நீலம் - 17
பகுதி ஆறு**: 1.** நீர்மரம் பூத்தல்
நீரெல்லாம் கங்கை என்று சொல்லி என்னை வளர்த்தாள் என் அன்னை. நான் கண்ட முதல் கங்கை முத்தமிடக் குனிந்த என் அன்னையின் நெற்றியில் சரிந்த ஈரக்கூந்தலில் நின்று ஒளிர்ந்து என் முகத்திலுதிர்ந்த தனிமுத்து. அதன்பின் எத்தனை கங்கைகள். கூரை முனை சொட்டி, இலை நுனி சொட்டி, முற்றத்தில் நெளிந்தோடி, இணைந்து சிற்றருவிகளாகித் துள்ளி, நுரையெழுந்து நகைத்துச்செல்பவை. யமுனையின் தங்கைகள். கரியநீர் காளிந்தி. அவள் சென்றணையும் கரைதெரியா கங்கை அலைப்பெருக்கு.
அக்கா, நான் கங்கைப் பெருக்கை ஒருமுறையே கண்டிருக்கிறேன். என் தந்தையுடன் காசிக்குச் சென்றிருக்கையில். அஞ்சி கண்பொத்தி படகுக்குள் ஒடுங்கிக்கொண்டேன். என்னை இழுத்துத் தூக்கி “பாரடி, அதோ கங்கை! இனியொருபோதும் நீ காணமுடியாமலாகலாம் அன்னையை” என்றாள் என் மூதன்னை. கண்களை மூடிக்கொண்டு “வேண்டாம் வேண்டாம்” என்று அழுதேன். நான் அதை பார்க்கவேயில்லை. பெருநாவாய் விலாக்களில் அறையும் அதன் நீர்க்கரங்களைக் கேட்டேன். கரைகளை உண்டு நகர்த்துறைகளைத் தின்று அதன் நாக்குகள் எழுப்பும் சொல்லைக் கேட்டேன். அஞ்சி உடல்நடுங்கிக்கொண்டே இருந்தேன்.
என் வீட்டுமுற்றத்துச் சிற்றருவி சென்றுசேரும் யமுனை என்றும் எனக்குரிய கங்கை. என்னைப்போன்றே அவளுமொரு ஆயர்க்குலமகள். மண்மணமும் புதுச்சாணிமணமும் புளித்தபால் மணமும் கொண்டவள். என் தோளணைத்து செவியில் பேசும் மென்குரல் தோழி. அவளறியாத ஏதும் என்னகத்தே இல்லை. அக்கா, நீரென்றால் பூமியின் உள்ளம் என்றனர் நூலோர். எண்ணங்களெனப் பிரிந்தும் உணர்வுகளெனக் குவிந்தும் கனவுகளென ஒளிர்ந்தும் காமமெனக் கரந்தும் மண்ணை நிறைத்தோடுவது நீர். இப்புவியோ நீர்மையெனும் கருணை காலாக கையாக சிறகாக முளைத்தெழுந்த பசுமை. தளிராக எழுந்த அனல். மலராக விரிந்த வான். அதில் காற்றாக எழுந்த மணம். தேனாக ஊறிய தெய்வம். யமுனையிடம் நான் சொல்லாத ஏதுமில்லை அக்கா. யமுனை சொல்லி நானறிந்ததே என் அகம் நிறைந்த அனைத்தும்.
கோகுலத்து இல்லத்தின் சிற்றில் பின் திண்ணையில் தயிர்கடையும் மத்தின் புறாவொலியுடன் இணைந்தெழுந்த இன்குரலில் யசோதை சொன்னாள். அருகே வெண்ணை வழித்தெடுத்த கலத்தைக் கையிலேந்தி ரோகிணி கேட்டிருந்தாள். அப்பால் வெண்ணைக்கிண்ணியுடன் இடையில் கண்ணனுடன் குயில் குரல்காட்டி ஊட்டிக்கொண்டிருந்தாள் ராதை. அவளருகே கற்கள் பொறுக்கி நீரோடையில் எறிந்துகொண்டிருந்த பலராமன் “வெண்ணை ! வெண்ணை!” என்றான். வெண்ணையை விழுங்கிவிட்டு “கண்ணன்! கண்ணன்!” என்றான் கரியோன். “மதுவனத்திலும் மூத்தோன் எக்கணமும் இளையோனுடன்தான் இருந்தான். அவன் சொல்லில் எழுந்த கண்ணனை எப்போதும் நான் கண்டுகொண்டிருந்தேன்” என்று ரோகிணி சொன்னாள். “ஆம், இவனை எண்ணாமல் இமைப்பொழுதும் இருக்கமாட்டோம். இவன் கதைதான் இது” என்றாள் யசோதை.
அக்கா, கன்னிச்சிறுவயதில் நம் கொல்லை நிறைத்தோடும் நதிப்பெருக்கில் நீராடி எழுந்து வந்து கரைநின்ற இணைமருதங்கள் நடுவே சென்று ஆடைமாற்றினேன். விழிகளின் காமத்தை என் முலைமொட்டுக்காம்புகள் கண்டறியத் தொடங்கும் பருவம். உடல்சிலிர்த்து அஞ்சி உடையள்ளி முலைமறைத்து விழியோட்டி நோக்கினேன். எங்கும் விழியேதும் இல்லை என்றறிந்து மேலும் அஞ்சினேன். குவளை மலரிதழோ கூழாங்கல் ஒளியோ விழியாகி எனைத் தொட்டது என்று எண்ணி நோக்கி நோக்கி மயங்கினேன். ஆடையால் உடல்மூடி தோள்குறுக்கி கால்பின்ன ஓடிச்சென்று மோர்கடைந்த அன்னையின் மடிசேர்ந்து அமர்ந்துகொண்டேன். “என்னடி, ஏனடி?” என்றாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டியபின் விழிபொங்கி வாய்விம்மி அழத்தொடங்கினேன்.
“கன்னியரைக் காண கந்தர்வர் வருவதுண்டு. மலராக விழிகொண்டு தெய்வங்கள் விரிவதுண்டு. படமெடுத்த நாகங்கள் பாதாளமூர்த்திகள் கண்பெற்று எழுவதுண்டு” என்றாள் அன்னை. உப்பும் மிளகும் காரக்கற்பொடியும் கலந்து அடுப்பிலிட்டு நெட்டிமுறித்து, நெஞ்சு கைசேர்த்து, துப்பி கனலில் இட்டு கண்ணேறு கழித்தாள். இலைத்தாலச்சுருளில் காப்பெழுதி இடைசுற்றிக் கட்டினாள். “நடுவேளைப் பொழுதுகளில் நடந்து செல்லாதே. தென்றல் தாலாட்டும் தண்ணிழல்கீழ் தனித்திருந்து துயிலாதே” என்றனர் மூதன்னையர். ஆனால் அந்த காணாநோக்கையே என் கன்னிமனம் எண்ணிக்கொண்டிருந்தது. யமுனைப்பெருக்கருகே யார் வந்து அமர்ந்திருந்தது? கன்னியுடல் கவின்காண கண்கொண்ட தேவன் எவன்? ஒருபொழுதும் ஓயாமல் என் நெஞ்சில் அவ்வெண்ணமே குளிர்கொண்டோடிக் கொண்டிருந்தது.
அந்த இணைமருது மரங்களருகே மட்டுமே அவ்வுணர்வை நான் அடைந்தேன். ஒவ்வொருமுறை அவற்றின் அருகே செல்கையிலும் என் உடலெங்கும் ஊசிநுனிகள் வருடுவதை உணர்ந்தேன். கண்பட்டால் நோகும் கன்னியுடல். கண்படா நேரத்தில் காட்சிக்காய் தவித்திருக்கும். பின்னர் உறுதிகொண்டேன், அந்த நீர்மருத மரங்களே என்னை நோக்கும் விழிகளென. அவ்விழிப்பார்வைக்காய் அங்குசென்று அமர்ந்திருப்பேன். பெருந்தடியில் எழுந்த பொந்துகள் விழியாகி ஒளிகொள்ளும். வெள்ளி மின்னும் வேர்ப்புடைப்புகள் வெம்மைகொண்ட மடியாகும். தடித்து புடைத்தெழுந்த அடிமரமே இடையாகும். தழையோசை கொண்டு என்னைத் தாலாட்டி துயிலளித்து கனவுகளில் எழுந்து காட்சியளித்தனர் இருவர்.
பொன்னுடல் கொண்டோன் ஒருவன். வெள்ளியுடல் கொண்டோன் இன்னொருவன். காமம் மின்னும் காளையின் விழிகள் ஒருவனுக்கு. அகமறிந்த தோழியின் ஆழ்குரல் இன்னொருவனுக்கு. ஒருவன் படைக்குதிரை, பிறிதொருவன் அன்னச்சேவல். ஒருவன் சுழல்காற்று. மற்றவனோ இளந்தென்றல். அவன் சொல்லற்ற தசைவீரம். இவனென்றால் கவிநனைந்த மொழிப்பெருக்கு. ஒருவன் தன்னந்தனியன், என்னைமட்டும் அறிந்தவன். இன்னொருவன் எங்கும் நிறைந்தவன், எல்லாமறிந்தவன். இருவரை காமுற்று இனிய கனவுகளில் அங்கே கிடப்பேன். என் அன்னை தேடிவந்து என்னை கண்டடைந்து வசைபாடி அடித்து இழுத்துச்செல்வாள். இணைமருதின் விழியொழிய எத்தனையோ பூசைசெய்தாள். என் உடலெங்கும் தாலிகளும் காப்புகளும் நிறைந்தன. என்னை அழைக்கும் இனிய மென்குரலை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பேன்.
கைநோக்கி குறிசொல்லும் களிந்தமலைக் குறத்தி ஒருநாள் கோகுலத்துக்கு வந்தாள். தானியமும் நெய்யும் கொடுத்து என் அன்னை அவளை திண்ணையில் அமர்த்தி என் கைக்குறி தேர்ந்து கனவுகளை அளக்கச் சொன்னாள். என் ஆழத்தை நானே அஞ்சி “வேண்டாம்! வேண்டாம்!” என்று இருளறைக்குள் ஒடுங்கி முட்டுகளில் முகம் புதைத்தேன். அன்னை என் தோள் பற்றி “வாடி, என்ன அச்சம்?” என்றாள். “அவளை அங்கே வைத்திருப்பவன் எவனென்று நானறிவேன்” என்றாள் குறத்தி. சினந்தெழுந்து வெளிவந்து கை நீட்டி “சொல், யாரென்று” என்றேன். வெற்றிலைச் சிவப்பூறும் சிரிப்பு எழுந்த வாய்குவித்து “கையில் உள்ளது கரந்தமைந்த அனைத்தும் கன்னியிளங்குயிலே. சொல்லில் எழாதவை குறத்தி சிரிப்பில் முளைக்கும் சித்திரப்பூமயிலே” என்றாள்.
மலைக்குறத்தி சொன்னகதை கேட்டு அன்னை அஞ்சி நெஞ்சு பொத்திக்கொண்டாள். கங்கை நீர்ப்பெருக்கின் கதை சொன்னாள் குறத்தி. “பெருகுவதே கங்கை. ஊறுவதும் சொட்டுவதும் ஒழுகுவதும் துள்ளுவதும் ஓசையெழப் பொங்குவதும் எல்லாம் பெருகுவதற்கே. பெருகுவதோ பெருநீர் கடல்சேர்வதற்கே. கங்கையை ஈசன் கரந்த மனமென்றார் முனிவர். அவன் காமப்பெருக்கென்றார் கவிஞர். அலையடிக்கும் நீலமலர்களால் விண்நோக்கி சிரிப்பவள் கங்கை. சிறகசைக்கும் மீன்களே கண்களாக தன்னைத்தான் நோக்குபவள் கங்கை.”
கங்கையில் காமம் ஆடவராத தேவரில்லை, தெய்வமில்லை என்றாள் கருங்குறத்தி. கருவூலமாளும் குற்றுடல் குபேரனின் மைந்தர் இருவர் ஐந்து அப்சரக் கன்னியருடன் அங்கே நீர்விளையாடவந்தனர். ஒருவன் நளகூபரன். இன்னொருவன் மணிகிரீவன். தாமரைஎழிலன் வெண்ணிறமானவன். மணிக்கழுத்தன் கருநிறமானவன். வெண்ணிறக்காமம் எரிந்தெரிந்தழிவது. கருநிறக்காமம் உறைந்துருகுவது. இன்னும் இன்னுமென எழுவது வெண்மை. என்னுள் என்னுள் என ஆழ்வது கருமை. அன்னையே, கன்னியே, இருமுகமும் கொண்ட காமம் ஒருபோதும் ஒடுங்குவதில்லை. இருதட்டு கொண்ட துலாவில் முள் நிலைப்பதில்லை. ஒன்றை உண்டு ஒன்று பெருகும் தீயும் நெய்யும் உண்டெனில் அங்கே வெம்மை அணையுமா என்ன? அன்னமயி, பிராணமயி, மனோமயி, ஞானமயி, ஆனந்தி என்னும் ஐந்து கன்னியரும் அவர்களுக்கு அள்ளி அள்ளி அமுதூட்டினர். கங்கையும் நாணி கண்புதைத்து சுழித்தோடினாள்.
காலம் கங்கைக்குமேல் பெருகிப்பெருகி வழிந்தோடிக்கொண்டிருக்க அவர்கள் முடிவிலாது நீர்விளையாடிக்கொண்டிருந்தனர். பிரேமையை பேராற்றலாகக் கொண்டவர் இசையால் இசைவடைந்தவர் நாரத முனிவர் விண்வழிச்செல்லும் ஒளிமுகிலொன்றில் ஏறி அவ்வழி சென்றார். அவரைக் கண்டு அஞ்சிய ஐந்து கன்னியரும் ஆடைகளை அள்ளிப்பற்றி ஐந்து தாமரைகளாக நீர்மேல் எழுந்து வெட்கி இதழ்குவித்து நீரில் முகம் நோக்கி நின்றனர். விண்நோக்கி எழும் விழியற்றிருந்த ஒளியனும் இருளனும் அவர்களை அள்ளிப்பற்றி முத்தமிட்டு இதழ்மலரச்செய்ய முயன்றனர். சினம்கொண்ட முனிவர் மேலிருந்து தீச்சொல் விடுத்தார். “நீர்மையெல்லாம் நீள்வது நெடுங்கடல் சேர்வதற்கென்று அறியாத மூடர்களே! நீங்கள் காலத்தவம் செய்து கடன் கழிப்பீர்” என்றார்.
கரியோனும் வெண்மையோனும் இரு நீர்மருதுகளாக யமுனைக் கரையருகே முளைத்தெழுந்தனர். வேர் கிளை நீட்டி நீரிலாடி அடிமரம் கனத்தெழுந்து விண்ணில் கிளையாடி நின்றனர். உடலெங்கும் விழியெழுந்து கிளையெங்கும் நாவெழுந்து தவம் செய்தனர். அவர்களின் அழியாக்காமம் சாறாக ஊறி மதநீர் கொண்ட மலராகச் செறிந்து காற்றில் மணத்து நீரில் உதிர்ந்து பரவியது. அவர்கள் தங்கள் காமம் முறிந்து காதல் விரியும் கணமொன்றுக்காகக் காத்திருக்கின்றனர். கன்னியரைக் காமுறும் மரங்கள் அவை. அவர்களின் கண்பட்ட கன்னி உன்மகள் என்றாள் குறத்தி.
ஓவியம்: ஷண்முகவேல்
அக்கா, அன்றுசென்று மறுநாளே எனக்கு ஆயர்குடியில் மணமகன் தேர்ந்தனர். என்னை மணந்து என் குடிவந்தார் இவன் தந்தை நந்தகோபர். அதன்பின் நீர்மருதின் அடியில் ஒருகணமும் நான் சென்றதில்லை. ஆனால் முன்காலை எழுந்து முற்றத்தை நோக்குகையில் நீர்மருதின் இலைகள் நிறைந்திருக்கக் காண்பேன். கண்மூடி பல்லிறுக்கி என் துடைப்பத்தால் கூட்டி ஒதுக்கி குப்பைக்குள் தள்ளுவேன். நீர்மருது பூக்கும் இளவசந்த காலத்தில் மதம் மணக்கும் மலர்க்குவைகள் என் குடிலின் கூரை நிறைத்து காற்றில் உதிரும். சாளரவிரிசலில் புகுந்து வந்து இருள்நிறைந்த இரவுகளை நிறைக்கும். நீர்மருதை நினையாமல் நான் ஒருநாளும் வாழ்ந்ததில்லை.
அக்கா, நேற்று முன் தினம் நிகழ்ந்ததென்ன என்றறிய மாட்டீர். கன்னங்கரியவனை என் கையணைத்து முலைசேர்த்து சிறுமொட்டு வாயில் கருமொட்டு வைத்து அமுதூட்டிக் கொண்டிருந்தேன். “எத்தனைநாள் முலைகுடிப்பாய்? கால்முளைத்து கைமுளைத்து சொல்முளைத்து எழுந்துவிட்டாய். கண்ணா, இனி அன்னைப்பாலுண்டால் உன்னை யார் ஆணென்பார்?” என்று சிறுதொடையில் அடித்து சிரித்துக்கொண்டேன். வலக்கையால் இவனை வரிந்தணைத்து இடக்கையால் மத்துச்சரடை இழுத்துக்கொண்டிருந்தேன். முன்வசந்தம் அறிந்த முமுட்சுக்கள் நாதக்குரல் கொண்டு வேதச்சொல் கூவுவதைக் கேட்டேன். நீர்மருதின் மதநெடியை ஒருகணம் என் நெஞ்சில் அறிந்தேன்.
அக்கா, என்னென்பேன்! எப்படி அதைச் சொல்வேன்? அக்கணம் இவன் தன் இடக்காலை நீட்டி என் மோர்க்கலத்தை உதைத்தான். மோர்க்கலம் உடையக்கண்டு மனம்குமுறா ஆய்ச்சி எவருண்டு? வெண்ணை திரளாத வெறும்தயிர் சிதறிப்பரந்து அங்கெல்லாம் நிறைந்தது. நெஞ்சில் எழுந்த சினத்தை நானுணரும் முன்னரே அள்ளி அவனை அங்கே இறக்கி விட்டேன். கண்ணில் வெம்மையெழ “கண்ணா, பாலைச் சிந்துபவன் ஆயனல்ல. ஆயர்குடிப்பிறந்தும் ஆகாதது செய்தாய்” என்று கூவி அவனை என்ன செய்வதென்று தெரியாமல் அங்கெல்லாம் நோக்கி அலைந்தேன். கன்றைக் கட்டும் கயிறைக் கண்டு அதை எடுத்துவந்தபோது சிற்றுரல்மேல் ஏறியமர்ந்து பூனைக்கு வெண்ணையூட்டும் சிறுவனைக் கண்டேன். “செய்வதெல்லாம் செய்துவிட்டு சிறிதும் நாணிலாது விளையாடுகிறாயா?” என்று கூவி அவனை நோக்கி ஓடினேன்.
சிரித்து கையசைத்து சுற்றி விரைந்தோடும் அவனை சுழன்றுசென்று பற்ற இயலாது மூச்சிளைத்தேன். சின்னஞ்சிறுகாலில் கன்றும் இளமானும் குடிகொள்வதை அறிந்தேன். இளைத்து இடையில் கைசேர்த்து “கண்ணா நில்… நில்” என்று சொன்னேன். “போ, நீ நனைந்திருக்கிறாய்” என்றான். “என்ன சொல்கிறாய்?” என்று திகைத்தேன். “நீ நீரோடை!” என்றான். அறிந்து சொல்கிறானா அறியாப் பிழைமொழியா? என்னவென்றறியாமல் விழிதிகைத்து அங்கே நின்றேன். “வா அருகே, அமுதூட்டுவேன்” என்றேன். “பொய்யுரைக்கிறாய் நீ” என்றான். “பொய்யல்ல கருவண்ணா, உனக்கு இதோ பார் ஊறுகிறது என் நெஞ்சு” என்றேன். ஐயம் கொண்டு தயங்கி அருகே வந்து “நான் நல்ல குழந்தை” என்றான். அள்ளி அவனை அப்படியே கைப்பிடித்து கன்றுக் கயிற்றால் கையிரண்டும் சேர்த்துக் கட்டினேன்.
“கோகுலமெங்கும் கோபியர் உன்னைத்தான் சொல்கிறார்கள். வெண்ணை திருடியுண்டு கலமுடைக்கிறாய். கன்றின் பாலை கவர்ந்துண்கிறாய். கன்னியர் குழலை பற்றி இழுக்கிறாய். அன்னையர் ஆடையை அள்ளிக் கொள்கிறாய். உன்னை அஞ்சி ஆயர்மைந்தர் முற்றத்துக்கே வருவதில்லை” என்றேன். “இன்றெல்லாம் இங்கே இரு. ஒருநாள் உன் கால்கள் ஓய்ந்தால் உலகுநடப்பதொன்றும் குறைந்துவிடாது” என்று அவனை இழுத்து அவ்வுரலில் கட்டிவைத்தேன். “கண்ணன் நல்ல குழந்தை” என்றான். “நல்ல குழந்தையென்றால் இங்கேயே இன்றிரு” என்றேன். “பூனைக்கு வெண்ணை” என எஞ்சிய வெண்ணையை சுட்டிக்காட்டினான். “நான் அதை பார்த்துக்கொள்கிறேன்” என்றேன். “கண்ணன் அங்கே போவேன்” என்றான். “உன்னால் முடிந்ததைச் செய்” என்று உள்ளே சென்றேன்.
உரலில் கட்டியிருக்க எங்குசெல்வான் என்று எண்ணி உலையேற்றி ஊண்சமைக்க முற்பட்டேன். அக்கா, வானிடிந்து வீழ்வதுபோல் பேரோசை எழக்கேட்டு ஓடி வெளியே சென்றேன். உரலில் இல்லை என் கண்ணன் எனக்கண்டு “கண்ணா! எங்கு சென்றாய்? கரியவனே? என்ன செய்தாய்?” என்று கூவி கைபதைக்க கால் தளர ஓடினேன். காளிந்தி கரையருகே இரு மருதும் குடைசாய்ந்து விழுந்திருக்கக் கண்டேன். அவற்றில் கூடணைந்த பறவைகள் கூடி எழுந்து வான்சுழன்று குரலெழுப்பக் கேட்டேன். வேர்பிளந்து எழுந்த செம்மண் குழியும் யமுனை நீர்பிளந்து அலைத்த கிளைக்கொத்தும் என தடி பிளந்து கிடந்த மருதமரங்களைக் கண்டு கண்மயங்கி தலைசுழன்று மண்ணில் விழுந்தேன்.
ஆயர்குலமே ஆர்ப்பரித்து ஓடிவந்து “கண்ணனெங்கே? கண்ணனைப்பார்” என்று கூவுவதைக் கேட்டு இறந்தேன். “இங்கிருக்கிறான் இளவன். அவன் கருமேனியில் ஒரு மண்கூடப் படவில்லை” என்றொரு குரல் கேட்டு மீண்டும் பிறந்துவந்தேன். ஆயர் இருவர் கண்ணனைத் தூக்கிக் கொண்டுவந்து என் கையருகே நிறுத்தினர். “மானுடனா இவன்? மண்வந்த தேவனா, மாயப் பெருநாகம்தானா?” என்றார் அண்டைவீட்டு ஆயர். “இவன் இழுத்துச்சென்ற உரல்பட்டு விழுந்திருக்கின்றன இரட்டைப்பெருமரங்கள். எங்குசென்றுரைப்பது இதை?” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. மழையூறி வேர்நைந்திருக்குமோ, முதுமைகொண்டு உள்ளீடற்றிருக்குமோ, காளிந்தி நீர் கொண்டு கரையுடைந்திருக்குமோ என்றெல்லாம் பேச்சுக்கள் சூழ இவன் கண்களை நோக்கி “கண்ணா நீ ஏழுலகும் அறிபவனா? அன்னைமனம் அறியும் ஆற்றலுள்ள ஒருமகனா?” என்று கேட்டேன். விழிமலர்ந்து சிரித்து கைதூக்கி “அம்மரம் இம்மரம், அம்மரம் இம்மரம்” என்றான்.
அங்கே விழுந்துகிடந்த ஒற்றை மருதமலர் எடுத்து முகர்ந்தேன். வெற்றுமலராக என் விரல்கொண்டிருந்தது. வீசிவிட்டு கண்ணனைக் கையில் எடுத்து நெஞ்சணைத்து நின்று அம்மருதின் ஓங்கிய வெண்தடிகளை நோக்கினேன். வேர்கொண்டு உண்டதெல்லாம் வான்கொண்டு அறிந்ததெல்லாம் நீர்கொண்டு செல்ல நிறைந்து கனத்து அங்கே கிடந்தன அவை. தண்மணிக்கழுத்தனும் தாமரைஎழிலனும் விண்ணகம் புகுந்திருப்பர் என்று எண்ணிக்கொண்டு புன்னகைத்தேன். திரும்பி நடக்கையில் என்னுள் இருந்து எப்போதும் கனத்த எடைமிக்க கரும்பாறைகளெல்லாம் உதிர்ந்திருப்பதை அறிந்தேன். அக்கா, நாளை விண்ணகம் ஏறுகையில் வெறும் சிறகிரண்டு போதும் எனக்கு. முகில்வெளியில் பறப்பேன். விண்ணொளியில் கலப்பேன். விரிவானின் எல்லையில் விழிபூத்தெழுந்த என் நீலமணிவண்ணனின் நிலவுமுகம் காண்பேன்.
வெண்ணைக்கலத்தை உள்ளறைக்குள் கொண்டுசென்று வைத்து வந்த ரோகிணி “சற்று நீ எழுந்துகொள். சரடை நான் பற்றுகிறேன்” என்றாள். யசோதை எழுந்து இடையில் கைவைத்து மத்து சுழலும் பால்அலைகளை நோக்கி நின்றாள். “எந்தக்கை இழுக்கும் எச்சரடு இழுத்து இழுத்து கடைகிறது நம் உள்ளுறையும் அமுதை? எந்தக்கை திரட்டி எடுக்கிறது நம் அகமுணரும் நெய்யை?” என்றாள். புன்னகையுடன் தலைகுனிந்து “எரிவிளக்கு நெய்கோரும் கருவறை ஒன்றுள்ளது என்கிறார்கள்” என்றாள். அப்பால் ராதை “கரியவனே, கனலெல்லாம் எரிந்தணைந்த கரியே” என்று நகையாடி அழைக்க “போ, உன்னுடன் பேசமாட்டேன்” என்றான் கண்ணன்.
“மருதம் சரிந்த கதைகேட்டு இவன் தந்தை அஞ்சிவிட்டார். இங்கே நிகழ்வனவெல்லாம் நன்றல்ல என்கிறார். கோகுலம் விட்டு வேறெங்காவது செல்லலாம் என்கிறார்” என்றாள் யசோதை. “வேறு இடம் நோக்கியிருக்கிறார்களா?” என்று ரோகிணி கேட்டாள். “அங்கே மலர்மரங்கள் மட்டுமே வளரும் வனமொன்றுள்ளது. அதை விருந்தாவனம் என்கிறார்கள். அங்கே குடில்கள் அமைக்க கழியும் புல்லுமாக ஆயர்கள் சென்றிருக்கின்றனர்” என்றாள் யசோதை. “அங்கே மலர்களெல்லாம் இரவில் இன்னிசை எழுப்புகின்றன என்கிறார்கள். விண்ணின் கைகள் மீட்டும் யாழ் அது என்கிறார்கள்.”
ரோகிணி கடைவதை நிறுத்தி புன்னகை செய்தாள் “கண்ணனுடன் இவள் வந்தால் கல்லும் குழலிசைக்கும்” . யசோதை திரும்பி நோக்கி “இவள் அகமெழுந்த மரங்களில்லையோ?” என்றாள். “ஒருமரமே கிளைவிரித்து விழுதூன்றி காடாகும் நிலமல்லவா அவள்?” என்றாள் ரோகிணி.