நீர்ச்சுடர் - 11

பகுதி இரண்டு : குருதிமணிகள் – 5

வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயத்தின் அருகே மண் சரிவாக செதுக்கப்பட்டு ஆழத்திற்கு இறங்கிச் சென்றது. ஐந்தடி உயரமான சிறிய கல்ஆலயத்திற்குள் ஒரு முழ உயரத்தில் நின்றிருந்த அன்னையின் உருவம் சந்தன காப்பிடப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதற்குள் கால் மடித்து அமர்ந்திருந்த முதிய சூதப்பெண்மணி அணிகளை முழுமை செய்துகொண்டிருந்தார். ஆலயத்திற்கு முன்பு மண் வெட்டி அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டிருந்த நீள்சதுர வடிவ முற்றத்தில் மலர்களால் களம் அமைக்கப்பட்டிருந்தது. சிவந்த மலர்களாலும் நீல மலர்களாலும் அமைக்கப்பட்டிருந்த களத்தின் ஓரம் அப்போதும் முழுமை அடையவில்லை. நாக தேவியின் அந்த உருவை அருகணைந்து இடையில் கைவைத்தபடி கனகர் பார்த்து நின்றார்.

பத்து நாகங்கள் ஒன்றுடன் ஒன்று உடல் பின்னிப்பிணைந்து ஒரு பரப்பென ஆகி நடுவே தங்கள் வாலுடல்களால் ஒரு மலர்ப்பீடத்தை அமைத்து அதில் தேவியை அமரச்செய்திருந்தன. சுழிவட்டத்தின் விளிம்பு நாகத்தின் படமெடுத்த தலைகளால் ஆனதாக இருந்தது. அத்தனை சிக்கலான ஒரு உருவத்தை மலர்களால் உருவாக்கிவிட முடியும் என்பது அவருக்கு விந்தையாக இருந்தது. சூதப்பெண்கள் பணி தொடங்குகையில் அது மிக எளிய ஒரு மலர்க்கோலமாக இருக்கும் என்று அவர் எண்ணியிருந்தார். ஆவணி மாதத்தில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு முன் மலர்க்களங்களை அமைப்பதை அவர் பார்த்திருந்தார்.

இளவேனில் மலர்க்களங்கள் நெடுங்காலமாக செய்து செய்து கைகளிலேயே அசைவென அமைந்திருந்தவை. பேசிச் சிரித்தபடியும் அவ்வப்போது எழுந்து சென்று வெவ்வேறு இடங்களில் அமர்ந்தும், சில தருணங்களில் பூசலிட்டபடியும் அவர்கள் அதை வரைந்து முடிப்பார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஒற்றை உருவம் எப்படி அமைந்துள்ளது என அவர்களே அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் வசந்தத்தின் தெய்வமாகிய இந்திரன். மின்படையும் யானையூர்தியும் கொண்டவன். செங்கழுகுகளால் சூழப்பட்டவன். அதை முடித்த பின்னர் அது அவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருப்பதனால் அதை வியந்து நோக்கவும் அவர்களால் இயல்வதில்லை.

கொற்றவை அன்னையின் ஆலயத்தின் பூசனைக்கு வண்ணக்களமெழுதும் விறலியர் ஓர் ஓரத்திலிருந்து முழுமையாகவே அம்மாபெரும் ஓவியத்தை வரைந்து செல்வதை அவர் கண்டிருக்கிறார். முதன்மைக் கோட்டு வரைவு உருவாக்கப்படுவதில்லை. அதற்குள் வண்ணங்கள் தீற்றப்படுவதும் இல்லை. முழுக்களத்தையும் ஒரு முறை நோக்கிய பின்னர் தென்மேற்கு மூலையில் ஒரு செம்மலரை வைப்பார்கள். அதைச் சுற்றி சிவந்த வண்ணத்தைக் கொண்டு ஒரு சுழல் வட்டம் போடுவார்கள். அங்கிருந்து மண் எனும் திரையை இழுத்து அகற்றி அடியில் பதிந்திருக்கும் ஓவியத்தை வெளியே எடுப்பதுபோல் அக்களம் எழுந்து வரும். தேவியின் முகத்தில் புன்னகை கனிந்திருக்கும். சிம்மமும் பூத கணங்களும் வெவ்வேறு கொடுந்தோற்றத்திலிருக்கும். சீறுபவை, சினப்பவை, வெறிப்பவை, அப்பாலென ஊழ்கத்திலமர்ந்தவை.

இறுதிக்கோட்டை விறலி வரைந்து முடிப்பதற்குள் முதலில் அமர்ந்திருக்கும் விறலிக்கு தெய்வமெழுந்தாகவேண்டும் என்பது நெறி. அக்கோடு வண்ணப்பொடியாக உதிர்ந்து முழுமையடையும் கணத்தில் அறியாப் பெருவிலங்கொன்றின் உறுமல்போல் ஓசையெழுப்பி விறலி வெறியெழுந்து நடுக்கு கொள்வாள். நோக்கி நிற்கையில் ஏற்படும் அத்தருணத்து மெய்ப்பு கொள்ளல் அவருக்கு இறையெழும் தருணமாகவே எப்போதும் இருந்திருக்கிறது. ஆண்டோடு ஆண்டு நிகழ்ந்து நிகழ்வது என்னவென்று நன்கு அறிந்திருந்த போதும்கூட அவருக்கு அது அகப்பெருக்கையே அளித்தது. அவர் கால் நடுங்கி உடல் விதிர்க்க கைகளைக் கூப்பி இறுக்கியபடி நீர்கோத்த விழிகளுடன் நோக்கி நின்றிருப்பார்.

விறலி துள்ளி அதிர்ந்து சுழன்று தலைமுடியைச் சுழற்றி வரைந்த புள்ளியிலிருந்து அந்த ஓவியக்களத்தை அழிக்கத் தொடங்குவாள். வண்ணங்கள் கரைந்து குழம்பி முகில் தீற்றல்கள் என்றாகி நீர்க் குழம்பல் என்று மாறிப் பரவ அதில் தரையில் பிடித்திட்ட மீனென விறலி கிடந்து நெளிந்து துடிப்பாள். கண்ணெதிரில் அந்த ஓவியம் கலைந்து மறையும். முகிலில் விழிமயக்கோ என தோன்றி மறையும் தெய்வ உருவங்கள்போல. அதன் முழு உருவை எவரும் காணக்கூடாதென்பது நெறி. முழுதுருவைக் கண்டவர்கள் இல்லம் திரும்ப இயலாது. முழுதுரு விண்ணிலிருந்து இறங்கும் ஆகாய கங்கை போன்றது. விரிசடையரால் மட்டுமே அதை ஏந்த இயலும். பேரழகும் பெருங்கனிவும் முற்றிலும் துறந்த முனிவர்களாலன்றி பிறருக்கு அறிய ஒண்ணாதவை.

சூதர் பெண்டிரில் அத்தனை பெரிய களமெழுத்து கலை திகழும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சம்வகையுடன் புலரியில் அவர் சூதர்தெருக்களுக்குச் சென்றார். அங்கிருந்த முதிய சூதர்பெண்களிடம் சம்வகை நிகழ்ந்ததைச் சொன்னபோது அவர்கள் அனைவருமே அச்சமுற்றனர். “இல்லை தேவி, நாங்கள் எவரும் அத்தகைய தேவியை அறிந்ததில்லை. அதன் பூசனைமுறைகள் எவையும் நாங்கள் அறிந்திராதவை” என்று முதுசூதப்பெண் சொன்னாள். “மேலும் அறியாத் தெய்வத்திற்கு நாங்கள் பூசனை செய்யக்கூடாது… அது எங்கள் குடித்தெய்வங்களாலும் குலதெய்வங்களாலும் மூதாதையராலும் ஏற்கப்படுவது அல்ல.”

“அரசாணை என்று சொல்” என அப்பால் நின்றிருந்த கனகர் உறுமினார். “எவருடைய ஆணையாயினும் நெறிகளை நாங்கள் மீறக்கூடாது…” என்று முதுமகள் சொன்னாள். “நீங்கள்தான் இப்பூசனையை செய்திருக்கிறீர்கள். தீர்க்கசியாமரில் எழுந்த அழியாச் சொல் அதை கூறியது” என்றார் கனகர். “அச்சொல்லே எழுந்துவந்து எங்களுக்கு ஆணையிடவேண்டும்… நாங்கள் அறியாததை எப்படி செய்யமுடியும்?” என்றாள் முதுமகள். கனகர் ஏதோ சொல்வதற்குள் அருகணைந்த சம்வகை “நாம் ஒன்று செய்யலாம். இம்மகளிர் அனைவரும் வந்து அன்னையை வணங்கவேண்டும் என ஆணையிடலாம். அதை அவர்கள் தட்டமாட்டார்கள். அன்னையின் விழி பட்டால் அவர்களில் வெறியாட்டு எழக்கூடும்” என்றாள்.

“அது எங்ஙனம்…?” என கனகர் தயங்க “வெறியாட்டெழவேண்டிய உள்ளத்தை தெய்வங்களே முடிவுசெய்கின்றன” என்றாள் சம்வகை. “இப்படி ஒரு தெய்வம் இங்கிருந்தது என்றால் இவர்கள் அறியாமலிருந்திருக்க வாய்ப்பில்லை” என்று கனகர் சொன்னார். “ஆம், ஆனால் தெய்வம் புதைந்து கிடந்தது. ஆகவே அவர்களின் நினைவில் அல்ல கனவிலேயே அது வாழ்ந்திருக்கக்கூடும். அதை அவர்கள் நேரில் பார்க்கட்டும். அவர்களின் கனவுகள் திறந்துகொள்ளட்டும்” என்றாள் சம்வகை. “வரவர உன்னிடமிருந்து நான் ஆணைபெற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்” என முணுமுணுத்த கனகர் “அவ்வாறே ஆகுக!” என்றார்.

அவர்கள் அனைவரும் மலர்த்தாலங்களுடன் வந்து அன்னையை வழிபடவேண்டும் என கனகரின் ஆணை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கலைந்த குரலில் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். குழம்பியும் பதற்றம்கொண்டும் அவர்கள் ஓயாது சொல்லாடிக்கொண்டே இருந்தனர். “எவ்வகையில் வழிபடுவது?” என முதுமகள் கேட்க “வெறும் அகல்விளக்கே போதும்” என்றாள் சம்வகை. அவர்கள் முடிவெடுத்து சிற்றகல்களில் சுடருடன் நிரைவகுத்து வஜ்ரநாகினி அன்னையின் சிற்றாலயம் நோக்கி சென்றார்கள்.

அந்த ஆலயம் என்ன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட முழக்கத்துடன் அவர்கள் சம்வகையைத் தொடர்ந்து சென்றார்கள். ஆனால் தென்மேற்குக் கோட்டைமுனையை அடைந்தபோது அவர்களின் நடை தளர்ந்தது. ஒரு முதுமகள் “எனக்கு தலைசுழல்கிறது” என்றாள். ஒரு சில இளம்பெண்கள் அழத்தொடங்கிவிட்டிருந்தனர். பலர் மெய்ப்புகொண்டு கழுத்தில் தசைகள் இறுகியிருக்க கைகளை சுருட்டிப்பற்றியபடி நடந்தனர். ஆலயத்தை தொலைவில் பார்த்ததுமே முதுமகள் “இந்த ஆலயம்… இந்த ஆலயம்!” என்று கூவினாள். பின்னர் அவர்கள் அந்த ஆலயம் நோக்கி கூச்சலிட்டபடி ஓடத்தொடங்கினர். சரிவிலிறங்கி அதனருகே சென்று விழுந்து வணங்கினர். “அன்னையே அன்னையே” என கூச்சலிட்டனர்.

முதுமகள் திரும்பி கனகரிடம் “எங்களுடன் ஒரு நாகசூத முதுமகள் இருக்கிறாள். முன்பு இங்கே வந்தவள், இங்கேயே தங்கிவிட்டவள். இல்லமற்றவள். உறவும் இல்லாதவள்… அவளுக்குத் தெரியும் இந்த ஆலயத்தின் பூசனைமுறைகள்… அவளை அழைத்துவருக!” என்றாள். சம்வகை “எனக்குத் தெரியும் அவளை” என்றபின் “நான் அழைத்துவர ஆணையிடுகிறேன்” என்றாள். கனகர் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று வந்து இணைந்துகொள்ளும் விந்தையை உணர்ந்தபடி நின்றிருந்தார். சூதப்பெண்கள் அந்தக் களமுற்றத்திலேயே அமர்ந்துவிட்டனர். கைகூப்பி அழுதபடியும் அரற்றியபடியும் ஒருவரை ஒருவர் தழுவியபடியும் அங்கிருந்தனர்.

சற்றுநேரத்திலேயே குனிந்த உடலுடன் கைகளை காலென வீசியபடி முதுமகள் வந்தாள். சம்வகை அருகே சென்று “அன்னையே, இந்த ஆலயத்தின் பூசனைகளை நீங்கள் அறிவீர்களா?” என்றாள். அவள் ஒன்றும் சொல்லாமல் ஆலயத்தை நடுங்கும் தலையுடன் நோக்கினாள். பின்னர் மெல்ல நடந்து ஆலயத்தருகே சென்று உள்ளே பார்த்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தது. திரும்பி சம்வகையிடம் “அன்னைக்கான பூசனைகளை நான் இயற்றுகிறேன்…” என்றாள். “நான் நாள்தோறும் செய்யும் பூசனைகள்தான் அவை…” கனகர் என்ன சொல்கிறாள் என கையசைவால் கேட்டார். சம்வகை பிறகு சொல்கிறேன் என விழிகாட்டினாள்.

நாகசூத முதுமகளின் ஆணைப்படி பூசனைகள் ஒருக்கப்பட்டன. அனைத்தும் ஒருங்கியதும் அரசிக்கு செய்தியறிவிக்க சிற்றமைச்சர் சூரியசேனரை அனுப்பிவிட்டு கனகர் ஓரமாக மரநிழலில் அமர்ந்தார். சூதப்பெண்கள் காட்டுக்குள் சென்று மலர் கொண்டுவந்தனர். அவர்களிடம் முதுமகள் மெல்லிய குரலில் ஆணையிட்டுக்கொண்டிருந்தாள். அவர்கள் மலர்க்களம் அமைக்கப்போகிறார்கள் என்பதே சற்றுப்பொழுது கழித்துத்தான் அவருக்குப் புரிந்தது. சம்வகை அருகே வந்து “அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்ன புரிந்துகொள்கிறார்கள் எதுவும் புரியவில்லை” என்றாள். “அரசியர் கிளம்பிவருவதற்கு முன் இவை முடியவேண்டும்” என்றார் கனகர்.

மலர்க்குடலைகளுடன் சூதப்பெண்கள் கூடினர். மலர்களை விரித்த பாயில் குவித்தனர். முதுநாகினி நீராடி ஈர ஆடையுடன் கண்களை மூடியபடி நடுக்குற்ற உடலும் அசைந்தாடும் கால்களுமாக நடந்துவந்தாள். அவள் குனிந்து நடக்கையிலேயே அத்தனை விசையும் நிமிர்வும் எப்படி உருவாகிறது என்று அவர் வியந்துகொண்டிருந்தார். அங்கு ஒலித்துக்கொண்டிருந்த குறுமுழவுகளும் சிறுமுரசும் எழுப்பிய தாளமே அவ்வசைவை உருவாக்குகிறது போலும். அன்றி உடலசைவிலிருந்து அத்தாளத்தை பெறுகிறார்களா? உறுமி தேம்பலோசை எழுப்பி அதிர்ந்துகொண்டிருக்க முதுநாகினி வந்து அக்களத்தின் சரிவிலிறங்கி முற்றத்தை அடைந்து உள்ளிருக்கும் தேவி சிலையை நோக்கி நின்றாள்.

அவள் சிற்றுடல் அதிர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் நோக்கியபின் வலப்பக்கத்தில் பெரிய கூடையில் நிறைத்து வைத்திருந்த செம்மலர்களை நோக்கி சென்று அள்ளி இரு கைகளாலும் எடுத்து அம்மலர்களை களத்தில் வீசினாள். அவை பறந்து சென்று விழுந்தன. மும்முறை மூன்று வண்ணங்களில் மலர்களை வீசிய பின்னர் அவள் சென்று தென்மேற்கு மூலையில் அமர்ந்துகொண்டாள். அவளுடைய இரு கைகளுக்கும் அருகே மலர்க்கூடைகளை கொண்டு வைத்தனர். அவற்றை அள்ளி அள்ளி மண்ணில் போடத்தொடங்கினாள். என்ன நிகழ்கிறதென்று கனகர் திகைப்புடன் பார்த்திருந்தார்.

மலர்களை அள்ளி வெறுமனே வீசுவது போலவும் குவிப்பது போலவும்தான் தோன்றியது. ஆனால் சற்று நேரத்திலேயே நீலநிற நாகம் செவ்விழிகளுடன் முகம் தெளிந்தது. மேலும் மேலும் சூதப்பெண்டிர் சன்னதம் கொண்டு உடல் நடுக்குற்று அக்களத்தின் வெவ்வேறு மூலைகளில் அமர்ந்து மலர்களை அள்ளி நிலம்பரப்பத் தொடங்கினர். களம் விரிந்து பரவிக்கொண்டிருந்தது. அதில் நாகபடங்கள் தெளிந்தன. தேவியின் காலடிகள் துலங்கின. அவள் சடையென விரிந்த நாகச்சுருள்கள் உருவாகி வந்தன.

அரண்மனையிலிருந்து எப்போது அரசியர் எழவேண்டும் என்று ஏவல்பெண்டு வந்து கேட்டாள். அக்களம் எப்போது முடியும் என்று தெரியாததனால் கனகர் “பொழுது அணைகையில் நான் ஆணையிடுகிறேன்” என்றார். அதற்குள் பூசனைக்குரிய பொருட்களுடன் ஒரு வண்டி அங்கே வந்தது. அதை ஓட்டி வந்த காவற்பெண்டிடம் ஆணையிட்டுவிட்டு அவர் மீண்டு வந்து பார்த்தபோது வட்டமலரின் இதழ்கள்போல நாகங்களில் ஏழு தலைகள் எழுந்துவிட்டிருந்தன. அவரால் அவற்றை நோக்க முடியவில்லை. பின்னர் அவர் உள்ளத்தில் அந்நாகங்கள் நெளிந்துகொண்டே இருந்தன என்றாலும் அவர் திரும்பி களத்தை பார்க்கவே இல்லை. இரண்டாவது தூதன் வந்து “நிமித்திகர் குறித்துக் கொடுத்த பொழுதுக்கு இன்னும் இரண்டு நாழிகையே உள்ளது. அரசியர் அனைவரும் ஒருங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பலாமா என்று கேட்டுவரும்படி அரசி ஆணையிட்டார்” என்றான். கனகர் வந்து களத்தை பார்த்தபோது பெரும்பகுதி பணி முடிந்திருந்தது. அவர் திறந்த வாயுடன் எண்ணங்களற்று நின்றார். ஒற்றன் அருகே வந்து “அமைச்சரே” என்றான். கனகர் திரும்பி நோக்கி “அவர்களுக்குத்தான் பொழுது குறித்துக் கொடுத்திருக்கிறோமே? அதன்பிறகும் ஏன் திரும்பத் திரும்ப நம்மை உசாவிக்கொண்டிருக்கிறார்கள்? அரசிக்கு எண்ணமிருந்தால் குறித்த நேரத்தில் கிளம்பட்டும். அதற்கு மேல் நானொன்றும் சொல்வதற்கில்லை” என்றார். அச்சினத்தை நோக்கி திகைத்த ஒற்றன் தலைவணங்கி அகன்றான்.

கனகர் அந்த நாகச்சுருள் ஓவியத்தை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு வலுத்த காற்றில் மலர்களில் அவ்வுருவம் அப்படியே மறைந்து வண்ணச்சிதறலாக மாறிவிடக்கூடும். எனில் அறியாத பிறிதொரு காற்றால் இம்மலர்கள் தொகுக்கப்பட்டு இவ்வடிவம் உருவாகி வந்திருக்கின்றதா? இப்பெண்டிரின் கைகளைப் பற்றி இயக்கும் காற்று. மரக்கிளைகளையும் இலைகளையும் ஆள்வதுபோல் அது இவர்களைக்கொண்டு தன்னை நிகழ்த்துகிறது. காற்றை ஆள்பவள் அவள்தான் போலும்.

சில நாட்களாகவே தன்னிலெழும் எண்ணங்கள் அனைத்துமே பிறிதொருமுறை நோக்குகையில் பித்தெனத் தெரிபவை. ஆனால் தன்னுள் ஓடும் எண்ணங்களை அவரால் நிறுத்த முடியவில்லை. உள்ளிருந்து ஒருவர் காய்ச்சல் வெறியில் அவற்றை சொல்லிக்கொண்டிருப்பதைப்போல. அச்சொற்களினூடாக அவர் உள்ளிருக்கும் அனைத்தையும் கலைத்து பிறிதொன்றாக்கி அடுக்குகிறார். அவர் சொன்ன அனைத்தையும் அள்ளி ஓரமாக தள்ளிவிட்டே அவர் அன்றாடத்தில் புழங்க முடிந்தது. அமைச்சுப் பணிகளை ஆற்ற முடிந்தது. வெளியே இருந்து வரும் ஒவ்வொரு சொல்லும் அந்த அடுக்குகளை சிதைக்கின்றன. அவரை எரிச்சல்கொண்டு கூச்சலிடச்செய்கின்றன.

கீழிருந்து இளம் சூதப்பெண்ணொருத்தி மேலே ஏறி வந்து “களம் வரைந்து முடிக்கப்பட்டுவிட்டது. அறுதி மலர் வைக்கப்படவில்லை. அது வைக்கப்படும்போது இந்த ஓவியமும் கலைக்கப்படத் தொடங்கிவிடவேண்டும் என்பது நெறி. ஆகவே அரசியர் வரலாம்” என்றாள். அவளுக்கு அந்தச் சடங்கில் ஓவியம் கலையும் என எவ்வண்ணம் தெரியும் என்று கனகர் எண்ணினார். அவர்கள் முன்பு அக்களத்தை வரைந்ததே இல்லை. ஆனால் எங்கோ அவர்கள் எவருமறியாமல் அக்களத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறார்கள். வெளியே பருவடிவான முற்றத்தில் வரைந்திருக்கலாம். கனவுகளில் வரைந்திருக்கலாம்.

சூதப்பெண் “பூசனைக்கு தாங்கள் ஆணையிடவேண்டும், அமைச்சரே” என்று உரத்த குரலில் சொன்னாள். “ஆம், பூசனைகள் தொடங்கட்டும்… அரசியர் இந்நேரம் கிளம்பிவிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்” என்றபின் திரும்பிச்சென்று சாலை விளிம்பில் நின்ற சூதனிடம் “என்ன செய்கிறாய் இங்கே? அரசியர் கிளம்பிவிட்டார்களா? செய்தி தெரியுமா உனக்கு?” என்றார். “அறியேன், அமைச்சரே” என்று அவன் சொன்னான். “பிறகென்ன செய்கிறாய் நீ? அறிவிலி!” என்றார் கனகர். அவன் ஏற்கெனவே பலமுறை அவரிடம் சினச்சொல் பெற்று சலிப்புடன் இருந்தான். “என் பணியை நான் செய்கிறேன். சென்று உசாவி வரவேண்டுமென்றால் என் காவலுக்கு பிறரை அனுப்புக!” என்றான்.

“என்ன சொல்கிறாய்?” என்று கனகர் சீற்றத்துடன் கையை ஓங்க அவன் “இல்லையெனில் நீங்கள் இங்கே வாளேந்தி காவல் நிற்கலாம்” என்றான். “இழிமகனே!” என்றார் கனகர். “அதை திரும்ப நான் சொல்ல நெடும்பொழுது ஆகாது. நான் அவ்வாறு சொல்வதில்லை. குடிப்பிறப்பும் நெறியும் என்னை ஆள்கின்றன” என்றான். கனகர் தளர்ந்து அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவன் அவரைப் பார்த்து முகம் கனிந்து “இங்கு அனைவருமே பித்துநிலையில்தான் இருக்கிறோம், அமைச்சரே. பித்தை உள்ளொடுக்கித்தான் புழங்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து இங்கே விழுந்து கிடப்போம்” என்றான்.

கனகர் பற்களைக் கடித்து அவனை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தார். அவன் அவர் விழிகளை நேர்நோக்கி “இங்கே எவரும் இன்னொருவரை கொல்வதற்கு இரண்டாம் முறை எண்ணும் நிலையில் இல்லை. சற்றுமுன் இந்த வாளால் உங்கள் கழுத்தை வெட்டினேன். அவ்வாறு நிகழவில்லை என்பதை அடுத்த கணம்தான் உணர்ந்தேன்” என்றபின் சலிப்புடன் “வேண்டாம். சொல் காக்க! செயல் காக்க!” என்றபின் தலையசைத்தான். “ஆம்” என்றார் கனகர். “பொறுத்துக்கொள்க… நான் நிலையில் இல்லை.” அவன் “நானும்தான்… நான் கிடந்து துயின்று பதினைந்துநாள் கடந்துவிட்டது” என்றான்.

கனகர் எடை மிக்க உடலை உந்தித் திருப்பி அப்பால் நடந்து சென்றார். அவரில் ஆழ்ந்த சலிப்பு ஒன்று எழுந்தது. அழுத்தமான மெழுக்குபோல, பசைபோல அது அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் பற்றிக்கொண்டது. ஒவ்வொன்றும் அசைவிழந்தன. உடற்தசைகள்கூட இறுகி நின்றன. நோக்கில் தெரிந்த அத்தனை அசைவுகளும் மிக மெல்ல நிகழ்வதுபோல, அப்பசையிலிருந்து விடுவித்துக்கொள்ளும் முயற்சியே அசைவுகளாக மாறியவைபோலத் தோன்றின. ஒவ்வொரு செயலுக்கு அடியிலும் இருப்பது சலிப்பே. எழுந்து பறந்து சுழன்று சுழித்தாலும் அமையவேண்டியது அதில்தான். சலிப்பு மட்டுமே மெய். பிற அனைத்தும் அந்த மெய்யை அஞ்சி சென்று அடைக்கலம் புகுந்துகொள்ளும் பொய்கள்.

ஒன்றுமே நிகழாதபோது எழும் சலிப்பை அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கணமும் எண்ணியிராதவை நிகழ்ந்துகொண்டிருக்க, ஒவ்வொரு செயலையும் புதியதெனக் கண்டடைந்து செய்யவேண்டியிருக்க எழும் அந்தச் சலிப்பை அதற்கு முன் அறிந்ததில்லை. அதுதான் மெய்யான சலிப்பு. எப்போதுமுள்ள சலிப்பு. ஒரு கண்டடைதல்போல் அவர் ஒன்றை உணர்ந்தார். அச்சலிப்பு அவர் உணர்ந்த அச்சமின்மையிலிருந்து எழுந்தது. குருக்ஷேத்ரப் போர் முடிந்தபின் அச்செய்திகள் வருந்தோறும் அவர் தன் இறப்பையே எண்ணிக்கொண்டிருந்தார். தான் இறக்கக்கூடும் என. இறந்தால் என்ன ஆகும் என. பின் இறப்பின் வெவ்வேறு தருணங்களை உள்ளத்தால் நடித்தார். நாளுக்கு நூறுமுறை இறந்தார்.

இறப்பு முதலில் அச்சமூட்டி சிலிர்க்கச் செய்தது. எடையுடன் மூடிய சலிப்பிலிருந்து கிழித்து வெளிவரச் செய்தது. ஆகவே மீண்டும் மீண்டும் அதை கற்பனையில் நிகழ்த்தினார். பின்னர் அந்த அச்சம் மறைந்தது. கழிவிரக்கம் உருவாகியது. கழிவிரக்கம் இன்னொரு வகையில் அலுப்பை இல்லாமலாக்கியது. எண்ணி எண்ணி இரங்கி விழிநீர் வார்த்து ஏங்கி படுத்திருக்கையில் எழும் நிறைவு இனிதாக இருந்தது. ஆனால் அதுவும் சின்னாட்களுக்கே. பின்னர் சாவு குறித்த எண்ணம் இயல்பான ஒரு கீற்று என வந்துசென்றது. ஒவ்வொரு எண்ணத்துடனும் அது இணைந்துகொண்டது. அதிலிருந்து அச்சமும் துயரும் மறைந்தபோது அது ஓர் உறுதிப்பாடாயிற்று. சாகவில்லை. ஆனால் செத்ததற்கு நிகர்தான்.

அந்த உச்ச உளச்சோர்வு செயல்பட்ட முறையிலிருந்த விந்தைகளையும் அவர் நோக்கிக்கொண்டிருந்தார். ஒன்றும் செய்வதற்கு உளம்கூடவில்லை. கண்ணெதிரே ஓலைகளில் பணி குவிந்திருந்தது. அவற்றை வெறுமனே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எந்த எண்ணமும் கோவையாக உருக்கொள்ளவில்லை. ஆகவே பெரும்பாலான பொழுதுகளில் வெறித்த விழிகளுடன் அமர்ந்திருந்தார். ஆனால் அது துயிலை கொண்டுவரவில்லை. அமர்ந்திருக்கையில் துயில்வந்து அழுத்திச் சாய்த்தது. சற்றே துயின்று விழித்துக்கொண்டால் உள்ளம் விசைகொண்டு சொற்களைப் பெருக்கியது. சோர்வே ஓய்வுக்கு எதிரானதாக ஆகக்கூடும் என அவர் அப்போதுதான் அறிந்தார்.

சாவு குறித்த அச்சம் அகன்றபோதுதான் சலிப்பு மேலும் அழுத்தம் கொண்டது என அவர் புரிந்துகொண்டார். அச்சம் அகன்ற சாவென்பது சாவே அல்ல. அச்சமே அலுப்பை வெல்ல மானுடருக்கிருக்கும் ஒரே வழி. ஆகவேதான் உயிரை வைத்து போராடுகிறார்கள். ஆணவத்துக்காக, பெண்ணுக்காக, நிலத்துக்காக, உரிமைக்காக, தெய்வங்களுக்காக கொல்லவும் சாகவும் துணிகிறார்கள். சாவின் விளிம்பில் நின்றிருக்கையில் அச்சம் பேருருக்கொண்டு சூழ்ந்திருக்கிறது. அப்போது மட்டுமே அலுப்பென்பது இல்லை. இழப்பும் நோயும் சிறுமைப்படுத்தப்படலும் சிறிய இறப்புக்கள். இறப்பை எண்ணி எண்ணி பேருருவம் கொள்ளச் செய்கிறார்கள். அது அச்சத்தை கடலெனப் பெருக்கி அவர்களுக்கு அளிக்கிறது. அதில் முடிவிலாது திளைக்கிறார்கள்.

மானுடரின் அச்சமே போர்களின் அடிப்படை. அஞ்சியே நிகழ்கின்றன போர்கள். பெரியோனை அஞ்சி, எளியோனை வென்று உண்டு வலுப்பெற முயல்கிறார்கள். செல்வம் சேர்க்கிறார்கள். அறிவை குவிக்கிறார்கள். நினைவை தொகுத்துவைக்கிறார்கள். சற்று சலித்தால், ஒருகணம் உளம் ஓய்ந்தால் வந்து கவ்விவிடும் சாவு குறித்த அச்சமில்லையேல் இந்நகர் இல்லை. இக்கோட்டைகள் இல்லை. அரண்மனையும் கருவூலங்களும் அறநூல்களும் அவைகளும் இல்லை. இப்போர் என்னை அச்சமில்லாதவனாக ஆக்கிவிட்டிருக்கிறது. தொழுநோயாளி வலியுணர்வை இழப்பதுபோல. கைகால்கள்போல உதிர்கின்றன. உடல் மட்கி அழிகிறது.

எண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலித்து அழித்துச் சிதைத்து வெறுமைகொண்டு அவ்வெறுமையை அஞ்சி மீண்டும்  எண்ணி எண்ணிப் பெருக்கி எழுப்பி எழுப்பி நிறைத்து சலிப்பை நாடும் இந்த ஓயாச் சுழற்சியில் ஒருதுளி. அச்சுழற்சியைக் காணும் கண்கொண்ட தீயூழினன். கனகர் மீண்டும் சிறுதுயில் ஒன்றில் மூழ்கி திடுக்கிட்டு எழுந்தார். எவரேனும் பார்க்கிறார்களா என நோக்கினார். அப்போது தோன்றியது அத்தனை பேரும் அவ்வண்ணமே இருக்கிறார்கள் என. அந்தக் காவலன். அந்த ஏவல்பெண்டு. அந்தப் புரவி. அஸ்தினபுரியின் மாளிகைகளும் காவல்நிலைகளும்கூட சோர்ந்து அரைத்துயிலில் என நின்றிருந்தன.

புரவியில் வந்திறங்கிய காவல்பெண் “அரசியர் கிளம்பிவிட்டார்கள்” என்றாள். கனகர் “முழவு ஒலிகள் எழவில்லையே?” என்றார். அவள் “எந்த ஓசையும் இன்றி இங்கு வரவேண்டுமென்பது சடங்கு. அதை தாங்களே மும்முறை என்னிடமும் கூறினீர்கள்” என்றாள். கனகர் “ஆம், எந்த ஓசையும் இருக்கலாகாது. ஓட்டைக்கலத்திலிருந்து நீரொழுகிப் போவதுபோல் அரண்மனைவிட்டு வரவேண்டும் என்று நாகினி கூறினாள்” என்றார். “வந்து கொண்டிருக்கிறார்கள்” என்று அவள் கூறினாள். கனகர் திரும்பி வந்து அங்கு நின்றிருந்த சூதப்பெண்ணிடம் “பூசனைகள் நிகழட்டும். இன்னும் அரை நாழிகைக்குள் அரசியர் இங்கு வந்துவிடுவார்கள்” என்றார்.

அவள் தலையசைத்து இறங்கிச் சென்று சிற்றாலயத்திற்குள் இருந்த முதிய சூதப்பெண்ணிடம் அச்செய்தியை கூறினாள். முழவுகள் ஓய்ந்தன. சூதப்பெண்ணொருத்தி வலம்புரிச்சங்கை உதடுகளில் பொருத்தி ஓம் ஒலி எழுப்பினாள். ஆலயமுகப்பில் செந்நிறப் பட்டுத் திரைச்சீலையொன்று போடப்பட்டது. உள்ளே சூதப்பெண் செய்யும் சடங்குகளில் ஒரு சிற்றகல் சுழல்வது மட்டும் வெளியே தெரிந்தது. கனகர் அதை நோக்கி நின்றார்.