நீர்க்கோலம் - 16
15. கைக்கொளல்
ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு நூற்றுக்கணக்கான சிறு பிணக்குகளினூடாக நாளும் நாளுமென துளித்துளியாக வரையறுக்கப்படுகிறது. முதல்நாள் பின்னிரவில் கைபிணைத்து உடலொட்டிக் கிடக்கையில் தமயந்தி நளனிடம் “நமது அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்று கேட்டாள். அவன் அவள் தோளில் முகம்புதைத்து உடலோய்ந்து கிடந்தான். உதடுகள் அழுந்தியிருந்தமையால் “ம்?” என்று குழறினான். அவள் மீண்டும் கேட்டாள். “என்ன?” என்றான். அவள் அவன் முகத்தைப் பிடித்து விலக்கி “நம் அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்றாள்.
“நெடுங்காலமாக இங்கே நிலவும் முறைமைப்படிதான்” என்றான் நளன். “அது என்ன என்றுதான் கேட்கிறேன். பெரும்பாலான தொல்குடிகளின் ஊர்களில் அவர்களின் ஊருக்குள் நுழையும் வணிகர்களுக்கு அவர்களின் ஊர்திகளைப்பொறுத்து சுங்கம் கொள்ளப்படுகிறது.” அவன் “ஆம், இங்கும் அப்படித்தான். தலைச்சுமைக்கு அரைப்பணம். அத்திரிகளுக்கும் கழுதைகளுக்கும் ஒருபணம். வண்டிகளுக்கு இரண்டு” என்றான். “அதைத்தான் அறிய விரும்பினேன். அந்தப் பொதிகளில் என்ன பொருள் இருந்தாலும் பொருட்டல்ல அல்லவா?” என்றாள். “பொதிகளை அவிழ்த்துப் பார்க்கமுடியுமா?” என்றான் நளன். “முடியும். பொருள்களின் மதிப்பை ஒட்டி சுங்கம் வகுக்கப்படுமென்றால் வணிகர்கள் அவர்களே பொருட்களை அவிழ்த்துக்காட்டும்படி கட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் உள்ளே வரும் பொருட்களில் பெரும்பகுதி உப்பு போன்ற மதிப்புக்குறைவான பொருட்களாகவே இருக்கும். எஞ்சிய பொருட்களை மட்டும் நாம் கண்காணித்தால்போதும்” என்றாள்.
குரல் கூர்மைகொள்ள “சுங்கநிகுதியை இரண்டாகப் பிரித்து மறுபாதியை விற்பனை செய்யுமிடத்தில் கடைக்காணமாக பெறவேண்டும். இரண்டு கணக்குகளும் நிகராக அமையும் என்றால் சுங்கம் கட்டப்படாத பொருளை அங்காடியில் விற்கமுடியாது” என்றாள் தமயந்தி. நளன் சலிப்புடன் “ஆம்” என்றபின் மல்லாந்து படுத்தான். அவனால் அவள் சொல்லும் எதிலும் உளம்நிலைக்க முடியவில்லை. அதுவரை அவனைச் சூழ்ந்திருந்த அவள் உடலின் மென்மையும் மணமும் அவள் பேசப்பேச பிறிதொன்றாவதை உணர்ந்தான்.
அவள் அவனருகே ஒருக்களித்து தன் முலைகள் அவன் தோளில் படிய அவனை அணைத்து “வருபொருளுக்கு நிகுதி சுமத்துவது பிழையான வழக்கம். அந்தப் பணம் அப்பொருளை வாங்கும் நம்மிடமே மிகைவிலையென கொள்ளப்படும். செல்பொருளுக்கு நிகுதி சுமத்துவதே உகந்தது. அது நாம் விற்கும்பொருள்மேல் மிகைவிலையென்றாகி நம் மதிப்பை கூட்டும். வருபொருளுக்கு நிகுதி இல்லையேல் மேலும் பொருள் இங்கே வரும். இங்கு விற்கப்படும் பொருளின் விலைக்கு இணையாக நம்மிடம் பொருள்கொண்டு சென்றாலொழிய வணிகர்களுக்கு வரவுப்பொருள் மிகாது. எனவே நம் பொருட்கள் அவர்களால் மேலும் கொள்ளப்படும்” என்றாள்.
அவன் அவள் மீதிருந்த கையை விலக்கியபடி “இதையெல்லாம் சொல்வது எளிது. செய்வது கடினம். அத்தனை வணிகர்களையும் வழிகளில் செறுத்து நிறுத்தி சுங்கம் கொள்ளுமளவுக்கு நம்மிடம் ஊழியர்கள் இல்லை. கோட்டைவாயிலில் மட்டுமே இன்று சுங்கம் கொள்ளப்படுகிறது” என்றான். “அதுவும் பிழை. கோட்டைவாயிலில் வண்டிகளின் நீள்நிரையே உருவாகும். சுங்கம் கொள்வதற்கு வாயிற்காவலர்களை அமைத்தல் தவறு. அவர்கள் பொருளின் மதிப்பறியாதவர்கள். பொறுமையிழப்பார்கள். கடுஞ்சொல் எடுப்பார்கள். அதைவிட ஒரு கட்டத்தில் எதையும் நோக்காமல் உள்ளே அனுப்பவும் தொடங்கிவிடுவார்கள். சென்று நோக்குங்கள், பெருவணிகர்கள் நம் வாயிற்காவலர் பொறுமையிழந்த பின்னரே உள்ளே வரத்தொடங்குவர்” என்றாள் தமயந்தி.
நளன் தலையை வெறுமனே ஆட்டினான். இருளில் அவன் முகத்திலெழுந்த எரிச்சல்குறிகளை அவள் காணவில்லை. “நிகுதிகொள்ள எப்போதும் வணிகர்களையே பொறுப்பிலமர்த்தவேண்டும். ஆனால் அவர்கள் மாறாப் பொருளுக்கு பணியாற்ற மாட்டார்கள். பணியாற்றும்தோறும் வருபொருள் வளருமென்றால்தான் செயலூக்கம் கொள்வார்கள். நிகுதிகோளில் அவர்களுக்கு நூறிலிரண்டு பங்கு என்று அறிவிப்போம். நிகுதி பலமடங்கு பெருகுவதை காண்பீர்கள்.” நளன் ஒன்றும் சொல்லாமல் கைகளை மார்பில் கட்டியபடி இருளை நோக்கிக் கிடந்தான்.
அவன் மார்பை தன் விரல்களால் நீவி மென்மயிர்ப்பரப்பை சுழற்றியபடி “நீங்கள் எண்ணுவதைவிட கூடுதலாக இங்கே வணிகம் நிகழ்கிறது. நகருக்குள் நான் நுழைந்ததுமே அதைத்தான் நோக்கினேன்” என்றாள். நளன் “கடைகளில் விரிந்துள்ள பொருட்களை நானும் நோக்குவதுண்டு” என்றான். “இன்னமும் இங்கே வெளிப்படையாக நிகுதி அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் பொருட்களை கடைபரப்பவில்லை. ஆனால் வணிகர்கள் எக்குலத்தவர் என்று நோக்குங்கள். முதற்குலத்து வணிகர் பெரும்பொருள் இல்லையேல் இங்கு வரமாட்டார்கள்.”
நளன் ஒருகணத்தில் பற்றிக்கொண்ட சினத்துடன் “நீ என்ன இந்நகரின் கணக்கராகவா வந்தாய்?” என்றான். உணர்வுமாறுபாடில்லாமல் “கணக்கறியாதவர் நாடாளமுடியாது” என்றாள் அவள். “கணக்கு நோக்க இங்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள்” என்றான் நளன். “இல்லை, அவர்கள் நிஷதகுலத்தவர். பாரதவர்ஷத்தில் எங்கும் தொல்மலைக்குடிகள் வணிகத்தில் சிறந்ததாக வரலாறில்லை” என்றாள்.
நளன் எழுந்து அமர்ந்து “என்ன சொல்ல வருகிறாய்? கணக்கறியாத மூடர், காட்டுமானுடர், அதைத்தானே?” என்றான். “நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் இங்கு இன்றிருக்கும் நிகுதிமுறை மலைச்சிறுகுடியினருக்குரியது என்றேன்.” நளன் உரக்க “ஆம், மலைச்சிறுகுடியினரே. என் அன்னையர் கல்லணிகளை அணிபவர். என் தந்தையர் காட்டுமலர்களை தலையிலணிபவர். நாங்கள் மீன்வேட்டும் காட்டில் அலைந்தும் வாழ்பவர்… நான் மறுக்கவில்லை. நீ மணந்திருப்பது கான்மகனை. முடிசூடி வந்திருப்பது காட்டுக்குலமொன்றின் அரசியாக…” என்றான்.
அவள் சற்றும் சினம்கொள்ளாமல் “ஆம், அதை அறிவேன். ஆனால் நீங்கள் பரசுராமரால் அனல்குலத்து ஷத்ரியர் என்றானீர்கள் என அறிந்திருந்தேன்” என்றாள் தமயந்தி. “ஏன், ஐயமிருக்கிறதா?” என்றான் நளன். “இல்லை. ஷத்ரியர்களாக ஆனீர்கள். ஆகவே ஷத்ரியர்களின் அனைத்து வழிகளையும் கைகொள்ளுங்கள் என்கிறேன். நிகுதிகொள்வதே ஷத்ரியனை ஆற்றல்மிக்கவனாக ஆக்குகிறது” என்றாள்.
மேற்கொண்டு பேசமுடியாமல் நளன் உடல்நடுங்கினான். எழுந்து தன் மிதியடியை போட்டுக்கொண்டு வெளியே செல்லப்போனான். அவள் அவன் கையை எட்டிப்பற்றி “என்ன சினம்?” என்றாள். “உன் நோக்கில் நாங்கள் எவர் என இப்போது தெரிகிறது” என்றான் நளன். “ஏன் சற்றுமுன் தெரியவில்லையா?” என்றாள் அவள். அக்குரலில் இருந்த காமம் அவன் உளநிலையை மாற்றியது. அவன் உடல் தளர்வதை கையே வெளிக்காட்ட அவள் அவனை பற்றி இழுத்து அருகே மஞ்சத்தில் விழச்செய்தாள். “என்ன சினம் இது? சிறுவனைப்போல?” என்றாள்.
“உன் கைகள் மல்லர்களுக்குரியவை” என்றான் அவன். “நான் கதை பயின்றவள்.” அவன் அவள் தோள்களை தன் முகத்தால் வருடியபடி “கற்சிலைபோல” என்றான். “நீங்கள் இதை விரும்பவில்லையோ?” என்றாள். “ம்?” என்றான் நளன். “விரும்பவில்லையா?” என செவியில் கேட்டாள். “இதைத்தான் விரும்பினேன்” என்றான் நளன். அவள் சிரிப்பு அவன் தலைக்குள் என ஒலித்தது.
அவன் காமத்தின் இயல்பை அவள் முதல்முறையிலேயே உணர்ந்துகொண்டிருந்தாள். தயங்கியபடி ஓரத்து ஓட்டத்தில் கால்நனைத்து கூசி நகைத்து மெல்ல இறங்கி மையப்பெருக்கில் பாய்ந்து மூழ்கித் திளைத்து மகிழ்பவன். அவனை அவள் சிறுமகவென தன் முலைகளின்மேல் சூடிக்கொண்டாள். இடைமேல் ஏந்தினாள். கைகளில் ஊசலாட்டினாள். தன் சுழிப்பிலும் பெருக்கிலும் அலைகளிலும் அமிழ்த்தி வைத்திருந்தாள். பிறிதொன்றையும் அவன் வேண்டவில்லை என்பதை மெல்ல அறிந்துகொண்டாள்.
முதற்புலரியில் அவள் எழுந்து குழல்முடியும் ஓசைகேட்டு அவன் விழித்துக்கொண்டான். “என்ன இப்போதேவா?” என்றான். “கருக்கல் முரசு ஒலிக்கிறது” என்றாள். “அது காவலர் இடம் மாறுவதற்காக. காதலர்களுக்கல்ல” என்றான். “இன்று நான் முதல்முறையாக அவையமரவிருக்கிறேன். குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் வருகிறார்கள். அவர்களனைவரையும் நான் சற்றேனும் முன்னரே அறிந்திருக்கவேண்டும். ஆகவே அமைச்சர்களையும் ஒற்றர்களையும் என்னை வந்து நோக்கும்படி சொன்னேன்” என்றாள் தமயந்தி.
“அதை மெல்ல செய்யலாம். முதல்நாள் சில எளிய சடங்குகளுடன் முடித்துவிடலாம்” என்றான் நளன். “நான் எதையும் ஒத்திப்போடுவதில்லை” என்றாள் தமயந்தி. “நான் ஒத்திப்போடுவதுண்டு” என நளன் சிறுசீற்றம் தெரிய சொன்னான். “அரசர்கள் கடமைகளால் கட்டப்பட்டவர்கள், நான் அரசி” என்றாள் தமயந்தி. “நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னை சிறுமை செய்கிறது” என்று கூவியபடி எழுந்து அமர்ந்தான் நளன். “நான் என் உளமுணர்ந்ததை சொல்கையில் அதை சிறுமை என்று உணர்கிறீர்கள் என்றால் பிழை என்னுடையதல்ல” என்றாள். “பிழை என்னுடையதா?” என்றான் நளன் சினத்துடன் எழுந்துகொண்டு. “அவ்வாறு நீங்கள் உணரக்கூடும் என நினைக்கிறேன்” என்றாள் தமயந்தி.
அவர்கள் விழிநோக்கி ஒரு கணம் நின்றனர். அவள் விழிகளில் சினம் இல்லை, சிறிய சிரிப்பு மட்டும்தான் இருந்தது. விழிதிருப்பி “நான் வெற்றுச்சடங்குகளுக்கு என்னை அளித்ததில்லை. அவைநிகழ்வுகள் மாறா ஒழுங்குடன் தலைமுறைகளாக நிகழ்பவை” என அவன் சொன்னான். “நீங்கள் இளையவர். வீரர். உங்கள் விளையாட்டரங்கில் மகிழ்ந்திருங்கள். உங்கள் இளமையில் ஒரு பகுதியை எனக்கு அளியுங்கள்” என்றாள். அக்குரலில் அவனை சிலிர்க்கவைக்கும் அணுக்கம் இருந்தது.
அவன் திரும்பி அவளை நோக்கி புன்னகைத்து “அதற்குத்தான் இங்கே இரு என்றேன்” என்றான். அவள் உதடுகளை மடித்து சிரித்தபடி “ஆனால் அதற்கு பொழுதிருக்கிறது. அப்போது…” என்றபின் அவன் காதைப்பிடித்து மெல்ல ஆட்டி “அதுவரை நல்ல குழந்தையாக இருக்கவேண்டும் என்ன?” என்றாள். அவன் “போடி” என்றான். அவள் புன்னகையுடன் வெளியே சென்றாள்.
முதல்நாளிலேயே அவையினர் கண்டுகொண்டனர், நிஷதநாட்டை ஆளப்போகிறவர் எவர் என. தமயந்தி நகர்நுழைந்தபோதே அவர்களின் பெண்டிர் அதை அறிந்துவிட்டிருந்தார்கள். நிஷதபுரியின் பட்டத்துயானையாகிய அங்காரகனின் மத்தகத்தில் அமைந்த பொன்பூசப்பட்ட அம்பாரிமேல் வலக்கையில் வெண்தாமரை மலரும் இடக்கையில் பொன்னாலான வாளும் ஏந்தி அவள் அமர்ந்திருந்தாள். தலையில் நளன் அவளுக்காக முன்னரே சமைத்து கருவூலத்தில் வைத்திருந்த மூன்றடுக்கு மணிமுடி அசைவுகளில் அருமணிகள் ஒளிவிட அமைந்திருந்தது. உடலெங்கும் மின்னிய அணிகளும் பொன்னுருகி சுழன்றுவழிந்ததுபோன்ற பட்டாடையுமாக அவள் விண்ணிலிருந்து இன்னமும் மண்ணுக்கு வராதவள் போலிருந்தாள்.
“இந்திராணியின் மண்வடிவம்!” என்றனர் மூதன்னையர். “தேவயானியின் விழித்திறம் கொண்டவள்!” என்றனர் நிமித்திகர். “உருமாற்றி திருமகளாக எழுந்த கொற்றவை!” என்றனர் சூதர். அவளை ஏந்திவந்த யானை கோட்டைக்குள் நுழைந்ததும் அதன் மணம் பெற்ற பிடியானைகள் இரண்டு கொட்டிலில் நின்று பிளிறின. தொடர்ந்து நகரமே ஒரு பிடி என மாறி பேரோசை எழுப்பியது. நகர்த்தெருக்களினூடாக அவள் அமர்ந்திருந்த அம்பாரிமேடை ஊசலாடியபடி சென்றபோது அரிமலர் மழை பொழிந்தது. வாழ்த்தொலிகள் அமையும்தோறும் மேலும் பொங்கின.
அமைச்சர்கள் இருவர் தாலத்தில் கொண்டுவந்த அரசமகுடத்தை குலமூத்தார் இருவர் எடுத்து அவள் தலையில் சூட்டினர். குலமூத்தார் ஒருவர் அளித்த செங்கோலை பெற்றுக்கொண்டு அவள் அரியணையில் அமர்ந்ததும் வைதிகர் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதி அவளை வாழ்த்தினர். அவை குரவையும் வாழ்த்தொலியுமாக மலர்தூவியது. ஒவ்வொரு சடங்கிலும் அவள் புன்னகை மாறா முகத்துடன் ஈடுபட்டாள். கருங்கல்லில் வடித்த சிலைமுகம் என தெரிந்தாள். அவை நிகழ்வுகளை அமைச்சர் அறிவித்ததும் அவள் ஒவ்வொரு குடித்தலைவரையும் பெயர்சொல்லி அழைத்து முறைமைச் சொல்லுடனும் உண்மையான வணக்கத்துடனும் செய்திகளை கேட்டறிந்தாள்.
தாங்கள் சொல்வன அனைத்தும் அவளுக்கு முன்னரே தெரிந்திருந்தது என்னும் உளமயக்கை அவர்கள் அடைந்தார்கள். ஒவ்வொன்றையும் மிக விரைவாக சிறு அலகுகளாகப் பிரித்து அதன் மிக எளிய வடிவை சென்றடைந்தாள். அங்கிருந்தே தீர்வுகளை அடைந்து சுருக்கமான சொற்றொடர்களில் அதை முன்வைத்தாள். ஒவ்வொரு முறையும் குடித்தலைவர்களை நற்சொற்களில் பாராட்டினாள். அந்தப் பாராட்டு மிகையாகுமென்றால் அவள் அவர்களின் செய்கைகளை மறுஅமைப்பு செய்யவிருக்கிறாள் என்றே பொருள் என அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
தீர்க்ககுலத்தலைவர் சாமர் “எங்கள் குடிகள் மலையடுக்குகளுக்கு அப்பால் சிற்றூர்களில் சிதறி வாழ்பவர்கள், அரசி. அவர்களுக்கு இந்திரபுரியின் காவல் என ஏதும் அளிக்கப்படவில்லை. ஆகவே அவர்களிடம் நாம் நிகுதி கொள்வதும் அறமல்ல” என்றார். “நிகுதி என்பது அரசன் அளிக்கும் கோல்காவலுக்கான ஊதியம் என்கின்றன நூல்கள்.” தமயந்தி புன்னகையுடன் “ஆம், ஆனால் அவர்கள் நம் குடிகள் என தங்களை சொல்லிக்கொள்கிறார்கள். அச்சொல்லே அவர்களுக்கான காப்பென்றாகிறது. அவர்களின் குடிப்பூசல்களில் நாம் நீதி வழங்குகிறோம்” என்றாள். “குடித்தலைவரே, தங்கள் சொல் கூர்மையுடையது. ஆனால் நூல்நெறிகளின்படி அரசன் கொள்ளும் வரி என்பது அவன் அளிக்கும் நீதியின்பொருட்டே.”
முதல்நாளிலேயே நிகுதிமுறையில் மாறுதல் வேண்டுமென்பதை அவள் அவையில் முன்வைத்தாள். குடித்தலைவர்கள் எழுந்து அது எவ்வகையிலும் உகந்ததல்ல என்று கூவினர். “நம் தொல்குடியினரே இங்கே கோதையின் பெருக்கில் செல்லும் படகுகளில் நிகுதியும் வாரமும் பெற்றுவந்திருக்கிறார்கள். அரசி, இங்குள்ள அத்தனை வணிகர்களும் என்றேனும் இங்கு வந்துசேர்ந்தவர்களே. அவர்களிடம் வரிகொள்ளும் பொறுப்பை அளிப்பதென்பது எங்கள் குலத்திற்கு இழிவென்றே கருதப்படும்” என்றார் மச்சர்குலத்தலைவர் விகிர்தர்.
“அவர்கள் நம் ஏவலர்கள். துலாகொள்ளும் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளிப்போம்” என்றாள் தமயந்தி. “அவர்களுக்கு காவல்நிற்க எங்கள் குடிகள் செல்லவேண்டுமா என்ன?” என்றார் விகிர்தர். “என்ன செய்யலாம்? அவர்களுக்கே வேல்கொள்ளும் உரிமையையும் அளித்துவிடலாமா?” என்றாள் தமயந்தி. அவர் “அதெப்படி?” என திகைக்க “விகிர்தரே, தங்கள் சொற்களை வணங்குகிறேன். பொன்னோ துலாவோ அல்ல வேலும் வாளுமே மெய்யான அரசு. அது என்றும் அனல்குலத்து ஷத்ரியர்களான நம் குடிகளிடம் மட்டுமே இருக்கும். வாளும் வேலும் நம்மிடமிருக்கையில் அவர்களிடமுள்ள துலா என்பதும் இவர்களிடமுள்ள மேழி என்பதும் வேழத்தின் மத்தகத்திலமர்ந்து விளையாடும் சிறுபுட்களைப்போல. அவை வேழத்தில் அமர்ந்து ஊரவில்லை, வேழத்திற்கு அவை பணிவிடை செய்கின்றன” என்றாள்.
அக்கணமே அந்தணர் உள்ளத்தை உணர்ந்து அவர்களை நோக்கி திரும்பி “அந்தணர் அந்த வேழத்தின் மத்தகம் சூடும் பொன்னாலான அம்பாரி. அதிலமர்ந்துள்ளது அறத்தின் தெய்வம்” என்றாள். “ஆம், அரசியின் சொல் மெய்மைகொண்டது” என்றார் மூத்த அந்தணரான பிரபர். அவையினர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட ஓசையால் கூடம் முழங்கியது. “நாம் மன்றுகூடி முடிவெடுத்தபின் அவைமுன் இதை பேசியிருக்கலாம், அரசி” என்றார் அமைச்சர். தமயந்தி புன்னகை செய்து “இல்லை, அவையினர் தங்கள் எண்ணங்களனைத்தையும் சொல்லி முடிக்கட்டும். இம்முடிவை நாம் எடுத்ததாக அவர்கள் எண்ணலாகாது, அவர்கள் எடுத்ததாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் நாளும் நிகழவேண்டிய ஒரு செயல் நிகுதிகொள்ளல்” என்றாள்.
அவள் அவை நீங்கியபோது மூத்த குடியினர் அனைவரும் எழுந்து கைகூப்பி நின்றனர். அவள் விலகியதுமே மலர்ந்த முகத்துடன் “ஆள்வதென்பது என்ன என்று இன்று அறிந்தோம். அது ஆயிரமிதழ் தாமரைமேல் திருமகள் என அமர்ந்திருப்பது மட்டுமே” என்றார் சகரகுலத்தலைவரான பிஞ்ஞகர். “புன்னகையை படைக்கலமாக ஏந்தியவர். நம் அன்னை ஒருத்தி அமர்ந்து ஆள்வதைப்போலவே உணர்ந்தோம்” என்றார் சூக்தகுலத்தலைவர் முக்தர்.
வணிகர்கள் மட்டும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி எண்ணம்சூழ்ந்து நடந்தனர். பெருவணிகரான குபேரர் “ஒட்டுமொத்தமாக நோக்கினால் நாம் நிகுதி பெருக்கவேண்டியிருக்கும்” என்றார். மூத்த வணிகரான ரத்னர் “ஆம். அரசு வலுக்கொள்ளும்தோறும் நிகுதி வீங்குமென்பது வணிகநெறி. ஆனால் வலுக்கொள்ளும் அரசு வணிகத்தையும் பெருக்கும்” என்றார். “முதலில் இது நமக்கு எதிரானதே. ஆனால் நீள்காலத்தில் நலம்பயப்பது. இன்று நாம் கரந்துசெய்யும் வணிகத்தை கரம் அளித்து திறந்து ஆற்றப்போகிறோம். கரந்து செய்வதற்கு ஓர் எல்லை உள்ளது. இனி அதை நாம் கடக்கலாம்” என்றார். அவர்கள் அவரைச்சூழ்ந்து நடந்து சென்றார்கள்.
“அரசிக்கு நாம் அளிக்கும் நிகுதிச்செல்வம் படைக்கலமென்றாக வேண்டும். அவர் கலிங்கத்தை வென்று அதன் துறைமுகங்களை கைப்பற்றினார் என்றால் நம் கருவூலங்கள் நிறைந்து வழியும்” என்றார் ரத்னர். “கலிங்கத்தையா?” என வணிகர் கூவினர். “ஐயமே வேண்டியதில்லை. அரசி கலிங்கத்தை வெல்வார். வெல்லவேண்டுமென நாம் அவரிடம் சொல்வோம். வஞ்சத்தால் போரிடுவதல்ல அரசரின் வழி. பொருள்நோக்கில் படையெடுப்பதே அவர்களுக்குரியது. அரசி அறியாதது அல்ல அது” என்றார் ரத்னர்.
அந்தியில் அரசரும் அரசியும் அமரும் பேரவை கூடுவதற்கு முன்பாக அமைச்சர் மூவர் வந்து தமயந்தியை சந்தித்தனர். அவள் ஓய்வுக்குப்பின் நீராடி நீண்ட குழலை தோள்களில் விரித்திட்டு வெண்ணிற பட்டாடையை போர்த்திக்கொண்டிருந்தாள். நெற்றியிலும் வகிடிலும் குங்குமம் அணிந்திருந்தாள். அமைச்சர்கள் அவளை அக்கோலத்தில் கண்டதும் சொல்மறந்தனர். “அமர்க!” என்றதும் கனவிலென அமர்ந்தனர். நாகசேனர் “குருதிசூடிய கொற்றவை போல…” என்று எண்ணிக்கொண்டார்.
முகமன்களை உரைத்ததும் கருணாகரர் தணிந்த குரலில் “அரசி அறியாதது அல்ல. இக்குடியின் முதற்தெய்வமென்றிருந்தது கலி. தங்களின்பொருட்டு இந்நகரை அரசர் மாற்றியமைத்தார். இதன் குன்றின்மேல் இந்திரனின் பெருஞ்சிலை எழுந்தது. கலி தென்றிசைச் சோலைக்குள் சென்றமைந்தது. அரசனைத் தொடர்வதே குடிகளின் வழி. ஈராண்டுகளுக்குள்ளாகவே இந்நகரில் கலிவழிபாடு மறைந்தது. இந்திரனுக்குரிய விழவுகளை அரசே பெருஞ்செலவில் முன்னெடுத்தமையால் இளையோர் உள்ளமெல்லாம் அங்கே சென்றமைந்தது” என்றார்.
“ஆனால் தெய்வங்கள் மறைவதே இல்லை. தென்றிசைச் சோலையில் அமர்ந்த கலியை வழிபடுவதை ஒருநாளும் நிஷதகுடிகள் கைவிடவில்லை. பிறர் அறியாமல் செல்கிறார்கள். ஓசையும் திரளுமின்றி வழிபடுகிறார்கள். இன்றும் இந்நகர்மக்களின் உள்ளத்தை கலிதெய்வமே ஆள்கிறது” என கருணாகரர் தொடர்ந்தார். “குலமுறைப்படி தங்களை மணந்து நகர்புகுந்ததுமே அரசர் அங்குதான் சென்றிருக்கவேண்டும். ஆனால் இந்திரனின் ஆலயத்திற்குத்தான் சென்றீர்கள். அங்கே வைதிகமுறைப்படி அனல்கொடையும் இந்திரனின் அடிகளுக்கு பூசெய்கையும் நிகழ்ந்தது. அதை பிழையெனச் சொல்லவில்லை. பெருவிழவென நிகழ்த்தவேண்டும் என்றோ பலிகொடைகள் ஆற்றவேண்டும் என்றோகூட நான் சொல்லவில்லை. குடிகளின் விருப்பப்படி இருவரும் கலிதெய்வத்தின் அடிதொழுது மலர்கொண்டு அதன்பின் அரியணையில் வீற்றிருந்தால் நன்று.”
நாகசேனர் “அரசருடன் கானேகிய அரசி தன் தூதரிடம் சொல்லி அனுப்பியது இது” என்றார். தமயந்தி அவர்களை நோக்கியபோது விழிகளில் ஒரு மங்கல் இருந்தது. அவள் உள்ளம் எங்கே செல்கிறதென அறியக்கூடவில்லை. பின்னர் மெல்லிய குரலில் அவள் “அரசரிடம் உசாவினீர்களா?” என்றாள். “இல்லை, அரசி. அவர் என்ன முடிவெடுப்பார் என எங்களால் எண்ணக்கூடவில்லை. அவர் உங்கள் எண்ணத்தையே நாடுவார். ஆகவே உங்களிடம் வந்தோம்” என்றார் நாகசேனர்.
“நான் என் விழைவென இதை முன்வைக்கமுடியாது” என்றாள் தமயந்தி. “ஆம், அதை அறிவோம். ஆனால் நீங்கள் உளம்கோணப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தால்போதும்” என்றார் கருணாகரர். “அவர் என்னிடம் அதை சொல்வார் என்றால் எனக்கு மறுப்பில்லை என்கிறேன்” என்றாள் தமயந்தி. “அது போதும், அரசி. இது பேரரசியின் விழைவு. மூதரசர் உளம்விலகி கானேகிவிட்டார். ஆனால் அவர் முடிதுறந்து சென்றது கலியை நாம் துறந்தமையால்தான் என நாடறியும். மூதரசர் இன்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார்” என்றார் கருணாகரர். “ஆம், குறிப்பாக அவர்களின் குற்றவுணர்ச்சி அவரை வளரச்செய்யும்” என்றாள் தமயந்தி.
“அரசர் தங்களின்பொருட்டே தந்தை சொல் மீறி தெய்வத்தை அகற்றினார் என்பார்கள். தாங்கள் வந்த பின்னரும் அது நீடித்தால் என்றோ ஒருநாள் தாங்களே நிஷதரின் குலதெய்வத்தை அகற்றியவர் என்றே சொல் உருவாகும். அந்தச் சினம் நம் குடிகளின் உள்ளங்களுக்குள் ஆழ்நஞ்சென உறையும். ஏதேனும் தருணத்தில் முளைக்கவும்கூடும். தெய்வங்களை குடிகள் ஒருபோதும் முற்றாக விட்டுவிடுவதில்லை, தேவி” என்றார் கருணாகரர். “ஆம்” என்று சொல்லி புன்னகைத்து “நன்று செய்க!” என்றாள் தமயந்தி.
அவர்கள் வந்துசென்ற சற்றுநேரத்திலேயே நளன் அகத்தளத்திற்கு வந்தான். அப்போது அவள் அணிபுனைந்துகொண்டிருந்தாள். அணிச்சேடியர் அவனைக் கண்டதும் தலைவணங்கி விலகினர். அவன் அவளை நோக்கியபடி எண்ணிவந்த சொற்கள் அனைத்தும் உதிர்ந்து அகல வெற்றுள்ளத்துடன் நின்றான். அவள் அவன் வருவதை காலடியோசையிலேயே அறிந்தாள். அவ்வறிதல் அவள் உடலில் மிகச் சிறிய அசைவைக்கூட உருவாக்கவில்லை. அவன் தோன்றியதும் விழிகள் மட்டும் திரும்பி அவனை தொட்டுச்சென்றன. அவன் அவளுடைய அந்த கலைவின்மையைக் கண்டு மேலும் அழுத்தமாக தன்னை முன்வைக்க உளம் உந்தப்பெற்றான். அந்த அகவிசையால் அவன் உடல் மெல்ல விதிர்த்தது. அவளுடைய அடுத்த விழியசைவுக்காக அவன் அங்கே கணம் கணமாக காத்து நின்றான். அவள் குழல் அமைத்த முதுசேடியை ஆடியில் நோக்கி செல்லும்படி கையசைவால் பணித்தாள். மேலாடையை மீண்டும் ஒருமுறை சீரமைத்தாள். கணையாழியை இணைத்த பொற்சரத்தை இழுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை ஆடியில் நோக்கிவிட்டு அவனைப் பார்த்து புன்னகைசெய்தாள். அவன் பொறுமையின்மையின் உச்சிவரை வந்து அப்புன்னகையால் குளிர்ந்து மீண்டும் கீழிறங்கினான். என்ன சொல்வதென்று அறியாமல் “அவை நிகழ்வுகள் தொடங்கவிருக்கின்றன” என்றான். அவை என்ற சொல்லை பிடிப்பற்றாகக் கொண்டு “அமைச்சர்கள் வந்தனர்” என்றான். அரசுசூழ்தல் அவளுக்கு உகந்தது என உள்ளம் உணர்ந்திருந்தது.
அவளை மகிழ்விக்கும்பொருட்டு ஏதேனும் சொல்ல விரும்பினான். “கலிதெய்வத்திற்கு ஒரு பூசெய்கை முடித்து அவையேறலாம் என்றார்கள். பெரிய விழாவாக அல்ல. சிறிய அளவில். அரசமுறைச் சடங்காக…” என்றான். அவன் முடிப்பதற்குள் அவள் “அரசர்கள் சடங்குகள் எதையும் மந்தணமாக செய்யமுடியாது” என்றாள். “ஆம்” என்றதுமே அவன் உள்ளம் சோர்வடைந்தது. “எனக்கு கலியை வணங்குவதில் மறுப்பேதுமில்லை” என்று அவள் சொன்னாள். அவன் குழப்பத்துடன் “ஆம், அதை அறிவேன்” என்றான்.
“ஆனால் பெருந்தெய்வங்களை வழிபடுபவர்களே பேரரசுகளை உருவாக்குகிறார்கள்” என்றாள் தமயந்தி. ஆடியில் நோக்கி காதோரம் தொங்கிய பொற்சரடு ஒன்றை சீரமைத்தபடி “தெய்வங்களை வானோக்கி கண்டுகொள்ளலாம். தான் வாழும் மண்நோக்கியும் கண்டுகொள்ளலாம். அறியாத ஆழங்களிலும் கண்டுகொள்ளலாம். வான்தெய்வங்கள் விழைவுகளை பெருக்குகின்றன. மண்தெய்வங்கள் பற்றை வளர்க்கின்றன. ஆழத்து தெய்வங்கள் அச்சத்தை எழுப்புகின்றன. பேரரசர்கள் பெருவிழைவுகளால் மட்டுமே ஆனவர்கள்” என்றாள்.
“நான் வானாளும் இந்திரனை மட்டுமே வழிபடுகிறேன்” என்றான் நளன். தமயந்தி “நான் நீங்கள் எத்திசை தேரவேண்டும் என சொல்லவில்லை. முடிவு உங்களுடையது” என்றாள். “நான் முடிவுசெய்து நெடுநாட்களாகின்றன. எனக்கு ஊசலாட்டமே இல்லை” என்றான் நளன். புன்னகையுடன் தமயந்தி எழுந்துகொண்டு “செல்வோம்” என்றாள்.