நீர்க்கோலம் - 37
36. புற்றமை நாகம்
அணிச்சேடியர் இருவரும் சற்று விலகி தலைவணங்கி முடிந்துவிட்டதென்று அறிவிக்க சுதேஷ்ணை மீண்டும் ஒரு முறை ஆடியில் தன்னை பார்த்துவிட்டு எழுந்தாள். அவளுக்கு வலப்பக்கமாக நின்றிருந்த திரௌபதி “சற்று பொறுங்கள்!” என்று அவள் ஆடையின் மடிப்பொன்றை சீரமைக்கும்பொருட்டு சற்றே குனிந்து கையெடுத்தாள். “வேண்டாம்” என்று அவளை விலக்கிய சுதேஷ்ணை சுட்டுவிரலைக்காட்டி அணிச்சேடியிடம் அந்த மடிப்பை சீரமைக்க ஆணையிட்டாள். அவள் வந்து மண்டியிட்டு அந்தப் பனையோலைக்குருத்துபோன்ற மடிப்பை அடுக்கி அதில் சிறிய ஊசியொன்றை குத்தினாள்.
அணிச்சேடியர் செல்லலாம் என்று கையசைத்து ஆணையிட்டு அவர்கள் சென்று கதவு மூடுவதற்காக காத்து பின் திரும்பி திரௌபதியிடம் “நீ இத்தொழில்களை செய்யலாகாது. எனக்கு அணுக்கத் தோழியென்றும் காவற்பெண்டு என்றும் மட்டும் திகழ்ந்தால் போதும். இவர்கள் எவரும் தங்களுக்கு நிகரானவள் என்று உன்னை ஒருபோதும் எண்ணிவிடலாகாது” என்றாள் சுதேஷ்ணை. திரௌபதி புன்னகைத்து “ஆம், ஆனால் ஒரு குறைகாணுமிடத்து கை நீளாமல் இருப்பதில்லை. பிறிதொருவர் அணிபூணுகையில் நோக்கி நிற்கும் நாம் நம்மை சேடியர் என்றோ ஏவற்பெண்டென்றோ உணர்வதில்லை. ஓவியமொன்றை வரைந்து குறைதீர்க்கும் உணர்வுதான் ஏற்படுகிறது” என்றாள்.
சுதேஷ்ணை அவள் சொன்னதை புரிந்துகொள்ளாமல் ஆமென்பதுபோல் தலையசைத்து பிறிதெங்கோ சென்ற தன் எண்ணங்களை சற்றுநேரம் தொடர்ந்தபின் “உண்மையில் இன்று அவை நுழையவே எனக்கு உளம் கூடவில்லை. இந்த அவையமர்தல் சொல்லுசாவுதலெல்லாம் வெறும் அவல நடிப்புகளன்றி பிறிதொன்றுமில்லை. இங்கு என்ன நிகழ்கிறது என்று இதற்குள் நீயே உய்த்துணர்ந்திருப்பாய்” என்றாள். திரௌபதி ஆமென்றோ இல்லையென்றோ சொல்லவில்லை.
“நீ என்ன அறிந்தாய் என்று தெரியவில்லை. நானே கூறிவிடுகிறேன். நான் கேகயத்து இளவரசி. தொல்குடி ஷத்ரியப்பெண். கீசகன் என் உடன்பிறந்தான் ஆயினும் ஷத்ரியனோ கேகயத்தானோ அல்ல. அவன் சர்மாவதிக்கரையில் அமைந்த மச்சர்நாட்டில் ஓர் அன்னைக்கு பிறந்தவன். உண்மையில் அவன் அன்னை எந்த குலத்தைச் சார்ந்தவள் என்பதே உறுதியற்றுதான் இருக்கிறது. அவள் நிஷாதர்களுடன் தொடர்புடைய மச்சர்குலத்தைச் சார்ந்தவளென்றும் இந்த விராட நிஷாத கூட்டமைப்பின் முதற்குடி அவர்களே என்றும் அவைச்சூதர்களும் குடிமுறை நூல்களை ஏற்று புலவர்களும் சொல்லிச் சொல்லி நிறுவிவிட்டிருக்கின்றனர். பிறிதொன்றை இனி சொல்லவோ நூல்பொறிக்கவோ எவராலும் இயலாது.”
“எந்தைக்கு மைந்தர் இல்லாதிருந்த காலம் அது. நீர்முதலைகளை வேட்டையாடும்பொருட்டு கங்கை வழியாக சர்மாவதிக்குச் சென்றபோது மச்சர்களின் சிற்றூரொன்றில் அவர் தங்கினார் என்றும் அங்கு கீசகனின் அன்னையை மணந்துகொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. பின்னர்தான் அவர் காசிநாட்டு இளவரசி கிருஷையை மணந்து என் அடுத்த இளையவனை பெற்றார். இன்று கேகய நாட்டை ஆள்பவன் அவனே” என்றாள்.
“பிறந்தபோது அவனுக்கு சுப்ரதன் என்று பெயர். திருஷ்டகேது என்ற பெயருடன் இன்று அவன் கேகயத்தை ஆட்சி செய்கிறான். அவனுக்கும் அரசி சுருதகீர்த்திக்கும் மகளாகப் பிறந்தவளே இளைய யாதவனால் மணம் கொள்ளப்பட்ட பத்ரை. கைகேயி என்ற பெயரில் இன்று அவள் துவாரகையில் அவை வீற்றிருக்கிறாள்”என்றாள் சுதேஷ்ணை.
அப்போதே கேகய மணிமுடிக்காக கீசகனின் தரப்பில் பேச மச்சகுடி மூத்தார் எந்தையை சந்தித்தனர். மச்சர்குலத்து அரசரின் மகள் அவன் அன்னை என்றும், கேகய முடி அவனுக்களிக்கப்படுமென்றால் நிஷதகுடிகளின் ஒருமித்த ஆதரவு கேகயத்துக்கு இருக்குமென்றும் கோசலமும் மகதமும் பாஞ்சாலமும் அளிக்கும் அனைத்து அச்சுறுத்தல்களையும் வென்று கேகயம் பெருநாடென எழமுடியுமென்றும் சொன்னார்கள்.
எந்தை சற்றே ஏளனத்துடன் பேசி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். அவையில் அன்று நான் இருந்தேன். மச்சர்களின் குலத்தலைவர்கள் பேசி முடித்ததும் எந்தை பெருந்துயர் கொண்டவர்போல கைகளைக்கூப்பி வேதம் எழுந்த முன்னாளில் நுண்சொல் தொல்முனிவர் ஆரியவர்த்தத்தை பதினாறு ஜனபதங்களாக பிரித்ததைப்பற்றி சொல்லத் தொடங்கினார். “அப்பதினாறில் ஒன்றென இருப்பதின் துயரென்ன என்றால் நூறு கட்டுத்தறிகளில் நான்கு பக்கமும் இழுத்துக்கட்டப்பட்ட களிறு போன்றமைதல். நூல்நெறிகளும் குலநெறிகளும் குடிமுறைமைகளும் அவர்களது ஒவ்வொரு சொல்லையும் செயலையும் கட்டுப்படுத்துகின்றன. மச்சர்களோ பறவைகளைப்போல் விட்டு விடுதலையானவர்கள். அவர்கள் எக்கிளையிலும் அமரலாம், எவ்வுணவையும் உண்ணலாம், எதுவும் தீட்டு அல்ல, எதனாலும் அவர்கள் தூய்மை கெடுவதில்லை” என்றார்.
“அவர் தங்களை ஏளனம் செய்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்கள் நாடுகளுக்குத் திரும்பி அச்சொற்களை எண்ணத்தில் மீட்டுகையிலே அதிலிருந்த ஆணவத்தையும் நஞ்சையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியும்” கசப்புடன் கையசைத்து சுதேஷ்ணை சொன்னாள். “அன்று அவர் சொன்னதில் ஓர் உண்மை உள்ளது. பதினாறு தொல்குலங்களில் ஒன்றாக பூர்வஷத்ரியராக இருப்பதென்பது பெரிய சிறை. மீள மீளச் சொல்லப்படும் சொற்கள் பொருளிழந்து குருட்டுவிசை கொண்டு அவர்களிடையே வாழ்ந்தன, நாள்பட்ட அனைத்தும் நஞ்சே என்று மருத்துவர் சொல்வதுபோல.”
எங்கள் அவையில் அமர்ந்து அங்கு நிகழும் சொல்லாடல்களை செவி கூர்ந்திருக்கிறேன். சொல்லிச் சொல்லி தீட்டப்பட்ட முறைமைக் கூற்றுக்கள். முள்முனையை முள்முனையால் தொடும் நுண்மைகள். பூமுள்ளெனப் பதிந்து நஞ்சு ஊறச்செய்யும் வஞ்சங்கள். இன்று எண்ணுகையில் அங்கு அமர்ந்து நான் மகிழ்ந்த ஒவ்வொன்றுக்காகவும் நாணுகிறேன்.
எந்தை நன்கறிந்திருந்தார், அந்த ஏளனம் தங்கள் அரசுக்கு எதிராக திரும்புமென்று. மச்சர்கள் தன் நாட்டை தாக்கினால் உடனெழுந்த ஜனபதங்களில் எந்த அரசரும் தனக்கென ஒரு வாள்முனையைக்கூட தூக்கமாட்டாரென்று. ஆயிரம் ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் முற்றழிப்பதைப்பற்றி எண்ணி கனவுகண்டு வாழ்பவர்கள் அவர்கள். அவ்வாறே நிகழ்ந்தது. கோசலத்தின் எல்லைகளை மச்சர்கள் தாக்கத்தொடங்கினர். கோசலத்தின் படகுகள் எதுவும் கங்கையில் செல்ல முடியாதாயிற்று. வணிகர்கள் வரவு நின்றது. ஒவ்வொரு நாளுமென நாட்டின் செல்வம் மறைந்துகொண்டிருந்தது.
ஆயினும் பதினாறில் ஒரு குடி. நாள்தோறுமென நாடெங்கும் நிகழும் வேள்விகள் எதிலும் ஒரு கிண்ணம் நெய்யைக்கூட எங்களால் குறைக்க முடியவில்லை. அரச விருந்துகளில் பொற்கோப்பைகளில் யவன மது ஒழியாதிருக்க வேண்டும். எத்தனை எளியதென்றாலும் எத்தனை நூறுமுறை சொல்லப்பட்டதென்றாலும் பொய்ப் புகழ்மொழியொன்றைச் சொல்லி அவையிலெழுந்து நிற்கும் புலவருக்கு பத்து விரலும் பட பொன்னள்ளிக் கொடுத்தாகவேண்டும். கண்ணெதிரிலேயே ஓட்டைக் கலத்தில் நீர் என என் நகர் ஒழிவதைக் கண்டேன்.
அப்போதுதான் இங்கு விராடபுரியிலிருந்து இளவரசர் தீர்க்கபாகுவுக்காக மணத்தூது வந்தது. அவர் விராடநிஷதசம்யோகத்தின் அடுத்த மகாவிராடராக பட்டம் கட்டப்பட்டிருந்தார். இவர்களின் தூதன் கலிங்கத்திற்கும் வங்கத்திற்கும் சேதிக்கும் அங்கத்திற்குமெல்லாம் சென்றிருக்கிறான். செல்லுமிடங்களிலெல்லாம் ஏளனமும் சிறுமையுமே இவர்களுக்கு அளிக்கப்பட்டது. அச்செய்தி ஒவ்வொருநாளும் சூதர் நாவுக்கு மகற்கொடை மறுத்த மன்னர்களாலேயே அளிக்கப்பட்டது. அவர்கள் மகற்கொடை மறுப்பதன் வழியாகவே தங்கள் குலமேன்மையை நிலைநிறுத்துபவர்கள். விராட மன்னர் சுபாகுவோ சலிக்காது மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார்.
நிஷாதர்களுக்குத் தெரியும் ஷத்ரியர் என்று இக்கங்கைவெளி முழுக்க வென்றிருக்கும் அரசர்களில் பலர் வெளியேற வழியின்றி கல்லிடுக்குகளில் மாட்டிக்கொண்ட தேரை போன்று வாழ்பவர்கள் என்று. பல அரண்மனைகளில் ஒரு மாதம் மழை நின்றுபெய்தால் இடும்பை வந்து அமையும் என்று. ஒருவர் துணிந்தால்கூட விராடபுரி தேடிக்கொண்டிருக்கும் ஷத்ரியக்குருதி கிடைக்கும் என்றும் அது உறுதியாக நிகழும் என்றும் தெளிந்திருந்தனர்.
எங்கள் அரசவைக்கு நிஷதமன்னர் தீர்க்கபாகுவின் மணச்செய்தி வந்திருப்பதை முதல்நாள்தான் நான் அறிந்தேன். மறுநாள் அவையில் அத்தூதை அறிவிக்கும்படி எந்தை விராடரின் தூதரிடம் சொல்லியிருந்தார். ஏனெனில் அவையில் அதை உரிய ஏளனத்துடன் மறுக்க அவர் விழைந்தார். அதற்குரிய நுண்ணிய நஞ்சு நிரம்பிய சொற்களை அவர் கவிஞர்களோடு அமர்ந்து யாத்து உளம் கொண்டிருந்தார். ஆனால் நான் முடிவு செய்திருந்தேன். அவையில் மணத்தூதை முதலமைச்சர் ஆபர் உரைத்து கைகூப்பி அமர்ந்ததுமே நான் எழுந்து விராட இளவரசரை நான் முன்னரே என் கணவரென உளம் கொண்டிருக்கிறேன் என்றேன். எனது வேண்டுதலை காற்றுகளை ஆளும் பன்னிரு மாருதர்களுக்கும் நான் உரைத்ததனால் அது சென்று விராட இளவரசரின் செவியில் விழுந்தது என்றேன். அதனாலே இந்த மணத்தூது அமைந்தது என்றும் கேகயத்தின் நல்லூழ் அது என்றும் சொன்னேன்.
எந்தை அரியணையில் கைதளர்ந்து அமர்ந்துவிட்டார். கேகயத்தின் பேரவை சொல் திகைத்து வெறும் விழிகளென மாறி என்னைச் சூழ்ந்திருந்தது. முகம் மலர்ந்த ஆபர் எழுந்து கைகூப்பி “விராடநகரியின் பேரரசியாக தாங்கள் அமைவது எங்கள் நல்லூழ். இது இவ்வாறே நிகழவேண்டுமென்று தெய்வங்கள் வகுத்திருக்கின்றன போலும்” என்றார். எந்தை மணத்தூதை மறுக்க அப்போதும் ஒரு வாய்ப்பிருந்தது. கன்யாசுல்கம் கேட்டு பெற்றுக்கொள்வது அவருடைய உரிமை. கொடுக்கவே முடியாத கன்யாசுல்கமொன்றை கேட்கலாம். அதைச் சொல்ல எங்கள் அமைச்சர் ஸ்மிதர் எழுந்து எந்தையை நோக்கி வருவதை ஆபர் கண்டார். எந்தையோ அவையோ மறுசொல் எடுப்பதற்குள் முன்னால் எட்டுவைத்து அங்கிருந்த மங்கலத் தாலத்தில் இருந்த மஞ்சளரிசியை எடுத்து மணமகளை வாழ்த்துவதற்குரிய வேதச்சொல்லை உரைத்தபடி என் தலையில் இட்டார்.
“நிஷாதகுலத்து சபரகுடிப்பிறந்த சுபாகுவின் மைந்தர் தீர்க்கபாகுவின் மணமகளே, அவளைச் சூழ்ந்திருக்கும் கந்தர்வர்களே, தேவர்களே, உங்களை வாழ்த்துகிறேன்! இக்குலமகள் அவள் கணவனின் கருவைத் தாங்கி மாவீரர்களைப் பெறுக! மாதரசியரை அடைக! அவர்கள் பேரரசர்களாகவும் அரசியராகவும் அரியணை அமர்க! அவர்களின் கொடிவழி நீள்க! ஆம், அவ்வாறே ஆகுக! வேதம்திகழும் அந்தணனின் இச்சொல் என்றும் அழியாது திகழ்க!” என எங்கள் இருவரையும் வாழ்த்தினார். பாரதவர்ஷத்தில் எங்கும் அந்தணர்சொல் பொய்யென்றாகக் கூடாதென்பது தொல்நெறி. ஸ்மிதர் மஞ்சளரிசி எடுத்து என் மேல் வீசி இரு கைகளையும் தூக்கி “பொய்யாமொழி அந்தணர்சொல் திகழ்க! ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
எந்தைக்கு அதன்பின் வேறு வழி ஏதுமில்லை. உதடுகளை இழுத்து நீட்டி முகத்தை மலரச்செய்து எழுந்து கைகூப்பி “ஆம், இது எங்கள் குலதெய்வத்தின் ஆணை என்றே கொள்கிறோம். இந்த மணஉறவால் இரு நாடுகளும் பகை கடந்து வளம் கொழிக்கட்டும். இருகுடிக் குருதிகளின் கலப்பால் மைந்தர் பிறந்து கொடிவழிகள் பெருகட்டும்” என்றார். அவை எழுந்து கைகளைத் தூக்கி வாழ்த்துரைத்தது. அத்தனை பேரும் உளமின்றி ஒற்றை நடிப்பை வழங்குவதைக் கண்டு என்னுள் கசப்புடன் புன்னகைத்துக்கொண்டேன். உண்மையில் முதற்கணத்தில் எழுந்த திகைப்புக்குப்பின் ஒவ்வொருவரும் உள்ளூர ஆறுதல் கொள்வதையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி மச்சர்களை வெல்ல முடியும். கேகயத்தின் களஞ்சியங்களில் நெல்லும் கருவூலங்களில் பொன்னும் வரத்தொடங்கும்.
அவர்கள் ஒவ்வொருவரும் கையொழியாது வாழக் கற்றவர்கள். தொல்பெருமை சொல்லி சோம்பி அமர மட்டுமே அறிந்தவர்கள். இல்லையென்று சென்று நிற்பதை தங்கள் மூதாதையருக்கான இழிவென்று எண்ணுபவர்கள். கேகயத்து அந்தணர் பாரதவர்ஷத்தின் மூத்த குருமரபினர். முதல் குருமரபினர் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர். தொல்வேதம் மூன்றையும் தாங்களே அமர்ந்தெழுதியவர்கள்போல் தோற்றமளிப்பவர்கள். பதி பெயர்ந்து கிளம்பிச் செல்வார்கள் என்றால் பிற நாடுகளில் அங்குள்ள அந்தணர்களுக்கு இரண்டாமிடத்தில் சென்று அமைய வேண்டியிருக்கும். முதற்பெருமை மீளாது.
அந்தணர் தங்கள் உவகையை வெளிக்காட்டாமல் இறுகிய நெஞ்சுடன் அவ்வாழ்த்தை ஏற்றுரைப்பதுபோல் நடித்தனர். ஆனால் அவர்களின் உடலில் இருந்தே அவ்வுவகையை உணர்ந்த மற்ற குடிகள் நிறைவுகொண்டு தாங்களும் எழுந்து எங்களை வாழ்த்தின. அவை முறைமைகள் ஒவ்வொன்றாக முடிந்து ஓசையில்லாத நடையுடன் கலைந்து செல்கையில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது அவ்விழிகளில் தெரிந்த மெய்யான களிப்பை தொலைவிலிருந்து நிறைவுடனும் அறியாச் சிறு கசப்புடனும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
விராடபுரியின் அரசியாக வந்து அமர்வதுவரை இங்குள்ள அரசியல் என்னவென்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை. மாமன்னர் நளனுக்குப்பின் சிதறிப்போன நிஷதகுடிகளின் பெருங்கூட்டே இது. இரண்டாம் கீசகரால் இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த விராடநிஷாதசம்யோகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரே அரசர் எனப்படுகிறார். கோல் கைக்கொண்டு முடிசூடி அரியணை அமர்ந்துகொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரது ஆணைகளை பிறர் ஏற்க வேண்டுமென்ற எந்த மாறாநெறியும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான ஆணைகள் ஏற்கப்படுவதில்லை. ஆங்காங்கே அக்குடிகளின் தலைவராலும் அவர்களை ஆளும் மூத்தோரவையாலும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
முதலாம் மகாகீசகர் நிஷதகுடிகளை ஒற்றைப் படையென திரட்டுவதற்குரிய நெறிமுறைகளை வகுத்திருந்தார். அதில் ஒவ்வொருவருக்கும் என்னென்ன பணி என்றும் உரிமை என்றும் நிறுவப்பட்டிருந்தது. அதை அக்குடிகளின் தெய்வங்களே வெறியாட்டென பூசகரில் எழுந்து ஆணையிட்டிருந்தன. எதன்பொருட்டும் அஞ்சும் வழக்கமில்லாத தொல்குடிகள் இவர்கள். இவர்களின் புரவித்தேர்ச்சி நிகரற்றது. ஆகவே நிஷதர்கள் போர்முனைகளில் எப்போதும் வெற்றிகொள்பவராக இருந்தார்கள். சூழ்ந்திருந்த ஷத்ரிய அரசர்கள் அனைவரும் இவர்களை அஞ்சுகின்றனர். ஆனால் வெளியே இருந்து நோக்குபவர்கள் காணும் ஒற்றைப் பெரும்கோட்டை அல்ல இந்நகரென்று உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே எவரும் அறியலாம்.
அரசர் சுபாகு நோயுற்று படுக்கையில் இருந்தமையால் என்னை மணந்த அன்றே தீர்க்கபாகு விராடபுரியின் அரசர் என முடி சூடினார். மூதரசர் சில நாட்களிலேயே இறந்தார். அரசியென்று அரியணையில் அமர்ந்து நான் ஓர் ஆணையிட்டால் மறுநாள் பிறிதொரு எளிய குடித்தலைவி இடும் ஆணை அதை மறுக்கமுடியும் என அறிந்தேன். நானும் ஓர் எளிய நிஷத குலத்தலைவி மட்டுமே என்று புரிந்துகொண்டேன். விராடநிஷதக் கூட்டின் பெரிய குலம் சபரர்கள். ஆகவே தீர்க்கபாகு அரசரானார். குடிக்கூட்டம் நினைத்தால் எப்போது வேண்டுமென்றாலும் அவரை விலக்கி பிறிதொருவரை அரசர் என்றாக்க முடியும். அன்று நான் உத்தரனை கருவுற்றிருந்தேன். ஆனால் என் வயிற்றில் பிறக்கும் அம்மைந்தன் அரசனாவான் என்பதற்கு எந்த உறுதியுமில்லை. அதை எண்ணி நான் சில அரசியல்சூழ்ச்சிகளை வகுக்கலானேன்.
அந்நாளில் என் இளையோனாகிய கீசகன் அவன் பிறந்த மச்சர்குடியை ஒரு சிறு தனிநாடு என நிலம்வளைத்து நகர் அமைத்து உருவாக்கிக்கொண்டிருந்தான். மச்சர் குடிகள் எழுவர் அவன் தலைமையில் ஒன்றாயினர். கங்கையில் செல்லும் கலங்களை மறித்து சுங்கம் கொள்ளத்தொடங்கினர். உண்மையில் நீர்க்கொள்ளையர்களாகவே அவர்கள் அங்கு இருந்தனர். மகதமோ காசியோ அஸ்தினபுரியோ அவனை தனித்து அறிந்து முற்றொழிக்க வேண்டுமென்று எண்ணும் தருணம் வரைதான் அவன் அங்கு திகழ முடியும் என்று கீசகன் அறிந்திருந்தான். மகதப்பேரரசர் ஜராசந்தரின் ஒரு படகுப்படை போதும் மச்சர் குலத்தையே அழித்து அவன் தலையை வெட்டிக்கொண்டு செல்வதற்கு.
அவர்களின் படை எழுவதற்கு முன்னரே போதிய செல்வம் சேர்த்து நகரொன்றை அமைத்து சூழ்ந்து கோட்டையையும் கட்டிவிடவேண்டுமென்று அவன் எண்ணினான். அதை வெல்ல படையிழப்பு தேவைப்படும் என்றால் ஷத்ரிய மன்னர்கள் தயங்குவார்கள். மகதத்திற்கோ காசிக்கோ கப்பம் கொடுத்து தனிக்கோலையும் முடியையும் பெற்றுவிட்டால் பிற மச்சநாடுகளை வென்று மச்சர்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முடியும். அவன் உள்ளத்திலிருந்தவர் விராடநிஷதக் கூட்டமைப்பை உருவாக்கிய இரண்டாவது மகாகீசகர். ஆனால் அதற்கு அவன் கொள்ளையடித்தாக வேண்டியிருந்தது. கொள்ளையடிக்குந்தோறும் மகதத்தின் வாள் அவனை கண்ணுக்குத் தெரியாமல் அணுகியது.
அந்த இக்கட்டுநிலையில் நான் அவனை அழைத்துக்கொண்டால் அவனுக்கு வேறுவழியில்லை என கணித்தேன். அவன் எனக்கு படைக்கலமாக இருப்பானென்று எண்ணினேன். என் தூதர்களை அனுப்பி அவனை வரச்சொல்லி இந்நகருக்கு வெளியே சோலையொன்றில் நிஷதகுடிகள் எவரும் அறியாமல் சந்தித்தேன். தன்னை விராட நாட்டின் முதற்படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று அவன் கோரினான். எந்நிலையிலும் எனக்கோ மைந்தருக்கோ மாறுகொள்வதில்லை என்று வாள்தொட்டு ஆணையிட்டான்.
சில நாட்களுக்குப் பின் எனக்கு உத்தரன் பிறந்தான். கேகயத்தில் இருந்து என் இளையோன் சத்ருக்னன் பரிசில்களுடன் அணியூர்வலமாக விராடபுரிக்கு வந்து என்னை வாழ்த்தினான். அதை வெல்லும் வரிசைகளும் பரிசில்களுமாக கீசகன் இந்நகருக்கு வந்தான். விராடருக்கு அவன் அளித்த பரிசில்களும் அவர் முன் வாள்தாழ்த்தி பணிந்து நின்றதும் அவரை மகிழ வைத்தது. அவனுடைய பெருந்தோள்களைக் கண்டு நிஷாதர்கள் விழிகளுக்கு அப்பால் அஞ்சுவதை நான் கண்டேன். அவனை என் இளையோனாக இங்கேயே சில நாட்கள் தங்க வைத்தேன்.
அப்போது தெற்கே வாகட குலம் எங்களுக்கு எதிராக கிளர்ந்திருந்தது. ஒரு படைநீக்கம் நிகழவிருந்தது. அதற்கு உதவும்படி ஆணையிட்டேன். நிஷாதர்களுக்குரிய படைக்கலங்களை கலிங்கத்திலிருந்து கொண்டுவரும் பணியை அவனிடம் அளித்தேன். நிஷாதர்களுக்கு பொருட்களை வாங்கவோ விலைபேசவோ தெரியாதென்பதனால் மூன்றில் ஒன்றே தேறும் என்ற நிலையே இங்கிருந்தது. கீசகன் அதை மிகத் திறமையாக செய்தான். அவன் தெரிவுசெய்த படைக்கலங்களில் ஒன்றுகூட பழுதென்றிருக்கவில்லை. அவன் அளித்த பணத்திற்கு நிஷாதர்கள் எவரும் அவற்றை பெற்றிருக்க முடியாது.
சதகர்ணிகளின் உடல் சிதைந்த உதிரி அரசுகளாகத் திகழ்ந்த வாகடர்களும் பல்லவர்களும் இணைந்து படைதிரட்டினர். அவர்களுக்கு அமைந்த ராஜமகேந்திரபுரித் துறைநகரமே அவர்களை ஆற்றல்கொண்டவர்களாக ஆக்கியது. அங்கிருந்து பீதர்நாட்டுப் படைக்கலங்களை பெற்றுக்கொண்டார்கள். திருவிடத்திலிருந்து வில்லவர்களைத் திரட்டி ஒரு படையை அமைத்தனர். தெற்குப்புயல்கள் என அவர்களை நம் அமைச்சர்கள் அழைத்தனர். அவர்கள் நமது தென்னெல்லைகளை தாக்கினார்கள். அவர்களின் இலக்கு கிருஷ்ணையை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதை எய்திவிட்டார்கள் என்றால் ஒரு தலைமுறைக்குள்ளாகவே வெல்லமுடியாதவர்களாக ஆகிவிடுவார்கள் என நாங்கள் அறிந்திருந்தோம்.
எங்கள் குடித்தலைவர்கள் படைஎழுச்சிக்கு நாள் குறித்த அன்று அடுத்த செய்தி வந்தது. மகாகீசகரால் சிதறடிக்கப்பட்டு தெற்கே கிஷ்கிந்தைக்கும் ரேணுநகரிக்கும் பின்வாங்கிச் சென்றிருந்த சதகர்ணிகள் படைதிரட்டிக்கொண்டு வந்து திருமலைத்துவாரத்தை கைப்பற்றி அதை மையமென வலுவாக்கிக் கொண்டனர். நல்லமலையும் பல்கொண்டா மலையும் கோட்டைச்சுவர்கள் என காக்கும் அந்நகரை படைகொண்டு வெல்வது அரிது. சதகர்ணிகளுக்கும் பல்லவர்களுக்கும் வாகடர்களுக்கும் இடையே படைக்கூட்டு ஒன்று கைச்சாத்தாகியது.
அத்தனை பெரிய படைக்கூட்டை எதிர்கொள்ளும் ஆற்றல் அன்று விராட அரசுக்கு இருக்கவில்லை என அனைவரும் அறிந்திருந்தனர். வடக்கே ஷத்ரியர்களின் வஞ்சமிருந்தது. அன்று மகதத்திற்கும் அஸ்தினபுரிக்குமிடையே போரென விளைய வாய்ப்புள்ள பூசல் நடந்து கொண்டிருந்ததால் மட்டுமே நாங்கள் ஆறுதல் கொண்டு ஒதுங்கியிருந்தோம். தெற்கில் எங்கள் படைமுனைகள் சற்று ஆற்றல் இழந்தாலும்கூட வடக்கிலிருந்து கலிங்கனும் வங்கனும் சேதிநாட்டானும் படைகொண்டு வரக்கூடுமென அறிந்திருந்தோம். ஆனால் வேறுவழியில்லை, அஞ்சி வாளாவிருந்தால் அதுவே அழைப்பென்றாகிவிடும். தென்னக முக்கூட்டு எங்கள்மேல் நேரடியாக படைகொண்டுவந்தால் நாங்கள் அழிவோம்.
யார் போர்முகம் நிற்பது என்ற கேள்வி எழுந்தபோது ஒவ்வொரு போருக்கும் நான் நான் என்று முந்தி வந்து நிற்கும் குலத்தலைவர்கள் அனைவரும் தயங்கி பின்வாங்கினார்கள். அப்போர் தோல்வியில்தான் முடியும் என்றும் அதன் பழியை தங்கள் குலங்கள் சுமக்க வேண்டியிருக்கும் என்றும் நிஷதகுடியின் அழிவுக்கான தொடக்கமாக அது அமையுமென்றும் ஒவ்வொருவரும் எண்ணினர். “எவர் படைகொண்டு எழுவது?” என்றார் விராடர். அவர் அன்றே படைத்திறனில்லாதவர் என்றும் மதுக்களியில் அரண்மனையில் அமைவதற்கு மட்டுமே அறிந்தவர் என்றும் அறியப்பட்டிருந்தார். அந்தப் போரையே பிறருடைய பணி என்று அவர் எண்ணினார். அப்பொறுப்பை எவரிடமேனும் அளித்து அவையை முடித்துவிட்டு அகத்தளத்திற்கு செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார்.
“எவர் படைமுகம்கொள்வது? கூறுக!” என்று நான் அவையிடம் கேட்டேன். அவை அவ்வினாவின் முன் பாவைநிரை என அமைதியாக இருந்தது. நான் “குடிமூத்தார் ஒப்புக்கொண்டால் என் இளையோன் கீசகன் படைநடத்துவான்” என்றேன். திகைப்புடன் அனைவரும் கீசகனை நோக்கி திரும்ப அவன் எழுந்து கைகூப்பி “குடிப்பெரியோரின் நல்வாழ்த்து அமையும் என்றால் வாகடர்களையும் பல்லவர்களையும் கொன்று தலைகொண்டு மீள்வேன்” என்றான். “சதகர்ணிகளை மீண்டும் ரேணுநகரிக்கே துரத்திவிட்டுத்தான் இந்நகர் புகுவேன், ஆணை!” என்று வாளைத் தூக்கி வஞ்சினம் உரைத்தான்.
அவை அப்போதும் அமைதியாக இருந்தது. என்ன முடிவெடுப்பதென்று அவர்கள் அறியவில்லை. ஆனால் அவர்களுக்குள் ஆறுதல் எழுவது தோள்கள் தளர்வதில் தெரிந்தது. “என்னுடன் பன்னிரண்டு மச்சர்குலங்களின் படைகள் உள்ளன. நிஷதர்களுக்காக படைஎதிர்கொண்டு நிற்பதில் பெருமை கொள்பவர்கள் அவர்கள்” என்றான் கீசகன். மூத்த குடித்தலைவரான பீடகர் எழுந்து “இத்தருணத்தில் மகாகீசகரின் பெயர்கொண்ட ஒருவர் இந்த அவையில் இருப்பதும், இப்பொறுப்பை ஏற்பதும் நம் தெய்வங்களின் ஆணை போலும். அவ்வாறே ஆகுக!” என்றார். அவை உயிர்கொண்டு “ஆம், அவ்வாறே ஆகுக!” என குரலெழுப்பியது.
தலைமை அமைச்சர் ஆபர் எழுந்து “இந்த அவை மாற்று ஒன்றும் சொல்லாதபோது அதை ஒப்புகிறது என்றே கொள்ளலாம்” என்றார். விராடர் அவையில் என்ன ஒலிக்கிறதோ அந்த திசை நோக்கி தலையாட்டுவதையே ஆட்சி என்று நெடுங்காலமாக எண்ணி வருபவர். “ஆம், அரசாணையென அதை வெளியிடுக!” என்றார். கீசகன் என்னை ஒருகணம் நோக்கிவிட்டு “அவ்வாணையை தலைசூடுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து கீசகனை வாழ்த்தி குரலெழுப்பினர்.
குடித்தலைவர்கள் எழுவர் எழுந்து சென்று தனியறையில் சொல் சூழ்ந்தபின் திரும்பி வந்து கீசகனை விராடநிஷதக்கூட்டமைப்பின் முழுமுதல்படைத்தலைவனாக அமர்த்துவதாக அறிவித்தனர். பல போர்க்களங்களில் மகாகீசகர் ஏந்தி படைமுகம் நின்ற அவருடைய பெரிய உடைவாளை கொண்டுவந்து அவையிலேயே கீசகனிடம் அளித்தனர். அவன் மண்டியிட்டு அமர்ந்து அதை பெற்றுக்கொண்டு அவைக்குமுன் நின்று தலைக்குமேல் தூக்கி மும்முறை ஆட்டி “வென்றுவருவேன்! உயிர் வைத்தாடுவேன்! ஒருபோதும் பணியேன்!” என வஞ்சினம் உரைத்தான். அதுவரை இருந்த தயக்கங்கள் விலக நிஷாதர்களின் பேரவை எழுந்து கைகளை விரித்து அவனை வாழ்த்தி பெருமுழக்கமிட்டது.
“நான் விரும்பியதே நிகழ்ந்தது. கீசகன் அப்போரில் வெல்வது எளிதல்ல என்றாலும் எவரேனும் வெல்லக்கூடுமென்றால் அவனே என அறிந்திருந்தேன். ஆனால் உள்ளிருந்து முட்டை ஓடை குத்தி உடைக்கும் சிறகுகொண்ட குஞ்சு என என் உள்ளத்தில் அறியாத அச்சம் ஒன்று சிறகடித்துக்கொண்டே இருந்தது” என்றாள் சுதேஷ்ணை. “நான் அன்று அஞ்சியது என்ன என்பதை நெடுங்காலம் கழித்தே புரிந்துகொண்டேன், அவனுடைய பெயரை. கீசகன் என்னும் பெயரை அவனுக்கு இட்ட அந்த அன்னையின் விழைவை நான் அப்போது கணிக்கத் தவறிவிட்டேன்.”