நீலம் - 32
பகுதி பதினொன்று: 1. குவிதல்
எவருமில்லை எவ்விழியும் இல்லை என்று எண்ணி நிறைந்தபின் மூடிய விரல் விரித்து முழுநிலவை வெளியே எடுத்தது வசந்த கால இரவு. ஆயிரம் சுனைகளில் பால்நிலவு எழுந்து ஆம்பலை தழுவியது. விருந்தாவனத்தின் ஒவ்வொரு கல்லும் வெண்ணொளி பட்டு கனிந்தன. உயிர்கொண்டு அதிர்ந்தன. உதிர்ந்து பரவிய இதயங்களாகித் துடித்தன. இலைகளின் கீழும் நிலவொளி அலைக்கும் முழுமை. எங்கும் நிறைந்தது இனியேதுமில்லை என்ற வெறுமை.
வெண்ணிலவு விரிந்த வெளியில் எல்லா இலைகளும் தளிர்களாயின. தேன்சுவைக்கும் இளமைந்தர் நாவுகளாகி நெளிந்தன. உதிர்ந்த சருகுகள் உயிர்கொண்டன. தளிர் நினைவென வந்துதொட்ட தண்காற்றில் எழத்தவித்தன. நிலவொளியை சிறகெனச் சூடிய நுண்ணுயிர்கள் இசைகொண்டு விண்ணில் சுழன்றன. நீரோடைகளில் நிலவோடியது. சிற்றருவிகளில் வளைந்தது. சிறுபாறைகளில் சிதறிச்சிரித்தது. பனித்துளி சிலிர்த்த புல்லிப்பிசிர்களில் பட்டு ஒளிர்ந்தது. கண்ணுக்குள் நிறைந்து கருவிழியில் ததும்பியது. பின் காட்சியென விரிந்து காட்டை நிறைத்தது.
ஓவியம்: ஷண்முகவேல்
நிலவணிந்த நீலக்கடம்பின் கீழ் நின்றிருக்கிறேன். கண் நோக்கி கைதொட்டு நீ சொன்ன சொல் என்னும் துணை ஒன்றை கொண்டிருக்கிறேன். எனக்காக மலர் கொண்டிருக்கிறது இம்மரம். என் மனமென மணம் பரப்புகிறது. என் இருவிழியென ஆயிரம் இலைநுனிகள் துடிக்கின்றன. இங்கிருக்கிறேன் என்ற சொல்லாக நின்றிருக்கிறது. இதுவொன்றே நான் என்றே உயிர்கொண்டிருக்கிறது. எங்கிருக்கிறாய் நீ? இம்மரமும் மரமணிந்த மலரும் மலர்கொண்ட மணமும் உன் மனம் வந்து சேருமோ? எண்ணுகின்றாயா? என் முகம் உன் நெஞ்சிலுள்ளதா? கோடி சூரியன்கள் கதிர் பரப்பும் உன் வான்வெளியில் என் புல்நுனிப் பனித்துளியும் சுடரலாகுமோ?
நெய்யென உருகி நெருப்பென எரிந்து தழலென ஆடி கரியென எஞ்சுகிறாய். என் மடநெஞ்சே, நெஞ்சுணர்ந்த நீலனே, இங்கு நிற்கும் நான் எத்தனை உடல்கொண்டவள். எத்தனை உளமானவள். என்னையறிகிலாய். என் கண்பூத்து விரிந்த காத்திருப்பையும் நினைகிலாய். நீலக்குளிர் ஓடையில் நிலைக்காது ஒழுகும் நிழல்களில் ஒன்றா நான்? உன் விரிநிலத்து வெளியில் விழுந்த விதையல்லவா? ஐந்நிலத்தில் பாலையைத்தான் அடியாளுக்கு அளித்தாயா? நால்வகை நிலமும் நான் தொட்டுத் திரிந்தனவா? என் விதைகாக்கும் துளிநீரை உன் விண்நீலம் வழங்காதா? அதன் தவம் முதிரும் தருணம் இன்றேனும் வாராதா?
காத்திருக்கிறது காடு. கண்பூத்து நோற்றிருக்கின்றன மரங்கள். மெல்லிதழ் விரித்து பார்த்திருக்கின்றன மலர்கள். உன் காலடிகள் கேட்பதற்கே செவிகொண்டு பூனையானேன். உன் வாசம் அறியும் நாசிக்கென்றே நரியானேன். உன் நிழலசைவுதேரும் விழிகளுக்காக கலைமான் ஆனேன். உன் அதிர்வை அறியும் நாவுக்கென நாகமானேன். உன்னை எண்ணி ஏங்கும் மூச்சுக்கென பிடியானையானேன். உன் காலடியை அறிவதற்கே இலைநுனியின் பனியானேன். உன்னை எண்ணிச் சிலிர்ப்பதற்கென இக்குளிர்ச் சுனையானேன்.
காடெல்லாம் பூத்திருக்கும் மரங்களைக் காண்கிறேன். கடம்பும் கொங்கும் கொன்றையும் மருதமும். பருவம் மறந்தன மரங்கள். நாணமிழந்தன மலர்கள். காத்திருத்தல் என்பதைத்தான் மலரென்றாக்கினானா ககனம் படைத்த கவிஞன்? பூத்திருத்தல் மட்டும்தான் புவியின் இயல்பென்று எண்ணினானா? ஒளிவின்றி விடாய்கொள்ள, ஒன்றையே எண்ணிக் காத்திருக்க, வேறேதும் ஏற்காமல் வாடி நிலம் அணைய மலர்போல அறிந்தவர்கள் மண்ணில் எவருண்டு? மாறா உறுதிகொண்டது மலர். வாழ்வேன் நிறைவேன் அல்லால் வாசமிழந்து நில்லேன் என்று உரைப்பது. ஆயிரம் கோடி சொற்கள் கொண்டது இக்காடு. அதன் மலரனைத்தும் இதழ்கூட்டி உரைப்பது ஒரு சொல்லை.
கண்ணா, கரியவனே, இப்புவியில் முளைத்தெழுந்த அத்தனை மலர்மர நிழல்களும் நீ என்னை நில்லென்று சொல்லி வாராது போன குறியிடங்கள் அல்லவா? இங்கு நின்றிருக்கும் நான் காடெங்கும் பூத்து காத்திருக்கும் கன்னியரில் ஒருத்தி அல்லவா? உன் காலடிகள் ஒலிக்கின்றன காலத்துக்கும் அப்பால். உன் வாசமெழுகிறது விண்விரிவின் சரிவில். உன் சிரிப்பெழுந்து ஒளிர்கின்றன வான்நிறைந்த முகில்கணங்கள். நீயென்றான நினைவு. நீயொன்றே ஆன நெஞ்சம். நீயிலாது ஒழியும் சித்தம். நீ இங்கு காத்திருப்பதுதான் எவரை?
காலடி கேட்டு என் செவி திரும்பியது. கனல் போல கண்ணொளிர பஞ்சுப்பொதி போல பாதமெடுத்து நடக்கிறேன். செந்நாவளைத்துக் கூவி உன்னருகே வருகிறேன். வெண்பட்டு உடலை உன் கால்களில் தேய்க்கிறேன். தூக்கிக்கொள் என்கிறேன். உன் கருந்தோள்களிலே அமர்கிறேன். ஒற்றை ஒரு சொல்லை மொழியாக்கி உன்னிடம் பேசுகிறேன். என்னுடன் வா. உடல்வளைத்து கிளைதாவி இக்காட்டுக்குள் அலைவோம். மலர்ப்பொடியுதிரும் மென்மயிர் பொதி உதறி அணிவோம். நான் ஒளித்துவைத்த ஒவ்வொன்றும் எடுத்து உனக்குக் காட்டுகிறேன். அவை அனைத்துக்கும் பொருள் ஒன்றே என்று உனக்குக் கூறுகிறேன்.
நீ என எழுந்ததை நாசிகொண்டறிந்தேன். குளிர்முனை நீட்டி காலெடுத்து உன்னிடம் வந்தேன். சாமர வால் சுழற்றி செவியிரண்டும் கூர்த்து ‘நீயா?’ என்றேன். ’நானே’ என்றது உன் நறுமணம். உன் கால்தடத்தை முத்தமிட்டேன். கால்தொட்ட கற்களை முத்தமிட்டேன். நீ சென்ற நிலமெல்லாம் முத்தமிட்டேன். பின் கழுத்து சிலிர்த்தெழ கண் ஒளிர்ந்து மின்ன உன் கால்களை முத்தமிட்டேன். உன் பெயர் சொல்லிக் கூவி புதர் கடந்து பாய்ந்தோடினேன். கடுகி உடன் வந்த காற்று நீயல்லவா? நாநீட்டி மூச்சிளைக்க நின்று நான் திரும்புகையில் என் கால்களுக்கு இணைவைத்த காலடியும் உனதல்லவா?
விழி மிரண்டு திரும்பி வளைந்த கழுத்து சிலிர்க்க உன்னசைவை நோக்கினேன். இளமூங்கில் குழைவா நீ? சிறுநாணல் காற்றா நீ? சருகோசையா? சரியும் கிளையோசையா? துடிக்கும் வாலுடன் மெல்லத் திரும்பும் செவிகளுடன் அசைவிழந்து நின்றேன். நிலவு வீழ்த்திய நீல நிழல் நீ. உன்னை அறிந்து உடலதிர்ந்தேன். நிலம் தொடுத்த அம்பென காற்றிலெழுந்தேன். காட்டுமரங்கள் கைவிளையாடும் அம்மானைப் பந்தாகத் துள்ளிச்சென்றேன். நிலவு நிழல் விழுந்த காட்டு நிலம்போன்றிருந்தது என் உடல். நான் துள்ள என்னுடன் காடெனத் துள்ளியது நீ.
புதர்சூழ்ந்த வளைக்குள் இருந்தேன். உன் பாதத்தைக் கேட்டன என் உடற்சுருட்கள். என் உடலுக்குள் செறிந்த கால்கள். இமையா விழிகொண்டு இருளை நோக்கினேன். கதிர்நாவால் காற்றைத் துழாவினேன். கிண்ணம் கவிழ வழியும் தேன் என வெளியே வந்தேன். நெய்தொட்ட அனல் என தலைதூக்கினேன். திரும்பும் கட்செவியால் திசை நோக்கினேன். என் உடல்விம்மி படமாயிற்று. உன் இசைகேட்டு நடமாடினேன்.
கரும்புக்காட்டில் சிரம் பூத்து நின்றிருந்தேன். காற்றிலாது கிளை ஆடும் வேங்கை. கிளையிலாது கீழிறங்கும் நாகம். உன் திசைதெரிந்து துதிக்கை நீட்டினேன். என் உடல் அதிர்ந்து ஒரு சொல்லெழுந்தது. அதை இருள் கேட்டு திருப்பிச் சொன்னது. இருள்போர்த்தி நின்றிருக்கும் உடல்நான். காமக் கனல் மீது படர்ந்திருக்கும் கரி நான். அப்பால் இருளுக்குள் எழுந்தது உன் முகத்தெழுந்த இருநிலவு. உன் முகம் நீண்டு வந்து என் முகம் தொட்டது. இருளுருகி ஒன்றான அம்முத்தத்தின் இருபக்கமும் இரு தனிமையென நின்றிருந்தோம் நாம்.
இமை அதிர்ந்து உதிர்ந்தன இலைநுனித் துளிகள். வட்டஉடல் சிலிர்த்து வளையல்களாயிற்று என் காலடி குளிர்ச்சுனை. இனியவனே, இக்குளிரில் நீ என் மிக அருகே செல்லும் இளவெம்மையை உணர்கிறேன். உன் உடல்மென்மை என் உடல்மயிர்ப்பரப்பை தொட்டதை அறிகிறேன். உன் இதழ்வாசம். உன் இமையசையும் ஒலி. இங்கிருக்கிறாய். எண்ணுமுன்னே வந்துவிட்டாய். என்ன மாயம் இது? கண்தொடுவதை உடலறியாது போகுமோ? உடலறிந்ததை விழியறியாமலாகுமோ? இந்தக் காற்றில் கரைந்துளாயா? இக்குளிரே நீதானா? என்னவனே, வெறும் எண்ணமென்றே அருகணையும் கண்கட்டு கற்றுளாயா?
அறிவாயா? நானென விரிந்தது இவ்வனம். நீ வந்த பாதை நான். நீ வைத்த அடிகள் என் நெற்றி வகிட்டில். உன் கால் தொட்ட புற்கள் என் கண்மயிர்ப்பீலிகள். உன் குழல் அலைத்த காற்று என் மூச்சு. உன்மேல் தெளித்த பனியோ என் விழித்துளிகள். கண்ணா, நீ விட்ட சுவடுகள் என் உந்திக் கதுப்பில். உன் குரலை அறிந்து குளிர்ந்தவை என் முலைமேடுகளில் எழுந்த நீலக்கடம்புகள். நீ நின்று சிரித்த இடம் என் உச்சிக்குவடு.
கண்ணா, நீ அங்கு நின்றாய். இரு கைவிரித்து நீ ஓடிச்சென்றாய். இதழ் சிரிக்கும். இரு விழி சிரிக்கும். முகம் சிரிக்கும். மூக்குநகை சிரிக்கும். கை சிரிக்கக் கண்டுளாயா? தோள் சிரிக்க துவளும் இடை சிரிக்க முலைசிரிக்க மென்தொடை சிரிக்க முல்லை நகம் சிரிக்க கால்சிரிக்கக் கண்டுளாயா? வெள்ளிதழ் மலர்ந்து விண்ணில் விழுந்தது பாரிஜாதம். நீல மேகமொன்று அதை அள்ளி எடுத்து தன் நெஞ்சில் அணிந்தது.
உன் தோளில் முலைசேர்த்தேன். இருகைகளால் சேர்த்தணைத்தேன். கழுத்து வளைவில் கன்னம் சேர்த்தேன். இடைபொருந்த இரண்டற்றேன். முன் நெற்றிவகிட்டில் உன் மூச்சை உணர்ந்தேன். இடைசுற்றியது உன் இடக் கரம். பின்கழுத்து மயிரளைந்தது உன் வலக்கரம். நீள்குழல்பற்றித் தூக்க நிலாநிறைந்த கலமாயிற்று என் முகம். நீலவானம் கவிந்த அலைகடல் அமைதிகொண்டது. குளிர்ந்து பனியாகி வெளித்தது. இதழ்தொட்டதென்ன, இறவாமையென்ற ஒன்றா? இனி மீண்டும் பிறவாமை என்பதேதானா? இதழ்கவ்வும் இதழறியும் மென்மை இதழ்மென்மையாகுமா? என் நாவறியும் சொல் எவர் சொல்லென்று சொல்லலாகுமா?
பாம்புண்ணும் பாம்பாகி பருத்து நெளிவேனா? ஒளியுண்ணும் விழி என்று உள்நிறைவேனா? இன்று ஒன்றுக்குள் ஒன்று என்று சுருண்டு அமைவேனா? எரிமீன் மண்புதைகிறது. மலரிதழ் நிலம்சேர்கிறது. என்ன இது இக்கணமும் என்னுடன் ஏன் இருக்கவேண்டும் காலம்? நானென்று எனைக்காட்டும் மாயம்? நானில்லை என்றால் எங்குவிழும் இம்முத்தம்? என் உளமறியாவிடில் எவ்வண்ணமிருப்பான் இவன்? நானில்லை இவனில்லை என்றால் எவ்வெளியில் நிகழும் இந்த இன்கனிவாய் தித்திப்பு? முத்தமொரு கணம். முத்தமொரு யுகம். முத்தமொரு வெளி. முத்தமொரு காலப்பெரும்பெருக்கு. முத்தமென்பது நான். முத்தமென்பது அவன். முத்தமென்பது பிறிதொன்றிலாமை.
என்னுடல் என்றே அவனுடல் அறிந்தேன். என்னைத் தழுவும் என்னுடல் உணர்ந்தேன். முத்தம் பொழியும் முத்தப்பெருநிலம். முத்தம் பறக்கும் முத்தப்பெரும்புயல். மூடிய இதழ்களில் மூக்குவளைவினில் கன்னக்குவையில் கழுத்துப் புதைவினில் செவியிதழ் மடல்களில் செம்பிறைக்கீற்றினில் தத்தி நடந்தது முத்தச்சிறுகால். புல்வெளி மீது புரவிக் குளம்புகள். பாலைமண் அறியும் பனிமணித் துளிகள். மழைவிழும் மலரிதழ். தவளை தாவிய தளிரிலை. அலைஎழும் கடல்முனை. ஆழி நுரைதவழ் மணல்கரை. மூச்சை உண்கிறது மூச்சு. என் மொழியில் ஒலிப்பது அவன் காற்று!
எத்தனை இனிது இன்னொரு வியர்வையை என் உடல் கொள்வது. இன்னொரு குளிரை என் அகம் அறிவது. இவனை இங்கே நான் படைத்து உண்கிறேன். இவ்வாழி கடைந்து என் அமுதைக் கொள்கிறேன். இவனிலிருந்தே நான் உதித்தெழுகிறேன். இவன் அலைகளில் நான் ஒளிநிறைக்கிறேன். நானில்லை என்றால் இவனென்ன ஆவான்? நான் சொல்லாவிட்டால் யாரிவனை அறிவார்?
செந்தழல் நீர்கொண்டதுபோல் சீறும் மூச்செறிந்தேன். செவ்விழி தூக்கி அவன் முகம் நோக்கினேன். அவனேயாயினும் அவனுக்கான தாபத்தை அறிந்திடலாகுமா? “போதும்” என்று அவன் மார்பில் கைவைத்து தள்ளினேன். என் தலைச்சரம் அவன் மணிச்சரத்தில் பின்னி அருகிழுத்தது. “நானிழுக்கவில்லை. உன் அணியிழுக்கிறது என்னை” என நகைத்தான். சினந்து என் கூந்தலை சுற்றி இழுத்து பின் வீசி “நாணிலாத நகை எதற்கு? நான் உனைப்போல் நெறியிலாதவளல்லேன்” என்றேன்.
என் காதருகே குனிந்து “நம்மிருவர் நெறியும் நாமியற்றுவதல்லவா? இந்தக் காடறிந்த காமம். இங்குள காற்றறிந்த தாபம்” என்றான். “வீண் சொல்லிடாமல் விலகு. நான் என் இல்லம் சேரும் நேரம்” என்றேன். பின் அவன் விழி நோக்கி நெஞ்சு அதிர்ந்தேன். குலைவாழை என தலைதாழ்த்தி “விடு என்னை. நான் வீடு திரும்புகிறேன்” என்றேன். “உன் வீடு இதுதான். அங்குளது நீ விட்டுவந்த கூடு” என்றான்.
இவன் என் சொல்லை அள்ளிச் சூடும் கள்வனென்று எண்ணி அவனைத் தள்ளி திரும்பினேன். அங்கே மலர்மரம் ஒவ்வொன்றிலும் ஒரு கண்ணன் நிற்கக் கண்டேன். அவனருகே நின்று குலவும் என்னையும் கண்டுகொண்டேன். “யாரது? என் விழிகள் காணும் மாயமா இது?” என்று சீறி திரும்பினேன். “இது உன் மொழியறிந்த கண்ணன். அது உன் விழியறிந்த கண்ணன். அப்பால் நீ வாசம்கொண்ட கண்ணன். உன் மூச்சும் மெய்யும் செவியும் சிந்தையும் அறிந்த கண்ணன்கள் அவர்கள். அக்கண்ணன்கள் அறிந்த ராதைகள்” என்றான்.
“சீ, விலகு. பெண்ணென்றால் உனக்கு வெறும் பேதைகள் மட்டும்தானா? கைச்சரடில் ஆடும் களிப்பாவைகள் அல்லவா?” என்றேன். நெஞ்சில் கரம் வைத்து நெருப்பென உயிர்ப்பெறிந்து நோக்கினேன். ஆடிப்பாவைக்கூட்டமென ஆயர்மகன் பெருகக் கண்டேன். என் நெஞ்சத்தோழிகள் லலிதையும் விசாகையும் சுசித்ரையும் சம்பகலதையும் ரங்கதேவியும் சுதேவியும் துங்கவித்யையும் இந்துலேகையும் அங்கு நிற்கும் ராதையர் என்று அறிந்தேன். நான்கொண்ட நாணம் நுனியளவும் இல்லாமல் கண்ணன் தோள்தழுவி காமத்திலாடி நின்றனர் அவர்கள்.
அப்பால் என் விருப்பத்தோழிகள் மந்தலியும் மணிகுண்டலையும் மாதலியும் சந்திரலலிதையும் மாதவியும் மதானலசையும் சசிகலையும் சுமத்யையும் கமலையும் காமலதிகையும் மாதுரியும் சந்திரிகையும் அவனுடன் கூடிக்களித்தல் கண்டேன். வெண்விழியில் கருவிழிபோல் கண்ணன் அவர்கள்மேல் ஆடிக்களித்தான். நீரோடை நீந்திச் சிறகடிக்கும் நீலமணி மீன்கொத்தி. நீரலைகளில் ஆடும் நீலக்குவளை. “என்ன இது? என் அகம் எரிகிறதே” என்றேன். “இங்கே நெறியில்லையா? நூலோர் முறையில்லையா? பெண்ணுக்கு ஆண் என்னும் பெற்றியில்லையா?” என்றேன் கண்ணீர் வழிய குரல் அழிய. “நான் இங்கு நிற்கின்றேன். நாணிலாத சழக்கா, அக்கோபியருடன் ஆட எப்படி மனம் கொண்டாய்?” கண்ணன் “அவர்களில் நிறைந்து ஆடியதும் நீயல்லவா?” என்றான். என்ன சொல் எடுத்தாலும் என் அகம் நோக்கி பதில் சொன்னான்.
என் கண்தொட்ட இடமெல்லாம் கன்னியர் களித்தாடினர். என் உயிர்த்தோழிகள் லசிகையும் காதம்பரியும் சசிமுகியும் சந்திரலேகையும் பிரியம்வதையும் வாசந்தியும் அவன் இதழ்கொண்டு இதழ்கொடுத்து நின்றனர். என் நிலைத்தோழிகள் கஸ்தூரியும் சிந்தூரையும் கௌமுதியும் மதிரையும் அவன் உடல்சுற்றி கொடியாகி படர்ந்திருந்தனர். என் மலர்கொத்துத் தோழியர் அனங்கமஞ்சரியும் ரூபமஞ்சரியும் ரதிமஞ்சரியும் லவங்கமஞ்சரியும் ராஸமஞ்சரியும் ராகமஞ்சரியும் காட்டுச்சுனைபோல நீலம் சூடியிருந்தனர். கோபியர் சூடிய கண்ணன். அவன் கொள்ளக் குறையா பெண்கள்.
என் ஆடை பற்றி இழுத்த மலர்க்கிளையை கடிந்து உதறினேன். காலடி சிதற கருங்குழல் பறக்க பாய்ந்தோடினேன். மலைச்சரிவில் மகிழம் பூத்த சதுப்பில் மலையோடைப்பெருக்கில் மான்போல தாவிச்சென்றேன். மூச்சிரைக்க உடல் அனல் பறக்க முழந்தாளிட்டு அமர்ந்தேன். அங்கே சிறுமேட்டில் குற்றிலை விரித்து நின்றிருந்தது நீலக்கடம்பு. அதன் கீழே சென்றமர்ந்து கண்மூடி குருதியோடும் குமிழிகளை நோக்கி இருந்தேன். கண்ணன் சொன்ன குறியிடம் அதுவே என்றறிந்தேன். அவ்வண்ணமென்றால் நான் சென்றுவந்த தொலைவெல்லாம் ஏது?
அஞ்சி கால்சமைந்து நின்றேன். பின்னர் காட்டை வகுந்து விரைந்தோடினேன். மீண்டும் வந்தடைந்த இடம் அந்த நீலக்கடம்பு. அங்கே கண்ணீர் முலைநனைக்க கால்கள் தளர்ந்து விழுந்தேன். “கண்ணா, நீயறியாததா? நான் சுழலும் இவ்வட்டத்தின் மறுபக்கம் நீ சுழல்வதை நானுமறியாததா?” என்றேன். எண்ணி எண்ணி ஏங்கும் கண்டிதை நான். என்னை பித்தியாக்கி நகைக்கும் கல்மனத்தான் நீ. “எத்தனை பெண்கொண்டால் நிறையும் ஓர் ஆண்மனம்? நீசா, வெற்றுச்சொல் விடுக்கும் பரத்தா, சொல்! எத்தனை உடல் விழுந்தால் அணையும் உன் கனல்?”
என் உள் நின்று எழுந்தது அவன் குரல் “ஒற்றை மனம் கொண்ட ஒருகோடி உடல்.” தலையை கையால் அறைந்து “சீ!” என்று கூவி எழுந்தேன். “கோடி உடலேறி ஆடும் ஒரு காதல்.” என் குழல் பற்றி இழுத்து “மூடு உன் வாயை” என்றேன். “ஆடிப்பாவையென எனைச்சூழும் ஓர் அகம்.” பற்களைக் கடித்து கைநகம் கொண்டு கைகுத்தி இறுக்கி நின்றேன். பின் உடல் தளர்ந்து அமர்ந்தேன்.
அழுதழுது அகம் கரைந்து அம்மரத்தடியில் எஞ்சினேன். இனியில்லை நான் என்று விழித்தேன். இன்றென்பது ஏதென்று திகைத்தேன். இலைகள் ஒளிகொண்ட வேளை. நீர்நிலைகளில் கதிர்முளைத்த காலை. இரவெல்லாம் பொங்கி நுரைவழிந்திருந்தது என் கலம். அதனுள் கைதொடக்காத்திருந்தது என் அழியா அமுதம்.