நீர்க்கோலம் - 14
13. அவைநிற்றல்
விதர்ப்பத்தின் அரண்மனை மிகச் சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும் வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா?” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச் சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன?” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் தொன்மையான நிகழ்வுகள், அரசே. மரங்கள் வளர்வதைப்போல நிகழ்வுகளும் வளர்ந்து பெரிதாகின்றன” என்றார்.
“அது எப்படி?” என்று கேட்டபின் அவர் தன்னை ஏளனம் செய்கிறார் என்றெண்ணி “சொல்லிப் பெருக்குகிறார்கள் என்கிறீர்களா?” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா? இவர்களால் அவ்வளவு பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன?” “இயன்றிருக்கக்கூடும். அவர்கள் இத்தனை விரைவாக நிகழ்வை ஒருங்கிணைத்திருப்பதனால் பந்தலமைக்க பொழுதிருக்காது. நமது ஒற்றர்கள் சென்றபோது அம்முற்றத்தில் ஒரு தூண் கூட நட்டிருக்கவில்லை” என்று நாகசேனர் சொன்னார்.
புஷ்கரன் எண்ணிய காட்சி உலைந்தது. “திறந்தவெளியில் எப்படி மணத்தன்னேற்பு வைக்க முடியும்?” என்றான். “ஏன்?” என்று நாகசேனர் கேட்டார். “விண்ணிலிருந்து கந்தர்வர்களோ தேவர்களோ வந்து அரசர்களுடன் கலந்துகொள்ளக்கூடுமல்லவா?” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ?” என்றார் நாகசேனர். அவர்கள் தன் சொல்லை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தோன்றவே புஷ்கரன் சினத்துடன் திரும்பி தன் புரவியை நோக்கி சென்றான்.
ஆனால் நளனுடன் தேரில் அமர்ந்து செல்கையில் தொலைவில் அரண்மனையைப் பார்த்ததும் புஷ்கரன் உணர்வெழுச்சியடைந்தான். அது அவன் எண்ணியதையும்விட மிகச் சிறியதாகவே இருந்தது. அமைச்சர்கள் பலவாறாக சொல்லிய பின்னரும்கூட முகடுகளின் நிரைகளும் உப்பரிகைகளும் சாளரங்களும் கொண்ட ஏழடுக்கு மாளிகையை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஒரு ஆள் உயரமுள்ள செங்கல் சுவரால் வளைக்கப்பட்ட அவ்வரண்மனை இரண்டு முகடுகள் கொண்டதாக இருந்தது. உப்பரிகைகளே இல்லை. மரச்சட்டமிடப்பட்ட ஏழு சிறு சாளரங்கள் பெருமுற்றத்தை நோக்கி திறந்திருந்தன. முகப்பு முற்றம் மிகப் பெரிதாக அமைந்து அவ்வரண்மனையை மேலும் சிறிதென பின்னுக்கு தள்ளியது. ஆனால் முதல்கணத்தில் இதுவா என்ற எண்ணம் எழுந்தபின் இங்குதான், இங்குதான் என அவன் உள்ளம் துள்ளத்தொடங்கியது.
செங்கல் பரப்பப்பட்ட முற்றம் நெடுங்காலம் புழக்கத்திலிருந்து கருமை கொண்டிருந்தது. அதில் நடக்கும் வழிகள் தேய்ந்து செந்நிற புண்வரிகள் எனத் தெரிந்தன. முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் நிறைந்து வண்ணம் குழம்பி கொடிகளின் அலைவில் விந்தையான சோலை ஒன்று காற்றில் ததும்புவதாகத் தோன்றியது. தேர் சகட ஒலி மாறுபட அரண்மனை முகப்பை அடைந்ததுமே புஷ்கரன் பதற்றத்துடன் தேரின் நிலைத்தூணைப் பற்றியபடி வெளியே பார்த்தான். அவன் மொத்த உடலும் அருவிக்குக் கீழே நிற்பதுபோல் அதிர்ந்துகொண்டிருந்தது. விழுந்துவிடக்கூடாதென்ற எண்ணமே அவன் சித்தத்தை நிறைத்திருந்தது.
விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருவர் வந்து தேருக்கு கீழே நின்று பணிந்து முகமனுரைக்க நளன் புஷ்கரனை பார்த்தான். புஷ்கரன் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புன்னகையுடன் அவன் தோளில் கைவைத்து “வெளியே சென்று முறைமைச்சொற்களை சொல்க!” என்றான். “ஆம், ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக!” என்றான் நளன். “என்ன?” என்று புஷ்கரன் கேட்டான். “இறங்கு, இளையோனே” என்று சொன்னதும் பதறி விழுவதுபோல தேரிலிருந்து பாய்ந்திறங்கி தரையில் நின்றான். விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் சௌபர்ணிகர் அவனுக்கான முறைமைச்சொற்களைச் சொல்லி தலைவணங்கினார். விழித்துக்கொண்டவன்போல திடுக்கிட்டு சுற்றும் நோக்கியபின் “வணங்குகிறேன், உத்தமரே” என்றான். வேறெந்த சொல்லும் எண்ணத்தில் எழவில்லை.
நளன் கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி சௌபர்ணிகரை நோக்கி முகமனும் வாழ்த்தும் உரைத்தான். அவர் அவனை மும்முறை வணங்கி “நிஷதத்தின் அரசரையும் இளவரசரையும் மணம்சூழ் முற்றத்திற்கு வரவேற்கிறோம்” என்றார். நளன் தன் உடைவாளை எடுத்து புஷ்கரனிடம் நீட்ட புஷ்கரன் திரும்பி “இதை நான் இடையில் அணியவேண்டுமா, கையில் உருவிப் பற்றிக்கொள்ள வேண்டுமா, மூத்தவரே?” என்றான். “இடையில் அணிந்துகொள்க! எனது வலப்பக்கமாக நின்றிரு. இனி நீ எச்சொல்லும் உரைக்க வேண்டியதில்லை” என்று தாழ்ந்த குரலில் நளன் சொன்னான்.
புஷ்கரன் விழிகளை சுழலவிட்ட பிறகு “மற்ற அரசர்களின் அணுக்கர்கள் வாளை உருவி கையில் பற்றியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், சிலர் அப்படி செய்கிறார்கள்” என்றான் நளன். “நானும் வாளை உருவிக்கொள்கிறேனே?” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்னால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா?” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா?” என்றான் புஷ்கரன். நளன் மறுமொழி சொல்லவில்லை.
புஷ்கரன் நீள்மூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டு நாற்புறமும் விழிகளை ஓட்டியபடி நடந்து வந்தான். நடுவே தரையிலிருந்த சிறுகுழியில் கால்புரள நிலை தடுமாறினான். அனிச்சையாக நளன் திரும்பிப்பார்க்க பதறி எட்டு வைத்து அருகே சென்று இணையாக நடந்தான். அப்பால் பெருமுற்றம் முழுக்க ஷத்ரியர்களின் தேர்களே நின்றிருந்தன என்று கொடிகளிலிருந்து தெரிந்தது. அவர்களின் அமைச்சர்கள் பட்டு மஞ்சலிலும் அரசகுடிப் பெண்டிர் வெள்ளிப் பல்லக்குகளிலும் வந்திருந்தனர். படைத்தலைவர்கள் வந்த புரவிகள் பளபளக்கும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தன. கவசம் பூண்ட காவலர்கள் அப்புரவிகளின் அருகே நிரை வகுத்து நின்றிருந்தனர். உலோகக் கவசங்களின் நீரொளி நெளிவுகளில் வண்ணங்கள் கலங்கின.
தெற்கு வாயில் அருகே இரு நிரையாக நின்றிருந்த அணிக்காவலர் தலைவணங்கி அவர்களை அணுகிய சுதமகுலத்து சிற்றரசனையும் அவனது இரு அணுக்கர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்களுக்குப்பின் நளன் சென்றதும் மீண்டும் அதே முகமனும் வாழ்த்தும் உரைக்கப்பட்டது. சிற்றமைச்சர்கள் வணங்கி உள்ளே அனுப்ப நிமித்திகன் “நிஷதர் நளன் அவைபுகுகிறார்” என்று உரக்க அறிவித்தான். புஷ்கரன் “என்ன இது?” என சொல்ல வாயெடுக்க நளன் விழிகளால் அவனை தடுத்தான். அவைக்கு உள்ளே நின்றிருந்த அறிவிப்பு நிமித்திகன் அதை ஏற்று முழங்குவதை புஷ்கரன் கேட்டான்.
அவையில் நிமித்திகர்களின் அறிவிப்பொலியும் அரசர்கள் அவைபுகும் சங்கொலியும் அங்கு நிறைந்திருந்தவர்களின் பேச்சொலியும் சேர்ந்த கார்வை நிறைந்திருந்தது. அந்த ஒலி அவன் அடிவயிற்றை கலங்கச் செய்தது. அது அச்சமா பதற்றமா எதிர்பார்ப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பிறிது எத்தருணமும் தன்னை அத்தனை கிளர்த்தியதில்லை என்று தோன்றியது. இது வரலாற்றுத் தருணம். அவனை உலகம் அறியப்போகும் இடம் இந்தக் களம். நளன் தாழ்ந்த குரலில் “நேர்நோக்கி நட” என்றான். “ஆம்” என்றபின் அவன் இறுக்கமாக உடலை அமைத்து நோக்கை நேராக திருப்பியபடி நடந்தான். இருவரும் மணத்தன்னேற்பு வளாகத்திற்குள் நுழைந்தனர்.
நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கிற்குமேல் பந்தலில்லாமல் வான் திறந்திருந்தது. கிழக்கு வாயிலினூடாக வந்து ஷத்ரியர்கள் அவையமர்ந்து தங்கள் இருக்கை நிரைகளை நிறைத்துக்கொண்டிருந்தார்கள். மேற்கு வாயிலினூடாக விதர்ப்ப அரச குடியினரும் பிறரும் வந்துகொண்டிருப்பதை அறிவிப்புகள் காட்டின. வடக்கு வாயிலினூடாக அந்தணர்கள் உள்ளே தங்கள் குருமரபின் கொடிகளுடன் அறிவிப்பு பெற்று உள்ளே வந்தனர். தெற்கு வாயிலினூடாக வந்த பெருவணிகர்களும் குடித்தலைவர்களும் அவைக்குள் இட்டுச்சென்று அமரவைக்கப்பட்டனர். அப்பாலிருந்த நான்கு சிறுவாயில்கள் வழியாகவும் விதர்ப்பத்தின் குடிகள் பெருகிவந்து சூழ்ந்து முகங்களாக நிறைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கி உரத்த குரலில் ஒருவரையொருவர் அழைத்தும் பேசியும் சிரித்துக்கொண்டிருந்த ஓசையும் வெளியே திரண்டிருந்த வீரர்களின் ஆணைகளும் சகட ஒலிகளும் கலந்த முழக்கம் தன் தோலை முரசுப்பரப்பென அதிரச் செய்வதை புஷ்கரன் உணர்ந்தான்.
நளனை இட்டுச்சென்ற அவைநிலை சிற்றமைச்சர் “தங்கள் பீடம்” என்று ஒன்றை சுட்டிக்காட்டினர். திகைப்புடன் திரும்பிப் பார்த்த புஷ்கரனை நோக்கி விழியமர்த்தியபின் நளன் அந்த எளிய பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டான். அதில் அவனுடைய கொடியோ குடிச்சின்னமோ இருக்கவில்லை. அவனுக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு மச்சர் குடித்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். எளிய தோலாடை அணிந்து தலைப்பாகைக்குமேல் பறவை இறகுகளைச் சூடி தங்கள் குலஇலச்சினை கொண்ட வளைகோல்களுடன் அமர்ந்திருந்தவர்கள் அரைக்கணம் நளனை திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டனர்.
நளன் அருகே சிறுபீடத்தில் அமர்ந்த புஷ்கரன் “இது அரசர்களுக்கான நிரை அல்ல, மூத்தவரே” என்றான். “ஆம்” என்றான் நளன். “அப்படியென்றால் தாங்கள் எழுந்து இளவரசியை கோர முடியாது” என்றான் புஷ்கரன். நளன் “பார்ப்போம்” என்றான். “இளவரசி மாலையுடன் அவை நுழைகையில் எதிரில் நிரைநின்றிருக்கும் மணவேட்பர்களில் ஒருவராக தாங்கள் இருக்கமுடியாது” என்றான் புஷ்கரன் மீண்டும். விழிகளைத் தாழ்த்தி மீண்டும் “பார்ப்போம்” என்று நளன் சொன்னான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தன் உடலை தளர்த்தியபடி அவையை நோக்கத்தொடங்கினான்.
புஷ்கரனால் அவைநிகழ்வுகளை முழுமையாக நோக்கமுடியவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வை அவன் கூர்ந்து நோக்கத் தொடங்கியதுமே அதில் முழுமையாக ஈடுபட்டு நெடுநேரம் கழித்து பிறிதொரு அசைவாலோ ஒலியாலோ விழித்துக்கொண்டு அங்கு தன் நோக்கை திருப்பினான். அங்கிருந்தவர்களிலிருந்து நோக்கை விலக்க அவனுக்கு பிறிதொன்று தேவைப்பட்டது. தான் எதையும் நோக்கவில்லை என்ற எண்ணமே பதற்றத்தை அளிக்க அவன் மேலும் மேலும் அலைபாய்ந்தான். வேதியர் குழு கூடிநின்று எதையோ பேசிக்கொண்டதை, அனல்கொடைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அவர்கள் அடைந்த பல வகையான குழப்பங்களை நோக்கியவன் விதர்ப்பத்தின் அமைச்சர்கள் கூட்டமாக எங்கோ ஓடுவதை நோக்கி திரும்பினான். அயோத்தியின் அரசன் மாளவனை வணங்கியதும் எழுந்த ஓசை அத்திசை நோக்கி அவனை இழுத்தது.
நிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோலை தூக்க அமைதி பரவியபோது அவன் கலிங்கனை நோக்கிக்கொண்டிருந்தான். கலிங்கனின் மணிமுடியில் இருந்த செந்நிற வைரம் அனலென மின்னிக்கொண்டிருந்தது. நெல்லிக்காய் அளவிருக்கும் அது என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. அவன் நிமித்திகனின் மிகப் பெரிய தலைப்பாகையையும் தொண்டைமுழை அசைவதையும் நோக்கிக்கொண்டிருக்கையில் பேரிகைகள் முழங்க கொம்புகள் பிளிறி இணைந்தன. அவன் இசைச்சூதர்களை நோக்கினான். ஒவ்வொருவரும் அரசர்களைப்போல ஆடையணிந்திருந்தனர். நகைகள் அசைவுகளில் ஒளிவிட்டன. “என்ன ஒரு வெறி! பித்தர்களைப்போல. ஆனால் அனைத்து ஓசையும் இணைந்து ஒன்றென ஒலிக்கின்றது” என எண்ணி அவன் விழிதிருப்பியபோது விதர்ப்பன் தன் அரசியுடன் அரியணையில் அமர்ந்துவிட்டதை கண்டான்.
பீமகர் களைத்திருந்தார். கண்களைச் சுற்றி மெல்லிய தசைவளையங்கள் தொங்கின. உதடுகள் உள்மடிந்திருந்தன. அரசியும் துயிலில் இருப்பவள்போல் தோன்றினாள். அமைச்சர்கள் பதற்றத்துடன் அரசரிடம் ஏதோ கேட்டபின் திரும்பி ஓடினர். படைத்தலைவன் வந்து குனிந்து ஏதோ சொன்னான். இன்னொருவனிடம் அவன் ஆணையிட அவன் விரைந்து அகன்றான். பீமகர் ஓர் அமைச்சரை அழைத்து ஏதோ கடிந்துகொண்டார். அரசி அடிக்கடி தன் மேலாடையை சீரமைத்தாள். ஒவ்வொன்றும் பிழையாகவும் குழப்பங்களுடனும் நடந்துகொண்டிருப்பதை காணமுடிந்தது. “எதையும் முழுமையாக திட்டமிடவில்லை இவர்கள்… வெளியே நகரம் இடிந்து விழுந்ததுபோல கலைந்தே கிடக்கும்” என அவன் எண்ணினான். குனிந்து நளனிடம் “ஆணையிட எவருமில்லை என எண்ணுகிறேன்” என்றான். “ஆணையிட பலர் இருக்கிறார்கள்” என்றான் நளன்.
அமைச்சர் மேடையேறி அரச நிகழ்வுகளை அறிவித்தார். அது தொலைவிலிருந்த அவர்களுக்கு கேட்கவில்லை. குரல்பெருக்கவைக்க எந்த அமைப்பும் செய்யப்படவில்லை. காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது. இப்படியே போனால் இவர்கள் எரியும் உச்சிவெயிலில்தான் மணத்தன்னேற்பை நிகழ்த்துவார்கள் என்று புஷ்கரன் எண்ணிக்கொண்டான். விதர்ப்பத்தின் எட்டு தொல்குடித் தலைவர்கள் அரசரை வாழ்த்தி தங்கள் கோல்களை அவர் காலடியில் தாழ்த்தினர். அந்தணர் எழுவர் அரசரை கங்கை நீர் தெளித்து தூய்மை செய்ததும் பொற்தாலத்தில் கொண்டுவரப்பட்ட விதர்ப்பத்தின் மணிமுடியை குடித்தலைவர்கள் எடுத்து அரசருக்கு அணிவித்தனர். முரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டு சூழ விதர்ப்ப குடிகளின் வாழ்த்துக்கள் அலையலையாக ஒலித்தன. அந்தணர் அரசரை வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தினர்.
தொடக்கத்தில் இருந்த ஆர்வம் விலக புஷ்கரன் சலிப்புடன் சாய்ந்து அமர்ந்தான். பீமகரும் அரசியும் ஏழு முனிவர்களின் கால்களை கழுவிய நீரை தலைமேல் தெளித்துக்கொண்டனர். வைரங்களும் பொன்மணியும் கலந்த அரிசியை ஏழு அந்தணர்களுக்கு அளித்து வாழ்த்து கொண்டனர். ஏழு புலவர்களுக்கு பொன் எழுத்தாணியும் ஏழு சூதர்களுக்கு பொன்வளையலும் பரிசளித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் முரசுகள் நடைமாற்றி ஓசையிட வாழ்த்தொலிகள் எழுந்தன. சடங்குகள் முடிந்து அனைவரும் சென்று அமர்ந்ததும் நிமித்திகர் மணநிகழ்வு நடைபெறப்போவதை அறிவித்தார். மூத்த அமைச்சர் எழுந்து மணத்தன்னேற்பின் நெறிகள் தொன்மையான மகாவாருணஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறிவித்து அவற்றை விளக்கினார்.
முதுசூதன் ஒருவன் மேடைமேல் ஏறி வணங்கி ஓங்கிய மணிக்குரலில் விதர்ப்ப இளவரசி தமயந்தியின் சிறப்புகளை சொல்லத்தொடங்கினான். எல்லா பாடல்களிலும் தேவியரைப்பற்றி சொல்லப்படும் சொற்களாகவே அவை ஒலித்தன. விதர்ப்ப அரசகுடியின் பதினெட்டு மூதன்னையர் நிரையின் பெயர்களைச் சொல்லி தமயந்தியின் பெயர் ஏழாவது மூதன்னையாகிய தமையின் நீட்சி என்றும் அம்மூதன்னையரின் வடிவென எழுந்த அவளை மணப்பவரே விதர்ப்பத்தின் மணிமுடிக்குரிய மைந்தனின் தந்தை என்றும் அறிவித்தான். புஷ்கரன் திரும்பி நளனை பார்த்தான். உறைந்த முகத்துடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். முதுசூதன் தமயந்தி அவைபுகவிருப்பதை அறிவித்ததும் அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது.
அனைவரும் ஒரு திசையை நோக்குவதை தன்னருகே அமர்ந்திருந்தவர்களின் விழிகளிலிருந்தே புஷ்கரன் உணர்ந்தான். அவன் அத்திசை நோக்கி விழிசெலுத்துவதற்குள் தமயந்தி அவைக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். விதர்ப்பத்தின் கொடியுடன் மார்புக் கவசமும் தலையில் இறகுமுடியும் அணிந்த சேடி முன்னால் வர, மங்கலத் தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் தொடர்ந்துவந்தனர். அவையில் நின்றிருந்த இசைச்சூதர் மங்கல இசையெழுப்பினர். தமயந்தியை பார்ப்பதற்காக அனைத்துத் தலைகளும் வெவ்வேறு வகையில் அசைவதை நோக்கி புஷ்கரனின் விழிகள் திரும்பின. அவனருகே அமர்ந்திருந்த மச்சர்கள் அவர்களின் மொழியில் ஏதோ சொன்னார்கள். அது அவன் மொழிபோல ஒலித்து, சொற்கள் வேறாக இருந்தன. அவன் மீண்டும் திரும்பியபோது தமயந்தியை கண்டான். வாழ்த்தொலிகளே காற்றாகச் சென்று அவள் அணிந்திருந்த இளநீலப் பட்டாடையை அலையடிக்கச் செய்வதாகத் தோன்றியது.
அவள் அவன் அதுவரை பார்த்திருந்த பெண்கள் அனைவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக முதல் எண்ணம் எழுந்தது. அது என்ன என்று அவன் எண்ணத்தை ஓட்டி சலித்து மீண்டும் அவளையே நோக்கினான். கருஞ்சிலைபோல பளபளக்கும் தோல்நிறம். தோழியர் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அவள் திரும்பியபோது கன்னவளைவிலும் கழுத்திலும் ஒளி மின்னியது. தோள்கள். அவன் நெஞ்சு படபடத்தது. திரும்பி நளனை நோக்கிவிட்டு சில கணங்கள் கழித்து மெல்ல விழி திருப்பி அவளை மீண்டும் நோக்கினான். அவள் தோள்கள் மாமல்லர்களுக்குரியவை போல அகன்று பணைத்திருந்தன. இடைக்குக் கீழும் அவ்வாறு விரிந்திருக்கவில்லை என்றால் அவளிடம் பெண்மையே இல்லை என்று ஆகிவிட்டிருக்கும். அவள் மிக நேராக நடந்தாள். அவன் தன் நெஞ்சோசையை அனைத்து ஒலிகளுக்கும்மேல் கேட்டான். அதுதான் அவளை தனித்துக் காட்டுகிறது. இடை ஒசிகிறது. பெரிய தொடைகள் ஆடைக்குள் எழுந்தமைகின்றன. ஆனால் அலையற்ற நீரில் செல்லும் அன்னம்போல அவள் நடந்தாள்.
அவன் அவையிலமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். அனைவர் விழிகளும் அவளை நோக்கி நிலைகொண்டிருந்தன. மகதன் மெல்ல அசைந்து மீசையை இடக்கையால் நீவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர் போலும். அவ்வசைவால் கலைந்து கலிங்கனும் அசைந்தமர்ந்தான். வங்கன் தன் குழலை அள்ளி தோளுக்குப்பின் சரித்தான். கலிங்கன் மெல்ல சரிந்து தன்னருகே அமர்ந்திருந்த மைந்தனிடம் ஏதோ சொன்னான். அவன் தலையசைத்தான். தமயந்தி அவைநடுவே வந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கி கைகூப்பி வணங்கினாள். அமைச்சர் அவளருகே சென்று அவள் செய்யவேண்டியவற்றை சொல்ல அவள் பீமகரையும் அரசியையும் வணங்கிவிட்டு தனக்கான பீடத்தில் அமர்ந்தாள்.
வைதிகர்கள் மேடையேறிச் சென்று வேதம் ஓதி கங்கை நீர் தெளித்து அவளை தூய்மைப்படுத்தினர். குடிமூத்தவர் அரிமலரிட்டு வாழ்த்த அவள் அவர்களை வணங்கி மலர்கொண்டாள். மூதன்னையர் அவளுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்துரைத்தபோது சேடியர் குரவையிட்டனர். புஷ்கரன் அதற்குள் சலித்துவிட்டிருந்தான். நிஷதத்திலும் அன்றாடம் அவன் அரசநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. குலக்குழு வழிபாட்டுச் சடங்குகள் நீளமானவை. ஆனால் அவை இதைப்போல சலிப்பை அளிப்பதில்லை. அவற்றுடன் உணர்வுபூர்வமான ஈடுபாடில்லை என்றால் இப்படி சலிக்குமோ? ஆனால் இச்சடங்குகள் அனைத்தும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கின்றன. அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என அவன் எண்ணிக்கொண்டான்.
குடிமூத்தார் மூவர் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் இருந்து செம்மலர்மாலை ஒன்றை அரசரும் அரசியும் சேர்ந்து கைதொட்டு எடுத்து தமயந்தியின் கையில் அளித்தனர். புஷ்கரன் அவள் அந்த மாலையை கையிலேந்தியபடி இரு படிகளில் கால் வைத்து இறங்குவது வரை ஒன்றையும் எண்ணவில்லை. ஒரு கணத்தில் அதுதான் மணமாலை என உணர்ந்ததும் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. நெஞ்சு உறைந்து கல்லென்றாகி அதற்குள் சொற்களும் மூச்சும் சிக்கிக்கொண்டன. நளன் அவனை அழைப்பதை சில கணங்களுக்குப் பின்னர்தான் அவன் அறிந்தான். செவிகுனித்து “ஆணையிடுங்கள், மூத்தவரே” என்றான். நளன் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. “என்ன?” என்றான்.
“நான் எழுந்து வெளியேறும் வாயிலருகே சென்று நிற்பேன். இளவரசி இந்த இடத்துக்கு வந்ததும் நீ என் உடைவாளுடன் சென்று அவையில் நில். இது நிஷதமன்னனின் உடைவாள் என்று சொல். அவள் என் உடைவாளுக்கு அந்த மாலையை சூட்டுவாள். நீ உடைவாளை உருவிக்கொண்டு அவையில் நின்று தொடர்பவர்களை செறு. உன்னுடன் வஜ்ரகீர்த்தியும் சேர்ந்துகொள்வான். அவைக்குள் காவலர் வாள் உருவமாட்டார்கள். ஆகவே அரசர்களை மட்டும் நீ சிறுபொழுது எதிர்கொண்டால் போதும். இளவரசி ஓடி என்னருகே வருவாள். நான் அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். முற்றத்தில் நாகசேனர் என் புரவிகளுடன் காத்திருப்பார்” என்றான் நளன். அவன் தன் நெஞ்சிடிப்பை முதன்மையாக கேட்டுக்கொண்டிருந்தான். “நான் அவையில் நின்றிருக்க வேண்டுமா?” என்றான். “ஆம், என்ன நிகழ்கிறதென்பதை அரசர்கள் உணர்வதற்குள் நான் அவை நீங்கிவிடவேண்டும். என் புரவியை சென்றடைந்துவிட்டால் எவரும் என்னை பிடிக்கமுடியாது” என்றான் நளன்.
“ஆனால் அரசர்கள் பெருந்திறல் வீரர்கள்… நான் தனியாக எப்படி?” என்றான் புஷ்கரன். “அஞ்சவேண்டியதில்லை. இளைஞர்களை அவர்கள் கொல்லமாட்டார்கள். அவர்களுக்கு அறைகூவல் விட்டவன் நீயும் அல்ல” என்றான் நளன். “அச்சமில்லை” என்றான் புஷ்கரன். “அவர்கள் விரைவில் என்னை வீழ்த்திவிடுவார்கள்” என்று விழிகளை விலக்கியபடி சொன்னான். “எனக்குத் தேவை மிகச் சிறிய பொழுது. முற்றத்தை அடையவேண்டும். சூதர்கள் புரவிகளை கொட்டகைக்கு கொண்டுசெல்லும் குறுக்கு வழி ஒன்றுள்ளது. அதனூடாக நான் இந்நகரின் கூரைகளுக்குமேல் ஏறிவிடுவேன்.”
மூச்சை ஊதி ஊதி விட்டு நெஞ்சிலிருந்த கல்லை கரைக்க முயன்றபடி புஷ்கரன் “ஆனால்…” என்றான். “செல்…” என்றான் நளன். “நீ கோரிய வரலாற்றுத் தருணம் இது.” புஷ்கரன் “ஆம்” என்றான். “அவள் காசிமன்னனை கடந்துவிட்டாள்” என்றான் நளன். புஷ்கரனால் எதையுமே பார்க்கமுடியவில்லை. நோக்கு நிலைக்காமல் அத்தனை காட்சிகளும் ஒற்றை அசைவுப்பரப்பென கலந்த வெளி அவன் முன் நின்றது. “செல்” என்றபின் நளன் எழுந்து நடந்து விலகினான். அத்தனை விழிகளும் தமயந்திமேல் இருந்தமையால் எவரும் அவனை நோக்கவில்லை. தமயந்தி மிக மெல்ல நடந்துவந்தாள். கண்ணுக்குத் தெரியாத ஒழுக்கு ஒன்றில் மிதந்துவரும் அன்னம். நான் இப்போது எழவேண்டும். என் குரல் இத்தனை பெரிய அவையில் ஓங்கி ஒலிக்கவேண்டும். என் குரலை மகதனும் கலிங்கனும் மாளவனும் கேட்பார்கள்.
ஆனால் அவனால் அசையமுடியவில்லை. கால்கள் குளிர்ந்திருக்க தொடைகள் மட்டும் துள்ளிக்கொண்டிருந்தன. ஏன் எனக்கு இந்தப் பொறுப்பை அளிக்கிறார்? என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்து வந்தால் அவன் என்ன செய்யமுடியும்? ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது? தமயந்தி மாளவனைக் கடந்தபோது அவையில் வியப்பொலி எழுந்தது. அங்கனையும் வங்கனையும் அவள் கடந்தாள். மாளவனைக் கடந்தபோது கலிங்கமன்னன் சூரியதேவன் புன்னகையுடன் மைந்தன் அர்க்கதேவனிடம் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். அவள் கலிங்கனையும் கடந்து நடந்தபோது அவர்கள் திகைப்புடன் பீடங்களின் பிடியைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். மகதத்தின் வேளக்காரப்படையினர் சொல்லில்லா உவகைக் குரலெழுப்பினர். அவள் மகதனை ஏற்கவிருக்கிறாள் என எண்ணிய மக்களின் குரல்களும் கலைவொலியாக எழுந்தன.
புஷ்கரனால் எழ முடியவில்லை. கையில் இறுகப் பற்றியிருந்த உடைவாளின் பிடி வியர்வையில் வழுக்கியது. எழுந்தால் அதை நழுவவிட்டுவிடுவோம். எழுந்தால் காலூன்ற முடியாமல் விழுந்துவிடவும்கூடும். அவன் விழிகளுக்கு முன் நீருக்குள் தெரிவதுபோல அக்காட்சி நெளிந்தது. அவள் மகதனை கடந்தபோது அவை முழுக்க எழுந்த வியப்போசை பெரிய முழக்கமாக சூழ்ந்தது. அவந்தியின் அரசன் அவள் தன்னை நோக்கி வருகிறாள் என எண்ணி எழுந்தான். அவள் அவனையும் கடந்துசெல்ல கூர்ஜரன் தன்னை நோக்கியா என வியந்து அருகிருந்த அமைச்சரை நோக்கினான். அத்தருணத்தில் நளன் வலக்கையை தூக்கி “நான் நிஷத அரசனாகிய நளன். இளவரசிக்கு முன் மணம்கோள் சொல்லுடன் நிற்கிறேன்” என்று கூவியபடி அவைக்குச் சென்று சேதிநாட்டரசனுக்கும் காமரூபனுக்கும் நடுவே நின்றான்.
புஷ்கரன் உடல் நடுங்கிக் குறுக கண்களை மூடியபடி தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் கையுடன் சேர்த்து உடைவாளும் அதிர்ந்துகொண்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பலவகையான குரல்கள் ஏதேதோ கூவின. “இளவரசே, கிளம்புக!” என நாகசேனரின் குரல் கேட்டது. அவன் எழுந்து நோக்கியபோது தமயந்தி தன் மணமாலையை நளன் தோளில் அணிவித்துவிட்டிருப்பதை கண்டான். நளன் அவள் வலக்கையை பற்றிக்கொள்ள அவள் நிமிர்ந்த தலையுடன் அவனுக்கு இடமாக நின்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் ஓடிவந்து நளன் அருகே நின்றான்.
ஷத்ரிய அரசர்கள் பெரும்பாலானவர்கள் பீடங்களிலிருந்து எழுந்து நின்றனர். ஆனால் மகதனும் கலிங்கனும் மாளவனும் அசையாமல் நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதேனும் சொல்லக்கூடும் என பிறர் எதிர்பார்த்தனர். பீமகர் திகைப்புடன் இரு கைகளும் விரிந்து அசைவழிந்து நிற்க திறந்த வாயுடன் அரசமேடையில் எழுந்து நின்றார். அவரது அமைச்சர்களும் அவரைப்போலவே சமைந்துவிட்டிருந்தனர். அரசி பீமகரின் தோளைப்பற்றி உலுக்கி ஏதோ சொன்னாள். நளன் மகதனை நோக்கியபடி தானும் திகைத்து நின்றான்.
மகதன் எழுந்து “நன்று, நான் விதர்ப்பினி ஓர் ஷத்ரியப்பெண் என எண்ணியே மணம்கொள்ள வந்தேன். அவள் உள்ளத்தால் நிஷாதகுலத்தவள் என அவைமுன் அறிவித்துவிட்டாள். தனக்குரியவனை அவள் அடைந்துள்ளாள். அவளை வாழ்த்துகிறேன்” என்றபின் செல்வோம் என அமைச்சர்களிடம் கைகாட்டியபடி திரும்பினான். அவைநிறைந்திருந்த ஷத்ரியர்கள் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். மாளவன் “நிஷாதனே, உன் பெண்ணுடன் ஒருநாள் அரண்மனைக்கு வா. உனக்கு அன்னமும் ஆடையும் பரிசிலாக அளிக்கிறோம்” என்றான்.
நளன் தன் உடைவாளை ஓங்கி தரையில் அறைந்த மணியோசை சிரிப்பொலியை வெட்டி அமைதியை உருவாக்கியது. “நான் அனல்குலத்து ஷத்ரியனாகிய நளன். இந்திரகிரியின் அரசன். இங்குள்ள அத்தனை அரசர்களையும் அறைகூவுகிறேன். ஆண்மையுள்ள எவரும் என்னுடன் போரிட்டு இவளை கைக்கொள்ளலாம்” என்றான். “நிஷாதர்களுடன் ஷத்ரியர் நிகர்நின்று போரிடும் வழக்கமில்லை, மூடா. உன்னை தெரிவுசெய்த இழிமகளை இனி ஷத்ரியர் எவரும் அரசியென ஏற்கப்போவதுமில்லை” என்றான் மாளவன். வங்கன் “ஆம், செல்க! உனக்கு உயிர் பரிசளிக்கப்பட்டுள்ளது” என்றான்.
நளனின் கையிலிருந்த வாள் பாம்பின் நாவென துடிப்பதை புஷ்கரன் கண்டான். அவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் பீகமர் “முறைப்படி நீ பெண்கொண்டாய். உன்னை இங்கு எவரும் அறைகூவவும் இல்லை. நீ செல்லலாம்” என்றார். தமயந்தி நளன் கையை பற்றியபடி “செல்வோம்” என்றாள். அவர்கள் இரு பக்கமும் விலகி வழிவிட்ட குடிகள் நடுவே நடந்தனர். உடல் சினத்தால் நடுங்கிக்கொண்டிருக்க நளன் நடந்தான். அவன் கையைப் பற்றியபடி தமயந்தி தலைதூக்கி அசைவற்ற தோள்களுடன் சென்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் தொடர்ந்தான்.
நாகசேனர் புஷ்கரனின் தோளைத் தொட்டு “செல்வோம், இளவரசே” என்றார். “நான்…” என புஷ்கரன் பேசத்தொடங்க “அனைத்தும் எளிதாகவே முடிந்துவிட்டன. பிறகு பேசுவோம்” என்றார் அவர். அவன் கையில் இருந்த வாளை நோக்கினான். அதை வீசிவிட்டுச் செல்லவேண்டும் என எழுந்த எண்ணத்தை அடக்கினான். சூழ்ந்திருந்த விழிகளிலெல்லாம் நகைப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவனை அங்கு எவருக்கும் தெரியாது. அவன் ஆற்றத் தவறியதென்ன என்றும் தெரியாது. அவன் தலைநிமிர்ந்து விழிகளைச் சுழற்றியபடி நடந்தான். ஆனால் முற்றம்வரை செல்வதற்குள் அம்முயற்சியாலேயே களைப்புற்று தோள்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.