நீலம் - 15

பகுதி ஐந்து**: 3.** வேய்குழல்

இரவு மழை ஓயாத அழைப்பு. மன்றாடல். மறுக்கப்பட்ட பேரன்பின் சினம். மூடப்பட்ட அனைத்தையும் முட்டிமுட்டி கொந்தளிக்கிறது. இடைவெளிகளில் கசிகிறது. ஓலமிட்டு ஓய்ந்து சொட்டி அமைகிறது. ஒற்றைச்சொல் என ஒலித்து ஒலித்து அமைதிகொள்ளும்போது மீண்டும் எங்கிருந்தோ ஆற்றாமல் பொங்கி வருகிறது. மேலும் வெறியுடன் வந்து முழுதுடலாலும் மோதுகிறது. இரவுமழையை இல்லத்து இருளுக்குள் போர்வைக்குள் ஒடுங்கி கேட்டிருப்பவர்கள் இரக்கமற்றவர்கள்.

ராதை மெல்லஎழுந்து பட்டுநீர்த்துளிகள் பரவிய சாணித்தரையை மெல்ல மிதித்து கதவைத் திறந்தாள். குளிர்ப்பெருங்கரத்தால் அவளை அள்ளி எடுத்து நெஞ்சோடணைத்து சுழன்று கூத்திட்டு கூவி ஆர்த்து கொப்பளித்தது பெருமழை. பற்கள் ஒளிவிட்டெழ இடித்து சிரித்தது வானம். நீரில் முடிவிலாது கரைந்துகொண்டே இருந்தாள். தோல் குளிர்ந்து தசை குளிர்ந்து குருதி குளிர்ந்து இதயம் குளிர்ந்து எண்ணங்களும் குளிர்ந்தபோது அறிந்தாள் கனன்று கனன்று உள்ளிருக்கும் வெம்மையை. இரு கைகளையும் நீட்டி “கனசியாமா! ககனக் காரிருளே! கண்ணா!” என்று கூவினாள். பின்னர் இருளுக்குள் சிலம்பொலிக்க ஓடத்தொடங்கினாள்.

மழை அவளை கொண்டு சென்றது. கோகுலத்தின் எல்லையில் அவளை அறிந்த நாய்கள் நீர்த்திரைக்கு அப்பால் குரலெழுப்பி முனகின. நந்தனின் இல்லத்தில் அவள் வாசமறிந்த பசுக்கள் இரண்டு ஓங்கி குரலெழுப்பின. மழை அறைந்துகொண்டிருந்த காட்டுமரப்பலகைக் கதவருகே அவள் நின்றாள். சிறுகுடில் புற்கூரையை, மண்பூசிய சுவர்களை, விரிசலிட்ட பலகைக்கதவை, சாணி மெழுகிய திண்ணையை அலையலையாக எழுந்து எழுந்து சுழன்று அறைந்தாள். கூந்தல் சுழற்றி கூவி ஆர்ப்பரித்து ஆடிக்கொண்டு அங்கே அசைவின்றி நின்றாள். அத்தனை இடைவெளிகள் வழியாகவும் அவள் அந்த ஆயர்சிறுகுடிக்குள் நுழைந்தாள். அன்னை முலைச்சூட்டில் உருகியதுபோல் ஒட்டிக்கிடந்த நீலமேகத் துளியை துளிப்பிசிறாக குளிராக நீரோசையாக தழுவிக்கொண்டாள்.

காலையில் வாயில் திறந்த ரோகிணிதான் அவளைக் கண்டு திகைத்து “என்னடி இது? நீ பர்சானபுரியின் ராதை அல்லவா?” என்றாள். கூந்தல் நுனி சொட்ட உடலொட்டிய ஆடையுடன் நீலமோடிய நரம்புகள் தெரிய பாளைமெருகு கொண்ட புத்துடல் மிளிர வாயில்படியில் அமர்ந்திருந்த அவள் தலைதூக்கி பித்தெழுந்த விழிகளால் யாரிவளென்பது போல நோக்கினாள். “அய்யோ, யசோதா, இங்கு வந்து பார் இவளை” என்றபடி உள்ளே ஓடினாள் ரோகிணி. அவள் குரல் கேட்டுவந்த யசோதை புன்னகைத்து “அவள் ராதை. அவள் அறிந்தது ஒன்றே” என்றாள்.

உள்ளே நுழைந்து துயில்கொண்டிருந்த கண்ணனை மரவுரிப்படுக்கைவிட்டு தூக்கி ஈரமுலைமேல் அணைத்துக்கொண்டாள். கண்விழிக்காமலேயே அவன் “ராதை” என்று புன்னகைத்தான். “எப்படித்தெரிகிறது அவனுக்கு?” என்றாள் ரோகிணி. “அவள் மணமும் கையும் அவனறிந்தவை” என்றாள் யசோதை. கண்ணனைத் தூக்கி மடியமர்த்தி அவன் மென்மயிர் குஞ்சியை முகர்ந்து விழிசரித்தாள் ராதை. “அவள் இங்கில்லை அக்கா. அவள் இருக்கும் இடத்தில் அவனிருக்கிறான்” யசோதை சொன்னாள். “ஏடி பெண்ணே, உலராடை அளிக்கிறேன். ஈரக்கூந்தல் துவட்டி உடைமாற்றிக்கொள். அவன் உடலை ஈரமாக்காதே” என்றாள்.

அவள் ஈர உடை மாற்றிக் கொள்கையில் ரோகிணி மெல்ல “எனக்கு இவள்மேல் போல் ஒரு பொறாமை எப்போதும் எவர்மேலும் வந்ததில்லையடி” என்றாள். யசோதை புன்னகை செய்து “இலையில்லாமல் கிளைமுழுக்க பூக்கும் யோகம் காட்டில் சில மரங்களுக்கே” என்றாள். கண்ணன் கண்விழித்து “ராதை! ராதை! ராதை” என்று சொல்லும் ஒலி கேட்டது. அவனுக்கான பாலுடன் வெளியே சென்ற ரோகிணி ராதையின் காலில் நின்று எழுந்தமர்ந்து “ராதை ராதை” என சொல்லிக்கொண்டிருந்த கண்ணனைக் கண்டு “ஏற்றமிறைக்கிறானா என்ன?” என்றாள். யசோதை பின்னால் ராதைக்கான பால்கஞ்சியுடன் வந்து “கடலை இறைக்கிறான் மூடன்” என்றாள்.

கஞ்சியை அருந்தியதும் கரிய மைந்தனை கையில் எடுத்துக்கொண்டு ராதை கிளம்பினாள். பலராமன் அவள் பின்னால் ஓடியபடி “ராதை, நான் நேற்று வெண்ணையை…” என்று பேசிக்கொண்டு சென்றான். “எங்குசெல்கிறாயடி?” என்று ரோகிணி கேட்டது அவள் காதிலேயே விழவில்லை. “தன் உடைமை என்று எண்ணுகிறாள்” என்றாள் ரோகிணி. சமையலறையில் நெருப்பை மூட்டிக்கொண்டு “தன் கைகால் என்றல்லவா எண்ணுகிறாள்?” என்றாள் யசோதை. கண்ணன் கைகளை நீட்டி கால்களை உதைத்து எம்பிக்குதிப்பதை அவள் கண்டாள். “கைநீட்டிக்கொண்டே இருப்பான். தொடுவான் வரை சென்றாலும் நீட்டுவான்” என்றாள் யசோதை. “அந்தப்பேதையும் அவனை தொடுவானுக்கே கொண்டு செல்வாள்.”

மழை ஓய்ந்த மண்ணில் ஒரு காலடிகூட இல்லை. நீரோடிய வரித்தடங்கள் அன்னை வயிற்று வெண்கோடுகள் என விரிசலோடிக்கிடக்க அவற்றின் ஓரங்களில் ஒதுங்கிக்கிடந்த மலர்க்குவைகளை பலராமன் “செந்நிறப்பூனைக்குட்டி!” என்றுகூவி குனிந்து அள்ளப்போனான். “அள்ளாதே, அவற்றுக்குள் நாகக்குழவி சுருண்டிருக்கக்கூடும்” என்றாள் ராதை. “ஏன் பூவிலுறைகிறது நாகம்?” என்று பலராமன் கேட்டான். “பூவிலுறைகின்றது தேன்” என்றாள் ராதை. “தேனை விழைகின்ற சிற்றுயிர்கள். அவற்றை விழைகின்றது கருநாகம்” என்றாள் ராதை. “தேன் விரும்பிய சிற்றுயிர்களை உண்டு தேனை அறிகிறது கருநாகம். கன்னங்கருநாகம். கருமணிவிழிநாகம்.”

பலராமன் கொன்றை மரத்தடியில் விரிந்த மஞ்சள்மலர்க்கம்பளம் நோக்கி “அங்கே நான் விளையாடலாமா?” என்றான். “யாருக்காக விரித்ததோ கொன்றை அம்மலர்விரிப்பை? நாம் தீண்டலாமா?” என்றாள் ராதை. “நாம் எப்படித் தெரிந்துகொள்வது அதை?” என்று பலராமன் கேட்டான். “அதனிடமே கேட்கலாமே?” என்று ராதை கைகளை இதழ்சேர்த்து உரக்க “பொன்பூத்த கொன்றையே, உன் வண்ணவிரிப்பில் எவர் காலடிகள் படவேண்டும்?” என்றாள். கொன்றை நீர் சொட்டும் ஒலியுடன் அமைதியாக நின்றது. “அது நாணுகிறது” என்றாள். “ஏன்?” என்றான் பலராமன். “அகத்தைச் சொல்ல நாணமிருக்காதா என்ன? உடலெங்கும் பூத்து நூறுநாழிகை மணமெழுந்தாலும் ஒரு சொல் எழுவதற்கு இத்தனை கூசுகிறாளே பேதை?”

அவள் இடையில் விழித்த கண்மட்டுமாக சிலைத்திருந்த கண்ணன் காற்றுபட்ட மலர்க்கிளையெனக் கலைந்து “நான் நான் நான்” என்று கால்களை உதைத்து சரிந்திறங்கினான். ராதை அவன் இரு கைகளையும் பற்றிக்கொண்டாள். அவன் தன் இடது காலைத்தூக்கி வலப்பக்கமாக நிலையழிந்து வளைய ராதை பிடித்துக்கொண்டு “விழாதே, காலை வை. காலை வை கண்ணா” என்றாள். அவன் தன் செல்லச்சிறு பாதத்தைத் தூக்கி மண்மேல் மெல்லவைத்தான். அக்கணம் வீசிய காற்றில் கொன்றையின் மலர்க்கிளைகள் கொந்தளித்து அமைய மலர்மழை பொழிந்தது. ராதை சிரித்து “கோடைமழையாடிய கொன்றைமகள் உனக்காகவே மலர்மஞ்சம் விரித்திருக்கிறாள்” என்றாள்.

முதற்காலை ஊன்றியபின் நின்றகாலைத் தூக்கும் சிந்தை எழாமல் கண்ணன் தள்ளாடி திரும்பி கைநீட்டி “தூக்கு தூக்கு” என்றான். ராதை அவனை தூக்கி வைத்து “வலக்காலை எடுத்து வை… காலை எடு கரியோனே” என்றாள். பலராமன் அமர்ந்து கண்ணனின் வலக்காலைத் தொட்டு “இந்தக்காலை… இந்தக்காலை எடு” என்று உரக்கக் கூவி கற்றுக்கொடுத்தான். இரண்டு காலில் நின்று சற்று ததும்பியபின் எதற்கு இச்சிக்கல் என்று எண்ணி கால்மடித்து அமர்ந்து தவழப்போனான். ராதை அவனை கைகளைப் பற்றித் தூக்கி “நடந்துசெல்… நட” என்றாள். மீண்டும் இடக்காலைத் தூக்கி காற்றில் ஆட்டி இடப்பக்கமாகத் திரும்பி மண்ணில் வைத்து அசைந்து நின்றான்.

“இந்தக்காலைத் தூக்கு இந்தக்காலைத் தூக்கு” என பலராமன் அவன் வலக்காலைத் தொட்டு கூவினான். அவன் கூவுவதைக் கண்டு வாய் வழியச் சிரித்தபடி அறியாமல் வலக்காலைத் தூக்கிவைத்து அதே விசையில் இடக்காலையும் தூக்கி வைத்து திகைத்து நின்று திரும்பி ராதையிடம் “தூக்கு தூக்கு” என்றான். “முடியாது, இனி நீதான் என்னைத் தூக்கவேண்டும்” என்றாள் ராதை. அவன் கைகளைப்பற்றி அவள் மெல்ல முன்னகர்த்த அவன் கால்களைத் தூக்கிவைத்து நடந்தான். அவள் வலக்கையை விட்டு இடக்கையைப் பற்றிக்கொண்டாள். “இளையோன் நடக்கிறான்!” என்றான் பலராமன். “அன்னையிடம் ஓடிப்போய் சொல்லி வருகிறேன். இளையோன் நடக்கிறான்!”

வண்டு ஒன்று யாழிசையுடன் அருகே வந்து பறந்து சுழன்றது. அதை நோக்கி கைநீட்டி “நான் நான்” என்றான் கண்ணன். அது கொன்றைமரம்நோக்கிச் செல்ல கையை நீட்டி விரல்களை அசைத்து “அது அது” என்று சொல்லிக்கொண்டு விரைந்து காலெடுத்து வைத்தான். “ஓடுகிறானே” என்று சொல்லிக்கொண்டு அவனை கைப்பிடித்து கொண்டுசென்றாள் ராதை. அவன் மலர்ப்பரப்பில் கால்வைத்ததும் இன்னொரு காற்றலையில் கொன்றை மலர்மழைபொழிந்து அவன்மேல் பொற்துகளைப் பரப்பியது. “மூன்றடியால் மூவுலகளந்த முழுதோன் நீ” என்று சொல்லி அவனைத் தூக்கிச் சுழற்றி தன் இடையமர்த்தி அவனுடலில் படிந்த மலர்துகளை ஆடையால் துடைத்தாள் ராதை.

மலர்கள் மேல் ஓடிய பலராமன் “மெத்தென்றிருக்கிறது!” என்று கூவி நகைத்தான். “நான் நான்” என்று சொல்லி ராதையின் இடையிலிருந்து இறங்கி மலர்மேல் அமர்ந்து இருசிறுகைகளாலும் அள்ளி தன் முதுகிலேயே வீசி “நான் நான்” என்றான் கண்ணன். “அவனுக்கே பூ போட்டுக்கொள்கிறான்” என்று சுட்டிக்காட்டி சிரித்த பலராமன் அருகே வந்து பூக்களை அள்ளி கண்ணன் மேல் பொழிந்து “கரியவன்… கோயிலில் இருக்கும் சிலை போலிருக்கிறான்” என்றான். ராதை நகைத்து “ஆம், அவனிருக்கும் கோயில்களுக்கு அளவே இல்லை” என்றாள்.

இருமைந்தர்களுடன் அவள் குறுங்காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தாள். தோகைவிழி மலர்ந்த மயில்கூட்டம் அவர்களைக் கண்டு எழுந்து உச்சிக்கிளைகளை அடைந்து ஒளிக்கழுத்து வளைத்து நோக்கி அகவியது. கழுத்து வளைத்து நோக்கி செவிகூர்ந்து நின்றபின் துள்ளி புற்பரப்பின் மேலெழுந்து அமைந்து ஓடியது ஒரு புள்ளிமானிணை. தலைக்குமேல் பரந்த பசுந்தழைக்கூரைமேல் குயில் கூவிக்கொண்டே இருப்பதைக் கண்ட கண்ணன் கைகளை தலைக்குமேல் தூக்கி விரல்களை மலரச்செய்து “கூ” என்றான். அவன் உதடுகளின் சுழிப்பைக் கண்டு அகம்பொங்கி நெஞ்சோடணைத்து “கண்ணே கண்ணே கண்ணே” என்றாள் ராதை. அவன் அவளிடமிருந்து திமிறி விடுபட்டு மேலே நோக்கி “கூ கூ” என்றான். பட்டுக்கழுத்தின் சிறுவரிகளைக் கண்டு மூக்கை அதிலுரசி முனகினாள் ராதை.

வேய்மூங்கில் காட்டுக்குள் மென்காற்று சலசலப்பாக நிறைந்து அலையடித்துக்கொண்டிருந்தது. “சிறுமூங்கில்!” என்றான் பலராமன். “அதன் இலைகள் அரம் கொண்டவை. அறுத்து குருதி சுவைப்பவை. அருகணையாதே” என்று ராதை சொன்னாள். உள்ளே நிழலொன்று கிளையொடியும் ஒலியுடன் சென்றது. பலராமன் “யானை!” என்றான். ”ஆம், மூங்கில் யானைக்குமட்டும் இனிக்கும்” என்றாள் ராதை. பலராமன் “யானையை மூங்கில் இலை அறுக்காதா?” என்றான். “அறுக்காது” என்று ராதை சொல்ல “ஏன்?” என்றான். ராதை புன்னகையுடன் குனிந்து “ஏனென்றால் யானை கரியது” என்றாள். “அதற்கு மட்டும் ஏன் மூங்கில் இனிக்கிறது?” என்று பலராமன் விழி உருட்டி கேட்டான். “மூங்கிலுக்குள் ஊறும் இனிப்பை அதுமட்டுமே அறியும்” என்று ராதை சொன்னாள்.

“பிறரறியா இனிமை அதில் எப்படி உறைகிறது?” என்றான் பலராமன். ராதை “அதை நானறியேன். மூத்தோர் சொல்லி அறிந்தேன்” என்றாள். அப்போது மூங்கில்கழைகள் இடைவளைத்து கைவீசி வணங்க காற்றுவிரைவொன்று அவர்களைக் கடந்துசென்றது. ராதை குயிலோசை ஒன்றைக் கேட்டாள். “குயில்!” என்றான் பலராமன். மீண்டும் அவ்விசை ஒலித்ததும் “குயிலல்ல, மூங்கில்” என்று ராதை சொன்னாள். “இங்கே மிக அருகே, ஏதோ மூங்கில் ஒன்று இசைகொள்கிறது.” பலராமன் “மூங்கிலில் இசை உறைகிறதா?” என்றான். “ஆம், யானை அறியும் கழையினிமை அந்த இசையே” என்றாள் ராதை.

கண்ணன் கையை வாயில் வைத்து “கூ” என்றான். “என் கருங்குயிலே” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ராதை. “என் கண்ணனை நோக்கி இசைத்த அந்தக்குழலெங்கே?” என்று மூங்கில் இலைகளை விலக்கித் தேடினாள். மீண்டும் ஒரு காற்று கடந்துசென்றபோது அதைக் கண்டுகொண்டாள். வண்டு துளைத்து காய்ந்து நின்றிருந்த பொன்னிற மூங்கில்குழல். அதை தன் இடையிலிருந்த புல்கொய்யும் ஆய்ச்சியர் அரிவாளால் வெட்டி எடுத்தாள். “அது ஏன் பாடுகிறது?” என்று பலராமன் குனிந்து கேட்டான். “அதை வண்டு துளைத்துவிட்டதல்லவா?” பலராமன் அதை மெல்லத் தொட்டு “வண்டுதுளைக்கும்போது இதற்கு வலித்திருக்கும் அல்லவா?” என்றான். ராதை “ஆம், மிகவும் வலிக்கும். நூறாயிரம் அம்புகள் ஒன்றன் மேல் ஒன்றாக வந்து தைத்தது போலிருக்கும்” என்றாள். “பாவம்” என்றான் பலராமன்.

கண்ணன் தன்னைத் தொட்டு “கண்ணன் பாவம்” என்றான். “ஆமாம், அதையே சொல்லிக்கொண்டிரு. தசை துளைத்து இதயம் துளைத்து ஆன்மாவைத் துளைக்கும் கருவண்டு நீ” என்றபின் ராதை அதை வாயில் வைத்து மெல்ல இசைத்தாள். “அதே இசை!” என்று பலராமன் வியந்தான். “என்ன சொல்கிறது மூங்கில்?” என்றான். “என்ன சொல்கிறது? நீயே சொல்” என்று அதை மீண்டும் வாசித்தாள். பலராமன் “வரமாட்டாயா என்று சொல்கிறது” என்றான். “அப்படியா சொல்கிறது? அதுவும்தான் காத்திருக்கிறதா?” என்ற ராதை மீண்டும் வாசித்து “இப்போது?” என்றாள். “இப்போதும் அதையேதான் சொல்கிறது” என்றான் பலராமன்.

கண்ணன் கைநீட்டி “நான் நான்” என்றான். “அவன் கடித்துவிடுவான்… வேண்டாம்” என்று பலராமன் தடுத்தான். “கடிக்கட்டுமே” என்று அவன் வாயில் குழலை வைத்து “ஊது… ஊது என் கருவண்டே” என்றாள். அவன் ஊதியபோது பலராமன் சிரித்து “காற்றை உள்ளே இழுக்கிறான்… அவனுக்குத் தெரியவில்லை…” என்றான். கண்ணன் வயிற்றை எக்கி காற்றை இழுத்தபின் அதை கையால் தள்ளிவிட்டு இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி “கூ கூ” என்றான்.

“நான் ஊதுவேன்” என்று வாங்கிய பலராமன் வாயில் வைத்து ஊதியபோது காற்று மட்டும் வெளிவந்தது. “இசை எங்கே?” என்றான். “அதை முழுக்க அவன் உறிஞ்சி எடுத்துவிட்டானே” என்றாள் ராதை. “எல்லா இசையையுமா?” என்றான். “ஆம், இந்த மூங்கில்காட்டிலுள்ள அத்தனை மூங்கில்களின் இசையையும்” என்று சொன்னாள் ராதை. “இனி மூங்கிலில் இசையே இருக்காதா?” என்று பலராமன் கேட்டான். “இருக்கும், அதெல்லாம் அவன் வாயிலிருந்துதான் வரும்.”

கண்ணன் கைநீட்டி “நான்! நான்!” என்றான். “இந்தா வாசி” என்றாள் ராதை. அதை கைகளால் பற்றி வாய்க்குள் வைத்து கடித்தான். “கடிக்கிறான்” என்று பலராமன் கூவினான். “கடிக்கட்டும், அது மூங்கிலுக்குப்பிடிக்கும்” என்றாள். அவன் அதை தன் இதழ்களில் வைத்து “ஊ” என்றான். தூக்கி முன்னால் எறிய முயன்று பின்னால் எறிந்தான். முன்னால் அதை தேடிவிட்டு திரும்பி பின்னால் நோக்கி அதை எடுத்து மீண்டும் எறிந்தான். மறுமுறையும் அவன் தலைக்குப்பின்னால்தான் விழுந்தது. “போ” என்று சொன்னபடி அதை மீண்டும் எடுத்து வாயில் வைத்தான்.

“எனக்கு இன்னொரு மூங்கில் வேண்டும்” என்றான் பலராமன். “இரு” என ராதை திரும்பியபோது ஓர் இசையைக் கேட்டாள். திகைத்துத் திரும்பியபோது கண்ணன் கண்பொங்கி நகைத்து “இந்தா” என்று குழலை நீட்டினான். “நீயா? நீயா வாசித்தாய்? கள்வா கரியவனே, என்னிடம் விளையாடாதே” என்றாள். அவன் சிரித்து அதை வீசி “போ” என்றான். “அவன் தான் வாசித்தான். நான் பார்த்தேன்” என்றான் பலராமன். “அவனா? அவன் வாயாலா?” என்று ராதை நெஞ்சை அழுத்தியபடி கேட்டாள். “ஆம்” என்றான் பலராமன்.

“கண்ணா, விளையாடாதே… நீயா வாசித்தாய்? இன்னொருமுறை வாசி என் செல்வமே” என்று அவள் அந்தக்குழலை அவனிடம் திரும்ப அளித்தாள். அதையே ஒரு விளையாடலாக எடுத்துக்கொண்டு அவன் தூக்கி வீசினான். “கண்ணா… என் கண்ணல்லவா? என் செல்லக்குலுக்கை அல்லவா?” என்று அவள் மீண்டும் மீண்டும் எடுத்துக்கொடுத்தாள். அவன் சிரித்து “போ போ” என்று கூவியபடி வீசிக்கொண்டே இருந்தான். அவள் “போ, என்னை பித்தியாக்கி விளையாடித்தான் நீ வினைமுடிக்கவேண்டுமா?” என்றாள்.

அப்பால் “கண்ணா, ராதை!” என்று யசோதையின் குரல் கேட்டது. பலராமன் “சிற்றன்னை அழைக்கிறாள்” என்றான். “அதற்குள் எனக்கு ஒரு மூங்கில் வேண்டும்.” அவள் கண்ணனை விட்டுத் திரும்பி மூங்கிலை வெட்டும்போது மீண்டும் அந்த இன்னிசை எழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பினாள். கண்ணன் வாயில் குழலிருப்பதைக் கண்டாள். “நான் சொன்னேனே?” என்றான் பலராமன். அவள் இருகைகளாலும் நெஞ்சுக்குழியை அழுத்தி நோக்கி நின்றாள். “கண்ணா, பலராமா!” என்று யசோதை குரல் கேட்டது.

ராதை நடுங்கும் கரம் நீட்டி அவனை எடுத்துக்கொண்டாள். கையில் குழலை ஆட்டியபடி அவன் “கண்ணன் பாவம்” என்றான். அவள் பெருமுச்சு மட்டும் விட்டுக்கொண்டிருந்தாள். அன்னையிடம் மகனை அளித்தபோதும் ஒரு சொல் பேசவில்லை. கூடணைந்த கருஞ்சிட்டின் இறகுகள் போல அவள் விழிகள் தாழ்ந்திருந்தன. “ஏனடி? ஏனித்தனை பெருமூச்சு?” என்றாள் யசோதை. அவள் தலையை அசைத்து பின் இமைப்பீலி நனைத்து ஒளிவிட்ட விழிநீரை உதிர்த்தாள். “ஏனடி?” என்று யசோதை கேட்க “ஒன்றுமில்லை மாமி” என்றாள். “பிச்சியடி நீ” என்று யசோதை சொன்னாள்.

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

அவள் திரும்பிச்செல்லும் வழியில் மழை எழுந்து சரிந்தது. நூறு யமுனைகள், ஆயிரம் கங்கைகள் விண்ணுடைத்து விழுந்தன. அவள் நீர்த்திரைகளை விலக்கி விலக்கிச் சென்று தன் இல்லத்தை அடைந்தாள். மழைப்பேரொலிக்குள் முறியாது கேட்டுக்கொண்டிருந்தது குழல்சிறுநாதம். “கொட்டும் மழையில் எங்கு சென்றிருந்தாயடி? கோகுலத்துக்கா?” என்றாள் அன்னை. அவள் நெற்றியைத் தொட்டு “கொதிக்கிறதே” என்று சொல்லி அழைத்துச்சென்று ஈர உடை நீக்கி படுக்க வைத்தாள். குளிர்ந்து குறுகிய உடலை போர்வைக்குள் ஒடுக்கி எரியும் விழிகளை மூடிக்கிடந்து அவள் அந்தக் குழலொழுகிய எழிலிசையை கேட்டுக்கொண்டிருந்தாள்.

நான்குநாள் அவள் வெப்பநோயில் கிடந்தாள். உதடுகள் உலர்ந்து செவிகள் சிவந்து கண்கள் மூடி நடுங்கிச் சுருண்டிருந்தாள். “பேய்மழைக்குள் சென்றிருக்கிறாள், என் பிச்சியை நான் எப்படிப் பாதுகாப்பேன்! என்ன செய்வேன்!” என்று அன்னை மறுகினாள். சுக்கும் மிளகும் திப்பிலியும் இட்டு எரிநீர் கொதிக்கச்செய்து அளித்தாள். தேவதாருப்பசையை நெற்றியில் இட்டாள். அவள் இமைகளிட்ட விரிசலுக்குள் வெண்விழி செம்மலர்போல் சிவந்திருந்தது. அவள் இளநெஞ்சு எழுந்தமைந்துகொண்டிருந்தது. செம்பஞ்சு மலர்ப்பாதங்கள் நெருப்பில் வாட்டியதுபோலிருந்தன.

நான்காம்நாள் நள்ளிரவில் நீராவிப்பானைக்குள் நின்று மீண்டவள்போல் உடல் வியர்த்து குளிர் நடுக்க அவள் விழித்துக்கொண்டாள். எங்கிருக்கிறோம் என்றறியாமல் இருளில் விழிமலர்ந்து கிடந்தாள். வெளியே இருளின் தொலைவுக்குள் மூங்கில்காட்டில் ஆயிரம் குழல்களை அந்நான்குநாட்களில் துளைத்திருந்தன கருவண்டுகள். ஆயிரம் கழைக்குழல்கள் இசைத்தன அவள் மட்டுமே அறிந்த அந்தப் பண்ணை. நீலநிறத்தில் உருகி உருகி வழிந்தோடியது வேய்ங்குழல் நாதம். கொன்று கொன்று உயிர்ப்பிக்கும் விஷம் கொண்ட கீதம்.


வெண்முரசு விவாதங்கள்