நீர்ச்சுடர் - 62
பகுதி ஒன்பது : சிறகெழுகை – 4
யுயுத்ஸு கிளம்புவதற்கான பொழுதையும் சகதேவன் குறித்துக் கொடுத்திருந்தான். அந்தப் பொழுதை அடைவதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகளென ஓர் அட்டவணையை யுயுத்ஸு கரியால் பலகையில் எழுதி வைத்திருந்தான். செய்யச் செய்ய ஒவ்வொன்றாக ஈரத்துணியால் தொட்டு அழித்தான். ஆனால் மேலும் மேலும் புதிய பணிகளை அழித்த இடத்திலேயே எழுத வேண்டியிருந்தது. செயல்கள் பெருகி அங்கே எழுதத்தொடங்கியதைவிட இருமடங்குச் செயல்கள் எஞ்சியிருந்தன.
முக்தவனத்திலிருந்து கிளம்புவது அங்கு வந்து சேர்வதைவிட பெரிய அலுவலாக இருந்தது. அங்கு வந்தபோது ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்தனர். பலநாட்கள் புலரி முதல் அந்தி வரை ஒவ்வொருவராக வந்து சேர்வதற்கான ஒருக்கங்கள் நடந்துகொண்டே இருந்தன. வந்து இறங்குபவர்களை வரவேற்று அவர்களுக்குரிய குடில்களில் சேர்ப்பது, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் அவர்களுக்குரிய வைதிகச்சடங்குகளையும் குலச்சடங்குகளையும் செய்வதற்கும் ஒருக்கங்களை அமைப்பது என. ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்குரிய முறைமைகள் இருந்தன. குலமுறைமைகள், மூப்புமுறைமைகள், சடங்குமுறைமைகள்.
ஒவ்வொரு நாளும் அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. முதற்சடங்கைச் செய்ய அகவை குறைந்த ஒருவர் வருவாரென்றால் அகவை மூத்தவரை என்ன செய்வது என்ற ஐயம் எழுந்தது. அவர் அகவை மூத்தவரை வணங்கிவிட்டுச் செல்லலாம் என விதுரர் வகுத்தார். குலச்சடங்குகள் வைதிகச்சடங்குகளுடன் முரண்பட்டால் அவற்றை வெவ்வேறு இடங்களில் நடத்தலாம் என்றார். அரசகுடியினர் தொல்குடிச் சடங்குகளைச் செய்யலாமா என்ற வினா எழுந்தபோது அதற்கு மட்டும் அரசக்கணையாழியை கழற்றலாம் என்றார் தௌம்யர். பல்லாயிரம் வினாக்கள், அவற்றுக்குரிய தீர்வுகள். எல்லாவற்றுக்கும் எங்கோ ஒரு செல்வழி இருந்தது. “நீருக்கும் காற்றுக்கும் எங்கும் வழியுண்டு” என்றார் தௌம்யர்.
நீர்க்கடன் முடித்துக் கிளம்புகையில் அனைவருமே ஒரே தருணத்தில் எழுந்தனர். ஆகவே எண்ணி நோக்க முடியாத அளவிற்கு இடர்கள் நிறைந்ததாக விடைகொள்ளல் மாறியது. கங்கை முழுக்க படகுகள் நிரம்பி நின்றன. படகுத்துறைக்கு இளவரசியரின் குழுவொன்று வரும்போது அவர்களை அழைத்துச் செல்வதற்கான படகுகள் கங்கையின் நடுவொழுக்கில் நின்றன. அவை படித்துறையில் அணைய முடியாதபடி அங்கே பிற படகுகள் தேங்கி நின்றன. அப்படகுகளுக்குரிய இளவரசிகள் அப்போதும் தங்கள் குடில்களிலிருந்து கிளம்பாமல் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பிறிதொருவரை தேடினர். தேடியவர்களை பிறர் தேடினர்.
யுயுத்ஸு மேலும் மேலும் காவலர்களை தெரிவு செய்து அவர்களை ஒருங்கிணைப்பவர்களாக மாற்றி ஆணைகளை பிறப்பித்தான். “ஆணைகளை எழுதிக்கொள்ளுங்கள். எங்கேனும் எழுதி வையுங்கள். ஒவ்வொன்றையும் இயற்றி முடித்தபின் அவற்றை அழியுங்கள். இங்குள்ள செயலிறுக்கத்தில் ஆணைகளை மறந்துவிடுவீர்கள். எண்ணுக, மறக்கப்பட்ட ஒவ்வொரு ஆணையும் பாறாங்கல்லென பிறிதொருவரின் செயலை மறிக்கிறது! செய்யப்படாத செயல்களாலேயே அனைத்தும் சிக்கலாகின்றன. செய்யப்பட்டவை நம் கையிலிருந்து அகன்று நம்மை விடுவிக்கின்றன” என்று அவன் மீள மீள கூறிக்கொண்டே இருந்தான்.
அஸ்தினபுரிக்கு அவன் கிளம்பவேண்டிய பொழுது வந்தபோது அவன் செய்யத்தொடங்கிய செயல்களைவிட பலமடங்கு செயல்களை செய்துவிட்டிருந்தான். பலமடங்குச் செயல்கள் எஞ்சியிருந்தன. மல்லநாட்டு அரசியர் பலர் கிளம்பவேண்டியிருந்தது. மச்சநாட்டு இளவரசிகள் அப்போதும் கிளம்பியிருக்கவில்லை. அங்கு ஒவ்வொருவரும் பிறிதொருவராக உருமாறியிருந்தனர். அச்சடங்குகள் முடிவது வரை அச்சடங்கொன்றே அவர்களுக்கு பொருட்டாக இருந்தது. எவரும் தங்களைப்பற்றி எண்ணியிருக்கவில்லை. சடங்குகள் முடிந்தமை ஒவ்வொருவருக்கும் ஓர் அறிவுறுத்தலென மாறி வளைக்கப்பட்ட மூங்கில் நிலைமீள்வதற்கான அறுபடல் போலாகியது. ஒவ்வொருவரும் அவர்கள் எவரோ அவர்களாயினர்.
அவர்கள் தன்முனைப்பும் தனி எண்ணங்களும் கொண்டவர்களாயினர். ஒவ்வொருவரும் பிறருடன் தங்களை ஒப்பிட்டனர். தங்கள் குல முறைகளும் மூப்பு முறைகளும் பேணப்படவேண்டுமென்று எதிர்பார்த்தனர். மல்லநாட்டு இளவரசியர் கிளம்பிய பின்னரே மச்சநாட்டு இளவரசியர் கிளம்ப வேண்டுமென்பது முறை. ஆனால் மச்சநாட்டு இளவரசிகளில் ஏழுபேர் முன்னரே படகுகளில் கிளம்பிவிட்டிருந்தனர். அச்செய்தி அறிந்த மல்லநாட்டு இளவரசியர் தங்கள் ஆடைகளைச் சுருட்டி எறிந்துவிட்டு “எங்களுக்கு இங்கு எந்த ஒருக்கங்களும் செய்யவேண்டியதில்லை. நாங்கள் எங்கள் நாட்டிலிருந்து வரும் படகுகளில் சென்றுகொள்கிறோம். நாங்கள் எவரையும் நம்பி இல்லை” என்று கூவினர்.
ஆசுர குலத்தைச் சேர்ந்த இளவரசியர் தனியாக கிளம்ப ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்களுடன் ஷத்ரிய குடியைச் சேர்ந்த இளவரசி ஒருத்தியின் படகு கிளம்பவிருந்தது. அங்கு சென்ற பின்னரே தன்னுடன் கிளம்புபவர்கள் ஆசுர குலத்தவர்கள் என்று புரிந்து “திருப்புக, படகை கரைசேருங்கள்! நான் கிளம்பவில்லை. பின்னர் தனியாக கிளம்புகிறேன்” என்று அவள் கூச்சலிடத் தொடங்கினாள். படகு கரையணைய முடியாதபடி அடுத்த நிரை படகுகள் வந்துவிட்டிருந்தன. அவற்றில் ஏற்றப்படவேண்டிய பொருட்கள் குடில்களிலிருந்து வந்துசேர்ந்திருக்கவில்லை.
ஒவ்வொருவரையும் யுயுத்ஸுவே சென்று தலைவணங்கி ஆறுதல் கூறி பொறுத்தருளும்படி மன்றாடி கேட்கவேண்டியிருந்தது. பாண்டவர்கள் எவருமே அவர்களை வழியனுப்ப வரக்கூடாதென்று நெறியிருந்தது. அந்தணர்கள் முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டிருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் யுயுத்ஸு முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டவனாகவும் முழு இழிவையும் தானே சூடிக்கொண்டவனாகவும் தோன்றினான். அவர்கள் அவனை பாண்டவன் என எண்ணி வசைபாடினர். பாண்டவர்களுக்குரிய மதிப்பை வழங்க மறுத்தனர்.
அவன் கிளம்பும்பொழுது வந்துவிட்டதை ஏவலன் வந்து சொன்னபோது முற்றிலும் களைத்து கைகால்கள் சோர்ந்து படித்துறையில் நின்றிருந்தான். இறுதி அணியின் படகுகள் கங்கை மேல் அசைந்துகொண்டிருந்தன. அந்தி கடந்துவிட்டிருந்தது. “இன்னும் அரை நாழிகையில் தாங்கள் கிளம்பவேண்டும்” என்று ஏவலன் சொன்னதும் “நன்று” என்று சொல்லி அவன் திரும்பிப்பார்த்தான். ஏவலர் தலைவன் சுஃப்ரனும் முக்தனும் அருகே வந்தனர். அவர்களுக்குரிய ஆணைகளை விரைவாக சொல்லிக்கொண்டே நடக்க அவர்கள் அவற்றை உளம் பதித்தபடி பின்னால் வந்தனர்.
அவன் குடில் முன் ஸ்ரீமுகர் நின்றிருந்தார். அவனைப் பார்த்ததும் ஓடிவந்து “எங்கு சென்றிருந்தீர்? அரசர் தங்களை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார். தாங்கள் கிளம்புவதற்கான பொழுதும் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டதல்லவா?” என்றார். “ஆம்” என்றான் யுயுத்ஸு. “தாங்கள் நீராடி ஆடைமாற்றி கிளம்புவதற்கு இனி பொழுதில்லை. இன்னும் அரை நாழிகைகூட இல்லை. தாங்கள் இறுதியாக அரசரைப் பார்த்து விடைபெற்றுக்கொண்டுதான் செல்லவேண்டும்” என்று ஸ்ரீமுகர் சொன்னார். ”படகில் ஏறியதுமே துயிலப்போகிறேன். செல்லும் வழியில் ஓரிடத்தில் இறங்கி நீராடிக்கொள்கிறேன்” என்றான் யுயுத்ஸு.
தன் குடிலுக்குள் சென்று இன்றியமையாத பொருட்களை மட்டும் மரவுரியில் கட்டி ஏவலனிடம் அளித்து தேரில் வைக்கும்படி சொல்லிவிட்டு ஸ்ரீமுகருடன் விரைந்து நடந்தான். யுதிஷ்டிரனின் குடில் முகப்பில் ஏவலர்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். குடிலுக்குள் நகுலனும் அவரும் மட்டும் தனித்திருந்தார்கள். யுதிஷ்டிரன் புன்னைக்காய் எண்ணை விளக்கை தன் அருகே வைத்து அதன் ஒளியில் ஒரு சுவடியை வைத்து கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். அவன் உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் “ஆம், நீ இன்று கிளம்பவேண்டுமல்லவா?” என்றார்.
“ஆம் மூத்தவரே, இன்று கிளம்புகிறேன்” என்றான் யுயுத்ஸு. “நாங்கள் நாளை காலை புலரியில் கிளம்புகிறோம் அல்லவா?” என்று அவர் மீண்டும் கேட்டார். அதை பலமுறை கூறியிருந்தமையால் யுயுத்ஸு ஒருகணம் சலிப்படைந்து “ஆம் மூத்தவரே, நாளை முற்புலரியில் தாங்கள் உடன்பிறந்தாருடன் இங்கிருந்து கிளம்புகிறீர்கள். அதன் பின்னர் பகல் முடிவதற்குள் ஏவலர்கள் கிளம்புகிறார்கள் அந்தியில் காவலர்கள் கிளம்புவார்கள். அதன் பின்னர் ஒரு காவல்படை மட்டுமே இங்கே இருக்கும்” என்றான். ”இங்கு எதற்கு காவலர்கள்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார்.
அதையும் பலமுறை அவரிடம் சொல்லியிருந்த யுயுத்ஸு சலிப்புடன் “ஏழு நாட்கள் இங்கே காவல் இருக்கவேண்டும். அதற்குள் எவரும் இங்கே வந்து படித்துறையை பாழ்படுத்திவிடக்கூடாது. வேதம் விளைந்த நிலம் ஏழு நாட்கள் காக்கப்படவேண்டும் என்று நெறியுள்ளது” என்றான். “ஆம், இங்கு ஒரு படை இருக்கவேண்டியதுதான்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “நன்று! நீ கிளம்பலாம்” என்றபின் நகுலனிடம் “நாம் சென்று சேர்வதற்கு மூன்று நாட்களாகும் அல்லவா?” என்றார். “ஆம்” என்று நகுலன் சொன்னான். “நாட்களை பொதுவாகவே கணித்திருக்கிறோம்.” யுதிஷ்டிரன் “ஏன்?” என்றார்.
“வழியில் இரண்டு இடங்களில் தங்குகிறோம். யுயுத்ஸு சென்று சேர்ந்து அங்கு நம்மை வரவேற்பதற்கான ஒருக்கங்கள் அனைத்தும் முடிவதற்கு அந்தப் பொழுது தேவைப்படும். அங்கு அனைத்தும் சித்தமாகிவிட்டன என்று நமக்கு செய்தி வந்த பின்னரே நாம் நகர்நுழைகிறோம்” என்றான் நகுலன். “அங்கு ஏதும் சிக்கலிருந்தால்? ஒருக்கம் முழுமையாகாவிட்டால்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். அவர் நூல்நவில்தல் வழியாக நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தார் என தெரிந்தது.
நகுலன் தானும் சலிப்புடன் “மூத்தவரே, இதையும் ஏற்கெனவே விரிவாக பேசி வகுத்துவிட்டோம். மொத்தம் மூன்று நற்பொழுதுகள் வகுக்கப்பட்டுள்ளன. முதல் நற்பொழுது மூன்று நாட்களுக்குப் பிறகு. ஏழு நாட்களுக்குப் பிறகு பிறிதொன்று. பதினாறு நாட்களுக்குப் பிறகு மற்றொன்று. நமது நகர்நுழைவுக்கான அனைத்து ஒருக்கங்களும் முடிந்து அங்கிருந்து அழைப்பு வந்த பிறகே நாம் அஸ்தினபுரியை சென்றடைவோம். அதுவரை செல்லும் வழியிலேயே தாங்கள் தங்குவதற்கு இரண்டு சிற்றூர்கள் ஒருக்கப்பட்டுள்ளன. அங்கு நாம் அனைவரும் தங்குவதற்கான குடில்களும் படித்துறையும் அமைக்கப்படும்” என்றான்.
ஆர்வமின்றி “நன்று!” என்றபின் யுதிஷ்டிரன் அந்த ஓலையை தரையில் வைத்து கைகளைக் கோத்து நெட்டி முறித்து “எவ்வளவு பணிகள்!” என்றார். “அஸ்தினபுரியின் மக்களின் உளநிலை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நாம் நகர்நுழைவதை அவர்கள் எவ்வாறு எதிர்பார்ப்பார்கள்? நம்மை எதிர்கொள்ள எவரேனும் வருவார்களா?” நகுலன் ஒன்றும் சொல்லவில்லை. “வருவார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். ”நாம் மணிமுடி சூடும்பொருட்டு உள்ளே நுழைகிறோம். உங்கள் மேல் எதிர்ப்புள்ளவர்கள், உங்கள் அரசில் வாழ விரும்பாதவர்கள் அனைவருமே நகர்விட்டு சென்றுவிட்டார்கள். இனி அங்கிருப்பவர்கள் வாழ விழைபவர்கள், அனைத்தையும் மறந்து முன் செல்ல எண்ணுபவர்கள். உங்கள் நகர்நுழைவு புதிய தொடக்கமாக இருக்கும் என அவர்கள் எண்ணுவார்கள்.”
“எப்போதுமே துயரும் வலியும் முடிந்து வரும் இடைவெளியை பெரும்களிப்புடனே மக்கள் கொண்டாடுகிறார்கள். நீங்கள் நகர்நுழைவதை அனைத்தையும் முடித்துவிட்ட பிறகு ஒரு புதிய காலகட்டம் தொடங்கவிருக்கிறது என்பதற்கான அறிவிப்பாகவே கொள்வார்கள். அதை பெருநிகழ்வாகவே கொண்டாடுவார்கள்” என்றான் நகுலன். “ஆம், அவ்வாறுதான் தோன்றுகிறது. ஆனால் மானுட உள்ளங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல இயலாது. அனைத்தும் ஒருங்கிவிட்டபின் அறுதிக்கணத்தில் ஓர் அலையென கசப்பும் துயரும் வந்து சேரக்கூடும். ஏனென்றறியாமலேயே காழ்ப்பும் சினமும் கொள்ளக்கூடும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.
யுயுத்ஸு ஒன்றும் கூறவில்லை. ”பொழுதாகிறது, நீ கிளம்பலாம்” என்று யுதிஷ்டிரன் சொல்ல யுயுத்ஸு முன்னால் நடந்து குனிந்து அவரை வணங்கினான். அவர் கைதூக்கி வாழ்த்தி “சென்று வருக!” என்றார். யுயுத்ஸு வெளியே வந்து தன்னுடன் வந்த ஸ்ரீமுகரிடம் “எஞ்சிய ஆணைகளை நான் தனியாக ஓலையில் எழுதியிருக்கிறேன். விரைந்த அடையாளக்குறிப்புகளாகவே அவை இருக்கின்றன. அவற்றை தாங்கள் மட்டுமே படிக்க முடியும். என் குடிலுக்கு என்னுடன் வருக! நான் அவற்றை தங்களிடம் அளித்துவிடுகிறேன்” என்றான்.
“இங்கிருந்து கிளம்ப வேண்டும், அவ்வளவுதானே? இதற்கென்ன இவ்வளவு பணிகள்?” என்று ஸ்ரீமுகர் கேட்டார். “கிளம்புவது எளிதல்ல” என்றான் யுயுத்ஸு. ஸ்ரீமுகர் “விந்தையாக இருக்கிறது. குருக்ஷேத்ரத்திற்கு சென்று சேர்வதற்கு பலநாட்களாயின. குருக்ஷேத்ரத்தை அமைத்து முடிக்க அதைவிட பலமடங்கு நாட்களாயின. அங்கிருந்து கிளம்புவது கனி உதிர்வதுபோல அத்தனை எளிதாக நடந்தது. எவரும் எதையும் அறியவில்லை” என்றார்.
திடுக்கிட்டவன்போல யுயுத்ஸு பார்த்தான். அப்பொழுதில் குருக்ஷேத்ரத்தை அவர் நினைவுபடுத்தியிருக்கக் கூடாது என்று அவன் எண்ணினான். ஆனால் அவ்வண்ணம் நினைவுபடுத்தாமல் ஒவ்வொன்றையும் எண்ணி நோக்கும் பழக்கமே இல்லாமலாகிவிட்டிருக்கிறது என்றும் தோன்றியது. “இடிந்து விழுவதற்கும் பிரித்து அடுக்குவதற்குமான வேறுபாடு” என்றான். ஸ்ரீமுகர் “ஆம்” என்றார். “இங்கிருந்து செல்பவர்களுக்கு இது ஒரு தொடக்கம்… அதுதான் இத்தனை சிக்கல்களை உருவாக்குகிறது” என்றான் யுயுத்ஸு.
குடில் நிரைகளின் முகப்பில் கொம்பொலி எழுந்தது. “யார்?” என்று ஸ்ரீமுகர் கேட்டார். யுயுத்ஸுவும் அந்த ஓசையை கேட்டான். “தூதர்கள் எவரோ” என்றான். “ஆம், தூதர்கள்” என்று ஸ்ரீமுகர் சொன்னார். “அஸ்தினபுரியிலிருந்தா? இப்போது அங்கிருந்து தூது வருவதென்றால்…” என்றார். யுயுத்ஸுவும் அதிலிருந்த விந்தையை உணர்ந்து உளநடுக்கு கொண்டான். ஒவ்வொரு செய்தியும் தீயதாகவே இருக்கக்கூடும் என்று ஏன் தோன்றுகிறது? நன்றென்று ஒன்றை திட்டமிடுகையில்கூட. ஆனால் மானுடர் எப்போதும் தீமையை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தெய்வங்களின் அருளை உண்மையாக நம்பும் எவருமில்லை போலும்.
ஸ்ரீமுகர் வெளியே சென்றார். அவன் படகுத்துறை நோக்கி செல்கையில் அவர் மீண்டும் அவனிடம் வந்தார். “அவர்கள் குருக்ஷேத்ரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்றான். “கங்கநாட்டிலிருந்து பிதாமகர் பீஷ்மரின் குடியினர் வந்து அவரை பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அங்கே ஒரு குடில் அமைக்கப்படுகிறது…” யுயுத்ஸு நெடுநாட்களுக்குப் பின் அவரை நினைவுகூர்ந்தான். “ஆம், அவர் அங்கே கிடக்கிறார். காத்திருக்கிறார்” என்றான். ஆனால் அது சொல்லாகவில்லை, அவனுள்ளே ஒலித்தது.
“வருகிறேன், ஸ்ரீமுகரே” என்றபடி அவன் படகில் ஏறிக்கொண்டான். நான்கு பாய்கள் கொண்ட விரைவுப்படகு. ஸ்ரீமுகர் கரையில் நின்றார். “சென்றதுமே செய்தி அனுப்புகிறேன்” என்றபின் அவன் சிற்றறைக்குள் சென்றான். மஞ்சத்தில் படுத்து கால்களை நீட்டிக்கொண்டான். எண்ணங்கள் சேர்ந்து ஒற்றை அலையாக அவனை அறைந்தன. விந்தையான வெறுமையுணர்வு தோன்றியது. பெருமூச்சுக்களாக விட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சாளரம் வழியாக கரை அலைந்தாடி அகன்று செல்வதைக் கண்டதும் உள்ளம் ஆறுதல்கொண்டது. அந்த ஆறுதல் வழியாக அவன் துயில்நோக்கி சென்றான்.
[**நீர்ச்சுடர் நிறைவு]**