நீர்ச்சுடர் - 28
பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 9
யுதிஷ்டிரனின் குடிலுக்கு வெளியே நகுலன் காத்து நின்றிருந்தான். அவனருகே சகதேவன் நின்றிருக்க சற்று அப்பால் வேறு திசை நோக்கியபடி பீமன் மார்பில் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். மேலும் அப்பால் சிறிய முள்மரம் ஒன்றுக்கு அடியில் இருந்த உருளைக்கல் மீது அர்ஜுனன் அமர்ந்து முழங்காலில் கைமுட்டுகளை மடித்தூன்றி தலைகுனிந்து நிலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் குழல்கற்றைகள் சரிந்து முகம் மீது தொங்கிக்கிடந்தன. அவன் குரலைக் கேட்டே எவ்வளவு நாள் ஆகிறது என நகுலன் எண்ணிக்கொண்டான்.
காலை வெயில் எழுந்து முற்றத்தில் கண்கூசும்படி பரவி இருந்தது. ஈரமண்ணிலிருந்து எழுந்துகொண்டிருந்த வெக்கை மூச்சு திணற வைத்தது. மரங்கள் அனைத்திலிருந்தும் நீராவி எழுவதுபோல் தோன்றியது. காற்றில் பரவியிருந்த ஆவியே வியர்வையாக உடலில் வழிகிறதா? எங்காவது அமரவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் அங்கே எங்கும் அமர்வதற்கான இடம் இருக்கவில்லை. முக்தவனத்தில் பெரும்பாலானவர்கள் மண்ணிலேயே அமர்ந்தார்கள். நகுலன் குடில்நிரைகளை நிமிர்ந்து நோக்கினான். வெயிலுக்கு அப்பால் அவை மெல்ல அலைகொள்வதுபோலத் தோன்றியது. கண்களை ஒளி கூசச்செய்து விழிநீரை வரவழைத்தது.
குடிலுக்கு வலப்பக்கம் காட்டின் ஓரமாக ஒற்றைப்புரவித்தேர் நின்றிருந்தது. சேணம்பூட்டி நுகத்தில் கட்டப்பட்ட புரவி தரையிலிருந்து சருகு ஒன்றை எடுத்து வெறுமனே மென்றுகொண்டிருந்தது. அதன் கழுத்துமணிகள் ஒலித்தன. பீமனின் புரவி எடைமிக்கது. அது ஒற்றைக்காலைத் தூக்கி தலைதாழ்த்தாமல் துயின்றுகொண்டிருந்தது. அப்பால் முள்மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த அர்ஜுனனின் புரவி துயிலவில்லை. ஆனால் எப்போதுமே அது துயில்கொள்வது போன்ற அமைதியுடன் இருப்பதைத்தான் நகுலன் கண்டிருக்கிறான்.
நகுலனின் புரவி குடிலுக்கு அப்பால் மரத்தடியில் தலை தாழ்த்தி நின்றது. தலை தாழ்த்துகையில் அது கழுதைபோல் மாறுவதை நகுலன் எப்போதுமே உணர்வதுண்டு. அனைத்துப் புரவிகளுக்குள்ளும் ஒரு கழுதை உறைகிறதென்று அவனுக்கு புரவித்தொழில் கற்றுக்கொடுத்த சூதரான ஜீமுதர் கூறுவதுண்டு. கழுதையிலிருந்து புரவி எழுந்தது என்பது அவருடைய குலக்கதைகளில் ஒன்று. அவருடைய எல்லா கதைகளுமே வேடிக்கையானவை. அவை குழந்தைகளுக்குரியவை, அவர்கள் குழந்தைப்பருவத்திற்குமேல் கதைகளை நாடுவதில்லை. “கழுதையின் தவமே புரவியாயிற்று. ஒவ்வொரு கழுதையும் தன்னுள் ஒரு புரவியை மீட்டிக்கொண்டிருக்கிறது. நீரில் தன்னை புரவியென அது பார்த்துக்கொள்கிறது. கனவுகளில் புரவியென விரைகிறது. பல்லாயிரம் கழுதைகளில் ஒன்று தன் உடலின் எல்லைகளைக் கடந்து உயிரின் விசையைப் பெருக்கி புரவியென ஆயிற்று” என்று அவர் சொன்னார்.
“புரவிகுலம் கழுதைகளைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது. தொலைவுகளை ஆண்டது. நிலம்வெல்லும் படைக்கலமாயிற்று. அரசப்புரவியென அணிகொண்டது. இந்திரனும் கதிரவனும் அதை தங்கள் ஊர்தி எனக் கொண்டனர். பின்னர் ஒருமுறை புரவி உணர்ந்தது, தன்னுள் கழுதை உறைவதை. அதை அஞ்சியது, அருவருத்தது. கழுதையல்ல தான் என்று ஒவ்வொரு கணமும் எண்ணத் தலைப்பட்டது. கழுதை இயல்புகள் அனைத்தையும் மறக்கவும் மறைத்துக்கொள்ளவும் முயன்றது. அதன் பொருட்டே புரவிகள் அத்தனை தன்னுணர்வு கொண்டதாயின. நோக்குக, புரவி துயில்வதே இல்லை! அரை உணர்வு நிலையிலேயே எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. சற்று துயின்றால், சற்று தசைகளை தளரவிட்டால், சற்று தலை தாழ்த்தினால் கழுதையாகிவிடுவோம் என்னும் அச்சம் புரவியை எப்போதும் துரத்திக்கொண்டிருக்கிறது.”
உரக்க நகைத்து ஜீமுதர் சொன்னார் “அவ்வகையில் கழுதை நல்லூழ் கொண்டது. அது தன்னை மறந்து வாயூறி வழிய தலை சரிந்து முகவாய் நிலம் தொட துயில முடியும். நான்கு கால்களையும் பரப்பி வைத்து மண்ணோடு மண்ணாக படுத்துக்கொள்ள முடியும். தன் கழுதையை மீண்டும் சென்றடையும் புரவியின் விடுதலை அரியது. புரவி அரிதாகும்தோறும், அழகுகொள்ளும்தோறும் கழுதையிலிருந்து விலகிச்செல்கிறது. புரவி இலக்கணத்தின் பிழைகளே கழுதை. புரவி தவறவிட்ட அனைத்தும் கழுதையாகி நின்றுவிடுகிறது. ஆனால் கழுதை புரவியை மிக அணுக்கமாக தொடர்ந்துகொண்டிருக்கிறது. நுண்வடிவில் புரவியில் ஏறிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.”
இதை ஏன் எண்ணுகிறோம் என்று எண்ணியபடி நகுலன் மீண்டும் தன் புரவியை பார்த்தான். அழகில்லாத அன்னையொருத்தி. எவ்வகையிலும் அழகைப்பற்றி தான் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று எப்போதோ உணர்ந்து தன் உடலை முற்றாக மறக்கத் தலைப்பட்டவள். அத்தகைய பெண்டிரை அவன் பலமுறை பார்த்திருந்தான். அவர்களிடம்தான் இயல்பாக தாய்மை உணர்வு வெளிப்படுகிறது. தன் அழகைப்பற்றி ஒரு துளி எண்ணம் அகத்தே எஞ்சுபவள்கூட முற்றிலும் அன்னையாவதில்லை. அப்புரவியின் அருகே சென்று நிற்கவேண்டும் என்று நகுலன் நினைத்தான். அங்கேதான் தன்னால் இயல்பாக நின்றிருக்க முடியும். இங்கே உடல் பதைப்பு கொள்கிறது.
இளமையில் மிடுக்கும் திமிரும் கொண்ட பெரும்புரவிகள் மேல் அவனுக்கு பித்திருந்தது. இழுத்து நீட்டப்பட்டதுபோல தோன்றும் சோனகப்புரவிகள். கொக்குக் கழுத்தும் நாரைக் கால்களும் கொண்டவை. நாணமும் அச்சமும் கொண்டவை. நீர்ப்பரப்புபோல் நொடிக்கச் சிலுப்பும் தோற்பரப்பு கொண்டவை. புதுப்பாளை போன்ற ஒளி கொண்டவை. சிம்மம் புரவியானது போன்றவை யவனப்புரவிகள். களிறோ என ஐயுறும் முதுகு கொண்டவை. உறைகீறி எடுத்த விதை என மெருகு கொண்டவை. புரவிக்கு தன் அழகு தெரியும். அதன் நிற்பில் கால் எடுப்பில் தலை எழும் செருக்கில் வெளிப்படுவது அந்த தன்னுணர்வே. அதன் விழிகளில் இருப்பது மேடையேறிவிட்ட நடனமங்கையின் மிதப்பு.
அவன் தன் விழிகளினூடாக கடந்து சென்ற புரவிகளை எண்ணிக்கொண்டான். பிறந்து குழவியென வந்து தன் கைகளினூடாக வளர்ந்து உடல்வடிவை அவனிடம் பதித்துவிட்டுச் சென்றவை. அவன் அறிய மீள மீள பிறந்தெழுந்தவை. அவற்றை பெரும் உவகையுடன் அவன் நோக்கி அமர்ந்திருந்ததுண்டு. ஏடுகளைக் கொண்டுவைத்து அவற்றின் ஒவ்வொரு இயல்பையும் குறித்து வைத்ததுண்டு. ஓவியர்களைக் கொண்டு அவற்றை பட்டுத் திரைச்சீலையில் வரைந்து சேர்த்ததுண்டு. சூதரைக் கொண்டு அவற்றின் புகழ் பாடி பதிய வைத்ததும் உண்டு. அறுதியாக வந்து சேர்ந்த இப்புரவி எக்கணமும் மேலும் ஒரு அடி பின் வைத்து கழுதை என்றே ஆகிவிடக்கூடியது.
கதவு திறந்து ஏவலன் வெளிவந்து “அரசர்!” என்று வரவறிவிப்பு செய்தான். சகதேவன் நிமிர்ந்து நின்று தன் மேலாடையை இழுத்துவிட்டுக்கொண்டான். யுதிஷ்டிரன் குடிலிலிருந்து வெளிவந்து தன் தலையிலிருந்த பட்டுத்தலைப்பாகையை இன்னொரு முறை பிடித்து நேராக்கி வைத்தார். “செம்பருந்தின் இறகு சற்றே சரிந்துள்ளதா?” என்றார். “இல்லை” என்று சகதேவன் சொன்னான். “நிழலில் நோக்குகையில் சரிந்து தெரிகிறது” என்று அவர் மீண்டும் தலைப்பாகையை சீராக்கி வைத்தார். வெண்ணிற மேலாடையை இழுத்து சுற்றிக்கொண்டு “செல்வோம்” என்றார். சகதேவனும் நகுலனும் அவருக்குப் பின்னால் நடக்க அப்பால் நின்றிருந்த அர்ஜுனன் எழுந்தான்.
பீமன் அவர் அணுகிய பின்னரே நோக்கு கலைந்தான். யுதிஷ்டிரன் பீமனிடம் “மீண்டும் அதே தோலாடையை அணிந்திருக்கிறாய். அரசகுடியினருக்குரிய பட்டாடையை அணிந்தால் என்ன?” என்றார். பீமன் அவரை திரும்பிப் பார்க்கவில்லை. தலைகுனிந்து நின்றிருந்தான். யுதிஷ்டிரன் திரும்பிப் பார்த்தபோது அர்ஜுனனும் பழைய இளநீல ஆடையை அணிந்திருப்பதை கண்டார். “பார்த்தா, நாம் நம் குடிமூத்த தந்தையை பார்க்கச் செல்கிறோம். நமக்குரிய ஆடைகளை நாம் அணிந்திருக்க வேண்டும்” என்றார். அர்ஜுனன் “மீண்டும் குடிலுக்குச் செல்ல பொழுதில்லை” என்றான். “ஏன், சகதேவன் சென்று வந்திருக்கிறானே?” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் மறுமொழி சொல்லவில்லை.
“என்ன ஆயிற்று உங்களுக்கு? நம் உளநிலை என்னவாக இருப்பினும் நாம் இப்போது செல்லவிருப்பது அரசப் பணிக்காக. மைந்தரென்றும் அரசனென்றும் நாம் அவரை சந்திக்கச் செல்கிறோம். தோற்றமே அரசகுடியினரை உருவாக்குகிறது. பழக்கமே அவர்களை நிலைநிறுத்துகிறது. எத்தோற்றத்திலும் செல்லலாம் என்னும் நிலையில் அரசகுடியினர் எப்போதும் இருப்பதில்லை” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “இது துயரத்துக்குரிய மாதம். இங்கு நெறிகள் அத்தனை குறிப்பாக பேணப்படுவதில்லை” என்றான். “இப்போதுதான் நாம் நெறிகளை பேணியாக வேண்டும். விழவுப்பொழுதுகளில் பேணப்படுவது நெறியல்ல, அது வெறும் நடிப்பு. இப்போது நமது அனைத்து எல்லைகளும் சிதறிப் பரந்துகொண்டிருக்கையில்தான் நாம் நம்மை மீள மீள வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றபின் மீண்டும் அர்ஜுனனைப் பார்த்து “வெண்ணிற மேலாடையாவது நீ அணிந்துகொள்ளலாம்” என்றார்.
நகுலன் “மூத்தவரே, நமக்கு பொழுதில்லை. இங்கிருந்து நாம் பேரரசரின் குடில் நோக்கி செல்வதற்கு அரைநாழிகைப் பொழுதாவது ஆகும்” என்றான். “இளைய யாதவன் எங்கிருக்கிறான்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவர் அங்கு வந்துவிடுவதாக சொன்னார்” என்று நகுலன் சொன்னான். “என்ன செய்கிறான்?” என்று மீண்டும் யுதிஷ்டிரன் கேட்டார். நகுலன் “அவர் இன்று காலை முதல் அந்த இரும்புப் பாவையுடன் அமர்ந்திருக்கிறார்” என்றான். “எந்தப் பாவை?” என்றபடி யுதிஷ்டிரன் திரும்ப பீமனும் திரும்பிப் பார்த்தான். “மூத்தவரின் வடிவில் அஸ்தினபுரியின் அரசர் உருவாக்கிய இரும்புப் பாவை. குருக்ஷேத்ரத்திலிருந்து இரு வீரர்களால் அது எடுத்து வரப்பட்டது. மூன்று பகுதிகளாக பிரிந்து கிடந்தது. அதை மீண்டும் பொருத்தி முடுக்கிக்கொண்டிருக்கிறார்” என்றான் நகுலன்.
“இப்பொழுது அதை எதற்கு செய்கிறான்?” என்ற யுதிஷ்டிரன் “சில பொழுதுகளில் அவனை முதிரா உளம்கொண்ட சிறுவன் என்றே எண்ணத் தோன்றுகிறது” என்றார். “நமக்குப் பொழுதில்லை” என்று நகுலன் மீண்டும் சொன்னான். “அவன் அங்கு வந்துவிடுவான் என்றாய். அவன் வருவதற்குள் நாம் சென்றுவிட்டால் என்ன செய்வது?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவருக்குத் தெரியும். அதற்கு மேல் நாம் அவரை கையாள முடியாது” என்று நகுலன் சொன்னான். “நாம் எவ்வண்ணம் செல்கிறோம்? புரவியில் வேண்டாம். நான் பிற விழிகளுக்கு நடுவே செல்ல விரும்பவில்லை. அங்கு செல்வதற்குள் என் உளம் முற்றிலும் சிதைந்துவிடும்” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், அறிவேன். தாங்கள் செல்வதற்கு கூண்டுத்தேர் வந்துள்ளது” என்று சொன்ன நகுலன் கை காட்டினான்.
குறுங்காட்டின் ஓரமாக நின்றிருந்த மூடுதிரையிட்ட தேர் வந்து முற்றத்தின் விளிம்பில் நின்றது. ஒற்றைப்புரவி கட்டப்பட்ட, சிறிய சகடங்கள் கொண்ட தேர். யுதிஷ்டிரன் “அங்கு வரை செல்வதற்கு தேர்ப்பாதை உள்ளதா?” என்றார். “சேற்றுப்பாதைதான். ஆனால் எடையற்ற தேர் சிக்கலின்றி செல்லும்” என்று நகுலன் சொன்னான். யுதிஷ்டிரன் தேரை அணுகி ஏறுவதற்குமுன் “நீங்கள் இருவரும் என்னுடன் ஏறிக்கொள்ளுங்கள்” என்றார். “நான் புரவியில் உடன் வருகிறேன்” என்றான் நகுலன். “நான் தனிமையாக உணர்வேன், இளையோனே” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “நான் ஏறிக்கொள்கிறேன்” என்றான்.
யுதிஷ்டிரன் ஏறி தேரில் அமர்ந்ததும் சகதேவன் தொடர்ந்து ஏறி அமர்ந்து திரையை கீழிறக்கினான். தேர் முன்னால் சென்றது. அர்ஜுனன் அருகே நின்ற புரவி மேல் ஏறிக்கொண்டான். பீமனை நோக்கி அவனுடைய ஏவலன் புரவியை கொண்டுவந்தான். பீமன் அதில் ஏறிக்கொண்டதும் நகுலன் தன் புரவியை அணுகி அதை தொட்டான். அது தலை தூக்கி அக்கணமே மீண்டும் புரவியென்றாகியது. இதை புரவியென ஆக்குவது என் விழைவு. எவ்வகையிலோ இதை இதன் ஆழ்ந்த இயல்பிலிருந்து மேலெடுக்கிறது அது. புரவி கழுதையிலிருந்து தன் பயணத்தின் பொருட்டு மானுடரால் இழுத்து வெளியே எடுக்கப்பட்ட பிறிதொன்று போலும்.
அவனுள் அவ்வெண்ணம் அவனுடைய கட்டுப்பாடில்லாமலேயே ஓடலாயிற்று. அதை அவன் கேட்டிருந்தான். ஒவ்வொரு கனியும் காட்டிலுள்ள சிறந்த கனியின் விதைகளில் இருந்து தெரிவுசெய்து எடுக்கப்பட்டது. மேலும் மேலுமென நற்கனி தேர்வுசெய்யப்பட்டு இனிதாக்கப்படுகிறது. தேர்வுசெய்யும் கைகளால் மீள மீள கண்டடையப்பட்டு புரவி உருவாக்கப்பட்டது. கழுதையிலிருந்து புரவியாகியது. இனி புரவியிலிருந்து எழுவது பிறிதொன்று. அவன் புரவியின் கால் வளையத்தில் தன் இடக்காலை ஊன்றி வலக்காலைச் சுழற்றி அமர்ந்த கணத்தில் குருக்ஷேத்ரத்தில் குருதி உண்டு வெறித்த விழிகளுடன் சிம்மக்குரலில் கனைத்துப் பாய்ந்த புரவிகளின் முகங்களை கண்டான். நடுக்கு கொண்டு புரவிமேலேயே அமர்ந்திருந்தான்.
யுதிஷ்டிரனின் தேர் அப்பால் முன்னால் சென்றது. அவருக்குப் பின்னால் பீமனும் அர்ஜுனனும் சென்றனர். அவன் தொடைகள் நடுங்க புரவி மேலேயே அமர்ந்திருந்தான். பின்னர் புரவியின் கழுத்தைத் தட்டி அதை முன்னால் செலுத்தினான். அது தலையை அசைத்தபடி ஊனமுற்ற முதற்காலை மெல்ல எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியது. சிம்மங்கள் எழும். பறக்கும் புரவிகள் எழும். பறக்கும் சிம்மப்புரவிகள் எழும். எழவிருப்பவை எவை? குருதியுண்ணும் புரவிகளா? குருதி உண்டபின் அவை நாகங்கள் என்றாகி மண் பிளந்து உள்ளே சென்று உறையுமா? இருள் வடிவாக எழுந்து வருபவை. நீருள் அலைவடிவெனச் சுருண்டிருப்பவை.
மண்மீது பரவி தொலைவுகளை ஆளும் கொடிய ஊன் விலங்கொன்று இங்கிருந்து எழவிருக்கிறது. நகுலன் உடல் குளிர்ந்து நடுங்க கடிவாளத்தை இறுகப் பற்றியபடி பற்களை சேர்த்துக் கடித்து விழிநீர் வார மீள மீள மெய்ப்பு கொண்டபடி குதிரை மீது அமர்ந்திருந்தான்.
தேர் குடில் நிரைகளைக் கடந்துசெல்ல வாயில்களில் நின்றிருந்த ஏவலர்களுள் பெண்டிரும் அந்தண இளைஞர்களும் வெறித்த விழிகளுடன் அதை பார்த்தனர். அவர்கள் யுதிஷ்டிரனை பார்க்க இயலவில்லை எனினும் அவரை உள்ளத்தால் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் அவர்களை பார்க்கவில்லை. எனினும் அந்த நோக்குகளை உணர்ந்துகொண்டிருந்தார். தன் குடிலுக்குள் தனித்திருக்கையில்கூட அவர் அந்நோக்குகளிலிருந்து தப்ப இயலாது.
ஒற்றைப்புரவி சிறுமணியோசையுடன் சேற்றில் குளம்புகள் விழும் துடிப்பொலியுடன் தேரை இழுத்துச் சென்றது. அது அலைகளில் ஏறி ஆடும் படகு போலிருந்தது. அந்த அசைவு நன்று. உள்ளிருக்கும் அசைவை அது மட்டுப்படுத்துகிறது. அலைகொள்ளும் உள்ளத்துடன் அசையாமல் அமர்ந்திருப்பதே கடினம். திருதராஷ்டிரரின் குடிலை தொலைவில் பார்த்தபோது நகுலன் அது ஓர் உலைக்கலம் எனும் எண்ணத்தை மீண்டும் அடைந்தான். அதன் மீது அகிபீனாவின் புகைப்படலம் அப்போதும் நின்றிருந்தது.
காற்று ஒழுகிக்கொண்டிருந்த ஆடிமாதம். எங்கோ அணையிட்டுத் தடுத்ததுபோல் அனைத்து ஒழுக்குகளும் நின்று, இலையசைவுகூட இல்லாமல், வரையப்பட்ட ஓவியம்போல் எழுந்து நின்றிருந்தது காடு. புகையைக் கலைக்கும் காற்று கூடவா இல்லை? ஒரு பறவை பறந்தால்கூட கலைந்துவிடுமளவுக்கு மெல்லிய நீலப்புகை. அப்புகையை முகர்ந்து காடு பித்துகொள்ளக்கூடும். அத்தனை பறவைகளும் பித்துகொள்ளகூடும். துயிலிலிருந்து பிறிதொரு காடு எழும். கனவிலெழும் பிறிதொரு காடு. பிறிதொரு விலங்குத்தொகை. பிறிதொரு சிற்றுயிர்த்திரள். பிறிதொரு வெளி.
அவன் இளைய யாதவரின் தேர் எங்கேனும் நிற்கிறதா என்று பார்த்தான். அவர் வந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. தவிர்த்துவிட்டாரா என்ற எண்ணம் வந்தது. அதற்கான வாய்ப்பில்லையென்று தோன்றியது. அவரில்லாது பேரரசரை சென்று பார்ப்பது எவ்வகையிலும் இயலாது. பேரரசரைப் பார்க்க அவர்கள் கிளம்பி வந்துகொண்டிருக்கும் செய்தியை அவன் முன்னரே ஏவலன் வழியாக அறிவித்துவிட்டிருந்தான். சங்குலனும் சஞ்சயனும் உடனிருப்பார்கள் என்றும் அவர்கள் வந்து பார்க்கலாம் என்றும் ஒற்றன் திரும்பி வந்து செய்தி சொன்னான். “திருதராஷ்டிரர் எவ்வண்ணம் இருக்கிறார்?” என்று அவனிடம் கேட்டான். “அழுகை ஓய்ந்து மீண்டு அரசியருடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்” என்று ஒற்றன் சொன்னான்.
“அவர்கள் உரையாடிக்கொள்கிறார்களா?” என்று நகுலன் மீண்டும் கேட்டான். “இல்லை அரசே, அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி ஒரு சொல்லும் உரைக்காமல் அமர்ந்திருக்கிறார்கள்” என்றான் ஒற்றன். “அவர் ஏதேனும் உணவருந்தினாரா?” என்று நகுலன் கேட்டான். “ஆம், ஊனுணவு அருந்தினார்” என்றான். அது நகுலனுக்கு ஆறுதலளித்தது. “பேரரசி?” என்று மீண்டும் கேட்டான். “அரசருக்கு உணவூட்டியதே அரசிதான். அதன் பின்னர் தானும் உண்டார்” என்றான். அதன் பின்னரே அவன் திருதராஷ்டிரரை சென்று பார்ப்பதற்கு உகந்த பொழுதென்று அறிவித்தான்.
குடிலின் முற்றத்தை அடைந்தபோது இளைய யாதவர் இல்லாமல்தான் திருதராஷ்டிரரை சந்திக்கப்போகிறோம் என்ற எண்ணத்தை அளித்தது சூழல். அது அவனுக்கு பதற்றத்தை உருவாக்கியது. புரவி நின்று தேர் குலுங்கியது. அவன் தன் புரவியைத் தட்டி அருகணைந்தான். பீமனும் அர்ஜுனனும் சற்று முன்னால் சென்று நின்றனர். குடில் முகப்பிலிருந்து ஏவலர்கள் முன் வந்து அவர்களிடமிருந்து கடிவாளங்களை பற்றிக்கொள்ள பீமன் இறங்கி சற்று அப்பால் சென்று கைகளை கட்டிக்கொண்டு நின்றான். அர்ஜுனன் இறங்கிச் சென்று பீமன் அருகே நிற்க இரு புரவிகளையும் ஏவலர் அழைத்துக்கொண்டு விலகிச்சென்றனர்.
இரு ஏவலர்கள் தேரின் புரவியை பற்றிக்கொள்ள அது முன்பின் உலைந்து நின்றது. சகடக்கொண்டியை ஒருவன் போட்டான். தேரின் பின்பக்கத் திரையை விலக்கி சகதேவன் வெளியே தலைநீட்டி நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா?” என்றான். “வருவார்” என்று நகுலன் சொன்னான். “ஏவலர் எவரையாவது அனுப்பி அவரை வரச்சொல்லலாம்” என்று சகதேவன் சொன்னான். “அவர் வராமல் இருக்கப்போவதில்லை” என்று நகுலன் மீண்டும் சொன்னான். “அவர் வந்த பின்னர் மூத்தவர் தேரிலிருந்து இறங்குவதே உகந்தது. இப்போது இறங்கினால் வேறு வழியில்லை. நாம் சேர்ந்து சென்று தந்தையை சந்திக்கவேண்டியிருக்கும். முற்றத்திலேயே நெடும்பொழுது நிற்கவியலாது” என்றான் சகதேவன்.
நகுலன் உள்ளுணர்வின் தொடுகையால் திரும்பிப் பார்த்தான். மிகத் தொலைவில் இளைய யாதவரின் கொடியுடன் ஒற்றைப்புரவித் தேர் வருவது தெரிந்தது. “தேரில் வருகிறார்” என்றான். “தேரிலா?” என்று சகதேவன் கேட்டான். பின்னர் கொடியைப் பார்த்து “ஆம், அவருடையதுதான். தேரில் ஏன் வரவேண்டும்?” என்றான். நகுலன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. தேர் தெளிந்து பெருகி அருகணைந்தது. அதன் புரவிக்கால்கள் சீரான அறைதல்களாக தரையை முட்டிக்கொண்டிருக்க சகடம் உருண்டு ஒழுகி வருவதை இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். தேர் வந்து முற்றத்தை அடைந்து சற்றே வளைந்து நிற்க ஏவலர்கள் வந்து அதன் கடிவாளத்தை பற்றிக்கொண்டனர். தேர்ப்பாகன் அமரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருந்தான்.
தேரின் பின்புறத் திரையை விலக்கியபடி இளைய யாதவர் கீழே குதித்தார். தன் மேலாடையை சீரமைத்தபடி நகுலனைப் பார்த்து புன்னகைத்தார். நகுலன் தலைவணங்கி “தங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், யாதவரே” என்றான். “ஆம், பொழுதாகிவிட்டதென்று தெரிந்தது. ஆகவேதான் விரைந்து வந்தேன். செல்வோம்” என்றார். யுதிஷ்டிரன் தேரிலிருந்து இறங்கி தன் மேலாடையை சீரமைத்தபடி இளைய யாதவரை வணங்கினார். மீண்டும் தலைப்பாகையை சீரமைத்தார். இளைய யாதவர் அப்பால் நின்ற அர்ஜுனனை நோக்கி செல்லலாம் என கையசைத்தார்.
அவர்கள் செல்வதற்கு ஒருங்கியபோது இளைய யாதவர் “சொல்வதற்கென சொற்களெதையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை” என்றார். யுதிஷ்டிரன் அவர் சொல்வதென்ன என்பதை புரிந்துகொள்ளாமல் திகைப்புடன் பார்த்தார். “முறைமைச் சொற்கள் என எதையும் சொல்லவேண்டியதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “இது ஒரு முறைமைச் சடங்கு. அதன் பொருட்டே வந்திருக்கிறோம். குறித்த சொற்களால் மட்டுமே இத்தருணத்தை கடந்து செல்லமுடியும்” என்றார் யுதிஷ்டிரன். “சில தருணங்களில் முறைமைச்சொற்கள் இரக்கமற்றவையாக தோன்றக்கூடும்” என்றார் இளைய யாதவர். “அவர் முன் சென்று நில்லுங்கள். தன்னியல்பாக உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சொல்லுங்கள்.”
“அவ்வண்ணமல்ல அது நிகழ்வது” என்றார் யுதிஷ்டிரன். “தன்னியல்பான சொற்கள் என்று எதுவும் எனக்கு தோன்றவில்லை. அவ்வண்ணம் தோன்றுமெனில் அது உகந்தவையாக இல்லாமலும் இருக்கக்கூடும். நான் முறைமைச்சொற்களை மட்டுமே கூறவிருக்கிறேன். அவ்வாறு மட்டுமே என்னால் வெளிப்பட முடியும்” என்றார் யுதிஷ்டிரன். புன்னகைத்தபடி “எனில் அதுவே ஆகுக!” என்றார் இளைய யாதவர். தன் பாகனை நோக்கி தேரை திருதராஷ்டிரரின் குடிலருகே சென்று நிறுத்தும்படி ஆணையிட்டார். தேர் அவர்களைக் கடந்து முன்னால் சென்று திருதராஷ்டிரரின் குடிலுக்கு இணையாக இருந்த சஞ்சயனின் குடிலை நோக்கி சென்றது.
“செல்வோம்” என்றபடி இளைய யாதவர் நடக்க அப்பாலிருந்து பீமனும் அர்ஜுனனும் வந்து அவர்களுடன் இணைந்துகொண்டனர். யுதிஷ்டிரன் “நாம் இத்தருணத்தில் உரிய சொற்களை சொன்னால் நம் மீது பழியில்லாமல் இதைக் கடந்து மீளமுடியும். எண்ணாது சொல்லும் எச்சொல்லும் அவர்மேல் அம்பென, அனலென பாயக்கூடும்” என்றார். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “நாம் எண்ணிச் சொல்வது இயலாது. முறைமைச்சொற்கள் என்பவை நம் முன்னோர் எண்ணி எண்ணி வகுத்தவை. எத்தனையோ தருணங்களை கடந்து வந்தவை” என்று மீண்டும் யுதிஷ்டிரன் சொன்னார். “நீங்களே அவற்றை சொல்லுங்கள், மூத்தவரே” என்றான் நகுலன். யுதிஷ்டிரன் வெறுமனே திரும்பி நோக்கினார். அவருடைய கைவிரல்கள் நெளிந்துகொண்டே இருப்பதை நகுலன் பார்த்தான்.