நீர்ச்சுடர் - 32
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் – 2
யுயுத்ஸு தனக்குரிய சிறுகுடிலுக்குள் சென்று ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது ஏவலன் வந்து சிற்றமைச்சர் பாஷ்பரின் வருகையை அறிவித்தான். ஓய்வெடுப்பதற்காக மஞ்சத்தை நோக்கியபடிதான் அவன் உள்ளே நுழைந்திருந்தான். பெருமூச்சுடன் ஆடையை சீரமைத்துவிட்டு “அனுப்புக!” என்று யுயுத்ஸு சொன்னான். பாஷ்பர் உள்ளே வந்து தலைவணங்க யுயுத்ஸு வணங்கி அவரை அமரும்படி சொன்னான். தரையில் விரிக்கப்பட்ட பாயில் அவன் அமர்ந்ததும் பாஷ்பர் எதிரில் அமர்ந்தார். இளையவரான பாஷ்பர் சற்று நிலைகொள்ளாதவர் போலிருந்தார். அஸ்தினபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் மூத்த அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாகவே கானேகிவிட்டிருக்க இளைய அமைச்சர்களால் சிறு இடர்களைக்கூட நிலையழியாமல் எதிர்கொள்ள இயலவில்லை என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
முகத்தை இயல்பான புன்னகையுடன் வைத்துக்கொண்டு “கூறுக!” என்று யுயுத்ஸு சொன்னான். பாஷ்பர் மேலும் சில கணங்கள் சொற்களுக்கு தயங்கிவிட்டு “தாங்கள் பாஞ்சாலத்து அரசியை ஒருமுறை சென்று சந்திக்கவேண்டும், இளவரசே” என்று சொன்னார். “நானா?” என்று யுயுத்ஸு கேட்டான். இயல்பாக இருக்கவேண்டும் என்னும் எச்சரிக்கையை மீறி சற்றே முன்சாய்ந்து விழிகூர்ந்து “அவர் என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னாரா?” என்றான். “இல்லை. அவரை இன்று மாலை அரசர் சந்திப்பதாக இருக்கிறார் என்று எனக்கு தகவல் சொல்லப்பட்டது. அதற்கு முன்னர் தாங்கள் அரசியை சந்திக்க முடியுமென்றால் நன்று” என்று பாஷ்பர் சொன்னார்.
“என்ன செய்தி?” என்று யுயுத்ஸு மேலும் விழிகளைச் சுருக்கி கேட்டான். “இங்கு வந்ததிலிருந்து அவர் தன்னிலையில் இல்லை என அறிந்திருப்பீர்கள். இருளுக்குள் அடைந்து கிடந்தார். உளம் குழம்பிப் போயிருப்பதாகவும், உதிரிச் சொற்களால் மட்டுமே பேசுவதாகவும், அவ்வப்போது எழுந்தமர்ந்து முனகுவதும் விம்மி அழுவதும் கூச்சலிடுவதும் உண்டென்றும் சொன்னார்கள். அவர் இருக்கும் நிலையை புரிந்துகொள்ள முடிந்தது. பல நாட்கள் அவர் இருட்டிலிருந்து வெளிவரவில்லை என்று இங்கே அனைவரும் அறிவார்கள். ஆனால் நேற்றிலிருந்து அவர் காட்டுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார். இப்போது பெரும்பகுதி காட்டில்தான் இருக்கிறார். அரசர் வருகையில் அவர் குடிலில் இருக்கவேண்டுமல்லவா?” என்றார் பாஷ்பர்.
யுயுத்ஸுவின் உள்ளம் மேலும் முன்னால் சென்று அவர் சொல்வதற்காகக் காத்திருந்தது. பாஷ்பர் “அதை கூறுவதற்காக சென்றேன். ஏவற்பெண்டு என்னை காட்டுக்குள் அழைத்துச் சென்று அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பாஞ்சாலத்து அரசியிடம் நிறுத்தினாள். பாஞ்சாலத்து அரசி பிச்சியைப் போலிருந்தார். கலைந்த ஆடை. புழுதிபடிந்த குழல். கண்கள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. ஏவற்பெண்டு அப்பால் நின்றுவிட்டாள். நான் அரசியை அணுகினேன். எனக்கு மேலும் அணுக அச்சம். ஒரு கணம் அரசி அங்கிலாததுபோல் ஒரு உளமயக்கும் உருவாகியது. அருகே அணைந்து அரசியை வணங்கி அவர் முறைப்படி இன்று குடிலில் இருக்கவேண்டும், அரசர் வந்து அவரை சந்திப்பதாக இருக்கிறார் என்ற செய்தியை சொன்னேன்” என்று தொடர்ந்தார்.
“நெடுநேரம் அவர் என்னையோ என் சொற்களையோ உள்வாங்கியதுபோல் தெரியவில்லை. பிறகு திடீரென்று எழுந்து என்னை நோக்கி வந்து அரசரிடம் பேசுவதற்கொன்றுமில்லை என்றார். அரசி, நாளை இங்கு நீர்க்கடன் நிகழவிருக்கிறது. தாங்கள் அதில் நீர்தொட்டுக் கொடுக்கும் ஒரு சடங்கை செய்யவேண்டியிருக்கிறது. அதை முன்னரே அறிவிக்கும்பொருட்டுதான் அரசர் வருகிறார் என்றேன். இங்கு எந்தச் சடங்கும் இப்போது நடக்கப்போவதில்லை, போர் இன்னும் முடியவில்லை என்றார் அரசி. பிச்சியைப்போல் என்னை வெறித்தபடி சென்று சொல் உன் அரசரிடம் போர் இன்னும் முடியவில்லை என்றார்.”
யுயுத்ஸு உளம் திடுக்கிட்டான். “என்ன சொன்னார்? சரியாக அவர்கள் சொன்ன சொற்களை கூறுக!” என்றான். பாஷ்பர் “போர் இன்னும் முடியவில்லை என்றார். அதற்கு மேல் நான் எதுவும் கேட்கவில்லை. சென்று சொல் உன் அரசரிடம், போர் இன்னும் முடியவில்லை என்று மட்டுமே சொன்னார். நான் தலைவணங்கி பின்னகர்ந்துவிட்டேன். அதற்குமேல் கேட்க எனக்கு இடமில்லை என பட்டது. அரசரிடம் அதை சொல்ல வேண்டும். அது என் கடமை. ஆனால் எவ்வண்ணம் இதை அங்கு விளக்குவது என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
“நான் சற்றுமுன் அரசரை பார்க்கச் சென்றேன். அவர் அங்கு அமைச்சர்கள் சுஃப்ரருடனும் தௌம்யரின் மாணவர்கள் நால்வருடனும் அமர்ந்து நூலாய்ந்து கொண்டிருந்தார். அவருடைய முகத்திலிருந்த உவகையை பார்த்தபோது என்னால் இதை அவரிடம் சொல்ல முடியாதென்று தோன்றியது. ஆகவே தலைவணங்கி பேரமைச்சர் விதுரர் இன்று மாலை வந்து சேர்வார் என்று செய்தி வந்துள்ளதென்று மட்டும் தெரிவித்துவிட்டு வந்துவிட்டேன். அது முன்னரே வந்துவிட்ட செய்தி அறிவிலி என்று சொல்லி அரசர் நகைத்தார். நான் என்னை அறிவிலியாகவே காட்டிக்கொண்டு வெளியேறினேன். இளவரசே, இன்றைய நிலையில் முக்தவனத்தில் இருப்பவர்களில் தாங்கள் மட்டுமே அரசரிடம் இச்செய்தியை சொல்ல முடியும் என்று தோன்றியது. ஆகவேதான் இங்கு வந்தேன்” என்றார் பாஷ்பர்.
“இதை நான் எப்படி சொல்வது?” என்று யுயுத்ஸு சொன்னான். “இது அவர்களுக்குள் நிகழ்ந்தாகவேண்டிய ஓர் உரையாடல். இதில் உள்ளது நாம் முற்றறிய முடியாத ஒரு செய்தி.” பாஷ்பர் “ஆம், ஆனால் அரசர் இன்றிருக்கும் நிலையைக் கலைக்கும் உரிமை நமக்கு உண்டா? அதைவிட அவர் தன்னை கலைத்துக்கொள்ள விரும்புவாரா? இளவரசே, அவரது உலகே கலைக்கப்படுவது அது. ஒருவேளை அவர் எதிர்திசைக்குச் சென்று உச்ச சினத்தை அடையவும் கூடும். அச்சினம் நம்மேல் திரும்பலாம்” என்றார். “இங்கு நாளை தொடங்கவிருக்கும் நீர்க்கடனுக்காக அனைத்துப் பணிகளும் முடிவுற்றுவிட்டன. அந்தணர்கள் நாளை புலரியிலேயே வேள்வி அனல் எழுப்ப எண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில் இச்செய்தி…”
யுயுத்ஸு “இடர்தான்” என்றான். “இதற்கு என்ன செல்வழி என்று தாங்கள் எண்ணலாம். தேவையென்றால் தௌம்யரை அனுப்பி பாஞ்சாலத்து அரசியிடம் பேச வைக்கலாம்” என்றார் பாஷ்பர். “அவர் பேசுவது உகந்ததல்ல” என்றான் யுயுத்ஸு. “எனில் இன்று மாலை விதுரர் வருகிறார். அவரிடம் பேசச் சொல்லலாம். இறுதி முடிவெடுக்க வேண்டியவர் தாங்களே” என்றார் பாஷ்பர். யுயுத்ஸு சில கணங்கள் எண்ணிவிட்டு “இல்லை, இன்று விதுரர் இச்சூழலிலேயே உளம் நிலைகொண்டவர் அல்ல. அவர் எங்கிருந்தோ வருகிறார். உண்மையில் அவர் ஏன் இங்கு வருகிறார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. எதன்பொருட்டென்றாலும் அவரது வருகை நன்றென்று தோன்றுகிறது, அவ்வளவுதான். ஆனால் அவரால் இங்குள்ள எதிலும் உளம் செலுத்த இயலாது” என்றான்.
“தௌம்யர் நாளை வேள்விக்குரிய அனைத்தையும் செய்துவிட்டார். ஆகவே வேள்வி தொடங்க வேண்டுமென்ற பதற்றத்தில் இருப்பார். அவராலும் இச்சூழலை கையாள இயலாது” என்றபின் யுயுத்ஸு “போர் முடியவில்லை என்றா சொன்னார்? இன்னும் எஞ்சியிருக்கும் எதிரி யாரென்று சொன்னார்?” என்றான். குரல் தணிய “கணிகரைப் பற்றியா?” என்றான். “தெரியவில்லை. என்னால் அதை எவ்வண்ணமும் எண்ணித் தெளிய முடியவில்லை. மீண்டும் போர் என்னும் சொல் அளிக்கும் பதைப்பு என்னுள் சொல்லமைய வைக்கிறது. ஆனால் இனி ஒரு போர் எனில் எவருடன்? எவர் ஆற்றுவது அப்போரை?” என்றார் பாஷ்பர்.
யுயுத்ஸு மீண்டும் தன்னுள் ஆழ்ந்தபின் “கிருபரையும் கிருதவர்மனையும் அஸ்வத்தாமனையும் பற்றி குறிப்பிட்டிருப்பார் என எண்ணுகிறேன்” என்றான். தன்னுள் சொல்லோட்டிய பின் “ஆம், பெரும்பாலும் அவர்களைத்தான் குறிப்பிட்டிருப்பார் என்று தோன்றுகிறது. அவ்வகையில் போர் முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்கும் நீர்க்கடனுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்றுவிட்டிருக்கிறார்கள். கிருதவர்மன் தன் யாதவக் குடிகளுடன் சென்று சேர்ந்துவிட்டதாக ஒற்றுச்செய்தி வந்துள்ளது. கிருபர் தன் தந்தையின் தவக்குடிலுக்கே சென்றுவிட்டிருக்கிறார். அஸ்வத்தாமன் காடுகளுக்குள் புகுந்து மறைந்தார். பிருகு குலத்தின் தவச்சாலைகளுக்கு அவர் சென்றிருக்கக் கூடுமென்று ஒற்றர்கள் சொல்கிறார்கள்” என்றான்.
“அவர் சிவச்செல்வர். பாரதவர்ஷத்தின் அனல்குலத்து அரசர்கள் சிலர் அவரை ஆதரிக்கவும் கூடும். ஆனால் அவர் இருக்கும் உளநிலையில் மீண்டும் அரசுகொள்ளவோ படை திரட்டவோ வாய்ப்பில்லை” என்றான் யுயுத்ஸு. “அவர்கள் மூவரையும் தேடித்தேடிச் சென்று முற்றழிக்கலாம். அதற்கான தேவை இன்றில்லை எனினும்கூட அரசர்கள் அதை செய்வதுண்டு. வஞ்சத்தையும் அனலையும் நஞ்சையும் சற்றும் எஞ்சவிடலாகாது என்ற நெறியை பேணுவதற்காக. ஆனால் அதற்கு நம்மிடம் அரசு வேண்டும், படைகள் வேண்டும். தன்னந்தனியாக நாம் சென்று அவரிடம் போரிட முடியாது. அவர் இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதற்கே பெரிய ஒற்றர் வலை வேண்டும். எப்படியும் இந்நீர்க்கடன் முடியாமல் அஸ்தினபுரியையோ இந்திரப்பிரஸ்தத்தையோ சென்றடைய அரசரால் இயலாது.”
“இதை தாங்களே பாஞ்சாலத்து அரசியிடம் சொல்லலாமே?” என்றார் பாஷ்பர். “ஆம், அதுவே உகந்ததென்று எண்ணுகிறேன். பாஞ்சாலத்து அரசி இன்றிருக்கும் நிலையில் அனைத்துக் கோணங்களிலும் அதை எண்ணியிருக்கமாட்டார். இங்கு என்ன சூழ்நிலை திகழ்கிறதென்று பாஞ்சாலத்து அரசியிடம் நானே விளக்குகிறேன். அதன் பின்னர் அரசரைச் சென்று பார்த்து அவரை அழைத்து வந்து பாஞ்சாலத்து அரசியிடம் பேசச் சொல்கிறேன். அரசுகொண்ட பின் பகை முற்றழிக்கப்படும். அரசரிடமிருந்து அதற்கான ஓர் உறுதிப்பாட்டை பெற்றுக்கொண்டால் அரசி தெளிந்துவிடுவார்” என்றபின் யுயுத்ஸு எழுந்துகொண்டு “நன்று அமைச்சரே, தாங்கள் இச்செய்தியை எவரிடமும் இப்போது பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை” என்று சொன்னான். “ஆம்” என்று வணங்கி பாஷ்பர் வெளியேறினார்.
யுயுத்ஸு தன் குடிலிலிருந்து வெளியே வந்து திரௌபதியின் குடில் நோக்கி நடக்கத்தொடங்கினான். பகல் முழுக்க பெய்திருந்த வெயிலால் நிலம் செம்மண் வெந்து மேற்பரப்பு உலர்ந்து பொருக்காடியிருந்தாலும் கால்குறடுகள் அழுந்தியபோது உள்ளிருந்த ஈரமண் புதைந்து மென்தசையென காலுக்கு தன்னை காட்டியது. அது நடப்பதை கடுமையாக்கியது. அவன் நின்று திரும்பி தன்னுடைய காலடிகளை பார்த்தான். போரின் குருதிப்புண் வடுக்களைப்போல் தன் காலடிகள் மண்ணில் பதிந்திருப்பதை வெறித்து நோக்கி சில கணங்கள் நின்றான். பின்னர் எந்த எண்ணமும் எழாமலேயே திரும்பி யுதிஷ்டிரனின் குடில் நோக்கி சென்றான்.
செல்லச் செல்ல தான் செய்யவேண்டியதென்ன என்பதை வகுத்துக்கொண்டான். யுதிஷ்டிரனிடம் நேரடியாக திரௌபதியை அழைத்துச்செல்வதன்றி வேறு வழியில்லை. ஐவரில் திரௌபதியிடம் எப்போதும் பேச வேண்டியவர் அவர்தான். முடிவெடுக்க வேண்டியவரும் அவர் மட்டுமே. அதற்கு நடுவே பிறர் நின்று சொல்லாடுவதில் பொருளில்லை. சென்று சொல் உன் அரசரிடம் என்று திரௌபதி சொன்ன பின்னர் இன்னொரு குரலுக்கு இடமில்லை. இத்தெளிவை வேறெங்கோ தான் அடைந்த பின்னரே தன் கால் நின்றது என்பதையும் திரும்பிய பின்னரே அதை சித்தத்திற்குச் சொல்லி வகுத்துக்கொள்கிறேன் என்பதையும் அவன் உணர்ந்தான்.
யுதிஷ்டிரனின் குடிலில் அவர் குரல் நகைப்போசையுடன் உரக்க கேட்டது. ஊடே புகுந்த அந்தண இளைஞர்கள் சிலர் செம்மொழியில் ஏதோ சொன்னார்கள். வெளியே நின்றிருந்த ஏவலன் தலைவணங்க “அரசரிடம் ஒரு சொல்” என்றான் யுயுத்ஸு. அவன் உள்ளே சென்று வெளிவந்து “வரச்சொல்கிறார்” என்றான். யுயுத்ஸு குறடுகளை அகற்றிவிட்டு மேலாடையை சீர்செய்து உடலை வளைத்து உள்ளே சென்றான். தலைவணங்கி ஓரமாக நின்ற அவனைப் பார்த்து யுதிஷ்டிரன் “வா, நீ வந்த பொழுது நன்று. உன்னிடம் ஒரு கேள்வி. இங்கு சற்று நேரமாகவே அதைத்தான் உசாவிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “ஒருவர் தனக்கு மைந்தரில்லை என்பதற்காக பிற குலத்திலிருந்து ஒரு மைந்தனை ஏற்றுக்கொள்கிறார் அல்லது பிற குலத்தில் அவருக்கு ஒரு மைந்தர் இருக்கிறார் என்று கொள்க! அதன் பின்னர் அவர் தன் குலத்திலேயே மணந்து மைந்தன் ஒருவனை பெறுகிறார். இந்நிலையில் அவருடைய உரிமைகளுக்கும், பட்டங்களுக்கும், உடைமைகளுக்கும், குலக்கடமைகளுக்கும் எவர் வழித்தோன்றலாக முடியும்? நெறிநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை சொல்கின்றன” என்றார்.
யுயுத்ஸு “நானறிந்த நூல்களின்படியே சொல்லமுடியும்” என்றான். “குலஉரிமைகளுக்கும் கடமைகளுக்கும் குலத்தில் பிறந்தவரே தோன்றலாக இயலும். ஆனால் எந்நிலையிலும் குருதியால் மூத்தவரே உடைமைக்கும் பட்டங்களுக்கும் உரிமையாளர்.” யுதிஷ்டிரன் “அதற்கு நூல்களில் திட்டவட்டமான நெறிகள் இல்லை. குடிகள் தோறும் நெறிகள் மாறுகின்றன. அனைத்துக் குடிகளுக்கும் அளிக்கவேண்டிய ஒற்றை வரியாலான நூல்நெறி என்ன என்பதைத்தான் இத்தனை நேரம் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “அனைத்து நூல்களிலும் உள்ள ஒற்றை வரி ஒன்று உண்டு” என்றான் யுயுத்ஸு. “மானுட நெறிகளைவிட தெய்வநெறிகள் மேலானவை. எவர் மூத்தவர் என்பதை முடிவு செய்வது தெய்வநெறி. அதை மீறும் நெறிகள் எதுவும் மானுடரிடம் இருக்கலாகாது. அரசுரிமையும் குடியுரிமையும் உடைமைகளும் அவ்வாறே கைமாற்றப்படுகின்றன. உடைமை என ஒன்றிருக்கும்வரை, முறைமை என ஒன்றிருக்கும்வரை அவ்வாறே ஆகும்.”
யுதிஷ்டிரன் “நன்று, இது உரிய கோணம். இச்சொற்களுக்கு இவ்வாறு பொருள்கொள்ள முடியும் என்று நான் எண்ணியதில்லை. நன்று” என்றபின் “எனில் பிறிதொன்றையும் இங்கே பேசிக்கொண்டோம். நீத்தவர் தனக்கு முறையான குருதிவழி என்று தன் குடிப்பிறந்த இளையோரையே சுட்டிச் சொல்லிவிட்டு சென்றாரென்றால்கூட அதற்கும் அவ்வரியே மேற்கோளாகும். ஏனென்றால் அவரும் மானுடரே. மூத்த மைந்தர் என்பவர் தெய்வத்தால் வகுக்கப்பட்டவர். தெய்வத்தை மீற மானுடருக்கு உரிமையில்லை” என்றார். “நம் மைந்தர்கள் நமக்கு அளிக்கப்படுகிறார்கள், நம்மால் தெரிவுசெய்யப்படுவதில்லை” என்று யுயுத்ஸு சொன்னான். “நாம் ஒருவனை நம் மைந்தன் என ஏற்கும் தருணமும் மைந்தன் பிறக்கும் தருணமும் ஒன்றே, இரண்டுமே நம்மால் முடிவெடுக்கப்படுவன அல்ல.”
அமைச்சர் சுஃப்ரர் “எந்நிலையில் எவ்வண்ணம் அவர் தன் மைந்தரை தெரிவுசெய்து மைந்தரென்றாக்கினார் என்பது நோக்கப்பட வேண்டும். அது குலநெறிப்படியோ வேத முறைமைப்படியோ அமைந்திருக்குமெனில் அதை மீறும் உரிமை அவருக்கில்லை” என்றார். “எந்நிலையில் அதை அவர் மீற முடியும்?” என்று அந்தண இளைஞன் கேட்டான். “ஏனென்றால் எந்நிலையில் அவன் மீற முடியும் என்றும் நாம் கூறவேண்டும். எந்நிலையிலும் மீற முடியாதென்று ஒரு நெறி இருக்கலாகாது. ஏனெனில் மானுடனின் இயல்புகள் என்பவை எல்லையிலாதவை” என்று இன்னொரு அந்தணர் சொன்னார்.
யுயுத்ஸு “ஐந்து பிறழ்வுநிலைகளை நெறிகள் வகுக்கின்றன. ஒருவர் உளநிலை பிறழ்ந்தவராக இருந்தால், வேதத்தைப் பழித்து புறம்செல்வாரெனில், தன் மைந்தருக்கு அல்லது தன் மூத்தாருக்கு உரிய கடமைகளை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து செய்யாதிருந்தால், அயல்நாட்டுக்குச் சென்று பன்னிரு ஆண்டுகள் திரும்பாமலிருந்தால், முனிவரால் அந்தணரால் முறைப்படி தீச்சொல்லிடப்பட்டு விலக்கப்பட்டால் என ஐந்து. குடிபழிக்கும் பெரும்பிழைகள் என்ன? அவற்றை ஐந்தாக வகுக்கின்றன நூல்கள். அரசனுக்குப் பிழை, அன்னையருக்குப் பிழை, குடிமூத்தாருக்குப் பிழை, சான்றோருக்குப்பிழை, பெண்பழி கொள்ளல்…” என்றான்.
அனைவரும் அமைதியாயினர். சிலகணங்களுக்குப் பின் பெருமூச்சுவிட்டு “பெண்பழி எனில்?” என்றார் யுதிஷ்டிரன். “நூல்களில் விந்தையாக இது வகுக்கப்பட்டுள்ளது. பெண்பழி எனில் என்ன என்பதை பெண்ணே முடிவு செய்யவேண்டும். அது எதுவாகவும் இருக்கலாம். அவையில் எழுந்து ஒரு பெண் தனக்கு பெருந்தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று கூறுவாளெனில் அது பெண்பழி என்றே கொள்ளப்படும். அது பொதுநோக்கில் எத்தனை சிறிதென்றாலும் அவள் அதை பெரும்பழி என உணர்ந்தால் பெரும்பழியேதான்.” யுதிஷ்டிரன் தலையை அசைத்தார். “அவள் பொய் சொன்னால்? வேண்டுமென்றே வஞ்சம் கொண்டு அவள் அவையில் எழுந்து வீண் பழி சுமத்தினால்?” என்று அந்தண இளைஞன் கேட்டான்.
“மூதாதையர் நெறிப்படி அப்படி பொய்ப்பழி சுமத்தப்பட்டாலும் அது பெண்பழியே. அறுதியாக அது பெண்ணின் சொல்லிலேயே நின்றிருக்கிறது” என்றான் யுயுத்ஸு. “இந்த அளவில்லா உரிமையை எவர் பெண்களுக்கு அளித்தார்கள்? இவ்வாறு பார்த்தால் ஒரு பெண் எவர் மேலாயினும் பழி சுமத்தலாம். எவரையும் முற்றழிக்கலாம்” என்றான் அந்தண இளைஞன். “ஆம், நம் பழம்மரபில், குடிமரபில், அரசமரபில் அவ்வாறுதான் உள்ளது. ஆயிரத்திலொன்று அவ்வாறு நிகழவும் கூடும். ஆயினும் நாம் பெண்ணின் அகச்சான்றை நம்பவே தந்தையரால் ஆணையிடப்பட்டிருக்கிறோம். அவையெழுந்து ஒரு பெண் பொய்ப்பழி கூறமாட்டாள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அனைத்து நெறிநூல்களும் இங்கு வகுக்கப்பட்டுள்ளன” என்று யுயுத்ஸு சொன்னான்.
யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டு “விந்தையானது இது. ஆனால் இதை நான் இங்கு மட்டுமல்ல எங்குமே பார்க்கிறேன், இளையோனே” என்றார். “நெறிநூல்கள் அறிவார்ந்தவை. விழிமுன் மெய்மை என புறவயமானவை. அனைத்து சொல்லொழுங்குகளையும் தொட்டுத் தொட்டு முன்னெழுகின்றன அவை. ஆனால் அவற்றின் உச்சத்தில் உணர்வு சார்ந்த ஓர் அகஎழுச்சியைச் சென்று தொட்டு அனைத்து சொல்நெறிகளையும் ஒழுங்குகளையும் கைவிட்டுவிட்டு மேலெழுகின்றன” என்றார். “அத்தனை நெறிநூல்களுக்கும் ஆழத்தில் மானுட அகச்சான்றை நம்பும் ஓர் இயல்பே உள்ளது. மானுடன் எந்நிலையிலும் அறம் சார்ந்தே நின்றிருப்பான் என்னும் நம்பிக்கை அது. ஒரு குமுகத்தில் அனைவரும் அறத்தை கைவிடுவார்களெனில், அல்லது பெரும்பான்மையினர் அறத்தை கைவிடுவார்களெனில்கூட, அல்லது அவர்கள் குடியின் சான்றோர் மட்டும் அறத்தை கைவிடுவார்களெனினும்கூட நெறிநூல்களால் ஒன்றும் செய்ய இயலாது. முனிவரை, அந்தணரை, சான்றோரை நம்பியே அறம் நின்றிருக்க இயலும். வகுக்கப்பட்ட அனைத்தும் அவர்களின் மீதான நம்பிக்கையின் மீதே நிலைகொள்கின்றன.”
“ஆம், மெய்தான்” என்று யுயுத்ஸு சொன்னான். அனைத்துச் சொற்களும் அடங்க அவை அமைதியாயிற்று. அது தருணம் என்று உணர்ந்த யுயுத்ஸு தாழ்ந்த குரலில் “தங்களிடம் ஒரு தனிச்சொல், அரசே” என்றான். யுதிஷ்டிரன் நிமிர்ந்து அந்தணரைப் பார்த்து தலைவணங்க அவர்கள் ஒவ்வொருவராக வெளியே சென்றனர். இறுதி அந்தணரும் வெளியே சென்ற பின்னர் யுயுத்ஸு மீண்டும் தலைவணங்கி “இது ஒரு சிறு செய்தி. தாங்கள் இன்றிருக்கும் உளநிலையை மாற்றக்கூடியதல்ல. எனினும்…” என்றான். “சொல்க!” என்று உரைக்கும்போதே யுதிஷ்டிரனின் உளநிலை மாறிவிட்டதை விழிகள் காட்டின. “தாங்கள் அரசியிடம் ஒரு சொல் சொல்லவேண்டும்” என்றான் யுயுத்ஸு. “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவளை நான் சந்திப்பதை நான் முன்னரே வகுத்திருக்கிறேனே?”
“ஆம், அச்சந்திப்பு முறையாக நிகழ்வதற்கு முன் ஒரு சந்திப்பு இது. அப்போது அரசி ஒருவேளை காட்டில் இருக்கலாம். அரசி இருக்கும் உளநிலையை தாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே தங்களைத் தேடி வந்தேன்” என்றான். “ஒரு சொல் கூறுக! அதுபோதும். அதாவது அரசியிடமிருந்து ஒப்புதல் பெற்ற பின்னர் நாளை காலை நீர்க்கடன்கள் தொடங்குவதைப்பற்றி எண்ணலாம்.” யுதிஷ்டிரன் மேலும் விழிகள் கூர்கொள்ள “அவள் என்ன சொல்கிறாள்? நீர்க்கடன்களுக்கு அவள் வரமாட்டேன் என்கிறாளா? நீர்க்கடன்களை ஒத்திப்போடுகிறாளா?” என்றார்.
யுயுத்ஸு “அவ்வாறல்ல…” என்று சொல்ல யுதிஷ்டிரன் கைநீட்டித் தடுத்து “நீர்க்கடன்கள் முதன்மையாக செய்யப்படுவது அவளுடைய மைந்தர்களுக்காக. ஐந்து மைந்தர்கள் மூச்சுவெளியில் நம் கைநீரையும் அன்னத்தையும் காத்து நின்றிருக்கிறார்கள். என்ன சொல்லிக்கொண்டிருக்கிறாள் அவள்? நீர்க்கடன்களை நிகழ்த்தலாகாதென்று சொல்வதற்கு அவளுக்கு என்ன உரிமையிருக்கிறது?” என்று பதறும் குரலில் கூவினார். “இச்சடங்குகள் எதிலும் பெண்களுக்கு எப்பங்கும் இல்லை என்பதே தொல்நெறி. உண்மையில் அவர்கள் நீர்முனைக்கு வரவேண்டியதே இல்லை. நீர்க்கடன் ஆற்றுபவர்கள் இல்லத்திலிருந்து கிளம்புகையில் ஒரு சொல் அவர்களிடமிருந்து பெறவேண்டும் என்று மட்டும்தான் மரபுகள் சொல்லுகின்றன.”
“அச்சொல்லை பெறும்பொருட்டு மட்டுமே இன்று அவரிடம் பேசப்போகிறோம், அரசே” என்றான் யுயுத்ஸு. “நாளை நீர்க்கடன்கள் முடிக்கும் வரையில் அவர் நீரும் அன்னமும் அருந்தாது நோன்பிருக்கவேண்டும். அதற்கப்பால் அவர் மைந்தர்களுக்காக செய்ய ஏதும் இல்லை.” யுதிஷ்டிரன் “ஆம், அதற்கென்ன தடை அவளுக்கு?” என்றார். “தாங்கள் அதை அவரிடமே பேசலாம்” என்றான் யுயுத்ஸு. சீற்றத்துடன் “பேசுகிறேன்!” என்றபடி யுதிஷ்டிரன் எழுந்துகொண்டார். திரும்பிப் பார்த்து “யாரங்கே?” என்றார். ஏவலன் வந்தவுடன் “என் மேலாடையை எடு” என்றார்.
யுயுத்ஸு கணம் கணமாக யுதிஷ்டிரன் சினம்கொண்டு மேலே போவதை அந்த அசைவுகள் வழியாக பார்த்தான். அதை அவன் எதிர்பார்த்திருந்தான். அந்த உவகைத் தருணம் கலையும்போது எழும் சீற்றம் மட்டுமல்ல அது. உவகைக்கு அடியில் ஓர் ஐயம் இருந்திருக்கும். எதையோ எண்ணி ஒரு பதற்றம் இருந்திருக்கும். அந்த உவகை எவ்வண்ணமோ கலையும் என்றே எண்ணியிருந்திருப்பார்கள். அதை கலைக்கும் பொருட்டு எழும் முதல் துளி என்பது அவர்கள் அஞ்சுவதும், வெறுப்பதும், அகல முயல்வதுமான அனைத்திற்கும் அடையாளமாக எழுவது. அதன் வடிவென வருபவர் எவரென்றாலும் அவர் மீது பெருஞ்சினம் கொள்வது இயல்பு.
யுதிஷ்டிரன் “தேர் ஒருங்குக! இளையோரை அழைத்து நான்…” என்று சொல்ல யுயுத்ஸு உள்ளே புகுந்து “இளையோரை அவர் இப்போது பார்க்கவேண்டியதில்லை. தாங்கள் மட்டுமே பார்ப்பது உகந்தது” என்றான். “அதை நீ சொல்கிறாயா? நான் எவரை எப்போது சந்திக்கவேண்டும் என்பதை நீயா சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் கூவினார். யுயுத்ஸு “ஆம், இத்தருணத்தில் நானேதான் சொல்கிறேன். இவ்வுணர்வுகளுக்கு வெளியே நின்று இவற்றை ஆள்கிறேன். தாங்கள் மட்டும் அரசியை சந்தித்தால் போதுமானது” என்றான். யுதிஷ்டிரன் விழி தாழ்த்தி உடல் தளர்ந்து “ஆம், அவ்வாறே” என்றபின் மேலாடையை ஏவலனிடம் வாங்கி தன் தோளிலிட்டபடி வெளியே கிளம்பினார்.
முற்றத்தில் தயங்கி நின்று தன் தலையைத் தொட்டு “எனது தலைப்பாகை” என்றார். யுயுத்ஸு “தலைப்பாகையின்றி தாங்கள் செல்லலாம்” என்றான். “இது அரசமுறை பயணம்… முறைமைச்சொல் கேட்கப் போகிறேன்” என்றார் யுதிஷ்டிரன். “அல்ல, தங்கள் துணைவியை பார்க்கச் செல்கிறீர்கள். மைந்தரை இழந்த ஓர் அன்னையை பார்க்கச் செல்கிறீர்கள்” என்று யுயுத்ஸு மீண்டும் சொன்னான். “இவை அனைத்தையும் நீ வகுக்கிறாயா?” என்றார் யுதிஷ்டிரன். “இவை நிகழ்கின்றன. நான் சற்றேனும் இவற்றை நடத்த முடியுமா என்று பார்க்கிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “நன்று! அவ்வாறே ஆகட்டும்” என்றபின் நீண்ட பெருமூச்சுடன் “தேர் ஒருங்குக!” என்றார் யுதிஷ்டிரன்.