன் பார்த்தான். “ம்ம்” என்றான் வலவன். அவன் தோள்தசை விழித்தெழும் மலைப்பாம்புபோல மெல்ல அசைந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு புரவிகளைத் தட்டி விலகிச்சென்றனர்.

இரண்டாவது காவலர் அணி “விலகுங்கள், விலகுங்கள், இளவரசர் வருகிறார்…” என்று கூவியபடி வந்தது. அவர்கள் புரவிகளை வலையென விரித்து அக்காவல்முற்றத்தின் விளிம்புகளென்றாகி வேலுடன் வேல் தொட்டு வேலி அமைத்தனர். அடுமனையாளர்களும் காவலர்களும் வணங்கி உடல்வளைத்து நிற்க அடுத்த குழு பெருகிப்பெய்யும் குளம்போசையுடன் வந்து நின்றது. “என்ன செய்கிறீர்கள் இங்கே? இளவரசர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான் அதன் தலைவன்.

மச்சநாட்டின் துள்ளும்மீன் பொறிக்கப்பட்ட கொடியுடன் கரிய புரவியொன்று வந்தது. கொடியை ஏந்தியிருந்த புரவி வீரனுக்குப் பின்னால் வந்தவன் உருவிய வாளுடன் “விலகுங்கள், விலகுங்கள்” என்று கூவிக்கொண்டிருந்தான். கொடிப்புரவி வந்து முற்றத்தின் நடுவே நிற்க அதைத் தொடர்ந்து வந்த புரவிகளில் கொம்புகளும் முரசுகளும் ஏந்தியவர்கள் வந்தனர். கொம்பூதி முற்றத்திற்கு வந்து மும்முறை முழங்க காவல் மாடங்கள் அனைத்திலிருந்தும் மறு பிளிறல் எழுந்தது.

“யாருடைய பல்லக்கு அது? இங்கே பல்லக்கை நிறுத்தியது யார்?” என்று காவலர்தலைவன் கூவினான். “யாருடைய புரவி அது?” என்று பல குரல்கள் எழுந்தன. “அது இளவரசர் உத்தரர் ஏறி வந்த புரவி” என்றான் அங்கிருந்த கானகக் காவலர்தலைவன். “உத்தரர் அந்தப் புரவியில் ஏறி வந்தாரா?” என்றான் காவலர்தலைவன். “ஆம், அதில்தான் வந்தார்” என்றான் கானகக் காவலர்தலைவன். அதை நோக்கியபின் “அந்தப் புரவியிலா?” என்று அவன் மீண்டும் கேட்டான். “ஆம்” என்றபின் “அப்புரவியைப் பழக்கும் ஒருவன் வந்திருக்கிறான். கிரந்திகன் என்னும் சூதன். அவன் சொல்லுக்கு அது குழவியென கட்டுப்படுகிறது” என்றான். “கடிவாளத்தை அவன் பற்றியிருந்தானா?” என்றான் இன்னொரு காவலன். இரு வீரர்கள் நகைத்தனர்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே எட்டு வேலேந்திய வீரர்களும் எட்டு வில்தொடுத்த வீரர்களும் புரவிகளில் முன்னால் வர தொடர்ந்து கீசகனின் புரவி வந்தது. யவனநாட்டைச் சேர்ந்த எடைமிக்க பெரிய புரவியின் காலடி ஓசை தனியாகவே ஒலித்தது. அதன் குளம்புகள் கொல்லன் உலைக்களத்து கூடம்போலிருந்தன. கணுக்கால்களில் காகச்சிறகுபோல மயிர்க்கொத்து கொண்டிருந்தது. பிடரிமயிர் வளர்ந்து நாணல்பூபோல தழைந்திருந்தது. அவனுக்கு இருபுறமும் இரும்புக் கவசமணிந்த இரு வீரர்கள் நீண்ட வேல்களுடன் யவனப் பெரும்புரவிகளில் வந்தனர். காவல் வீரர்கள் விரிந்து இரு நண்டுக்கொடுக்குள்போல் ஆகி விலக மார்பில் ஆடிவளைவென மின்னிய இரும்புக்கவசமும் கைகளிலும் கால்களிலும் தோற்கவசங்களும் அணிந்து தன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கினான். அவனது எடை மண்ணைத் தொடும் ஓசை அனைவருக்கும் கேட்டது.

வலவன் உடல் பணிந்து காவல்நிரைக்குப் பின்னால் மறைந்தவனாக நின்றான். கீசகனின் சிறிய கண்கள் உணவு வண்டியை பார்த்தன. “இதை அப்பால் கொண்டு சென்று நிறுத்த முடியாதா உங்களால்?” என்றான். காவலர்தலைவன் “இங்கு முற்றம் இவ்வளவுதான், படைத்தலைவரே” என்றான். கீசகன் விழிகள் உலவிச்சென்று வலவனை பார்த்தன. காவலர்தலைவன் அதை உணர்ந்து “அவன் ஷத்ரியன். ஆனால் அடுமனைத் தொழில் செய்கிறான்” என்றான். “ஆம், நான் அவனை அறிவேன்” என்றான் கீசகன். “தனியொருவனாக இந்த வண்டியை இவனே அப்பால் நகர்த்தி வைத்தான்” என்றான் காவலர்தலைவன்.

கீசகன் திகைப்புடன் இடையில் கைவைத்து வலவனை சற்று நேரம் நோக்கி நின்றான். பின்னர் மெல்ல புன்னகைத்து “இந்த வண்டியையா?” என்றான். “ஆம், இளவரசே.” கீசகன் மீண்டும் வலவனை நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்றான்.

flowerமுதிய காவலர்தலைவர் புஷ்பர் கையசைத்து உரத்த குரலில் “மூடா, என்ன அங்கே செய்கிறாய்? என்னடா செய்கிறாய்? அறிவிலியே” என்றார். முக்தன் அவரை நோக்கி ஓடி “வணங்குகிறேன், தலைவரே” என்றான். “செவிட்டில் அறைவேன்… கீழ்பிறப்பே. என்ன செய்கிறாய் நீ? நீ நின்று காற்று நுகர்வதற்கா இங்கே அணிக்காடு அமைந்துள்ளது?” என்று அவர் மூச்சிரைத்தார். “அரசருக்குரிய குடிலில் தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… ஓடிச்சென்று பொருள்நாயகத்திடம் கேட்டு அதை உடனே கொண்டு வைக்கச்செய்.” முக்தன் “நான் உடனே…” என்று தொடங்க “பேசாதே… பேசினால் உன் நாவை அரிவேன்” என்றார் அவர்.

அவன் தலைவணங்கி மூச்சிரைக்க ஓடினான். அவனிடம் உத்தரையின் ஆடைப்பெட்டிகளில் ஒன்று சென்று சேரவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. ஆடைகளுடன் வந்த ஏவலர்கள் முன்னரே அவற்றை இறக்கி மறுதிசைக்கு கொண்டுசென்றுவிட்டிருந்தனர். ஒவ்வொருவருக்கும் காட்டில் ஒவ்வொரு மூலையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசிக்கு தென்மேற்கு. உத்தரைக்கு தென்கிழக்கு. வடமேற்கு உத்தரனுக்கு. வடகிழக்கு அரசருக்கு. மையப்பகுதி முழுக்க கீசகனுக்கு. அடுமனையாளர்கள் காட்டின் நுழைவாயிலில் தெற்கேயும் ஏவலர்கள் மேற்கேயும் கொட்டகை அமைத்திருந்தனர். காட்டுமுகப்பில் இருந்த பெருமுற்றம் வண்டிகளாலும் காவலர்களாலும் நிறைந்து அலைநிறைச்சுனை என வண்ணம் சுழித்தது.

எதிரே ஓடிவந்த இளைஞனை எங்கோ கண்டிருந்தான். “நில்!” என்றான். அவன் நின்றதும்தான் பெயர் நினைவுக்கு வந்தது. “நீ கஜன் அல்லவா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்ற கஜன் அதன் பின்னர்தான் முக்தனை அடையாளம் கண்டுகொண்டு “தாங்களா?” என்றான். கஜன் வண்ணத்தலைப்பாகையும் மேலாடையும் அணிந்திருந்தான். “பொறுத்தருள்க, மூத்தவரே, இருளில் அடையாளம் தெரியவில்லை.” முக்தன் “எங்கிருந்து பெற்றாய் இந்தத் தலைப்பாகையையும் அணியையும்?” என்றான். “இங்கே அத்தனை அரச காவலரும் வண்ணத்தலைப்பாகை அணிந்திருக்கிறார்கள். ஆகவே தலைப்பாகை இல்லாமல் உள்ளே வரமுடியாதென்று தோன்றியது. உத்தரரின் சால்வை ஒன்றை வண்டியில் இருந்து எடுத்து தலைப்பாகையாக ஆக்கிக்கொண்டேன். இன்னொன்றை மேலாடையாக… நன்றாக உள்ளதா?”

“இதன்பொருட்டு நீ கொலைக்களம் போவாய்” என்றான் முக்தன். “அவர் இதை அளித்தாரே?” என்றான் கஜன். “அப்படி சொன்னால் பிறர் மறுக்கமுடியாது. அவர் எதையுமே மறுக்கமுடியாது.” முக்தன் சிரித்து “நான் உடனே அரசரின் ஏவலரை நோக்கி செல்லவேண்டும். நீ இளவரசி உத்தரையின் ஆடைப்பெட்டிகளை வைத்திருக்கும் ஏவலரைக் கண்டு பெட்டிகள் அனைத்தும் சென்று சேரவில்லை என்று சொல். மேலாடைப்பெட்டி ஒன்று குறைகிறது” என்றான். “உடனே செல்… வழியில் ஏதும் வேடிக்கை பார்க்காதே.” கஜன் “வேலை இல்லாமலேயே காட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறேன். வேலை இருந்தால் ஓடமாட்டேனா?” என்றான்.

அவனுக்கு மறுமொழி சொல்லாமல் முக்தன் ஓடி வெளியே சென்றான். அரசரின் பெரிய வெள்ளிப் பல்லக்கு வந்து நின்றிருந்தது. அதன் போகிகள் பதினெண்மர் அப்பால் கரிய தசைத்திரள்கள் ததும்ப ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியபடி நின்றிருந்தார்கள். அரசரை அவன் விழிகள் தேடி ஆலமரத்தடியில் கண்டுகொண்டன. அவர் பலகை ஒன்றில் விரிக்கப்பட்ட மரவுரியில் மல்லாந்து படுத்து துயில்கொண்டிருந்தார். அருகே ஆற்றை நோக்கியபடி ஒரு வேர்ப்புடைப்பில் குங்கன் அமர்ந்திருந்தான். அவன் தாடியில் அந்தியின் செவ்வொளி சுடர்வதை முக்தன் கண்டான். சற்றுநேரம் நோக்குநிலைக்க உளமழிந்து நின்றான்.

ஏதோ அருகே விழும் ஒலி கேட்டு திடுக்கிட்டு திரும்பினான். வண்டியில் இருந்து ஒரு பொதி கீழே விழுந்தது. “அப்பால் சென்று நில்… தலையில் விழுந்தால் உடலை இழுத்துப்போடக்கூட இங்கே எவருக்கும் பொழுதில்லை” என்றான் பொதியை தள்ளியவன். “நான் அரசரின் பொருள்நாயகத்தை தேடிவந்தேன்… அவருக்கான தூபங்களில் ஒன்று குறைகிறது” என்றான் முக்தன். “அங்கே சென்று அந்தப் பொன்னிறத் தலைப்பாகைக்காரரிடம் கேள். அவர்தான் பொருள்களவுநாயகம்… சிறந்தவர்.” முக்தன் திரும்பியபோது இன்னொரு பொதியை தள்ளிவிட்டு நிமிர்ந்த அவன் “பொருள்நாயகத்தைக் காணவந்தவன் எதற்கு சூதுநாயகத்தைப் பார்த்து நின்றாய்? கூர்ந்து நோக்காதே. அவன் கலிவடிவன்…” என்றான். முக்தன் “இல்லை…” என்று தயங்க “அவனை சாவின் தெய்வங்கள் சூழ்ந்துள்ளன. அரசரை எட்டு கைகளால் கவ்வி அணைத்துவிட்டான் என்கிறார்கள்” என்றான்.

“மாகரே, சொல் காக்க. தலைகாப்பதன் முதல் படி அது” என்றான் பின்னால் நின்றவன். “நான் இனி இந்தத் தலையைக் காத்து என்ன செய்ய? நா அதன்பாட்டில் நெளியட்டும்” என்றான் மாகன். முக்தன் பொருள்நாயகத்திடம் சென்று “அரசரின் குடிலில் ஒரு தூபம் குறைகிறது” என்றான். “அங்கே எதற்கு தூபம்? இவர் புகைக்கும் அகிபீனாவில் கொசுக்கள் மயங்கி உதிருமே” என்றார் பொருள்நாயகம். அருகிருந்தவர்கள் உரக்கச் சிரிக்க இடம்கொடுத்தபின் “இதோடு ஏழுபேர் வந்து சொல்லிவிட்டார்கள். அனுப்பிவிட்டேன். செல். சென்று அந்தக் கிழவனிடம் மேலும் ஆட்களை அனுப்பவேண்டாம் என்று சொல்” என்றார். கொசுவை அடித்தபடி “அவன் பெயர் என்ன?” என்றார். முக்தன் “புஷ்பர்” என்றான். “அவருக்கு க்ஷணர் என்று பெயர் இட்டிருக்கலாம்… முந்தைய கணத்தை மறந்து அக்கணத்தில் வாழ்கிறார் மனிதர்” என்றார் பொருள்நாயகம். சூழ சிரிப்பொலி. அவர்கள் அதன்பொருட்டே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் போலும்.

முக்தன் செல்வதற்காக திரும்பினான். பொருள்நாயகம் “கிழவர்களை வீட்டுக்கு அனுப்புவதேயில்லை இந்த அரசில். அவர்கள் வேலோடு சாக இங்கே போரும் நிகழ்வதில்லை. ஆகவே அரண்மனையிலும் அலுவல்நிலையிலும் எச்சில் ஒழுகும் பொக்கைவாய்களே நிறைந்துள்ளன” என்றார். மீண்டும் சிரிப்பு. ஒருவன் மூச்சிரைக்க ஓடிவந்து “பொருள்நாயகரே, அரசருக்குரிய தூபக்கலங்களில் ஒன்று குறைகிறது… உடனே” என்றான். பொருள்நாயகம் முக்தனிடம் “நீ செல்லும் வழியில் எதிரே வரும் அத்தனை பேரிடமும் தூபக்கலம் சென்றுவிட்டது என்று சொல்லிக்கொண்டே ஓடு… போ” என்றார். அவரைச்சூழ்ந்திருந்தவர்கள் பேரொலி எழுப்பி நகைத்தனர்.

காட்டுக்குள் செல்கையில் முக்தன் குங்கனைப்பற்றி எண்ணிக்கொண்டான். அவனை தீமையின் உருவென்றும் சூழ்ச்சியில் திளைப்பவன் என்றும்தான் அனைவரும் சொன்னார்கள். ஆனால் அந்தக் கோணத்தில் உருகும் பொன்னால் ஆன சிலை என்றிருந்தான். அது உருவின் அழகு மட்டும் அல்ல. இளவெயில் பட்டால் அனைவரும் அப்படி பேரழகு கொள்வதில்லை. அவர் ஒரு முனிவர், ஏதோ நோக்கத்துடன் இங்கு வந்து கலியுரு கொண்டுள்ளார் என அவன் சொல்லிக்கொண்டான். ஆம், அல்லது அவர் ஒரு கந்தர்வர். அவனுக்கு ஏனோ கிரந்திகன் நினைவு வந்தது. அவனும் சூதனைப்போல் மாற்றுரு கொண்டு வந்தவனாகவே தோன்றினான். ஆழ்ந்தும் உயர்ந்தும் சென்றவர்கள் உடலை பொருந்தா உருவென்று சூடியிருக்கிறார்களா என்ன?

அவன் ஒரு பெண் துள்ளித்துள்ளி ஓடுவதைக் கண்டான். “ஏய் நில்… யார் நீ?” என்றான். அவள் நின்று மிடுக்குடன் திரும்பி “நீ யார்?” என்றாள். “உனக்கு சொல்முறைமை தெரியாதா?” என்றான். “நீ முதலில் என்னிடம் பேசும் முறையை பேணிக்கொள்.” அவன் அவள் அரசகுடிப்பெண்ணோ என்று தயங்கினான். ஆனால் அல்ல என்றே உறுதியாகத் தோன்றியது. முதல் தோற்றங்கள் பெரும்பாலும் பிழையாவதில்லை. சேடியருக்கு மட்டுமே அமையும் தோள்கள் இவை. கன்னங்களில் உயர்குடியினருக்குரிய பளபளப்பு இல்லை. கண்களில் இயல்பான அச்சமின்மை இல்லை. “நீங்கள் யார்?” என்றான். “நான் அரசியின் அணுக்கப்பெண். என் பெயர் சுபாஷிணி. உனக்கு என்ன வேண்டும்?”

அவன் புன்னகையுடன் அப்படியா என உள்ளூர எண்ணிக்கொண்டான். “வணங்குகிறேன், சுபாஷிணியாரே. தாங்கள் இங்கே இப்படி மான்போல தாவுவது ஏன்?” என்றான். அவள் நாணத்துடன் புன்னகைத்து “வெறுமனே…” என்றாள். “வெறுமனே என்றால்…?” என அவன் அவள் விழிகளுக்குள் நோக்கினான். “இப்படியே…” என்றபின் அவள் நோக்கை விலக்கிக்கொண்டாள். “இப்படி தாவுவார்கள் என கவிதைகளில் கேட்டீர்கள் இல்லையா?” அவள் “இல்லை” என முகம் சிவந்தாள்.

அவள் நாணியது அவனை ஆண் என ஆக்க “நீங்கள் அந்தச் சிற்றாடையை விரித்துத் தாவுகையில் தோகைமயில் எனத் தோன்றுகிறீர்கள்” என்றான். அவள் அவனை நீரில் மீனெழுவதுபோன்ற விழியசைவால் நோக்கிவிட்டு “இப்படி நீங்கள் என்னிடம் சொன்னீர்கள் என்பதை அரசியிடம் சொல்லட்டுமா?” என்றாள். “அய்யோ…” என்று அவன் மெய்யாகவே பதற அவள் சிரித்தாள். அவன் ஆறுதல் கொண்டு “அஞ்சிவிட்டேன்” என்றான். அவள் “சூதர்களிடம் எதையாவது கேட்டு அதை அப்படியே பெண்களிடம் சொல்லிவிடுவது, என்ன?” என்றாள். “நான் இதுவரை பெண்களிடம் பேசியதே இல்லை” என்றான். “பெண்களிடமா?” என்றாள். “அதாவது, உங்களைப்போன்ற பெண்களிடம்” என்றான். அவள் விழிசரித்து “பேசும்போது இதைச் சொல்லலாம் என தெரிந்து எடுத்து வைத்திருந்தீர்களா?” என்றாள்.

அவன் சிரித்தபின் “முதலில் பார்த்தபோது இப்படி பேசக்கூடியவர் நீங்கள் என தோன்றவில்லை” என்றான். “ஓ, பார்த்ததுமே பெண்களை மதிப்பிட்டுவிடுவீர்கள் அல்லவா?” என்றாள். “இல்லை, அம்மணி. விடுங்கள். எனக்கு பேசத் தெரியவில்லை. போதுமா?” அவள் சிரித்தபின் “நான் செல்லவேண்டும். அரசியின் தேவியுடன் வந்தேன்” என்றாள். “சைரந்திரி என்றார்களே, அவர்களுடனா?” என்றான். “ஆம், நான் வருகிறேன்” என்றாள். “இப்படி காட்டில் சுற்றி அலையக்கூடாது. அதைச் சொல்லவே அழைத்தேன்” என்றான். அவள் அருகிருந்த கொடியின் நுனியைப் பற்றியபடி “ஏன்?” என்றாள்.

“இன்று தங்களைப்போன்ற பெண்கள் இங்கே உலவக்கூடாது, அறிவீர்களா?” என்றான். அவள் “ஏன்?” என்றாள். புருவங்கள் சுளிக்க அவள் முகம் குழந்தையுடையதாகியது. “இன்றிரவு இங்கே விண்ணிலிருந்து கந்தர்வர்களும் கின்னரர்களும் வித்யாதரர்களும் இறங்கி வருவார்கள். அரசகுடியினர் அவர்களுடன்தான் கானாடுவார்கள்.” அவள் அவனை பொருள்விளங்கா விழிகளுடன் நோக்கி “மெய்யாகவா?” என்றாள். பேச்சில் துடுக்கு இருந்தாலும் அவள் சற்று அறிவுகுறைவானவள் என அவன் எண்ணிக்கொண்டான். ஆனால் அவ்வெண்ணம் அவளை மேலும் இனியவளாகவே உணரச்செய்தது.

“நீங்கள் கேட்டதே இல்லையா?” என்றான். “சொன்னார்கள்…” என அவள் இழுத்தாள். “மேலே நிலவு எழுந்ததும் அவர்கள் முகில்களிலிருந்து சிலந்திவலைபோன்ற மெல்லிய ஒளிச்சரடு வழியாக வழுக்கி இறங்கி வருவார்கள். கந்தர்வர்கள் பொன்வண்டுகளாகவும் கின்னரர் தும்பிகளாகவும் வித்யாதரர் வண்ணத்துப்பூச்சிகளாகவும் மாறி இக்காட்டுக்குள் பறப்பார்கள். அழகிய பெண்களைக் கண்டால் கந்தர்வர்கள் மானுட உருவம் கொள்வார்கள்.”

அவள் “அய்யோ” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை. அவர்கள் அப்பெண்ணுக்கு மிகமிகப் பிடித்த ஒருவரின் தோற்றம் கொள்வார்கள்.” அவள் “அவர்களுக்குத் தெரியுமோ?” என்றாள். “ஆம், உண்மையில் நமக்குத் தெரியாததேகூட அவர்களுக்கு தெரியும். நாம் கனவில் விரும்புவதை அவர்கள் நனவில் காட்டுவார்கள்.” அவள் தலைசரித்து “மெய்யா?” என்றாள். “ஆம், கந்தர்வர்களால் அடையப்பட்ட பெண் கனவில் இருப்பதுபோல இங்கிருப்பாள். அதன்பின் அவள் உள்ளம் பிறழ்ந்துவிடும். கந்தர்வனை மட்டுமே எண்ணிக்கொண்டிருப்பாள். பிற ஆண்களை பொருட்படுத்த மாட்டாள்.”

“கந்தர்வன்?” என்றாள். “அவர்கள் வேறு பெண்களைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.” அவள் இமைசரித்து மெல்ல தளர்ந்தாள். சிறிய முலைகள் எழுந்தமைந்தன. பின்னர் இமைவிரிய முகத்தை சற்று தூக்கி “அப்படியென்றால் அரசகுடிப் பெண்கள்?” என்றாள். “அவர்களுக்கு அரசர் என்ற காப்பு உள்ளது… அவர்கள் கந்தர்வனுடன் களியாடிவிட்டு அப்படியே மறந்து இங்கிருந்து சென்றுவிடுவார்கள். இது ஒரு கனவாக அவர்களிடம் எஞ்சும். எப்போதாவது துயிலில் எழுந்துவரும். மற்றவர்கள் கனவிலிருந்து மீளமுடியாது.”

அவள் பெருமூச்சுவிட்டாள். அவள் கன்னத்தில் சிறிய ஒரு பரு சிவந்து திரண்டிருந்தது. அவள் முகம் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் அப்புள்ளியில் மையம் கொண்டன. வாய்நீர் விழுங்கியபோது மெலிந்த நீள்கழுத்து மெல்ல அசைந்தது. தலைதிருப்பி காட்டை பார்த்தாள். “ஆகவே தனியாக செல்லவேண்டாம்…” என்றான். அவள் அடைத்த குரலை தீட்டியபின் “ஆண்களுக்கு?” என்றாள். “என்ன?” என்றான். “ஆண்களுக்கு கந்தர்வ கன்னிகள் வருவார்களா?” அவன் “ஆம்” என்றான். “அப்படியென்றால் நீங்கள்?” என்றாள். “என்ன?” என்றான்.

அவள் சிரித்து “அப்படியென்றால் உங்களுக்கு அச்சமில்லையா?” என்றாள். “என்ன அச்சம்? கந்தர்வ கன்னி வந்தால் நல்லதுதானே?” என்றான். “ஏன்?” என்றாள். “வெளியே என்ன வாழ்க்கை இருக்கிறது காவலனுக்கு? பொருளற்ற நாளிரவுகள்தானே? அதில் சென்று தேய்ந்து அழிவதற்கு இங்கே கனவில் சுடர்ந்து மறைவது மேல்தானே?” அவள் கன்னங்களில் நீள்வாட்டில் குழி விழுந்தது. “ஆம்” என்றபின் “எனக்கும் அப்படித்தான்” என்றாள். “என்ன?” என்றான். “கந்தர்வர்கள் வரட்டுமே” என்றபின் “அரசியின் குரல் கேட்கிறது!” என்று கூறி விரைந்து புதர்களுக்குள் சென்று மறைந்தாள்.

அவள் சென்றபோது அசைந்த புதரிலைகளை நோக்கியபடி அவன் புன்னகையுடன் சற்றுநேரம் நின்றான். செறிந்த மரங்களுக்குள் இருள் நிறைந்திருந்தது. தொலைவில் எங்கோ இறுதிச் செங்கதிர் ஒரு மரம் விழுந்த இடைவெளி வழியாக சரிந்து விழுந்திருக்க அங்கிருந்த அத்தனை இலைப்பரப்புகளும் செந்நிறம் வழிய அசைந்தன. அவன் நோக்கி நிற்கவே அது திரிதாழ்த்தப்பட்ட அகலின் ஒளி அவிவதுபோல மறைந்தது. அது மறைந்த அக்கணம் இலைகளுக்குள் இருந்த பல பறவைகள் ஒரே ஒலியாக கலைந்தொலித்தன. குரங்கு ஒன்று கிளைவழியாகத் தாவி மேலே செல்ல மான்கூட்டம் ஒன்று செவியடித்து கனைப்பொலி எழுப்பியது. அவையனைத்தும் அந்தப் பொன்னொளியில் மயங்கி நின்றிருந்தன என்று தோன்றியது.

அவன் அந்நாளின் கதிரமைவை காண விரும்பினான். அருகே நின்றிருந்த நெடிய மரத்தில் அடிமரம் பற்றி தொற்றி மேலேறிச் சென்றான். முதல் இலைத்தழைப்புத் தொகையைக் கடந்ததும் தன்னைச் சூழ்ந்து விழியறிந்ததோ உளமுணர்ந்ததோ என மயங்கச் செய்யும் ஒரு மென்மிளிர்வு பரவியிருப்பதை கண்டான். இலைகள் ஒன்றுடனொன்று இணைந்து ஒற்றைப்பரப்பெனத் தெரிய சிலந்தியிழைகள் மட்டும் செந்நிறக் கம்பிபோல ஒளிவிட்டன. அடுத்த இலைப்பரப்பை அடைந்ததும் தொலைவுத் தீயின் எதிரொளிப்பு என இலைநுனிகள் கூர்கொண்டிருப்பதை, மரவளைவுகள் சிவந்திருப்பதை கண்டான். மேலும் கடந்து நுனிக்கிளையை அடைந்தபோது கண்கள் கூச வானம் வந்து நிறைந்தது.

கிளைக்கவர்மேல் காலிட்டு அமர்ந்தபடி கண்ணீர் வழிந்த கண்களை கைகளால் மூடிக்கொண்டான். மெல்ல திறந்தபோது மேற்குப்புறம் சிவந்து எரிய கிழக்கில் கருகியணைந்த முகில்குவைகள் பரந்த வானம் தலைக்குமேல் வளைந்து நின்றிருக்கக் கண்டான். அதில் நீந்திச் சென்றுகொண்டிருந்தன நாரைகள். வானத்தின் அலகின்மை அவை ஒரே புள்ளியில் சிறகசைப்பதாக எண்ணச்செய்தது. அப்போதும் தாவித்தாவி பூச்சிகளை வேட்டையாடின எய்பறவைகள். காட்டுக்கு அப்பால் தொலைவில் எழும் இடியோசை என முரசுகள் முழங்கின. அறியா பறவைகள்போல கொம்புகள் அழைத்தன.

தொலைவில் மேலைவளைவில் சூரியவட்டத்தின் மேல்விளிம்பு தெரிந்தது. அனலும் கரிக்குவை நடுவே தழல் என. திரும்பி நிலவை பார்த்தான். ஒளியற்ற முழுவட்டம் வானில் மிகவும் மேலேறியிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் இருண்டிருந்தமையால்தான் வானில் அதை காணவே முடிந்தது. அதைச் சூழ்ந்திருந்த முகில்கள் அதை அறியவே இல்லை என எண்ணிக்கொண்டான். நிலவுக்குள் தெரிந்த கருநிழல் அதன் விடவுகள் வழியாகத் தெரியும் அப்பால் இருக்கும் வானெமெனத் தோன்றியது. நிலவை மறித்தபடி வெளவால்கூட்டம் ஒன்று சுழன்று பறந்துகொண்டிருந்தது.

ஒவ்வொன்றும் மெல்ல அடங்கி அமைதிநோக்கிச் செல்வதாகத் தோன்றியது. ஆனால் கூர்ந்தபோது ஓசைகள் பெருகிக்கொண்டே இருப்பதாகவும் பட்டது. அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டான். ஏன் இந்த மரத்தின்மேல் ஏறினேன்? இந்தக் காடு நான் நோக்கிச் சலித்த ஒன்று. ஒருமுறைகூட காவல்மாடத்தின்மேல் நின்று நிலவை முழுமையாக நோக்கியதில்லை. அந்தியெழுகையில் படைஎடுக்கும் கொசுத்திரளைப் பற்றிய எச்சரிக்கையே எப்போதும் எண்ணத்திலிருக்கும். காவல்மாடத்தில் அந்திக்கு முன்னரே வேப்பிலையிட்ட தூபச்சட்டி புகையத் தொடங்கிவிடவேண்டும். கொசுக்கள் வந்துவிட்டால் புகை காற்றில் விலகும்போதே வந்து படர்ந்துவிடும். இன்று எனக்கு ஏதோ ஆகிவிட்டது. அவன் புன்னகைத்தான். அங்கே எவரேனும் அதை பார்க்கிறார்களா என்பதுபோல சுற்றிலும் பார்த்துக்கொண்டான்.

கதிர்வட்டம் மெல்ல அமிழ்ந்தது. அங்கே நீர் அலையடிப்பதுபோலவும் அது அசைந்தசைந்து மூழ்குவதுபோலவும் தோன்றியது. எக்கணம் அது மறையும் என எண்ணியிருந்தபோது அது மறைந்தது. வில்லில் இருந்து அம்பு என ஒரு பறவை விண்ணில் செங்குத்தாக எழுந்து சுழன்று ரீக் என ஓசையிட்டது. தொடர்ந்து பல்வேறு பறவைகளின் ஒலி எழுந்தது. ஓசைகள் பெருகிச்செல்வதைப்போல தோன்றிக்கொண்டிருந்தபோதே அவை அணையலாயின. முகில்களின் சிவப்பு அழுத்திப் பிழியப்பட்டதுபோல வழிந்து மறைய அவை கருமைகொண்டன. விழிநோக்கு மறைவதைப்போல் தோன்றியது. குனிந்து இருண்ட காட்டை நோக்கிவிட்டு மேலே பார்த்தபோது வானில் ஒளி தெரிந்தது.

இறங்கிவிடலாம் என எண்ணி அவன் எழுந்தான். தன் நிழல் முன்னால் இலைத்தழைப்பின் திரையில் நீண்டுசரிந்திருப்பதைக் கண்டு வியந்து திரும்பி நோக்கினான். நிலவு வெண்ணிற ஒளி கொண்டிருந்தது. அதன் விளிம்புவட்டம் மெல்ல அதிர்வதாகவும் அது முகில்களை கூர்வளைவால் கிழித்தபடி எழுவதாகவும் தோன்றியது. இலைகள் அனைத்தும் தளிர்களாகிவிட்டன என விழிமயக்கம் கொண்டான். மரக்கிளைகளின் பட்டைப்பொருக்குகள் முழுத்து எழுந்திருந்தன. கிளைபற்றி இறங்குகையில் காட்டுக்குள் நிலவொளியின் வெண்குழல்கள் இறங்கியிருப்பதைக் கண்டான்.

தொலைவில் நிலவிரவின் தொடக்கத்தை அறிவித்து கொம்புகளும் முழவுகளும் முழக்கமிட்டு ஓய்ந்தன. அவன் உள்ளம் திடுக்கிட்டது. அவ்வறிவிப்புக்குப்பின் அரசகுலத்தாரும் சேடியரும் அரசக் கணையாழி அளிக்கப்பட்ட அணுக்கரும் அன்றி காட்டுக்குள் இருக்கும் எவருக்கும் இறப்புத்தண்டனை ஆணையிடப்பட்டுள்ளது. மேலே இருந்தபோது கேட்ட முரசொலிகளும் கொம்போசைகளும் அதைத்தான் ஆணையிட்டனபோலும். கீழே இறங்கிச் செல்வதென்பது சாவை எதிர்கொள்வது. அவன் கிளையிலேயே அமர்ந்தான். இவ்விரவை இக்கிளையில் கழிக்கவேண்டியதுதான்.

நிலவு ஒளிகொண்டு வருகிறது, மேலே சென்று தழைப்புக்குள் பதுங்கிக்கொண்டால் மட்டுமே விழிகளிலிருந்து ஒழிய முடியும். நிலவிரவில் பந்தங்களோ விளக்குகளோ ஏற்றமாட்டார்கள். ஆனால் குரங்குகளும் பறவைகளும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது. அவன் மேலேறி மரக்கிளையின் நுனிக்குச் சென்று நன்றாக ஒளிந்துகொண்டான். கொற்றவையின் ஆலயத்தில் ஆயிரம்விளக்கு வழிபாட்டின்போது ஏற்றப்படும் அகல்கள் என அவனைச் சூழ்ந்து இலைகள் ஒவ்வொன்றாக சுடர்கொண்டபடியே வந்தன.