நீலம் - 28
பகுதி ஒன்பது**: 3.** கருத்தழிதல்
பெருந்துயர்போல் இப்புவியை பொருள்கொள்ளச் செய்வது பிறிதில்லை. சூழ்ந்திருக்கும் ஒவ்வொரு பொருளிலும் சொல்ஒன்று குடியேறுகிறது. அச்சொல்லின் நிறை எழுந்து அவை மண்ணில் மேலும் மேலுமென அழுந்தி அமர்கின்றன. அவ்விடத்தில் அக்காலத்தில் முழுதமைகின்றன. அவை சுமந்து இப்புவியே பன்மடங்கு எடைகொள்கிறது. புவிசுமக்கும் ஆமையின் ஓடு நெளிகிறது. நீளும் தலையின் விழிகளில் நிறைகிறது முடிவிலியின் பெருஞ்சுமை.
இரும்பு உருகி வழிவதுபோல் காற்று. வெள்ளி விழுதுபோல் ஒளி. திசையெங்கும் கற்கள் தெறிப்பது போல் சூழ்ந்து தாக்கும் ஒலிப்பரப்பு. எண்ணங்கள் எடைகூடி என் மீதே படிந்துவிட்டன. காலமும் எடைகொண்டதோ? கரியமலைபோல அடுக்கடுக்காய் அலையுறைந்து அமைந்ததுவோ? வானக்கூரை வளைந்து இறங்கத் தொடங்கிற்றா? என் இல்லம் இறுகி உட்சுருங்கி ஒரு சிறுகூடாகி சிமிழாகி தொலைந்து போயிற்றா?
அனுப்பப்படாத செய்தி போல கொடியது ஏதுண்டு? எத்தனை காத்திருந்தாலும் அது வந்து சேர்வதில்லை. தெய்வங்களே நினைத்தாலும் அதை கையளிக்க முடிவதில்லை. அதற்கு சொல்லில்லை. பொருளும் இல்லை. விடுத்தவரும் பெற்றவரும் இல்லா விண் ஒன்றில் எப்போதுமென இருந்துகொண்டிருக்கிறது அது. இம்மண்ணில் அத்தனை மானுடரும் மறைந்தபின்னரும் அது அங்கிருக்கும்.
நதிக்கரையில் தலைசாய்த்த நீலக்கடம்பின் அடியில் அமர்ந்திருக்கிறேன். என் நெற்றிமேல் உதிர்ந்த மலரை ஏறிட்டு நோக்கினேன். எத்தனை நாள் காத்திருந்தாய் இறுதிப்பற்றும் அழிவதற்கு? இக்கணத்தை தேர்ந்தெடுத்தது யார்? நீயா, உன்னில் நிறைந்திருந்து வழிந்தோடிய தேனா, மணமா? மெய் சிலிர்த்து மேனி எழுந்த சிறுமலர்ப்பந்து. வண்ணமும் வாசமும் எஞ்சிய செம்பொற் குவளை . அதற்குள் வாழ்ந்த சிற்றெறும்புக்கூட்டம் தங்கள் உலகம் உதிர்ந்ததை அப்போதும் அறிந்திருக்கவில்லை.
என் மேல் எழுந்த மரக்கிளையில் எஞ்சிய மலர்களை நோக்கியிருந்தேன். உதிர்ந்த மலரை விட ஒரு சொல் நம்பிக்கை கொண்டவை. ஒவ்வொரு மலருக்கும் ஒரு சொல் ஒரு சொல்லென கூடி இறுதியில் உதிரும் அம்மலரிடம் இருப்பது ஓர் ஆறுதல்மொழி என்றாகுமோ?
மேலும் ஒரு மலர் என் மடியுதிர்ந்தது. என் கையில் எடுத்து கண்முன்னே நோக்கினேன். அதற்குள் உருக்கொளாது கருக்கொளாது வெறும் நினைப்பென வாழ்ந்த காடு பெருமூச்சுவிட்டது. அப்பசுமையில் மலரவிருந்த மலர்கள் கனியவிருந்த கனிகள் பாடவிருந்த பறவைகள் என்னிடம் சொல்லின “இருத்தலெனும் பேறு எய்தாது இருத்தலைப்போல் துயருண்டோ தோழி?”
இன்னொரு மலர் உதிர்ந்து என் தோள் தொட்டு விழுந்தது. அஞ்சி எழுந்த சிறுமுள்தொகை.அல்லியெழுந்த குறுஞ்சிமிழ். இம் மெல்லிதழ் அடுக்கை எத்தனை முறைசெய்து பயின்று அமைத்தது மலர்களின் தெய்வம்? நுண்ணிய நரம்பின் பின்னல்கள். புல்லிவட்டத்தின் மலர்வை, அல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதி ஊதிப்பொருத்திய உலைமூச்சு எது? அந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கே? இங்கே வீணுக்கு உதிர்ந்து வெறுமைகொண்டு மட்கி மீண்டும் உப்பாகையில் எங்கு சென்று நின்று ஏங்கி விம்முகிறது இம்மலரின் எழில்?
அழிவதெல்லாம் அழகு. இப்புவியில் துயரெல்லாம் பேரழகு. உதிர்வதாலேயே மலரழகு. காலப்பெருவெளியில் கரைவதாலேயே மலை பேரழகு. ஏங்கி தலைகுனிகிறது ஆம்பல். இதழ் சுருங்கி சொல்லவிகிறது பாதிரி. கண்புதைக்கிறது கருவிளை. கனலணைகிறது காந்தள். எரிவிண்மீன் என உதிர்கிறது பலாசம். எங்கும் குருதியென வழிகிறது செம்மல். உதிர்ந்த மலர்களின் துயரால் பூசைசெய்யப்படுபவள் இப்புவியரசி.
உதிர்ந்து உதிர்ந்து ஒழிந்தது மலர்மரம். வண்ணமிழந்து அசைந்தன கிளைகள். நதி உமிழ்ந்த நீர்க்காற்றில் நீள்மூச்செறிந்து அசைந்தது நீலக்கடம்பு. பின்னர் இலையுதிர்க்கத் தொடங்கியது. “ஏன்?” என்று தலை தூக்கிக் கேட்டேன். “ஒவ்வொன்றாய் உதிர்க்காமல் நீந்திக்கடக்கலாகாது இல்லாதிருத்தலின் பெருங்கடலை” என்றது. தளிருதிர்க்கும் மரத்திலிருந்து பறவைக்கூட்டம் எழுந்துசென்றது. இளங்கிளையுதிர்த்து அசைந்தது. பின் தன்னை உதிர்த்து நீரைத் தழுவி சுழன்றது. வேருடன் எழுந்து நீர்வழியே ஒழுகி மறைந்தது.
எழுந்து நின்று கால்பதற கண்பதைக்க நோக்கினேன். நதிக்கரை மரங்களெல்லாம் ஒவ்வொன்றாய் நீரில் உதிரக்கண்டேன். மாலையில் வாடிய மலர்களைப்போல ஓசையின்றி. இதுவே விதி என்றும் இனியொன்றும் இல்லை என்றும். தடமேதும் எஞ்சாமல் தனிமையை உடலணிந்து. நீலக்கடம்புகள். நீர்மருதுகள். கிளை விரித்த கொன்றைகள். இலைதழைத்த வேங்கைகள். நீர்ப்பெருக்கில் மூங்கில் கூட்டங்கள் நாணல்புதர்கள்போல் செல்லக்கண்டேன். மேயும் பசுவின் நாக்கென பசுங்கரையை அள்ளிச்சென்றது யமுனை நீரோட்டம்.
நீரலைகளை நோக்கி நெஞ்சழிந்து நின்றிருந்தேன். யமுனை நீர்வற்றி குறைவதை பின்னர் கண்டேன். கலம் கொதிக்கும் நீரென கொப்பளித்து அலையடித்து விளிம்பு தாழ்ந்து விலகிச் சென்றது நதி. கருநீலம் வெளுத்து இளம்பச்சை ஆகியது. ஆற்றிடைக்குறைகள் ஆமை முதுகுகள் போல் எழுந்து வந்தது. நீரோட்டம் விரைவழிந்து சிற்றோடைத் தொகையாயிற்று, அரவுக்குழவிகள் போல் பின்னியும் பிரிந்தும் வெண்மணலில் நெளிந்தன. போரிடும் வாட்கள்போல் ஓடைகள் ஒளிர்ந்தன. பளிங்கு வெளி உடைந்து சில்லுகளாய் சிதறிற்று. பெருநதியின் மோனம் புலம்பும் சொற்களென சிதைந்தது .
விண் நோக்கி விரிந்த விழிகளென நீலக்குளங்களாகி நீண்டு கிடந்தது யமுனை. அதன் சேற்று அலையெழுந்த சதுப்பில் பாசிப்படலங்கள் படிந்தன. ஏட்டுப்பரப்பில் மூவிரல் எழுதி நடந்த பறவைகளும் சிறகடித்தெழுந்து மறைந்தன. வெண்கொக்குகள், விரிசிறை நாரைகள். நீர்க்காகங்கள், நீலமணி மீன்கொத்திகள். இறுதிப்பறவை எழுந்து சென்ற சிறகடிப்பை நெடுநேரம் தன்னில் நெடுமூச்செறிந்து வைத்திருந்தது நதி.
சேலையை முழங்கால் ஏற்றி சேற்று வெளியில் இறங்கி நடந்தேன். அறுநீர் சிறுகுளங்களில் வெள்ளிவிழிகள்போல் துள்ளியும் சுழன்றும் மீன்கள் தவிப்பதைக் கண்டேன். வானம் வானமென்று அவை அள்ளி விழுங்கி சிறகலைத்து விழித்தன. சருகுநெரியும் ஒலியுடன் நீரை உறிஞ்சியது மணல். படிகமணிமாலை போல் திசைமுனைவரை நீண்ட நீர்விழிகள் ஒவ்வொன்றாய் இமைமூடி மறைந்தன. என் காலடியின் சிறுகுட்டை சுருங்கி மையத்தில் சுழியாகி மறைய சேற்றுவெளியெங்கும் கொப்புளங்கள் உடையும் சிறுமூச்சுகளை கேட்டேன்.
துள்ளித்துள்ளி விழுந்து துடித்து விழித்து அசைவிழந்தன சிறுமீன்கள். சேற்றுப்பரப்பில் கால்வைத்து நடந்து சலித்தன நீர்ச்சறுக்கிகள். உலர்ந்த உதடுபிரிவதுபோல் மண்வெடிக்கும் மெல்லொலியைக் கேட்டேன். வலைவிழுந்து விரிந்ததுபோல் என்னைச்சூழ்ந்து வெடிப்புகளாகப் பரவியது யமுனைவெளி. கானல் அலையடித்து கண்களை மூடியது. அனல்காற்று எழுந்து ஆடைபறக்கச் செய்தது. காலடியில் வெண்மணல் புதைய ஓடி மூச்சிரைக்க நின்றேன். வாழ்விருந்த சுவடெல்லாம் வீண்கனவாய் மறைய விரிந்திருந்த பாழ்நிலத்தைக் கண்டேன்.
நிரம்பு நிரம்பு என என் உடல்கொண்ட வெறுமை தவித்தது. அணை அணை என அகம் நிறைந்த அனல் கொதித்தது. நீர் நீர் என்று என் நாவெழுந்து தவித்தது. விழி விரித்து திசை சுற்றி நோக்கினேன். சுடுமணல் கால் சோர ஓடி விழுந்தேன். வெட்டவெளியின் கீழ் திசைமூடி நின்றிருந்த வெறுமையைத்தான் கண்டேன். கண்ணருகே வந்து கானல் காட்டி நகைத்தன என் தெய்வங்கள். மன்றாடும் சொல்லெல்லாம் உதிர்ந்து உலரக் கண்டேன். என் இறுதிச்சொல்லும் உலர்ந்து மறைய எஞ்சியதே நான் என்று உணர்ந்தேன். அந்நுண்மையை நீ என்றும் நான் என்றும் இங்கென்றும் இனி என்றும் பகுத்தேன். அந்நான்கு திசையின்மேல் எழுந்து அனல்கக்கி நின்றிருந்தது என் வானக்கூரை.
புரோஷிதஃபர்த்ருகையை தொடர்கின்றன ஒலியற்ற கால்கொண்ட ஓநாய்கள். விழியொளிரும் செந்நாய்கள். பசித்த கழுதைப்புலிகள். அவள் குருதியின் சுவையை அவை அறியும். அவள் காலடியின் கண்ணீர் முகர்ந்து அவை நாத்துளிக்கும். அவள் நெஞ்சத்தசை கிழித்து கொதிக்கும் குருதியுண்டு இதயத்துடிப்புண்டு அவை எழுந்து நடமாடும். இருளுக்குள் அவற்றின் ஒலி எழுந்து வளைந்தாடும்.
கைவிடப்பட்டவள் செல்லும் வழியெல்லாம் நீரின்மைகள். அவள் கால் பட்ட நிலமெல்லாம் உயிரின்மைகள். அவள் குனிந்து நோக்கும் கிணறெல்லாம் பாதாள வாயில்கள். அங்கிருந்து விழியொளிர நோக்குகின்றன நிழல்நாகநெளிவுகள். பாலைப்பண்பாட யாழுக்கு நரம்பெதற்கு? முரசுக்கு தோலெதற்கு? அவை கொள்ளும் வெறுமையே நாதமாகும். என் மெலிந்த விரல்கள் தனஸ்ரீயை தொட்டெழுப்புகின்றன. என் உலர்ந்த உதடுகளில் காம்போதி சொட்டுகிறது. பாம்புச்சட்டையென மின்னி அசைகிறது. மணல்பாதத் தடம்போல மெல்லமெல்ல அழிகிறது.
தொலைதூரத்து மலைகள் கடுமைகொண்ட முகத்துடன் குனிந்துநோக்குகின்றன. அப்பால் உறுமி எழுகின்றது மணல்புயல். ஓங்கி அறைந்து ஓலமிட்டு வந்து சூழ்ந்து இரைந்து கடந்தோடுகிறது. சீறிச்சினந்தோடும் பிச்சியின் சுழல் மேலாடை. தன்மேல் எழுந்தவற்றை எல்லாம் உள்ளிழுக்க விழைகிறது பூமி.உள்ளும் புறமும் அனலாடும் நிலம். பாழ்நிலம். இங்கொரு நதி இருந்தது. அதில் கோடிமுகம்கொண்டு உயிர் வாழ்ந்தது. கணந்தோறும் நிழல்மாறியது. அதன் குளிரொளிமீது வானிறங்கியிருந்தது. பெரும்பாழ்நிலம். எரிவீழ்நிலம். தகிக்கும் வீண்நிலம். உயிர் வாழா ஒண்ணா கடுந்தரை. ஆண்டாண்டு எரிந்தாலும் அணையாத பெருஞ்சிதை.
ஓவியம்: ஷண்முகவேல்
உருமறைந்து நிழல் எஞ்சியது போலானாள் ராதை. அடுப்பேறிய கலம் போல அனல் கொண்டிருந்தது அவள் உடல். கழுத்தையும் நெற்றியையும் தொட்டுத்தொட்டு “ஓயாத வெம்மை. எம்மருந்தாலும் குளிராத கனல். என்னடி செய்வது?” என்றாள் மாமி. “ஊரிலுள்ள பச்சிலை ஒன்று மிச்சமில்லை. வைத்தியர்கள் இங்கே வருவதும் ஒழிந்தார். இனி நான் செய்வதற்கும் ஏதுமில்லை. இங்கு இவள் இறந்துவிட்டால் என் மகனை பழிசொல்வார். என் குலத்தை ஒதுக்கிவைப்பார். ஏதென்றறியேன், எப்பிழைதான் செய்துவிட்டேன்?”
“வெள்ளிக்குடத்தின் வளைவிலெழும் பாவைபோல் நீண்டு மெலிந்துவிட்டாள். வேனில் ஓடைபோல் வற்றி மறைவாளோ?” என்றனர் அண்டைவீட்டு ஆயர்ப்பெண்கள். அவள் கண்கள் உலர்ந்து ஒளியிழந்தன. இமைசுருங்கி கருநிழல் கொண்டன. வெந்த புண்போல வாய் வெடித்தது. ஆடை நில்லாது தோள் மெலிந்தது. கழுத்தில் மணிமாலை பாலம் போல் நின்றது. இடை துவண்டு உடல் நிற்காதாயிற்று. இளமுலைகள் காம்பவிந்து ஒடுங்கின. கைநரம்புகள் எழுந்தன.“அகம் நின்று எரியும் சிதை என்றாயிற்று இவள் உடல்” என்றான் ஆயர்குலப்பாணன். “அவள் உளமேறி அமர்ந்த தேவன் உலகு விட்டு வானெழப்போகிறான்.”
வாயில் படிமீது அமர்ந்து வெற்றுவிழி விரித்து வெட்டவெளி நோக்கி அமர்ந்திருந்தாள். இரவும் பகலும் கடந்துசெல்வதை அவள் அறியவில்லை. இறப்பும் இருப்பும் ஒன்றேயான ஒரு சரடு. அதன்மேல் தன் உடலால் இழைந்து சென்றது சிறு நத்தை. சுருண்டு கனக்கும் தன் இல்லத்தை சுமந்திருந்தது. அதனுள் அது வாழ்ந்திருந்த இடம் வெறுமையென நிறைந்திருந்தது. செவியும் நாவும் விழியும் நாசியுமான கொம்புகளை காற்றில் அசைத்து எல்லையின்மையை அளந்தது. அதன் பின்னால் நீண்டு ஒளிர்ந்தது நிறம்குழம்பிய நீர்க்கோடு.
வேனல் எழுந்த வெம்மை பரவி கருகி நின்றது காடு. கிளை பட்டு நின்றது பெருமரம். அதன்மேல் மொட்டு மொட்டு என்று கொத்திக்கொண்டிருந்தது பூந்தலை மரம்கொத்தி. கொத்திக் கொத்தி அது அமைப்பது நானிருக்கும் காலம். நத்தை ஊரும் வழியாக நீண்டுசெல்வதோ நீ அமைந்த காலம். ஊர்ந்து ஊர்ந்து நத்தை உணரும் ஒருகாலம். அசைந்து அசைந்து நத்தைக் கொம்புணரும் காலம். நத்தை உடலுணரும் காலம். நத்தை அகமுணரும் காலம். காலில்லா உடலுக்குள் எழுந்த பெரும்புரவி!
சாணிமெழுகாது மண்ணெழுந்த திண்ணையில் எறும்புகள் தேடிப்பரிதவித்தலைந்தன. ‘கண்டாயா? ’ ‘கேட்டாயா?’ என ஒன்றுடன் ஒன்று கேட்டுக்கொண்டன. சிலந்தி வலைநோக்கி சிறகடித்தன பூச்சிகள். மண்குழியில் ஒவ்வொன்றையும் தன்னைநோக்கிச் சரித்துக்குவித்து அழைத்து புதைந்து அமர்ந்திருந்தது குழியானை. காலெடுத்து வைத்து பின்னகர்ந்தது காலத்தை அறியும் விழியின்மை கொண்ட மதகளிறு.
மென்சுழியில் மணற்புயல்கள் சுழல்கின்றன. ஆயிரம்கோடி பிரம்மன்கள் கருக்கொள்ளும் கருஞ்சுழி. அணையாத காலத்தை அள்ளி அணிந்த குழி. சரியும் மணலில் ஒரு காலடியும் நிலைப்பதில்லை. ஒவ்வொரு கணமும் அது புதியது. அப்போது அதற்கென்றே வாய்திறந்தது.
இந்திரகோபமோ ஒரு குருதித்துளி. பிடுங்கி வீசப்பட்ட சின்னஞ்சிறு இதயம். தன்னைத் துறந்த தன்னுடலைத் தேடி சென்றுகொண்டிருக்கும் தாபம். எஞ்சிய துடிப்பே உயிரானது. எழமுடியாத தவிப்பே கால்களானது. வலிமிகுந்த வியப்பே விழிகளானது. செல்லாதே செல்லாதே என அவள் சிறுவிரலால் தள்ளிவிட்டாள். சுற்றிச்சுற்றி அது ஒருவழியையே தேடியது. தன் சுட்டுவிரலில் எடுத்து விழியருகே நோக்கினாள். குருதிக்குக் காலெழுந்ததா? எங்கோ சுழித்தோடும் உதிர நதியொன்றின் துளி வந்ததா? பச்சை ஊன் வாசம் பெருகி நிறைய வந்த தூதா?
அவள் விரல் விட்டு உதிர்ந்து நான்குகால்களில் இழைந்து மணல் சரியும் காலப்பெருஞ்சுழி நோக்கிச் சென்றது. உடல்நடுங்க உலர்ந்த உதடுகள் அதிர அவள் நோக்கி குனிந்திருந்தாள். இதுவே, இங்கே, இதற்காகவே என கால் தூக்கி வைத்தது. புதைத்து இழுத்த விசையை அறிந்ததும் அஞ்சிப் பதைத்து அடியிழுத்து மீள முயன்றது. வெளிநோக்கும் காலடி ஒவ்வொன்றும் உள்நோக்கி கொண்டுசெல்லும் முறைகண்டு ஒலியின்றி கூவி அதிர்ந்தது. சுழிமையம் காத்திருந்தது. அதன் அடியிருளில் கரிய உடல் எழுந்தது.
கரிய விஷக்கொடுக்கு.காலப்பெருங்கொடுக்கு. அசையாமல் பற்றி ஆவி உறிஞ்சும் கரிய பெருங்கால்கள். கரியவாய் ஒன்று கடித்து உண்ணும் குருதிச்சிறு நெஞ்சை கைகொண்டு நெஞ்சழுத்தி பார்த்திருந்தாள். விஷம் ஏறி துடிதுடித்து தளர்ந்து அமைந்தது இந்திரகோபம். குருதிக்குழவியை கவ்வி உண்டு மதம் கொண்டு மத்தகம் அசைத்து கொம்பு உலைத்தது துளிவேழம். மண்சரிந்து மூடி ஏதுமறியாத இனிய மென்மையாக எஞ்சியது சுழி. வெறும் வெளியின் ஒற்றை விழி.
அழுகை ஒலிகேட்டு மாமி ஓடிவந்து பார்த்தாள். “என்னடி? எதைக்கண்டாய்? ஏன் அழுகின்றாய்?” என்றாள். எழுந்தோடி முற்றத்தையும் அப்பால் எழுந்த வழிகளையும் பெருநீர் புரண்டோடும் யமுனையையும் பார்த்தாள். மாமரங்கள் கிளைசலிக்காது நிற்கக் கண்டாள். ஆநிரைகள் கண்களில் ஈரம் கண்டாள். குயில் ஒன்று கூவும் கீதத்தின் பொருளின்மை கேட்டாள். திரும்பி வந்து “ஏனடி? ஏன் இந்தத் துயரம்? சொல்லித் தொலையடி, என் இல்லம் எழுந்த இருளே” என்று அவள் தலையிலும் தோளிலும் அடித்தாள்.
முடிபிடித்து உலுக்கி சுவர்மீது மோதி “சொல்லடி. வாய் திறந்து சொல்லடி. எவனுக்காக காத்திருந்தாய்? யாரை எண்ணி கண்ணீர் விடுகின்றாய்? குலமங்கை நெஞ்சில் விஷம் சேர்த்த கயவன் எவன்?” என்று கூவினாள். அஞ்சிய நாகம்போல் உடல்சுருட்டி முகம் புதைத்துக் கிடந்தவளை உதைத்து இழுத்து இருளறைக்குள் தள்ளினாள். “இனி உன்னை வாசலில் கண்டேன் என்றால் இருகாலும் அடித்து உடைப்பேன். நீ பித்தியல்ல, பிழை நெஞ்சச் சிறுக்கி” என்றாள். இருளுக்குள் மெல்ல விசும்பி உடலதிர்ந்து கிடந்தாள் ராதை.
எனதென்று ஏதுமில்லேன். நானென்று எங்குமில்லேன். என்னுளே இருப்பதெல்லாம் உனதென்று அறிந்தபின்னே ஏதென்று எண்ணி எஞ்சுவேன்? என் உடலென்றும் உளமென்றும் கனவென்றும் நனவென்றும் மனமென்றும் நினைவென்றும் ஏதுமில்லை. பலிபீடத்தில் வழியும் பசுங்குருதி நான். அருகே சாய்ந்தமர்ந்த கொலைவாளின் கூர்நாக்கு நீ. தலையற்று துடித்தமைந்த பலியாட்டின் ஏனென்று பிரமித்துறைந்த வெறும்விழி நான். அதன் முன் இருளுக்குள் எழுந்தருளும் தேவனின் கல் நோக்கு நீ.
என் நெஞ்சம் குருதியுமிழும் ஒரு ரணம். அனல் விழுந்த வனம். நீரழிந்த சுனை. நெஞ்சம் துளைத்து மீண்ட வேலின் முனை. எனதென்று ஏதுமில்லை, என்னுளே எழுந்ததென்று நான் சொன்னதெல்லாம் வெறும் சொல்லே.
கண்ணா, கானகனே. பசுவின் கருகிழித்து கன்றை மென்றுண்டு குருதி வாய்வழிய உறுமும் கரும்புலி நீ. கற்சுவரை வாயிலென்று முட்டிமுட்டி தலையுடைத்து செத்துவிழும் கண்ணற்ற கடமான் நான். ஒருபோதும் அழியாத பழிச்சொல் நீ. ஒருவருமே கேளாத அபயக்குரல் நான். இன்றென் நகர்மூடிப்பெய்கிறது அனல்மழை. என் நதிபெருகி வருகிறது செந்தழல். என் கருவறைக்குள் எரிந்து நிற்கிறது வெந்தணல். என் நெஞ்சுருகி வழிகிறது எரியமுது.
பெருந்துயர்போல் இப்புவியில் ஓசையற்றது ஏதுமில்லை. மலை முடிப்பாறைபோல எவரும் காண்பது. கருவறைச் சிலைபோல் அனைவரையும் அறிவது.ஒருபொருளும் அற்ற முழுமை. ஒருவரும் கலைக்காத தனிமை. பெருந்துயர் போல் மானுடர்க்கு இனிதாவதொன்றும் இல்லை. அள்ள அள்ளப் பெருகும்.உண்ணும்தோறும் பசிக்கும். பெருந்துயர்போல் துணையாகும் தோழியும் வேறில்லை. ஒரு சொல் பேசாமல் உடனிருக்கும் கனிவு. விழியாக வெம்மையாக சூழ்ந்தமையும் தகவு. பெருந்துயர்கொண்ட உள்ளம்போல் அழகியதொன்றும் இல்லை. அது தன்னை அள்ளி தானுண்டு நிறையும் விரிவு.