நீர்ச்சுடர் - 56

பகுதி எட்டு : விண்நோக்கு – 6

யுதிஷ்டிரனின் குடில் முன் இறங்குவதுவரை உஜ்வலன் ஒன்றும் சொல்லவில்லை. குடிலில் யுயுத்ஸு மட்டும் இருந்தான். அவர்களை அவன் எதிர்கொண்டு “அரசரும் உடன்பிறந்தாரும் கங்கைக்கரைக்குச் சென்றுவிட்டார்கள். வேள்வியில் அமர்ந்திருக்கிறார்கள். நீங்களும் அங்கே செல்லலாம் என ஆணை” என்றான். அவன் முகமும் குரலும் இறுக்கமாக இருந்தன. அவன் விழிகளிலிருந்த விலக்கத்தை சுகோத்ரன் உணர்ந்தான். “இளைய யாதவர் எங்கே?” என்றான். “அவர் தன் குடிலிலேயே இருக்கிறார்” என்றான் யுயுத்ஸு.

“ஏன்?” என்று உஜ்வலன் கேட்டான். “ஏன் அவர் நீர்க்கடனுக்கு வரவேண்டும்? அவருக்கு அங்கே செய்வதற்கேதுமில்லை” என்றான் யுயுத்ஸு. அவர்களிடம் அவன் பேசவே விரும்பவில்லை என்று தோன்றியது. “மெய்தான். இத்தனை சாவுகளில் அவருக்கு அணுக்கமான எவரும் இல்லை…” என்றான் உஜ்வலன். யுயுத்ஸு சீற்றத்துடன் விழிதூக்க புன்னகையுடன் “அல்லது அனைவருமே அவருக்கு அணுக்கமானவர்கள்தான் என்றும் சொல்லலாம்” என்றான். யுயுத்ஸு தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.

சுகோத்ரன் “இளைய யாதவர் அழைத்துவர ஆணையிட்ட முனிவர் வந்தாரா?” என்றான். “ஆம்” என்று யுயுத்ஸு அவனை நோக்காமலேயே சொன்னான். “அவர் திரும்பிச் சென்றுவிட்டாரா?” என சுகோத்ரன் மீண்டும் கேட்டான். “ஆம், அவர் சொன்னதென்ன என்று அறியேன். எனக்குரிய செய்தி அல்ல அது” என்று யுயுத்ஸு சொன்னான். சுகோத்ரன் “எனக்குரிய செய்தி அது. நான் நிமித்தம் அறிந்தவன்” என்றான். யுயுத்ஸு விழிதூக்கி நோக்கி “அதை நான் உங்களிடம் சொல்வதற்கு எனக்கு ஆணையில்லை” என்றான்.

சுகோத்ரன் வெறுமனே தலைவணங்கினான். ஒருகணத்திற்குப் பின் யுயுத்ஸு “இளவரசே, நான் உங்களிடம் ஒன்று கூறவேண்டும்” என்றான். “கூறுக, தந்தையே” என்றான் சுகோத்ரன். “இந்த அந்தணர் சற்றே விலகி நிற்கட்டும்” என்றான் யுயுத்ஸு. சுகோத்ரன் உஜ்வலனை பார்க்க அவன் புன்னகையுடன் தலைவணங்கி விலகி வெளியே சென்றான். யுயுத்ஸு “நான் நேற்றிரவு விதுரர் உங்களிடம் பேசிக்கொண்டிருந்ததை அறிவேன்” என்றான். “நீங்கள் அறியாத எதுவும் இங்கே நிகழாது என்பது தெரியும்” என்றான் சுகோத்ரன்.

யுயுத்ஸு “அது என் கடமை” என்றான். “என்ன பேசிக்கொண்டீர்கள் என்றும் தெரியும். இன்று முற்புலரிக்கு முன் உங்கள் தந்தை சகதேவனிடம் அதைப்பற்றிப் பேச வாய்த்தது. அதை உங்களிடம் சொல்லியாகவேண்டும்.” சுகோத்ரன் பேசாமல் நின்றான். “விதுரர் உங்களிடம் பேசிக்கொண்டிருந்த அதே பொழுதில் நான் இக்குடிலுக்கு வந்தேன். வெளியே காட்டோரமாக இருளுக்குள் மெல்லிய வெண்ணிழல் என உங்கள் தந்தை நின்றிருப்பதைக் கண்டேன். அவருடைய உடல் என் விழிகளுக்கு அத்தனை அறிமுகமான ஒன்று என்பதனால்தான் அவரை என்னால் காணவே முடிந்தது.”

அருகணைந்து அவரை வணங்கினேன். என் வருகையை அவர் விரும்பவில்லை. தனிமையில் புதைந்திருந்தார். ஆனால் இந்த முக்தவனத்தில் எவருக்காயினும் தனிமை நோயும் நஞ்சும் மட்டுமே என நான் அறிந்திருந்தேன். ஆகவே அவர் கொண்ட அத்தனிமையை கலைக்க நான் தயங்கவில்லை. மீண்டும் முகமன் உரைத்தேன். எரிச்சலுடன் என்னை நோக்கி என்ன என்று வினவினார். நான் நீர்க்கொடைச் சடங்குகள் குறித்து பேசினேன். அவர் நான் ஏதாவது புதிதாகச் சொல்வேன் என்று எண்ணி செவியளித்தார். பின்னர் சலிப்புடன் சில வினாக்களை கேட்டார். இளைய யாதவர் அழைத்துவந்திருந்த முனிவரின் செய்தியை சொன்னேன். அது அவருக்கு சற்றே ஆர்வம் அளித்தது.

அதன்பின்னர் விதுரர் உங்களைச் சந்தித்ததைப் பற்றி சொன்னேன். அவர் துயர்கொண்டவர்போல் முகம் சுளித்தார். அவருடைய உணர்வுகள் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. “விதுரர் இயல்பாகச் சென்று பார்க்கவில்லை. எதையோ சொல்கிறார் அல்லது கோருகிறார்” என்றேன். “ஆம், அவர் கோருவது ஒன்றாகவே இருக்கமுடியும், அவர் அவனிடம் அஸ்தினபுரியின் முடியைக் கோரும்படி சொல்வார்” என்றார் உங்கள் தந்தை. நான் அதை அறிந்திருந்தேன் என்றாலும் “ஏன்?” என்றேன்.

“பீஷ்ம பிதாமகர் இங்கிருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார். அவர்களுக்கெல்லாம் குருதியின் இயல்பான வழி மட்டுமே ஊழின் வழி. பிற அனைத்தும் பிழைபடுதலே” என்றார். நான் “அவர் குருதித்தூய்மையை எண்ணுகிறாரா?” என்றேன். “அதையும் கருதுபவர்தான். ஆனால் அவர் இப்போது எண்ணுவது அதையும் கடந்த ஒன்றை” என்றார். “அதைப்பற்றி நாம் பேசவேண்டாம். அவர் மைந்தனிடம் கோருவது அஸ்தினபுரியின் முடியை அவன் சூடவேண்டும் என்று” என்றார்.

“ஆம்” என்றேன். “நான் அவனிடம் இன்று எதையும் சொல்ல முடியாது. அவன்மேல் எனக்கு சொல் உண்டா என்றே எனக்கு ஐயமாக உள்ளது. அவனை நேரில் காண்பது வரை அவ்வாறு தோன்றவில்லை. அவன் பருவுடலாக, விழிகளாக, நகைப்பாக என் முன் தோன்றியபோது என் அகம் திடுக்குற்றது. அவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். அவ்வாறு மறக்கும்பொருட்டே அவனை நிமித்தக்கல்விக்கு அனுப்பியிருக்கிறேன். அவன் மீண்டதைக் கண்ட கணம் நான் அடைந்தது ஆழ்ந்த குற்றவுணர்ச்சி மட்டுமே. என் மூத்தவரின் மைந்தர்கள் அனைவரும் மறைந்தபின் அவன் மட்டும் எஞ்சியிருப்பது பெரும்பிழை என்னும் எண்ணமே என்னுள் இருந்தது” என்றார் உங்கள் தந்தை.

“ஏனென்றால் நான் அதை திட்டமிட்டு இயற்றியிருக்கிறேன் என எனக்கே தெரிந்திருந்தது. அவ்வுண்மை எதனாலும் மழுப்ப முடியாத உண்மை என முன்னால் எழுந்து நின்றது. அவன் உயிருடன் இருப்பதே என் தமையன்களை நான் வஞ்சித்ததற்கான சான்று என்று தோன்றியது. ஆகவே அவனிடம் என்னால் பேசமுடியவில்லை” என்று அவர் சொன்னார். “அவன் முடிசூடினான் என்றால் அது மிகப் பெரிய சூழ்ச்சியாக ஆகிவிடுகிறது. நிமித்திகனாகிய நான் அனைத்தையும் முன்னரே கணித்து என் மைந்தனை இதன்பொருட்டு காத்துக்கொண்டேன் என்றே பொருள்படும்” என்றார்.

நான் அவரைத் தடுத்து “அவ்வாறு எவர் எண்ண முடியும்? தங்களைப்பற்றி அறியாதோர் எவர்?” என்றேன். அவர் கசப்புடன் புன்னகைத்து “ஆட்சியாளர்களையும் அரசகுடியினரையும் சான்றோரையும் மக்கள் கூர்ந்து நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களிடம் குறைகள் காண விழைகிறார்கள். ஆகவே இல்லாக் குறையையும் உண்டுபண்ணி கண்டடைகிறார்கள். அதனூடாக தங்கள் அன்றாடச் சிறுமைகளை கடந்துசெல்கிறார்கள். மேலும் நம்மைப்பற்றி பேசவிருப்பவர்கள் நாமறிந்தவர்கள் அல்ல, நம்மை அறிந்தவர்களும் அல்ல. வழிவழியாக வந்துகொண்டே இருப்பவர்கள்” என்றார்.

என்னால் மறுமொழி சொல்ல இயலவில்லை. “இது என் அச்சம், இதை நான் அவனிடம் சொல்ல இயலாது. இன்று நான் அழைக்காமலேயே இத்தனை தொலைவுக்கு அவன் கிளம்பி வந்துள்ளான் என்றால் அவனுள் விழைவு உள்ளது என்றே எண்ணுகிறேன். அவனுடன் வந்துள்ள அந்தணன் அதைத்தான் பேசுகிறான். அந்தணனை துணைகொண்ட ஷத்ரியன் அரசனாக விழைபவன்” என்றார். நான் “அவர் அவ்வாறு சொல்லவில்லை” என்றேன். “அவன் விழைவதில் பிழை ஏதுமில்லை. அவனுக்குரியதே இன்று இந்நிலமும் முடியும். அவனை விலக்க எனக்கு உரிமையில்லை. தகுதியுமில்லை” என்றார்.

அவர் சொல்லவருவதென்ன என்று நான் காத்திருந்தேன். “அவனிடம் நீ சொல்லலாம். அவனுடைய முடிவு முழுக்க முழுக்க அவனுடைய தெரிவு என நான் எண்ணுவதாகச் சொல். அவன் எதைத் தெரிவுசெய்தாலும் நான் அவனை வாழ்த்துவேன். ஆனால் அரசை அவன் தெரிவுசெய்தால் வருந்துவேன்” என்றார். “ஆனால் என் வருத்தம் ஒரு பொருட்டல்ல. அதை ஒரு துளியென்றாக்கும் பெருங்கடல் போன்ற துயர்மேல் சென்றுகொண்டிருக்கிறேன்.” நான் தலைவணங்கினேன். அதற்குள் அவரை அரசர் அழைப்பதாக ஏவலன் வந்து அழைத்தான். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.

“நான் என் சொற்களை தொகுத்து இதை சொல்லியிருக்கிறேன். என் விழிமுன் இருப்பது பந்த வெளிச்சத்தில் தெரிந்த அவருடைய துயர்மிக்க முகம் மட்டுமே. அந்த முகம் அளித்ததே அச்சொற்களுக்கான மெய்ப்பொருள்” என்று யுயுத்ஸு சொன்னான். “நீங்கள் எனக்கு சொல்வதென்ன, தந்தையே?” என்றான் சுகோத்ரன். “நீங்களே முடிவெடுக்கலாம், இளவரசே. ஆனால் நெறிநூல்கள் மைந்தனின் முதற்கடமை தந்தையை நிறைவுறச்செய்வதே என்கின்றன” என்றான் யுயுத்ஸு.

“அன்னையின் ஆணையை மைந்தன் எவ்வண்ணம் தலைக்கொள்ளவேண்டும்?” என்றான் சுகோத்ரன். யுயுத்ஸு திகைப்புடன் அவனை நோக்கி “அரசியை சந்தித்தீர்களா?” என்றான். “ஆம்” என்றான் சுகோத்ரன். “நன்று, நான் நெறிநூல்கள் சொல்வதையே சொல்கிறேன். மைந்தன் அகவை நிறைந்துவிட்டபின் அவன்மேல் அன்னையருக்கு எந்த உரிமையும் இல்லை. மகள்களிடம் அவர்களுக்கு இணையுரிமை உள்ளது. அவர்கள் இளவரசியர் என்றால் அவ்வுரிமையும் இல்லை” என்று யுயுத்ஸு சொன்னான். சுகோத்ரன் புன்னகையுடன் “தங்கள் சொற்களை செவிகொண்டேன், தந்தையே” என்றான்.

தலைவணங்கி அவன் வெளியே வந்தான். உஜ்வலன் அவனுக்காகக் காத்திருந்தான். அவர்கள் நடக்கையில் உஜ்வலன் “அவர் சொன்னதென்ன என்று அறிவேன்” என்றான். “நீங்கள் அஸ்தினபுரியின் மணிமுடியை மறுக்கவேண்டும், அவ்வளவுதானே?” சுகோத்ரன் “எங்ஙனம் உணர்கிறீர்?” என்றான். “அவர் முகமும் விழிகளும் சொற்களும் மாறியிருக்கின்றன. இரவில் அவர் எவரையேனும் சந்தித்திருக்கலாம். பெரும்பாலும் அது உங்கள் தந்தை சகதேவன்.” “ஏன்?” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் “நேற்று அவர் பேச எண்ணிய எதையோ பேசாமல் கடந்துசென்றார் என்று பட்டது. உங்களை நேருக்குநேர் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்” என்றான்.

சுகோத்ரன் “மெய்தான்” என்றான். “அவருடைய நற்பெயரை அவர் எண்ணுகிறார். போரின் முற்றழிவை முன்னரே உணர்ந்து, நீங்கள் முடிசூடவேண்டுமென திட்டமிட்டு, உங்களை வெளியே அனுப்பினார் என்னும் பழி வருமென அஞ்சுகிறார்” என்றான் உஜ்வலன். “அவ்வண்ணம் பழி வராதா?” என்றான் சுகோத்ரன். “உறுதியாக வரும்” என்றான் உஜ்வலன். “ஆனால் நீங்கள் நல்லாட்சி கொடுக்கமுடிந்தால், வெற்றிகளை ஈட்டினால், வேள்விகளை நிகழ்த்தினால், அந்தணர்க்கும் அறவோர்க்கும் சூதருக்கும் புலவருக்கும் அள்ளி வழங்கினால் மிக விரைவிலேயே அப்பழி அகலும். சொல்லப்போனால் உங்களைக் காத்து அஸ்தினபுரியின் குருதிவழியை நிலைநிறுத்திய உங்கள் தந்தை மாபெரும் சூழ்திறன் கொண்டவர் என்றே புகழப்படுவார்.”

சுகோத்ரன் “ஆம், அவ்வாறே எப்போதும் நிகழ்கிறது” என்றான். “உங்கள் தந்தை இன்று முனியக்கூடும். ஆனால் அந்த முனிதல்கூட மேல்மட்டத்திலேயே. ஆழத்தில் அவருடைய உள்ளம் நாடுவது உங்கள் அன்னை ஆணையிட்டதைத்தான்” என்று உஜ்வலன் சொன்னான். “ஏன்?” என்று சுகோத்ரன் கேட்டான். “அன்னையர் தந்தையரின் ஆழுள்ளத்தையே வெளிப்படுத்துகிறார்கள்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் கண்சுருக்கி நோக்க “ஏனென்றால் அன்புள்ள தந்தையர் ஆழத்தில் அன்னையர்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் புன்னகைத்தான். “நகையாட்டல்ல, பழிசூழாமல் நீங்கள் முடிசூடலாகும் என்றால் சகதேவன் வேண்டாம் என்றா சொல்வார்?” என்று உஜ்வலன் கேட்டான்.

“இத்தகைய வினாக்களுக்கு எவர் மறுமொழி சொல்ல இயலும்?” என்றான் சுகோத்ரன். “அவருடைய நற்பெயரை அவர் காத்துக்கொள்ளவேண்டும், அவ்வளவுதான். ஆனால் நீங்கள் முடிசூடவும் வேண்டும். ஆகவேதான் உங்களிடம் சொல்லாமல் யுயுத்ஸுவிடம் சொல்கிறார். அவர் அவ்வாறு சொன்னது ஆவணமாகிறது அல்லவா?” சுகோத்ரன் சீற்றத்துடன் “நீர் தந்தையை இழிவுசெய்கிறீர்” என்றான். “இல்லை, மானுட உள்ளம் செயல்படும் முறையை மட்டுமே சொன்னேன்” என்றான் உஜ்வலன்.

உஜ்வலன் தொலைவில் தெரிந்த யுயுத்ஸுவின் உருவை திரும்பி நோக்கிவிட்டு “அவர் அஞ்சுகிறார்” என்றான். “எதை?” என்றான் சுகோத்ரன். “உங்களை” என்றான் உஜ்வலன். “என்னையா?” என்று சுகோத்ரன் கேட்டான். “அல்லது நீங்கள் எடுக்கவிருக்கும் முடிவை” என்று உஜ்வலன் சொன்னான். சுகோத்ரன் “ஏன்?” என்றான். “அவர் எண்ணியிருக்கும் ஒன்றுக்கு மாறானது அது” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் எண்ணங்களில் ஆழ்ந்து அச்சொற்களை செவிகொள்ளாமல் வெறுமனே தலையசைத்தான்.

யுயுத்ஸு அனுப்பிய ஏவலன் வழிகாட்ட அவர்கள் வேள்விக்களம் நோக்கி சென்றனர். கங்கைக்கரை முழுக்க மீன்நெய்ப்பந்தங்களின் ஒளியில் செந்நிறமாகத் தெரிந்தது. பலநூறு ஏவலரும் காவலரும் அவர்களின் நிழல்களுடன் அசைய அப்பகுதியே கொந்தளிப்பதுபோல் இருந்தது. கலைந்து குழம்பிய ஓசைகளின் முழக்கம் காட்டின் மரச்செறிவுக்குள் எதிரொலித்துச் சூழ்ந்திருந்தது. அவர்கள் அவ்வோசையால், ஒளியால் ஈர்க்கப்பட்டு சொல்லற்று நடந்தார்கள்.

கங்கைக்கரையில் உயரமான உலர்ந்த இடத்தில் மண் நிரப்பாக்கப்பட்டு வட்டவடிவமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டிருந்தது. நூற்றெட்டு மூங்கில்கள் நாட்டப்பட்டு ஈச்சையோலை முடைந்து கூரையிடப்பட்டிருந்த பந்தலின் உச்சியில் மூன்று முகடுகள் அமைக்கப்பட்டு அதன்மேல் அஸ்தினபுரியின் அமுகதகலக் கொடி பறந்தது. வேள்விப்பந்தலின் கூரைமேல் புகை ஊறிப்பெருகி எழுந்து திரண்டு நின்றிருந்தது. புகைச்சுருள்கள் மேல் பந்தங்களின் ஒளி பட நீர்த்துப்போன தழல் என அது தோன்றியது. அனலின் புகை பறவைகளை எச்சரிக்கையடையச்செய்ய காட்டுக்குள் கலைவோசை எழுந்தது. சிறகடிப்புகள் இருளில் சுழன்று சுழன்று தெரிந்தன.

“மங்கலம் என்று சொல்லப்படும் எதையுமே இங்கே கொண்டுவரலாகாது என்று நெறியுள்ளது” என்று உஜ்வலன் சொன்னான். “மலர்கள், கனிகள், பட்டு, ஆடி, பொன் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் இங்கே பெண்களைக்கூட வரலாகாது என விலக்குகிறார்கள். மங்கலைகள் வரலாகாது. கைம்பெண்கள்கூட வருவது விலக்கப்பட்டுள்ளது. பெண்கள் எந்நிலையிலும் மங்கலைகளே என்பது வேதநெறி. இறப்பு எனும் மங்கலமின்மையின் இடம் இது. நீர்க்கடன் அளிக்குமிடத்தை இடுகாட்டின் தங்கை என்று சூதர் சொல்வதுண்டு.” கைசுட்டி வேள்விச்சாலையைக் காட்டி “ஆனால் அங்கே வேதச்சொல் முழங்கிக்கொண்டிருக்கிறது. முதல் மங்கலம் என்று வேதத்தைச் சொல்வதுண்டு” என்றான். சுகோத்ரன் அதை நோக்கியபின் “பருவடிவுகொண்ட நூற்றெட்டு மங்கலங்களில் முதன்மையானது தீ. அனலோன் செல்லாத இடமொன்று உண்டா?” என்றான். உஜ்வலன் “ஆம், மெய்” என்றான்.

“இங்கே அனலோன் எழவேண்டும். அவன் உண்டவை நம் குடியினரின் உடல்கள். விண்புகும்வரை அவர்களை அனலவனின் பொன்னிற நாக்கே ஏந்தி வைத்துள்ளது என்பதே நூல்கூற்று” என்றான் சுகோத்ரன். “அங்கே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்தது ஒரு பெருவேள்வி என்கின்றனர் சூதர். எனில் இது மிகச் சிறிய வேள்வி. குருக்ஷேத்ரத்தில் விருந்துண்டு சலித்து மயங்கிக்கிடக்கும் அனலவனுக்கு வயிற்றை எளிதாக்கும் பொருட்டு அளிக்கும் இஞ்சிநீர்” என்றான் உஜ்வலன். சுகோத்ரன் வேள்விச்சாலையை நோக்கியபடி நடந்தான். “அங்கே களத்தில் ஒலித்த போர்க்கூச்சல்களும் சாவோலங்களும்கூட வேதச்சொற்களே என்று சூதன் ஒருவன் பாடினான்” என்றான் உஜ்வலன்.

சுகோத்ரன் ‘ஜாதவேதன்’ என்னும் சொல்லை அக்கணம் செவிகொண்டு மெய்ப்படைந்தான். வேதங்களில் பிறந்தவன். வேதங்களுடன் பிறந்தவன். வேதமெனப் பிறந்தவன். வேதன். தன்னைப் படையலிட்டுக்கொண்டவன். உண்பவன், உண்ணப்படுபவன். அவன் அச்சொல்லையே தன்னுள் ஊழ்கநுண்சொல் என சொல்லிக்கொண்டு நடந்தான். வேள்விச்சாலையை அணுகுந்தோறும் எரிமணம் நிறைந்த காற்று எழுந்து வந்து மூச்சை நிறைத்தது. அவன் முன்பும் ஒருமுறை அவ்வண்ணம் அதே வேள்விச்சாலையில் அதே உணர்வுநிலைகளுடன் சென்றதுபோல் உணர்ந்தான். முற்பிறவியில் எங்கோ.

வேள்விச்சாலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மூங்கில்வேலியின் வாயிலில் நின்றிருந்த காவலர்கள் தலைவணங்கி அவர்களை செல்லவிட்டனர். அவர்கள் சுடர்காட்ட வேள்விச்சாலை முகப்பில் நின்றிருந்த காவலர்கள் அவர்களை எதிர்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றனர். உள்ளே வேள்விக்குளங்களில் எரிந்த தழலின் ஒளி சூழ்ந்திருந்த அனைவரின் உடல்களையும் அனல்வடிவாகக் காட்டியது. அவர்களின் நிழல்கள் பெருகி எழுந்து கூரைமேல் அலைவுகொண்டன. பேருருவ தெய்வங்கள் எழுந்து குனிந்து அவர்கள் செய்யும் எரிசெய்கையை நோக்குவதுபோல.

வேள்விச்சாலைப் பொறுப்பாளரான சிற்றமைச்சர் ஸ்ரீமுகர் அவர்களை வணங்கி முகமன் உரைத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே அமைக்கப்பட்டிருந்த மூன்று எரிகுளங்களைச் சுற்றி அந்தணர்கள் அமர்ந்து நெய்யூற்றி எரியோம்பி வேதம் உரைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் பாண்டவர்கள் ஐவரும் தர்ப்பை விரிப்பின்மேல் அமர்ந்திருந்தார்கள். யுதிஷ்டிரன் கைகூப்பி கண்மூடி அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தழலின் கொழுந்தாட்டத்தை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தனர். தௌம்யர் தாமரைபீடத்தில் அமர்ந்து வேள்வித்தலைவராக வேள்வியை நிகழ்த்தினார்.

சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்களை சுகோத்ரன் முன்னர் கண்டதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தணர்கள். சிலர் படைத்தலைவர்களாக இருக்கலாமெனத் தோன்றியது. அவன் அவர்களுடன் அமர்ந்துகொள்ளப் போனபோது உஜ்வலன் “நீங்கள் அரசகுடியினருடன் சென்று அமரவேண்டும்… இங்கல்ல” என்றான். சுகோத்ரன் “அந்தணர் அழைக்காமல் செல்லக்கூடாது” என்றபடி அமர்ந்தான். தரையில் மூங்கில்பாய் போடப்பட்டிருந்தது. “நம்மை அங்கே கொண்டு அமரச்செய்ய யுயுத்ஸு கூறியிருக்கவேண்டும்… இது எவ்வகையிலும் முறையல்ல” என்றபடி உஜ்வலன் அமர்ந்தான்.

சுகோத்ரன் வேள்வித்தழலை நோக்கியபடி அமர்ந்திருந்தான். அது எழுந்து கிழிந்து துள்ளி பறந்தது. தயங்கி அமைந்து குளமாகியது. பக்கவாட்டில் சுழன்று எழுந்து மீண்டும் நெளிந்தாடியது. அதன் அசைவுகளை நோக்க நோக்க அது எதையோ சொல்லும் ஒரு நாக்கு என்ற எண்ணம் வந்தது. அந்த வேதப்பாடலுக்கும் அதற்கும் தொடர்பில்லை. அது வேறு எதையோ சொல்லிக்கொண்டிருந்தது. மிக மிகப் புதிரான ஒன்றை. மானுடன் இன்னமும் அறிந்திராத ஒன்றை. அது நடனம் அல்ல, அது உரையாடல்தான். உரையாடல் என்பது நாவின் நடனம்.

அனலவனே

முற்றிலும் எரிந்தமையா அவனை துயருறச்செய்யாதே

அவனுடைய உடலையோ தோலையோ சிதறடிக்காதே

வேதங்களுடன் பிறந்தவனே நீ அவனை தூய்மையாக்கு

அதன்பின் மூதாதையருக்கு அருகே அமர்த்து

வேதங்களின் துணைவனே

அவனை தூய்மையாக்கியபின் தந்தையரிடம் கொண்டுசெல்க

உயிர்கள் தோன்றும் இடத்திற்கே செல்கையில்

அவன் தேவர்களுக்குரியவன் ஆகிறான்

யுதிஷ்டிரன் விழிதிறந்து சூழ நோக்கியபோது அவனை கண்டார். அவருடைய உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன. அதை உணர்ந்தவர்போல ஸ்ரீமுகர் ஓடி சுகோத்ரன் அருகே வந்தார். மெல்ல குனிந்து “அரசர் உங்களை அங்கே வரச்சொல்கிறார்” என்றார். “எங்கே?” என்றான் சுகோத்ரன். “வேள்வியை இயற்றுபவர்களுக்குரிய இடத்தில், உங்கள் தந்தையர் ஐவருடனும் அமரும்படி சொல்கிறார்.” உஜ்வலன் கூர்நோக்கை சுகோத்ரன் மேல் பதித்து அமர்ந்திருந்தான். சுகோத்ரன் “இல்லை, என் உளம்கூடவில்லை என்று அவரிடம் கூறுக!” என்றான். ஸ்ரீமுகர் தலைவணங்கி அகன்றார்.

“இளவரசே” என அடக்கிய குரலில் உஜ்வலன் அழைத்தான். “அங்கு சென்று அமர்வதென்பது நீங்கள் இந்த அரசகுடியில் நீடிக்கிறீர்கள் என்பதற்கான சான்று. இங்கிருந்தே தொடங்குகிறது அனைத்தும்.” சுகோத்ரன் “என் உளம் கூடவில்லை. இன்னமும் அது அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது” என்றான். ஸ்ரீமுகர் யுதிஷ்டிரனிடம் பேசிவிட்டு மீண்டு வந்து “அரசர் நீங்கள் வருவது கடமை என அறிவிக்கச் சொன்னார். இது நீங்களும் அமர்ந்திருக்கவேண்டிய வேள்வி என்றார்” என்று சொன்னார். சுகோத்ரன் “அரசரிடம் சொல்க! நான் முடிவெடுத்துவிட்டேன் என்றால் உடனே அங்கே வந்தமர்வேன் என்று” என்றான். ஸ்ரீமுகர் “ஆம்” என தலையசைத்து திரும்பிச்சென்றார்.

“இது என்ன அறிவின்மை…” என்று உஜ்வலன் கொதிப்புடன் சொன்னான். “ஐயமே இல்லை. இது அறிவின்மை அன்றி வேறல்ல.” சுகோத்ரன் “நான் இன்னும் மறுக்கவில்லை” என்றான். “எனக்கு இன்னும் உள்ளிருந்து ஆணை வரவில்லை.” உஜ்வலன் “அதை அவர் மறுப்பாகவே எடுத்துக்கொள்வார்” என்றான். “அதன்பொருட்டு என் உள்ளம் அறிவிக்காத ஒன்றை நான் செய்ய முடியாது” என்றான் சுகோத்ரன். உஜ்வலன் சலிப்புடன் தலையை அசைத்தான். “நான் சொன்ன சொற்களெல்லாம் வீண் என்று உணர்கிறேன்… இங்கே நான் வந்திருக்கவே கூடாது.” சுகோத்ரன் அவனை திரும்பியே நோக்கவில்லை.

வேதம் முழங்கிக்கொண்டிருந்தது. புகை வேள்விப்பந்தலை மூடியிருந்தது. நீத்தோர் பல்லாயிரம் நுண்விழிகளுடன் வந்து வேள்விச்சாலையை நிறைத்திருந்தனர். ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் தலையசைத்து ஏற்றனர். ஒவ்வொரு நெய்க்கொடையையும் பொன்னிற நாநீட்டி பெற்றுக்கொண்டனர்.

விழிகள் கதிரவனைச் சென்றடைக!

காற்றைச் சென்றடைக மூச்சு!

நீ வாழ்ந்த வாழ்வுக்கு ஏற்ப

மண்ணுக்கோ சுடருக்கோ செல்க!

விண்ணின் தூய நீர்களில் திகழ்க!

அங்குள்ள தாவரங்களில்

நீ கொள்ளவிருக்கும் உடல்களுடன் நிலைகொள்க!

அனலோனே,

உடலில் பிறப்பில்லாத ஒன்று உறைகிறது

உன் வெம்மையால் அதை வெம்மைகொண்டு எழச்செய்க!

உன் தழலும் ஒளியும் அதை ஒளிகொள்ளச் செய்க

வேதங்களாகப் பிறந்தவனே

உன்னால் அழிக்கப்பட்ட அவனுடைய

மங்கலம்நிறைந்த உறுப்புகளுடன்

அவனை நல்லுலகுக்கு இட்டுச்செல்க!

கைகளக் கூப்பியபடி அமர்ந்திருந்த சுகோத்ரனின் விழிகளிலிருந்து நீர் வழிந்து கைகளிலும் மடியிலும் சொட்டிக்கொண்டிருந்தது. அவன் விழிநட்டு அந்தச் செஞ்சுடர் அலைவையே நோக்கிக்கொண்டிருந்தான். எவர் சொன்ன சொற்கள் இவை. எத்தனை தொன்மையானவை. அழிவற்றவை. என்றோ எவரோ சென்று முட்டிக்கொண்டிருக்கிறார்கள் இந்த மெய்மையில். அல்லது அன்னை குழவியை என அவர்களை மெய்மை அள்ளி எடுத்து நெஞ்சிலும் தலையிலும் சூடிக்கொண்டிருக்கிறது. முத்தமிட்டுச் சீராட்டியிருக்கிறது, மடியிலிட்டு முலையூட்டியிருக்கிறது.

தழலோனே

நீ வெம்மையாக்கி எரித்த

அனைத்தையும் மீண்டும் தண்மையாக்க வருக!

இங்கே நீராம்பல் மலர்க!

இளம்புல் செறிக. செடிகள் தழைத்தெழுக

குளிர்ந்தவளே ஈரநிலமே

பசும்புற்கள் நிறைந்தவளே இனிமையளிப்பவளே

பெண்தவளைகளுடன் இணைந்து இங்கே எழுக!

இந்தச் சுடரோனை மகிழ்விப்பாயாக!

மெல்ல மெல்ல வேதமும் அனலும் ஒன்றாயின. ஓம்புபவரும் நோக்குபவரும் அதன் பகுதியென்றாயினர். ஒரு தழல்வு மட்டுமே அங்கிருந்தது. மிகமிகமிகத் தொன்மையானது. எரிபடுபொருள் இன்றி தன்னையே தழலென்றாக்கிக்கொண்டது. முதல்முடிவற்றது. அதன் நா சுழல எழுந்த பொறிகளிலிருந்து புடவிகள், விண்மீன்கள், கோள்கள் எழுந்து தெறித்துச் சுழன்று பறந்து இருளில் மறைந்துகொண்டிருந்தன.