நீர்ச்சுடர் - 58
பகுதி எட்டு : விண்நோக்கு – 8
கங்கைக்கரை எங்கும் ஓசைகளும் உடலசைவுச்சுழல்களும் உருவாயின. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் நிலையழிய அச்சூழலே கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஸ்ரீமுகர் அங்குமிங்கும் ஓடினார். தொலைவில் குந்தியின் தேர் கிளம்பிச் சென்றதை காணமுடிந்தது. ஸ்ரீமுகர் அங்கிருந்து உடல் குலுங்க ஓடி அருகணைந்தார். எதையோ மறந்தவர்போல திருதராஷ்டிரரை நோக்கி சென்றார். அவரிடம் ஓரிரு சொற்களைச் சொல்லிவிட்டு திரும்பிவந்தார்.
விதுரரின் கையசைவாலும் சிறுசொற்களாலும் விடுக்கப்பட்ட ஆணைகள் பரவ சற்றுநேரத்திலேயே அங்கிருந்த அத்தனை ஓசைகளும் கலைவுகளும் அடங்கி கூட்டம் இல்லையென்றாகியது. விதுரர் சென்று திருதராஷ்டிரரிடம் பணிந்து அனைத்தையும் விளக்கிவிட்டு திரும்ப வந்தார். அதற்குள் சூதர்கள் யுதிஷ்டிரனை எழுப்பி அமரச்செய்து முகத்தில் நீர் தெளித்தனர். நீர் அருந்தக்கூடாது என முதுசூதர் கையசைவால் தடுத்தார்.
யுதிஷ்டிரன் சற்றுநேரம் எங்கிருக்கிறோம் என்று தெரியாதவர்போல் விழிமலைத்திருந்தார். பின்னர் உணர்வுகொண்டு ஓசைமிக்க கேவல்களுடன் அழத்தொடங்கினார். பீமனும் நகுலனும் சகதேவனும் வெறுமனே நோக்கிக்கொண்டிருக்க அர்ஜுனன் தலைகுனிந்து அங்கே இல்லாதவன்போல் தோன்றினான்.
முதுசூதர் “அரசே, அழுவதற்கு இன்னமும் முழு வாழ்நாளும் உள்ளது. இது நீத்தாரின் தருணம். அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள்” என்றார். யுதிஷ்டிரன் அதை கேட்கவில்லை என்று பட்டது. முதுசூதர் உரக்க “அரசே, நீங்கள் எவருக்காக அழுகிறீர்களோ அவரும் இங்குள்ளார். உங்கள் மூத்தவர், அங்கநாட்டரசராகிய வசுஷேணன்” என்றார். யுதிஷ்டிரன் திடுக்குற்றவர்போல நிமிர்ந்து நோக்கினார். “ஆம், அவரும் இங்கிருப்பார். அது அவருடைய அன்னைக்கு அவர் அளித்த ஆணை… நீர்க்கடன்களை செய்க!” என்றார் முதுசூதர்.
யுதிஷ்டிரன் “என் மூத்தவர்…” என்றார். “சுடரை நோக்குக! அவர் உங்கள்மேல் அளிகொண்டு இங்கே வந்திருக்கிறாரா என உசாவுக!” என்றார் முதுசூதர். ஒரு மலரை அவரிடம் அளித்து அதை அந்தக் கலத்தின்மேல் இடும்படி கைகாட்டினார். யுதிஷ்டிரன் அதை சாம்பல்கலத்தின் மேல் இட்டார். இனிய தென்றல் ஒன்று அப்பகுதியைச் சூழ்ந்து ஆடைகளையும் குழல்களையும் அசையவைத்துக் கடந்துசென்றது. “ஆம்” என்றார் யுதிஷ்டிரன். “அவர் என்னை வாழ்த்துகிறார்.”
“அவ்வுலகில் அவர்கள் அனைவருமே தந்தையர்” என்று முதுசூதர் சொன்னார். “அங்கே வஞ்சங்கள் இல்லை. வஞ்சம்கொண்டோர் வாழும் உலகம் இன்னொன்று. இருண்டது, ஆழம் நிறைந்தது. அங்கிருந்து எழும் காற்றில் எரிமணம் இருக்கும்.” யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். “அன்னம் அளியுங்கள், அரசே. உங்கள் மூத்தாருக்கு நீங்கள் செய்ய இனி எஞ்சியிருப்பது அது ஒன்றே” என்றார் முதுசூதர்.
யுதிஷ்டிரன் நடுங்கும் கைகளுடன் மீண்டும் அன்னத்தை பகுத்தார். சூதர் ஆணையிட பாண்டவர்கள் அனைவரும் மூன்று உருளைகளை இலையில் எடுத்து தாலத்தின்மேல் வைத்து கொண்டுசென்று காட்டின் விளிம்பில் பாறைமேல் காகங்களுக்குப் படைத்தனர். ஐவரும் நின்று கைகளை தட்டியபோது காகங்கள் காட்டின் இருளே துளித்துச் சொட்டி நிற்பதுபோல் மரக்கிளைகளில் தோன்றின. அவை அணுகி வரவில்லை. அங்கேயே எழுந்து கலைந்துகொண்டிருந்தன.
முதுசூதர் “அவை வரும் தருணம் ஒன்று உண்டு” என்றார். யுதிஷ்டிரன் “அவர்களில் எவர்?” என்றார். “அதை நாமறிய இயலாது. ஆனால் சில தருணங்களில் நாம் அறியவும் கூடும். சிலபோது கனவுகளில்” என்றார் முதுசூதர். “அழையுங்கள், அழைத்தபடியே இருங்கள்.” யுதிஷ்டிரன் மீண்டும் மீண்டும் கைகளை தட்டினார். காகங்கள் அணுகி வரவில்லை. “முதலில் வரவேண்டியவர் உங்கள் குடிமூத்தவராகிய பால்ஹிகர்” என்றார் முதுசூதர். “வேண்டிக்கொள்க! அவர்கள் வராமல் இங்கிருந்து நீங்கள் செல்லமுடியாது என்று உணர்க!”
“ஆம், அவர்கள் வராவிட்டால் இங்கேயே உயிர்துறப்பதே செய்யக்கூடுவது” என்றார் யுதிஷ்டிரன். அவர்கள் கைகளை தட்டிக்கொண்டிருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தது. கங்கைக்கரையில் கூடி நின்றவர்கள் பொறுமையிழப்பது தெரிந்தது. திருதராஷ்டிரர் எழுந்து நிற்க விதுரர் அவரை நோக்கி சென்றார். யுதிஷ்டிரன் வெறிகொண்டவர்போல கைகளை தட்டிக்கொண்டிருந்தார். காகங்கள் எழுந்து எழுந்து அமைந்தன. பின்னர் ஒட்டுமொத்தமாக எழுந்து வானில் சுழன்று காட்டுக்குள் சென்று மறைந்தன.
யுதிஷ்டிரனின் விசை மேலும் கூடியது. நகுலனும் சகதேவனும் கைதட்டுவதை நிறுத்திவிட்டனர். மீண்டும் காகங்கள் வந்து கிளைகளில் அமர்ந்தன. அவர்களை நோக்கி கரிய அலகுகளைக் காட்டி கரைந்தபடியே இருந்தன. சலித்துச் சோர்ந்து தலைகுனிந்து யுதிஷ்டிரன் கைகளை தட்டிக்கொண்டே இருந்தார். பீமன் கைகளை ஓங்கி அறைந்தபடி முன்னால் சென்று “பிதாமகரே, வருக… இது என் அழைப்பு. உங்கள் மைந்தனின் ஆணை இது, வந்து எங்கள் அன்னத்தைக் கொள்க!” என்றான்.
கரிய காகம் ஒன்று எழுந்து நிலத்தில் அமர்ந்தது. பின்னர் நடந்து முன்னால் வந்து தயங்கி தலை சரித்து நோக்கியது. சிறகடித்து எழுந்து அன்னத்தின் அருகே வந்து அமர்ந்து கொத்தி அண்ணாந்து விழுங்கியது. கரைந்தபடி எழுந்தமர்ந்து மீண்டும் கொத்தியது. அர்ஜுனன் கைதட்டியபடி முன்னால் சென்று “மூத்தவரே, உங்கள் இளையோனுக்கு அருள்க! வருக!” என்றான். இன்னொரு காகம் பறந்து வந்து அமர்ந்தது. யுதிஷ்டிரன் கண்ணீருடன் புன்னகைத்தார்.
பீமன் “தார்த்தராஷ்டிரர்களே, உடன்பிறந்தவர்களே வருக. அன்னம் கொள்க… நிறைவுறுக!” என்றான். காகங்கள் ஒவ்வொன்றாக வந்து அன்னம் கொள்ளத்தொடங்கின. கூட்டத்திலிருந்து மூதாதையரை வாழ்த்தும் ஓசைகள் எழுந்தன. திருதராஷ்டிரர் கைகளை கூப்பிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தார். நூற்றுக்கணக்கான காகங்கள் வந்தன. அவை எழுப்பிய பூசல் ஓசை கங்கைக்கரைவரை கேட்டது. திருதராஷ்டிரர் திரும்பி செவிகூர்ந்தார். கைகளை விரித்து தலையை அசைத்து உறுமினார்.
திரும்பி வந்தபோது யுதிஷ்டிரன் தலைகுனிந்து அழுதுகொண்டிருந்தார். சூதர் ஒருவர் அவர் அருகே, அவர் தளர்ந்தால் ஏந்தும் பொருட்டு உடன்நடந்தார். “சற்றுநேரம்தான்… ஆனால் எத்தனை எண்ணங்கள். எவ்வளவு ஐயங்கள், தற்பழிகள்…” என்றார். சகதேவன் “அவர்கள் வந்துவிட்டார்கள்” என்றான். “ஆம், அவர்கள் வரும் வரை வராமல் ஒழிவார்களோ என்று எண்ணினோம் அல்லவா? அதுவே நம் கெடுநரகம்” என்றார் யுதிஷ்டிரன்.
அவர்கள் மீண்டும் வந்தமர்ந்ததும் யுதிஷ்டிரன் நிமிர்ந்து நோக்கினார். சுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது. இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.
யுதிஷ்டிரன் விழிகள் பளபளக்க அவனை ஏறிட்டு நோக்கிக்கொண்டிருந்தார். சகதேவனின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை. சுகோத்ரன் முதுசூதரிடம் “என் பெயர் இங்கே சொல்லப்படலாகாது, சூதரே. இக்குலத்தில் இருந்தும் இக்குருதியின் சரடில் இருந்தும் நான் என்னை முற்றாக விடுவித்துக்கொள்கிறேன்” என்றான். முதுசூதர் “இது உங்கள் குலதெய்வம், இளவரசே. நீங்கள் இவளை விட்டாலும் இவள் உங்களை விடாவிட்டால் அகன்றுசெல்ல முடியாது” என்றார்.
“நான் என்ன செய்யவேண்டும்?” என்று சுகோத்ரன் கேட்டான். “ஒரு மலரையும் ஒரு பிடி அரிசியையும் எடுத்து அவள் முன் வையுங்கள். அன்னையே உன்னை துறக்க அருள்செய்க என்று கோருங்கள். அன்னையின் ஆணை வரும்” என்றார் முதுசூதர். யுதிஷ்டிரன் “மைந்தா, வேண்டாம்” என்றார். அவன் அவரை திரும்பி நோக்கவில்லை. அங்கிருந்த எவரும் அங்கில்லை என்றே உணர்ந்தான். அவன் உள்ளம் அலையற்றிருந்தது.
சுகோத்ரன் முதுசூதர் அளித்த செம்மலரிதழையும் அரிசிமணிகளையும் எடுத்து தலைமேல் வைத்து வணங்கி கொற்றவைப் பதிட்டையின் மேல் போட்டு உதடுகளுக்குள் வேண்டிக்கொண்டான். “அன்னையே, பெற்றிடும் அன்னை மகவை என என்னை விடுதலை செய்க! என்னை வாழ்த்துக! இனி ஒரு போதும் உன்னை நினைக்காமலிருக்க எனக்கு அருள்செய்க!” எரிந்துகொண்டிருந்த நெய்விளக்கு நீர்த்துளி பட்டதுபோல சிறு வெடிப்போசையுடன் சுடர் துள்ளியது. முதுசூதர் “அன்னையின் ஆணை… நீங்கள் அன்னையை துறக்கலாம். வேறு தெய்வங்களுக்கு உங்களை கொடுக்கலாம்” என்றார்.
சுகோத்ரன் மீண்டும் ஒருமுறை கொற்றவையை வணங்கிவிட்டு பின்னடி வைத்தான். திரும்பி கங்கையையும் கூடியிருந்தவர்களையும் நிலம் தொடக் குனிந்து வணங்கினான். பின்னர் யுதிஷ்டிரனை நோக்கி திரும்பி தலைதாழ்த்தி வணங்கி “அரசே, எனக்கு விடைகொடுங்கள்” என்றான். யுதிஷ்டிரன் நடுங்கும் தலையுடன் அவனை நோக்கிக்கொண்டிருந்தார். “நான் இங்கிருந்து கிளம்புகையில் ஒரு பொடி மண்பருவோ ஒரு நினைவுத்துளியோ என்னிடம் எஞ்சலாகாதென்று அருள்க!” என்றான்.
“நீ நலம்வாழவேண்டும், இளைஞனே” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “இத்துயரத்தின் துளிகூட உன்னிடம் எஞ்சாதொழிக! இவையனைத்திலும் இருந்து முழு விடுதலை நிகழ்க!” சுகோத்ரன் பாண்டவர் ஐவரையும் பொதுவாக வணங்கிவிட்டு பின்னால் நகர்ந்தான். உஜ்வலன் அவனை ஒட்டி தானும் வந்தான். அங்கே நிகழ்வன எவ்வாறோ அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெல்லிய சொல்முழக்கம் அவர்களை சூழ்ந்திருந்தது. விழிகள் அவர்கள் மேல் படிந்திருந்தன.
அவர்கள் கங்கைக்கரைக்கு வந்ததும் யுயுத்ஸு “ஷத்ரியரே, நீங்கள் குடிதுறப்பதென்றால் குலத்தையும் துறப்பதென்றே பொருள்” என்றான். “அதை இங்கே அறிவியுங்கள். உங்கள் குலத்தோர் உங்களுக்கு விடைகொடுக்கட்டும்.” சுகோத்ரன் “ஆம், நான் ஷத்ரிய குலத்தையும் துறக்கவே எண்ணுகிறேன்” என்றான். யுயுத்ஸு அங்கிருந்த முதிய காவலரை நோக்கி “ஷத்ரியன் தன் குலத்தை துறக்க என்ன நெறி, முதியவரே?” என்றான்.
“அது அரிதாகவே நிகழ்கிறது… தானே குலம்துறப்போர் இல்லை. குலம்துறப்புத் தண்டனை அளிக்கப்படுவதுண்டு. அப்போது சில நெறிகள் கடைப்பிடிக்கப்படும்” என்று அவர் சொன்னார். “குடிமூத்தவர் ஒருவரிடம் அவர் தன் வாளையும் குண்டலங்களையும் திருப்பி அளிக்கவேண்டும். தன் இடைக்கச்சையைக் கழற்றி இடப்பக்கமாக வீசவேண்டும். அவ்வாறு செய்கையில் ஷத்ரியக் குடியினர் அவருக்குச் செல்க செல்க எனச் சொல்லி விடை அளிக்கவும் வேண்டும்.”
“ஆம், அவ்வாறே” என்றான் சுகோத்ரன். தன் காதிலிருந்த குண்டலங்களைக் கழற்றினான். இடையிலிருந்த குறுவாளையும் எடுத்துக்கொண்டு திருதராஷ்டிரரை அணுகி “மூதாதையே, கொள்க என் குலத்து அடையாளங்களை! என்னை விடுவித்தருள்க!” என்றான். திருதராஷ்டிரர் கண்ணீரோடு நெஞ்சுடன் கைசேர்த்து அமர்ந்திருந்தார். அவன் அவற்றை அவர் காலடியில் வைத்தான். “நன்று, மைந்தா. இது உனக்கு நலமே பயக்கும். இனி உன் வழியில் ஒரு துளிக் குருதியும் இல்லாமலாகுக! ஒரு பழிச்சொல்லும் உன் செவியை அடையாமலாகுக! உன் நிறைவு நிகழ்க!” என்றார் திருதராஷ்டிரர்.
அவன் தன் இடையிலிருந்து கச்சையை உருவி இடப்பக்கமாக வீசி எறிந்தான். கூட்டத்தினர் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவன் அவர்களுக்காக காத்து நின்றிருந்தான். ஓசை ஏதும் எழவில்லை. யுயுத்ஸு “ஷத்ரியர்களே, இக்குலத்தை உதறுவது அவருக்கு விடுதலை என்றால் குரலெழுப்புக!” என்றான். சற்றுநேரம் அமைதி நிலவியது. பின்னர் ஒரு முதியவர் “செல்க! செல்க!” என்றார். கூட்டம் “செல்க! செல்க!” என முழக்கமிட்டது.
சுகோத்ரன் நதிக்கரையின் மணல்சரிவில் ஏறிச்செல்ல உஜ்வலன் உடன் வந்தான். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. சுகோத்ரன் தன் குடிலுக்கு வந்ததும் “நான் கிளம்புகிறேன்” என்றான். “எங்கு?” என்று உஜ்வலன் கேட்டான். “இங்கிருந்து கிளம்புகிறேன்… பெரும்பாலும் ஆசிரியரிடமேதான் சென்று சேர்வேன் என எண்ணுகிறேன். ஆனால் கிளம்புகையில் அம்முடிவை எடுக்கவில்லை” என்றான் சுகோத்ரன். “நானும் உடன் வருகிறேன்” என்றான் உஜ்வலன்.
அவர்கள் தங்கள் பொதிகளுடன் நடந்தனர். உஜ்வலன் பேசாமல் காட்டை விழி அலைத்து நோக்கியபடி நடந்தான். சுகோத்ரன் “நீர் எண்ணியது நிகழவில்லை அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அதில் பிழையெல்லாம் இல்லை. மண்ணை கொள்வது நல்லது. மண்ணை விடுவது அதைவிட நல்லது” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் புன்னகையுடன் திரும்பி அவனை நோக்கினான். உஜ்வலன் “நான் என்றுமே புறம்சார்ந்தவன்” என்றான்.
“இது என் ஊழ் என உணர்ந்தேன்” என்றான் சுகோத்ரன். “ஊழ் என்று கொள்லலாம். இது உங்களுக்குரிய நல்முடிவு. உங்களை நீங்கள் கண்டுகொண்டீர்கள். ஆகவே இம்முடிவை எடுக்க இயன்றது” என்றான் உஜ்வலன். “ஒவ்வொருவரும் கவ்விக்கொண்டிருப்பது உடைமைகளை அல்ல, விழைவை அல்ல, பற்றை அல்ல, துயரத்தையே. அவர்களை அது கவ்விக்கொண்டிருப்பதாக எண்ணுகிறார்கள்” என்றான் சுகோத்ரன். “நூல்கள் மீளமீளச் சொல்வதுதான்…” என்றான் உஜ்வலன்.
அவர்கள் கங்கையை வந்தடைந்தனர். அங்கே அப்பொழுதில் எவருமில்லை. பந்தங்கள் அணையக்குறுகி கரி உமிழ்ந்து எரிந்துகொண்டிருந்தன. படகுகளில் துடுப்புகளும் இல்லை. சுகோத்ரன் படகோட்டிகள் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். அதன் பின்னரே படகுத்துறையின் பலகை அடுக்குகளுக்கு அப்பால் ஒருவன் கிடப்பதை கண்டான். “எழுப்புக அவனை!” என்றான். “பாவம் கிழவன்” என்றபடி உஜ்வலன் தயங்கினான். சுகோத்ரன் முன்னால் சென்று அவனை கைகளால் உலுக்கி “படகுத்துறைவரே, எழுக! எழுக!” என்றான்.
அவன் எழுந்து அமர்ந்தான். விழிகள் பித்தர்களுக்குரியவை போலிருந்தன. தாடி கிழிந்த ஆடைபோல நூல்களாகத் தொங்கியது. “படகை ஓட்டலாகுமா? நான் இங்கிருந்து செல்லவேண்டும்” என்றான் சுகோத்ரன். “ஆம்” என்றபடி அவன் எழுந்து வந்தான். தளர்ந்த முதியவன் என்று தோன்றிய கணமே அவன் பறவை என தாவி நீரில் ஆடிய படகில் நின்றான். சுகோத்ரன் படித்துறையில் ஏறி மெல்ல பலகைமேல் நடந்து படகில் சென்று அமர்ந்தான்.
உஜ்வலன் பலகைமேல் ஏறியபோது அது ஆடியது. அவன் கைவிரித்து நடனம்போல் ஆடி “ஊழ்நடனம்!” என்றான். சுகோத்ரன் நகைத்து “வருக!” என்றான். உஜ்வலன் அவன் அருகே வந்தமர்ந்தான். “விட்டுச்செல்லும் இடங்கள் அழகுகொள்கின்றன” என்றான் உஜ்வலன். “செல்லவிருக்கும் இடங்கள் பேரழகு கொள்கின்றன.” “எதிலேனும் நிலைகொள்வீரா நீர்?” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “உங்கள் மொழியையே சற்று மாற்றிச் சொல்கிறேன், நிலைகொள்ளுதலே துயரம்” என்றான். சுகோத்ரன் நகைத்தான்.
“அரிய கருத்து… எனக்கே விந்தையாகத் தோன்றுகிறது. நிலைகொள்வதற்கு நிலமென்று இருப்பவை அனைத்தும் நேற்றின் தொடர்ச்சிகளே. ஆகவே அவை அனைத்தும் துயரங்களே” என்ற உஜ்வலன் “இதை ஏதேனும் நூலில் எழுதிச் சேர்த்துவிடலாமா?” என்றான். “ஏன் தனி நூலாக எழுதினால் என்ன?” என்று சுகோத்ரன் துடுப்பை நீரிலிட்டபடி கேட்டான். “நான் அறிந்தவரை நூல்களில் கொண்டாடப்படும் வரிகளெல்லாமே இடைச்செருகல்கள்தான்” என்றான் உஜ்வலன். “ஏன்?” என்றான் சுகோத்ரன். “நூல்கள் உருவாகி படிக்கப்பட்டு பல கோணங்களில் ஏற்றும் மறுத்தும் உசாவப்பட்டு தெளிந்தபின் அவற்றில் எஞ்சுமிடம் ஒன்று கண்டடையப்படுகிறது. அந்த இடமே அந்நூலின் மையம். அங்கே அந்நூலில் இருந்து கடைந்து திரட்டி எடுக்கப்பட்ட சொல் சேர்க்கப்படுகிறது. அந்நூலின் மெய்மை அதுவே” என்றான் உஜ்வலன்.
“என்ன சொல்கிறீர்? வெறுமனே பேச்சுக்கென பேசலாகாது. பல நூல்களில் வெற்றுவரிகளே இடைச்செருகல்களாக அமைந்துள்ளன” என்று சுகோத்ரன் சொன்னான். “ஆம், ஆனால் அந்த வெற்றுவரிகள்தான் அவற்றின் மையம் போலும்” என்றான் உஜ்வலன். “மாபெரும் மெய்நூல்களில் அமையும் பொருளிலா வரிகளுக்கு என்ன இலக்கு?” என்றான் சுகோத்ரன். “அந்த மாபெரும் மெய்மையின் நடுவே ஒரு அறிவின்மை திகழ்ந்தால்தான் அதற்கு பொருள் முழுமை கொள்கிறதோ என்னவோ” என்றான் உஜ்வலன். “உம்மிடம் பேச என்னால் இயலாது” என்று சுகோத்ரன் சொன்னான்.
படகோட்டி துடுப்புகளை துழாவிக்கொண்டிருந்தான். காலை நன்கு விடிந்திருந்தாலும் விண்மீன்கள் தெரிந்தன. உஜ்வலன் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டு “நெடுநாட்களாகின்றது பகலில் விண்மீன்களை நோக்கி” என்றான். சுகோத்ரன் மேலே நோக்கி “ஆம்” என்றான். படகு கங்கையின் அலைகளுக்கு மேல் எழுந்து சென்றது. ஊசல் என எழுந்தாடியது. படகோட்டி துடுப்பை வலிந்து செலுத்தவில்லை. பாய்கள் இல்லையென்றாலும் காற்றே படகை தள்ளிக்கொண்டு சென்றது.
“காற்று ஏன் இத்தனை எடைகொண்டிருக்கிறது? மூச்சுத் திணறுகிறது” என்றான் சுகோத்ரன். “காற்றில் உங்கள் உடன்பிறந்தார் நிறைந்திருக்கிறார்கள் போலும்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் அவனை திரும்பி நோக்கினான். அவனுடைய பற்கள் ஒளியுடன் தெரிந்தன. “ஆம், மெய்யாகவே அவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எனக்கு ஆணையிட்டனர்” என்று சுகோத்ரன் சொன்னான்.
உஜ்வலன் “நீங்கள் நிமித்தநூலை இன்னமும் நம்புகிறீர்களா? அது நாம் பிறருக்குச் சொல்லவேண்டியது அல்லவா?” என்றான். சுகோத்ரன் அதை கேளாதவனாக “செல்க என அவர்கள் ஆணையிட்டனர். உதறிச்செல்க என்றனர். ஒட்டியிருப்பதும் பற்றுகொண்டிருப்பதும் அல்ல. விட்டுச்செல்வதே உறவுகளின் நிறைவு என்றனர்” என்றான். “ஒற்றைக் கீச்சொலி… கூரியது. வாள் என வெட்டி என்னை அறுத்தது.”
“ஒரு சொல்லுக்கு அத்தனை பொருளா?” என்று உஜ்வலன் நகைத்தான். “ஒருசொல்… அதனூடாக நெடுந்தொலைவு செல்லமுடியும்” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “செல்லுங்கள்… நான் அறிந்தது ஒன்றே. பற்றுக, பற்றமுடியாவிட்டால் விடுக! இரண்டுக்கும் பொருள் ஒன்றே” என்றபின் கால்நீட்டி படகில் படுத்துக்கொண்டான். “இனிய அசைவு. தொட்டில் போலிருக்கிறது” என்றான். சற்றுநேரத்திலேயே அவனுடைய மூச்சின் ஒலி எழுந்தது.
படகோட்டி மேலும் துழாவிக்கொண்டிருந்தான். பின்னர் நிறுத்திவிட்டான். சுகோத்ரன் “நீர் குகரா?” என்றான். “ஆம், என் பெயர் நிருதன்” என்று அவன் சொன்னான். அவன் கைகள் படகில் தாளமிட்டன. மெல்லிய குரலில் அவன் பாடத்தொடங்கினான். பாடவேண்டாம் என்று சொல்ல சுகோத்ரன் விழைந்தான். ஆனால் முதல் வரியே அவனை செவிகொடுக்கச் செய்தது.
‘அன்னையே என்ன நினைக்கிறாய்**?
எதற்காக நீ மெல்ல சிரித்தாய்**?
ஜனகன் மகளே**, பூமியின் வடிவே**,
பொன்றாப் பெரும்பொறையே என்ன நினைத்தாய்**?
எதற்காக நீ மெல்ல சிரித்தாய்**?’
எந்தப் பாடல் அது? எங்கோ கேட்ட பாடல். ஆனால் எங்கே? மிகத் தொன்மையானது. படகோட்டிகள் பாடுவது. அவர்கள் தங்கள் படகில் ஏறி கங்கையைக் கடந்து கானேகிய சீதையை அப்பாடல் வழியாக நினைவில் பொறித்திருக்கிறார்கள்.
‘அன்னையே சொல்
எதற்காக நீ புன்னகை செய்தாய்?
உன் செவ்வடி மலர்களை
என் குளிர்ந்த மெல்விரல்கள் தொடும்போது
எதற்காக நீ புன்னகை செய்தாய்?’
அவை கங்கையின் சொற்கள். படகை ஓட்டியவன் தொல்குகன். படகுத்துடுப்பை பிடித்த அனைவருக்கும் முதல் தந்தையானவன். அவர்களின் குடிமுகப்பில் தெய்வமென அமைந்தவன். ராகவராமனுக்கு உடன்பிறந்தான் என அமைந்தவன். தெய்வத்தின் தோழன். தேவியை அறிந்தவன். தேவியின் விழிகளால் தெய்வத்தைக் காணும் பேறுபெற்றவன்.
‘சொல் அன்னையே நீ சிரித்தது எதற்காக?
உன் செவ்வண்ணச் சிற்றடி எழுந்து
படகில் ஊன்றியபோது
மெல்ல பறந்த கருங்குழல் சுரிகளை
கையால் ஒதுக்கி நீ கண்மலர்ந்தது எதற்காக?’
‘அன்னையே சொல்லமாட்டாயா?
உன் துயர்முறுவல் எதற்காக?
உன் தோள்களில்
என் சிற்றலை முத்துக்களை சிதறியாடுகின்றேன்.
உடல் சிலிர்த்து உன் தலைவனருகே நகர்கிறாய்.
சொல், உன் துயரமுறுவல் எதற்காக?’
அவன் அந்தப் பாடல் வழியாக சென்றுகொண்டிருந்தான். இவன் பெயர் நிருதன். இப்பெயரிலும் ஒரு தெய்வம் இருக்கிறது. முன்பு அன்னை அம்பாதேவியை படகில் ஏற்றி சால்வநாட்டுக்கும் அஸ்தினபுரிக்கும் ஓட்டிச்சென்றவன். அவளுக்கு எரிதோழன் என்றானவன். அஸ்தினபுரியின் படகுத்துறை முகப்பில் கோயில்கொண்டவன். ஊரெல்லாம் குகர்களால் வணங்கப்பெறுபவன்.
‘சொல்லுக தாயே, இந்த மென்னகை எதற்காக?
எழுந்த பல்லாயிரம் மீன் விழிகளால் சூழ்ந்து
உன்னைப் பார்த்து திகைக்கின்றேன்.
உன் மென்னகை எதற்காக?
‘உலகீன்றவளே ஏன் நகைத்தாய்?
பெண்ணுடலை கணவனும் நானும் மட்டுமே காண்கிறோம்.
பெண் உள்ளத்தை காண்பவளோ நான் மட்டுமே.
சொல்லுக தேவி நீ நகைத்தது எதற்காக?
அவன் கங்கையின் கரையோரத்தை நோக்கியபடி படகில் அமர்ந்திருந்தான். கங்கைக்கரை மானுடத் தலைகளால் ஆனதாக இருந்தது. அது அசைவுகளால் அலைகொண்டது. பல்லாயிரம் கைகளால் நீரும் அன்னமும் அளிக்கப்படுகின்றன. பல்லாயிரம் பல்லாயிரம் நீங்குயிர்கள் வந்து அவற்றுக்காக காத்திருக்கின்றன. நீரின் அலைகளாக. காற்றின் தொடுகையாக. இலைநுனிகளாக. ஒளிரும் சிறகுகளும் இமையா விழிகளும் கொண்ட பூச்சிகளாக.
உன் பாதங்கள் தொட்டுச் செல்லும் பூமி அதையறியும்.
உன் மேனி வருடிச் செல்லும் காற்றும் அதையறியும்.
அன்னையே உன்மேல் ஒளி பொழிந்து விரியும் வானும் அதையறியும்.
நானுமறிவேன் பொற்பரசியே,
நீ அனல் கொண்ட சொல்லெறிந்து
நிலம் பிளந்து மறைகின்ற எரிவாயின்
தழல் தணிக்க போதாது
விண்பிளந்து நான் மண்நிறைக்கும் நீரெல்லாம்.
அலையடித்து அலையடித்து தவிப்பதன்றி
நான் என் செய்வேன் தாயே?
குகன் பாடிக்கொண்டிருக்க சுகோத்ரன் நீரையே நோக்கி அமர்ந்திருந்தான். கங்கையின் நீரில் அவன் ஒளிரும் சில விண்மீன்களைக் கண்டான். அவை விழிகள் என ஒளிவிட்டன. மீண்டும் கூர்ந்தபோது நீர்ப்பரப்பிற்கு அடியில் மீன்கள் செறிந்து அசைவிழந்திருப்பதைக் கண்டான். மீன்கூட்டங்களின் விழிகளை நோக்க முடிவது போலிருந்தது.