நீர்க்கோலம் - 43

42. சூரணங்கு

flowerமுக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா?” என்று திகைப்புடன் கேட்டபடி புரவியிலிருந்து இறங்கினான் முக்தன். “உங்களைத்தான்” என்றான். “ஆனால் உங்கள் இல்லம் எனக்கு தெரியவில்லை. அதை எளியவனாகிய நான் தேடிக் கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. எப்படியும் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்” என்றான்.

“ஏன் ஒற்றர்களை வைத்து கண்டுபிடிப்பதற்கென்ன?” என்றான் முக்தன். “ஒற்றர்களையா? ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள்? நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா?” என்றான் முக்தன். “தேடமாட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னால் நான் வந்து அவர் முன் நின்றால்கூட என் முகம் அவர் நினைவில் நிற்காது. உடனடியாக நிறைவேற்றியாகவேண்டிய பிறிதேதேனும் ஆணை ஒன்றை எனக்களிப்பார். உங்களுக்குத் தெரியாது, எங்களது இளவரசரைப்போல விந்தையான ஒருவரைக் காண்பது மிக அரிது.”

அவன் அருகே வந்து புரவியின் கடிவாளத்தை பிடித்துக்கொண்டு “ஆனால் கருணை கொண்டவர் இளவரசர். எளியோர் எவராயினும் அவர் அருகே சென்று நின்று கண்ணீர் உகுக்க முடிந்தால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியும்” என்றான் கஜன். புரவியை கொண்டுசென்று தளையில் கட்டியபின் “வருக!” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது?” என்றான். “நீங்கள் எங்கள் அரண்மனைச் சேடியர் எவருக்கேனும் காதல்பரிசுகள் அளித்திருக்கலாம்” என்றான் கஜன்.

“நானா?” என்றான் முக்தன் திகைப்புடன். “அல்லது நீங்கள் அவர்கள் எவரையாவது மிரட்டியிருக்கலாம்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்?” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ?” என்றான் கஜன். “உளறாதே” என்றான் முக்தன். “அதற்கு வாய்ப்புள்ளது, மூத்தவரே. நீங்கள் சற்று முன் புரவியில் வந்து இறங்குவதைப் பார்த்தபோது நானேகூட ஓர் இளவரசரென்று எண்ணிவிட்டேன்” என்றான். “பேசாமல் வா” என்றபடி முக்தன் நடந்தான்.

மைய அரண்மனையின் வலப்பக்கம் கையணைப்பாக இருந்த உத்தரனின் அரண்மனையை இடைநாழிகளினூடாக அணுகியபோது கஜன் அருகே வந்து “சற்றுமுன் பேசும்போது இந்த எண்ணம் எனக்கு வந்தது, மூத்தவரே. உண்மையிலேயே நீங்கள் இளவரசரைப்போல் இருக்கிறீர்கள். இத்தோற்றத்தில் நீங்கள் இளவரசர் முன் சென்றால் அவர் அதை விரும்பப்போவதில்லை” என்றான். முக்தன் “அதற்கு நான் என்ன செய்வது?” என்றான். “உங்கள் உடலை மாற்றிக்கொள்ளுங்கள். கைகளை மார்பில் கட்டி தோள்களைக் குறுக்கி குனிந்து நின்று பேசுங்கள். நேருக்கு நேர் நின்று இளவரசரின் விழிகளை சந்திக்கவே வேண்டாம்” என்றான்.

முக்தன் உதடுகளை கோணினான். கஜன் “இதை நான் நோக்கியிருக்கிறேன். எவரேனும் அவரது விழிக்கு விழி நோக்கி பேசினால் அவருக்குள் ஏதோ உளஅசைவு உருவாகிறது. சீறத் தொடங்கிவிடுகிறார்” என்றான். முக்தன் “அது நாய்களின் குணம்” என்றான். கஜன் நகைத்து “ஆமாம். நானும் அவ்வாறே எண்ணினேன். நாய்கள் தங்களை எவரேனும் தாக்கிவிடக்கூடும் என்று அஞ்சிக்கொண்டிருக்கின்றன. விழிகளுக்குள் பார்த்தால் அவை தங்கள் அச்சத்தால் நம்மை கடிக்க வருகின்றன” என்றான். “நான் பார்த்துக்கொள்கிறேன், வா” என்றபடி முக்தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.

கஜன் இடைநாழிக்குள் நுழைந்து அங்கிருந்த முதிய காவலனிடம் “இளவரசரின் ஆணைப்படி புரவிக்காரரை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான். பழுத்த சிறிய கண்களில் துயில் எஞ்சியிருக்க வழிந்திருந்த வாயை கையால் துடைத்தபடி “புரவிக்காரரையா? எதற்கு? இப்போது யாரையும் பார்க்க முடியாது” என்றார் முதிய காவலன். “இளவரசரே சொல்லித்தான் நான் வந்தேன்” என்றான் முக்தன். “எவர் சொன்னாலும் பார்க்க முடியாது” என்றபின் கஜனிடம் “என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றாயா? என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய்? இந்த அரண்மனை என்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது” என்றார் கிழவர். “இளவரசர்…” என்று முக்தன் தொடங்க “இளவரசரே வந்து சொன்னாலும் நான் ஒப்பப்போவதில்லை” என்றார்.

“நன்று” என்றபின் கஜன் திரும்பிப்பார்த்து “வருக!” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜன் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய்! என்ன இது? நில்லுங்கள்! எங்கே செல்கிறீர்கள்? என்னைக் கடந்து எவரும் செல்ல நான் ஒப்பப்போவதில்லை. நான் என்ன செய்வேன் தெரியுமா? நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா?” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன?” என்று கஜன் கேட்டான். “ஆம்” என்றபின் திரும்பிப் பார்த்த முக்தன் “மிகவும் முதியவர்” என்றான். “அரசரையே சிறுவனாக பார்த்தவர்” என்றான் கஜன்.

“எழாமலேயே கூச்சலிடுகிறார்” என்றான் முக்தன். “ஏனென்றால் எழுந்து பின்னால் வர அவரால் முடியாது.” முக்தன் “ஆனால் அவர் எங்காவது  நம்மைப்பற்றி சொல்லி முறையிடமுடியும்” என்றான். “எங்கு முறையிடுவார்? இளவரசரிடம்தானே? உடனடியாக என் தலையை வெட்டி தாலத்தில் கொண்டு வரும்படி ஆணையிடுவார். அந்த ஆணையை அருகிலிருக்கும் சேடி கேட்டு சிணுங்கவேண்டுமென்று விரும்புவார். அவள் நகைத்தால் இவரும் சேர்ந்து நகைப்பார். ஆணையைப் பெற்ற வீரன் அவ்வாறே என்று சொல்லி வணங்கி வெளியே வந்து வாளால் முதுகை சொறிந்துகொண்டு திரும்பிப்போய் தன் பழைய பணியில் ஈடுபடத் தொடங்கிவிடுவான். அரை நாழிகைக்குப் பிறகு என்னை அழைத்து நறுமணப் பாக்கும் இன்கடுநீரும் கொண்டுவரும்படி ஆணையிடுவார். இங்கு நடப்பதையெல்லாம் நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் முழுமையாக நம்பவே போவதில்லை” என்றான்.

பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டன. “என்ன செய்கிறார்கள்?” என்று முக்தன் கேட்டான். “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா? அது என்ன விளையாட்டு?” என்று கேட்டான். கஜன் “இது உயிருள்ள தாயம்” என்றான். “உயிருள்ள தாயமென்றால்…” என்று முக்தன் கேட்க “இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கொண்டது. பெண்கள் அதை உருட்டி விளையாடுவது அதற்கு மிகவும் பிடிக்கும். கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே இருக்கும்” என்றான். “உன் வாயில் மீறல் நிறைய வருகிறது” என்றான் முக்தன். “இந்த மாளிகையிலேயே குறைவாக மீறுபவன் நான்” என்றான் கஜன்.

முக்தன் புன்னகைத்து அவனைப் பார்த்து “நீ விரைவில் வேறெங்கோ செல்வாய் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் “உண்மையாகவா, மூத்தவரே? என்னை படைப்பிரிவுகளுக்கு அனுப்பிவிடுவார்களா? இங்கே இந்த இளிவரலாடலில் உளம் சலித்துள்ளேன்” என்றான். “யார் கண்டது? ஒருவேளை கழுமேடைக்குக்கூட அனுப்பலாம்” என்றபின் “என் வரவை உள்ளே சென்று சொல்” என்றான் முக்தன். முறைத்து நோக்கியபின் “சொல்கிறேன்” என்று சொல்லி கஜன் கதவைத் தட்டாமல் நேராக உள்ளே சென்றான்.

உத்தரன் அவனைப் பார்த்ததும் உரத்த குரலில் கூச்சலிடுவது திறந்த கதவினூடாக கேட்டது. “யார் நீ? எதற்காக உள்ளே வந்தாய்? நான் அரசுசூழ்தலில் ஈடுபட்டிருக்கும்போது வாயிலில் நின்று உத்தரவு பெறாது உள்ளே வரக்கூடாதென்று அறியாதவனா நீ?” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே? உடனே இந்தச் சிறுவனைப் பிடித்து கைகால் கட்டி சிறையிலிடுங்கள். மாலை என் அவைக்கு இவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரன் கூவினான். “அரசே, நான்…” என்று கஜன் சொல்ல “பேசாதே” என்று உத்தரன் கூச்சலிட்டான். “இல்லையேல் என் வாளால் உன் தலையை வெட்டுவேன்.”

முக்தன் உள்ளே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்படும், இளவரசே” என்று சொன்னான். “உடனடியாக…” என்று உத்தரன் கைநீட்டி ஆணையிட்டான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் முக்தனைப் பார்த்து புன்னகைத்தனர். அவர்களின் நோக்கை தன் உடலில் இலைகள் வருடுவதுபோல உணர்ந்தபடி “தங்கள் ஆணைப்படி இந்த வீணனின் தலையை வெட்டுகிறேன், இளவரசே” என்றபின் கஜனிடம் “வா” என்றான் முக்தன். பதற்றத்துடன் “என்ன இது?” என்றான் கஜன். “நீ சொன்னதை நன்றாகவே நான் புரிந்துகொண்டுவிட்டேன்” என்றபடி அவனை இழுத்து வெளியே கொண்டுவந்த முக்தன் சிரித்தபடி “நீயே அஞ்சிவிட்டாயே” என்றான்.

“மூத்தவரே, நீங்கள் அனைத்தையும் அரைநாழிகையில் புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றான் கஜன். “நேராகக் கிளம்பி காவல்பிரிவுகளுக்குச் சென்றுவிடு” என்றான். கஜன் ஆவலுடன் “காவல்பிரிவுகளுக்கா?” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி? கோட்டை முகப்பிலா?” என்றான் கஜன். சலிப்புடன் “கோட்டை முகப்பில் போர்க்கலை தெரிந்த வீரர்களைத்தான் வைப்பார்கள்” என்றான் முக்தன். கஜன் “அவ்வாறென்றால் கருவூலத்திலா…?” என்றான்.

எரிச்சலுடன் தலையை அசைத்தபின் “அல்ல, பேரரசரின் முதன்மை மெய்க்காவலராக உன்னை நிறுத்தப்போகிறார்கள்” என்றான். பாய்ந்து அவன் கைகளைப் பற்றியபடி கஜன் “மூத்தவரே, இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். எந்தை நான் பணிக்குச் சேரும்போது படிப்படியாக உயர்ந்து நீ பேரரசரின் வேளக்காரப்படை வரை செல்ல வேண்டும் என்றுதான் சொன்னார். இத்தனை விரைவாக அது நிகழுமென்று நான் எண்ணவே இல்லை” என்றான். “இளவரசரைவிட அறிவுடன் இருக்கிறாய். உண்மையில் நீ இங்குதான் இருக்கவேண்டும். உகந்த பணியாள் பிறிதொருவர் அவருக்கு அமையப்போவதில்லை” என்று முக்தன் சொன்னான்.

“என்ன சொல்கிறீர்கள்? நான்… நீங்கள்… இப்போது…” என்று அவன் ஆவலும் பதற்றமுமாக சொல்தடுக்கி பேசத்தொடங்க அவன் கையை விட்டுவிட்டு “இரு, நான் வருகிறேன்” என்றபின் மீண்டும் உள்ளே சென்ற முக்தன் உத்தரன் முன் தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது” என்றான். ஐயத்துடன் அவனை நோக்கியபின் சேடியரை நோக்கி மெல்லிய மீசையை நீவியபடி “நன்று” என்றான் உத்தரன். “தங்கள் பணிக்காக வந்துள்ளேன்” என்றான் முக்தன். உத்தரன்  “ஆனால் நீயும் ஆணை பெறாதுதான் உள்ளே வந்தாய்” என்றான். “ஆம், ஆனால் நான் தங்களுடைய ஒற்றன். ஆணை பெறாது உள்ளே வரலாமென்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்” என்றான் முக்தன். “யார்? நானா?” என்றான் உத்தரன். “ஆம், நான் உங்கள் தனி ஒற்றனல்லவா?” என்றான் முக்தன்.

“ஆம், தனி ஒற்றன்” என்றபின் “உன் பெயர் என்ன?” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்!” என்றான். “இளவரசே, இச்சேடியர் நடுவே அதை சொல்ல முடியாது. அவர்களை சற்று விலகி அமரும்படி ஆணையிடுங்கள்” என்றான் முக்தன்.

உத்தரன் கைநீட்டி “ஆம், அனைவரும் இணைவறைக்குச் சென்று காத்திருங்கள். இந்த அரசுசூழ்தலை முடித்து ஆணைகளை பிறப்பித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்றான். அவர்கள் எழுந்து ஆடைகளைத் திருத்தி அணிகள் ஓசையிட மெல்லிய குரலில் பேசிக்கொண்டு தோள்கோத்தும் கைகளை பற்றிக்கொண்டும் விலகிச்சென்றனர். “இவர்களில் சிலர் மச்ச இளவரசரின் ஒற்றர்களாக இருக்கலாம்” என்று முக்தன் சொன்னான். “இவர்களா? இவர்கள் அனைவரும் எனது காதலிகள். என் பொருட்டு உயிரைக் கொடுக்கவும் சித்தமானவர்கள்” என்று உத்தரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் கண்களிலேயே தெரிகிறது. பெருங்காதல். அவர்கள் உங்கள் பொருட்டு முதலைகள் நிறைந்த அகழிகளில் குதிப்பார்கள். அனலெரியும் காட்டிற்குள் புகுவார்கள்.”

உத்தரன் நகைத்து “பெண்களை புரிந்துகொள்வது கடினம் என்கிறார்கள். அது மிக எளிது” என்றான். “பெண்களின் காதல் ஆண்களுக்கு தெய்வம் அளித்த நற்கொடை. ஆனால் அது அத்தனை ஆண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. செல்வமும் குடிப்பிறப்பும் வீரமும் தகுதியும் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது அது” என்று முக்தன் சொன்னான். “உண்மைதான்” என்று சொன்னபின் ஐயங்கொண்டவன் போல முக்தனை பார்த்துக்கொண்டிருந்தான் உத்தரன்.

“என்னை தாங்கள் இப்போது வரச்சொன்னது ஏனென்று அறிந்துகொள்ளலாமா?” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா?” என்றான். “காலையில் உங்கள் சொல்லுடன் ஓர் இளையவன் வந்தான்” என்றான் முக்தன். “ஆம், நான் காலையில் உன்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன்” என்றபின் ஓரக்கண்ணால் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு “ஆனால் அது எதற்கென்று நினைவுகூர முடியவில்லை” என்றான் உத்தரன். பின்னர் எதையோ எண்ணிக்கொண்டு “நான் உன்னை வரச் சொல்லவில்லை, புரவிப் பணியாளன் கிரந்திகனைத்தான் வரச் சொன்னேன்” என்றான். உடையை அள்ளி அணிந்து எழுந்து “நான் உடனே அவனை பார்க்கவேண்டும்” என்றபின் “நீயும் என்னுடன் வா” என்றான்.

flowerஉத்தரன் தன் தேரில் ஏறிக்கொண்டு “நீ என்னுடன் வா” என்றான். முக்தன் தன் புரவியில் ஏறி தேரைத் தொடர்ந்தான். தேர் சென்று புரவிக்கொட்டிலை அடைந்தது. உத்தரன் அதிலிருந்து இறங்கி கண்களுக்குமேல் கைகளை வைத்து “ஏன் இத்தனை வெயில்?” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்?” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பிப்பவனின் அணுக்கன் அல்லவா?” என்றான். “உன் பெயர் முக்தன் என்றார்கள்.”

“ஆம், அந்தப் பெயரில்தான் நான் உளவறிகிறேன்” என்றான் முக்தன். “யாருக்காக உளவறிகிறாய்?” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்சரடுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்?” என்றான்.

“எவ்வாறு என்றால்…?” என்றான் முக்தன். “அவள் பிருகந்நளையை பற்றி என்ன நினைக்கிறாள்?” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா? அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா?” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு? அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்…?” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா? இருவரும் தோழியர் என்றல்லவா தோன்றுகிறது?” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா?” என்றான் உத்தரன். தாழ்ந்த குரலில் “அரண்மனை அகத்தளங்களில் அவ்வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்று முக்தன் சொன்னன். உத்தரன் திடுக்கிட்டு “இல்லையில்லை, நான் அப்பொருளில் சொல்லவில்லை” என்றான்.

“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றான் முக்தன். “அவள் இயல்பே மாறிவிட்டதென்று அகத்தளங்களில் சேடியர் பேசிக்கொள்கிறார்கள். காதல்கொண்டவள்போல கண்மயங்கி அலைகிறாளாம். நானே பார்த்தேன், தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள், பாடிக்கொள்கிறாள், தனித்திருந்து சிரிக்கிறாள். ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியத்தை வரைபவள்போல் தன்னை அணி செய்துகொள்கிறாள். நடையில் துள்ளலும் கையசைவில் சுழற்சியும் வந்துவிட்டது. அவள் அந்த ஆணிலியை காதலிக்கவில்லையென்றால் வேறு யாராவது காதலர்கள் அவளுக்கு இருக்கிறார்களா? அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றான்.

முக்தன் “இளவரசியர் காதல் கொள்வது இயல்புதானே? காட்டில் மழை பெய்தால் ஊருக்குள் ஆறு பெருகிவருவதுபோல உடனே நமக்கு தெரிந்துவிடும். ஆவன செய்யவேண்டியது அரசரின் பொறுப்பு” என்றான். “நான் சொல்ல வருவது அது அல்ல. அவள் இப்பேரரசின் இளவரசி. அவளுக்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் எவரேனும் கன்யாசுல்கம் அளித்து மணத்தூது அனுப்பவேண்டுமென்று நாங்கள் எண்ணியிருக்கிறோம். மகதமும் கலிங்கமும் வங்கமும் மாளவமும் அவந்தியும் என தொன்மையான ஷத்ரிய நாடுகள் எதிலிருந்து மணச்செய்தி வந்தாலும் அதை ஏற்க காத்திருக்கிறோம்” என்றான் உத்தரன்.

“இயல்புதானே…?” என்றான் முக்தன். “நாம் ஷத்ரிய அரசரிடம் மணஉறவை ஏற்படுத்திக்கொண்டால் நமது அண்டை நாடுகள் நமது முன் படைநிற்க இயலாதாகும். விதர்ப்பமும் சதகர்ணிகளும் இப்போது தயங்கி அஞ்சி நிற்கிறார்கள். ஆனால் ஒருநாள் நம்மை வென்றுவிடவேண்டுமென்ற விழைவும் அவர்களிடம் இருக்கிறது. ஷத்ரிய மணஉறவொன்று அமையுமென்றால் அதன் பின் அவர்கள் நம்மை களத்தில் எதிர்க்க முடியாது. இது மிக நுட்பமான அரசியல் சூழ்ச்சி. எளிதில் புரிந்து கொள்ளமுடியாது” என்றான் உத்தரன். “ஆம், எனக்கு ஓரளவே புரிகிறது” என்று முக்தன் சொன்னான்.

“உன்னிடம் அதை விளக்கமாக நான் சொல்லமுடியாது” என்றான் உத்தரன். “ஆகவே இந்தப் பகையரசர் எவரேனும் பெண்டிர் உளம் மயக்கும் கலை பயின்ற மாயாவி ஒருவனை ஆணிலி தோற்றத்தில் இங்கு அனுப்பியிருக்கக்கூடுமோ என்று சேடியரில் ஒருத்தி கேட்டாள்.” முக்தன் “ஆம், இருக்கக்கூடும்” என்றான். “அவன் அவள் உள்ளத்தை கைப்பற்றி வைத்திருக்கிறான். அவளை பிச்சியும் பேதையும் ஆக்கிவிட்டிருக்கிறான். அவன் அதில் முழு வெற்றி அடைவதற்குள் அவனை பிடித்தாகவேண்டும். இச்செய்தியை உடனடியாக தந்தையிடம் தெரிவிக்கவேண்டும். அதற்கு போதிய சான்று தேவை” என்றான் உத்தரன்.

“இதற்கெல்லாம் என்ன சான்று அளிக்க முடியும்? இளவரசியை கொண்டு நிறுத்தி அவர் உளம் மாறியிருப்பதை காட்டவேண்டியதுதான்” என்றான் முக்தன். உத்தரன் “அல்ல. நீ அந்த மாயாவியை கூர்ந்து நோக்கு. அவன் எங்காவது மந்தணப் பூசனைகள் செய்கிறானா, நுண்சடங்குகள் எதையாவது ஆற்றுகிறானா, தனிமையில் இருக்கையில் கந்தர்வர்கள் எவரேனும் அவனை தேடி வருகிறார்களா என்று அறிந்து சொல். இவையனைத்தையும் நீ என்னிடம் வந்து சொன்னபின்னர் நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.

“அவ்வாறு மந்தணச் சடங்குகள்…” என்று முக்தன் தொடங்க “மந்தணச் சடங்குகளினால் மட்டுமே இளவரசியின் மனம் கொய்ய முடியுமென்பதை நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னைப்போன்ற எளியவர்களுக்கு அதை புரியவைப்பது கடினம். உளங்கவர் வித்தைகள் பலநூறு உள்ளன. சான்றாக அன்ன தந்திரம். மாமன்னர் நளன் தமயந்தியை அதைக் கொண்டுதான் கவர்ந்தார். அன்னத்தின் தூவியால் ஆற்றப்படவேண்டியது அது” என்றான்.

உத்தரன் தொடர்ந்தான் “இளம்அன்னத்தின் தூவியை எடுத்து அதை ஒரு துளி பாதரசம் சேர்த்து நன்றாக அரைத்து, தென்கிழக்காகச் செல்லும் தென்னைமரத்தின் வேரின் சாற்றைக் கலந்து, கவர எண்ணும் பெண்ணின் தலைமுடியில் ஒரு சுருளை எரித்து, அக்கரியை அதனுடன் குழைத்து புருவத்தில் தேய்த்தபடி அவளை நோக்கினால் அவள் விழி நம்மை சந்தித்ததுமே அடிமையாகிவிடுவாள். ஆடிப்பாவைபோல் நாம் கைகால் தூக்க அவளும் தூக்குவாள். பூதம்போல நமக்கு ஏவல் புரிவாள்.”

“இப்போது புரிகிறது” என்று முக்தன் சொன்னான். “என்ன?” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆனால் தாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது? இவ்வரண்மனை முழுக்க உங்களுக்கு ஏவல் செய்யும் கந்தர்வர்கள் காணா வடிவில் இருக்கக்கூடும். இப்போதுகூட உங்களைச் சுற்றி பலர் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது” என்றான்.

உத்தரன் தலையை அசைத்து “ஆம், பிறரறியாத பல ஆற்றல்கள் எனக்குண்டு” என்றான். “உண்மையில் தங்களைப் பார்க்கவே நான் அஞ்சுகிறேன்” என்றான் முக்தன். “நன்று, நீ என் ஒற்றன். இளவரசியையும் அந்த ஆணிலியையும் கூர்ந்து நோக்கு. அவள் உளம்மாற்றம் என்ன என்பதை என்னிடம் சொல்” என்றான். முக்தன் “சொல்கிறேன்” என்றான். “வரும் முழுநிலவில் அரண்மனை மகளிருடன் அந்த ஆணிலி கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறான். அங்கு இரவெல்லாம் இசையும் நடனமும் உணவும் மதுவும் என களியாட்டு நிகழும் என்றார்கள்” என்றான் உத்தரன். “நானும் என் தோழியருடன் அங்கே செல்லவிருக்கிறேன். எவருமறியாமல் நீ அங்கிருக்கவேண்டும்.”

“ஆணை” என்றான் முக்தன். “இப்போது ஏன் அந்த கரவுக்காட்டுக்கு நிலவாடலுக்குச் செல்கிறான்? அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஆகவேதான் நானும் உடன்செல்கிறேன். ஆனால் என்னால் அவர்களுடன் சேரமுடியாது. நீ அவர்களை காட்டுக்குள் இருந்து கூர்ந்து நோக்கு. பிருகந்நளையின் மாயம் என்ன என்று கண்டு என்னிடம் சொல்” என்றான் உத்தரன்.

உள்ளிருந்து நாமர் வந்து வணங்கி “வருக, இளவரசே!” என்றார். “கிரந்திகன் எங்கே? அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே?” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது? நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே?” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது?” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா? ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றார் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே?” என்றான் உத்தரன். “பத்மையா? அவளை நேற்றுமுதல் பயிற்சிக்கு கொண்டுசெல்கிறார்கள்…”

காரகன் தொலைவில் தெரிந்தது. பெருகி அணுகி குளம்போசை நிலத்தை அதிரச்செய்ய வந்து நின்றது. முக்தனின் தலையளவு உயரமிருந்தது அதன் முதுகு. அது தன் எடைமிக்க தலையை குனித்து அவன்மேல் நீராவி நிறைந்த மூச்சை விட்டது. உத்தரன் அதன் மேலிருந்த கிரந்திகனிடம் “மூடா, அதை மிகையாக ஓடவிடாதே என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். குளம்புகள் விரிந்துவிட்டால் அதன் நடை மாறிவிடும்” என்றான். கிரந்திகன் இறகு உதிர்வதுபோல இறங்கி நின்று வணங்கி “ஆம், இளவரசே. நினைவிருக்கிறது. தாங்கள் இன்று வர பிந்தியமையால் நான் சற்று பயிற்சி அளித்தேன்” என்றான்.

உத்தரன் “களைத்துவிட்டான் என் மைந்தன்” என்று சொல்லி காரகனின் விலா நோக்கி கையை கொண்டு செல்ல அது கனைத்தபடி விலா விதிர்க்க துள்ளி விலகியது. திடுக்கிட்டு கையை இழுத்துக்கொண்டு பின்னால் விலகிய உத்தரன் “களைப்பு… என்னை அது தெரிந்துகொள்ளவில்லை” என்றான். “ஆம், தாங்கள் ஒருமுறை சுற்றிவரலாம்” என்றான் கிரந்திகன். “இல்லை… நான் நாளைக்கு வருகிறேன். இன்றைக்கு களைத்துவிட்டிருக்கிறான்” என்றான் உத்தரன். “இல்லை, இளவரசே… அவனே உங்களை கொண்டு செல்வான்…” உத்தரன் அலறலாக “வேண்டாம்…” என்றான். “நானே செல்கிறேன்… நானே செல்கிறேன்…”

கிரந்திகன் முக்தனை நோக்கி புன்னகைத்து “இளவரசருக்குரிய தனிப்புரவி. அவரைத்தவிர என்னை மட்டுமே ஏற்கும்” என்றான். உத்தரன் “ஆம், இதன்மேல் ஏறித்தான் நான் கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறேன்” என்றபின் “நான் அதை சொல்லத்தான் வந்தேன். கரவுக்காட்டுக்கு என்னுடன் நீயும் வரவேண்டும்” என்றான். “நான் எதற்கு?” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா?” என்றான் உத்தரன். காதரன் அருகே வந்து கிரந்திகனின் உடலில் தன் உடலைத் தேய்த்தது. நாமர் “தமக்கை இல்லாமல் மிகத் தனிமையாக உணர்கிறது” என்றார். “அது நன்று. களிற்றுப் புரவிகளின் மீது இனிமேல்தான் ஆர்வம் வரும்” என்றான் கிரந்திகன்.

உத்தரன் காரகனை தொடப்போக அது திரும்பி ‘ர்ர்ர்’ என சீறியது. அவன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டு “ஏன் சினம் கொள்கிறது?” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா?” என்று உத்தரன் தயங்க “ஏறுங்கள்” என்றான் கிரந்திகன். “நானும் களைத்திருக்கிறேன்” என்று சொல்லி ஒருகணம் காத்திருந்தபின் உத்தரன் கால்வளையத்தில் மிதித்து உடலை உந்தினான். கிரந்திகன் அவன் பின்பக்கத்தை தூக்கிவிட கால்சுழற்றி புரவிமேல் அமர்ந்தான். “மெதுவாக” என்றான். கிரந்திகன் புரவியிடம் மெல்லிய ஒலியில் ஏதோ சொல்ல அது காதுகளை பின் கோட்டி அச்சொற்களை கேட்டது. பின்னர் பெருநடையாக விரைந்தது. அது கிளம்பியதும் நிலைதடுமாறி “ஆ” என்று கூவிய உத்தரன் அந்த ஓசையையே அதைச் செலுத்தும் ஒலியாக மாற்றி “ஆ ஆ” என்றான். நாமர் முக்தனை நோக்கி புன்னகை செய்தார்.