நீலம் - 12
பகுதி நான்கு**: 3.** சுழலாழி
ஆறு கடந்துசெல்லும் ஆநிரைக்குளம்புகளின் ஒலிபோல தயிர்க்கலங்களை மத்துகள் கடையும் ஒலி எழுந்த புறவாயில் திண்ணையில் ஆய்ச்சியர் கூடி அமர்ந்து கள்ளக்குரலில் கதைபேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் நடுமதிய நேரம். சரடு தாழ்த்தி மத்தை நிறுத்திய ஆயரிளம்பெண் ஒருத்தி “அக்கையீர், இதுகேளீர், நான் கண்ட கொடுங்கனவு. புள்ளும் இளங்காற்றும் பேய்முகம் கொண்டது. வானும் முகில்குவையும் நஞ்சு சொரிந்தது. பைதலிள வாயில் நாகம் படம் விரித்து நாவெனச் சீறியது. அன்னைவிழியில் அனல் எழுந்து கனன்றது. கருவறைப் பீடத்தில் கன்றின் தலைவெட்டி வைக்கப்பட்டிருந்தது” என்றாள்.
மன்றமர்ந்து மந்தணம் பேசி மகிழ்ந்திருந்த ஆய்ச்சியர் கூட்டம் இதழ் மலைத்து விழி நிலைத்து அமைந்தது. “என்னடி இது மாயம்? எங்கு நிகழ்ந்தது இது?” என்றாள் மூதாய்ச்சி ஒருத்தி. “நெய் விழுந்த நெருப்பைப்போல் கொடிகளாயிரம் கொழுந்துவிடும் மாமதுரை நகரை நான் கண்டேன். அங்கே உப்பரிகையில் தம்பியரும் தளபதியரும் சூழ வந்து நின்றார் கம்சர். ஒற்றர் சொன்ன செய்திகேட்டு திகைத்து பின் கொதித்து வாளேந்தி கிளம்பிய அவரை இரு கைகளையும் பற்றி நிறுத்தினர் தம்பியர். அப்போது வானிலெழுந்த வெண்பறவை ஒன்றைக் கண்ட அமைச்சன் சுட்டிக்காட்டினான். உடலற்ற சிறகிணையாக வானில் சுழன்றது அப்பறவை” என்றாள் ஆயரிளம்பெண்.
வில்லெடுத்து சரம் தொடுத்து அப்பறவையை வீழ்த்த முயன்றனர் தம்பியர். அம்புதொட்ட அப்பறவை சிதைந்து ஆயிரம் சிறகுகளாகி சுழலாகிச் சேர்ந்து பறந்து மறைந்தது. நிமித்திகரை அழைத்து நாடெங்கும் சென்று அவ்வித்தையை அறிந்து வர கம்சர் ஆணையிட்டார். அமைச்சன் கிருதசோமன் அப்பறவையை ஆளும் மாய மலைவேடன் திருணவிரதன் என்பவனை அழைத்துவந்தான். பறவைக் கால்போல செதிலெழுந்த சிற்றுடலும் நீண்ட வெண்குழலும் கூரலகுபோல் மூக்கும் கூழாங்கல் விழிகளும் கொண்டிருந்தான் திருணவிரதன். “உன் நெறியென்ன சொல்” என்றார் அரசர். “காற்றைக் கையாளும் கலையறிந்த வேடன் நான். எண்மூன்று மாருதர்கள் என் ஆணைக்கு அடிபணிவர்” என்றான் திருணவிரதன்.
“எவ்வண்ணம் கற்றாய் அக்கலையை?” என்று அரசர் கேட்க “அம்பைத் தவம்செய்து பறவையை அறிந்தேன். பறவையைத் தவம்செய்து இறகுகளை அறிந்தேன். இறகுகளைத் தவம் செய்து பறத்தலை அறிந்தேன். பறத்தலைத் தவம் செய்து காற்றை அறிந்தேன். காற்றைத் தவம்செய்து அசைவின்மையை அறிந்துகொண்டேன்” என்றான் திருணவிரதன். “காற்றென்பது வானத்தின் சமனழிதல். காற்றாகி வந்தது வானத்தின் அசைவிலா மையம். அம்மையச்சுழியில் அமர்ந்தது விழைவு எனும் ஒற்றைப்பெருஞ்சொல்.”
ஊழ்கத்திலமர்ந்த ஞானியரின் உள்ளம் சூழ்ந்து பறந்தேன். இறந்த அன்னையின் முலையுறிஞ்சி ஏங்கும் சிறுமகவு. குலம் வாழும் நங்கையர் கனவுக்குள் அணையாத அனலூதி தழலெழுப்பி நகைத்தேன். வேள்விக்குண்டம் அவிதேடி விழித்திருக்கிறது. தசையழிந்து நரம்பழிந்து தலைசரிந்து நாத்தளர்ந்து தென்வழிக்கு திசைகொண்டோர் கண்ணுள்ளே புகுந்து கண்டேன். பளிங்கில் புழுவென தேனில் ஈயென இறுதித்துளியும் இழையும் தேடல். அறவோர் சொல்லிலும் அறிந்தோர் எழுத்திலும் துறந்தோர் வழியிலும் தூயோர் மெய்யிலும் தொட்டறிந்தேன். தொட்டறியா காற்று குடியிருக்கும் கல்லிடைவெளிகளே கட்டடமென்று காற்றில்லா இடமொன்றில்லை. சிறகசையா வானமென்றும் இல்லை. அரசே, இன்றிருந்தேன் இனியிருப்பேன் நன்றிருப்பேன் நானில்லாது என்றுமிருக்கும் ஏதுமில்லை என்றுணர்ந்தேன். நானே சிறகானேன்.
“நன்று, உன் கலையிங்கு காட்டுக!” என்று மன்னன் உரைத்தான். கைகளிரண்டும் விரிந்து சிறகாக, கண்களிரண்டில் மணிவெளிச்சம் மின்னியெழ கழுகுக்குரல் கொடுத்து அவன் வானிலெழுந்தான். சிறகடித்துப் பறந்து நகர்மீது சுழன்றான். கண்கூர்ந்து நகரை நோக்கி வானில் நின்றான். அவன் நிழலோடிய தெருக்களில் குழந்தைகள் அஞ்சி குரலெழுப்பின. ஆநிரைகள் ஓலமிட்டு உடல் நடுங்கின. இல்லம் ஒளிர்ந்த சுடர்களெல்லாம் துடித்தாடி அணைந்தன. இரைகண்ட பருந்தைப்போல அவன் மண்ணில் விழுந்து வளிதுழாவி மேலெழுந்து வந்தான். தான் கூர்உகிர் நீட்டி கவ்வி எடுத்த இரைகளைக் கொண்டுவந்து அரசன் முன் குவித்தான்.
அக்கையீர், தோழியரே, அத்தனையும் விழிச்சிறுபந்துகள் என்றுகண்டேன். இமைச்சிறகுகள் துடிக்க பறந்தெழத் தவிக்கும் கருநீலச் சிறுபறவைகள். கருமணிகள் உழன்றலைய துடிதுடிக்கும் இதயங்கள். திகைப்பாக தவிப்பாக துயராக தனிமையாக விழித்தமைந்த பார்வைகள். இமைகளை பிய்த்தெடுத்து குவித்து வைத்து திருணவிரதன் சொன்னான் “பறக்கும் சிறகிருக்க ஒருபோதும் கொம்பில் அமைவதில்லை கூண்டில் நிலைப்பதில்லை இப்பறவைகள். இச்சிறகுகளை நானறிவேன். இவைதேடும் காற்று வெளியிடை இவற்றை விடுப்பேன்.” இமையிரண்டை இணைத்துப் பறவையாக்கி அவன் வானில் விட்டான். தோழி, விழியின்மை என்பது ஒரு பார்வையாவதைக் கண்டேன். சிறகின்மை என்பது ஒளியின்மையாவதைக் கண்டேன்.
“நன்றிது செய்க! இந்நிலத்தில் நீ ஆற்றும் பணியொன்றுள்ளது!” என்று சொல்லி அரசன் அவனை ஏவுவதைக் கண்டேன். அச்சம் கொண்டு என் ஆடையற்ற நெஞ்சை கைகளால் அள்ளி போர்த்திக்கொண்டேன். என் கனவுகளின் சுவர்ச்சித்திரங்களை எல்லாம் பதறும் கரங்களால் விரைந்து விரைந்து அழித்தேன். நான் மறந்து கைவிட்ட சொற்களை எல்லாம் தேடித்தேடிச் சேர்த்து எரித்தேன். எதுவும் எஞ்சாமல் என் அகத்தை ஆக்கி வான் நோக்கி அமர்ந்திருந்தேன். அவன் நிழல் என்னைக் கடந்து செல்வதைக் கண்டபோது கண்களை மூடிக்கொண்டு காத்திருந்தேன். என் தலையைக் கவ்விய குளிர்ந்த உகிர்களை உணர்ந்தேன். பின் என் கண்களை கவ்விக்கொண்டு செல்லும் சிறகுகளை அறிந்தேன். அக்கண்களில் இருந்தது நான் காணாத காட்சிகளினாலான என் அகம்.
புழுதியும் சருகும் பறக்கும் சுழற்காற்றாக அவன் ஆயர்ப்பாடி ஒன்றின் மேல் இறங்குவதைக் கண்டேன். கரிய இமைச்சிறகுகள் சுழன்றிறங்கின. விழிமணிகள் ஒலியுடன் பெய்தன. சிறகுகள் சுழன்ற காற்றில் சொல் சொல் சொல் என்ற ஒலியமைந்திருந்தது. சொல்லாமல் அறியாமல் சுடரும் ஒன்றின் மீது பெய்து பெய்து சூழ்ந்தது சுழல்காற்று. காற்று அள்ளிய கண்கள் சூழ்ந்து ஒரு கண்ணாயின. கண்சுழியில் அமைந்திருந்தது அச்சொல். அழியாச்சொல், அறியாச்சொல், அறியாமையில் அமர்ந்த சொல். அதுவே ஆம் என இவ்வுலகை ஆக்கிய சொல். எனக்கே எனக்கென்று எப்போதும் ஒலிக்கும் வேதம். எல்லா கருவறையும் நிறைத்தமர்ந்த தெய்வம். எரிந்தமரா நெருப்பு. எழுவதையே அசைவாகக் கொண்ட எரி. உண்டவித்து உண்டவித்து மானுடரை மாளாச்சிதையாக்கி நின்றெரிக்கும் மூலம். மூலாதாரம். முதல் நின்ற மலர்மொக்கு. மொக்கில் எழுந்த முதல்காற்று. உயிர்ப் பெரும்புயல்.
நாவாயிரம் எழுந்து நக்கி நக்கி காற்றை உண்ட நாக்குமரம் ஒன்றை அங்கே கண்டேன். ஈரக்கொழுந்து மூக்கெழுந்து மூச்சிழுத்து சுவையறிந்து சீறிய செடிகளைக் கண்டேன். தழுவ நீண்டு வெளிதுழாவும் தளிர்க்கொடிகள். மொக்கவிழ்ந்து மொட்டு காட்டும் மலர்க்குழிகள். சீறியெழும் நாகங்களின் சீறா மணிவிழிகளைக் கண்டேன். அவையமைந்த புற்றுகள் வாய்திறந்து சொல்லற்று விரியக்கண்டேன். மண்மழை பொழியும் ஒலியில் சருகுப்புயல் படியும் குரலில் ஊழியின் ஒரு சொல் கேட்டேன். ஒருசொல்லாகி நின்ற இப்புவியின் பொருளை அறிந்தேன். அக்கையீர், அக்கணம் வானில் நானோர் வாய்திறந்த பேயுருவாய் விழிதிறந்து கால்திறந்து கீழ்நோக்கி நின்றிருந்தேன். நானென்றொரு பெரும்பசியை நாற்றிசையும் எழுந்தாலும் நிறையாத நாழிச்சிறுகிணற்றை நான் கண்டுகொண்டேன்.
சிரித்து வான் சுட்டி பைதல் சிறுமொழியில் அறியாச் சொல்லொன்று அருளி கையூன்றி மண் தவழ்ந்து ஆயர்பாடியின் சிற்றில் விரியத்திறந்து முற்றத்தை அடைந்த கருமணிவண்ணனைக் கண்டு இடிபோல உறுமி இருகை விரித்து பறந்திறங்கினேன். என் உடல்திறந்து வாயாகி அவனைக் கவ்வி உண்டு உடலாக்க விழைந்தேன். கன்னங்கரிய காலப்பெருந்துளி. நீலம் ஒளிரும் நிலையிருள் குழவி. அவனைச்சூழ்ந்து பறந்த ஆயிரம் கோடி மணல்துளிகளில் ஒன்றானேன். அவனை அள்ளி கைகளில் எடுத்து வானோக்கி எழுந்தோம். அள்ளி உண்ண வாய் விரித்து எங்கள் அகம் திறந்து எழுந்து வந்தான் திருணவிரதன்.
அவன் சுற்றிய பொன்னுடைகள் கிழிந்தழிந்தன. அவன் மணியாரம் உதிர்ந்து மழையாகியது. கால்தளையை கைவளையை செவிக்குழையை செவ்வாரத்தை கிங்கிணியை நுதல்மணியை உடைத்து எறிந்தோம். மெய்யுடலை மணிவண்ண மெல்லுடலை ஆயிரம் கையிலேந்தி வான்வெளியில் சுழன்றோம். “எஞ்சுவதொன்று, அதோ நீலப்பீலி கொண்ட குஞ்சி” என்றனர் தழல்கொண்டு சுழன்ற என்னைப்போன்ற எண்ணிறந்தோர். ஆயிரம் வெறிக்கரங்கள் அவன் குழலணிந்த நீலப்பீலியை நோக்கி நீண்டன. தழலைத் தீண்டிய நெய்விழுதென உருகிச் சொட்டியழிந்தன. நீலச்சுடரென எரிந்தது. நீல விழியென நகைத்தது. நீலமலரென ஒளிர்ந்தது.
பெருஞ்சினம் கொண்டு பேயென குரைத்து திருணவிரதன் எழுந்துவந்து அதைச் சூழ்ந்தான். உகிரெழுந்த கைகளால் அதை அள்ளப்போனான். வெம்மை தாளாது அலறி சிறகெரிந்து வீழ்ந்து சென்றான். மீண்டும் எழுந்து வந்து அதைக் கவ்வி இதழ் எரிந்தான். எரிமலர் சூடிய குளிர்மலர் என எங்கள் மண்சுழிக்குள் கிடந்தான் ஆயர்குலச் சிறுவன். மாயமிதென்ன என்று அலறி சுழன்றலையும் திருணவிரதனைப் பார்த்தேன். அவன் விழிகளுக்குமேல் எழுந்த இமைகள் சிறகடித்து விலகக் கண்டேன்.
பெண்டிரே, தோழியரே, நான் கண்டகாட்சியை எவ்வண்ணம் இங்குரைப்பேன். பதினாறாயிரம் பெண்களின் உடலென்னும் அலைவெளியாக காளிந்தி ஓடுவதைக் கண்டேன். அதில் காமம் கனிந்த கரிய உடல் நீந்தித் திளைப்பதைக் கண்டேன். மதமூறும் மத்தகங்கள். கள்வழியும் கருமலர்கள். கண்ணீர் கனிந்த கருவிழிகள். சந்தனக் கொழுஞ்சேற்றில் களிவெறி கொண்டு குளித்தாடிய இளங்களிறு. உடலாகி எழுந்தது நாகபடம். உடலென்னும் படமாகி எழுந்தது நாகவிஷம். நடமாடிச் சொடுக்கி பதிந்தது நச்சுப்பல். வீங்கி கனத்தாடி எழுந்தது கொழுங்குருதிச் செங்கனி. கைநகங்கள் சீறி கடும்விஷம் கொள்ளும் காமப்பெருவேளை. வேட்கை கொண்டெழும் வேங்கைக்குருளையின் குருதிச்செவ்வாய். பாலருந்தி துளி ஒதுங்கிய இதழ்குவியம். செம்மலரில் அமர்ந்த சிறுசெவ்வண்டின் துடிப்பு. அங்கு சிவந்து கனிந்து எழுந்தது தலைகீழ் கருநெருப்பு.
புள்ளுகிர் கவ்விய பெருந்திமில். கானக் குழிமுயலின் மூக்கின் துடிப்பு. அதன் கால்நகங்கள் அள்ளும் செழும்புல்லின் தயக்கம். துள்ளி கரைவிழுந்த நீலச்சிறு மீன். வெண்மலர் மீதமர்ந்த கருவண்டு. புகைச்சுருளவிழ்ந்த வேள்விக்குண்டம். கள்மலர்ந்து சொட்டும் கருக்கிளம் பாளை. கருவிழியின் நிலையழிதல். செவ்வுதடில் சுருண்டழிந்த சொல். மந்திரம் என ஒலிக்கும் மூச்சு. மூச்செழுந்தசையும் துகில் மென்மை. இவ்வுலகாளும் இதழ்மென்மை. வெண் தழல் கொடிபறக்க துடித்தாடும் பொற்கம்பம். சிரமெழுந்த பெருந்தனிமை. சூழ்ந்து வெம்மையென பெருந்தனிமை. சொல்லழிந்த பெருந்தனிமை. ஊழிச்சொல்லெழுந்த பெருந்தனிமை. மண்ணழிந்த பெருந்தனிமை. காற்று வெளித்தாடும் வெறுந்தனிமை. காற்றான கருந்தனிமை. காற்றில் கரைந்தாடும் ஒரு மந்திரம். ஊற்றுத்தசை விழுதின் வெம்மணம். எஞ்சும் வெறுமை.
திசை நிறைத்த திருணவிரதன் சிறகற்று பேரொலியுடன் மண்ணில் விழுவதைக் கண்டேன். அவன் உடல் பட்ட மண் குழிந்து உள்வாங்கி அமையும் ஒலிகேட்டேன். அவன் மீது அவன் கவர்ந்த விழிமணிகள் இமையிதழ்கள் உதிர்ந்துதிர்ந்து மூடக்கண்டேன். அவன் மேல் அந்த நீலப்பீலி நிறைசிறகுகளாக விரிந்து குடைபிடிக்க பஞ்சு சூடிய விதைமணி போல் அவன் பறந்திறங்கக் கண்டேன். கருநிற விழியொளியன். விழிநிறக் கரியொளியன் ஆயரிளம் குலமைந்தன். அழியாத அச்சொல்லே உதடாக அச்சொல்லே விழியாக அச்சொல்லே விரல்மொழியாக அமைந்தங்கு அவன் மேலமர்ந்திருந்தான்.
எத்தனை கடல்கள். எத்தனை அலைநெகிழ்வுகள். ஆழத்து அசைவின்மைகள். சேற்றுப்பரப்பில் படிந்த நினைவுகள். பாசிமூடிய பழமைகள். எழுந்தமைந்து எழுந்தமைந்து தவிக்கும் நிலையின்மைகளுக்குமேல் எழுந்த பெருவெளியில் பறக்கும் புள்ளினங்கள். கோடி முட்டை வெம்மைகொண்டு புழுவாகி புல்லாகி எழுந்து அவற்றுக்கு உணவூட்டும் அவையறியா ஆழம். ஆழத்து நீலம். நீலத்தின் ஆழம் நிலையழியா நீர்மைக்குள் ஒளியெழும் வண்ணம். முகிழா முற்றா பெருங்காமம் முழுமைகொண்டு ஊழ்கப்பெருமோனம் ஆனதென்ன? மோகப்பேரலைகள் உறைந்து பெருமலைகள் என்றான ஆடலென்ன? இங்கு வந்தமர்ந்து தானுணராது தன்னையறிவிக்கும் திசையின்மை சொல்லின்மை பொருளின்மை எனும் எல்லையின்மைதான் என்ன?
கைவிரித்து கண்விரித்து குரல் கனத்து ஆயரிளமகள் சொன்னாள். பிரேமையெனும் பீலி சூடியவன் அச்சிறு மைந்தன் என்றறிந்தேன் தோழி. அந்நீலப்பீலியின் ஓரிதழை அசைக்கும் மோகப்பெரும்புயலேதும் இல்லை இப்புவியில் என்று கண்டேன். அதன் வரிமணிப்பீலிவிழி நோக்கி நோக்கி நகைத்து நிற்க அதைச் சுற்றி சுழன்று அயர்ந்து அமைந்தன சுழற்பெருங்காற்றுகள். கனலறியும் காற்றுகள். தழலாடி திளைக்கும் மாருதர்கள். வெற்றிடமெங்கும் நிறையும் விண்மைந்தர்கள். காற்றை எடுத்து தன் பீலிச்சுழலுக்குள் அமைத்து கண்மூடி கைமார்பில் சேர்த்துக்கிடந்தது ஆயர்ச்சிறு குழவி.
ஓவியம்: ஷண்முகவேல்
இங்கென் சிற்றிலில் விழித்துக்கொண்டேன். அலறி ஓடிவந்து மைந்தனை அள்ளி எடுத்து ஆடையால் மண் துடைக்கும் அன்னை ஒருத்தியைக் கண்டேன். அவளைச்சூழ்ந்து அழுகைக்குரல் கொடுத்து கைபதைக்க குரல் பதற நின்றிருக்கும் ஆய்ச்சியர் பெரும்குழுவைக் கண்டேன். அவன் விழிமலர்ந்து மென்னகை ஒளிர்ந்து “அம்மா” என்றழைத்து சிறுகைகள் விரித்து அவள் நெஞ்சுக்குத் தாவி ஏறிச்சென்றான். அன்னை கைகள் அவனைத் தொடவில்லை. அன்னை நெஞ்சு அவனை அறியவில்லை. அவள் மூச்சிலோடும் முதற்பெரும் காற்று அறிந்திருந்தது. அக்காற்று தீண்டி கண் விழித்த கனல் அறிந்திருந்தது. ஒரு கணம் கை நழுவ அன்னை திகைத்தாள். உடனே “கிருஷ்ணா” என்றழைத்து நெஞ்சோடு இறுக்கி அக்கனல்மேல் ஆற்றுப்பெருக்கொன்றை அணையவிழ்த்து விட்டாள்.
ஆயர்மகள் சொல்லி அமைந்தாள். “காற்றறியும் கனலை, கனலாகி நின்ற ஒளியை, ஒளியாகி வந்த இருளை, இருளின் சுழியை, சுழியின் எழிலை அங்கு கண்டேன். கனவழிந்து நினைவடைந்தேன். “கண்ணா கரியவனே! என்றொரு புள் ஏங்கும் சொல் கேட்டேன். நானறிந்த கனவுக்கு என்னபொருள் என்றறியேன்.”
மூதாய்ச்சி ஒருத்தி “எக்கனவும் எவருக்கும் உரியதல்ல பெண்ணே. களிந்த மலைபிறந்து கருநீல அலைப்பெருக்காய் நம் ஊர் நுழையும் காளிந்தி அது. நாம் அதை அள்ளிக்குடித்து ஆடைநனைத்து நீராடி மீள்கிறோம். நம்மை அள்ளி நம்மை அறியாமல் நம் துறைகடந்து தன் திசை தேர்ந்து தனித்துச் செல்லும் முடிவிலியே அவள்” என்றாள். “காளிந்தியைப் போற்றுவோம்! தண்புனல் பெருக்கைப் போற்றுவோம். மழைவெள்ளத்தை குளிரமைதியை கோடை வெம்மையை கோடித்துளிகளில் ஒளிரும் விழிகளை வணங்குவோம்” என்றனர் ஆயர் மகளிர்.