நீர்க்கோலம் - 18

17. முகமுன்முகம்

flowerமறுநாள் காலையில் முதலிருள் பொழுதிலேயே அர்ஜுனனும் தருமனும் பிறரிடம் விடைபெற்றுக் கிளம்பி காட்டுக்குள் சென்று மறைந்தனர். பீமன் அப்பால் துணைநிற்க திரௌபதி கண்ணீர் என ஊறி வழிந்த மலையிடுக்கு ஒன்றில் இலைகோட்டி நீர் அள்ளி உடலில் ஊற்றி நீராடினாள். குழல்கற்றைகளை ஐந்தாகப் பகுத்து தோளில் விரித்திட்டு அவள் மீண்டு வந்தபோது நகுலனும் சகதேவனும் விடைபெறும்பொருட்டு காத்து நின்றிருந்தனர். திரௌபதியின் பின்னால் வந்த பீமன் இளையவரைக் கண்டதும் “கிளம்பிவிட்டீர்களா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் நகுலன். “நாங்கள் இருவரும் சூதர்களாக செல்லவிருக்கிறோம். எங்கள் பெயர்களை சுதன் அனுசுதன் என்று கூறலாமென்று இருக்கிறோம். எங்களைக் குறித்து செய்திகள் அப்பெயரில் உங்களை வந்தடையட்டும்.”

“நன்று!” என்று பீமன் தலையசைத்தான். பீமனை வணங்கி திரௌபதியிடம் தலையசைவால் விடைபெற்று அவர்கள் இருவரும் சென்றனர். “நாமும் கிளம்பவேண்டியதுதான்” என்றான் பீமன். “உனக்கு உணவு கொண்டுவைத்திருக்கிறேன். அருந்து!” திரௌபதி பெருமூச்சுடன் உணவருந்த அமர்ந்தபோது “நீ இன்னமும் பிங்கலரின் கதையில் இருந்து மீளவில்லை” என்றான் பீமன். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கிருக்கிறாய்?” என்றான் பீமன். “தமயந்தியின் காட்டில்.” பீமன் புன்னகை செய்து “அது இந்தக் காடுதான்…” என்றான்.

கதிரெழத் தொடங்கவில்லையெனினும் வானொளி காட்டிற்குள் விழிதுலங்கச் செய்திருந்தது. கிளம்பும்போது திரௌபதி அவர்கள் வந்த வழியை திரும்பிப் பார்த்தாள். பீமன் “செல்வோம்” என்றான். அவள் தலையசைத்தாள். பீமன் தண்ணீர் குடுவையும் கிழங்குகளும் கனிகளும் நிரம்பிய கூடையை தோளிலேற்றிக்கொண்டு நடந்தான். தனது மாற்றாடையை சுருட்டிக் கட்டிய மரவுரி மூட்டையை கையிலெடுத்தபடி திரௌபதி அவனுடன் சென்றாள். இருவரும் ஒருவரோடொருவர் உரையாடாமலேயே நடந்தனர்.

சற்று கடந்தபின் அந்த அமைதியால் உளம் அழுத்தப்பட்ட பீமன் “இன்னும் சிறிது தொலைவுதான்” என்றான். “ஆம், ஓசைகள் கேட்கின்றன” என்று திரௌபதி சொன்னாள். “நான் தோள்வலி வித்தை காட்டும் பால்ஹிக ஷத்ரியனாகவும் நீ என் துணைவியாகவும் அங்கு தோற்றமளிப்போம்” என்றான். அவள் புன்னகைத்து “முதல் மாற்றுரு” என்றாள். “ஒரு சிறு பயிற்சி” என்று பீமன் சொன்னான். “இங்கு நம்மை கூர்ந்து நோக்காதவர்களுக்கு முன் மாற்றுரு கொள்வோம். இது நம்மை நாமே மறைத்துக்கொள்ளல் மட்டும்தான். மாற்றிக்கொள்வதல்ல.”

“தாங்கள் இதற்குமுன் மாற்றுரு கொண்டதுண்டா?” என்று திரௌபதி கேட்டாள். “எல்லா நகரங்களிலும் மாற்றுரு கொண்டு செல்பவனாகவே என்னை உணர்கிறேன்” என்று பீமன் நகைத்தான். திரௌபதி “உடலை பிறிதொன்றாகக் காட்டுவதைக் குறித்து சொன்னேன்” என்றாள். “ஆம், நானும் அதைத்தான் சொன்னேன். நகரங்களில் என் உடலை நான் பிறிதொன்றாக காட்டுகிறேன்” என்றான். திரௌபதி “இந்த உரையாடல் எங்கும் செல்லப்போவதில்லை” என்றாள். பீமன் “ஆம்” என்றபின் சற்று கழித்து “இளையோர் இருவரும் இங்கு மிக அருகேதான் இருக்கிறார்கள்” என்றான்.

“எப்படி தெரியும்?” என்று திரௌபதி கேட்டாள். “என் உள்ளம் சொல்கிறது. எப்போதும் நானிருக்கும் இடத்தை என் சித்தம் சென்று தொடும் பெரிய வட்டமாகவே உணர்கிறேன். அவ்வட்டத்திற்குள் இருப்பனவும் வருவனவும் செல்வனவும் ஒவ்வொரு கணமும் எனக்கு தெரிந்துகொண்டிருக்கும். இளவயதில் இது என்ன என்று வியந்துள்ளேன். பின்னர் அறிந்தேன், இது குரங்குகளின் தன்னுணர்வு” என்றான் பீமன். “மானுடரின் உளவட்டம் பெரிது. அது வாழ்வட்டத்தை சிறிதாக்கிவிடுகிறது. நான் என் உளவட்டத்தைச் சுருக்கி நிகழ்வட்டத்தை நிலைநிறுத்திக்கொள்கிறேன்.” உரக்க நகைத்து “ஆகவே நீ இப்போது இருப்பதுபோல நான் கதையுலகில் கால் வைத்து நடப்பதில்லை” என்றான்.

அவர்கள் மையச்சாலைக்கு வந்தபோது பெரிய தலைப்பாகைகளுடன் புத்தாடையணிந்த சூதர்களின் குழு ஒன்று இசைக்கருவிகளும் தோல்மூட்டைகளுமாக சென்று கொண்டிருந்தது. அவர்களின் குடிப்பொருட்களை ஏந்திய இரு அத்திரிகளை இளம் சூதர்கள் கயிற்றைப் பிடித்து நடத்திச் சென்றனர். ஓர் அத்திரியின் மீது நிறைவயிற்றுடன் விறலி ஒருத்தி எதையோ மென்றபடி ஒருக்களித்தவள்போல அமர்ந்திருந்தாள். பிறிதொன்றில் இரு குழந்தைகளுடன் அன்னை விறலி அமர்ந்திருந்தாள். அவள் வாயிலிட்டு மென்ற எதையோ தன் குழவியின் வாய்க்குள் துப்பினாள். அது வாய் வழிய அதை குதப்ப இன்னொரு குழவி வாய் நீட்டி கைகளை வீசியபடி குருவிக்குஞ்சுபோல எம்பியது.

அவர்கள் மலர்ந்த முகத்துடன் ஒருவருக்கொருவர் நகையாடியபடி சென்றனர். இருபொதி சுமந்த எட்டு அத்திரிகளுடன் வணிகர்களின் குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. தோளில் தோல் மூட்டைகளை ஏந்திய இளம் வணிகர்கள் புழுதி படிந்த கால்களும் கலைந்து காற்றிலாடிய குழல்கற்றைகளுமாக சிரித்துப் பேசிக்கொண்டு நடந்தனர். இருமருங்கும் ஐயத்துடன் விழிகள் சுழல வேலேந்திய காவலர்கள் நால்வர் அவர்களைக் காத்து உடன் சென்றனர். வணிகர் குழுவுக்குப் பின்னால் திரௌபதியும் பீமனும் சென்று சேர்ந்துகொண்டனர்.

ஒரு காவல்வீரன் “எங்கு செல்கிறீர்கள், மல்லரே?” என்றான். “குண்டினபுரியின் வேனிற்சந்தைக்கு. நான் மற்போர் வித்தைகள் காட்டுபவன். இவள் என் துணைவி” என்றான் பீமன். “நீர் ஷத்ரியரா?” என்று ஒருவன் கேட்டான். “ஆம்” என்றான் பீமன். அவர்களிருவரும் அவனை கூர்ந்து நோக்கியபின் ஒருவன் “ஆனால் மிலேச்சர்களின் குருதி உம் உடலில் உண்டு என்பதில் ஐயமில்லை” என்றான். பீமன் நகைத்து “எனது குருதியை நான் இன்று வரை பார்த்ததில்லை” என்றான். அவர்கள் நகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றனர். “எது உம் ஊர்?” என்றான் இன்னொருவன். “பால்ஹிக நாடு” என்றான் பீமன். “அங்கே மிலேச்சகுருதி அற்றவர்கள் அரிது” என்றான் வணிகன்.

பெருஞ்சாலையில் மேலும் மேலும் மக்கள் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். சிறுவணிகர்கள், மலைப்பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் கானகர், சந்தைக்கு குடிப்பொருள் வாங்கச்செல்லும் சிற்றூர்குழுக்கள். அனைவருமே உரத்த குரல்களுடன் சிரித்து பேசிக்கொண்டனர். சிரிப்பு எழுந்துவிட்டால் எல்லா பேச்சும் சிரிப்பூட்டுவதே என பீமன் எண்ணிக்கொண்டான். மகிழ்ச்சியாக இருப்பதை பிறருக்கு அறிவிப்பதே சிரிப்பு. மகிழ்ச்சி என்பதே ஒருவகை வெளிப்பாட்டு முறையா? அவன் புன்னகையுடன் தருமனை எண்ணிக்கொண்டான். அவர் சொன்ன சொற்றொடரா அது?

ஒவ்வொரு வழிச்சந்தியிலும் வந்தவர்களை சென்றவர்கள் புதுமழைநீரை நதி என அலையெழுந்து சந்தித்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து அறிமுகம் புதுக்கினர். முறைமைச்சொல் அழைத்து உறவு அறிவித்தனர். நெடுங்காலத்துக்குப்பின் கண்டவர் ஓடிச்சென்று தோள்தழுவி குலநலம் உசாவினர். எவரும் அவர்களை தனித்துப் பார்க்கவில்லையென்பது பீமனுக்கு தெரிந்தது. அச்சாலையில் முற்றிலும் அயல் முகங்கள் தெரிவது வழக்கமென்று தோன்றியது.

விதர்ப்பத்தின் முதல் காவலரண் தொலைவில் தெரிந்தது. அங்கு நான்கு நிரைகளாக வண்டிகளையும் அத்திரிகளையும் நிறுத்தி கூர்நோக்கி குலமும் குடியும் ஊரும் அடையாளங்களும் தேர்ந்து சுங்கம் கொண்டு அப்பால் அனுப்பினர் காவலர். பணிக்காவலர்களுக்குமேல் எழுந்த பீடத்தில் விதர்ப்பத்தின் அரசமுத்திரை கொண்ட வெள்ளிக்கோலுடன் நின்ற தலைமைக்காவலனின் செந்நிறத் தலைப்பாகை உயர்ந்து தெரிந்தது. அத்திரிகளும் வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று இணைந்துகொண்டன. நடந்து சென்றவர்களின் நிரை எறும்பு வரிசைபோல சாலையிலிருந்து விலகி தனித்து தெரிந்த காவல் கொட்டகை ஒன்றுக்குள் நுழைந்து மறுபக்கம் வெளியே சென்றது.

பீமன் விழிகளால் திரௌபதியிடம் எச்சரிக்கை காட்டிவிட்டு அந்நிரையில் இயல்பாக சென்று நின்றான். நிரையில் நின்றவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் காவல் கொட்டகைக்குள் நுழைய அரை நாழிகை நேரம் ஆயிற்று. உள்ளே இருந்த காவலர்கள் ஒருவருக்கொருவர் உரத்த குரலில் நகையாடியபடி தங்கள் அலுவல்களைப்பற்றிய பகடிகளைப் பேசியபடி ஒவ்வொருவராக அழைத்து முகங்களை கூர்ந்து நோக்கியபடி ஓரிரு வினாக்களைத் தொடுத்து பெயர்களை பதிவு செய்து அப்பால் அனுப்பினர். பீமன் உள்ளே சென்றபோது ஒருவன் உரத்த குரலில் “குண்டினபுரியை அவனுக்கே அளித்துவிடலாம். பழைய ஆடைகளை நாம் நிஷாதர்களுக்கு அளிப்பதில்லையா?” என்றான்.

முதிய வீரன் ஒருவன் “போதும், இது அரசசெவிகளில் விழுந்துவிட்டால் இதுவும் நிகழக்கூடும். நிஷாதர்கள் நமது தலைமேல் அமர்ந்து நம்மை கால்களால் ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு எழும்” என்றான். பிறிதொருவன் உரக்க “யாதவன்மேல் சினம் கொண்டு நிஷாதர்களை தூக்கிச் சுமப்பது நல்ல அரசாடல்” என்றான். பீமன் முன் நின்ற இளம் காவலன் அவன் உடலை நோக்கியபின் “தடியா, எந்த ஊர் உனக்கு?” என்றான் “பால்ஹிக நாடு. ஷத்ரியன், என் பெயர் வலவன்” என்றான் பீமன்.

அவனை ஏறிட்டு நோக்கியபின் எண்ணியிராப் பொழுதில் அவன் தோளை ஓங்கிக் குத்தி “பெருமல்லர் என்று எண்ணுகிறேன்” என்றான். “ஆம், பாறைகளை தூக்கி வித்தை காட்டுவேன். தாங்கள் விரும்பினால் இந்த பீடத்தை தூக்கிக் காட்டுகிறேன்” என்றான் பீமன். பீடத்தின் மேல் நின்றிருந்த முதிய தலைமைக்காவலனை பார்த்தபின் “பீடத்தில் நிற்பவரோடு தூக்க முடியுமா?” என்றான் காவலன். “ஆம்” என்றபடி பீமன் தூக்கப்போனான். அவன் தோளைத் தட்டி “நன்று! நன்று! நீ தூக்கக்கூடும். இது யார்?” என்றான் காவலன். “இது என் தேவி” என்றான்.

அவன் அவளை மேலும் கூர்ந்து நோக்கி “கரியவள், அழகி” என்றான். பின் அவளிடம் “உன் பெயர் என்னடி?” என்று கேட்டான். “சைரந்திரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன வித்தை காட்டுவாய்?” என்றான் அவன். பின்னால் நின்ற ஒருவன் “இரவில் அவனை அவள் சுமப்பாள். அந்த வித்தைக்காகவே கூட்டிச் செல்கிறான். வேறென்ன?” என்று சொல்ல காவலர் அனைவரும் வெடித்து நகைத்தனர். பீமன் விரிந்த மூடச்சிரிப்புடன் “ஆம் வீரர்களே, அவள் என்னை தூக்குவதுண்டு” என்றான். திரௌபதி தலைகுனிந்து நின்றாள். “ஏன் கூந்தலை அவிழ்த்திட்டிருக்கிறாள்? கிளிகள் கூடுகட்டப்போகின்றன” என்றான் ஒருவன். “பால்ஹிக நாட்டு வழக்கம் இது. நாங்கள் குழல்கட்டுவதில்லை” என்று பீமன் சொன்னான்.

அதற்குள் பின்பக்கம் கிராதர்கள் நால்வர் கூடைகளில் அடைக்கப்பட்ட குரங்குக் குட்டிகளுடன் வந்து நின்றனர். அவர்களை திரும்பி நோக்காமலே “செல்க!” என்று கையைக் காட்டிய காவலன் “கூடையில் என்ன, உங்கள் மைந்தரா?” என்றான். “ஆம் வீரரே, விதர்ப்பத்தின் படைகளில் சேர்த்துவிட வந்திருக்கிறோம்.” வீரன் உரக்க “சிரிப்பா? சிரிக்கும் வாய்களை கிழித்து விரிப்பேன். மூடப்பதர்களா…” என்றான். “நாங்கள் சிரிக்கவில்லை, எங்கள் குரங்குகள்தான் சிரிக்கின்றன” என்றான் ஒரு கிராதன். “வாயை மூடு, குரங்கே” என்றான் முதிய காவலர்தலைவன்.

மறுபக்கம் வந்ததும் பீமன் விழிகளால் திரௌபதியை சந்தித்தான். அவள் முகத்தில் உணர்வு மாறுதல் ஏதும் தெரியவில்லை. “இனி எவரும் கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நெரிசலில் நீந்தியே நாம் குண்டினபுரியை கடந்துவிடமுடியும்” என்றான் பீமன். திரள்நெரிவாகச் சென்ற மக்களில் ஒரு பகுதி பிரிந்து அப்பாலிருந்த சோலை நோக்கி செல்வதை பீமன் கண்டான். “அங்கு என்ன உள்ளது?” என்று கேட்டான். “விதர்ப்பத்தின் மூதன்னையர் ஆலயம். வணிகம் செய்பவர்கள் அங்கு சென்று செப்புக் காசுகளை காணிக்கையிட்டுச் செல்வது வழக்கம்” என்றான் ஒரு முதியவன்.

பீமன் திரௌபதியை நோக்க ‘சென்று பார்த்துவிட்டுச் செல்வோம்’ என்பதுபோல் அவள் தலையசைத்தாள். கிளைச்சாலை சென்று நுழைந்த சோலை உயரமற்று தாழ்ந்த கிளைகள் கொண்ட தழை மரங்களாலானதாக இருந்தது. தரையெங்கும் சருகுகள் உதிர்ந்து கிடந்தன. அவற்றின்மேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. அச்சோலையில் குடியிருக்கும் மான்கள் மக்களைக்கண்டு அஞ்சாமல் தலைதூக்கி நோக்கியபடி நின்றிருந்தன. சோலைக்குள் உடுக்கோசையும் முழவோசையும் மணியொலியும் கேட்டுக்கொண்டிருந்தன.

சோலை நடுவே சற்றுத் தாழ்வான பகுதியில் மூதன்னையரின் ஆலயம் அமைந்திருந்தது. மரத்தாலான கூரையிடப்பட்ட அரைவட்ட வடிவமான நீண்ட ஆலயநிரையின் கருவறைகளில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்திருந்த அன்னையரின் சிலைகளை தொலைவிலிருந்தே காண முடிந்தது. பன்னிரு அன்னையரின் கருவறை வாயில்களும் பொதுமுற்றம் நோக்கி திறந்திருந்தன. அதன் நடுவே இருந்த இடையளவு உயரம் கொண்ட அகன்ற பலிபீடத்தில் வழிபடச் சென்றிருந்தவர்களின் கையிலிருந்த மலரையும் கனிகளையும் வாங்கி வைத்து படையல் வைக்க பூசகர்கள் எண்மர் நின்றிருந்தனர். எண்மர் படையலிட்ட பொருட்களை எடுத்து அப்பால் கூடைகளில் வைக்க அதை ஊழியர்கள் சகடப்பலகைகளில் ஏற்றி தள்ளிக்கொண்டு சென்றனர். பீடம் ஒழிந்து நிறைந்து ஒழிந்துகொண்டிருந்தது.

மக்கள் நிரையாகச் சென்று பன்னிரு அன்னையரின் முன்னும் நின்று தொழுது அப்பால் சென்றனர். நிஷாதர்களும் கிராதர்களும் மலைமக்களும் வணிகர்களும் பலிபீடத்தின் மீது வைத்த காணிக்கைகளை நீட்டி “இங்கு!” “இதோ!” “காணிக்கைகளை பெறுங்கள், பூசகர்களே” என்றெல்லாம் கூவிக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் தோள்களால் உந்தியும் தள்ளியும் முன்னால் செல்ல முந்தினர். கூப்பிய கைகளுடன் முதல் அன்னையின் ஆலயத்தருகே சென்று நின்று திரௌபதி வணங்கினாள். அவளுக்குப் பின்னால் நின்றபடி உள்ளே அமர்ந்திருந்த அன்னையை பீமன் நோக்கினான்.

ஆலயவாயிலில் நின்றிருந்த பூசகர் உரத்த குரலில் “லோபாமுத்திரை! விதர்ப்ப குலத்தின் முதலன்னை. உலகு புரக்கும் அம்மையையும் அப்பனையும் அருகிருந்து வணங்கும் அகத்தியனின் அறத்துணைவி. அன்னையை வணங்குக! அருகிருந்து அருளும் அகத்தியரை வணங்கி அருள் பெறுக!” என்று கூவினார். பூசெய்கைகள் செய்பவர்கள் மலரும் செப்புக்காசும் கொண்ட தாலங்களை நீட்ட அவற்றைப் பெற்று உள்ளே சென்று மலராட்டும் நீராட்டும் சுடராட்டும் முடித்து மலரை திருப்பி அளித்தார் பூசகர்.

ஒவ்வொரு ஆலய முகப்பிலும் நின்று வணங்கி பன்னிரண்டாவது ஆலயத்தை அடைந்தனர். பூசகர் “விதர்ப்ப குலத்தெழுந்த பேரரசி. ஒரு கோல் கீழ் பாரத நிலத்தை ஆண்டவள். விதர்ப்பகுலப் பேரரசர் பீமகர் மகள். பேரரசர் நளன் மணந்த மங்கை, தமயந்தி” என்று கூவினார். “வணங்கி அருள் கொள்க! உங்கள் செல்வியர் விழிகளில் தெய்வமெழுக!”

தமயந்தியின் கற்சிலை இரண்டடி உயரமிருந்தது. விரித்த குழல் தோளுக்குப்பின் பரவியிருக்க நிமிர்ந்த முகம் நிலைகொண்ட நோக்குடன் அறியாச்சொல் ஒன்றை இதழ்களில் நிறுத்தி காலத்திற்கு அப்பால் அமர்ந்திருந்தது. பணைத்த பெரும் தோள்கள். ஒரு கால் மடித்த அரையோக அமர்வு. கழல்கள். காலுக்குக்கீழ் கைக்கூப்பிய வடிவில் கலிதேவன் அமர்ந்திருந்தான். அவன் இரு தோள்களிலும் காகங்கள். திரௌபதி கைகூப்பி விழிகள் நிலைகொள்ள தமயந்தியை நோக்கியபடி நின்றாள். மேலும் மேலும் வந்து கொண்டிருந்த நிரை அவளை முட்டி சென்றுகொண்டிருக்க ஆற்றொழுக்கில் கட்டப்பட்ட படகென அவள் உடல் அசைந்துகொண்டிருந்தது.

பீமன் அவள் தோளைத் தட்டி “செல்வோம்” என்றான். “ஆம்” என்று அவள் விழித்து “செல்வோம்” என்றாள். மீண்டும் நிரையில் இணைந்து நடந்து பெரும் சாலையை அடைந்தார்கள். பீமன் அவளிடம் “காலடியில் கலி. வெற்றி கொண்டுவிட்டாள்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள்.

flowerகுண்டினபுரிக்குச் செல்லும் சாலை மேலும் மேலும் காட்டு வழிகள் வந்திணைய மக்கள் பெருகி ஒரு படைநகர்வென சென்று கொண்டிருந்தது. “எட்டு பெருஞ்சந்தைகளில் முதுவேனிற்சந்தையே மிகப் பெரிது” என்று அவனருகே வந்த முதிய கானகன் சொன்னான். “அங்கு எதையும் வாங்கலாம் என்கிறார்கள். காட்டிலிருந்து குரங்குக் குட்டிகளை பிடித்துச்சென்று பழக்கி அங்கு கொண்டுசென்று விற்கின்றனர் கிராதர். பழகிய குரங்குகளுக்கு பொன் விலையளிக்கிறார்கள். அவற்றை கலிங்க மாலுமிகள் விரும்பி வாங்குகிறார்கள்.” வியப்புடன் “எதற்கு?” என்றான் பீமன். “அவர்களின் கலங்களுக்கு மேலே ஆயிரமிதழ் தாமரைபோல எழுந்திருக்கும் பாய்களைக் கட்டவும் அவிழ்க்கவும் இக்குரங்குகள் மிக உதவியானவை. சில பெருங்கலங்களில் ஐம்பது குரங்குகள் வரை பயணம் செய்கின்றன” என்றான் ஒருவன்.

“சில குரங்குகள் பல முறை பீதர் நாடு சென்று வந்தவை என்கிறார்கள்” என்றான் ஓர் இளைஞன். “ஆண்டுக்கு ஒரு முறை மலையிறங்கி இந்தச் சந்தைக்கு வந்து செல்வதே நமக்கு வாழ்வின் பெருநிகழ்வாக இருக்கிறது” என்றார் அப்பால் பிறிதொருவர். “நன்கு பழக்கிவிட்டால் எனது குரங்குகள் மாலுமிகள் இல்லாமலேயே கலம் நடத்தும்” என்றான் குரங்குப்பெட்டியுடன் சென்ற கிராதன். “ஆம், மேலும் சற்று பழக்கினால் அவை பீதர் நாடு சென்று வணிகம் செய்தே மீளக்கூடும்” என்றான் அப்பாலிருந்த இளைஞனொருவன். “அடுத்தமுறை வருகையில் பீதர்களின் மைந்தர்கள் குரங்குகளைப்போல வடம் தொற்றி ஏறுவார்கள்.”

பெருநகைப்பு எழுந்து பரவியது. ஒவ்வொருவரும் ஏதேனும் சொல்லி நகைக்க விரும்பினர். எதுவும் நகையாடலாக மாறிக்கொண்டிருந்தது. அனைவரும் உவகையில் ததும்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பறவைகளைப்போல உடலெங்கும் நிலைகொள்ளாமல் திகழ தோழியரையும் குழவியரையும் கூவியழைத்தனர். ஒவ்வொன்றையும் விந்தையென குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டி அகவலோசை எழுப்பினர். கிளர்ச்சியடைந்த கோழிகளைப்போல முதிய பெண்கள் தலையை நீட்டி தாடையை அசைத்தனர்.

பீமன் திரௌபதியிடம் “சந்தையைப்போல இம்மக்களுக்கு மகிழ்வு கொடுப்பது பிறிதில்லை. செல்லுமிடமெல்லாம் சந்தையைத்தான் விரும்பிப் பார்க்கிறேன். தாங்கள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் நிகர்மதிப்பு பிறிதொன்றுள்ளது என்று இவர்கள் கண்டுகொள்வது சந்தையில்தான். சந்தையில் ஒவ்வொரு மலைமகனும் தனது நூற்றுக்கணக்கான நிகர்மாற்றுக்களை கண்டடைகிறான். இதோ கையில் அரக்குடன் செல்லும் இவன் விரும்பினால் ஒரு படைக்கலத்தை வாங்கலாம். ஒரு புலித்தோலை, ஒரு பொதி வெல்லத்தை, ஒரு மரவுரியைக்கூட வாங்கிக்கொள்ளலாம். உலகம் அவ்வாறு அவன் தொடும் தொலைவில் வந்து சூழ்ந்துகொள்வது இங்குதான்” என்றான்.

திரௌபதி “ஆம், பொருள் ஒவ்வொன்றும் ஒரு புது வாழ்வு. சற்று முன் நான் நரித்தோல் ஆடையொன்றை பார்த்தேன். ஒரு கணம் அதை அணிந்து ஒரு கிராதப்பெண்ணாக வாழ்ந்து மீண்டேன்” என்றாள். தொலைவில் கொம்போசை எழுந்தது. நான்கு புரவிகள் கூட்டத்தை வகுந்தபடி குளம்போசையுடன் அணுகுவது தெரிந்தது. “விலகிக்கொள்! படைவீரர்கள்… அவர்கள் நம்மை பார்க்கலாகாது” என்று பீமன் திரௌபதியிடம் சொன்னான். “ஆம்” என்றபடி திரௌபதி கூட்டத்திற்குள் புகுந்து விலகி பெரிய நுணா மரத்தின் பின்னே பாதி உடல் மறைத்துக்கொண்டாள். அவளருகே முழுதுடலும் மறைத்தபடி பீமன் நின்றான்.

புரவிகள் பாய்ந்துசென்ற வழி நீரிலெழுந்த கோடுபோல அலையலையாக பின்பக்கம் விரிந்து அகன்றது. அது ஒரு பாதையாக மாற அதனூடாக மேலும் மேலும் புரவிகள் வந்தன. அவற்றில் மாட்டுத்தோல் கவசமணிந்த விதர்ப்ப வீரர்கள் உறையணிந்த கையிலேந்திய நீண்ட ஈட்டிகளுடன் அமர்ந்திருந்தனர். ஒருவன் தன் கொம்பை வாயில் பொருத்தி மும்முறை ஊத தொலைவில் அதை கேட்டு மீண்டும் ஒரு கொம்பூதி பிளிறல் ஓசை எழுப்பினான். கொம்பொலிகளின் தொடர் மிக அப்பால் சென்று மறைந்தது. “அரச ஊர்வலமா?” என்று திரௌபதி கேட்டாள். “அரசரல்ல… ஆனால் அரசனுக்கு நிகரானவன்” என்றான் பீமன்.

குண்டினபுரியின் வீரர்நிரைகளுக்குப் பின்னால் நிஷாதர்கள் படைநிரை ஒன்று மாட்டுத்தோல் கவசங்களும் இரும்பாலான தலையணிகளும் முனை ஒளிரும் ஆளுயர ஈட்டிகளுமாக சீர்நடையிட்டு வந்தது. அதற்குப் பின்னால் வெண்புரவி மீது ஒருவன் விற்கொடியை ஏந்தி வந்தான். “யாருடையது அக்கொடி?” என்றாள் திரௌபதி. “விற்கொடி மன்னர்கள் பலருக்கும் உரியதுதான். இதை நான் பார்த்ததில்லை. அதன் கீழ் ஒரு மீன் உள்ளது” என்றான் பீமன். முரசு வைக்கப்பட்ட தட்டுவண்டி ஒன்றை இரு புரவிகள் இழுத்துச்சென்றன. அதில் நின்றிருந்த முரசுக்காரன் குறுந்தடியைச் சுழற்றி அதை முழக்கினான். தொடர்ந்து வந்த திறந்த தேரில் ஏழு மங்கலச் சூதர்கள் குறுமுழவுகளும் யாழும் கைமணிகளும் ஏந்தி அமர்ந்திருந்தனர்.

அதற்குப்பின் மூன்று காவல்தேர்கள் தொடுத்த விற்களை ஏந்திய வில்லவர்கள் நாற்புறமும் நின்றிருக்க வந்தன. அதற்குப்பின் பட்டுத் திரைச்சீலைகள் பறக்கும் அரசத்தேர் ஒன்று வந்தது. அதன் மீதும் அந்த விற்கொடி பறந்துகொண்டிருந்தது. “ஆம், ஓர் அரசன். நான் இதுவரை அறிந்திராதவன்” என்றான் பீமன். திரௌபதி “அவர் நிஷாத அரசர். அப்புரவி வீரர்கள் நிஷாதர்கள். நான்கு விரல்களால் அம்பு தொடுத்து பிடித்திருக்கிறார்கள்” என்றாள். பீமன் திரும்பி அவளை நோக்க “நிஷாதர்களில் விற்கொடி கொண்டவன் ஏகலவ்யன் மட்டுமே” என்றாள்.

பீமன் “ஆம்” என்று வியப்புடன் உரக்க சொன்னான். “நால்விரல் விற்கோள்… எப்படி இதை அறியத் தவறினேன்? ஏகலவ்யன்!” என்றான். அரசுத்தேர் அவர்களை அணுகி கடந்துசென்றது. அதன் பறக்கும் திரைகளினிடையே உள்ளே அரியணையில் உடைவாளை மடியில் சார்த்தி கைகளைக்கட்டி கண்களை மூடி சாய்ந்திருந்த ஏகலவ்யன் முகத்தை பீமன் கணநேர வாள்வீச்சுபோல மின்ன பார்த்தான். தேர் சென்று மறைந்ததும் புழுதி கிளப்பியபடி படைக்கலமேந்திய புரவி வீரர்களின் நிரை சென்றது.

“ஏகலவ்யனை ருக்மி தன் கோலுக்கு நிகரான கோலேந்திய மன்னராக ஏற்றுக்கொண்டிருக்கிறான். விந்தைதான்… இதைத்தான் அங்கு பேசிக்கொண்டார்கள்” என்றான் பீமன். “ஆம், இன்று களத்தில் இளைய யாதவருக்கு எதிராக முழு வஞ்சம் கொண்டு நிற்பவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இணைவது இயல்பானது” என்றாள் திரௌபதி. பீமன் துயருடன் “மீண்டும் வஞ்சங்களின் உலகுக்குள் நுழைகிறோம். விட்டு வந்த காடு எத்தனை இனியதென்று எண்ணிக்கொள்கிறேன்”என்றான்.