நீர்க்கோலம் - 23

22. களிற்றுப்புரவி

flowerஉத்தரனின் அரண்மனைக்கு நகுலன் சென்றுசேர்ந்தபோது உச்சிப்பொழுது ஆகியிருந்தது. அவன் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது உத்தரனின் ஏவலன் வந்து இளவரசனின் அழைப்பை சொன்னான். “உடனே வரும்படியா?” என்றான் நகுலன். “ஆம், அவருடைய எல்லா ஆணைகளும் உடனே கடைபிடிக்கப்படவேண்டியவையே” என்றான் ஏவலன். நகுலன் ஆடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். ஏவலன் முன்னரே சென்றுவிட்டிருந்தமையால் தனியாக அரண்மனையை அடைந்தான். அங்கே வாயிற்காவலனுக்கு அவனை தெரிந்திருக்கவில்லை. அவன் வரவிருப்பது அறிவிக்கப்பட்டிருக்கப்படவுமில்லை. “புரவிச்சூதர்கள் அரண்மனைக்குள் செல்லும் வழக்கமில்லை” என்று காவலன் மறுத்துவிட்டான்.

“நான் இளவரசரால் அழைக்கப்பட்டவன்” என்று நகுலன் சொன்னான். “அதற்குச் சான்றாக ஏதேனும் உள்ளதா?” என்றான் காவலன். “என்னை அழைக்கவந்த ஏவலனின் பெயர் சுசரிதன்” என்றான் நகுலன். “இங்கே அப்படி எவருமில்லை” என்றபின் காவலன் திரும்பிக்கொண்டான். நகுலன் அங்கேயே நின்றிருந்தான். காவலன் அவனை திரும்பிப்பார்க்கவே இல்லை. சற்றுநேரம் கழித்து பிறிதொரு காவலன் வந்து “யார்?” என்று கேட்டான். அனைத்தையும் கேட்டறிந்தபின் “இங்கே ஏவலர்கள் பலர் சுசரிதன் என்ற பேரில் உள்ளனர்” என்றபடி திரும்பிச்சென்றான்.

மீண்டும் ஒருவன் வந்து முதலில் இருந்தே அனைத்தையும் கேட்டறிந்தான். அவனும் சென்றபின் முதியவர் ஒருவர் வந்து “யார்? என்ன வேண்டும்?” என்றார். பலர் எந்த கேள்விக்கும் எதிர்நில்லாமல் உள்ளே சென்றுகொண்டும் மீண்டுகொண்டுமிருந்தனர். காவலர் கூடத்தில் பலர் துயின்றுகொண்டிருந்தனர். முதிய அமைச்சர் ஒருவர் அவ்வழி செல்ல அவரிடம் “இவரை இளவரசர் வரச்சொல்லியிருக்கிறார்” என்றான் ஒரு காவலன். “நீர் யார்? சூதரா?” என்று அமைச்சர் கேட்டபோது மீண்டும் அனைத்தையும் நகுலன் சொன்னான். “இளவரசர் பலரை அழைக்கிறார். ஏன் என்று எவருக்கும் தெரியாது” என்றபின் அவர் கிளம்பிச்சென்றார்.

மாலைமயங்கும் பொழுதில் சுசரிதன் கையில் ஒரு கலத்துடன் வெளியே செல்வதை நகுலன் கண்டான். அருகே ஓடிச்சென்று “சுசரிதரே” என்று அழைத்தான். ஏவலனால் அவனை அடையாளம் காணமுடியவில்லை. “நீர் யார்?” என்றான். அவன் விளக்கியதும் “நீர் ஏன் இங்கே நிற்கிறீர்? நான் உம்மிடம் இளவரசரை பார்க்க வரும்படி சொன்னது உச்சிவேளையில் அல்லவா?” என்றான். “என்னை உள்ளே விட மறுத்தார்கள்” என்றான் நகுலன். “நீர் ஏன் அவர்களிடம் கேட்கிறீர்? நேராக உள்ளே செல்லவேண்டியதுதானே?” என்றான் சுசரிதன். “ஆனால்…” என நகுலன் தயங்க “உள்ளே செல்லும்…” என்றபின் சுசரிதன் வெளியே சென்றான்.

நகுலன் உள்ளே சென்றபோது காவலர்கள் எதுவும் கேட்கவில்லை. எவரும் அவனை அடையாளம் கண்டதாகவே தெரியவில்லை. அவன் அரண்மனையின் முற்றத்தை அடைந்தான். அங்கே ஒரு பெரிய அண்டா புரண்டு வாய்திறந்து கிடந்தது. எவருடையதோ மேலாடை படிகளில் விழுந்திருந்தது. பெரிய தூண்கள் நிரைநின்றிருந்த இடைநாழியினூடாக நிழலொளியில் நடந்தான். அறைகளுக்குள் அமைச்சர்கள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இடைநாழி மூலையில் காவலர்கள் படைக்கலங்களை சாற்றிவைத்துவிட்டு பேசிச் சிரித்துக்கொண்டிருக்க ஒருவன் மட்டும் ஆர்வமில்லாமல் நகுலனை நோக்கிவிட்டு விழிவிலக்கிக்கொண்டான்.

NEERKOLAM_EPI_23

நகுலன் உள்ளறைகளுக்கு சென்றான். எல்லா அறைகளிலும் எவரோ சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். எவருமே ஒரு சொல்கூட அவனிடம் கேட்கவில்லை. அங்கே அவ்வழக்கமே இல்லை எனத் தெரிந்தது. அவன் படியேறி முதல் தட்டுக்குச் சென்று அங்கிருந்த இடைநாழியில் நடந்தபோது பெண்களின் சிரிப்பொலிகள் கேட்டன. அவன் தயங்கி நின்றான். கூடவே கேட்ட ஆண்குரல் உத்தரனுடையதென்று தெரிந்தது. அவன் புன்னகையுடன் ஒரு கணம் நின்றபின் அந்த அறைநோக்கி சென்றான்.

அறைக்குள் உத்தரன் உரத்த குரலில் “மிகப்பெரிய புரவி. காரகன் என்று பெயர். அவன் இதுவரை ஒரே ஒருவரை மட்டிலுமே தன்மேல் ஏற விட்டிருக்கிறான்… ஆனால்” என்றான். “அய்யோ” என்றாள் ஒரு பெண். நகுலன் கதவைத் திறந்து “இளவரசரை வணங்குகிறேன். என்னை தாங்கள் வரச்சொன்னதாக ஏவலன் சொன்னான்” என்றான். உத்தரன் சினத்துடன் “நானா? உன்னையா?” என்றான். “தாங்கள்தான்” என்றான் நகுலன். “மூடா, நான் எதற்கு உன்னை வரச்சொல்லவேண்டும்?” என்று உத்தரன் சொன்னதும் நகுலன் தலைவணங்கி “இன்று இன்னொரு கரும்புரவிதான் வேண்டும் என்று நீங்கள் சொன்னதாகச் சொன்னான். காரகன் நீங்கள் வருவீர்கள் என்று காத்திருக்கிறது. பிறரை அது அணுகவிடுவதில்லை” என்றான்.

உத்தரன் “ஆம், அதைத்தான் சொல்ல விழைந்தேன்” என்றபின் பெண்களை நோக்கி “எனக்கு உண்மையில் புரவிகளை கொஞ்சுவது பிடிக்காது. புரவி என்பது ஆண்மகன். சொல்லப்போனால் அரசன். நமக்கும் அதற்குமிடையே உருவாகவேண்டியது நிகரான நட்பு” என்றான். “அரசி என்றால்?” என்று ஒரு பெண் கேட்க பிறர் வாய்பொத்தி சிரித்தனர். “காதலா?” என்று இன்னொருத்தி கேட்டாள். மீண்டும் சிரிப்பு. அவர்களெல்லாருமே எளிய சேடிப்பெண்கள் என்று தெரிந்தது. உத்தரன் “ஆம், காதலேதான்… அதன்மேல் ஊர்வது காமம்” என்றான். “அய்யய்யோ” என்று அவர்கள் சிரித்து ஆர்ப்பரித்தனர். “எப்படி என்று சொல்கிறேன்…” என்றான் உத்தரன். “அய்யோ, வேண்டாம்… வேண்டாம்” என்று ஒருத்தி செயற்கையாக கூச்சலிட்டு சிரித்துக்கொண்டே எழுந்து ஓடினாள்.

அழகில்லாத பெண்கள் தங்களை அழகிகளாக எண்ணிக்கொண்டு செய்யும் நடிப்புகளின் பிறழ்வு நகுலனை கூசவைத்தது. அவன் விழிகளை திருப்பிக்கொண்டதையே ஒருவகை பாராட்டாக எடுத்துக்கொண்டு உத்தரன் மேலும் குலாவத் தொடங்கினான். ஒருத்தியின் காதில் ஏதோ சொல்ல அவள் “சீ” என அவன் கையை அடித்தாள். “என்னடி? என்னடி?” என்றாள் இன்னொருத்தி. “நான் சொல்கிறேன்” என்றான் உத்தரன். “விலகுங்கள்… எனக்குத் தெரியும் என்ன என்று” என்றாள் அவள். “என்ன?” என்றான் உத்தரன். “தெரியும், போங்கள்!” அவன் அவள் கொண்டையைப் பிடித்து உலுக்கி “சொல்” என்றான். அவள் அவன் காதில் ஏதோ சொல்ல அவன் வெடித்துச் சிரித்தான்.

நகுலன் “தாங்கள் புரவி ஏறுவதற்குரிய பொழுது அணைகிறது, இளவரசே” என்றான். அக்குரலில் இருந்த மாற்றத்தால் சற்று திடுக்கிட்ட உத்தரன் “ஆம்” என்றபின் எழுந்து மேலாடையை அணிந்துகொண்டு “நான் சிலவற்றை இவனிடம் பேசவேண்டியிருக்கிறது… நாம் மீண்டும் பார்ப்போம். பாகீரதியிடமும் பிரகதியிடமும் இரவில் வரச்சொல்லுங்கள். அவர்களிடம் நான் ஒன்று சொல்லியிருந்தேன்” என்றான். அவர்கள் வளையொலியும் அணியொலியுமாக எழுந்து ஆடைதிருத்திக்கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி வெளியே செல்லும்போது நகுலனை கூர்ந்து நோக்கிவிட்டுச் சென்றாள். நகுலன் ஒருகணம் தன்னை அவள் தெரிந்துகொண்டுவிட்டாளா என ஐயுற்றான். அவள் சென்ற பின்னர் அந்நோக்கை திரும்ப எடுத்தபோதுதான் அது வேறு என தெரிந்தது. அடுத்து பிறிதொருத்தியும் நோக்கிச் சென்றாள். அவளுக்கு முந்தையவள் அளித்த நோக்கின் பொருள் தெரிந்திருந்தது என அதன்பின் புரிந்தது.

உத்தரன் நடந்துகொண்டே “நான் உம்மை உச்சிப்பொழுதில் வரச்சொன்னேன் என நினைவு” என்றான். “நான் உச்சிப்பொழுதிலேயே வந்துவிட்டேன். காவலர் உள்ளே வரவிடவில்லை” என்றான் நகுலன். “நான் அழைத்தேன் என்று சொல்வதற்கென்ன?” என்றான் உத்தரன். “சொன்னேன்” என்றான் நகுலன். உத்தரன் அதை அப்படியே விட்டுவிட்டு “நான் உமக்கு கங்கணம் அளிப்பதாக சொன்னேனே! அதை அமைச்சர்கள் அளிக்கவில்லையா?” என்றான். “தாங்கள் எவரிடம் ஆணையிட்டீர்கள்?” என்றான் நகுலன். “மூடர்கள்” என்று சொன்ன உத்தரன் “நீர் என் அணுக்கப் புரவிக்காரர். நீர் இல்லாமல் நான் இனிமேல் புரவியேறமாட்டேன்” என்றான். “இங்கே எவருக்கும் புரவித்தொழில் தெரியவில்லை…”

அவர்கள் ஓர் அறைக்குள் நுழைந்தனர். உத்தரன் பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டு சால்வையைச் சுழற்றி மடிமேல் அமைத்தான். நகுலன் அருகே கைகட்டி நின்றான். “உம் உடல் சிறியதென்றாலும் கூரியது” என்றான் உத்தரன். உரக்க நகைத்து “உம் மேல் உமிழவேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா?” என்றான். நகுலன் “தெரியாது, இளவரசே” என்றான். “மேலோர் அவ்வாறு இழிசினர் மேல் உமிழும் வழக்கம் சதகர்ணிகளிடம் உண்டு என்று என்னிடம் சொன்னார்கள்” என்றான் உத்தரன். நகுலன் புன்னகை செய்தான். “நான் எதற்கு உம்மை வரச்சொன்னேன்?” என்றான் உத்தரன். “தெரியவில்லை, இளவரசே” என்றான் நகுலன்.

“எதற்கு?” என முகவாயைத் தடவியபின் அருகே இருந்த பீடத்திலிருந்து ஓர் பட்டுச்சுருளை எடுத்து ஆர்வமில்லாமல் பிரித்துப்பார்த்தான். அவன் முகம் மலர்ந்தது. அதை நகுலனிடம் காட்டி “இவர் யாரென்று தெரிகிறதா?” என்றான். நகுலன் “இல்லை, இளவரசே” என்றான். “இவர்தான் பேரரசர் புஷ்கரர். நிஷதநாட்டை தன் ஆற்றலால் அடக்கி ஆண்டவர். புரவிப்பெருவீரர்… அவரது ஓவியங்கள் அனைத்திலும் நீண்ட பெருவாளுடனும் கரிய புரவியுடனும்தான் இருக்கிறார்” என்றான். “ஆம், பெரிய புரவி” என்றான் நகுலன். “அதன்பெயர்தான் காரகன். அதைத்தான் இந்தப் புரவிக்கும் வைத்திருக்கிறார்கள்” என்றான் உத்தரன். “இதை என் அரசப்புரவியாக வைத்துக்கொள்ளலாமென்னும் எண்ணம் எனக்கிருக்கிறது.”

“இன்னும் இலக்கணம் ஒத்த கரும்புரவி ஒன்றை நாம் வாங்கலாம். அதற்கு காரகன் என்று பெயரிடலாம்” என்றான் நகுலன். “ஆனால் அது நம் பேச்சை கேட்குமா?” என்றான் உத்தரன். “கேட்கும்படி செய்யலாம்” என்று நகுலன் சொன்னான். உத்தரன் “நான் சில வழிகளை உரைக்கிறேன். நீர் அவற்றை முறையாக கடைபிடித்தால்போதும். அதையும் பழக்கிவிடலாம். உண்மையில் நான் சொல்வதை புரிந்துகொள்ளும் புரவிச்சூதர்கள் கிடைக்கவில்லை என்பதே என் சிக்கலாக இதுநாள்வரை இருந்துவந்தது” என்றான். நகுலன் “நாம் நீண்ட உடைவாள் ஒன்றையும் செய்விக்கவேண்டும்” என்றான். உத்தரன் ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு “என்னிடம் பல வாள்கள் உள்ளன” என்றான். “மேலும் பெரிய வாள் தேவை. ஏனென்றால் புரவியில் போர்முகம் செல்லும்போது வாள் நீளமாக இருந்தாகவேண்டும்.” உத்தரன் “ஆனால் எடையுள்ள உடைவாள் என்றால்…” என இழுக்க நகுலன் “எடையை புரவிதானே சுமக்கவிருக்கிறது?” என்றான். “ஆம், அது தெரியும்” என்றான் உத்தரன்.

மெல்ல இயல்புநிலைக்கு வந்த உத்தரன் “நான் வரும் செண்டுவெளி விழாவில் புரவியூர்ந்து சில போர்விளையாட்டுக்களை காட்டலாமென எண்ணியிருக்கிறேன்” என்றான். “செய்யலாம், நான் உடனிருக்கிறேன். தங்களுடன் இருந்தேன் என்னும் பெருமை எனக்கும் என் குடிக்கும் எதிர்காலத்தில் நற்பெயரென நிலைக்குமல்லவா?” என்றான் நகுலன். “ஆம், நான் உமக்கு அளிக்கும் பெருங்கொடை அதுவே” என்றான் உத்தரன். “மாமன்னர் புஷ்கரர் புரவியூர்தலில் தேர்ந்தவர் என்கிறார்கள். அவரைப்பற்றி எழுதப்பட்ட புஷ்கரவிலாசம் என்னும் நூலை நீர் அறிந்திருக்கமாட்டீர்.” நகுலன் “இல்லை, இளவரசே” என்றான்.

“நளன் புரவித்தொழில் தேர்ந்தவர் என்கிறார்கள். அது சூதர்கள் எழுதிய கதை. ஏனென்றால் புஷ்கரரிடமிருந்து நளன் அரசை கைப்பற்றிக்கொண்டார். அதன்பின் நிகழ்ந்த அனைத்தையும் மாற்றி எழுதச்செய்தார். நிகழ்ந்ததே வேறு. அதை மறைக்கப்பட்ட இந்நூலில் காணலாம். புஷ்கரர் மணந்தது கலிங்கமன்னர் சூரியதேவனின் மகள் சாயைதேவியை என அறிந்திருப்பீர்.” நகுலன் “இல்லை” என்றான். “கலிங்க இளவரசியின் மைந்தனாகிய ஆதித்யதேவர் தென்கலிங்கத்தை ஆண்டார். அவரது நூல்நிலையில் இச்சுவடி இருந்தது. எனக்கு ஒரு சூதர் கொண்டுவந்து தந்தார்” என்றான் உத்தரன். “நளன் புரவிகளைப் பழக்குபவர் மட்டுமே. புரவியூரும் கலை என்பது வேறு. அது போர்க்கலை அல்லவா?”

“ஆம்” என்றான் நகுலன். “புஷ்கரர் போர்வீரர். இங்கே நளன் அரசராக இருந்த அந்நாட்களில் கிரிப்பிரஸ்தத்தில் ஆண்டுதோறும் புரவியூர்தலில் பலதரப்பட்ட போட்டிகள் நிகழ்ந்தன. புரவித்திறனாளர்களுக்கு பெரும்பரிசில்களும் அளிக்கப்பட்டன. அதில் பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் புரவித்திறனோர் கலந்துகொள்ளும்படி அறைகூவப்பட்டது. அவ்வாறு வரும் புரவிவீரர்களில் எவரேனும் நிஷாதர்களை வென்றால் அவர்கள் இங்கேயே நீடிக்கும்படி செய்யப்பட்டனர். அவ்வாறு பெருந்திறல் வீரர்கள் அனைவருமே இங்கே வாழலாயினர். இங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட செல்வம் அத்தகையது.”

“செல்வம் அல்ல, தனக்கு நிகரான திறனுள்ளவர்களைக் கண்டால் அவர்கள் அருகிருந்து அகல திறனாளர்களால் இயலாது. பிறரை எண்ணவே சித்தம் ஒருங்காது” என்றான் நகுலன். “இருக்கலாம். நாளடைவில் இங்கு நிகழும் போட்டியை அனைத்து நாடுகளும் நோக்கலாயின. சூதர்களும் புலவர்களும் அவ்விழவுக்காக நெடுந்தொலைவிலிருந்தெல்லாம் வந்தனர். நளன் புரவிக்கலையில் வெறிகொண்டவராக ஆனார். இரவும் பகலும் கொட்டிலிலேயே தங்கினார். புரவிக்கலைஞர்களுடன் உரையாடினார். அரசியையும் மைந்தரையும் அவர் நோக்குவதே அரிதாகியது என்கிறார்கள் கதையாளர்கள். ஏனென்றால் பாரதவர்ஷத்தின் நிகரற்ற புரவிக்கலைஞர் என அவரே அறியப்படவேண்டுமென்ற விழைவு அவரை கொடுந்தெய்வம் பலிவிலங்கை என ஆட்கொண்டிருந்தது.”

நகுலன் “எந்தக் கல்வியும் கொடுந்தெய்வமென்று தோள்மேல் ஏறியாகவேண்டும்” என்றான். அவன் சொன்னது புரியாமல் சிலகணங்கள் வெறுமனே நோக்கிவிட்டு “அன்று இங்கு ஒரு செண்டுவெளிக் களியாட்டு நிகழ்ந்தது. பன்னிரு நாடுகளைச் சேர்ந்த நூற்றெட்டு புரவிவீரர்கள் கலந்துகொண்டனர். புரவிகளில் முன்பு எவரும் எண்ணியிருக்காத அரிய திறன்களை அவர்கள் காட்டினர். ஒவ்வொரு கலையிலும் அவற்றில் முதல் திறனாளர் செய்து நிறுத்திய இடத்தில் இருந்து தொடங்கி மேலும் நிகழ்த்தி நிஷதபுரியின் மக்களை களிவெறி கொள்ளச்செய்தார் நளன். அத்தருணத்தில் தன் கரியபுரவியில் புஷ்கரர் களம் நுழைந்தார். அவரைக் கண்டதும் மக்கள் பலமடங்கு வாழ்த்தொலி எழுப்பினர். நளன் முகம் கூம்பியது. ஆனால் தமயந்தியின் முகம் மலர்ந்தது” என்றான்.

கண்களைச் சிமிட்டியபடி உத்தரன் சொன்னான் “கவிஞர்கள் தெளிவாகச் சொல்வதில்லை. ஆனால் தமயந்திக்கு புஷ்கரர் மேல் ஓர் ஆவலிருந்தது என்பதை வரிகளின் வண்ணங்களினூடாக நாம் உய்த்துணர முடியும். தமயந்தியின் முகமலர்வை நளன் கண்டார். அவருடைய ஏவலர் அவருடைய முகக்குறியை கண்டு அருகணைந்தனர். அவர்களுக்கு அவர் கரவுச்சொற்களால் ஆணையிட்டார். அவர்கள் அதை ஏற்று களத்தில் புஷ்கரரின் புரவித்துணைவர்களென உடன் சென்றாடினர்.”

“புஷ்கரர் அன்றுவரை புரவித்திறனர்கூட எண்ணியிராத திறன்களை காட்டினார். காற்றில் ஒருவர் வீசிஎறிந்த நீர்ச்சரடை பிறிதொரு கலத்தை கையிலேந்தி புரவியில் பாய்ந்து சென்று ஒரு துளி சிந்தாமல் வானிலிருந்து மீண்டும் கலத்தில் பிடித்தெடுத்தார். எய்த அம்புக்கு நிகராகச் சென்று அம்பு சென்று தைக்கும் முன் கைகளால் அதை பற்றினார். கையில் சுடரெழுந்த அகலுடன் புரவியில் பாய்ந்துசென்று ஏழுமுறை சுழன்றுவந்தார். சுடர் அசையவேயில்லை” என உத்தரன் தொடர்ந்தான். “புஷ்கரரின் புரவித்திறன் கண்டு வாழ்த்தவும் மகிழவும் மறந்து நின்றிருந்தனர் குடிகள்.”

“இறுதி நிகழ்வே பரியேறுதலின் உச்சம்” என்று உத்தரன் சொன்னான். “ஒருவன் இரும்புக் கேடயம் ஒன்றை திருப்ப அதன் ஒளி மண்ணில் விழுந்து சுழன்ற அதே விரைவில் புரவியில் உடன்பாய்ந்தார் புஷ்கரர். அவருடன் சென்ற புரவித்துணைவர்களில் ஒருவன் தன் காலால் அவர் புரவியின் தொடையிடுக்கை மிதித்தான். நரம்பு சுளுக்கவே புரவி காலிடறிச் சரிந்தது. சிட்டுக்குருவி என புரவி மேலிருந்து பாய்ந்து தரையில் நின்று தன்னைக் கடந்துசென்று விழுந்த புரவியை நோக்கினார் புஷ்கரர். அவரைத் தொடர்ந்துவந்த புரவித்துணைவன் ஒருவன் விரைவழிய இயலாததுபோல் நடித்து தன் புரவிக்கால்களால் அவரை மிதித்துக்கொல்ல முயன்றான். ஆனால் புஷ்கரரின் விழிகளை அறிந்திருந்த புரவி அவர் அருகே வந்து நின்று தலைதாழ்த்தியது.”

“மக்களின் கூச்சல் எழுவதைக்கண்டு நளன் விரைந்து அருகே ஓடிவந்து பதறி இளையோன் தோளைத்தழுவி நலமுசாவினார். நிகழ்ந்ததை உணர்ந்த பின்னரும் தமையன்மீது கொண்ட பற்றினால் புஷ்கரர் தலைகுனிந்து களத்திலிருந்து விலகிச்சென்றார். மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதென்றாலும் அயலவர் முன் அதை காட்டவேண்டாமென்று அமைதி காத்தனர். அதன்பின் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்தன என்றாலும் எவரும் வாழ்த்தொலியோ உவகைமுழக்கோ எழுப்பவில்லை. அரியணையில் அமர்ந்திருந்த தமயந்தி சற்றுநேரத்திலேயே எழுந்து சென்றுவிட்டார். இறுதியில் இந்திரனுக்குப் பூசனை நிகழ்ந்தபோது குடிகளில் நாலில் ஒருபங்கினரே அங்கிருந்தனர்.”

“மறுநாள்முதல் நகரில் அனைவரும் அதைப்பற்றி பேசலாயினர். அரசுகொள்ள நளனுக்கு உரிமையில்லை என்றும் புஷ்கரரே தகுதியானவர் என்றும் கிரிப்பிரஸ்தத்தின் இளையோர் சொல்லத்தொடங்கினர். மூத்தவர் அதை விலக்கினாலும் மெல்ல அச்சொல் நிலைகொண்டது. பின்னர் மக்கள் நளனை விலக்கி புஷ்கரரை அரசரென ஏற்றமைக்கு தொடக்கம் இந்நிகழ்வே” என்றான் உத்தரன். “நாம் இந்நிகழ்வை மீண்டும் மக்களிடம் கொண்டுசென்றாகவேண்டும். புஷ்கரவிலாசத்தை ஒரு இசைநாடகமாக அமைக்கும்படி நான் சூதர்களிடம் சொல்லியிருக்கிறேன். இசைநாடகம் நடந்தபின் மறுநாள் செண்டுவெளி நிகழ்வு. நான் நீள்வாளுடன் கரும்புரவி மேலேறி களம் புகுவேன்.”

நகுலன் “நன்று. தங்களை புஷ்கரர் என்றே மக்கள் நினைப்பார்கள்” என்றான். உத்தரன் உரக்க நகைத்து “ஆம், அவரை நாம் இழிவிலிருந்து மீட்டாகவேண்டும்” என்றான். குரலைத் தாழ்த்தி “உம்மிடம் சொல்வதற்கென்ன? எனக்கும் கலிங்க அரசரின் மகளைத்தான் மணம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “கலிங்க அரசரின் மகளா?” என்றான் நகுலன். “முதிய பேரரசர் ருதாயுவுக்கு எட்டு மகளிர். எண்மருக்கும் மணமாகி அவர்களின் மகளிரும் மண அகவை எய்தியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றான். “ஆம். ருதாயுவின் துணைவியரில் ஒருவரான சௌமினிதேவியின் மகள். இவர்கள் தென்கலிங்கத்தில் ரிஷபவனத்தில் வாழ்கிறார்கள்” என்றான் உத்தரன்.

“ரிஷபவனமா? அது நிஷாதர்களின் நாடல்லவா?” என்றான் நகுலன். “நிஷாதர்களில் இருந்து கலிங்க அரசர் மணந்த அரசிதான் சௌமினிதேவி” என்றான் உத்தரன். “நான் சொல்லவருவது என்னவென்றால் கலிங்க இளவரசியை நான் மணக்கையில் என்னை அவர்கள் புஷ்கரருடன் ஒப்பிடுவார்கள். எங்களுக்கிடையே ஒற்றுமைகள் மிகுந்தபடியே வருகின்றன.” “ஆம் இளவரசே, நானும் அவ்வண்ணமே எண்ணுகிறேன்” என்றான் நகுலன். அவனை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு “ஆகவே பார்ப்போர் அஞ்சும் பெரிய புரவி ஒன்றை எனக்கென சமைப்பது உம் பணி. தேவையான பொன்னை கருவூலத்திலிருந்து என் பெயர் சொல்லி பெற்றுக்கொள்ளும்” என்றான் உத்தரன்.

நகுலன் “ஆணை” என்று தலைவணங்கினான். “அதை எவ்வண்ணம் இயற்றுவதென்பதை நானே வந்து அவ்வப்போது உமக்கு கற்பிக்கிறேன்” என்றான் உத்தரன். “என் பேறு அது” என மீண்டும் நகுலன் தலைவணங்கினான்.

flower“கருவூலத்தைக் காப்பவர் கீசகர். உத்தரரின் அன்றாடச் செலவுகளுக்கே பலமுறை அமைச்சர்கள் சென்று கேட்டால்மட்டுமே பொன் அளிக்கப்படுகிறது” என்று சுதமர் சொன்னார். “பொன்னோ பொருளோ அவரிடமிருந்தால் அரைநாழிகையில் சேடிப்பெண்கள் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். இப்போதெல்லாம் அவர் அரண்மனைக்கு சேடிகளை கீசகரே அனுப்பிவிடுகிறார். அவர்களுக்கு இளவரசர் அளிக்கும் பரிசுகளை திரும்பப்பெற்றுக்கொண்டு அவர்களுக்குரிய ஊதியத்தை அளித்துவிடுகிறார்.” நகுலன் புன்னகைத்தான்.

“நீர் கருவூலத்திற்கெல்லாம் சென்று மதிப்பிழக்க வேண்டாம் என்பதனால் சொன்னேன்” என்றார் சுதமர். நகுலனுக்குப் பின்னால் நின்றிருந்த குட்டிக்குதிரை அவன் முதுகின்மேல் தன் முழு எடையையும் சாய்த்தது. சுதமர் நாமரிடம் “அதை அப்பால் கொண்டுசெல்லும். எப்போது நோக்கினாலும் இவர் மேலேயே ஒட்டிக்கொண்டு நிற்கிறது” என்றார். நகுலன் “நிற்கட்டுமே” என்றான். “குழந்தையை கையிலேயே வைத்திருந்தால் கைச்சூட்டில் தேம்பிவிடும் என்பார்கள். குதிரைக்கும்தான் அந்நெறி” என்றார் சுதமர். அப்பால் நின்ற பத்மை “ர்ர்” என்றது. “இதுவேறு. எந்நேரமும் இளையவனுடனேயே இருக்கிறது. தானே ஒன்றுமே செய்வதில்லை” என்றார் சுதமர்.

“புஷ்கரரை ஏன் மீட்டெடுக்க நினைக்கிறார்?” என்றார் நாமர். “அவரும் கலிங்கமகளை மணக்கவிருக்கிறாராம்” என்றான் நகுலன். சுதமர் ஓசையுடன் சிரித்து “கலிங்கமகளையா? நாட்டையே கையில் வைத்திருக்கும் கீசகருக்கு சின்னஞ்சிறு வாகடரின் குலமகளை கேட்டோம். சென்ற தூதனின் கையில் ஒரு தேங்காயையும் கொஞ்சம் கொள்ளையும் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அவர்கள் இல்லங்களில் நிஷாதர் இரக்கச் செல்கையில் அதைத்தான் அளிப்பார்களாம்” என்றார். அவர் சிரித்த ஓசையைக் கேட்டு மகிழ்ந்த காதரன் முன்னால் வந்து அவரை ஆவலுடன் பார்க்க பத்மை “அங்கெல்லாம் செல்லாதே” என்றது. “போடி” என்று காதரன் தமக்கையிடம் சொல்லிவிட்டு இன்னொருமுறை அவர் சிரிக்கக்கூடும் என நோக்கியது.

“புஷ்கரரைப்பற்றி இங்கு எவருக்கும் சொல்லத் தேவையில்லை. சொல்வழியாக நிலைகொண்ட தொல்கதைகள் பலவாறாக அவரை சொல்கின்றன. வென்றோருக்கு நிகராக தோற்றோர் வரலாற்றில் வாழ்வதில்லை. ஆனால் சான்றோருக்கும் நிகராக இழிந்தோர் வாழ்கிறார்கள்” என்றார் சுதமர். அவர்கள் அமர்ந்திருந்த கொட்டகைக்கு வெளியே நின்றிருந்த இரு புரவிகளை சூதன் ஒருவன் அவிழ்த்துக் கொண்டுசென்றான். முதற்குதிரை கட்டு அவிழ்ந்ததுமே கால்களை உதறிக்கொண்டு வாலகற்றி சிறுநீர் ஊற்றியது. அதை முகர்ந்து உதட்டைச் சுளித்து பற்கள் தெரிய ரீரீரீ என ஓசையிட்டபடி இரண்டாவது குதிரை சென்றது.

அதை ஆர்வத்துடன் நோக்கிய காதரன் பத்மையிடம் “நாம் அவர்களுடன் செல்வோமா?” என்று கேட்டது. பத்மை “அதெல்லாம் தவறு” என்றது. “நான் செல்கிறேன்” என்றபடி காதரன் நான்கு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து தூக்கி துள்ளி அப்புரவிகளுக்குப் பின்னால் செல்ல “ஓடாதே” என்றபடி பத்மை பின்னால் சென்றது. “குட்டிகள் ஓட விரும்புகின்றன” என்றார் நாமர். “அதிலும் இந்த ஆண்குதிரைக்குட்டிகள்… அவை எப்போதும் குதிரையேறுகளையே நாடிச்செல்கின்றன. நேற்று சூரனின் குளம்புகளுக்கு இடையே சென்றுவிழுந்தது. நான் சரியான தருணத்தில் காப்பாற்றவில்லை என்றால் கூழாக ஆகியிருக்கும்.”

சுதமர் “இன்றுவரை எந்த களிற்றுப்புரவியும் குட்டிகளை மிதித்துக்கொன்றதில்லை” என்றார். “ஆம், ஆனால் தற்செயலாக நிகழலாமே? சூரன் பழைய படைக்குதிரை. அதன் குளம்புகளின் எடை தெரியும் அல்லவா? சமீப காலமாக அது ஓடுவது குறைவு. ஆகவே எடை ஏறிக்கொண்டே செல்கிறது” என்றார் நாமர். “தமையனுக்கு அடங்கிய இளையோன் என்று அவரை நளன் எண்ணியதாகவே கதைகள் சொல்கின்றன” என்றான் நகுலன்.

“ஆம், அவர் அவ்வாறுதான் இருந்தார். ஏனென்றால் பிறிதொன்று சொல்லி அவரை வளர்க்கவில்லை மூத்தோர்” என்றார் சுதமர். “ஆனால் நகர்மூலையில் கலி காத்திருந்தது. நச்சுக்கல்லைப்பற்றி கேட்டிருப்பீர்கள். இங்கு விரிந்திருக்கும் பலகோடி கூழாங்கற்களில் ஏதோ ஒன்று அது. எவ்வகையிலும் அதை நாம் கண்டடைய முடியாது. ஆனால் அதை மிதித்ததுமே நம் நரம்புகளில் நஞ்சு ஊறிவிடும். பிறகு அந்தக் காலை வலியிலாது ஊன்ற இயலாது. நஞ்சு ஊறி உடலை வெல்லும். உயிருடன் அதுவும் பிரிந்துசெல்லும்.”

“கலியின் வஞ்சம் இந்திரபுரியை தொடர்ந்துகொண்டிருந்தது. அதை அரசர் நளனோ பேரரசி தமயந்தியோ அறியவில்லை. அமைச்சர் அறிந்திருந்தனர். நிமித்திகர் சொல்லிக்கொண்டுமிருந்தனர். சூதரே, வெற்றியைப்போல வீழ்ச்சியை அளிப்பது பிறிதொன்றுமில்லை. எளிய சூதனாக இந்தக் கொட்டிலுக்குள் அமர்ந்து வெளியே என் விழிகாண நிகழ்ந்து முடிந்த வாழ்க்கையை நோக்குகையில் வெற்றி என்பதே தோல்விக்கென தெய்வங்கள் சமைப்பதோ என்னும் ஐயம் எனக்கு உருவாகிறது” என்று சுதமர் சொன்னார்.