நீர்ச்சுடர் - 29
பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 10
திருதராஷ்டிரரின் குடில் நோக்கி நடக்கையில் சற்று தயங்கி காலெடுத்து வைத்த நகுலன் சகதேவனின் தோளுடன் தன் தோளால் உரசிக்கொண்டான். அக்கணநேரத் தொடுகை அவனுள் இருந்த அழுத்தம் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி, எடையில்லாமல் உணரச்செய்தது. அவ்விடுதலை அளித்த இனிமையில் அவன் நின்றுவிட்டான். சகதேவன் திரும்பிப் பார்த்தான். நகுலன் இரண்டு அடி எடுத்து வைத்து மீண்டும் சகதேவனுடன் இணையாக நடக்கையில் இயல்பாக என கையை நீட்டி தன் இடக்கை விரல்களால் சகதேவனின் கைகளைப் பற்றி விரல் கோத்துக்கொண்டான். சகதேவன் விரல்கள் அவன் விரல்களை பற்றின.
இளஅகவையில் பெரும்பாலான தருணங்களில் அவர்கள் விரல்கோத்துக்கொண்டுதான் எங்கும் செல்வது வழக்கம். விளையாடும்போதுகூட விரல்களை சேர்த்திருப்பார்கள். கங்கையில் நீந்தும்போதும் ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டு நீந்தும் முறையை அவர்களே உருவாக்கிக்கொண்டார்கள். அமர்ந்திருக்கையில் பெரும்பாலும் நகுலனின் பீடத்தின் விளிம்பில் தொற்றிக்கொள்வது சகதேவனின் வழக்கம். புரவிகளில் செல்லும்போதுகூட இணையாக அவ்வப்போது இரு முழங்கால்களும் ஒட்டி தொட்டு உரசி மீளும்படியாகவே அமைவார்கள். ஒவ்வொரு பேச்சுக்குப் பின்னரும் ஒருவரை ஒருவர் விழிதொட்டுக்கொள்வதுண்டு.
அதைக் குறித்த புரிதலும், கூடவே மெல்லிய ஏளனமும் அரண்மனைச் சூழலில் இருந்தது. அவர்கள் உடல்கள் ஒன்றையொன்று ஒட்டியே கருவறைக்குள் இருந்து வெளிவந்தன, இரு தொப்புள் கொடிகள் ஒன்றையொன்று பின்னி முயங்கும் நாகங்கள் போலிருந்தன என்று செவிலியர் கூறுவர். கருவறைக்குள்ளேயே அவர்கள் ஒருவரையொருவர் கைகோத்திருந்தனர். இளமையில் ஒற்றைச் சொற்றொடரை சில சொற்களை ஒருவர் சொல்ல எஞ்சியதை பிறிதொருவர் சொல்லி முடிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. ஒருவரோடொருவர் பேசிக்கொள்கையில் இருவரும் இணைந்து ஒன்றையே சொல்லும் விந்தையை பிறர் பேச்சை நிறுத்தி வியப்புடன் பார்ப்பார்கள்.
அவர்கள் ஆடிப்பாவைகள். எப்போதேனும் ஆடியில் தன்னை நோக்கிக்கொண்டால் நகுலன் விரல் நீட்டி ஆடிப்பாவையின் விரலை தொடுவான். விழிகளுக்குள் நோக்கி புன்னகைப்பான். இளமையில் ஒருமுறை சகதேவன் உடல்நலமின்றி ஆதுரசாலைக்குச் சென்றபோது விடாது அழுதுகொண்டிருந்த நகுலன் அருகே பெரிய ஆடி ஒன்றை வைத்து அவ்வழுகையை நிறுத்தி உணவூட்டி தூங்க வைத்ததை செவிலி சொல்வதுண்டு. அவன் வளர்ந்த பின்னர் ஆடி நோக்குவதில்லை. அது ஒரு துணுக்குறலை அளித்தது. ஆடியில் தோற்றம் பெருகும் உணர்வாலேயே அதை மானுடர் விழைகிறார்கள். அவன் தான் மட்டும் ஆடியில் நோக்கினால் இருப்புக் குறைவை உணர்ந்தான். இருவராக ஆடி நோக்கினால் ஆடியில் ஒருவரை இன்னொருவர் நோக்குவர். ஒருவர் விழிகளை இன்னொருவர் நோக்கி புன்னகைப்பர்.
பின்னர் அவர்கள் மெல்ல பிரியலாயினர். நகுலன் புரவிநூலையும் கொட்டில்களையும் சூதர்களையும் நோக்கி செல்ல சகதேவன் சுவடிகளில் பதிந்த ஊழின் ஆடல் நோக்கி தன் சித்தத்தை திருப்பினான். அதில் இருந்த விந்தையை ஒருமுறை இயல்பாகப் பேசும்போது யுதிஷ்டிரன் சொன்னார் “ஒருவன் புறவுலகு நோக்கி சென்றிருக்கிறான். புரவிக்கலை அகமற்றது. இதோ இங்கே இக்கணம் என கண்முன் நிகழ்வது. புரவி ஐம்புலனுக்கும் முன் நின்றுள்ளது. இன்னொருவன் அகக்கலையை நாடுகிறான். நிமித்தநூலென்பது புறத்தை முற்றே விலக்கி அகத்திலிருந்து மெய் காண்பது. நிமித்திகன் புறத்தை உணர்ந்தான் எனில் நிகழ்காலத்தில் சிக்கிக்கொள்வான். நேற்றையும் நாளையையும் அறிவதற்குத் தடையாக இங்கு திகழும் மாயை என்பது நிகழ்காலமே. நிமித்தநூலென்பது நிகழ்காலத்திற்கெதிரான முடிவிலா போரென்றனர் மூதாதையர்.”
“ஆம், அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்கிறார்கள்” என்று அன்று அவையிலிருந்த விதுரர் சொன்னார். “எதிரெதிர் திசையில் சென்றும் அவர்கள் தங்களை நிறைத்துக்கொள்ளலாம்” என்றார் பீஷ்மர். எப்போதேனும் சகதேவனின் நிமித்தக்களங்களில் புரவிகள் தோன்றியுள்ளனவா என்று நகுலன் எண்ணிக்கொண்டான். அவன் புரவிக்கால்களால் கடக்கப்படும் பன்னிரு களத்தை தன் கனவுகளில் உணர்வதுண்டு. புரவிகள் எப்போதுமே தொடுவான் எல்லை நோக்கி செல்கின்றன. ஓடும் புரவிகளில் ஒன்று, பல்லாயிரத்தில் ஒருமுறை, அத்தொடுவானில் ஏறிக்கொள்ளக்கூடும். அக்கணமே அது உருவழிந்து அனலுடல் கொண்டு மறையும்…
குடில் வாயிலை அடைந்து யுதிஷ்டிரன் தயங்கி நின்றார். அருகணைந்த இளைய யாதவர் அவரிடம் முன்னால் செல்லும்படி கைகாட்ட முணுமுணுக்கும் குரலில் “நீ முதலில் நுழைவதே முறையாக இருக்கும், இளைய யாதவனே” என்றார் யுதிஷ்டிரன். அவருக்குப் பின்னால் நகுலனும் சகதேவனும் நிற்க அவர்களுடன் உடல் முட்ட இளஞ்சிறுவன் என தடுமாறினார். பீமனும் அர்ஜுனனும் தொடர்ந்து வந்தனர். உள்ளிருந்து சஞ்சயன் வெளிவந்து சொல்லின்றி தலைவணங்கினான். யுதிஷ்டிரன் “இருக்கிறாரா?” என்றார். “ஆம், அரசே. இருவரும் தங்களுக்காக காத்திருக்கிறார்கள்” என்று சஞ்சயன் சொன்னான். “நாங்கள் ஐவரும் வருவதை அவர் அறிவாரா?” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார். “முன்னரே கூறிவிட்டேன்” என்று சஞ்சயன் சொன்னான்.
மேலும் தயங்கி தலையிலிருந்த இறகை சீர்படுத்தியபின் “எதன் பொருட்டென்று கூறினீர்களா?” என்று யுதிஷ்டிரன் மீண்டும் கேட்டார். “ஆம், அவர்கள் அறிவார்கள்” என்றான் சஞ்சயன். இளைய யாதவர் “பிறகென்ன? நீங்கள் ஐவரும் முதலில் செல்லலாம். அதுவே முறையாகும்” என்றார். பீமன் பெருமூச்சுவிட்ட ஒலி உரக்கக் கேட்க நால்வரும் திரும்பி நோக்கினர். அவன் மார்பில் கட்டியிருந்த கைகளை தாழ்த்திக்கொண்டான். அவன் கண்களுக்குக் கீழே சுருக்கங்கள் அடர்ந்து கருகியிருந்தன. வாயை இறுக மூடியிருந்தமை சுருக்கிப்பிடித்த கைமுட்டி என உதடுகளை தோன்றச்செய்தது.
யுதிஷ்டிரன் தன் உடலை இறுக்கி மீண்டும் தளர்த்தி “நான் என்னவென்று உரைப்பது?” என்றார். “சற்று முன் முறைமைச்சொற்களே உங்களுக்கு இயல்பானது என்றீர்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், ஆனால் அனைத்துச் சொற்களையும் இப்போது மறந்தவன் போலிருக்கிறேன்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “தெய்வங்களுக்கு முன் நாம் முறைமைச்சொற்களைக் கூறி வேண்டிக்கொள்வதில்லை” என்றபின் “உங்கள் உள்ளம் நிகழ்க! செல்க!” என்றார் இளைய யாதவர். பெருமூச்சுவிட்டு தன் தலையிலணிந்த தலைப்பாகையை மீண்டும் சீரமைத்து மேலாடையை இழுத்துவிட்டு திரும்பி சகதேவனையும் நகுலனையும் பார்த்துவிட்டு யுதிஷ்டிரன் குடிலுக்குள் நுழைந்தார்.
நகுலனும் சகதேவனும் சிறிய இடைவெளி விட்டு அவர்களை தொடர்ந்தனர். பீமன் குடிலின் வாயிலிலேயே நின்றுவிட இளைய யாதவரின் அருகே சென்று அர்ஜுனன் நின்றான். அறைக்குள் சுவர் ஓரமாக சங்குலன் நின்றிருந்தான். அவன் ஒரு அடிமரத்தடியை தூணாக நிறுத்தியதுபோல் தோன்றினான். அவனுடைய பருத்த தோள்களும் விரிந்த நெஞ்சும் மேலும் பெருகிவிட்டிருந்தன. போருக்குப் பின்னர் அனைவருமே உடல்கரைந்துகொண்டிருக்கையில் அவன் மட்டும் பொலிவுகொண்டு வளர்ந்திருந்தான். நகுலன் அவனுடைய நரம்புகளின் புடைப்பையும் முடிச்சுகளையும் நோக்கிக்கொண்டிருந்தான். அரசரில் மறைந்துவிட்டவை அவனில் சென்று சேர்கின்றனவா?
அவர்களுக்குப் பின்னால் வந்த சஞ்சயன் உள்ளே நுழைந்து குடிலுக்குள் மூங்கில் பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரரை அணுகி “தங்கள் மைந்தர்கள் பார்க்கும்பொருட்டு வந்திருக்கிறார்கள், பேரரசே” என்று அறிமுகம் செய்தான். திருதராஷ்டிரர் நெடுநாட்களுக்குப் பின்னர் அன்று புத்தாடை அணிந்திருந்தார். வெண்ணிற மென்பட்டாடை அவர் இடையில் சுற்றி, புகையென மேலெழுந்து, வலத்தோளை வளைத்து முதுகிலிறங்கி சுழன்று வந்து மடியில் விழுந்திருந்தது. கரிய தசைகள் புடைத்து இறுகியிருந்த பெருந்தோள்கள் அந்த ஆடையில் இருபுறத்திலும் விரிந்து கிளையெழுந்த வேங்கை அடித்தடியென தோன்றின. ஆனால் அவர் நன்கு மெலிருந்திருப்பது வயிற்றுத்தசைகளில் பரவியிருந்த நரம்புகளாலும் விலா எலும்புகளின் புடைப்புநிரையாலும் தெரிந்தது.
திருதராஷ்டிரர் தலையை சற்றே திருப்பி செவிகளால் அவர்களை பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தார். பற்களை இறுகக் கடித்து வாயை மூடியிருந்தமையால் உதடுகள் குவிந்திருந்தன. இரு விழிகளும் ஊற்றெழும் கொப்புளங்கள்போல அசைந்தன. நரையோடிய குழல்கற்றைகள் தோளில் விழுந்து கிடந்தன. பீடத்திலிருந்து விழுந்து மடிந்த கால்கள் குடிலின் தரையில் ஆழப்பதிந்து தொல்மரத்து வேர்கள்போல் தோன்றின. அவன் அக்கால்களை சில கணங்கள் நோக்கினான். அல்லது அது ஒரு கணம் மட்டும்தானா? பெரிய பாதங்களில் புடைத்த நரம்புகள். மின்னும் விழிகொண்ட நகங்கள். கணுக்கால் முழை இரும்பாலானதுபோல. அவர் பேரெடைகளைத் தூக்கி தன் கால்மேல் வைத்து மறுகாலில் நின்று அதை தலைவரை தூக்குபவர்.
அவர் அருகே காந்தாரி நீலத் துணியால் கண்களை மூடி இரு கைகளையும் கோத்து மடியில் வைத்து அமர்ந்திருந்தாள். மெல்லிய பொற்பின்னலால் அணிகள் செய்த பட்டாடையை அணிந்து அதன் முகப்பை எடுத்து தலையில் சுழற்றி அணிந்திருந்தாள். அவள் வெண்ணிறக் கன்னங்களில் நீல நரம்புகளின் பரவலை நகுலன் கண்டான். கழுத்து நரம்பு புடைத்து முடிச்சுகளுடன் தெரிந்தது. பசுநீலக் கொடியொன்று படர்ந்தேறியதுபோல். இளம்பாளையில் வரிகள் என கன்னங்களிலும் தோளிலும் குருதிக்கொடிகள். இரு கைகளும் வெண்தந்தங்கள்போல் உருண்டு திகைப்பூட்டும் அளவுக்கு பெரிதாக தெரிந்தன. அக்கைகளில் அளவுக்குப் பொருந்தாத சிறிய உள்ளங்கை. செந்நிறமான சிறு விரல்கள். அவை ஒன்றோடொன்று கோத்திருந்தன. அவற்றில் எந்த அசைவும் இல்லை என்பதை நகுலன் கண்டான்.
சஞ்சயனின் சொற்களை திருதராஷ்டிரர் கேட்டதுபோல் தெரியவில்லை. அவன் மீண்டும் அருகே சென்று “பேரரசே, தங்கள் மைந்தர்கள் யுதிஷ்டிரனும் இளையோரும் வாழ்த்துச்சொல் பெறும்பொருட்டு வந்திருக்கிறார்கள். தங்கள் முன் நின்றிருக்கிறார்கள்” என்றான். நீர்ப்பரப்பில் சருகு விழுந்ததுபோல் ஓர் அசைவு திருதராஷ்டிரரில் தோன்றியது. உறுமலோசையுடன் “ஆம்” என்றார். யுதிஷ்டிரன் தோள்கள் நடுங்க கூப்பிய கைகள் அருவிவிழும் இலைகள்போல் துள்ளிக்கொண்டிருக்க தலைகுனிந்து நின்றார். தன் மூச்சு அவர் மேல் பட்டால்கூட அவர் நிலையழிந்து விழுந்துவிடக்கூடும் என்று நகுலன் எண்ணினான்.
யுதிஷ்டிரனை மெல்ல தொட்டு சகதேவன் “வணங்குக, மூத்தவரே!” என்றான். யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். ஆனால் நடுங்கும் உடலுடன் அசையாமல் நின்றார். மீண்டும் அவரைத் தொட்டு “செல்க!” என்று சகதேவன் சொன்னான். யுதிஷ்டிரன் திரும்பி இளைய யாதவர் எங்கே என்று பார்த்தார். சகதேவனுக்கும் நகுலனுக்கும் பின்னால் பீமனும் அர்ஜுனனும் வந்து நிற்பதை பார்த்தபின் திகைப்புடன் உதடுகளை மட்டும் அசைத்து “அவன் எங்கே?” என்றார். சகதேவன் திரும்பிப்பார்த்து “அவர் வெளியே நின்றிருக்கிறார்” என்று ஓசையிலாது சொன்னான். “அவன் எங்கே?” என்று மீண்டும் யுதிஷ்டிரன் கேட்டார். “தேவையெனில் வருவார்” என்று சற்று ஓசையெழ சொன்ன சகதேவன் “செல்க!” என்று சொன்னான்.
அச்சொல்லின் கூர்மையால் யுதிஷ்டிரன் சற்றே உடல் விதிர்த்து அடியெடுத்து வைத்தார். பின்னர் அங்கேயே கால் மடித்து நிலத்தில் அமர்ந்தார். கைகளைக் கூப்பி அதன் மேல் தன் நெற்றியை அமைத்து “வணங்குகிறேன், தந்தையே. தங்கள் அருட்சொல் கொள்ள வந்தேன்” என்றார். “ஆம்” என்று திருதராஷ்டிரர் சொன்னார். அவருடைய வலது கை எழுந்து காற்றில் துழாவியது. “எங்கிருக்கிறாய், மைந்தா… அருகில் வா” என்றார். யுதிஷ்டிரன் தன்னை அறியாது சற்றே பின்னடைந்து “தந்தையே, நான் தங்கள் மைந்தன்… தங்கள் அடிபணியும் இழிந்தோன்” என்றார். “என் உடன்பிறந்தாருடன் தங்களை நாடி வந்திருக்கிறேன். தந்தை பாண்டுவும் நுண்வடிவில் எங்களுடன் இங்கு வந்திருக்கிறார் என்பதை உணர்கிறோம்.”
திருதராஷ்டிரர் நடுங்கத் தொடங்கினார். சகதேவன் முன்னால் ஓர் அடி வைத்து “வணங்குகிறோம், தந்தையே. மூத்தவர் இன்னும் சில நாட்களில் அஸ்தினபுரியின் முடிசூடவிருக்கிறார். அதற்குமுன் இங்கு நீத்தார் அனைவருக்கும் நீர்க்கடன் செய்யவேண்டி உள்ளது. அனைத்துச் சடங்குகளுக்கும் குலமூத்தார் என்றும் பேரரசர் என்றும் தங்கள் வாழ்த்து தேவைப்படுகிறது. அதன்பொருட்டே இங்கு வந்தோம்” என்றான். இரு கைகளையும் நீட்டி காற்றைத் துழாவியபடி “எங்கிருக்கிறீர்கள்? அருகே வருக!” என்று திருதராஷ்டிரர் சொன்னார். அவருடைய முகம் அழுகையில் நெளிந்தது. “அருகணைக, மைந்தர்களே!” என்று அவர் அழைத்தார்.
சகதேவன் அவரை கூர்ந்து நோக்கியபடி “நாங்கள் அஞ்சுகிறோம், தந்தையே… நாங்கள் கொண்டது உங்கள் மைந்தரின் நிலம். மூத்தவர் சூடப்போவது உங்கள் மணிமுடி” என்றான். திருதராஷ்டிரர் “எவ்வாறெனினும் அஸ்தினபுரிக்கு உகந்த அரசன் அமைந்தது நன்று. என் இளையோன் விண்ணிலிருந்து மகிழ்வான். அவன் நிறைவுறுக! என் மைந்தர் சிறப்புறுக! வாழ்க நம் குலம்! குடியும் நகரும் நலம் பெறுக!” என்றார். அவருடைய கைகள் அலைபாய்ந்தன. விழிகளிலிருந்து நீர் வழிந்தது. “இனியேனும் அனைத்தும் சீர்ப்படவேண்டும். நம் குடி மகிழ்வுகொள்ள வேண்டும்.”
யுதிஷ்டிரன் எழுந்து பிடித்துத் தள்ளப்பட்டவர்போல் முன்சரிந்து திருதராஷ்டிரரின் கால்களின் கீழ் விழுந்து தன் தலையை அவர் பாதங்களில் வைத்துக்கொண்டார். “எந்தையே, பெரும்பழி செய்தவன் நான். தாங்கள் இடும் அனைத்து தீச்சொற்களுக்கும் தகுதியானவன். உங்கள் சொல்லால் சுட்டெரிக்கப்படுவேன் எனினும் அது முறையே என்று எண்ணுவேன். கீழ்மகன், உள்ளிருந்து ஆட்டி வைக்கும் எளிய விழைவுகளால் இயக்கப்படும் சிறியவன். தங்கள்முன் அதற்கப்பால் ஒன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றார்.
திருதராஷ்டிரர் குனிந்து அவர் இரு தோள்களையும் பற்றி, சிறுகுழவியெனத் தூக்கி, தன் மடியில் அமர்த்தி, இரு கைகளால் அவரை வளைத்து அணைத்து தன் நெஞ்சோடு இறுக்கிக்கொண்டார். “தந்தையே! தந்தையே!” என்று கூறியபடி தன் முகத்தை அவர் மார்பின்மீது அமிழ்த்தி நடுங்கியபடி யுதிஷ்டிரன் அழுதார். அவர் சூடிய தலைப்பாகை செம்பருந்தின் இறகுடன் திருதராஷ்டிரரின் காலடியில் கிடந்தது. திருதராஷ்டிரர் சிறுகுழவியை என யுதிஷ்டிரனின் இரு கன்னங்களிலும் முத்தமிட்டு அவர் தோளையும் முதுகையும் தன் அகன்ற கைகளால் வருடினார். “துயருறாதே… நீ அறத்தோன். அறத்தின்பொருட்டே நீ விழிநீர்விடுகிறாய். அது நம் குடிக்கு நன்றே என்று அமையும்” என்றார்.
நடுங்கும் முதிய குரலில் “இவையனைத்தும் நம் கைகளில் இல்லை. நாம் இயற்றக்கூடுவது இனி நல்லாட்சி ஒன்றே. அஸ்தினபுரிக் குடிகள் துயருற்றுவிட்டார்கள். இனி அவர்களுக்கு உனது கோலே காப்பு” என்றார். அவர் விழிகளிலிருந்து நீர் வழிந்து யுதிஷ்டிரனின் தலையிலும் தோளிலும் சொட்டியது. யுதிஷ்டிரன் “இளமைந்தன் என்று தங்கள் மடியில் அமர்ந்ததைப்போல் இப்பிறப்பில் பிறிதொரு பேறு எனக்கு அமைந்ததில்லை. இது போதும், தந்தையே” என்று சொன்னபோது குரல் உடைந்து தேம்பி அழுது தளர்ந்து நினைவழிந்ததுபோல் அவர் தோள்களில் தலை தொய்ந்தார்.
சகதேவன் முன்னால் சென்று குனிந்து திருதராஷ்டிரரின் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக, தந்தையே!” என்றான். நகுலனும் இயல்பாக உடன் சென்று வணங்கி “தங்கள் நற்சொல் பெற விழைந்தோம், தந்தையே” என்றான். யுதிஷ்டிரனை இடக்கைக்கு மாற்றி வலக்கை நீட்டி அவர்கள் இருவரையும் பற்றி இழுத்து தன் வலத்தொடை மேல் அமரச்செய்து உடலுடன் சேர்த்து இறுக்கி அவர்கள் தலைகளையும் முகத்தையும் வருடினார் திருதராஷ்டிரர். “மைந்தர் இல்லையென்று ஒருகணம் எண்ணுவேன். மறுகணம் உங்கள் நினைவு வராமல் இருந்ததில்லை. இதோ இந்தக் குழல்மணத்தை எத்தனை காலமாக அறிந்திருக்கிறேன். என் இளையோன் மைந்தர் நீங்கள். என் மைந்தரைவிட நான் தலைக்கொள்த்ள தக்கவர். சிறப்புறுக! குடி அழியாது பெருகுக! வெற்றியும் புகழும் அமைக! பிறவி நிறைவடைக!” என்றார்.
நகுலன் உடல் தளர்ந்து சரிந்து அவர் தொடையிலிருந்து இறங்கி நிலத்தில் அமர்ந்து அவர் முழங்கால் முட்டில் தலைவைத்து நெஞ்சு பிளக்கும் ஒலியுடன் அழுதான். சகதேவன் கண்ணீர் விட்டபடி அவரது வலத்தோளில் தலை சாய்த்தான். யுதிஷ்டிரன் அவருடைய இடத் தொடையிலிருந்து மெல்ல எழுந்து நின்று கண்களைத் துடைத்தபின் திரும்பி அர்ஜுனனை நோக்கி “வருக!” என்றார். அர்ஜுனன் தழல் எனத் தவித்த அசைவுடன் நின்றிருந்தான். ஒருகணம் தயங்கி பின்னால் வளைந்து மறுகணம் ஓரடி எடுத்து வைத்து தயங்கி பின்னர் ஓடிவந்து அவர் காலடியில் விழுந்து ஓலம் என ஒலித்த குரலில் “தந்தையே, நான் பார்த்தன். தங்கள் பெயர்மைந்தரைக் கொன்றவன். பிதாமகர்களையும் ஆசிரியர்களையும் களத்தில் வீழ்த்திய பழிகொண்டவன். தாங்கள் அளிக்கும் எச்சொல்லுக்கும் தகுதியானவன்” என்றான்.
திருதராஷ்டிரர் தன் கைகளை அவன் தலைமேல் வைத்து குழல்கற்றையைப் பற்றி மெல்ல தூக்கி “இனி இத்தகைய சொற்களால் என்ன பயன்? இவற்றைக் கடந்து செல்க! கொலை போர்க்களத்தில் நின்றிருக்கும் ஷத்ரியனுக்குரிய அறமே. களம் நிகழ்பெருக்குகளின் வெளி என்பதால் அங்கு மீறலும் இயல்பானது. அதற்கு மாற்றுகளும் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன. ஷத்ரியனென போருக்கெழுந்தவன் எந்நிலையிலும் ஷத்ரியன் என்றே நின்றிருக்கவேண்டும். ஆற்றியவற்றின்பொருட்டு குற்றஉணர்வு கொள்ளலும் வென்றபின் சோர்வும் தோல்வியில் பணிவும் அவனுக்குரியவை அல்ல. கடந்து செல்க! உன் விண்வாழும் தந்தையின் அருள் உனக்குண்டு. அஸ்தினபுரிக்குக் காவலென உன் காண்டீபம் அமையட்டும்” என்றார்.
அர்ஜுனன் விம்மி அழத்தொடங்க அவர் அவன் காதைப் பிடித்து உலுக்கினார். “மைந்தா, விளையாட்டுக் குழந்தையென்றே உன்னை அறிந்திருக்கிறேன். இப்போதும் என் உள்ளத்தில் உனது இளம் புன்னகையே நிறைந்திருக்கிறது. அதுவன்றி பிறிதொன்றை அறியவும் நான் விழையவில்லை” என்றார் திருதராஷ்டிரர். திருதராஷ்டிரரின் அருகிலிருந்து காந்தாரியின் பக்கமாகச் சென்று குனிந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக, அன்னையே!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அவள் தன் இரு கைகளையும் அவர் தலையில் வைத்து “பாரதவர்ஷத்தை முற்றாள்க! உன் குலம் பெருகுக! உன் கோலால் குடி செழிக்கட்டும். நலம் பெறுக! நிறைவுறுக!” என்று வாழ்த்தினாள்.
அர்ஜுனன் எழுந்து சொல்லின்றி காந்தாரியின் தாள் தொட்டு வணங்க “மேலும் மேலும் வெற்றி அமைக! வெற்றியில் உளம் திளைக்கும் இளமையும் உடன் அமைக! துயரனைத்தும் விலகி அகம் தெளிக!” என்று காந்தாரி சொன்னாள். நகுலன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தபோது அதிலிருந்த மலர்ந்த புன்னகை அவன் அகத்தை படபடக்க வைத்தது. அமர்ந்தபடியே கைகளை நீட்டி அவள் கால்களைத் தொட்டு “வாழ்த்துக, அன்னையே!” என்றான். தன் கைகளால் அவன் தலையைத் தொட்டு குழல்பற்றி மெல்ல உலுக்கி “நலமும் நிறைவும் பெறுக!” என்றாள். பின்னர் அவளை வணங்கிய சகதேவனின் தலையைத் தொட்டு “உங்கள் அன்னை துயருற்றிருக்கிறாள். நீங்கள் சிறப்பும் உவகையும் பெறுவதைக் கண்டு அவள் மீளக்கூடும். அன்னையின் பொருட்டும் நீங்கள் சிறப்புற வேண்டும்” என்றாள் காந்தாரி.
சகதேவன் பெருமூச்சுவிட்டு கண்களை மூடி திருதராஷ்டிரரின் தொடைமீது தன் தலையை வைத்துக்கொண்டான். அதன் பின்னரே யுதிஷ்டிரன் பீமனை உணர்ந்தார். நிமிர்ந்து அவனைப் பார்த்து “அருகே வருக!” என்று கைகாட்டினார். பீமன் அவர்களை மாறி மாறி பார்த்தபடி குடில் வாயிலில் நின்றான். அவன் முகத்திலிருந்த ஐயமும் பதற்றமும் நகுலனுக்கு எரிச்சலை உருவாக்கியது. அவன் முகத்தை திருப்பிக்கொண்டான். பீமனுக்குப் பின்னால் இளைய யாதவர் வந்து நின்றார். அவருக்குப் பின்னால் கவச உடை அணிந்த ஏவலன் ஒருவன் வந்தான். யுதிஷ்டிரன் பற்களைக் கடித்து சினத்துடன் “அருகே வருக!” என்று விழிகளால் பீமனுக்கு ஆணையிட்டார்.
பீமன் மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து திருதராஷ்டிரரை நோக்கி வந்தான். நகுலனும் சகதேவனும் திருதராஷ்டிரரின் அருகிலிருந்து எழுந்தனர். நகுலன் திருதராஷ்டிரருக்குப் பின்னால் சென்று நின்றான். சகதேவன் காந்தாரியின் அருகே நின்றான். யுதிஷ்டிரன் “வணங்குக!” என்று பீமனை நோக்கி கைகாட்டினார். பீமன் திருதராஷ்டிரருக்கு சற்று அருகே வந்து நின்றபோது அவன் உடலிலிருந்து வெம்மை எழுவதுபோல் தோன்றியது. அவன் உடலெங்கும் தசைகள் நெளிந்தன. அவனுக்குப் பின்னால் இளைய யாதவர் வந்து நின்றார். யுதிஷ்டிரன் “தந்தையே, தங்கள் அன்புக்குரிய மைந்தன் விருகோதரன் வந்திருக்கிறான்” என்றார்.
இரு கைகளையும் விரித்து புன்னகையுடன் “வருக, மைந்தா!” என்று திருதராஷ்டிரர் அழைத்தார். பீமன் விம்மியபடி கால்மடித்து முழந்தாளிட்ட கணத்தில் இளைய யாதவர் தனக்குப் பின்னால் வந்த ஏவலனின் தோளைப்பற்றிச் சுழற்றி முன்னால் நிறுத்தினார். அப்போதுதான் அது துரியோதனன் சமைத்த இரும்புப் பாவை என்பது நகுலனுக்குத் தெரிந்தது. முன்னால் வந்து சரிந்து திருதராஷ்டிரரின் கைகளுக்கு நடுவே அது விழுந்தது. “மைந்தா! துரியோதனா!” என்று வீறிட்டபடி திருதராஷ்டிரர் அந்த இரும்புப் பாவையை இரு கைகளாலும் பற்றிச் சுழற்றி நெஞ்சோடணைத்து இறுக்கினார். அதன் இரும்புத்தகடுகள் நொறுங்கின. உள்ளமைந்த விற்சுருள்கள் உடையும் ஓசை கேட்டது. இடுப்பும் இரு தோள்களும் உடைந்து நெளிந்துருமாற பாவை அவர் கைகளில் வளைந்து மடியில் விழுந்தது.