நீலம் - 20

பகுதி ஏழு**: 1.** ஆடை நெகிழ்தல்

“முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் நாட்கள் அவை.”

உடல்பூத்த பின்னரும் ராதை உளம்பூக்கவில்லை என்றனர் ஆய்ச்சியர். அவள் கண்கள் உலகை அறியவில்லை. அவள் கால்கள் மண்ணை தொடவுமில்லை. நதிக்கரைக் காற்றைப்போல் மலையிழியும் ஓடையைப்போல் அவள் அறியா விசைகளால் ஆற்றுப்படுத்தப்பட்டாள். அவளுடன் மலர்ந்த தோழியரெல்லாம் கண்ணிமைகள் தாழ, செவ்விதழ்கள் பழுக்க, கைவிரல்கள் ஆடை சுழிக்க, நீள் கழுத்து மயிலெனச் சொடுக்க, பேரியாழ் கார்வையென குரல்தாழ்த்தி, இளநாணம் இடைகலந்து பேசத்தொடங்கினர். கள்ளம் கலந்து அவர்கள் பேசும் ஒலியை கன்னம் தொட்டாடும் காதணிகளே அறிந்தன. கண்ணை விட கண்முனை ஒளிகொள்ளும் பார்வைகளை நெற்றி வழிந்து நெளிந்தாடும் குழல்சுருள்களே அறிந்தன.

அவர்களுடன் சேர்ந்து பால்கறந்து கலம் மூடுகையிலும் புல்லறுத்து தொழுசேர்க்கையிலும் மோர்கடைந்து வெண்ணை திரட்டுகையிலும் நெய்யுருக்கி நிறைக்கையிலும் அவள் அவர்களுடன் இருக்கவில்லை. மலையோடையை பொன்வழிதலாக்கும் மாலைவெயில் அவள் மீது படவில்லை. “பிச்சி இன்னும் பூக்கவில்லை” என்றாள் லலிதை. “கன்னிப்பருவம் காணாமல் அன்னை என்றானாள். இனி மூதன்னையாகி முழுமைகொள்வாள்” என்றாள் சம்பகலதை. லலிதை சிரித்து அவள் செவியில் இதழ்சேர்த்து “ஒவ்வொரு மலருக்கும் ஒரு வண்டு உண்டென்பார். இவள் நெஞ்சக்கதவு நெகிழ்ப்பவன் எங்கோ கழல்கொண்டு தோள்கொண்டு கண்ணில் ஒளி எழுந்து சொல்லில் முழவு எழுந்து உருவெடுத்துக்கொண்டிருக்கிறான்” என்றாள்.

விசாகை ஏதோ சொல்ல சுசித்ரையும் இந்துலேகையும் மாதவியும் வெண்கலக்குடங்கள் படிகளில் உருண்டதுபோல சிரித்தனர். அன்று பிறந்த இளங்கன்றின் கண்களுடன் ராதை திரும்பி நோக்கி “ஏனடி?” என்றாள். “ஒன்றுமில்லை” என்று சொன்ன லலிதை “கன்றின் நெற்றியென முட்டத்தவிக்கின்றன கருவண்டு அமராத தாமரை மொட்டுகள் என்று ஒரு பாடலுண்டு தெரியுமா?” என்றாள். “இல்லையே” என்றள் ராதை. “அதைப்பாடும் நம் இளம்பாணன் மருதனை இனி யமுனைக்கரைக்கு யாழுடன் வந்தால் முழங்காலை முறித்து ஆற்றில் எறிவேன் என்றாள் நம் மூதன்னை முகாரை, அதையேனும் அறிவாயா?” என்றாள். “நானொன்றும் அறிந்ததே இல்லையடி” என்றாள் ராதை.

“நீ அறியா யமுனை ஒன்றில் நித்தமும் நீராடுகிறாய் தோழி” என்றாள் லலிதை. “என்னடி சொல்கிறீர்கள்? உங்கள் சொற்களெல்லாம் புதிர்களான மாயமென்ன?” என்றாள் ராதை. கோபியரெல்லாம் கூவிச்சிரித்த குரல் கேட்டு மூதன்னை முகாரை சினந்த முகம் நீட்டி “என்னடி அங்கே இத்தனை சிரிப்பு? இளம்பெண்கள் சிரிப்பதற்கோர் அளவுண்டு. பூ கனக்கும் மரக்கிளையில் காய் கனப்பதில்லை” என்றாள். அலைநுரை பனியானதுபோல சிரிப்பைத் தேக்கி அமைந்து அன்னை தலைமீண்டதும் உடைந்து ஒலிசிதறி குலுங்கினர் கன்னியர்.

“அன்னையரெல்லாம் அஞ்சும் அளவுக்கு கன்னியரில் உள்ள பிழைதான் ஏதடி?” என்று சசிகலை கேட்டாள். “இவள் போல் பிச்சி என்றாகி பேதை விழிகொண்டு திக்கின்றி காலமின்றி திகைத்தலைவோமென்று எண்ணுகிறார்களோ?” என்றாள் மஞ்சுகேசி. சிரிக்கும் தோழியின் தோள் தொட்டு ஈரமொழி கொண்டு “இவள் பித்தின் துளியொன்று என் மடியில் விழுமென்றால் என் இல்லம் என் அன்னை எந்தை என் தெய்வம் எல்லாம் இழந்து இவளுடனே செல்வேனடி” என்றாள் லலிதை. ஒருகணத்தில் சிரிப்பணைந்து கோபியர் ராதையை ஓரவிழியால் நோக்கி அவரவர் உள்நிறைந்த அழியாத் தனிமைக்குள் சென்று அமைந்தனர்.

திமிறும் காளைக்கன்றை இளந்திமில் சேர்த்து அணைப்பதுபோல ராதை கண்ணனைத் தழுவுதல் கண்டு ஒருநாள் லலிதை கேட்டாள் “கோகுலத்தின் இளமகன் வளர்ந்துவிட்டான். அதை உன் விழியறியவில்லை என்றாலும் கையறியவில்லையா?” ராதை விழிசுருக்கி “யார் வளர்ந்தது? கண்ணனா? நானறியேனடி” என்றாள். லலிதை சற்றே சினந்து, “பிச்சி, மலையில் மழை விழுந்து யமுனை பெருகுவதை நீர்நோக்கி அறியமுடியாது. கரையோர மரம் நோக்கி அறியவேண்டும். கண்ணனை நோக்காதே, உன்னை நோக்கு” என்றாள்.

“என்னுள் ஏதும் மாறவில்லையேடி. என் கண் நிறைத்து கை ததும்பும் குழவியென்றே அவன் தெரிகிறான்” என்று சொன்ன ராதையை நோக்கி குனிந்து லலிதை “எவரிடம் நீ விளையாடுகிறாய்? உலகுடனா, உலகாகி உன்னைச்சூழ்ந்த அவனிடமா, அவனைச்சூழ்ந்த உன்னிடமா, உன்னுள் உறையும் தனிமையிடமா?” என்றாள்.

ராதை காலைஒளிநிறைந்த நீலமலர் போல விழிவிரித்து “நீ சொல்லும் ஒரு சொல்லும் எனக்குப் பொருளாகவில்லையடி” என்றாள். லலிதை சீறி முகம் சிவக்க “பால்மணம் மாறி அவன் உடலில் புதுமழைபட்ட மண்மணம் எழுவதை நீ அறியவில்லையா? இளம்பிஞ்சு கைகால்கள் இறுகுவதை, பைதல் குறுமொழி மணியோசையாவதை கண்டதேயில்லையா? சொல், அவன் கண்ணிலெழும் சிரிப்பை, சொல்லில் எழும் குறும்பை நீ இன்னுமா அறியவில்லை? அகநாடகம் ஆடுவதை நிறுத்து. நீ அடியெடுத்துவைத்த நாள்முதலே உன்னை அறிந்தவள் நான்” என்றாள்.

“கண்ணன் கால்கொண்டதை அறிவேன். அவன் சொல்முழுத்து பொருள்கனப்பதை அறிவேன். ஆயினும் நானறிந்த கண்ணன், நானறிந்த கண்கள் என்றே என் அகம் சொல்கிறது தோழி” என்று சொன்னாள் ராதை. ”உன்னை நீ உதறாமல் ஒருசொல்லும் உணரமாட்டாய்” என்று சொல்லி எழுந்துசென்றாள் லலிதை.

கோபியரெல்லாம் கண்ணனை விட்டு உடலால் விலகி உள்ளத்தால் அணுகுவதை ராதை கண்டாள். நேர்விழிப்பார்வை விலக்கி நுனிவிழி நோக்கால் அவனைத் தொடர்ந்தனர் அவர்கள். அவன் சென்றவழி எல்லாம் அவர்கள் விழிசென்று அமைந்திருந்தது. அவன் விழிதிரும்பும்போது அவை சிறகுதாழ்த்தி மணிமூடி மயங்கின. அவன் நேர்கொண்டு பேசுகையில் விழிவிலக்கி தலைகவிழ்ந்துசென்றனர். பின் அவன் பெயர் சொல்லி தங்களுக்குள் நாணினர்,

அவர்களறியும் கண்ணன் யார்? என்னதான் ஆயிற்று அவனுக்கு? அவன் நீலமணிக்கால்கள் நிலத்தமைவதன் உறுதி. கங்கணம் அணிந்த கைகள் வளைதடி வீசுவதன் தேர்ச்சி. சொற்களில் ஏறும் மும்முனைக் கூர்மையின் ஒளி. கண்நோக்கி நிற்கையிலேயே அவன் கண்ணனல்ல என்றாகிப்போவானா என்ன? ராதை நூறுவிழிகளால் நோக்கி நின்றாள். நூறாயிரம் முறை எண்ணி எண்ணி அகம் சலித்தாள். என்னவன், என் கண்ணன், என் கை, என் கழல், என் உடல் என்றே சொல்லி அவளைச் சூழ்ந்திருந்தது எளியசிந்தை.

பிச்சியென பெயர்கொண்ட அவளை எண்ணி அன்னை உறும் பெருந்துயரை அவள் அறிந்தாள். “நீ கோகுலம் சென்றதற்கு நான் ஒன்றும் சொன்னதில்லை. விருந்தாவனம் செல்ல நான் ஒப்பேன். அந்த ஆயர்மைந்தன் இன்று ஆளாகி எழுந்துவிட்டான். ஊர்அலர்சூழ்ந்தால் உன்னை எவர்கொள்வார்?” என்றாள்.

“எவரென்னை கொள்ளவேண்டும்? என்னை கொள்ளும் விரிவுள்ள இல்லம்தான் ஏது?” என ராதை நகைத்து “ஒருதுளியும் வழியாமல் யமுனையில் அணைகட்ட எவரால் இயலும்? அன்னையே, நான் மண்ணுலகில் எவருக்கும் பெண்ணல்ல” என்றாள். “பின் நீ யார், விண்ணவர் கொள்ள வந்தாயா?” என்று அன்னை சீற “என் உள்ளம் விரிந்தமைய விண்ணிலும் வெளியில்லை அன்னையே” என்றுரைத்து ஆடை காற்றாட கூந்தல் எழுந்தாட வெளியே ஓடினாள்.

காற்றையும் மலையூற்றையும் சிறையிடுதலாகாது என்று கீர்த்திதை அறிந்திருந்தாள். ஆய்ச்சியர் நகையாடலை ஆயர்குலங்களில் பரவும் அவச்சொல்லை ஒவ்வொரு நாளும் கேட்டாள். “அக்கா, கன்னிப்பருவத்தின் கால்தரிக்காமை நாமறியாததா? இலவம் பஞ்சு போன்றோர் பிறர். இவளோ வெண்மேகப்பிசிர்” என்றாள் ராதையின் சிற்றன்னை கீர்த்திமதி.

“செய்வதற்கொன்றே உள்ளது மூத்தவளே, இவளுக்கொரு தாலிமலர் தேடியளிப்போம். கண்மறைத்துக் காற்றடிக்கும் காட்டுவெளியே கன்னிப்பருவம் என்பார். அங்கே கணவனின் கையொன்றே வழித்துணையாகும். நாமெல்லாம் அறிந்த கதைதானே அது?” என்றாள் அத்தை பானுமுத்திரை. “நாமிருந்த நிலையிலா இவளிருக்கிறாள்? நீங்களும் கண்கொண்டு காணத்தானே செய்கிறீர்கள்” என்று கீர்த்திதை கண்ணீர் வடித்தாள்.

மழைக்கால இருளகன்று பசுங்காட்டில் வெயில் பரவும் பருவத்தில் மூதன்னை முகாரையின் இல்லத்தில் ரிஷபானுவின் குடிப்பெண்கள் கூடியமர்ந்தனர். தந்தைவழி அன்னை சுகதையும் சிற்றன்னை கீர்த்திமதியும் அத்தை பானுமுத்திரையும் வந்தனர். மாமியர் மேனகையும் ஷஷ்தியும் கௌரியும் தாத்ரியும் தாதகியும் வந்தனர். மங்கல மஞ்சள் நீரில் கால்கழுவி புதுசாணிமெழுகிய உள்ளறையில் புல்பாய் விரித்து வட்டமிட்டு அமர்ந்துகொண்டனர்.

தாம்பூலத்தட்டை நடுவில் வைத்து முகாரை “நன்றுசூழ இன்று கூடியிருக்கிறோம் பெண்களே. நம்குடி மூதன்னையர் எல்லாம் காற்றுவெளியில் வந்து இச்சிறுகுடியைச் சூழ்வதாக” என்றாள். சுவர்மூலையில் அமர்ந்திருந்த கீர்த்திதை “அன்னையர் கருணையால்தான் என் பெண் வாழவேண்டும்” என்றாள். “என் மகளுக்கென்ன குறை? ஆயர்குடி நிறைந்த ஆயிரம் பெண்களிலே இவள்போல மங்கலமும் மனையழகும் கொண்ட இன்னொருத்தி எவள்?” என்றாள் பானுமுத்திரை.

ராதையின் தங்கை அனங்க மஞ்சரி அன்னையின் மடிதொட்டு மெல்லிய குரலில் “தமக்கைக்கா மணம் சூழ்கிறார்கள்?” என்றாள். “போடி, போய் உன் இளையோருடன் ஆடு. இங்கே உனக்கென்ன வேலை?” என்று அவளை வெளியே ஏவினாள் கீர்த்திமதி. அவள் எழுந்து முகம் நொடித்து வெளியே சென்றதும் குரல் தாழ்த்தி “நான் என்ன சொல்வேன் அன்னையீர், என் மகள் பிச்சி என்றல்லவா ஆயர்குடி எங்கும் பேச்சுள்ளது?” என்றாள் கீர்த்திதை. “சொன்னவள் வாயைக்கிழிக்காமல் இங்கு வந்து புலம்புகிறாய்? யாரவள் சொல்” என்று குரல் எழுப்பினாள் சிற்றன்னை கீர்த்திமதி

“பேசிப்பயனென்ன? எங்கும்தான் அப்பேச்சுள்ளது” என்று முகாரை சொன்னாள். “தழலை மறைக்க திரைகளால் ஆகாது பெண்களே. அவளை இன்று மணம் கொள்ள ஆயர்குடிகளில் எவரும் வரமாட்டார் என்பதே உண்மை.” அச்சொல்லின் எடையால் சிந்தை அழுந்தி பெண்களெல்லாம் அமைதிகொண்டனர். “நான் என்ன செய்வேன்? இச்சேதி ஏதும் அறியாமல் காடும் கன்றுமென வாழ்கிறார் அவள் தந்தை. கள்புளித்து நுரைப்பதுபோல் ஒவ்வொரு நாளும் இவள் பித்து எழுந்து பெருகுகிறது” என்றாள் கீர்த்திதை.

“காலை மலர்போல பொலிகிறாளே. காணும் கண்கூடவா இல்லை இக்குலத்தில்?” என்று பானுமுத்திரை சொன்னாள். “அவ்வெழில் கண்டு அல்லவா அஞ்சுகிறார்கள்? அவளுக்குள் ஆயிரம் கைகொண்ட அன்னைப்பெருந்தெய்வம் ஒன்று உறைகிறது என்று ஆய்ச்சி ஒருத்தி சொல்லக்கேட்டேன். அவள் அருகே சென்றால் முலைசுரப்பின் மணமெழுகிறது என்றாள் இன்னொருத்தி. அவள் மண்ணில் கால்படாமல் வளிதுழாவிச்செல்வதை கனவில் கண்டேன் என்றாள் அவள் தோழி. எத்தனை சொற்கள். அவள் செய்திபேசும் சிந்தையிலும் பித்து நிறைகிறது” என்று அன்னை கீர்த்திதை சொன்னாள்.

மெல்லமெல்ல சொல்லவிந்து பெண்டிர் அமைதிகொள்ள அன்னை முகாரை “நானொன்று சொல்கிறேன். சிந்தித்துச் சொல்லுங்கள் பெண்களே” என்றாள். அவளை நோக்கிய பெண்களின் விழி தவிர்த்து “அக்கரையின் ஆயர்குடியொன்றில் ஜடிலை என்னும் ஆய்ச்சி ஒருத்தி இருப்பதை குடிப்புகழ் பாடும் பாணன் சொல்லி அறிந்தேன். கைம்பெண் அவள். அவள் மகள் குடிலையும் கைம்பெண்ணே. அவள் மைந்தன் அபிமன்யூ தென் மலைச்சாரலில் ஆயிரம் பசுநிறைந்த கொட்டில் கொண்டவன் என்றான்.”

உடல் அசையும் ஒலிக்குப்பின் கீர்த்திதை “நம் பெண்ணை ஏற்க அவன் கொண்ட குறை என்ன?” என்றாள். அச்சொற்கள் கேட்டு அங்கிருந்த அன்னையர் விழிநடுங்கி அவளை நோக்கினர். தான் கேட்ட வினாவின் உட்பொருளை அப்போதே அறிந்த கீர்த்திதை விழிதாழ்த்திக்கொண்டாள். “அவன் தந்தை ஆயனல்ல, வேடன்” என்றாள் முகாரை. “மரபுள்ள ஆயர்குடியேதும் அவனுக்கு மகற்கொடை புரியாது. நம் குடிப்பெருமை அவன் அறிவான். நம் மகளையும் நன்கறிந்திருப்பான்.”

தெளிநீர் சுனையில் திளைத்துச் சுழலும் மீன்கள் போல ஓசையற்ற உரையாடலொன்று அங்கே நிகழ்ந்தது. மெல்ல உடலசைத்து “நாம் தேர ஏதுமில்லை அன்னையே. என் பிச்சிக்கும் மணமாலை விழுமென்றால் அதுவே போதும்” என்றாள் கீர்த்திமதி. “அவள் தந்தைக்குச் சொல்லத்தான் என்னிடம் சொல்லில்லை அன்னையே” என்று சொல்கையிலேயே கண்ணீர் உதிர்த்தாள்.

அன்னை சுகதை குரல்தீட்டி “அவனும் அறிந்திருப்பான்” என்றாள். கீர்த்திதை அஞ்சிய விழி திருப்பி நோக்க “தந்தைக்கும் விழியுண்டு பெண்ணே. காட்டில் இருந்தாலும் அவன் கண் ஒன்று இங்குதான் விழித்திருக்கும்“ என்றாள். கீர்த்திதை நீள் மூச்செறிந்து “ஆம், இப்போது அதை அறிகிறேன்” என்றாள். “மைந்தனை அன்னை அறிவாள். மகளை தந்தை அறிவார். அணுக்கத்தால் அறியாதவை எல்லாம் விலக்கத்தால் துலங்கிவரும்” என்றாள் சுகதை. விரல்பாவை சரடவிழ்ந்ததுபோல அங்கிருந்த அன்னையரெல்லாம் மெல்ல எளிதாகி மூச்செறிந்தனர். கைநீட்டி வெற்றிலை எடுத்தனர். “அவ்வண்ணமே ஆகுக” என்று கீர்த்திதை சொன்னாள்.

பின்பொருநாள் அன்னை ராதையிடம் “ஆயர் மகளே, உன்னை மணம் கொள்ளும் ஆயனும் அவன் அன்னையும் கன்றுடன் நீ காட்டில் நிற்கையில் உன்னைக் கண்டு உளம் உவந்துள்ளனர்” என்றாள். அச்சொல்லை அவள் அறிந்ததுபோலவே தோன்றவில்லை. மேலாடை எடுத்து தோளிலிட்டு அவள் வீடு விட்டு இறங்குகையில் அன்னை அவள் கையைப்பற்றி “இனி நீ இல்லம் நீங்கலாகாது. இன்னொரு மனைநிறைக்கும் மணமகள் நீ. முறைமீறிச் சென்றால் முதற்பழி உன் தந்தைக்கே” என்றாள். “நான் இங்கிருப்பதனால் இங்குளேன் என்றாவேனோ?” என்று சொல்லி நகைத்து அன்னை கை அகற்றி சிறகடித்தெழுபவள்போல் விலகிச்சென்றாள் ராதை.

மழைக்கலங்கல் தெளிந்து நீலநீர்ப்பெருக்காய் கரைதழுவி ஓடிய யமுனைக்கரைமேல் அவள் செல்லும்போது வேர்ப்படிகள் அமைந்த துறையிலிருந்து லலிதை அவளை அழைத்தாள். “வாடி, இன்று நீரெங்கும் நிறைந்துள்ளது நீர்மருத மலர்வாசம்.” கரையில் நின்று “இல்லை, நான் பிருந்தாவனம் செல்லும் நேரம்” என்றாள் ராதை. “அவளை பிடியுங்களடி” என்று சம்பகலதை கூவ ராதை விலகி மலர்பூத்த கொன்றைவனத்துக்குள் ஓடினாள். ஈர ஆடை விசும்பி ஒலிக்க கோபியர் அவளைத் துரத்தி வளைத்து பிடித்தனர். வளையல் நொறுங்க மேலாடை கழன்று விழ கைபற்றி இழுத்து வந்து நீரில் இட்டனர்.

“எங்களுடன் இளம்புனலாட தயங்குகிறாய். ஆயர்ச்சிறுவருடன் நாளெல்லாம் ஆடுகிறாய். நாணமில்லையாடி உனக்கு?” என்றாள் கஸ்தூரி. விசாகை அவள் மேல் நீரள்ளி வீசி “காளிந்தி உன்னைத் தழுவினால் கற்பிழப்பாயோ? ஆயர்குலச்சிறுவன் தோள்தழுவினால் மட்டும் உன் தெய்வங்கள் வந்து சாமரம் வீசுமோ?” என்றாள். சினந்து “என்ன சொல்லடி சொல்கிறாய்? உன் நாவென்ன நெளியும் நாகமா?” என்று ராதை அவள் கூந்தலை பிடித்திழுத்தாள்.

“ஏனடி சினம்? அவன் கன்றுமேய்க்க குழலூதி நின்றான். நீ கண்மயங்கி அங்கே கன்றாகி நின்றதை நாங்களும் கண்டோம்” என்றாள் சுசித்ரை. ராதை கண்ணீர் மல்கி “கீழ்ச்சொல் கேட்டு என் செவிகூசுகிறது. நான் செல்கிறேன்” என்று கரைநோக்கிச் செல்ல “அவளைப்பிடித்து நீரிலாழ்த்துங்களடி” என்று லலிதை கூவினாள். கோபியர் பாய்ந்து ராதையின் கைகளைப்பற்றி நீரில் இழுத்துச்சென்றனர். மூச்சில் நீர்கலக்க ராதை வாய் திறந்து கூவி அவர்களை அலை சிதற அறைந்தாள். அவள் கைகளையும் கால்களையும் அள்ளிப்பற்றினர் தோழியர்.

“அய்யோ, என் ஆடையை விடுங்களடி!” என்று ரங்கதேவி கூவி நீரில் மூழ்க அப்பால் லலிதை அவள் மார்பில் சுற்றியிருந்த ஆடையைத்தூக்கிக் காட்டி “இங்கிருக்கிறது! வேண்டுமென்றால் வந்து என் குலம் வாழ்த்தி தலைவணங்கி பெற்றுக்கொள்” என்றாள். ரங்கதேவி ராதையின் ஆடையைப் பற்றி இழுத்து அவளைச் சுழலவைத்து பொன்னுடல் மின்னி நீரில் மறைய தன் கையில் எடுத்தாள். சிரித்துக்கூவி அதை கையில் சுழற்றிக்கொண்டு “யமுனையை ஆடையாக்கினாள் ஆயர்குலமகள் ஒருத்தி. மண்ணுலகில் ஒருபெண் இதைவிடப்பெரிய ஆடையை அணியலாகுமோ?” என்றாள்.

ராதை நீரில் மூழ்கி விலகி கூந்தல் அலையிலாட கரியநிற தாமரை போல் தலை தூக்கி “ஆடையை அளித்துவிடு… வேண்டாமடி. எவரேனும் வந்தால் என்னாகும்!” என்றாள். “ஆயர் மைந்தனுடன் நீ கொண்ட உறவென்ன சொல்” என்று ரங்கதேவி கூவினாள். இந்துலேகையின் ஆடையை விசாகை பற்றிச் சுருட்டி யமுனை நீர்ப்பெருக்கில் எறிந்தாள். “அய்யோடி, என் ஆடை!” என்று லலிதை நீந்தி அதைப்பற்றச்சென்றாள். அது செம்மலர்போல் சுழித்து மறைய “அவ்வாறென்றால் எவருக்கும் இங்கே ஆடைவேண்டாம்” என்று கூவி அவள் துங்கவித்யையின் ஆடையைப் பற்றி இழுத்துச் சுருட்டி வீசினாள்.

“என்னடி ஆடலிது? ஆடை அகற்றி ஆடுவதா? நாமெல்லாம் ஆயர்குலப் பெண்கள் அல்லவா?” என்று மூத்தவளான லசிகை கூவினாள். அவள் முலைமேல் ஒட்டிய ஆடையை இருவர் பிடித்திழுத்து கொண்டுசெல்ல கைகளால் தோள்பொத்தி நீரில் அமிழ்ந்தாள். மாறிமாறி ஆடைகளைப்பற்றி நீரில் வீசி சிரித்தனர். பொன்மீன்கள் உடல் மிளிர அலையெழுப்பி துள்ளியாடின. ஒன்றுடன் ஒன்று உரசி நழுவிச் சென்றன மெல்லுடல்கள். சிறுமுலைக்குமிழ்கள். சிற்றிடை வளைவுகள். நீர்க்குமிழி நின்றிருக்கும் தோள்கள். அலைவழுக்கிச் செல்லும் தொடைகள். சிரிக்கும் கண்கள். கூவி விரிந்த இதழ்கள். நீர்த்துளி என ஒளிரும் பற்கள்.

உடலான நாள் முதல் ஒருநாளும் அறியாத விடுதலை. எதனால் கட்டுண்டோம் என்று அறிந்தன உடல்கள். எதையுதறி எழவேண்டும் என்று அறிந்தன நெஞ்சங்கள். எதுவாகித் திளைக்கவேண்டும் என்று அறிந்தன ஆழங்கள். அவர்களை அலைசூழ்ந்து தழுவிச் சுழித்துச் சென்றது காளிந்தி. சிறு மீன்கள் எழுந்து விழிமலைத்து அவர்கள் உடல் வழுக்கிச் சென்றன. பாசிப்பசும் மொட்டுகள் கூந்தல்களில் ஒட்டி அலையுடன் எழுந்தமைந்தன. நீர்மருத மலர்கள் அரக்குமணத்தை அவர்கள் உடலில் பூசிச்சென்றன.

பின்னர் அவர்கள் தங்கள் உலகை, காலத்தை உணர்ந்தபோது மாலைப்பொன்வெயில் நீர்மேல் விரிந்திருந்தது. “வீட்டில் தேடிச்சலித்திருப்பார்களடி. என் கன்றுகள் தானே தொழுமீண்டிருக்கும்” என்று ரங்கதேவி எழுந்தாள். தன் கைகளை விரித்து நோக்கி “அல்லிபோல வெளுத்துவிட்டதடி. நீலநரம்போடும் வழியெல்லாம் தெரிகிறது” என்றாள் லலிதை. மேலே நீலக்கடம்பின் நிழலில் கழற்றிவைத்த ஆடைக்குவை நோக்கிச் சென்ற ரங்கதேவி “அய்யோடி! என்ன இது? ஆடையேதும் இங்கில்லை” என்றாள்.

கோபியர் திகைத்து கரைநோக்கி வந்தனர். “என்னடி சொல்கிறாய்? ஆடைகள் எங்கு செல்லும்? காற்றில் சென்று புதரில் விழுந்திருக்கும்” என்றாள் லலிதை. “புதரிலும் இல்லையடி” என்றாள் ரங்கதேவி. “இங்கே குரங்குகளும் வருவதில்லை” என்று சம்பகலதை கூவினாள். ராதை எழுந்து “சருகுக்குள் பாரடி” என்றபோது கடம்பமரம் கனிந்ததுபோல் எழுந்த குழலிசையைக் கேட்டாள். அதைக்கேட்கும் தருணமெல்லாம் அவள் உடல் சிலிர்த்து அசைவிழக்கும். விழிதூக்கி கடம்பின் மலர்க்கிளையில் அமர்ந்து இசைபெருக்கும் கண்ணனை நோக்கி கதிரொளி வாங்கும் மலர்மரமென நின்றாள்.

“ஆயர்சிறுவன்! அவன் கையில் உள்ளதடி நம் ஆடைகளெல்லாம்!” என்று சம்பகலதை கூவினாள். மீன்கூட்டம் துள்ளி விழுவதுபோல உடல் மறைத்த பெண்கள் நீரில் பாய்ந்து விழுமொலி கேட்டாள் ராதை. “பிச்சி, என்னடி செய்கிறாய்? வா இங்கே” என அவள் கைபிடித்து இழுத்து நீரில் வீழ்த்தினாள் லலிதை. குழலிசை பொன்வண்ணப்பூங்கொடியென அசைந்தது. புகைச்சுருள் போல் அலைந்தது. தழல்நுனிபோல் பறந்தது. விழுந்து நாகமென நெளிந்தது. வளைந்து அருவியென பொழிந்தது. பெருகி யமுனையென சென்றது.

“கண்ணா, ஆடைகளை கொடுக்க மாட்டாயா? நீ கோகுலத்தில் நாங்கள் கைகளில் எடுத்த குழந்தை அல்லவா? எங்கள் கையால் அமுதுண்டவனல்லவா?” என்றாள் விசாகை. ரங்கதேவி “அவனிடம் என்னடி பேச்சு? மூழ்கி ஒரு கல்லெடுத்து வீசி அவனை வீழ்த்துங்கள்” எனக்கூவினாள். நீரை அள்ளி அவனை நோக்கி வீசிய சம்பகலதை தன் இளமுலை அசைவை தானே உணர்ந்து சிரித்து நீரில் மூழ்கிக்கொண்டாள். கல்லெடுத்து வீசப்போன ரங்கதேவி கைதூக்கியதுமே தானும் அமிழ்ந்தாள். சிரித்து “அதற்கு அவனை இரு கைகூப்பி வணங்குவதே சிறந்தது” என்றாள் லசிகை. “போடி, அவன் இன்னும் சிறு மைந்தன்” என்று காதம்பரி அவள் தலைமுடியை பிடித்திழுத்தாள்.

பொன்னொளியை தான் கரந்து நீலமென எழுந்துவந்த இளங்கதிரோன். அவன் வருகைக்காய் எழுந்து குளிர்நீர் துளிசூடி இதழ் சிலிர்த்து நின்றன தாமரைமொட்டுகள். நாண் விழிபுதைத்த இளையவை. சினந்து சிவந்தெழுந்த நோக்கு கொண்டவை. கரியவிழி கனிந்தவை. கை தொடாமல் அவற்றைத் தழுவி இதழ்படாமல் அவற்றை முத்தமிட்டு விளையாடியது குழலிசை. மொட்டுகளைக் கோத்து மாலையாக்கும் பொற்சரடு. நெளிந்து நெளிந்து நீரில் மகிழ்ந்தாடும் ஒளி. மலர்தேடி மலர்தேடி அமராமல் சலித்து மயங்கி வழிமறந்தன கருவண்டுகள். வண்டு ரீங்கரித்துச் சுழல குழைந்து தளர்ந்தன தேன்குவைகள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

“கண்ணா, கைதூக்கி உன்னை இறைஞ்சுகிறோம். ஆடைகளை அளிப்பாயா?” என்றாள் விசாகை. “என்னடி சொல்கிறாய்?” என்று சினந்தாள் ரங்கதேவி. “விரும்பாவிட்டால் நீ இங்கேயே நில்” என்று சொல்லி லலிதை “கரியோனே, உன் மலராடலுக்கு வசந்தமெழுந்த பெருங்காடும் போதாதா? என்னதான் எண்ணுகிறாய்?” என்று கூவினாள். “கைகூப்பி அடிபணியுங்கள். உங்கள் ஆடைகளை அடைவீர்” என்றான் கண்ணன். “ஆடையின்றி நோக்கி நீ அடைவதுதான் என்ன?” என்று சினந்து கேட்டாள் ரங்கதேவி. கண்களில் குறுநகை ஒளிர “கண்கள்” என்றான் கண்ணன்.

தலைமேலே கைகூப்பி கோபியர் நீர்விட்டெழுந்துவர கூவிநகைத்து ஆடையள்ளி வீசி மறுபுறம் குதித்தோடி மறைந்தான். அவன் சென்றவழியில் அசைந்த புதரிலைகள் நாவசைத்துச் சொன்ன ஒருசொல்லை அவள் கேட்டாள். “நெறியிலாதான். நாணிலாதான். குழலிசைத்தால் எல்லாமே கைவருமென்று எண்ணும் அறிவிலாதான்” என்று ரங்கதேவி சினந்து சொன்னாள். “அவன் அன்னையிடம் சொல்லி அறிவுறுத்தவேண்டும்” என்றாள். “எதைச்சொல்வாய்? அவன் கண்களையா, குழலையா, இல்லை அவன் அறிந்த நம் ஆடையற்ற கண்களையா?” என்றாள் லலிதை. கோபியர் மணிக்கூட்டமென நகைத்து ஆடை அணியலாயினர்.

இருள் பரவும் நதிக்கரை மேட்டில் ஆடையால் உடல்மூடி தோள்குறுகி நடந்தாள் ராதை. கால்பின்ன தன் இல்லம்புகுந்து “அன்னையே!” என்றழைத்தாள். “என்னடி இந்நடுக்கம்? நெடுநேரம் நீராடினாயா?” என்றாள் அன்னை. ராதை அவள் விழிநோக்காது “நீ பார்த்த ஆய்மனையில் மணம்கொள்ள சித்தமானேன். செய்தி சொல்லி அனுப்பு” என்று சொல்லி நிலத்தமர்ந்து முழங்காலில் முகம் வைத்து நத்தையென இறுகிக்கொண்டாள்.

வெண்முரசு விவாதங்கள்