நீலம் - 33

பகுதி பதினொன்று**: 2.** குலைதல்

நாணமற்றது மருதம். நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது. ஆலென்றும் அரசென்றும் குலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை இழிவு நீரோடும் இடமெல்லாம் வேரோடிச்செல்லல். எத்தனை மடமை உண்ட நீரெல்லாம் உடல் நிறைந்தோட கிளை பரப்பி நிற்றல். அளி அளி என்று விரிந்த இலைகள். இன்னும் இன்னும் என எழுந்த செந்தளிர்கள். சிரிக்கும் நீரோடைகள் சொல்லிச் செல்வது அதன் கைமீறலை. காட்டுச்சுனைகளின் ஆழம் அறிவது அதன் கால் மீறலை.

நீர்க்கரையில் நின்று நீராடல் நோக்கி தவம் செய்யும் நெறியிலிக்கு எதற்கு திரண்ட பேருடல்? திமிறும் மற்புயங்கள்? குறும்பு தெறிக்கும் விழிமுனைகள் குற்றிலை நுனிகளென்று திரும்புவதே போதாதா? நீர்க்கரை விளிம்புகளில் வெண்முனைகள் புன்னகைக்கும் வேர்த்திரள்கள் போதாதா? இருளுக்குள் ஒளிவீசும் வெள்ளிஉடல் எதற்கு? நிலமேறி வேர்கொண்ட நதிமீனா நீர்மருதம்? நீராழம் கரந்திருக்கும் நிழல்களையும் காண்பதுவா?

மருதத்தின் உடலெங்கும் ஓடி மலராகிறது மதம். மலரிதழ்களில் ஊறி மணமாகிறது. வெம்மை எழும் குருதி மணம். விதைக்காளை கொண்ட மணம். கொம்பரக்கின் விழுது மணம். கொட்டும் தேனீக் கொடுக்கின் மணம். மழைத்துளி சிலிர்த்த மயிர்தொகை என மலர்க்கொத்துகள். வண்ணமும் வடிவமும் வாசமொன்றேயான உயிர்ப்பொதிகள். இளங்காற்றில் இலைகள் மேல் சொரிகிறது மருதமழை. ஓடைகளில் வழிகிறது. நீர்விளிம்புப் புற்களில் செறிகிறது. சுனைகளில் அலைவடிவாகிறது. யமுனையின் பூவாடையாகிறது.

சேற்றுக்கரைகளில், கரை வருடும் அலைகளில், அலைவளையும் பெருக்கில், ஆழம்தேடும் சுழிப்பில் பரவுகிறது மருதம். சுருள்கிறது மருதப்பாய். நெளிகிறது மருதப்பட்டு. அலைக்கிறது மருதச்சிறகு. மருத மணம் சூழ மதம் கொள்கிறது காடு. காமம் கொண்ட காளையென தோல் சிலிர்த்து விழி சிவந்து மூச்சொலித்து திமிர்த்து எழுகிறது. முன்காலால் மண்உதைத்து முகம் தாழ்த்தி உறுமுகிறது. காமப்பூம்பொடி சுமந்து பாடிச் சுழல்கின்றன கருவண்டுகள். காமத்தேன் கொண்டு கூடணைகின்றன தேனீக்கள். தரைபரவிய காமத்தில் நடக்கின்றன விலங்குகள். காமத்தின் உள் ஊர்கின்றன சிற்றுயிர்கள். காடெழுந்த காமம். கட்டவிழ்ந்த காமம். கோதலர்ந்த காமம். கோடிவிழிகொண்ட காமம்.

இளங்காலையில் யமுனையில் நீராடுகையில் என் இடைசுற்றி வளைத்தது மருதமலர்ப்படலம். ‘சீ’ என்று கைநீட்டி கலைத்தேன். சிரித்து விலகி மீண்டும் குவிந்து தேடிவந்தது. “நாணிலாதாய். நெறியிலாதாய். நீரொன்றன்றி வேறொன்றும் அறியாய். உன் மணம்சூடுதல் போல் மங்கையருக்கு இழிவொன்றில்லை. விலகு” என்றேன். நீராடும் என்னைச் சூழ்ந்து நீர்வளையமாகி அலையடித்தது. மூழ்கி குளிக்கையில் என் கூந்தலெங்கும் ஒட்டியது. உதறி முடிகையில் என் தோள்களில் படர்ந்தது. மார்பில் கட்டிய என் ஆடைக்குள் புகுந்தது. முலையிடுக்கில் தொடைப்பரப்பில் பற்றியிருந்தது. எழுந்து கரைவந்து உடல் துவட்டி உடைமாற்றுகையில் மணமாகி உடன்வந்தது.

மருதம்தழுவிய என் மணம் கண்டு சூழ்ந்தன சிறுமணி வண்டுகள். என் வாசம் அறிந்து தலைதூக்கி வாய்திறந்து அழைத்தன கன்னிப்பசுக்கள். வண்டின் சிறகென ஒரு யாழிசை என் மூச்சிலும் எழுகின்றதா? நான் சென்றமர்ந்த இருளுக்குள் எழுவது செவ்வழி அமைந்த குழலிசைதானா? என் உடலெங்கும் சூழ்ந்த வாசம். நீ ஆணென்று என் பெண்மை அறிந்த வாசம். என் எண்ணங்களை அணைத்த வாசம். உன் செவ்விதழ் எழுந்த வாசம். உன் தோளிடுக்கில் நான் முகர்ந்த வாசம். எங்கிருக்கிறேன் என்றறியேன். என்னசெய்கிறேன் என்றறியேன். விலகு, இங்கும் வந்து என்னை இழிவுசெய்யாதே. உன் மாயச்சொல்லுக்கு மயங்கமாட்டேன். உன் நாணிலா நகைக்கு விழிகொடுக்க மாட்டேன்.

“என்னடி இது? எவரிடம் பேசுகிறாய்?” என்றாள் என் நல்லகத்தாள். “எவரைக் கண்டாய்? எதைக்கேட்டாய்?” நான் கேட்டது வரதியை. சுரிகுழல் ஆட செந்நிற ஆடை பறக்க சிறுகாலெடுத்துவைத்து ஓடிவரும் சிறுமி. விழிமலர்ந்தவள். செவ்விதழ்களில் சிரிப்பெழுந்தவள். அவளைத் தொடர்ந்து மரங்களிலும் புதர்களிலும் மறைந்துவரும் கள்வன் யார்? வேறெவன்? பெண்ணென்று பெயரிட்டு எது நின்றாலும் புல்லாங்குழல் கொண்டு பின் தொடரும் புன்மொழியன். கயவன், கள்வன், கரியன், கருமணிவண்ணன். ஏனிப்படிச் சிரிக்கிறாள்? கள்ளச்சிறுக்கி. கள்வனைக் கரந்த கண்களுக்கேது நாணம்? அவள் கால்களுக்கேது தயக்கம்?

விலகு. விலகிச்செல். நான் சினந்தமைந்த விப்ரலப்தை. என் விரல்களில் பின்னுவது சினம். என் கண்களில் கனல்வது சினம். என் முகத்தில் எரிவதும் மூச்சில் அழல்வதும் முலைகளில் அசைவதும் மொழியில் சுழல்வதும் சினம். “ஏன் சினம்?” என்று வந்தவள் வேலவதி. செங்குழலும் வெண்மேலாடையும் கொண்டவள். “நான் உன் தோழி. உன் தனிமையைச் சூழ வந்தவள். குழல்தொட்டால் வளையும் யாழ்தொட்டால் துள்ளும் சின்னஞ்சிறுமி” என்றாள். மலைச்சுவை போல் நிறைந்துவழியும் மென்குரல் கொண்டவள். அருகணைக தோழி. அமர்க. அவன் செய்த பிழையாவும் எண்ணி எண்ணிச் சொல்கிறேன். காதல் மனம் கையிலிட்டு களியாடும் கயவன். கண்பார்த்திருக்கவே கவர்ந்துசெல்லும் கள்வன். அவன் பொருளில்லா சொல்லும் அருளில்லா நோக்கும் வெறுத்தேன். பொன்கொண்டு வரினும் பூகொண்டு வரினும் இனி அவன் புன்மொழிகேட்க ஒப்பேன்.

என்ன இது உன் கன்னத்திலமைந்த சந்தனம்? இதோ அவன் மார்பணிந்த மலர்ப்பொடி. கைகளில் வளையல் உடைந்த கீறல். கண்மை கரைந்த கீற்று. எழுந்து விலகு. நீ என்னிடமும் அவனை மறைத்தாய். என் விழிமுன் நடித்தாய். உன்னை நானறியேன். உன் மாயங்களும் அறிந்திலேன். உன்னுள் உறைபவனை நானறிவேன். அவன் உறையும் உள்ளங்களையும் நன்கறிவேன். விலகுங்கள். இவ்விருளில் இப்பகலில் எனக்கெதற்கு ராகங்கள்? என் செவி நிறைப்பதெல்லாம் இல்லத்து ஓசைகள். நீர்க்குடம் நிறைகிறது. தொழுவில் ஆநிரை அழைக்கிறது. அடுப்பில் அன்னம் பொங்குகிறது. அருகே பால்குடம் புளிக்கிறது. நான் இங்கிருக்கிறேன். இனியொருநாளும் இவ்வாயில் திறக்கமாட்டேன்.

எங்குளாய் நீ குழலே? ஏனிப்படி சுழன்று சூழ்கிறாய்? எங்கிருந்து எழுகிறது இவ்வூற்று? என்னை இறகுப்பிசிர்போல் எழுந்தலையவைக்கும் காற்று? என்னசெய்வேன்? என்னைச்சிறைவைக்கும் தளையொன்று இங்கிருக்கலாகாதா? என் சிறகுகள் மேல் கரும்பாறை வந்தமையலாகாதா? எங்குசெல்லவிருக்கிறேன்? என் இனம் தந்த நாணமும் குலம் தந்த முறைகளும் உதறிச் செல்வேனா? அவன் முன் அனைத்தும் அழிந்து அறிவிலிபோல் நின்றழிவேனா? அத்தனையும் விட்டபின் அகமாக ஏது எஞ்சும்? நானென்று எதை வைத்து நின்றிருப்பேன் அவன் முன்னால்? என் நெஞ்சே, என் மட நெஞ்சே, களிகொண்ட சிறுவன் கால்கொண்ட பந்தே. புயல்காற்றில் பொத்திக்கொள் உன் சுடரை. பெருமழையில் காத்துக்கொள் உன் கை உப்பை. ஏனென்று சொல்வதறியேன். நானென்று அவனுக்களிக்க இவ்வாணவம் ஒன்றன்றி ஏதுமில்லை என்னிடம் என்றறிவேன்.

எவரறிவார் கிளைவிட்டு மலருதிரும் கணம்? எவரறிவார் சுமைமீறி அச்சிறும் சகடத்தின் தருணம்? எழுந்தோடி வாயில்படி கடந்து எல்லைகள் தாண்டி கானடைந்தேன். நதிக்கரை மருதத்தின் நிழல்சென்று நின்றேன். அதன் வெள்ளித் தோள்மேல் என் தோள் சாய்த்து நின்றேன். காற்றில் கலைந்தது யமுனை சூடிய இளவெயிலாடை. பாய்கள் இமைக்க படகுக்கெனத் திறந்தன நதியின் கண்கள். நீலம் கரைந்து நீர்ப்பரப்பு அலைந்தது.

சிரித்தொலித்து என்னைச் சூழ்ந்தனர் தோழியர். லலிதை என் தோள்பற்றி கன்னத்தில் கன்னம் சேர்த்தாள். அவள் நுதலணிந்த குங்குமத்தை என் நெற்றியிட்டாள். “என்னடி இது கோபம்? ஆயர்குலக் கள்வன் அனைவருக்கும் உரியவன் அல்லவா?” சீறி அவளைத் தள்ளி “இல்லை. அனைவருக்கும் உரியனென்றால் அவன்வெறும் பரத்தன். கண்ணன் என்றால் அவன் கன்னி ஒருத்திக்கே உரியன்” என்றேன்.

லசிகை என் கைகளைப்பற்றி “அத்தனை மலருக்கும் ஒருநிலவென்று அமைந்தவன் அவனல்லவா?” என்றாள். “விலகு. நீலவானை உண்டாலும் நிறையாத மலருண்டு கானகத்தில்” என்றேன். கோபியர் என்னைச் சூழ்ந்து நகைத்தனர். “காதலில் கசந்துவிட்டாய். உன்னை ஊடலில் கனியவைக்கிறான் கண்ணன்” என்றாள் விசாகை. “போடி” என அவளை அறைந்தேன். சிரித்து விலகி “குளிர்ச்சுனை நீரை சூடாக்கி அருந்தும் சுவையும் அவனறிவான்” என்றாள்.

அவர்களைப் பிடித்துத் தள்ளினேன். கண்ணீர் ஊறிக் கனத்த குரலில் கூவினேன் “பரத்தையரா நீங்கள்? பெண்ணென்று இருந்தால் பேணும் நெறியென்று வேண்டாமோ?” ரங்கதேவி நகைத்து “உண்ணும் உணவும் உடுக்கும் உடையும் எண்ணும் சொற்களும் எல்லாம் அவனென்றால் நேரும் நெறிகளும் மீறும் முறைகளும் அவனன்றி வேறென்ன? என்றாள். சுசித்ரை என் குழல்பற்றி இழுத்தாள். “கட்டவிழ்த்து செல்லும் கன்று மட்டுமே அன்னையின் அமுதை முற்றறிகிறது தோழி.” அவள் கைதட்டி விலகி காலெடுத்து வைத்து காட்டுக்குள் சென்றேன்.

காட்டுக்குள் என் பின்னே காலடி ஓசை கேட்டேன். கண்ணன் அதுவென்று அப்போதே கருத்துற்றேன். என்ன சொல் வரினும் என் முகம் திரும்பாதென்று உறுதிகொண்டேன். பின்நடந்து வந்தான். மெல்ல மூச்சின் ஒலியானான். இன்மணம் என எழுந்தான். என் குழல்பற்றி இழுத்தான். நான் சீறித்திரும்புகையில் சிறுபுதராய் அங்கு நின்றான். கைதட்டி விலக்கி நான் கடிது நடக்கையில் கைபற்றி இழுத்தான். “விடு என்னை, வீணன் உனைத் தீண்டேன்” என்றேன். திரும்பி அவனை ஒரு தாழைமரமாகக் கண்டேன். “உன் ஆடலெல்லாம் நானறிவேன். அதற்கினி மயங்கமாட்டேன். நெஞ்சில் நிறையிருந்தால் வந்து என் நேர்நின்று பேசு” என்றேன். “வந்தேன்” என்று நீலம் என மலர்ந்து நின்றிருந்தான்.

பொய்யன். பொய்யால் இப்புவியை நிறைத்து மெய்யாகி தான் எஞ்சும் புல்லன். அவனை கண்கொண்டு கண்டதுமே கனலாகி உடலெரிய நின்றேன். “ஏனிந்த கோபம்?” என்று என் முகம் தொடவந்தான். கைதட்டி விலக்கி காலெடுத்து விலகி “என் மெய்தொடலாகாது உன் கை” என்றேன். “உன் சினமென்ன என்று சற்றும் அறிகிலேன். உன் மனம் நிறைந்த மலர்கொள்ள வந்தேன்” என்றான். “நீ சொன்ன குறியிடத்தில் நேற்றெலாம் இருந்தேன். என் கண்முன்னே சென்று கன்னியரை கவர்ந்தாய். அவர் பொன்மேனி சூடி போகத்திலாடினாய்” என்றேன். “பொய்யில் நிறைந்த சழக்கன் நீ. போதும். இனி உன் பெயரும் எனக்கு நஞ்சு” என்று கூவி கண்ணீர் துடைத்தேன்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

“ஆகாதென்று வந்தால் இத்தனை அணியெதற்கு கொண்டாய்?” என்றான். குனிந்து என் கைவளையும் கால்சிலம்பும் இடையணியும் முலையணியும் கண்டு திகைத்தேன். நாணிலாது பூத்தவள் நானல்லவா? இங்கே வீணில் வந்து விழியுதிர்ப்பது என் அகநாடகமா? “உள்ளமறிந்ததை என் உடலறியவில்லை” என்றேன். “மலரணிவது தருவடைந்த அருள் அல்லவா?” என்றான். “சீ, இந்நகையல்ல நான். என் நெஞ்சில் நிறைந்த பகையொன்றே நான்” என்று மேகலையை இழுத்து உடைத்தேன். என் மணியாரம் பிடுங்கி வீசினேன். நெற்றிச்சுட்டியும் நெளிவளைகளும் கழற்றி எறிந்தேன். குனிந்து என் கால்சிலம்பை இழுத்தேன்.

என் தோளளவு குனிந்து “நீ சூடிய அணி களைவாய். உன் உடலெங்கும் பூத்த அணியெல்லாம் எப்படி களைவாய்?” என்றான். “இவ்விதழ் கொண்ட செம்மை. இச்சிறு தோள் கொண்ட மென்மை. இடைகொண்ட வளைவு. இடைகொண்ட கரவு. இவையாவும் எனக்காக நீ பூண்ட அணியல்லவா? நெற்றிக்குழல் கொண்ட சுருளும் விழி மணிகொண்ட மருளும் நான் காண நீ கொண்ட நகை அல்லவா?” நிமிர்ந்து நெஞ்சில் கரம் வைத்து ஏங்கி நின்றேன். “ஆம், இவ்வுடலே உனக்காக நான் சூடிய அணி. என் உள்ளத்தைச் சூடி உதிர்த்திட்டுச் சென்றவன் நீ” என்றேன். “ஏனிந்த சினம்? உன் விழிகண்டு கொண்ட சினம் இது. நான் சொல்லும் மொழிகேட்ட பின்னர் அதை கொள்ளலாகாதா?” என்றான்.

“கண்ணா, நீ அறியாத கன்னி மனம் உண்டா? என்னை விடுத்து நீ சென்ற இடமேது? இத்தனை பெண்களில் ஏனிப்படி மலர்கின்றாய்? இத்தனை விழிகளில் ஏன் ஒளி கொள்கிறாய்? உன்னைக் காத்து நான் செய்யும் தவமெல்லாம் வீணா? என் கண்ணீர் காணாமல் காமம்தான் காண்கிறாயா?” அவன் மென்நகை கண்டு மேலும் அழுதேன். “பெண்ணென்று என்னை உணரும் பெருநிலையை நீயே களைந்தால் என்னிடம் நீ கொள்வதென்ன? சுனை நீரை சேறாக்கி உண்பதுதான் உன் சுவையா?”

கண்ணன் முகம் என் கண்முன் மாறக்கண்டேன். காய் சிவந்து கனியாவதுபோல் அவன் கண் கனிந்து ஒளிகொண்டது. என் கைபற்றி அழைத்தான். கொடிவிலக்கி செடிவிலக்கி யமுனைக் கரையருகே என்னை நிறுத்தினான். “நதி ஒன்று. அள்ளி உண்ணும் கைகளோ கோடி கோடி. அவரவர் கையளவே அள்ளுவது விதியாகும்” என்றான். “நோக்கு, இந்நீலப்பெருக்கு என்றும் அழியாது. இன்றிருப்பாய், நாளை என்னுடன் இருப்பாய். அன்றும் இங்கு நானிருப்பேன். ஆயிரம் கோடி ராதையர் உடனிருப்பார்” என்றான். குனிந்து நீலநீர்ப்பரப்பை நோக்கி விழிசமைந்தேன்.

ஆயிரம் கண்ணன்கள். என் விழியே, என் நெஞ்சே, என் முதிரா மொழியே, நான் காண பெருகிச்செல்லும் கண்ணனெனும் பெருவெள்ளம். காதலிளம் கண்ணன். மங்கையர் மனம் கொண்டு விளையாடும் கண்ணன். குழல்கொண்ட கண்ணன். மனையாளின் கைபற்றி தலை நிமிர்ந்த கண்ணன். அவள் பெற்ற மைந்தரைத் தோள்சுமந்து வழிசெல்லும் கண்ணன். குடிலமைத்து அதில் அவளை குடியமர்த்தும் கண்ணன். அவள் அளித்த புல்லுணவை சுவைத்துண்டு முகம் மலரும் கண்ணன். அவள் உண்ண தன் உணவு குறைத்து உளம் நிறைந்தெழும் கண்ணன். தானுண்டு எழுந்தபின் அவள் உண்டாளா என்று வந்து நோக்கும் கண்ணன். குளித்து ஈரக்குழல்கொண்டு வரும் கண்ணன். அவள் முந்தானை நுனிகொண்டு முகம் துடைத்து சிரிக்கும் கண்ணன். அவள் இல்லா இல்லத்தில் அவள் நினைவால் தனித்திருந்து புன்னகைக்கும் கண்ணன். அவளில்லா குளிரிரவில் அவள் அணிந்த ஆடையொன்றை அணைத்துறங்கும் கண்ணன்.

மனையாளின் பசிபோக்க சுமைதூக்கும் கண்ணன். தன் சிறுகுடி வாழ தசைபுடைத்து தோணியோட்டும் கண்ணன். கல்லுடைக்கும், கழனியுழும், வில்லெடுத்து வேட்டைசெல்லும் கண்ணன். கைமுற்றி தோலாகி கால்முற்றி மண்ணாகி கண்சுருங்கி முகம் வற்றி உருமாறும் கண்ணன். கண்ணில் கனிவும் சொல்லில் கடுமையுமாய் திண்ணை அமர்ந்திருக்கும் கண்ணன். தன்பசியை எண்ணாமல் தோள் மெலிந்த கண்ணன். களங்களில் இருந்தும் கடலில் இருந்தும் கடுவழி விரிந்த தொலைவினில் இருந்தும் கண்ணும் இதழும் சிரிக்க மீண்டுவருபவன். அவளை அள்ளி அணைத்து நானுளேன் என்று நகைப்பவன். அவள் துயர்களில் தோள்சேர்த்தணைக்கும் கையன். அழுபவளை சிரிக்கவைப்பவன். அஞ்சுபவளை ஆற்றுபடுத்துபவன். ஒருபோதும் தனிமையை அவளுக்கு அளிக்காதவன்.

காலமெல்லாம் அவள் கைபிடித்துத் துணையாகும் கண்ணன். அவள் முதிர்ந்து மெய்மெலிந்து நோயுற்று பாய்சேர அருகமைபவன். அவள் உண்ணச் சமைத்தளிக்கும் தந்தை. தோள்பற்றி அமர்த்தி கைகுவித்து ஊட்டி வாய்துடைத்து படுக்கவைக்கும் மைந்தன். அவள் கால்பற்றி விடைசெய்து கண்விழித்து அருகிருக்கும் ஏவலன். அவள் மடிசாய்ந்து உயிர்மறைய முகம் மீது விழிஉதிர்க்கும் கணவன். அவள் சிதையருகே நின்றெரியும் தனியன். சிந்தையெல்லாம் அவள் நினைவு செறிந்திருக்கும் முதியோன். ஒருநாளும் அவளறிய உரைக்காத அன்பையெல்லாம் ஒருகோடி சொற்களாக தன்னுள்ளே ஓடவிட்டு காலக்கணக்கெண்ணி காத்திருக்கும் எளியோன். அவள் நினைவை உச்சரித்து இறந்து விழும் துணைவன்.

கண்ணீருடன் மடிந்து மண்சேர்ந்து கதறினேன். “கண்ணா, உன் காலடி பணிந்தேன். கருமணிவண்ணா, இப்புவியில் நீ ஆடுவதெல்லாம் அறிந்தவளல்ல நான். எளியவள். ஏதுமறியா பேதை. என் விழியறிந்த மெய்யெல்லாம் வழிந்தோடட்டும். அங்கு அழியாத பொய்வந்து குடியேறட்டும். இளமையெனும் மாயையில் என்றுமிருக்க அருள்செய்க. இளந்தளிராய் நான் உதிர என்னருகே நீ திகழ்க!” நெஞ்சடைத்த சொல்லுடன் நிலத்தில் முகம் சேர்த்து விழுந்தேன். என்னை அள்ளி எடுத்து மடிசேர்த்தான். அருகில் நின்ற மலரிதழ் நீரை என் விழியிதழில் தெளித்தான். இமையதிர்ந்து கண் மலர்ந்தேன். இனியமுகம் கண்டேன். அவன் கைபற்றி என் முலைக்குவை சேர்த்தேன். “என் கண்ணன். என் உள்ளம் நிறைந்த மன்னன். எனக்கில்லாது எஞ்சாத எங்கும் நிறை கரியோன்” என்றேன். “உனக்கென்றே உலையாகி நான் சமைத்த அமுதமிது. உண்டு நிறையட்டும் உன் நெருப்பு” என்றான். சொல் ஏதும் எஞ்சாமல் விம்மி அழலானேன்.


வெண்முரசு விவாதங்கள்