நீர்ச்சுடர் - 61
பகுதி ஒன்பது : சிறகெழுகை – 3
யுதிஷ்டிரன் முன்னால் நடக்க அவருடைய விரைவுக்கு முந்தாமலும் பிந்தாமலும் யுயுத்ஸு சற்று பின்னால் நடந்தான். அவன் உடன் வருவதை யுதிஷ்டிரன் உணர்ந்ததுபோல் தெரியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொள்பவர்போல உதடுகள் அசைய, கைகள் சுழிக்க, சிற்றடிகளுடன் முன்னால் தெறித்து தெறித்து விழுபவர்போல நடந்தார். அத்தனை விரைவான நடை அவருக்குப் பழக்கமில்லாததால் சற்று தொலைவு சென்று மூச்சிரைத்தார். அவருடைய கழுத்தில் நரம்புகள் துடித்தன. முகம் சிவந்துவிட்டது.
யுயுத்ஸு சற்று அருகே சென்று “நாம் தேரிலேயே செல்லலாம், அரசே” என்றான். அவர் திடுக்கிட்டு அவனைப் பார்த்து, அவன் யார் என்பதுபோல் சில கணங்கள் விழிமலைக்க நின்று, “என்ன?” என்றார். “நாம் தேரிலேயே செல்லலாம். தொலைவிருக்கிறது அல்லவா?” என்றான். “ஆம், தேரை கொண்டுவரச்சொல்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு திரும்பி தேர்ப்பாகனை அருகே வரும்படி கையசைத்தான். அவர்கள் நடந்து செல்வதை திகைப்புடன் அப்பால் நின்று பார்த்திருந்த தேர்ப்பாகன் ஒற்றைப்புரவி கட்டப்பட்ட சிறிய விரைவுத்தேரை அருகே கொண்டு வந்தான்.
யுயுத்ஸு அதன் படிகளை அமைப்பதற்குள்ளாகவே கையை ஊன்றி பாய்ந்து உள்ளே ஏறி அமர்ந்த யுதிஷ்டிரன் “ஏறிக்கொள்” என்றார். யுயுத்ஸு அதன் படிகளில் தொற்றிக்கொள்வதற்குள்ளேயே பாகனிடம் “செல்க! செல்க!” என்றார். தேர் செல்லும்போது நிலையழிந்து உள்ளே விழுவதுபோல் சரிந்து கையூன்றி யுயுத்ஸு அமர்ந்துகொண்டான். “விரைக! விரைக!” என்றார் யுதிஷ்டிரன். “விசை கூட்டுக!” என்று கையை வீசினார். யுயுத்ஸு “இதற்குமேல் விரைவாக செல்ல இயலாது, மூத்தவரே” என்றான். யுதிஷ்டிரன் எரிச்சலுடன் அவனை பார்த்தார். சற்றுநேரத்திற்கு முன் மலர்ந்து அழகுகொண்டிருந்த முகமா இது என யுயுத்ஸு எண்ணிக்கொண்டான். விழிகள் தளர்ந்து தசைவளையங்கள் தொங்கின. முகத்தசைகள் இடப்பக்கமாக தொய்ந்திருக்க வாய் கோணலாகி இழுத்திருக்க நோய்கொண்டவராக தெரிந்தார்.
தேர் சகட ஓசையுடன் குடிசைநிரைகளின் நடுவே சென்றது. அந்தப் பொழுதில் அனைத்து குடில்களும் கலைந்த தேனீக்கூடுகள்போல குழம்பி ஓசையிட்டுக் கொண்டிருந்தன. ஏவலர்கள் முன்னும் பின்னும் ஓடினர். காவலர்கள் ஒருவரையொருவர் கூவி அழைத்தனர். ஒவ்வொரு குடிலுக்குள்ளிருந்தும் பொருட்கள் வெளியே வந்துகொண்டிருந்தன. அங்கு சிறிய பொழுதில், அச்சிறிய இடத்தில், சிலநாட்கள் மட்டுமே வாழ்ந்தவர்கள் அதற்குள் அத்தனை பொருட்களை சேர்த்துவிட்டிருப்பது யுயுத்ஸுவை திகைப்படையச் செய்தது. ஆடைகள், மரவுரிகள், கலங்கள், வெவ்வேறு சிறு பேழைகள், குடுவைகள், மரப்பொருட்கள், இரும்புப்பொருட்கள், கரண்டிகள், மண்கிளறிகள், மண்வெட்டிகள், ஈட்டிகள், வேல்கள், வெவ்வேறு வகையான அரிவாள்கள், குத்துக்கத்திகள்…
மனிதர்களை நோக்கி அத்தனை பொருட்களும் வந்து சேர்வதுபோல் தோன்றியது. எங்கெங்கோ இருந்து அவை கிளம்பி மனிதர்களை நாடி வந்துகொண்டிருக்கின்றன. காட்டில் குருதியுண்ணும் சிற்றுயிரிகள் விலங்குகளை நாடி வருவதுபோல. மானுடர் இன்றி அவை இல்லை. அல்லது தெய்வத்தை நாடும் மானுடர் போலவா? மனிதர்கள் இக்கருவிகள் இல்லாமல் இருக்க இயலுமா என்ன? அவர்களுடைய கைகள் ஏற்கெனவே அவர்களிடமிருந்து பிரிந்து கருவிகளாக மாறி எங்கும் பரவிவிட்டன. கைகளிலிருந்து அத்தனை கருவிகளும் சென்ற பிறகு அங்கிருப்பது இரு தசைத்துண்டுகள்தான். அவற்றால் எதையும் ஆற்ற முடியாது. அவற்றுக்கு மீண்டும் அத்தனை ஆற்றலும் அக்கருவிகளின் வடிவாக திரும்பி வந்தாகவேண்டும்.
அவன் அங்கு கிடந்த ஒரு பொருளை பார்த்தான். அது என்ன என்று புரியவில்லை. தேர் நகர்ந்து சென்றபின்னர்தான் அது மண்ணை ஆழக்குத்தி விதைகளை மண்ணுக்குள் இடுவதற்கான உட்குடைவான நீண்ட கூம்புவடிவ இரும்புக்கழி என்று தெரிந்தது. காடு வளர்ப்பதற்குரியது. இங்கு எவர் விதைகளை இடுகிறார்கள் என்று எண்ணினான். ஆனால் இங்கும் மனிதர்கள் விதைகளை நட்டு வளர்த்துவிட்டுத்தான் செல்வார்கள். அவர்கள் சென்றபின் இம்மரங்கள் இங்கே எழுந்து நின்றிருக்கும். ஒருவேளை இன்னும் பல தலைமுறைகளுக்கு எவரும் இந்தப் படித்துறைகளில் வராமலாவார்கள். இந்த மரங்கள் இவர்கள் நின்ற தடங்களுக்கு மேல் முளைத்து வளர்ந்து இவர்களின் சுவடுகளை இல்லாமலாக்கும்.
அவன் மரங்களை நோக்கிக்கொண்டு சென்றான். பிரதீபர் நட்ட இந்த ஓங்குமரங்களுக்கு அடியில் நிகழ்ந்தது இந்த பலிக்கொடை. அந்த மரங்களின் விதைகள் போலும் இவை. இறப்பின் கணத்தில்கூட ஒரு விதையை நடாமல் மனிதனால் அகன்று செல்ல இயலவில்லை. என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று அவன் தன்னைத்தானே வியந்தான். எதை எண்ணவேண்டுமோ அதை தவிர்த்து பிறிதொன்றை எண்ணுவது அவனுடைய இயல்பு. ஒருவேளை மானுட இயல்பே அதுவாக இருக்கலாம். சுழன்று சுழன்று மையப்புள்ளியை அணுகுவதே உள்ளத்தின் வழியாக இருக்கிறது. நேராகச் சென்று தொடுவதற்கு அச்சம். அல்லது தயக்கம்.
அல்ல, அதற்கப்பால் ஒன்று. நேராக சென்று தொடுவதென்பது அதை எதிர்கொள்வதுதான். அறியாததை எதிர்கொள்ள இயலாது. எதிர்கொள்ள முடியாதவற்றை நோக்கி சென்றாக வேண்டியிருக்கிறது. சுழன்று சுழன்று, தன்னந்தனியாக, ஒவ்வொன்றையும் பிறிதொன்றாக ஆக்கிக்கொண்டு, ஒவ்வொரு கணத்தையும் உந்தி பின்னிழுத்துக்கொண்டு, தவிர்க்க முடியாமல் தன்னை ஒப்படைத்துக்கொண்டு சென்றுகொண்டே இருக்கிறோம். சாவை மட்டுமல்ல. துயரை மட்டுமல்ல. இன்மையை மட்டுமல்ல. வாழ்வை, இனியவற்றை, மெய்மையைக்கூட அப்படித்தான் அணுகுகிறோம்.
அவன் தொலைவிலேயே திருதராஷ்டிரரின் குடிலை கண்டான். அங்கு எவருமில்லை என்று முதற்கணத்திலேயே தோன்றியது. அங்கு காவலர்கள் நின்றிருந்த முறைதான் அவ்வண்ணம் காட்டியது. சஞ்சயன் குடிலுக்குள்ளிருந்து வெளிவந்து அணுகும் தேரை நோக்கியபடி நின்றான். தேர் சென்று நின்றதும் யுதிஷ்டிரன் முன்பக்கம் வழியாக பாய்ந்திறங்கி சஞ்சயனை நோக்கி ஓடினார். தன் மேலாடையை அள்ளிச் சுழற்றி தோளிலிட்டபடி சஞ்சயனை அணுகி உரத்த குரலில் “தந்தை எங்கே? தந்தையும் அன்னையும் எங்கே?” என்றார்.
“அவர்கள் நேற்று மாலையே அனைத்தும் ஒருக்கி வைத்திருந்திருக்கிறார்கள், அரசே. இன்று காலை சடங்கு முடிந்து வந்ததுமே உடனே கிளம்பிவிட்டார்கள்” என்றான் சஞ்சயன். “இன்று கிளம்பிவிட்டார்களா? கிளம்பப்போவதாகத்தானே அறிந்தேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அவர்கள் நான் இங்கே வருவதற்கு முன்னரே கிளம்பிவிட்டிருக்கிறார்கள், அரசே. சடங்கு முடிவதற்காக காத்திருந்திருக்கிறார்கள்” என்று சஞ்சயன் சொன்னான். “அவர்கள் இங்கிருந்து எந்தப் பொருளையும் எடுத்துக்கொள்ளவில்லை. வண்டியில் நேரே சென்று ஏறி அமர்ந்து செல்க என்று ஆணையிட்டிருக்கிறார்கள்.”
யுதிஷ்டிரன் இரு கைகளையும் தளரவிட்டு நெடுமூச்செறிந்தார். தளர்ந்த குரலில் “நெடுந்தொலைவு சென்றிருப்பார்களா?” என்றார். “ஆம், அவர்கள் செல்லும் விசையில் நெடுந்தொலைவு சென்றிருப்பதற்கே வாய்ப்பு” என்றான் சஞ்சயன். “நான் செல்கிறேன். சென்று அவர்களை பார்க்கிறேன். அவர்களிடம் ஒரு சொல்லாவது நான் சொல்லியாக வேண்டும்” என்றார் யுதிஷ்டிரன். சஞ்சயன் உறுதியான குரலில் “அரசே, அதற்கு உங்களுக்கு உரிமையில்லை. விட்டுச் செல்பவர்களை தொடர்ந்து செல்வதென்பது மீறல். மானுட நெறிகளுக்கும் தெய்வ நெறிகளுக்கும் எதிரானது” என்றான்.
“நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்!” என்று யுதிஷ்டிரன் கைகளை விரித்து சொன்னார். “அவர்கள் என்னை விட்டுச் செல்கிறார்கள். ஒவ்வொருவரும் என்னை விட்டுச் செல்கிறார்கள்!” என்றார். “விட்டுச் செல்வதே அவர்களுக்குரிய ஒரே வழி. முன்னரே அது முடிவெடுக்கப்பட்டுவிட்டது. அவர்கள் எங்கு செல்லவேண்டுமோ அங்குதான் செல்கிறார்கள்” என்றான் சஞ்சயன். “இனி அவர்களை பார்ப்பேனா? சஞ்சயா, இனி ஒருமுறையேனும் அவர்களை பார்ப்பேனா?” என்றார் யுதிஷ்டிரன். சஞ்சயன் “மீண்டும் ஒருமுறை அவர்களை பார்ப்பீர்கள்” என்றான்.
யுதிஷ்டிரன் திகைப்புடன் நோக்க சஞ்சயன் “ஓராண்டுநிறைவு நீர்க்கடனுக்குப் பின்னரே அவர்கள் உயிர் துறப்பார்கள் என்று இங்கு கணித்து சொல்லப்பட்டிருக்கிறது” என்றான். “எவர் கணித்தார்கள்? எப்போது கணித்தார்கள்?” என்று உரக்க கேட்டார் யுதிஷ்டிரன். சஞ்சயன் மறுமொழி சொல்லவில்லை. “சகதேவனா? அறிவிலி! இதை ஏன் அவரிடம் சொன்னான்?” என்று யுதிஷ்டிரன் கூவினார். “எங்கு சொல்லவேண்டும் எப்படி சொல்லவேண்டும் என்பதை அவர் அறிவார், நம்மைவிட” என்றான் சஞ்சயன். யுதிஷ்டிரன் தளர்ந்து “ஆம், அவன் அறிவான். அவனிடம் கேட்கவேண்டும். எனக்கான பொழுதென்ன என்று. நான் இயற்றுவதற்கு என்ன உள்ளதென்று கேட்கவேண்டும்” என்றார்.
சஞ்சயன் “தாங்கள் கேட்கப்போவதுமில்லை, கேட்டாலும் அவர் கூறப்போவதுமில்லை, அரசே” என்றான். “தங்களுக்கு இன்னும் நெடுந்தொலைவு இருக்கிறது.” திகைத்ததுபோல் அவனை சிலகணங்கள் நோக்கிவிட்டு யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். “நெடுந்தொலைவு சென்றிருப்பார்கள்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். “ஆம் அரசே, நெடுந்தொலைவு சென்றிருப்பார்கள்” என்று சஞ்யனன் சொன்னான். “மீண்டும் அவர்களை பார்க்கும்போது அவர்கள் எவ்வண்ணம் இருப்பார்கள்! நான் எப்படி இருப்பேன்! ஓராண்டு! பன்னிரு மாதங்கள், முந்நூற்று அறுபத்தாறு நாட்கள்!”
“நீண்ட பொழுதுதான், ஆனால் ஒருகணப்பொழுதுக்கும் நிகரானது அது” என்று சஞ்சயன் சொல்லி புன்னகைத்தான் யுதிஷ்டிரன் அவனைப் பார்த்தபின் “நீ யார்? நீ ஏன் இளைய யாதவரைப் போலவே எப்போதும் தோன்றுகிறாய்?” என்றார். சஞ்சயன் “அவருடைய ஒரு கூறு என்னில் இருக்கிறதென்று கொள்ளலாம்” என்றான். எண்ணியிராத கணத்தில் நினைவுகூர்ந்து யுதிஷ்டிரன் “அன்னை! அன்னையும் கிளம்பிவிடக்கூடும்! விதுரரும் அன்னையும் கிளம்புவதற்குள் அவர்களை பார்த்தாக வேண்டும். அதற்காகவே கிளம்பினேன்” என்றபடி யுயுத்ஸுவிடம் “கிளம்பு! கிளம்பு!” என்று தோளில் தட்டி தன் தேரை நோக்கி ஓடினார்.
யுயுத்ஸு சஞ்சயனிடம் “நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள்?” என்றான். “இங்கிருந்து அனைவரும் கிளம்புகையில்தான். நான் மீண்டும் அஸ்தினபுரிக்கே வரத்தான் எண்ணுகிறேன். எனது கடன் அங்குதான் உள்ளது. பயிற்றுவித்தல்” என்றான் சஞ்சயன். “எதை பயிற்றுவிக்கச் செல்கிறீர்? தாங்கள் கற்ற அனைத்தையுமா?” என்று யுயுத்ஸு சொல்ல “இல்லை, குருக்ஷேத்ரத்தில் கற்ற ஒவ்வொரு சொல்லையும் மறக்கவே விழைகிறேன். தொடக்கநிலை மாணவர்களுக்கு எழுத்தறிவித்தல் அன்றி எவருக்கும் எதுவும் கற்றுக்கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன்” என்றான்.
“தாங்கள் அடைந்தவை, அறிந்தவை…” என்று யுயுத்ஸு சொல்ல “அவற்றுக்கு எப்பொருளுமில்லை. அதை உணரவே எனக்கு இத்தனை பொழுதாகியிருக்கிறது. நான் இனி ஒருபோதும் ஒரு சொல்லையும் திரும்பிப் பார்க்கப்போவதில்லை” என்றான் சஞ்சயன். “நேற்று இவ்வெண்ணம் எழுந்தது. இன்று நீர்க்கடன் முடிந்தபோது முதற்சொல்லை மறக்கவேண்டும் என்று எண்ணினேன். முதற்சொல்லை மறந்தும்விட்டேன். இனி ஒவ்வொரு சொல்லாக” என்றான். “முதற்சொல் எது?” என்று யுயுத்ஸு கேட்க சஞ்சயன் புன்னகைத்தான்.
தேரில் ஏறி அமர்ந்து யுதிஷ்டிரன் “வருக! என்ன செய்கிறாய் அங்கே?” என்றார். மேலும் ஏதோ கேட்க எண்ணிய யுயுத்ஸு கை தூக்கி பின் அதை தவிர்த்து “நன்று! வருகிறேன்” என்றபின் யுதிஷ்டிரனின் தேரை நோக்கி ஓடினான்.
யுதிஷ்டிரன் தனக்குத்தானே என புலம்பிக்கொண்டே இருந்தார். “அன்னை அங்கிருக்க வேண்டும். தெய்வங்களே, அன்னை அங்கிருக்க வேண்டும். அன்னை அங்கிருக்க வேண்டும்.” யுயுத்ஸு அச்சொற்களிலிருந்தே ஒன்றை உணர்ந்தான். அவருக்குள் எங்கோ ஓர் எண்ணம் அன்னையும் அங்கிருக்கமாட்டார்கள் என்று சொல்கிறது. அதை அவனும் அறிவான். அவர்கள் எவரும் ஒருகணம்கூட இங்கு தங்கியிருக்கக் கூடாதென்ற முடிவில் முன்னரே இருந்திருக்கிறார்கள். அவர்கள் கிளம்புவதற்கு இங்கு எந்தத் தடையும் இல்லை. கிளம்புவதற்குத் தடையாக இருப்பவை இங்குள்ள மானுடர், இங்குள்ள பொருட்கள்.
ஆம், பொருட்கள். அவன் திரும்பி குடில்நிரைகளுக்கு வெளியே எடுத்துப் போடப்பட்ட பல நூறு பொருட்களை பார்த்துக்கொண்டு போனான். இங்கிருக்கும் இத்தனை பொருட்களாலும் கட்டப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு பொருளையாக இவற்றை துறப்பதற்குள் வாழ்வு முடிந்துவிடுகிறது. ஒரு பொருளை வாழ்க்கையில் துறப்பதென்பது எவ்வளவு பெரிய நகர்வு! ஒன்றை துறப்பது என்பது முற்றிலும் தன்னை உடைத்து மறுவார்ப்பு செய்வதென்றே தோன்றுகிறது. நீர்ப்பலி அளிக்கையில் ஏதேனும் ஒன்றை துறக்கும்படி சொல்கிறார்கள். அவன் அகம் திடுக்கிட்டான். அவ்வெண்ணத்தை அகற்ற எண்ணினான். ஆனால் அதைச் சார்ந்தே அகச்சொல் பெருகி ஓடியது.
ஒரு பொருளை, ஓர் உறவை. துறந்துவிடுங்கள் என்று கூறப்படுகையில் மானுடர் திகைக்கிறார்கள். எதைத் துறப்பதென்று நெஞ்சால் துழாவுகிறார்கள். ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு அவை தேவை என்று எண்ணி தவிக்கிறார்கள். பயனற்ற ஒரு பொருளும் தன்னைச் சூழ்ந்து இல்லை என்பதை உணர்கிறார்கள். இனி ஒருபோதும் இல்லை என்று உணர்ந்தால் அத்துறப்பு மேலும் ஆற்றல் கொள்கிறது. இனி ஒருபோதும் இல்லாததைப்போல் பேருருக்கொள்வது, முடிவிலியைச் சென்று தொடுவது பிறிதில்லை. மிக எளிதான ஒன்றை சொல்லும்பொருட்டு எண்ணி எண்ணி கீழிறங்கி கீழிறங்கி செல்கிறார்கள். பிடிக்காத காய்கறிகள். முற்றிலும் பயனற்ற பொருட்கள். என்றோ மறந்துபோனவை. எப்போதுமே தொட்டிராதவை. எண்ணிக்கூட நோக்காது எங்கோ கிடந்தவை…
ஆனால் அவற்றைச் சொன்ன அக்கணமே அவை பெருகி திசைசூழ நின்றிருக்கின்றன. கொடுந்தெய்வமென பதினாறு கைகளும் அருள் விழிகளும் கொண்டு வழிமறிக்கின்றன. கணம் திரும்பி கொடும் சிரிப்புடன் வான் நிறைக்கின்றன. பின்னர் அவற்றின் நிழலில் வாழ்கிறார்கள். எண்ணி எண்ணி ஏங்கி விழிநீர் உகுக்கிறார்கள். நாளில் நூறு முறை சென்று தொட்டு மீள்கிறார்கள். விழிப்பென்பது அதன் நினைவே என வாழ்வு கடத்துகிறார்கள். விடுவது எளிதல்ல. விடுவது எனில் அனைத்தையும் விடவேண்டும். ஒன்றை விடுவதைப்போல் அறிவின்மை வேறில்லை. ஒன்றை மட்டும் விட்டவரென எவரேனும் உண்டா?
விட்டவர்கள் உதிர்ந்தவர்கள். சுவரிலிருந்து பல்லி உதிர்வதுபோல. தான் பற்றிய சுவர் தன்னைப் பற்றியிருப்பதாக எண்ணியிருக்கும் எளிய சிற்றுயிர்கள். உதிர்ந்தவர்கள் ஆழ்ந்திறங்கி அகல்கிறார்கள். ஒருபோதும் மீள இயல்வதில்லை. ஏனெனில் அது அடியிலா ஆழம். அல்ல, மேலெழுந்துகொண்டே இருக்கிறார்கள். அவன் நீள்மூச்செறிந்து அசைந்தமர்ந்தான். வண்டி நின்றுகொண்டே இருப்பதுபோலத் தோன்றியது. யுதிஷ்டிரன் வண்டியின் கழியை இரு கைகளாலும் இறுகப் பற்றியிருந்தார். வண்டி வானில் பறப்பது போலவும் அவர் அதில் தொங்கிக்கிடப்பது போலவும்.
எத்தனை பொருட்கள்! சாவுக்கடன் முடிக்க வந்த இடம், ஆனால் எத்தனை மகிழ்வுப்பொருட்கள்! சாய்வுத்திண்டுகள், மென்மரத் தலையணைகள், அமர்ந்துண்ணும் வண்ணப்பாய்கள், நறுமணப் புகையூட்டும் துளைச்சட்டிகள்… ஒப்பனைப்பொருட்கள்! சுண்ணச்சிமிழ்கள், அணிப்பேழைகள், துணிப்பெட்டிகள். அப்பொருட்கள் அனைத்தும் தனக்குத் தேவை என்று அவன் உணர்ந்தான். ஒன்றைக் கூட தன்னால் துறக்க இயலாது. இதோ தனித்துக் கிடக்கும் இந்தச் சிறு மண்கலத்தை இனி ஒருபோதும் நோக்கலாகாது, எண்ணலாகாது என்று என்னால் முடிவெடுக்க இயலுமா? அவன் புன்னகைத்துக்கொண்டான்.
பொருள் என இவற்றுக்கு எப்படி பெயர் வந்தது? பொருண்மை கொண்டவை என்பதனால். உட்பொருள் என்பது பொருண்மையின்மை. இவை பொருதுகின்றன. சித்தத்துடன், இருத்தலுடன். பொருட்களென இப்புவியை நிறைப்பது யார்? மானுடன் சமைத்த பொருட்களின் பெருவெளி. அதைச் சூழ்ந்து தெய்வங்கள் சமைத்த பொருட்கள். பொருட்களை மானுடனுக்கு காவல் நிறுத்தியிருக்கின்றன தெய்வங்கள். சிறையிட்டிருக்கின்றன அவனை. இல்லை. வெற்றுவெளியிலிருந்து பொருட்களால் அவனை காக்கின்றன. தன்னால் பொருள்கொள்ளத்தக்க பொருட்கள் இல்லா வெளியில் எவரேனும் வாழ இயலுமா என்ன?
குந்தியின் குடிலை நெருங்குவதற்குள்ளாகவே தெரிந்துவிட்டது, அங்கே எவருமில்லை என்று. வாயிலில் குந்தியின் சேடி பத்மை நின்றிருந்தாள். யுதிஷ்டிரன் தேருக்குள்ளேயே அமர்ந்து தன் தலையை முழங்காலில் வைத்து விசும்பினார். யுயுத்ஸு அவரைப் பார்த்துவிட்டு இறங்கி பத்மை அருகே சென்று “பேரரசி?” என்றான். “பேரரசி கிளம்பிச் சென்றுவிட்டிருக்கிறார். என்னிடமும் கூறவில்லை. நான் பேரரசிக்குரிய உணவுடன் வந்தபோது இங்கு எவருமில்லை. எவரிடம் சென்று கேட்பதென்று தெரியவில்லை. காவலரிடம் கேட்டேன். சற்று முன்னர்தான் படகில் விதுரரும் பேரரசியும் ஏறிக்கொண்டதாக சொன்னார்கள். படகு நெடுந்தொலைவு சென்றிருக்கும். எவரிடம் சென்று சொல்வது என்று அறியாமல் இங்கு திகைத்து நின்றிருக்கிறேன்” என்றாள்.
கை வீசி அவளை விலக்கிவிட்டு யுயுத்ஸு திரும்பி வந்து தேர் அருகே நின்றான். “என்ன? அன்னை எங்கிருக்கிறார்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “முன்னரே கிளம்பிச் சென்றுவிட்டிருக்கிறார்கள். அங்கு நாம் நீர்க்கடன் முடித்துக்கொண்டிருக்கையிலேயே படகில் ஏறிவிட்டிருக்கிறார்கள்” என்றான் யுயுத்ஸு. “நானும் அதை கணிக்கவில்லை. நிகழ்வை முடிப்பதிலேயே என் எண்ணம் இருந்தது.” யுதிஷ்டிரன் “எவரிடமும் சொல்லாமல், எப்பொருளையும் எடுக்காமல்… அல்லவா?” என்றார். உடைந்த குரலில் “ஒவ்வொருவராலும் அது இயல்கிறது. என்னால் இயலவில்லை. எப்போதுமே இயலுமென்று தோன்றவும் இல்லை” என்றார்.
யுயுத்ஸு பேசாமல் நின்றான். யுதிஷ்டிரன் எண்ணியிராத கணத்தில் கடும் சினத்துடன் “ஆம் என்று உரைக்கிறாய் அல்லவா? என்னால் துறக்கவே முடியாதென்று நினைக்கிறாய் அல்லவா?” என்றார். அவன் வெறுமனே நோக்க “உன்னுள் என்னை நோக்கி இளிவரல் உரைக்கிறாய் அல்லவா? சொல்!” என்றார். யுயுத்ஸு அவர் முகத்தை பார்த்தபடி பேசாமல் நின்றான். “நான் இங்கு அனைத்திலும் பற்றுகொண்டவன் என்கிறாய். இவை அனைத்துக்குமாக வாழ்பவன் என்கிறாய். இல்லையா?” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு உறுதியான குரலில், அவர் விழிகளை நோக்கி “ஆம்” என்றான்.
யுதிஷ்டிரன் திகைத்து கைநடுங்க வாய்திறந்திருக்க அவனை ஒருகணம் பார்த்துவிட்டு மீண்டும் விம்மி அழுதபடி தன் தலையை முழங்காலில் வைத்துக்கொண்டார். யுயுத்ஸு தேர்ப்பாகனிடம் திரும்பிச்செல்வோம் என்று கை காட்டினான். தேர் சகட ஓசையுடன் பலகைகளின்மேல் சென்றது. செல்லும் வழியெங்கும் பயணத்துக்கான அனைத்தும் ஒருங்கியிருந்தன. அரசியர் பலர் முற்றங்களில் நின்றிருந்தனர். கங்கையில் மீன்கூட்டங்கள் என படகுகள் செறிந்திருந்தன.
அவர்கள் மீண்டும் அவையை அடைந்தபோது அவர்களைக் காத்து சகதேவன் குடில் வாயிலில் நின்றிருந்தான். யுயுத்ஸு தேரிலிருந்து இறங்கி சகதேவனின் அருகணைந்ததும் அவன் “அன்னையும் பேரரசரும் சென்றுவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றான். “ஆம்” என்று யுயுத்ஸு சொன்னான். சகதேவன் “காசிநாட்டு அரசியர் கிளம்பவிருக்கிறார்கள் என செய்தி வந்தது” என்றான். “அவர்களை அரசர் வழியனுப்பி வைக்கவேண்டும் அல்லவா?” என்று யுயுத்ஸு சொன்னான். “வேண்டியதில்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள். இங்கிருந்து ஒரு சொல்லும் எஞ்சாமல் கிளம்பவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணம். ஆகவே எந்த முறைமையும் தேவையில்லை, எவரும் உடன் வரலாகாது என்று காசிநாட்டரசி ஆணையிட்டிருக்கிறார். நானே படகுகளுக்கு ஆணையிட்டுவிட்டு இங்கு வந்தேன். இன்னும் சற்று பொழுதில் அவர்கள் கிளம்பிவிடுவார்கள்” என்றான் சகதேவன்.
பெருமூச்சுடன் யுயுத்ஸு “நன்று” என்றபின் தேரிலிருந்து தளர்ந்த தோள்களுடன் இறங்கிய யுதிஷ்டிரனை பார்த்தான். யுதிஷ்டிரன் மெல்ல நடந்து அவனருகே வந்து “மஞ்சத்தை போடு. என்னால் அமர்திருக்கவே இயலாது என்று தோன்றுகிறது” என்றார். சகதேவன் “தௌம்யர் என்னிடம் அஸ்தினபுரிக்குள் நாம் நகர்நுழைவதற்கான நாள் நோக்கும் பொருட்டு ஆணையிட்டார்” என்றான். “நோக்கிவிட்டாயா?” என்றார். “ஆம், நாம் நாளை காலை இங்கிருந்து கிளம்புகிறோம். அஸ்தினபுரிக்குள் சென்று சேரும் பொழுதை இரண்டுநாட்களாக ஆக்கிக்கொள்ளலாம். நாளை மறுநாள் அந்தியில் நற்பொழுது. நாம் நகர் நுழையலாம்” என்றான். “ஆவன செய்” என்பதுபோல் யுதிஷ்டிரன் கைகாட்டினார்.
யுயுத்ஸு சகதேவனிடம் “இங்கிருந்து அனைவருமே கிளம்புவதுபோல அல்லவா?” என்றான். “ஆம், இங்கிருந்து இளவரசியர் ஒவ்வொருவரும் தங்கள் நாடுகளுக்கு கிளம்பிச் செல்கிறார்கள். எவருக்கும் எந்த முறைமையும் தேவையில்லை. நீத்தாரில்லம் நீங்குவது என்பது சொல்லின்றியே நிகழவேண்டும் என்று நெறி உள்ளது என்றார் தௌம்யர். நாமும் சொல்லின்றியே நீங்க வேண்டும். நாம் சென்ற பிறகு இங்கு எஞ்சியிருக்கும் வெறுமையை திரும்பிப் பார்க்கலாகாது. திரும்பிப் பார்த்தவர்கள் மீண்டும் வர நேரும் என்கிறார்கள்” என்றான் சகதேவன்.
கோணலாக புன்னகைத்து “ஆனால் ஒவ்வொரு கணமும் இங்கு திரும்பி வந்துகொண்டேதான் இருப்போம்” என்றான். யுயுத்ஸு ஒரு சிறு திடுக்கிடலை அடைந்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.