நீர்ச்சுடர் - 44
பகுதி ஆறு : விழிக்குமிழிகள் – 5
விதுரருடன் நடந்தபோது சகதேவன் தன் உள்ளம் ஒழிந்து கிடப்பதை உணர்ந்தான். ஒரு நினைவு கூட இன்றி, அடுத்த கணம் குறித்த ஒரு துளி எண்ணம் கூட இன்றி, வெறுமனே மின்னிக்கொண்டிருந்த இலைப்பரப்புகளையும், மரக்கூட்டங்களையும், ஒளி எழத் தொடங்கியிருந்த வானையும், எழுநிழல்களின் மேல் அமர்ந்திருந்த கூழாங்கற்களையும், பல்லாயிரம் பாதச்சுவடுகளாக விரிந்திருந்த செம்மண் நிலத்தையும் பார்த்துக்கொண்டு நடந்தான். அன்று காலை எழுந்த பின்னர் அத்தனை நிகழ்வுகள் ஒன்றன்மேல் ஒன்றென விழுந்து உள்ளத்தை அழுத்தி நிறைத்த பின்னரும் அவ்வெறுமை எழுந்தது வியப்புக்குரியது என்று தோன்றியது.
ஒன்று பிறிதொன்றை நிகர் செய்து இன்மையென்று ஆகிவிட்டதா என்று எண்ணினான். எண்ணங்களினூடாக பின்னால் சென்று காலை எழுந்தது முதல் நிகழ்ந்தவற்றை திரட்டிக்கொள்ள முயன்றான். நிகழ்ந்தவை அனைத்தும் ஒற்றைப் பெரும்பரப்பென கலந்துவிட்டிருந்தன. அவற்றின் முடிவிலாச் சுழியிலிருந்து எந்த ஒரு நிகழ்வையும் பிரித்தெடுக்க இயலாதென்று தோன்றியது. விதுரர் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து நடந்தார். அவருடைய நிழல் நீண்டு அவன் முன்னால் விழுந்தது. அதை மிதிக்கலாகாதென்று விலகி அவன் மறுபக்கத்தை அடைந்தான். அவ்வசைவை உணர்ந்து அவர் திரும்பிப்பார்த்து பின்னர் விழிகளை திருப்பிக்கொண்டார்.
அந்நோக்கில் ஏதோ ஒன்று தட்டுப்பட அவன் உள்ளம் விழித்தெழுந்தது. அதுவரை இருந்த இன்மை அகன்றதும் அதுவே ஊக்கத்தை அளிக்க அந்நோக்கில் இருந்ததென்ன என்று அவன் கூர்ந்தறிய முயன்றான். விதுரர் தோள்களைக் குறுக்கி நடந்ததும் யுதிஷ்டிரனின் சாயல் ஒன்று எழுந்தது. சிற்றடிகள், விசை கொண்ட உடலசைவுகள். அவர் தன்னை நோக்கியபோது எதையோ வினவ சொல்லெழுந்து அக்கணமே அடங்கியதுபோல் தோன்றியது. ஒருவர் ஓர் எண்ணத்தை உள்ளத்தில் அடக்கிக்கொள்ளும்போது அதை உடல் எப்படி தெளிவாக வெளிக்காட்டுகிறது என்பதை எண்ணி அவன் வியந்தான். விதுரர் அதை கேட்கப்போவதில்லை. எழுந்த ஓர் எண்ணத்தை அடக்குவாரெனில் எக்கணமும் விழித்து அதில் விழிப்புடன் இருக்கிறார் என்று பொருள். எழும் எண்ணத்திற்கு நிகராக பிறிதொரு எண்ணம் ஒருங்கி நின்றிருக்கிறது.
அவர் ஒருபோதும் அதை சொல்லாக்கிக் கொள்ளப்போவதில்லை. அது என்ன என்று அவன் எண்ணி, மேலே மேலே சென்று சலித்து, பின்னர் நின்றான். அக்கணத்தில் விதுரர் இயல்பாக “அன்னை எவ்வண்ணம் இருக்கிறார்?” என்றார். அக்கணமே அனைத்தும் தெளிவாக விரிய, அவன் நடை தளர்ந்தான். அவர் அவன் இரண்டடி பின்னகர்ந்ததை உணராமல் நடந்துகொண்டிருந்தார். விரைவுகொண்ட காலை எடுத்து வைத்து அவன் அருகணைந்து “அன்னை தன்னிலையில் இல்லை. அவ்விழப்பிலிருந்து அவர் மீளவே இல்லை” என்றான். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவருடைய நடையின் விசை குறையவுமில்லை.
அவர் எதிர்பார்ப்பதென்ன என்று அவனுக்குத் தெரியவில்லை. “நான் அறிந்த நாளிலிருந்தே அன்னை எப்பொழுதும் ஓர் ஆடலில்தான் இருந்தார். துயில்கையிலும் நாற்களத்தில் கரு நீக்கிக்கொண்டிருப்பார் என்று அவரைப்பற்றி மூத்தவர் கூறினார். அது உண்மை” என்றான். விதுரர் அச்சொற்களை கேட்டதாகவே தெரியவில்லை. அது அவனை சீண்டியது. அவர் நின்று திரும்பி நோக்கி எதையாவது சொல்லவேண்டும் என்று எண்ணினான். அவரிலிருந்து பிறிதொரு சொல்லை பெயர்த்தெடுக்கும் கூர்மை கொண்ட ஒன்று தேவை. அவ்வாறு எண்ணியதுமே அது நினைவில் எழுந்தது. எப்பொழுதும் அத்தகைய படைக்கலங்கள் முன்னரே உள்ளங்களில் ஒளிந்திருப்பதை அவன் கண்டிருந்தான். தேவையானபோது உரிய பழிச்சொல்லோ இழிசொல்லோ நாவிலெழாத எவரேனும் இப்புவியில் இருக்கமுடியுமா என்ன?
அவன் அவ்வெண்ணத்தை ஒரு நச்சுப்படைக்கலத்தை ஆடைக்குள் கரந்திருப்பதுபோல் உணர்ந்தான். அவனிடமிருந்த வெறுமை அனைத்தும் அகன்றது. உள்ளம் ஆழத்தில் ஒரு மெல்லிய உவகையைக் கொண்டு தத்தளித்தது. “அன்னை கொண்டிருந்த விழிகளை நான் நினைவுகூர்கிறேன். நாங்கள் இளையோராக இருக்கையில் சௌவீரத்தின்மீது படையெடுத்துச் சென்றோம். சௌவீர மணிமுடியுடன் மூத்தவர் திரும்பி வந்தார். அவரை எதிர்கொள்வதற்காக அன்னை கோட்டை முகப்பிற்கு வந்திருந்தார். மூத்தவர் அப்போது என்ன எண்ணினார் என்று அறியேன், மணிமுடியை அன்னையின் காலடியில் வைத்தார். அன்னை பெருமிதத்துடன் சிரிக்க அவர் அதை எடுத்து அன்னையே இந்த மணிமுடியை சூடுக என்று அளித்தார். அன்னை என்ன செய்கிறாய், அறிவிலி, வேண்டாம் என்று கூவினார். பீமசேனன் அன்னையின் கைகளை பற்றிக்கொள்ள அவர் திமிறி கைவிலக்கி அந்த மணிமுடியை தள்ளிவிட முயன்றார். ஆனால் அன்னையின் விழிகள் ஒளிகொண்டிருந்தன” என்றான் சகதேவன். அவரிடம் எந்த அசைவும் வெளிப்படவில்லை. ஆனால் அச்சொற்கள் சென்றடைவதை அவனால் உணர முடிந்தது.
“மூத்தவர் பின்னர் ஒருமுறை அவருடைய உளநிலையை சொன்னார். அன்னை நாணி மறுத்து சிரித்து பின்னடைவார் என்று எதிர்ப்பார்த்தார். அது எனக்கு அப்போதே தெரியும். அறிவிலி வேண்டாம் விலகு என அன்னை சொன்னபோது அவர் உடல் அறியாது எழுந்து முன்னணைந்தது. அதிலொரு மலர்வு தெரிந்தது. தலையில் அணிந்திருந்த வெண்ணிற ஆடை பின்னால் சரிந்தது. மூத்தவர் அந்த மணிமுடியை அவருக்குச் சூட்டினார். அன்னை அதை தன் தலையில் சூடி இரு கைகளாலும் பற்றிக்கொண்டு விழுந்துவிடப்போகிறது மூடா என்று கூவினார். மெல்லிய பொற்கம்பிகளைக்கொண்டு பின்னி அதில் செங்கழுகின் இறகுகளை சீராகப் பொருத்தி செய்யப்பட்டிருந்த அந்த மணிமுடியை நினைவுகூர்கிறேன். நகர்மக்கள் வெற்றிக்குரல் எழுப்பி மலர்களை அள்ளி அவர்கள் மேல் வீசினர். சூழ்ந்து பொங்கிய உணர்ச்சிப்பெருக்கால் அன்னையும் கொண்டுசெல்லப்பட்டார். இரு கைகளையும் தூக்கி சௌவீர மணிமுடியை நெற்றிமேல் நன்றாக அணிந்து நிமிர்ந்த தலையுடன் அன்னை தேர்த்தட்டின்மீது நின்றார்.”
“நகருலாவின்போது அன்னை அந்த மணிமுடியை அடிக்கடி கையால் சீரமைத்துக்கொண்டே இருந்தார். நான் அருகே சென்றதும் அதை நன்கு பொருத்தி என் தலைக்கு சரியாக பொருந்துகிறது என்றார். அப்போது அவர் முகத்திலிருந்தது சிறுமிக்குரிய கூச்சமும் உவகையும் கொண்ட நகைப்பென்று அன்று தோன்றியது. பின்னர் அவ்வுள ஓவியம் மங்கலாகி கரைந்தழிய அக்கண்கள் மட்டும் அவ்வாறே நினைவில் உள்ளன. அக்கண்களைத்தான் அன்னை எப்போதும் கொண்டிருந்தார். எத்துயரிலும் அவை மணிமுடி சூடிய கண்கள்தான்” என்று சகதேவன் சொன்னான். சொல்லச்சொல்ல அந்நினைவுகளால் அவன் கொண்டுசெல்லப்பட்டான். “அன்று தாங்களும் அங்கிருந்தீர்கள் என அறிவேன். அன்னை மணிமுடி சூடியது அன்று அஸ்தினபுரியில் ஒரு கசப்பை உருவாக்கியது. உண்மையில் இந்த வஞ்சமும் பகைமையும் அன்று உருவானவை என்பார்கள்.”
“அன்று அன்னை எதையோ ஒன்றை வெளிக்காட்டிவிட்டார். அது எப்போதும் அவர் விழிகளில் இருந்தது. அன்றுதான் அவர்கள் அதை ஐயமற உணர்ந்தனர்” என்று சகதேவன் சொன்னான். விதுரரின் நடையில் மாற்றம் எதுவும் வரவில்லை. அவர் முகத்தை முன்னால் சென்று நின்று பார்க்கவேண்டும் என்று அவன் விழைந்தான். ஒருவர் தன் முகத்தை திருப்பிக்கொண்டாலும் அவர் உடல் முகமாக மாறி உணர்வுகளை அதுவே காட்டும். ஆனால் அப்போது உடலும் திரைகொண்டிருந்தது. அவன் “நாங்கள் காடுகளில் அலைந்திருக்கிறோம். வறண்ட பாலையில் உணவும் நீருமின்றி மயங்கியிருக்கிறோம். எத்தனையோ நாட்கள் மறுநாள் என்ன செய்வோம் என்று அறியாது இரவை கழித்திருக்கிறோம். எப்போதும் அன்னை கொண்டிருந்தவை அவ்விழிகளே” என்று தொடர்ந்தான்.
“அந்த அன்னை இன்றில்லை, அமைச்சரே. இங்கு வந்தபின் ஒருமுறை அன்னையை சென்று கண்டேன். அன்னை இப்போதெல்லாம் விழித்திருப்பதே இல்லை. விழிப்பு கொண்டதுமே இடமுணர்ந்து, தன்னிலை கொண்டு எழுந்தமர்ந்து இரு கைகளையும் விரித்து கூச்சலிட்டு அழத் தொடங்கிவிடுகிறார். நெடுநாட்களாக போதிய உணவின்றி இருப்பதனால் உடல் மெலிந்து, தசைகள் வற்றி, கைகால்கள் வலிப்புகொண்டவைபோல் இழுத்துக்கொண்டுள்ளன. விரல்கள் ஒன்றுக்கு மேல் ஒன்று ஏறியிருக்கின்றன. சொற்களில் பொருளும் இசைவும் அகன்றுவிட்டன. வெற்றொலியாக கூச்சலிட்டு உதடுகளை பற்களால் இறுகக்கடித்து குருதி வார விழுந்து மீண்டும் வலிப்புகொள்கிறார். உடனே மீண்டும் அகிபீனா அளிக்கப்படுகிறது. நான் குடில் வாயிலில் நின்று அன்னை அகிபீனாவை அருந்துவதை ஒருமுறை கண்டேன். கரைவந்த மீனின் தவிப்பு அவர் உடலில் இருந்தது. மூச்சுக்குத் துள்ளும் மீனென அவர் வாய் திறந்து மூடியது. அவ்விழிகள் நானறிந்த அன்னையுடையவை அல்ல. அவை இறந்த உடலில் உறைந்தவை எனத் தெரிந்தன.”
விதுரர் நின்று திரும்பி நோக்கி அவனிடம் ஏதோ சொல்ல நாவெடுத்தார். அவன் அவர் விழிகளை நோக்கி “தாங்கள் விழைந்தால் அன்னையை பார்க்கலாம், அமைச்சரே” என்று சொன்னான். விதுரர் விழி திருப்பிக்கொண்டார். அவன் மேலுமொரு அணுவிடை முன்னகர விழைந்தான். அக்கணமே அதற்கான நினைவு எழுந்தது. “முன்பொருநாள் தாங்கள் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் உடனிருந்தேன்” என்றான். “அன்று தங்களைக் கண்டதும் அன்னை உளம் உடைந்து அழுததை நினைவுகூர்கிறேன். அன்னை அவ்வண்ணம் எவருமிலா பெண்ணென அழ முடியுமென்பதை அன்றுதான் கண்டேன். அன்று அவர் அழுதபோதும் அரசியென்றே இருந்தார். விழிகளில் ஒருகணமும் தணிவு எழவில்லை” என்றான்.
விதுரரின் விழிகள் மாறின. “அன்று உடனிருந்தவன் நகுலன்” என்றார். “ஆம், ஆனால் நாங்கள் ஒருவரே” என்று சகதேவன் தொடர்ந்தான். “அன்னை அன்று மீளும்போது முகம் தெளிந்து புன்னகை செய்துகொண்டிருந்தார்.” விதுரர் தலைகுனிந்து அசையாமல் நின்றார். அவன் சற்றே முன் சென்று திரும்பி அவர் முகத்தை பார்த்தான். அவர் ஏதேனும் சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்தான். பின்னர் “தாங்கள் விரும்பினால் அன்னையை சந்திக்கலாம், நான் அழைத்துச்செல்கிறேன்” என்றான். “வேண்டியதில்லை” என்று விதுரர் கூறினார். “ஒருவேளை அன்னை தங்களிடம் எதையேனும் சொல்லக்கூடும்” என்று அவன் கூறினான். இல்லை என்பதுபோல் தலையசைத்து விதுரர் திரும்பி நடந்தார்.
அவன் உடன் நடந்தபோது தனக்குத்தானே என புன்னகைத்துக்கொண்டான். அவர் நடை முற்றாக மாறிவிட்டிருந்தது. திருதராஷ்டிரரின் குடிலுக்குள்ளிருந்து வெளிவந்த போதிருந்த தற்கோப்பு முழுமையாக அழிந்து உள்ளம் பல திசைகளிலாக சிதறிப் பரவ, இலக்கில்லாதவர்போல் நடந்தார். காற்றில் அலைவதென கைகள் சுழன்றன. தன் குடில் வாயில் வரும்வரை அவர் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. குடிலுக்கு முன் நின்று அவர் விடைகோரும்பொருட்டு தலையசைத்தார். அவனும் தலைவணங்கி முன்னகர்ந்தான். குடில் முகப்பில் அவருடைய ஆணைக்காக ஏவலர்கள் காத்திருந்தனர். விதுரர் “மைந்தா” என்று பின்னால் அழைத்தார். அவன் திரும்பிப்பார்த்தான். “சற்று உள்ளே வந்து செல்க!” என்றார்.
அவர் உள்ளே நுழைய அவனும் உள்ளே நுழைந்தான். அங்கிருந்த ஏவலரிடம் தலையசைவால் வெளியேறும்படி ஆணையிட்டுவிட்டு விதுரர் தன் மஞ்சத்தில் அமர்ந்தார். அவன் எதிரே நின்றுகொண்டிருக்க “அமர்க!” என்று கைகாட்டினார். அவன் தயங்கி பின்னடைந்து தாழ்வான மஞ்சத்தில் அமர்ந்தான். அவர் கூறப்போவதென்ன என்பதை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். அத்தருணம் அவனால் உருவாக்கப்பட்டது. சதுரங்கத்தில் நாற்களத்தில் கருக்களை நகர்த்தி எதிரி கருவை திரும்ப முடியாத முனை மடிப்பு வரை கொண்டு சென்று நிறுத்துவதுபோல. அத்தகைய தருணங்களில் மானுடர் எவ்வண்ணம் செயல்படுகிறார்கள் என்பது அவர்களை காட்டுகிறது. எத்திசையிலும் நகர இயலாதென்று உணரும்போது பெரும்பாலானவர்கள் சீற்றம் கொண்டு தங்கள் நிறைநிலை அழிந்து சொல் தெறிக்கவிடுவார்கள். சிலர் உடைந்து மடிந்து அழுவார்கள். சிலர் ஆழந்த அமைதிகொள்வார்கள். மூன்றுமே அத்தருணத்தை தவிர்ப்பதற்கான வழிகள். அத்தருணத்தில் எழும் மாற்றமுடியாமை ஒன்றை உணர்பவர் சிலரே.
மெய்மையை மானுடர் தேடிக்கொண்டிருப்பதில்லை. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் எதையோ ஒன்றை வைத்து அகற்றவே முயல்கிறார்கள். ஏதேனும் ஒரு வழியினூடாக அதிலிருந்து தப்பிச் செல்லவே தவிக்கிறார்கள். தவறி அதன்மேல் விழுபவர்கள் உண்டு. அறைபட்டு அதன்மேல் தூக்கி வீசப்படுபவர்கள் உண்டு. மெய்மைக்கு எதிரான அனைத்தாலும் கைவிடப்பட்டு மெய்மையுடன் தனித்து நின்றிருப்பவர்கள் உண்டு. மெய்மை வாழ்வுக்கு எதிரானது. வாழ்வின் உண்மைகள் அனைத்திற்கும் அப்பால் நின்றிருப்பதே மெய்மை. பொருட்களனைத்துக்கும் விசையும் எடையும் வடிவும் அளிப்பது வெறுமையே என்றொரு சொல் உண்டு.
விதுரர் நெடுநேரம் கைகளால் தாடியை துழாவியபடி தனித்து அமர்ந்திருந்தார். அவன் உடனிருப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருப்பதைப்போல தெரிந்தார். அவன் அவர் கைவிரல்களின் நிலையிலா அசைவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். முகம் நிமிர்த்தி அவர் முதலில் சொல்லக்கூடும் சொல் எதுவாக இருக்கும்? அவர் அன்னையை சென்று பார்க்கவே விழைவார். ஒருபோதும் அதை தவிர்க்கப் போவதில்லை. ஒருபோதும் அவரால் இதிலிருந்து விலக இயலாது. அவன் தன் உள்ளத்துள் புன்னகைத்தான். சற்று முன்னர் தன் மூத்தவருக்காகவே இங்கு திரும்பி வந்தேன் என்று அவர் சொன்னார். எவருக்காக அதை கூறியிருப்பார்? அது பொய்யல்ல, அத்தருணத்தில் அதை நம்பியே சொன்னார். அதை சொல்வதனூடாக நம்ப முயன்றார். அந்நம்பிக்கையினூடாக பிறிதொன்றை மறைக்க முயன்றார்.
எத்தனை எளியவர்கள் மானுடர்! அவர்கள் பெரியவர்களாகும்தோறும் அவர்களின் உணர்வுகளும் எண்ணங்களும் பெரிதாகின்றன. எனவே இடர்களும் சரிவுகளும் கூட பெரிதாகின்றன. பெரியவர்கள் தங்கள் இடர்களின் முன், சரிவுகளின்முன் மிகச் சிறியவர்களாகும் தருணங்கள் உண்டு. பெரியவர்கள் பெரும் சிறுமை கொள்ளாது ஒழியவே இயலாது. அவன் அவ்வெண்ணங்கள் எல்லாம் பன்னிரு களமாகவே தன்னுள் எழுவதை உணர்ந்தான். எல்லா களத்திலும் எதிரிக்கோள் எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கோளும் பிறிதொன்றுக்கு எதிரி. நன்று தீதென ஏதுமில்லை. சுக்ரன் விழிநோக்க குலமழிந்தோரும் இருக்கலாகும்.
விதுரர் “நான் இறக்கும் தருணம் என்ன? இன்னும் உள்ள காலமென்ன? கணித்துக் கூறுக, மைந்தா!” என்றார். சகதேவன் திடுக்கிட்டு “தந்தையே, அத்தருணத்தில் தாங்கள் அவ்வாறு ஆணையிட்டதால் அதை செய்தேன். மெய்யாக அதை நான் செய்யலாகாது. நிமித்திகன் எவருக்கும் அவர்களின் இறப்புப் பொழுதையும் இறக்கும் முறையையும் உரைக்கலாகாதென்று நெறிகள் உரைக்கின்றன” என்றான். “இங்கு உன்னிடம் நான் தந்தையென்று இருந்து ஆணையிடுகிறேன், கூறுக!” என்றார் விதுரர். “அதை அறிவதனால் எப்பயனுமில்லை. இறப்பன்றி பிறிதிலாத ஒருவருக்குக் கூட அதில் சற்று பொருள் உள்ளது. நீடுநோயாளனுக்கு அதை கூறலாமென்று சூரியப் பிரதீபம் கூறுகிறது” என்றான் சகதேவன்.
“நான் நீடுநோயாளன். மாளாத் துயர் கொண்டவன்” என்று விதுரர் சொன்னார். சகதேவன் அவரை நிமிர்ந்து பார்த்தான். “மெய், ஒரு சொல்லும் மிகையல்ல. கூறுக!” என்று விதுரர் கூறினார். சகதேவன் சிலகணங்கள் அவரை நோக்கி இருந்துவிட்டு எழுந்து “பொறுத்தருள்க தந்தையே, என்னால் அது இயலாது!” என்றான். “ஏன்?” என்று விதுரர் கேட்டார். “தங்கள் துயரென்ன என்று அறியேன். ஆனால் இப்புவியில் துயரிலாத எவருமில்லை. புவித்துயருக்கு இறப்பு ஒரு முடிவும் அல்ல. இறப்புத் தருணத்தை அறிந்ததனால் எவ்வகையிலும் துயர் குறைவதும் இல்லை. என் நெறிநூல்கள் ஆணையிடுவதற்கப்பால் நான் அதை செய்யலாகாது. பொறுத்தருள்க!” என்றான்.
“என் துயரை உன்னிடம் எவ்வாறு அறிவிப்பேன்? துயரை அறியும் வழி என உன் நூல்கள் ஏதேனும் நவில்வதுண்டா?” என்றார் விதுரர். சகதேவன் “கொடுந்துயர் கொண்டவர்களின் உடலில் தொட்டறிய முடியாத நடுக்கு ஒன்று இருக்கும் என்பார்கள். அவர்கள் தொட்டால் தாலத்து நீர் நலுங்கும் என்று கேட்டிருக்கிறேன். முன்பு ஏழு முறை சாவின் கணத்தில் தாங்கொணாப் பெருவலியில் துடிக்கும் சிலரை அவ்வாறு தொட வைத்துப் பார்த்திருக்கிறேன்” என்றான். விதுரர் தன் மஞ்சத்தில் கையால் தட்ட ஏவலன் வந்து நின்றான். “அகன்ற தாலத்தில் நீர் கொண்டு வருக!” என்றார். தலைவணங்கி அவன் வெளியே சென்றபின் “நோக்குக! இப்புவியில் இன்றிருக்கும் எந்த மானுடரை விடவும் பெருந்துயர் என்னில் உள்ளது. என் உடலில் திகழ்கின்றது பெருவலி” என்றார்.
“தந்தையே, நீங்கள் அனைத்திலிருந்தும் ஒழிந்து அமர்ந்திருந்தீர்கள். நீங்கள் இங்கு நிகழ்ந்தவை எவற்றையுமே அறியவில்லை” என்று சகதேவன் சொன்னான். “ஆம், அது எவ்வகையிலும் தப்புதல் அல்ல” என்று விதுரர் கூறினார். “தாங்கள் குருதிச்சுற்றமென எவரையும் இழக்கவில்லை. தாங்கள் நம்பியிருந்தது எதுவும் உடையவும் இல்லை. தங்கள் நிலையில் எந்த மாறுதல் நிகழவுமில்லை” என்றான் சகதேவன். கசப்புடன் நகைத்து “ஒருவேளை அதனால்தானோ என்னவோ” என்று விதுரர் கூறினார். “ஏது இலாதது மாற்றிலாதது என ஆகிவிடுகிறது.” சகதேவன் “எனில் தாங்கள் ஆற்றிய ஊழ்கத்துக்கு என்ன பயன்?” என்றான். “ஊழ்கத்தினால் துயரிலிருந்து தப்ப முடியாதா என்ன?”
“ஊழ்கம் என் துயரை கூர்கொள்ளவே செய்தது போலும்” என்று விதுரர் கூறினார். ஏவலன் தாலத்தில் நீருடன் வந்து அவரருகே வைத்தான். விதுரர் தன் சுட்டுவிரலை நீட்டி அந்நீர்ப்பரப்பை தொடப்போனார். அதற்குள் கூரிய காற்றால் ஊதப்பட்டதுபோல் நீர் அலைவு கொண்டது. “தந்தையே…” என்று துயரம் நிறைந்த குரலில் சகதேவன் அழைத்தான். விதுரர் அவனை நோக்கி புன்னகைத்து “கூறுக, இன்னும் எத்தனை காலம் இப்பெருந்துயரை நான் தாங்க வேண்டும்?” என்றார். சகதேவன் சூழ நோக்கி அங்கிருந்த கரித்துண்டை எடுத்துவந்து ஏடெழுதும் பலகைப்பரப்பில் பன்னிரு களம் வரைந்து அவற்றில் எண்களைப் பொறித்து சுட்டுவிரலை அவற்றில் வைத்து ஒவ்வொன்றாகத் தாவி ஊழ்கத்தில் அமைந்தான்.
விழி திறந்தபோது தன் கை தொட்டுக்கொண்டிருக்கும் ராசிநிலையைப் பார்த்து நீள்மூச்செறிந்துவிட்டு “தங்களுக்கும் ஓராண்டே” என்றான். “அடுத்த நீர்க்கடன் வரை?” என்றார் விதுரர். “ஆம்” என்றான். “எவ்வண்ணம்?” என்று விதுரர் கேட்டார். “தாங்கள் இங்கிருந்து கனிந்து உதிர்வீர்கள். முனிவர்களுக்குரிய சாவு” என்று சகதேவன் சொன்னான். விதுரர் கண்களைச் சுருக்கி “மெய் கூறுக. அவ்வண்ணம் ஒன்று எனக்கு எவ்வாறு அமையக்கூடும்?” என்றார். “மெய்யாகவே அதைத்தான் காண்கிறேன். முனிவர்களுக்குரிய வகையில் விழிகளினூடாக உங்கள் உயிர் பிரியும். ஆனால்…” என்றபின் விரலை சற்றே நகர்த்தி பிறிதொரு ராசிநிலையைத் தொட்டு “அது முனிவர்களுக்குரிய சாவல்ல. இங்கு எஞ்சியிருக்கும் ஒரு பற்று உங்கள் உடனிருக்கும். உங்கள் அன்புக்குரிய ஒருவர் அருகிருப்பார். அனைத்தையும் துறந்து இங்கிருந்து செல்கையில் துறக்க விழையாத ஒன்றை அவருக்கு அளித்து அகல்வீர்கள். அந்தப் பற்றினால் கனிந்து விழுந்தாலும் அங்கு சென்றுசேரமாட்டீர்கள். பிறிதொரு பிறவி உண்டு. அதில் ஈடேறும் அனைத்தும்” என்றான்.
விதுரர் நீள்மூச்செறிந்து புன்னகைத்து “அது நன்று. அவ்வாறாகுமெனில் அது என் பேறு. என்னுள் எஞ்சுவதென்ன என்றறியேன். ஆனால் நான் ஒவ்வொன்றையும் உதற முயலும்போதும் உதற முடியாத ஒன்றை எங்கிருந்தோ உணர்கிறேன்” என்றார். பின்னர் எழுந்து கொண்டு “நன்று, மைந்தா. இச்சொற்களுக்காக நான் உன்னை வாழ்த்துகிறேன்” என்றார். சகதேவன் எழுந்துகொள்ள அவர் தன் எழுத்தாணி ஒன்றை எடுத்து அவனுக்கு அளித்து “இதை நிமித்திகனுக்குரிய காணிக்கையாகக் கொள்க!” என்றார். அவன் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு “வாழ்த்துக, தந்தையே!” என்றான். அவர் தலையில் கைவைத்து “நலம் சூழ்க!” என்றார்.
சகதேவன் அவ்வெழுத்தாணியுடன் வெளியே சென்றான். அதை தன் இடைக்கச்சையில் செருகிவிட்டு தன் குடில் நோக்கி நடந்தான். குடிலை அணுகுந்தோறும் அவன் நடை தளர்ந்தது. இடையில் கைவைத்து நின்று குடிலையே நோக்கிக்கொண்டிருந்தான். அந்தக் குடில்வளாகம் முழுக்க ஏவலர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வேள்விக்குரிய பொருட்களை அந்தணர்கள் கங்கைக்கரையில் அமைந்திருந்த வேள்விநிலத்திற்கு கொண்டுசென்றனர். வேள்விநிலத்தில் இடையில் கைவைத்தபடி நின்று தௌம்யர் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருப்பதை காண முடிந்தது. அவன் குடிலிலிருந்து விலகி கங்கைக்கரையோரமாக நடந்தான். குடில் நிரையின் ஓசை அகன்று அகன்று மறையும் வரை காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். பின்னர் ஓசையற்று ஒளிப்பெருக்காக வழிந்துகொண்டிருந்த கங்கையை நோக்கியபடி ஒரு மண்மேட்டில் நின்றான்.
நெடுநேரமாக நின்றுகொண்டிருப்பதை கால்கள் உளைந்த போது உணர்ந்து அங்கே அமர்ந்தான். அதுவரை வெவ்வேறு உளமாடல்களினூடாக மறைக்கப்பட்டிருந்த அது வெளிவந்தது. மாறாதது. மலையென நின்றிருப்பது. கேட்டுணர்ந்த சொற்கள், கண்டுணர்ந்த உணர்வுகள், எண்ணிக்கொண்டவை, இயற்றியவை அனைத்தும் பொய்யே என்றுணர்ந்தான். மெய்யென்று அது மட்டுமே அருகில் நின்றது. அவன் உளம் கரைந்து நெஞ்சு விம்ம தேம்பி அழுதான். அழுகையின் இடையில் தலை தழைந்து முழங்கால் மூட்டில் நெற்றி பட்டது. தாள முடியா வலியால் என அவன் உடல் மடித்து நடுங்கிக்கொண்டிருந்தான். பின்னர் ஓர் எண்ணம் எழ நிமிர்ந்து கண்களை துடைத்துக்கொண்டான். தாடி நனைந்து மடியில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. கைகளால் நீவி அதை துடைத்தபின் அந்த எழுத்தாணி எடுத்து மண்ணில் பன்னிரு களம் ஒன்றை வரைந்தான். அதில் தனது ராசிக்களத்தில் முதற்புள்ளியிட்டு எழுத்தாணியால் தொட்டுத் தொட்டு சென்றான்.
ஆனால் ஊழ்கம் கூடவில்லை. கலைந்து மீண்டும் முயன்றான். ஏழு முறை முயன்றபோதும் உளம் கலைந்து சொல் திரளவில்லை. சினமெழுந்து அவ்வெழுத்தாணியை களத்தில் இட்டுவிட்டு பற்களைக் கடித்து தலையசைத்தபடி அமர்ந்திருந்தான். நிமித்திகன் ஒருபோதும் தனக்கென காலம் நோக்க இயலாது. தன் ஊழை கணிப்பவன் பிறர் ஊழை அறிய இயலாதவன். அவன் தன் ஆசிரியர்களை நினைவுகூர்ந்தான். நீள்மூச்சுடன் அண்ணாந்து இலைத்தழைப்புகளுக்கு அப்பாலிருந்து வந்த கதிரொளியை முகத்தில் வாங்கி கண்மூடி அமர்ந்திருந்தான். பின்னர் எழுந்து இடையாடையையும் மேலாடையையும் களைந்து கரையிலிட்டுவிட்டு ஓடி பாய்ந்து கங்கை நீரில் விழுந்தான். மூழ்கி ஆழத்துக்கிறங்கினான். நெஞ்சு உடையும்படி மூச்சு இறுகி நின்றிருக்க நீருக்குள் சுழன்று சுழன்று நோக்கினான். பல்லாயிரம் நீர்மணிக் குமிழிகளைக் கண்டான். அவை விழிகளாயின. அறிந்த விழிகள். அவனிடம் உவகையும் துயரும் கொண்டு பேச முனையும் விழிகள்.