நீர்ச்சுடர் - 50
பகுதி ஏழு : தீராச்சுழி – 6
பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது. பதற்றத்துடன் எழுந்து நின்றாள். ஏவலன் புரவியிலிருந்து இறங்கி அருகே வந்து “வணங்குகிறேன், செவிலியே… முனிவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவள் “அரசியிடம் சொல்வதற்கு முன்னர் இளைய யாதவருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அதுதான் என் குழப்பம்… இவரை அழைத்துவரும் செய்தி இங்கே எவருக்கும் தெரியாது… நான் எங்கே கொண்டுசெல்வது?” என்றான் ஏவலன்.
பூர்ணை ஒருகணம் எண்ணிவிட்டு “நேராக கங்கைக்கரைக்கே கொண்டுசெல்லுங்கள். கங்கைப் படித்துறையில் அமரச்செய்யுங்கள்” என்றாள். “கங்கைப் படித்துறையிலா? இந்தப் பொழுதில் அங்கே…” என்று ஏவலன் தயங்க “முனிவர்கள் கங்கைப் படித்துறையில் இருப்பதில் விந்தை என ஏதும் தோன்றாது. இங்கு எங்கு அவர் இருந்தாலும் அது நோக்குகளை ஈர்ப்பதாகவே அமையும்” என்றாள். “எனில் நீங்களே அவரை அங்கே அழைத்துச்செல்லுங்கள். நான் சென்று இளைய யாதவரிடம் செய்தியை அறிவித்து வருகிறேன்” என்றான் ஏவலன். பூர்ணை அணுகிவந்த சகடத்தை நோக்கிவிட்டு “ஆகுக!” என்றாள்.
ஏவலன் புரவியில் ஏறி அகன்று சென்றான். அவள் கைகளைக் கூப்பியபடி நின்றிருக்க வண்டி அணுகியது. அதன் நுகத்தில் அமர்ந்திருந்த வண்டியோட்டி அவளைக் கண்டு தயங்க வண்டியை நிறுத்தும்படி அவள் கை காட்டினாள். வண்டி நின்றது. குதிரை செருக்கடித்து பிடரி சிலிர்த்துக்கொண்டது. வண்டியின் பின்பக்கத் திரையை விலக்கியபடி எட்டிப்பார்த்த சடைமுடித்தலைகொண்ட முனிவர் “எவர் என்னை எதிரேற்பது? நீ யார்?” என்றார். அவள் தொழுதபடி அருகணைந்து “நான் சிபிநாட்டு பணிப்பெண்ணான பூர்ணை. என் அரசியின் பொருட்டு தங்களை வணங்கி வரவேற்கிறேன்” என்றாள். “பணிப்பெண்ணா என்னை வரவேற்பது? என்னை அழைத்த யாதவ அரசர் எங்கே?” என்று அவர் கேட்டார்.
“பொறுத்தருள்க, தவத்தாரே! அவர் தங்களை இங்கே சந்திப்பது முறையாகாது என்று பட்டது. மங்கலம் பொலியும் இடங்களில்தான் அரசர்கள் தவமுனிவரை எதிர்கொள்ளவேண்டும் என்பது நெறி… இங்கே நீத்தார்ச்சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. சுற்றியிருப்பது காடு. ஆகவே என்ன செய்வதென்று தெரியவில்லை. கங்கை அழியா மங்கலம் கொண்டவள். ஆகவே தங்களை அவர் கங்கைக்கரையில் சந்திக்கலாம் என்று எண்ணினேன்… தங்களை அங்கே அழைத்துச்செல்லலாம் என்று காத்து நின்றேன்” என்றாள் பூர்ணை. “எனக்கு அவ்வகை மங்கலங்கள் ஏதுமில்லை. நான் செய்யும் தவம் வேறு” என்று விகிர்தர் சொன்னார். “எனினும் நன்று. அரசர்கள் தங்கள் மங்கலங்களை பேணிக்கொள்ளவேண்டும். அதுவே நிலம் பொலியச் செய்வது.”
பூர்ணை அவர் கால்கள் படிந்த நிலத்தைத் தொட்டு வணங்க அவர் அவளை தொடாமல் “நலம் சூழ்க!” என வாழ்த்தினார். “வருக, அறத்தாரே!” என அவள் அவரை அழைத்த பின் ஓடிச்சென்று புலித்தோல் சுருள் ஒன்றை எடுத்துக்கொண்டு கங்கைக்கரை நோக்கி இட்டுச் சென்றாள். அவள் கையசைக்க இளம் ஏவற்பெண்டு ஒருத்தி அவளைத் தொடர்ந்து வந்தாள். கங்கையின் அப்பகுதியில் ஓரிரு ஏவலர்கள் மட்டுமே தென்பட்டனர். அது குடில்களில் தங்கும் பெண்கள் நீராடும் படித்துறைகள் அமைந்த பகுதி. ஏவற்பெண்கள் முன்னரே நீராடிவிட்டிருந்தனர். மறுநாள் புலரிக்கான நீராட்டு தொடங்கப்படவில்லை. மரப்பலகைகள் இடப்பட்ட பாதை வழியாக அவள் அவரை அழைத்துச்சென்றாள். அவருடைய குறடுகள் பலகைகளில் உரசி ஓசையிட்டன. அவருடைய ஒரு கால் சற்று முடம்கொண்டதாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.
அவர் அரையிருளிலேயே வண்டியிலிருந்து இறங்கினார். பந்தஒளி நோக்கி தன் முகத்தை கொண்டுசெல்லவுமில்லை. ஆகவே அவள் அவரை நிழலுரு போலவே பார்த்தாள். அவருடைய அசைவுகளில் ஓர் ஒத்திசைவின்மை இருந்தது. அவர் ஒரு பந்த ஒளிப்பகுதியை கடந்தபோது நிழல் எழுந்து அவள் முன் தெரிந்தது. அதில் அந்தக் கோணல் மேலும் பெரிதாகத் தெரிந்தது. அவள் உள்ளம் ஒவ்வாமை கொண்டு குமட்டுவதுபோல் உடலே அதிர்ந்தது. அவர் மூச்சிரைத்து நின்று “நெடுந்தொலைவோ?” என்றார். “இல்லை, அருகேதான்” என்றாள். “நீர்ப்பரப்பின் ஒளி அதோ தெரிகிறது.” அவர் “இந்தப் பகுதியே இருண்டு கிடக்கிறதே?” என்றார். அவள் ஒன்றும் சொல்லாமல் நடந்தாள். “என் பேச்சுக்கு மறுமொழி இல்லாமலிருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் சொன்னார். “இங்கே சடங்குகள் ஏதுமில்லை, அறத்தாரே” என்றாள் பூர்ணை.
படிக்கட்டு கங்கைமேல் அறைந்து நிறுத்தப்பட்ட அடிமரங்களின்மேல் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தது. பூர்ணை அதை அடைந்து முதல் படிமேல் புலித்தோலை விரித்து “அமர்க!” என்றாள். அவர் அமர்ந்தபோது மீண்டும் அந்தக் கோணல் தெரிந்தது. அவருடைய ஒரு கால் குறுகலாக இருந்தது. அவள் அவரை கூர்ந்து நோக்க அஞ்சினாள். “தாங்கள் அருந்துவதற்கு…” என்று அவள் சொல்ல “இன்நீர்… உண்பதற்கும் ஏதாவது” என்றார். “இன்கிழங்குகள் உள்ளன” என்றாள். “ஊனுணவு வேண்டும்… நான் ஊனின்றி உண்பதில்லை” என்றார் விகிர்தர். அவள் “அவ்வாறே” என்றபின் தன்னை தொடர்ந்து வந்த ஏவற்பெண்டிடம் அவருக்கு ஊனும் இன்நீரும் கொண்டுவரும்படி ஆணையிட்டாள்.
“என்னை எதற்காக அழைத்தார்கள் என்று தெரியவில்லை. நான் இளைய யாதவரை ஒரே ஒருமுறை தண்டகாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன்” என்றார். “தாங்கள் நீத்தோருடன் பேசும் ஆற்றல்கொண்டவர் என்றார்கள்” என்றாள். “நீத்தோரிடமா?” என அவர் சிரித்தார். “நீத்தோர் அனைவரிடமும் அல்ல. நீத்து இங்கேயே முந்தைய வாழ்வின் நீட்சி என இருப்போரிடம் மட்டுமே. அவர்கள் உடல்நீத்தோர் மட்டுமே, பிறவிநீத்தோர் அல்ல. இங்கே அவ்வண்ணம் பலநூறுபேர் சூழ்ந்திருக்கிறார்கள்.” பூர்ணை மெய்ப்பு கொண்டாள். “இங்கா?” என சூழவும் நோக்கியபின் “இங்கு அருகிலா?” என்றாள்.
அவர் சற்றே சலிப்புற்ற குரலில் “இங்கென்றால், நாம் அவர்களை எண்ணும் இச்சூழலில் என்று பொருள். அவர்களுக்கு காலமும் இடமும் இல்லை. ஆகவே இங்கென்றும் அங்கென்றும் இல்லை. எண்ணியோர் அருகே இருக்க இயலும். இங்கிருக்கையிலேயே அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருக்க இயலும். ஆனால் அவர்கள் உடல்வாழ்வு கொண்டிருந்தபோது இருந்த இடங்களில் மட்டுமே திகழ இயலும்…” என்றார். அவள் பெருமூச்சுவிட்டாள். “பல்லாயிரவர். இங்கே மானுட வாழ்க்கை நிகழத்தொடங்கியபின் இத்தனை உயிரெச்சங்கள் இப்படி வெறும்வெளியில் தவித்து நிறைந்திருப்பதை நான் கண்டதில்லை… கொடியது இப்போர்” என்றார் விகிர்தர்.
இன்நீரும் ஊனுணவும் வந்தது. அவள் அதை வாங்கி அவருக்கு படைத்தாள். அவர் அதன் அருகே அமர்ந்து ஒரு கையை ஊன்றிக்கொண்டார். அவர் உடல் ஒருபக்கமாகச் சாய்ந்திருந்தமையால் அது தேவைப்பட்டது. மெல்லிய முனகலோசையாக நுண்சொற்களைச் சொல்லி ஊனுணவிலும் இன்நீரிலும் சற்று எடுத்து இடப்பக்கமும் வலப்பக்கமும் இட்டார். பின்னர் அள்ளி உண்ணத் தொடங்கினார். அவருடைய நாவோசை கேட்டுக்கொண்டிருந்தது. “மாபெரும் அழிவுகளில் இப்படி நிகழுமென அறிந்திருக்கிறேன். நகர் எரிகொள்கையில், நிலம் நடுங்குகையில், பெருவெள்ளத்தில்… வாழ்வோரால் கைவிடப்பட்டவர்கள் மூச்சுலகில் அலைமோதுவார்கள். இப்போது மூச்சுலகமே திணறும்படி நிறைந்திருக்கிறார்கள்” என்றார்.
“நீத்தார் அனைவரிடமும் நீங்கள் பேசக்கூடுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அவர்கள் இங்கே நீர்க்கடன் முடிக்கப்பட்டு நிறைவுகொண்டு ஃபுவர்லோகத்திற்குச் சென்றுவிட்டிருக்கக் கூடாது.” அவள் தாழ்ந்த குரலில் “சூதர் மைந்தர்களுமா?” என்றாள். “ஏன், அவர்களும் உயிர்கள் அல்லவா? அனைத்துயிரும் இச்சுழற்சியிலேயே உள்ளன. ஆனால் பிற உயிர்கள் உடலால் மட்டுமே வாழ்பவை, உள்ளம் உடலின் ஒரு பகுதியென்றே இயங்குபவை. உடலழிந்ததுமே உளம் அழியும் ஊழ்கொண்டவை. மானுடர் உள்ளம்செலுத்தி சித்தம்திரட்டி வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உடலுக்கு அப்பால் எழும் உள்ளம் உள்ளது. உடல் அழிந்த பின்னரும் அது காற்றில் வாழ்கிறது.”
அவர் கைவிரல்களை ஒவ்வொன்றாக நக்கினார். அவள் பெருமூச்சுவிட்டாள். “அவர்கள் நம்மிடம் பேசலாம், நாமும் அவர்களிடம் பேசலாம். இரு உலகுக்கும் நடுவே இருக்கும் அந்தப் படலத்தில் எண்ணியிராது கிழிசல் விழுமென்றால் அது நிகழும். ஆனால் அது தற்செயலாகத்தான் நிகழ்கிறது. மிஞ்சி எழும் உணர்வுகளின் விசையாலும் நிகழலாம். ஆனால் எளியோருக்கு அது எண்ணினால் இயல்வதல்ல” என்றார். “நான் அத்தொழில் கற்றவன். அதை யோகமெனப் பயிலலாம் என்று எண்ணினேன். அது இப்புடவிநெசவின் முடிச்சுகள் சிலவற்றை அவிழ்க்குமென கணக்கிட்டேன்.” அவர் எண்ணியிராக் கணத்தில் உரக்க நகைத்தார். “பின்னர் அறிந்தேன், அவ்வண்ணம் எவரும் இப்புடவிநெசவை அறிந்துவிடமுடியாதென்று. அறிந்து விடுபடுவதைப்போல் பிழையான எண்ணம் வேறொன்றில்லை.”
“பின்னரும் இதை ஏன் தொடர்கிறேன் என்று எண்ணுகிறாயா? அறிந்ததை உதறுவது எளிதல்ல. அதற்கு அறிந்தவை அனைத்தையும் அழிக்கும் பேருணர்வொன்று தேவையாகிறது. அத்திசை நோக்கி என்னால் செல்ல இயலவில்லை. அதற்குத் தடையாக இருப்பது என்ன என்று அறிவாயா?” அவர் சூழ இருந்த இருளை நோக்கி கைவீசி “இவர்கள்… இதோ என்னருகே நின்றிருக்கும் இச்சூத இளைஞன். துயர்கொண்டிருக்கிறான். பேசவிழைகிறான். அவனுக்கான நீர்க்கடனைச் செலுத்தவேண்டியவர் அவன் நீத்தான் என்றே அறியாமலிருக்கிறார்” என்றார். பூர்ணை கைநீட்டி ஒரு சொல் எடுத்து அவரை நோக்கிச்சென்று தன்னை இறுக்கிக்கொண்டாள். அவர் கங்கைநீரில் கைகளை கழுவிக்கொண்டார். கங்கையிலேயே நீரை காறி உமிழ்ந்தார்.
மேலே விளக்கொளி அசைந்தது. இளைய யாதவர் வந்துகொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சுபத்திரை வருவதை அதன் பின்னரே பூர்ணை கண்டாள். சுபத்திரை தன் தலைமேல் ஆடையை இழுத்துப் போர்த்தியிருந்தாள். இளைய யாதவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதுபோல அவ்வொளியில் தெரிந்தது. அது அவர் முகத்தின் இயல்பா? அன்றி நோக்குவோர் அதன்மேல் ஏற்றிவைக்கும் மாயையா? அவள் நோக்கிக்கொண்டே நிற்க விகிர்தர் “அவர்தான்… நான் அன்று நோக்கிய அதே வடிவில் இருக்கிறார்” என்று கூவினார். கங்கைவிளிம்பில் இருந்து மேலேறி வந்து கையை உதறியபடி “அவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. நீத்தாரிடம் பேச விழைகிறாரா? யாதவர்களில்தான் நீத்தார் மிகுதி. அவர்களைத் திரட்டி நீத்தாரால் ஒரு படைதிரட்ட எண்ணுகிறாரா?” என்றார்.
அவருடைய நகைப்போசை பூர்ணையை நடுங்கச் செய்தது. சுபத்திரை நின்றுவிட்டாள். இளைய யாதவர் சீராக காலடி வைத்து நடந்துவந்தார். அருகணைந்து “வணங்குகிறேன், விகிர்தரே… இத்தருணத்தில் மீண்டும் காண்போம் என அன்றே தோன்றியது” என்றார். “ஆம், அன்று சொன்னீர்கள். புதைந்ததை மீட்டெடுக்க மீண்டும் சந்திப்போம் என்று” என்றார் விகிர்தர். சுபத்திரையை நோக்கி திரும்பிய இளைய யாதவர் “சுபத்திரை, இவர் நான் கூறிய முனிவர். காலச்சுழிப்பை அறிந்தவர். கரைகளைக் கடக்கும் கலை தேர்ந்தவர்” என்றார். விகிர்தர் அதற்கும் பேரோசையுடன் நகைத்தார். சுபத்திரை அவரை முகம் சுளித்து நோக்கியபடி நின்றாள்.
பூர்ணை அப்போதுதான் அவரை முழுமையாக பார்த்தாள். அவர் உடலில் ஒரு பகுதி இன்னொரு பகுதியின் பாதியளவே இருந்தது. கால்கள், கைகள், தோள்கள் அனைத்திலுமே அந்த வேறுபாடு தெரிந்தது. முகமே அதனால் ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது போலிருந்தது. ஒரு கண் மிகச் சிறிதாக நோக்கில்லாத செந்நிறக் குழியாக தெரிந்தது. இளைய யாதவர் “முனிவரை வணங்குக!” என்றார். சுபத்திரை முன்னால் வந்து அவரை வணங்க “நிறைவுறுக!” என்றார். அவள் நிமிர்ந்து அவரை நோக்கி “களம்பட்ட என் மைந்தனிடம் பேச உங்களால் இயலுமா?” என்றாள். “அவன் இங்கே இருக்கவேண்டும்… அவனுக்கு நீர்க்கடன் அளிக்கப்பட்டுவிட்டதென்றால் ஃபுவர்லோகம் புகுந்திருப்பான். அங்கே என் குரல் சென்றடையாது” என்றார். “ஃபுவர்லோகத்தில் சிலர் நெடுங்காலம் இருப்பார்கள். சிலர் மறுகணமே கருவறை புகவும்கூடும்.”
“உங்களால் இயலுமா? மெய்யாகவே இயலுமா?” என்று கூவியபடி சுபத்திரை அவர் அருகே மண்டியிட்டாள். “என் மைந்தன் அபிமன்யுவிடம் நான் பேசவேண்டும். அவன் களம்பட்டான். அவனுக்கு நீர்க்கடன் செய்யப்படவில்லை. அவன் இங்குதான் இருக்கிறான். அவனிடம் நான் பேசவேண்டும். அவனிடம் ஒன்று சொல்லவேண்டும்.” விகிர்தர் அவளை இரக்கத்துடன் நோக்குவது போலிருந்தது. “சொல்க, உனக்கு அவனிடம் பேசவேண்டிய தேவை என்ன?” அவள் “நான் அவனிடம் சொல்லவேண்டியது ஒன்று உண்டு. அவன் இங்கே சிக்கிக்கொண்ட சூழ்கை ஒன்றைப்பற்றி… அவனால் அதிலிருந்து வெளியேற இயலவில்லை. அவன் அதை அறிந்தாலே போதும். அறியாமல் அவன் இப்பிறவி நீங்கக்கூடாது” என்றாள்.
“அறிக அன்னையே, நீத்தார் சுமந்து செல்லும் எடை என்பதே இப்பிறவியில் எஞ்சுவதுதான்! அணையாத் துயர்கள், எஞ்சும் வஞ்சங்கள், தவறிய கடமைகள், வளரும் பற்றுக்கள்… அறிவும் கூட சுமையே. குறைவான சுமையுடன் அவர்களை இங்கிருந்து அனுப்புவதே நாம் அவர்களுக்குச் செய்யும் நல்லுதவி” என்றார் விகிர்தர். “எடை மிகக்கொண்டு செல்பவர்கள் விரைந்து கருவறை புகுந்துவிடுகிறார்கள்.” சுபத்திரை சீற்றத்துடன் “நான் நற்சொல் கேட்க எவரையும் நாடவில்லை. என் மைந்தனிடம் பேச எனக்கு உதவ இயலுமா? அதைமட்டுமே கேட்டேன்” என்றாள். “உன் தமையன் என் நண்பர். அவருக்காகவே இதற்கு ஒப்புக்கொண்டேன். இது எளிய செயல் அல்ல. தெய்வங்களின் ஆணைக்கு அறைகூவலிடுவது” என்றார் விகிர்தர். “நான் அறைகூவலிடுகிறேன். நான் அத்தனை தெய்வங்களையும் அறைகூவுகிறேன்” என்று உடைந்த குரலில் சுபத்திரை கூறினாள்.
“நீ என் மகள் என எண்ணி இதை சொல்கிறேன். நீ அவனுக்கு பெருந்தீங்கு இழைக்கக்கூடும்” என்றார் விகிர்தர். “நான் அவனிடம் பேசியாகவேண்டும்…” என்று அவள் இரு கைகளையும் மேலே தூக்கி கூச்சலிட்டாள். “எதுவாயினும் சரி, அவன் சிக்கிக்கொண்ட அந்தச் சூழ்கை என்ன என்று அவன் அறியவேண்டும். வெளியேறும் வழியை அறிந்த பின்னரே அவன் இப்பிறவி முடித்து விண்ணேகவேண்டும். இல்லையென்றால் இச்சூழ்கை அடுத்த பிறவியிலும் தொடரும். அங்கும் வெளியேறவியலாது என் மைந்தன் சிக்கிக்கொள்வான்… அவன் அடுத்த பிறவியிலாவது விடுபட்டாகவேண்டும்.” விகிர்தர் “எண்ணிக்கொள்க, அது அத்தனை எளிதல்ல!” என்றார். “எனக்கு இனி சொற்கள் தேவையில்லை” என்றாள் சுபத்திரை.
“யாதவரே, உமது ஆணை என்ன?” என்று விகிர்தர் கேட்டார். “அவள் விழைவு அது. ஆகவேதான் உங்களை வரவழைத்தேன்” என்றார் இளைய யாதவர். அவரை சில கணங்கள் கூர்ந்து நோக்கியபின் “நீர் விளையாடுவதென்ன என்று எனக்கு மெய்யாகவே புரியவில்லை. ஆனால் எனக்கு வேறுவழியில்லை என்று மட்டும் தெரிகிறது…” என்றபின் சுபத்திரையை நோக்கி “ஒன்றைமட்டும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஒரே ஒரு முறைதான். அதற்குள் கூறவேண்டியதை கூறிவிட வேண்டும். பிறகு என்னிடம் எதையும் கோரக்கூடாது” என்றார். “இல்லை, ஒருமுறை போதும்” என்றாள் சுபத்திரை. அவர் “மீண்டும் இறுதியாகச் சொல்கிறேன், இது நன்றல்ல” என்றார். “அளிகூருங்கள், முனிவரே. உங்கள் அடிபணிந்து கோருகிறேன்” என்று அவள் கைநீட்டி அழுதாள்.
“சரி” என்றபின் அவர் கங்கையை நோக்கி கண்களை மூடி ஊழ்கத்தில் அமர்ந்தார். தவிப்புடன் அவரைப் பார்த்தபடி சுபத்திரை அருகே அமர்ந்தாள். பூர்ணை பெருமூச்சை அடக்கிக்கொண்டாள். மார்பில் கைகளைக் கட்டியபடி இளைய யாதவர் அப்பால் நின்றார். கங்கை கரிய நெளிவென ஒழுகிக்கொண்டிருந்தது. நீண்ட பெருமூச்சுடன் விகிர்தர் கண்களை திறந்தார். சுபத்திரையை நோக்கி “உன் மைந்தனுக்கு நீர்க்கடன் அளித்தாகிவிட்டதே, அரசி. அவன் இப்போது இங்கே இல்லையே” என்றார். “யார்?” என்று அவள் அலறினாள். “இல்லை. நீர்க்கடன் இதுவரை அளிக்கப்படவில்லை. என் மைந்தனுக்கு எவரும் நீர்க்கடன் அளிக்கவில்லை.” மறுகணம் என்ன நடந்தது என்று அவளுக்குப் புரிந்தது. இளைய யாதவரை நோக்கி கைநீட்டி “அவர் அதை செய்திருக்கிறார். உங்கள் தோழர் அதை செய்திருக்கிறார். என்னை தோற்கடிக்க அவர் அதை செய்திருக்கிறார்” என்று கூவினாள்.
விகிர்தர் “ஆம், அவர் அதை செய்யக்கூடியவரே” என்றார். “என்ன செய்வது? முனிவரே, என்ன செய்வது? என் மேல் இரக்கம் கொள்ளுங்கள். எனக்கு ஒரு வழிகாட்டுங்கள்” என்று சுபத்திரை அழுதாள். “பொறு” என்றபடி விகிர்தர் மீண்டும் கண்களை மூடினார். சுபத்திரை தவிப்புடன் இளைய யாதவரை பார்த்தாள். விகிர்தர் கண்களை மூடி “நீர்க்கடன் முடித்து நெடும்பொழுது ஆகவில்லை. ஃபுவர்லோகத்தில் வாழ்பவர்களிடம் நாம் உரையாட இயலாது. ஆனால் நம் சொற்கள் சிலவற்றை அவர்களுக்கு அனுப்பிவிடமுடியும்” என்றார். கங்கை நீரில் இறங்கி கரையோரம் மலர்ந்துகிடந்த தாமரைகளையும் குவளைகளையும் பார்த்தபடி நின்றார். பின்னர் திரும்பி “உன் மைந்தன் ஏறும் கருபீடம் ஒருங்கிவிட்டது. அவன் அங்கே நிகழவிருக்கிறான்” என்றார்.
“எங்கே? எந்த வயிற்றில்?” என்று கை கூப்பியபடி பதறிய குரலில் சுபத்திரை கேட்டாள். “அது எவருக்கும் தெரியாது. மனிதனா மிருகமா பறவையா புழுவா என்று கூடக் கூற முடியாது” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, இப்போது என்ன செய்வது? எனக்கு ஒரு ஆறுதல் சொல்லுங்கள். என் மைந்தனிடம் ஒரு சொல்லேனும் நான் உரைக்கவேண்டும். இச்சூழ்கையின் மந்தணத்தை மட்டுமாவது சொல்லிவிடவேண்டும்” என்று சுபத்திரை சொன்னாள். “ஆத்மா தனக்குரிய முதல் உயிரணுவாகிய பார்த்திவப் பரமாணுவை ஏற்று அதனுடன் இணைவதுவரை வாய்ப்பிருக்கிறது. இணைந்துவிட்டால் இப்பிறவியுடனான அதன் தொடர்பு முற்றிலும் அறுந்துவிடும். பார்ப்போம்…”
விகிர்தர் நீரில் இறங்கி ஒரு தாமரை மலரை பறித்தார். அதை எடுத்து வந்து நெஞ்சோடணைத்து அவளிடம் நீட்டினார். “இதோ பார். இதில் உன் மைந்தன் இருக்கிறான்” என்றார். அவள் அதை வாங்கிக்கொண்டு அமர்ந்து மடியில் வைத்து குனிந்து கூர்ந்து நோக்கினாள். அந்தத் தாமரைப்பூவின் மகரந்த பீடத்தில் இரு சிறு வெண்புழுக்கள் நெளிந்தன. மெல்லிய நுனி துடித்து துவண்டு உந்த அவை நீந்தி நகர்ந்தன. “இது என் மாயக்காட்சி. உன் மகன் இருக்கும் கரு இந்த மலர். இதிலொன்று உன் மைந்தன். நீ அவனிடம் பேசு. ஆனால் இந்தத் தாமரை கூம்பிவிட்டால் பிறகு எதுவும் செய்யமுடியாது.” சுபத்திரை அதை கூர்ந்து நோக்கி மேலும் குனிந்தாள். “இதில் என் குழந்தை யார், ஆசிரியரே?” என்றாள். “இதோ இந்தச் சிறு வெண்புழு. அவர்கள் இரட்டையர்கள்” என்றார் விகிர்தர்.
சுபத்திரையின் முகம் மலர்ந்தது. உவகையால் எழுந்த பதற்றம் அவள் கைகளை நடுங்கச்செய்தது. எண்ணங்கள் எழாமல் முகம் உறைந்து உதடுகள் அசைவிழந்து விழிகள் நிலைத்து அமர்ந்திருந்தாள். பூர்ணை அந்தப் புழுவை நோக்கினாள். பட்டுத் தொட்டிலில் கைகால் உதைத்து நெளியும் சிறு மகவு போலிருந்தது. விகிர்தர் “விரைவு” என்றார். சுபத்திரையிடம் பேச்சே எழவில்லை. “பேசு பேசு” என்றார் விகிர்தர். “அபிமன்யு” என்று அவள் அழைத்தாள். தொண்டை அடைக்க “மைந்தா, அபிமன்யு” என்றாள். அந்தச் சிறு புழு அசைவற்று நின்றது. பிறகு அதன் தலை மேல்நோக்கி உயர்ந்தது. சிவந்த புள்ளிகள்போல அதன் கண்களை பூர்ணை கண்டாள்.
சுபத்திரையிடமிருந்து ஒரு விம்மலோசை வெளிப்பட்டது. “பேசு பேசு” என்று விகிர்தர் அதட்டினார். திடீரென்று அந்த இன்னொரு புழுவை சுபத்திரை பார்த்தாள். “ஆசிரியரே, இது யார்? அவனுடைய இரட்டைச் சகோதரன் யார்?” என்றாள். “அது எதற்கு உனக்கு? நீ உன் குழந்தையிடம் கூற வேண்டியதைக் கூறு” என்றார் விகிர்தர். “இல்லை. நான் அதை அறிந்தாக வேண்டும். அவன் யார்?” என்று அவள் கூவினாள். விகிர்தர் அலுப்புடன் “நீ தேவையற்றதை அறிய விழைகிறாய். அது ஊடுருவல். மானுடருக்கு அந்த உரிமை இல்லை” என்றார். “அவன் யார்? என் மைந்தனின் ஒற்றைக்குருதியினன் யார்? எனக்குத் தெரிந்தாகவேண்டும்” என்று அவள் கூச்சலிட்டாள்.
விகிர்தர் “என்ன இது, யாதவரே?” என்றார். “கூறுக!” என்றார் இளைய யாதவர். அவரை ஒருகணம் நோக்கிவிட்டு “நன்று, எனில் கூறுகிறேன்” என்றார் விகிர்தர். “அவன் பெயர் பிருஹத்பலன். கோசல மன்னனாக இருந்தவன்.” சுபத்திரை திகைத்து “கோசல மன்னனா? என் மகனால் போர்க்களத்தில் கொல்லப்பட்டவனா?” என்று கூவினாள். “ஆம். அவர்கள் இருவருக்கும் இடையே மாற்ற முடியாத ஓர் உறவு பிறவிகள்தோறும் தொடர்கிறது. அதன் தொடர்ச்சியை எவரும் அறிய முடியாது. நீ உன் குழந்தையிடம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடு” என்றார் விகிர்தர்.
“அடுத்த பிறவியில் என்ன நிகழப்போகிறது?” என்றாள். “அது உனக்கு எதற்கு?” என்று விகிர்தர் எரிச்சலுடன் சொன்னார். சுபத்திரை “அபிமன்யு! அது கோசல மன்னன் பிருஹத்பலன். உன்னால் கொல்லப்பட்டவன். உன் இரட்டைச் சகோதரன் உன் எதிரி. மைந்தா, எச்சரிக்கை கொள். அவன் உன் எதிரி” என்று கூவினாள். விகிர்தர் சினத்துடன் “என்ன பேசுகிறாய் நீ?” என்று கூவினார். சுபத்திரை களைப்புடன் மூச்சிரைத்தாள். தாமரைச்சூழ்கை பற்றி அதுவரை கூறவில்லை என்று உணர்ந்தாள். “அபிமன்யு, இதோ பார். பத்மவியூகம்தான் உன் ஊழின் புதிர். அதிலிருந்து வெளியேறும் வழியை கூறுகிறேன்” என்றாள்.
ஆனால் தாமரை இதழ்கள் கூம்பத்தொடங்கின. “அபிமன்யு! அபிமன்யு!” என அவள் கூவிக்கொண்டே இருந்தாள். தாமரையை உலுக்கி திறக்க முயன்றாள். அது இறுகிய கைவிரல்கள் என மூடிவிட்டது. “ஆசிரியரே…” என்று கூவியபடி அதை பிரிக்க முயன்றாள். “பயனில்லை, அரசி. அவன் சென்றுவிட்டான்” என்றார் விகிர்தர். “ஆசிரியரே, என்னை காத்தருள்க! எனக்கு அருள்க!” என்று கதறியழுதபடி அவர் காலில் விழுந்தாள் சுபத்திரை. “எனக்கு அளிகூருக! என் குழந்தையிடம் மேலும் ஒரு சொல் பேசிக் கொள்கிறேன்… மேலும் ஒரு சொல்… ஒரே ஒரு சொல்!” என்று அவர் பாதங்களை பற்றிக்கொண்டாள்.
விகிர்தர் அவள் கைகளை மெல்ல உதறிவிட்டு அப்பால் நடந்தார். இளைய யாதவரை ஒருகணம் நோக்கி நின்றார். அவர் முகத்தில் ஒரு தவிப்பு தெரிந்தது. இளைய யாதவரின் முகம் புன்னகை மாறாமல் அப்படியே இருந்தது. சுபத்திரை கால் தளர படிகளில் அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து கதறிக் கதறி அழுதாள். இளைய யாதவர் அருகே சென்று குனிந்து அவள் தோளில் தன் கையை வைத்தார். “மூத்தவரே, அபிமன்யு… என் குழந்தை அபிமன்யு” என்று அவள் ஏங்கினாள். “வா, போகலாம். இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார் இளைய யாதவர். “என் குழந்தைக்கு இப்போதும் வெளியேறும் வழி தெரியவில்லையே. தன் ஊழின் புதிரை சுமந்தபடி அவன் போகிறானே. நான் பழிகாரி, நான் கீழ்மகள், நான் இழிந்தோள்!” என்று சுபத்திரை கதறினாள்.
இளைய யாதவர் அவளைத் தூக்கி எழுப்பினார். “வா. அழுது என்ன பயன்?” “என் குழந்தைக்கு அவன் விதியிலிருந்து மீளும் வழி தெரியவில்லையே” என்றாள் சுபத்திரை. “எவருக்குத் தெரியும் அது? உனக்குத் தெரியுமா? வழி தெரிந்தா நீ உள்ளே நுழைந்தாய்?” என்றார் இளைய யாதவர். அவள் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. “என் குழந்தையின் ஊழ்தான் என்ன? அடுத்த பிறவியில் அவனுக்கு என்ன நேரிடும்?” இளைய யாதவர் புன்னகைத்து “தெரியவில்லை. ஆனால் அதன் தொடக்கம் மட்டும் இன்று தெரிந்தது” என்றார். “எப்படி?” என்று அவள் அவரைத் தொடர்ந்து ஓடியபடி கேட்டாள். இளைய யாதவர் “நான் அறியேன், சுபத்திரை. மெய்யுரைக்கவேண்டும் என்றால் நானும் இச்சூழ்கையில் சிக்கியிருப்பவனே…” என்றார்.
சுபத்திரை திகைத்தவள்போல நின்றுவிட்டாள். இளைய யாதவர் மேலே ஏறிச்சென்று ஏவலரிடம் முனிவரை அனுப்பும்படி கைகளால் ஆணையிடுவதை பூர்ணை கண்டாள். அருகே சென்று சுபத்திரையின் தோள்களைப் பற்றி அணைத்துக்கொண்டாள்.