நீலம் - 9
பகுதி மூன்று**: 3.** பெயரழிதல்
கருநீலக் கடலொன்று கண்ஒளிர்ந்து கைவிரிந்து காலெழுந்து இதழ்மலர்ந்து உங்கள் மடிகொண்டமைந்தது. பெண்களே, பேதையரே, பெருமையல் திரண்டமைந்த அன்னையரே, அக்கண்களுக்கு மையிட்டு கன்னங்களில் பொற்பொடியிட்டு கைகளுக்கு வளையிட்டு கால்களுக்கு தண்டையிட்டு அணியிட்டு அணிசெய்து நீங்கள் அறிந்ததுதான் என்ன? கன்னங்கருமைக்குள் எஞ்சும் வண்ணம்தான் ஏது? இல்லையென்ற சொல்லின்மேல் இருப்பதெல்லாம் சுமத்தும் ஞானியரா நீங்கள்? எல்லையற்ற இருள்வெளியில் நீங்கள் ஏற்றிவைத்த விண்மீன்களா அவை?
ஆயர்குடியில் அன்னையரின் நகைப்பொலிகளைக் கேட்கிறேன். மலர்தொடுப்பாள் ஒருத்தி. மாச்சுண்ணம் இடித்தெடுப்பாள் இன்னொருத்தி. மணிகோத்து மாலையாக்குவாள் பிறிதொருத்தி. நெஞ்சம் தொட்டு நினைவுதொட்டு கனவுதொட்டு கண்ணீர்தொட்டு தொடுத்தெடுக்கமுடிபவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களின் செஞ்சாந்து மெல்விரல்கள் நாவாகி நெளிந்து நெளிந்து சுழித்து நடமிட்டுக் களியாடி நிகழ்கிறது அவன் பெயர். சொல்தொடுத்து அவனுக்குச் சூட்டும் கவிஞன் பொருள்முதிர்கையில் அறியும் நிறைவின்மையை அவர்கள் ஒருபோதும் தொடுவதில்லை. அன்னையரே, பேதையரே, ஞானியருக்கு பாதம் கொடுப்பவன் உங்கள் கைகளுக்கு தலைகொடுத்திருக்கிறான்.
கோகுலத்து நந்தனின் சிற்றில் சிறுவாயில் திறந்து நுழைகிறேன். மலர்களை அள்ளி மாக்கோலத் திண்ணையில் சிதறடித்துச் செல்கிறேன். மணிமுத்துக்களை அள்ளி பசுஞ்சாணித்தரையில் உருட்டுகிறேன். நறுஞ்சுண்ணப்பொடியை அள்ளி சுவரில் வீசுகிறேன். ஆயர் மடமகளிர் அள்ளித் தோளிலிட்ட மெல்லியபட்டாடைகளில் ஆடுகிறேன். அவர்களின் கலைந்த கருங்குழல்களில் அளைகிறேன். கனிந்து வியர்த்த மேலுதட்டு நீர்முத்துக்களை ஒற்றி எடுக்கிறேன். அவர்கள் சலித்துச் சொல்லும் சிறு மொழிகளை அள்ளிக்கொள்கிறேன். நகைத்தோடி அன்னத்தூவல் அடுக்கியமைத்த அவன் மஞ்சத்தை அணைகிறேன். அவன் நெற்றிப்பிசிறுகளை ஊதி அசைத்து சுற்றி வருகிறேன். அவன் உதடுகளில் எஞ்சிய பால்மணம் கொண்டு வானிலெழுகிறேன்!
ஏன் இத்தனை அணிசெய்கிறார்கள் என்று ராதைக்கு புரிந்ததே இல்லை. நீலச்சுடர் வைரங்கள்மேல் எதற்கு அஞ்சனம்? மேகக்குழவிக்குமேல் எதற்கு மணிமாலை? ஆனால் அன்னையர் நெஞ்சம் ஆறுவதேயில்லை. ஒருத்தி சூட்டிய மாலையை இன்னொருத்தி விலக்கி பிறிதொன்று சூட்டுவாள். ஒருத்தி அணிவித்த ஆபரணம் ஒளியற்றதென்று இன்னொருத்தி எண்ணுவாள். அருகே அமர்ந்திருந்து ஒவ்வொருத்தியின் கையிலும் ஒவ்வொரு குழந்தையாக அவன் உருமாறுவதை கண்டிருப்பாள். படித்துறை தோறும் பெயர் மாறும் நீலநதிப்பெருக்கு போல. பற்றும் விறகின் பரிமளத்தை எழுப்பும் நீலத்தழல் போல. கணந்தோறும் ஒரு கண்ணன். கைகள் தோறும் ஒரு மைந்தன்.
கொஞ்சல் கொண்டு அவன் சலிப்பதேயில்லை. கைகளில் இருந்து கைகளுக்கும் உதடுகளில் இருந்து உதடுகளுக்கும் சிரிப்பழியாது சென்று கொண்டே இருந்தான். சொல்லிச் சொல்லி பொருள்வளரும் சொல் போல கைகள் தோறும் வளர்ந்தான். அன்னை முகத்தை இரு கைகளால் அள்ளி அடித்தான். செல்லச்சிறு உதடுகளால் அவள் கன்னங்களை கடித்தான். கால்மடித்து எம்பி எம்பி குதித்து சிரித்தான். அவள் காதணியை கைகளால் பற்றிப்பிடுங்கி கதறவைத்தான். மூக்குத்தியை வாயால் கவ்வி தவிக்கவைத்தான். மடிமீது வெந்நீர் பெய்து கூவிச்சிரிக்க வைத்தான். அவள் குங்குமத்தை மார்பிலும் பண்டியிலும் அணிந்து நின்றான்.
ஆடிப்பாவை போல் அத்தனை உடல்களிலும் எழுந்து அன்னை அவனைச் சூழ்ந்திருந்தாள். ஆயிரம் கோடி முறை அள்ளி அணைத்து தவிப்பு மேலிடப்பெற்றாள். பருகும்தோறும் விடாய்பெருகும் குளிர்நீர்ச் சுனையருகே நின்று தகித்தாள். எரிந்த காடுமேல் பெய்தது எண்ணை மழை. நெய்யரக்கை நாடும் தழல்கள் போல அவனை நோக்கி எழுந்தசைந்தன அன்னையர் கைகள். எட்டு திசையிலும் வளையொலிக்கக் கொட்டி அழைக்கும் அத்தனை கைகளுக்கும் கொடுக்க அவனிடம் விழிச்சிரிப்பிருந்தது. ஆயிரம் பல்லாயிரம் பந்திகளில் பரிமாறியபின்னரும் அமுதம் எஞ்சியிருந்தது.
அன்னையரின் கைகளில் இருந்து அவனை மீட்டுக்கொண்டு வெளியே கொண்டு செல்லும் வழி ராதைக்குத்தெரியும். அவன் முன் சென்று அவன் விழிபட்டதுமே விலகிவிடுவாள். அவள் அவனை கையிலெடுத்து மார்போடணைத்து வெளியே கொண்டுசென்று நூறுமுறை முத்தமிட்டு நூறு மென்சொல் சொல்லி மன்றாடுவது வரை அவன் அழுகை நிற்பதில்லை. அவனை கொன்றை விரித்த பொற்கம்பளம் வழியாக, வேங்கை மூடிய பொற்பாறைகளினூடாக, புன்னை நெளியும் பொற்பெருக்கருகே, புங்கம் எழுப்பிய பொற்திரை விலக்கி கொண்டு சென்றாள். அவனை சிறுகிளையில் அமர்த்தி கைகளை விட்டு விலகி நின்று குனிந்து நோக்கிச் சிரித்தாள். செந்நிற வாய்மலரில் பனித்தெழுந்த இரு வெண்முத்துப் பற்களுடன் சிரித்து கைகளை வீசி காலுதைத்து எழுந்து அவளை நோக்கிப் பாய்ந்தான்.
“மூடா. நீயென்ன சிறகு முளைத்த சிறுபுள்ளா? கூட்டுச்சுவர் பிளந்த வண்ணப்பூச்சியா?” என்று அவள் அவன் முகைவயிற்றில் மூக்கை உரசினாள். கைகளில் அவனைத் தூக்கி கண்ணெதிரே கொண்டுவந்து நோக்கினாள். “இதென்ன மலர்மாலை? இடையில் வெறும் அணியாடை?” என்று ஒவ்வொன்றாக அகற்றினாள். “என் நீலச்சிறுமணிக்கு எவ்வணியும் பொய்யணியே” என்றாள். “ஆனால் அணிசெய்யாது அன்னை மனம் அடங்குவதுமில்லையே” என்று தவித்து கண்சூழ்ந்தாள். நெற்றிமயிர்குவையில் நீலமலர் சூடிப்பார்த்தாள். செண்பகமும் பாரிஜாதமும் செவ்வரளியும் மல்லிகையும் அவன் குழல் முன் அழகிழந்தன. காட்டுமலர்கள் அனைத்தும் முடிந்தபின்னர் “உன் சென்னி சூடும் ஒரு மலரை நீயே இனி உருவாக்கு. அழகிருக்கலாம், இத்தனை ஆணவம் ஆகாது” என்று அவன் சிறுதொடையில் அடித்தாள்.
சிரித்து அவள் கைபற்றித் தாவி எழுந்த அவனை அள்ளி இடைவளைவில் அமர்த்தியபோது அருகிருந்த மரக்கிளையில் அமர்ந்த மயிலின் தோகையை ராதை கண்டாள். முகம் மலர்ந்து அதில் ஒரு பீலியை மட்டும் கொய்து அவன் குடுமியில் சூட்டினாள். “கண்ணனின் சென்னிமேல் எழுந்த கண்!” என்று சொல்லி நகைத்தாள். மாமழை மேகம் எழுந்ததைக் கண்டதுபோல கால்நடுங்கி கழுத்து சிலிர்த்து பீலித்தோகை விரித்தாடியது மயில். யுகயுகமாய் காத்திருந்த நீலப்பெருவிழிகள் ஒளிகொண்டு ‘இதோ, இதோ’ என்று பிரமித்தன. ‘ஆம், ஆம்’ என்று தவித்தன. அவன் சூடுவதற்கே அவை தோகை கொண்டன என்று அறிந்தன.
ஓவியம்: ஷண்முகவேல்
பீலிக்குடுமியுடன் அவனை இடையமர்த்தி ஆயர் குடில்நோக்கி ஓடிச்சென்று “அன்னையீர், பாருங்கள். இவனுக்கு அணிசெய்ய இது அன்றி வேறேது?” என்றாள் ராதை. அன்னையர் ஓடிவந்து விழிவிரிந்த குழல்கண்டு திகைத்து கண்பெருகி “ஆம்! இவனுக்கு இனி வேறு அணியொன்று இல்லை” என்றார்கள். யசோதை ஓடிவந்து அவனை வாங்கி முத்தமிட்டு “உன் காதல் விழிகளை ஒரு கண்ணாக்கி அவன் சென்னியில் சூட்டிவிட்டாய். கள்ளி” என்று ராதையிடம் சொன்னாள். “ஆம், அக்கண்ணிலெரியும் தாபம் காட்டை எரிக்கும் தழல்போலிருக்கிறது” என்றனர் ஆயர்குலத்து அன்னையர்.
என்னவென்று வளர்கிறான்? இனிதினிதென்று ஒவ்வொரு கணமும் நாவறியும் உணவென்று அவனை அறிகிறதா காலம்? பாளைக்குருத்தென மடிந்த சிறுதொடை வளைத்து கால்விரலை வாயிலிட்டு தன்னை தான் சுவைத்து அவன் கிடந்த கோலம் அவள் கண்ணை விட்டு மாயவில்லை. அதற்குள் வலக்காலை தூக்கி இடப்பக்கம் வைத்து வலக்கை தூக்கி இடப்பக்கம் ஊன்றி கவிழ்ந்து குப்புறக்கிடந்தான். பொற்கிண்ணப் பாலை சிறுகரண்டியால் கலக்கி வந்த ராதை கையூன்றி காலடித்து மண்ணில் நீந்துபவனைக் கண்டு கூவிச்சிரித்தபடி ஓடிவந்து மூச்சிரைக்க அருகமர்ந்து “யுகம்புரள்வது இத்தனை எளிதா? எத்தா, இதையா ஒரு பெருங்கலையாக இத்தனை நாள் பயின்றாய்?” என்றாள்.
இருகைகளையும் தூக்கினால் தாடை மண்ணிலறையும் என்ற புடவிப்பெருநியதியை அறிந்து கதறியழுதான். கண்ணீர் உலராமல் கன்னங்களில் எஞ்சியிருக்க ஒருகையை ஊன்றி மறுகையால் மண்ணை அறைந்து முன்னகர முடியும் என்று கண்டுகொண்டான். சுவர்வரைக்கும் நீந்திச் சென்று முட்டி நின்று அழுதுபார்த்தபின் அப்படியே கை மாற்றி பின்னால் நகர்ந்து சென்றான். சுவரென்று நினைத்து திரைச்சீலையையும் முட்டி அவன் பின்னகர்ந்தது கண்டு கைகொட்டி நகைத்தாள். “மாயை என்றால் என்னவென்று நினைத்தாய்? நெகிழாமை நெகிழ்வதும் நெகிழ்வதெல்லாம் கல்லாவதும் அல்லவா?” என்றாள். திண்ணையிலிருந்து முற்றத்துக்கு தலைகீழாக இறங்கிச்சென்றான். பதறி கைநீட்டி அவனை வாங்கி அழாதே என் அரசே என்றது பூமி.
சிற்றெறும்பை துரத்திச் சென்றான். கதவிடுக்கு இடைவெளியின் மென்புழுதியை திரட்டி உண்டான். அவன் முகத்திலுறைந்த மோனத்தைக் கண்டு சுட்டுவிரலை வாயிலிட்டு உள்ளிருந்து வண்டு ஒன்றை வெளியே எடுத்தாள் ராதை. “ஊர்வனவும் பறப்பனவும் உன் வாய்க்குள்தான் வாழுமோ?” என்று அவனை தூக்கிச் சுழற்றி பின் தொடைக் கதுப்பில் அறைந்து இடையமர்த்திக்கொண்டாள். கொடித்துணிபற்றி எழுந்து துணிக்குவையுடன் பின்னால் விழுந்து அன்னையின் புடவை சுற்றி புரண்டு காலுதைத்து தவித்து ஊடுருவி மீண்டுவந்தான். பானைக்குள் தலைசெலுத்தி உருண்டு சென்றான். சிறுசம்புடத்தை சுவர்மூலைவரை தள்ளிச்சென்று கைப்பற்றி வாயில் கவிழ்த்தான். சிறுநீர் ஈரம் பின்னால் நீள வால்மீன் என தரை மீட்டிச் சென்றான்.
எழுந்தமர்ந்து குனிந்து தன் குறுமணியை பிடித்திழுத்து ஆராய்ந்தான். “ஐயமே வேண்டாம் கண்ணே, நீ ஆயர்குலச்சிறுவன்! ஆயிரம் கன்னியர்க்கு அரசன்!” என்று சொல்லி ராதை நகைத்தாள். எண்ணை அள்ளி தன் வயிற்றில் பூசிக்கொண்டான். வெண்ணை கலத்துக்குள் மண்ணள்ளி கொண்டு வந்துபோட்டான். பூனை வாலைப்பற்றி பின்னால் சென்றான். அவன் அருகே வருகையிலேயே அரைக்கண் விழித்த நாய் வம்பெதற்கு என்று வால் நீட்டி எழுந்து சென்றது. கூரிய கருமூக்கைச் சரித்து காகம் அவன் கையிலிருந்த அப்பத்துக்கு குரல் கொடுத்தது. “கா கா” என அவன் அதற்காக கைதூக்கி வீசிய அப்பம் அவன் முதுகுக்குப் பின் விழக்கண்டு காகம் பறந்தெழுந்து அவன் தலை கடந்து சென்று அமர்ந்து கவ்விச் சென்றது.
சுவர்பற்றி எழுந்து நின்றான். ராதையின் ஆடைபற்றி எழுந்து கைநீட்டி “தூக்கு தூக்கு” என்றான். “கால்முளைத்துவிட்டாய். இனி உன் கைகளில் வாள் முளைக்கும். உன் கீழ் தேர்முளைக்கும். நீ அமர அரியாசனம் முளைக்கும். நீ ஆள அறம் முளைக்கும்” என்று அவனைத் தூக்கி கால்பறக்கச் சுழற்றி தன் தோளிலமர்த்தி நடமிட்டாள் ராதை. கல்லுப்புப் பரல்போல பாற்பற்கள் ஒளிவிட வெள்ளிமணி சிலம்புவதுபோல அவன் கூவிச்சிரித்தான். சுவர் பற்றி நடந்து உரலில் ஏறி சாளரத்தில் தொற்றி ஆடி நின்றான். அழிமடிப்பில் ஏறி உறிவிளிம்பில் தொற்றி ஆடினான். கலம் ஒலிக்க விழுந்து வெண்ணைமேல் வழுக்கினான். ஓடிவந்த யசோதை விழ அவள் கைகளைப் பற்றிக்கொண்டு மீண்டும் வழுக்கினான். பசுவின் கழுத்துமணியைப் பற்றிக்கொண்டு அதனுடன் முற்றமெங்கும் கதறிச்சுற்றிவந்தான்.
“என்னால் ஆகாதடி இவனை வளர்த்தெடுக்க. கூடாதென்பதை மட்டுமே செய்யும் ஒரு குழந்தை இப்புவியில் இதற்கு முன் பிறந்ததில்லை” என்றாள் யசோதை. ”குடிநீரில் சிறுநீர் பெய்ய இவனுக்கு கற்றுக்கொடுத்தது யார்? அடுப்புத்தீயில் நீரை ஊற்ற எப்படியடி எண்ணினான்? என் குடங்களெல்லாம் கிணற்றில் கிடக்கின்றன. என் ஆடைகளெல்லாம் கிழிந்து தொங்குகின்றன. என் தோழி, ஆகாதென்ற ஒன்றே இவனுக்கில்லை என்றால் நான் இவ்வில்லத்தில் எப்படி வாழ்வேன்?”
ராதை அவனை அள்ளி “இதுவரை வந்த மைந்தர்கள் எல்லாம் செய்ய மறந்துவிட்டவற்றை செய்கிறான் அன்னையே” என்றாள். “இவன் தந்தையிடம் சொன்னால் என்னை குறைசொல்கிறார். ஆநிரைகூட்டிச் செல்ல அவர் எழுகையில் கடிகொம்பை கையில் கொண்டு கொடுக்கிறான். தோல்செருப்பை எடுத்துவைக்கிறான். அந்தியில் அவர் திரும்புகையில் மேலாடை வாங்கி மடித்து வைக்கிறான். ஆயர்குடிகண்ட ஆயிரம் தலைமுறையில் தன் மைந்தனே உத்தமன் என்று நம்யிருக்கிறார்” என்றாள் யசோதை. “அந்தியில் அவர் மார்பில் குப்புறப்படுத்து ஆயர்குடியின் தொல்கதைகள் கேட்கிறான். அறமும் நெறியும் அனைத்தும் அறிந்தவன்போலிருக்கிறான்.”
சமநிலத்திற்கு வந்த நீரோடை போலிருந்தான். உடலின் அத்தனை பக்கங்களாலும் ததும்பினான். எத்திசையில் அவன் செல்வானென்றறியாது அன்னையர் அத்தனை திசைகளிலும் சென்று நிற்க அவர்கள் கனவிலும் எண்ணாத இடத்தில் எழுந்து எம்பி எம்பி வெண்பரல் பல்காட்டி சிரித்தான். “ஒருநாளில் எத்தனை முறைதான் நீராட்டுவது? அப்படியே இரவில் ஒருமுறை நீரூற்றி துடைத்து விட்டால் போதுமென்று எண்ணி விட்டுவிட்டேனடி” என்று எருக்குழியில் இருந்து அவனை அகழ்ந்தெடுத்து கொடித்தாள் போல இடக்கை நுனிபற்றி தூக்கிவந்த யசோதை சொன்னாள். “இன்றுகாலை அடுத்த வீட்டு சாம்பலில் இருந்து எடுத்தேன். முந்தையநாள் அவர்களின் புளிப்பானைக்குள் இடைவரை நின்றிருந்தான். கன்று உண்ணும் புற்குவைக்குள் சென்று பகலுறங்குகிறான். என்ன சொல்வேன்…”
அவன் ஈர உடலை அள்ளி முகர்ந்து “ஆம், இவனுடலில் ஆயர்குடியின் அத்தனை நறுமணமும் வீசுகின்றது” என்றாள் ராதை. “நீதான் மெச்சிக்கொள்ளவேண்டும். ஏனடி யசோதை, ஏனிப்படி துடிக்கிறான், உன் மைந்தனுக்கு என்னதான் வேண்டும் என்று கேட்டாள் என் அன்னை” என்றாள் யசோதை. “அவனுக்கு இப்புவியே வேண்டும். விண்வேண்டும் வெளிவேண்டும். எஞ்சாமல் எங்குமிருக்கவேண்டும். காலமாகி காலம் கடந்தும் திகழவேண்டும்” என்றாள் ராதை. “அதற்கு இவன் ஆயர்குடிச் சிறுவனாக ஏன் வந்தான்? பரம்பொருளாகப் போய் நின்றிருக்கவேண்டியதுதானே?” என்று சிரித்த யசோதை “பதினெட்டு பெற்றவள் படாத பாட்டை இவ்வொருத்தனைப் பெற்று அடைகிறேன். இனி ஏழு பிறவிக்கு எனக்கு பிள்ளைக்கலியே இல்லையடி” என்றாள்.
நாளெல்லாம் அவனை தேடிக்கொண்டிருப்பதே யசோதையின் வாழ்வாயிற்று. “கிருஷ்ணா! கிருஷ்ணா!” என்றழைக்கும் குரலாகவே அவள் ஆயர்பாடியில் எங்குமிருந்தாள். கொம்பரக்கில் நறுமணம் போல குங்கிலியப்புகை போல அவளிடமிருந்து எழுந்த அக்குரலே அவளானாள். அழைத்து அழைத்து அருகிருக்கையிலும் அவள் அவனை கூவியழைத்தாள். “கிருஷ்ணா எங்கிருக்கிறாய்?” என்று தன் இடையிலமர்ந்த அவனை அவள் கூவ “எத்தனை கிருஷ்ணன் வேண்டுமடி உனக்கு? ஆயினும் இத்தனை ஆசை உனக்கு ஆகாது ஆயர்மகளே” என்று சொல்லிச் சிரித்தாள் வரியாசி. “என்னை பித்தியாக்கி விளையாடுகிறான் பழிகாரன்” என்று கண்ணீர் மல்கினாள் யசோதை.
இருளில் துயிலுக்குள் “கிருஷ்ணா, அருகே வா!” என்று ஏங்கிக்குரலெழுப்பி கை நீட்டி அருகே கண்வளரும் அவன் சிறுகால்களை எட்டித் தொட்டு வருடி எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டாள். “எந்தக்கிருஷ்ணனை தேடுகிறாய்?” என்று நந்தன் புரண்டு பல் ஒளிர நகைத்தான். “இத்தனை மாயம் காட்டும் இவ்வுலகை நிறைப்பவன் இங்கே இப்படி துயிலமுடியுமா? இந்த ஆயர்ச்சிறுமைந்தன் உடலில் அமைந்து ஆடுபவன் யார்?” என்று சொல்லி அவள் நீள்மூச்செறிந்தாள். “உன் சிந்தையழிந்து விட்டது. சொல்லில் பொருளுமழிந்துவிட்டது” என்று சிரித்தபின் மைந்தனின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்து முத்தமிட்டு கண்மூடினான் நந்தன்.
எச்சில் வழியும் சிறுகுமிழ்வாய் குழற “கண்ணன், காற்று” என்று சொல்லி அவன் புரண்டு படுத்தான். “என்ன சொல்கிறான் கேட்டீர்களா? அவன் சொன்னதென்ன என்று தெரியுமா?” என்று யசோதை பதறினாள். “ஆம், மொழி திருந்தா மைந்தன் சொன்னதற்கு வேதப்பொருள் தேடு… உனக்கு வேறு வேலையில்லை. நானோ நாளை கன்றுகூட்டி காடு செல்லவேண்டியவன்” என்று சொல்லி கண்மூடி துயின்றான் நந்தன். இருளில் அருகணைந்து குனிந்து அவன் துயில் முகம் நோக்கி நெஞ்செழுந்து தவித்திருந்தாள் யசோதை.
ராதை மட்டும் அவனை தேடுவதேயில்லை. எங்குசென்றான், எங்கிருப்பான் என தன்னுள் நோக்கியே அவள் அறிந்துகொண்டாள். “அய்யோடி, நல்லவேளை வந்தாய். அவனை பகலெல்லாம் தேடுகிறேன். சற்று தேடிக்கொடுக்க மாட்டாயா?” என்று யசோதை அவளிடம் கெஞ்சுவாள். “இந்த மதியம் அவன் எங்கும் சென்றிருக்க மாட்டான். அன்னை மணம் தேடி எங்கோ ஒடுங்கியிருப்பான்” என்று ராதை யசோதையின் அழுக்குத்துணி சுருட்டி வைத்த மூங்கில் கூடையை கவிழ்த்தாள். உள்ளே கருச்சுருள் போல் தூங்கும் கருமுத்தைக் கண்டெடுத்து அள்ளி நெஞ்சிலேற்றினாள். “ஆடையில் எஞ்சுகிறாள் அன்னை என்று ஆயர் கதை ஒன்று சொல்வதுண்டு அன்னையே” என்று சிரித்தாள்.
ஆனால் இருள் படர்ந்த அந்தியில் ஆயர்குடியே திரண்டு அவனை தேடிக்கொண்டிருக்கக் கண்டு அவளும் அஞ்சி ஓடிவந்தாள். “பர்சானமகளே, என் மைந்தனைக் கண்டாயா? ஆயர் மகளிரெல்லாம் ஆறுநாழிகையாய் தேடுகிறோம்… அவன் காலடித்தடம் பதியாத ஒரு பிடி மண்ணும் இங்கில்லை. அவன் குரலோ கேட்கவில்லை” என்று யசோதை பதறினாள். தோன்றுமிடமெல்லாம் தேடி கண்டடையாத ஒரு கணத்தில் அவள் அகமும் அஞ்சிவிட “கண்ணா! கண்ணா எங்குளாய் நீ?” என்று கூவி ராதையும் தேடத்தொடங்கினாள். தேடத்தேட தேடிச்செல்லும் அகம் எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதையே கண்டாள். “யமுனையைக் கண்டால் அச்சமாக உள்ளதே என் இறைவா!” என்று சொல்லி வரியாசி திண்ணையில் விழுந்துவிட்டாள். “கன்றுகளின் கால் தடங்களையும் பாருங்கள். முதுகிலேறிச் சென்றிருப்பான்” என்றாள் படாலை.
தேடுகையில் ஆடுபவன் அவன் என்று அறிந்தார்கள் அனைவரும். தேடிச்செல்லும் அவர்களின் சிறுமதி சென்று தொடும் இடங்களில் எல்லாம் சற்று முன் அவன் அமர்ந்து சென்ற தடமொன்றே எஞ்சியது. வெற்றிடம் கண்டு வெறுமை கண்டு மனம் திகைத்து அகம் சலித்துச்சென்ற ஒரு கணத்தில் கனத்துக்கனத்துவந்து உடைந்து சிதறி “கிருஷ்ணா, இனியுன்னை காண்பேனா!” என்று நெஞ்சில் அறைந்து கதறி யசோதை மண்ணில் விழுந்தபோது அத்தனை ஆயர்மகளிரும் நெஞ்சழிந்தனர். அழுகுரல்கள் இருளில் எழுந்தன. கைகள் நீண்டு வானை இறைஞ்சின. “கிருஷ்ணா! ஆயர் குலக்கொழுந்தே. வேண்டாம் விளையாட்டு” என்று அன்னையர் கூவிக் குரலெழுப்ப சூழ்ந்து கனத்து அலையின்றி நிறைந்திருந்தது இருள்.
இருளில் தனித்துச் சென்ற ராதை கண்ணழிந்து கருத்தழிந்து தான் மட்டும் தனித்திருப்பதை அறிந்தாள். பின்னர் தானும் அழிந்து தனியிருளே எஞ்சுவதை உணர்ந்தாள். அப்போது மிக அருகே அவனை தூய உடற்புலனால் அறிந்து பனியாகி இறுகும் அலைகடல்போலானாள். இருளாக அவளைச் சூழ்ந்தவன் சொல்லுக்கும் உணர்வுக்கும் அப்பால் விழி மயங்கி இருந்தான். இருகைநீட்டி அவள் அவனைத் தொட்டு எடுத்து தன்னுடன் சேர்த்தாள். வெம்மை மென்தசை கொண்டு வந்த கையில் வந்த இருள். இருப்பதெல்லாம் இருளாக ஆகி மறையத்தான் எழுகின்றனவா? இங்கே இருப்பதெல்லாம் இருள் மட்டுமேதானா? இருளாகி அனைத்தும் சுழன்றழியும் இன்மையின் இருளே அவனா? இருளன்றி பொருளாக ஏதுமில்லா இருப்பே. இருமையென ஒன்றும் எஞ்சாத இருளே. ஒளியை கருக்கொள்ளும் வெளியே.
அன்னையர் மொழியால் அவன் சூடிய அத்தனை பெயர்களும் வெற்றொலியாக வேறெங்கோ ஒலிக்க தன் கையில் எஞ்சிய கண்ணறியா கருமையை “சியாமா” என்று அவள் அழைத்தாள். அவன் தன் மெல்லிய இருள்கைகளால் அவள் கழுத்தை வளைத்து “சியாமை!” என்றான். ஆம் ஆம் என்று நெட்டுயிர்த்து அவனைத் தழுவி அவள் சொன்னாள் “ஆம், அது மட்டுமே” ஆயினும் நெஞ்சுறாது “ஆனால் நீ கனசியாமன்” என்று சொல்லி இருளாகி எஞ்சி தன் கையில் இருந்தருளிய ஒளியின் பெருங்கனவை முத்தமிட்டாள்.
வெண்முரசு விவாதங்கள்