நீர்க்கோலம் - 4
3. மெய்மைக்கொடி
“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் வணிகர்களால்தான் விதர்ப்பம் வாழ்கிறது.”
“விதர்ப்பம் ஷத்ரிய குருதிமரபு கொண்டது. யாதவர்களின் குருதிவழியான போஜர்களுக்கும் அவர்களுடன் ஓர் உறவுண்டு என்பார்கள். அவர்கள் கடக்க விரும்பும் அடையாளம் அது” என்று தமனர் தொடர்ந்தார். “விதர்ப்ப மன்னர் பீஷ்மகரின் மகள் ருக்மிணி இன்று இளைய யாதவரின் அரசி.” தருமன் “ஆம், தங்கையைக் கவர்ந்தவர் என்பதனால் இளைய யாதவர்மேல் பெருஞ்சினம் கொண்டிருக்கிறான் பட்டத்து இளவரசன் ருக்மி. அச்சினத்தாலேயே அவன் துரியோதனனுடன் இணைந்திருக்கிறான்” என்றார். “அவன் மகதத்தின் ஜராசந்தனுக்கும் சேதிநாட்டின் சிசுபாலனுக்கும் அணுக்கனாக இருந்தான்” என்றான் பீமன்.
“ஆம், அதையெல்லாம்விட பெரியது ஒன்றுண்டு. விதர்ப்பத்தின் குருதியில் உள்ள குறையைக் களைந்து தங்களை மேலும் தூய ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள அவர்கள் எண்ணியிருந்தனர். இப்பகுதியில் நிஷத நாட்டவருடன் அவர்கள் தீர்க்கவேண்டிய கடன்களும் சில இருந்தன. ருக்மிணி பேரழகி என்றும், நூல்நவின்றவள் என்றும் பாரதவர்ஷம் அறிந்திருந்தது. முதன்மை ஷத்ரிய அரசர்கள் எவரேனும் அவளை மணம்கொள்வார்கள் என்றும் அதனூடாக விதர்ப்பம் தன் குறையை சூதர் நாவிலிருந்தும் அரசவை இளிவரல்களிலிருந்தும் அழிக்கலாம் என்றும் அவர்கள் கனவுகண்டனர். அது நிகழவில்லை. இளைய யாதவர் அவளை கவர்ந்து சென்றார். ஷத்ரியப் பெருமையில்லாத யாதவர். முன்னரே யாதவக்குருதி என இருந்த இழிவு மேலும் மிகுந்தது. ருக்மியின் சினம் இளைய யாதவருடன் அல்ல, அவனறியாத பலவற்றுடன். அவை முகமற்றவை. எட்டமுடியாதவை. முகம்கொண்டு கையெட்டும் தொலைவிலிருப்பவர் யாதவர். ஆகவே அனைத்துக் காழ்ப்பையும் அத்திசைநோக்கி திருப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார் தமனர்.
“விதர்ப்பம் அழகிய நாடு. பெருநீர் ஒழுகும் வரதாவால் அணைத்து முலையூட்டப்படுவது. வடக்கே முகில்சூடி எழுந்த மலைகளும் காடுசெறிந்த பெருநிலவிரிவுகளும் கொண்டது. அரசென்பதையே அறியாமல் தங்கள் சிற்றூர்களில் குலநெறியும் இறைமரபும் பேணி நிலைகொண்ட மக்கள் வாழ்வது. மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் இவை. ஆரியவர்த்தம் கண்ட போர்களும் பூசல்களும் இங்கு நிகழ்ந்ததில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ளது. எனவே காற்றுபோல் ஒளியைப்போல் நீரைப்போல் நிலத்தையும் இவர்கள் அளவிட்டதோ எல்லைவகுத்துக்கொண்டதோ இல்லை. இவர்களுக்கு தெய்வம் அள்ளிக்கொடுத்திருப்பதனால் இவர்களும் தெய்வங்களுக்கும் பிற மானுடருக்கும் அள்ளிக்கொடுத்தார்கள்” என்றார் தமனர்.
“அத்துடன் ஒரு பெரும் வேறுபாடும் இங்குள்ளது” என்றார் தமனர். “ஆரியவர்த்தம் படைகொண்டு நிலம்வென்ற அரசர்களால் வென்று எல்லையமைக்கப்பட்டது. அவர்களின் ஆணைப்படி குடியேறிய மக்களால் சீர் கொண்டது. இது ஆரியவர்த்தத்தின் அணையாத பூசல்களைக் கண்டு கசந்து விலகி தெற்கே செல்லத்துணிந்த முனிவர்களால் உருவாக்கப்பட்டது. வெல்வதற்கு நிகராக கொடுப்பதற்கும் பேணும் அனைத்தையும் கணப்பொழுதில் விட்டொழிவதற்கும் அவர்கள் மக்களை பயிற்றுவித்தார்கள்.”
“ஆனால் அத்தனை ஓடைகளும் நதியை நோக்கியே செல்கின்றன” என்று தமனர் தொடர்ந்தார். “குடித்தலைமை அரசென்றாகிறது. அரசுகள் பிற அரசை நோக்கி செல்கின்றன. வெல்லவும் இணையவும். பின்பு நிகழ்வது எப்போதும் ஒன்றே.”
தருமன் “ஆம், இப்போது விதர்ப்பம் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை எல்லை கடந்ததுமே உணர்ந்தேன். எல்லைகள் நன்கு வகுத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வணிகச்சாலைகள் காவல்படைகளால் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாலங்களும் சாவடிகளும் உரிய இடங்களிலெல்லாம் அமைந்துள்ளன. அனைத்து இடங்களிலும் விதர்ப்பத்தின் கொடி பறக்கிறது” என்றார்.
பீமன் “இங்கே விளைநிகுதி உண்டா?” என்றான். “விரிந்துப்பரந்த நாடுகள் எதிலும் விளைநிகுதி கொள்ளப்படுவதில்லை. அந்நிகுதியை கொள்ளவோ திரட்டவோ கொண்டுவந்துசேர்க்கவோ பெரிய அரசாளுகைவலை தேவை. சிறிய நாடுகளில் அவற்றை உருவாக்கிக்கொள்ளலாம். மகதம் போன்ற தொன்மையான நாடுகளில் அவை காலப்போக்கில் தானாகவே உருவாகி வந்திருக்கும். விதர்ப்பத்தின் பெரும்பகுதி நிலத்திற்கு சாலைகளோ நீர்வழிகளோ இல்லை. இங்கு பேசப்படும் மொழிகள் பன்னிரண்டுக்கும் மேல். தொல்குடிகள் எழுபத்தாறு. இதன் எல்லைகள் இயற்கையாக அமைந்தவை.”
“எனவே ஆட்சி என்பது அதன் குடிகளுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே நிகழ்ந்தது. வணிகப்பாதைகளிலும் அங்காடிகளிலும் சுங்கநிகுதி மட்டுமே கொள்ளப்பட்டது. அதுவே அரசுதிகழ்வதற்கு போதுமானதாக இருந்தது” என்றார் தமனர். “ஆனால் இன்று ருக்மி இந்நாட்டை ஒரு பெரிய கைவிடுபடைப்பொறி என ஆக்கிவிட்டிருக்கிறான். கௌண்டின்யபுரி இன்று இரண்டாம் தலைநகர். ஏழு பெருங்கோட்டைகளால் சூழப்பட்ட போஜகடம் என்னும் நகர் ருக்மியால் அமைக்கப்பட்டு தலைநகராக்கப்பட்டது. வரதாவின் கரையில் அமைந்திருப்பதனாலேயே பெருங்கோட்டைகளை கௌண்டின்யபுரியில் சேற்றுப்பரப்பில் அமைக்கமுடியாதென்று கலிங்கச் சிற்பிகள் சொன்னார்கள்.”
தமனர் தொடர்ந்தார் “இளைய யாதவரிடம் தோற்று மீசையை இழந்து சிறுமைகொண்டபின் பல ஆண்டுகாலம் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. சிவநெறியனாக ஆகி தென்னகத்திற்குச் சென்றான் என்கின்றனர். இமயமலைகளில் தவம் செய்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவன் மீண்டபோது யோகி போலவே தெரிந்தான். முகத்தில் செந்தழல் என நீண்ட தாடி. கண்களில் ஒளிக்கூர். சொற்கள் நதியடிப்பரப்பின் குளிர்ந்த கற்கள். இளைய யாதவரின் குருதியில் கைநனைத்தபின் திரும்பி கௌண்டின்யபுரிக்குள் நுழைந்து அங்கு மூதன்னையர் முன் முடிகளைந்து பூசனைசெய்யவிருப்பதாக அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்.”
“இங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் மாற்றியமைத்தான். என்ன செய்யவேண்டும் என நன்கறிந்திருந்தான். முதலில் ஆயிரக்கணக்காக சூதர்கள் கொண்டுவரப்பட்டனர். இன்றுள்ள விதர்ப்பம் என்னும் நாடு அவர்களின் சொற்களால் உருவாக்கப்பட்டது. அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன. அதன் அழகும் தொன்மையும் தனிப்பெருமையும் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளுமென தங்கள் நாடு வளர்ந்து விரிவதை மக்கள் கண்டனர். தாங்கள் கண்டறியாத நிலங்களெல்லாம் தங்களுக்குரியவையே என்னும் பெருமிதம் அவர்களை உளம்விம்மச்செய்தது.”
“கண்டறிந்த நிலமும் நீர்களும் மலைகளும் பயன்பாட்டால் மறைக்கப்பட்ட அழகுகொண்டவை. காணாத நிலமும் நீர்களும் மலைகளும் அழகும் பெருமையும் மட்டுமே கொண்டவை. எனவே தெய்வத்திருவுக்கள் அவை. அறிந்த மண்ணில் வேட்டையும் வேளாண்மையும் திகழவேண்டும் என்று வேண்டித் தொழுத குடிகள் அறியாத மண் என்றும் அவ்வாறே பொலியவேண்டுமென்று தொழுது கண்ணீர் மல்குவதை ஒருமுறை சுத்கலக் குடிகளின் படையல்நிகழ்வொன்றில் கண்டேன். புன்னகையுடன் வாழ்த்தி அங்கிருந்து மீண்டேன்” என்றார் தமனர். “காமத்தை விட, அச்சங்களை விட, கனவிலெழும் திறன் மிகுந்தது நிலமே. கனவுநிலம் மாபெரும் அழைப்பு. என்றுமிருக்கும் சொல்லுறுதி. தெய்வங்களும் மூதாதையரும் வாழ்வது. அதன்பொருட்டு மானுடர் எதையும் இழப்பார்கள். கொல்வார்கள், போரிட்டு இறப்பார்கள். மனிதர்களுக்கு கனவுநிலமொன்றை அளிப்பவனே நாடுகளை படைக்கிறான்.”
“ஆனால் நிலம் ஒன்றென்று ஆக அதன் நுண்வடிவென வாழும் அனைத்தையும் இணைத்தாகவேண்டும். ருக்மியின் சூதர் அதை செய்தனர். விதர்ப்பநிலத்தின் தெய்வங்களும் மூதாதையரும் தொல்லன்னையரும் மாவீரரும் ஒவ்வொரு குடிச்சொல்மரபில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டு பெருங்கதைகளாக மீள்மொழியப்பட்டனர். மாபெரும் கம்பளம்போல கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி முடையப்பட்டு ஒற்றைப்படலமென்றாயின. கன்றுகளுக்குப் பின்னால் பசுக்கள் செல்வதுபோல கதைகளுக்குப் பின்னால் சென்றது நிலம். கன்றுகளைக் கட்டியபோது காணாச்சரடால் தானும் கட்டுண்டது.”
“சபரகுடிகளின் தெய்வமாகிய மாகன் துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்தார். சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேது அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸரின் ஊர்தியாகியது. ஒவ்வொரு நாளும் அக்கதைகள் புதுவடிவு கொள்வதன் விந்தையை எண்ணி எண்ணி மலைத்திருக்கிறோம். ஒரு கதையின் வளர்ச்சியைக் கண்டு திகைத்து அதைப்பற்றி பேசியபடி இன்னொரு ஊருக்குச் சென்றால் ஐந்தே நாளில் அக்கதை மேலுமொரு வடிவு கொண்டிருக்கும்” என்றார் தமனர். “கதைகள் ஒன்றிணைந்தபோது தெய்வங்கள் இணைந்தன. குலவரலாறுகள் இணைந்தன. குருதிமுறைகள் ஒன்றாயின. மக்கள் ஒற்றைத்திரளென்றானபோது நிலம் ஒன்றானது.”
“நிலம் குறித்த பெருமை ஒவ்வொருவர் நாவிலும் குடியேறியபோது அதை வெல்ல நான்கு திசைகளிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதாக அச்சம் எழுந்தது. பின்னர் எதிரிகள் பேருருக்கொள்ளத் தொடங்கினர். இரக்கமற்றவர்களாக, எங்கும் ஊடுருவும் வஞ்சம் கொண்டவர்களாக, இமைக்கணச் சோர்விருந்தாலும் வென்றுமேற்செல்லும் மாயம் கொண்டவர்களாக அவர்கள் உருமாறினர். எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும் அத்தனை குடிகளையும் ஒன்றெனக் கட்டி ஒரு படையென தொகுத்தது. எங்கும் எதிலும் மாற்றுக்கருத்தில்லாத ஒற்றுமை உருவாகி வந்தது. ஆணையென ஏது எழுந்தாலும் அடிபணியும் தன்மையென அது விளைந்தது.”
“நாடே ஒரு படையென்றாகியமை அரசனை மேலும் மேலும் ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. செங்கோலை சற்றேனும் ஐயுறுபவர்கள் அக்கணமே எதிரியின் உளவுநோக்கிகள் என குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களைப் பழித்து வதைத்து கொன்று கொண்டாடினர் அவர்களின் குருதியினரும் குடியினரும். அவையெல்லாம் எதிரிகள்மேல் கொள்ளும் வெற்றிகள் என உவகையளித்தன. முதற்பாண்டவரே, எதிரிகளை அறிந்தவர்கள் பின் அவர்களில்லாமல் வாழ முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் சிதறிப்பரவும் நம்மை எதிரி எல்லைகளில் அழுத்தி ஒன்றாக்குகிறான். நம் ஆற்றல்களை முனைகொள்ளச் செய்கிறான். நம் எண்ணங்கள் அவனை மையமாக்கி நிலைகொள்கின்றன. எளியோருக்கு தெய்வம் எதிரிவடிவிலேயே எழமுடியும். அவர்களின் ஊழ்கம் வெறுப்பின் முழுமையென்றே நிகழமுடியும்” என்றார் தமனர்.
“பெரும்படையை இன்று ருக்மி திரட்டியிருக்கிறான். அப்பெரும்படைக்குத் தேவையான செல்வத்தை ஈட்டும்பொருட்டு விரிவான வரிக்கோள் முறைமையை உருவாக்கியிருக்கிறான்” என்று தமனர் சொன்னார். “ஐவகை வரிகள் இன்று அரசனால் கொள்ளப்படுகின்றன. சுங்கவரி முன்பே இருந்தது. ஆறுகளிலும் ஏரிகளிலும் இருந்து நீர்திருப்பிக் கொண்டுசெல்லும் ஊர்களுக்கு நீர்வரி. விளைவதில் ஏழில் ஒரு பங்கு நிலவரி. மணவிழவோ ஆலயவிழவோ ஊர்விழவோ கொண்டாடப்படுமென்றால் பத்தில் ஒரு பங்கு விழாவரி. எல்லைகடந்துசென்று கொள்ளையடித்து வருபவர்களுக்கு கொள்வதில் பாதி எல்லைவரி.”
“விந்தை!” என்றார் தருமன். “அவ்வரி தென்னகத்தில் பல மலைக்குடிகளின் அரசுகளில் உள்ளதே” என்றார் தமனர். “பல குடிகளின் செல்வமே மலைக்குடிகளை கொள்ளையடித்து ஈட்டுவதுதான்.” பீமன் “அது அரசனே கொள்ளையடிப்பதற்கு நிகர்” என்றான். “ஆம், கொள்ளையடித்து தன் எல்லைக்குள் மீள்பவர்களுக்கு காப்பளிக்கிறார்கள் அல்லவா?” என்றான் நகுலன். “விதர்ப்பம் கொள்ளையடிப்பது இரண்டு நாடுகளின் நிலங்களுக்குள் புகுந்தே. தெற்கே நிஷதநாட்டின் எல்லைகள் விரிந்தவை. பல மலைகளில் அரசப்பாதுகாப்பென்பதே இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சிறுகுடிகளாகவும் சிற்றூர்களாகவும் சிதறிப்பரந்தவர்கள். கிழக்கே சியாமபுரியும் அரசமையம் கொள்ளாத நாடுதான்.”
“விதர்ப்பத்தின் வஞ்சம் இளைய யாதவருடன். எனவே நமக்கு எதிர்நிலைகொள்வதே ருக்மியின் அரசநிலை. ஆகவே நிஷதத்திற்குச் சென்று அவர்களின் நட்பை வென்றெடுப்பதே நமக்கு நலம்பயக்கும்” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள் ஷத்ரியர்களை அஞ்சுகிறார்கள். இன்று ஷத்ரியர்கள் என்றே உங்களையும் எண்ணுவார்கள். நீங்கள் ஷத்ரியர்களால் எதிர்க்கப்படுபவர்கள், இளைய யாதவரின் சொல்லுக்காக களம் நிற்பவர்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அவர்களுடன் ஒரு குருதியுறவு உருவாகுமென்றால் அது மிக நன்று” என்றார் தமனர். தருமன் “ஆம், அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
“நான் அதைக் கூறுவது ஏனென்றால் நிஷாதர்கள் தென்காடுகளெங்கும் விரவிக்கிடக்கும் பெருங்குலங்களின் தொகை. அவர்களில் அரசென அமைந்து கோல்சூடியவை நான்கு. வடக்கே நிஷாதர்களின் அரசாக ஹிரண்யபுரி வலுப்பெற்றுள்ளது. நிஷாத மன்னன் ஹிரண்யதனுஸின் மைந்தன் ஏகலவ்யன் மகதத்தில் எஞ்சிய படைகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆற்றல் மிக்கவனாக ஆகியிருக்கிறான். மைந்தனை இழந்த சேதிநாட்டு தமகோஷனின் ஆதரவை அடைந்துவிட்டிருக்கிறான். விதர்ப்பத்திற்கு அவன் இன்னும் சில நாட்களில் அரசவிருந்தினனாக வரவிருக்கிறான். விதர்ப்பமும் ஹிரண்யபுரியும் அரசஒப்பந்தம் ஒன்றில் புகவிருப்பதாக செய்தி வந்துள்ளது” என்றார் தமனர்.
“தென்னகத்தில் ஆற்றல்மிக்க நிஷாதகுலத்தவரின் அரசு நிஷதமே. முன்பு கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது அவர்களின் பெருநகராகிய விராடபுரி. நிஷாதர்களின் எழுபத்தெட்டு தொல்குலங்களில் பெரியது சபரர் குலம். அவர்கள் அஸனிகிரி என்றழைக்கப்பட்ட சிறிய மலையைச் சுற்றியிருந்த காடுகளில் வாழ்ந்தனர். கோதைவரி மலையிறங்கி நிலம்விரியும் இடம் அது. நாணலும் கோரையும் விரிந்த பெருஞ்சதுப்பு நிலத்தில் மீன்பிடித்தும் முதலைகளை வேட்டையாடியும் அவர்கள் வாழ்ந்தனர். தண்டபுரத்திலிருந்து படகுவழியாக வந்து அவர்களிடம் உலர்மீனும் முதலைத்தோலும் வாங்கிச்சென்ற வணிகர்களால் அவர்கள் மச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”
“கடல்வணிகம் அவர்களை செல்வந்தர்களாக்கியது. வணிகர்களிடமிருந்து அவர்கள் செம்மொழியை கற்றனர். பெருமொழியின் கலப்பால் அவர்களின் மொழி விரிந்தது. மொழி விரிய அதனூடாக அவர்கள் அறிந்த உலகும் பெருகியது. மலைவணிகர்களிடமிருந்து அவர்கள் புதிய படைக்கலங்களை பெற்றனர். அவற்றைக்கொண்டு பிற நிஷாதர்களை வென்று அரசமைத்தனர். அந்நாளில்தான் பதினெட்டாவது பரசுராமர் தென்னகப் பயணம் வருவதை அறிந்து மகாகீசகர் அவரை தேடிச்சென்றார், சப்தபதம் என்னும் மலைச்சரிவிலிருந்த அவரைக் கண்டு அடிபணிந்தார். அவர் கோரிய சொல்லுறுதிகளை அளித்து நீர்தொட்டு ஆணையிட்டார். அவர் மகாகீசகரை நிஷாதர்களின் அரசனாக அமைத்து அனல்சான்றாக்கி முடிசூட்டினார். அவர் அக்னிகுல ஷத்ரியராக அரியணை அமர்ந்து முடிசூட்டிக்கொண்டார்.”
“பரசுராமர் கோரிய சொல்லுறுதிகள் இன்றும் அக்குடிகளை கட்டுப்படுத்தும். ஒரு தருணத்திலும் அந்தணர்களுக்கு எதிராக படைக்கலம் ஏந்தலாகாது, அந்தணர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அச்செய்தி கேள்விப்பட்டதுமே படைகொண்டு எழவேண்டும், ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி அடிமைப்படலாகாது, போரில் எக்குடியையும் முற்றழிக்கலாகாது, ஒரு போரிலும் பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் கொல்லப்படக்கூடாது, நீர்நிலைகளை அழிப்பதோ எரிபரந்தெடுத்தலோ கூடாது” என்றார் தமனர். “பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையுடன் மகாகீசகர் அஸனிமலைக்கு மீண்டார்.”
“அஸனிமலையின் உச்சியில் ஆலயம் அமைத்து சபரர்கள் வழிபட்டுவந்த அஸனிதேவன் என்னும் மலைத்தெய்வத்தின் அதே வடிவில் மின்படையை ஏந்தியிருந்தமையால் இந்திரனை அவர்களால் எளிதில் ஏற்கமுடிந்தது. அஸனிகிரியின் மேல் இருந்த குடித்தெய்வங்களில் முதன்மையாக இந்திரன் நிறுவப்பட்டான். அஸனிமலையில் ஏழு பெருவேள்விகளை மகாகீசகர் நிகழ்த்தினார். நாடெங்குமிருந்து அனல்குலத்து அந்தணர் திரண்டுவந்து அவ்வேள்விகளில் அமர்ந்தனர். நூற்றெட்டு நாட்கள் அஸனிமலைமேல் வேள்விப்புகை வெண்முகில் என குடை விரித்து நின்றிருந்தது என்கின்றன கதைகள்.”
“அதன் பின் நிஷதகுலத்து வேந்தர்கள் ஆண்டுதோறும் வேள்விகளை நிகழ்த்தும் வழக்கம் உருவாகியது. நாடெங்கிலுமிருந்து அந்தணர் அந்த மலைநோக்கி வரலாயினர். அஸனிகிரி கிரிப்பிரஸ்தம் என்று பெயர்பெற்றது” என்று தமனர் சொன்னார். “மெல்ல அனைத்துக் குலங்களையும் சபரர் வென்றடக்கினர். குலத்தொகுப்பாளராகிய சபரர்களின் தலைவனை விராடன் என்று அழைத்தனர்.
பலநூற்றாண்டுகள் கிரிப்பிரஸ்தம் இந்திரபுரி என புகழ்பெற்றிருந்தது. பின்னர் காலத்தில் அழிந்தது. சபரர்கள் மீண்டும் இரண்டாம் கீசகர் தலைமையில் எழுந்து குடிகளைத் தொகுத்து விராடக்கூட்டுறவை உருவாக்கினர். அதன்பின்னர் விராடபுரி என்னும் பெருநகர் கிரிப்பிரஸ்த மலையின் கீழ் உருவாகி வந்தது கோதையின் கரையில் மச்சர்களின் ஊர் அது.மீன்மணமில்லாத மலர்களும் அங்கில்லை என்றுதான் கவிஞர்கள் பாடுகிறார்கள்.”
“ஆம், அங்கு செல்வதே எங்கள் முடிவு. நாங்கள் நாளைப்புலரியில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். அவர்கள் சௌபர்ணிகையின் மணல்கரையில் அமர்ந்திருந்தார்கள். தமனருடன் அவருடைய மாணவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இருவர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். சௌபர்ணிகையின் சிறிய பள்ளங்களில் தேங்கிய நீர் பின்அந்தியின் வான்வெளிச்சத்தில் கருநீலத்தில் கண்ணொளி என மின்னியது நீலக்கல் அட்டிகை ஒன்று வளைந்து கிடப்பது போலிருந்தது. நீர் சுழித்த கயம் அதன் சுட்டி. திரௌபதி அதை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் எதையாவது கேட்டாளா என்பது ஐயமாக இருந்தது.
“செல்வோம், இன்னும் சற்றுநேரத்தில் வழிமறையும்படி இருட்டிவிடும்” என்று தமனர் எழுந்தார். தருமனும் உடன் எழ பீமன் மட்டும் கைகளை முழங்கால்மேல் கட்டியபடி அமர்ந்திருந்தான். அர்ஜுனனும் உடன் நடக்க நகுலனும் சகதேவனும் பின்னால் சென்றார்கள். தருமன் “மந்தா, வருக!” என்றார். பீமன் எழுந்துகொண்ட பின்னர் திரௌபதியை தோளில் தட்டி “வா” என்றான். அவள் சூரியன் மறைந்தபின்னர் கரியநீருக்குள் வாள்முனைபோல் தெரிந்த தொடுவானை நோக்கியபடி மேலும் சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் நீள்மூச்சுடன் எழுந்தாள்.
அவர்கள் நடக்கையில் பீமன் “முனிவரே, தங்கள் அரசுசூழ்தல் வியப்பளிக்கிறது” என்றான். தருமன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து “மந்தா” என்றார். “ஆம், என் அரசியல் தெளிவானது. நான் எந்நாட்டுக்கும் குடியல்ல. ஆனால் இளைய யாதவர் போரில் வெல்லவேண்டுமென்று விழைகிறேன்” என்றார். “ஏன்?” என்று பீமன் கேட்டான். “ஒரு போர் வரவிருக்கிறது. அதை தவிர்க்கமுடியாது. அதில் எது வெல்லும் என்பதே இன்றுள்ள முழுமுதல் வினா. வேதமுடிபுக்கொள்கை வெல்லவேண்டும். அதன் உருவம் இளைய யாதவர். அவரது படைக்கலங்கள் நீங்கள்.”
அவர்கள் மணல்மேல் நடக்கையில் தமனர் சொன்னார் “நான் சாந்தீபனி குருநிலையில் கற்றவன் என அறிந்திருப்பீர்கள். வேதக்கனியே என் மெய்மை. அந்த மரம் மூத்து அடிவேர் பட்டுவிட்டதென்றால் அக்கனியிலிருந்து அது புதுப்பிறப்பு கொண்டு எழட்டும். இனி இப்பெருநிலத்தை வேதமுடிபே ஆளட்டும்.” தருமன் “ஒவ்வொருவரும் தங்கள் கொள்கையை அவ்வாறு சொல்லக்கூடுமல்லவா?” என்றார். “ஆம், அது இயல்பே. வேதமுடிபுக்கொள்கையே பாரதவர்ஷமெனும் பெருவிரிவுக்கு உகந்தது என நான் எண்ணுவது ஒன்றின்பொருட்டே” என்றார் தமனர்.
நின்று திரும்பி சௌபர்ணிகையை சுட்டிக்காட்டி “அதோ அச்சிற்றொழுக்கு போன்றது அது என சற்று முன் எண்ணினேன். ஒரு குழியை நிறைக்கிறது. பின் பெருகி வழிந்து பிறிதொரு குழிநோக்கி செல்கிறது. பாரதவர்ஷம் பல குடிகளால் ஆனது. அவர்கள் வாழ்ந்து அடைந்த பற்பல கொள்கைகள். அக்கொள்கைகளின் உருவங்களான ஏராளமான தெய்வங்கள். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நின்றிருக்கும் ஒரு கொள்கையே இங்கு அறமென நிலைகொள்ளமுடியும். பரசுராமர் அனல்கொண்டு முயன்றது அதற்காகவே. இளையவர் சொல்கொண்டு அதை முன்னெடுக்கிறார்.”
“வேலின் கூரும் நேரும் அல்ல கட்டும் கொடியின் நெகிழ்வும் உறுதியுமே இன்று பாரதவர்ஷத்தை ஆளும் கொள்கையின் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் தமனர். “நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் தங்களுடைய அனைத்தையும் கொண்டுசென்று படைத்து வணங்கும் ஓர் ஆயிரம் முகமுள்ள தெய்வம். அனைத்தையும் அணைத்து ஏந்திச்செல்லும் கங்கை. அது வேதமுடிபே. அது வேதங்கள் அனைத்திலும் இருந்து எழுந்த வேதம். வேதப்பசுவின் நெய் என்கின்றனர் கவிஞர்.”
“சில தருணங்கள் இப்படி அமைவதுண்டு” என்று தனக்குத்தானே என தமனர் சொன்னார். “நானும் நிலையா சித்தத்துடன் துயருற்று அலைந்தேன். பெரும்போர் ஒன்றின் வழியாகத்தான் அக்கொள்கை நிலைகொண்டாகவேண்டுமா என்று. இத்தெய்வம் அத்தகைய பெரும்பலியை கோருவதா என்று. அது ஒன்றே நிலைகொள்ளவேண்டும் என்றால், பிறிதொரு வழியே இல்லை என்றால் அதை ஊழென்று கொள்வதே உகந்தது என்று தெளிந்தேன்.”
“அது தோற்றால் இங்கு எஞ்சுவது நால்வேத நெறி மட்டுமே. இங்கு முன்னரிடப்பட்ட வேலி அது. மரம் வளர்ந்து காடென்றாகிவிட்டபின் அது வெறும் தளை. இன்று தொல்பெருமையின் மத்தகம்மேல் ஏறி ஒருகணுவும் குனியாமல் செல்லவிரும்பும் ஷத்ரியர் கையிலேந்தியிருக்கும் படைக்கலம் அது. அது வெல்லப்பட்டாகவேண்டும். இல்லையேல் இனிவரும் பல்லாயிரமாண்டுகாலம் இந்நிலத்தை உலராக்குருதியால் நனைத்துக்கொண்டிருக்கும். இப்போர் பெருங்குருதியால் தொடர்குருதியை நிறுத்தும் என்றால் அவ்வாறே ஆகுக!”
இருளுக்குள் அவர் குரல் தெய்வச்சொல் என ஒலித்தது. “சுனையிலெழும் இன்னீர் என எழுகின்றன எண்ணங்கள். ஒழுகுகையில் உயிர்கொள்கின்றன. துணைசேர்ந்து வலுவடைகின்றன. பெருவெள்ளமெனப் பாய்ந்து செல்கையில் அவை புரங்களை சிதறடிக்கவும் கூடும். அதன் நெறி அது. பாண்டவர்களே, வேதமுடிபுக் கொள்கை அனைத்துக் களங்களிலும் வென்றுவிட்டது. இனி வெல்ல குருதிக்களம் ஒன்றே எஞ்சியிருக்கிறது.”
நீள்மூச்சுடன் அவர் தணிந்தார். “இன்று நான் முயல்வதுகூட அக்களம் நிகழாமல் அதை வெல்லக்கூடுமா என்றே. இளைய யாதவரின் கொடிக்கீழ் ஷத்ரியர் அல்லாத பிறர் அனைவரும் கூடுவார்கள் என்றால், அவரது ஆற்றல் அச்சுறுத்துமளவுக்கு பெருகும் என்றால் அப்போர் நிகழாதொழியக்கூடும். ஆனால்…” என்றபின் கைகளை விரித்து “அறியேன்” என்றார். அவர் நடக்க பாண்டவர்கள் இருளில் காலடியோசைகள் மட்டும் சூழ்ந்து ஒலிக்க தொடர்ந்து சென்றனர்.