நீலம் - 34
பகுதி பதினொன்று: 3. குமிழ்தல்
இவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச் சுருண்டன. வளை வாயிலில் விழிவைத்துக் காத்திருந்த விஷநாகம் நான். பகலிறங்கி இரவெழுந்ததும் சொல்பிறந்த நாவென எழுந்தேன். வில்தொடுத்த அம்பென விரைந்தேன்.
நாகவிஷம் நாகத்தைத் தீண்டுமோ? தழல்வெம்மையில் தழல் துடித்தாடுமோ? நாகமே அதன் படமென்றாயிற்று. உட்கரந்த கால்களின் விரைவை உடல் கொளாது தவித்தது. தன்னை தான் சொடுக்கி தன் வழியை அறைகிறது. ஓடுவதும் துடிப்பதும் ஒன்றென ஆகிறது. செல்லும் வழியை விட செல்தொலைவு மிகுகிறது. வால்தவிக்க உடல் தவிக்க வாயெழுந்த நா தவிக்க விரைகிறது. நீர்மை ஓர் உடலான விரைவு. நின்றாடும் எரிதல் ஓர் உடலான நெளிவு. துடிப்பதும் நெளிவதும் துவள்வதும் சுருள்வதுமேயான சிறுவாழ்க்கை. பகல்தோறும் விஷமூறும் தவம். இருளிலெழும் எரிதழல் படம்.
நிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் தலைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு.
நீலக்கடம்பின் அடியில் நின்றிருக்கிறேன். நீள்விழி விரித்து காடெங்கும் தேடுகிறேன். என்னைச் சூழ்ந்து புன்னகைக்கிறது காடு. என் நெஞ்சமைந்த நீலனைக் கரந்த காடு. நீலமென அவன் விழிகளை. குளிர்சோலையென அவன் ஆடையை. இளமூங்கிலென அவன் தோள்களை. வானமைந்த சுனைகளென அவன் முகத்தை. அவற்றில் விழுந்தொளிரும் நிலவென அவன் புன்னகையை. காற்றென அவன் காலடியை. தாழைமணமென அவன் உடலை. அருவிப் பொழிவென அவன் குரலை. எத்தனை நேரம் வைத்திருப்பாய்? என் கண் கனியும் கணமெழும்போது கைநீட்டி எனக்களிப்பாய் கன்னங் கருமுத்தை.
என்னென்பேன்? எச்சொல்லால் என்குரைப்பேன்? இப்பகலெங்கும் அவன் நினைவெண்ணி நினைவெண்ணி நானடைந்த பெருவதையை? ஆயிரம் உளிகள் செதுக்கும் கற்பாறையில் உருப்பெறாத சிலை நான். ஆயிரமாயிரம் பறவைகள் கொத்தியுண்ணும் விதைச்சதுப்பு நான். ஆயிரம் கோடி மீன்கள் கொத்திச்சூழும் மதுரக் கலம் நான். நெஞ்சறைந்து உடைத்தேன். என் குழல்பறித்து இழுத்தேன். பல் கடித்து இறுகினேன். நாக்குருதி சுவைத்தேன். அமராதவள். எங்கும் நில்லாதவள். எதையும் எண்ணாதவள். எப்போதும் நடக்கின்றவள். எங்கும் செல்லாதவள்.
சுவர் கடந்துசெல்பவள்போல் முட்டிக்கொண்டேன். நிலப்பரப்பில் நீந்துபவள் போல் நெளிந்துருண்டேன். எரிதழலை அணைப்பவள் போல் நீர்குடித்தேன். என் உடைநனைத்த குளிருடன் தழலறிந்தேன். சினம் கொண்ட நாகங்கள் சீறிப்பின்னும் என் இருகைகள். விம்மித் தலைசுழற்றும் புயல்மரங்கள் என் தோளிணைகள். தனித்த மலைச்சிகரம் முகில்மூடி குளிர்ந்திருக்கும் என் சிரம். எத்தனைமுறைதான் எண்ணுவது காலத்தை? எண்ண எண்ணக் கூடும் காலத்தின் கணக்கென்ன?
எங்கிருக்கிறான்? இத்தனை நேரம் என்ன செய்கிறான்? பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா? கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்கும் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி? விஞ்சுவதேது அவன் முகமன்றி? கனலன் கன்னங் கரியோன் அனலன் ஆழிருள் வண்ணன். கண்ணன் என் இரு கண்நிறை கள்வன். எண்ணிலும் சொல்லிலும் என்னுள் நிறைந்தோன்! கண்ணன் கண்ணன் கண்ணன் என்னிரு கண்ணன் கண்ணன் கண்ணன் என்றானவன்!
என் கண்பொத்தின அவன் கைகள். குழலறிந்தது அவன் மூச்சை. பின்கழுத்துப் பிசிறுகள் அறிந்தன அவன் மார்பணியை. என்னை வளைக்கும் கைகளே, இக்கணம் என்னை கொன்று மீளுங்கள். என்னை வென்றுசெல்லுங்கள். நீவந்து சேர்ந்தபின் நானென்று எஞ்சமாட்டேன். தீயென்று ஆனபின்னே நெய்யென்று எஞ்சமாட்டேன். திரும்பி தலைதூக்கி அவன் விழிநோக்கினேன். இருவிண்மீன் என் விழிக்குளத்தில் விழக்கண்டேன். “காத்திருந்தாயா?” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே?” என்றேன். “ஆம், ஒருகணமே உள்ளது எப்போதுமென” என்றான்.
என்னகுரல்! யாழ்குடத்தின் நுண்முழக்கம். பெருமுரசின் உட்கார்வை. வரிப்புலியின் குகையுறுமல். என்னையாளும் குரல். என் உள்ளுருக்கும் அனல். “உனைநாடி வந்தேன்” என்றான். “எப்போது? இங்கல்லவா இருந்தாய்?” என்றேன். என் குழல் அள்ளி முகர்ந்தான். தோளில் முகம் பூத்தான். இடைவளைத்து உந்திவிரல் சுழித்த விரல்பற்றி “வேண்டாம்” என்றேன். “வேண்டுமென்ற சொல்லன்றி வேறு சொல் அறிவாயா?” என்றான்.
என் தோளணைத்து திருப்பி “மலைமுகடில் மலர்ந்திருக்கிறது குறிஞ்சி. மழைமேகம் அதை மூடியிருக்கிறது” என்றான். “இங்கு குறிஞ்சியன்றி வேறுமலரேதும் உள்ளதா?” என்றேன். “மழைதழுவா பொழுதெதையும் இம்மலைச்சாரல் கண்டதில்லை.” என் வீணைக்குடம் அள்ளி தன் இடைசேர்த்து “ஆம்” என்றான். “மடப்பிடி தழுவி மான் செல்லும் நேரம். மதகளிறு எழுப்பும் முழவொலி பரவிய இளமழைச்சாரல்.” நெடுமூச்செறிந்து அவன் கைகளில் தளர்ந்தேன். “ஆம் ஆம்” என்றேன்.
“குறிஞ்சியின் குளிரில் இதழிடும் மலர்களில் இனியது எது?” என்றான். “அறியேன்” என வெம்மூச்செறிந்தேன். “அழைக்கும் மலர். மடல் விரிந்து மணக்கும் மலர்” என்றான். “அறியேன்” என்றேன். அவன் என் காதுகளில் இதழ்சேர்த்து “அறிவாய்” என்றான். அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.
விருந்தாவன மலைச்சாரல். வறனுறல் அறியா வான் திகழ் சோலை. வீயும் ஞாழலும் விரிந்த காந்தளும் வேங்கையும் சாந்தும் விரிகிளை கோங்கும் காடென்றான கார்திகழ் குறிஞ்சி. தண்குறிஞ்சி. பசுங்குறிஞ்சி. செவ்வேலோன் குடிகொண்ட மலைக்குறிஞ்சி. என் உடலில் எழுந்தது குறிஞ்சி மணம். விதை கீறி முளை எழும் மணம். மண் விலக்கி தளிர் எழும் மணம். விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.
ஒவ்வொன்றாய்த் தொட்டு என் உடலறிந்தன அவன் கரங்கள். கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு. என் உடல் எங்கும் திகழ்ந்த கரமறிந்த என்னை நானறிந்தேன். என் உடலறியும் கையறிந்து அவனை அறிந்தேன். பாலை மணல் குவைகளில் பறந்தமையும் காற்று. பனிவளைவுகளில் குழைந்திழியும் அருவிக்குளிர். புதைத்த நிதி தேடி சலிக்கும் பித்தெழுந்த வணிகன். என்றோ மறந்ததெல்லாம் நினைவுகூரும் புலவன். சொல்தேடித் தவிக்கும் கவிஞன். சொல்தேடி அலையும் புதுப்பொருள்.
அதிகாலைப் பாற்குடம்போல் நுரையெழுந்தது என் உள்ளம். அதற்குள் அமுதாகி மிதந்தது என் கனவு. மழைதழுவி முளைத்தெழுந்த மண்ணானேன். என் கோட்டையெல்லாம் மெழுகாகி உருகக் கண்டேன். செல்லம் சிணுங்கிச் சலித்தது கைவளையல். கண்புதைத்து ஒளிந்தது முலையிடுக்கு முத்தாரம். அங்கிங்கென ஆடித்தவித்தது பதக்கம். தொட்டுத்தொட்டு குதித்தாடியது குழை. எட்டி நோக்கி ஏங்கியது நெற்றிச்சுட்டி. குழைந்து படிந்து குளிர்மூடியது மேகலை. நாணிலாது நகைத்து நின்றது என் கால் நின்று சிலம்பும் பிச்சி.
குயவன் சக்கரக் களிமண் என்ன குழைந்தது என் இடமுலை. தாலத்தில் உருகும் வெண்ணையென கரைந்தது. இளந்தளிர் எழுந்தது. செந்தாமரை மொட்டில் திகைத்தது கருவண்டு. சிறகுக்குவை விட்டெழுந்தது செங்குருவியின் அலகு. பெரும்புயல் கொண்டு புடைத்தது படகுப்பாய். கடலோசை கொண்டது வெண்சங்கு. கனிந்து திரண்டது தேன்துளி. மலைமுடிமேல் வந்தமர்ந்தான் முகிலாளும் அரசன். கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.
கோட்டைமேல் பறந்தன கொடிகள். போர்முரசம் அறைந்தது. சாலையெங்கும் புரவிக்குளம்புகள் பதிந்தோடின. ஒளிகொண்டன மணிமாடக் குவைகள். மத்தகங்கள் முட்ட விரிசலிட்டது பெருங்கதவம். ஒலித்தெழும் சங்கொலியைக் கேட்டேன். ரதங்கள் புழுதியெழ பாயும் பாதையெனக் கிடந்தேன். ஆயிரம் குரல்களில் ஆரவாரித்தேன். ஆயிரம் கைகளில் அலையடித்தேன். என் சிம்மாசனம் ஒழிந்திருந்தது. செங்கோல் காத்திருந்தது.
எங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை. அள்ளி என் ஆடைசுற்றி அவன் கைவிலக்கி அகன்றேன். “ஏன்?” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய்? இதுவன்றி பிறிதேது?” என்றான். என் இதழ் தேடி முகம் குனித்தான். “தீதென்றும் நன்றென்றும் ஏதுமில்லை இங்கே. கோதகன்ற காமம் ஒன்றே வாழும் இக்குளிர்சோலை.”
நீரையெல்லாம் நெருப்பாக்கும் வித்தையை நான் எங்கு கற்றேன்? நானென்ற புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா? உன் குலமறிந்தேன். குணமறிந்தேன் அல்லேன். இங்கினி ஒருகணமும் நில்லேன்” என்றேன். விழிதூக்கி கண்டேன் அவன் தோளணிந்த என் குங்குமம். அவன் விரிந்த மார்பணிந்த என் முலைத்தொய்யில். அவன் ஆரம் அணிந்த என் குழல் மலர்.
அக்கணமே அறிந்தேன் அவ்வரங்கில் நான் ஆடும் அடவுகளை. நெஞ்சூறும் தேனை நஞ்சாக்கி நாநிறைக்கும் தலைவி. சேணம் சுமக்காத இளம் காட்டுப்புரவி. ஆணை ஊசலாக்கி ஆடும் கன்னி. அவன் நின்றெரியும் வெளிச்சத்தில் தானொளிரும் காளி. பைரவியும் பூர்வியும் இசைமீட்ட நின்றாடும் தேவி. கண்சிவந்த கலகாந்தரிதை. கண்விழித்து எழுந்து கைதொட உறைந்த கற்சிலை. ஒரு சொல் பட்டு எரிந்து மறு சொல்பட்டு அணைந்த காட்டுத்தீ.
“கண்நோக்கியோர் கால்பற்றி ஏறமுடியாத கருவேழமே காமம்” என்று நகைத்து கைநீட்டினான். “அஞ்சுபவர் அமரமுடியாத புரவி. குளிர் நோக்கியோர் குதிக்க முடியாத ஆறு.” அவன் விழி தவிர்த்து உடல்சுருக்கிக் கூவினேன் “உன் சொல்கேட்க இனியெனக்குச் செவியில்லை. செல்க. நானடைந்த இழிவை என் கைசுட்டு கழுவிக்கொள்வேன்.” “மென்மயிர் சிறகசைத்து பறக்கத் துடிக்கிறது சிறுகுஞ்சு. வெளியே சுழன்றடிக்கிறது காற்றின் பேரலைக்களம். அலகு புதைத்து உறங்குவதற்கல்ல சிறகடைந்தது அது. வானமே அதன் வெற்றியின் வெளி.”
சினமெழுந்து சீறித்திரும்பி என் கைபற்றிய சுள்ளி எடுத்து அவன் மேல் எறிந்தேன். “சொல்லாதே. உன் சொல்லெல்லாம் நஞ்சு. என்னை சிறுத்து கடுகாக்கி சிதறி அழிக்கும் வஞ்சம்” என்றேன். குனிந்து கற்களையும் புற்களையும் அள்ளி வீசினேன். “இனி உன் கை தொட்டால் என் கழுத்தறுத்து மடிவேன். என்னருகே வாராதே. ஒரு சொல்லும் பேசாதே. இன்றே இக்கணமே என்னை மறந்துவிடு. இனி என்னை எண்ணினால் அக்கணமே அங்கே எரிவேன்” என்றேன்.
என் அருகணைந்து நிலத்தமர்ந்தான். இரு கைநீட்டி என் ஆடை நுனிபற்றினான். “விழிநோக்கிச் சொல், வருத்துகிறேன் என்று. அக்கணமே அகல்வேன், மற்று இங்கு மீளமாட்டேன்” என்றான். “செல். இக்கணமே செல். இப்புவியில் உனைப்போல் நான் வெறுக்கும் எவருமில்லை. மண்ணில் தவழும் சிறு புழு நான். மிதித்தழித்து கடந்துசெல்லும் களிற்றுக்கால் நீ. உண்டு கழிக்கும் இலையாக மாட்டேன். மலர்ந்த மரத்தடியில் மட்குதலையே விழைவேன்” என்றேன்.
“சொல்லும் சொல்லெல்லாம் சென்றுவிழும் இடமேதென்று அறிவாயா? கருத்தமையாச் சொற்கள் கைவிடப்பட்ட குழந்தைகள். நீ கரக்கும் கள்ளம் நோக்கி உரைக்காதே. உன் உள்ளம் நோக்கிச் சொல்” என்றான் கயவன். “என் உளம் தொட்டு இதுவரை நான் நின்ற நிலம் தொட்டு நான்வந்த குலம் தொட்டு எனையாளும் இறைதொட்டுச் சொல்கின்றேன். நீயன்றி இப்புவியில் நான் துறக்க ஏதுமில்லை. என் எண்ணத்தில் முளைத்தெழுந்த நோய் நீ. என் உடலிலே கிளைவிட்ட களை நீ” என்றேன்.
அவனோ நின்று சிரித்து “உன் விழி சொல்லும் சொல்லை இதழ்சொல்லவில்லை. இதழ்சொல்லும் சொல்லை உடல் சொல்லவில்லை. என் முன் ஒரு ராதை நின்று ஒன்றைச் சுட்டவில்லை” என்றான். “செல்லென்று சொல்லி சினக்கின்றன உன் இதழ்கள். நில்லென்று சொல்லி தடுக்கின்றன உன் கரங்கள். சொல் தோழி, நான் உன் இதழுக்கும் கரங்களுக்கும் ஒன்றான இறைவன் அல்லவா?”
“இனியென்ன சொல்வேன்? எத்தனை சொல்லெடுத்து குருதி பலி கொடுத்தாலும் என் அகம் அமர்ந்த நீலி அடங்கமாட்டாள். என் முலை பிளந்து குலையெடுத்து கடித்துண்டு குடல்மாலை சூடி உன் நெஞ்சேறி நின்றாடினால்தான் குளிர்வாள்” என்றேன். “அவள் கொன்றுண்ணவென்றே ஓர் உடல் கொண்டு வந்தேன். அதுகொள்க” என்றான். மழைவந்து அறைந்த மரம்போல என்மேல் கண்ணீர் அலைவந்து மூடியது. ஆயிரம் இமை அதிர்ந்து கண்ணீர் வழிந்தது. ஆயிரம் சிமிழ்ததும்பி அழுகை துடித்தது. தோள்குலுங்க இடை துவள கால் பதைக்க கண்பொத்தி விசும்பினேன்.
ஓவியம்: ஷண்முகவேல்
கண்ணன் என் காலடியில் அமர்ந்து நெற்றி நிலம்படப் பணிந்தான். “ஆலமுண்ட காலனின் விரிசடை முடித்தலை. அன்னையே இது நீ நின்றாடும் பீடம்” என்றான். அம்புபட்ட பன்றியென ஆகமெல்லாம் முள்ளெழுந்து உறுமித்திரும்பினேன். என் காலெழுந்து அவன் தலைமேல் நின்றது. இரு கைதொட்டு அதைப்பற்றினான். செவ்வான் ஏந்திய சிறகுகளாயின அவை.
கைவிரல்தொட்டு என் காற்சிலம்பை நகைக்க வைத்தான். என் விரல்மீட்டி வீணை எழச்செய்தான். பஞ்சுக் குழம்பிட்ட பாதம் எடுத்து தன் நெஞ்சின் மேல் சூடிக்கொண்டான். அவன் இதயம் மீது நின்றேன். மறுகாலால் புவியெல்லாம் அதன் துடிப்பைக் கேட்டேன். மூன்று சுருளாக அவன் விரிந்த பாற்கடலின் அலை அறிந்தேன். அறிதுயிலில் அவன்மேல் விரிந்தேன். என் தலைமீது விண்மீன் திரளெழுந்து இமைத்தன. திசை ஐந்தும் என்னைச் சூழ்ந்து மலர்தூவின.
ஒற்றை உலுக்கில் அத்தனைமலரும் உதிர்க்கும் மரமென்றானேன். அவன்மேல் மலர்மழை என விழுந்தேன். என் முகமும் தோள்களும் முலைகளும் உந்தியும் கைகளும் கண்ணீரும் அவன்மேல் பொழிந்தன. ஒற்றைச் சொல்லை உதட்டில் ஏந்தி அவனை ஒற்றி எடுத்தேன். கருமணிக்குள் செம்மை ஓடச்செய்தேன். நீலவானில் விடியல் எழுந்தது. நான் அவன் மடியில் இருந்தேன். விழிக்குள் அமிழ்ந்து ஒளிரும் நகை சூடி கேட்டான் “இன்னும் சினமா?” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது? எவரை?”