நீர்ச்சுடர் - 31
பகுதி ஐந்து : எஞ்சும் கனல் -1
யுயுத்ஸு அஸ்தினபுரியிலிருந்து திரும்பி வந்தபோது முக்தவனம் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை உணர்ந்தான். அவ்வுணர்வை கங்கையில் படகில் வந்துகொண்டிருந்தபோதே அறிய முடிந்தது. படகுமுனை நீண்டு துறைமேடையை நோக்கி சென்றபோது அங்கிருந்த உடல்களில் விரைவு கூடியிருப்பதை முதலில் விழிகள் அறிந்தன. எழுந்த ஓசைகளில் ஊக்கம் இருந்தது. படகு அணைந்தபோது துறைமேடை நோக்கி வந்த ஏவலர்களின் நடையில் நிமிர்வும் துள்ளலும் இருந்தது. அங்கிருந்து கைவீசி படகில் இருந்த குகர்களை நோக்கி உரக்க குரல்கொடுத்தனர். படகுகளிலிருந்த குகர்களுக்கு அக்குரல்களிலிருந்தே ஊக்கம் கிடைக்கப்பெற்றது. அவர்களும் உரக்க மறுகுரல் கொடுத்தனர்.
யுயுத்ஸு அமரமேடையில் நின்றபடி முகங்களை திகைப்புடன் மாறி மாறி பார்த்தான். அனைத்து முகங்களும் ஒளி கொண்டிருந்தன. பற்கள் மின்னி மின்னி தெரிந்தன. வடம் எழுந்து சுழன்று படகுமேடையில் சென்று விழுந்தது. அங்கு நின்றவர் அதை இழுத்து சுற்றிக் கட்டியபடி ஏதோ சொல்ல உடன் நின்றவர்கள் உரக்க நகைத்தனர். அது காமக் குறிப்புள்ள வேடிக்கை என்று அவன் உணர்ந்தான். அப்புன்னகை மாறாமலே அவனருகே வந்த குகன் “இளவரசே, பாதை ஒருங்கிவிட்டது” என்றான். அவன் பலகையில் ஏறி துறைமேடையை அடைந்து உடலிலிருந்த அசைவை நிகர்நிலைப்படுத்திக்கொள்ளும் பொருட்டு ஒருகணம் கண்மூடி நின்றான்.
கண்களை மூடியபோது அங்கிருந்த ஓசை தெளிவுற சூழ்ந்துகொண்டது. அங்கிருந்த அனைத்துச் சொற்களிலும் நகைப்பு கலந்திருந்தது. ஓசைகளிலும்கூட அந்நகைப்பே திகழ்வதை அவன் உணர்ந்தான். மானுட உள்ளங்களின் நகைப்பையும் அழுகையையும் அவர்கள் புழங்கும் பொருட்களும் கொள்கின்றன போலும். அவன் அந்நாள்வரை கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பொருட்களும் முனகின, விம்மின, அழுதன. ஆகவே அந்நகைப்பை அவன் செவி தனித்தே கேட்டது. என்ன நிகழ்ந்ததென்று வியந்தபடி அவன் சூழ நோக்கினான். அவனை அறியாமலேயே அவன் முகமும் மாறிவிட்டிருந்தது. உதடுகள் இழுபட்டு புன்னகை சூடியிருப்பதை அவனே உணர்ந்தான்.
அவனை நோக்கி வந்த துறைமேடைக்காவலன் புன்னகையுடன் “தங்களுக்கான தேர் ஒருங்கியிருக்கிறது, இளவரசே” என்றான். “ஆம்” என்றபடி அவன் தன் தேரை நோக்கி சென்றான். தேரிலிருந்து இறங்கிய பாகன் படிக்கட்டை நீட்டிவைத்து தலைவணங்கினான். அவன் முகத்திலும் புன்னகை இருந்தது. தேரில் ஏறி பீடத்தில் அமர்ந்து திரையை தாழ்த்தியபின் நுகமேடைமேல் ஏறி அமர்ந்த பாகனிடம் “என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான். “இளவரசே?” என்றான் அவன். “அனைவரும் ஊக்கம் கொண்டிருக்கிறார்கள். முகங்களில் சிரிப்பு திகழ்கிறது. என்ன நிகழ்கிறது இங்கே?” என்றான்.
“அறியேன். நாளை காலை நீர்க்கடனுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். அனைத்தும் ஒருங்கிக்கொண்டிருக்கின்றன. பணிகளை முடுக்கிவிட்டிருப்பதனால் அனைவரும் விசையுடன் செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். “அதுவல்ல. இங்கே ஓர் உவகை திகழ்கிறது. அனைவரும் இங்கிருந்த துயரில் இருந்து விடுபட்டவர்கள்போல் தெரிகிறார்கள்” என்றான் யுயுத்ஸு. பாகன் ஒருகணத்திற்குப் பின் “அரசர்களின் உணர்வையே பிறரும் அடைகிறார்கள், இளவரசே” என்றான். “அரசர் விடுபட்டுவிட்டாரா?” என்று யுயுத்ஸு கேட்டான்.
“ஆம், நேற்று மாலையிலிருந்தே இங்கு அனைத்தும் மாறிவிட்டன. அரசர் புன்னகையுடன் உலவுவதை நான் கண்டேன். இளையோரிடம் அவர் பேசும்போது சிரித்துக்கொண்டிருந்தார். இளையோரின் முகங்களும் மாறிவிட்டிருந்தன…” என்று பாகன் சொன்னான். ஒருகணத்துக்குப் பின் யுயுத்ஸு “பீமசேனன் எப்படி இருக்கிறார்?” என்றான். “ஆம், அவரும் மாறிவிட்டிருக்கிறார். அவரிடமும் புன்னகையை கண்டேன்” என்றான் பாகன். யுயுத்ஸு “பார்த்தன் மாறிவிட்டாரா?” என்று மீண்டும் கேட்டான். “அவர் நகைக்கவில்லை. ஆயினும் அவர் உள்ளம் மாறிவிட்டிருப்பதை முகத்தில் பார்க்கமுடிகிறது” என்று பாகன் சொன்னான்.
ஏன் என்ற கேள்வி யுயுத்ஸுவின் நா வரைக்கும் வந்தது. ஆயினும் அவன் கேட்கவில்லை. ஆனால் அவன் உள்ளம் அக்கேள்வியிலேயே சென்று முட்டிக்கொண்டிருந்தது. திரையை சற்றே விலக்கி குடில்நிரைகளின் முகப்பில் தெரிந்த ஒவ்வொரு முகத்தையாக அவன் பார்த்துக்கொண்டு வந்தான். அனைவருமே உளம் மலர்ந்திருந்தனர். விழிகளில் சிரிப்பும் நாவில் கூரொலிகளும் கைகளில் சுழற்சியும் கால்களில் விசையும் தெரிந்தன. இவர்கள் இதற்குத்தான் காத்திருந்தார்களா? துயர் அவர்களை அழுத்தி மேலும் அழுத்தி மேலும் மேலுமென எடைகொண்டு மண்ணோடு புதைத்த கணத்தில் உள்ளிருந்து திமிறிக்கொண்டிருந்தார்களா? இவர்களுக்குத் தேவையாக இருந்தது ஒரு தொடக்கம் மட்டும்தானா?
இங்கிருக்கும் மக்களில் எவரோ ஒருவர் புன்னகைத்தால் ஓர் ஒப்புதல் கிடைத்ததுபோல அனைவருமே புன்னகைக்க தொடங்கிவிட்டிருக்கிறார்கள் போலும். அவர்கள் எதிர்பார்த்திருந்த புன்னகை அரசருடையது. அத்தனை பேரும் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவரும் காத்துக்கொண்டிருந்தார். உரிய முறையில் புன்னகைக்கும் ஒரு தருணத்துக்காக. ஒப்புதலுக்காக. எவருடைய ஒப்புதல்? தெய்வங்களுடைய ஒப்புதலா? மூதாதையர் ஒப்புதலா? அகச்சான்றின் ஒப்புதலா? அல்லது பிறர் ஒட்டுமொத்தமாக அளிக்கும் ஏற்பா?
ஒரு கணத்தில் அவனுக்கு அனைத்தும் புரிந்தது. ஆம், மூதாதையரின் ஒப்புதல். தந்தை வடிவாக, அன்னை வடிவாக இங்கு வந்த அரசரின், அரசியின் ஒப்புதல். “நேற்று என்ன நிகழ்ந்தது?” என்று அவன் கேட்டான். பாகன் “நேற்று அவர்கள் பேரரசரையும் பேரரசியையும் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அரசர்களை உளமுவந்து வாழ்த்தினார்கள், மடியில் வைத்து கொஞ்சினார்கள் என்று சொல்லப்பட்டது” என்றான். ஆம், அவர் இவர்களை வாழ்த்துவார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த முறைமை வாழ்த்து அல்ல, அதற்கு மேல் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
“அதன் பின்னரா இவ்வாறு?” என்று அவன் கேட்டான். பாகன் “அங்கிருந்து திரும்பி வருகையில் அவர்கள் துயின்றுகொண்டிருந்தார்கள். அனைவருமே துயின்றுகொண்டிருந்தார்கள். துயின்றெழுகையில் முற்றிலும் புதியவர்களாக பிறந்தெழுந்தார்கள்” என்றான். “அரசர் தனக்கு இனிய உணவு கொண்டுவரும்படி சொன்னார். இங்கு நோன்பு இருப்பதால் இனிய உணவு உண்ணலாகாதென்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. இனிப்பை உண்ண விரும்புவதாக அவர் மீண்டும் கூறினார். என்ன செய்யலாமென்று இங்கு அடுமனையாளர்கள் சொல் சூழ்ந்தனர். இனிப்பு உண்ணலாகாது, ஆனால் மூலிகைகளை உண்ணலாம். கடுகளவு அதிமதுரம் அவருக்கு அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.”
“மருத்துவர் சாவகர் அதிமதுரச்சாற்றை அவருக்கு கொண்டுசென்று கொடுத்தார். அதை நகமளவுக்கு எடுத்து அவர் நாவில் தடவினர். அவரது நா இனிக்கத் தொடங்கியது. முதற்துளியின் குமட்டும் கசப்புக்குப் பின் அதிமதுரம் குடலில் இறங்கி உடல் முழுக்க இனிப்பை நிரப்பும். என்ன இது என் வாயில் இனிப்பு ஊறிக்கொண்டே இருக்கிறது என்று அவர் சொன்னார். நான் உடனிருந்தேன். விழுங்கும் தோறும் இனிப்பு ஊறுகிறது, என் குருதி இனிப்பாக மாறிவிட்டதா என்ன என்றார். அதிமதுரம் அவ்வாறுதான் அரசே என்று சகதேவன் சொன்னார்.”
“அரசர் எஞ்சிய அதிமதுரத்தை சகதேவனின் நாவில் தடவினார். நகுலன் தனக்கு அது வேண்டாமென்று கைகாட்டி பின் நகர்ந்தபோது சகதேவன் அந்தச் சிமிழை எடுத்துக்கொண்டு நகுலனை துரத்திப்பிடித்து சுவரோடு ஒட்டிப் பற்றி நிறுத்தி அவர் நாவிலும் தடவினார். மூவரும் சிரித்தனர்” என்றான் பாகன். “தாங்கள் அறிவீர்கள், அதிமதுரத்தின் இனிப்பு அவ்வளவு எளிதாக நாவை விட்டு அகல்வதில்லை.” யுயுத்ஸு “ஆம், ஏழு நாழிகைப்பொழுது நீடிக்கும் என்பார்கள்” என்றான். “கசப்பு உண்டாலும் அதைக் கடந்து அது இனிக்கும். அதை கழுவி அகற்ற இயலாது. வாயில் அவ்வினிப்பு நிலைகொண்டுவிட்டால் பின்னர் சித்தம் இனிக்கத் தொடங்கிவிடும். வாயிலிருந்து அகன்ற பின்னரும் சித்தத்தில் இனிப்பு எஞ்சியிருக்கும்” என்றான் பாகன்.
“அதன்பின் இங்கு அனைவருமே அதிமதுரம் உண்டனர்” என்று பாகன் தொடர்ந்து கூறினான். “இங்கு அதிமதுரம் சுழன்றுவந்தது. அனைவரையும் தொட்டுத்தொட்டு வாழ்த்தும் தெய்வம்போல. இளைய அந்தணரும் அதிமதுரம் உண்டனர். அவர்கள் அதிமதுரம் உண்ட செய்தியைக் கூறியபோது படகோட்டிகளும் உண்டனர். ஒருவருக்கொருவர் அதிமதுரத்தை நாவில் தடவிக்கொண்டார்கள். சற்று நேரத்தில் இந்தக் காட்டில் ஏவலர் அனைவருமே வாயூற விழுங்கிக்கொண்டும் துப்பிக்கொண்டும் இருந்தனர். சிலர் இனிப்பு தாளாமல் குமட்டினர். குடங்குடமாக நீரை அருந்தினர். கசக்கும் காடியை அருந்திய பின்னரும் இனிக்கிறதென்று ஒருவர் கூறினார்.”
“நோன்பு கொள்ளும் முதிய அந்தணர்களுக்கும் அதிமதுரம் விலக்கல்ல என்பதனால் அவர்களும் அதை உண்டனர். பிறர் கொள்ளும் தவிப்பும் துள்ளலும் கூச்சலும் கொப்பளிப்பும் எவரையும் அதை தவிர்க்க விடவில்லை. நேற்று அந்தி முழுக்க அதிமதுரமே இங்கு கொண்டாட்டமாக இருந்தது. இரவிலும் நெடும்பொழுது இருளுக்குள் நகைப்பொலிகளும் கூச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இன்று காலையில் எழுந்தபோது அதிமதுரம் நாவிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. ஆனால் அந்த உவகை மட்டும் முகங்களில் எஞ்சியிருக்கிறது” என்றான் பாகன்.
யுயுத்ஸு பெருமூச்சுவிட்டு “இதை நான் எவ்வாறோ எதிர்பார்த்திருந்தேன்” என்றான். பின்னர் “விதுரர் வந்துவிட்டாரா?” என்றான். “இன்று சற்று பொழுது கழித்தே அவர் வருகிறார். அவரது படகு விசை கொண்டதல்ல. எதிர்க்காற்றில் இறங்க வேண்டியிருக்கிறது இங்கு” என்று பாகன் சொன்னான். பின்னர் “அங்கிருந்து மூன்றுமுறை கனகரைப்பற்றிய உசாவல் வந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றோம். இங்கிருந்து திருவிடத்து மாலுமி ஒருவருடன் அவர் படகில் சென்றதாக சொல்கிறார்கள். அவரை துரத்திச் செல்லவேண்டாம் என்று அரசரின் ஆணை” என்றான்.
யுயுத்ஸு தொலைவில் யுதிஷ்டிரனின் குடிலை கண்டான். குடிலுக்கு முன் இரு இளம்புரவிகள் நின்றிருந்தன. நகுலன் அவற்றுக்கு சேணமிட்டு பழக்கிக்கொண்டிருந்தான். அவை சேணத்தை உதறி அவ்விசையில் ஓடி சுழன்று நின்றன. சேணத்தை உதறும் பொருட்டு துள்ளி தங்களைத் தாங்களே சுழற்றிக்கொண்டன. ஒன்று ஓடிச்சென்று நிலத்தில் படுத்து முதுகை தரையில் பரப்பி கால்களை உதைத்தபடி புரண்டு எழுந்து தும்மியது. நகுலன் உரக்க நகைக்க அப்பால் இடையில் கைவைத்து நின்றிருந்த யுதிஷ்டிரனும் நகைத்துக்கொண்டிருந்தார்.
புரவி நகுலனை அணுகி அவனை முட்டி பின்னால் தள்ளியது. தடுமாறி பின்னால் விழச்சென்று நிலைகொண்டு அவன் அதை கடிவாளத்தைப் பற்றி கழுத்தைத் தடவி ஆறுதல்படுத்தினான். பின்னர் சேணத்தை அவிழ்த்து அப்பாலிட்டான். ஐயத்துடன் சேணத்தைப் பார்த்த பின் அருகே சென்று முகர்ந்து பார்த்து அது கனைத்தது. அருகே நின்று இன்னொரு புரவியும் கனைத்தது. இரு புரவிகளும் சேணத்திலிருந்து விலகி ஓட விழைபவைபோல வால் சுழற்றி கால்களை அறைந்து பாய்ந்து காட்டை நோக்கி ஓடின.
யுயுத்ஸுவின் தேர் சென்று நின்றதும் அவன் இறங்கி அவர்களை நோக்கி நடக்க நகுலன் “வருக, அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது?” என்றான். தலைவணங்கி “அங்கு அனைத்தும் முறையாகவே சென்றுகொண்டிருக்கிறது” என்ற பின் யுதிஷ்டிரனின் அருகணைந்து அவன் தலைவணங்கினான். யுதிஷ்டிரன் “அஸ்தினபுரியின் அரசுப் பொறுப்பை சுரேசர் சிறப்புற நிகழ்த்துகிறார் என்றே நினைக்கிறேன்” என்றார். “ஆம், தருணங்களுக்கேற்ப உயர்பவர் அவர். ஆட்சியில் மகிழ்பவரும்கூட” என்று யுயுத்ஸு சொன்னான். “அத்துடன் சம்வகை என்னும் மச்சர்குலத்துப் பெண்ணும் உடனிருக்கிறாள். அரசிக்குரிய ஆற்றல் கொண்டவள்” என்றான்.
“என்றும் அவர் உனக்கு துணையாக இருக்கக்கூடும்” என்றபின் யுதிஷ்டிரன் திரும்பி புரவிகளை பார்த்தார். காட்டுக்குள் புதர்கள் உலைய அவை ஓடும் ஓசைகள் கேட்டன. புதர்களின் சலசலப்பு காற்றின் அசைவென தெரிந்தது. “அஞ்சிவிட்டன” என்று அவர் நகுலனைப் பார்த்து சொன்னார். “இனி இச்சேணத்தை நோக்கி அவை வாரா. இவ்வாறு ஒன்று நிகழுமென்று அவை எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை.” யுதிஷ்டிரனைப் பார்த்து யுயுத்ஸு “ஆம், புரவிகள் சேணத்தை விரும்புவதில்லை” என்றான்.
நகுலன் “அவ்வாறல்ல. அரிதினும் அரிதாக சில புரவிகளே அறுதி வரை சேணத்தை எதிர்க்கின்றன. இப்போது அவை சேணத்தை அறிந்துவிட்டன. தங்கள் உடலுக்கு அவை உகக்கவில்லை என்று உணர்கின்றன. மீண்டும் மீண்டும் அவற்றுக்கு சேணம் அணிவிக்கவேண்டும். சேணம் இல்லாதபோது ஒரு குறையிருப்பதை அவை உணரவேண்டும். அதன் பின் சேணத்தை ஓர் அணியாக, தங்களுக்கு மதிப்பை உருவாக்கும் அடையாளமாக அவை எண்ணிக்கொள்ளும். சேணத்தால் பிற புரவிகளிலிருந்து தாங்கள் மேம்படுகிறோம் என்று அவை கருதும்போது படைப்புரவிகளாகிவிடுகின்றன” என்றான்.
சிரித்தபடி “புரவிகளும் மானுடரைப்போலத்தான். சேணத்தை ஆற்றல் எனக் கொண்டபின் சேணமில்லாத புரவிகளை பின்னர் அவை அணுகவிடா” என்றான் நகுலன். காட்டை கூர்ந்து நோக்கினான். புரவிகள் எல்லைக்கு வந்து மூக்கு விடைத்து அவர்களை நோக்கியபின் மீண்டும் காட்டுக்குள் துள்ளி வால்சுழற்றிப் பாய்ந்து மறைந்தன. “அந்தப் புரவிகள் திரும்பி இங்கே வரும். காட்டுக்குள் துள்ளி ஓடி ஓய்ந்த பின்னர் அவற்றுக்கு இச்சேணத்தின் நினைவு வரும். இது என்ன என்பதை அறிய விரும்பும். அந்த ஆவல்தான் தூண்டில் முள். அதிலிருந்து விலங்குகள் எளிதில் தப்ப இயலாது” என்றான்.
யுயுத்ஸுவின் தோளில் கைவைத்து யுதிஷ்டிரன் சொன்னார் “உன்னிடம் நான் கேட்க வேண்டுமென்று எண்ணினேன், இளையோனே. முதியவர் எங்ஙனம் இருக்கிறார்?” அவர் எவரை கேட்கிறார் என்று புரியாமல் யுயுத்ஸு வெறுமனே பார்த்தான். “நான் கணிகரை சொன்னேன்” என்றார் யுதிஷ்டிரன். யுயுத்ஸு அக்கணம் ஒரு திகைப்பை அடைந்தான். கணிகரை அவன் முற்றிலும் மறந்துவிட்டிருந்தான். அங்கிருந்த அனைவருமே அவரை முழுமையாக மறந்துவிட்டிருந்தார்கள். ஒருமுறை கூட ஏதேனும் பேச்சில் அவர் பெயர் எழுந்ததில்லை.
அவன் அவரை எண்ணிப்பார்த்தது எப்போது என்று பின்னால் திரும்பி நோக்கினான். நெடுங்காலத்துக்கு முன்பு. குருக்ஷேத்ரத்தின் போர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு. அவன் அவரைப்பற்றி அதன்பின் எதையும் உசாவவில்லை. “மூத்தவரே, உண்மையில் அவரை மறந்தேவிட்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அவரை எப்படி மறந்தோம்? எவர் நினைவிலும் எழாமல் எப்படி அவர் அகன்றார்?” என்றான் நகுலன். “என்ன ஆனார் அவர்? மருத்துவநிலையில் இருந்தார் என்று அறிந்தேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.
“அங்கிருந்து அவர் கிளம்பிச்சென்றதாக ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றான் யுயுத்ஸு. “அஸ்தினபுரியிலிருந்து அவர் சென்றதை எவருமே பார்க்கவில்லை. படைப்புறப்பாடு தொடங்கியபோதே அவர் நோயுற்று ஒடுங்கத் தொடங்கிவிட்டிருந்தார். அசைவிலாது தன் அறையிலேயே கிடந்தார். காற்று பட்டாலும்கூட வலி தாங்காது முனகினார் என்றார்கள். கதவை திறந்தால் அவ்வொளி அவர்மேல் படும்போது கைகளை நீட்டி கூச்சலிட்டு அழுதார். ஆகவே இருளிலேயே அவரை வைத்திருந்தார்கள். ஆதுரசாலைக்கு கொண்டுசென்று அங்கும் இருளிலேயே வைத்திருந்தார்கள். ஒருநாள் ஆதுரசாலையின் அறைக்கதவை திறந்தபோது அவர் அங்கில்லை.”
“தன்னந்தனியாக அவர் கிளம்பிச் சென்றிருக்க முடியாது. எவரோ அவரை கொண்டுபோயிருக்கலாம் என்றார்கள்” என்று யுயுத்ஸு சொன்னான். “ஆனால் அதைப்பற்றி எவரும் அங்கு கவலை கொள்ளவில்லை. பேரரசியின் நோக்கில் கணிகர் வெறுமனே எண்ணுவதற்கும் தகுதி கொண்டவர் அல்ல. அரசியருக்கும் உகந்தவரல்ல. அரசி பானுமதியும் அவரை வெறுத்தார். அவரை விரும்பிய ஒருவர் சகுனி மட்டுமே. அவரும் படைக்களம் சென்றுவிட்ட பின்னர் அஸ்தினபுரியில் அவருக்கு இடமிருக்கவில்லை. ஆகவே அவர் எங்கு சென்றார் என்று எவரும் எண்ணவில்லை.”
“எவரோ அவரை கொண்டுசென்றிருக்கக்கூடும். அல்லது ஒருவேளை கொன்றுவிட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதை மேலே சென்று உசாவி அறிய நானும் எண்ணவில்லை. உண்மையில் உசாவி அறியவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. நானும் விட்டுவிட்டிருக்ககூடாது” என யுயுத்ஸு தொடர்ந்தான். “துளி நஞ்சு எங்கேனும் எஞ்சக்கூடும். நஞ்சும் பகையும் எஞ்சலாகாது.” யுதிஷ்டிரன் “அவர் எஞ்சுவார். அவர் மறையும் ஒரு கணம் வரும். அதுவரை இருப்பார். அவ்வாறு அவர் அழிந்திருக்க வாய்ப்பே இல்லை” என்றார்.
“ஒற்றர்களை அனுப்புகிறேன்” என்று யுயுத்ஸு சொன்னான். “தேவையில்லை. அவர் மறைந்துவிட்டாரென்றால் அவ்வளவு எளிதாக அவரை கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அவர் தன் பணியை ஆற்றத்தொடங்கினால் எவராலும் அவரை மறைக்கமுடியாது” என்றார். யுயுத்ஸு “அவர் பேரரசர் திருதராஷ்டிரரை பார்க்க வரக்கூடுமோ?” என்றான். “வரமாட்டார். இனி அவர் அஸ்தினபுரிக்குள் நுழைய வாய்ப்பில்லை. அவர் செல்லக்கூடும் இடமென்ன என்று தெரியவில்லை” என்றான் நகுலன்.
“இவ்வெண்ணம் இப்போது உங்களுக்கு எப்படி வந்தது, மூத்தவரே?” என்றான் யுயுத்ஸு. “ஏன்?” என்று யுதிஷ்டிரன் அவனைப் பார்த்து திரும்பி கேட்டார். “ஏன் அவர் உங்களுக்கு இப்போது நினைவுக்கு வந்தார்? சென்ற நாட்களில் எப்போதும் நீங்கள் அவரை எண்ணிக்கொண்டதே இல்லையே?” யுதிஷ்டிரன் “ஆம், அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் அவரை நினைவுகூர்ந்தே நெடுநாட்களாகிறது. இப்போது அவர் இயல்பாக நினைவுக்கு வந்தார். இப்போதல்ல, இன்று காலை அவர் நினைவுக்கு வந்தார். கைமறதியாக எங்கோ வைத்த ஒரு பொருள் கிடைப்பதுபோல” என்றார்.
“ஏன் என்று நான் சொல்கிறேன்” என்று நகுலன் சொன்னான். “இன்று உவகையில் திளைக்கிறீர்கள். நாம் கொண்ட இழப்புணர்வையும் குற்றவுணர்வையும் கடந்துவிட்டிருக்கிறோம். விண்ணிலிருந்து பொழிந்த அமுதம்போல் தந்தையின் வாழ்த்து நம்மை மகிழ வைத்திருக்கிறது. இவ்வின்பத்தில் திளைக்க நம்மால் இயலவில்லை. இத்தனை பெரிய இன்பத்திற்கு தகுதியானவர்களா நாம் என்று எண்ணுகிறோம். இவ்வின்பத்தில் ஒரு பிழை இருப்பதாக உணர்கிறோம். அல்லது இன்பம் சலிக்கிறது.”
“இன்பத்திற்கு அப்பாலிருக்கும் துன்பமே இன்பத்தை பொருள் கொண்டதாக ஆக்கமுடியும் என்று நாம் எண்ணுகிறோம். அதற்காக தேடிக்கொண்டிருக்கிறோம். பொங்கும் பாலில் நீர் பட்டதுபோல் கணிகரின் எண்ணம் நம் அனைவரையும் அடங்க வைத்துவிட்டது. இனி முள்முனைக்கூரை தடவித்தடவி தினவு கொள்வதுபோல இதை துழாவிக்கொண்டிருப்போம். இதிலிருந்து நம்மால் மீள முடியாது. மூத்தவரே, இன்பத்தை கடந்துவிட்டோம். மீண்டும் கசப்பு. மீண்டும் தேடல்” என்றான் நகுலன்.
யுதிஷ்டிரன் “அவ்வாறல்ல. என் உள்ளம் இனிமையாகத்தான் இருக்கிறது. நீ சொல்வதுபோல அது பொங்கி கட்டற்று மேலெழுந்தது. இதோ கணிகர் எனும் துளியால் சற்று அமைந்தது. மெய்யாக அது ஈடுசெய்யப்பட்டுவிட்டது. இனி இன்பம் கொந்தளிப்பல்ல, நிலையழிவும் அல்ல. ஒரு நிகர்நிலை. அதுவும் நன்றுதான். வருக!” என்று யுயுத்ஸுவின் தோளைத்தட்டி குடிலுக்குள் அழைத்துச் சென்றார்.
யுயுத்ஸு அவருடன் நடக்கையில் “இன்று காலை அல்லது இன்று மாலை இளைய யாதவர் கணிகரைப்பற்றி ஏதேனும் சொன்னாரா?” என்றான். “இல்லையே” என்றபடி விழிசுருக்கி திரும்பி நோக்கினார் யுதிஷ்டிரன். “அவர் குறிப்புணர்த்தினாரா?” என்று மீண்டும் கேட்டான் யுயுத்ஸு. “நேற்று மாலை அவனை பார்த்தேன். நீர்க்கடன் இயற்றுவதைக் குறித்து மட்டும் பேசிக்கொண்டிருந்தோம். வேறொன்றும் நிகழவில்லை” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “எனில் நன்று” என்று யுயுத்ஸு கூறினான்.
நகுலன் “மூத்தவரே, நேற்று அவருடைய உரையிலிருந்துதான் வந்தது அது” என்றான். “அவன் கணிகர் பெயரை சொன்னானா?” என்று கேட்டபடி யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்தார். “இல்லை. ஆனால் ஒரு சொல் உரைத்தார். வஞ்சமும் வலியும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை என்று. வஞ்சம் ஒரு வலியே என்றார்” என்றான் நகுலன். “ஆம்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அப்போது நாம் கணிகரை நினைவுகூரவில்லை. ஆனால் நம் ஆழத்தில் கணிகரைப் பற்றிய எண்ணம் தொடங்கிவிட்டது. அது இப்போதுதான் தெரிகிறது” என்றான் நகுலன்.
“அதற்கு அவன் என்ன செய்வான்? அவன் கூறியது அதுவல்ல” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “அல்ல. அவ்வாறு தற்செயலாக ஒரு சொல்லை உரைப்பவரல்ல இளைய யாதவர். அச்சொல்லுக்கு முன்னும் பின்னும் அவர் விட்ட இடைவெளியை நினைவுகூர்கிறேன். அச்சொல் நம்மில் முளைக்க வேண்டும் என்றே அவர் சொல்லியிருக்கிறார். மூத்தவரே, ஐயமே இல்லை. கணிகரை நம்மில் எழுப்பியவர் அவர்தான்” என்றான் நகுலன். “என்ன சொல்கிறாய்?” என்று யுதிஷ்டிரன் திகைப்புடன் கேட்டார். “அதனால் அவன் இயற்றுவதுதான் என்ன?”
“இவ்வண்ணம் கூர்ந்து செல்வது நல்லதல்ல. கூர்மை கொண்ட எதுவும் பலி வாங்காது அமைவதில்லை. நம் குருதி, பிறர் குருதி” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் “மெய்” என பெருமூச்சுவிட்டார். யுயுத்ஸு “அவரிலிருந்துதான் அது தொடங்கியிருக்கும் என்று எனக்கு தோன்றியது” என்றான். “ஏன்?” என்றார் யுதிஷ்டிரன். “அதை என்னால் கூற இயலாது. ஆனால் கணிகரைக் காணும்போது ஒவ்வொருமுறையும் நான் இளைய யாதவரை எண்ணியிருக்கிறேன். இளைய யாதவரைக் காணும்போதெல்லாம் கணிகரையும் எண்ணியிருக்கிறேன்.”
“ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அறியேன். என் உள்ளுணர்வு என எழும் எதையும் எப்போதும் நான் ஆய்ந்தறிவதில்லை. ஆனால் அவ்வாறு தோன்றுகிறது” என்றான் யுயுத்ஸு. “வீண் அச்சம். அதிலிருந்து நம்மை நாம் குழப்பிக்கொள்கிறோம்” என்றார் யுதிஷ்டிரன். “இளையோனே, என் ஆணைகளை கூறுகிறேன். எழுதிக்கொள். நாளை காலை நீர்க்கடன் தொடங்க வேண்டும். இன்று மாலைக்குள் விதுரர் இங்கு வந்துவிடுவார். அவரிடம் ஆணைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் முன்னிலையில் அனைத்தும் நிகழட்டும்.”
“ஆணை” என்றான் யுயுத்ஸு. பெருமூச்சுடன் “நாளை தொடங்குகிறது” என்றபின் “நான் இன்னும் அன்னையையும் அரசியையும் பார்க்கவில்லை. நேற்றுவரை அவர்களைப் பார்க்கும் உளஆற்றல் எனக்கு இல்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் இன்று அவர்களை பார்க்க என்னால் இயலுமென்று தோன்றுகிறது. அவர்களிடம் சொல்வதற்கு சொற்கள் ஏதுமில்லை. சொற்கள் தேவையில்லை என்ற உணர்வை இன்று அடைந்திருக்கிறேன். மாலை விதுரர் வந்த பிறகு பேரரசியையும் அன்னையையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை இங்கு ஒருக்குக!” என்றார்.
யுயுத்ஸு தலைவணங்கினான். “முதற்புலரியில் நீர்க்கடன்கள் இங்கு தொடங்க வேண்டும். எத்தனை விரைவில் முடியுமோ அத்தனை விரைவில் இவற்றை முடிக்கவேண்டும். இங்கிருந்து கிளம்பியாக வேண்டும். நேற்று மாலையே இங்கிருந்து கிளம்பியாக வேண்டும் என்ற உணர்வை அடைந்துவிட்டேன். அவ்வுணர்வு வந்த பிறகு இங்கு ஒரு கணமும் தங்கியிருக்க முடியாதென்ற அளவுக்கு என் உள்ளம் விலகிவிட்டிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன். “ஆணை” என்று யுயுத்ஸு சொன்னான்.