நீலம் - 29
பகுதி ஒன்பது**: 4.** கடத்தல்
முதலில் மலர்ந்தது முல்லை. வழிதவறி படியேறி வந்த கைக்குழந்தை போல அது வாய்வழிய விழியொளிர உள்ளே வந்து அறையெங்கும் தவழ்ந்தது. அவளைக்கண்டு வியந்து அன்னையென்றெண்ணி அருகணைந்து முழங்கால் தொட்டு எழுந்து நின்று சொல்லாகாச் சொல் உரைத்து அழைத்தது. அதன் குமிழிதழ் இழிந்து முகவாயில் சொட்டிய துளிமுத்து அவளைத் தொட்டது. “முல்லை!” என்றாள் ராதை. அப்பால் மாலையின் மஞ்சள் ஒளி சொட்டிய இலைக்கொத்துகளுடன் முல்லை பல்வரிசை எழ புன்னகைத்தது. பாலூறும் பைதல் மணம். மென்குழலில் எஞ்சும் கருவறை மணம்.
செவ்வேளையில் மலர்ந்தது அந்திமந்தாரை. ஒரு சொல் சிவந்தும் மறுசொல் பொன்கொண்டும் பின்னொரு சொல் வெண்மை ஒளிர்ந்தும் செறிந்தது. அச்சொற்கள் அப்பால் பெருகிப்பெருகி செல்வதைக் கேட்டாள். எழுந்து சாளரத்தருகே நின்றாள். நீர்நெளிந்த நதிக்கரை நெடுகிலும் நிறைந்து பரந்திருந்தது சொல்மலர் வெளி. சொல்லிச் சொல்லி தீராத வண்ணப் பெருவிரிவு. அதிலெழுந்தது புளிப்பூறிய கள்மணம். நாசிதொடாமல் நெஞ்சு தொடும் புதுப்பால் மணம்.
பாதம் தெரிய பாவாடை நுனி பற்றித் தூக்கி நாணி உதடுகடித்து இடை வளைத்து தயங்கி காலெடுத்து உள்ளே வந்தது அல்லியின் வாசம். வெண்ணிற இதழ்களுக்குள் பகலெல்லாம் ஊறி நிறைந்து விம்மி இதழ்முனையை முட்டித்திறந்து கைவீசி காற்றில் எழுந்து நீர்ப்பாசி வாசத்தை துணைக்கழைத்து கரைக்கு வந்தது. பின் தோழியை உதறி சிரித்தோடி சோலைக்குள் புகுந்தது. அவள் காலடியில் மென்சலங்கை ஒலி. கைவளைகள் சிணுங்கும் ஒலி. அறை நுழைந்து சுழன்று அவள் கடந்து செல்ல கூந்தலிழை பறந்து கன்னம் தொட்டுச் சென்றது. சங்குக்குள் எஞ்சிய உயிர்மணம். சுண்ணம் சூடாகும் சிறுமணம். மூக்கு உணரும் தண்மை. மென்மை ஒரு மணமான தன்மை.
பின்னர் விரிந்தது மணிசிகை. நீலம் கலந்த நச்சுப்புன்னகை இதழ்ப் பொதியவிழ்த்து தன் விழைவைச் சொல்லி நின்றது. அதனருகே பொன்னணிந்து விரிந்தது பூவரசு. ஒருவரை ஒருவர் கைபற்றி கால்வைத்து சோலைக்குள் நுழைந்தனர். ஒருவர் வாசத்தை ஒருவர் கொண்டனர். பச்சைத்தழை கசங்கும் மணம். புத்தரக்கு வழியும் மணம். தேனீச்சிறகின் ரீங்கரிக்கும் நறுமணம். சொட்டும் மெல்லிய ஒலியின் மணம். சாளரக்கதவருகே நகைப்படக்கி நின்றனர். அல்லி சென்ற பின்னர் மெல்ல வந்து நோக்கிச் சென்றனர். ஆநிரைகள் அவர்களை அறிந்து மூச்சிழுத்தன. அப்பால் ஒரு இளம்பறவை அன்னையிடம் ஏது என்றது. அன்னை சிறகணைத்து அது என்றது.
இரவின் ஒலிகள் அவிந்தன. காற்று கடந்தோட காட்டுமரங்கள் உலைந்தன. நிலவொளியில் வழியும் அரசநாகமென வந்தது தாழம்பூவின் வாசம். அதன் சீறுமொலி கேட்டு உடல் சிலிர்க்கும் முன்னர் இமையா மணிவிழியை இருளுக்குள் கண்டாள். பொன்னடுக்கி வைத்ததுபோல் படமெழுந்து நிற்க தழல்நெளிய நா பறந்தது. தரையெங்கும் உடல் நெளித்து சுவர்மூலை வழியாக ஒழுகியது. மடிப்புகளில் எழுந்து வளைந்து விழுந்தது. நுனிவால் நெளிநெளிய அறைசுற்றி கடந்துசென்றது. காட்டுச்சுனையருகே எழும் நிலவின் மணம். எச்சில் கலந்த எரியும் மணம். முட்டை விரியும் முதல் மணம். அச்சம் எழுந்து அகம் குளிர அவள் எழுந்து சுவர் சாய்ந்து நின்றாள்.
சாளரத்தில் வெண்சிறகுமடக்கி வந்தமர்ந்தது பிரம்மகமலத்தின் பித்தெழுந்த நறுமணம். பச்சை உதிர மணம். இளநீர் வெண்மையின் குளிர்மணம். அலகைச் சரித்து கழுத்தை நீட்டி உள்ளே நோக்கியது. எழுந்து சிறகடித்து இருளில் சுழன்று மீண்டும் வந்தமர்ந்தது. பின் உள்ளே நுழைந்து கூரையில் உரசிச் சுழன்று சுழன்று பறந்தது. சிறகின் காற்று சுழன்ற அறைக்குள் சிதறி விழுந்தன செங்குருதித் துளிகள். சாணித்தரையில் விழுந்து உடைந்து பரவின. அது சென்றபின்னும் எஞ்சியது குருதி வாசனை. கொன்று உருவிய குத்துவாளின் வாசனை.
மரவுரிகொண்டு முகம் மூடி உடல்சுருட்டி படுத்துக்கொண்டாள். மூச்சு நிறைந்த இல்லத்துக்குள் நிறைந்திருந்த வாசங்கள் எல்லாம் அவளைச் சூழ்ந்துகொண்டன. கால்மாற்றும் கரும்பசுவின் கனத்த குளம்போசை. கன்று கழுவில் முட்டும் ஓசை. வால்சுழற்றி சட்டத்தில் அடிக்கும் கன்னிப்பசுவின் ஓசை. சிற்றோடையென சிறுநீர் விழும் ஓசை. கொசுக்கள் ரீங்கரித்து சுற்றிவரும் ஓசை. அடுமனைக்குள் பூனை காலடி வைக்கும் ஓசை. அப்பால் மரமல்லி உதிர்க்கும் மலர்களின் ஓசை. அதற்கப்பால் மலைமுடிமேல் முகில்குவைகள் வந்தமரும் ஓசை.
வில்லெழுந்து காற்றைக் கீறி வந்து தைத்த அம்பைப்போல் நிசாகந்தியின் வாசம். சிவந்து முனைகொண்டு வெம்மைஎழுந்து விம்மி உடைந்த கட்டியின் புதுச்சீழ் மணம். உடல்கலந்த குங்கிலியப் புகைமணம். உதைத்து எழுப்பப்பட்டவள் போல ராதை எழுந்தாள். வாசலுக்கு ஓடி தாழ்திறந்து படிகளை தொட்டுப்பறந்து முற்றத்தில் இறங்கினாள். பனிபட்டு குளிர்ந்த செம்மண்ணில் பாதம்பதிய விரைந்தாள். நிலவொளி நீராடி பல்லாயிரம் பதக்கங்கள் அணிந்து நின்றிருந்த புங்கத்தை, ஒளிசிதறச் செண்டெனச் சிலிர்த்த வேம்பை, குளிர்கொண்டு கண்மூடித் துயின்ற வாகையைக் கடந்து ஓடினாள்.
இது என் இல்லமல்ல. இவர் என் கேளிரல்ல. இங்குள எதுவும் என்னுளே உள்ளதல்ல. சிறகெழுந்த பறவைக்கு சிறையாகுமா முட்டை? அலகு கூர்க்கும் வரை அது உணவும் வெம்மையும் உறையுளும் ஆகலாம். கொண்டதெல்லாம் கைவிட்டு கொள்வோனைத் தேடிச்செல்பவள் நான். அடங்கா விழைவெழுந்த அபிசாரிகை. இனியெனக்குச் சொல்ல இவ்வுலகிடம் ஏதுமில்லை. என் விழிநோக்கி வழிகாட்டும் மூதன்னையரும் வருவதில்லை. கட்டற்றவள். காற்றானவள். நீருடனும் நெருப்புடனும் ஆடுபவள். பித்தொன்றையே அணிந்து பிறைசூடனுடன் ஆடும் பேயள். என் கால்சிலம்பொலியில் ஆடட்டும் அகிலமெல்லாம்.
இடிந்திடிந்து சரிந்தன எழுந்தெழுந்து சூழ்ந்தவை எல்லாம். அறுந்தறுந்து தெறித்தனை அணைத்தணைத்து நின்றவை எல்லாம். எங்குமென்று வெளித்தன திசைகள். ஏதுமற்று திறந்தது பூமி. மூதாதை முகங்கள் முனை மழுங்கின. மூத்தோர் சொற்கள் பொருளழிந்தன. நிறையென்றும் கற்பென்றும் முறையென்றும் நெறியென்றும் கல்லாகிச் சூழ்ந்து கனத்து நின்றவை எங்கே? இங்கு எரியேறிய கலம் மீது நீர்த்துளிபோல் மறைவனவே அவைதானா? நஞ்செழுந்த நாகம். குருதிச்சுவை கண்ட சிம்மம். அவிதேடும் தெய்வம் எங்கும் அடங்காத பெருநதி.
அவள் சென்ற வழியெல்லாம் துள்ளி ஆர்த்தெழுந்தன சிறுதவளைக்கூட்டம். இலைமேலெழுந்து இலைதாவி கண்விழித்து தாடை அசைய ‘தாகம் தாகம்’என்றன. அளைவாயிலில் எழுந்து அணைக்க்கும் பெருங்கை நீட்டி ‘அருகே அருகே’ என்றழைத்தன நண்டுகள். மரம்தழுவி இறங்கிய மலைப்பாம்பு ‘கொள்வேன்!’ .தனித்த சிறுத்தை தன் விழியொளிரும் மின்மினிகளால் கூட்டிச்செல்லப்பட்டது. இரு நீர்த்துளிகள் இணைவதுபோல் மலைச்சாரலில் மழைகொண்டு குளிர்கொண்ட மடபிடியை அணைத்தது மதவேழம்.
கூகையொன்று அவளைக் கண்டு குரலெழுப்பியது. அப்பால் புதருக்குள் விழியொளிர நரியொன்று பின்னணைந்து பதுங்கி பல்காட்டியது. வௌவால்கள் நீந்தும் இருளுக்குள் மலர்ப்பொடிகள் உதிர்ந்து நாகங்களை புற்றுவிட்டெழுப்பின. வெண்மலர்கள் விழிகொள்ளும் வசந்தகால இரவு. வாசம் எழுந்து வான் தொடும் இரவு. வெம்மை எழுந்த காற்றில் விரிந்தன நாகமுட்டைகள். நெளிநெளிந்து எழுந்து மலர்தேடின இளநஞ்சுகள். நோய் நிறைந்த இரவு. கொல்லும் விஷம் நிறைந்த இரவு. காலம் கனத்த இரவு. நீலம் துளித்து சொட்டும் நிறையிரவு.
வெண்ணிலவை முகில் மறைக்க அவள் வழிதவறினாள். தன் விழிசொல்லும் வழியை கால்கொள்ளவில்லை என்றறிந்தாள். கனத்துவந்த இருளுக்குள் கைநீட்டி கைநீட்டி அவளைத் தொட்டழைத்தன மரக்கிளைகள். கால்சுற்றி அவளை தழுவிக்கொண்டன கொடிப்புதர்கள். “கரியோனே, எங்குளாய் நீ?” என்ற அவள் குரலெழுந்ததை அள்ளி மலைப்பாறை மடம்புக்குள் கொண்டு சென்று புதைத்தது குளிர் காற்று. எங்கோ இடியதிர்ந்தது. தாழொலிக்கத் திறந்தது முகில் பெருங்கதவம். அப்பால் நிறைந்த பேரொளி மின்னி மின்னி விழிமறைத்து இருள் நிறைத்தது.
இருள் கனத்துப் பெய்தது போல் இழிந்தது இரவுமழை. சூழ்ந்த நீர்த்தாரைகள் வழியாகச் சென்றாள். திரைவிலக்கி திரைவிலக்கி நான் தேடும் அரங்கு எங்கு ஒருங்கியிருக்கிறது? அங்கே எழும் இசை மட்டும் ஏன் என் செவியறிகிறது? சுழன்று சுழன்றொழுகும் பஹுலி. ஒற்றைக்கால் தூக்கி நின்றாடும் மேகராகம். ஏழுமரம் துளைத்துச்சென்ற ராகவனின் அம்பு நான், ஏழாயிரம் கோடி நீர்மரம் துளைத்துச்செல்கிறேன். யமுனைமீது பொழிந்து இரைந்தது மழை. கொந்தளிக்கும் நீர்ப்பரப்பில் அலையலையாகச் சென்ற காற்றின் ஆடையை தைத்துச்சென்றது குழலிசை நூல்.
நீரில் பாய்ந்து நீந்திச்செல்கையில் கரைச்சேற்றில் அசைவழிந்திருந்த முதலைகள் நீரிறங்கி நெருங்கி வந்தன. செதிலெழுந்த கால்கள் நீர் துழாவ வால் நெளித்து அவை அருகணைந்து விலகிச்சென்றன. ஆம்பல் போல் நீரலைகளில் ஆடினாள். கொடிப்பாசி போல் ஒழுக்கில் உலைந்தாள். கரைச்சேற்றில் கால்வைத்தெழுந்து விரைந்தாள். நீர் சொட்ட அசைந்தன கைவிரித்த இலவ இலைகள். மழைத்துளிகளையும் மலராக தேக்கிக்கொண்டன வேங்கைமலர்க்கொத்துகள். முகில் நீக்கி எழுந்தது முழுநிலவு. ஒளி கொண்டு சுடராயின வாழையிலைப்பரப்புகள். தாழைமடல் நீட்சிகள். பகன்றை பேரிலைகள். பாலைப் பூங்குலைகள்.
விருந்தாவனம் செல்லும் பாதையெல்லாம் பூத்திருக்கக் கண்டாள். பின்னிரவின் குளிரில் நாணம் கரைய கண்விழித்தது செண்பக மணம். தசைதிரண்ட இளங்காளையின் விந்தெழும் வாசனை. எரியும் கந்தக வாசனை. மயக்கும் தனிமையின் வாசனை. மழைகொய்த செண்பகங்கள் நீர் நிறைந்த விழிகளென உதிர்ந்து கிடந்த பாதைவழியே நடந்தாள். கால்பட்ட இடமெல்லாம் நீரூறிக் குளிர்ந்தது நிலம். அவள் உடைசொட்டிய நீர் நின்ற புல்லிதழ் சிலிர்த்தது. நிலவு எழுந்த வானில் கனவு கனத்து நின்றன மேகங்கள். அப்பால் எழுந்தது வேய்ங்குழல் நாதம்.
கைநீட்டி அழைத்தது சம்பங்கி மணம். காதல் நிறைந்த கைகள். மோகம் மீதூறி நாகமென நெளியும் கைகள். ஒளிரும் கண்கள் நகமென கூர்கொள்ளும் விரல்களுடன் படமாகி எழுந்தாடும் கைகள். வருக வருக என்று கூவியது வாசனை. இரவாகி நிற்பதெல்லாம் நானே என்றது. இவ்விரவின் குளிர் நான். அதிலெழும் வெண்ணிற விண்மீன் நான். உன் முலைக்குவை தேடும் இளவெம்மை நான். இலைகள் தோறும் ஒளிர்ந்து சொட்டியது சம்பங்கியின் வாசம். சம்பங்கியன்றி வேறில்லை என்று புன்னகைத்து நின்றது ஈரநிலவொளிர்ந்த இளங்காடு.
சம்பங்கி வாசம் சென்று தொட்டு எழுப்ப அஞ்சி பின் சலித்து மெல்லச் சிலிர்த்து ஓரிதழ் பிரித்தது மனோரஞ்சிதம். நாணி தலைகுனிந்து நிலம் நோக்கி தன் குவி விரித்தது. எண்ணுவதெல்லாம் தன் மணமாக்கிய பொன்மலர். முல்லையாகியது. அந்திமந்தாரையாகியது. அல்லியும் மணிசிகையும் ஆயிற்று. தாழையும் பிரம்மத்தாமரையும் தானே ஆயிற்று. நிசாகந்தியாயிற்று. செண்பகமும் சம்பங்கியும் ஆயிற்று. மனமெனும் மலரின் மணமாயிற்று. மதநீர் மணம். மத்தெழுந்த களிற்றின் சென்னி வழியும் மணம். புதுத்தேனடையின் மணம். நிலவு மட்டுமே அறிந்த மணம். நாணம் துறந்த மணம். தெய்வங்களும் வெட்கி புன்னகைக்க வைக்கும் மணம்.
மழைத்துளிகள் அமைதிகொண்டன. அவள் காலடி ஓசையொன்றே தொடர்ந்து வந்தது. நிலவுகழுவிய கோவர்த்தனத்தின் கரிய மேனியில் அருவி ஒன்று வெள்ளிச் சால்வையென நழுவியது. முகில்முகங்களில் ஒளி நிறைந்தது. வெண்நிலவு தொட்ட வனத்தடாகங்கள் வான்துளியாயின. அவற்றில் சிறுமீன்கள் விழிமின்ன சிறகு கொண்டன. காற்றில் பறக்கும் பொன்பட்டு நூலென நெளிந்து நெளிந்து சென்றது காம்போதி. வசந்தமாகி வழியும் பண். வாசமலர்களை எல்லாம் தொட்டுத் தொட்டுச்செல்லும் பண். பொன்முடி சூடி மோனக்கருவறையில் அமர்ந்திருக்கும் விழிமூடிய தெய்வம்.
பெண்ணுருக்கொண்டு அவள் முன்னால் வந்து நின்றது பாரிஜாத வாசம். பேதைவிழி விரித்து பைதல் புன்னகை சூடி தளர்ந்த கால்வைத்து தாழும் இமைகொண்டு நின்றது. கண்ணீர் மணம். கஸ்தூரி மணம். புத்தரிசி வேகும் மணம். புதுமழையின் மண்மணம். “என் பெயர் பாரிஜாதை. விண்ணேகும் விரிகதிர்மேல் காதல்கொண்ட மங்கை” என்றாள். “நிலமெங்கும் விண்மீன் வெளி என விரிந்தேன். கோடிவிழிகளால் அவனை நோக்கி நோக்கி நகைத்தேன். காத்திருந்து கண்ணீருடன் உதிர்ந்தேன். யுகங்கள் கடந்தன. மலைகள் கரைந்து மண்ணாயின. நதிகள் வற்றி மீண்டும் பிறந்தன. அவன் விழி என்னை நோக்கவில்லை. ஒளிக்கரம் மட்டும் என்னைத் தொட்டுக் சென்றது.”
“யுகங்கள் முதிர்ந்து மகாயுகங்களாயின. மன்வந்தரங்களாயின. என் தவம் கனிந்த கணத்தில் என் முன் பாரிஜாதை எனும் தெய்வத்தைக் கண்டேன். வெண்மலர் வடிவாக விண்நிறைந்து நின்றிருந்தாள். அவள் எடுத்த மண்வடிவமே நான் என்றறிந்தேன். என் விழைவை விழிகளில் கண்டாள். “பேதையே உன் மடியமைந்த மழைத்துளியில் எத்தனை கோடிமுறை அவன் சிறுமகவாய் வந்தமர்ந்து சிரித்துச் சென்றான். நீ தேடும் முழுமை அதிலேயே நிகழும். முதல்முழுமை தேடாதே. கண்ணுற்றதன் மேல் காதல்கொள்வதெல்லாம் பெண்ணுக்கு அழகல்ல” என்றாள்.
“இல்லை என் முதல்வடிவே. இது ஒன்றே எனக்குரியது. வேறேதும் வேண்டேன்” என்றேன். நூறாயிரம் முறை திசைதோறும் மின்னி மின்னி அதையே கேட்டாள். முறைகூட மாறாமல் அதையே சொன்னேன். அவ்வண்ணமே ஆகுக என மறைந்தாள். மறுநாள் இருள் விலகும் வேளையில் கீழ்த்திசை நோக்கி விழிமலர்ந்து நின்றேன். அவன் திசை விளிம்பில் எழுந்ததுமே என்னை நோக்கி முகம் கனிந்தான். அக்கணமே அனலானேன். அங்கொரு சாம்பல் குவையானேன்.”
“அன்று மறைந்தவள் நான். பின்னொருநாள் நிலவொளியில் ஒருவன் வேய்ங்குழல் நாதம் குளிர்நீர் பெருக்கென என்னை மூட என் சாம்பல் முளைத்தெழுந்தது. சிற்றிலைச் செடியில் சிறுவெண்பூவென மீண்டும் விரிந்தேன். இரவொன்றையே அறிந்தேன். ஒருநாளும் கதிர் நோக்கி முகம் தூக்கா நெறிகொண்டுளேன். காலை என் காலடியில் சொட்டி விரிந்திருக்கும் விழிநீர் தடமொன்றையே என்னை எரித்தவன் காண்பான்” என்றாள். ராதை “உன் கண்ணீர் என் உளமெங்கும் மணக்கிறது தோழி” என்றாள்.
விருந்தாவனமே ஒரு மலரென விரிந்தெழுந்த வேளை. இதழ்கோடி கொண்ட மலர். நறுமணம் கோடி எழுந்த மலர். நடுவே எழுந்த கருவண்டின் இசை நுரைக்கும் மலர். ஆயர்குடிகளில் இரவெல்லாம் பொங்கி கலம் நிறைத்து கவிந்தது பசும்பால். கள்நுரைத்து கனத்தன மலர்கள். காற்று சென்று கதவுகள் தோறும் முட்டிச்சென்றது.கட்டிலாத பசுக்களெல்லாம் கனவென நடந்து வந்து சூழ்ந்தன. கண்கள் மின்ன வால் நிலைக்க நின்றன. விண்ணுலாவி மண்நிறைத்து விரிந்து பண்பொழிந்து நின்றது குழல். அதைக் கேட்டு அவள் நின்ற காலடியில் தளிர்தெழுந்தது புதுப்புல். தலைமேல் பூச்சொரிந்தது மலர்க்கிளை. வானில் குடை பிடித்தது வெண்மேகம்.
வீடும் குலமும் நெறியும் முறையும் துறந்து இங்கு வந்த நானொரு அபிசாரிகை. என் இல்லம் புகுந்து இருளில் வந்து உள்ளம் கவர்ந்துசென்ற நீயும் ஒரு அபிசாரன். மாண்பிலாதோன். மானசசோரன். களவுக்கு நிகராக களிப்பூட்டுவதேது? காரிருளோனே, கள்வனே, கள்ளத்தில் இருப்போர்க்கு ஐந்தாயிரம் புலன்கள். ஐந்துலட்சம் மனங்கள். ஐந்தாயிரம் கோடி கற்பனைகள். கல்லை மணியாக்குகிறது களவு. கண்படுவதில் எல்லாம் ஒரு கதை கொண்டு நிறைக்கிறது. ஓர் உடலுக்குள் ஒன்றை ஒன்று ஒளிக்கின்றன இரு அகங்கள். ஒன்றை ஒன்று கண்டு திகைக்கின்றன இரு விழைவுகள். பெருகிவழிகின்றன முகம்கொண்டமைந்த ஆடிகள் இரண்டு. கள்ளத்தில் களியாடும் கரியவனே, இதோ நீ பெருகி நுரைத்த கள்குடம் நான்.
நாமிருவரும் இன்றிருக்கும் இவ்வுலகில் நீறி எரியட்டும் நெறிநூல்கள். மட்கி மறையட்டும் மூத்தோர் சொற்கள். இங்கு சட்டங்களில்லை சாத்திரங்களேதுமில்லை. அறமில்லை ஆளும் தெய்வங்களும் இல்லை. கோலேந்தி பீடம் கொண்டிருப்பது ஏழுலகின் மேல் எழுந்து நிற்கும் காமம். தசைகளின் உள்நின்றெரியும் நெருப்பு. எண்ணங்களை நெய்யாக்கும் எரிமலர். என் உடலை அறியும் தேவர்களே சொல்க, காமமன்றி தூயதென ஏதுண்டு? மானுட உடலாகி வந்த தெய்வங்களே சொல்க, காமமன்றி முழுமையென ஏதுண்டு?
கதவுண்டு காற்றுக்கு. சாளரத் திரையுண்டு ஒளிக்கு.வேலியற்றது வாசம். வாசமென்றெழுந்த காமம்.என்ன விதி, ஏது நெறி? எங்குளது காமத்தை ஆளும் கருத்துறும் சொல்? தன் வால்நுனித்தவிப்பை விழுங்கத்துடிக்கும் பாம்பின் வாய். தன்னை நிறைத்தெரியத்தவிக்கும் நெருப்பின் செம்மை. காமம் போல கண்ணனை அறியும் வழி எது? அவன் கால்தொட்டறிவீர். கண் முனை பட்டறிவீர். அவன் சொல்கேட்டறிவீர். சீ, சிறியோரே விலகுங்கள். இங்கே நான் அவன் உயிர் பட்டெழுகிறேன். அவன் உடலுண்டு உயிர் பருகி உளம்கொண்டு உன்மத்தம் கொள்கிறேன். அவன் நெஞ்சப்பீடத்தில் நின்றாடும் காளி. பெருங்களி கொண்டு கூவும் கூளி. அவனை தின்று செரித்தாலும் தீராத பெரும்பசி நான். அவன் மிஞ்சாது அழிகையிலே அணையும் எரி நான்’
கண்ணனின் காமினி நான்.காமக்கனி. அவன் காமமன்றி வேறில்லா கலம். அவன் ஒளியின்றி ஒழியும் காரிருள்.. அவன் பெருகி நிறையும் பெரும்பாழ்வெளி.நானின்றி அவனில்லை. இங்கென் அடிவயிற்றுக்குழியில் அதிலெழும் கனலில் அவனை அவியாக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் ஆழத்து மடுவில் அவனை கருக்கொண்டிருக்கிறேன். அறியாத மானுடரும் அவர் கொண்ட நீதிகளும் என் அனல் பற்றி எரிந்தழிக. இப்புவியில் இன்றுவரை எரிநின்ற எல்லையற்ற விழைவெல்லாம் வந்து என் அடிபணிக. என் ஏழு புரவியென எழுக. என் தேரின் கொடியென அமைக.என் துளித் தீ கொண்டு காமனை எரித்தவன் தன்னை எரித்தழிக!
துதிக்கை நீட்டி அவளை அள்ளி எடுத்தது இருள்குழல்நாதம். தன் மத்தகம் மீது வைத்துக்கொண்டது. மதம் வழியும் சிரம். மத்தெழுந்த கரிய பீடம். அங்கே அவளிருந்தாள் நிலவொளி மட்டும் அணிந்து நிறைந்தவளாக. தடையொன்றில்லை. தழுவத் தயங்காத காற்றில் ஊறி வழிந்தது மலர்மணங்கள் அலைகொண்ட குழலோசை. வெளி திகைத்துச் சுழித்து அங்கே நின்றது. கோடி கால்கொண்டு ஓடும் காலம் மலைத்து நின்றது. உன்னிலுள்ள எல்லாம் என்னுளே நிறைக என்றது இசை. மண்ணுலகெலாம் நிறைந்து நின்றிருந்தவர் அவர் இருவர். அவரைக்காண விண்ணெழுந்தனர் தேவர். கண்டு புன்னகைத்தனர் மூவர்.