நீர்ச்சுடர் - 20

பகுதி நான்கு : கழுநீர்க் கரை – 1

நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டு இளவரசியரின் தேர்நிரையின் இறுதியாகச் சென்ற தேருக்குப் பின்னால் சீரான விசையில் சென்றான். அவன் புரவியின் ஒரு கால் முறிந்து கட்டுபோடப்பட்டிருந்தது. ஆகவே அதன் நடையின் தாளத்தில் ஒரு பிழை இருந்தது. அப்பிழையை அவன் உள்ளம் மீட்டி மீட்டி அதை தன் அகத்தாளமாக ஆக்கிக்கொண்டது. அந்தப் பிழைக்காலடியின் ஓசை ஒரு தொடுகைபோல, ஒரு தனிச்சொல்போல ஒலித்துக்கொண்டிருந்தது. சீரான தாளங்களின் இரக்கமற்ற முழுமையிலிருந்து அவனை அது விலக்கியது. ஒன்று இரண்டு ஒன்று இரண்டு எனச் சென்று இல்லை என ஒலித்து மீண்டும் ஒன்று இரண்டு ஒன்று இரண்டு. மீண்டும் ஒரு இல்லை. இல்லை இல்லை இல்லை.

கடிவாளத்தை இடக்கையால் பிடித்து, வலக்கையை உயிரிழந்ததுபோல் தொங்கவிட்டு, தோள்கள் தொய்ய, துயிலில் என தலை எடைகொண்டு தழைய, அவன் புரவி மேல் அமர்ந்திருந்தான். புரவிச்சகடங்கள் அச்சுகளில் மோதி ஒலிக்கும் ஓசையும், பாதைப்பலகைப்பரப்புகளின் பொருத்துக்களிலும் விடவுகளிலும் அவை விழுந்தெழுந்து செல்லும் முழக்கமும் அவனைச் சூழ்ந்திருந்தன. அவன் புரவியில் இருந்தபடியே துயில்கொண்டு முன்னால் சரிந்து அவ்வசைவால் விழித்துக்கொண்டு சூழ நோக்கினான். அந்த ஒரு சில கணங்களுக்குள்ளாகவே தனக்குள் குருக்ஷேத்ரத்தின் கொடும்போர் ஓர் அலையென வந்தறைந்து கொந்தளித்து கொப்பளித்து அள்ளிச் சுழற்றி வீசிச் சென்றுவிட்டிருப்பதை உணர்ந்தான்.

அக்கனவிற்குள் வலிமுனகல்களாகவும், சாவுக்குரல்களாகவும், படைக்கல ஓசையாகவும், சகடங்களின் முழக்கமாகவும் கேட்டுக்கொண்டிருந்த ஒலிக்கொந்தளிப்பு இந்தத் தேர்நிரைகளின் ஒலிகள்தானா? இவ்வொலியிலிருந்து எப்படி அப்பேரொலியை உள்ளம் சென்றடைந்தது? அவன் பெருமூச்சுவிட்டு தன் குழலை அள்ளிச் சுழற்றி தோளுக்குப் பின்னால் அமைத்தான். ஒருகணம் கண்களை மூடியபோதே அந்த ஒலி குருக்ஷேத்ரப் பேரொலியாக மாறியது. அவன் கண்களைத் திறந்து அந்தச் சகட ஓசைகளை கேட்டான். கண்களால் சகடங்களைப் பார்த்தபோதும் அந்த ஓசை போரொலியென்றே தோன்றியது. அவன் விழிகளும் உள்ளமும் அது வேறு ஒலி என உணர்ந்தாலும் உடல் உச்சம்கொண்டு பதறியது. கைகள் படைக்கலம் நாடின.

போர் முடிந்த பின்னரும் அவன் அகம் போரிலிருந்தே மீளவில்லை. பாண்டவர்களில் யுதிஷ்டிரன் மட்டுமே போருக்கு வெளியே வந்துவிட்டிருந்தார். ஏனெனில் அவர் போருக்குள் செல்லவே இல்லை. பிற அனைவருமே போருக்குரிய உளநிலையில்தான் எப்போதும் இருந்தனர். உள்ளத்தைவிட உடலே மிகவும் பழகிவிட்டிருந்தது. உடலெங்கும் முளைத்த பலநூறு கண்கள் அப்போதும் எச்சரிக்கையுடன் விழித்து காத்திருந்தன. மரக்கிளைகளுக்குக் கீழே அமர்ந்திருக்கையில் ஒரு சருகு உதிர்ந்தால் அக்கணமே உடல் விதிர்த்து திரும்பி அதை அணுகும் படைக்கலமென எதிர்கொண்டது. அருகே வரும் வண்டை நோக்கி அம்பெடுக்க அறியாது கை சென்றது. சுள்ளிகள் ஒடியும் ஒலிகூட உடலை நாண் இறுகிய வில்லென துடிப்பு கொள்ளச் செய்தது.

படைக்கலக்கல்வியில் எப்போதும் அடைந்தது என்றாலும் குருக்ஷேத்ரத்தை நோக்கி செல்கையில் ஒவ்வொரு நாளுமென பயின்று பயின்று உடலில் ஏற்றுக்கொண்டது அவ்விழிப்பு. குருக்ஷேத்ரத்துக்கான அழைப்பு எழுந்ததுமே அத்தனை போர்வீரர்களும் படைக்கலநிலைக்குச் சென்று மேலும் பயிலத் தொடங்கினர். முதலில் கை படைக்கலத்தை அறியவேண்டும். பின்னர் உள்ளம் அதை ஏந்த வேண்டும். நாளடைவில் அகம் அதை பெற்றுக்கொள்ளும். அதன் பின்னரே உடல் அதன் ஒரு பகுதியாக ஆகும். பின்னர் உடலே ஒரு படைக்கலம் என்றாகும். அதன் பின்னர் உள்ளம் மேலே பறக்கும் பருந்தெனச் செல்ல கீழே அதன் நிழல் என உடல் செல்லும். போரிடுவது உடல், வெல்வது உள்ளம்.

வெள்ளம் வழிந்த ஆற்றுப்படுகையென இன்று என் உடல் இருக்கிறது. பல்லாயிரம் குமிழிகள் அதில் முளைத்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. நோக்கித் திகைக்கும், தேடித் தவிக்கும் கண்கள் அவை. அக்கண்கள் ஒவ்வொன்றாக மூடவேண்டும். மீண்டும் உலர்ந்து அசைவிழந்து இது உடல் மட்டுமே என்றாக வேண்டும். அதுவரை குருக்ஷேத்ரப் போரிலிருந்து மீள இயலாது. விழி மூடினால் கேட்கும் காற்றோசையும் போரொலியாகிறது. இருளில் துயில்கையில் எழும் மெல்லிய ஓசைகூட ஆழத்தில் முரசொலி என்று பெருகுகிறது. தான் மட்டும் அவ்வாறாகிவிட்டிருக்கிறோமா என்ற ஐயம் அவனுக்கிருந்தது. பின்னர் சகதேவனின் விழிகளும் தன்னைப்போலவே என்று கண்டுகொண்டான். பின்னர் அவ்விழிகளையே சூழ்ந்திருக்கும் அனைவர் முகத்திலும் கண்டான்.

எவரும் போரெனும் அக்கொடுங்கனவிலிருந்து மீளவில்லை. ஒருவேளை மீளமுடியாமலேயே போகலாம். உடலிலிருந்து இந்தக் கூர் விசையழியாமலேயே நின்றுவிடலாம். பயிற்சிக்குப்பின் வில் நாணை அழுத்திவிடவேண்டும் என்று கிருபர் முன்பொருமுறை கூறினார். நாண் வில்லை போருக்கு எழச்செய்கிறது. போரில் அதுவே வில்லை ஆள்கிறது. வில்லின் நிமிர்வை வளைத்து விசையென்றாக்கி அம்புகளை ஏவுகிறது. வில்லை ஆட்டுவிக்கும் நாண் போரிலாதபொழுது அவிழ்ந்து சுருண்டு உயிரிழந்திருக்கவேண்டும். நாண் அவிழ்க்கப்படாத வில் நாளடைவில் வளைவையே தன் இயல்பெனக் கொள்ளும். அது விசையை முற்றிழக்கும். நிமிர்வே அதன் இயல்பு. நிமிர்வென அன்றாடம் வெளிப்படுவதே வளைந்து விசையென போரில் எழுகிறது. நாண் எத்தனை குறைவான பொழுது வில்லைத் தொடுத்து இறுக்கியிருக்கிறதோ அந்த அளவுக்கே வில் ஆற்றல் கொண்டிருக்கிறது.

ஒருவேளை இன்னும் பல தலைமுறைகள் ஆகலாம். இங்கிருக்கும் ஒவ்வொருவருடைய உடல்மொழியும் மாறிவிட்டிருக்கிறது. இனி எழும் மைந்தர் அனைவரின் உடலிலும் இம்மொழியே குடியிருக்கும்போலும். ஒரு சொல்லுக்கு மறுசொல் அவர்கள் படைக்கலம் எடுக்கக்கூடும். ஓயாத சினமும் ஒழியாத வஞ்சமும் அவர்களுக்குள் நிறைந்திருக்கக்கூடும். நான் அமைதியின் இன்பத்தை அறிந்தவன். நினைவென அதை எங்கோ கொண்டிருப்பவன். அவர்கள் வஞ்சத்தையே இனிமையாக அறிந்திருக்கக் கூடும். அதையே அழகென்றும் மெய்மை என்றும் தலைக்கொள்பவர்களாக இருக்கக்கூடும். பிறிதொன்றறியாமல் அதிலேயே வாழக்கூடும். அவ்வண்ணம் ஒரு தலைமுறை உருவாகுமென்றால் இப்பாரதவர்ஷத்தில் இனி இப்போர் அழியாது. ஏனெனில் அவர்களின் விளையாட்டும் தொழிலும் தவமும் அதுவே.

அவ்வண்ணம் இருக்கலாகுமா என்ன? அது மானுடரை முற்றழிப்பது. இப்புவியில் உண்ணத் தகுந்தவற்றை பெருக்கி நஞ்சை துளியெனச் சுருக்கி வைத்திருக்கும் தெய்வம் அதை அவ்வண்ணம் திகழ ஒப்புமா என்ன? அந்த வஞ்சப்பெருக்கிலிருந்து எங்ஙனம் எழும் கனிவின் முதற்துளி? அன்பென்றும் பரிவென்றும் அறமென்றும் நெறியென்றும் தன்னை வெளிப்படுத்தும் மேன்மை? அது என்றும் இங்கிருக்கிறது. இத்தனை குருதிப்பெருக்கிலும் சற்றே கை நீட்டினால் அதை தொட முடிகிறது. கசப்பும் சோர்வும் வெறுப்பும் நிறைந்த இவ்வெளியில்கூட அதன் இருப்பை அறியாத ஒருவர்கூட இல்லை. அது உயிர்த்துளி. அது முளைத்தெழ வேண்டும். இல்லையேல் இங்கு மானுடர் வாழவியலாது. அது வெல்ல வேண்டும்.

ஒருவேளை உழுதிட்ட வயலின் சேற்றுப்பரப்பின் அமைதி போலும் இது. இத்தனைக்கும் அடியில் விதைகள் உயிர்கொள்கின்றன போலும். கனிந்தெழுந்தவை. ஈரிலை விட்டெழுபவை. மலர் கொள்பவை. கனி சூடுபவை. விதை பெருக்குபவை. எழுக! எழுந்தாகவேண்டும்! எழுந்தேயாக வேண்டும்! எழுக! எழுக! எழுக!

அச்சொல்லினூடாக அவன் நெடுந்தொலைவைக் கடந்து மீண்டு வந்தான். மீண்டும் பெருமூச்சுடன் வண்டிகளின் நிரையை பார்த்தான். முக்தவனத்துக்கு வந்து சேர்ந்தபோதே அதுவரை இருந்த இறுக்கமொன்று தளர்ந்துகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். காட்டிற்குள் குடிலில் தனித்திருப்பதே அதுவரை அவன் நாள்பொழுதாக இருந்தது. அருகில் சகதேவன் இருக்கையில்கூட அம்முழுத்தனிமை அவ்வண்ணமே நீடித்தது. தனிமையில் பெருகும் சொல்லே அதை அத்தனை தாளமுடியாததாக்குகிறது என்று அதுவரை எண்ணியிருந்தான். சொல்லின்மையில் உணரும் தனிமை மேலும் எடைமிக்கதென்று அப்போது அறிந்தான். சொல்லின்மை தனிமையின்மீது எடைகொண்ட மலையை தூக்கி வைத்ததுபோல் ஆகிவிடுகிறது. இரவும் பகலுமென வெட்டப்படாத, எண்ணங்களென சிதறடிக்கப்படாத இருத்தல். தான் எனும் உணர்வென இருத்தல் கூர் கொள்ள வெறும் சோர்வென சென்று மறைந்தன அந்நாட்கள்.

பின்னர் தௌம்யர் வந்தார். முக்தவனம் தெரிவு செய்யப்பட்டிருப்பதை யுதிஷ்டிரனிடம் கூறினார். அன்று யுதிஷ்டிரன் மரத்தடியில் தன் சிற்றவையை கூட்டியிருந்தார். அர்ஜுனன் காட்டிற்குள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பீமனும் காட்டிலிருந்து பெரும்பாலும் மீளாதவனாகவே இருந்தான். இளைய யாதவர் அரசரின் வலப்பக்கம் மார்பில் கைகளைக்கட்டி வேர்க்குவையொன்றில் சாய்ந்தமர்ந்திருந்தார். சுரேசரும் அமைச்சர்கள் மூவரும் அரசர் முன்பாக நின்றனர். திரௌபதி தன் குடிலைவிட்டு வெளியே வருவதே இல்லை. குந்தி நினைவழிந்து மீளாமல் படுத்திருந்தாள். ஒற்றர்களும் ஏவலரும் மட்டுமே கொண்டதாக இருந்தது யுதிஷ்டிரன் அவை. ஆயினும் அவர் ஒவ்வொருநாளும் பெரும்பொழுதை அவையில் கழித்தார். செய்திகளைக் கேட்டு ஆணைகளை இட்டார்.

தௌம்யர் முக்தவனம் குறித்து சொல்லி முடித்ததும் யுதிஷ்டிரன் அவனிடம் திரும்பி “உன் கருத்தென்ன, இளையோனே?” என்றார். தௌம்யர் அவனை நோக்கி “முன்பும் அஸ்தினபுரியின் அரசர்கள் தங்கள் போர்வெற்றிகளை அங்கே நீர்க்கடன் இட்டு முழுமைசெய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதீபருக்குப்பின் நாம் அத்துறையை பயன்படுத்தியதில்லை. அவ்வண்ணம் ஒன்று அங்கே இருப்பதே இச்செயலின்பொருட்டுதான்போலும்” என்றார். அவன் அச்சொற்களைக் கேட்டும் வெறிப்பு மாறா விழிகளுடன் நோக்கியிருக்க சகதேவன் “இதில் நாம் கூறுவதற்கொன்றுமில்லை” என்றான். யுதிஷ்டிரன் “ஆனால் நாம் இதை கொண்டாடுவது ஒருவேளை வெற்றிக்கொண்டாட்டம் எனத் தோன்றலாம்” என்றார். “எனில் என்ன பிழை?” என்று சகதேவன் சொன்னான். தௌம்யர் “ஆம், அதையே நானும் சொல்வேன். இத்தருணத்தின் இழப்பும் துயரும் கடந்துசெல்லும். வெற்றி என்றும் இங்கிருக்கும்” என்றார். “நாம் இயற்றவேண்டியவற்றை எதன்பொருட்டும் தவிர்க்கவேண்டியதில்லை என்பதே என் எண்ணம், மூத்தவரே” என்றான் நகுலன்.

தௌம்யரிடம் “அவ்வண்ணம் ஆகுக! முக்தவனம் ஒருங்கட்டும். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து ஏவலர் படையொன்று அங்கு சென்று அதை நாமும் அரசகுடியினர் அனைவரும் தங்கும்பொருட்டு கட்டி அமைக்கட்டும். நீர்க்கடன்கள் அனைத்தையும் உரிய முறையில் முடிப்போம்” என்றார் யுதிஷ்டிரன். தௌம்யர் “இம்முறை நீர்க்கடனுக்குப் பின் அப்படித்துறையை அவ்வண்ணமே முற்றாக கைவிட்டு நீங்கவேண்டும் என்று தோன்றுகிறது” என்றார். யுதிஷ்டிரன் வினாவுடன் அவரை நோக்க “இனி ஒருமுறை இவ்வண்ணம் நிகழவேண்டியதில்லை” என்று அவர் விழிதாழ்த்தி சொன்னார். யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். சகதேவன் “அது நம் கையிலா உள்ளது?” என்றான்.

யுதிஷ்டிரன் “நாம் எளியோர். ஒவ்வொரு பெருநிகழ்வும் நம்மிடம் சொல்வது அதையே” என்றார். திரும்பி நகுலனிடம் “இளையோனே, நீயே சென்று முக்தவனத்தை ஒருக்குக!” என்றார். அவன் இயல்பாக திரும்பி சகதேவனை பார்த்தான். “இளையோன் இங்கிருக்கட்டும். அவன் இங்கு உடனிருந்தாகவேண்டிய நிலையில் நானிருக்கிறேன். இச்சூழலில் சற்றேனும் என்னுடன் சொல்லாடக்கூடியவனாக அவனே இருக்கிறான். பிற அனைவரும் சொல்லிழந்துவிட்டிருக்கிறார்கள். ஊமையர் நடுவே வாழ்பவன் போலிருக்கிறேன்” என்றார் யுதிஷ்டிரன். அதைச் சொன்னதுமே அவர் சீற்றம் கொண்டார். அவ்வெண்ணத்தை பலமுறை அடைந்து தன்னுள் அமிழ்த்தியிருந்தமையால் அது தானே மேலெழுந்ததுமே அதன்மீதான கட்டுப்பாடுகளை இழந்தார்.

“நாவில் சொல்லெழாமையைக்கூட என்னால் தாங்க முடிகிறது. எவர் விழிகளிலும் சொல்லில்லை. பொருளிலாப் பேதைப் பாவைகள் போலிருக்கிறோம். அல்லது நாமனைவரும் இறந்துவிட்டோமா? இங்கு வெற்றுடல்கள்தான் நடமாடிக்கொண்டிருக்கின்றனவா? ஒருகணம் எழுந்து சென்று கங்கையில் பாய்ந்துவிடவேண்டுமென்று தோன்றும். வாளை எடுத்து கழுத்தில் பாய்ச்சாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வதை எண்ணி எண்ணி வியக்கிறேன்” என்றார். பின்னர் “அது ஏன் நிகழவில்லை என்று உணர்கிறேன். ஒவ்வொரு சொல்லாலும், எண்ணத்தாலும் என்னை நானே குத்திக் கிழித்துக்கொள்கிறேன். குருதி வார ஒவ்வொரு தருணத்தையும் கடந்து செல்கிறேன். ஒவ்வொரு நாளிலும் நூறுமுறை மாய்ந்து எழுபவனுக்கு மெய்யான சாவு சிறிதாகிவிடுகிறது” என்றார்.

அவர் உடல் தளர்ந்தது. நெஞ்சை கையால் பற்றியபடி “தெய்வங்களே, இறந்தவர்கள் எத்தனை நல்லூழ் கொண்டவர்கள்! இருப்பவர்கள் இத்துயரை அணுவணுவாக கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது!” என்றார். நகுலன் அவரை வெறித்து நோக்கியபடி அமர்ந்திருந்தான். யுதிஷ்டிரன் சீற்றம்கொண்ட குரலில் “அவ்வாறு பார்க்காதே. நான் என்ன இங்கு உன்னிடம் கீழ்மை நடனத்தை ஆடிக்காட்டிக்கொண்டா இருக்கிறேன்? அறிவிலி!” என்றார். அச்சொற்களின் பின்னும்கூட அவர் தன்னுடன் பேசுவதை உணராமல் நகுலன் நோக்கிக்கொண்டிருந்தான். “என்ன பார்க்கிறாய்? அறிவிலி, ஏன் அப்படி பார்க்கிறாய்?” அவன் விழியுணர்வுகொண்டு “இல்லை” என தலைகவிழ்ந்தான்.

யுதிஷ்டிரன் தன் தலையை தானே வெறிகொண்டு ஓங்கி அறைந்தார். “என் மைந்தர்! என் மைந்தர்!” என்று கூவினார். உடைந்து குமுறி அழத்தொடங்கினார். “என் மைந்தர்கள்! என் மைந்தர்கள்! என் மைந்தர்கள்! என் செல்வங்கள்!” என்று அவரிடமிருந்து சொற்கள் எழுந்துகொண்டே இருந்தன. இரு ஏவலர்கள ஓடிவந்து அவரை இருபக்கமும் தூக்கிப் பற்றிப் பிடித்து அகற்றி கொண்டுசென்றனர். செல்லும் வழியிலேயே கால்தளர்ந்து அவர் நினைவழிந்தார். அவரை அவர்கள் உயிரிழந்த உடலை என கொண்டு செல்வதை அவன் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அவரை குடிலுக்குள் கொண்டுசென்றனர். அகிபீனா கொண்டுவருவதற்காக ஒரு வீரன் வெளியே வந்து அப்பால் ஓடிச்சென்றான்.

தௌம்யர் அவனிடம் “நாம் இன்றே கிளம்புவோம்” என்றார். அவன் ஆம் என தலையசைத்தான். அவர்கள் எவருமே அந்நிகழ்வால் நடுக்கு கொள்ளவில்லை. அது ஒவ்வொருநாளுமென நடைபெற்றது. ஆனால் ஒவ்வொருமுறையும் அவனை அது அகம்விதிர்க்கச் செய்தது. அவன் நெஞ்சிலிருந்து அந்தப் படபடப்பு அகல நெடும்பொழுதாகியது. தௌம்யர் “இது நீர்க்கடன்களுக்கு முந்தைய நிலை. நீர்க்கடன் வரை அவ்வுயிர்கள் இங்கேதான் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் அருகமைவை நாம் இவ்வண்ணம் ஆழ்ந்த துயர் என உணர்கிறோம். அவர்களை விண்ணேற்றிவிட்டால் நாம் அவர்களிடமிருந்து மீள்வோம்… இதை நான் மீளமீள உணர்ந்திருக்கிறேன். விந்தை என்றே சொல்லவேண்டும். மானுடர் மிகமிக எளிதாக மீண்டுவிடுவார்கள்” என்றார்.

முக்தவனம் நகுலன் எண்ணியதுபோல் இருக்கவில்லை. பலமுறை கங்கையில் வந்த வெள்ளத்தால் படிந்த வண்டல் சேறென்றும் பின் மணலென்றும் மாறி பல அடுக்குகளாக எழுந்து, அதன் மேல் நாணலும் மரங்களும் முளைத்து, அடையாளம் காணமுடியாத காடாக மாறிவிட்டிருந்தது. தௌம்யர் அவ்விடத்திற்கு பலமுறை வந்திருந்தவர், எனினும்கூட அதை நோக்கி குழப்பத்துடன் நின்றார். நகுலன் “இந்த இடம்தான் அல்லவா?” என்று கேட்டான். “இந்த இடம்தான், ஆனால்…” என்றார் தௌம்யர்.

அவர் நாணலினூடாக விழுந்துகிடந்த மட்கிய மரங்களின்மேல் கால் வைத்து ஏறிச்சென்றார். சேற்றுச் சரிவிலிறங்கி கங்கையை பார்த்தார். பின்னர் “இங்கு இந்த வளைவு முன்பிருந்ததில்லை. முன்பு இந்நிலம் நீண்டு கங்கைக்குள் சென்றிருந்தது. இம்முனையில் அன்று ஒரு படித்துறை இருந்தது. இங்கு நதி நீண்டு உள்வளைந்து நிலத்தை விழுங்கிவிட்டிருக்கிறது” என்றார். “அது நிகழ்வதுதானே? கங்கை ஒருபோதும் தன் கரைகளை பேணியவளல்ல” என்று நகுலன் சொன்னான். “இங்குதான் அந்த பலித்துறை இருந்தது. எனில் எங்காவது முன்னர் பிரதீபர் காலத்தில் கட்டப்பட்ட கல்படித்துறை இருந்தாகவேண்டும்” என்று தௌம்யர் கூறினார்.

நகுலனின் ஆணைப்படி ஏவலர் நீண்ட மூங்கில்களை வெட்டி முனையை கூர்படுத்தி சேற்றில் ஓங்கி குத்தியபடி அப்பகுதி முழுக்க தேடினார்கள். புரவி மேல் அமர்ந்து அவர்களின் செயலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு திடுக்கிடல்போல் அவன் உணர்ந்தான், அந்தக் காட்டுநிலத்தை அவர்கள் படைக்கலங்களால் குத்திக்கொண்டிருக்கிறார்கள் என. கொடிய விலங்கொன்றை கொல்வதுபோல. நிலத்தின் சாவுத்துடிப்பை பார்க்கலாம் என்று தோன்றியது. சேறுடன் மேலெழுந்து வந்த மூங்கில் முனைகளில் இருப்பது குருதி. செந்நிணம் தெறிக்கிறது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டான். ஆனால் ஒவ்வொரு குத்தும் விழுந்தெழும் ஓசையை அவன் உடல் அறிந்தது. நிலம் வலிகொண்டு முனகிப் புளைந்து அதிர்ந்தது.

ஒருவன் “இங்குள்ளது!” என்றான். “எங்கே?” என்று கேட்டபடி தௌம்யர் அருகே சென்றார். கங்கையின் நீர்ப்பரப்பிற்குள் இடையளவு ஆழத்தில் அவன் நின்றிருந்தான். “இந்த இடம் ஒரு மணல்மேடாக உள்ளது. இதன் அடியில் அந்தப் படிக்கட்டை உணர்கிறேன்” என்றான். “அது பாறையாக இருக்கலாமல்லவா?” என்றான் ஒருவன். ஏவலன் “ஏழு இடத்தில் குத்தி ஏழு இடங்களிலும் சீராக பாறையை உணர்கிறேன். எனில் இது படிக்கட்டேதான்” என்றான். “பிறிதொரு முறை நோக்குக! அது படிக்கட்டெனில் இதுவே முக்தவனம் என்று முடிவு செய்யலாம்” என்றார் தௌம்யர்.

வீரர்கள் இடையளவு நீரில் இறங்கி மூங்கிலால் குத்தி நோக்கினர். “ஆம், அமைச்சரே. இங்கு ஏழு கல்படிகள் மூழ்கிக்கிடக்கின்றன” என்றான் தலைமைக்காவலன். “எனில் இங்கு முக்தவனம் அமையட்டும். காடு தெளிவித்து தங்குமிடம் ஒருக்குக!” என்றார் தௌம்யர். காவலர்தலைவன் “அங்கு குடில் கட்டப்பட்ட அதே அமைப்பு இங்கும் தொடரலாம் அல்லவா?” என்றான். “ஆம், ஆனால் அதற்கு இருபுறமும் இரு கிளைகள் தேவை” என்றான் நகுலன். “வலப்புறக் கிளை பேரரசருக்கும் பேரரசி காந்தாரிக்கும் உரியது. அவர்களுடன் வரும் அரசியரும் இளவரசியரும் அங்கே தங்கட்டும். இடப்புறக் கிளை அன்னை குந்திதேவிக்கும் திரௌபதிக்கும் உரியதாகுக!”

ஏவலர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்திருந்த தட்டிகளையும் மூங்கில்களையும் வடங்களையும் கொண்டு அங்கே குடில்கள் அமைக்கத் தொடங்கினர். கண்ணெதிரில் அந்த இடம் ஒரு சிற்றூர்போல ஒருங்குவதைக் கண்டான். யுதிஷ்டிரனின் குடில் எழுந்ததும் அதன்மேல் மின்கொடி எழுந்தது. ஒரு கொடி எழுந்ததும் அக்காடு முழுமையாகவே வெல்லப்பட்டுவிட்டது என்று அவன் எண்ணினான். இனி அது இந்திரப்பிரஸ்தம், அல்லது அஸ்தினபுரி. இனி அதற்காக கொல்லலாம், வெல்லலாம், சாகலாம். அதை பல்லாயிரம் அம்புகளால் துளைக்கலாம். அதில் பல்லாயிரம் உடல்களை புதைக்கலாம். அது நனவு உலராமல் குருதி குடிக்கப் பழகவும்கூடும். குருதி குருதி என அது ஆணையிடக்கூடும்.

அன்றிரவு தனக்கான குடிலுக்குள் மூங்கில்படல்மேல் கமுகுப்பாளை விரித்து உருவாக்கப்பட்ட மெத்தையில் படுத்து தலைக்கு மேல் கைவைத்து இருளை நோக்கிக்கொண்டிருந்தான். இக்குடிலிலும் நான் அமைதி கொள்ளப்போவதில்லை. மயங்குதலன்றி இனி துயிலென்பதே எனக்கில்லை. மின்னி மின்னி சலித்து எண்ணம் இருளென சேறில் புதைந்து இன்மை அழிவதே துயிலென்று உணர்ந்துகொண்டிருக்கிறேன். அவன் விழித்துக்கொண்டபோது இருளுக்குள் ஊளை ஒலிகள் கேட்டன. எழுந்து வெளியே சென்றான். தௌம்யரும் ஏவலர்குழாமும் துயில்கொண்டுவிட்டிருந்தனர். பகலெல்லாம் பணியாற்றிய களைப்பு அவர்களை மண்ணோடு அழுத்தியிருந்தது.

அவன் இருள் செறிந்த காட்டிற்குள் சூழ்ந்திருந்த மின்மினிகளை பார்த்தான். ஆனால் அவை பறக்கவில்லை. இருளுக்குள் பதிக்கப்பட்ட விண்மீன்கள் என நின்றன. அவன் மெல்ல அருகே சென்றான். அவை விழிமணிகள் என உணர்ந்தான். நரிகளின் செவியசைவுகளை, மூக்குநுனிகளை காணமுடிந்தது. அவை அந்தக் குடில்களை சூழ்ந்திருந்தன. அவனுடைய காலடியோசையில் ஒன்று உடல் துடித்து உறுமியபடி பின்னால் சென்றது. அவன் மேலும் முன்னால் சென்றபோது அது ஊளையிட்டபடி பாய்ந்து பின்னால் ஓட பிற நரிகள் அதைத் தொடர்ந்து காட்டுக்குள் சென்றன.

அவன் அங்கேயே நின்று அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். அவை அந்த நாணல்காட்டில் வாழ்பவை. அந்தப் படித்துறையில் நீர் அருந்துபவை. அவற்றின் நிலம் கொள்ளப்பட்டுவிட்டது. அவை ஏன் தன்னை தாக்கவில்லை? நரிகள் தனியாக வரும் யானையையே தாக்கக்கூடியவை. முன்னர் பலமுறை நரிகள் நடுவே சிக்கிக்கொண்டதுண்டு. அனல் ஒன்றே அவற்றிடமிருந்து தப்புவதற்கான வழி. இன்று அவை என்னை அஞ்சுகின்றன. என்னிடம் அவற்றை அச்சுறுத்தும் ஒன்று உள்ளது. அது என்னுள் எரியும் ஓர் அனல் போலும். அவன் அங்கே நின்று அவற்றை நோக்கிக்கொண்டிருந்தான். மெல்லமெல்ல அவை மீண்டும் ஒருங்கிணைந்தன. விழிப்புள்ளிகளால் ஆன ஒரு வட்டமாக அவனைச் சூழ்ந்திருந்தன.

நகுலன் தேர்களின் இணையாக புரவியை செலுத்திக்கொண்டு சூழ்ந்திருக்கும் காட்டை பார்த்துக்கொண்டே சென்றான். சிலநாட்களாக அங்கே பந்தங்களும் விளக்குகளும் பெருகிவிட்டன. இரவும் பகலும் ஓசைகள் எழுந்தன. மானுடர்கள் திரண்டனர். நரிகள் விலகிச் சென்றுவிட்டிருக்கும். ஆனால் அவை அவ்வாறு சென்றுவிடுவதில்லை. அவை காட்டுக்குள் எங்கோ நின்று நோக்கிக்கொண்டேதான் இருக்கும். அவன் அவற்றின் விழியுணர்வை உணரமுடியுமா என நோக்கினான். விழிகளை நிலம்நோக்கித் தழைத்து தன் தோல்பரப்பை உணர்வுகொள்ள வைத்தான். சென்றுகொண்டே இருந்த ஒருகணம் அவன் நரிகளின் நோக்கை உணர்ந்தான்.