நீர்க்கோலம் - 34

33. குருதிச்சோறு

flowerமுழங்கும் பெருமுரசின் அருகே நின்றிருப்பதுபோல் பேரோசை வந்து செவிகளை அறைந்து மூடி சித்தத்தின் சொற்களனைத்தையும் அழித்தது. கண்களுக்குள்ளேயே அவ்வோசையை அலைகளென காணமுடிந்தது. நளன் கருணாகரரிடம் “என்ன ஓசை அது?” என்றான். “இளவரசர் நகர்புகுகிறார்” என்றார் கருணாகரர். புன்னகையுடன் “இத்தனை பெரிய வரவேற்பா அவனுக்கு?” என்றான். “எங்கெங்கோ தேங்கி நின்றிருந்த பல விசைகள் அங்கு சென்று சேர்கின்றன, அரசே” என்றார் கருணாகரர்.

அம்முகத்திலிருந்த கவலையை திரும்பிப்பார்த்து “அதற்கென்ன? ஒரு நாட்டின் படைத்தலைவன் மக்களால் வாழ்த்தப்படுவதென்பது வெற்றிக்கு இன்றியமையாததுதான் அல்லவா?” என்றான் நளன். “அதுவல்ல. நீங்கள் எதையுமே கூர்ந்து நோக்காமலாகி நெடுங்காலமாகிறது, அரசே” என்று கருணாகரர் சொன்னார். “இங்கு இந்திரனின் சிலை நிறுவப்பட்ட நாள்முதலே அடக்கப்பட்ட கசப்பொன்று நமது குடிகளுக்கிடையே இருந்தது. ஷத்ரிய அரசி வந்து நமது அரியணையில் அமர்ந்தது பிறிதொரு கசப்பென வளர்ந்தது. நமது படைகள் அனைத்திற்கும் படைத்தலைவர்களாக விதர்ப்ப நாட்டவர் இருப்பது ஒவ்வொரு நாளும் அதை வளர்க்கிறது. இன்று இளவரசர் காகக்கொடியுடன் நகர்புகும்போது இத்தனை எழுச்சியுடன் நமது மக்கள் எதிர்கொள்கிறார்களென்றால் அவர்கள் தங்களிடமிருந்தும் பேரரசியிடமிருந்தும் பெரிதும் விலகிச்சென்றிருக்கிறார்கள் என்றுதான் பொருள். அது நமக்கு நற்செய்தி அல்ல.”

நளன் “எண்ணி அஞ்சி ஒடுங்கியிருக்கும் காலத்தை நான் கடந்துவிட்டேன், அமைச்சரே. இன்னும் என் இளையோனாகவே அவன் இருப்பான். இக்கணம்வரை பிறிதொன்று நிகழும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் நான் காணவில்லை. அவனுக்கு நான் அடைந்த வெற்றிகளும் புகழும் சிறிய உளக்குறையை அளித்திருக்கின்றன என்று எனக்கு தெரியும். இன்று நமது மக்கள் அளிக்கும் இப்பெரிய வரவேற்பும் கொண்டாட்டமும் அதையும் இல்லாமலாக்கும்” என்றான். “மேலும் அவனுக்கென்று தனியாக அரசொன்றை அளிக்கவே தமயந்தி எண்ணியிருக்கிறாள். நேற்று முன்தினம் என்னிடம் அதைப்பற்றி பேசினாள். விஜயபுரியை தலைநகராகக்கொண்டு அவன் ஒரு அரசை நிறுவி தென்னகத்தில் விரிந்து செல்வானென்றால் நிஷத குடிகள் அதன்பொருட்டு பெருமைப்படலாம்.”

கருணாகரர் மேற்கொண்டு சொல்லெடுக்கத் தயங்கி அவனுடன் சென்றார். குடிப்பேரவை கூடி அரசனின் வருகைக்காக காத்திருந்ததை வெளியே பறந்த கொடிகள் காட்டின. அரசவையை ஒட்டிய சிறிய துணை அறையில் முழுதணிக்கோலத்தில் தமயந்தி காத்திருந்தாள். நளன் உள்ளே நுழைந்ததும் எழுந்து தலைவணங்கி “அரசருக்கு நல்வரவு” என்றாள்.

பத்து கால்விரல்களிலும் அருமணிகள் பதித்த மெட்டிகள். அனல் வளையம்போல் செம்மணிகள் சுடர்விட்ட சிலம்புகள். பொன்னலைகளென உலைந்த தொடைச்செறியும் கொன்றை மலர்க்கதிரென மேகலையும். பொன்னருவிகளென மணியாரங்களும் மாலைகளும் சரங்களும் பரவிய யானைமருப்பு மார்பு. பொற்பறவையின் இரு இறகுகளெழுந்த தோள்மலரும் சுற்றிய நாகமென தோள்வளையும். முழங்கை வரை செறிந்திருந்தன சிறுவளைகளும் மணிவளைகளும் செதுக்குவளையலும் நெளிவளைகளும். பத்து விரல்களிலும் கல்மணி கணையாழிகளும் கன்னங்களில் அனற்செம்மையைப் பாய்ச்சிய செம்மணிக்குழைகளும் நெற்றியில் துளித்துதிரா பனி என நின்ற நீலமணிச் சுட்டியும். கூந்தல் முழுக்க பொன்வரிகளாகப்பரவிய குழற்சரங்கள். நீண்ட பின்னலை அணிசெய்தன செவிமலர்கள்.

அணிகள் அவளை மண்ணிலிருந்து அகற்றி கண்ணுக்குத் தெரியா திரையொன்றில் வரையப்பட்ட ஓவியமென மாற்றின. ஒருகணம் அவளை முன்பொருபோதும் கண்டதில்லையென்ற உளமயக்கை நளன் அடைந்தான். பின்னர் புன்னகையுடன் “ஓவியம் போல…” என்றான். அவளும் சிரித்து “ஆம், ஆடியில் நோக்கியபோது தொன்மையானதோர் சிற்பத்திற்குள் நுழைந்து அதை தூக்கிக்கொண்டு நின்றிருப்பதுபோல் தோன்றியது” என்றாள். “நன்று. அவை நிறைந்திருக்கும் விழிகளுக்கு முன்னால் நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லையும் இந்த அணிகளும் முடியும் செங்கோலுமே ஆணைகளென்றாக்குகின்றன” என்றான் நளன்.

கருணாகரர் அவைக்குச் சென்று நோக்கிவிட்டு திரும்பி வந்து “அனைத்தும் சித்தமாக உள்ளன, அரசி” என்றார். தமயந்தி தன்னருகே நின்ற சேடியிடம் விழி காட்ட அவள் தமயந்தியின் ஆடையின் சற்று கலைந்திருந்த மடிப்புகளை சீரமைத்தாள். கருணாகரர் வெளியே மெல்லிய குரலில் ஆணையிட மங்கல இசைக்கலங்கள் பெருகியொலித்தன. நகரெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளுக்குள் அவ்விசை நதிநீர்ப்பெருக்கில் விழுந்த சிறு செந்தூரத்துளிபோல கரைந்து உருவழிந்தது.

நளனும் தமயந்தியும் இணைத்தோள் கொண்டு நடந்து இடைநாழியினூடாக அரசப்பேரவைக்குள் நுழைந்தனர். நீள்வட்ட வடிவமான அந்த அவையில் இருக்கைகள் அனைத்தையும் நிறைத்திருந்த வேதியரும் சான்றோரும் வணிகரும் குடித்தலைவர்களும் அயல்வருகையாளரும் எழுந்து உரத்த குரலில் “பேரரசர் வாழ்க! இடம் அமர்ந்த அரசி வாழ்க! இந்திரபுரி வெல்க! எழுக மின்கதிர்க்கொடி!” என்று வாழ்த்துரைத்தனர். இரு கைகளையும் கூப்பி மலர்ந்த புன்னகையுடன் நளனும் தமயந்தியும் சென்று அரியணையை அணுகி அதை தொட்டு சென்னி சூடியபின் அகம்படியர் ஆடை ஒதுக்க அமர்ந்தனர். அவர்கள் அமர்ந்தபின் குடிகள் வாழ்த்தொலி எழுப்பி கைகூப்பியபடி தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

ஏழு வைதிகர்கள் அரசமேடைமேல் ஏறி கங்கை நீர் தெளித்து அவர்களை முடித்தூய்மை செய்து வேதச்சொல் உரைத்து வாழ்த்தி மீண்டனர். குடிமூத்தார் மூவர் பொற்தாலத்தில் நிஷத அரசின் மணிமுடியைக்கொண்டு வந்து நீட்ட சபர குடித்தலைவர் அம்மணிமுடியை எடுத்து நளன் தலையில் வைத்தார். காளகக்குடி மூத்தவர் ஒருவர் இரு ஏவலர்கள் கொண்டு வந்த செங்கோலை அவனிடம் அளித்தார். மூதன்னையர் மூவர் கொண்டு வந்த மணிமுடியை மூதாட்டி ஒருத்தி எடுத்து தமயந்தியின் தலையில் அணிவித்தாள். அவர்களுக்குப் பின்னால் மூன்று வீரர்கள் பெரிய வெண்குடை ஏந்தி அதன் விளிம்புகளில் தொங்கிய முத்துச் சரங்கள் மெல்ல பறக்கும்படி சுழற்றினர்.

மங்கல இசையும் அணிச்சேடியரின் குரவையொலியும் உரக்க ஒலித்தன. நளன் கையசைத்து நிமித்திகரை அழைத்து “அவை நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பு இளையவனுக்கும் இந்த அவை வாழ்த்து தெரிவிக்கட்டும்” என்றான். விழிகள் விரிந்து பின் அணைய பணிந்து “அது முறையல்ல” என்றார் நிமித்திகர். “நிகழ்க!” என்றான் நளன். அவர் தலையசைத்தபின் அறிவிப்பு மேடைமேல் ஏறி தன் வெள்ளிக்கோலை மும்முறை சுழற்ற அவை செவிகூர்ந்தது ஆனால் அவர் கூவியறிவித்ததை அவையினர் கேட்கவில்லை. மும்முறை நிஷத இளவரசருக்கு வாழ்த்துரைத்த நிமித்திகர் தன் குரல் கரைந்து மறைந்ததைக்கண்டு திரும்பி நளனை பார்த்தார். நளன் சிரித்தபடி “இன்று இந்த அவையில் ஒன்றும் நிகழ முடியாது. இளையோன் வரட்டும். நாம் காத்திருப்போம்” என்றான்.

தமயந்தி நளன் அருகே குனிந்து “இளையவர் காகக்கொடியுடன் நகர் நுழைகிறார்” என்றாள். “அறிவேன்” என்று அவன் சொன்னான். தமயந்தி “அது ஓர் அறைகூவல்” என்றாள். “நான் அவ்வாறு எண்ணவில்லை. தனக்கென தனி அடையாளம் கொள்ளும் எளிய முயற்சி அது. முதிரா அகவையில் அனைவருக்கும் அத்தகைய விழைவுகள் உண்டு.” தமயந்தி சிலகணங்களுக்குப்பின் “கலிங்க இளவரசியைப்பற்றி உசாவினேன். அவள் இயல்பு குறித்து நல்ல செய்தி எதுவும் என் செவிக்கு எட்டவில்லை” என்றாள். நளன் புன்னகைத்து “பிறிதொரு வழியில் அமைய வாய்ப்பில்லை” என்றான். புருவம் சுருங்க “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள் தமயந்தி. “அவள் நிஷத குடியில் உனக்கு இணையாக அல்லவா வருகிறாள்?” என்றான். தமயந்தி “நன்று” என்றபின் இயல்பாக முகம் திருப்பிக்கொண்டாள்.

நளன் சிரித்து “சினம் கொள்ளவேண்டாம். உன்னை சீண்டுவதற்காக சொன்னேன்” என்றான். “எனக்குள் எழும் உள்ளுணர்வுகள் எவையும் நன்று அல்ல” என்றாள் தமயந்தி. நளன் “அவ்வுள்ளுணர்வுகள் ஏன் எழுகின்றன என்று எண்ணிப் பார்” என்றான். தமயந்தி “ஏன்?” என்றாள். நளன் “நமது அரசு விரிந்துகொண்டு செல்கிறது. வடக்கே நாம் வெல்ல இனி சில நாடுகளே எஞ்சியுள்ளன. அவ்வாறு விரிவடைகையில் இரு உணர்வுகள் எழும். தெய்வங்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம் எனும் ஆணவம். தெய்வங்களின் வாயில் சென்று முட்டுகிறோமோ என்னும் தயக்கம். உனக்கிருப்பது இரண்டாவது உணர்வு. அது நன்று. முதல் உணர்வு எழுமென்றால் தெய்வங்களால் வீழ்த்தப்படுவோம். அசுரர்களென்று ஆவோம்” என்றான். தமயந்தி புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தாள்.

அவைக்குள் நுழைந்த மூன்று நிமித்திகர்கள் தலைவணங்கி சொல்காத்தனர். நளன் கையசைக்க அவர்களில் ஒருவன் நளனுக்கும் அவைக்குமாக உரத்த குரலில் “நிஷத இளவரசர், காளகக்குடித் தோன்றல், கலியருள் கொண்ட மைந்தர் புஷ்கரர் அவை நுழைகிறார்” என்றான். நளன் “நன்று. இந்த அவை இளவரசரை உவகையுடன் வரவுகொள்கிறது” என்றான். கையில் தன் குடிக்கோலை ஏந்தி, காளகக்குடிக்குரிய காகச்சிறகு சூடிய கரும்பட்டுத் தலையணியுடன் இரு மூத்தகுடியினர் சூழ சீர்ஷர் அவைக்குள் நுழைந்தார். நளனையும் தமயந்தியையும் வெறுமனே வணங்கிவிட்டு அவையை நோக்கி இடைவளைத்து வணங்கினார். அவருக்கான இருக்கையில் சென்று அமர்ந்து செருக்குடன் தலை நிமிர்ந்து ஏளனமோ என தோன்றிய புன்னகையுடன் அவையை ஏறிட்டார்.

வெளியே மங்கல ஓசைகள் எழுந்தன. வலம்புரிச் சங்கை முழக்கியபடி இசைச்சூதர் ஒருவர் அவைக்குள் நுழைந்தார். தொடர்ந்து காகக்கொடியை ஏந்தியபடி கவச உடையுடன் நிஷத வீரனொருவன் நுழைந்து அக்கொடியுடன் அரச மேடைக்கருகே வந்து நின்றான். அதைத் தொடர்ந்து மங்கல இசைக்கலங்களுடன் சூதர்கள் பன்னிருவர் வந்து இசைத்தபடியே சென்று முன்னரே அவையில் இடதுமூலையில் நின்றிருந்த இசைச்சூதர்களுடன் சேர்ந்துகொண்டனர். பொலிதாலங்களுடன் தொடர்ந்து வந்த அணிப்பரத்தையர் பன்னிருவர் அவைக்கு வந்து மங்கலம் காட்டி நின்று தலைவணங்கி பின் நகர்ந்து அங்கு முன்னரே நின்றிருந்த பரத்தையருடன் இணைந்துகொண்டனர்.

அமைச்சர் கருணாகரரால் வழி நடத்தப்பட்டு புஷ்கரன் அவைக்குள் நுழைந்தான். காளகக்குடிகளுக்குரிய காகஇறகு சூடிய பட்டுத்தலையணியை அணிந்திருந்தான். அதில் அருமணிகள் கோத்த மாலைகள் சுற்றப்பட்டிருந்தன. அவன் அணிந்திருந்த ஆடை நளன் அணிந்திருந்தது போலவே உருவாக்கப்பட்டிருந்தது. கங்கணங்களும், தோள்சிறகும், பொற்கச்சையும், அதில் அணிந்த குத்துவாளின் நுண்தொழிற் செதுக்குகள் கொண்ட கைப்பிடியும், கழுத்திலணிந்திருந்த ஆரங்களும், மகரகுண்டலங்களும் முழுக்க நிஷத அரசகுடித் தலைவருக்குரியவையாக இருந்தன. அரசவையினர் எழுந்து நின்று அவனுக்கு வாழ்த்துரைத்தனர். கைகளை தலைக்குமேல் தூக்கி அவ்வாழ்த்தை அவன் ஏற்றுக்கொண்டான்.

கருணாகரர் அவன் காதருகே குனிந்து “இரு கைகளையும் கூப்பி தலைகுனிந்து அவ்வாழ்த்தை ஏற்கவேண்டும், இளவரசே” என்றார். உதடசைவிலிருந்து அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொண்ட நளன் இடக்கையால் மீசையை நீவியபடி புன்னகைத்தான். புஷ்கரன் அக்கூற்றை புறக்கணித்து மூன்றடி எடுத்து வைத்து நளனின் முன் வந்து நின்று சற்றே தலைவணங்கி “மூத்தவருக்கு தலைவணங்குகிறேன். நான் கலிங்க இளவரசியை மணம்கொள்ளும் சூழலொன்று உருவாகியுள்ளது. இளவரசி என்னை விரும்புகிறாள் என்று செய்தி அனுப்பப்பட்டது. வீரர்களுக்குரிய முறையில் அதை நானும் ஏற்றுக்கொண்டேன். எனது ஓவியத்திற்கு மாலையிட்டு உளம்கொண்ட அவளை உடைவாள் அனுப்பி நானும் உளம்கொண்டேன்” என்றான். அவன் அச்சொல் அவைக்கு முழுக்க கேட்கவேண்டுமென எண்ணியது தெரிந்தது.

கருணாகரரை நோக்கியபின் “நமது தூதர்களின் நாப் பிழையால் கலிங்கர் நமது மணத்தூதை ஏற்கவில்லை. இளவரசி பிறரை ஏற்க இயலாதென்றும் நான் சென்று அவளை கொள்ளவில்லையென்றால் வாளில் குதித்து உயிர் துறப்பதாகவும் எனக்கு செய்தி அனுப்பினாள். ஆகவே நானே சென்று அவளை கவர்ந்து விஜயபுரிக்கு கொண்டு சென்றேன். நமது குலமுறைப்படி அவளை மணக்க விரும்புகிறேன். அதற்கு தங்கள் ஒப்புதலை கோருகிறேன்” என்றான். நளன் நகைத்தபடி எழுந்து அவன் தோளில் கைவைத்து “நன்று. நிஷதபுரிக்கு பெருமை சேர்ப்பதே உன் செயல்” என்றான். புஷ்கரன் “நம் குடிவீரத்தை ஒருபோதும் நாம் இழப்பதில்லை, மூத்தவரே” என்றான்.

தமயந்தியை அவன் வணங்கி முறைமைச்சொல் சொல்லவேண்டுமென அவர்கள் காத்திருக்க புஷ்கரன் அவை நோக்கி திரும்பி “இந்த அவைக்கும் செய்தியை அறிவிக்கிறேன். நற்சொல் நாடுகிறேன்” என்றான். தமயந்தி முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் எழுந்து “நிஷதகுடி மகிழ்வு கொள்ளும் மணஉறவு இது, இளையவரே. ஆகவேதான் இந்திரபுரி இதுவரை அறிந்தவற்றில் மிகப் பெரிய விழவென இதை நிகழ்த்தவேண்டுமென்று நான் ஆணையிட்டேன்” என்றாள். அவளை நோக்கி விழிதிருப்பாமல், மறுமொழி உரைக்காமல் புஷ்கரன் பொதுவாக தலைவணங்கினான்.

சீர்ஷர் எழுந்து “இந்த மணவிழவு காளகக்குடியின் மூத்தோரால் விஜயபுரியில் நிகழ்த்தப்படவிருந்தது. பேரரசி கேட்டுக்கொண்டதற்கேற்ப நாங்கள் இங்கு வந்தோம்” என்றார். அவைமுறைமை அனைத்தையும் மீறி அவர் எழுந்ததும் பொருந்தாக் குரலில் உரக்க பேசியதும் அவையெங்கும் ஒவ்வாமை நிறைந்த அசைவுகளை உருவாக்கியது. கருணாகரர் அவரை நோக்கி மெல்லிய குரலில் “நன்று மூத்தவரே! அமர்க! நிகழ்வுகள் தொடங்கட்டும்” என்றார். “ஆம், இங்கு அவை நிகழ்வுகள் நடக்கட்டும்” என்றார் சீர்ஷர், ஒப்புதல் அளிக்கும் அரசரின் கையசைவுகளுடன். நளன் அவையினரை நோக்கி “நிஷதகுடியின் அவையினரே, எனது இளையோன் கலிங்க இளவரசியை மணப்பது இந்த அவைக்கு முற்றொப்புதல் என்று எண்ணுகிறேன்” என்றான். அவையினர் எழுந்து தங்கள் குலக்குறி பொறித்த கோல்களைத் தூக்கி “ஆம், ஒப்புதலே” என்று குரல் எழுப்பினர்.

தலைவணங்கிய நளன் “குலமுறைப்படி நான் எனது அமைச்சரையும் குடிமூத்தாரையும் அனுப்பி நகருக்கு வெளியே தங்கியிருக்கும் கலிங்கத்து இளவரசியை அழைத்து வர ஆணையிடுகிறேன். இளவரசிக்கும் என் இளையோனுக்குமான மணவிழா நம் குடிகள் நிறைந்து அமர்ந்திருக்கும் செண்டு வெளிப்பந்தலில் இன்று இரவு நிகழும்” என்றான். அவை “இளைய நிஷாதர் வாழ்க! காளகர் புஷ்கரர் வாழ்க! விஜயபுரிக்காவலர் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பியது. நளன் “இந்த மணநிகழ்வுக்குரிய அரசு அறிவிப்புகள் அனைத்தையும் அமைச்சர் அவையில் அறிவிப்பார்” என்றபின் கைகூப்பி மீண்டும் அரியணையில் அமர்ந்தான்.

கருணாகரர் தலைவணங்கி புஷ்கரனை அழைத்துச்சென்று அவனுடைய பீடத்தில் அமரவைத்தபின் மேடைக்கு வந்து முகமனுரைத்துவிட்டு “அவையீரே, இம்மண நிகழ்வை ஒட்டி பன்னிரு அறிவிப்புகள் உள்ளன” என தொடங்கினார். “கலிங்க அரசரிடம் அவருடைய மகளை எல்லை மீறிச்சென்று கவர்ந்து வந்ததற்காக பொறுத்தருளக்கோரி மாமன்னர் நளன் விடுக்கும் வணக்க அறிவிப்பு முதன்மையானது. இவ்விழவு முடிந்தபின் கலிங்க அரசர் விரும்பினால் குருதியுறவுகொண்ட அரசென்ற முறையில் அவர்கள் கட்ட வேண்டிய கப்பத்தை முழுமையாகவே நிறுத்துவதற்கும், இந்நகர் புகுந்து நளமாமன்னருக்கு இணையாக அமர்ந்து அவை முறைமைகளை ஏற்பதற்கும் அவர்களுக்கு விடுக்கும் அழைப்பு இரண்டாவது.”

“மாமன்னர் நளனின் இளையோனாகிய புஷ்கரரை விஜயபுரியின் அரசரென முடியணிவிக்கும் அறிவிப்பு மூன்றாவதாகும்” என்றார் கருணாகரர். அவையிலிருந்த காளகக்குடிகள் அனைவரும் எழுந்து தங்கள் கோல்களைத் தூக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவ்வொலி அடங்குவதற்காக காத்திருந்த கருணாகரர் மீண்டும் “விஜயபுரியின் அரசர் இந்திரபுரிக்கு இணையரசராகவும் அரசுமுறை உறவுகள் அனைத்தையும் பேணுபவராகவும் திகழ்வார். இரு நாடுகளுக்கும் ஒரே கொடியும் ஒரே அரச அடையாளமும் திகழும்” என்றார். அவை கலைவோசையுடன் அமைதியடைந்தது. கருணாகரர் “விஜயபுரியின் படைத்தலைவராக சிம்மவக்த்ரரை பேரரசி தமயந்தி அறிவிக்கிறார். விஜயபுரியை சூழ்ந்துள்ள சதகர்ணிகள், திருவிடத்தவர் அனைவரையும் எதிர்கொண்டு காக்க அவரால் இயலும்” என்றார். அவையில் ஆழ்ந்த அமைதி நிலவியது. எவரோ இருமும் ஒலி உரக்கக் கேட்டது.

“விஜயபுரியின் அரசர் என முடிசூட்டிக்கொண்ட புஷ்கரர் கலிங்க இளவரசியை முறைப்படி மணம்கொள்வதற்கான ஆணை இத்துடன் அமைகிறது. காளகக்குடிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பும் விருதுகளும் குறித்த அறிவிப்புகள் தொடரும். அதற்குப்பின்…” என்று கருணாகரர் தொடர சீர்ஷர் எழுந்து தன் கோலைத் தூக்கி “காளகக்குடிகளுக்கு எவரும் கொடையளிக்க வேண்டியதில்லை. நாங்கள் ஆளும் மண்ணை எங்கள் உடமையென கொள்ளவும் காக்கவும் எங்களால் இயலும்” என்றார். அவர் அருகே சென்று “அமர்க! அறிவிப்புகள் முடியட்டும்” என்று நாகசேனர் சொன்னார். “நீ துணையமைச்சன். உன் சொல்கேட்டு நான் அமரவேண்டியதில்லை” என்றார் சீர்ஷர்.

பொறுமையுடன் “அமர்க, குடித்தலைவரே!” என்றார் நாகசேனர். சீர்ஷர் “நீ அந்தணன் என்பதனால்…” என்றபின் அமர்ந்து உரக்க “இங்கு நிகழும் சூழ்ச்சியென்ன என்று எங்களுக்கு புரியாமல் இல்லை” என்றார். கருணாகரர் அவரை நோக்காமல் “நமது எல்லைகள் மிகுந்துள்ளன. இந்த மணம்கொள்ளலை கலிங்கர் விரும்பவில்லையென்றால் அவர் மகதனுடனும் மாளவனுடனும் கூர்ஜரனுடனும் கூட்டுச் சூழ்ச்சியில் ஈடுபடக்கூடும். ஒருவேளை எல்லைகளில் படைநகர்வு நடக்கலாம். அதை எதிர்கொள்ளும்பொருட்டு நமது எல்லைகள் அனைத்திலும் படைகளை நிறுத்த வேண்டியுள்ளது. அப்படைநகர்வுக்கான ஆணைகள் இங்கு இவ்வவையில் பிறப்பிக்கப்படும்” என்றார்.

மீண்டும் கைதூக்கி எழுந்த சீர்ஷர் “அந்த ஆணையின் உள்ளடக்கமென்ன என்று இப்போது என்னால் சொல்ல முடியும். காளகக்குடிகளை பல குழுக்களாகப் பிரித்து எல்லைகளுக்கு அனுப்பப்போகிறீர்கள். விஜயபுரியின் அரசருக்கு விதர்ப்பப் படைத்தலைவன் சிம்மவக்த்ரன் காவலனா? அன்றி சிறைக்காப்பாளனா?” என்றார். நளன் ஏதோ சொல்வதற்குள் நாகசேனர்  “இந்த அவை மங்கல அவை. அரசுசூழ்தலை நாம் தனியவையில் பேசலாம்” என்றார். “இந்த அவையில்தான் இவ்வறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார் சீர்ஷர். “ஆம், அறிவிப்புகளில் உடன்பாடு இல்லையென்றால் மறுபரிசீலனை செய்ய முடியும். இந்த அவையில் அயல்நாட்டு வருகையாளர் பலர் உள்ளனர்” என்றார் நாகசேனர்.

நளன் எழுந்து “பொறுத்தருள்க, மூத்தவரே. இவ்வறிவிப்புகளில் பலவற்றை நானே இப்போதுதான் கேட்கிறேன். தங்களுக்கு உடன்பாடில்லாத அனைத்தையுமே குறித்துக்கொள்ளுங்கள். தனியவையில் நாம் அவற்றை பேசுவோம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஆணையும் இங்கு நிறைவேற்றப்படாது. இதை நான் உறுதியளிக்கிறேன்” என்றான். சீர்ஷர் “எவரும் எங்களுக்கு கொடையளிக்க வேண்டியதில்லை. இந்நகரே இன்று அரசனென ஒருவனை ஏற்றுக்கொண்டுள்ளது. பிறிதெவரையும் அது ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையை உணர்வதற்கு அறிவுகூடத் தேவையில்லை, விழிகூர்ந்தால் போதும். ஏன், இங்கமர்ந்து செவிகூர்ந்தாலே போதும்” என்றார். “நன்று, நாம் அனைத்தையும் பிறகு பேசுவோம். அவை நிறைவுகொள்ளட்டும்” என்று நளன் சொன்னான்.

அவைமங்கலத்தை நிமித்திகர் அறிவித்து தலைவணங்கியதும் இசை முழங்கியது. நளன் எழுந்து அவையை மும்முறை வணங்கினான். அவன் முடியையும் கோலையும் ஏவலர் பெற்றுக்கொண்டனர். வலப்பக்கம் திரும்பி வெளியேறும் வழியில் சீரடி வைத்து நடந்தான். முடியை அளித்தபின் தமயந்தியும் எழுந்து அவனை தொடர்ந்தாள். அவள் ஆடைதாங்கிய சேடிகள் பின்னால் சென்றனர். அவர்களின் அருகே வந்த கருணாகரர் தாழ்ந்த குரலில் “முதலில் இந்த மணநிகழ்வு நிறைவடையட்டும், அரசே. பிற ஆணைகள் அனைத்தையுமே ஒரு மாதம் கடந்தபின் நாம் கூடி முடிவெடுப்போம்” என்றார். தமயந்தி “ஆணைகளை மாற்றிக்கொள்ளும் வழக்கம் எனக்கில்லை, அமைச்சரே” என்றாள்.

கருணாகரர் “ஆம், அதை நான் அறிவேன். ஆனால் சீர்ஷர் உளநிலை பெரிதும் திரிபடைந்திருக்கிறது. நகர்மக்கள் புஷ்கரருக்கு அளித்த வரவேற்பு அவரது ஆணவத்தை தூண்டிவிட்டிருக்கிறது” என்றார். தமயந்தி “வெறும் ஆணவங்களாலோ கனவுகளாலோ அரசுகள் கைப்பற்றப்படுவதில்லை, ஆளப்படுவதுமில்லை. படைவல்லமையே இறுதி” என்றாள். “அதைக் கண்டபின்னரே அவர்களுக்குப் புரியும் என்றால் அதன் முதற்குறிப்பை அவர்களுக்குக் காட்டவும் நான் சித்தமாக இருக்கிறேன்.” நளன் எரிச்சலுடன் “இது என்ன பேச்சு? அவன் என் இளையோன். எதையும் அவனிடம் நேரடியாக சொல்லுமிடத்தில்தான் என்றும் நான் இருக்கிறேன்” என்றான்.

கருணாகரரிடம் “அமைச்சரே, அவனை உணவுக்கூடத்துக்கு வரச்சொல்லுங்கள். அங்கு அனைவரும் அமர்ந்து உண்போம். அமுதின் முன் உள்ளங்கள் கனியும். எளிய ஆணவங்களும் காழ்ப்புகளும் கரைந்து மறையும். அங்கு பேசுவோம்” என்றான். “ஆம், அது நன்று” என்றார் கருணாகரர். தமயந்தி “எனக்கு சற்று தலைநோவு உள்ளது. என் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு குடியவைக்கு வருகிறேன்” என்றாள். “இல்லை. இன்று என் சமையல். வெளியே குடிகளுக்கும் அதுவே. நாம் சேர்ந்தமர்ந்துண்ணவேண்டும்” என்று நளன் சொன்னான். தமயந்தி சிலகணங்கள் எண்ணம் கூர்ந்தபின் “அவ்வாறே” என்றாள்.

flowerகுடியினருக்கான உணவுக்கூடங்களை ஒட்டியே அரசகுடிகளுக்கான உணவுக்கூடம் இருந்தது. நளனும் தமயந்தியும் அவைக்கோலம் களைந்து கைகால் தூய்மை செய்து அங்கு சென்றபோது முன்னரே கால்குறைந்த நூற்றெட்டு ஊண்பீடங்கள் போடப்பட்டு அவற்றில் தளிர்வாழை இலைகள் விரிக்கப்பட்டிருந்தன. ஊண்கூடத்தின் செயலகர் வந்து வணங்கி “அமர்ந்தருள்க, அரசே!” என்றார். நளன் தமயந்தியிடம் “முதலில் நீ சென்று அமர்ந்துகொள்” என்றான். தமயந்தி “அரசர் முதலில் அமரவேண்டுமென்பது நெறி” என்றாள். “இல்லை, இங்கு நான் உணவை பரிமாற நிற்கிறேன்” என்றான். தமயந்தி முகம் சுளித்து “விளையாடுகிறீர்களா?” என்றாள். நளன் சிரித்து “முடி கழற்றிவிட்டேன். வேண்டுமென்றால் இந்த அணிகளையும் கழற்றிவிடுகிறேன். அடுமனையாளனாக நிற்கும்போது நான் அடையும் உவகை எப்போதும் பெற்றதில்லை” என்றான்.

தமயந்தி ஏதோ சொல்ல வாயெடுத்தபின் “சரி” என்றாள். அரசிக்குரிய உலையா நடையில் சென்று தந்தத்தால் குறுங்கால்கள் அமைக்கப்பட்ட பீடத்தின் மேல் அமர்ந்தாள். அவளைத் தொடர்ந்து இந்திரசேனையும் இந்திரசேனனும் அமர்ந்தனர். நளன் “குடித்தலைவர்கள் வருக!” என்றான். தங்கள் கோல்களை வைத்துவிட்டு உள்ளே வந்த குடித்தலைவர்கள் ஒவ்வொருவரையாக அவனே அழைத்து வந்து மணைகளில் அமரவைத்தான்.

காளகக்குடி மூத்தவர்கள் அவரிடம் வந்ததும் முகம் மலர்ந்து “இனிய உணவு, அரசே. அந்த மணமே அது என்ன என்பதை காட்டுகிறது. நீண்ட நாள் ஆயிற்று, தங்கள் கையால் உணவுண்டு” என்றனர். “இன்று இரவும் நானே அடுமனை புகலாம் என்று நினைக்கிறேன்” என்றான் நளன். கருணாகரர் “இரவு தாங்கள் குடியவையில் அமரவேண்டும்” என்றார். “ஆம். என்ன செய்ய வேண்டுமென்று ஆணைகளை கொடுத்துவிட்டு வருகிறேன். இரவு உணவுக்கும் இந்நகரத்தவர் எனது சமையலையே உண்ணவேண்டும்” என்றான் நளன். கருணாகரர் “நான் சென்று இளவரசரையும் பிறரையும் அழைத்து வருகிறேன்” என்றார். நளன் அடுமனையாளர்களுக்கு ஆணைகளை இட்டு உணவுக்கலங்களை கொண்டுவரச் செய்தான்.

ஊண்கூடம் நிறைந்துகொண்டிருந்தது. கருணாகரர் புஷ்கரனுடன் வந்தார். புஷ்கரன் நளன் அருகே வந்து “நான் புலரியில் எழுந்ததனால் சற்று தலைசுற்றலாக இருக்கிறது. நல்லுணவுகூட எனக்கு சுவைக்குமென்று தோன்றவில்லை” என்றான். நளன் சிரித்து “எந்நிலையிலும் எவருக்கும் சுவைக்கும் உணவு இது, இளையோனே. அமர்க!” என்று அவன் தோளைத் தழுவி அழைத்துச்சென்று அவனுக்கான பீடத்தில் அமரவைத்தான். அடுமனை உதவியாளன் ஒருவன் ஓடிவந்து நளனிடம் “கன்னல் சுவையுணவு ஒன்று உள்ளது, அரசே. அது தொடக்கவுணவா, நிறைவுணவா?” என்றான். “தேன் கலந்ததா?” என்றான் நளன்.

இரு குலத்தலைவர்களுடன் நடந்து வந்த சீர்ஷர் நளன் தன்னை வரவேற்பதற்காக காத்து நின்றார். நளன் “இரு, நானே காட்டுகிறேன். அது மகதநாட்டு உணவு” என்றபடி .உள்ளே சென்றான். மேலும் சற்று நோக்கிவிட்டு சீர்ஷர் உள்ளே சென்றபோது அவருக்கான இருக்கை மட்டும் ஒழிந்துகிடந்தது. அதை நோக்கி ஓர் எட்டு வைத்தபின் அவர் நின்று “காளகக்குடிகளுக்கு முதன்மை இடம் இங்கு இல்லையா?” என்றார். கருணாகரர் “அமர்க காளகரே… அனைத்தும் முறைப்படியே நிகழ்கிறது” என்றார். அவர் அமர்ந்துகொண்டு தலையை நிமிர்த்தி சுற்றி நோக்கினார். இலைகளில் சிறிய தொடுகறிகள் முன்னரே விளம்பப்பட்டிருந்தன. அடுமனையாளர்கள் தேனமுதையும் தோயமுதையும் புட்டமுதையும் கனியமுதையும் பாலமுதையும் சீராக விளம்பிவந்தனர். ஐந்தமுதுக்குப் பின் அன்னமும் அப்பமும் பரிமாறப்பட்டன.

இடைவலி கொண்டவர்போல நெளிந்தும் திரும்பியும் அமர்ந்திருந்த சீர்ஷர் உரத்த குரலில் “இந்த உணவு இந்திரனுக்கு படைக்கப்பட்டதா?” என்றார். உள்ளிருந்து வணங்கியபடி விரைந்து வந்த நளன் “ஆம், இங்கு அடுமனைகளில் சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் முதலில் நகராளும் விண்தேவனுக்கு படைக்கப்படுகின்றன. அதுவே நெடுநாள் முறைமை” என்றான். சீர்ஷர் “அப்படியென்றால் இந்திரன் உண்ட மிச்சிலா இங்கு கலியின் குடிகளுக்கு அளிக்கப்படுகிறது? காளகர் அமர்ந்து நக்கி உண்ணப்போவது அதையா?” என்றார். காளகக்குடியினர் திகைப்புடன் நோக்க “கலியின் குடிகளே, நீங்கள் உண்பது எதை?” என்று அவர் கைவிரித்து கூச்சலிட்டார்.

நளன் முகம் சுருங்க “உணவு எப்போதுமே தேவர்களின் மிச்சில்தான், மூத்தவரே. தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் வண்டுகளும் என அவர்கள் வந்து உண்ட மிச்சத்தை மட்டுமே உயிர்க்குலங்கள் உண்ணமுடியும்” என்றான். சீர்ஷர் வெறுப்பில் சுளித்த முகத்துடன் “நான் இங்கு நெறிநூல் பேச வரவில்லை. நாங்கள் கலியின் குடிகள். எங்கள் தெய்வத்தை இழித்து தென்னகக்காட்டுக்குத் துரத்திய பிற தெய்வம் அதோ அக்குன்றின் மேல் எழுந்து நிற்கிறது. அதற்கு படைக்கப்பட்ட மிச்சிலை உண்ணும் நிலை உங்களுக்கு இருக்கலாம், காளகருக்கு இல்லை” என்றார்.

காளகக் குடித்தலைவர்கள் இருவர் அவர் தோளைத்தொட்டு ஏதோ சொல்ல அதைத் தட்டி விலக்கியபடி அவர் பாய்ந்து எழுந்தார். “ஆண்மையற்று சோற்றுக்காக வந்தமர்ந்து காளகக்குடியையே இழிவுபடுத்துகிறீர்கள், மூடர்களே…” என்றார். “எழுக… இந்த உணவு நமக்குத் தேவையில்லை.” நளன் குரல் சற்றே மாற அழுத்தமாக “உண்ணுங்கள், மூத்தவரே” என்றான். “எனக்கு ஆணையிடுகிறாயா?” என்றபடி சீர்ஷர் அவனை நோக்கி கை நீட்டினார். “நான் காளகப்பெருங்குடியின் தலைவன். அதை மறக்காதே!” நளன். “ஆம், நான் உங்களுக்காக சமைத்த உணவு இது, மூத்தவரே” என குரல் தழைய சொன்னான். “சீ” என்று சீறிய சீர்ஷர் தன் இடதுகாலால் ஊண்பீடத்தில் இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவை மிதித்து எறிந்தார். அன்னம் கூடம்முழுக்க சிதறியது. சிலம்பிய குரலில் “இது எனக்கு நாய் வாய்வைத்த இழிவுணவு… கீழ்மகன் கைபட்ட நஞ்சு!” என்றார். நளன் உடல் பதற “மூத்தவரே…” என்றான். “எழுங்கள், மூடர்களே!” என்ற சீர்ஷர் மீண்டும் ஒருமுறை அன்னத்தை காலால் எற்றினார். “இந்த மிச்சிலை உதைத்தெறிந்துவிட்டு கிளம்புங்கள்! நாம் யாரென்று காட்டுங்கள்!” காளகக்குடி மூத்தவர் அனைவரும் எழுந்தனர்.

சிறியதொரு சிட்டின் குரலென நளனின் உடைவாள் உறையிலிருந்து வெளிக்கிளம்பும் ஒலி எழுந்தது. மின்னலொன்று அறைக்குள் வெட்டி ஒடுங்கியதுபோல வாள் சுழன்றமைந்தது. சீர்ஷரின் தலை குருதி சுழன்று சிதறி மாலையென நீர்க்கலம் விழும் ஒலியுடன் நிலத்தில் விழுந்து உருண்டு தமயந்தியின் காலடியில் சென்று அமைந்தது. கொதிக்கும் கலமென சிறுகொப்புளங்கள் ஓசையுடன் வெடிக்க சீர்ஷரின் உடல் பின்னால் சரிந்து சுவரில் மோதி நின்று கைகால்கள் உதறிக்கொள்ள அனல்பட்டதென சிலமுறை துடித்து விதிர்த்து மெல்ல சரிந்து விழுந்தது.

NEERKOLAM_EPI_34

குருதி வழியும் வாளை ஆட்டி தாழ்ந்த குரலில் நளன் சொன்னான் “அமுதைப் புறக்கணித்து இந்த அவையிலிருந்து எழும் எவரும் தலையுடன் வெளிச்செல்ல ஒப்பமாட்டேன்… உண்ணுங்கள்!” காளகக்குடியினர் தங்கள் இலைகளில் அமர்ந்தனர். அவர்களின் உடல்கள் உருளைக்கல் தேரில் அமர்ந்திருப்பவர்கள்போல நடுங்கித் துள்ளின. உணவை அள்ள முடியாமல் கைகள் ஆடின. புஷ்கரன் இரு கைகளாலும் தலையை பற்றிக்கொண்டு உடல் பதற குனிந்தமர்ந்திருந்தான். “உண்ணுங்கள்!” என்று நளன் ஆணையிட்டான். அனைவரும் திடுக்கிட்டு பதறிய கைகளால் அன்னத்தை அள்ளி உண்ணத் தொடங்கினர்.